என் நண்பேன்டா..

Friday, December 31, 2010

ஓட்டலில் சாப்பிடும் போது
இருவருக்கும் வைக்கப்படும்
பாயாசக்கின்னத்தை அளவு பார்த்து
அதிகம் உள்ளதை உனக்காக
எடுத்துக்கொள்ளும் போது
நினைப்பேன் "என் நண்பேன்டா"..

துணிக்கடையில் 'இந்த சட்டை
எனக்கு நல்லா இருக்குமா மாப்ளே?'
என்று கேட்கும் போது, 'மாப்ள இத
நான் வச்சுக்கறேன்டா' என்று
ஆசையாக சொல்லும் போதும்
நினைத்துக்கொள்வேன் "என் நண்பேன்டா"

பஸ்ஸில் செல்லும் போது
"மாப்ள நான் ஜன்னல் ஓரத்துல
உக்காந்துக்கிறேன்டா" என்று என்
பதிலுக்கு காத்திராமல் சென்று அமர்ந்து
இயற்கையை ரசிக்கும் போதும்
நினைத்துக்கொள்வேன் "என் நண்பேன்டா"

ஒரே ஒரு முறை மட்டும் என்னால்
சொல்ல முடியவில்லை நண்பேன்டா என்று..
நான் காதலிக்கும் பெண்ணை நீ
தள்ளிக்கொண்டு வந்து
"மாப்ள இது தான்டா நான்
கட்டிக்கப்போற பொண்ணு
உனக்கு சிஸ்டர் மாதிரி"
என்று சொன்னபோது...

வம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..

Thursday, December 30, 2010

இந்த சம்பவம் நடந்தது 1900 களின் ஆரம்ப கட்டத்தில் சிவகாசி என்றொரு இயற்கையால் சபிக்கப்பட்ட மலட்டு மண்ணில்.. இனி கதைக்குள்..

பஞ்சத்தால் அடிபட்டு, வெளியூருக்கும் செல்ல வக்கில்லாத சிறு வியாபாரிகளும், நிலத்தை நம்பி இனி பயன் இல்லை என்று உணர்ந்து பலசரக்கு கடைகளில் வேலை செய்யும் சில விவசாயிகளும், அவர்களிடம் கடனுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி செல்லும் பல அன்னக்காவடிகளும் நிறைந்தது தான் இந்த சிறிய கிராமம். அதோ தெரிகிறதே ஊரின் நடுவில் சிவன் கோயில், அது தான் இந்த ஊர் சிவகாசி என்று பெயர் பெறக்காரணமாக அமைந்தது. இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு ரத வீதி தான் இந்த ஊர். பெரும்பான்மை நாடார்களும் கொஞ்சம் ஐயர்களும் இருக்கிறார்கள். பக்கத்து பதினெட்டு பட்டியில் இருந்து அடிக்கடி தேவர்கள் வருவார்கள். பொருட்கள் வாங்க அல்ல, பொருட்களை எடுக்க. எடுக்க என்று கூட சொல்ல முடியாது. எடுப்பது வேறு கொள்ளையடிப்பது வேறு அல்லவா?

சிவன் கோவிலின் வாசலான கீழ ரதவீதியில் தான் கடைகள் இருந்ததன. கோவிலை சுற்றி ஐயர்களும் அதற்கு அடுத்த தெருக்களில் நாடார்களும். கோவிலுக்கு அருகிலேயே இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய முடியாது நாடார்களால். அது தேவர் கோவில், ஐயர்களுக்கும் தேவர்களுக்கும் மட்டும் அனுமதி. இந்தக்கோவில் என்று அல்ல, ஊரின் பிற கோவில்களிலும் இது தான் நிலைமை. சொந்த ஊர்க்காரன் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று பக்கத்து ஊர்க்காரன் அடக்கி வைத்திருந்தான்..

தன் தந்தை பழனியப்ப நாடாரின் கடையில் தான் அய்யன் இன்று முதல் வேலை பார்க்க ஆரம்பித்தான். விருதுநகரில் இருந்து மொத்தமாக பலசரக்கு வாங்கி வருவதும் அதை பிரித்து வைப்பதும் தான் அவன் வேலை. கோவிலுக்கு எதிர்புறம் அவர்களின் கடை. கோவிலுக்குள் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பான். பழனியப்ப நாடாரிடம் 'அதோ பல்லி, என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட பதறி ஓடும் பயம் உண்டு. பரம சாது.. நெற்றியில் எப்போதும் பட்டை இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டி. 'கூழுக்கு வக்கில்லேனாலும் சானாப்ப்ய குண்டிக்கு வெளுத்த உட தான் போடுவான்' என்பார்கள்.

"ஏன்ப்பா, நாமெல்லாம் கோவிலுக்குள்ள போகக்கூடாதா?"

"அய்யா, அதெல்லாம் சாமிக்குத்தம்யா. சாமியும் (ஐயர்) தேவரும் தான் போவனும். நாமெல்லாம் போனா சாமிக்கு ஆகாது. ஊரே பஞ்சத்துல செத்துரும்"

இப்போ மட்டும் என்னவாம், ஊரில் முப்போகமா விளைகிறது என்று நினைத்துக்கொண்ட அய்யன், "நம்ம கடை அரிசி பருப்பு தானப்பா கோவிலுக்கும் ஐயர் வீட்டுக்கும் போவுது? அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா?"

"யலேய் ஈனப்பயபுள்ள போய் எடைய சரியா போடுடா. ஊருக்குள்ள யாவாரம் பண்ணிப்பொழைக்குறது இவனுக்கு புடிக்கலையோ?"

"இதுல என்னப்பா தப்பு இருக்கு? ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா? தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா? திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம்?"

"ஒரு நாள் கடைக்கு வந்ததுக்கே உனக்கு இவ்ளோ திமுராடா? உங்க ஆத்தா உன்ன இந்த வள்ளலுல தான் வளத்துருக்கா" - பேசிக்கொண்டே அய்யனின் முதுகுல் ஒரு சத்து சாத்தி அவனை வீட்டுக்கு பத்தி விட்டார்.

கடையில் அரிசி வாங்கிக்கொண்டிருந்த பதினெட்டு பட்டிக்காரி ஒருத்தி இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு, ஒரு பைசா லாபம் இல்லாமல் பேரம் பேசி வாங்கிக்கொண்டு அவள் புருஷன் பெரியசாமிப்பாண்டியிடம் கொழுத்திப்போட்டாள். அவன் நேராக ஊர்த்தலைவன் சீனிமுத்துத்தேவரிடம் ஒப்பித்தான்.

இங்கு பழனியப்ப நாடார் வீட்டில் அவர் மனைவி நாகம்மாளிடம் "யாத்தா நாளைல இருந்து இந்தப்பய கடப்பக்கம் வரேன்டாம். ஒதவின்னு இருப்பான்னு பாத்தா ஒபத்திரவமால இருக்கான்"

"சின்னப்புள்ள தானேங்க, ஏதாவது தெரியாம பேசிருக்கும் பண்ணிருக்கும். சும்மா, ஒரு ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க"

"போடி பொழப்பத்தவளே, இவன கூட்டிட்டு போனா ஒத்தாச பண்ணுறதுக்கு நானும் இருக்க மாட்டேன், அந்த கடையும் இருக்காது. இன்னைக்கு இவேன் பேசுன பேச்சுக்கு என்ன நடக்கும்னு கூட தெரியலையே? அந்த பெரியசாமிப்பய பொண்டாட்டி வேற எல்லாத்தையும் கேட்டுட்டா"

"பதறாம இருங்க. அந்த மாரித்தாய் எல்லாத்தையும் காப்பாத்துவா" என்று பழனியப்பனுக்கு சமாதானம் சொல்லி தூங்க வைத்தாலும் நாகம்மாளின் மனதில் ஒரு வித சலனம் இருந்து கொண்டே இருந்தது..

மறுநாள் கடைத்தெருவில் ஒரே சத்தம். சீனிமுத்துத்தேவர் பழனியப்ப நாடாரின் கடையை சில ஆட்கள் கொண்டு நொறுக்கிக்கொண்டிருந்தார்.

"அய்யா அய்யா என் பொழப்ப கெடுத்துராதிங்கய்யா, அய்யா" என்று பொழப்பே போன பின்னும் அர்த்தம் புரியாமல் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

"அவ்வளவு தயிரியமாலே உனக்கும் உம் மவனுக்கும்? சானாப்பயலுக்கு கோவிலு கேக்குதோ? செருப்புலாம் கோயிலுக்கு வெளிய தாம்லே இருக்கனும். ஈனப்பய நீயும் அப்படித்தான்டே. இன்னைக்கு நீ கேப்ப, நாளைக்கு உன்ன வச்சு பரப்பயலும் சக்கிலியனும் கேப்பான். வாரவேன் போறவனெல்லாம் நுழையுரதுக்கு அதென்ன ஔசாரி வீடாடே?"

சீனிமுத்துத்தேவர், பார்ப்பதற்கு முரட்டு உடல். ஆறடி உயரம் இருப்பார். மொழிங்கால் வரை தான் வேட்டி இருக்கும். சட்டை போடாத மயிர் நிரம்பிய உரம் ஏற்றப்பட்ட மார்பு. வாயில் எப்போதும் சுருட்டு. பார்த்தாலே பயம் வரும் உருவம். குரலும் கம்பீரம்.

இப்போது மொத்த கடைக்காரர்களையும் பார்த்து, "எலேய் சானாப்பயலுவலா, ஒழுங்கா பொழப்ப பாத்துக்கெடந்தீகன்னா இந்த ஊருக்குள கெடங்க. இல்லாட்டி ஒரு பய உசுரோட இருக்க முடியாது. கடையெல்லாம் கொழுத்திப்புடுவேன் ஜாக்கிரத" - கூறிக்கொண்டே உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கு திரும்பினார்.

அவர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் பழனியப்பனின் உறவினர்கள், "அவைங்களுக்கு முன்னாடியே நாம இங்க பொழைக்க வந்தவைங்கடா. என்ன பேச்சு பேசுறான் பாத்தியா?"

"காலம் காலமா இந்த ஊருல இருக்கோம்டா. அஞ்சு மைல் தள்ளி இருக்குறவன் வந்து நம்மள அதிகாரம் பண்ணிட்டு போறான் பாத்தியா?" என்று மெதுவாக புலம்பிக்கொண்டே ஒவ்வொருவராக தங்கள் கடையை அடைத்து வீட்டுக்கு சென்றனர்.

மறு நாள் காலையில் பல கடைகளின் பூட்டு உடைந்திருந்தது. பலசரக்கு பொருட்களும் பணமும் திருடு போயிருந்தன. கடைத்தெருவே ஒப்பாரிமயமாய் இருந்தது. யார் என்னவென்று ஒன்னும் புரிபடவில்லை. அன்று பதினெட்டு பட்டியில் இருந்து யாரும் பொருட்கள் வாங்க வரவில்லை. சிலர் அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள் இது சீனிமுத்துத்தேவரின் வேலையாகத்தான் இருக்கும் என்று. புலம்பிக்கொண்டே வீடு போய் சேர்ந்தார்கள். மறுநாளும் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

"அண்ணாச்சி சாமான் குடுங்க" னு கேட்டு வாங்குனவன அந்த இடத்துலேயே வைக்காம வளர விட்டுட்டோமேடா? ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா?" ஒரு பெருசு தனக்கு தெரிந்த வரலாறை உளற ஆரம்பித்தது.

"பகல்ல வந்தாலாவது யாருன்னு தெரியும், ராவுல வந்தா யாருன்னு யாருக்கு தெரியும் அண்ணாச்சி?"

"ஆமாடா இன்னும் எத்தன நாளைக்கு தெரியாத மாதிரி நடிக்கப்போறீங்க?" - எவனோ ஒரு வீரன் உசுப்பேத்தி விட்டான்.

"இப்போ என்ன தான் அண்ணாச்சி செய்யுறது?"

"ஓசில கெடச்சாலும் லாபத்துக்கு விக்குறது தான் நம்ம பொழப்பு. கோயிலுக்கு போகலேனா குடி ஒன்னும் முழுகிறாது. அதனால அவைங்க செஞ்சத நாம கண்டுக்கிடல, ஆனா நம்ம பொழப்பையே அவன் கெடுக்க நெனச்சுட்டான். இத விட்டா நமக்கு வேற என்ன பொழப்பு தெரியும்? இனிமே அவன் நம்மள பொழைக்க விடமாட்டான். இப்பிடியே தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருப்பான். இனிமேலும் சும்மா விடக்கூடாது. மோதிப்பாத்துறவேண்டியதுதான்."

"ஏ என்னப்பா சொல்லுற? அவைங்க சுத்த ரவுடிப்பயளுகப்பா. அவைங்க கூடப்போயி..." என ஒரு பெருசு சொல்லி முடிப்பதற்குள்,

"காலம்காலமா இருந்த ஊரையும் பாத்த தொழிலையும் விடணுமா, இல்ல இவைங்கள எதுத்து நின்னு பொழைக்கனுமா? நீங்க தான் முடிவு செய்யணும்"

நீண்ட அமைதிக்குப்பின் பலராலும் அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

மறுநாள் விடிந்தும் விடியாமல் பதினெட்டு பட்டியில் சேர்வாரமுத்து கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் சீனிமுத்துத்தேவர் வீட்டுக்கு. எல்லோரும் பட்டி எல்லையில் இருக்கும் சேர்வாரன் வீட்டு சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அதில், "நீ மறவன் என்றால் பகலில் வா, சக்கிலியன் என்றால் ராத்திரியில் வா" என்று கரிக்கட்டையில் எழுதி இருந்தது.

பதினெட்டு பட்டியில் அனைவருக்கும் ரெத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. துணைக்கு பத்து பதினைந்து பேரோடும், மனத்தில் வெறியோடும் சீனிமுத்து கிளம்பினார். ஊரின் வட எல்லையை அவர்கள் அடைந்த போது, இவர்களுக்காகவே காத்து இருந்தது போல் நூற்றுக்கணக்கான நாடார்கள் திரண்டு இருந்தனர். முதல் வரிசையில் பழனியப்பனின் பையன் ஐயனும் இருந்தான் கையில் படிக்கல்லோடு. இந்தக்கூட்டத்தை சற்றும் எதிர்பாராத சீனிமுத்துவின் கூட்டம் மெதுவாக அதிர்ச்சியுடன் ஒரு நொடி நின்றதும். பின் மெதுவாக வந்தவழி திரும்பியது மனதில் வஞ்சனையோடு.

அன்று முதல் இரு சமுதாயத்திற்கும் நேரடி பகை ஆரம்பித்தது. பகை உச்சகட்டம் அடைந்தது, நாடார்கள் தங்களுக்கென்று ஒரு கோவில் கட்ட தீர்மானித்தபோது. ஆனால் ஒரு கோயில் கட்டுவதெல்லாம் அய்யனுக்கு பிரச்னையை தீர்க்கும் வழியாக தெரியவில்ல, இன்னும் பெரிதாக்குவதாக தான் தெரிந்தது. ஒன்றிரெண்டு பேரிடம் தன் மனதில் பட்டதை சொன்னான். யாரும், சிறுவன் என்று அவனை சட்டை செய்யவில்லை.

நாடார்கள் தங்களுக்கு என்று ஊரின் வட திசையில் பத்திரகாளியம்மன் கோவிலை கட்ட தீர்மானித்தார்கள். கோவிலுக்குள் எல்லா சாதிக்காரர்களும் வரலாம். பூஜை முதற்கொண்டு எல்லா கோவில் வேலையும் செய்வது நாடார்கள் தான். தங்களை பத்திரகாளியம்மனின் பிள்ளைகளாக சொல்லிக்கொண்டார்கள்.

தங்களை விட கீழானவர்கள் கோயில் கட்டுவதை பொறுக்காத பதினெட்டு பட்டியினர் சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் ஊர் கடைவீதியில் ஒரு சின்ன தகராறு வந்தது. சண்டையை விலக்கிவிட்டு, இரு பிரிவினரும் ஒரு பொதுவான இடத்தில் சண்டை போடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் படி மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஊருக்கு வடக்கு புறத்தில் சண்டை என்று முடிவு செய்யப்பட்டது.

ஞாயிறு காலை மணி பத்து. வடக்குப்புறத்தில் தயாராக காத்திருந்தார்கள் நாடார்கள். ஊருக்குள் வீட்டை பூட்டிக்கொண்டு, உள்ளே பெண்கள் கையில் மிளகாய் பொடியோடும், அடுப்பில் கொதிக்கும் எண்ணெய்யோடும் இருந்தார்கள். அப்போது தான் வட எல்லையில் நின்றுகொண்டிருந்த ஆண்களுக்கு அந்த செய்தி குத்தீட்டியை இறக்கியது. சண்டை போடுவதாக சொன்ன இடத்திற்கு வராமல் ஊருக்குள் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தேவர்கள் கொள்ளை அடிப்பதாக தகவல் வந்தது. இவர்கள் விரைந்து செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் இருந்த அறைகளை வெளியில் பூட்டிவிட்டு வீட்டிலும் கொள்ளை அடித்திருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்து ஊரே “அய்யோ அம்மா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தது. அப்போது தான் அய்யன் ஒன்று சொன்னான். "அண்ணாச்சி நீங்க கோயில் கட்டுறதாலேயோ சண்ட போடுறதாலேயோ எந்த முடிவும் வரப்போறதில்ல. நம்மள மட்டமா நெனைக்குறவன் கூட நாம மோதுனா நாம எப்பையுமே மட்டமா தான் இருப்போம். அவன நமக்கு கீழ வரவைக்கணும்னா நாம அவனுக்கு மேல போகணும். அதுக்கு எனக்கு ஒரு வழி இருக்கு" என்று தனது மனதில் இருந்த அந்த திட்டத்தை சொன்னான்.

அவனும் அவன் மாமா பையன் சண்முகமும் கல்கத்தா சென்றார்கள். சிலகாலம் அங்கிருந்து தீப்பெட்டி தயாரிப்பதையும் வெடி தயாரிப்பதையும் கற்று வந்தனர். சிவகாசியில் தொழில் ஆரம்பித்தனர். திருட்டு மட்டுமே பிழைக்க வழி என்று நினைத்த பதினெட்டு பட்டியும், நாடார்களை மதிக்காவிட்டாலும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு வந்தது. "முதலாளி" என்றும் "அண்ணாச்சி" என்றும் அந்த "சானாப்பயல்கள்", உயர் சாதிக்காரர்களால் வாயாற அழைக்கப்பட்டார்கள். ஒன்றுமே விளையாது என்று இருந்த பூமி பணம் விளையும் பொக்கிஷமாக மாறியது. கல்கத்தா போன அந்த இருவரும் தான், நவீன சிவகாசியின் தந்தை என அழைக்கப்படும் அய்யா நாடார் மற்றும் காக்கா ஷண்முகநாடார்.

