கோகுலின் திருமணத்தில் தான் அவளை மறுபடியும் பார்த்தேன். கோகுல், இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் படிப்பு சம்பந்தமாக ப்ராஜெக்ட் செய்த, மதுரையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் தர மேலாளர். இங்கு அவளை நான் எதிர்பார்க்கவில்லை. இவள் தான் 'கல்யாணத்திற்கு பிறகு வேலையில் இருந்து நின்று விட்டாள்' என்று சொன்னார்களே? இங்கே எப்படி வந்தாள்?
இவள்? பெயர் சிவசங்கரி. நான் ப்ராஜெக்ட் செய்த பொது, அந்த மருத்துவமனையில் என் கைடுக்கு இவள் தான் உதவியாளர். நான் ப்ராஜெக்ட் ஆரம்பித்த இரண்டு நாட்களில் வேலைக்கு சேர்ந்தாள். 'நான் காற்றில் பறக்காமல் இருப்பதே என் ஆடையின் எடையில் தான்' என்பது போல் இருந்தால். அவ்வளவு ஒல்லி. வெள்ளையாக இருந்தாள். வெண்மையான நேரான பல் வரிசை. ஏழ்மையை பிரதிபலிக்கும் ஒரு திக் கலர் சுடிதார். இது தான் சிவசங்கரியின் அடையாளம்.
பொதுவாகவே நான் பெண்களிடம் பேசத்தயங்குபவன். காரணம் கூச்சமா? வெறுப்பா? தன்மானமா? என்னவென்று தெரியாது! இவளிடமும் அப்படித்தான். நானாக பேசவில்லை.
"அந்த பைல் எடுத்துக்குடுங்க". எடுத்துகுடுத்தேன்.
"மேடம் இன்னைக்கு மதியத்துக்கு மேல தான் வருவாங்களாம். நீங்க அவங்களுக்கு வெயிட் பண்ணாம ப்ராஜெக்ட் ஆரம்பிப்பிங்கலாம். சொன்னாங்க."
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் டேட்டா கலக்க்ஷனுக்கு சென்று விட்டேன். இப்படியே ஒரு நான்கு நாட்கள் சென்றன. எவ்வளவு நாளைக்குத்தான் பைல் எடுத்துக்குடுக்குறதையே பேசிட்டு இருக்குறது? அப்போது ஏதோ ஒரு கமல் படம் வெளிவந்து இருந்தது.
"நான் கமல் படமே பாக்க மாட்டேன். ஏன்னு சொல்லுங்க ராம் குமார்"
நான் ஒன்றும் சொல்லாமல் அவளைப்பார்த்தேன்.
"ஏன்னா ஒண்ணுமே புரியாது. ஹா... ஹா.. ஹா.."
அவள் சினிமா தியேட்டருக்கே இரண்டு முறை தான் போயிருக்கிறாளாம். அதுவும் அவள் படிக்கும் போது பள்ளியில் கூட்டி சென்றதாம்.
"உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு, ராம் குமார்?"
ஒவ்வொரு வரி முடிக்கும் போதும் என் பெயரை அதுவும் முழுப்பெயரை அவள் சொல்லும் போது அழகாக இருக்கும்.
"அது நெறைய பேர பிடிக்கும்ங்க"
"சும்மா சொல்லுங்க"
"ரஜினி"
"தாத்தாவா? அப்புறம்?"
"கமல்"
"ச்சீ.. உங்க டேஸ்ட் என்ன இருவது வருசத்துக்கு முன்னாடி இருக்கு ராம் குமார்?"
"என் டேஸ்ட் அவ்வளவு தாங்க. சரி, உங்களுக்கு பிடிச்ச நடிகர்லாம் யாரு?"
"எனக்கு ஒரே ஒரு ஆள் தான் பிடிக்கும்"
"யாரு?"
"ப்ரித்விராஜ்"
"அவனா? உருப்படியா ஒரு பத்து படம் கூட நடிக்கல!"
