டைம் மிஷின்!!!!!

Thursday, December 27, 2012

”டொய்ய்ங்ங்ங்ங்ங்ங்” மாடியில் என் அறையில் தான் இப்படி ஒரு பயங்கர சத்தம். முதலில் கேட்பவர்களுக்கு தான் அது பயங்கர சத்தம், பயமுறுத்தும் சத்தம். எனக்கு அது வழக்கமான, பழகிப்போன சத்தம். “ஹிம் நேத்த விட இன்னைக்கு 42 டெசிபெல் கம்மி” என்று இந்த சத்தத்தை அளவெடுத்துவிட்டு அடுத்த பெரிய சத்தத்திற்கு என்னை தயார் செய்துகொண்டிருப்பேன்.. கீழே இருந்து அம்மாவின் குரல் அந்த சத்தத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடுவது போல் வரும்,”டேய் ஏன்டா இப்படி நெலையில நிக்காம ஆடித்தொலையுற?”. நான் அந்த வார்த்தையையும் மைண்டில் என் ஆராய்ச்சியில் ஏற்றி யோசித்துக்கொண்டிருப்பேன், “நிலையில் நிற்காமல் ஒரு பொருளால் ஆட முடியுமா? அச்சு வேண்டுமே? அச்சு இல்லாமல் அந்தக்காலத்தில் ஏதோ கோயிலில் கூட சிவலிங்கம் இருந்ததாக் சொல்வார்களே?!” என்று. என் கவனம் மீண்டும் கலைக்கப்பட்டது, "ஒவ்வொரு வீட்லயும் பிள்ளைக படிச்சி வேலைக்கி போயி பெத்த தாயி தகப்பனுக்கு சம்பாதிச்சி கொடுக்கும்ணு தான் கேள்விப்பட்டிருக்கு. ஆனா எனக்கு வாய்ச்சது, இருக்குற சொத்தையும் இப்படி வெடிக்க வச்சே கரைச்சிரும் போல” என்று சலித்துக்கொள்வார். அவருக்கு தன் கணவன், அதான் என் அப்பா, அவரின் சொந்தங்களோடு சண்டையிட்டு வாங்கிய இந்த வீடு என் “டொய்ய்ய்ங்ங்ங்”கினால் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம்.. ஆனால் எனக்கு இந்த சத்தங்கள் தான் வாழ்க்கை.



அவனவன் பி.ஈ. முடிச்சிட்டு எதாவது ஐ.டி. கம்பெனில ஷிஃப்ட் முறையில ஒக்காந்து கோட் எழுதிக்கிட்டு, 2 வருஷத்துல வீடு, 4 வருஷத்துல கல்யாணம், அஞ்சு வருஷத்துல குட்டி போடுறதுனு இருக்கும் போது நான் மட்டும் இப்படி வீட்டில், சம்பாதிக்காமல், ஒழுங்காக சாப்பிடாமல், குளிக்காமல், இரவு பகல் தெரியாமல், பைத்தியக்காரன் போல், ஒரே அறையில் அதுவும் திடீர் திடீரென்று ‘டொய்ங்’ சவுண்டெல்லாம் கொடுத்துக்கொண்டிருந்தால் எந்த அம்மாவுக்கும் கோவம் வரத்தான் செய்யும். அதுவும் ஒரு முறை, ’பையனுக்கு கால்கட்டு போட்டால் சரியாகிவிடும்’ என்று என் அப்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்து யாரோ ஒரு தூரத்து உறவினர் பொண்ணை குடும்பத்தோடு வரவழைத்து அவர்கள் என்னை பார்க்க என் அறைக்கு வந்ததார்கள். நான் அவர்கள் வருவதை கவனிக்காமல், எதையோ எதோடோ கலந்து கொண்டிருந்தேன். எனக்கு அதின் பெயர்கள் எல்லாம் தெரியாது. எல்லாமே ட்ரெயல் & எரரில் தான் செய்து கொண்டிருப்பேன். ஒன்றும் ஆகவில்லை என்றால் சக்ஸஸ். “டொய்ங்” என்று வெடித்தால் இன்னொன்றை கலக்க எடுத்துக்கொள்வேன், இதை ஃபெயிலியர் என்று நோட் பண்ணிக்கொண்டு. அம்மா, “டேய் தம்பி இங்க பாரு தீபா வந்திருக்கா” என்றார். நான் மெதுவாக அவளை பார்த்தேன். இவ எங்க சொந்தக்காரி தானா என ஒரு சந்தேகம். எங்க சொந்தக்காரய்ங்க மேலயே டவுட்டு வந்தது, “எவனோ எங்கேயோ தப்பு பண்ணிருக்காய்ங்க, நம்ம சொந்தத்துல ஏது இவ்வளவு அழகான பொண்ணு?” என்று. ஆஆவென்று வாயை திறந்து கொண்டே கையில் கலந்துகொண்டிருப்பதின் அளவை கவனிக்காமல் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறேன். காதல் என்பது கூட ஒரு ரசாயன மாற்றம் தானே?! ஒரு சத்தம், நான் காற்றில் பறப்பது போல் ஒரு சுகமான அனுபவம், சிகப்பும் நீலமும் மஞ்சளும் கலந்த ஒரு ஒளி வெள்ளம். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் சிம்பு சொல்வாரே, ’காதல்னா நம்மள போட்டு தாக்கணும், அப்படியே தலைகீழா புரட்டி போடணும்’னு அது மாதிரி நான் தலைகீழாக கிடந்தேன். 

 தீயணைப்பு வீரர்கள் வந்து என் மூஞ்சியில் தண்ணீரை அடித்து வீட்டிற்கு வெளியில் கொண்டு வந்து போட்ட போது தான் உணர்வு வந்தது. மெதுவாக எழுந்து வீட்டை பார்த்தேன். எங்கள் வீடு மட்டும் நனைந்திருந்தது. “எம்மா நம்ம வீட்ல மட்டுமா மழ பேய்ஞ்சது?” என்று மெதுவாக என் அம்மாவிடம் திரும்பி கேட்கும் போது தான் எனக்கே உஷார் வந்தது, என் காதலின் கெமிஸ்ட்ரி ஓவராகி வீட்டையே கொழுத்தி விட்டது என்று. அப்போது ஓடிய உறவினர்கள் தான், இப்போது வரை ஒரு பய எங்க வீட்டுக்கு வருவதில்லை.. பல நாட்களுக்கு பிறகு என் அம்மாவும் அப்பாவும் ரவுண்டு கட்டி என்னை அடித்தது அப்போது தான். அதில் இருந்து ‘இவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தால் நம்மை கொலை கேஸில் சிக்க வைத்து விடுவான் என்று தீபா கீபா என்று எவளையும் அழைத்து வருவதில்லை. என் கெமிஸ்ட்ரியும் லேசான வெடிப்புகளுடன் மட்டும் நடந்துகொண்டிருந்தது.



இப்படி அடிக்கடி என் வீட்டில் தீபாவளி கொண்டாடுவதும் சத்தம் போட்டு வேட்டு வெடிப்பதும் என் பொழுதுபோக்கு ஒன்றும் இல்லை. நான் ஒரு வின்னான, இல்ல இல்ல விக்யான ச்சே இந்த தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? நான் ஒரு சயிண்டிஃபிக் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். சினிமா ஹீரோ பாணியில் சொல்வதானால் இது என் லட்சியம், வெறி. என் பாணியில் சொல்வதானால் நான் கண்ணை திறந்து காணும் கனவை நிஜமாக்கும் ஒரு வழி. நான் இப்போது ஒரு டைம் மிஷினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். யோசித்துப்பாருங்கள், வரலாற்றை படிக்கும் போது நம் தலையை சுற்றி நாமாக கற்பனை செய்த பிம்பங்கள், பிரமாண்டங்கள், பழைய வாழ்க்கை முறைகள் இதையெல்லாம் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? இதை கேட்கும் போது உங்களுக்கு நக்கலாக நம்ப முடியாமல் இருந்தால், இப்போதே ஓடிவிடுங்கள் என் அறையை சாத்திவிட்டு. பின் நாளை நான் சாதித்தவுடன் வந்து, “சுரேஷு என்ன கிளியோபாட்ரா கிட்ட கூட்டிட்டு போடா’, ‘தம்பி மகாபாரத போர் எப்படி நடந்துச்சின்னு பாக்கணும், தலைவரு பெங்களூர்ல கண்டக்டரா இருந்தத காமிப்பா”னு எவனாவது கேட்டீங்கன்னே நாட் அலவ்டு, இப்பவே சொல்லிட்டேன் ஆமா..


எனக்கு இப்போது வயது 32 ஆகிறது. என்னது? 42 போல் இருக்கிறதா? ஹலோ நான் ஹேர் கட், ஷேவ் எல்லாம் பண்ணிட்டு வந்து நின்னா இன்னும் ஏழு குறைந்து 25 வயது போல் இருப்பேன். என் கூட படிச்சவன் எல்லாத்துக்கும் கல்யாணம் ஆகிருச்சி. சில அவசரக்குடுக்கைகள் இப்போது ரேன்க் கார்டுகளில் கையெழுத்து போடும் அளவிற்கு  கூட இருக்கிறார்கள். எனக்கு அவர்களையெல்லாம் பார்த்தால் ஏதோ ரோட்டில் போகும் எருமையை பார்ப்பது போல் இருக்கும். இலக்கு இல்லாமல் பணத்தின் பின் ஓடும் வாழ்க்கை. ஏதோ கடமைக்கு அறிவியலை மூளையில் ஜெராக்ஸ் எடுத்து அதை பரிட்சை பேப்பரில் வாந்தி எடுத்து அதோடு மறந்துவிட்டு, சில பல முறை மனப்பாடம் செய்த “ya tell me about yourself" என்னும் இன்டர்வியூ கேள்விக்கான பதிலை மூன்றாம் ஆண்டு இறுதி முதல் நான்காம் ஆண்டு முடிக்கும் வரை ஒவ்வொரு மத்திய வயது வெள்ளைத்தோல் பெண்ணிடமும் கூறி தன்னை அதிகமாக பேரம் பேசும் கம்பெனியில் வேலைக்கு போய் கோட் எழுதி, உடன் வேலை செய்யும் வேறு சாதி பொண்ணை காதலித்து பெற்றோர்களின் வயிற்றெரிச்சலில் ஹோமம் வளர்த்து மணமுடித்து, வருசா வருசம் அப்ரைசல் வரும் போது புலம்பி, அப்ரைசல் முடிந்ததும் வேறு கம்பெனிக்கு ஓடி, சம்பள எண்களின் உயர்வை வைத்து வாழ்வின் சந்தோஷத்தை அளவிடும் அவர்களுக்கும், அதிகான வைக்கோலை சுற்றி சுற்றி வரும் எருமைக்கும் எனக்கு சத்தியமாக வித்தியாசம் தெரிவதில்லை.



இன்னும் சிலர் இருக்கிறார்கள், வேலைக்கு போனவுடன் நண்பர்கள் மூலம் தன் குடும்பத்துக்கு தனது கல்யாண ஆசைகளை மறைமுகமாக சொல்ல வைப்பார்கள். அவைங்களும் அவன் வீட்டுக்கு போகும் போதெல்லாம், “ஹ்ம் வேல கெடச்சிருச்சி, அடுத்து எப்ப கல்யாணம்?” என்று கேட்பான். மறு நாள் இவன் அவன் வீட்டில் இதே கேள்வியை கேட்க வேண்டும் என்கிற டீலிங்கில் இந்த கருமம் ஓடும். இவைங்கல்லாம் என்னத்த சாதிச்சிட்டோம்னு கல்யாணம் பண்ணுறாய்ங்க? தெருத்தெருவா போய் பழைய பாத்திரத்துக்கு துணி விக்குறவன் மாதிரி சிம் கார்டு, சிமிண்ட்டு, இன்சூரன்ஸுனு விக்குறாய்ங்க.. இல்லேனா பேங்க்ல உக்காந்து சொத் சொத்னு சீல் குத்துறாய்ங்க. அதுவும் இல்லனா அவங்க அப்பா சம்பாதிச்சி வச்சிருக்குற கடையில ஒக்காந்து ரோட்டுல போற வர வண்டிய எண்ணிக்கிட்டு இருக்குற கேப்புல வியாபாரம் பண்ணுவாய்ங்க.. அதுவும் இல்லேனா இருக்கவே இருக்கு, ஊருக்கு ரெண்டு சாஃப்ட்வேர் கம்பெனி. கோட் எழுதுறேன், டெஸ்டிங் பண்ணுறேன்னு காலத்த ஓட்டிருவாய்ங்க. இன்னும் கொஞ்ச பேரும் இருக்காய்ங்க.. நம்ம கூட அவைங்க என்ன லட்சணத்துல படிச்சாய்ங்கனு தெரியும். ஆனா இப்ப எதாவது ஸ்கூல்லயோ காலேஜ்லயோ பாடம் நடத்திக்கிட்டு அவைங்கள மாதிரியே ஒன்னத்துக்கும் உருப்படாத துணி விப்பவன், பேங்க்ல சீல் குத்துறவன், கம்ப்யூட்டர் முன்னாடி தவம் இருப்பவன்னு உருவாக்கி தருவாய்ங்க. ச்சே, படிப்போட பர்பஸே இங்க இல்ல. இந்தியால வருஷத்துக்கு வெறும் 3000பேர் தான் பேடண்ட்க்கு அப்ளை பண்ணுறாய்ங்களாம். அதுவே ஜப்பான், சீனால லட்சக்கணக்குல இருக்கு.. வாழ்க்கைனா ஒரு லட்சியம் வேணும்.