இப்போதும் கூட எங்கள் ஊர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் வெடி ஆலைகளில் சனிக்கிழமை கூலி வாங்கிக்கொண்டு பிள்ளைகளை மாவட்டத்திலேயே பெரியதான 120 ஆண்டு பழமையான நாடார் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கார்கள் தங்கள் வீட்டுக்கு போவார்கள். போகும் வழியில் தங்கள் பிள்ளைகளிடம் "தாயோழி" என்றும் "தேவடியாப்பயல்" என்றும் வைது கொண்டே செல்வார்கள் சில நிமிடங்கள் முன்பு சம்பளம் வாங்கும் போது "ரொம்ப நன்றி அண்ணாச்சி" என்றவர்களை..

எனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..

Tuesday, December 28, 2010

முதலிரவு அன்று
'அழுப்பாக இருந்தால் தூங்கு'
என்று என் முகம் பார்த்தே
அகம் கண்ட என் கணவரை
அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு..

காலையில் எனக்கு முன்பே
விழித்து இருந்தாலும்
நான் எழுப்பி விடும் வரை
காத்திருப்பதும்..

கால் விரல்களில்
இறுக்கமாக மாட்டிக்கொண்ட
மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே
கடித்து எடுக்கும் போதும்..

என் கர்ப்ப காலத்தில்
என்னைவிடவும்
என்னையும் குழந்தையையும்
பேணி கவனித்துக்கொண்ட போதும்..

விடுமுறை நாட்களில் கூட
வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல்
சோம்பேறியாக இருக்கும் போதும்..

வேலைக்கு செல்லும் சமயத்தில்
சாமி கும்பிட மறந்தாலும்
என் நெற்றியில் முத்தமிட
மறக்காத போதும்..

செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல்வாதிகளை
அசிங்கமாக திட்டும்போதும்..

என் வீட்டில் இருந்து
யார் வந்தாலும் அவர்களிடம்
பேச கூச்சப்படும் போதும்;
ஆனால் அவர்களிடமும்
மறக்காமல் என்னை கிண்டல்
செய்யும் போதும்..

என் பிறந்தநாளையும்
எங்கள் திருமண நாளையும்
மறந்து என்னிடம்
மன்னிப்பு கேட்கும் போதும்..

மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால்
ஹைலைட்சிலேயே
திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்..

நினைத்துக்கொள்வேன், "நல்ல வேலை
அந்த கணேஷை கழட்டி விட்டேன்
இந்த நல்ல கணவன் கிடைத்தான்.."

சாரு நிவேதிதாவும் அவரின் ஒப்பீடுகளும்..

Sunday, November 7, 2010

பெரும்பான்மையானவர்களின் விருப்புகளை நம்பிக்கைகளை 'தவறு' 'முட்டாள்தனம்' 'அறிவிலி' என்று சொல்வதன் மூலம் பெயர் எடுத்து விடலாம் என்பது பெரியாரின் நம்பிக்கை. இதை பாஷன் ஆக்கியது முத்தமிழ் அறிஞர். ஆன்மிகத்திற்கு இவர்கள் என்றால், கலைத்துறைக்கு ஒரு சாரு நிவேதிதா.

ரோட்டில் செல்லும் ஒரு அழகான பெண்ணை பார்த்து நீங்கள் சைட் அடித்து ரசிக்கும் போது, ஒரு அதிகப்பிரசங்கி, அந்த பெண்ணின் உடைகளை களைந்து, 'இவர் முலைகளைப்பார், ஒன்று பெரியதாக உள்ளது, ஒன்று சிறிதாக உள்ளது..' 'இவள் (யாரோ ஒரு வெளிநாட்டுக்காரியின் பெயரைக்கூறி) அவளை காப்பி அடித்து உள்ளே சிலிக்கான் பேட் வைத்திருக்கிறாள்'.. 'இவளுடைய அம்மா ஒரு தேவடியாள்'.. என்கிற தொனியில் வக்கிரமாக கேவலமாக பேசினால் உங்களுக்கு என்ன மனநிலை இருக்குமோ, அதே மன நிலை தான் இந்த சாரு நிவேதிதா என்பவரின் எந்திரன் படத்தைப்பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது எனக்கு இருந்தது..

படத்தின் இசை வெறும் சத்தமாக மட்டும் உள்ளதாம். படத்தின் லோகேசன் கேவலமாக இருக்கிறதாம். இப்படி எல்லாம் கூறி, ஏதேதோ கேள்வியே படாத சில வேற்று மொழிப்படங்களை ஒப்பிட்டுப்பேசுகிறார். எனக்கு இரண்டு வருடங்களாக இவருடைய வலைத்தளம் மட்டுமே பழக்கம், சமீபமாக ஆனந்த விகடன். இவர் வலை தளங்களில் எந்த தமிழ் படத்தையும் பாராட்டி நான் கண்டதே இல்லை. ஆனால் நமக்கு என்னவென்றே தெரியாத வேற்று மொழிப்படங்களை சிலாகித்துப்பேசுவார். இசையிலும் அப்படியே. ஏன் இப்படி என்று புரியவில்லை. இவர் ஆனந்த விகடனில் எழுதும் பத்தியிலும் 'அந்த நாட்டில் அப்படி உள்ளது, இந்த நாட்டில் இப்படி உள்ளது, என்றெல்லாம் மற்ற நாடுகளை பெருமையாக பேசிவிட்டு, கடைசியில் இந்தியாவை அசிங்கப்படுத்துவார். மாநிலங்களைப்பற்றி பேசும் போது தமிழகத்தை மட்டம் தட்டுவார். தான் சார்ந்துள்ள மாநிலத்தையும் நாட்டையும் மக்களையும் மிக தாழ்வாக நினைக்கிறார் இவர்.

என் சந்தேகம் எல்லாம், இவருக்கு பிற நாடுகளும், பிற மொழிப்படங்களும், வேற்று நாட்டவரின் இசை மட்டுமே பிடிக்கும் போது இவர் ஏன் தமிழ் படங்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் விமர்சனம் எழுத வேண்டும்? அதுவும் இவர் அங்காடி தெரு, தசாவதாரம், குருதிப்புனல், எந்திரன் போன்ற பலரையும் கவர்ந்த தமிழ் படங்களை தான் குப்பை என்று எழுதுவர். இந்தப்படங்களில் எல்லாம் குறையே இல்லை என்று சொல்ல முடியாது. நான் முன்பு சொன்ன உதாரணம் போல, ஒரு பெண்ணை சைட் அடிக்கும் போது அவளின் தலைமுடி கொஞ்சம் கலைந்திருப்பது நமக்கு சிறு குறையாக தெரியலாம். ஆனால் இவரோ, அந்த பெண்ணை, நான் முன்பு சொன்ன உதாரணத்தை போல கூறு போடுகிறார். படம் என்பது 2, 3 மணி நேரம் கவலைகளை மறந்து சந்தோசமாக இருப்பதற்காக தான் நாம் பயன் படுத்துகிறோம். அதில் சில நல்ல கருத்துகள் இருந்தாலும் ஏற்றுகொள்கிறோம், நமக்கு சரி என்று பட்டால். ஆனால் குறை கண்டு பிடிக்கா விட்டால் தனக்கு கிறுக்கு பிடிக்கும் என்பதற்காகவே படம் பார்த்தால் இவரைப்போல் தான் எழுத வேண்டும்.

எனக்கு இருக்கும் சந்தேகம் இவருக்கு எந்த தமிழ் படமுமே பிடிக்காதா? சில மாதங்களுக்கு முன்பு சிவாஜியின் நடிப்பை செயற்கையின் உச்சம் என்று கூறிய இவர், இப்போது அவரின் நடிப்பை, மற்றவ்ரகளைப்போல மர்லான் பிராண்டோவோடு ஒப்பிடுகிறார். ஒரு வேளை தென் அமெரிக்காவில் இப்படி தான் மாற்றி மாற்றி பேசுவார்கள் போல.

'ரஜினி என்ற 61 வயது (71 வயது தோற்றம் கொண்ட) முதியவர், 37 வயது மாமியுடன் டூயட் பாடுகிறாராம்'. இது இந்த எழுத்தாளருக்கு வக்கிரமாக இருக்கிறதாம். வயதுக்கு ஏற்ற கதைகளில் நடிக்க வேண்டுமாம். அய்யா சாரு நிவேதிதா அவர்களே, உங்களை யாரும் வயதுக்கு தகுந்த மாதிரி பேசு, எழுது என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள், கூட தான், கல்லூரிப்பெண்களை கவர, ஒரு இளைஞன் போல் நடித்து, ஜாக்கி ஜட்டி எல்லாம் அணிந்து சென்றதாக பெருமையுடன் கூறினீர்களே, அப்போது எங்கே போனது உங்கள் வயது? ஒரு நடிகன் எப்படி நடிக்கிறான் என்று பாருங்கள், அவன் வயதைப்பற்றி உங்களுக்கு என்ன? நான் நினைக்கிரீன் உங்களுக்கு ரஜினி மீது பொறாமை, இந்த வயதிலும் கதாநாயகனாக பெண்களோடு டூயட் பாடுகிறார் என்று. இந்தப்படம் 3000 பிரிண்ட் போடப்பட்டதில் இருந்து இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தது வரை உங்களுக்கு வயிற்றெரிச்சல் தான்.

ரகுமான் ஹிந்தியில் இசை அமைத்தால் உங்களுக்கு பிடிக்கும், அதே தமிழில் பிடிக்காது. இங்கு ஒரு நல்ல விஷயம் நடந்தாலுமே உங்களுக்கு அதில் உள்ள சிறு தவறு மட்டுமே தெரியும். நல்லவைகள் எல்லாம் உங்களுக்கு தூரமாகவே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு pessimist சாரு.

எனக்கும் உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது வக்கிரமாக உள்ளது. உங்கள் எழுத்துக்களை பிடித்து உங்களையும் மதித்து கடிதம் போடுபவர்களை (நீங்கள் தான் உங்களுக்கே அப்படி கடிதம் எழுதுவதாக ஒரு பேச்சும் உள்ளது) நீங்கள் எவ்வளவு வக்கிரமாக திட்டுகிறீர்கள்? இதில் இருக்கும் வக்கிரத்தை ஒப்பிட்டால் ரஜினி டூயட் பாடுவது ஒன்றுமே இல்லை.

எனக்கு இன்னொரு மிகப்பெரிய சந்தேகம், நீங்கள் ஏன் பெயரே வாயில் நுழையாத எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் மேற்கோள் காட்டுகிறீர்கள்? அப்படி என்றால் இத்தனை நாட்களாக எங்களுக்கு தெரிந்த எழுத்தாளர்களும் சினிமாக்காரர்களும் அறிவு கெட்டவர்களா? இல்லை அவர்களை வாசித்த ரசித்த எங்களுக்கு மூளை இல்லையா? ரஜினி ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார் 'ரசிகர்களை முட்டாள்னு நெனைக்குறவன் ஒரு முட்டாள்' என்று. நீங்களும் அப்படி ஒரு முட்டாள் தான். உங்களை வாசிப்பவர்களையும் மற்ற மக்களையும் கூட, உங்களை விட கீழானவர்களாக முட்டாள்களாக நினைக்கிறீர்கள்.

அதே நேரத்தில் உங்களை இந்தியாவில் (அப்படி சொன்னால் கோபம் வருமே, உங்களை இந்தியா என்ற குப்பை நாட்டிற்குள் அடைத்து விட்டதாக..), சாரி, உலகிலேயே மிகப்பெரிய எழுத்தாளராக நினைத்துக்கொண்டு காலம் தள்ளுகிறீர்கள். நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும். நீங்கள் கூறும் பெயர் தெரியாத எழுத்தாளர்களை பற்றியும், இன்னும் பிறவும், நீங்கள் கூறுவதை விட விக்கிபீடியாவிலும் கூகிளிலும் அதிகமாக உள்ளன.

ஒரு படைப்பாளி படைக்க வேண்டும், இப்படி பிற படைப்பை குறை கூறியே பொழுதை ஒப்பேற்ற கூடாது. முதலில் நீங்கள் உங்கள் எழுத்தை ஒழுங்காக கவனியுங்கள்.

குறிப்பு:
உங்களை சுப்பிரமணிய சாமியுடன் ஒப்பிட்டு எழுதியது உங்களுக்கு அவ்வளவு கோபத்தை உண்டு பண்ணுகிறதோ? அவரை விட நீங்கள் ஒரு மிகப்பெரிய கோமாளி. அவர் பல வெளி நாடுகளின் (வெளி நாடு என்றால் உங்களுக்கு பிடிக்குமே) பல்கலைகழகங்களில் உரை ஆற்றயுள்ளார். கேரளாவில் முதன்மையான ஒரு நிர்வாகவியல் கல்லூரியை நடத்துகிறார். நீங்கள் என்ன செய்து விட்டர்கள்? அவர் அரசியல் பேச்சை விடவும் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது உங்களை நீங்களே உலகின் சிறந்த எழுத்தாளராக கொண்டாடுவது.

என்னைத்துரத்திய மழை - அப்பாவின் கடவுள்... (கவிதை (அப்படினும் சொல்லலாம்))....

Saturday, September 25, 2010

சிறு வயதில் இருந்தே
நான் கண்டுணர்ந்தது -
காலாண்டு தேர்வின் போது தான்
எங்கள் ஊரின்
முழு ஆண்டுக்குமான மழை ஒழுகும்..

இப்போதும் காலாண்டு தேர்வு எங்கும்
நடந்தும் முடிந்தும் விட்டது..
ஆனால்
வழக்கமாக நாய் மூத்திரம் போல
சிந்தும் அந்த மழையும் இந்த ஆண்டு
பெயருக்கும் இல்லை..

'போரிங்ல தண்ணி வரல;
நல்ல தண்ணி வந்தும்
ஒரு வாரம் ஆகுது..
மாரித்தாயே நீ தான் மழை குடுக்கணும்'
காலையில், வேண்டுதல் என்ற பெயரில்
கடவுளிடம் கத்திக்கொண்டிருந்தார் அம்மா..

மெதுவாக எழுந்து
சோம்பேறியாக வேலைக்கு கிளம்பினேன்..
'இன்னைக்கு ஸ்ரீவி மார்க்கெட்' - என்
பாஸ் சொன்னபடி
கிளம்பினேன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு..

சிவகாசியின் வெயிலை கடந்து
ஸ்ரீவியின் எல்லைக்குள் சென்றேன்
அருமையான வானிலை அலாதியான குளிர்ச்சி
'வெறும் 20km தூரத்திற்குள் இவ்வளவு மாற்றங்களா?'
இயற்கையின் விந்தையையும் ஓரவஞ்சனயையும்
ஒரு சேர ரசித்து நொந்தேன்..

மாலை நேரம் நெருங்க நெருங்க
'மழை வரும்' என்று மேகங்கள் முழங்கின..
'அய்யயோ, மழை வந்துறுமோ?
அதுக்குள்ள கிளம்பிடணும்'
என்று பயந்தேன்..
ஆம், மழைக்கு பயந்தேன்..
அதை ஒவ்வாமை என்றும் சொல்லலாம்..

எம்மூர் மக்கள் உருக்கும் வெயிலையும்
வெற்றுடம்பில் வியர்வையின்
குளிர்ச்சியால் அணைத்துக்கொள்வோம்..
ஆனால் எங்களால் சிறு
மழையையோ குளிரையோ
தாங்குவது ரொம்பவே கடினம்..

அதனால் தான்
மழை வானில் இருந்து
கிளம்பும் முன்
நான் ஸ்ரீவியில் இருந்து கிளம்பினேன்..

செல்லும் வழி எங்கும் மழையின் சாரல்
என்னை துரத்தி வருகிறது கோடை மழை
நனைந்து விடாமல் மிக வேகமாக
செலுத்துகிறேன் என் வண்டியை..
விடாமல் துரத்துகிறது இந்த வருணனின் கொடையும்...

மனதில் ஒரு ஆசைவினா..
இந்த மழையை இப்படியே
நம் ஊர் வரை
இழுத்து செல்லலாமா? என்று

எப்படி?
எனக்குள் ஒரு போட்டியை முடிவு செய்தேன்
இப்படியே மழையை என்னை துரத்த செய்து
ஏமாற்றி
எங்கள் ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று..

நான் என் வண்டியில்
இது வரை செல்லாத வேகத்தில் விரைந்தேன்..
மழையும் என்னை துரத்தி வந்தது..
மேகத்தின் தாறு மாறான இதய துடிப்பை
காட்டும் கருவியாய் மின்னல்கள்..

'சிவகாசி உட்கோட்ட எல்லை ஆரம்பம்'
நெடுஞ்சாலை அமைத்த கல் பலகை
என்னை வரவேற்றது..
இன்னும் 3km தூரத்தில் என் ஊர்..

துரத்தி வரும் இந்த மழையை
இன்னும் கொஞ்ச தூரம்
இழுத்து வந்தால்
'ஆஹா, என் ஊரிலும் இன்று மழை பெய்யும்'..

என் போட்டியை தெரிந்து கொண்டதாலோ என்னவோ
மழை அந்த பலகையோடு
நின்று கொண்டது,
"சிவகாசி எல்லை வரை தான் என் எல்லை" என்பது போல்..
அம்மாவின் வேண்டுதல் வீணாகி விட்டதே?!?!

ஏமாற்றத்தோடு வீட்டிற்குள் நுழைந்தேன் நான்
வேலை முடிந்து அப்போது தான்
அப்பாவும் பட்டாசு ஆலையில் இருந்து வந்திருந்தார்..
'நல்ல வேல தம்பி என் வேண்டுதல்
வீண் போகல' - புன்னகை தவழும்
முகத்தோடு சொன்னார்.
தொடர்ந்து
'சீசன் டயத்துல மழை வந்து
கெடுத்துருமோனு பயந்துட்டேன்;
அந்த கடவுள் என் வேண்டுதல
நிறைவேத்திட்டான்' என்றார்.

நான் வேண்டிக்கொண்டேன்
அந்த male chauvinist கடவுளிடம்,
'கடவுளே நீயாவது இட ஒதுக்கீடு கொடு
எங்கள் ஊர் பெண்களுக்கு' என்று..

