கமலை விடப் பெரிய வேஷதாரியா போஸ்?!?!

Friday, May 12, 2023

சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து இன்னொரு போஸ் இருந்தார், உங்களுக்குத் தெரியுமா? என்னது, தென்னகத்து போஸ் ஐயா முத்துராமலிங்கத் தேவரா? உஷ்ஷ்ஷ். சரி, அவரையும் தவிர இன்னொரு போஸ் இருந்தார்.. அவர் தான் ராஷ் பெஹாரி போஸ். இவரால் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் INAவிற்கு தலைமை ஏற்றார் என்றால் நம்ப முடிகிறதா?போஸ் என்னும் பெயர் ராசிப்படி இவரும் வங்காளத்தைச் சார்ந்தவர் தான். சுதந்திரத்திற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர் தான். அதன் ஒரு பங்காக இந்திய வைஸ்ராய் ஹார்டிங்கைக் கொல்லத் திட்டம் தீட்டினார்.


1912ம் ஆண்டில் புதுடில்லி உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக ஹார்டிங்கும் அவரின் மனைவியும் யானையின் மீது கம்பீரமாக வர, அவர்களின் பாதுகாப்பிற்காக 3000 பிரிட்டிஷ் படை வீரர்களும் வந்தார்கள். வைஸ்ராயின் பாதுகாப்புக்காக உயரமான கட்டிடங்களில் யாரும் இருக்கத் தடை செய்யப்பட்டிருந்தது. இது போக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காவலர் நின்று கொண்டிருந்தார். இத்தனைப் பாதுகாப்பு கொடுத்த தைரியத்தில் ஹார்டிங் கம்பீரமாக இந்தியர்களைப் பார்த்தபடியே யானையில் வந்தார். அப்போது அருகில் இருந்த மணிக்கூண்டில் இருந்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இடத்திலேயே பாகன் உடல் சிதறி இறந்தான். ஹார்டிங் மற்றும் அவனது மனைவி படுகாயங்களுடன் தப்பித்தனர். அப்படியே கட் செய்தால் டெராடூன் நகரம்.அந்தக் குண்டுவீச்சிற்கு முழுத் திட்டமும் போட்டுக்கொடுத்த ராஷ்பெஹாரி போஸ் ஒன்றுமே தெரியாதது போல் டெராடூனில் தன்னுடைய காட்டிலாகா அதிகாரி வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் தான் முக்கியக் குற்றவாளி எனக் கண்டுபிடித்த பிரிட்டீஷ் அரசாங்கம் அவரைப் பிடிக்க விரைந்தது. அங்கு கிடைத்தது என்னவோ கொஞ்சம் பேப்பரும் பேனா மைப்புட்டியும் தான். போஸ் அங்கிருந்து ஏற்கனவே தப்பி லாகூர், பின் வங்காளம் என தன் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். ”நினைத்த நேரத்தில் உருவத்தையும் இடத்தையும் மாற்றிக்கொள்ளும் மாயாவியைப் போல் இருந்தார்” என்று அன்றைய போலீஸ் குறிப்புகள் இவரைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இவரது மாறுவேடங்கள் எல்லாம் சினிமாக்கதைகளை விட சுவாரசியமானவை.


ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, ஒரு துறவி போல் சாந்தமான வேடமிட்டுத் தப்பித்திருக்கிறார். இன்னொரு முறை பிரிட்டிஷ் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுனர் போல் வேடமிட்டு அந்த அதிகாரி கூடேயே சென்று தப்பித்திருக்கிறார். இரவு நேரம் தன்னைப் பிடிக்க வந்தக் காவலர்களிடம் செத்துப் போன ஒரு கிழவனின் ஆவி போல் பயமுறுத்தித் தப்பித்திருக்கிறார். பிறிதொரு முறை, தன்னைத் தேடிக்கொண்டிருந்த அதிகாரிகளிடமே சென்று, ஒரு ஜோசியன் போல் ’நீங்கள் ராஷ்பெஹாரியைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள்? எல்லாம் எனக்குத் தெரியும். நாளை அவன் நிச்சயம் உங்கள் கைகளில் தான். மேற்கே சென்று தேடுங்கள் வெற்றி நமதே’ என்று கூறிவிட்டு கிழக்கே சென்று தப்பிவிட்டார். இந்தியாவில் இருந்தால் இப்படித்தான் ஓயாமல் டார்ச்சர் செய்வார்கள் என்று உணர்ந்து, கல்கத்தாவில் இருந்து கப்பலில், தாகூரின் செயலாளர் எனக் கூறி சிங்கப்பூர் வழியாக ஜப்பானுக்குப் போய்விட்டார்.ஜப்பான் பல்கலையில் இருந்த சில கேரள மாணவர்களோடு சேர்ந்து கொண்டு அந்த வளாகத்திற்குள்ளேயே கொஞ்ச நாட்கள் சுற்றியிருக்கிறார். இங்கும் பிரிட்டிஷ் மோப்பம் பிடித்து வந்துவிட மேக் அப் கிட்டுக்கு மீண்டும் வேலை கொடுத்தார். புத்தத் துறவி, டீக்கடை நடத்துபவர், கூலி, நாடக நடிகர் எனப் பல வேஷம் போட்டுத் தப்பிவிட்டார். கடைசியாக டோக்யோவின் பிரபலமான நகமுரயா என்னும் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். உணவக ஓனரின் பெண் மீது காதல் வந்தது. ஜப்பான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் பிரிட்டிஷ் போலீஸ் ஓவராக நோண்டாது என்பதைப் புரிந்துகொண்டு அந்தப் பெண்ணையே திருமணமும் செய்துகொண்டார். அந்த ஓட்டலில் நிறைய இந்திய உணவு வகைகளை அறிமுகம் செய்து பிரபலப்படுத்தியிருக்கிறார். இன்றும் அந்த ஓட்டலில் இந்திய உணவுகள் பிரசித்தம் என்கிறார்கள். யாராவது ஜப்பான் போனால் கொஞ்சம் இந்திய பிரியாணி வாங்கிட்டு வாங்க நகமுரயா ஓட்டலில். சரி, இப்ப மெயின் மேட்டர்.பிரிட்டீஷாரின் பார்வை இவர் மீதிருந்து கொஞ்சம் அகண்டதும், ஜப்பான் சிறையில் போர்க்கைதிகளாக இருந்த இந்தியர்களையும் விடுதலை வேட்கை கொண்ட பலரையும் வைத்து ஒரு சுதந்திரப் போராட்ட படையை உருவாக்கினார். அந்தப் படைக்கு இந்திய தேசிய ராணுவம் (INA) எனப் பெயர் வைத்தார். தன்னைப் போலவே சுதந்திர வேட்கை கொண்டப் போராளியான நேதாஜியை அழைத்துத் தலைமைப் பதவியைக் கொடுத்தார் ராஷ்பெஹாரி போஸ். அதன் பின் INAவின் வரலாறு பலவும் நமக்குத் தெரியும். ஜப்பான் படைகளின் சொதப்பலால் INA சின்னாபின்னமானது. இந்த இரண்டு போஸ்களின் கனவும் கொஞ்சம் தள்ளிப்போனது. இந்திய சுதந்திரத்தைக் காணாமலேயே, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மரணமடைந்தார் ராஷ்பெஹாரி போஸ்.


வழக்கம் போலவே இவரின் சாதனைகளும் சாகசங்களும் மழுங்கடிக்கப்பட்டு இப்படி ஒருத்தர் இருந்ததே தெரியாத அளவிற்கு நம் வரலாறும் எழுதப்பட்டு விட்டது. அதாவது பிரிட்டிஷால் நேரடியாகவோ மறைமுகமாகவோ தோற்கடிக்கப்படாத அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறும் நமக்கு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன. அதற்கு ராஷ்பெஹாரி போஸும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவை விட பரபரப்பான திருப்பஙகளைக் கொண்டிருந்தது தான் ராஷ்பெஹாரியின் சுதந்திரப் போராட்டம். இந்திய சுதந்திரம் என்பது எந்த ஒரு குடும்பமோ தனி நபரோ பெற்றுத் தந்ததல்ல. இது போன்ற எண்ணற்ற நபர்கள் மண்ணை, குடும்பத்தை, சொந்தத்தை மறந்து, போராடி பெற்றுத் தந்தது என்பதை மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One