சின்ன வயதில் வரலாற்று புத்தகங்களை படித்த போது வரலாற்றின் மீது காதலும், பத்தாம் வகுப்பு படித்த போது ரோசி டீச்சர் அழகாக இருந்ததால் சயின்ஸ் மீது  காதலும் வந்தன. அந்த இரண்டும் சேர்ந்து இதோ என்னை இந்த உலகின் முக்கிய கண்டுபிடிப்பான டைம் மிஷினை கண்டுபிடிப்பதை நோக்கி கொண்டுவந்திருக்கின்றன. இது வரை என் ஆராய்ச்சி 22 முறை தோற்றுள்ளது. அது இருபத்தி மூன்றாவது முறையாக நடக்கக்கூடாது என்று தான் இந்த முறை மிகவும் கவனமாக இருக்கிறேன். டைம் மிஷின் என்பதை பற்றி உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் பூர்வமாக சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும். அய்யோ ஓடிவிடாதீர்கள். மிகவும் எளிதாகவே சொல்கிறேன். அதாவது நாம் காலத்தை கடக்க 4D வேண்டும். 4D இருந்தால் காலத்தை கடந்து நாம் நினைக்கும் காலத்திற்கு சென்றுவிடலாம். நீங்கள் 3D கேள்வி பட்டிருப்பீர்கள். நீளம், அகலம், உயரம் இது தான் 3D. இதில் நான்காவதாக ஒன்றை அதாவது காலம் என்னும் ஒன்றை இணைத்தால் கிடைப்பது 4D. நீளம், உயரம், அகலம், காலம் இந்த மூன்றையும் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால் நாம் காலத்தை மீறலாம். அப்படி காலத்தை மீற நாம் இன்னொன்றை செய்தாக வேண்டும். அதாவது ஒளியின் வேகத்தை விட அதிகமாக சென்றால் காலத்தை கடக்கலாம். இப்போது என் இலக்கு ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு வஸ்துவை கண்டுபிடிப்பதில் தான் இருக்கிறது. என்னது ஒளியா? அது நொடிக்கு மூனு லட்சம் கிலோமீட்டர் போயிரும். ஆமா அதை விட வேகமா போற ஒன்னத்தான் கண்டுபிடிக்கணும்.

  

இப்படித்தான் ஒரு முறை என் அப்பாவிற்கு கம்பெனியில் கொடுத்த காரில் அவர் அசந்து தூங்கும் ஒரு உச்சி வெயில் ஞாயிற்றுக்கிழமையில் அதை முயற்சி செய்தேன். கொஞ்சம் (ரொம்பவே) பயமாக இருந்ததால் இடது பேண்ட் பாக்கெட்டில் பிள்ளையார் போட்டோவும், வலது பேண்ட் பாக்கெட்டில் ஏசுநாதர் படமும் (ரோசி மிஸ் மீது கொண்ட பாசத்தால்), வைத்துக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். தேதி, நேரம், இடம் என்று எதையும் நான் ஃபீட் செய்யும் முன்னரே லூஸ் மோஷன் போல் அவிழ்ந்து ஓடியது கார். டம் எனும் சத்தத்துடன் ஒரு இடத்தில் நின்றது. கிட்டத்தட்ட 50 வருடங்கள் பின்னோக்கி வந்துவிட்டது போல் தெரிந்தது. எங்கும் ஒரே குப்பை மயம். ஒரு நாய் “யார்டா இவன் புதுசாக” என்பது போல் குரைத்தது. ’பார்ரா நம்ம தெரு நாய் மணி மாதிரியே அந்தக்காலத்துல கூட ஒரு நாய் இருந்திருக்கே’ என வியந்து கொண்டே என் மீது இருக்கும் குப்பையை எல்லாம் எடுத்து விட்டு பார்த்தால், அட எங்க தெருவை கூட நான் தாண்டவில்லை. அது எனது 19வது தோல்வி. தவறை குறித்துக்கொண்டேன் “நம்மூர் சாலைகளில் காலத்தை கடக்க முடியாது” என்று. அரை தூக்கத்தில் அலறி அடித்து ஓடி வந்த என் அப்பா காரையே வெரித்து பார்த்துக்கொண்டிருந்தார். அன்று முதல் இன்று வரை என் அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவரின் அந்த வெரித்த பார்வை தான் ஞாபகம் வரும் எனக்கு. ரொம்ப காமெடியாக இருக்கும் அவரின் அந்த பார்வையைநினைக்கும் போது. இன்று வரை அவர் சம்பளத்தில் அந்த காருக்கான பணம் பிடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அறிகிறேன். அதிலிருந்து அவர் டூவீலரை கூட விற்றுவிட்டு பஸ்ஸில் போய்விட்டு பஸ்ஸிலேயே வந்துவிடுகிறார். இதனால் கூட என் ஆராய்ச்சியில் சிறு தொய்வு.


இப்படி என் ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் ஒரு கதை உண்டு. ஆனால் ஒரு வெற்றியை கொடுத்துவிட்டால் என் தோல்விகள் எல்லாம் வெற்றிக்கதைகள் ஆகிவிடும். அந்த ஒரே ஒரு வெற்றிக்காத்தான் நான் வீட்டில் ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்கொண்டு ஆரய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் என்னும் பெயரில் வரும் சில துரோகிகள் தான் என் தன்னம்பிக்கையை அடிக்கடி குழைப்பவர்கள். தங்கள் பெண் தோழியரோடு எடுத்த படங்களை எல்லாம் காமித்து வெறி ஏற்றுவார்கள். பெண் தோழி இல்லாததை ஏதோ ஆண்மை இல்லாதது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாததெற்கெல்லாம் வேறு நக்கல். பேசாமல் எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்டோடு சென்னைக்கு பஸ் ஏறிவிடலாமா என்று யோசிப்பேன். ஆனால் நான் 22 முறை தோற்றது இதற்காகவா என்னும் சீரிய எண்ணம் என்னை மீண்டும் டைம் மிஷினை நோக்கி இழுத்துவிடும். நாளை இவர்களே வந்து கேட்பார்கள், “மாப்ள டென்த்ல நான் லவ் லெட்டர் குடுக்கும் போது வாத்தியார்ட்ட மாட்டிட்டேன்டா. இப்ப வரைக்கும் என் தம்பி அத சொல்லி கிண்டலடிக்கிறான், குடும்பத்துல மானம் போகுது. கொஞ்சம் உன் மிஷின்ல போயி கரெக்ட்டா லெட்டர குடுத்துட்டு வந்துரலாம்டா”னு.. அப்ப இருக்கு இவைங்களுக்கெல்லாம் வேடிக்கை..


இப்படியே போய்க்கொண்டிருந்த என் ஆராய்ச்சி வாழ்க்கையில் இன்னும் பல சின்ன சின்ன ட்ரெயல் எரர்களை முடித்து, இன்று நான் இருபத்தி மூன்றாவது முறையாக முயலப்போகிறேன். கிண்டலடித்த நண்பர்களும் உறவினர்களும், ஓடிப்போன தீபாவும் ஞாபகம் வந்து போனார்கள். ’எல்லாருக்கும் இருக்குடீ வேட்டு’ என்று நினைத்துக்கொண்டு, பிள்ளையாரும் ஜீஸசும் ராசி இல்லாததால் இந்த முறை மேரி மாதாவும், முருகப்பெருமானும் என் பேண்ட் பையில் அமர்ந்து கொண்டார்கள். கார் போன்ற மாடல் நம் சாலைக்கு ஒர்க் அவுட் ஆகாது என்பது எனது 19வது தோல்வியின் ரிசல்ட் என்பதால் இந்த முறை ஆகாய மார்க்கமாக செல்ல வடிவமைத்திருந்தேன். அங்கு தான் குப்பைத்தொட்டி, லைட் போஸ்ட், தெரு நாய் என எதுவும் இருக்காது. எதுவும் பிரச்சனை வந்தாலும், குதித்து தப்பிக்க என் போர்வையையும், அம்மா வடகம் காயப்போடும் பெரிய பாலீதீன் கவரையும் ஒரு பாராசூட் போல செய்துகொண்டேன்.வீட்டின் ஜன்னல் வழியாக பறப்பத்தற்கு எல்லாம் தயாராகி விட்டது. எல்லாம் தயார். என் கணிப்பு படி எல்லாம் இந்த முறை சரி. ஒரு சிறு தவறு கூட நேராது. இருந்தாலும் எந்திரத்தை கிளப்பாமல் காத்திருந்தேன், மணி பன்னிரெண்டை தாண்டட்டும் என்று. இன்னைக்கு வெள்ளிக்கிழமை. பத்து டூ பன்னெண்டு ராகு காலம் அதான். மணி பன்னிரெண்டு ஆகியது. அம்மா அப்பாவை வழக்கம் போல் நினைத்துக்கொண்டு என் எந்திரத்தை கிளப்பினேன்.


வேகமெடுத்து கிளம்பியது. ஜன்னலை கொஞ்சம் பலமாகவே பக்கவாட்டில் உடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் உடைந்த ஜன்னலின் சத்தத்தை விட இந்த வேகத்தில் செல்லும் போது கூட என் அம்மாவின் சத்தம் தான் பெரியதாக கேட்டது. சரி, இனி எப்போது அவரை பார்க்கப்போகிறோம்? கத்தினால் கத்தட்டும் என நினைத்துக்கொண்டே என் எந்திரத்தில் "11.09.1921 A.D, 1a.m., Triplicane, Chennai" என்று ஃபீட் செய்தேன். எழுத்துக்களால் ரத்தத்தில் அக்னியை பாய்ச்சி யாரையும் கிளர்ந்தெழ செய்ய முடியும் என்று உணர்த்திய புரட்சிமிகு கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் பதினைந்தாவது ஆளாக பங்கெடுத்துக்கொள்ள ஆசை எனக்கு, அதனால் தான் அந்த தேதி. வண்டியும் நன்றாக மேலெழும்பியது. எனக்கு சிவாஜி, ஷாயாஜி ஷிண்டே தேவையில்லாமல் விஜய் என்று பாரதியார் வேடத்தில் நடித்த நடிகர்கள் முகம் எல்லாம் ஞாபகம் வந்து போனது. வயிற்றின் அடியில் சின்ன சூடு, ஒரு வித த்ரில்லிங் கலந்த மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு எல்லாம். தீடீரென்று பார்த்தால் என் எந்திரம் மட்டும் தனியாக பறக்கிறது என் கண் முன்னே. சில மீட்டர் தூரத்துக்கு அப்பால் அது தெருவின் முக்கு பிள்ளையார் கோவிலின் முன் விழுந்தது. இந்த முறை தன் படம் கொண்டு போகாத ஆத்திரத்தில் பிள்ளையார் தான் இந்த சதியை செய்திருக்க வேண்டும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக தெரிந்தது. நான் ஏதோ கேபிள் வயரிலோ டெலிஃபோன் வயரிலோ தொங்கிக்கொண்டிருந்தேன். கரெண்ட் வயராக கூட இருக்கலாம். தெரு ஜனம் எல்லாம் ஏணி, ஸ்டூல், மேஜை என்று என்னென்னவோ போட்டு என்னை கீழே இறக்கியது. 23வது குறிப்பை பதிந்து கொண்டேன் “டேக் ஆஃப் ஆகும் போது வயரை ஞாபகம் வைக்கவும், மறக்காமல் பிள்ளையார் ஃபோட்டோவை பாக்கெட்டில் வைக்கவும்” என்று. 

அம்மா வழக்கம் போல் “ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைக....” என்று தன் பாடலை நடு ரோட்டில் பாட ஆரம்பித்துவிட்டார். தெரு மக்களும் என்னை நக்கலாக அரை லூசு போல் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு கடுப்பாக இருந்தது. ஒருவன் அறிவியல் சாதனை செய்து முன்னேறலாம் என்றால் அவனை டீ-மோடிவேட் செய்யத்தான் எத்தனை ஆட்கள்? ச்செய் என்று நொந்துகொண்டேன். லேசாக வயிறு பசித்தது. நேற்று மதியம் சாப்பிட்டது என்று நினைக்கிறேன். 24வது முறைக்கு யோசிக்கும் முன் லேசாக சாப்பிட்டு விட்டு வரலாம் என்று நினைத்து அருகில் இருக்கும் ரோட்டோர மெஸ்ஸுக்கு சென்றேன்.

அது 4பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடக்கூடிய மிகச்சிறிய கடை. மாலை மூன்று மணி வரை கூட சூடாக இட்லியும், பொங்கலும், பூரியும் கிடைக்கும் கடை. அதுவுமில்லாமல் நான் சாப்பிடும் சாப்பாட்டிற்கு என்னிடம் காசு கேட்காமல் என் அப்பா வேலையில் இருந்து வரும் போது நேரடியாக அவரிடமே கேட்டு வாங்கி, எனக்கு பிரச்சனை கொடுக்காத நல்ல கடை. அங்கு போய் அமர்ந்தேன்.



