Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

நானும் வாலியும்...

Friday, July 19, 2013

தலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரிஞ்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்?’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறேன் என்கிற கர்வத்தில் தான் இந்த தலைப்பு.. நேற்று மாலை பாஸோடு மார்க்கெட் விசிட்டில் இருந்த போது நண்பர் ஒருவரிடம் இருந்து 7மணி அளவில் ஒரு எஸ்.எம்.எஸ், "ur favorite vaali is dead" என்று.. ஒரு சிலர் இறந்தால் நமக்கு மிகவும் வருத்தமாக, அன்று முழுவதும் மனதுக்கு மிக பாரமாக கஷ்டமாக இருக்கும், சிலர் இறந்தால் நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு பாதிப்பும் இருக்காது.. ஆனால் வாலி இறந்த செய்தி கேட்டதும் எனக்கு இந்த இரண்டு விதமாகவும் தோன்றவில்லை.. அவருடைய பாடல் வரிகள் சில மனதில் வந்து போயின. பின் அவர் இறந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் பாடல்கள் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, வாயில் நாம் முனுமுனுத்துக்கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவு  என்பதே இல்லை.. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்கிற கண்ணதாசனின் வரிகள் வாலிக்கும் பொருந்தும்.. இனி நானும் வாலியும்..


சென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் அமைந்திருக்கும் சௌத் போக் சாலையில் ஒரு சிறிய மண்டபம். அங்கு 2005ம் ஆண்டில் ‘விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 32 பேரும் மதிய சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தோம். அமைதியாக, நமக்கு அறிமுகமில்லாத ஆனால் இனி அறிமுகப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு சிறு சலசலப்பு.. காற்றில் திருநீறும், குங்குமமும், ஜவ்வாதும் கலந்த ஒரு தெய்வீகமான மெல்லிய வாசனை வந்தது.. வாசனையை மூக்கும் மனதும் உணர்ந்து லயிக்கும் அந்த நொடியில் வெள்ளை நிற பட்டு வேட்டியும் முழுக்கை ஜிப்பாவும் போட்டு ஒரு வாலி எங்களை விறுவிறுவென சிரித்த முகத்துடன் கடந்தார். நாங்கள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கை வரிசைகளைத்தாண்டி எங்களுக்கு முன் பேசும் இடத்தில் கம்பீரமாக தொண்டையை செருமியபடி மைக்கை பிடித்துக்கொண்டு நின்றார். ’இவ்வளவு வெள்ளையா உலகத்துல ஒருத்தன் இருப்பானா?’னு நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கலர்.. எங்க ஊர் பக்கமெல்லாம் நான் இந்த கலரில் ஆளை பார்த்ததே இல்லை.. கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..


அதற்கு முன் வாலி என்றால் சினிமாவில் பாட்டு எழுதுபவர் என்பது மட்டும் தான் தெரியும்.. அவரின் வரலாறு, குறும்பு, நகைச்சுவை இது எதுவும் தெரியாது.. என்ன தைரியத்தில் ஒரு கிழவரை, 20வயது இளைஞர்களுக்கு மத்தியில் பேச வைக்க விகடன் குழுமம் முடிவு செய்திருக்கும் என்று கூட யோசித்தேன்.. பேச ஆரம்பித்தார்.. அந்த 30நிமிடங்களும், யாரோ நம் கல்லூரி நண்பன் நம்மோடு சகஜமாக, நகைச்சுவையாக, ஊக்கு சக்தியாக, கிண்டலாக, பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருந்தது அவரின் பேச்சு. ’நான் இன்னைக்கு இங்க பேசுறதுக்கு எதுவுமே prepare பண்ணல.. கார்ல வரும் போது அவசர அவசரமா ஒரு கவிதை உங்களுக்காக எழுதிருக்கேன்”னு சொல்லி அந்த கவிதையை வாசித்தார். அந்த கவிதை எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை இரு கருத்துக்களை தவிர்த்து.. 

”யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை..
உங்களின் பலத்திற்கு இன்னொரு கை
அது தான் விகடன் பத்திரிகை”

“எவன் ஒருவர் வேர்வைக்கும் - வெற்றி
நிச்சயம் வேர் வைக்கும்”

அவர் பாட்டுக்க வார்த்தைகளை பிரித்து மேய்ந்து கவிதை பாடிக்கொண்டிருந்தார்.. அவரே அவரை ’பாக்கெட் பேப்பர் கவிஞன்’ என்று சொல்லிக்கொண்டார்.. கண்டேன் காதலை படத்தில் சந்தானம் சொல்வாரே, “இப்படித்தாம்ப்பா நான் பாட்ட எழுதி அங்கங்க விட்டுட்டு போயிருவேன், அத எடுத்து யாராவது சினிமால எழுதி பேர் வாங்கிறாங்க”னு, கிட்டத்தட்ட வாலியும் அதே வகையறா தான்.. தான் அவசரத்தில் மேடையில் பேசுவதற்காக எழுதிய பல கவிதைகளை முறையாக பாதுகாக்காமல் விட்டுவிடுவாராம்.. அதை பின் ஏதாவது ஒரு சினிமாவில் பாடலாக கேட்கும் போது தான் அவருக்கே தெரியுமாம் ’எவனோ நம்ம கருத்த களவாண்டுட்டாய்ங்க’னு...

அழகிய தமிழ் மகன் படம் வந்த புதிதில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடல் கேட்டதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.. அதில் “எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே” என்று ஒரு வரி வரும்.. ‘ஆஹா வாலி சொன்ன மாதிரியே எவனோ அவர் கவிதைய லவட்டிட்டு போயி பாட்டு எழுதிட்டான்’ என அலர்ட் ஆகி வேகவேகமாக நெட்டில் மேய்ந்ததில், நல்ல வேளையாக அந்த பாடலை வாலி தான் எழுதியிருந்தார்.. பரவாயில்ல நம்ம மீட்டிங்கிற்கு பிறகு ஆள் உஷாராகத்தான் இருக்கிறார் என மனதை தேற்றிக்கொண்டேன்..


வாலிக்கு எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது.. எங்களிடம் பேசும் போது கூட எம்.ஜி.ஆர் தன்னிடம் ஒரு விசயம் கூறி மிகவும் வருந்தியதாகவும், தான் அவரை எப்படி தேற்றினேன் எனவும் கூறினார்.. “கவிஞரே நீர் எனக்கு எழுதிருக்கிற எல்லா பாட்டும் வாழ்க்கையில நடந்திருக்கும்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு எழுதின.. நடந்தது.. நான் ஆணையிட்டால்னு எழுதுன, நாட்டுக்கே ஆணையிடுற அளவுக்கு வந்துட்டேன்.. ஆனா எனக்கொரு மகன் பிறப்பான்னு எழுதுன.. அது மட்டும் நடக்கலியே?” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது? இந்த தமிழ் நாட்டு மக்களே உங்க பிள்ளைங்க” தான்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினாராம்..

வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்.. வாலிக்கு ஓவியத்தில் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி.. அவரைப்போல் தானும் பிரபலமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக்கொண்டாராம்.. ஒரு பத்திரிகை ஆபிசில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார்.. அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “அதென்னப்பா பேரு வாலி? வாலே இல்ல, நீ வாலியா?” என்றாராம்.. நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே.. 

“வால் இல்லை என்பதால் வாலியாகக்கூடாதா?
கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?”

என்று  சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்.. “ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது, நீ ஒழுங்கா கவிதை எழுது”னு அவர் தான் வாலியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்..


அப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார்.. கண்ணாதசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டு கொள்ளவில்லை.. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனின் காத்திருந்தார்.. அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது.. ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.. மீண்டும் புது உத்வேகத்துடன் பாடல் எழுதி வாலிப கவிஞராக இன்று வரை இருக்கிறார்.. அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்த பாடலை எழுதியவர், வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன்!!!! இது தான் விதி என்பது..

வாலி மிகுந்த கோபக்காரராம். ”என் கிட்ட வேலை வாங்க தெரிஞ்ச ரெண்டே பேரு எம்.ஜி.ஆரும் கமலும் தான்” என்றார் வாலி.. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வந்த “ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டு இப்பவும் நமது favorite காதல் தோல்வி பாடல்.. ஆனால் அந்த பாடலை வாலி ஒவ்வொரு முறை எழுதும் போதும் கமல் ‘எனக்கு பிடித்த மாதிரி இல்லை’ என்று வேறுவேற மாதிரி கேட்டிருக்கிறார்.. பயங்கர கடுப்பான வாலி, கடைசியாக ஒரு பேப்பரில் வேகமாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் நீட்டி, “போய்யா இதுக்கு மேல ஒனக்கு எழுத முடியாது”னு சொல்லிட்டாராம்.. அதை படித்த கமல் வாலையை கட்டிப்பிடித்துக்கொண்டார்..

இதெல்லாம் நாங்கள் ஓவ்வொருவராக கேள்வி கேட்டு அதற்கு வாலி சொன்ன பதில்களின் தொகுப்பு.. இப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி.. “சார் ஒரே படத்துல ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’னு பாட்டு எழுதுறீங்க.. ‘சக்கர இனிக்குற சக்கர’னு ‘ஒரு மாதிரியான’ பாட்டும் எழுதுறீங்க.. எப்படி முடியுது?”.. இந்த உலக முக்கிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் “உங்கள மாதிரி இளைஞர்கள் கூட பழகிட்டு மனசு சந்தோசமா இருந்தா எப்படியும் எழுதலாம்.. எல்லாத்தையும் விட சரஸ்வதி தேவியின் அருள்னு தான் நான் நெனைக்கிறேன்” என்றார்..


உண்மை தான்.. யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்.. அதை தமிழர்களின் வாயில் முனுமுனுக்கவும் வைக்க முடியும்.. வாலியே ஒரு பேட்டியில் சொன்னது, “நானும் ரகுமானும் சேர்ந்து எழுதும் பாட்டு ‘ம’ வரிசையில் வந்தாலே அது ஹிட் தான்” என்று.. உண்மை தான்.. டாக்ஸி டாக்ஸி என்று நட்புக்கும் நவீன இலக்கணம் கொடுப்பார், secret of successம் சொல்லிக்கொடுப்பார்.. காதல் வெப்சைட் ஒன்றை கண்ணில் காண வைப்பார், மல மல மருதமலனு ஒரு மார்க்கமாவும் எழுதுவார், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என்று கடவுளுக்கும் எழுதுவார். கடவுளுக்கு எழுதினாலும் காசுக்கு எழுதினாலும் அவரின் வார்த்தை விளையாட்டும், எழுத்தில் இருக்கும் துள்ளலும் என்றுமே மாறாது..

”இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? அதற்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது, அதை கூட வார்த்தையில் விளையாண்டு, ‘நான் recognitionக்காக எழுதல, remunerationக்காக எழுதுறேன்’ என்று தைரியமாக ஓபனாக பதில் சொன்னவர் அவர்.. “நான் இதுவரை டில்லி தாண்டி போனது இல்ல. கடல் கடந்து போகாத ஒரே ஒரு விசயத்துலயாவது நான் பிராமணனா இருக்கேனே?” என்று தன் சூழலை வைத்து தன்னையே கிண்டல் அடித்துக்கொள்பவர்.. அந்த நகைச்சுவை உணர்வும், தைரியமும் தான் அவரை என்றும் இளமையாக வைத்திருந்தது என்றால் மிகையில்லை.. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..

”வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்.. 
போ போ என்கிறேன், போகாமல் நீ நிற்கிறாய்...”

வாலியின் பாடலுக்கு சிவாஜி நடிக்க T.M.S குரல் கொடுக்க வானில் இன்று ஒரு அழகான பாடல் அரங்கேறிக்கொண்டிருக்கும் என நம்புவோம்...

சுஜாதா பிறந்த நாள் இன்று...

Friday, May 3, 2013

சும்மா சிவகாசி முள்ளுக்காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த எனக்குள்ள கூட ‘நாமளும் எழுதிப்பாக்கலாமா?’ என எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்.. ப்ளாக் எழுதும் பல எழுத்தாளர்களுக்கும் இவர் தான் இன்ஸ்பிரேஷன்.. ஆன்மிகமா? காதலா? பேயா? விஞ்ஞானமா? குடும்பமா? சமூகமா? கவிதையா? கட்டுரையா? எது வேண்டும் உங்களுக்கு? வானுக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் எழுதுவார்.. இல்லை இல்லை, வானுக்கு மேல் இருக்கும் அந்த அண்ட வெளியை பற்றியும் எழுதுவார்.. இவர் ஒரு பேப்பரில் மையை சிந்தினால் அதை கூட ரசித்துப் பார்க்க இங்கு கோடி பேர் உண்டு.. யாரை பற்றி சொல்கிறேன் என தெரிந்து விட்டதா? ஆம் தலைவர் சுஜாதாவை பற்றித்தான்..




நான்கு நாட்களுக்கு முன் நானும் நண்பர் ‘திடங்கொண்டு போராடு’ சீனுவும் பேசிக்கொண்டிருக்கும் போது, மே3 தலைவர் பிறந்த நாளுக்கு எதாவது எழுதலாமா என்று கேட்டார்.. ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸா யோசிச்சதுல ஒரு மனதா ஒரு நல்ல முடிவுக்கு வந்தோம். நாம இங்க சும்மா தத்தக்க பித்தக்கனு எழுதிட்டு இருக்கோம்.. தலைவர பத்தி எழுதணும்னா அது நம்மளோட பெஸ்ட்டா இருக்கணும்.. அதனால இப்போதைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு முடிவு செஞ்சோம்.. ஆனால் என்றாவது ஒரு நாள் அவரை பற்றி மனது கனக்கும் அளவுக்கு ப்ரிவும் மகிழ்ச்சியும் வரும் அளவிற்கு எழுத வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு உண்டு.. சரி, அடுத்த பிறந்த நாளுக்குள்ளாவது எழுதி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டோம்..  ”அப்பாடா நான் தப்பிச்சேன். ஒரு வருசத்துக்கு தொல்ல இல்ல” என தலைவர் சொர்கத்தில் நினைத்திருப்பார். ஆனால் விதி விடுமா?

இன்று அதிகாலை 8மணிக்கு ரத்னவேல் ஐயா என்னை அழைத்தார்கள். ”ராம்குமார் இன்னைக்கு சுஜாதா பிறந்த நாள், ஆனா ஃபேஸ்புக்ல யாருமே அத பத்தி கண்டுக்கல” என்று மிகவும் ஆதங்கமாக பேசினார்கள். என்னை விட ரத்னவேல் சார் மிகப்பெரிய சுஜாதா ரசிகர். சுஜாதாவே தன் கைப்பட அவருக்கு எழுதிய கடிதத்தை ஒரு பொக்கிஷம் போல் வைத்திருக்கிறார். எனக்கு அவர் ஆதங்கமாக சொன்னதும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தலைவருக்காக பெஸ்ட்டா ஒரு பதிவு எழுதும் போது எழுதலாம். இப்போது அவரிடம் LKG படிக்கும் ஒரு குழந்தையின் அளவுக்காகவ்து எதாவது எழுதிவிடலாம் என்கிற நப்பாசையில் தான் இந்த பதிவு. இதில் எழுத்து நடை, தொடர்ச்சி எல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் இது எனக்கும் என் தலைவருக்கும் இருக்கும் உறவு பற்றியது. அதில் எழுத்தின் நேர்த்தி, அலங்காரம் இல்லையென்றாலும், நினைவுகளும் அன்பும் இருக்கும். என்னோடு பேசாத, நான் நேரில் பார்த்திடாத, பார்க்க முடியாத, யாரோ ஒரு பதிப்பகத்தாரால் தன் அச்சிடப்பட்ட எழுத்துக்களால் என் தோள்களில் கையை போட்டு, என்னோடு நட்பு பாராட்டிய, எனக்கு காதலை சொல்லிக்கொடுத்த, என்னோடு சண்டை போட்ட, என்னை கலங்க வைத்த, சிரிக்க வைத்த, எல்லாவற்றையும் விட சிவகாசி முள்ளுச்செடிகளுக்குள் திரிந்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுதும் ஆர்வத்தை தூண்டிய அவரை பற்றிய என் அனுபவம் இது. சீனுகுரு நண்பா உங்களை விட்டுவிட்டு எழுதுவதற்கு மன்னிக்கவும், ப்ளீஸ்...




இப்போது யோசித்துப்பார்த்தாலும் கூட மங்கலாகத்தான் ஞாபகத்தில் இருக்கிறது, சுஜாதா எனக்கு எப்போது அறிமுகமானார் என்று.. நான் டவுசர் போட ஆரம்பித்த என் பள்ளிக்காலம் அது. அப்போது சிவகாசியில் எங்கள் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்தேன்.. சிறுவர்மலரை துறந்த, ஆனால் வாரமலர் மேல் ஆர்வம் வராத வயது அது.  தாத்தா, வாராவாரம் சாவியும், ஆனந்த விகடனும் வாங்கி வருவார். எனக்கு சாவி அந்த அளவுக்கு பிடிக்காது. ஆனந்த விகடனில் தான் நிறைய ஜோக்ஸ் சினிமா செய்திகள் எல்லாம் இருக்கும். ஆனால் ஜோக்ஸும் சினிமாவும் 10 நிமிடத்தில் படித்துமுடித்துவிடும் வேலை. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு அப்போது.  எல்லா பையன்களும் ஏதாவது அச்சாஃபீஸ்க்கோ (printing press), கட்டிங்கிற்கோ வேலைக்கு போவோம்.. எனக்கு ரெண்டு நாளைக்கு மேலே எங்கும் வேலை செய்ய பிடிக்காது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுவேன்.. எங்கள் தெரு பையன்கள் எல்லாம் அடுத்த வருட படிப்பு செலவிற்கு தாங்கள் வேலை செய்த பணத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். என் வீட்டில் பயங்கர வசவு விழும், “ஒவ்வொரு வீட்லயும் பிள்ளைக எவ்வளவு அக்கறையா இருக்கு? இங்க நம்ம வீட்ல ஒரு  சோம்பேறி தான் வந்து வாச்சிருக்கு” என்று. 

டிவி, கேபிள், பரவலாக இல்லாத காலம் அது. வேறு என்ன தான் செய்வது? ஏற்கனவே ஜோக்ஸ் படித்த ஆனந்த விகடன் தான் ஒரே கதி. அதை எடுத்து சும்மா திருப்பிக்கொண்டிருக்கும் போது தான் உலகையே திருப்பிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. ஏதோ ஒரு பக்கத்தில் ”கற்றதும் பெற்றதும்” என ஒரு தலைப்பு. என்னது இது கற்றதும் பெற்றதும்னு யோசிச்சுக்கிட்டே சும்மா வாசிக்க ஆரம்பித்தேன். அதில் அவர் சொல்லியிருக்கும் பல விசயங்கள் எனக்கு அப்போது புரிந்ததில்லை (இப்போது வரை சில விசயங்கள் எனக்கு புரிந்ததில்லை).. ஆனால் அந்த எழுத்துக்களில் இருக்கும் துள்ளல் என்னை மிகவும்  கவர்ந்தது. ஒரு விஞ்ஞான விசயத்தையோ, அரசியல் விசயத்தையோ கூட இவ்வளவு நையாண்டியாக சொல்ல முடியமா என ஆச்சரியப்பட வைத்தார்.

அப்போது ஆரம்பித்தது சுஜாதா மேலான ஒரு ஆர்வம். ஒரு பெரிய அறிவு ஜீவி போன்ற பிம்பத்தோடு தான் அதன் பின் அவரது கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதை படித்துவிட்டு எங்கள் தெரு நண்பர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். எல்லாவனும் என்னை ஆவென்று பார்த்துக்கொண்டு நான் சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பான். அந்த போதை தந்த ஆர்வத்தில் சுஜாதா வேறு எதுவும் எழுதியிருக்கிறாரா என பார்த்தால், “ஆமா நெறயா புக் எழுதிருக்காரு, எல்லாமே காசு கூட.. நீ இத மட்டும் படி” என்றார் என் அம்மா.  இடையிடையில் அவரது சிறுகதைகளும் ஆனந்த விகடனில் வரும். அதில் இருந்து தான் சிறுகதைகளும் படிக்க ஆரம்பித்தேன். சொல்லப்போனால் சுஜாதா என்கிற ஒருவர் இல்லாமல் போயிருந்தால் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போயிருக்கும். நீங்களும் இந்த ப்ளாக் படிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதி. ஹ்ம் விதி யாரை விட்டது?