"ஓய்... என்ன?"
"சாரி சாரி... ஏன் அவன புடிக்கும்?"
"அவன் அவ்ளோ அழகா இருப்பான் தெரியுமா? இப்போ கொஞ்ச நாளா விஷாலையும் பிடிக்குது"
நான் வாயை திறக்காமல் இருந்தேன். திரும்பவும் அவள் ஓய் என்று சொன்னால் என்ன செய்வது?
"ஏன் பிடிக்கும்னு கேக்க மாட்டீங்களா ராம் குமார்?"
"ஏன் பிடிக்கும்?"
"அவன் கருப்பா உங்கள மாதிரியே இருக்கானா, அதான்..."
"ஏங்க, நாங்க கருப்புல மட்டும் தான் ஒன்னு. நான் அவன விட கொஞ்சம் அழகா தான் இருக்கேன்."
"அதெல்லாம் தெரியாது. எனக்கு அவன பாத்தா உங்க ஞாபகம் தான் வருது"
அன்று முதல் எனக்கும் விஷாலை கொஞ்சமாக பிடிக்க தொடங்கியது. நாற்பத்தைந்து நாளில் முப்பது நாட்கள் வேகமாக ஓடி விட்டன. இந்த முப்பது நாட்களில் அவளும் நானும் பேசாத சமயங்கள் மிகவும் குறைவு. அவள் குடும்பத்தை பற்றி, அம்மா இறந்தது, அக்கா கல்யாணம், இப்போது அப்பாவுடன் அவள் தனியாக இருப்பது என்று அவளைப்பற்றி அனைத்தையும் சொன்னாள்.
"வீட்டுக்கு போனாலே எரிச்சலா இருக்கும் ராம் குமார்"
"ஏன்?"
"இங்க வேலைய முடிச்சுட்டு அழுப்பா வீட்டுக்கு போனா, அங்கயும் மூஞ்சில அடிக்குற மாதிரி வேல இருக்கும். துணி துவைக்குறது, பாத்திரம் கழுவுறது, அப்பறம் இந்த சமையல் வேல இருக்கே? அப்பப்பா.."
"ம்ம்ம்..."
"ஆம்பளைங்கலாம் ரொம்ப குடுத்து வச்சவங்கல்ல, ராம் குமார்?"
அவள் கண்களில் நீர் தெரிந்தது. இதழில் சோகம் கலந்த சிரிப்பு.
"நீங்க இன்னும் ரெண்டு வாரத்துல போயருவிங்கள்ள ராம் குமார்?"
"ஆமா"
"எங்களலாம் மறந்துருவிங்களா?"
நான் அவளை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன். பதில் எதுவும் சொல்லவில்லை. 'என்னை' என்பதைத்தான் அவள் 'எங்களை' என்று சேர்த்து சொன்னாள்.
"உங்க காலேஜ்ல பொண்ணுங்கலாம் படிக்குறாங்களா?"
"அதெல்லாம் எதுக்கு இப்போ?"
"இல்ல சும்மா கேட்டேன். மணி அஞ்சாச்சி, வீட்டுக்கு கெளம்பலையா ராம் குமார்?"
அடுத்து ஒரு வாரம் நான் அந்த மருத்துவமனைக்கு செல்லவில்லை. காலேஜ் இல் என் கைடிடம் ப்ராஜெக்ட் பற்றி பேசினேன். 'இன்னும் ரெண்டு நாட்கள் தான் மருத்துவமனையில் வேலை இருக்கும்' என்று சொன்னார்.
"ஏன் ராம் குமார் நீங்க ஒரு வாரமா வரல? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா?" - என்னை மீண்டும் பார்த்த அதிர்ச்சியும் இதுவரை பார்க்காததால் இருந்த வருத்தமும் சேர்ந்து அவள் ஒல்லி முகத்தில் கோலம் போட்டன.