“அண்ணே எல போடுங்க” - இலையில் தண்ணீரை தெளித்து துடைத்துக்கொண்டே எனக்கு எதிரில் இருக்கும் அந்த ஆளை பார்த்தேன். இருக்காரா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஆள் என்னை விட கறுப்பு. என்னை விட கறுப்பாக இன்னொருவர் இருக்கிறார் என்று தெரிந்த போதே மனதிற்குள் 23வது தோல்வியை தாண்டியும் ஒரு சிறு சந்தோஷம் வந்தது. அந்த ஆளுக்கு ஒரு ஐம்பத்தைந்து அறுபது வயது இருக்கும். நான் ரெண்டு இட்லி சொன்னேன். என்னை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த ஆளும் “எனக்கு ரெண்டு இட்லி” என்றார். 

“கார சட்னி வேண்டாம், தேங்கா சட்னி மட்டும் போதும்” என்று கடை பையனிடம் சொன்னேன். அந்த கிழமும் அதையே சொன்னது. எனக்கு எரிச்சலாக வந்தது. நிமிர்ந்து அந்த ஆள் முகத்தை பார்த்தேன். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. பிடரி வரை தலை சொட்டை. இடது பக்கம் காது அருகில் முடியை நீளமாக வளர்த்து அதை வலது பக்க காது வரை கவனமாக இழுத்து தன் சொட்டையை அழகாக மறைத்திருந்தார். அடிக்கடி தன் சொட்டை சரியாக மறைக்க பட்டிருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டிருந்தார். தலைக்கும் சேர்த்து மூக்கின் கீழ் மீசை என்னும் பெயரில் ஒரு வெண்புதர் வளர்ந்திருந்தது. முழுதும் நரைத்து அங்கங்கு பாக்கி கறுப்பு நிறத்தை மிச்சம் வைத்திருக்கும் தாடி. அந்த புதர் மண்டிய வாய்க்குள் இட்லி செல்வதை பார்க்கும் போதே எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. சுத்தமாக அந்த ஆளை எனக்கு பார்க்கவே பிடிக்கவில்லை.

“அண்ணே ரெண்டு எம்டி பூரி” - எனக்கு உருளைக்கிழங்கு ஆகாது. அந்த கிழமும் அதை தான் சொல்லும் என தெரியும். அதே போல் நான் சொல்லி முடித்த உடனே, “அண்ணே எனக்கும்” என்றது. ‘கொழுப்ப பாத்திய கெழத்துக்கு? அது வயசுக்கு நம்ம கடக்கார பாஸ்கரு அண்ணனாம்’ என நினைத்துக்கொண்டேன். எனக்கு திடீர் என்று மூளையில் ஒரு சிறு ஷாக். டக்கென்று நிமிர்ந்து அந்த கிழத்தை பார்த்தேன். அவர், அவர் என்ன அவர்? அவன் மிகவும் ஆர்வமாக தேங்காய் சட்னியில் நீச்சல் அடித்து பூரியை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

“எத்தனாவது அட்டெம்ப்ட்ல நடந்துச்சிடா?” அவனை, இல்லை இல்லை என்னை பார்த்து கேட்டேன்.

“என்னது டாவா? டேய் தம்பி நான் ஒனக்கு 25 வருஷம் பின்னாடி இருந்து வாரேன். மரியாதையா பேசு” கர்வத்தில் சிரித்துக்கொண்டே ஏதோ எனக்கு 25 வருஷத்துக்கு முன் பிறந்தவன் போல் தெனாவட்டாக பேசினான்.

“சரி எத்தன அட்டெம்ப்ட்டுக்கு பிறகு கண்டுபுடிச்சீங்க சார்? சொல்லித்தொலைங்க” என்றேன். ஏனென்றால் எனக்கு அவனை, ச்சீ, என்னை அப்படி பார்க்கும் போது 23, 24 என்று என் அட்டெம்ப்ட்டுகள் அறுபது எழுபதையெல்லாம் என்றோ கடந்து நூறை நெருங்கியிருக்கும் என பயந்தேன்.

“ஹா ஹா ஜஸ்ட் ஹண்ட்ரடு அண்ட் டுவென்டி ஃபோர்த் அட்டெம்ப்ட் மை டியர் ஃப்ரண்ட்” என்றான் பெருமையாக. ‘என்னது இன்னும் நூறு முயற்சிகளா?’ வெளிறிப்போய்விட்டது எனக்கு.

“கண்டுபிடிச்சி முடிச்சதும், என்னமோ தெரில வயரில் தொங்கிய பிள்ளையாரின் சாபமான இந்த 24வது அட்டெம்ப்ட் தான் ஞாபகம் வந்தது. பசி வேற அதான் நேரா இங்க உன்ன பாக்க வந்துட்டேன்”. எனக்கு அவன் அக்கறையோடு வந்திருக்கிறானா, அல்லது என்னை நக்கல் செய்ய வருங்காலத்தில் இருந்து இப்படி புறப்பட்டு வந்திருக்கிறானா என்று தெரியவில்லை. என்னை பற்றி எனக்கு தெரியும். நானே நினைத்திருக்கிறேன், இதை கண்டுபிடித்ததும் நான் தோல்வியுற்ற ஒவ்வொரு நாளிலும் சென்று அந்த தோற்றுப்போன சுரேஷ்களை பார்த்து சிரிக்க வேண்டும் என்று. ஆனால் ஒரு ஜெயித்த கிழட்டு சுரேஷ் என்னை பார்க்க வருவான் என்று நான் ஒரு போதும் யோசித்துப்பார்க்கவில்லை.

“சரி கல்யாணம் ஆகிருச்சா?”

“என்னது கல்யாணமா? ஹலோ நீயா இப்படி பேசுற? ஒரு கொள்கையில் ஜெயிச்சதுக்கு பிறகு தானே கல்யாணம் பணம் எல்லாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்? இனிமேல் தான் மேட்ரிமோனில அப்ளை பண்ணனும்!!”

“டேய் அப்ப நீ இந்த 60 வயசுல இனிமேல் தான் கல்யாணம் பண்ணனுமா?”

“ஹா ஹா நான் மட்டும் இல்ல தம்பி, நீயும் தான் 60 வயசுல கல்யாணம் பண்ணுவ” என்னை பார்த்து சொல்லி சிரித்து கண்ணடித்தான். 

ஒரு கிழவன், அது நானாகவே இருந்தாலும் என்னை கிண்டலடிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் இப்படி அசிங்கமாக சாப்பிட்டுக்கொண்டு, அறுபது வயதில் தான் மேட்ரிமோனிக்கு அப்ளை பண்ணுவோம் என்று நினைக்கும் போதே எனக்கு திக்கென்று இருந்தது. என்ன தான் கொள்கை, அது இதுவென்று பேசினாலும், 32 வயதில் தெனாவட்டாக திரிந்தாலும், அவனின் வயதில் ஒருவனுக்கு ஒரு துணை இல்லை, அது எனக்கும் நேரும் என்றும் தெரியும் போதே நான் தின்ற பூரி வயிற்றுக்குள் இறங்காமல் நெஞ்சிலேயே நின்று கொண்டது. அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நான் அவன் எதிர்பார்க்காத போது திடு திடுவென்று ஓட ஆரம்பித்தேன் அந்த பிள்ளையார் கோவிலை நோக்கி. என் மிஷினில் இருக்கும் டீசலை எடுத்து அதை கொழுத்திவிட்டேன். “டேய் டேய் எரிக்காதடா” என்று அவன் ஓடி வர முயன்றான். வேகமாக அவனால் நடக்க கூட முடியவில்லை. “போடா வெண்ன, ஓடிரு.. ” அவனை அடிக்க ஓடினேன். தெருவே எங்களை வித்தியாசமாக பார்த்தது. என் மிஷின் கொஞ்சம் கொஞ்சமாக எரிய அவன் கொஞ்ச கொஞ்சமாக மறைய ஆரம்பித்தான். முழு மிஷினும் எரிந்து முடித்தது. அவன் முழுதாக மறைந்துவிட்டான். சிலர் பயந்து போய் மயங்கியே விட்டார்கள். வாசலில் இருந்து இதையெல்லாம் பார்த்த அமாவும் பயந்துபோயிருந்தார். நான் வீட்டு வாசலுக்கு வந்தேன்.

“டேய் யார்ரா அந்த ஆளு? ஆராய்ச்சி அது இதுன்னு சொல்லி வேத்து கிரகவாசி யாரையும் கூட்டிட்டு வந்துட்டியா?”

“இல்லம்மா”

“பின்ன யாருடா அவரு?” ”அது நாந்தாம்மா” என்று சொல்லி அவரை இன்னும் பீதியடைய வைக்க விரும்பவில்லை. ஆனால் அம்மா என்னை ”அவர்” என்று மரியாதையாக கூப்பிட்டது இந்த ரணகளத்திலும் சந்தோசமாக இருந்தது.

“அதெல்லாம் விடுங்கம்மா. ட்ரெஸ் எடுத்து வைங்க. என் ஃப்ரெண்ட் ப்ரகாஷ் அவன் கம்பெனில ஒரு மார்க்கெட்டிங் வேல இருக்குன்னு சொன்னான், நான் கெளப்புறேன்” என்றேன். அம்மாவுக்கு ஒரே சந்தோஷம் தன் பிள்ளைக்கு இப்போவாவது வேலைக்கு போக வேண்டும் என்னும் அக்கரை வந்ததே என்று. துணி எடுத்து சென்னைக்கு கிளம்பி இதோ நான் வேலைக்கு வந்து கிட்டத்தட்ட 3மாதங்கள் ஆகிவிட்டன.

ஒரு நாள் மொட்டை மாடியில் நின்று கொண்டு எனது சென்னை காதலியிடம் ஃபோனில் பேச முயற்சித்துக்கொண்டிருந்தேன். சென்னை வந்தால் சீக்கிரம் லவ் செட் ஆகிவிடும் என்று நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த மூன்று மாதத்திலேயே அதை உணர்ந்து கொண்டேன். ஆனால் என்னவென்று தெரியவில்லை, நான் எத்தனை முறை அழைத்தும் இன்று அவள் ஃபோனை எடுக்கவே இல்லை. ஒரு வழியாக 37 மிஸ்டு கால்களுக்கு பிறகு ஃபோனை எடுத்தாள். “எங்க வீட்ல எனக்கு மாப்ள பாத்துட்டாங்க, அவங்கள மீறி எதுவும் பண்ண முடியல, நம ஃப்ரெண்ட்ஸாவே இருப்போம்” என்று சொல்லி என் பதிலுக்கு கூட எதிர்பாராமல் ஃபோனை வைத்துவிட்டாள்.. ’பொண்ணுங்க தான் வீட்டிற்கு அடங்கிய எவ்வளவு பொறுப்பானவர்கள்!’ என்று வியந்து கொண்டே என் ஃபோனை கடாசினேன். வானில் சத்தத்தோடு ஒரு ஒளி வெள்ளம். என்னை நோக்கி, நான் எரித்தேனே அதே போல் ஒன்று வந்தது. அதே கிழவனான நான் வந்தேன். இறங்கி மெதுவாக என் அருகில் வந்து என் காதுக்குள் ரகசியம் போல் “எத்தன காதலி வந்தாலும் உனக்கு 60 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகாது” என்று சொல்லி கண்ணடித்து அசிங்கமாக சிரித்தது. அதனிடம் “என் வீட்டில் இறக்கி விட முடியுமா?” என்றி லிஃப்ட் கேட்டு கிளம்பினேன் 25வது முயற்சிக்கு. 24வது முயற்சி தோல்விக்கு இப்படி குறிப்பெடுத்துக்கொண்டேன், “No girl should be included at any cause"...

தம்மாருகம் - ஒலகம் பேசாம அழிஞ்சே போயிருக்கலாம்..

Sunday, December 23, 2012

அலுவல் விசயமாக பெங்களூருக்கும் ஆந்திராவின் "red corridor" என்று மைய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுள் ஒன்றான அனந்தபூருக்கும் (ரத்த சரித்திரம் படம் நிஜத்தில் நடந்தது இந்த மாவட்டத்தில் தான்) 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்தேன்.. நல்ல சாப்பாடு, நல்ல குளிர், புது நண்பர்கள் என்று ஆனந்தமாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக எந்த புதுப்படமும் பார்க்காததால் சபரிமலைக்கு மாலை போட்ட குடிகாரன் போல் ஒரு மாதிரியாக இருந்தது.. பெங்களூரில் காலை 9மணிக்கு ஆரம்பிக்கும் மீட்டிங் மாலை 6 மணிக்கு மேல் தான் முடியும். 6மணிக்கு மேல் அந்த குளிரில் படம் பார்க்க வெளியில் செல்ல தைரியம் இல்லை. குளிரை விட அதிகம் பயமுறுத்தியவர்கள் கன்னட ஹீரோக்கள் தான். நானெல்லாம் அங்கு ஹீரோவாக போனால் சீக்கிரமே பன்ச் டயலாக், 100 பேர் பறக்கும் ஃபைட், அப்புறம் சி.எம் என வேகமாக முன்னேறிவிடலாம். இப்போது இருக்கும் ஹீரோக்கள் அவ்வளவு மொக்கை.. கன்னட நண்பர்கள் கூட தங்கள் ஹீரோக்களை பற்றி பேச கூச்சப்படுகிறார்கள். பெங்களூரு பேரு தான் பெத்த பேரு, படம் ஒன்னும் தேராது என்று மூன்று நாள் கம்முனு கம்பெனி கொடுத்த ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இருந்துவிட்டு ஆந்திரம் புறப்பட்டோம், அங்கிருக்கும் எங்கள் கம்பெனியின் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் ஃபேக்டரியை காண..