காதலிக்கு கடிதம் - காதல் தோல்விக்கு பின்...

Sunday, September 5, 2010

நான்: உனக்காக நான் செய்த ஏர்டெல்-ஏர்டெல்
10 பைசா திட்டம்
பயன்படுத்தப்படாமலே இருக்கிறது..
மனசாட்சி: 150 ரூபாய் போச்சுடீ..

நான்: என் விடுமுறைகள்
உன்னைப்பார்க்க ஏங்கிக்கிடக்கின்றன..
மனசாட்சி: பஸ் காசு மிச்சம்..

நான்: நீ கொடுத்த வாழ்த்து அட்டையும்
என் வீட்டு பூஜை அறையில் காதல் கடவுள் உன்னால்
சிபாரிசு செய்யப்பட்ட மனிதனின் கடவுள் பிள்ளையாரும்
உன்னை ஞாபகப்படுத்தி
மனம் வலிக்கச்செய்கிறார்கள்..
மனசாட்சி: எட்டணா கலர் அட்டைல கவுத்திப்புட்டாலே..

நான்: நன் கொடுத்த புத்தகங்களையோ
பிறந்த நாளுக்கு நான் பரிசளித்த மோதிரத்தை பார்க்கும் போதோ
அந்த வெள்ளை நிற சுடிதார் அணியும் போதோ
உனக்கு ஒரு நொடி கூட என் எண்ணம் வரவில்லையா?
மனசாட்சி: ஆயிரக்கணக்குல செலவழிச்சதுலாம் வீணா போச்சே...

நான்: வீட்டில் யாரும் உன் படிப்புக்கு துணை நில்லாத போது
என் மடிக்கணினியை விற்று
உனக்கு கல்வி கட்டணம் செலுத்தியபோது
நீ சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும்
என் நினைவுகளில் உள்ளது..
'என் family a விட நீ தான் எனக்கு எப்பவும் வேணும் ராம்'
என்று சொல்லியதை கூடவா மறந்து விட்டாய்?
மனசாட்சி: இன்னைக்கு அவளே தானடா
'எங்க குடும்ப மானமே போயிடும்
உன்ன கட்டிக்கிட்டா' னு சொல்லிட்டா..

நான்: உன்னால் நான் இழந்தது
என் வாழ்வில் பல..
மனசாட்சி: ஆமா ஆமா,
இதுவரைக்கும் எழுபத்தாயிரத்தி சொச்சம்..
வட்டி என்ன ஆச்சு?

நான்: இழந்தவை எல்லாம் திரும்ப வருமா?
உன்னையும் சேர்த்து தான் கேட்கிறேன்..
மனசாட்சி: நீ கூட வர வேண்டாம் தாயி..
அந்த காச மட்டும் ரிட்டன் பன்னிரு..
என்னோட அடுத்த பிகருக்கு செலவழிக்கணும்..

விஸ்வநாதன் ஆனந்தா? யாரு அது?

Tuesday, August 24, 2010

இன்று அம்மா 'திருமதி செல்வம்' பார்த்துக்கொண்டிருந்த போது, கிடைத்த மிகப்பெரிய விளம்பர இடைவெளியில், மெதுவாக ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டிருந்தேன். ஜெயா டிவி யில் யாரோ விஸ்வநாதன் ஆனந்த் என்பவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதில் தாமதம்; அவருடைய இந்தியக்குடியுரிமையில் சந்தேகம் என்கிற தோரணையில் செய்தி ஓடவிட்டார்கள்.

இதைப்பார்த்தவுடன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன..
*கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதில் என்ன வரைமுறைகள் இருக்கின்றன?
*விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் இந்தியாவிற்கு தானே ஆடினார்? ஒவ்வொரு கோப்பை வந்ததும் நீங்கள் தானே பல் இழித்து வாங்கிக்கொண்டீர்கள்?
*ஒரு வேலை அவர் வெளிநாட்டவராகவே இருந்தாலும் என்ன பிரச்சனை?

ஓ.. வெளி நாட்டவர் என்றால் இதை விட மிகப்பெரிய பட்டம் எதாவது கொடுக்கலாம் என்று யோசித்திருப்பார்கள் போல. நாம் தான் வெளிநாட்டவர்களை அவர்கள் என்ன செய்தாலும் உயர்வாகத்தானே பார்ப்போம்? அப்படி இல்லாமலா ஒரு ஊரையே விஷம் பாய்ச்சி கொன்ற வெளி நாட்டவனை அரசு மரியாதையோடு விமானம் ஏற்றி அனுப்பிவைத்திருப்போம்?

நல்ல வேலை இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பவரின் பெயரை பார்த்தால் இவர் ஹிந்து என்பது போல் தெரிகிறது. இவர் மட்டும் வேறொரு மதத்தவராக இருந்திருந்தால், இந்நேரம் நமது முதல்வர் கொதித்து எழுந்திருப்பார், மைனாரிட்டி மக்களின் உணர்வை பாதுகாக்க.. நல்ல வேலை, அவர் கோபப்பட்டு கேள்வி பதில் வெளியிடும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை.

ஒரு டவுட்:
"டாக்டர் பட்டம் குடுக்குற அளவுக்கு இந்த விஸ்வநாதன் ஆனந்த் யாரு? Dr.விஜய்யை விட பெரிய ஆளா?" - அப்பாவி தமிழன்..

வம்சம் - விமர்சனம்...

Sunday, August 15, 2010


மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சிலம்பாட்டம் என்ற குப்பை படத்தின் கதையை அருமையான விதத்தில் படைத்திருப்பது தான் இந்த வம்சம்..

கதை மிகவும் பழக்கப்பட்ட சாதாரண கதை தான். ஆனால் அதில் 11 வம்சம், மண்டகப்படி, சாணி ஊற்றுவது, சூடம் பாலில் சத்தியம் செய்வது என்று ஒரு அசலான கிராமப்பின்னணியில் படம் கொடுத்திருப்பது நல்ல அம்சம். "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்" என்று அறிவிக்கும் போது ஒற்றை ஆளாக அறிவுநிதி நடந்து வரும் இடம், அவர் ஒரு மாஸ் ஹீரோ இல்லை என்றாலும், ஜிவ் என்று இருந்தது. ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சுனைனாவின் பாத்திரப்படைப்பு ஒரு அசல் மறவர் பெண்ணை கண்முன் நிறுத்துகிறது. அவரே ஆள் வைத்து அறிவுநிதியை மிரட்ட செய்வது, சாணி ஊற்றுவது, என்று கொஞ்சம் (ரொம்பவே ) தைரியமான பாத்திரம் தான். அதுவும் இடுப்பில் இருந்து சைக்கிள் செயினை அவர் எடுக்கும் இடம் அருமை. ஆனால் இப்போதும் புரியாத ஒன்று, ஆடியோ ரிலீசின் போது 'இந்த மாதிரி படத்துல நடிப்பது பெருமையா இருக்கு' என்று கண்ணீர் விட்டார். நல்ல பாத்திரம் என்றாலும் இவர் அழும் அளவிற்கு ஒன்றும் கஷ்டமான பாத்திரம் இல்லை.

ஜெயப்ரகாஷின் நடிப்பு அருமை. 'என்ன மாதிரி அல்ப புத்திக்காரன் எவனும் கெடையாது' என்று அசால்டாக கடைசியில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தன் பாத்திரத்தை ஒரே வரியில் முடித்து விடுவார். கிஷோரும் கஞ்சா கருப்பும் உணர்து நடித்துள்ளனர்.

பசங்க படத்தின் புஜ்ஜிமா சின்ன வயது அருள்நிதியாக வருகிறான். அதே பள்ளி, பக்கோடா, அப்பத்தா என்று பசங்க படத்தின் பாத்திரங்களும் வருகின்றன. 'இந்த மைக் செட் அமைப்பாளர் LIC ஏஜெண்ட் மீனாட்சி சுந்தரம்' என்று விமல் பாத்திரமும் வாய் வழியாக வருகிறது. பசங்க படத்தில் செல் போனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே முக்கியத்துவம் இதிலும். சிக்னல் இல்லாத ஊரில் கூட மக்கள் செல் போன் வைத்துள்ளார்கள் என்பதை இயல்பாக நக்கலுடன் சொல்லியுள்ளார் பாண்டி குமார்.

படம் முழுக்க எவ்வளவு தகவல்கள்? இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. காட்சிப்பதிவும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது. முதல் திருவிழா பாடலை தவிர மற்றை கவரவில்லை. கற்றாழை மூலம் கொல்வது, பழிச்சொல்லுக்கு அஞ்சுவது, மானம் மரியாதைக்கு முதல் மரியாதை கொடுப்பது, பெண்களை அடிக்காமல் இருப்பது, ஓட்டை பிரித்து வீட்டில் ஆள் இருக்கிறானா என்று பார்ப்பது, கோழி பசு போன்ற கிராமத்து விலங்குகளுக்கும் மனித பாஷை புரியும் என்பது போன்ற சில புதுமைகளும் உள்ளன. பசங்க, களவாணி, வம்சம் என்று தமிழ் சினிமா புதுக்கோட்டை, தஞ்சாவூர் பக்கம் பயணம் செய்து மதுரையை காப்பாற்றுகிறது.


மொத்தத்தில் தங்கள் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள ஒவ்வொரு தேவரின மக்களும், தமிழக கிராமங்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய அம்சம் பலவும் கொண்டது இந்த வம்சம்..

எந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின் இலவச இணைப்பும்...

Thursday, July 29, 2010


இன்று என்னை இரண்டு புதுமையான விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.. ஒன்று இன்றைய நாளிதழ்களில் வந்த எந்திரன் பட விளம்பரமும், ஆனந்த விகடனில் வந்த இலவச இணைப்பும்..
முதலில் தலைவரைப்பற்றி பார்ப்போம்..

வழக்கமாக ஒரு படத்தின் விளம்பரத்தில் அந்த படத்தின் சில புகைப்படங்களோ படத்தின் கலைஞர்களின் புகைப்படமோ இருக்கும்.. மேலும் அந்த படத்தின் பெயரும், இயக்குனர், மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம் பெரும்.. விஜய்க்காக படம் பார்க்காவிட்டாலும் தமன்னா அனுஷ்கா அல்லது வடிவேலு போன்றோர்களுக்காகவாவது படம் பார்க்க செல்வோம்.. அதனால் இப்படி பலரின் பெயரும் படமும் விளம்பரத்தில் இருக்கும்.

அதுவும் பாடல் வெளியீட்டு விளம்பரம் என்றால் பாடலாசிரியரின் பெயர், இசை அமைப்பாளர் பெயராவது இடம் பெரும். இன்றைய எந்திரன் விளம்பரத்தில் ஒன்றும் கிடையாது. ஏ.ஆர்.ரகுமான் பெயர் கூட இல்லை. படத்தின் பெயரும் இல்லை.. தலைவரின் முகம் மட்டும் தான். மேலும் "இசை வெளியீடு 31.07.2010" என்ற வாசகம் மட்டும். வேறு ஒன்றும் கிடையாது. இதில் இருந்து அவர்கள் சொல்லவருவது, தலைவர் இருக்கிறார், இது தலைவரின் படம் என்ற ஒன்று மட்டுமே. வேறு எதுவும் தேவை இல்லை; அது ஷங்கராக இருந்தாலும் சரி, ரகுமானாக இருந்தாலும் சரி. அவர்களின் இந்த விளம்பர அணுகுமுறை முறை என்னை மிகவும் கவர்ந்தது. தலைவருக்கு இருக்கும் மாஸ் இன்னும் பிரம்மாண்டமாய் தெரிகிறது...

அடுத்த விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமாக ஆனந்த விகடனில் இலவச இணைப்பு என்று சோப்போ, ஷாம்புவோ, டீ தூள் பாக்கட்டோ கொடுப்பார்கள். பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் சோப்போ, ஷாம்புவோ வராது, டீ தூளை மட்டும் பயன் படுத்துவேன்.. சோப்பை பக்கத்து வீட்டில் கொடுத்து விடுவேன். அவர்கள் கொடுத்த ஏர்செல் சிம் கார்டை கூட தேவை இல்லை என்று கீழே போட்டுவிட்டேன். இன்று அவர்கள் கொடுத்த இலவச இணைப்பை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனந்த விகடனை குடும்பஸ்தர்கள் மட்டும் தான் படிப்பார்களா? மணமாகாத ஆண்கள் எல்லாம் ஆனந்த விகடனே படிக்க மாட்டார்களா? அவர்கள் தந்த இலவச இணைப்பை என்ன செய்வது? என்னை போன்ற ஒரு பாச்சுலர் இதை பக்கத்து வீட்டில் கொடுத்தாலும் செருப்படி தான் விழும். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படி எல்லாம் இலவசமாக அவர்கள் செய்தால் தான் மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படி அவர்கள் என்ன தான் கொடுத்தார்கள் என்கிறீர்களா? சானிட்டரி நாப்கின்.. நல்ல விளம்பர உக்தி தான்.. இதனால் சிலரிடம் விழிப்புணர்வும் வரும்.. ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு காண்டம்களையும் இலவசமாக கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புவோம்..

மதராசப்பட்டினம்.......

Sunday, July 11, 2010இந்தியாவிற்கு கிடைக்கும் சுதந்திரத்தால் பாதிக்கப்பட்டு பிரிந்த காதல் நெஞ்சங்கள் மீண்டும் உயிரால் இணைவதே இப்படம்...

கிரீடம், பொய் சொல்லப்போறோம் என்ற இரண்டு தரமான வித்தியாசமான ரீமேக் படங்களை தந்த விஜய்யின் (இது நீங்க நெனைக்குற அந்த ரீமேக் விஜய் இல்ல, தரம் வித்தியாசம் என்ற இரண்டு வார்த்தைகளை மீண்டும் கவனிக்கவும்) அழுத்தமான சொந்த சரக்கு. 'மனுஷன் ஏன்யா இவ்வளவு விஷயத்த வச்சுக்கிட்டு ரீமேக் படம் எடுத்தான்?' என்று என்னும் அளவிற்கு பிரித்து மேயந்துள்ளார்.. சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்" நாவலின் சாயல் மிக குறைந்த அளவிலாவது தென் படுகிறது...

பலரும் சொல்வது போல் இது டைட்டானிக் போன்ற சாயலில் இருந்தாலும், முற்றிலும் வேறுபட்ட களத்தில் காதலை அழகாக சொல்லியிருக்கிறார்கள்..
படத்தின் பலமே காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், கலை இயக்கமும் தான்.. சென்னை என்ற குப்பை மேட்டில் நான்கு மாதங்கள் இருந்த அனுபவத்தில் சில பல இடங்கள் தெரிந்த எனக்கே பழைய மதராசப்பட்டினத்தை பார்க்கும் போது அவ்வளவு ஏக்கமாக இருக்கிறது. இன்றைய கூவம் நதிக்கருகில் நின்று கொண்டு கதாநாயகி பழைய கூவத்தை நினைத்துப்பார்ப்பது "same feelings" என்று சொல்ல தோன்றியது..

படத்தைப்பற்றி விமர்சிக்கவோ குறை சொல்லவோ என்னிடம் எதுவும் இல்லை.. அப்படியே இருந்தாலும் சொல்லப்போவதில்லை.. நிறைகள் மட்டுமே..

*முதலில் சொல்ல வேண்டியது எமி ஜாக்சனை பற்றி.. பொண்ணு அழகுல மட்டும் இல்ல நடிப்புலயும் பிரிச்சு மேயிது.. ஒரு பேட்டியில் இயக்குனர் விஜய் சொல்லியிருந்தார், "தமன்னாவிற்கும் எமி ஜாக்ஸனுக்கும் என்னங்க வித்தியாசம்? ரெண்டுபேருக்குமே தமிழ் தெரியாது.. தமன்னாவே நடிக்கும் போது இந்த பொண்ணும் நடிக்கும்" என்று.. அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை.. நான் தான் எமி ஜாக்சன் சிவகாசி ரசிகர் மன்ற தலைவர்.

*முதல் பாதியில் ஆர்யா படகில் திக்கித்திணறி ஆங்கிலம் பேசும் போது, "மறந்துட்டியா?" என்று எமி கேட்கும் இடம், நச்.. அதே போல் அந்த குஸ்தி காட்சி அதில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் வசனம், "நானூறு வருசத்துக்கு அப்பறம் திரும்ப அடிக்குறோம்"..

*இரண்டாம் பாதி முழுவதும் அருமை. அதுவும் கடைசி முக்கால் மணி நேரம், பரபரப்பு மற்றும் பரிதவிப்பு..

*சுதந்திரம் கிடைக்கும் காட்சி, ரயில்வே நிலையத்தில் ஆர்யா எமியை பார்க்கும் காட்சி, கடைசி படகு காட்சி என்று தொண்டை அடைத்த தருணங்கள் பல (திரும்பவும் same feelings)..

*ஜி.வி.பிரகாஷ் குமார் அசத்தலாக இசை அமைத்துள்ளார்.. ஆருயிரே பாடல் எனக்கு பிடித்தது..

*யாரையோ விட்டுட்டேனோ? ம்ம்ம் ஆர்யா.. பரிதியாவே வாழ்ந்துருக்காருப்பா மனுஷன்.. அவர் உடல் நடிக்கும் முன்பே, வாய் வசனத்தை உச்சரிக்கும் முன்பே, கண்கள் பேசிவிடுகின்றன..

*குஸ்தியின் போது வெளியில் தெரியாமல் சந்தோசப்படும் இந்திய போலீஸ், நாயகனின் தங்கை "அதெல்லாம் வேண்டாமக்கா, எங்க வண்ணான் துறைய மீட்டுக்குடுங்க போதும்" என்னும் காட்சி, ஆர்யா எமியிடம் தாலி குடுக்கும் காட்சி, தமிழ் வார்த்தைகளை வீணாக்காமல் சேர்த்து வைப்பது போல் யாரிடமும் அளந்தே பேசும் அந்த பாட்டி, என்று அடுக்கிக்கொண்டு போகும் அளவிற்கு காதலையும் சில இடங்களில் தேசப்பற்றையும் ஓட விட்டிருக்கிறார்..

சென்னை நல்ல ஊர் இல்லை என்றாலும், நல்ல படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் இந்த மதராசப்பட்டினம்..

சசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க?

