சசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க?

Thursday, May 27, 2010


கல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் வைத்து பாட்டு போடுவதோடு நின்று விடும். சில வருடங்களாக ப்ளெக்ஸ் போர்டு கலாச்சாரம் அதிகரித்துள்ளது.

அதிலும் இவர்கள் ப்ளெக்ஸ் போர்டில் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. அரசியல் கட் அவுட்டுகளை விட இவை மிகவும் அசிங்கமாக உள்ளன. ரஜினி, கமல், விஜய், அஜித் என்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை அதில் அச்சடித்து வாழ்த்து சொல்வார்கள். இப்போது ஒரு சில நடிகர்களின் படத்தை போட்டு தங்கள் ஜாதியின் பெயரை கீழே "இவண்" என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

எங்கள் ஊர் பக்கம் சரத்குமாரும் காமராஜரும் இணைந்தே போஸ் கொடுப்பார்கள். அதே போல கார்த்திக் முத்துராமலிங்க தேவர், அல்லது அஜித் முத்துராமலிங்க தேவர் காம்பினேசன் இருக்கும். அஜித் எந்த விதத்தில் தேவர் சமூகத்திற்கு சொந்தம் என்று இப்போது வரை எனக்கு தெரியவில்லை. கொங்கு நாடு பக்கம் சூர்யா, சத்யராஜை எல்லாம் யூஸ் பண்ணுவாங்களோ? விக்ரமும் பிரசாந்தும் (சில சமயம் விஜய்யும்) பட்டியலிடப்பட்ட மக்களின் விசேசங்களில் சிரிக்கிறார்கள். இப்போது இந்த லிஸ்டில் நம்ம சசிக்குமாரையும் சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன் சசிக்குமாரின் படம் அச்சடித்திருந்த ஒரு ப்ளெக்ஸ் போர்டில் "அழகு முத்து கோன் படை" என்று இருந்தது.

'எப்படிய்யா கண்டு புடிக்குறீங்க?' என்று தான் முதலில் யோசிக்க தோன்றுகிறது.
ஒரு நடிகன் இன்ன ஜாதி தான் என்று எப்படி மக்கள் கண்டுபிடிக்கிறார்கள்? நான் பி.எஸ்ஸி., படித்த கல்லூரி கிராமப்புறம் இருந்தது. சுற்று வட்டார கிராம தேவரின மாணவர்களும் டவுன் நாடார் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். ஒருவன் இயக்குனர் கெளதம் மேனனை நாடார் என்றே நினைத்துக்கொண்டிருந்தான் (வேட்டையாடு விளையாடு படத்துல திருநெல்வேலி காட்டிருக்காரு, சரத் குமார வச்சு படம் எடுத்துருக்காருல?). மேனன் என்பது ஒரு சாதிப்பெயர் என்பது கூட தெரியாமல் அவன் ஜாதி மட்டுமே உலகில் இருப்பதாக நினைத்துக்கொண்டான். ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கும் போது நான் ஒரு அஜித் ரசிகன் என்றேன். "அப்போ நீங்க நம்மாளா பாஸு?" என்று சொந்தமாக்கிக்கொள்ளும் உணர்வுடன் ஒருவன் கேட்டான். ஒரு நடிகனின் ரசிகனாக இருப்பதில் எவ்வளவு criteria உள்ளது என்று நான் அப்போது தான் உணர்ந்தேன். நல்ல வேலை எனக்கு பிரசாந்த் பிடிக்கும் என்று சொல்லவில்லை; சொல்லியிருந்தால் எனக்கு தாகத்திற்கு தண்ணீர் கூட குடுத்திருக்க மாட்டார்கள். கல்லூரியிலேயே எவ்வளவு ஜாதி வெறி பாருங்கள்? கிராமம் என்று இல்லை, பல நகரங்களிலும் இதே நிலை தான். நான் மதுரையில் MBA படித்த போது ஒருவன் சொன்னான், "காந்திஜி எங்க வாணியர் ஜாதிக்காரர்டா" என்று. 'அடப்பாவிகளா!!!!!!!!' என்று நினைத்துக்கொண்டேன். இந்த லாஜிக்கில் தான் பட்டியலிடப்பட்டோர் அம்பேத்கரை தங்கள் ஒவ்வொரு ஜாதியிலும் இணைத்துக்கொண்டார்களோ?