எங்களது ஃபேக்டரி இருப்பது ஆந்திராவின் நக்ஸல்கள் அதிகம் காணப்படும் அனந்தபூர் மாவட்டத்தில். அனந்தபூர் கர்னூல் மாவட்ட எல்லையில் ஒரு சிறிய மலையின் மீது இருக்கிறது அந்த பெரிய ஃபேக்டரி.. மதியமே ஃபேக்டரியை பார்த்து முடித்துவிட்டோம். இரவு 11மணிக்கு தான் சென்னைக்கு ரயில்.  எல்லோரும் என்ன செய்யலாம் என்று விவாதித்த போது, “பேசாம எதாவது தெலுங்கு படத்துக்கு போலாம்யா, பொழுதாவது போகும்.. கலர் கலரா இருக்கும்”னு நான் தான் பிட்ட போட்டேன்.. ஒடனே எல்லாரும் ஓக்கே சொல்லி கிளம்பிட்டாய்ங்க. ஆனால் தெலுங்கு படமா அல்லது வேறு படமா என்பதை ஊருக்குள் சென்று முடிவு செய்யலாம் என்றார்கள். எங்கள் ஃபேக்டரிக்கு அருகில் இருக்கும் ஊர் தாடிபத்ரி. தாடிபத்ரி என்னும் அந்த ஊர் நம் தமிழ் சினிமாவில் ஆந்திரா என்றால் எப்படி செட் போட்டு காட்டுவார்களோ அதே போல் இருந்தது. நீண்ட சிமிண்ட் சாலைகள், அதன் இருபக்கமும் சின்ன சின்ன கடைகள், கொஞ்சம் வீடுகள், சம்பந்தமே இல்லாமல் சாலை நடுவே ரவுண்டானாகள், ஒன்றிரண்டு ராஜசேகர ரெட்டி சிலைகள், கடப்பா கல்லில் தான் பாதி கடைகள் கட்டப்பட்டிருந்தன.. சிமிண்ட்டோ செங்கலோ எதுவும் இல்லை. கிடைத்த வேஸ்ட் கடப்பா கல்லை வரிசையாக அடுக்கி ஒருவர் வீடே கட்டியிருந்தார். அப்படி ஒரு ஊரில் மொத்தம் நாலு தியேட்டர். அவ்வளவு சின்ன ஊரில் கூட நான்கு தியேட்டர் இருப்பது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆந்திராவில் மக்களுக்கு சினிமா மேல் இருக்கும் மோகம் தான் தியேட்டர்களை இன்னும் மண்டபமாகவோ அரிசி மில்களாகவோ மாற்றாமல் இருக்கிறது. 

ஆனால் நாங்கள் அங்கு இருந்த தேதி டிசம்பர் 20. மறுநாள் உலகம் அழிந்துவிடுமோ என்று என் மேதாவித்தனத்தின் மீதும் ஒரு சிறு பய விரிசல் இருந்தது. வீட்டிற்கு போய் விடலாம் என்று தயக்கம் இருந்தாலும், ஆந்திரம் வரை வந்து ஒரு தெலுங்கு படம் பார்க்கவில்லையென்றால் எப்படி? எனவும் யோசித்து, உலகம் அழிந்தாலும் பரவாயில்லை, படம் பார்த்துவிடலாம் என்று முடிவாகிவிட்டது. ஒரு தியேட்டரில் தலாஷ் இந்தி படம். நாங்கள் எல்லோரும் தமிழர்கள், சுட்டு போட்டாலும் இந்தி வராது. இன்னொரு தியேட்டரில் ரானா டகுபதியும் நயந்தாராவும் நடித்த ஆக்‌ஷன் படம் என்பது போஸ்டர் மூலம் தெரிந்தது. நம்ம பயலுக அந்த படத்தை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிருந்தாய்ங்க. மற்றொன்றில் பழைய நடிகை சிவரஞ்சினியின் கணவர் ஸ்ரீகாந்த நடித்த படம். போஸ்டரிலேயே இது மொக்கை படம் என்று தெலுங்கில் எழுதியிருப்பது போல் இருந்தது. நாலாவது தியேட்டரில் நாகர்ஜுனா நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் கையில் சூலாயுதம் எல்லாம் தூக்கிக்கொண்டு கொடூரமாக போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அந்த படத்துக்கு தான் போக வேண்டும் என தீர்மானம் செய்து கொண்டேன். காரணம் - அனுஷ்கா..


என் கூட வந்த பயலுகளும் அனுஷ்கா என்றவுடன் நயந்தாரா படத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு, அந்த நாகர்ஜுனா படம் ஓடும் தியேட்டரை நோக்கி அடி எடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். படத்திற்கு பெயர் கூட தெரியாது. தியேட்டருக்கான வழியை சாலையில் போகும் சிலரிடம் போஸ்டரை காமித்து கேட்டோம். எங்களோடு ஒரு தமிழ்நாட்டு ரெட்டி பையன் இருந்ததால் அப்படி இப்படி தெலுங்கை சமாளித்து தியேட்டரை அடைந்து விட்டோம். 6.15க்கு தான் டிக்கெட் கொடுப்பார்கள். நாங்கள் தியேட்டரை அடைந்த போது மணி 5.30. தியேட்டருக்கு வெளியே, ஆம் அதே தான், ஒரு பானிபூரி கடை. ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டே அந்த கடைக்காரனிடம் கேட்டோம், “மூவி நேம்?”

அவன் தெலுங்கில் ஏதோ சொல்லி எங்களை ”ஏன்டா பேண்ட் சட்டையெல்லாம் போட்டு பந்தாவா வரிங்க, எழுத படிக்க தெரியாதாடா?” என்று கேட்பது போல் ஒரு மாதிரி பார்த்தான். நான் ரெட்டி நண்பனை பார்த்து, “யோவ் ஒனக்கு தெரிஞ்ச தெலுங்குல கேளுய்யா” என்றேன்.

“இல்லைங்க அவங்க தெலுங்கு வேற எங்க தெலுங்கு வேற, நான் எதாவது தப்பா பேசிற போறேன்” என்று கழண்டுவிட்டான். நான் மீண்டும் பானிபூரிகாரனை பார்த்து, “ப்ளீஸ்”, தியேட்டரை காட்டி “மூவி நேம்?” என்று கேட்டு கேள்வி கேட்பது போல் கையசைத்தேன்.

“தமாருகம்” என்றான். என்னோடு இருந்த இன்னொரு பச்சை தமிழன் “என்ன மிருகம்ங்க?” என்றான்.

”தம்மாருகம்” என்று சொல்லி பானிபூரிக்காரன் சாப்பிட்ட பிளேட்டுகளை கழுவப்போய் விட்டான்.



ஒலகம் அழியப்போகும் போது இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பாஷை தெரியாத ஊர்ல படம் பாக்கணுமா என்ற சிறிய சிந்தனை வந்தாலும் போஸ்டரில் இருந்த அனுஷ்கா அதையெல்லாம் மறக்கடித்து விட்டாள். எங்களோடு பானிபூரி சாப்பிட்ட ஒரு தெலுங்கன் கேட்டான், “தமிழியன்?”

“யா யா” ரெட்டி வேகமாக வந்தான். “நீ மூடு” என்பது போல அவனை முறைத்துவிட்டு, “யா, ஹவ் இஸ் திஸ் மூவி?” என்றேன்.

“வெரி குட். ஐ வாச்சிங் த்ரீ டைம்” என்று பெருமையாக சொன்னான். நல்ல படம் தான் செலெக்ட் பண்ணிருக்கோம், ஹிட்டு படம் தான் போல என்று தைரியமாக நண்பர்களுடன் தியேட்டருக்குள் சென்றோம். அந்த தியேட்டரை பார்க்கும் போது எனக்கு ஆண் பாவம், சுப்ரமணியபுரம் படங்களில் வரும் தியேட்டர் தான் ஞாபகம் வந்தது.. 1968ல் யாரோ ஒரு அமைச்சர் திறந்து வைத்ததை கல்வெட்டில் பதித்திருந்தார்கள். வெளியே வளைவான மாடம், கவர்ச்சியான பெண் சிலை, அருகில் மான் சிலை, வெளியில் இருந்து உள்ளே அவரை அனைத்தும் கடப்பா கல் தளம். சில 100நாள் ஷீல்டுகளில் பவன்கல்யாணும், சிரஞ்சீவியும், வெங்கடேஷும், ஜூனியர் என்.டி.ஆரும் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த தியேட்டரில் கூட இத்தனை படங்கள் 100நாட்கள் ஓடியிருப்பது ஆச்சரியம் தான். அடுத்து தான் நம் பட போஸ்டர் இருந்தது.



நான் இதையே உத்து பார்த்துக்கொண்டிருந்தேன் ’என்னங்கடா இது மாடு கார் கூட சண்ட போடுது!’னு.. படத்தை மூனாவது முறை பார்க்க வந்திருக்கும் பானிபூரி கடை நண்பர் பின்னால் வந்து மெதுவாக சொன்னார் “சூப்பர் கிராபிக்ஸு, சூப்பர் பைட்டூ” என்று. நான் அவரிடம், “மூவி ஹிட்டா?” என்றேன். சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டார். ’டேய் பதில சொல்லிட்டு போடா’ என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குள் ஒருவர் மேஜையை விரித்து, பட்டாணி, வறுத்த கடலை என கடை போட ஆரம்பித்துவிட்டார். பானிபூரியை விட கொஞ்சம் பொறுத்திருந்து கடலை சாப்பிட்டிருக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். என் ரெட்டி நண்பன் வந்து சொன்னான், “ஏங்க படம் சூப்பர் ஹிட்டாம். கிராஃபிக்ஸ் எல்லாம் தாறுமாறாம். செம ஆக்‌ஷன் படமாம்”.. “எப்படி தெரியும் உங்களுக்கு?” என்றேன். “அங்க ரெண்டு பேரு தெலுங்குல பேசிக்கிட்டு இருந்தாய்ங்க, அத கேட்டுட்டு தான் சொல்றேன்”. அவன் ரெட்டி என்கிற ஒரே காரணத்துக்காக அவன் தெலுங்கு பற்றி சொன்னதை பதில் கேள்வி கேட்க முடியாமல் நம்பும் நிலையில் இருந்தோம் நானும் இன்னொரு நண்பரும். பிளாக்கில் விற்பது போல் ஒரு ஆள் அறையின் வாசலில் சைக்கிள் டோக்கன் கொடுப்பது போல் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். 30ரூபாய் தான் டிக்கெட் விலை. டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்தோம்.


தியேட்டரினுள் ஒரே ஒரு டியூப் லைட். அவ்வளவு தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் செகன்ட் க்ளாஸ் எல்லாம் கிடையாது. சேர் டிக்கெட், மேஜை டிக்கெட் அவ்வளவு தான். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம். சுவர், தரை என எங்கும் பான்பராக்கால் சிகப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. எனக்கு அந்த தியேட்டர் நம் ஊர் பேருந்து நிலைய கட்டண கழிப்பறைகளை ஞாபகப்படுத்தின. சரி என்ன பண்ணுறது? 11மணி வரைக்கும் பொழுது போகணுமே என்று மனதை தேற்றிக்கொண்டேன். சரி படம் ஆரம்பிப்பதற்குள் டாய்லெட் போய் வரலாம் என்று வெளியில் வந்து டிக்கெட் கிழிப்பவரிடம் ”டாய்லெட்” என்றேன். அவர் கை காட்டிய திசையில் சென்றேன். தெலுங்கில் என்னமோ எழுதியிருந்தது. உள்ளே போகும் முன் குலதெய்வத்தை வேண்டி விட்டு அவரையும் திரும்பி பார்த்தேன். நான் உள்ளே நுழைய போவதை பார்த்த அவர் கத்திக்கொண்டே வந்தார். அருகில் வந்ததும் “கேர்ள்ஸ் டாய்லெட்” என்று சொல்லி தெலுங்கில் என்னென்னமோ கத்தினார். நான் அவர் கத்தி முடித்ததும், குரலை தாழ்த்தி “பாய்ஸ் டாய்லெட்?” என்று பாவம் போல கேட்டேன். பெண்கள் கழிப்பறையின் பின் பக்கம் நீண்டிருக்கும் வெட்டவெளியை காட்டி “ஃபுல் பாய்ஸ் டாய்லெட். நோ கோ கேர்ள்ஸ் டாய்லெட்” என்றார். அனுஷ்காவை பார்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக அந்த அவமானத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டேன். உச்சா போய்விட்டு தியேட்டருக்குள் நுழைந்தேன்.



படம் ஆரம்பித்தார்கள். ஒரே ஒரு டியூப் லைட்டையும் அணைத்துவிட்டார்கள். அருகில் சிறு மஞ்சள் வெளிச்சம். என் பக்கத்து சீட்க்காரன் பத்த வைத்த பீடி தான் அது. “இது வேறையா?” என்பது போல் மூக்கை பொத்திக்கொண்டு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அரக்கர் குலத்தில் தப்பி பிழைத்த ஒரே ஒரு அரக்கன் மட்டும் இந்த உலகத்தையே அடக்கி ஆள சக்தி கேட்டு சிவபெருமானை நோக்கி தவம் இருப்பது போல காட்டினார்கள். பரவாயில்லையே தெலுங்கு படம் நமக்கு கூட ஓரளவுக்கு புரியுதே? என்று வியந்துகொண்டே கதையில் அமிழ்ந்தேன்.