கிட்டத்தட்ட ஒரு ஆண்டு, ஆனந்த விகடனில் அவரது கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டிருந்தேன். “எல்லாவற்றுக்கும் ஒரு இடைவெளி தேவை” என அவர் அந்த தொடருக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். எனக்கு அவர் அப்படி செய்ததில் பயங்கர கோபம். “இங்க ஒருத்தன் இவ்ளோ இன்ட்ரஸ்ட்டா படிச்சிட்டு இருக்கியான், இந்த ஆளு பாட்டுக்க இப்டி புசுக்குனு நிப்பாட்டிட்டாரே?” என்று. இப்போது அடுத்த முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு வந்துவிட்டது. என் தாத்தாவும் வேலையில் இருந்து நின்றுவிட்டார். வீட்டிலும் புத்தகம் வாங்குவதில்லை. நானோ இரவு உணவிற்கு கடிச்சிக்கிட பக்கோடா வாங்கி வரும் பேப்பரை கூட விட்டுவைக்காத அளவிற்கு வாசிப்பாளி(!!!) ஆகிவிட்டேன்.. என்ன செய்வது? அப்போது தான் அந்த தைரியமான முடிவெடுத்தேன். என் சித்தப்பா ஒரு காய்கறி கடை வைத்திருந்தார். அந்த ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நான் இரண்டு மாதமும் முழுதாக வேலைக்கு சென்றேன். எனக்கே இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது, நான் எப்படி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்தேன் என..  ”சே அவனுக்கா அக்கற வந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானே?” என அம்மாவும், ”இந்த வருசம் படிப்பு செலவுக்கு வெளிய கொஞ்சமா கடன் வாங்குனா போதும்” என அப்பாவும் என்னென்னமோ நினைத்து கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.. 

அவர்களின் கற்பனைகளை தெரிந்து கொள்ள நான் என்ன ஜோசியக்காரனா? சித்தப்பாவிடம் என் சம்பளம் 600ரூபாயையும் (தினமும் பத்து ரூபாய்)  மொத்தமாக வாங்கிக்கொண்டு எங்கள் ஊரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் சுஜாதாவின் மூளையில் ஒரு மிகச்சிறிய அளவை கிள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.. இப்ப வடிவேலு சினிமால வாங்குறதுலாம் என்ன அடி? அன்னைக்கு நான் வாங்குனேன் பாருங்க, அடி.. ஆத்தாடி நெனச்சா இப்பக்கூட பதருது.. ஆனாலும் கொஞ்ச நேரம் அழுதுகொண்டிருந்த என்னை சுஜாதா கையில் ஏந்திக்கொண்டார். என்னை அடித்தவர்களை பழி வாங்கும் நேரம் எனக்கு மறுநாளே வந்தது. அம்மா நான் வாங்கி வந்த புத்தகத்தில் ஒன்றை படிக்க எடுத்தார்.. “என்ன மட்டும் அடிச்சீங்கல்ல? இப்ப வந்து எதுக்கு என் புக்க எடுக்குறீங்க?” என யாருக்கும் கொடுக்கவில்லை. நானே ஆசை தீர படித்தேன்.. அனைத்து புக்கையும் படித்து முடித்து விட்டுத்தான் பிறர் படிக்க அனுமதித்தேன். அவ்வளவு பிரியம் & possessiveness சுஜாதா மீது.


இப்படியே என் சிறுவயது முதல் வாசிப்பின் ஆர்வத்தை தூண்டியவர் அவர்.. நான் படித்த சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் நூலகம் அந்தப்பகுதியிலேயே மிகப்பெரியது. அங்கே எல்லோரும் பாட புத்தகத்தை நோண்டிக்கொண்டிருப்பார்கள். நான் சுஜாதாவை தேடிக்கொண்டிருப்பேன். பல நல்ல நூல்களை படித்து, என் வாசிப்பை முறைப்படுத்தியது அந்த நூலகம் தான்.. செம்மீன், தலைமுறைகள், சில நேரங்களில் சில மனிதர்கள் என சுஜாதாவையும் தாண்டி பல நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கு தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தன் மீதும் அப்போதிருந்து ஒரு பற்று வந்துவிட்டது. என் 3வருட வாழ்வில் நான் ஒரு பாட புத்தகம் கூட எடுக்கவில்லை என்று கடைசி செமஸ்டரில் என் லைப்ரரி கார்டை கூட ப்ளாக் செய்துவிட்டார்கள்.. விடுவேனா நான்? நண்பனின் கார்டில் சுஜாதாவை திருட்டுத்தனமாக வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த காலத்தில் தான் சுஜாதா வசனம், திரைக்கதை எழுதிய படங்கள், சுஜாதாவின் கதையோ பேட்டியோ வந்த புத்தகங்கள் என எல்லாவற்றையும் ஒரு வெறி பிடித்த காதலன் போல் செய்துகொண்டிருந்தேன். உண்மை தான், அது காதல் தான். என் வாழ்வில் நான் அதிக காலம் காதலித்த என்னிடம் எதுவும் எதிர்பார்க்காத ஆனால் எனக்கு பிடித்த அனைத்தையும் கொடுத்த காதலாக அது இருந்தது..

பின் எம்.பி.ஏ படித்த மதுரை தியாகராஜர் நிர்வாகவியல் கல்லூரியில் ஹாஸ்டலில் மட்டும் தான் தமிழ் இருக்கும்.. மற்றபடி எங்கும் ஆங்கிலம். நமக்கு தெரிந்த ஆங்கிலம் எல்லாம், “மை நேம் இஸ் ராம்குமார், ஐயம் ஃப்ரம் சிவகாசி” என்பது மட்டும் தான்.. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் சுஜாதா... அங்கு சுஜாதா பற்றிப்பேச ஒருவர் கிடைத்துவிட்டார்.. அவர் படித்த நாவல்களை பற்றி அவரும் நான் படித்தவைகளை பற்றி நானும் பேசும் போது தான் தெரிந்துகொண்டோம், நாம் 10, 15 நாவல் படித்ததை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம் அந்த மனுசன் 100நாவலுக்கு மேல எழுதி தள்ளியிருக்கிறார் என்று.. எனக்கு பள்ளிக்காலத்தில் இருந்தே ஒரு விபரீத ஆசை உண்டு.. நாமும் சுஜாதா மாதிரி கதை எல்லாம் எழுதலாமா என்று.. ஆனால் அதற்கான வாய்ப்பு வந்ததே இல்லை. நான் சிவகாசியில் கல்லூரியில் படித்த போது கூட யூத் ஃபெஸ்டிவலில் எவ்வளவோ கதை எழுத முயன்றேன்.. ஆனால் முடியவில்லை.. பின் எம்.பி.ஏ.வில் தான், யூத் ஃபெஸ்ட்டிவலில் தமிழில் கதை எழுத ஆள் இல்லை என்று என்னை சேர்த்தார்கள்.. 


அது 2008ம் ஆண்டு யூத் ஃபெஸ்டிவல். அந்த யூத் ஃபெஸ்டிவலில் என்னை சேர்க்க மறுத்த அய்ய நாடார் கல்லூரியும் வந்திருந்தது. ”என்ன சேக்க மாட்டேன்னு சொன்ன ஒங்கள தோக்கடிக்குறேன்டா சின்னப்பசங்களா” என மனதுக்குள் சூளுரைத்துக்கொண்டேன். இனிமேல் தலைவர் மாதிரி அடிக்கடி சிறுகதை எழுதணும்னு நினைத்துக்கொண்டேன். சிறுகதைப்போட்டி நடந்த நாள், என் வாழ்நாளில் மறக்க முடியாதது, ஃபிஃப்ரவரி 28.. காலை எழுந்து கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான் செய்தித்தாளில் அதை கவனித்தேன். “பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்” என்று எளிதில் கவனிக்க முடியாத ஒரு நடுப்பக்கத்தில் வலது மூலையில் இருந்தது அந்த செய்தி. அதை படித்தவுடன் எனக்கு கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டன.. கண்கள் கலங்கவில்லை என்று சொன்னால் பொய் ஆகிவிடும். கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு, கதை எழுத சென்றேன். கதை எழுதும் ஆர்வமே சுத்தமாக இல்லை. அரைகுறையாக எழுதிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் முடிவை வெளியிட்டார்கள். சிறுகதையில் எங்கள் கல்லூரி தான் வென்றது.. நான் எழுதிய முதல் கதைக்கே பல்கலை அளவில் முதல் பரிசு. ஆனால் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. இனி கதை எழுதக்கூடாது என பரிசு அறிவித்தவுடன் முடிவு செய்துவிட்டேன்.. 

கொஞ்ச நாட்கள் எதுவும் எழுதவில்லை. தலைவரை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக் எனக்கு அறிமுகமானது. மீண்டும் எழுதும் ஆசை  வந்தது. தலைவரின் ஆத்மாவிடம் ஒரு apology கேட்டு விட்டு இதோ கடந்த 4 ஆண்டுகளாக எழுதி இப்போது ஒரு வழியாய் நூறு பதிவுகளையும் தாண்டி விட்டேன்.. நூறில் 20 கூட உருப்படியாய் தேராது என்றாலும், ஒரு சுஜாதா ரசிகனாக, அவரால் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டவனாக எனக்கு என்றுமே பெருமை தான்.. என் கதையின் ஒவ்வொரு எழுத்தும் நான் சுஜாதாவை காப்பி அடித்து எழுதுவது தான். ஆனால் என்ன, அவரை காப்பியடித்து கூட அவர் அளவிற்கு எழுத முடியவில்லை.. அது தான் அவருக்கும் பிறருக்கும் இருக்கும் வித்தியாசம். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, ஆனால் எழுதும் எல்லோரும் சுஜாதாவால் தான் எழுதுகிறார்கள் என்பதே அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பல புண்ணியங்களை கொடுக்கும் மிகப்பெரிய விசயம். அவரது இன்றைய பிறந்த நாளில் எனக்கும் அவருக்கும் இருந்த ரகசிய உறவை கசிய விட்டுவிட்டேன்.. மனதுக்குள் லேசான சோகம் இருந்தாலும், ஒரு திருப்தியும் சேர்ந்தே இருக்கிறது.. தலைவா யூ ஆர் கிரேட்...


