அம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..

Wednesday, October 30, 2013

இன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வந்துவிடும் எனக்கு.  இந்த பாடல் என்றில்லை, பொதுவாக பழைய பாடல்களை கேட்டாலே அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். ரேடியோவை அருகில் வைத்துக்கொண்டு, தனக்கு மட்டுமே கேட்கும் அளவில் மிக மிக அமைதியாக ஒலிக்கும் பழைய பாடல்களை அதனோடு சேர்ந்து தானும் பாடிக்கொண்டே வீட்டு கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி தீப்பெட்டி கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார் எங்கள் அம்மா. நான் என் படிக்கும் நாட்களில் ‘அம்மா’ என்று நினைத்துப்பார்த்தால் இந்த poseல் தான் அவர் எப்போதும் ஞாபகம் வருவார். கெட்டு ஒட்டி கெட்டு ஒட்டியே என்னையும் என் தம்பியையும் படிக்க வைத்த ஜீவன்!! இப்போதும் பல பழைய பாடல்கள் மனதில் ரீங்காரமிடும் போது அவையெல்லாம் என் அம்மாவின் குரலில் தான் என் மனதில் ஒலிக்கும்.. அவ்வளவு அழகான குரல். அவரின் ஒரே துணை அந்த பாக்கெட் ரேடியோ தான்.



சிவகாசியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களின் நிலை என்ன தெரியுமா? காலை எழுவது. அச்சாபிசுக்கோ ஃபயர் ஒர்க்ஸ்சுக்கோ வேலைக்கு போகும் கணவனுக்கு சமையல் செய்வது. மதியத்திற்கும் அதே சமையலை பயன்படுத்திக்கொள்வது. மீண்டும் இரவு கணவன் வரும் போது சோறு மட்டும் ஆக்கி பொறியல், குழம்பு எதுவும் வைக்காமல் வெறும் பாலை மட்டும் காய்ச்சி வைத்திருப்பார்கள். கணவன் பக்கோடாவும் மிச்சரும் வாங்கி வருவான். சோற்றில் பாலை ஊற்றி பக்கோடாவை கடித்துக்கொண்டு திருப்தியாக இரவு உணவை முடித்துக்கொள்வார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஏழைப்பெண்கள் கட்டை அடுக்குவது, கெட்டு ஒட்டுவது, என்று தங்கள் அடுத்த வேளை சோற்றுக்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். சின்ன சின்ன தெருக்களாக இருக்கும் சிவகாசியில் அப்படிப்பட்ட ஒரு தெருவில் பகல் நேரத்தில் சென்றால், தெருவின் இரு பக்கமும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு வெளியில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பதை காணலாம். அருகில் கண்டிப்பாக மெதுவான குரலில் ஒரு ரேடியோ பாட்டுப்பாடிக்கொண்டிருக்கும் அந்த சிவகாசி வெயிலை மறக்கடிக்கும் வகையில் மிக மிக இனிமையாக..



ஃபுல் சவுண்ட் வைத்தாலும் காதில் விழாத அளவிற்கு பாட்டு பாட ஆரம்பித்திருக்கும் அந்த ரேடியோவின் கிட்னி செயல் இழந்து பேட்டரி தீர்ந்து போயிருக்கும். அப்பாவிடம் அன்று மாலை வேலையில் இருந்து வரும் போது பேட்டரி வாங்கி வரச்சொல்லுவார் அம்மா. கண்டிப்பாக என் அப்பா வாங்கி வர மாட்டார் என்று என் அம்மாவுக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லுவார். அப்பா வாங்காமல் வருவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று காசு இல்லாமல் வாங்கியிருக்க மாட்டார், அல்லது தன் வேலைப்பளுவால் மறந்திருப்பார். ஆமாம், 7,8 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பெயர் தெரியாத ஒரு கிராமத்தில் இருந்து தன் ஃபயர் ஒர்க்ஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும் ஆணுக்கு ரேடியோ பேட்டரி வாங்குவது  தான் ஞாபகத்தில் இருக்குமா? இரவு சாப்பாட்டிற்கு பக்கோடா வாங்கவே கஷ்டப்படும் ஆளுக்கு, பேட்டரி வாங்க ஞாபகம் இருந்தாலும், வாங்கத்தான் முடியுமா? அப்பா பேட்டரி வாங்கி வரவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின் அவரோடு அம்மா போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, அப்படி இருக்கும். இவர் அழுவதும் அவர் கத்துவதும் நானும் என் தம்பியும் ‘பே’ என்று அதை வெறித்துப்பார்ப்பதும்.. தன் நகைகளை எல்லாம் தன் கணவன் விற்ற போது போது அப்படி சண்டை போட்டிருக்க மாட்டார் அவர். ஆனால் பகல் நேரங்களில் தனக்கு உற்ற தோழனாய், தன் வேலைகளுக்கு ஒரு இளைப்பாறுதலாய் இருக்கும் அந்த உயிரற்ற நண்பன் நாளை தன்னுடன் பேச மாட்டான் என்பதன் ஏமாற்றமும் ஆற்றாமையும் தான் அந்த சண்டையை இன்னும் இன்னும் பெரிதாக்கும்.



