பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..

Saturday, December 27, 2014

என்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். 

இந்த உலகமே ஒரு சிறு காலனி போல் மாறிவிட்டது இப்போதெல்லாம்.. இந்த மதத்துக்காரனிடம் வேலைக்குப் போக மாட்டேன், இந்த ஜாதிக்காரனை தான் வேலைக்கு வைப்பேன் என்று சொன்ன காலமும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது, என்ன ஜாதி, என்ன மதம், எந்த ஊர், எந்த மொழிக்காரன் என எதுவும் தெரியாத ஒருவன் தான் நமக்கு பாஸாக, நமக்குக் கீழ் வேலை செய்பவனாக, நம் வாடிக்கையாளராக என்று நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அட பல நிறுவனங்களில் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நம்மையும் ஒரு உலகளாவிய வகையில் மெருகேற்றுவதற்காக, உலக அளவில், middle management என்று சொல்லப்படும் மேனேஜர் லெவல் வேலையாட்களிடம் அந்த நிறுவனங்களில் CEOக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்டிருந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில்.. அதை என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.. 



Expatriate CEOக்கள் (நம் நாட்டில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள்) சிலரிடம், ”இந்திய வேலையாட்கள் எப்படி?” என்று சமீபத்தில் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் காஃபி வித் டிடி மாதிரி நம்மைப் புகழ்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்குக் கழுவி தான் ஊற்றியிருக்கிறார்கள்.. கழுவி ஊற்றியவர்கள் சாதாரணமான டப்பா கம்பெனியில் CEOக்கள் கிடையாது.. அவர்கள் எல்லோரும் மிட்சுபிஷி, BMW, ஹயட், வால்வோ, MTS, லோரியல், ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், வேதாந்தா, நிசான் போன்ற படா கம்பெனிகளின் இந்தியப்பிரிவிற்கான CEOக்கள்.. அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும் ஒரு விதத்தில் உண்மை தானோ என்கிற எண்ணத்தை, சந்தேகத்தை எனக்குள் எழுப்பின.. 

அவர்கள் சொல்லும் முதல் கம்ப்ளெயிண்ட்டே நாம் எதற்கும் லேட்டாகத்தான் வருவோம் என்பது தான்.. கல்யாண வீடு, சினிமா தியேட்டர், ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன் என்று எதற்கும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கவோ, அல்லது ஹாயாக லேட்டாக போவதோ, நம் DNAவில் கலந்துவிட்ட விசயம்.. ஆனால் ஃபாரினில் இருந்து வந்த ஒரு CEO, போர்டு மீட்டிங் என்றால் 5 நிமிடம் லேட்டாக வருபவனையும், ஒரு get together, dinner, அலுவலகத்தில் ஒரு function என்றால் சர்வசாதரணமாக ஒரு மணிநேரம் லேட்டாக வருபவனையும் பார்த்தால் டென்சன் ஆகத்தானே செய்வான்?.. லேட்டாக வருகிறோமே என்கிற பிரஞ்கையோ குற்றவுணர்வோ கூட இந்தியர்கள் யாருக்கும் இல்லை என வருத்தப்படுகிறார்கள் அந்த CEOக்கள்.. நாம் லேட்டாக வருவது அடுத்தவர்கள் நமக்காக ஒதுக்கியிருக்கும் நேரத்தை, கொஞ்சம் கூட மதிக்காமல் அழிப்பதற்குச் சமம்.. இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய ஆட்கள் கூட இதை சட்டையே செய்யாமல் அவர்களும் லேட்டாக வருவதும், லேட்டாக வருவதை ஒரு கௌரவமாக நினைப்பதும் பன்னாட்டுத் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிறார்கள்..

இரண்டாவது முக்கியமான விஷயம் நம் தேசியத் தொழிலைப் பற்றி.. அட அதாங்க, விவாதம் செய்வது. இந்தியர்கள் நாம் எதற்கெடுத்தாலும் விவாதம், விதாண்டாவாதம் செய்கிறோமாம்.. ஒரு மீட்டிங் என்றால், நம் ஆட்கள் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று எதையாவது கொழுத்திப் போட, அவரை வழிமொழிந்தோ, வழிமறித்தோ இன்னொரு ஆள் தொடர, இப்படியே போய் அந்த மீட்டிங் தன் இலக்கை விட்டுவிட்டு வேறு எங்கோ தறி கெட்டு ஓடும்.. ஒவ்வொருவரும் தன் கருத்தை வாந்தி எடுக்க ஆரம்பித்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் தங்களுக்கு வாய்ப்பு கிட்டாத வரை யாரும் வாயைத் திறப்பதில்லை மீட்டிங்குகளில்.. அப்படி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதும் அங்கு அநாகரிகமாகக் கருதப்படுகிறது.. ஒரு வேளை, மீட்டிங்கில் ஒருவனுக்கு வாய்ப்பே கிட்டவில்லை, ஆனால் அவன் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றால், அந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல் அது முடிந்ததும் தான் பேசுகிறான்.. ஆனால் இந்தியர்கள் மீட்டிங் ஹாலை ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஷூடிட்ங் ஸ்பாட் போல் ஆக்கிவிடுகிறார்கள்.



இந்தியர்கள் சரியான வாயாடிகள் என்பது அவர்களின் கருத்து. இங்கு யாரும் சும்மா இருப்பதில்லை. எங்கு பார்த்தாலும் எதையாவது, யாரைப்பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு. இது வேலையை மிகவும் கெடுக்கும் செயல் என்று பொறுமுகிறார்கள்.. அதுவும் அரசியல் என்றால் நம் ஆட்கள் விடிய விடிய அடித்துக்கொள்கிறார்களாம் விவாதம் என்னும் பெயரில். 