Thursday, May 27, 2010


கல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் வைத்து பாட்டு போடுவதோடு நின்று விடும். சில வருடங்களாக ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

அதிலும் இவர்கள் ப்ளெக்ஸ் போர்டில் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. அரசியல் கட் அவுட்டுகளை விட இவை மிகவும் அசிங்கமாக உள்ளன. ரஜினி, கமல், விஜய், அஜித் என்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை அதில் அச்சடித்து வாழ்த்து சொல்வார்கள். இப்போது ஒரு சில நடிகர்களின் படத்தை போட்டு தங்கள் ஜாதியின் பெயரை கீழே "இவண்" என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

எங்கள் ஊர் பக்கம் சரத்குமாரும் காமராஜரும் இணைந்தே போஸ் கொடுப்பார்கள். அதே போல கார்த்திக் முத்துராமலிங்க தேவர், அல்லது அஜித் முத்துராமலிங்க தேவர் காம்பினேசன் இருக்கும். அஜித் எந்த விதத்தில் தேவர் சமூகத்திற்கு சொந்தம் என்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. கொங்கு நாடு பக்கம் சூர்யா, சத்யராஜை எல்லாம் யூஸ் பண்ணுவாங்களோ? விக்ரமும் பிரசாந்தும் (சில சமயம் விஜய்யும்) பட்டியலிடப்பட்ட மக்களின் விசேசங்களில் சிரிக்கிறார்கள். இப்போது இந்த லிஸ்டில் நம்ம சசிக்குமாரையும் சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன் சசிக்குமாரின் படம் அச்சடித்திருந்த ஒரு ப்ளெக்ஸ் போர்டில் "அழகு முத்து கோன் படை" என்று இருந்தது.

'எப்படிய்யா கண்டு புடிக்குறீங்க?' என்று தான் முதலில் யோசிக்க தோன்றுகிறது.
ஒரு நடிகன் இன்ன ஜாதி தான் என்று எப்படி மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்? நான் பி.எஸ்ஸி., படித்த கல்லூரி கிராமப்புறம் இருந்தது. சுற்று வட்டார கிராம தேவரின மாணவர்களும் டவுன் நாடார் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். ஒருவன் இயக்குனர் கெளதம் மேனனை நாடார் என்றே நினைத்துக்கொண்டிருந்தான் (வேட்டையாடு விளையாடு படத்துல திருநெல்வேலி காட்டிருக்காரு, சரத் குமார வச்சு படம் எடுத்துருக்காருல?). மேனன் என்பது ஒரு சாதிப்பெயர் என்பது கூட தெரியாமல் அவன் ஜாதி மட்டுமே உலகில் இருப்பதாக நினைத்துக்கொண்டான். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் ஒரு அஜித் ரசிகன் என்றேன். "அப்போ நீங்க நம்மாளா பாஸு?" என்று சொந்தமாக்கிக்கொள்ளும் உணர்வுடன் ஒருவன் கேட்டான். ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பதில் எவ்வளவு criteria உள்ளது என்று நான் அப்போது தான் உணர்ந்தேன். நல்ல வேலை எனக்கு பிரசாந்த் பிடிக்கும் என்று சொல்லவில்லை; சொல்லியிருந்தால் எனக்கு தாகத்திற்கு தண்ணீர் கூட குடுத்திருக்க மாட்டார்கள். கல்லூரியிலேயே எவ்வளவு ஜாதி வெறி பாருங்கள்? கிராமம் என்று இல்லை, பல நகரங்களிலும் இதே நிலை தான். நான் மதுரையில் MBA படித்த போது ஒருவன் சொன்னான், "காந்திஜி எங்க வாணியர் ஜாதிக்காரர்டா" என்று. 'அடப்பாவிகளா!!!!!!!!' என்று நினைத்துக்கொண்டேன். இந்த லாஜிக்கில் தான் பட்டியலிடப்பட்டோர் அம்பேத்கரை தங்கள் ஒவ்வொரு ஜாதியிலும் இணைத்துக்கொண்டார்களோ?

மிகவும் அவமானமும் அதிர்ச்சியாகவும் உள்ளது இந்த நிலையை பார்க்கும் போது. மற்ற பெரும்பான்மை ஜாதியினர் தங்களுக்கு என்று ஒரு நடிகரை அடையாளப்படுத்தும் போது அந்த பகுதியில் குறைவாக உள்ள மற்ற ஜாதியினர், தங்கள் இனத்திலும் யாராவது நடிகன் இருக்கிறானா என்று தேடிப்பிடித்து இது போன்று செய்கிறார்கள். அப்படி செய்தது தான் சசிக்குமாரின் படம். சில நாட்கள் முன்பு ஆசாரி இன மக்களின் போஸ்டரில் எம்.கே.தியாகராஜ பாகவதர் இருந்தார். பிள்ளை சமூக பேனரில் வடிவேலு இருக்கிறார். நம்ம எஸ்.ஜெ.சூர்யா தேவர் மக்களின் வால் போஸ்டர்களை அலங்கரிக்கிறார். விவேக்கை பற்றி நமக்கு தெரியும்.

பல நடிகர்களுக்கும் இது தெரிந்தாலும் அவர்கள் தடை போடுவதில்லை (வரும் காலத்தில் உதவுமே!!!). ஆனால் என் மனதை உறுத்துவது இந்த நடிகர் படங்களோடு இருக்கும் தேசத்தலைவர்களின் படங்கள் தான். காமராஜர் தன் நாடார் இனத்தவன் என்று யாரையும் மதித்து உதவி செய்ததில்லை (தோற்கடிக்கப்பட்டதே அதனால் தானே), முத்துராமலிங்க தேவர் தன் இனம் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களுக்கும் வாரி வாரி கொடுத்தவர், வ.உ.சி. பிள்ளை இன மக்களுக்காக மட்டும் செக்கிழுக்கவில்லையே? ஆனால் இவர்களை எல்லாம் நடிகர்களோடு சேர்த்து ஒரு ஜாதிக்குள் அடக்கி விடுகிறோமே?

இந்த நடிகர்கள் தங்கள் ஜாதிக்காக இதுவரை என்ன செய்துள்ளார்கள்?

சரத்குமார், காமராஜருக்கு விருதுநகர் அருகே மணி மண்டபம் கட்டுவதாக சொல்லி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு ம**ரையும் அவர் புடுங்க வில்லை.

எங்கள் ஊர் கிராம பகுதி தேவர் மாணவன் ஒவ்வொருவனும் அவன் பள்ளி ஆண்டுவிழாவிலோ, ஊர் அல்லது வீட்டு விழாவிலோ "ஐசாலக்கடி மெட்டு தானுங்கோ" பாடலுக்கு கண்டிப்பாக நடனம் ஆடியிருப்பான். அந்த அளவிற்கு அவர் மேல் பைத்தியம் உள்ளவர்கள். இப்போதும் லோக்கல் கேபிள் டிவியில் இவர் பாடல்களே அதிகம் விரும்பப்படும் பாடல்கள். ஆனால் இப்படிப்பட்ட தன் ஜாதிக்காரர்களை காமெடி பீஸ் ஆக்கிய பெருமை கட்சி ஆரம்பித்ததோடு தூங்கப்போய்விட்ட கார்திக்கையே சாரும்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் ஜாதி மக்களை படம் ஓடுவதற்கும் அரசியலுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொண்டார்கள். அந்த இனத்திற்கு அவர்கள் துளி கூட அப்பட்ட இருந்ததில்லை. இப்படி இருக்கும் போது எந்த நம்பிக்கையில் தங்கள் ஜாதியை சேர்ந்த நடிகர்களை மக்கள் கண்டுபிடித்து தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் இவர்களின் படங்களை பயன்படுத்துகிறார்கள்?

நடிகர்கள் பொதுவானவர்கள். அவர்கள் ஜாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என்று நினைத்து அவர்கள் படம் நடிப்பதில்லை. அப்படி எடுத்தால் ஒரு நடிகனின் படம் கூட ஓடாது. இப்படி ஜாதி ரீதியாக ஒரு நடிகன் பிரித்துப்பார்கப்பட்டால் அது அவரின் மேல் மற்ற போட்டி ஜாதி ரசிகர்களின் வெறுப்பை உண்டாக்கிவிடும். இன்றைய இளம் நடிகர்கள் இதை உணர்ந்து ஜாதி ரீதியாக தங்களுக்கு உள்ள ரசிகர் மன்றங்களையும், தன சொந்த ஜாதி ஆதரவாளராக தங்களை காட்டிக்கொள்வதையும் நிறுத்திக்கொண்டால் அவர்களின் நிம்மதிக்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லாவிட்டால் சரத்குமாரை போலவும், கார்த்திக்கை போலவும் அவர்களும் வருங்காலத்தில் "உங்க ஜட்ஜுமேண்டு ரொம்ப வீக்கு" என்று தங்கள் சொந்த ஜாதிக்காரர்களாயே தூக்கி எறியப்படுவார்கள். சசிக்குமாரும் இதை உணர்ந்து நடந்துகொள்வார் என்று எதிர் பார்ப்போம்.

ஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...

Sunday, May 9, 2010வழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. "விஜய்க்கு ஒரு பகிரங்க கடிதம்" என்று போட்டிருந்தது. படித்தவுடன் எனக்கு பயமாகி விட்டது. மனசுக்குள் ஒரு சின்ன டவுட், 'ஆனந்த விகடன்ல விஜய்யை பற்றி தப்பா எழுத மாட்டங்களே' என்று. இருந்தாலும் சுறா பார்த்த வெறியில் இருந்ததால் அவரை பற்றி யாராவது ஒரு வார்த்தை தப்பாக பேசினால் கூட எனக்கு சந்தோஷம் வருகிறது, கடந்த பத்து நாட்களாக. சுறா பார்த்து விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயத்தின் கொடுமையால் இந்த கடிதத்தை வரைந்திருப்பார்கள் என்று நினைத்து வியாழக்கிழமையே வாங்கினேன்.

வேக வேகமாக வீட்டுக்கு வந்து அந்த கட்டுரையை படித்தால், துத்தேறி, ஒன்றுமே இல்லை (பதிநஞ்சு ரூவா பாலா போச்சே!). தளபதி நீங்க அப்படி, உங்க நடிப்பு அப்படி, டான்ஸ் ல மைகேல் ஜாக்சனுக்கு அப்பறம் நீங்க தான், நீங்க தான் மாஸ் ஓபனிங் ஹீரோ (யாரை வெறுப்பேற்ற இந்த வாசகம்?), பலதரப்பட்ட கதைகளில் நடித்தவர்!!!!!!!!!!!!, என்று பலவாறாக புகழ்ந்து கடைசியில், 'நீங்க கொஞ்சூண்டு மாறணும், மத்தபடி எல்லாம் ஓகே' என்று எழுதி இருந்தார்கள். இதற்கு பேர் பகிரங்க கடிதமாம். அந்த கட்டுரையில் இருந்த மிக காமடியான விஷயம் என்னவென்றால், 'பலர் நினைப்பது போல நீங்கள் உங்கள் அப்பாவினால் முன்னேறவில்லை, சொந்த முயற்சியே அதற்கு காரணம்' என்பது தான். ஒரு விஜய் வெறியனே கூட இதை ஒத்துக்கொள்ள மாட்டான்.

அந்த கட்டுரையில் அவர் எதனால் இப்படி நடிக்கிறார், ஏன் மற்ற மொழி படங்களை காப்பி அடிக்கிறார், லூசுத்தனமாக ஏன் வசனம் பேசுகிறார், இந்த கட்டுரை இப்போது எழுத என்ன காரணம் என்று எதுவுமே சொல்லவில்லை; ஏதோ மேம்போக்காக 'இதை நான் வழிமொழிகிறேன்' என்கிற பாணியில் இருந்தது அந்த கட்டுரை.

இப்போது என்றில்லை, இவர்கள் எப்போதுமே விஜய் என்றால் அவருக்குரிய "zone of tolerance" அளவை கொஞ்சம் அதிகமாகத்தான் வைத்திருக்கிறார்கள். அவர் நடித்த சிறந்த படங்களுள்(!!!) ஒன்றான சிவகாசிக்கு அவர்கள் 41 மார்க் போட்டபோதே எனக்கு இவர்களின் விமர்சனம் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஒரு காலத்தில் ஆனந்த விகடன் விமர்சனத்தில் 40 மார்க் எடுப்பதே கஷ்டம், அப்படி 40 மார்க் மேல் எடுத்தால் அது ஒரு சிறந்த படமாக இருக்கும். இன்று அப்படியா? அதே போல் எவ்வளவு மோசமான படம் என்றாலும் இவர்கள் விஜய்யை மட்டும் குறை சொல்லவே மாட்டார்கள்.

இந்த வார சுறா விமர்சனத்தில் கூட அவன் மேல தப்பு இவன் மேல தப்பு இயக்குனர் சரியாக எடுக்கவில்லை, என்று எல்லாரையும் குற்றம் சொன்ன இவர்களால் 'விஜய் அறிவுக்கு இப்படிப்பட்ட கதைகளே நல்ல கதையாக தெரியுமா?' என்று கேட்க முடியவில்லை. இதே அஜித் படமாகவோ, ரஜினி படமாகவோ இருந்து விட்டால் அவ்வளவு தான். அதிலும் இவர்கள் ரஜினிக்கு வைத்திருக்கும் கான்ஸ்டன்ட் மார்க் 39. இதை தவிர இவர்கள் வேறு மார்க் போடவே மாட்டார்கள்.

விஜய் அப்படி என்ன செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அவர் ஒன்றும் நல்ல படங்களும் நடித்து தள்ளவில்லை. அவர் நடித்த நல்ல படங்களை எண்ண, ஒரு கை இல்லாதவனால் கூட முடியும். காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக, லவ் டுடே, குஷி, கில்லி. இவ்வளவு தான். 'அதனால என்ன? எங்க தளபதி தான் நல்லா டான்ஸ் ஆடுராருல்ல?' என்கிறார்கள். நல்ல டான்ஸ் ஆடுனா டான்ஸ் மாஸ்டரா போக வேண்டியது தான? ஏன் இப்படி நடித்து, துதிபாடிகளாக பிற நடிகர்களையும் நடிக்க வைத்து எங்களை சாகடிக்க வேண்டும்?

'எனக்கு சவாலான வேடங்களில் நடிக்க ஆசை தான், ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு தயாரில்லை' என்று சில நாட்களுக்கு முன் நம் இளைய தளபதி தான் சொன்னார். உங்கள் மேல் நம்பிக்கை இல்லை அவர்களுக்கு நீங்கள் நன்றாக நடிப்பீர்கள் என்று, அதனால் தான் தயாரில்லை. இவர் தன் நடிப்பு திறமையை எந்த படத்தில் வெளிப்படுத்திஉள்ளார்? குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மேனரிசம், கில்லியில் தரணியின் முழி, போக்கிரி தொடங்கி இன்று வரை மகேஷ் பாபு மற்றும் பிரபு தேவாவின் மேனரிசங்கள் - இவை தான் இவரின் நடிப்புலக பரிமாணங்கள்.

ஆனந்த விகடனும் நடுநிலை தவறிய பத்திரிகை ஆகிவிட்டது. அரசுக்கு சிங்கி அடிப்பதில் ஆரம்பித்து இப்போது இந்த 'பகிரங்க' கடிதம் வரை.

பின் குறிப்பு:

இந்த வார ஆனந்த விகடனில் என்னை தூக்கிவாரிப்போட்ட விஷயம் என்னவென்றால், மௌன ராகம் படத்தின் விமர்சனம். 43 மார்க் போட்டிருந்தார்கள். அதே விமர்சன குழு தான் இப்போதும் உள்ளதா, இல்லை விஜய் படத்திற்கு என்று தனி விமர்சனகுழுவா?
இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்....

Tuesday, April 20, 2010

"யே ச்சீ வைடி போன" என்று கோபமாக கத்திக்கொண்டே வராண்டாவில் இருந்து அறைக்குள் நுழைந்தேன்.

"என்ன பாஸு ரொம்ப கோபமா வரிங்க போல?" - நக்கலாக கேட்டான் நண்பன்.

யார் மீதோ இருந்த எரிச்சல் இப்போது அவன் மீதும் எனக்கு வந்தது. ஆனாலும் யாரையும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இவன் என் நண்பன், படிக்கும் போதும் சரி வேலைக்கு சேரும் போதும் சரி, ஒரே அறையில் இவனை கட்டித்தான் நான் மாரடிக்க வேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டார் போலும். இன்னொரு யார் வந்து, அவள். நான் காதலித்து தொலைந்தவள்.

"பாஸு என்ன விஷயம் பாஸு? சொல்லுங்க.." - சொல்லாமல் என்னை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதுபோல் கேட்டான்.

"ஒரே வெறுப்பா இருக்கு பாஸு"

"என்ன பாஸு ஆச்சு?" - அடுத்தவன் கதைய தெரிஞ்சுக்கிரதுல அவ்வளவு ஆனந்தம்.

"காதல்னு சொல்லிட்டு திரியுற வரைக்கும் சந்தோசமா தான் இருக்காளுக பாஸு. ஆனா கல்யாணம்னு பேச ஆரம்பிச்சா எப்படி பேய் பிடிக்குதுன்னு தெரியுமா?"- விரக்தியும் கோபமும் கலந்து நான் புலம்ப ஆரம்பித்தேன்.

"ஏன் பாஸு? நேத்து கூட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்திங்க?"

"இப்போ வரைக்கும் கூட நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்டா. அவங்க வீட்ல மாப்ள பாக்குறதா சொன்னா. அதுக்கு பெறகு தான் சண்டையே ஆரம்பம்"

"இப்போ என்ன கல்யாணம் நிச்சயமா ஆகிருச்சி? மெதுவா உங்க மேட்டர வீட்ல சொல்லவேண்டியது தான?"

"அவளுக்கு பயமா இருக்காம்". சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலித்தது. அவள் தான்.

"ம் சொல்லு"

"..."

"இனிமேல் உன்கிட்ட பேசுனா என்ன செருப்பால அடி. இனிமேல் என்ன தொல்ல பண்ணாத. பேசாம போன வச்சுடு"

என்ன பேசியிருப்போம் என்ற கேள்வியோடு என்னை பார்த்தான் அவன்.

"என்ன கன்வின்ஸ் பண்றாளாம். அதாவது நாங்க கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் சந்தோசமா இருப்போமாம். எங்க அம்மா அப்பாலாம் மனசு ஒடஞ்சு போயிடுவாங்களாம். அதே அவங்க சொல்ற ஆளா கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் கொஞ்ச நாள் கஷ்டப்படனுமாம். மத்த எல்லாரும் நல்ல இருக்குறதுக்காக நாம கஷ்டப்படுறதுல என்ன தப்புன்னு கேக்குறா?"