என் தாத்தா சிவாஜி...

Sunday, September 30, 2012

”ஒரு ஜீப்ல ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் காட்டுக்கு வேட்டையாட போனாங்களாம்” - என்னை தூங்க வைக்க கதை சொல்ல ஆரம்பித்தார் எங்கள் அப்பா..
“ம்.. சரி” - இது நானு..
“ரெண்டு பேரும் ட்ரெஸ்ல பாம், கத்தி, துப்பாக்கி எல்லாம் மாட்டி வச்சிருந்தாங்க”
“யாருப்பா வண்டி ஓட்டுனாங்க?”
“நேத்து யாரு ஓட்டுனா?” - என்னை செக் பண்ண கேள்வி கேட்கிறார் என நினைப்பேன். பின்பு தான் புரிந்தது அவர் நேற்று சொன்னதை மறந்து கேட்கிறார் என்று..
“நேத்து ரஜினி மாமா ஓட்டுனாங்க”
“அப்படின்னா இன்னைக்கு சிவாஜி தாத்தா தான் வண்டி ஓட்டுறாங்க. காட்டுக்குள்ள வண்டி வேமா போகுது”
“வேமா போனா வண்டி வுழுந்துறாதாப்பா?”
“ரஜினி மாமா போற வண்டி விழுமா? எதுத்தாப்லா யாராவது வந்தா தான் பயந்து ஓடிருவாங்க”
“சரி பெறகு என்ன ஆச்சி?”
“.....”
“ப்பா... எப்பா...” - அப்பா கண் அயர்ந்திருப்பார்.. “எப்பா எந்திரிங்கப்பா.. அடுத்த என்னப்பா ஆச்சி?” - தட்டி எழுப்ப ஆரம்பித்துவிடுவேன் அவரை..
மெதுவாக கண் விழித்து, எனக்கு கதை சொல்வதை உணர்ந்து, “அப்போ எதுத்தாப்ல ஒரு யான வந்துச்சி”
“பெரிய யானையாப்பா?”
“ம் ஆமா பெரிய காது, நீளமா தந்தம் எல்லாம் இருக்கும்.. அப்படியே வேமா காருகிட்ட வருது”
“வந்து?”
”காருகிட்ட அப்டியே வந்து நிக்குது” - இதை சொல்வதற்குள் மீண்டும் ஒரு முறை கண் சொக்கி தூங்க ஆரம்பித்திருப்பார் என் அப்பா.. நான் வழக்கம் போல ‘எப்பா எப்பா’ என்று கத்திக்கொண்டிருப்பேன்..
”இப்ப கத்தாம தூங்க போறியா நாளைக்கு மிஸ்கிட்ட சொல்லவா?” - அம்மாவின் குரல் வரும் போது என் குரல் நின்றுபோகும்.
என் அப்பா கதையை முழுதாக சொல்லாமல் முடித்திருந்தாலும் எனக்கு என்ன நடக்கும் என தெரியும். அந்த யானையை ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் தூக்கி போட்டு பந்தாடியிருப்பார்கள். எத்தனை தடவை கேட்டிருப்பேன் இந்த கதையை? ஆனால் தினமும் புதிதாக கேட்பது போல் என் அப்பா அவ்வளவு அழகாக சொல்லுவார்.
 


நான் அப்போது பார்த்திருந்த ஒரே சிவாஜி படம் வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டும் தான். ஒரு சில ரஜினி படங்கள் பார்த்திருந்தேன். எங்கள் சொந்தக்காரர்கள் தான் வெளியூரில் தங்கி சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே பல காலம் நினைத்துக்கொண்டிருந்தேன். அடிக்கடி அப்பாவிடம் “எப்பா ரஜினி மாமா எப்ப நம்ம வீட்டுக்கு வருவாங்க?” என்று அம்மா இல்லாத சமயம் கேட்டதுண்டு. அம்மா இருக்கும் போது கேட்டால் எனக்கு நல்லா வசவு விழும் அதான். அப்பாவும் “அவங்க வேலயெல்லாம் முடிஞ்சதும் கண்டிப்பா வந்துருவாங்க” என்பார். நானும் நம்பிக்கொண்டிருப்பேன் என்றாவது ஒரு நாள் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை மடியில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருப்பார்கள் என்று.

என் அப்பா ஒரு தீவிரமான சிவாஜி ரசிகர். என் பெயர்க்காரணம் கூட அதனால் அமைந்தது தான். என் பெரியப்பாவும் என் அண்ணனுக்கு கணேசன் என்றும் அக்காவுக்கு சாந்தி என்றும் பெயரிட்டு அழகு பார்த்தார். நல்ல வேளை என் தம்பி பிரபு என்னும் பெயரில் இருந்து தப்பித்துவிட்டான்.

எனக்கு ரஜினி மாமா அளவுக்கு சிவாஜி தாத்தாவை பிடிக்காது. நான் பக்கத்து வீட்டு டிவியில் பார்த்த பல படங்களில் சிவாஜி தாத்தா கஷ்டப்படுவார், கடைசியில் இறந்து போய்விடுவார். “ச்சே என்ன இப்பிடி இருக்காரு நம்ம தாத்தா? மாமா மாதிரி ஜாலியாவே இருக்க மாட்றாரே?! நம்ம வீட்டுக்கு வரப்ப கேக்கணும்” என நினைத்துக்கொள்வேன்.


கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது.. சிவாஜி நமக்கு சொந்தக்காரராய் இருக்க முடியாது என்பது புரிந்தது. ஒரு பத்து வயது இருக்கும். அதே பக்கத்து வீட்டில் அதே டிவியில் ’தங்கப் பதக்கம்’ படம் பார்த்தேன். அப்போது தான் அவர் நடிப்பின் பிரமாண்டம் எனக்கு லேசாக புரிந்தும் புரியாதது போன்றும் இருந்தது.. சௌத்ரியினுடைய பேச்சும் கம்பீரமான நடையும் ஒரு வித பயத்தை கொடுத்தாலும், ஜெகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும் அதை அவர் வெளிக்காட்ட துடிக்கும் ஒவ்வொரு நொடியிலும் என் அப்பா தான் கண் முன் வந்தார். சிவாஜி மாதிரி சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போடுவதாலோ என்னவோ சிவாஜியை அதற்கு பின் எப்போது பார்த்தாலும் என் அப்பாவின் சாயல் அங்கு இருக்கும்..



ராஜபார்ட் ரங்கதுரை படம் பார்க்கும் போது அதில் எது நாடகம், எது படத்தில் நடப்பது என புரியாமலே படம் பார்த்துக்கொண்டிருந்தேன். சிவாஜி அந்த படத்திலும் செத்துப்போவது எனக்கு பிடிக்கவில்லையென்றாலும் அதில் வரும் அம்மம்மா தம்பி என்று நம்பி என்னும் பாடலை இப்போது கேட்டாலும் பார்த்தாலும் கண் கலங்கிவிடும். நம் கண் முன் நின்று தன் குடும்ப நிலையை எண்ணி அவர் வருந்தி பாடுவது போலவே இருக்கும்.



ஒரு நிமிடம் நீங்கள் கண்களை மூடிக்கொண்டு கட்டபொம்மன், வ.உ.சி., சிவபெருமான், ராஜ ராஜ சோழன், அப்பரென்று யாரை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. கண்டிப்பாக சிவாஜி எல்லார் போலவும் இருப்பார். நானெல்லாம் சின்ன வயசுல சாமி கும்பிடும் போது கண்ணை மூடியவுடன் சிவபெருமான் ரூபத்தில் சிவாஜி தான் மனதிற்குள் நிற்பார். சிவபெருமானுக்கே கூட டவுட் வந்திருக்கலாம், ‘யாருடா இவன் நம்மள விட நம்ம ரோல அலப்பறையா பண்ணுறான்!’னு..



’பர்ஸ்ட் ரஜினி, செகண்ட் சிவாஜி’ என்று பிடித்த நடிகர்களை வரிசை படுத்தி பேசும் போது சொல்வேன். ஆனாலும் ரஜினி மாமாவும் சிவாஜி தாத்தாவும் ஏன் ஒன்றாக நடிப்பதில்லை என்று ஒரு கேள்வியை எனக்குள் மட்டுமே கேட்டுக்கொள்வேன். ஒரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தோம், ‘படிக்காதவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ரஜினியும் சிவாஜியும் வெளுத்துவாங்கியிருப்பார்கள். ரஜினி நடித்த படங்களில் எப்போதும் என் ஆல் டைம் ஃபேவரைட்டில் “படிக்காதவன்”ம் ஒன்று. அந்தப்படம் பார்த்ததில் இருந்து ஃபர்ஸ்ட் செகண்ட் எல்லாம் கிடையாது. பிடித்த நடிகர்கள் என்றாலே ரஜினியும் சிவாஜியும் தான்.

வளர்ந்தவுடன் நண்பர்களிடம் ரஜினி ’மாமா’, சிவாஜி ’தாத்தா’ என்று உறவு முறை சொல்லி கூறுவதை நிறுத்தியிருந்தாலும் மனதிற்குள் அந்த உறவை இப்போது வரை வைத்துக்கொண்டுதானிருக்கிறேன். 'கௌரவம்' பாரிஸ்டர் ரஜினிகாந்தும், ’ஞானஒளி’ கோயில் மணியடிக்கும் அந்தோணியையும், ’பாரத விலாஸ்’ குடும்ப தலைவனையும், ’தில்லானா மோகனாம்பாள்’ சிக்கலையும், ’வசந்த மாளிகை’ சின்ன துரையையும், ’தெய்வ மகன்’ல் ”ஹொட்டேல் ஸ்டார்ட் பண்ணபோறேன் டேட்” என்று நெகத்தை கடித்துக்கொண்டே வரும் அந்த சுட்டி சிவாஜியையும், கர்ணனையும், ’முதல் மரியாதை’ மலைச்சாமியும், ’வியட்நாம் வீடு’ ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்று எத்தனையை சொல்ல? அவர் நடித்த எந்த படத்திலும் அவரது நடைப்பை குறை சொல்ல முடியாது..