மிகவும் அவமானமும் அதிர்ச்சியாகவும் உள்ளது இந்த நிலையை பார்க்கும் போது. மற்ற பெரும்பான்மை ஜாதியினர் தங்களுக்கு என்று ஒரு நடிகரை அடையாளப்படுத்தும் போது அந்த பகுதியில் குறைவாக உள்ள மற்ற ஜாதியினர், தங்கள் இனத்திலும் யாராவது நடிகன் இருக்கிறானா என்று தேடிப்பிடித்து இது போன்று செய்கிறார்கள். அப்படி செய்தது தான் சசிக்குமாரின் படம். சில நாட்கள் முன்பு ஆசாரி இன மக்களின் போஸ்டரில் எம்.கே.தியாகராஜ பாகவதர் இருந்தார். பிள்ளை சமூக பேனரில் வடிவேலு இருக்கிறார். நம்ம எஸ்.ஜெ.சூர்யா தேவர் மக்களின் வால் போஸ்டர்களை அலங்கரிக்கிறார். விவேக்கை பற்றி நமக்கு தெரியும்.

பல நடிகர்களுக்கும் இது தெரிந்தாலும் அவர்கள் தடை போடுவதில்லை (வரும் காலத்தில் உதவுமே!!!). ஆனால் என் மனதை உறுத்துவது இந்த நடிகர் படங்களோடு இருக்கும் தேசத்தலைவர்களின் படங்கள் தான். காமராஜர் தன் நாடார் இனத்தவன் என்று யாரையும் மதித்து உதவி செய்ததில்லை (தோற்கடிக்கப்பட்டதே அதனால் தானே), முத்துராமலிங்க தேவர் தன் இனம் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களுக்கும் வாரி வாரி கொடுத்தவர், வ.உ.சி. பிள்ளை இன மக்களுக்காக மட்டும் செக்கிழுக்கவில்லையே? ஆனால் இவர்களை எல்லாம் நடிகர்களோடு சேர்த்து ஒரு ஜாதிக்குள் அடக்கி விடுகிறோமே?

இந்த நடிகர்கள் தங்கள் ஜாதிக்காக இதுவரை என்ன செய்துள்ளார்கள்?

சரத்குமார், காமராஜருக்கு விருதுநகர் அருகே மணி மண்டபம் கட்டுவதாக சொல்லி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒரு ம**ரையும் அவர் புடுங்க வில்லை.

எங்கள் ஊர் கிராம பகுதி தேவர் மாணவன் ஒவ்வொருவனும் அவன் பள்ளி ஆண்டுவிழாவிலோ, ஊர் அல்லது வீட்டு விழாவிலோ "ஐசாலக்கடி மெட்டு தானுங்கோ" பாடலுக்கு கண்டிப்பாக நடனம் ஆடியிருப்பான். அந்த அளவிற்கு அவர் மேல் பைத்தியம் உள்ளவர்கள். இப்போதும் லோக்கல் கேபிள் டிவியில் இவர் பாடல்களே அதிகம் விரும்பப்படும் பாடல்கள். ஆனால் இப்படிப்பட்ட தன் ஜாதிக்காரர்களை காமெடி பீஸ் ஆக்கிய பெருமை கட்சி ஆரம்பித்ததோடு தூங்கப்போய்விட்ட கார்திக்கையே சாரும்.

ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் ஜாதி மக்களை படம் ஓடுவதற்கும் அரசியலுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொண்டார்கள். அந்த இனத்திற்கு அவர்கள் துளி கூட அப்பட்ட இருந்ததில்லை. இப்படி இருக்கும் போது எந்த நம்பிக்கையில் தங்கள் ஜாதியை சேர்ந்த நடிகர்களை மக்கள் கண்டுபிடித்து தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் இவர்களின் படங்களை பயன்படுத்துகிறார்கள்?