"நீ போன வாரம் விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு அவள கூட்டிட்டு போனதுக்கு இன்னைக்கு இப்டி ரியாக்சன் வருதா?"

அவன் சீரியசா பேசுறானா இல்ல நக்கலடிக்குறானா என்று தெரியவில்லை. அவனை மறந்து, நான் என் வாழ்கையை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த பெண்கள் தான் எவ்வளவு மோசமானவர்கள்? சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்று எல்லா வார்த்தைகளும் அவர்களுக்காகவே படைக்கப்பட்டனவா?

வீட்டில் பார்ப்பவனை தான் கல்யாணம் செய்துகொள்வாளாம். அப்பறம் என்ன மயித்துக்கு என்ன லவ் பண்ணுனா? அவளை கண்டமானைக்கு வைதுகொண்டே தூங்கிவிட்டேன்.

இன்று அவளிடம் இருந்து போன் வரவே இல்லை. எஸ்எம்எஸ் அனுப்பாமல் எரிச்சலாய் இருந்தது. இந்த போன் தான் நம்மை எவ்வளவு அடிமை ஆக்கி விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவளுக்கு மட்டும் இனி ஒரு எஸ்எம்எஸ்ஸோ காலோ செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கடைசியில் வேறு வழி இல்லாமல் போனில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்தும் முடியவில்லை. ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன். நண்பனிடம் இருந்து இரண்டு முறை போன் வந்தது. வீட்டில் இருந்து ஒரு முறை வந்தது. எதையும் ஏற்கவில்லை. மாலை அறைக்கு வந்தேன்.

"என்ன பாஸு ரெண்டு தடவ போன் பண்ணுனேன், அட்டன்ட் பண்ணவே இல்ல?"

"கொஞ்சம் வேல இருந்ததுடா"

"பொதுவா உனக்கு போன் பண்ணுனா 'உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது'னு ஒரு பாட்டு பாடும், இன்னைக்கு ஒன்னும் வரலையே, தூக்கிட்டியா?" - இன்றும் என்னை புலம்ப வைப்பது என்ற வெறியோடு கிளம்பியிருப்பான் என்று நினைக்கிறேன்.

"அவளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், பெறகு அந்த பாட்டு மட்டும் எதுக்கு?"

"மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நீ தான சொல்லிருக்க? அவ உன் லைப்ல பொக்கிஷம்னு நீ தான சொன்ன? இப்போ ஏன் இப்டி பேசுற?"

"யாருடா நல்ல பொண்ணு? அவளா? ஊர் சுத்துறதுக்கும், படம் பாக்குறதுக்கும், எதாவது பிரச்சனைனா போன் பண்ணி அழுகுறதுக்கும், அவளுக்கு பரிச்சைனா என்ன தூங்க விடாம டவுட் கேக்குறதுக்கும் நான் தேவ. ஆனா கல்யாணம் பண்றதுக்கு மட்டும் நான் தேவ இல்லையா?"

"டேய் பொண்ணுங்க சொசைட்டிக்கு ரொம்ப பயப்படுவாங்கடா. படிச்சவளோ படிக்காதவளோ எவளா இருந்தாலும் இந்த சமூகத்துக்கு பயப்படுவா பாஸு. உன்ன கல்யாணம் பண்ணி, நாளைக்கே அவ குடும்பமும் உன்ன ஏத்துக்கிட்டாலும் இந்த ஊர் தப்பா தான பேசும்னு அவ பயப்படுவா"

"கரக்ட்டு தான் பாஸு. இந்த சொசைட்டி இருக்குறனாலதான் அவளுக ஒருத்தன் கூட மட்டும் அடக்கிட்டு வாழுறாளுக. இல்லேனா புருசனையும் கலட்டி விட்டுட்டு வேற யார்கூட வேணும்னாலும் போயிடுவாளுக. காதல் விசயத்துல நமக்கு எதிரா இருக்குற அதே சொசைட்டி கல்யாணத்துக்கு அப்பறம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கு?"

"பாஸு ஏன் இப்டி குதர்க்கமா யோசிக்குறீங்க?"

"பெண் கல்வி, பெண் விடுதலைன்னு பேசுறவன எல்லாம் நிக்க வச்சு சுடனும். அவளுக வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒழுங்கா தான் இருந்தாளுக. என்னைக்கு வெளிய வந்து படிப்பு வேலைனு இறங்குனாளுகளோ அன்னைக்கே கெட்டு நாசமா போயிட்டாளுக."

"டேய் அவள பத்தி பேசும் போது அவள பத்தி மட்டும் பேசுடா. எதுக்கு எல்லா பொம்பளைகளையும் வம்புக்கு இழுக்குற?"

"உனக்கு ஏன்டா கோவம் வருது? நீ எவளையும் லவ் கிவ் பண்ணி தொலைக்குரியா? வேண்டாம்டா. என்ன பாத்தாவது திருந்து."

"ஹி ஹி அப்டிலாம் ஒன்னும் இல்ல. பொதுவா சொன்னேன்"

"முன்னாடிலாம் அவ என்ட மட்டும் தான் பேசுவா. அவ கஷ்டத்தலாம் என்ட சொல்லித்தான் அழுவா. அடிக்கடி சொல்லுவா, நான் காட்டுற மாதிரி பாசத்த வேற யாரும் இந்த உலகத்துல அவ மேல காட்ட முடியாதுன்னு. இப்போ அவளோட எல்லா பிரச்சனையும் தீந்து போயிடுச்சி. இப்போ அவ கஷ்டத்த சொல்றதுக்கு ஆள் தேவ இல்ல. அதனால நான் தேவ இல்ல. இப்போ ஏதோ பார்ட் டைம் வேலைக்கு வேற போறா. அங்க எவனோ இவளுக்கு பிரண்டாம். அவன் அவ்வளவு ஜாலிய பேசுவானாம். என்கிட்டயே சொல்றா பாஸு. என்னால அப்டிலாம் ஜாலிய பேச முடியாதுல்ல அதான் என்ன விட்டுட்டு போயிட்டா"

"அவ மேல சந்தேகபடுறியா பாஸு?"

"அப்படியும் வச்சுக்கலாம். சரி, அவள பத்தி பேசி எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு? நான் தூங்கப்போறேன்"

ஒரு இரண்டு நாள் கொஞ்சம் போர் அடித்தது. யாரிடம் இருந்தும் எனக்கு போன் வரவில்லை. சும்மா ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது எனது கான்டேக்ட் லிஸ்ட்டில் 300 பேர் இருக்கிறார்கள் என்று.. இத்தனை பேரையும் இழந்து நான் அவளிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது யாரிடமும் பேசாமல் எதற்கு போன் என்றும் தோன்றியது. போகப்போக எல்லாம் பழகிவிட்டது. நண்பன் மட்டும் எப்போதாவது கேட்பான், அவளிடம் இருந்து போன் வந்ததா என்று. இப்போது அவனும் கேட்பது இல்லை.

நண்பர்களிடம் எல்லாம், 'இப்போ தாண்டா நிம்மதியா இருக்கேன். 'good morning', 'sweet dreams', 'had ur lunch?' 'had ur breakfast?' லொட்டு லொசுக்குனு எதுவும் அனுப்ப தேவ இல்ல. மிஸ்டு கால் வந்ததும் பதறி அடிச்சு போன் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. எத பத்தியும் கவலை இல்லாம சந்தோசமா இருக்கேன்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை, மிகவும் போர் அடித்துக்கொண்டிருந்தது. அருகில் இருக்கும் ப்ரொவ்சிங் சென்டருக்கு சென்றேன். மெயில்களை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அவளிடம் இருந்து வழக்கமான ஓட்டை ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.
"y ram? y v depart? without understanding u nd ur situation even a single sec z my great mistake......sorry ram...... now internal z going on...... im missing ur care on me.......im extremely sorry ram......still now im missing ur care,pasam everything.....anyway im extremely sorry ......sorry ram..... still 2day i dont want 2 loose my ego,dignity.....i left all nd typing 4 u........sorry 4 my hurting.....extremely sorry" - என்றிருந்தது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சந்தோசமா வருத்தமா குழப்பமா எது என்று புரியவில்லை.. அதைப் படித்ததும் ஒரு மாதிரியாக இருந்தது.

அறைக்கு வந்து நண்பனிடம் விஷயத்தை சொன்னேன்.

'நீ என்ன ரிப்ளை அனுப்புன?" - பெண்களை விட ஆண்கள் அழகாக புரணி பேசுவார்கள் என்பதை இவன் போன்ற நண்பர்கள் தான் உணர்த்துகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்தேன்.

"கரக்ட்டு தான். அவ உன்ன எவ்வளவு பாடு படுத்தியிருக்கா? அவளுக்கு போய் ரிப்ளை அனுப்பிக்கிட்டு. அவாளாம் வருங்காலத்துல நல்ல அனுபவிப்பாடா. 'ஐயோ இவன மிஸ் பண்ணிட்டோமேன்னு' ஏங்குவாடா"

எனக்கு கோவம் வந்து விட்டது.. "டேய் இப்போ ஏன்டா அவளுக்கு சாபம் விடுற? அவ என்னடா தப்பு பண்ணுனா? ஏதோ நான் தான் கோபத்துல அவாட்ட தப்பா பேசிட்டேன். ஆனா, இப்போ அவ வந்து என்ட மன்னிப்பு கேக்குறாடா. அவளைப்போய் இப்டி பேசுற? பாவம் அவளுக்கு அன்னைக்கு என்ன பிரச்சனையோ, என்கிட்டே கொஞ்சம் கோபமா பேசிட்டா, அதுக்கு நானே வருத்தப்படல, உனக்கு என்னடா இவ்வளவு கோபம் அவ மேல? அவளும் ஒரு பொம்பள தான?" என்று சொல்லிக்கொண்டே என் போனில் இருந்து அவளுக்கு கால் செய்தேன்.

"டேய் ஐயம் சாரிமா. its my mistake, நான் தான் உன்ன புரிஞ்சுக்கல..........." என்று பேசிக்கொண்டே வராண்டாவிற்கு சென்றேன். நண்பன் பித்துப்பிடித்தவனைப்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் மெதுவாக பக்கத்தில் இருக்கும் செல் போன் கடைக்கு ”உனக்காக தானே இந்த உயிர் உள்ளது” காலர்டோன் வைப்பதற்கு சென்றுகொண்டிருந்தேன்.

அவள் பெயர் தெரியாது!!! வயது 35 வெள்ளை நிறம்..

Wednesday, April 14, 2010

இன்று வேலை விஷயமாக எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்றேன். படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்துவிட்ட பிறகும் சரி, இந்த பெண்கள் கல்லூரியில் தான் பல நேரம் செலவிட்டிருக்கிறேன். படிக்கும் பொது கல்லூரிக்கு வெளியே, இப்போது கல்லூரிக்கு உள்ளே. பயந்து பயந்து, படிக்கும் காலத்தில் சைட் அடித்த கிக் இப்போது நேருக்கு நேராக அவர்களை கல்லூரிக்குள்ளேயே பார்க்கும் போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கல்லூரியின் கட்டிட மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு, நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில் இருக்கும் அவர் அறையை விட்டு வெளியேறி கீழிறங்கி வருகிறேன். அடுப்பில் இருந்து கங்கை கொட்டுவது போல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. கல்லூரியின் முக்கிய வாயிலை அடையும் பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது தான் அவரை (அவளை) பார்த்தேன்.

'இவா இங்க தான் இப்போ வேல செயராளா?' என்று எண்ணிக்கொண்டே ஆச்சரியமாக பார்த்தேன். நடந்து செல்லும் போது அவளும் என்னை பார்த்தாள். கடந்து சென்றாள். அவளுக்கு என்னை தெரியாது; ஆனால் எனக்கும், கல்லூரி நாட்களில் எங்கள் பாட்ச்சில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எப்போதும் அவளை மறக்க முடியாது. 'மறக்கக்கூடிய பிகராடா அது?' என்று மனதில் ஒரு பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டேன்.

என் நினைவுகள் இப்போது 2004ம் ஆண்டிற்கு சென்றது. நான் கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைத்த வருடம் அது. எங்கள் கல்லூரி சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. மாணவர்களிடம் "பால்வாடி" என்னும் செல்லப்பெயரையும் பெற்றிருந்தது. காரணம் மிகுதியான கணடிப்பு. பெயருக்கு கூட ஒரு பெண் கிடையாது. துப்புரவு பணியாளர் முதல் அனைவரும் ஆண்களே. முதல் ஆறு மாதங்கள் கவலைக்கிடமாகவே சென்றன. ஆசிரியரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னால் தண்டிக்கும் ஒரே கல்லூரி, நான் படித்த கல்லூரி தான்.

இப்படி வறட்சியாக சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் தான் அந்த தேன் வந்து பாயும் செய்தி எங்கள் காதில் விழுந்தது. கல்லூரி அலுவலகத்தில் அடிக்கடி சில பெண்களின் தலைகள் தென்பட்டன. என்ன ஏது என்று விசாரித்த பொது, அடுத்த ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் மாணவிகளையும் சேர்க்க இருக்கிறார்கள், அதனால் பெண் விரிவுரையாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.இத கேட்டவுடன் அவனவனுக்கு தலைகால் புரியவில்லை. பெல்ட் என்றாலோ, ஷூ என்றாலோ என்னவென்றே தெரியாமல் இருந்தவனும், பிராண்டட் ஷூவும், சட்டைகளும் அணிந்து வர ஆரம்பித்து விட்டான். சில ஆசிரியர்கள் தான் மிகவும் காமெடி பீசாக வந்தார்கள் - டக் இன் என்ற பெயரில் நெஞ்சில் பாண்ட்டை மாட்டுவது, ஓட்டை ஆங்கிலத்தில் வகுப்பில் பேசிப்பழகுவது என்று பட்டப்பெயர் வைப்பதற்கு ஏதுவாக பல செயல்களில் வெறிகொண்டு இறங்கினார்கள்.

இந்த நிலையில் தான் தாவரவியல் துறைக்கு அவள் விரிவுரையாளராக வந்தாள். கல்லூரி காலத்தில் நாம் யாருக்கு தான் மரியாதை கொடுத்தோம்? அப்பாவையே "எங்க அப்பன்" என்று பேசி தான் நண்பனிடம் கெத்து காட்டுவோம்; இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? சரி அவளை பற்றி சொல்லிவிடுகிறேன். அவளுக்கு 25ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும். எங்கள் ஊரில் எவனும் இப்படிப்பட்ட கலரில் ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டான். அம்புட்டும் கரிச்சட்டி மாதிரி தான் இருக்கும். ஆனால் இவள் முகத்தில் பாலை கொட்டினால் பாலுக்கும் இவள் கலருக்கும் வித்தியாசம் தெரியாது. இவள் கழுத்தில் தெரியும் பச்சை நெரம்பு எந்த ஆணையும் சுண்டி இழுக்கும். எப்பொழுதும் அடர் நிறங்களிலேயே ஆடை அணிந்து வருவாள். முட்டை வடிவில் சற்றே சதைப்பற்றான முகம், மூக்கின் வலது புறத்தில் உத்து கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு ஒரு மூக்குத்தி, கொழுக்மொளுக் என்ற தேகம் - இது தான் அவள். அவள் ஒரு கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் பேனாவை பிடித்துக்கொண்டு அந்த கையை குறுக்காக வீசி அகலமான எட்டு வைத்து காலை விரித்துக்கொண்டே தான் நடந்து வருவாள். அவளின் நடை அவளுக்கு பலவிதமான பட்டபெயர்களை பெற்று தந்தது. சேலையின் எந்த பாகமும் தோள் பகுதியை தாண்டி இருக்காது. இதனாலேயே அவளுக்கு இடது புறம் தான் பலரும் திரிவோம்.

"டேய் மாப்ள, அவ திருச்சிகாரியாம்டா.."

"போடா வெளக்கென்ன, அவள பாத்தா நாகர்கோயில் ஆளு மாதிரி இருக்கா.. ஆளும் நல்ல அமைதியானவளா இருக்காடா."

"டேய் அவ எந்த ஊர்காரியா இருந்தாலும் நம்ம கண்ணு மூடப்போரதில்ல. பொறவு என்ன? மூடிட்டு சைட் மட்டும் அடிங்கடா" ஒரு சீனியர் மாணவனின் அறிவுரை ஏற்பதாக இருந்தது.

ஆனால் நாங்கள் நினைத்தது போல் அவள் இல்லை. வகுப்பில் அவள் யாரிடமாவது கேள்வி கேட்கும் போது சுட்டு விரலை நீட்டாமல் நாடு விரலை நீட்டி "நீ சொல்லு" என்பாள். யாருக்கும் பதில் தெரியவில்லை என்றால் "நீங்க எல்லாவனும் வேஸ்ட், ஒருத்தனுக்கும் ஒன்னு கூட தெரியலையா?' என்று நடுவிரலை உயர்த்திக்காட்டி நக்கலாக சொல்லுவாள். பாடம் நடத்தும் போது மட்டும் தான் அவள் கெடுபிடியாக இருப்பாள். சாதாரணமான நேரங்களில், மிகவும் உரிமையோடு மாணவர்களிடம் நடந்துகொள்வாள். நாங்களும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளிடம் வறுத்து தள்ளிக்கொண்டு இருப்போம். "இப்போ எல்லாம் வருவிங்கடா. அடுத்த செமெஸ்டர்ல இருந்து நீங்க கண்டுக்கவே மாட்டேங்க. உங்க கிளாஸ்லையே ஏகப்பட்ட பொண்ணுங்க வந்துரும் கடலை போட" என்று அவள் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாள். அப்போதெல்லாம் "அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம், எங்களுக்கு நீங்க தான் குட் பிரண்ட்" என்று வலிந்துகொண்டிருப்போம்.

அன்றும் வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளைப்பற்றி கமென்ட் அடித்துக்கொண்டிருந்தோம். அவளுக்கு வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை ஒன்றை பட்டப்பெயராக வைத்திருந்தோம். அந்தப்பெயரை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியும் சிலிர்ப்பும் சிரிப்பும் பொங்கும். கல்லூரி நாட்களில் தான் நாம் எவ்வளவு சந்தோசமாக சிரித்துக்கொண்டிருப்போம்? ஆனால் அந்த சிரிப்பு யாரோ ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்திய சிரிப்பாகத்தான் இருக்கும். அன்றும் அப்படித்தான் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்.

"மாப்ள கல்யாணம் பண்ணுனா அவள மாதிரி ஒரு பிகர கல்யாணம் பண்ணனும்டா.."