‘ஓவர் ஆக்டிங்’ என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடகத்தில் நடித்தவர்கள் தான் அப்போது திரைத்துறைக்கு வர முடிந்தது. நாடகத்தில் க்ளோஸ்-அப் காட்சிகள், ஸ்லோ மோசன் காட்சிகள் எல்லாம் கிடையாது. அதிக உணர்ச்சியை காட்டி தான் நடிக்க வேண்டும். சினிமாவிலும் அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர் நடிகர்கள். சிவாஜியே ஒரு பேட்டியில் அவரது ‘ஓவர் ஆக்டிங்’ பற்றி கேட்கப்பட்ட போது, “சினிமாங்குறதே நிஜ வாழ்க்கைக்கும், நிஜத்துக்கும் மீறிய ஒரு விசயம் தானே? அப்போது அதில் இருக்கும் நடிப்பு எப்படி இயல்பாய் இருக்க முடியும்? இயல்பை மீறியது தானே நடிப்பு?” என்பது போல் பதில் சொல்லியிருப்பார். 



எனக்கு 6 வயதாக இருக்கும் போது, அப்பா ‘கர்ணன்’ படத்திற்கு கூட்டிச்சென்றார். வேலையெல்லாம் முடித்து வர லேட்டாகும் என்பதால் நைட் ஷோ தான் கூட்டி செல்வார். அம்மாவிடம் அடிவாங்கி கஷ்டப்பட்டு ஹோம்-வொர்க் செய்த பையனை, அதுவும் 6 வயசு பையனை நைட் ஷோவுக்கு ‘கர்ணன் படத்துக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போறது எவ்வளவு கொடுமைனு உங்களுக்கு தெரியாது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் நான் தூங்கிவிட்டேன். என் அப்பா என்னை அடித்தார், கிள்ளினார், என்னென்னமோ செய்து பார்த்தார். ம்ஹீம் நான் எழவே இல்லை. அவருக்கு ஒரே வருத்தம், நான் அந்த க்ளைமேக்ஸ் போர் காட்சியையாவது பார்த்திருக்க வேண்டும் என்று. எனக்கு என் அப்பா மேல் கோவம் வந்ததே தவிர சிவாஜி மீது அப்போது கோவம் வரவில்லை.15, 16 வயதில் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற திமிர் தலைக்கு ஏறும் அந்த காலத்தில் என் அப்பாவை பயங்கரமாக கிண்டலடிப்பேன், அவர் சிவாஜி ரசிகர் என்கிற ஒரே காரணத்துக்காக. “அவா வீட்டுக்குள்ள கால வச்சதும் இவரு கையி அப்டியே துடிக்குமாம்!! என்னமா ஏமாத்துறாய்ங்க? அவருக்கு நீங்க ஃபேன் வேற?” என்று முதல் மரியாதை க்ளைமேக்ஸில் இருந்து வசந்த மாளிகை, தங்க பதக்கம் என்று நான் கிண்டல் செய்த அனைத்து படங்களையும் இப்போது மீண்டும் தேடித்தேடி விரும்பி பார்க்கிறேன்.

ஏதோ ஒரு வெளிநாட்டு பல்கலையில்  நடிப்பு பற்றிய பட்டிய பாடப்பிரிவிற்குரிய டிக்ஸ்னரியில் சிவாஜியை பற்றி பெருமையாக “முகத்தில் கிட்டத்தட்ட 60 விதமான பாவங்களை காட்டும் திறமை பெற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என ஆனந்த விகடனில் வந்த ‘ஹாய் மதனி’ல் ஒரு முறை சிவாஜியை பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். கொஞ்சம் உங்கள் முகத்தை கண்ணாடி முன் கொண்டு சென்று வித விதமாகமுக பாவனையை  மாற்றி பாருங்கள். ஒவ்வொரு பாவனையின் போதும் உங்கள் முகம் இன்னும் இன்னும் கேவலமாக தெரியும். ஆனா அந்த மனுசன் செஞ்ச எல்லா நடிப்பும் நம்மை ஆச்சரியப்படவும் அழவும் மெய்மறக்கவும் வைத்தன.

சுஜாதா, சிவாஜி போன்ற கலைஞர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களின் மூச்சு கலந்திருந்த இந்த காற்றில் நமது மூச்சும் கலந்திருக்கிறது என்பதே நமக்கு மிகவும் பெருமையான விசயம் தான். இன்றைக்கு நாம் மிகப்பெரும் நடிகர்கள் என்று சொல்லும் எல்லோருமே சிவாஜி சாப்பிடும் போது சிதறிய பருக்கைகளை தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டு பெரிய நடிகர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள். நாளை அக்டோபர் ஒன்று, ’கலைத்தாயின் தவப்புதல்வன்’ சிவாஜியின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய இந்த பதிவு சிவாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும், என் அப்பாவிற்கும் சமர்ப்பணம்..

சிவகாசி - மீடியாவின் மேலோட்டங்கள் தாண்டிய உண்மைகள்..

Thursday, September 27, 2012

’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தை பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தை தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’ - கடந்த ஒரு மாதமாக நாளிதழ்களின் எதாவது ஒரு பக்கத்தில் இது போன்ற ஒரு செய்தி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.. சிவகாசி வெடி விபத்துக்கு பின் மீடியாவில் இருந்து ஃபேஸ்புக் குரூப் வரை அனைவரும் அவரவருக்கு தெரிந்த எங்கிருந்தோ அறிந்த பல விசயங்களை எழுதித்தள்ளுவது வாடிக்கையாகிவிட்டது. அதில் பலவும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டவையாகவும், உண்மையை எடுத்துரைப்பதாய் இல்லாமலும் இருப்பதால், சிவகாசிக்காரன் என்கிற உரிமையிலும், என் தகப்பனார் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாய் பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார் என்கிற தகுதியோடும் இங்கிருக்கும் உண்மையை சொல்கிறேன்.. 



இங்கு யாரும் வேண்டுமென்றே உயிர் போக வேண்டும் என்று வேலை செய்வதுமில்லை, ஃபயர் ஆபிஸ் கட்டி ஆட்களை வேலைக்கு அமர்த்துவதுமில்லை. சிவகாசி என்றால் அச்சு, தீப்பெட்டி, வெடி தொழில் தான் என்று எங்கள் தலையில் எழுதி வைத்து படைத்துவிட்டான் ஆண்டவன். இங்கிருக்கும் எல்லோர் வீட்டிலும் குறைந்தது ஒருவர் இது சம்பந்தப்பட்ட ஆலையில் வேலை செய்துகொண்டிருப்போம். ‘எத்தன நாள் தான்டா கூலிக்கு மாரடிக்குறது?’ என்று எண்ணும் சிலர் தாங்கள் பிறந்ததில் பார்த்து வளர்ந்த அந்த தொழிலில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

அச்சுத்தொழில் என்றால் மிசின் வாங்க வேண்டும், முடிந்தால் ரெஜிஸ்ட்ரேசன் செய்து டின் நம்பர் பெற வேண்டும் என்று மட்டும் தெரியும். தீப்பெட்டி, பட்டாசு ஆலை என்றால் லைசன்ஸ் வாங்கி இடம் கட்டினால் போதும் தொழிலை ஆரம்பித்து விடலாம் என்று நினைத்து ஆரம்பிப்பவர்கள் தான் அதிகம். அதிலும் பலர் ஏற்கனவே லைசன்ஸ் பெற்றிருக்கும் ஃபேக்டரியை லீசுக்கு எடுத்து தொழில் செய்வர் (இது சட்டப்படி தவறு). தொழிலை முறையாக கற்றுக்கொண்டோ, அல்லது தலைமுறை தலைமுறையாக தொழில் செய்வதற்கு இங்கு யாரும் அய்ய நாடார், சண்முக நாடார் பரம்பரை இல்லை. உங்கள் ஊரில் உங்களுக்கு எலெக்ட்ரிக் கடை, செல்ஃபோன் கடை, மளிகை கடை வைக்கும் ஆசை இருப்பது போல் எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு பட்டாசு ஆலை ஆரம்பிக்கும் ஆசை இருக்கும்.




இந்தியாவின் 75% அச்சு தேவைகளை பூர்த்தி செய்யும் சிவகாசியில் ஒரே ஒரு அச்சுத்துறை சம்பந்தப்பட்ட கல்லூரி தான் இருக்கிறது. 80% தீப்பெட்டி தேவையையும், 90% பட்டாசு தேவையையும் பூர்த்தி செய்யும் சிவகாசியில் அது சம்பந்தமான படிப்பையோ அறிவுரையோ வழங்கோ ஒரு கல்லூரியோ அரசு மையமோ கிடையாது என்பது வேதனையான விசயம். இவ்வளவு சிறு தொழில் மிக்க ஊரில், மக்களுக்கு விழிப்புணர்வும் சிறு தொழில் முனைவோர்க்கு அறிவுரையோ சொல்லும் அளவுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லையென்றால், தொழில் தொடங்க நினைப்பவன் நீங்கள் ஆரம்பிக்கும் வரை காத்திருப்பானா? அவனுக்கு அடுத்த வேளை சோறு வேண்டும். லைசன்ஸ் பெற்று (சாதா வெடிகள் செய்யும் கலெக்டர் லைசன்ஸ் மட்டுமே இங்கு நான் குறிப்பிடுவது, வானவெடிகளுக்கு நாக்பூரில் இருந்து லைசன்ஸ் பெற வேண்டும். இங்கு ஒரு சில ஃபேக்டரிகளில் மட்டுமே அந்த நாக்பூர் லைசன்ஸ் உள்ளது), ஏதோ ஒரு ஊர் பேர் தெரியாத காட்டில் இடம் வாங்கி கட்டிடம் கட்டிவிட்டு தொழிலை தொடங்கி விடுவான் அவன்.

தொழில் தொடங்க எந்த விதமான உதவியோ வழிகாட்டுதலோ கொடுக்காத நம் அரசு அவன் தொழிலை ஆரம்பித்தவுடன் மிக வேகமாக வந்துவிடும், அதிகாரிகளின் மூலம். வரும் அதிகாரியாவது சரியானவனாக இருப்பானா என்றால் கிடையாது. “நாளைக்கு உன் ஃபேக்டரிக்கு செக்கிங் வாரோம்” என்று முன்னக்கூடி சொல்லி வைத்துவிட்டு வரும் ‘நல்ல’அதிகாரிகள் அவர்கள். மறுநாள் அவர்கள் வரும் போது பெரும்பாலும் ஃபேக்டரிக்கு லீவு விடப்பட்டிருக்கும், இல்லையென்றால் மேம்போக்காக பார்த்துவிட்டு போய் விடுவார் நல்ல அதிகாரி. அவருக்கு செக்கிங் வந்த அன்றோ அல்லது மாதமொரு முறையோ கவனிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி ‘நல்ல’ அதிகாரியாய் இருப்பார்கள்.