மூன்றாவது விஷயம் நமது பரந்து விரிந்த வித்தியாசங்கள். பல CEOக்களும் இந்தியாவிற்கு வரும் முன் இந்தி தான் இங்கு இருக்கும் மொழி, எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை முறையோடு தான் இருப்போம் என்கிற நினைப்பில் தான் வருகிறார்கள்.. ஆனால் இங்கிருக்கும் மேனேஜர் மலையாளியாக இருப்பான், அவனுடைய subordinate ஒரு பஞ்சாபி, சேல்ஸ் ஹெட் ஒரு மராட்டி ப்ராமின் என்று இருந்தால், பாவம் புதிதாக வரும் CEO என்ன ஆவார்? இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே? தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா? நம் பகுத்தறிவு என்ன ஆவது? நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது? ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம்? ஆனால் அதையெல்லாம் தப்பு என்கிறான் அந்த வெள்ளைக்கார CEO..

MTS நிறுவனத்தின் இந்தியாவிற்கான CEO நம் டெல்லி ஏர்போர்டில் முதல் முறையாக இறங்கும் போது தான் அதைக் கவனித்தாராம்.. நம் ஆட்கள் ஒரு எட்டு பேர் ஏரோப்பிளேனில் இருந்து இறங்குவதற்கான ஏணியை தள்ளிக்கொண்டு வந்தார்களாம்.. அவர் ரஷ்யாக்காரர்.. இதைப் பார்த்து பதறிப்போய், “டேய் எங்க ஊர்லலாம் ஒருத்தனே இந்த வேலைய செஞ்சிருவானேடா?” என்கிறார்.. அதே போல் இங்கிருக்கும் நமது சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஓட்டல் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற சேவைத்துறை நிறுவனங்களிலும் கூட அளவுக்கு அதிகமான ஆட்கள் இருக்கிறார்களாம்.. அங்கெல்லாம் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், கிடைத்தாலும் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் எங்கும் மெஷின் தானாம். அதை வேலை செய்ய ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானாம்.

ஆனால் இன்னமும் நாம் டெக்னாலஜியை நம்பாமல் ஆட்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம். இது தான் எந்த வேலையை செய்வதற்கும் ஆட்கள் கூட்டமாக வருவதற்கான காரணமாம். ஆனால், வெளிநாட்டில் டெக்னாலஜியை பயன்படுத்தி ஆட்களைக் குறைத்து, எட்டு பேர் பார்க்கும் வேலையை ஒருவனை செய்ய வைத்தால் ஆகும் செலவை விட, இந்தியாவில் எட்டு மனிதர்கள் செய்யும் போது குறைவாகத் தான் ஆகிறது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். ’அப்புறம் ஏன்டா இதை ஒரு பிரச்சனையா சொல்றீங்க?’ என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் ஒலித்தால் நான் பொறுப்பல்ல.. ஒரு CEO சொல்கிறார், “எங்கள் ஊரில் கடினமான ஒன்றை நகர்த்த வேண்டும் என்றால் அதன் அடியில் சக்கரம் பொருத்துவோம்.. ஆனால் இந்தியாவில் இன்னும் இருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டாலே போதும், நகர்த்தி விடலாம்” என்கிறார் நகைச்சுவையாக.. அதாவது நம் மேன் பவர் என்னும் அசாத்திய மனித சக்தியை பெருமையாகவும் சொல்கிறார்கள், அதே நேரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஒருத்தன் மோசமாக வேலை செய்கிறான் என்றால், அவனை மோசமாக வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் மோசமான வேலைக்காரன் என்றாலும், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மிகவும் பெர்சனால எடுத்துக்கொள்கிறான். அவன் மட்டும் இல்லை, உடன் வேலை செய்வோரும் இப்படிப் பேசுவதை தவறாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வேலை என்பது, கூலி பெறுவதற்காக கொடுக்கும் உழைப்பு என்பதையும் தாண்டி, மக்களால் ஒரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் காலத்தில் வேலையாட்களை விட, மேலதிகாரிகள் தான் மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். எந்த வேலையாளையும் மோசம் என்று சொல்ல முடியாமல், அனைவரையும் சுமார் என்கிற வரையறைக்குக் கீழ் குறிப்பிட்டு, அவரை “அவமானப்படுத்த” எந்த இந்திய மேலதிகாரியும் விரும்புவதில்லையாம். தனிப்பட்ட முறையில் ஒருவரின் வேலை மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அப்ரைசல் காலத்தில் நம் இந்திய மேனேஜர்கள் பெரும்பாலும் அதை எல்லாம் மறைக்கத்தான் பார்க்கிறார்களாம். வேலையை வேலையாக மட்டும் பார்க்காமல் இருப்பதால் நடக்கும் தவறான செயல் என்கிறார்கள். ஒருவன் வேலை செய்யவில்லை என்றால், தைரியமாக “செய்யவில்லை” என்று கூறவேண்டுமாம்.. மாலையில் வேலை முடிந்ததும் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு ஃப்ரெண்டாக பேசலாமாம். ஆனால் வேலையில் எ பாஸ் இஸ் எ பாஸ் என்று இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேலையை, பெர்சனலோடு, கௌரவத்தோடு எக்காரணமும் இணைக்கக்கூடாது என்கிறார்கள்.

”இண்டிபெண்டென்ஸ் டே” படத்தில் ஒரு சாதாரண மிலிட்டரி ஆளான வில் ஸ்மித் அந்த நாட்டின் ஜனாதிபதியை ரொம்ப கேசுவலாக “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்பார்.. அந்த ஜனாதிபதியும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்.. பொதுவாக பல ஆங்கிலப் படங்களிலும் எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்துக்கொள்வார்கள். யாரும் யாரையும் “சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” போட்டு அழைக்கவே மாட்டார்கள்.. ’அதெப்படிய்யா அங்கெல்லாம் கம்பெனி ஓனரையே ”மிஸ்டர்.ஸாம்”னு பேரச்சொல்லியே கூப்புடுறாய்ங்க?” என நான் வியந்திருக்கிறேன்.. ஆனால் அங்கு பழக்கமே அது தானாம். ஆனால் இங்கு இந்தியாவில் பெயர் சொல்லி ஒருவன் அவன் மேலதிகாரியை அழைத்தாலே அவன் காலி.. 