நடிகர்கள் பொதுவானவர்கள். அவர்கள் ஜாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என்று நினைத்து அவர்கள் படம் நடிப்பதில்லை. அப்படி எடுத்தால் ஒரு நடிகனின் படம் கூட ஓடாது. இப்படி ஜாதி ரீதியாக ஒரு நடிகன் பிரித்துப்பார்கப்பட்டால் அது அவரின் மேல் மற்ற போட்டி ஜாதி ரசிகர்களின் வெறுப்பை உண்டாக்கிவிடும். இன்றைய இளம் நடிகர்கள் இதை உணர்ந்து ஜாதி ரீதியாக தங்களுக்கு உள்ள ரசிகர் மன்றங்களையும், தன சொந்த ஜாதி ஆதரவாளராக தங்களை காட்டிக்கொள்வதையும் நிறுத்திக்கொண்டால் அவர்களின் நிம்மதிக்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லாவிட்டால் சரத்குமாரை போலவும், கார்த்திக்கை போலவும் அவர்களும் வருங்காலத்தில் "உங்க ஜட்ஜுமேண்டு ரொம்ப வீக்கு" என்று தங்கள் சொந்த ஜாதிக்காரர்களாயே தூக்கி எறியப்படுவார்கள். சசிக்குமாரும் இதை உணர்ந்து நடந்துகொள்வார் என்று எதிர் பார்ப்போம்.

ஆனந்த விகடனுக்கு பிடித்த இளைய தளபதி...

Sunday, May 9, 2010



வழக்கமாக வெள்ளிகிழமை மாலை ஆனந்த விகடன் வாங்கும் எனக்கு இந்த வாரம், டீக்கடை சுவரில் தொங்கும் அதன் விளம்பரம் கண்ணில் பட்டது. "விஜய்க்கு ஒரு பகிரங்க கடிதம்" என்று போட்டிருந்தது. படித்தவுடன் எனக்கு பயமாகி விட்டது. மனசுக்குள் ஒரு சின்ன டவுட், 'ஆனந்த விகடன்ல விஜய்யை பற்றி தப்பா எழுத மாட்டங்களே' என்று. இருந்தாலும் சுறா பார்த்த வெறியில் இருந்ததால் அவரை பற்றி யாராவது ஒரு வார்த்தை தப்பாக பேசினால் கூட எனக்கு சந்தோஷம் வருகிறது, கடந்த பத்து நாட்களாக. சுறா பார்த்து விமர்சனம் எழுத வேண்டிய கட்டாயத்தின் கொடுமையால் இந்த கடிதத்தை வரைந்திருப்பார்கள் என்று நினைத்து வியாழக்கிழமையே வாங்கினேன்.

வேக வேகமாக வீட்டுக்கு வந்து அந்த கட்டுரையை படித்தால், துத்தேறி, ஒன்றுமே இல்லை (பதிநஞ்சு ரூவா பாலா போச்சே!). தளபதி நீங்க அப்படி, உங்க நடிப்பு அப்படி, டான்ஸ் ல மைகேல் ஜாக்சனுக்கு அப்பறம் நீங்க தான், நீங்க தான் மாஸ் ஓபனிங் ஹீரோ (யாரை வெறுப்பேற்ற இந்த வாசகம்?), பலதரப்பட்ட கதைகளில் நடித்தவர்!!!!!!!!!!!!, என்று பலவாறாக புகழ்ந்து கடைசியில், 'நீங்க கொஞ்சூண்டு மாறணும், மத்தபடி எல்லாம் ஓகே' என்று எழுதி இருந்தார்கள். இதற்கு பேர் பகிரங்க கடிதமாம். அந்த கட்டுரையில் இருந்த மிக காமடியான விஷயம் என்னவென்றால், 'பலர் நினைப்பது போல நீங்கள் உங்கள் அப்பாவினால் முன்னேறவில்லை, சொந்த முயற்சியே அதற்கு காரணம்' என்பது தான். ஒரு விஜய் வெறியனே கூட இதை ஒத்துக்கொள்ள மாட்டான்.

அந்த கட்டுரையில் அவர் எதனால் இப்படி நடிக்கிறார், ஏன் மற்ற மொழி படங்களை காப்பி அடிக்கிறார், லூசுத்தனமாக ஏன் வசனம் பேசுகிறார், இந்த கட்டுரை இப்போது எழுத என்ன காரணம் என்று எதுவுமே சொல்லவில்லை; ஏதோ மேம்போக்காக 'இதை நான் வழிமொழிகிறேன்' என்கிற பாணியில் இருந்தது அந்த கட்டுரை.