"இல்லைங்க வாத்தியார பாக்க போயிருந்தேன்"
"சொல்லிட்டு போகலாம்ல. நீங்க இல்லாத இந்த ஏழு நாளும் எரிச்சலா இருந்தது. வீட்டுலயும் ஒரு வேல பாக்க முடியல!"
"சிவசங்கரி"
"என்ன?"
"நாளைக்கு தான் என் ப்ரோஜெக்டோட கடைசி நாள்"
"என்ன சொல்றிங்க? இன்னும் ஒரு வாரம்ல இருக்கு?"
"இல்லைங்க. கொஞ்சம் டாகுமெண்டேசன் வேல இருக்கு. அதனால நாளையோட கிளம்பிருவேன்!"
"நீங்க இங்க எதுக்குங்க ப்ராஜெக்ட் பண்ண வந்தீங்க? வேற எங்கயாவது போயித்தொலஞ்சுருக்க்கலாம்ல?" அழுக ஆரம்பித்து விட்டாள்.
அவள் அன்று அழுத அழுகை என்னை என்னவோ செய்தது. ப்ராஜெக்ட் முடித்து கிளம்பிவிட்டேன். இந்த நாற்பது நாட்களில் பிரிவோம் என்ற நம்பிக்கை துளியும் இல்லாததால் நாங்கள் போன் நம்பர் கூட பரிமாறிக்கொள்ளவில்லை. அவள் ஞாபகமாகவே இருந்தது. நண்பர்களிடம் அவளைப்பற்றி சொன்னேன்.
"நீ அந்த சிவசுந்தரிய.."
"டே சிவசங்கரி டா..."
"ஏதோ ஒன்னு. அவள நீ லவ் பண்றியாடா?"
"ஆமாம் டா" என்று சொல்ல ஆசை. "அவா தான் என்ன லவ் பண்ற மாதிரி தெரியுது டா.."
"டே மூடுடா.. அந்த பொண்ணு இதெல்லாம் கேட்டா தற்கொல பண்ணிக்கும்"
அன்று அவர்களுக்கு நான் தான் ஊறுகாய். 'ஏண்டா இவர்களிடம் சொன்னோம்?' என்று நினைத்தேன். அதிலும் ஒருவன்,
"நண்பா நீ அந்த பொண்ண லவ் பண்ற விஷயம் அந்த பொண்ணுக்கு தெரியாம பாத்துக்கோடா. சங்கடப்படுமா இல்லையா?" என்றான். இவர்களிடம் இது பற்றி இனி பேசக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ப்ராஜெக்ட் முடிந்த மூன்று நாட்களில் எனக்கு ஒரு புது எண்ணில் இருந்து போன் வந்தது. ரிலையன்ஸ் நம்பர். தயக்கமான குரலில்,
"ஹலோ?"
"ஹலோ..."
"ராம் குமாரா?"
"ஆமா. நீங்க யாரு?"
"நெறைய பொண்ணுங்க கிட்ட பேசினா இப்படித்தான், யாரு பேசுறதுனே தெரியாம முழிக்க வேண்டிருக்கும். நான் யாருன்னு நெஜம்மாவே தெரியலையா ராம் குமார்?"
"சிவசங்கரி!"
"எப்பா! எவ்ளோ கஷ்டப்பட வேண்டிருக்கு என்ன ஞாபகப்படுத்த? அதுக்குள்ள மறந்துட்டிங்கள்ள?"
"இல்லைங்க, புது நம்பர்ல அதான். ஆமாம் என் நம்பர் எப்படி கெடச்சது?"
"உங்க கைட், அதான் எங்க மேடம் செல்லுல இருந்து சுட்டுட்டேன்!"
"என்னது?"
"ஆமா ராம் குமார். என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல..."