வேதாந்தா நிறுவனத்தில் CEO சொல்கிறார், “இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகபட்ச மரியாதை என்னை எரிச்சலூட்டுகிறது” என்று.. ஒவ்வொரு முறை அவர் வரும் போதும் மாலை போட்டு, பொட்டு வைத்து, மிகவும் பவ்யமாக குனிந்து வணக்கம் சொல்லி, ஒவ்வொருவரும் “சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பது அசிங்கமாக தெரிகிறதாம். தன் சக ஊழியனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு என்கிறார். பதவி என்பது ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் இடம். அதற்காக ஒருவருக்கு கூழைக்கும்பிடு போட்டு, மரியாதை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஸ்ட்ரிக்ட்டாக. ”இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறோம், உன் பொறுப்பை நீ கவனிக்கிறாய், என் பொறுப்பை நான் கவனிக்கிறேன்” என்கிற எண்ணம் இருந்தாலே தேவையற்ற மரியாதைகள் விலகிவிடும் என்றும் விளக்கம் கொடுக்கிறார்..

ஆனால் இன்னொரு CEOவின் கதை அப்படியே தலைகீழ்.. முதல் நாள் அவருக்கு “Respected sir" என்று ஆரம்பித்து வந்திருந்த ஈமெயிலைப் பார்த்து காண்டாகி, எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆஃபிசில் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம். இப்போது அந்த CEO தன் ஆஃபிசில் எல்லோரையும் ஜீ போட்டு அழைக்கிறாராம், ”ராம்குமார்ஜீ சொல்லுங்கஜீ” என்று.. Hierarchyக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச முக்கியத்துவம் தான் அனைத்திற்கும் காரணம், அது ஒரு ஆரோக்கியமான நிறுவனத்திற்கு, அதன் உலகளாவிய வளர்ச்சிக்குத்தடை என்கிறார்கள்.. இதைப் படிக்கும் யாரும் உங்கள் நிறுவனத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு எடுத்துப்போகிறேன் பேர்வழி என்று நாளையே உங்கள் பாஸை பேர் சொல்லி அழைத்துவிட்டு, அப்ரைசலில் ஆப்பு வாங்காதீர்கள்..

பொதுவாக நம் மக்கள் ஒரு பொறுப்பை ஏற்கவும், முடிவை எடுக்கவும் மிகவும் தயங்குபவர்கள்.. விடிய விடிய விவாதிப்போமே ஒழிய உருப்படியாக ஒரு முடிவை எடுக்க மாட்டோம். முடிவை எடுத்துவிட்டாலும் அதை வழிநடத்திச் சொல்ல யாரும் முன்வர மாட்டோம்.. வேலை இடங்களிலும் இதே தான்.. ஒரு பொறுப்போ, அல்லது ஒரு முடிவெடுக்கும் சூழலோ வந்தால் எல்லோரும் அதை நம் பாஸ் இருக்கும் திசையை நோக்கித் திருப்பி விடுவோம்.. அவர் அவரின் பாஸிற்குத் திருப்பி விடுவார்.. இது தான் ஒவ்வொரு அலுவலகத்திலும் அன்றாட வேலை பலருக்கும்.. இதற்கான முக்கிய காரணம், தோல்வி பயமும், நம்மை யாரும் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையும் தான். எந்த எண்ணமும் நம்மிடம் இருந்து சீக்கிரம் மறைய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்..

பொதுவாக நம் ஆட்கள், பாஸ் எதை கேட்டால் சந்தோசப்படுவாரோ அதைத் தான் சொல்வார்கள் அது தவறாகவே இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும்.. உண்மையை பட்டென்று போட்டு உடைக்கும் தைரியம் இல்லாதவர்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவே முடியாது என்று தெரிந்தாலும் பாஸ் கேட்கும் போது “முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன் சார்” என்பார்கள். புத்திசாலி பாஸ்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒருத்தன் ”முடிந்த வரை” என்று சொன்னாலே அவன் ஒன்றையும் முடிக்க மாட்டான் என்று. நம் ஆட்கள் வக்கனையாக பேச மட்டும் தான் லாயக்கி, ஆனால் செயல் “ஆளப்பாத்தா அழகு, வேலையப்பாத்தா எழவு”ங்கிற ரேஞ்சில் தான் இருக்கும் என்கிறார்கள்.. 




அடுத்தது, நம் ஆட்களிடம் இருக்கும் work life balance.. இரவு 12 மணிக்கு பாஸிற்கு மெயில் அனுப்பி வேலை மேல் தனக்கு இருக்கும் காதலைக் காட்டுவார்கள். இந்த ஒரு விசயத்தை வைத்தே இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள் நம் ஃபாரின்  CEOக்கள். முதலில், ஒருவன் வேலை நேரம் முடிந்த பின்னும், வேலை செய்கிறான் என்றால் அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் தகுதி அற்றவன். அடுத்ததாக அவன் குடும்பத்திற்குள் வேலையின் பிரச்சனைகளை கொண்டு சென்று, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சிறுசிறு பிரச்சனைகள் வந்து, அது ஒரு கட்டத்தில் அவன் வேலையைக் கெடுக்கும். சரியான நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தெரிந்தவன் அலுவலக நேரத்தைக் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு time management மிகவும் முக்கியம், இந்தியர்களுக்கு அந்தக் கலை போதாது என்கிறார்கள்..




Time managementல் நாம் மோசமாக இருப்பது தான் அவர்களை மிகவும் வெறுப்பேற்றும் செயல் என்று அந்தக் கட்டுரையை படிக்கும் போதே உணர்ந்தேன்.. பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைத் தான் சொல்லியிருந்தார்கள் அந்தக் கட்டுரையில். ஒரு CEOவின் BPயை எகிற வைக்கும் ஒரே விசயம் என்றால், அது மீட்டிங்கிற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை அவரின் செகரட்டரி அவசர அவசரமாக ரிப்போர்ட் தயார் செய்வது தானாம். ”இந்தியர்களுக்கு எதையும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கச் செய்வது தான் பிடித்திருக்கிறது.. அந்த ஒரு பரபரப்பு வந்தால் தான் அவர்கள் வேலையே செய்கிறார்கள்.. அந்த வேலையும் பெரும்பாலும் சரியாகவே முடிந்து விடுகிறது.. ஆனால் அதனால் எங்களுக்குக் கிடைக்கும் டென்சன் சொல்லி மாளாது” என்று அவர்கள் நொந்து போகும் அளவிற்கு நம் ஆட்கள் பாடு படுத்தியிருக்கிறார்கள்.. 