இப்போது என்றில்லை, இவர்கள் எப்போதுமே விஜய் என்றால் அவருக்குரிய "zone of tolerance" அளவை கொஞ்சம் அதிகமாகத்தான் வைத்திருக்கிறார்கள். அவர் நடித்த சிறந்த படங்களுள்(!!!) ஒன்றான சிவகாசிக்கு அவர்கள் 41 மார்க் போட்டபோதே எனக்கு இவர்களின் விமர்சனம் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஒரு காலத்தில் ஆனந்த விகடன் விமர்சனத்தில் 40 மார்க் எடுப்பதே கஷ்டம், அப்படி 40 மார்க் மேல் எடுத்தால் அது ஒரு சிறந்த படமாக இருக்கும். இன்று அப்படியா? அதே போல் எவ்வளவு மோசமான படம் என்றாலும் இவர்கள் விஜய்யை மட்டும் குறை சொல்லவே மாட்டார்கள்.

இந்த வார சுறா விமர்சனத்தில் கூட அவன் மேல தப்பு இவன் மேல தப்பு இயக்குனர் சரியாக எடுக்கவில்லை, என்று எல்லாரையும் குற்றம் சொன்ன இவர்களால் 'விஜய் அறிவுக்கு இப்படிப்பட்ட கதைகளே நல்ல கதையாக தெரியுமா?' என்று கேட்க முடியவில்லை. இதே அஜித் படமாகவோ, ரஜினி படமாகவோ இருந்து விட்டால் அவ்வளவு தான். அதிலும் இவர்கள் ரஜினிக்கு வைத்திருக்கும் கான்ஸ்டன்ட் மார்க் 39. இதை தவிர இவர்கள் வேறு மார்க் போடவே மாட்டார்கள்.

விஜய் அப்படி என்ன செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அவர் ஒன்றும் நல்ல படங்களும் நடித்து தள்ளவில்லை. அவர் நடித்த நல்ல படங்களை எண்ண, ஒரு கை இல்லாதவனால் கூட முடியும். காதலுக்கு மரியாதையை, பூவே உனக்காக, லவ் டுடே, குஷி, கில்லி. இவ்வளவு தான். 'அதனால என்ன? எங்க தளபதி தான் நல்லா டான்ஸ் ஆடுராருல்ல?' என்கிறார்கள். நல்ல டான்ஸ் ஆடுனா டான்ஸ் மாஸ்டரா போக வேண்டியது தான? ஏன் இப்படி நடித்து, துதிபாடிகளாக பிற நடிகர்களையும் நடிக்க வைத்து எங்களை சாகடிக்க வேண்டும்?

'எனக்கு சவாலான வேடங்களில் நடிக்க ஆசை தான், ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு தயாரில்லை' என்று சில நாட்களுக்கு முன் நம் இளைய தளபதி தான் சொன்னார். உங்கள் மேல் நம்பிக்கை இல்லை அவர்களுக்கு நீங்கள் நன்றாக நடிப்பீர்கள் என்று, அதனால் தான் தயாரில்லை. இவர் தன் நடிப்பு திறமையை எந்த படத்தில் வெளிப்படுத்திஉள்ளார்? குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மேனரிசம், கில்லியில் தரணியின் முழி, போக்கிரி தொடங்கி இன்று வரை மகேஷ் பாபு மற்றும் பிரபு தேவாவின் மேனரிசங்கள் - இவை தான் இவரின் நடிப்புலக பரிமாணங்கள்.

ஆனந்த விகடனும் நடுநிலை தவறிய பத்திரிகை ஆகிவிட்டது. அரசுக்கு சிங்கி அடிப்பதில் ஆரம்பித்து இப்போது இந்த 'பகிரங்க' கடிதம் வரை.

பின் குறிப்பு:

இந்த வார ஆனந்த விகடனில் என்னை தூக்கிவாரிப்போட்ட விஷயம் என்னவென்றால், மௌன ராகம் படத்தின் விமர்சனம். 43 மார்க் போட்டிருந்தார்கள். அதே விமர்சன குழு தான் இப்போதும் உள்ளதா, இல்லை விஜய் படத்திற்கு என்று தனி விமர்சனகுழுவா?




 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One