ஆனாலும் என் அம்மா மறு நாள் தன் நண்பனுக்கு உயிர் கொடுத்து அவனோடு பேசிவிடுவார். எப்படி தெரியுமா? பகலில் ரேடியோவில் நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் அதன் பேட்டரியை வெயிலில் காய வைப்பார் அம்மா.. வெயிலில் காய்ந்த பேட்டரி, டயாலிசிஸ் செய்யப்பட்ட கிட்னி ஃபெயிலியர் பேசண்ட் போல் கொஞ்ச நேரம் கஷ்டப்பட்டு வாழ்ந்து திரும்பவும் மூச்சை நிறுத்திவிடும். மீண்டும் வெயிலில் காய வைத்து டயாலிசிஸ் ட்ரீட்மெண்ட், கொஞ்ச நேர உயிர் என மாறி மாறி ஓரிரு நாட்கள் அது குற்றுயிரும் கொலையுயிருமாக தன் பணியை செய்யும். அது முழுதாக சாகும் போது அப்பா புது பேட்டரியை கடன் வாங்கியாவது வீட்டிற்கு கொண்டு வந்திருப்பார். ஆனாலும் பேட்டரியை வெயிலில் காய வைப்பது என்ன விதமான அறிவியல் என்று இப்போது வரை எனக்கு புரிந்ததில்லை. அந்த டெக்னிக்கை என் அம்மாவிற்கு கற்றுக்கொடுத்தது ரேடியோவை உற்ற நண்பனாக நினைத்து வாழ்ந்த இன்னொரு சிவகாசிக்காரியாகத்தான் இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன் நான்..

அம்மா காலை எழுந்தவுடன் தொடும் முதல் பொருள் ரேடியோ தான்.. நான் எவ்வளவு சீக்கிரம் கண் விழித்தாலும், எனக்கு முன் எழுந்திருத்து தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பார்கள் அம்மாவும் அவர் ரேடியோவும். நிகழ்ச்சிகள் காலை 5மணிக்கு மேல் தான் என்றாலும், 4.55க்கே அதன் “கொர்” சத்தத்தில் இருந்து கேட்க ஆரம்பித்துவிடுவார். ஆகாசவானியின் ‘ஆ’வை விட்டுவிட்டு வெறும் காசவானியில் இருந்து கேட்டால் கூட அன்றைய பொழுது முழுதாக முடிந்தது போல் இருக்காது அம்மாவுக்கு. அதனால் தான் கொர் சவுண்டில் கூட ஒரு 5நிமிடம் ஓடினாலும் பரவாயில்லை என்று அதனை கதறவிடுவார் காலையிலேயே. இரவு பல நேரங்களில் அதன் பாடல்களை கேட்டுக்கொண்டே அதற்கு ஒரு “குட் நைட்” கூட சொல்லாமல் நாங்கள் அனைவரும் தூங்கிப்போயிருந்தாலும் கூட, அது விழித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் குட் நைட் சொல்லும் வரை. அம்மாவோ நானோ அப்பாவோ ”என்ன சத்தம் அது?” என்று குழம்பி எழும் போது அது தன் “கொர்” சவுண்டோடு அழுது கொண்டிருக்கும் எங்கள் குட் நைட்டுக்கு ஏங்கி. அதன் காதை திருகி குட் நைட் சொன்னதும் அதன் சத்தம் நின்று சமத்தாக எங்களுடன் தூங்க ஆரம்பித்துவிடும்.