இவ்வளவு தான் அந்தக் கட்டுரை.. இது முழுக்க முழுக்க middle management ஆட்களுக்கான கட்டுரை.. இதைப் படித்துவிட்டு front line ஆட்களோ, சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களோ, அடிமட்ட அடிமைகளோ உங்கள் லோக்கல் மேனேஜரிடம் ட்ரைப் பண்ணி டவுசரை கிழித்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகாசிக்காரன் கம்பெனி சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது.. வேண்டுமானால் நீங்கள் இன்னும் 2,3 ஆண்டுகளில் ப்ரொமோசன் ஆகி மேனேஜராக வரும் போது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் இந்தப் பழக்கங்களை கொண்டு வாருங்கள்.. உங்கள் நிறுவனம் உங்களை ஒரு முன்மாதிரி மேனேஜராகப் பார்க்கும்.. Best wishes :-)

லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....

Saturday, December 13, 2014

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை தலைவர் படத்திற்கு விமர்சனம் எழுதியதில்லை என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமான விசயம் தான்.. ஏன் எழுதியதில்லை என்று யோசித்ததில் வந்த முதல் & ஒரே காரணம், அவர் படங்களை என்னால் விமர்சனக் கண்களோடு பார்க்க முடியாது.. ஒரு முக்கியமான இடத்திற்குப் போகிறீர்கள், அங்கு ஃபோட்டோ எடுப்பது ஒரு சுகம் என்றால், அனைத்தையும் மறந்து அந்த இடத்தைக் கண் கொட்டாமல் பார்ப்பது அதை விட சுகம்.. ரஜினி படம், ஃபோட்டோ எடுப்பதை மறந்து நம்மை ரசித்துப்பார்க்க வைக்கும் இடம் போன்றது.. படத்துக்குப் போனாமோ, என்ஜாய் பண்ணுனோமா என்று இருக்க வைப்பவை.. பட், ஒரு ஃபேஸ்புக் & பிளாக் பிரபலம் என்று ஃபார்ம் ஆக வேண்டுமானால் இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் நம் சமூகக் கடமையை ஆற்ற வேண்டுமல்லவா? அதனால் தலைவருக்கான என் கன்னி விமர்சனத்தைக் கொடுக்கிறேன்.. Lets begin.. 


கதை அல்ரெடி நேற்று இரவில் இருந்தே பலரும் பிரித்து மேய்ந்து துவைத்து அயன் செய்து விட்டார்கள்.. நாம ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே போயிருவோம்.. கோச்சடையானில் “பொம்மை ரஜினி” என்று ஊரே பேசியது.. அதை விட, “ஏ, ரஜினியால இனிமேலு நடக்கக் கூட முடியாதுப்பா, இதுல எங்க நடிக்கிறது? அதான் யாரையோ வச்சி பொம்மப்படம் எடுத்திருக்காய்ங்க” என்றெல்லாம் சொன்னார்கள்.. இந்தப் படம் அப்படிப் பேசியவர்களுக்கு எதிராக ரஜினி கொடுத்திருக்கும் செயல்முறை விளக்கம்.. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பியதும், “அந்த ஆள் அவ்வளவு தான், நடக்கக்கூட முடியாது” என்று பேசினார்கள்.. அடுத்தப் பொதுக்கூட்டத்தில், கரூர் என்று நினைக்கிறேன், மனுசன் விறுவிறுவென்று யார் உதவியும் இல்லாமல் படிகளில் துள்ளி ஏறி மேடைக்கு வந்தார்.. மொத்தத் தமிழ்நாடும் அன்று சந்தோசத்தில் அலறியது.. கிட்டத்தட்ட அதே மாதிரி தான், ”ஓ நண்பா” பாடலில் ரஜினி காட்டியிருக்கும் அந்த வேகம், நடனம், துள்ளல் எல்லாம்.. “தக்காளி மூனு மாசம் ஆஸ்பத்திரில படுத்துகெடந்து, ‘கண்ணா எப்படி இருக்கீங்க?’ என்று நடுங்கிய குரலில் வாய்ஸ் டேப் ரிலீஸ் பண்ணுன ஆளாடா இது?” என்று ஒவ்வொருத்தனையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.. அந்த ஒரு பாடல் போதும் ரசிகன் கொடுத்த 250ரூபாய்க்கு.. அதற்கு மேல் வருபவை எல்லாம் போனஸ்..


படத்தில், தற்கால ரஜினி செய்யும் ஸ்டைல், சேட்டைகள், அலப்பறைகள், முகபாவனைகள் எல்லாம், ‘தலைவர் இன்னும் ஃபார்மில் இருக்கிறார்’ என்று ஒவ்வொரு ரசிகனையும் மனதிற்குள் குதூகலம் அடையச்செய்பவை.. ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்ததும் ரசிகர்கள் லேசாக சோர்வாக ஆரம்பிக்கிறார்கள், ஆனால் குடும்பம் குட்டியோடு வந்தவன், அதன் பின் தான் படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறான்.. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஃப்ளாஷ்பேக்கில் ரஜினியின் ஹீரோயிஸமோ, பன்ச் டயலாக்கோ, சேட்டையோ, ஸ்டைலோ எதுவும் இருக்காது.. மனுசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீராப்பாய் நடந்து வருவதும், ராஜாவாய் கம்பீரம் காட்டுவதும், அணை கட்டுவதற்காக அனைத்தையும் இழப்பதும், பின் அவருக்கு ஏற்படும் முடிவும் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பது டவுட் தான்.. ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான் பெண்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் இந்தப் படத்தின் பக்கம் இழுத்து வரப்போகின்றன.. ஒரு குழாய் மைக்கை கையில் வைத்துக்கொண்டு, “உன் உடம்புல இந்தியனோட ரெத்தம் ஓடுனா வாடா” என்று சொல்கிற காட்சி மாஸ் & கிளாஸ்.. இந்த மாதிரி சின்னச்சின்ன விசயங்களில் தான் ரசிகர்களுக்கான ரஜினி தெரிகிறார்..