ஒரு குழந்தை எல்லா நல்ல நேரமும் கூடிய சந்தர்ப்பத்தில் கடவுளின் அனுக்கிரகத்தில் பிறக்கிறது. நீங்கள் எல்லோரும் அதைத்தான் ஹீரோ என நினைப்பீர்கள். ஆனால் டைரக்டர் அங்கு தான் டுவிஸ்ட் வைத்திருக்கிறார். அது ஒரு பெண் குழந்தை. அடுத்து காசியில் ஒருவரை பற்றி அவர் குடும்பமே பெருமையாக பேசுகிறது. “அவன் சிவ சேவைக்காகவே பிறந்தவன்” என்பது போல் பீலா விட்டுக்கொண்டிருக்கும் போதே அவர் கங்கை நதியில் இருந்து வெளிவருகிறார். அப்போதும் ஹீரோ தான் வருவார் என்று எதிர்பார்த்தீர்களானால், அங்கேயும் டைரக்டர் டுவிஸ்ட் வைத்திருப்பார். அது ஹீரோ சிறு வயதில் நடப்பது. அதனால் ஒரு சிறுவன் தான் வருகிறான். அந்த சிறுவன் காசியில் பூஜை முடிந்து வரும் போது, அவனால் தான் தன் உயிருக்கு ஆபத்து என்று அறிந்த அந்த அரக்கன் ஹீரோவை குடும்பத்தோடு சிறுத்தை வேடமிட்டு கொல்ல வருகிறான். ஹீரோவின் குடும்பமே காலி. தங்கை படுத்த படுக்கையாகி உடம்பு செயலிழந்து விடுகிறார். சின்ன வயது ஹீரோ சிவ பெருமானை நோக்கி டூ விடுகிறார், ’என் குடும்பத்தை நாசமாக்கிய உன்னை நான் இனிமேல் கும்பிட மாட்டேன்’. அய்யயோ மதம் கிதம் மாறப்போறானோன்னு பாத்தா அதுவும் இல்ல. டைரக்டர் இங்க ஒரு டுவிஸ்ட் வைக்கிறார். அடுத்து ஒரு ஊரில் தேர் இழுக்கிறார்கள். தேர் நகரவேயில்லை. எல்லோரும் கவலையாக இருக்கும் போது, ஒரு கார் ஸ்பீடாக வந்து நிற்கிறது. வந்துட்டார்யா ஹீரோ இனிமேல் தேர் எப்படி பறக்குதுன்னு பாரு என்று நினைக்கும் போதே, அடுத்த டுவிஸ்ட். அந்த காரில் இருந்து இறங்குவது அனுஷ்கா செல்லம். அது நடந்து வரும் போது மங்களகரமா ஒரு மியூசிக். அந்த புள்ள வந்து கைய வச்சதும் தேர் தன்னால மூவ் ஆகுது. சிவபெருமானே அனுஷ்கா வந்து கைய வச்சா தான் மூவ் ஆகுறாருன்னு டைரக்டர் இந்த சீன் மூலமா சொல்லிறாரு.. சிவபெருமானே அப்படின்னா நாமெல்லாம் எம்மாத்திரம்?


அடுத்து நம்ம மாமா, அதாம்ப்பா அனுஷ்காவின் அப்பா கோயிலுக்கு சில லட்சம் டொனேஷன் குடுக்குறாரு. அத சில குரூப்பு பைக்ல வேமா வந்து ஆட்டைய போட்டுட்டு போயிறாய்ங்க. அவைங்கள தொறத்தி போலீஸ் வேற வருது. நாமெல்லாம் நினைப்போம் அந்த திருட்டுப்பயலுகள பிடிச்சி அடிச்சி தொவைச்சி போலீஸ் கிட்ட ஒப்படைக்க நம்ம ஹீரோ வருவாருன்னு. திருடனுங்க வண்டி கிராம கோயில்ல இருந்து திடீர்னு ஹார்பர்ல போயி கன்னாபின்னானு சுத்துது. இப்ப தான் கார்டூன் நெட்வொர்க்ல கார் வீலீங் ஆகுற மாதிரி வீலிங் பண்ணிட்டு அவரு வராரு. எவரா? இவ்வளவு நேரமா விசில் அடிக்க யாருக்காக காத்திருந்தோமோ அவரு. நம்ம “கிங்” நாகர்ஜுனா தான் அவரு. அடிக்குறாரு, துவைக்குறாரு பட் பணத்த மட்டும் போலீஸ் கிட்ட கொடுக்காம அவரு ஆட்டைய போட்டுட்டு போயிடுறாரு. அப்போ டைரக்டர் சொல்றதெல்லாம் வச்சி பாக்கும் போது “நாகர்ஜுனா ஒரு திருடனா?” என்கிற கேள்வி மனதில் எழும். ஆனால் அவர் தான் திருடுற பணத்த தான் மட்டும் திங்காம தன் தங்கை மருத்துவம் பார்க்கும் ஆஸ்பத்திரிக்கும் டொனேஷன் குடுக்குறாரு. அங்கு ஒரு லேடி டாக்டர் ஹீரோ தங்க்ச்சி மேல ரொம்ப பாசமா இருக்காங்க.. ஆங் கரெக்ட்டா சொல்லிட்டீங்களே அவங்க தான் நம்ம அனுஷ்கா.



ஹீரோவும் அனுஷ்காவும் லவ்வுறாங்க. ஆனா நம்ம அரக்கன் அனுஷ்காவ கல்யாணம் பண்ணி ஒரு நல்ல நாள்ல அவங்கள பலி குடுத்தா தான் இந்த உலகத்தையே ஆள முடியும். சிவபெருமானே வில்லன் கிட்ட ஒரு வரம் குடுத்து மாட்டிக்கிட்டு நம்ம ஹீரோ கிட்ட தஞ்சம் புகுந்துக்கிறாரு. அப்புறம் கதை கன்னாபின்னான்னு போகுது. எப்படியோ ஹீரோ சிவ பெருமானை காப்பாற்றி பழையபடி ஆத்திகனா மாறி அனுஷ்காவையும் காப்பாற்றி வில்லனையும் வீடியோ கேம்ல வர மாதிரி விளையாண்டு போட்டு தள்ளிறாரு. என்னது நம்மளயா? நம்மள இண்டெர்வல் வரதுக்கு ஒரு மணிநேரம் முன்னாடியே கொன்னுருவாய்ங்க. மிச்சம் மீதி ஒட்டியிருக்குற உசுரு அனுஷ்காவ பாக்குறதுக்காக மட்டுமே லேசான லப்டப்போடு துடித்துக்கொண்டிருந்தது . சிவபெருமான் வேடத்தில் பிரகாஷ்ராஜ் சுத்தமாக பொருந்தவில்லை. ஏதோ சின்ன பிள்ளை மாறுவேட போட்டியில் மேடையில் போவது போல் சொர்க்க லோகத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்திற்கு நடந்துவருகிறார் உயிருக்கு போராடும் ஹீரோவை காப்பாற்ற. அவர் மெதுவாக ஆடி அசைந்து வந்து ஹீரோவை காப்பாற்றுவதற்குள் ரயில் ஹீரோ மேல் ஏறி டில்லிக்கே போயிருக்கும். பட் லார்டு சிவா, எப்படியோ ட்ரெயின கொஞ்ச நேர நிப்பாட்டி, நம்ம தமிழ்ப்படம் சிவா மாதிரி காப்பாத்திறாரு. படம் பார்க்கும் நமக்கு இருக்கும் பதைபதைப்பு கூட சிவ பெருமானுக்கு இல்லை.


இப்படி ஒரு பொத்தலான கதையை எல்லாம் எப்படி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் படம் முடிந்தவுடன் சூப்பராக இருக்கு என்று சொன்னவனை தான் தேடிக்கொண்டு இருந்தேன். பரதேசிப்பய.. கிராஃபிக்ஸ் வேறு சூப்பர் என்றான். இதையெல்லாம் விட்லாச்சாரியா கிராஃபிக்ஸே இல்லாமல் காட்டிவிட்டார். கிராஃபிக்ஸ் நன்றாக இருந்த இடம் என்றால் நந்தி ஹீரோவை காப்பாற்றும் காட்சி தான். ஆனால் அதிலும் மிகப்பெரிய லாஜிக் பொத்தல் இருப்பதால் அந்த காட்சியும் எடுபடவில்லை. அவ்வளவு பவர்ஃபுல்லான வில்லன் ஏன் க்ளைமேக்ஸ் வரை காத்திருக்க வேண்டும்? தன்னிடம் இவ்வளாவு சக்தி இருந்து, கடைசியில் ஹீரொயினை வசியம் செய்யும் வில்லன் எதற்கு முதலில் அவளின் முறைப்பையன் ரூபத்தில் வர வேண்டும்? இந்த படத்திற்கு எதற்கு ஒரு ஹீரோ? முதலில் இப்படி ஒரு படம் எதற்கு எடுத்தார்கள்? இதில் என்ன இருக்கிறது? கமர்ஷியல் படம் என்றாலும் ரசிக்கும் விதத்தில் எடுக்க வேண்டாமா? இப்படியே உங்கள் மனதை கேள்விகள் போட்டு துளைக்கும். உங்கள் மனசாட்சி “போயும் போயும் இந்த படத்துக்காடா வந்த?” என காறித்துப்பும். பிரமானந்தம் மாதிரி பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு தான் நானும் தியேட்டரில் இருந்து வெளியில் வந்தேன். 21ம் தேதி உலகம் அழிந்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு கவலை வந்திருக்காது. உலக அழிவே பரவாயில்லை என நினைக்க வைத்த படம் இது. “சேய் நாளைக்கு ஒலகம் அழிஞ்சா தேவல” என்று சபித்துவிட்டு தான் தியேட்டரை விட்டு கிளம்பினேன்.



உடன் வந்த ரெட்டி சொன்னான், “பரவாயில்ல, நான் கூட கடைசில ஹீரோ செத்துருவானோனு நெனச்சேன், ஆனா கரெக்ட்டா வில்லன கொன்னுட்டான்ல?” என்று.. எனக்கு அவனை ஆந்திராவிலேயே தொலைத்துவிட்டு வந்துவிடலாமா என்று இருந்தது. இரவு ஒரு ரோட்டுக்கடையில் சாப்பிட்ட போது (அந்த ஊரில் ஓட்டல் இல்லை) அந்த கடை பையனிடம் கேட்டேன், “தம்மாருகம் குட் மூவியா?” என்று. அவன் சந்தோஷமாக சிரித்துக்கொண்டு சொன்னான், “சூப்பர் மூவி, குட் கிராபிக்ஸு” என்று. ஓ ஊர்ல எல்லாருமே இப்படித்தானா? ஆந்திர மக்கள் இப்படி படங்களை ரசிப்பதால் தான் அங்கிருக்கும் ஆட்கள் இப்படி மோசமான படங்களை கொடுக்கிறார்களா? அல்லது “நம்ம ஆட்கள் இப்படி தான்யா படம் எடுப்பாய்ங்க, எழவ பாத்து தொலைப்போம்” என்று மக்கள் அவர்கள் எடுக்கும் மொக்கை படங்களை ரசிக்க பழகிக்கொண்டார்களா? தெரியவில்லை. ஆனால் தமிழ்நாடு போல் அங்கு திருட்டு விசிடியால் சினிமாவிற்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை. அதனால் தான் தைரியமாக ஒரே கதையில் வருடம் முழுதும் படம் எடுத்து தள்ளுகின்றனர். புதுசாக எதுவும் முயற்சி செய்வதில்லை. இரவில் நான் சாப்பிட்ட காரமான “egg fried rice” கூட செமித்து விட்டது, ஆனால் இந்த படம் பார்த்த அனுபவம் இன்னும் நெஞ்சுக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கிறது..

கலர்க்காதல்...

Monday, December 17, 2012

கடவுள் திடீர்னு என் முன்னாடி வந்து நின்னு, “உனக்கு என்ன வேணும் மகளே?”னு கேட்டார்னா, செவுட்டுல ரெண்டு விட்டுட்டு கெட்ட வார்த்தைல நல்லா நாக்க புடுங்குற மாதிரி வஞ்சிட்டு, “என் புள்ளையவாச்சும் வெள்ளையா படைச்சித்தொல” என்று கேட்பேன்.. என் குடும்பத்தில், நான் ஃபோட்டோவில் பார்த்தா என் தாத்தாவின் தாத்தா தொடங்கி என் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தம்பி, அக்கா, நான் என எல்லாருமே அப்படி ஒரு கலரு.. படிக்கும் போது பிள்ளைகளுக்கு பொட்டு அழிந்துவிட்டால், என்னை தான் லேசாக விரலால் தொட்டு பொட்டு வைத்து கிண்டல் செய்வார்கள். ஆம்பள பயலுக கருப்பா இருந்து யாராவது அவன, “டே கருவாப்பயலே”னு கூப்பிட்டா அவனும் பதிலுக்கு ஏதாவது சொல்லி அவர்களை கிண்டலடித்து சிரித்துக்கொண்டே சென்று விடுவான். ஆனா பொட்டச்சியா பொறந்து தொலச்சிட்டேனே?!