"ஏன்டா, அவளையே பண்ண வேண்டியது தான?"

"இவளையா? என்ன என்ன செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட சொல்லுறியா?"

"என்னது செகண்ட் இன்னிங்ஸா? மொத இன்னிங்க்ஸ் எவன்டா? நம்ம கட்டக்காலனா (ஹாஸ்டல் சப் வார்டன்)?"

"டேய் நான் சீரியஸா பேசுறேன்."

"ஓ.. அப்போ அவ வந்தா வேண்டாம்னு சொல்லுருவ?"

"டேய் அவ பவம் டா. அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு. டிவர்சும் ஆகிருச்சு"

"உனக்கு எவன்டா சொன்னது? பாத்தா அப்படி தெரியலையே"

"நேத்து பேசிட்டு இருக்கும் போது அவ தான் சொன்னா."

"பாருடா இவன் கூட தான் நாமளும் சுத்துறோம். நம்மகிட்ட சொல்லாம இவன்ட மட்டும் சொல்லுறானா என்ன அர்த்தம்? இவன வசதிக்கு இல்லேனாலும் அசதிக்கு..."

"டேய் இவன அப்பறம் ஓட்டலாம். மொத அவ கதைய மொத கேப்போம். நீ சொல்லுடா மாப்ள"

"அவளுக்கு கோயில்பட்டி பக்கமாம்டா. 20 வயசுலேயே கல்யாணம் ஆகிருச்சாம். அவ புருஷன் ஒரு தீப்பட்டி ஆபிஸ்ல சூப்பர்வைசரா இருந்தானாம். ஒரு ஆக்சிடண்ட்ல செத்துப்போயிட்டானாம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே புருஷன் செத்துப்போயிட்டதால இவள இவங்க அம்மா வீட்டுக்கே அனுப்பிட்டாங்களாம்"

"நாங்க ரியாக்சன் எல்லாம் குடுக்க மாட்டோம்; கதைய மட்டும் சொல்லு"

"அதுக்கு அப்பறம் படிச்சு M.Phil முடிச்சு இங்க வந்துருக்கா"

"கடவுள் நம்ம கண்ணுல இவள சிக்க வைக்கக்குடாதுன்னு நினைச்சுருக்கார். ஆனா விதிய பாத்தியா? என்னென்னமோ சதி பண்ணி நம்ம கண்ணுக்கு விருந்து குடுத்துருச்சு"

"ச்சே ஏன்டா இப்படி பேசுறிங்க? அவள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?"

"சொல்லிட்டாருயா கலக்டரு. சரி விடு, வேற எதுவும் சொன்னாளா?"

"நான் தான் 'நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு' கேட்டேன்"

"உன்ன கட்டிக்குறேன்னு சொல்லிட்டாளாடா?"

"அவ வீட்ட மீறி அவ எதுவும் செய்ய முடியாதாம். வீட்ல பாத்து பண்ணி வச்ச தான் உண்டாம். அண்ணா அவங்க பண்ணமாட்டாங்களாம்"

அவளுக்கு சீன் பார்த்துக்கொண்டே இரண்டாவது செமேஸ்டேரையும் முடித்துவிட்டோம். இரண்டாம் ஆண்டு கல்லூரி வண்ணமயமாக காட்சி தந்தது. வெல்கம் பார்ட்டி வைத்து ஓரளவு ஜூனியர் பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டோம். "அண்ணா" என்று எவளாவது சொன்னால், 'நான் ஒன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட மாட்டேன். அதனால அண்ணான்னு கூப்பிட்டு அசிங்க படுத்தாத' என்று விவரமாக சமாளித்து அந்த உறவுச்சொல்லை தவிர்த்துவிடுவோம். அவனவன் கடலை, பிக்கப், லவ் என்று திரிந்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் எப்படி அந்த கோவில்பட்டிக்காரியை நினைத்துக்கொண்டிருக்க முடியும்? சென்ற வருடம் இருந்த மார்க்கெட் அவளுக்கு இப்போது இல்லை. அதே போல் அவளும் எங்களிடமோ, மற்ற பெண்களிடமோ பேசுவதில்லை. பாடம் நடத்துவதிலும் முன்புபோல் சுருசுருப்போ விறுவிறுப்போ இல்லை.

இப்படி எங்கள் வாழ்வு வலமாக போய்க்கொண்டிருந்த நிலையில் தான் ஒரு வதந்தி பரவியது. அது, அந்த கோவில்பட்டிக்காரியும் எங்கள் துறையில் உள்ள ஒரு விரிவுரையாளரும் காதலிக்கிறார்கள் என்பது. இந்த வதந்தி உண்மை என்பது போல் தான் பல நம்பககரமான இடங்களில் இருந்து செய்திகள் வந்தன.
'நேத்து கூட பாத்தேன் மாப்ள, சாந்தரம் ஆறுமணி வரைக்கும் கிளாஸ்ல உக்காந்து அவன் அவாட்ட கடலை போட்டுட்டு இருந்தான்டா', ' லாப்லையும் இது தான் டா நடக்குது. நாங்க செடிய நோண்டிக்கிட்டு இருக்கும் போது அவன் அவள நோண்டிக்கிட்டு இருக்கான்டா' என்று பல விதமான செய்திகள். அவளுக்கு 'எச்சி இலை' என்று இந்த காலகட்டத்தில் பெயர் மாற்றினோம். அவள் விஷயம் எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் அவனை மிரட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.

அந்த நிகழ்விற்கு பிறகு இவளும் ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு வரவில்லை. பின்புவந்த அவளிடம் பலவிதமான மாற்றங்கள். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஆடைகளும் கொஞ்சம் தாறுமாறாக கட்டிவர ஆரம்பித்தால். இடை தெரியும் என்பதாலேயே மாணவிகளுக்கு சேலை அணியும் சுதந்திரம் இல்லை எங்கள் கல்லூரியில். ஆனால் பெண் விரிவுரையாளர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும் ஒருசில நிபந்தனைகளுடன். இவள் இப்போதெல்லாம் இடையை அகலாமாக காட்டும் விதமாகவே சேலை அணிந்து வந்தாள். மெல்லிய புகைச்சல் கிளம்பியது. ஒரு நாள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்து புகைச்சலை மேலும் கிண்டி எரிய வைத்தாள். மாணவர்கள் யாராவது பாடத்தில் சந்தேகம் கேட்க துறைக்கு சென்றால், 'நான் இந்த மாதிரி டிரஸ் போட்டு வந்தா தான் என்கிட்டே பேசுவிங்களா?' என்று கேட்டிருக்கிறாள்.

ஒரு நாள் அவள் சிகப்பு நிற சேலை லோஹிப்பாக அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு வந்தாள். வகுப்பில் அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது கல்லூரி முதல்வரும் இயக்குனரும் வந்தனர்.

"மேடம் டிபார்ட்மென்ட் வாங்க உங்ககிட்ட பேசணும்"

"இல்ல எனக்கு சிலபஸ் முடிக்கணும், இங்கவே சொல்லுங்க"

"நீங்க நடத்துனதேல்லாம் போதும், இனி உங்களுக்கு இங்க வேல இல்ல, நீங்க கிளம்பலாம்"

"நான் எதுக்கு சார் போகணும்"

"என்னடி கத்துற? பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்க வரமாதிரியா நீ வர? ஏதோ அவுசாரி மாதிரில வர." கல்லூரி முதல்வரும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குனர் கத்திவிட்டார்.

அந்த வார்த்தையை கேட்ட உடன் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய கண்களுடன், நாங்கள் இதை கவனிக்கிறோமா என்று பார்த்தாள். நாங்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தோம்.

"நான் கண்ணன கல்யாணம் பண்ணி ஒழுங்கா இருந்திருப்பேன். நீங்க அவர வெளிய அனுப்புனனாலதான் இன்னைக்கு இப்படி நிக்குறேன்"

பேச வந்த முதல்வரை இயக்குனர் தடுத்து "நாங்க என்ன காலேஜ் கட்டி வச்சுருக்கோமா இல்ல மாமா வேல பாத்துட்டு இருக்க லாட்ஜ் கட்டிருக்கோமா?. முண்ட, பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ வக்கனையா பேசுறத பாரு சனியன்" என்று கூறிக்கொண்டே அவள் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்து தள்ளிவிட்டார். அவள் திரும்ப வரவே இல்லை. ஒரு வாரத்திற்கு கல்லூரி முழுவதும் எங்கள் வகுப்பு மாணவர்களிடம் நடந்தவற்றை தெளிவாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் 'நல்ல பிகர்' போச்சே என்ற துக்கத்தில் சில நாட்கள் இருந்தோம். மீண்டும் சக மாணவிகள் ஆசிரியைகள் என்று கடமையை செவ்வனே செய்தோம்.

படிப்பு முடிந்து இதோ இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை அவளை எங்கள் ஊரில் அதுவும் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பார்ப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. இப்போதும் அதே பழைய குறுகுறுப்புடன் அவள் இடையை பார்த்தேன். ஒழுங்காக சேலை கட்டியிருந்தாள். நடையில் மிகுந்த நிதானமும் மென்மையும் தெரிந்தன. என்னைக்கடந்து சென்றுவிட்டாள்.

எவ்வளவு யோசித்தும் எனக்கு அவள் பெயர் ஞாபகம் வரவில்லை. அவள் பட்டபெயர் மாட்டும் ஞாபகம் வந்தது. ஏனோ, அந்த பெயர் இப்போது ஞாபகம் வந்ததற்கு மனம் வருத்தமாக இருந்தது. இனிமேல் அந்த கல்லூரிக்கு வேரயாரையாவது அனுப்பிவிட வேண்டும் என்று முடிவுசெய்து குற்ற உணர்வோடு வெளியேறினேன்.


சா.நி.யின் விமர்சனம் ஒரு சாணி....

Monday, April 5, 2010

அங்காடி தெரு படம் முதலில் பார்த்த பொது ஒரு மெல்லிய கணம் மனதை ஆட்கொண்டது. இரண்டாம் முறை பார்த்தது முதல் ஒரு இனம் புரியாத சோகம் மனதை அறுக்கின்றது. இந்த சூழ்நிலையில் தான் நமது சாருநிவேதிதாவின் (சுருக்கமாக சா.நி.) விமர்சனம் அந்த படத்திற்கு எப்படி இருக்கிறது என்ற ஆர்வத்தில் பார்த்தேன். அவர் தான் இந்த மாதிரி நல்ல படங்கள் வந்தால் நல்லவராக இருக்க மாட்டரே! ('அவர் எந்த படத்துக்கு தான் ஒழுங்கா விமர்சனம் எழுதுனார்?' என்று மட்டும் கேட்காதீர்கள்).

சரி, விமர்சனம் என்றால் மூடிக்கொண்டு அதை மட்டும் எழுத வேண்டும். அதை விட்டுவிட்டு 'வசந்த பாலனிடம் நான் ஹீரோ வாய்ப்பு கேட்டேன்", "அவர் என் நண்பர்", "என் புத்தக வெளியீட்டிற்கு வந்தார்", என்றெல்லாம் சப்பை கட்டு கட்டிவிட்டு விமர்சனத்தை ஆரம்பிக்கிறார்!! எதற்கு இந்த நடிப்பு? நான் ஒரு யோக்கியன், மனதில் பட்டதை மறைக்க தெரியாது என்று ஒரு பில்ட்டப் வேறு.. ஒரு வேலை வசந்த பாலன் தன் அடுத்த படத்தில் இவரை ஹீரோவாக போடுவார் என்ற நப்பாசையிலா? அவர் பிட்டு படம் எடுக்க மாட்டரே? சொல்ல முடியாது, இவர் நட்பை துண்டிக்காவிட்டால் அவர் பிட்டு படமும் எடுத்துவிடுவார். அங்காடி தெரு படம் வக்கிரமாக இருக்கிறதாம். இவர் தன் கதையில் விவரித்த ஓரின உறவை விட இந்த உலகில் எதுவும் வக்கிரமில்லை. அதை படித்த பின் இரண்டு நாட்களுக்கு என்னால் சாப்பிடக்கூட முடியவில்லை. சரி அவரின் 'உலகத்தரமான' (கமலை போல் இவருக்கும் ஒரு பேராசை உண்டு, உலகத்தரம் தனக்கு மட்டுமே உரியது என்று. மற்றவை எல்லாம் டம்மி பீசு என்பார்) விமர்சனத்தை அலசுவோம்.

தன் குழந்தை ஊனமாக பிறந்ததற்காக ஒரு தாய் சந்தோஷப்படும் காட்சி இவருக்கு ஆபாசமாக இருக்கிறதாம். அந்த வசனகர்த்தாவின் வக்கிரபுத்தியை இந்த காட்சி வெளிப்படுத்துகிறதாம் (ஜெயமோகன் என்ன செஞ்சா உங்களுக்கு பிடிக்கும் சா.நி.?). ஊனமுற்றவர்களை வாழ தகுதி இல்லாதவர்களாக சா.நி. பார்ப்பதால் தான் அப்படி பிறந்த ஒரு குழந்தையை இவர் மனது ஏற்கவில்லை. குப்பைத்தொட்டியில் போடும் எவ்வளவோ பெற்றோர்களுக்கு மத்தியில் அந்த தாய் எவ்வளவோ மேல்.

அடுத்ததாக அந்த தொழிலாளர்கள் சாப்பிடும் இடத்தை காட்டும் போது இவருக்கு மலக்குவியல் ஞாபகம் வந்ததாம். அந்த இடத்தை பார்த்த உடன் இவருக்கு குமட்டிக்கொண்டு வந்ததாம். வாழ்வில் என்றாவது சோற்றிற்கு கஷ்டப்பட்டிருந்தால் இவருக்கு பசியின் கொடுமையும் சோற்றின் அருமையும் தெரிந்திருக்கும். ஓசியில் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சாப்பிடும் இவருக்கு என்ன கஷ்டம் தெரியும்? ('நான் டெல்லியில் பட்ட கஷ்டம் யாருக்கு தெரியும்?' என்று இதற்கொரு ஒப்பாரி பதிவு போடுவார் என்று எதிர் பார்க்கிறேன்) .

படம் முழுவதும் கெட்டவைகளே நடக்கிறதாம். ரயில் விபத்து, சாலை விபத்து, இன்னும் பலவாம். கதையே அது தானே? வாழ்க்கையில் நல்லவையே நடக்காத மக்களின் அன்றாட வயிற்றுப்பிழைப்பு தானே படம்? தோல்வி அடைந்தவனுக்கு வாழ்கையே இருக்க கூடாதா? அதை படமாக எடுக்க கூடாதா? எல்லோரும் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உத்தமர்களே வாழும் இந்த உலகிற்கு வக்காலத்து வாங்குகிறார் நம் சா.நி. இந்த படத்தில்வரும் சூப்பர்வைசர் பாத்திரமும் பூ படத்தில் வரும் போர்மேன் பாத்திரமும் ஒரு துளி தான். எங்கள் ஊரில் பட்டாசு ஆலைகளில் போர்மேன்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை. அவன் நினைத்தால் தான் யாரும் அந்த தொழிற்சாலையில் வேலை செய்ய முடியும். அதற்கு அவன் ஆணிடம் இருந்து பணமாகவும், பெண்ணிடம் இருந்து சதையாகவும் கூலி பெறுவான். (இன்றும் என் அப்பா தன் வாரக்கூலியில் ஒரு பகுதியை போர்மேனுக்கு தான் லஞ்சம் கொடுக்கிறார்). சும்மா இரவு மட்டும் பப்பிலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களிலும் பொழுதை ஒப்பேற்றும் இவருக்கு இதைப்பற்றி என்ன தெரியும்? எந்த பெண்கள் கல்லூரியில் எந்த பிகர் ப்ரீயா இருக்கும் என்று வேண்டுமானால் தெரியும்.

அதுவும் கதாநாயகியை சாலையில் சிலர் கற்பழிக்க துரத்துவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று சாடுகிறார். அய்யா, 'நான் தான் சாமி என்று ஆசரமம் நடத்துபவனே அடுத்தவன் பொண்டாட்டிய விட்டு வைக்க மாற்றான், இதுல நடுராத்திரி தண்ணி அடிச்சுட்டு ரோட்ல சுத்துறவன அப்படி காட்டுறது மிகைப்படுத்தப்பட்ட கற்பனையா? முதலில், 'அடுத்தவனுக்கு அறிவே இல்லை', 'எனக்கு தான் எல்லாம் தெரியும்', 'நான் தான் யோக்கியன்', 'உலக சினிமாவின் தத்துப்பிள்ளை, என்றெல்லாம் நினைப்பதை இவர் நிறுத்த வேண்டும். இது தான் இவரின் பாசிசம். வேண்டுமானால் நீங்கள் ஒரு உலகத்தரத்தில் தமிழ் படம் எடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்.

நான் நினைக்கிறேன், சா.நி. தனக்கு வயதாகி விட்டதை எண்ணி மிகவும் கலங்குகிறார். அதனாலேயே தனக்கு ஒவ்வாத சில விஷயங்களை பிடிப்பதாக காட்டிக்கொண்டு 'நானும் யூத்து தான்' என்று டமாரம் அடிக்கிறார். என்று ஒரு வயதானவன் தன்னைத்தானே இளைஞன் என்று சொல்கிறானோ அப்போது தான் அவனுக்கு வயதாக தொடங்குகிறது. உங்களை மற்றவர்கள் 'யூத்து' என்று சொல்லும் படி நடக்க முயலுங்கள் சா.நி. முதலில் உங்களை Jack of all trade ஆக காட்டுவதை நிறுத்துங்கள்; ஏனென்றால் உங்கள் தவறு வெட்ட வெளிச்சம் ஆகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில இயக்குனர்கள் தான் இப்போது உருப்படியாக படம் எடுக்கிறார்கள். அவர்களையும் இந்த மாதிரி அசிங்கமான விமர்சனங்களால் கேவலப்படுத்துகிறார்.