முக்கால்வாசிப்படம் அணை கட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது.. இரண்டாம் பாதி மெதுவாகச் சென்றாலும் நிறைவாய் இருக்கிறது.. ஒரு படத்தின் கதை மெதுவாய் நகர்ந்தாலும் போர் அடிக்கக் கூடாது.. இரண்டாம் பாதி அப்படித்தான், நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் விளக்கிக்கொண்டிருப்பார்கள்.. மேதாவி சினிமா ஞானிகளுக்கு அதெல்லாம் போர் அடிக்கலாம்.. எனக்கு இரண்டாம் பாதி தான் மிகவும் பிடித்திருந்தது.. கதையின் முக்கியத்துவமே அந்தக் காட்சிகள் தானே? அதை அப்படிச் சொன்னால் தானே அழகு? சும்மா, ரெண்டு சவால், நாலு ஃபைட்டு என்று எடுத்தால் இப்போது நடிக்கும் மற்றவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிக்கும் “இந்தியனே வா” பாடல் அங்கங்கு வந்து அணை கட்டுவதை படத்துடன் அழகாகக் காட்டுகிறது.. இந்த இடத்தில் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.. இரண்டு டூயட், ஒரு இண்ட்ரோ சாங்க் மட்டும் தான் படத்தில்.. மற்றவை எல்லாம் கதையின் பின்னணியில் வருபவை.. அந்த இரண்டு டூயட்டும் அழகாக எடுத்திருக்கிறார்கள்..  



படத்தில் இரண்டு ஹீரோயின் என்றாலும், என் பார்வை முழுவதும் அனுஷ்கா மீது தான்.. சோனாக்‌ஷி சின்காவை விட இவருக்குக் காட்சிகள் குறைவு என்றாலும், அந்த ஒரு சில காட்சிகளிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார்.. நகை திருடும் காட்சியில் கேபினுக்குள் ரஜினிக்கு அவ்வளவு அருகில், அவருக்கு ஈடாக சரி சமமாய் அசால்ட்டாக நடித்திருப்பதற்காகவே அனுஷ் செல்லத்திற்கு என் கிஸ்சஸ்.. சோனாக்‌ஷி சின்ஹா வழக்கமான கிராமத்தின் நல்ல, அப்பாவி, கொஞ்சம் விபரமான & பணக்கார ஹீரோவை லவ்வும் பொண்ணு.. தலைவருக்கும் நம்மள மாதிரி தான் டேஸ்ட் போல.. கொஞ்சம் கொழுக் மொழுக்குனு தான் அவர் படங்களில் ஹீரோயின் இருப்பார்கள், சிவாஜி & எந்திரன் விதிவிலக்கு.. இதிலும் அப்படித்தான் இரண்டு கொழுக் மொழுக் ஹீரோயின்கள்.. ரெண்டு ஹீரோயின்களும் லட்டு மாதிரி இன்னும் அழகாக இருக்கிறார்கள் பாடல்களில்.. ரஜினி படம் என்றாலே கவர்ச்சி கம்மியாக இருக்க வேண்டும் என்பது இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது..


சந்தானத்தின் கவுன்ட்டர் டயலாக்குகள் & உவமைகள் எல்லாம் சூப்பர்.. இந்த ஆளு எங்க இருந்து தான் இது மாதிரி உவமைகளை எல்லாம் பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. கடைசிக் காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் வரும் போது, “இவர் பேரு தான் finishing குமாரு” என்று அவரையும் கலாய்க்கத் தவறவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இருக்கும் அந்த வழக்கமான “ஊர்ப் பெரிய மனுஷ, பெரிய குடும்ப கும்பல்” இந்தப் படத்திலும் உண்டு.. அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு டயலாக் என்று சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு சோசியலிசம் போற்றப்பட்டிருக்கிறது,.. அந்த பிரிட்டீஷ் வில்லனின் பொண்டாட்டி மாதிரி இந்திய வைஸ்ராய்களுக்கெல்லாம் பொண்டாட்டிகள் அமைந்திருந்தால் இந்திய சுதந்திரம் மிக எளிதாய் கிடைத்திருக்கும்.. ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் மட்டும் தான் எடுபடவில்லை.. 


பாடல்கள் சூப்பர்.. பின்னணி இசை, படமே அடக்கி வாசிக்கப்பட்டிருப்பதால் அதுவும் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது.. ரத்னவேலுவின் உழைப்பு பல காட்சிகளில் தெரிகிறது.. கண்ணை உறுத்தாமல் பல நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.. ஹீரோயிச வசனங்கள் எங்குமே இல்லாமல், தத்துவம் & சில தேசப்பற்று வசனங்கள் இருப்பது ரஜினி படத்தில் பெரிய வித்தியாசம்.. வசனங்களில் லேசான அரசியல் வாடை இருந்தாலும், ரஜினி அதற்குப் பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.. ஷங்கரின் பிரமாண்டம் எல்லாம் வருடக்கணக்கில் நேரம் எடுத்தால், கே.எஸ்.ரவிக்குமாரின் பிரமாண்டம் நாள் கணக்கில் மட்டுமே நேரத்தை எடுக்கிறது.. மனுசன் மிலிட்டரியில் பெரிய ஆஃபிசராக ஆகியிருக்க வேண்டியவர்.. தப்பித்தவறி சினிமாவிற்குள் வந்துவிட்டார் போல.. இவ்வளவு பெரிய, பிரமாண்டமான படத்தை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எடுத்திருப்பதற்காகவே அவருக்குப் பெரிய சபாஷ் போட வேண்டும்.. பிரமாண்ட அணை கட்டிய லிங்கேஷ்வரனுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டியவர் இந்த பிரமாண்டமான படத்தை ஆறே மாதத்தில் கொடுத்த நம் finishing குமார்..


இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள்.. ரஜினியைக் கட்டி வைத்து அடிக்கும் போதோ, அல்லது அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிறகோ ஒரு சோகப்பாட்டைப் போட வேண்டும், நாம் தியேட்டரில் தலைவருக்காகக் கதறி அழ வேண்டும் என்றெல்லாம் இன்னும் எதிர்பார்க்காதீர்கள்.. பன்ச் டயலாக் பேசிக்கொண்டும், பறந்து பறந்து வில்லன்களை அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.. இப்போதெல்லாம் இரண்டாவது படத்திலேயே பக்கிகள் பன்ச் டயலாக் எல்லாம் பேசுகிறார்கள்.. பன்ச் டயலாக்கிற்கான மதிப்பே போய்விட்டது அவர்களால்.. இன்னமும் தலைவர் அதையெல்லாம் பேசுவது அவர் கௌரவத்திற்கும் மாஸிற்கும் அழகல்ல.. அதனால் அவர் இப்போது ஒரு நீட்டான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.. மக்களின் ரசனையும் மாறிவிட்டது.. இன்னமும் அழுகாச்சி செண்டிமெண்ட், பன்ச் டயலாக், விஷ்க் விஷ்க் சவுண்ட், 20 பேரை அடிப்பதெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.. தனக்கு இருக்கும் பிம்பத்தை உடைத்துத் தானும் நல்ல கதை இருக்கும் படங்களில் நடிப்பேன் எனத் தலைவர் எந்திரனைத் தொடர்ந்து இதிலும் காட்டியிருக்கிறார்.. அவரே மாறிவிட்ட போது நாம் இன்னமும் படையப்பா, பாட்ஷா மாதிரி 20 வருடங்கள் ஏன் பின் தங்கி இருக்க வேண்டும்? நாமும் இந்த மாற்றத்தைப் பின் தொடர்வோம்.. ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா????



மொத்தத்தில், ஒரு பெரிய கண்டத்தில் இருந்து மீண்டு வந்து, “நான் இன்னமும் அதே வேகமும் துள்ளலும் இருக்கும் பழைய ரஜினி தான்” என்று நிரூபித்திருப்பதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.. அவர்கள் கொண்டாடத் தயங்கினாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப் படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மூன்று மணிநேரம் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை ரசித்து விட்டு வாருங்கள்.. ரஜினி படத்தில் ரஜினியைத் தவிர வேறு என்ன இருந்தால் நமக்கென்ன, இல்லாவிட்டால் நமக்கென்ன? மொத்தத்தில், லிங்கா- எங்க தலைவர் வந்துட்டார்யா கிங்கா, பவர்ஃபுல்லா..

ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..

Wednesday, December 10, 2014

உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி டயலாக்குகள், நாட்டைத் திருத்தும் ஐடியாக்கள், “இந்த மாதிரி ஆளுங்கள மிலிட்டரிய விட்டு சுடணும் சார்”, “அரசியல்வாதியாலத் தான் சார் நாடே கெட்டுப்போகுது”, “ஊழல் பண்ணுறவன ஒடனே பிடிச்சி தூக்குல போடணும் சார்” போன்ற அனல் பறக்கும் வசனங்களை எல்லாம் அந்த ஆறிப்போன டீயை உறிந்து கொண்டே பேசுவீர்கள்.. உங்கள் பேச்சை வாய் பிளந்து கேட்கவும் அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது.. 

அந்த டீக்கடை வழியே செல்லும் சில வயித்தெரிச்சல் பிடித்த ஆட்கள் உங்களிடம், “ஏம்ப்பா இவ்வளவு வியாக்கியானம் பேசுறீல, பேசாம நீ அரசியலுக்கு வந்து நல்லது எல்லாம் செய்யலாமே?” என்கிறார்கள்.. பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? “எனக்கு ஆசையாத்தான் இருக்கு... ஆனா கால நேரம் கனிஞ்சு வரும் போது பாக்கலாம்” என்கிறீர்கள்.. மீண்டும் உங்களுக்கென்று இருக்கும் அந்த டீக்கடை ரசிகர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள்.. அந்த வயித்தெரிச்சல் குரூப் இப்போது உங்களை விட்டுவிட்டு உங்கள் ரசிகர்களை தூண்டுகிறது.. “ஏ பாத்தியா இவன? சும்மா பில்ட்-அப் மட்டும் தான் குடுக்குறான்.. இவ்வளவு பேசுறவன் நம்ம ஊர் எலக்சன்ல நிக்க வேண்டியது தான? அவன் கூடயே சுத்துறீங்கல்ல, உங்களுக்கு ஒரு பதவி குடுக்க வேண்டியது தான?” என்று.. சில அப்பாவிகளும் அவர்களின் பேச்சை நம்பிக்கொண்டு உங்களுக்கு எதிராய் திரும்புகிறார்கள்.. ஆனாலும் நீங்கள் உங்கள் முடிவில் தெளிவாய் இருக்கிறீர்கள். இன்னும் அதற்கான காலம் வரவில்லை என்பதைத் தெளிவாக நம்புகிறீர்கள்.. இப்போது அந்த வயித்தெரிச்சல் பிடித்த கும்பல் உங்களைப் பற்றி ஊர் முழுக்கத் தப்பாகப் பேசுகிறது கோழை, பிழைக்கத் தெரிந்தவன், சுற்றி இருப்பவரை ஏமாற்றுபவன், வியாபாரி, அது இதுவென்று.. நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை எப்பவும் போல் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.. அவர்களின் குரைக்கும் சத்தம் உங்களை எதுவும் செய்யவில்லை..




மேலே சொன்ன கதையில் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று தனியாக ஒரு முறை விளக்கத்தேவையில்லை.. இதில் அந்த வயித்தெரிச்சல் குரூப் என்று குறிப்பிடுவது நம் லுச்சா லெட்டர் பேட் அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும், ஃபேஸ்புக்/ட்விட்டர் போராளிகளையும் தான்.. முதலில் ஒரு விஷயம், “நாம் டீக்கடையில் அரசியல் பேசுவதும், ரஜினி மேடையில், சினிமாவில் பேசுவதும் ஒன்றா?” என்கிற கேள்வி வரலாம் உங்கள் மனதில்.. நம் சக்திக்கு நமக்கு கிடைத்திருக்கும் தளம் டீக்கடை தான்.. அவருக்கு சினிமா, அதனால் அங்கு பேசுகிறார்.. மற்றபடி டீக்கடையில் நாலு பேர் நம்மை உற்று கவனிக்க வேண்டும் என்கிற ஆசையில் நாம் பேசும் அளவில் பாதியைக் கூட  அவர் மேடைகளில் பேசுவதில்லை என்பதே உண்மை.. அதற்கே இந்த அரசியல்வாதிகளும், மீடியாவும் அவரை என்னமாய் காய்ச்சுகிறார்கள்? இத்தனைக்கும் இந்த மீடியாக்காரர்கள் தான் அவரிடம் போய் “எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருப்பது..