அன்று மட்டும் இரண்டு மணிநேரம் பேசினோம். அவளை எனக்கு பிடிக்கிறதா இல்லையா என்று தெளிவாக உணர முடியாத அளவுக்கு குழம்பி இருந்தேன்! அவள் இதுவரை ஆண்களோடு பழகியதில்லை. நான் தான் அவள் வாழ்வின் முதல் ஆண். அதனால் இது ஒரு இன்பாட்சுவேஷன் ஆக இருக்கலாம் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். அதே போல் இன்னும் ஒரு ஆண்டில் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் அப்பா சொன்னாராம். "ஏதாவது பண்ணுங்க ராம் குமார்" என்று அழுதாள்.
நான் என்ன பண்ணுவது? ஒரு பெண்ணை எளிதாக காதலிக்கும் மனது, திருமணம் என்றவுடன் பயப்படுகிறதே? அவள் வேறு ஜாதி. என் வீட்டில் தெரிந்தால் தோலை உரித்து விடுவார்கள். இது எல்லாவற்றையும் அலசிப்பார்த்த பின் அவளிடம் பேசாமல் இருப்பதே இருவருக்கும் நல்லது என்று பேசுவதைத்தவிர்த்தேன். ஆண்கள் தான் எவ்வளவு கோழைகள்?
ஒரு நாளில் நூறு மிஸ்டு கால் கூட வரும். சில சமயம் இன்பாக்ஸ் நிரம்பி வழியும்! ஒன்றுக்கும் நான் பதில் அளிக்கவில்லை. அவளிடம் இருந்து ஒரு நாள் இப்படி எஸெமெஸ் வந்தது,
'நீங்கள் என்னிடம் பேச வேண்டாம். தயவு செய்து நான் பேசுவதை மட்டும் அமைதியாக கேட்டால் போதும். எனது காலை அட்டன்ட் செய்யவும் ப்ளீஸ்.'அந்த மெசேஜ் இன் வலி என்னையும் தாக்கியது. அதைத்தொடர்ந்து வந்த காலை அட்டென்ட் செய்தேன். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஒரு விம்மல் சத்தம் கேட்டது.
"ஏன் ராம் குமார் என்ட பேச மாற்றிங்க?"
"........"
"ஒரு பொண்ண இப்படி அழ வைக்கிறோமேன்னு உங்களுக்கு வருத்தமா இல்லையா? என்னால உங்ககிட்ட பேசாம இருக்க முடியல! என்ன ஆச்சு உங்களுக்கு? நீங்களா வந்து என்கிட்ட பேசற வரைக்கும் நானும் உங்ககிட்ட பேச மாட்டேன். அதுக்காக நான் உங்கள மறந்துருவேன்னு மட்டும் நெனைக்காதிங்க. என் உயிர் உள்ளவரை அது நடக்காது!"
அதற்குப்பின் அவளிடம் இருந்து எனக்கு மெசேஜ்ஜோ காலோ வரவே இல்லை. ஐம்பது நாட்கள் கூட என்னிடம் பழகாத ஒரு பெண் என் ஆயுசு முழுதும் மனதில் நீங்காத ஒரு தழும்பாக, நினைவில் நீங்கி விட்டாள்.
'என் உயிர் உள்ள வரை உங்கள மறக்காம மாட்டேன்'னு சொன்னவள், இதோ இங்கே ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு என் கண்முன்னே திருமணமாகி! என் மனதுக்குள் ஒரு சின்ன ஆர்வம், 'இவள் இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாளா?' என்று. எவ்வளவு மோசமான எண்ணம், மாற்றான் மனைவியின் மனதில் நமக்கு இடம் இருக்கிறதா என்று எண்ணுவது?
ஆனாலும் ஏதோ ஒன்று என்னை அவளிடம் செலுத்தியது. அருகில் சென்றேன். அவள் முதுகுக்கு பின்புறம் நின்று கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் சதை போட்டுருக்கிறாள். சிகப்பு வண்ண பட்டுப்புடவையில் கையிலும் காதிலும் கழுத்திலும் கணவன் வாங்கி கொடுத்த தங்கத்தில் மின்னினாள். ஒன்றரை வருடங்களுக்குப்பிறகு ஒரு தலைக்காதலர்கள் இருவர் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?