அம்மா ரேடியோவில் பாடல் கேட்பதை பார்க்கும் போதே எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக சந்தோசமாக இருக்கும். ஒரு பாடல் முடிந்ததும் அறிவிப்பு வரும் - “ஒலித்த பாடலை பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா” என்று. அந்த அறிவிப்பை அவர்கள் தொனியிலேயே அவர்கள் கூடவே அழகாக சொல்லுவார்.. அடுத்த அறிவிப்பு, - “இனி ஒலிக்க இருக்கும் பாடலை பாடுபவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி” என்றதும், அந்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் முன்பே மிகச்சரியாக அதே பாடலை பாட ஆரம்பித்துவிடுவார். எனக்கு மிகுந்த வியப்பாக இருக்கும், வீட்டிலேயே உட்கார்ந்து தினமும் சமையலுக்கும், கெட்டு ஒட்டுவதற்கும் வாக்கப்பட்டு வந்த அம்மாவால் எப்படி ஒவ்வொரு பாடலையும், அதைப் பாடிய சினிமா பாடகர்களையும் சரியாக நினைவில் வைத்துக்கொண்டிருக்க முடிகிறது என்று. என்றாவது ஒரு நாள் அம்மா மாற்றி சொல்லிவிடுவார். மனோவிற்கு பதிலாக எஸ்.பி.பி என்றோ, ஏ.எம்.ராஜாவிற்கு பதிலாக பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றோ.. நான் ரேடியோக்காரன் தான் மாற்றி தப்பாக சொல்லுகிறான், அம்மா சொல்வது தான் சரி என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்வேன். அம்மாவிற்கு தெரியாத பழைய பாடல்களே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து பாடல்களையும் ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடுவார். ரேடியோ நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் கூட தனக்கு தானே பாடல்கள் பாடி சந்தோசப்பட்டுக் கொண்டிருப்பார். நாங்கள் யாராவது அவர் பாடுவதை கவனிப்பது தெரிந்துவிட்டால், வெட்கமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு பாடுவதை டக்கென்று நிறுத்திவிடுவார். ஆனால் சில நிமிடங்களில் அவரையே அறியாமல் மீண்டும் பாட ஆரம்பித்திருப்பார்.




ஆனால் பாடகர்களை நன்றாக தெரிந்த என் அம்மாவிற்கு அதில் நடித்தவர்கள் யார் என்று கூட தெரியாது! தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டதில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது அவருக்கு? ரேடியோவில் வெறும் குரலோடு திருப்திப்பட்டுக்கொண்டு தன் கற்பனைகளால் ஜெய்சங்கரின் பாட்டுக்கு சிவாஜியை வைத்து உயிர் கொடுக்கும் என் அம்மாவிற்கு நிஜமான அந்த பாடலின் நாயகர்களைப்பற்றி கவலை இல்லை. அதனால் தான் இன்று வரை அவரை டிவி பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு பிடித்த பாடல்களை இப்போது டிவியில் பார்க்கும் போது லேசான ஆச்சரியத்தோடு “இது ரவிச்சந்திரன் பாட்டா? நான் ஜெமினி பாட்டுனே நெனச்சிட்டு இருந்தேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். ஆனாலும் அவர் விரும்பி டிவி பார்ப்பதில்லை. டிவியில் பழைய பாடல்கள் ஒலிக்கும் நேரங்களில் மட்டும் டிவியை ஓட விட்டு, அவர் தன் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார். கண்ணும் கையும் வேலையில் இருக்கும், காது மட்டும் தான் டிவியில் இருக்கும். டிவியையும் ஒரு ரேடியோ போல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அம்மா.

பெரும்பாலும் காலை 9மணிக்கு பல டிவி சேனல்களில் பழைய பாடல்கள் தான். அது முடிந்ததும் டிவியை அணைத்துவிட்டு, இப்போதும் தன் good old friend ரேடியோவை கையில் எடுத்து அருகில் வைத்துக்கொண்டு, கால்களை நீட்டி, வீட்டு கதவின் நிலை பலகையில் சாய்ந்து தன் trademark நிலையில் அமர்ந்து, கெட்டு ஒட்டிக்கொண்டே பி.சுசிலாவோடு சேர்ந்து, “உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னை பாட சொன்னால் என்ன பாடத்தோன்றும்” என்று அழகாக பாடிக்கொண்டிருக்கிறார் அம்மா. ஆம் காலங்கள் மாறினாலும், ஓரளவு வசதி வாய்ப்பு வந்தாலும் அவரால் ரேடியோவையும் கெட்டு ஒட்டுவதையும் விட முடிவதில்லை. ஹா ஹா என் அப்பாவும் வழக்கம் போல் பேட்டரி வாங்கி வருவதில் சொதப்பாமல் இருப்பதில்லை இப்போதும்.. 