இவர் ஏன் வேட்டைக்காரன், அசல், வில்லு போன்ற படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை? பசங்க, நான் கடவுள், அங்காடி தெரு போன்ற அருமையான படங்களுக்கு மட்டும் தான் இவரிடம் இருந்து விமர்சனம் வரும்; அதுவும் அந்த படங்களை குறை தான் சொல்லுவார். (பசங்க படத்தின் விமர்சனத்தில் கூட ஒரு சில இடங்களில் குறை கூறியிருப்பார்). இந்த மாதிரி படங்களை மட்டும் விமர்சனம் செய்யும் போது தானே இவருக்கும் 'மேதாவி' என்ற பட்டம் கிடைக்கும்? அதிலும் இந்த படங்களை வைது, கிழித்து, கேவலப்படுத்தும் போது தானே 'ச்சே, சாரு ரைட்டா தான்டா சொல்லுறாரு' என்று நாலு பேரை தன் பக்கம் சிங்கி தட்ட வைக்க முடியும்? இவ்வளவு நாட்களாக இவரின் வலைதளத்தை படித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

பின் குறிப்பு:
இவரை நம்பி ஜெயமோகனை ஒரு மோசமான எழுத்தாளராக இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறேன் (அவர் வசங்களை ரசித்த எனக்கு அவர் எழுத்தை படிக்க தோன்றவில்லை). எல்லா வற்றிற்கும் காரணம் சா.நி. தான். அவரை ஒரு அயோக்கியனாகவே சித்தரித்து விட்டார். சா.நி.யும் சினிமா வாய்ப்பிற்கு தானே இப்படி பல் இழித்து காத்திருக்கிறார், முன் எச்சரிக்கையாக வசந்தபாலனை நண்பர் என்கிறார்? எக்கேடும் கேட்டுப்போங்கள் சா.நி. ஆனால் சந்தனத்தை முகர்ந்து கூட பார்க்காமல் பீ என்று சொல்லவதை மட்டும் இன்றோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

வசந்தபாலனிடம் எனக்கும் ஒரு வருத்தம் உண்டு. அவர் வெயில், அங்காடி தெரு இரண்டு படங்களிலும் நாடார் சாதியை தாக்குவது போல் வசனமோ, காட்சியோ இடம் பெற்றிருக்கிறது. அது ஏன்? சொந்த ஊரில் அவருக்கு ஏதும் அந்த சாதியினால் கஷ்டமா? யாரவது விருதுநகர்காரங்க சொல்லுங்கப்பா. ஆனால் கலைப்படைப்பு என்று பார்க்கும் போது இரண்டுமே பொக்கிஷமான படங்கள் தான்.

பரமஹம்ச நித்யானந்தரும் பாரின் பாதிரிகளும்...

Wednesday, March 31, 2010

இன்று CNN சானலில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்க தேவாலயங்களில் பரவலாக நடைபெரும், சிறுவர்கள் மேல் பாதிரிகளால் நிகழ்த்தப்படும் பாலில் வன்முறை தான் இன்றைய அவர்களின் தலைப்பு. பாதிக்கப்பட்ட சிலரின் பேட்டிகளும் காட்டப்பட்டன.

அந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட விஷயம், '200 காதுகேளாத சிறுவர்களிடம் பாலியல் வன்முறை செய்தும், அந்த பாதிரிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போப்பை என்ன செய்யலாம்?' என்பதே. அயர்லாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளிலும் இப்படி தான் நடந்துள்ளது. உயர் பதவியில் இருப்பவர்களும் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுபவர்களும் இந்த பாலியல் கொடுமைகளை மூடிமறைக்கப்பார்த்துள்ளனர். லண்டனில் இந்த வன்கொடுமையை எதிர்த்து மக்கள் பேரணி நடக்க இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சரி இதற்கும் நித்யானந்தருக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சானல் நமது சன் டிவியை விடவும் நக்கீரனை விடவும் பல மடங்கு புகழ் பெற்றதும், அதிகாரம் உள்ளதுமாகும். அவர்கள் நினைத்திருந்தால் சுட சுட வீடியோ பதிவோ, கிளுகிளுப்பான படங்களையோ ஆள் வைத்து செட் செய்து படம் பிடித்து காட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் நடந்த உண்மையை பாதிக்கப்பட்டவர்கள் மூலமாவே பேசவைத்து அந்த கொடுமையின் தாக்கத்தை உணர வைத்தார்கள். அதுவும் இதைப்போன்ற ஆன்மிக விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று, ப்ரா ஜட்டியோடு கடற்கரையில் கூச்சமே இல்லாமல் ஆணும் பெண்ணும் ஒன்றாக படுத்திருக்கும் கலாச்சாரம் கொண்ட அவனுக்கு தெரிகிறது; நம் மக்களுக்கு கேவலமான விளம்பரம் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

அதே போல் இங்கே நித்யானந்தரும் அந்த பெண்ணும் ஒருவருக்கொருவர் இயைந்து செய்த செயலை இங்கே ஹிந்து மதத்தை சேர்ந்த பல பெரியவர்களும் எதிர்த்தார்கள். ஆனால் அங்கே நடக்கும் பாலியல் கொடுமைகளை போப் மூடி மறைக்கப்பார்க்கிறார். எல்லாவற்றையும் துறந்த போப்பிற்கு, பாவம் பதவி ஆசையை மட்டும் துறக்க மனம் வரவில்லை போலும். இத நாம கேட்டோம்னா, "மனிதர்கள் ஆசை படக்கூடாதுன்னு புத்தரே ஆசைப்பட்டார்ல, தள்ளாத வயதில் ஒரு சிறுபான்மை முதியவரை இப்படி துன்புறுத்தலாமா?" அப்படி இப்படின்னு எதாவது கவிதை எழுதி காலையில் முரசில் ஒலி எழுப்பி விடுவார்கள்.

நல்ல வேலை, ஐரோப்பா இந்தியாவிலோ, தமிழகத்திலோ இல்லை. பரமஹம்சனோ பாதிரியோ, கடவுளை நம்பாமல் இந்த மாதிரி போலி தூதுவர்களை நம்பினால் நம் மதத்துக்கும் கடவுளுக்கும் தான் அசிங்கம்.

அந்நியன் படம் ஏன் ஓடவில்லை?

Wednesday, March 24, 2010

இயக்குனர் ஷங்கரின் மற்ற "கருத்து கந்தசாமி" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தான் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.

அவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.

காதலன் படத்த விட்ருவோம், பொழச்சு போட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. "அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே?! அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க?'

கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மாறி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க?) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.

இந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான்? அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில? என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு?' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.

மொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா? அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.

நம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் "அப்போ எனக்கு அம்பது காசு குடு" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே? சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி? இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது?

இது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று?

அமைச்சரின் பேச்சை கேட்காத ஊழியர்கள்!!!!


ஒரு துறையின் அமைச்சர் சொல்வதை அந்த துறையின் கடைநிலை ஊழியன் வரை கேட்காமல் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். அந்த அமைச்சர் சொல்வதை இவர்கள் மதிப்பதேயில்லை. அவரும் பாவம், எவ்வளவு முறை தான் மக்களிடம் சமாதானம் சொல்ல முடியும்? இப்போது சென்ற வாரம் கூட மக்கள் சந்தோஷப்படுவார்களே என்று மீண்டும் நம் காதில் தேன் பாய விட்டார். ஆனால் இந்த ஊழியர்களின் மெத்தனப்போக்கால் அமைச்சர் முதல் இந்த அரசுக்கே கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று எனக்கு மிகுந்த பயம் வருகிறது.

அந்த அமைச்சர் வேறுயாரும் அல்ல. நம் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு.ஆற்காடு வீராஸ்வாமி தான் அவர்கள். வயதில் எவ்வளவு மூத்தவர்? இவருக்கு இருக்கும் அரசியல் ஞானமும் (அடேங்கப்பா) நிர்வாக திறமையும் (அடங்கொக்காமக்கா) வெகு சிலருக்கே உண்டு (சொல்லிக்கிட்டாங்க). அப்படிப்பட்ட இவர் சொல்வதையே ஒரு அரசு ஊழியர் கேட்கா விட்டால்?

அப்படி அவர் என்ன தான் சொன்னாருன்னு கேக்குறிங்களா?

"தமிழகத்தில் எங்கும் இரண்டு மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் தடை படாது. அதுவும் பகல் நேரத்தில் மட்டும் தான் தடைபடும். சென்னையில் மின்வெட்டா? இல்லவே இல்லை; ஒன்றிரண்டு சிறு தவறுகளை ஊதிப்பெரிதாக்குவது கூடாது" என்று, அன்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்றில்லாமல், பல வருடங்களாக ஒரே மாதிரி பேசிக்கொண்டிருக்கும் அவர் கூற்றை இந்த மின்ஊழியர்கள் மீறிவிட்டார்கள்.

இந்த பதிவை நான் ஆரம்பிக்கும் போதே மின்வெட்டு (மணி இரவு பத்து). அறிவித்தது போக தினமும் இரண்டு மணிநேரம் அதிகமாக இந்த ஊழியர்கள் மின்சார ஊழல் செய்தால் இந்த அரசுக்கு தானே கேட்ட பெயர்? யாரவது இந்த மின்ஊழியர்களின் அயோக்கியத்தனத்தை அரசுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கப்பா..

நானும் ஆளுங்கட்சி சப்போர்ட்டு தான்....

விஜய் டிவியின் மொள்ளமாரித்தனம்!!!!!!!

Monday, March 15, 2010

எங்கள் ஊர் வெயிலின் கொடுமை தாளாமல் இன்று மதியம் முழுதும் வெளியில் போகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். டிவியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் நம்ம கோபிநாத் தெரிஞ்சார். பய இன்னைக்கு நம்மள எப்பிடி கடுப்படிக்குரான்னு பாக்கலாமேனு அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதன் பெயர் நிஜமா, குற்றமா என்று தெரியவில்லை. பெயர் தெரியாதது நிஜம்; ஆனால் அது ஒன்றும் குற்றமில்லையே?! மறு ஒளிபரப்பு என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல நித்யானந்தர் பற்றிய ஒரு கேவலமான வணிகரீதியான நிகழ்ச்சி. ஐந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பொறுமையாக பார்க்க முடிந்தது. நித்யானந்தர் செய்தது சரியா தவறா என்ற விவாதத்திற்குள் செல்லாமல், எல்லாரும் சுற்றி சுற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் ஒரு விஷயம் 'ஹிந்து மதம் ஏமாற்றுக்காரர்களின் கூடாரம்' என்பதை தான். மதம் என்பதே ஏமாற்றுக்காரர்களின் கண்டுபிடிப்பு தான். அதில் ஹிந்து மதத்தை மட்டும் இணைத்து கிறித்துவமும் இஸ்லாமும் மட்டும் ஏன் விதிவிலக்காக இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த நிகழ்ச்சியில் கோபிநாத் சொன்ன ஒரு வாசகம், "ஏசுநாதரும் புத்தரும் மக்களை வழி நடத்தி சென்றார்கள்; ஆனால் அவர்கள் ஆன்மிகத்தை வைத்து யாரையும் ஏமாற்றவில்லை" என்று. என்ன ஒரு ஒப்பீடு பாருங்கள்? இப்போது உள்ள சாமியார்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாமியார்களை இணைக்கிறார்கள்! அதுவும் பிற மத ஆட்களை தான் இணைக்கிறார்கள்; அப்போது இவர்களுக்கு ஹிந்து மதம் கண்ணுக்கு தெரியவில்லை போலும். ஏன் அதே காலகட்டத்தில் தானே தன் மன்னன் பதவியை துறந்து ஆன்மிகத்துக்கு வந்தார் இளங்கோ? புட்டபர்த்தி சாய்பாபாவை கண்கட்டி வித்தைக்காரர் என்று சொல்கிறார்கள்; அவர் செய்ததை போல தானே அன்று ஒரு தட்டு மீனையும் அப்பத்தையும் ஒரு ஊரே உபயோகப்படுத்த தானும் கண்கட்டி வித்தை செய்தார்? அப்படியென்றால் அவரும் ஒரு சாமியார் தானே?

கோபிநாத்தின் அடுத்த வாக்கியம் :"நீதிபதிகள் போல ஆன்மிகவாதிகளின் சொத்து கணக்கையும் கேட்க வேண்டும்". அது ஹிந்து ஆன்மிகவாதிகளுக்கு மட்டும் தானா, இல்லை தினகரன் குடும்பத்தார், மோகன்.சி.லாசரஸ் போன்றோர்களுக்குமா? அவர்கள் சொத்துக்கணக்கை கேட்டால் அது மைனாரிட்டி மக்களின் உரிமைகளில் தலையிடுவது போலாகாதா? ஐயோ, அப்போ நமது மத்திய மாநில அரசுகளின் இறையாண்மை என்னவாவது?

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த ஊழலைப்பற்றி எந்த டிவியிலாவது இப்படி வாய் கிழிய பேசினார்களா? இதே மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் நடந்திருந்தால் இந்நேரம் என்னவாகியிருக்கும்? ம்ம்ம் சொல்ல மறந்துவிட்டேனே, விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பெயர் அந்தோனியாம். ஏதோ தான் ஒரு நடுநிலைவாதி மாதிரி காட்டிக்கொள்கிறார். சென்ற மாதம் நாடார் (அவர் சார்ந்த ஜாதி) மக்கள் நடத்திய கூட்டத்திற்கு சென்று ஜாதி முன்னேற்றத்திற்கு உரை நிகழ்த்தியுள்ளார். ஏன் இந்த வெளி வேஷம்?

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசும் கலைஞர்களுக்கு தமிழ் மதம் என்று ஏதும் கிடைக்கவில்லையோ? ஆமாம், தமிழனின் வாழ்கை முறையே தெரியாமல் இங்கு ஒருவர் புத்தாண்டை தை மாதத்தில் கொண்டாட வழியுறுத்தும் போது நான் என்ன செய்ய? அறுவடை நேரத்தை பொங்கலிட்டு கொண்டாடியும், பயிர் செய்து தொழிலை ஆரம்பிக்கும் போது அதை புது ஆண்டாக கொண்டாடுவதும் தான் தமிழனின் வாழ்க்கை முறை. அதுவே தெரியாமல் இங்கு இருக்கிறார் ஒரு தமிழின தலைவர்.

எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன:
ஏன் நிஜம், குற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் ஊழல் செய்யும் பிற மதத்தலைவர்களையும், வீடு வேலைக்காரி முதல் கர்த்தருக்கும் ஊழியம் செய்யும் பெண் வரை கற்பழிக்கும் பாதரியையும் பற்றி செய்திகள் போடுவதில்லை?
பல ஹிந்து மத கோவில்களை (வருமானம் அதிகம் என்பதற்காக) அரசுடைமையாக்கியவர்கள், ஏன் புகழ் பெற்ற பிற மத புனிதத்தலங்களை அரசுடைமையாக்கவில்லை?
மூட நம்பிக்கை (ஹிந்து மதத்தில் உள்ளவை மட்டும்) பற்றி இவளவு பேசும் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் தங்கள் சேனலில் தினமும் ஜோசியக்காரனையும், சாமியார்களையும் காலையில் அழைத்து பேச வைக்கிறார்கள்? (நித்யானந்தா சிக்கியதே இந்த மாதிரி ஒரு பிரச்சனையால் தான் என்பது கேள்வி!)

பின்குறிப்பு:
என்னை ஹிந்து மத அனுதாபியாக நீங்கள் நினைத்தால் அது ஓரளவிற்கு சரி, அதே நேரத்தில் நான் சாமியார்களுக்கு வக்காலத்து வாங்குபவன் அல்ல. தவறு என்பது எல்லா இடங்களிலும் உண்டு, அதையும் சுட்டிக்காட்டுங்கள் என்பதே என் வாதம்.


விண்ணை தாண்டி வருவாயா? - ஓர் சைக்காலஜிக் அலசல்..

Sunday, March 7, 2010


பிடித்த கௌதமும் மிகப்பிடித்த ஏ.ஆர்.ரகுமானும், பிடிக்காத சிம்புவையும் திரிஷாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார்களே, போகலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலே இவ்வளவு நாட்கள் கடந்து இன்று ஒரு வழியாக படம் பார்த்து விட்டேன்.

ஒரு சாதாரண ஒரு வரி கதையை இரண்டு மனங்களின் ஊடே சென்று இவ்வளவு தெளிவாக அழகாக மிகை இல்லாமல் சொன்னதற்காக கௌதமை பாராட்டியே ஆகா வேண்டும். சமீப காலங்களில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு (குஷி, அ.ஆ) அடுத்த படியாக இரண்டு மனங்களின் குழப்பங்களையும் பிரச்சனைகளையும் இந்த அளவிற்கு ஆழமாக சொன்ன படம் இது தான். ஆனால் எஸ்.ஜே.சூர்யா பட கிளைமாக்ஸ் போல் இது சினிமா தனமாக இருக்காது.

"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருக்கும் பொது நான் ஏன் ஜெஸ்ஸிய பாத்தேன்? நான்னா கார்த்திக்.." என்று ஒரு சுஜாதா கதையில் வருவது போல் பேசி சிம்பு கதையை ஆரம்பிக்கிறார்.

இப்போது நாம் பேச போவது கதையை பற்றியோ தொழில்நுட்பத்தை பற்றியோ அல்ல. படம் நிறைய நிரம்பி இருக்கும் சைக்காலஜி பற்றி தான்.

"ஒரு ஆண் தனக்கு எதுவுமே இல்லாத போதும், எல்லாம் இருக்கும் போதும் எதை பற்றியும் கவலை பட மாட்டான். ஆனால் ஏதாவது முக்கியமான ஒன்று அமையும் போதும், கிடைக்கும் போதும் மிக யோசித்து தான் ஒவ்வொரு செயலிலும் இறங்குவான்" என்பதை சிம்பு பாத்திரம் மூலமும் (அந்த கோவா சூட்டிங் சீனில் திரிஷாவின் கேள்விக்கு பதில் சொல்லும் காட்சி); "அதே ஒரு பெண் தான் எந்த நிலையில் இருந்தாலும், பிறரை அண்டி வாழ வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தாலும், இந்த சமுதாயத்திற்காக தன் விருப்பு வெறுப்புகளை அமைத்துக்கொள்வாள்" என்பதை திரிஷாவின் பாத்திரம் மூலமும் மிக அழகாக செதுக்கியுள்ளார் இயக்குனர்.

பெண்கள் எப்போதுமே ஏன் பிறருக்காக வாழ்கிறார்கள்? ஒரு வேலை சினிமா தான் அவர்களை அப்படி சித்தரிக்கிறதா? "யாரும் இல்லாத தீவொன்று வேண்டும்..."; "அக்கம் பக்கம் யாரும் இல்லா பூலோகம் வேண்டும்..." என்பன போன்ற பாடல்கள் பெண்கள் பாடுவதாகவே ஏன் அமைக்கப்பட்டுள்ளன? 'இந்த உலகத்துல நம்மள சுத்தி யாருமே இல்லேனா உன்ன லவ் பண்ணுவேன் டா..' என்பதன் அர்த்தம்?