இன்னும் சில ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்கள் இருக்கிறார்கள். முன்னறிவிப்பு இல்லாமல் ஃபேக்டரிக்கு வரும் அவர்களாவது சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என நீங்கள் நினைத்தால் உங்களை போல் பச்சை மண்ணும் யாருமே இருக்க முடியாது. வேகமாக ஃபேக்டரிக்குள் வரும் அவர்கள் வானவெடிகளுக்கான லைசன்ஸ் இருக்கிறதா என்று முதலில் பார்ப்பார்கள். பெரும்பாலும் அது இருக்காது. “அண்ணாச்சி என்ன நீங்க லைசன்ஸே இல்லாம ஃபேன்ஸி ஐட்டம் தயாரிக்குறீங்க?” என்பார் முகத்தை கொஞ்சம் முறைப்பாக வைத்துக்கொண்டு. அடுத்து  குடவுனில் பார்ப்பார். “அண்ணாச்சி உங்க குடவுன் அளவுக்கு இவ்ளோ ஸ்டாக் வைக்க கூடாதுல?” என்று நம்மிடம் அடுத்த கேள்வி கேட்பார். “யார கேட்டு இவ்ளோ பேர அளவுக்கு அதிகமா வேலைக்கு வச்சிங்க?”, “வெடியெல்லாம் ஏன் இப்படி பாதுகாப்பு இல்லாம வெளியில வச்சிருக்கிங்க?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே போவார். கடைசியில் “உங்க மேல கேஸ் போட்டு லைசன்ஸ் கேன்சல் ஆகுற அளவுக்கு மோசமா இருக்குண்ணாச்சி உங்க ஃபேக்டரி” என்று முடிப்பார். நம்ம ஆள் ’போச்சி அவ்வளவு தான் நம்ம லைசன்ஸ்’ என்கிற பயத்தோடு, “சார் சாரி இனிமேல் எல்லாம் சரி பண்ணிறேன் சார்” என்பார்.. நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசருக்கு சாரி சொன்னால் தான் பிடிக்காதே?!

”என்ன அண்ணாச்சி, இவ்ளோ பிரச்சனைய வச்சுக்கிட்டு அசால்ட்டா சாரினு சொல்றீங்க? இது எவ்வளவு மோசமான விசயம் தெரியுமா? கண்டிப்பா லைசன்ஸ் கேன்சல் ஆகிரும்” என்பார். இவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அதோடு கிளம்பியிருக்க வேண்டும். அந்த மோசமான ஃபேக்டரியின் லைசன்ஸை கேன்சல் செய்திருக்க வேண்டும். அப்படி ஓரிருவருக்கு கேன்சல் செய்திருந்தால் இந்நேரம் எல்லா முதலாளிகளும் ஒழுங்காக இருந்திருப்பார்கள். ஆனால் நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபிசர் அந்த நல்ல ஆபிசர் மாதிரி 2000, 5000ரூபாயோடு கிளம்புபவர் இல்லையே? ஸ்ட்ரிக்ட்டா டியூட்டி பாக்குறதுக்குன்னு ஒரு வேல்யூ இருக்கே? பல்க்கா முதலாளிகளிடம் கறந்து விட்டு, “சரி சரி நான் பாத்துக்குறேன், இனிமேல் இந்த மாதிரி செய்யாதீங்க, என்ன?” என்று வார்னிங் செய்வது போல் வருங்கால உயிர்பலிக்கு தேதி குறித்துக்கொடுப்பார்.. 




அடுத்த முக்கியமான விசயம் இங்கு வீடுகளிலேயே நடக்கும் பட்டாசு உறப்த்தி. ஆலைகளில் ஏற்படும் விபத்து அங்கிருப்பவர்களை மட்டும் கொல்லும். ஆனால் வீட்டில் பட்டாசு உற்பத்தியின் போது விபத்து ஏற்பட்டால், அந்த குடுயிருப்பு பகுதியே முழுவதுமாக அழிந்து போய்விடும். ஆனால் இதை பற்றி எந்த ஒரு அதிகாரியும் இது வரை வாய் திறந்ததாகவோ, ஃபைன் போட்டதாகவோ, அட்லீஸ்ட் லஞ்சம் வாங்கியதாகவோ கூட தகவல் இல்லை. ஏன்? ஏன்னா அந்த மாதிரி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் எல்லோரும் சேரிப்பகுதிகளில் ஒன்றாக வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் மீது எந்த அரசோ அரசு அதிகாரிகளோ நடவடிக்கை எடுத்ததே இல்லை. ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஓடி ஒளிந்து கொண்டு, அட்வான்ஸை திரும்ப கேட்டால், “என் முதலாளி என்னை ஜாதியை சொல்லி வைகிறான்” என்று புகார் செய்யும் இவர்கள் மேல் யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது.

கடந்த ஞாயிறன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பட்டாசு விபத்துக்கு இரங்கல் செய்வது போல் ஒரு கூட்டம் போட்டிருந்தார் சிவகாசியில்.  ஊரில் இருக்கும் பல முதலாளிகளிடம் அந்த கூட்டத்திற்காக பணமும் வசூலிக்கப்பட்டது. பணம் கொடுக்கும் போது பல சிறு முதலாளிகளும் கட்சியினரிடம் “உங்க தலைவர, கவர்மெண்ட் ஆபிஸர பத்தி பேச சொல்லுப்பா, அவங்க முறையா இருந்தா எல்லாம் சரியா நடக்கும்” என்று கூறியிருக்கின்றனர். கட்சியினரும் “என்ன மொதலாளி? அதுக்குத்தானே இந்த கூட்டமே? எங்க தலைவர பாருங்க, நாளைக்கு எப்படி பேசுறாருன்னு.. சும்மா எல்லாரையும் கிழிச்சு எடுத்துருவாரு”னு சொல்லிட்டு போனவங்க தான்.. ஞாயிறு மீட்டிங்கில் கிருஷ்ணசாமி பேசுகிறார், “பணவெறி பிடித்த முதலாளிகளால் தான் விபத்துகள் நடக்கின்றன” என்று. தன் மக்களுக்கு அவர் அறிவுரை சொல்லியிருக்கலாமே, “நீங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாமல் வெடி உற்பத்தி செய்வதை நிறுத்துங்கள்” என்று? சொன்னால் ஓட்டு கிடைக்காதே?!

நான் முதலில் சொன்னது போல் விபத்து நடக்கவேண்டுமென்று யாரும் தொழில் தொடங்குவதில்லை. ஆனால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் தொழில் பற்றிய பாதுகாப்பு முறைகளும் சொல்லிக்கொடுக்க அரசு ஒரு அடியும் எடுத்து வைக்காத போது, தொழில் தொடங்க வேண்டுமென நினைப்பவன் எங்கு டியூசன் போய் கற்றுக்கொள்வான் இதையெல்லாம்? கிருஷ்ணசாமி போன்று விளம்பரத்துக்கு ஊருக்கு வரும் அரசியல்வாதிகளாவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசுவார்கள் என்றால், அவர்களும் தொழிலாளி முதலாளி என்று சண்டை மூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

பத்திரிகைகளும் தங்கள் பங்குக்கு குழந்தை தொழிலாளர் குழந்தை தொழிலாளர் என்று கூவுகிறது. சிவகாசியிலும் மற்ற ஊர்களில் இருப்பதை போல டீக்கடையிலும், சிறு அச்சகங்களிலும், ஹோட்டல்களிலும் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். குழந்தை தொழிலாளர்கள் முறை எங்கிருந்தாலும் அதை போக்க வேண்டும். ஆனால் நான் அறிந்த வகையில் பட்டாசு ஆலைகளில் 95% குழந்தை தொழிலாளர்கள் கிடையாது.. அதற்கு காரணம் பட்டாசு ஆலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் தங்களுக்கு தான் பிரச்சனை என்று முதலாளிகள் உணர்ந்து கொண்டதால். இந்த மாதிரி மற்ற விசயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சென்ற வார விகடனில் காளீஸ்வரி ஃபயர் வொர்க்ஸ் குரூப் முதலாளி திரு.A.P.செல்வராஜ் அவர்கள் சொன்னது தான் நூற்றுக்கு நூறு உண்மை. நல்ல வசதியான மருத்துவமனைக்கு அரசின் நிதித்துறை அனுமதி மறுத்துள்ளது, தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் பட்டாசு தொழில் பற்றிய சட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்த சரியான Institute வேண்டும் போன்ற நல்ல தகவல்களை சொல்லியிருந்தார். மற்றபடி அந்த கட்டுரையில் அவர்கள் போட்ட படங்களும் குறிப்பிட்ட செய்திகளும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தன.. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அரசின் மீது யாரும் குற்றம் சொல்ல கூடாது என்பதற்காகவே எல்லோரும் முதலாளி என்றும், குழந்தை தொழிலாளர் என்றும் மேம்போக்காக பேசிக்கொண்டிருக்கின்றனர். 

எல்லா பிரச்சனைகளுக்கும் முதலாளிகளே காரணம் அல்ல. கவனக்குறைவான தொழிலாளர்களும் காரணம். அவர்களுக்கு தாங்கள் சார்ந்த வேலையில் சிறு தவறு கூட என்ன மாதிரி விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்க வேண்டும். மற்றபடி ஏற்படும் எல்லா விபத்துக்களுக்கும் அரசின் மெத்தனமும், எங்கள் மக்கள் மீது அக்கறை இல்லாததும் தான் காரணம். எங்கள் ஊர் விபத்தில்லாத அமைதியான, பட்டாசுத்தொழில் பாதுகாப்பான சந்தோசத்தை கொடுக்கும் தொழிலாக அமையும் - அரசும் அதிகார்களும் தங்கள் கடமையை சரியாக செய்தால். சிறந்த பட்டாசு துறை சம்பந்தப்பட்ட வல்லுனர்களை கொண்டு இங்கு முகாம் ஆரம்பிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி சம்பந்தப்பட்ட கல்வியும் வர வேண்டும். லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டும். ஜாதியை மீறிய கண்டிப்பு வேண்டும் கடமையில். தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் செய்யும் எல்லா தவறுகளையும் கண்டும் காணாமல் இருக்க கூடாது. ஃபேன்ஸி வெடிகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதை சில வருடங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். 