46 comments

  1. எங்க அம்மாவ திட்டிபுட்டேன்.மனசு கஷ்டமா இருக்கு.பேசி மன்னிப்பு கேட்டுட்டேன்.இருந்தாலும் மனசு ஒரு மாதிரிய இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவிடம் சண்டை போடுவது சிறு வயதில் ஆனந்தம்.. வயதாக வயதாக நம்மை மிகவும் கஷ்டப்படுத்தும் சங்கதி அது

      Delete
  2. ரொம்ப அழகா இருந்துச்சு ராம்... நீங்க எழுதுன பதுவுகளிலேயே இதுதான் எனக்கு ரொம்ப மனச நெகிழ வச்ச பதிவு...

    ReplyDelete
  3. Best!
    அது அவர்கள் உலகம். கெட்டு ஓட்டுவது என்றால் என்ன?
    இப்ப நல்ல நல்ல சவுண்ட் சிஸ்டம் உடன் கிடைக்கும். வாங்கிக் கொடுங்கள். ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எவன் ஒருத்தன் தன் பழைய வாழ்கையை ஏழ்மையை நினைகிறானோ அவன் வாழ்வில் சிறந்து வருவான்.

    தமிழ்மணம் பிளஸ் வோட்டு போட்டு விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு சாதாரண ரேடியோ போதுமாம்.. கெட்டு ஒட்டுவது என்பது, தீப்பெட்டி, பட்டாசுகளில் இருக்கும் குப்பி போன்றவற்றை பசையால் ஒட்டுவது

      Delete
  4. பிரமாதம்! என்ன அழகான நடை! அப்படியே கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்!

    ReplyDelete
  5. அன்பின் ராம்குமார் - அருமையான பதிவு - அம்மாவின் நண்பன் பதிவு மனதைக் கவர்கிறது - ஏழ்மையின் வருமையிலும் ரேடியோ கேட்டுக் கொண்டே பணியினைச் செய்வது - பாடல்களை நினைவில் நிறுத்தி பணி செய்யும் போது பாடுவது -அம்மாவின் செயல்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியினை ஊட்டி இருக்கும். நல்லதொரு நீண்ட பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுகளுக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சார்.. நன்றி அன்பின் சீனா சார் :)

      Delete
  6. நெகிழ்வான பதிவு.

    அருமையான நடை!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  7. அருமை ராம்குமார். திருமதி துளசி கோபால் அவர்கள் உங்கள் பதிவை படிப்பது 'ஒரு வரம்'. நான் பதிவு எழுத ஆரம்பித்ததே அவர்கள் பதிவை படித்துத் தான். எனது முதல் பதிவில் அவர்கள் பெயரை குறிப்பிட்டிருந்தேன். அவர்களும் படித்து நன்றி சொல்லியிருந்தார்கள்.

    எல்லா சிவகாசிக்காரர்களின் வாழ்க்கையும் இது தான்; உழைப்பால், வியர்வையால் உயர்ந்த மண். நாங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தாலும் நாங்கள் தலையெடுக்கும் வரை வாழ்க்கை நடத்தியது எங்கள் அம்மா மேல்பெட்டி கெட்டு ஒட்டியதால் தான். அழுது விட்டேன் ராம்குமார் உங்கள் பதிவால்.

    இது தான் உயிருள்ள எழுத்து. எனது பக்கங்களில் பகிர்கிறேன்.

    செய்தித் தாள்கள், வார, மாத இதழ்கள் - The Hindu, தினமணி, தினமலர், தினத்தந்தி, கல்கி, குமுதம், விகடன் - நீங்களெல்லாம் இங்குள்ள அற்புதமான எழுத்தாளர்களை கண்டு கொள்வதில்லை.

    ராம்குமார், உலகம் நம் கையில், மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் உங்கள் வாழ்த்துக்களும் ஊக்கமும் என் எழுத்தில் இன்னும் இன்னும் பொறுப்பை அதிகரிக்க வைக்கின்றன.. மிகுந்த நன்றி சார்.. நம் ஊர் வாழ்க்கையை சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.. கொஞ்சம் கொஞ்சமாக சொன்னாலும் தெளிவாக ஆழமாக சொல்ல நினைக்கிறேன் சார்

      Delete
  8. எந்த வேலையும் பாடலை கேட்டு ரசித்துக் கொண்டே செய்யும் போது... அந்த சந்தோசமே தனி...

    ரசனைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் அண்ணே.. அதுவும் ஒரு நாளில் வெறும் 4,5 மணி நேரமே சேவையில் இருக்கும் வானொலியில் அந்த நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டே வேலை பார்ப்பது எவ்வளவு பெரிய சந்தோசம்?

      Delete
  9. எவன் ஒருத்தன் தன் பழைய வாழ்கையை ஏழ்மையை நினைகிறானோ அவன் வாழ்வில் சிறந்து வருவான்.

    ReplyDelete
  10. அம்மா ....... எப்பவுமே அதிசயம் தான். எந்த திக்கில் பயணித்தாலும் ஒவ்வொரு புள்ளியிலும் அமாவின் ஒரு கதை இருக்கும். நன்றி சிவகாசிக்காரன். என் அம்மாவை தினம் நினைவில் சந்தித்தாலும் இன்று இன்னும் இன்னும் அன்புடன் சந்திக்க போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் அம்மாவின் தாக்கம் இருக்கும்

      Delete
  11. அருமையான பதிவு!! அருமையான மொழி நடை !!

    ReplyDelete
  12. நன்றி நண்பரே.

    இந்த நேரத்தில் என் அம்மா ராக்கெட் குப்பி ஒட்டியது நினைவுக்கு வந்து போகின்றது.

    ReplyDelete
    Replies
    1. நம் சுற்றுவட்டாரங்களில் எந்த பெண் housewifeஆக இருந்திருக்கிறார்? வீட்டிலும் வேலை தானே அவர்களுக்கு?

      Delete
  13. ஆஹா... என்னுடைய பால்யகால அனுபவங்கள் இவை. நான் வாழ்ந்த மண். நானும் கட்டை அடிக்கி இருக்கின்றேன். டஜன் மடிச்சிருக்கேன் தீப்பெட்டி லேபிள் & பண்ட்ரோல் (பண்ட்ரோல் என்பது தீப்பெட்டியின் இரு பக்கங்களையும் ஸ்சீல்ட் செய்வது ஒரு காகிதத்தால் பின் காலத்தில் அது ஸ்டாம்ப் மாதிரி செண்ட்ரல் எக்ஸைஸ் காகிதம் ஒட்டுவது வாடிக்கையானது). அப்றம் பயர் ஆபீஸில் டெசி குத்து, டெலிபோன் வெடிக்கு அட்டைப்பெட்டி ஒட்றது, இப்டி எல்லா வேலைகளையும் என் சின்ன வயதினில் பள்ளி நாட்களில் செய்திருக்கின்றேன். அதே நினைவுகளை மீட்டி எழுதியமைக்கு பாராட்டுக்கள் சிவகாசிக்காரன்.

    ReplyDelete
    Replies
    1. நம் சிறு வயதில் செய்யாத வேலை படாத கஷ்டம் எல்லாம் உண்டா என்ன? அதற்கான பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோமே?

      Delete
  14. சின்ன வயசு ரேடியோ ஞாபகங்கள் எனக்கும் வந்தது! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரேடியோ ஒரு காலத்தில் வீட்டில் எல்லோருக்குமே நண்பன் தானே?

      Delete
  15. நான் கட்டை அடுக்கியிருக்கிறேன், லக்கி பிரைஸ் அட்டைகள் ஒட்டியிருக்கிறேன். என் அம்மா இப்படி சம்பாதித்த பணத்தில் ஒரு ரேடியோ வாங்கிய அனுபவமும் உண்டு... பழைய நினைவுகளைக் கிளறிய பதிவு....

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் என்னவெல்லாம் செய்திருக்கிறோம்? அருமையான நினைவுகள் அவை..

      Delete
  16. நான் எங்கள் பழைய ட்ரான்ஸ்சிஸ்டரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன் ராம். சிற்றலை, மத்திய அலை, பண்பலைக்காக அல்ல. அது தரும் நினைவலைகளுக்காக.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார்.. எங்கள் ஆச்சி வீட்டில் இப்போதும் அந்தக்கால amritsar ரேடியோ ஒன்று உள்ளது.. எங்கள் தாத்தா இப்போதும் அதை அடிக்கடி துடைத்து, ஒரு துணியால் மூடி வைத்திருப்பார்.. அது வேலை செய்யும் காலத்தில் தரையில் இருந்து 5அடி உயர திண்டில் வைக்கப்பட்டிருக்கும்.. அதிகாலை மற்றும் இரவு நேர செய்தி கேட்பதற்காக என் தாத்தா அதை on செய்து மிக குறைந்த சத்தத்தில் அதற்கருகில் சுவற்றில் கை வைத்தவாறே நின்று செய்திகளை கவனமாக கேட்டுக்கொண்டிருப்பார்.. செய்திகள் முடியப்போகின்றன என்று தெரியும் போது off பட்டனின் கையை தயாராக வைத்திருப்பார்.. செய்தி வாசிப்பவர் “வணக்கம்” என்று சொல்லி முடிக்கும் போது அவர் கை ரேடியோவை அணைத்திருக்கும்.. என் தாத்தா ரேடியோவில் செய்தி கேட்கும் அழகு ஒரு மாஸ் ஹீரோ கம்பீரமாக நிற்பது போல் இருக்கும்.. ரேடியோ உண்மையில் பல நினைவலைகளை கிளப்புகிறது :)