வெவரம் தெரியும் வரை எனக்கு கருப்பு செவப்பு பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது. ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது, பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு இருந்தவ கிட்ட என்னமோ பேசிக்கொண்டிருந்தேன். ”ஏ கருப்பி அங்க என்னடீ கதையடிக்குற?” முகம் பார்க்கும் கண்ணாடி சைஸில் மூக்குக்கண்ணாடி அணிந்திருந்த தீபா டீச்சர் என் மேல் சாப்பீஸை வீசி எறிந்து கேட்டாள். அன்று முதல் என் பெயர் ‘கருப்பி’ ஆகிவிட்டது. புது வகுப்பிற்கு செல்லும் போது டீச்சர் ஒவ்வொருத்தரையா எந்திரிச்சி நின்னு அவங்க பேர சொல்ல சொல்லும் போது, நான் எந்திரிச்ச ஒடனே மொத்த வகுப்பும் என் பேர “கருப்பி” என்று உச்சரிக்கும். டீச்சர் மொதக்கொண்டு எல்லாரும் சிரித்து விடுவார்கள். நானும் அவர்களோடு கஷ்டப்பட்டு சிரிப்பேன். ஆனால் மழையில் நிரம்பிய தொட்டி போல் கண்ணீர் இரண்டு கண்களையும் நிரப்பியிருக்கும். 

நாளடைவில் என் பெயரை யாராவது கேட்டால் கூட, கருப்பி என்று சொல்லத்தான் வாய் வரும். பின் ஒரு சில நொடிகள் சுதாரித்து, “சுந்தரி” என்பேன். என்னை கருப்பி என்று அழைக்காத ஒரே இடம் என் வீடு தான். ஏனென்றால் என் வீட்டில் ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சும் கருப்பு.. யார் அதிக கருப்பு என்று எங்களுக்குள்ளேயே விளையாட்டாக போட்டி வைத்துக்கொள்வோம். ஆனால் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே ஒரு வித கூச்சம், பயம் எல்லாம் தொற்றிக்கொள்ளும். சில சமயங்களில் என்னை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும் போது நினைப்பேன், ‘நமக்கு என்ன குறைச்சல்?’ சரியான உயரம், சீரான தேவையான வளமான வளைவுகள், இடுப்பை தாண்டியும் நீண்டிருக்கும் முடி, உருண்டையான கண்கள், ஆந்திர மூக்கு, வரிசையாக அமைந்திருக்கும் பற்கள், கொஞ்சமே பூசியது போன்ற உடல்வாகு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே பின்னிருந்து அம்மாவின் குரல் ஒலிக்கும், “நீ அழகாத்தான்டீ இருக்க, ஆனா கருப்பாவும் இருக்கியே?”

எனக்கு பல நாட்களாக புரியாத விசயம் இது தான். கருப்பாக இருப்பவர்கள் அழகாக இருக்க மாட்டார்களா? அல்லது அழகாக இருப்பவர்கள் கருப்பாக இருந்தால் அவர்களை அழகு என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்னிடமும் சிலர், “நீ கருப்பா இருந்தாலும் கலையா இருக்க” என்பார்கள். அவர்கள் சொல்வதன் அர்த்தம், “நீ கலையா இருந்தாலும் கருப்பு தான்டீ”.. எனக்கு புரியவேயில்லை. நானும் கருப்பாக அழகாக யாராவது இருக்கிறார்களா என்று யோசித்துப்பார்த்தேன். சினிமாவில் கூட சில கருப்பான நாயகிகள் ஜெயித்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் கருப்பு என்றே நம்ப முடியாத அந்த நாயகிகளும் சினிமாவில் சிகப்பாக மேக்-அப் போட்டு தான் ஜெயித்திருக்கிறார்கள். என் கண்ணுக்கு கருப்பாக அழகாக தெரிந்த பல பெண்களையும் என் வீட்டில் கூட யாரும் அழகு என்று ஒத்துக்கொள்வதில்லை. அவர்களுக்கும் சிவப்பு தான் அழகு.

“கருப்பி” “கருவாச்சி” என்கிற காரணப்பெயரோடே பள்ளி படிப்பை தாண்டி இப்போது மூன்று ஆண்டுகளாக இதோ இந்த தீப்பெட்டி ஆபிஸீல் தான் வேலை பார்க்கிறேன். கணக்கு வழக்கு பார்த்துக்கொள்ளும் வேலை. யாராவது என் வேலை சம்பந்தமாக ஆபிஸிற்கு வந்து என்னை விசாரித்தால் உடன் பணிபுரிவோர் என்னை அடையாளம் சொல்வது, “அந்தா கருப்பா ஒரு பொண்ணு ஃபேனுக்கு கீழ ஒக்காந்திருக்குல, அது தான்” என்று என் அடையாளமாகவே ஆகிப்போனது கருப்பு கலர். பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து சென்ற மாதம் வரை என் வாழ்வில் 4 காதல்கள் வந்துபோயிருக்கின்றன. எட்டாம் வகுப்பில் வந்த முதல் காதல் தான் நான் வெளிப்படுத்திய கடைசி காதல். “ஒம் மொகறைய கண்ணாடி பாத்திருக்கியா?” என்று விழுந்து விழுந்து சிரித்தான் என் காதலை சொன்னதும் அவன். ஒரு ஆணிடம் இருந்து இந்த அளவு வெளிப்படையாக அசிங்கப்பட விரும்பாததால் என் வாழ்வில் வந்த பிற காதல்கள் அனைத்தும் நான் விழித்துக்கொண்டே காணும் கலைந்து போன கனவுகளாக என்னுள்ளேயே தோன்றி என்னுள்ளேயே புதைந்து போயின..

’புள்ளைக்கு இருவது வயசு ஆகிருச்சி, எப்ப கல்யாணம் பண்ணுறது?’ என்று சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், என் வீட்டில் இருப்பவர்கள் என்று பலரும் பேசி ஒரு வழியாக எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். மனதிற்குள் குறுகுறுப்பான பயமா சந்தோசமா என்று சொல்ல முடியாத ஒரு எண்ணம் ஏற்பட்டது கல்யாண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து. ஆனால் அந்த குறுகுறுப்பு கொஞ்ச கொஞ்சமாய் சந்தோசத்தை குறைத்து முழு பயமாய் ஒரு பெரிய பய பாறாங்கல்லாய என் மனதில் உருண்டு கொண்டே இருந்தது, வந்த மாப்பிள்ளைமார்கள் எல்லாம் என்னை நிராகரித்ததால். காரணம் சொல்லவும் வேண்டுமா? ஒரே காரணம். என் தன்னம்பிக்கையை குறைக்கும், என் மீது எனக்கே வெறுப்பை ஏற்படுத்தும் அந்த ஒரே காரணம்.

இப்போதெல்லாம் கண்ணாடியை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பும் பயமும் தான் மனதை ஆக்கிரமிக்கிறது. டிவியில் வரும் முகத்தை சிவப்பாக்கும் கிரீம்கள் நெருங்கிய தோழிகள் ஆயின. பவுடரை பங்குனிப்பொங்கலுக்கு சுவரில் வெள்ளையடிப்பது போல் பூச ஆரம்பித்தேன். இப்படி கண்டதையும் பூசும் போது எனக்கே என் முகம் அடையாளம் தெரியாமல் பிடிக்காமல் போனாலும், லேசாக சிவப்பாக தெரிந்தது. ஆனால் அந்த சிவப்பு எல்லாம் அரை மணி நேரம் கூட இருப்பதில்லை. முகத்தில் எதுவுமே பூசாமல் இருந்த போது இருந்த நிம்மதி இப்போது இல்லை. அடிக்கடி கைப்பையில் வைத்திருக்கும் கண்ணாடியை பார்த்துக்கொள்கிறேன், பவுடரை அப்பிக்கொள்கிறேன், ஒரு நாளைக்கு 4,5 முறை கிரீம் தடவுகிறேன். கருப்பாக இருக்கும் என் அம்மாவுக்கு என் அப்பா கிடைத்திருப்பது போல் எனக்கு யாராவது கிடைப்பார்கள் என்று காத்திருக்கவெல்லாம் எனக்கு பொறுமையோ நம்பிக்கையோ இல்லை. உடன் வேலை செய்யும் என் போன்ற சில கருப்பிகள் சொல்வதுபடி பியூட்டி பார்லருக்கு போவதற்கு என்னிடம் காசும் இல்லை, வெக்கமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் ‘நாம் அழகாய்த்தானே இருக்கிறோம்’ என்று கண்ணாடியை பார்த்து நினைத்த நான் இப்போதெல்லாம், ‘நான் ஏன் இவ்வளவு கருப்பாக அசிங்கமாக இருக்கிறேன்?’ என்று எண்ண ஆரம்பித்துவிட்டேன். அப்போது தான் அந்த ஆச்சரியம் நடந்தது.

என் தாத்தாவின் வழியில் என் தூரத்து உறவினர் ஒருவர் என்னை கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்வதாக தகவல் வந்தது. ”பொண்ணு பாத்துட்டு போயி மூனு மாசம் கழிச்சி சொல்லிவுடுறாய்ங்க பாரு” என்று அம்மா குறைபட்டுக்கொண்டார். அவர்கள் வீட்டில் பெண் பார்க்க வந்தார்களா என்று எனக்கு சந்தேகமாகவே இருந்தது. இதுவரை வந்த இருபத்தி சொச்சம் பேரில் யாரை தான் ஞாபகம் வைத்துக்கொள்வது? ஆனாலும் மனதில் ஒரு சந்தோசம், கருப்பாக இருந்தாலும் கல்யாணம் ஆகப்போகிறதே என்று. இனிமேல் கருப்பு என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று நினைத்து பல நாட்கள் கழித்து அன்று தான் நிம்மதியாக தூங்க போனேன், இன்னும் சில நாட்களில் என் நிம்மதி மொத்தமாக படுகுழியில் விழப்போகிறது என்பதை அறியாமல்.

என் அக்கா கல்யாணத்திற்கு என் அப்பா ஊரில் இருந்த பாதி பேரிடம் வட்டியை பற்றிய கவலையே இல்லாமல் வட்டிக்கு வாங்கியிருந்தார். திருப்பி கொடுப்பவன் தானே வட்டியை பற்றி கவலைப்பட வேண்டும்? ’வட்டிக்குலாம் கவலப்பட ஆரம்பிச்சா, தெனப்படி பொழப்பு நடக்காது. நாண்டுக்கிட்டு தான் சாகணும்” - இது அப்பாவின் வட்டியிஸம் தத்துவம். அதனால் என் கல்யாணத்திற்காக, தெரியாதவர்களை எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசி கடன் வாங்க ஆரம்பித்தார். சில இடங்களில் ஆயிரம் ரெண்டாயிரத்திற்கு எல்லாம் பிச்சை எடுத்ததை நானே பார்த்தேன். 

ஒரு வழியாக காசை தேற்றி, அம்மாவிடம் தப்பித்தவறி இன்னமும் ஒட்டியிருக்கும் கம்மல், மூக்குத்தியை அழித்து செய்து எனக்கு ஐந்து பவுன் போட்டு, ரெண்டாயிரம் ரூபாய்க்கு சத்திரம் பிடித்து, என் முதலாளியின் விசிடிங் கார்டு அளவுக்கு பத்திரிக்கை அடித்து, மொய் வைக்க கூட வக்கில்லாத சொந்தக்காரர்களை மறக்காமல் அழைத்து, பந்திக்கு வெளியில் காத்திருக்கும் நாய்கள் மட்டுமல்லாமல் சில சொந்தக்காரர்கள் கூட உணவு இல்லாமல், வாயில் வாழ்த்தி வாய்க்குள் சபித்துவிட்டு சென்றிருந்தார்கள். கல்யாணம் இனிதே முடிந்தது. முதலிரவு. விளக்கை அணைத்துவிட்டால் கருப்பென்ன? சிகப்பென்ன?

அந்த முதலிரவு தான் என் புருஷன் என்னை எந்த வித மனக்காயமும் ஏற்படாமல் தொட்ட முதல் இரவு. அதற்கு அடுத்த நாட்களில் எல்லாம் கத்துவது, பாத்திரங்கள் பறப்பது, அடி, உதை என்று படிப்படியாக, ஒரு புருஷனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ஆரம்பித்தார் அவர். “என் வாழ்க்கையிலேயே நான் கூறு கெட்டத்தனமா பண்ணுன ஒரே வெசயம் ஒன்ன கல்யாணம் பண்ணுனது தான்டீ. இப்படி ஒரு கருத்த முண்டைய கல்யாணம் பண்ணி வச்சி என் வாழ்க்கைய பாழாக்கிட்டாய்ங்க” - ஒரு நாளில் இதே அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகள் வேறு வேறு மாதிரி வருவதுண்டு அவரிடம். ஆனால் உடல் சூட்டை தணிக்கும் போது மட்டும் கருப்பு வெளுப்பெல்லாம் தெரியாதே? வெறும் மிருகத்தனமான இயந்திரத்தனமான கூடல். தன் சூடு தணிந்தவுடன் பேசாமல் எழுந்து போய்விடும் அக்கறையான கணவன். எனக்கு அவன் என்னுள் சாக்கடையை பாய்ச்சியது போல் இருக்கும். ”நான் கருப்புன்னு மொதையே தெரியும்ல? அப்புறம் ஏன் என்ன கல்யாணம் செஞ்சீங்க?” என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன். மறுமுறை அப்படி கேட்கவே அஞ்சும் அளவுக்கு அடி விழுந்தது.