ஒரு சின்ன வேண்டுகோள். ஏதோ பெரிய புரட்சியாளன் போல் “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன்” என்கிற உறுதிமொழியெல்லாம் எடுக்க வேண்டாம். பட்டாசு விபத்தால் எங்கள் உயிர் ஒரு நொடியில் போகும் என்றால், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும். அவ்வளவு அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், மரங்களை அழிக்கும் பேப்பரையும், இயற்கையை பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களையும் நிறுத்துங்கள். எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லிக்கொடுத்தால், முறையான பயிற்சி கொடுத்தால், சட்டங்களை சரியாக அதிகாரிகள் பின்பற்றினால் வருடம் முழுதும் எங்கள் மனதில் சிரிப்பும், தீபாவளியன்று உங்கள் மனதில் சிரிப்பும் என்றும் இருக்கும்..

தான் உயிரை பணயம் வைத்து தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிந்து போவதை பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் எங்கள் ஃபயர்வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்..

தல நீங்க இப்போ விஜய்ய சப்போர்ட் பண்ணணுமா?

Thursday, February 3, 2011

"எங்களை யாராலும் இனி பிரிக்க முடியாது" - இந்த வார குமுதத்தில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்துவிட்டதாகவும், இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது போலும் இருந்தது. இதைப்படித்ததுமே அஜித் ரசிகனான எனக்கு அஜித் மீது வெறுப்பு தான் வந்தது, ''தல க்கு அறிவே வராதா?' என்று.

அஜித் ரசிகர்களில் பல பேர் என்னைப்போல விஜய் &அவரின் அலம்பல் பிடிக்காமல் 'இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி இல்லையா?' என்று நினைத்து அஜித் பின் சென்றவர்கள். ஒருவர் படத்தில் மட்டும் (வெட்டியாக) சீன் போடுவார், நேரில் ஊமை; இன்னொருவர் ஏனோ தானோவென்று இருக்கும் கதையிலும் உயிரைக்கொடுத்து நடித்துவிட்டு, நேரிலும் பேட்டியிலும் சீருவார். எனக்கு இரண்டாமவர் தான் பிடித்தது. அவரின் நேர்மை, மற்றும் முதலாமவரின் ஆட்டம் அதிகமானதால். சும்மா இருந்த அஜித்தை சீண்டியவர் இவர் தான். தன் படங்களில் தேவை இல்லாத வசனங்களை வைத்து அஜித்தை நேரடியாகவே தாக்கினார். அஜித்தும் அவ்வப்போது தன் படங்களில் பதிலடி கொடுத்தார். ஆனால் அவை எடுபடவில்லை. ஏனென்றால் விஜய்க்கு அப்போது இருந்த மீடியா சப்போர்ட் தலக்கு இல்லை.

இந்த நிலையில் இப்போது இருவரும் சேருவது தான் பிடிக்கவில்லை. விஜய், தன் படத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் தான் இப்போது இவர் கண்ணுக்கு அஜித் தெரிய ஆரம்பித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து போஸ் கொடுக்கிறார்கள், ஏதோ பால்ய சிநேகிதர்களைபோல சமீப காலமாக இவரது பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இத்தனை நாள் தல மீது இல்லாத பாசமும் நட்பும் இப்போது மட்டும் இந்த விஜய்க்கு ஏன் திடீர் என்று வர வேண்டும்? 

"ஏன்ப்பா இத்தனை நாட்கள் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் இப்போதாவது சேருகிறார்களே, இதில் ஏன் உனக்கு வயித்தெரிச்சல்?" என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு என் பதில், "நான் ஒரு அஜித் ஃபேன். எனக்கு என் தல தான் முக்கியம். சரியாக 8,9 வருடங்களுக்கு முன்பும் தல அஜித்துக்கு கிட்டத்தட்ட இப்போது விஜய் அனுபவிக்கும் இதே போன்றதொரு நிலைமை தான். அப்போது இந்த விஜய்க்கு சன் டிவி சப்போர்ட்டாக இருந்தது. அஜித் படமும் விஜய் படமும் ஒன்றாக வந்தால், இந்த சன் டிவி தனது டாப்10 மூவீஸில் விஜய் படதிற்கு தான் முதல் இடம் கொடுக்கும். வில்லன் பகவதி காலத்தில் இருந்து இப்போது வரை இந்த நிலை தான். மோசமான விஜய் படங்கள் எல்லாம், நன்றாக இருக்கும் அஜித் படங்களை விட சூப்பராக ஓடும். கிட்டத்தட்ட அஜித்தின் ஒவ்வொரு படமும் ஹிட் ஆவதே பெரிய விசயம். இந்த கால கட்டத்தில் தான் அவரும் சறுக்க ஆரம்பித்தார், ஜனா, ஆஞ்சநேயா, ஜி என்று. அவருக்கு தியேட்டரும் கிடைக்காது, மீடியா சப்போர்ட்டும் இருக்காது. 

அப்போதும் கூட தல எவன் காலிலும் விழவில்லை. அமைதியாகத்தான் இருந்தார். இந்த விஜய் அப்போது மிகவும் சந்தோசமாக எதைப்பற்றியும் கவலைப்படமால் இருந்தார். ஏனென்றால் அவர் படங்களுக்கு தான் தாருமாறாக சப்போர்ட் இருந்ததே?! ஏன், 'என் துறையில் இருக்கும் அஜித்திற்கு மீடியா சப்போர்ட் இல்லை' என்று அன்று இவர் அஜித்திற்கு ஒரு குரல் கொடுத்திருக்கலாமே?தனக்கு என்று வந்தால் தான் எல்லா வலியும் எப்படி என்று தெரியும்.

திருவாளர் விஜய் அவர்களே, உங்களுக்கு காலம் இருக்கும் போது, நீங்கள் 'எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன?' என்பது போல் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்களும் உங்கள் கெப்பாகுட்டி எவ்வளவு என்றே தெரியாமல் உங்கள் பின்னால் துதி பாடிகொண்டும், அஜித் ரசிகனை அசிங்கப்படுத்திக்கொண்டும், அஜித் போஸ்ட்டர்களை கிழித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவே உங்களுக்கு ஒன்று என்றால் என் தலயும் நாங்களும் இப்போது வர வேண்டுமா? இணைந்த கைகள் என்று நீங்கள் இப்போது காட்டிக்கொள்வீர்களா? ஒரே ஒரு படத்திற்கே நீங்கள் இவ்வளவு கொதித்தீர்கள் என்றால், கிட்டத்தட்ட 10வருடங்களாக இந்த நெருக்கடியை அனுபவிக்கும் அஜித்துக்கும், என்னைப்போன்ற ரசிகர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு உங்கள் ரசிகர்களைப்போல் எங்களையும் ஊறுகாயாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். உங்கள் துறையிலேயே இத்தனை நாட்களாய் உங்களால் கஷ்டப்பட்ட, கஷ்டப்படுத்தப்பட்ட் ஒருவரின் தயவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பெர்சனலாக பிரச்சனை வரும் போது தான் உங்களுக்கு மக்கள் கஷ்டப்படுவது, அரசியல்வாதிகளின் அராஜகம் எல்லாம் தெரியும். டெல்லியில் சாலையில் நடந்து கொண்டே ஒரு மத்திய மந்திரியிடம் பேட்டி எடுத்த போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு?

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தை வைத்து உங்கள் படத்தை வெளியிட விடவில்லை என்று சொன்ன நீங்கள் தான் சில வருடங்களுக்கு முன்பு, "லொள்ளு சபா' என்னும் அருமையான நிகழ்ச்சியை உங்கள் அரசியல் மற்றும் ஆட்சி அதிகார பலத்துடன் மன்னிப்புகேட்க வைத்து நிறுத்தினீர்கள். உங்களுக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயமா?

எப்போதும் அடுத்தவன் சப்போர்டிலேயே முன்னேறிய உங்களுக்கு இப்போது தான் முதல் பிரச்சனையே வந்திருக்கிறது. அதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இதைகூட சொந்தமாக தீர்க்க முடியாமல் பிறரின் தயவை எதிர் பார்க்கும் நீங்களா அரசியலுக்கு வந்து இந்த மக்களுக்கு தைரியமாக சொந்த முயற்சியில் நல்லது செய்யப்போகிறீர்கள்? இந்த நிலையில் உங்களுக்கு இப்போது அஜித் உதவி செய்தால் அவரை விட முட்டாள் யாரும் கிடையாது. ஆனால் அவர் நல்லவர், எவனையும் கழுத்தறுக்கமாட்டார். உங்களுக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தால், நீங்களே அஜித்திடமும் பிறரிடமும் கை ஏந்தாமல் சொந்த முயற்சியில் இறங்குங்கள். முதலில் தினமும் ஏதாவது நாளிதழுக்கோ, பத்திரிகைக்கோ ஒப்பாரி வைத்து பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள்.

பி.கு: இன்றைய ஆனந்த விகடனில், விஜய் தன்னை, விஜயகாந்த், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், மற்றும் உச்ச கட்டமாக காந்திஜி போன்றோர்களோடு ஒப்பிட்டு மிகவும் கொந்தளித்து பேசியுல்லது கெட்ட காமடி.. மேடைல 10நிமிசம் தடுமாறாம பேசவே முடியாத உங்களுக்கெல்லாம் எதுக்குங்க அரசியல் ஆச? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ், என்னத்தையோ பண்ணுங்க போங்க...

எந்திரன் ஆடியோ வெளியீடு விளம்பரமும் ஆனந்த விகடனின் இலவச இணைப்பும்...

Thursday, July 29, 2010


இன்று என்னை இரண்டு புதுமையான விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன.. ஒன்று இன்றைய நாளிதழ்களில் வந்த எந்திரன் பட விளம்பரமும், ஆனந்த விகடனில் வந்த இலவச இணைப்பும்..
முதலில் தலைவரைப்பற்றி பார்ப்போம்..