"நீங்க சிவசங்கரி தானே?"
அவள் திரும்பி என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் எந்த வித அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ தெரியாதது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.
"ஆமா. நீங்க யாரு?" முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் கேட்டாள். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
"என்னை தெரியலையா? நான் தாங்க ராம் குமார். நீங்க வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுநேனே, மறந்துடிங்களா?"
"சாரிங்க.. எனக்கு சரியா ஞாபகம் இல்லையே!"
அப்போது ஒரு ஆசாமி, கையில் குழந்தையுடன் எங்களை நெருங்கி அவளிடம், "என்னம்மா? சார் யாரு?" என்றார். அந்த ஆசாமிக்கு வயது இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருக்கும். ஒடிசலான தேகம். அவள் கணவன்.
"இவர் நான் வேல பாத்த ஆஸ்பத்திரில ப்ராஜெக்ட் பண்ணுனாராம். ஞாபகம் இருக்கானு கேட்டாரு"
"ஓஹோ"
"ஆமா சார். அவங்களுக்கு என்ன ஞாபகம் இல்ல போல. சாரிங்க. நான் வரேன்"
'ஏன்டா இவளிடம் பேசினோம்' என்று இருந்தது. என்னை சாகும் வரை மறக்க மாட்டேன் என்றவள் ஒன்றரை வருடத்தில் என்னை அறவே மறந்து போய்விட்டாள். 'இந்த பொம்பளைங்களே இப்படித்தான். சரியான சந்தர்ப்பவாதிகள்' என்று நினைத்து கொண்டே திரும்பி நடந்தேன்.
"டாய் ராம் குமார்".
யாரோ கூப்பிட்டது போல இருந்தது. அந்த ஆண் குரல் வந்த திசைக்கு திரும்பினேன். அங்கு அவள் குடும்பம் தான் நின்று கொண்டு இருந்தது. அவள் குழந்தை அழுது கொண்டு இருந்தது. வேறு யாரும் இல்லை. 'என்னடா இது? பிரம்மையோ?' என்று எண்ணினேன்.
திரும்பவும் "டாய் ராம் குமார்" என்று கேட்டது. திரும்பி பார்த்தேன். அங்கே அவள் கணவன், "டாய் ராம் குமார் அழாத டா. சீக்கிரம் வீட்டுக்கு போயிறலாம். அம்மா கிட்ட 'சீக்கிரம் கெளம்பு' னு சொல்லு" - அழும் குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
'என்னது? அவள் குழந்தையின் பெயர் ராம் குமாரா?' என் மூளைக்குள் வேகமாக ரெத்தம் ஏறியது. நான் அவளை நேராக பார்த்தேன். அதிர்ச்சியில் கிட்டத்தட்ட உறைந்து போன நிலையில் இருந்தாள். அவள் கண்களால் என்னை நேராக பார்க்க முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் உடைந்து விடும் அணை போல அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. அதற்கு மேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. திரும்பி வந்துவிட்டேன். அந்த கணம் என் மனதில் அப்படியே பச்சை குத்தியது போல் பதிந்து விட்டது. அன்று அவளிடம் ஏன் பேசினோம் என்று இப்போது வருத்தப்படுகிறேன்.
'இவளா என்னை மறந்து விட்டாள் என்று நினைத்தேன்? உண்மை தான் இவள் சொன்னது. இவள் சாகும் வரை என்னை மறக்க மாட்டாள்!'
ஒரு பெண்ணின் மனதை மீண்டும் மீண்டும் துன்புறுத்தி விட்டோமே என்று மனது கனக்கிறது. எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு உறவுக்காக கண்களில் நீர் கசிகிறது!