என் கலர் பிடிக்காது. அதனால் என்னை பிடிக்காது, என் சமையல் பிடிக்காது, நான் உள்ளாடை அணிந்திருந்தால் பிடிக்காது, நன்றாக ஆடை உடுத்தியிருந்தாலும் பிடிக்கவே பிடிக்காது, என் வீட்டிலிருந்து யாராவது வந்திருந்தால் அவர்கள் முன்பே என் கண்ணத்தில் அவர் விரல் தடம் பதியும். அவர் கால்கள் தரையில் பதிந்து நடந்ததை விட என் இடுப்பில் பதிந்ததே அதிகம். கல்யாணம் ஆன இந்த 7 மாதத்தில் இது வரை நான் என் வீட்டிற்கு சென்றதே இல்லை. இந்த நிலையில் நரகத்திற்கு போனால் கூட சொர்க்கமாக இருக்கும் எனக்கு. கல்யாணம் ஆன புதிதில் நான் கொண்டு வந்திருந்த பவுடரும், சிவப்பழகு கிரீமும் இன்னமும் புதிதாக மூடி திறக்காமல் இருக்கின்றன. என்னை இது வரை எங்கேயும் அழைத்து சென்றதில்லை. “ஒன்ன வெளில கூட்டிட்டு போயி ‘இந்த கருவாச்சி தான் எம் பொண்டாட்டி’னு ஊருக்கு காமிக்கவா?” என்று நக்கல் வேறு. தனிக்குடித்தனம் என்பதால் என் வயதான மாமியாராலும் இங்கு நடப்பதை அறிந்து கொண்டு தன் மகனை தட்டிக்கேட்க இயலாது. நானும் அவரிடம் எதையும் சொன்னதில்லை. அவர் நம்பிக்கை தன் பையன் நன்றாக குடும்பம் நடத்துகிறான் என்று. அதைக்கெடுக்க எனக்கும் விருப்பமில்லை. வயிற்றில் மிதி விழுந்த நாட்களில் கூட மிருகத்தனமான படுக்கை தான். படுக்கையில் உருண்டதும் கிளம்பி வெளியில் போய்விடுவது. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கருணை அக்கறை எதுவுமே கிடையாது. என் உடம்பிற்குள் அசிங்கத்தை ஏற்றிவிட்டு போவதாகவே ஒவ்வொரு முறையும் அருவெறுப்பாக இருக்கும்.

ஒரு பெண்ணாக அதுவும் கருப்பாக பிறந்து கல்யாணம் வரை ஊரே கேலி கிண்டல் பேசும் போது பெரிதாக வருத்தப்படுவது எல்லாம் பெரிய விசயமே இல்லை. கல்யாணத்திற்கு பின் புருஷன் என்னும் அந்த ஒருவன் நம்மை ஒரு உயிர் உள்ள பொருளாக கூட மதிக்காமல் இருப்பது தான் வெளியே சொல்ல முடியாத பெரிய கொடுமை. சைக்கிளை தினமும் அக்கறையாக சுத்தமாக துடைக்கும் அவருக்கு என் மேல் அதில் துளி பங்கு கூட அக்கறை கிடையாது என்று நினைக்கும் போது அழுகை முட்டிக்கொண்டு வரும். ஆனால் அழ முடியாது. கண்ணீரும் வராது. ஒரு நாளைக்கு ஒரு முறை அழுதால் தானே கண்ணீர் வரும். நாள் முழுதும் அழுதால்? நான் அவரிடம் கேட்க நினைப்பதெல்லாம், ’என்னோடு படுக்கையில் உருளும் போதெல்லாம் நான் கருப்பு என்பது தெரியவில்லையா?’

அவர் வேலைக்கு போயிருந்த ஒரு நாளில் என்னை பார்க்க வந்திருந்த அம்மாவிடம் சொன்னேன், “கொஞ்ச நாளா தல சுத்தி மயக்கம் வர மாதிரியே இருக்குமா”

“குளிச்சி எத்தன நாள்டீ ஆகுது?”

“தெரிலம்மா.. ரொம்ப நாள் ஆகுதுன்னு நெனைக்குறேன்”

அவர் வருவதற்குள் அவசர அவசரமாக ஒரு டாக்டரிடம் அழைத்து போய் உறுதிபடுத்திக்கொண்டார். ஆம் அவர் என்றோ பாய்ச்சிய சாக்கடை இப்போது புழுவைத்திருக்கிறது. ஆனாலும் புழு என்று என்னால் அதை விட்டுவிட முடியவில்லையே.. சாக்கடையில் உருவானாலும் அது என் உயிர் கொண்டு வளரும் புழு அல்லவா? அவர் வரும் வரை என் அம்மா காத்திருந்தார். அவர் என் அம்மாவையும் என்னையும் முறைத்துக்கொண்டே வந்தார். என் கண்ணம் அவர் கொடுக்கவிருக்கும் அறைக்காக தயாரானது.

“மாப்ள, சுந்தரி வயித்துப்புள்ளையா இருக்கா”

“அதுக்கு உங்க மவளுக்கு ஏழு மாசம் ஆகிருக்கு? அவ அவ வந்த ஒரே மாசத்துல வயித்த தள்ளிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிராளுக. இந்த கருத்த முண்டைக்கு இத்தன நாள் ஆகிருக்கு”

“என்ன பண்ணுறது மாப்ள? கடவுள் மனசு வைக்கணும்ல?”

“இப்ப என்ன செய்யணும் நானு? அவளலாம் அனுப்ப முடியாது. நான் பாத்துக்கிறேன். எட்டாவது மாசத்துலயோ ஒம்பதாவது மாசத்துலயோ கூட்டிட்டு போங்க. இப்பையே கூட்டிட்டு போணும்னா ஒங்க வீட்லயே இருந்திரட்டும்”. அவர் இப்படி சொன்னதும், அம்மா சரி என்று சொல்லி என்னை கூட்டி போய் விட மாட்டாளா என ஏங்கினேன்.

“இல்ல மாப்ள ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு, நல்லா சப்புட்டு உடம்ப தேத்தணும்னு டாக்டரு சொல்லிருக்காரு”

“ஒங்க மவள நா ஒன்னும் கொன்னுற மாட்டேன். போறீங்களா?”. என்னை பார்த்து “ஏ இங்க என்னடீ வேடிக்க? உள்ள போடீ”. நான் அமைதியாக உள்ளே போனேன். என் அம்மா என்னை நினைத்து மிகவும் கலங்கியிருக்க வேண்டும். அவர் அழ ஆரம்பித்திருந்தார் நான் வீட்டின் உள்ளே செல்லும் போது. என் கஷ்டத்தை விட எனக்காக அம்மா கஷ்டப்படுவது தான் எனக்கு வருத்தம் தருவதாக இருந்தது. 

“புடிச்சி செஞ்சாலும் புடிக்காம செஞ்சாலும் புள்ள பொறக்கும் போல?” நக்கலாக கேட்டு என் அருகில் வந்தார் அவர். வழக்கம் போல மிருக்கத்தனமான அணைப்பு. அணைப்பு என்பதை விட மூச்சுத்திணற வைக்கும் இறுக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.

“ஏங்க நான் உண்டாயிருக்கேங்க”

“அதுக்கு? ஒனக்கு சூடம் ஏத்தி கொண்டாடனுமா?”

“இல்லைங்க இனிமேல் கொஞ்சம் பாத்து பந்துஸ்தா இருக்கணுங்க”

“அதெல்லாம் எனக்கு தெரியும்டீ” சொல்லிக்கொண்டே மிருகம் சதையை கடித்து குதற ஆரம்பித்தது. தன் பசி தீர்ந்ததும் வழக்கம் போல சூடான ரெத்தத்தோடு சதையை அநாதையாக விட்டு போய்விட்டது.


எப்படா எட்டாவது மாதம் வரும், அம்மா என்னை அழைத்து செல்வார் என்று காத்திருந்தேன். வாழ்க்கை என்பது எவ்வளவு கொடூரம் என்பது உங்களை யாராவது சிரிக்க சொல்லி அடிக்கும் போது தான் தெரியும். என் புருஷன் எட்டாவது மாதத்தில் கூட என்னை விட்டிருக்க மாட்டார், மிருகத்தனத்துக்கு நடுவில் சில இடைஞ்சல்கள் ஏற்பட்டதால் அந்த இடைஞ்சலை இரண்டு மாதங்களில் இறக்கி வைத்துவிட்டு வர தான் என்னை அனுப்பியிருந்தார்.

நிஜமாகவே நான் வீட்டில் இருந்த நாட்கள் தான் நான் மறந்து போன சந்தோஷங்களை எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்திய நாட்கள். இப்போது நான் சொன்ன முதல் வரியை படித்துப்பாருங்கள். கருப்பாக பிறந்து என் குழந்தை என்னை மாதிரி கஷ்டப்படக்கூடாது என்பது தான் என் வேண்டுதல், விருப்பம் எல்லாம். எல்லோரையும் விட அழகான கண், கண்ணம், கூந்தல், மூக்கு, உதடு, மனசு பெற்றிருந்தாலும் நீங்கள் நிறத்தில் மற்றவரை விட கம்மியாக இருந்தால், உங்கள் நல்ல விசயங்கள், அழகு என எல்லாவற்றையுமே அசிங்கமாக பார்க்கும் இந்த உலகில் என் பிள்ளை சிகப்பாக பிறக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? கூனோ குருடோ ஆனால் சிகப்பாய் பிறந்து விட வேண்டும் அவனோ அவளோ. கிண்டல், கேலி, காதல் மறுப்பு, கல்யாண சோகம் என என் வாழ்வின் எல்லா மோசமான நிகழ்வுக்கும் இந்த நிறம் தானே காரணம்? என் பிள்ளைக்கும் அப்படி ஒரு நிலை வேண்டாம் என தான் வேண்டுகிறேன். சிகப்பாக பிறந்தால் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். என் பிள்ளை தைரியமாக வளருவாள்/ன். வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது யார் என்ன சொல்வார்களோ என கூனிக்குறுக வேண்டிய அவசியம் இருக்காது. அவன்/ள் அழகை போற்றும், மரியாதை கொடுக்கும் மனித ஜென்மமாய் மதிக்கும் கணவனோ மனைவியோ அமைவார்கள். யார் என்னை என்ன சமாதானம் செய்ய நினைத்தாலும் எனக்கு கருத்த பிள்ளை வேண்டாம். என் பிள்ளை சிவப்பாக பிறக்க வேண்டும்.

ஒரு மாசம் நல்ல சாப்பாடு, நிம்மதியான உறக்கம், சில நேரங்களில் திடுக் என்ற முழிப்பு, ஒரு சில கெட்ட கனவுகள், பக்கத்து வீட்டு கதைகளை ஒருவர் அறியாமல் இன்னொருவரிடம் குசுகுசுவென்று பேசுவது என்று கழிந்தது ஒரு மாசம். நான் பயத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தது.

“அம்மா” லேசான முனகலுடன் கீழே அமர்ந்துவிட்டேன். அப்பா வேகவேகமாக ஓடி ஒரு ஆட்டோவை பிடித்து அருகில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு அம்மாவுடன் அனுப்பி வைத்தார்.வலி என்னை அரை மயக்கத்தில் தள்ளியது.

“பேபி சரியான பொஷிசனில் இல்லை, சிஷேரியன் தான் பண்ணனும்”

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’ - நான் அரை மயக்கத்தில் அந்த வலியிலும் நினைத்துக்கொண்டிருந்தேன். நினைத்துக்கொண்டிருந்தேனா புலம்பிக்கொண்டிருந்தேனா என சரியாக தெரியவில்லை.

“எங்க கிட்ட அவ்வளவு காசு இல்லம்மா.. ” அம்மா அழுதுகொண்டிருப்பது அந்த மயக்கத்திலும் என் காதில் விழுந்தது.

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’

“எப்படியாவது அரேஞ்ச் பண்ணுங்கம்மா.. சீக்கிரம் ஆபரேசன் பண்ணனும்”

’என் பிள்ள செகப்பா பொறக்கணும்’

”அய்யோ நான் என்ன பண்ணுறது? சரிம்மா நான் காசு எப்படியாவது பொரட்டிட்டு வாரேன். என் மகள பாத்துக்கோங்கமா” அப்பாவை தேடி அம்மா கிளம்புகிறாள் என்று நினைக்கிறேன். ஹ்ம் அவளுக்கு வேறு யாரை தெரியும்?

‘என் பிள்ள செகப்பா பொறக்கணும்’ - என்னை எதிலோ படுக்க வைத்து எங்கோ தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். ஒரு அரை இருட்டான அறை.

டாக்டர் என் காலை விரித்த நிலையில் நீட்டி உட்கார வைத்து என் பிடரியை பிடித்து தரையை நோக்கி அழுத்தி குனிய வைத்து என் முதுகில் தன் விரல்களால் எதையோ தேடினார். என்னால் முடியவில்லை. மூச்சு முட்ட ஆரம்பித்தது. ”அம்மா” சில நாட்களாக நான் மறந்திருந்த அழுகை மீண்டும் வந்தது. ஆனால் அழக்கூட முடியாத அளவுக்கு மூச்சு முட்டியது. டாக்டரின் விரல்கள் என் முதுகில் இருந்து விலகின. சில நொடிகளில் திடீரென என் நடுமுதுகில் யாரோ நன்கு காய்ச்சிய கத்தியை சொருகியது போன்ற வேதனை. துடிக்க கூட விடாமல் தன் முதுகை வளைந்த நிலையிலேயே என் பிடரியை அழுத்திய நிலையிலேயே வைத்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என் இடுப்பில் இருந்து கீழே பாதம் வரை மரத்துப்போக ஆரம்பித்தது. ஆனால் முதுகில் அந்த ஊசி குத்திய இடம் மட்டும் வின் வின் என தெரித்தது.