வழக்கமாக ஒரு படத்தின் விளம்பரத்தில் அந்த படத்தின் சில புகைப்படங்களோ படத்தின் கலைஞர்களின் புகைப்படமோ இருக்கும்.. மேலும் அந்த படத்தின் பெயரும், இயக்குனர், மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் பெயரும் இடம் பெரும்.. விஜய்க்காக படம் பார்க்காவிட்டாலும் தமன்னா அனுஷ்கா அல்லது வடிவேலு போன்றோர்களுக்காகவாவது படம் பார்க்க செல்வோம்.. அதனால் இப்படி பலரின் பெயரும் படமும் விளம்பரத்தில் இருக்கும்.

அதுவும் பாடல் வெளியீட்டு விளம்பரம் என்றால் பாடலாசிரியரின் பெயர், இசை அமைப்பாளர் பெயராவது இடம் பெரும். இன்றைய எந்திரன் விளம்பரத்தில் ஒன்றும் கிடையாது. ஏ.ஆர்.ரகுமான் பெயர் கூட இல்லை. படத்தின் பெயரும் இல்லை.. தலைவரின் முகம் மட்டும் தான். மேலும் "இசை வெளியீடு 31.07.2010" என்ற வாசகம் மட்டும். வேறு ஒன்றும் கிடையாது. இதில் இருந்து அவர்கள் சொல்லவருவது, தலைவர் இருக்கிறார், இது தலைவரின் படம் என்ற ஒன்று மட்டுமே. வேறு எதுவும் தேவை இல்லை; அது ஷங்கராக இருந்தாலும் சரி, ரகுமானாக இருந்தாலும் சரி. அவர்களின் இந்த விளம்பர அணுகுமுறை முறை என்னை மிகவும் கவர்ந்தது. தலைவருக்கு இருக்கும் மாஸ் இன்னும் பிரம்மாண்டமாய் தெரிகிறது...

அடுத்த விஷயத்திற்கு வருவோம்.. வழக்கமாக ஆனந்த விகடனில் இலவச இணைப்பு என்று சோப்போ, ஷாம்புவோ, டீ தூள் பாக்கட்டோ கொடுப்பார்கள். பெரும்பாலும் நான் உபயோகப்படுத்தும் சோப்போ, ஷாம்புவோ வராது, டீ தூளை மட்டும் பயன் படுத்துவேன்.. சோப்பை பக்கத்து வீட்டில் கொடுத்து விடுவேன். அவர்கள் கொடுத்த ஏர்செல் சிம் கார்டை கூட தேவை இல்லை என்று கீழே போட்டுவிட்டேன். இன்று அவர்கள் கொடுத்த இலவச இணைப்பை பார்த்தவுடன் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனந்த விகடனை குடும்பஸ்தர்கள் மட்டும் தான் படிப்பார்களா? மணமாகாத ஆண்கள் எல்லாம் ஆனந்த விகடனே படிக்க மாட்டார்களா? அவர்கள் தந்த இலவச இணைப்பை என்ன செய்வது? என்னை போன்ற ஒரு பாச்சுலர் இதை பக்கத்து வீட்டில் கொடுத்தாலும் செருப்படி தான் விழும். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், இப்படி எல்லாம் இலவசமாக அவர்கள் செய்தால் தான் மக்களிடமும் ஒரு விழிப்புணர்வு வரும் என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படி அவர்கள் என்ன தான் கொடுத்தார்கள் என்கிறீர்களா? சானிட்டரி நாப்கின்.. நல்ல விளம்பர உக்தி தான்.. இதனால் சிலரிடம் விழிப்புணர்வும் வரும்.. ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு காண்டம்களையும் இலவசமாக கொடுக்காமல் இருப்பார்கள் என்று நம்புவோம்..

ஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...

Sunday, May 9, 2010



வழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. "விஜய்க்கு ஒரு பகிரங்க கடிதம்" என்று போட்டிருந்தது. படித்தவுடன் எனக்கு பயமாகி விட்டது. மனசுக்குள் ஒரு சின்ன டவுட், 'ஆனந்த விகடன்ல விஜய்யை பற்றி தப்பா எழுத மாட்டங்களே' என்று. இருந்தாலும் சுறா பார்த்த வெறியில் இருந்ததால் அவரை பற்றி யாராவது ஒரு வார்த்தை தப்பாக பேசினால் கூட எனக்கு சந்தோஷம் வருகிறது, கடந்த பத்து நாட்களாக. சுறா பார்த்து விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயத்தின் கொடுமையால் இந்த கடிதத்தை வரைந்திருப்பார்கள் என்று நினைத்து வியாழக்கிழமையே வாங்கினேன்.

வேக வேகமாக வீட்டுக்கு வந்து அந்த கட்டுரையை படித்தால், துத்தேறி, ஒன்றுமே இல்லை (பதிநஞ்சு ரூவா பாலா போச்சே!). தளபதி நீங்க அப்படி, உங்க நடிப்பு அப்படி, டான்ஸ் ல மைகேல் ஜாக்சனுக்கு அப்பறம் நீங்க தான், நீங்க தான் மாஸ் ஓபனிங் ஹீரோ (யாரை வெறுப்பேற்ற இந்த வாசகம்?), பலதரப்பட்ட கதைகளில் நடித்தவர்!!!!!!!!!!!!, என்று பலவாறாக புகழ்ந்து கடைசியில், 'நீங்க கொஞ்சூண்டு மாறணும், மத்தபடி எல்லாம் ஓகே' என்று எழுதி இருந்தார்கள். இதற்கு பேர் பகிரங்க கடிதமாம். அந்த கட்டுரையில் இருந்த மிக காமடியான விஷயம் என்னவென்றால், 'பலர் நினைப்பது போல நீங்கள் உங்கள் அப்பாவினால் முன்னேறவில்லை, சொந்த முயற்சியே அதற்கு காரணம்' என்பது தான். ஒரு விஜய் வெறியனே கூட இதை ஒத்துக்கொள்ள மாட்டான்.

அந்த கட்டுரையில் அவர் எதனால் இப்படி நடிக்கிறார், ஏன் மற்ற மொழி படங்களை காப்பி அடிக்கிறார், லூசுத்தனமாக ஏன் வசனம் பேசுகிறார், இந்த கட்டுரை இப்போது எழுத என்ன காரணம் என்று எதுவுமே சொல்லவில்லை; ஏதோ மேம்போக்காக 'இதை நான் வழிமொழிகிறேன்' என்கிற பாணியில் இருந்தது அந்த கட்டுரை.

இப்போது என்றில்லை, இவர்கள் எப்போதுமே விஜய் என்றால் அவருக்குரிய "zone of tolerance" அளவை கொஞ்சம் அதிகமாகத்தான் வைத்திருக்கிறார்கள். அவர் நடித்த சிறந்த படங்களுள்(!!!) ஒன்றான சிவகாசிக்கு அவர்கள் 41 மார்க் போட்டபோதே எனக்கு இவர்களின் விமர்சனம் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஒரு காலத்தில் ஆனந்த விகடன் விமர்சனத்தில் 40 மார்க் எடுப்பதே கஷ்டம், அப்படி 40 மார்க் மேல் எடுத்தால் அது ஒரு சிறந்த படமாக இருக்கும். இன்று அப்படியா? அதே போல் எவ்வளவு மோசமான படம் என்றாலும் இவர்கள் விஜய்யை மட்டும் குறை சொல்லவே மாட்டார்கள்.

இந்த வார சுறா விமர்சனத்தில் கூட அவன் மேல தப்பு இவன் மேல தப்பு இயக்குனர் சரியாக எடுக்கவில்லை, என்று எல்லாரையும் குற்றம் சொன்ன இவர்களால் 'விஜய் அறிவுக்கு இப்படிப்பட்ட கதைகளே நல்ல கதையாக தெரியுமா?' என்று கேட்க முடியவில்லை. இதே அஜித் படமாகவோ, ரஜினி படமாகவோ இருந்து விட்டால் அவ்வளவு தான். அதிலும் இவர்கள் ரஜினிக்கு வைத்திருக்கும் கான்ஸ்டன்ட் மார்க் 39. இதை தவிர இவர்கள் வேறு மார்க் போடவே மாட்டார்கள்.

விஜய் அப்படி என்ன செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அவர் ஒன்றும் நல்ல படங்களும் நடித்து தள்ளவில்லை. அவர் நடித்த நல்ல படங்களை எண்ண, ஒரு கை இல்லாதவனால் கூட முடியும். காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக, லவ் டுடே, குஷி, கில்லி. இவ்வளவு தான். 'அதனால என்ன? எங்க தளபதி தான் நல்லா டான்ஸ் ஆடுராருல்ல?' என்கிறார்கள். நல்ல டான்ஸ் ஆடுனா டான்ஸ் மாஸ்டரா போக வேண்டியது தான? ஏன் இப்படி நடித்து, துதிபாடிகளாக பிற நடிகர்களையும் நடிக்க வைத்து எங்களை சாகடிக்க வேண்டும்?

'எனக்கு சவாலான வேடங்களில் நடிக்க ஆசை தான், ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு தயாரில்லை' என்று சில நாட்களுக்கு முன் நம் இளைய தளபதி தான் சொன்னார். உங்கள் மேல் நம்பிக்கை இல்லை அவர்களுக்கு நீங்கள் நன்றாக நடிப்பீர்கள் என்று, அதனால் தான் தயாரில்லை. இவர் தன் நடிப்பு திறமையை எந்த படத்தில் வெளிப்படுத்திஉள்ளார்? குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மேனரிசம், கில்லியில் தரணியின் முழி, போக்கிரி தொடங்கி இன்று வரை மகேஷ் பாபு மற்றும் பிரபு தேவாவின் மேனரிசங்கள் - இவை தான் இவரின் நடிப்புலக பரிமாணங்கள்.

ஆனந்த விகடனும் நடுநிலை தவறிய பத்திரிகை ஆகிவிட்டது. அரசுக்கு சிங்கி அடிப்பதில் ஆரம்பித்து இப்போது இந்த 'பகிரங்க' கடிதம் வரை.

பின் குறிப்பு:

இந்த வார ஆனந்த விகடனில் என்னை தூக்கிவாரிப்போட்ட விஷயம் என்னவென்றால், மௌன ராகம் படத்தின் விமர்சனம். 43 மார்க் போட்டிருந்தார்கள். அதே விமர்சன குழு தான் இப்போதும் உள்ளதா, இல்லை விஜய் படத்திற்கு என்று தனி விமர்சனகுழுவா?




 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One