ஆனால் அதை அச்சில் ஏற்றும் போது, என்னமோ ரஜினியே இவர்களை எல்லாம் அழைத்து ஒரு பிரஸ் மீட் வைத்து, “நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமான்னு குழப்பத்துல இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க.. அடுத்த படம் வரப்ப திரும்ப இதே மாதிரி பிரஸ் மீட் வைக்குறேன்.. அப்பயும் இதே மாதிரி தான் பதில் சொல்வேன்” என்று சொல்வது போல் எழுதுவார்கள்.. பாட்ஷா வந்த காலத்தில் இருந்து தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்த இந்த மீடியாக்காரர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதங்களில் ஒன்று தான் ரஜினியின் அரசியல் எண்ட்ரி.. ஆனால் இவர்களின் அந்த ஈனப்பிழைப்பிற்கு கூட ரஜினி மீது தான் பழி போட்டார்கள்.. ஏதோ புதிதாகப் படம் வரும் போதெல்லாம் ரஜினி அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் என்று..

சந்திரமுகியோ சிவாஜியோ எந்திரனோ வந்த போது ரஜினி அரசியல் பற்றி வாய் திறந்தாரா? இந்த மீடியாக்காரர்கள் தான் ஒவ்வொரு படமும் வரும் போதும் பிச்சை கேட்பவன் போல், இல்லை இல்லை, பிக் பாக்கெட் அடிப்பவன் போல் அவர் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கப் பார்க்கிறார்கள்.. பின் இவர்களே “படம் வரும் போது மட்டும் அரசியல் ஸ்டண்ட் செய்கிறார் ரஜினி” என்பது போல் கார்டூன், கட்டுரை, பாரதிராஜா பேட்டி எல்லாம் எடுத்துப் போடுவார்கள்.. ஏன்யா அரசியல் ஸ்டண்ட் அடித்துத் தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்கிற நிலையிலா இருக்கிறார் ரஜினி? மீண்டும் இந்த பாராவின் முதல் வரியைப் பாருங்கள்.. அந்தப் படங்கள் வரும் போது இந்த மீடியாக்காரர்களை அவர் மதிக்கவே இல்லை.. ஆனால் படங்கள் பட்டையைக் கிளப்பின.. அவர் ஒன்றும் அரசியல் ஸ்டண்ட் அடித்து படம் ஓட வைக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதற்கு சமீபத்தில் வந்த அவரின் அந்தப் படங்கள் தான் தகுந்த உதாரணங்கள்..



தன் ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி மீடியாவின் காற்று படாமலேயே தான் இருக்க விரும்பினார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.. ஆனால் மீடியா தான் அவரை, அவரின் மனநிலை, அவரின் திருமண செய்தி, அவர் மகள்களின் சொந்த வாழ்க்கை, அவரின் உடல் நிலை, அவரின் படங்கள், அவரின் அரசியல் பேச்சு என்று அனைத்தையும் “மீடியா சுதந்திரம்” என்கிற பெயரில் மூக்கை நுழைத்து எழுதிக்கொண்டே இருந்தன.. அவர்களுக்குத் தெரியும் ரஜினி ஒரு பொன்முட்டை இடும் வாத்து என்று.. அதனால் அவர் சும்மாவே இருந்தாலும் மீடியா அவரைப் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இந்தக் கேடு கெட்ட நான்காம் தூண். நிம்மதி வேண்டி இமயமலை சென்றாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.. அவர் என்ன செய்தாலும் அதில் ஒரு குதர்க்கமான விசயத்தை அவர்களாக டெவலப் செய்து, அச்சிலேற்றி தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்திக்கொண்டார்கள்..

இப்போது கூட ‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் என்னமோ ரஜினி தான் வாலண்டியராக வந்து அரசியல் எண்ட்ரி பற்றிப் பேசியது போல் அனைத்து மீடியாக்கரர்களும், திடீர் ஃபேஸ்புக் போராளிகளும் பொங்குகிறார்கள்.. அந்த நிகழ்ச்சியில் அமீர், சேரன் இருவரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசுகிறார்கள்.. அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லாவிட்டால் அது அவர்களை அவமதிப்பதாகிவிடும், அதுவும் போக தன்னை தலைக்கனம் கொண்டவன் என்றும் சொல்லிவிடுவார்கள் என்கிற எண்ணத்தில் அவர்களுக்குக் கூறிய பதிலை நம் மீடியாக்களும் ஃபேஸ்புக் புரட்சியாளர்களும் இங்கு என்னமாய் இட்டுக்கட்டி, ட்விஸ்ட் செய்து போட்டார்கள் என்பதை ஊரே அறியும்.. 




அதாவது இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தானாம்.. ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட வேண்டுமாம்.. ஏன்யா நாட்டுல என்னென்னமோ பிரச்சனை நடக்குது, உங்களுக்கு இதப் பத்தி ஏன்யா இவ்வளவு அக்கறை? அவர் வந்தால் உங்களுக்கென்னா? வராவிட்டால் உங்களுக்கென்ன? அது அவர் இஷ்டம்.. வாழ்வில் எல்லா விசயத்திலும் உங்களால் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பதில் சொல்லிவிட முடியுமா? பின் ஏன் ஒரு நடிகர் மட்டும் மிகவும் சென்சிடிவ்வான, ரிஸ்க்கான விசயத்தில் மட்டும் அப்படி ஒரு முடிவைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாலோ, வர மாட்டேன் என்றாலோ அதனால் யாருக்கு என்ன பயன்? நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் அவர்கள் அரசியலுக்கு வந்ததும் தீர்ந்து விடுமா, அல்லது அவர் வராவிட்டால் நாடே அழிந்துவிடுமா? பின் ஏன்யா ‘பதில் சொல், பதில் சொல்’ என்று அந்த மனிதரை துன்புறுத்துகிறீர்கள்?