"சரி வா போலாம்" என்று கார்த்திக்கை அழைத்துக்கொண்டு செல்லும் ஜெஸ்ஸி அவனோடு செல்லாமல், மறைவிடத்தில் ஒருசில காதல் வசனங்களை மட்டும் பேசி விட்டு அவனை மட்டும் அனுப்பி விடுகிறாள். பிறருக்கெல்லாம் சரியான பொருளையோ, ஆளையோ தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் சரியாகவும் இருக்கும் பெண்கள், தங்கள் வாழ்கை என்று வரும் போது ஏன் பின்வாங்கி பயப்பட வேண்டும்? அதுவும் காதல் விஷயத்தில் ஆணும் பெண்ணும் நிஜத்தில் மிக அவசரத்தில் முடிவெடுக்கிறார்கள். அவசர முடிவு என்றாலும், அதை 'சரியான முடிவு தான் என்று நிரூபிக்க' ஆண் தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கிறான்; ஆனால் பெண் 'நாம் தவறு செய்து விட்டோம்' என்றெண்ணி அவளும் நிம்மதியாக இல்லாமல் அவனுக்கும் இம்சை கொடுக்கிறாள். திருந்துங்க போம்பளைகளா...

பின்குறிப்பு:
1. இந்த படம் பார்த்த பின்பு சிம்புவை மிகவும் பிடித்துப்போய் விட்டது எனக்கு. என்னது திரிஷாவா? க்ளோசப் ஷாட்லலாம் கமலா காமேஷயும் உமா ரியாஸ்கானையும் பார்ப்பது போல் இருக்குப்பா.
2. கெளதம், நீங்க என் வாழ்க்கைல, முக்கியமான நேரங்கள்ல கூடவே இருந்தீங்களா? இந்த படம் எனக்கு என்னென்னவோ ஞாபகப்படுத்துது...

நித்யானந்தா தான் உலகின் ஒரே கெட்டவரா?

Friday, March 5, 2010

கடந்த சில நாட்களாக வலையுலகில் நித்யானந்தாவை தாக்கித்தான் பெரும்பாலான பதிவுகள் வருகின்றன. எதற்கு இவர் மேல் இவ்வளவு காண்டு? ஒரு வேலை இப்படிப்பட்ட கீழ்த்தரமான செய்திகளை ஊதி பெரிதாக்கி புகழ்ச்சி அடைய விரும்புகிறார்களா என்று தெரியவில்லை. என்றால், இவர்களுக்கும், சன் டிவி, நக்கீரனுக்கும் என்ன வித்தியாசம்?
எனக்கு சில சந்தேகங்கள்.

*வாழ்வின் மூன்று அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறையுள் இப்போது செக்ஸ் என்ற நான்காவதையும் தங்களோடு இணைத்துக்கொண்டன. அதனால் செக்ஸ் இல்லாமல் ஒரு மனிதன் இன்றைய சூழ்நிலையில் வாழ்வது மிகவும் கடினம். பரஸ்பர புரிதலோடு இருவர் இணைந்து செய்வது எப்படி குற்றம் ஆகும்?

*நித்யானந்தா சாமியார் வேஷம் போட்டு இப்படி அசிங்கமாக நடந்து கொண்டாரே என்று கேட்கிறார்கள். அவர் வேஷ காரராகவே இருக்கட்டும். அவரை நம்பியவர்கள் அவர் மேல் கோபப்படலாம். நமக்கு எதற்கு வீண் வேலை?

*நம் கெட்ட பழக்கமே இது தான். பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் எவளை எவள் புருஷன் வைத்திருந்தான், அந்த நடிகை இப்போது எந்த நடிகனுடன் ஊர் சுற்றி கொண்டிருக்கிறாள் என்பதை தான் நாம் கூர்ந்து கவனித்து, முதல் ஆளாக அந்த செய்தியை நம் நண்பர்களிடம் சொல்ல போட்டி போட்டு துடிக்கிறோம்.

*இந்த நடிகனோ நடிகையோ பல பேர்களுடன் ஊர் சுற்றுகிறார் என்று எந்த நடிகனையோ நடிகையையோ கேவலமாக பேசுகிறோமா? கண்ணதாசனின் வனவாசத்தை படித்து கோபப்பட்டிருந்தால் இன்று ஒரு திராவிட கட்சிக்காரர் கூட இருக்க முடியாது.

*நித்யானந்தா புத்தகத்தை ஒரு ஊடகமாக பயன் படுத்தி தன்னை ஒரு நல்லவன் போல் காட்டிக்கொண்டார். அதே போல் நடிகர்கள் சினிமாவில் உலகிற்கே உபதேசம் செய்து அந்த ஊடகத்தின் மூலம் தங்களையும் நல்லவர்களாக காட்ட முற்படுகிறார்கள்.

*'நித்யானந்தா செய்த செயல் பல இடங்களிலும் பரவலாக நடப்பது தான். அவர் இருக்கும் இடமும் தன்னை சுற்றி அமைத்துக்கொண்ட பிம்பமும் தான் அவருக்கு எதிராக இப்போது திரும்பி உள்ளது.

*'வீட்டு வேலைக்காரியை கற்பழித்த பாதரியார்', 'மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்', 'பதவி உயர்வுக்கு படுக்கைக்கு அழைத்த மேலாளர்' என்று தினமும் இதே போன்ற சமுதாயத்தில் பொறுப்பும் மதிப்பும் உள்ள பலரை பற்றியும் இப்படி செய்தி வருகிறதே?

*அதை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். 'எது டிவி தலைப்பு செய்திகளில் முதலாவதாக வருகிறதோ, எது பத்திரிக்கையின் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்கிறதோ அதை தான் நாமும் வழி மொழிய வேண்டும்; அப்போது தான் நமக்கும் ஒரு பாப்புலாரிட்டி கிடைக்கும்' என்ற எண்ணம் தான் இது போன்ற கேவலமான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க சொல்கிறது.

*நினைவிருக்கிறதா, செரீனா பானு, சிவகாசி ஜெயலட்சுமி இவர்களை எல்லாம்? இவர்களுக்கு எதற்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது? ஒரு காரணமும் இல்லை. 'நம்மால் முடியவில்லை, இவனக்கு (இவளுக்கு) மட்டும் எங்கிருந்து இப்படி அதிர்ஷ்டம் கொட்டுகிறதோ' என்ற பொறாமையின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்.

*சில வருடங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவின் குளியல் டிவிடி வெளி வந்த போது அதை பார்க்க முடியாதவர்கள் தான் அப்போது பல பேர் இருந்திருப்பார்கள். ஆனால் நெற்றிக்கண் வெளியிட்ட புகைப்படங்கள் சாதாரண பாமரன் கையிலும் இருந்தது. அந்த குளியல் காட்சியை படம் பிடித்தவனை விட நெற்றிக்கண் பத்திரிகை தான் மிகவும் காவாளித்தனமாக செயல் பட்டது.

*இன்று அதைத்தான் நமது சன் டிவியும் நக்கீரனும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்துமணி மேட்டருக்கு குடுமிப்பிடி சண்டை போட்ட தினகரனும் தினமலரும் இப்போது கை கோர்த்து செல்கிறார்கள்.

*அந்த சாமியார் எங்கே கை வைக்கிறான், எப்படி துள்ளிக்குதிக்கிறான் என்பதை எல்லாம் ஒரு நீலப்படத்தை காண்பிப்பது போல் விலாவாரியாக காட்டவேண்டுமா?

*ஒருவன் இருபது வயதுகளிலேயே சாமியாராக போவது என்பது இன்றைய சூழலில் எப்படி சாத்தியப்படும் என்று யோசித்திருந்தால் அன்று அவர் பின்னாடி இவ்வளவு கூட்டமும் சென்றிருக்காது, இன்று இந்த விஷயம் நம் வீட்டு பெட்டிக்குள்ளும், காலையில் நம் முகத்தில் முதலாவதாக முழிக்கும் நாளிதழிலும் வந்திருக்காது.

*சாமியார்களால் பல பிரச்சனைகள் தீர்கிறது என்றால் இவர்களையே ஏன் நாம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்க கூடாது? அவர்கள் தான் தம் ஞான திருஷ்டியால் இந்த உலகையும் நாட்டையும் அழிவில் இருந்து காப்பாற்றி செழிப்பாக வைத்திருக்கலாமே?

*நமது கஷ்ட காலங்களில் நம்பிகைக்கு ஒரு துணையாகவும், மகிழ்ச்சி தருணங்களில் தலைக்கனம் ஏறாமல் இருக்க ஒரு கைப்பிடியாகவும் நாம் அமைத்துக்கொண்ட ஒரு நம்பிக்கை தான் கடவுள். நமக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர் எதற்கு?

*நித்யானந்தா மட்டும் அல்ல, இந்த சம்பவம் மூலமாக பலன் அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் கெட்டவர் தான் (நான் உட்பட).

*கடவுளை மற; மனிதனை நினை - இது பெரியார்.
சாமியாரை மற; சாமியை மட்டும் நினை - இது அடியேன்.

நீங்களே சொல்லுங்க....

Thursday, March 4, 2010


அது ஒரு கல்லூரி. அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரு காலத்தில் அந்த ஊருக்கே மாதிரியாக விளங்கினார்கள். நான் சொல்வது ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. அது பணக்கார மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்ல. ஆனால் பண்பான மாணவர்களும் ஒழுக்கமான மாணவத்தலைவனும் இருந்த கல்லூரி. இன்று அந்த கல்லூரியில் பலர் வசதி படைத்தவர்களாய் இருந்தாலும், ஒழுக்கம் என்பது மேலிருந்து கீழ்வரை யாரிடமும் இல்லை. இந்த அளவுக்கு அந்த கல்லூரி சீரழிந்து போய்க்கொண்டு இருக்கிறது. மாணவத்தலைவராக ஒரு பஞ்சாபி மாணவன் சும்மா டம்மி பீசாக இருக்கிறான். அவனை ஆட்டுவிப்பது அந்த கல்லூரி நிர்வாகத்தினர் தான். கல்லூரி நிறுவனரின் மனைவி தான் நிர்வாக தலைவி. அவர் மகன் இதே கல்லூரியில் ஒரு மாணவன். இவர்கள் இருவரும் நினைத்தது தான் கல்லூரியில் நடக்கும்; அந்த பஞ்சாபி மாணவத்தலைவன் மூலமாக. நாம் இப்போது அந்த கல்லூரியின் தமிழ் துறை நாசமாய் போய் விட்டது. ஏன் என்று கேட்கிறீர்களா?

மிகப்பெரிய அறிஞர்களும் மேதைகளும் வகுப்புத்தலைவனாக இருந்த தமிழ் துறையை இப்போது ஒரு அங்கிள் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் (சச்சின் பட அய்யாசாமி மாதிரி இவர் பல வருடம் தன் பதவியையும் விடாமல் ஓய்வும் எடுக்காமல் இருப்பதால் இவர் அங்கிள் என்று மக்களால் வாய் நிறைய அழைக்கப்படுகிறார்). இவருடைய அக்கப்போர் கொஞ்சநஞ்சமல்ல.

*இவர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்த கல்லூரியில் தான் படிக்கிறார்கள். அனைவருக்கும் எதாவது பதவி வாங்கி கொடுத்து விட்டார்.

*'மாணவர்களின் நலன் கருதி தான் அத்யாவசிய பொருளான புத்தகத்தின் விலை கூட்டப்பட்டது' என்று நிர்வாகம் சொன்னால், கல்லூரி மாணவத்தலைவருக்கு எஸ்எம்எஸ் க்கு மேல் எஸ்எம்எஸ் அனுப்புவார்(ஒரு மிஸ்டு கால் கூட குடுக்க மாட்டார்). அதை பெருமையாக நோட்டிஸ் போர்டிலும் ஓட்டிவிடுவார். ஆனால் சென்ற முறை தன் தூரத்து உறவினர் ஒருவருக்கு வகுப்பில் பதவி தரவில்லை என்றவுடன் கோபமாக மாணவத்தலைவரை சந்தித்து ('என் தயவு இல்லாம நீ எப்படி பதவியில் இருக்குற னு பாப்போம்' என்று) தன் உரிமையை பெற்று வெற்றியோடு வந்தவர் தான் இந்த தமிழ் துறை மாணவ தலைவர்.

*தன் வகுப்பையே இரண்டாகப்பிரித்து தன் இரண்டு தம்பிகளுக்கும் அதை பங்கிட்டுக்கொடுத்த வள்ளல் இவர்.

*அதே நேரத்தில் தன் தமிழ் துறை மாணவர்கள் உயர் கல்விக்காக வேறு ஒரு கல்லூரியில் சேர்ந்து இன ரீதியாக ஒடுக்கப்பட்டு அனைவரும் அரியர்ஸ் வைத்து கிட்டத்தட்ட வாழ்வையே இழந்த போது அதை கண்டுகொள்ளாதது போல் இருந்தார். கேட்டால், "என் மௌன அழுகை உனக்கு புரியாது மச்சி" என்று உணர்ச்சி பூர்வமாக கவிதை எழுதினார்.

*தன்னை இந்த தமிழ் துறையின் காவலாளியாகவே நினைத்துக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்வதே இவர் வேலை.

*இப்போது கூட தமிழ் துறையின் பெருமையையும் புகழையும் உயர்த்துகிறேன் பேர்வழி என்று தமிழ் வரலாறு தெரியாதவர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு "தமிழ்த்துறை விழா" நடத்த ஏற்ப்பாடு செய்தார். துறையின் ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் "தமிழ் விழா" என்று பெயர் மாற்றி அதே விழாவை நடத்த ஏற்பாடு செய்கிறார்.

*இவரை எதிர்த்து ஒரு பெண் தான் அடிக்கடி பேசுவாள்; வகுப்புத்தலைவர் தேர்தலிலும் நிற்ப்பாள். ஆனால் அவளை பற்றி மற்ற மாணவர்களிடம் அசிகமாக கமென்ட் செய்வது, அவள் அந்தரங்க வாழ்கையை அசிங்கமாக பேசுவது என்று பலவிதங்களில் தன் கலையை வெளிப்படுத்தி தன்னை ஒரு கலைஞராக காட்டிக்கொள்வார்.

*அதுவும் கல்லூரியில் தேர்தல் வந்துவிட்டால் போதும் இவருக்கும் இவர் தம்பி இருவருக்கும். சக மாணவர்களுக்கு சரக்கு வாங்கி கொடுப்பது, காண்டீனில் இருக்கும் பஜ்ஜி, டீ அகௌன்ட் எல்லாவற்றையும் தாங்களே கட்டிவிடுவது என்று அலப்பறை செய்துவிடுவார்கள். அனைவருக்கும் மறக்காமல் பரிசும் வந்து விடும்.

*நம் தலைவரும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். 'நான் வெற்றி பெற்று வந்தால் மாணவர்கள் அனைவருக்கும் பிட் சி.டி. தருவேன்' என்று பகிரங்கமாக அறிவிப்பார். 'என்ன இவ்ளோ கேவலமா இருக்கு?' என்று யாரவது கேட்டால் இவரே ஒரு கேள்வி பதிலை தயாரித்து "என் வீட்டில் நான் மறைவாக சந்தோசமாக பிட் படம் பார்த்த போது 'நம் சக வகுப்புத்தோழர்கள் அனைவராலும் பிட்டு படம் பார்க்க முடியவில்லையே?' என்று நான் வருந்தியதன் விளைவு தான் இந்த திட்டம்" ஒரு போடு போட்டார். தேர்தலில் ஓட்டும் பெற்றார். 'பிட்டு படம் தரிங்க, டிவிடி யார் தருவது?' என்று கேட்டால் கோபத்தில் உள்ளம் குமுறி ஒரு கவிதை பாடி விடுவார்.

*வகுப்பில் எப்போதும் அடிதடி தான். தங்களுக்கு பிடிக்காதவர்களின் கை கால்களை வாங்குவது சர்வ சாதாரணம். அதுவும் இவரின் மூத்த தம்பி அதில் கில்லாடி.

*'நீ லீடராக இருக்கும் போது தான் பா கிளாஸ் ல பிரச்சனையை வருது' என்று யாரவது நாக்கில் பல் போட்டு பேசி விட்டால், கடந்த முறை லீடராக வேறொருவர் இருந்த போது நடந்த ஒன்றிரண்டு சாதாரண பிரச்னையை மிகை படுத்தி சொல்வது, அல்லது மற்ற வகுப்பில் நடக்கும் சோதா பிரச்சனைகளை பேசி சமாளிப்பது இந்த அய்யாசாமி என்ற அர்னால்டுக்கு கை வந்த கலை.

*சொல்லுங்க மத சக மாணவர்களை மிக கேவலமாக பேசுவார்; காட்டு மிராண்டிப்பய கூட்டம் என்று சாடுவார். அவர் குடும்பத்திலும் அந்த காட்டுமிராண்டி வழக்கம் உண்டு என்றும் அதை முதலில் நிறுத்தவேண்டும் என்றும் இவருக்கு தோணவே தோணாது. அதே நேரத்தில் கிறிஸ்த்துவ முகமதிய மாணவர்களிடம் 'நான் உங்களில் ஒருவன்' என்று காடும் விதமாக எதாவது செய்து கொண்டிருப்பார் (அவர்கள் மத விழாக்களில் தான் அசைவ உணவு உண்டு என்பதால் தானோ என்னவோ!).

*இவருக்கு பல துதி பாடிகள் உண்டு. தலைவர் 'இன்றும் பிட் அடித்து மாட்டிக்கிட்டார்' என்று பெருமையாக சொல்லி அதற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்ப்பாடு செய்து ஜமாய்த்து விடுவார்கள். தல்கைவரும் சிரித்துக்கொண்டே அரைகுறை ஆடை அழகிகளை பார்த்துக்கொண்டிருப்பார்.

*ஆடல் பாடல் என்றால் என்னவென்றே தெரியாதவரை அழைத்து வந்து "எங்களலாம் மெரட்டுராங்க தல" என்று பேச வைத்து சரமாரியாக பஞ்சர் வாங்குவார். ஆனாலும் அனைவரையும் பாசத்தோடு அரவணைத்து செல்லும் ஒரு பாசத்தலைவனாக தன்னை காட்டிக்கொள்வார்.

வகுப்பை, மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்று ஒரு லீடர் யோசிக்காமல் இப்படி கேளிக்கைகளிலும் அடாவடித்தனத்திலும் ஈடு பட்டால் அந்த தமிழ் துறை எப்படி உருப்படும்?
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One