      Delete
  17. இப்போ உங்க அம்மாவ நான் பாத்ததே இல்லைனாலும், மனசுல கற்பனைல பாத்துக்கிட்டேன், உங்க அம்மாவ, அவங்க ரேடியோவ, உங்க வீடு எல்லாத்தையுமே! அழகா எழுதி இருக்கிங்க.

    அழகு!

    ReplyDelete
    Replies
    1. உங்க கற்பனையால எங்க வீட்டயும், ரேடியோவையும் வேணா பாக்க முடியும்.. ஆனா கண்டிப்பா எங்க அம்மா உங்க கற்பனைக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப அப்பாற்பட்டு இருப்பாங்க.. எங்க அம்மானு இல்ல, பொதுவா எல்லோரோட அம்மாவும் அப்பாவும் அப்படித்தான்.. :-)

      Delete
  18. Iniya Ram,

    Very good collection of memories.Enjoyed reading your narration.Mostly all those who born in and around sivakasi would have similar memories.You have got that skill like Raju Murugan to touch reader's heart.
    Please tell me how to type in Tamizh.
    Kovilpattikaran.

    ReplyDelete
    Replies
    1. You can type in Thamizh by downloading the following link sir..
      http://software.nhm.in/products/writer

      Delete
  19. எல்லோரும் தீபாவாளிக்காக பட்டாசு வாங்கிக்கொண்டிருக்கையில் பட்டாசு நகரத்திலிருந்து ஒரு அழகான அமைதியான அன்பான பதிவு...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி. அழகான அமைதியான அன்பான வாழ்வும் சூழலும் இருந்ததால் அதை அபப்டியே பகிர முடிந்தது :)

      Delete
  20. அருமையான காட்சி விவரிப்பு! உங்க அம்மா பக்கத்துல இருந்து பாட்டு கேட்ட ஒரு திருப்தி உங்க எழுத்துல வருது! வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தக்குடு :-)

      Delete
  21. தங்களது அம்மாவை பற்றி எழுதியது என்னை கடந்தகாலத்தின் பல நினைவுகளுக்கு கொண்டு சென்றுவிட்டது.
    எனது மனைவியும் எனது மகன்களும் என்னை எனது அம்மாவின் பேச்சைத்தான்க் கேட்பீர்கள் என்று அடிக்கடி காயப்படுத்துவார்கள்.
    அந்த காயத்துக்கு தங்களது பதிவு எனக்கு மருந்தாக இருக்கிறது.
    தங்களது அம்மாவால் தங்களுக்கு ஏற்பட்ட அனைத்து அனுபவங்களும் எனக்கும் ஏற்பட்டுள்ளது.
    எனது கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டீா்கள்.
    என்னால் மறக்க,மறக்க முடியாத,மறக்கக்கூடாத நெகிழ்வான பதிவு.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவும் நன்றி சார்.. அம்மா, நமக்காக வாழும் ஜீவன் என்றும்... அவர்களை நாம் மறந்தாலும், அவர்கள் என்றும் நம்மை மறப்பதில்லை..

      Delete
  22. Love you ram... Reminded me a lot.. என்ன ௮ம்மாக்கு breathing problems வந்ததால கட்டு ஒட்றத விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு.. But andha kasu dan en school life la pen pencil note a marunadhu... Appa salary dress fees family expenditure dhan.. Thank you ram...

    ReplyDelete
  23. Merkur Slots Machines - SEGATIC PLAY - Singapore
    Merkur 출장샵 Slot Machines. novcasino 5 star rating. The Merkur https://septcasino.com/review/merit-casino/ Casino game worrione was the ventureberg.com/ first to feature video slots in the entire casino,

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One