ஓட்டல்களில் நீங்கள் 'ஹலால்' என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். முஸ்லிம்கள் உண்ணத் தகுதியான உணவு என்பதற்கான அத்தாட்சி/சான்றிதழ்/அறிவிப்பு தான் இந்த ஹலால் என்கிற அளவில் தான் நம்மில் பலரும் இதைப் பற்றி அறிந்து வைத்திருப்பபோம். ஆனால் இந்த ஹலால் ஒரு மிகப்பெரிய வணிகச் சக்கரம் என்பது புதிய & ஆச்சரியமான விஷயம். அதாவது ஆண்டுக்குத் தோராயமாக 4-7ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்த ஹலால் பொருட்களின் வணிகம் இருக்கும் எனக் கணிக்கிறார்கள். 4 ட்ரில்லியன்னா எவ்வளவு? பெரிய அளவெல்லாம் இல்லை, ஜஸ்ட் நம் இந்திய நாட்டின் ஓராண்டு ஜிடிபியை விடக் கொஞ்சம் அதிகம், அவ்வளவு தான். கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஹலால் வணிகத்தை உலக நாடுகளின் ஜிடிபியோடு ஒப்பிட்டால், மூன்றாம் அல்லது நான்காம் இடம் பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாட்டின் பொருளாதாரத்திற்குச் சமம் இந்த ஹலால் வணிகம்!!
ஒரு காலத்தில் உணவில் மட்டுமே இருந்தது, பின் ஆடை, அழகு சாதனப் பொருட்கள், டூர் பேக்கேஜுகள், அவ்வளவு ஏன், உயிர் காக்கும் மருந்துகளில் கூட ஹலால் வந்து விட்டது. இஸ்லாமியச் சமூகம், தன் பொருளாதாரம் வெளியே சென்று விடாமல், தனக்குள் மட்டுமே சுற்றிக்கொண்டு, தன் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கைக் கொடுக்கவே இந்த ஹலால் என்னும் வணிகத்தை முன்னெடுக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். அதனால் தான், குரான் காலத்தில் இல்லாத பொருட்களுக்கு எல்லாம் கூட ஹலால் எனக் கூறி வியாபார வட்டத்திற்குள் இழுக்கிறார்கள். உதாரணம், அழகு சாதனப் பொருட்கள்.
ஹலால் தரச்சான்று பெறுவதும் வணிகமயமாகி விட்டது. நாம் வண்டிக்கு இன்சூரன்ஸ் ரெனியூ செய்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹலால் தரச்சான்று தரும் அமைப்பிற்கு 15000 கொடுத்து ரெனியூ செய்து கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு பொருளையும் இணைக்க, ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக இவ்வளவு பணம் என்றும் கட்ட வேண்டும். நேரடியாக வேலை வாய்ப்பு (இஸ்லாமியர் மட்டுமே ஹலால் சடங்கைச் செய்ய இயலும்), மறைமுகமாக அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி என இது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இன்றைய தேதியில் உலக வல்லரசுகள் எல்லாம் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்காமல் இருந்தாலே போதும் எனத் திணறும் போது, ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் கிட்டத்தட்ட 11%!!! எந்த வல்லரசு நாடும் அந்த அளவில் வளருவதில்லை.
உலக இஸ்லாமிய மக்கள் தொகை 180கோடி. அதுவும் பரவலாக பல தேசங்களில் பிரிந்து வாழும் இனம். இந்துக்கள் போலோ, அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் போலோ ஒரே இடத்தில் குவிந்திருக்கும் மக்கள் தொகை அல்ல. இப்படிப்பட்ட பரவலான மக்கள் தொகை, ஒற்றுமையாக ஒரு மதப்பொருளாதார வல்லரசை உருவாக்கியிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். தமிழகத்தில் கூட நாடார் இனம் இது போன்ற ஒரு முன்னெடுப்பைச் செய்து தான் தன் சமூக அந்தஸ்தை உறுதி செய்து கொண்டது என்றாலும், நாடார்களின் 'மகமைபண்டு' ஹலால் அளவிற்குக் கண்டிப்பானதோ, கட்டாயமானதோ, உக்கிரமானதோ, அசுர பலமானதோ அல்ல.. ஹலால் சரி, தப்பு என்கிற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அவர்கள் இன்று ஒரு விருட்சமாய் வார்த்து எடுத்திருப்பதை தான் ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்.
கிட்டத்தட்ட 1500 வருடத்திற்கு முந்தைய கலாச்சாரத்தை, தன் புனிதநூல் சொல்லியிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள் பலர். ஆனால் மாறி வரும் உலகப் பொருளாதாரச் சூழலில், குரானை அட்சரம் பிசகாமல் அப்படியே பிடித்துக் கொண்டிருக்க முடியாது என அந்த ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமியர்களே கொஞ்சம் வளைத்துக் கொண்டது இரண்டே இரண்டு விஷயங்களில் தான். ஒன்று பணம், இன்னொன்று ஹலால். மனித முகம் இருக்கும் எதுவும் இஸ்லாத்தில் ஹராம் என்றாலும், பணத்தில் காந்தி, ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் என இருக்கலாம், அதெல்லாம் ஹராம் ஆகாது. குரானை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தால் இன்று இஸ்லாமியர் ஒருத்தரும் கரன்ஸியைப் பாவிக்க முடியாது. அதே போல் குரான் காலத்தில் இல்லாத, குரானில் சொல்லப்படாத மருந்துகள், வெளிநாட்டு சுற்றுலா, மேக்-அப் சாதனங்கள், மீடியா, அவ்வளவு ஏன், அப்பார்ட்மெண்ட் வரை அனைத்தையும் ஹலால் என அடையாளப்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு பிரித்தது. இந்த இரண்டு சமரசங்களால் தான் இஸ்லாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறியிருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அடிப்படைவாதத்தில் இருந்தும் வெளிவர உதவினால் மகிழ்ச்சி.
ஒரு சின்ன விண்ணப்பம். இந்த ஹலால் கலாச்சாரம் இத்தோடு நின்று கொண்டால் தேவலை. ஹலால் தெரு, ஹலால் காலனி, ஹலால் ஊர், தேசம், ஹலால் உத்தியோகம், ஹலால் கார், ஹலால் பள்ளி, ஹலால் தியேட்டர் என இன்னமும் விஸ்திகரித்துக் கொண்டே போகாமல் இருப்பது நலம். இல்லையென்றால் ஏற்கனவே கடந்த 10-15 ஆண்டுகளாக சமூகக் கட்டமைப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கும் இஸ்லாமியச் சமூகம், இன்னும் அதிகமாக விலகி தனித்து விடப்பட்டிருக்கும். இன்றைய நாகரிக யுகத்திற்கு அது எந்த வகையிலும் பயனற்றதாகவும் அச்சுறுத்தல் தருவதுமாகவே இருக்கும்.
No comments:
Post a Comment
அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..