என்னது, ரசிகர்களுக்காக இதையெல்லாம் கேட்கிறீர்களா? இதுவரை எந்த ரசிகனும் ரஜினியை நிர்பந்திக்கவில்லை உங்களைப் போல்.. எங்களுக்கு அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம் என்று தான் இருக்கிறோம்.. ஆனால் அது அவரின் சொந்த முடிவு.. நாங்களே கம்மென்று இருக்கும் போது உங்களுக்கு என்னய்யா எங்கள் மீது இவ்வளவு கரிசனம்?

சரி, அவர் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், என்ன செய்யும் இந்த மீடியா? அப்போதும் எதையாவது ஆரம்பிப்பார்கள். “இதை முதலிலேயே செய்திருக்கலாம், கிட்டத்தட்ட 20 வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி விட்டார்” என்று.. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு நடிகனின் உச்ச பட்ச நிலையே கட்சி ஆரம்பித்து தன் ரசிகர்களை தேர்தல் போஸ்டர் ஒட்ட வைக்கும் வேலைக்கு அனுப்புவது தானா? அல்லது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தேர்தலில் சீட் கொடுப்பதா? ரசிகனுக்காகக் கேள்வி கேட்கும் மீடியா முதலில் இதை விளக்க வேண்டும்.. ஒரு நடிகன் கட்சி ஆரம்பித்து, 35 வருடமாக தன் ரசிகன் என்கிற ஒரே தகுதியை மட்டும் உடைய, கொஞ்சம் கூட நிர்வாக அறிவே இல்லாத, ஒருவனுக்கு மந்திரி பதவி கொடுப்பதைத் தான் இந்த மீடியாக்கள் விரும்புகின்றனவா? இதைத் தான் “ரசிகனுக்காகக் கேட்கிறோம்” என்கிற பதம் மூலம் அவர்கள் சொல்ல வருகிறார்களா? மீடியாக்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தை விட பாலாபிசேகம் செய்யும் ரசிகன் ஒருவன் அதற்கு பிரதிபலனாக கட்சி போஸ்டிங்கோ, எம்.எல்.ஏ பதவியோ பெறுவது தான் முக்கியமா? அப்படியானால் ”ஜனநாயகத்தின் நான்காம் தூண் நாங்கள் தான்” என்று கம்பீரமாகக் கூறிக்கொள்ள இந்தக் கேடு கெட்ட மீடியாவிற்கு என்ன அருகதை இருக்கிறது?




மீடியாக்கள் மட்டும் இல்லை, இந்த தனிமனித மீடியாவான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலும் கூட ரஜினியை வைத்து தங்கள் புகழை வளர்க்கத் தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.. அதுவும் இந்த ஃபேஸ்புக்கில் லைக் விழுகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, முந்தாநாள் வரை ரஜினி ரசிகனாக தன்னைக் காட்டிக்கொண்டவன் எல்லாம், ரஜினியை ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்குப் புகழ்ந்து எழுதியவன் எல்லாம் அவரைக் கிண்டலடித்து எழுதுகிறான்.. அவன் அன்று எழுதியதும் அவனின் சொந்த புகழ்ச்சிக்காக, லைக்குக்காக.. இன்று எழுதுவதும் அவனின் புகழ்ச்சிக்காக மட்டுமே.. இன்று அவனைக் கொண்டாடும் லூசுகள், அவன் ”முந்தாநேத்து ரஜினியை பற்றிப் புகழந்து எழுதியது ஏன்?” என்று கேட்க முடியாத அறிவிலிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.. 

முதலில் ஒரு நடிகன் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதில் இவ்வளவு பெரிய debate ஏன் செய்ய வேண்டும்? அவர் ரசிகர்களை exploit செய்கிறார் என்கிறார்கள்.. யார் தான் யாரைத்தான் exploit செய்யவில்லை? பெற்றவர்கள் பிள்ளைகளைச் செய்யவில்லையா? அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களைச் செய்யவில்லையா? முதலாளி தொழிலாளியைச் செய்யவில்லையா? புருஷன் பொண்டாட்டியைச் செய்யவில்லையா? காதலி காதலனைச் செய்யவில்லையா? இவர்கள் எல்லாம் செய்வதால் ரஜினியும் தன் ரசிகர்களை exploit செய்வதைச் சரி என்று சொல்லவில்லை நான்.. அவர் செய்யும் exploitationஐ விட இந்த நாட்டில் மாற்றப்பட வேண்டிய பல exploitationகள் இருக்கின்றன.. மீடியாவும், திடுதிப் ஃபேஸ்புக் புரட்சிக்குஞ்சுகளும் முதலில் அதைப் பற்றியத் தங்கள் சமூக அக்கறையைக் காட்டட்டும்.. 

எம்ஜிஆர் காலத்திலேயே சினிமா என்னும் பொழுது போக்கு அம்சத்தை மக்களின் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் இரண்டறக் கலந்து விட்டதில் இந்த மீடியாவிற்குத் தான் பெரும்பங்கு இருக்கிறது.. இன்று வரை மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுக்காமல், நடிகைகளின் சதைகளையும், நடிகர்களின் கிசுகிசுக்களையும் நம்பி, மஞ்சள் பத்திரிகை போன்று டிஷ்யூ பேப்பருக்குக் கூட பயன்படாத, டைம் பாஸ் செய்வதற்காகப் பத்திரிகையை நடத்தும் யாருக்கும் ரஜினியைக் கேட்க அருகதை கிடையாது.. ரஜினியைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் மீடியா, முதலில் தன்னை அங்கு நிறுத்திக்கொண்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.. ஒவ்வொரு வாரமும் சினிமா ஸ்பெசல், ரஜினி ஸ்பெசல், என்று போட்டு தங்களில் சர்குலேசனைக் கூட்டி கல்லா கட்டுவதில் குறியாக இருக்கும் மீடியாக்கள், கொஞ்சமாவது மக்களுக்குத் தேவையான செய்தியை இனிமேலாவது கொடுக்கட்டும்.. 



விரைவில் லிங்கா விமர்சனம்... :)
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One