சில கத்திகள், ஒன்றிரண்டு கோடுகள், கொஞ்சம் ரத்தம்.. இரு கை கொண்டு டாக்டர் எதையோ வெளியில் எடுத்தார்கள். அதை பார்க்குமுன் கண் மூடிக்கொண்டது.

சில நேரத்தில் கண் விழித்தேன். இது வேறு அறை. கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. அருகில் ஏதோ முனகல் சத்தம் கேட்டது. முனகலா அழுகையா என தெரியவில்லை. மெதுவாக அந்த அறையின் வெளிச்சத்தை கண் உணர்ந்துகொண்டு நன்றாக கண்களை திறந்து பார்த்தேன். என் அம்மாவும் அப்பாவும் நின்று கொண்டிருந்தார்கள். இருவர் முகமும் அழுது வீங்கிப்போயிருந்தன. ஆனால் நான் கேட்ட விசும்பல் அவர்களுடையது அல்ல. நான் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் தரையில் உட்கார்ந்து கட்டிலில் நெற்றியை வைத்து என் வீட்டுக்காரர் அழுது கொண்டிருந்தார். என்ன ஏதுவென்று தெரியாமல் அம்மாவை பார்த்தேன்.

“ஒம்பிள்ள பொறக்கும் போதே செத்து பொறந்துருச்சிமா” என்று அழ ஆரம்பித்துவிட்டார். என் வீட்டுக்காரர் பெருங்குரலெடுத்து மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டார். 

என் கற்பனைகள் ஆசைகள் கனவுகள் எல்லாமே இதோ என் கட்டிலில் தலை சாய்த்து அழுதுகொண்டிருக்கும் இந்த ஆளால் தான் இப்படி மண்ணாகிவிட்டது என எண்ணி எனக்கும் அழுகை வந்தது. அழுகையை ஆரம்பித்துக்கொண்டே கேட்டேன், “என் பிள்ளை எங்கம்மா?”

அம்மா தலையை ஆட்டிக்கொண்டே வெளியில் சென்றார். சில நிமிடங்களில் நர்ஸ் என் குழந்தையை எடுத்து வந்தார். ’இந்த பாவ உலகு உனக்கு ஏற்றதல்ல’ என்று கடைசி நேரத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு கடவுள் தன்னிடமே மீண்டும் எடுத்துக்கொண்ட அந்த பெண் சிசு இதோ என் முன் பிண்டமாய், கருப்பு நிறத்தில்!!!

என் அழுகை நின்று விட்டது. கட்டிலில் தலை புதைத்து அழும் என் கணவனை பார்த்தேன். “அய்யோ என் புள்ள போயிருச்சே.. நான் என்ன செய்வேன்?” என்று கதறுகிறார்.

‘இப்போது கருப்பாக இருந்தாலும் இது உன் பிள்ளையா? உன் உயிரா? நான் கருப்பாக இருந்தாலும் என் அம்மா அப்பாவுக்கு நானும் அப்படித்தானே? உன் பிள்ளைக்கு ஒன்று என்றவுடன் உனக்கு வலிப்பது போல் தானே அன்று அவர்களுக்கு வலித்திருக்கும்? இன்று கருப்பா சிவப்பா என்று பார்க்காமல் உன் பிள்ளைக்காக அழுகிறாயே அன்று என் மேல் சிறு அக்கறை எடுத்திருந்தால், இன்று நீ இந்த பிள்ளையை சந்தோசமாக கொஞ்சியிருப்பாயே?’ என்றெல்லாம் கேட்டு அந்த ஆளை நான் இன்னும் வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. நடுங்கிக்கொண்டிருக்கும் என் விரல்களை மெதுவாக அவர் தலையில் வைத்து முடியை கோதிவிட்டு தலை தடவுகிறேன். என் கைகளை பற்றிக்கொண்டு மீண்டும் அழுகிறார்.

எனக்கு கண்களில் கண்ணீர் என்றாலும் உதட்டில் சிறு புன்னகை.. ஏச்சையும் பேச்சையும் கேட்டுக்கொண்டு வாழ்வது வரை ஒரு வித கூச்ச உணர்வுடன் தாழ்வு மனப்பாண்மையுடன் வாழ்ந்து, “இதை விட சாகுவதே சிறந்தது” என்கிற எண்ணம் ஏற்பட்டு தினம் தினம் செத்து பிழைப்பதற்கு பதில், என் மகள் பிறக்கும் போதே செத்திருப்பது அவளுக்கும் எனக்கும் கடவுள் கொடுத்திருக்கும் வரம் தான்.. 

என் கணவர் என்னை கட்டிக்கொண்டு அழுகிறார். முதல் முறையாக ஒரு மனிதனின் ஸ்பரிசத்தை உணர்கிறேன் நான். விருப்பப்பட்டு அவரை முதல் முறையாக நானும் கட்டி அணைக்கிறேன் பேரானந்தத்தோடு..

ரஜினி - The Most Powerful Magnet...

Monday, December 10, 2012

மெலிந்த தேகம், உப்பிய கண்ணம், ரொம்ப ரொம்ப சின்ன கண்கள், சரியாக வாரப்படாத பரட்டை தலை, வேற என்னய்யா இருக்கு இந்த மனுஷன் கிட்ட? இந்த ஆள் திரையில் தோன்றினால்,பிறந்த குழந்தை முதல் பல் போன பெருசுகள் வரை  இடம், பொருள், ஏவல், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என எல்லாவற்றையும் மறந்து ஏதோ தவ நிலையில் இருப்பது போல் திரையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் பெயரை சொல்லாமலே உங்களுக்கு இந்நேரம் நான் யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன் என தெரிந்திருக்கும் என்றாலும், கட்டுரைக்கென்று இருக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களை மதித்து அவர் பெயரை சொல்வது தான் சரி.. அவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி..



ஒவ்வொரு நடிகரும் இன்று தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள உடலை குறைப்பது, பருமனாக்குவது, மாறுவேசம் போடுவது, வேசம் போட்டதை எண்ட் க்ரிடிட்ஸ் ஓடும் போது காட்டுவது என்று என்னென்னமோ செய்து நம்மை கவர நினைக்கிறார்கள்.. ஆனால் தான் நடிக்கும் காட்சியில் இவர் இழுவையாக “ஐய்” என்று சொன்னால் குழந்தைகள் குதூகலிக்கும், லேசாக கண் கலங்கினால் நமக்கு பொலபொலவென்று கண்ணீர் திறந்துவிடப்பட்ட கர்நாடகா அணை போல் கிளம்பிவிடும்.


 இங்கு நான் ரஜினியின் வரலாறு பற்றி பேச விரும்பவில்லை. ஏனென்றால் இந்திய சுதந்திர வரலாறு தெரிந்தவர்களை விட ரஜினி கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் லெவல் வரை வந்ததை தெரிந்தவர்கள், தெரிந்து கொண்டிருப்பவர்கள் அதிகம். ரஜினி என்னும் பிம்பம் என்னை ஆட்கொண்டதை கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம் என்றிருக்கிறேன். வேண்டுமானால் என்னுடன் தொடர்ந்து வாருங்கள், நீங்களும் உங்கள் பால்ய காலத்தில் ரஜினியை ரசித்தது, விமர்சித்தது, தியேட்டரில் ஆட்டம் போட்டது போன்ற நல்ல தருணங்களை நினைத்துப்பார்க்கலாம்.


குழந்தையாக இருக்கும் போது எல்லோருக்கும் ரஜினி என்பவர் ஒரு ஆதர்சம். மிகவும் சாதாரண மனிதனாக இருப்பார், விவரம் தெரியாதவராக ஜனகராஜோடோ செந்திலோடோ சேர்ந்து காமெடி செய்துகொண்டிருப்பார், ஆனால் எவனாவது தப்பு செய்தால், அவ்வளவு தான், பந்தாடிவிடுவார். அவன் போலீஸாக இருந்தாலும் சரி பொறுக்கியாக இருந்தாலும் சரி. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகளும் சேட்டைகளும் ஆக்ரோஷமான சண்டைகளும் அவர் மீது ஒரு வித பாசத்தை உண்டு பண்ணிவிடும் நமக்கு. நம் குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார். எங்கள் வீட்டில் இப்போதும் ரஜினி மாமா என்று தான் நானும் என் தம்பியும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் அவரை.. கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், அப்படி சொல்லும் போது ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்கள், அது சொல்ல முடியாதது..


எவனொருவனும் குழந்தையாக இருக்கும் போது ரஜினி படம் பார்த்திருந்தால் அவன் கண்டிப்பாக ரஜினி ரசினாக மாறிவிடுவான். பள்ளி போட்டிகளில் ரஜினி பாடல், மழையில் நனையும் போது ரஜினி பாடல், அப்பாவோடு வண்டியில் வேகமாக போகும் போதும் ரஜினி பாடல், ஃப்ரெண்ட்ஸோடு சண்டை போடும் போது அந்த சின்ன வயசிலேயே ரஜினியின் பன்ச் டயலாக்கில் சவால் விடுவது என அவன் வாழ்வில் அப்போதைய முக்கிய தருணங்கள் பலவற்றிலும் ரஜினி இருப்பார். ஏனென்றால் ரஜினியின் முக்கிய அம்சம் அவர் எல்லா படங்களிலும் ரஜினியாகத்தான் இருப்பார். மற்ற படங்களில் கதாப்பாத்திரங்கள் தான் தெரியும். ஒவ்வொரு நடிகரும் தன் ஒவ்வொரு படத்திலும் தன்னை வேறு மாதிரி காட்டிக்கொள்ள நினைப்பார். ஆனால் ரஜினி தன்னை எல்லா படங்களிலும் ரஜினியாக மட்டுமே காட்டிக்கொள்வார். இது ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் போன்றவர்கள் மட்டுமே சாத்தியம். ஆனால் ஒரு மசாலா ஹீரோவுக்கு இப்படி ஒரு பிம்பம், ஃபோர்ஸ், பலம் என்பது ரஜினி ஒருவருக்கு மட்டும் தான். இதில் இருக்கும் பெரிய ரிஸ்க், ஒவ்வொரு படத்திலும் அவர் அந்த பிம்பத்தை உடையாமல் அதே நேரத்தில் அதை விட சிறப்பாக செதுக்க வேண்டும்.. ஒவ்வொரு படம் வரும் போதும் அவரின் அடுத்த படம் மேல் அது மேலும் சுமையை ஏற்றி விடும். ஆனால் ரஜினி என்ன சாதாரண ஆளா? எல்லா சுமையையும் “ப்பூ” என ஊதித்தள்ளி விட்டு, தன் அடுத்த படத்திலும் ஸ்டைலாக “இதெப்டி இருக்கு?” என்று கேட்பார்.. நாம் ஸ்க்ரீனை பார்த்து “சூப்பர்” என்று விசில் அடிப்போம்..


எல்லா மனிதனுக்கும் திமிர் பிடித்த காலம் என்று ஒன்று வரும். அதாவது அந்த 15-20வயது.. அந்த வயதில் உலகில் தனக்கு மட்டும் தான் எல்லாமே தெரிந்தது போலவும், மற்ற எல்லாருமே ’முட்டாப்பயலுக’ என்றும் நினைத்து அலைந்து கொண்டிருப்போம். அப்படி ஒரு வயதில் ரஜினி ரசிகர்களுக்கும் லேசான தடுமாற்றம் வரும். ஒரு கூட்டத்தில் தன்னை அறிவாளி என்று காட்டிக்கொள்ள “கமல் மஹாநதில பின்னிருப்பாரு, தெரியுமா?”, “அன்பே சிவம் மாதிரி ரஜினியால முடியுமா?” ”இப்ப வர சின்ன பயலுக கூட என்னமா நடிக்குறாய்ங்க? இந்த ஆளப்பாரு, சினிமாக்கு வந்ததுல இருந்து ஒரே மாதிரி நடிக்குறாரு!” என்று பிதற்றிக்கொண்டிருப்போம். ஒரு உண்மையை மறந்துவிடுவோம், சினிமாவில் மற்றவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் தன் மேனரிஸங்களை மாற்றி, உடலை வருத்தி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டினால் தான் முடியும். ஆனால் அது எதுவுமே இல்லாமல் ஒருவர் தாக்குப்பிடிக்கிறார் என்றால், அதற்கு பின் எவ்வளவு பெரிய உழைப்பு இருந்திருக்கும்? ரஜினி ஒருவருக்கு மட்டுமே அது சாத்தியம். சில நடிகர்களுக்கு இரண்டு மூன்று படங்கள் அது போல் ஒரு இமேஜை கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்களில் மக்களும் “என்னய்யா இவன் ஒரே மாதிரி நடிக்குறான்?” என்று திருட்டு விசிடி கூட வாங்க மாட்டார்கள். ஆனால் ரஜினி “நல்லவனுக்கு நல்லவன்”, ”அண்ணாமலை”, “படையப்பா” என்று நடித்தாலும், “வேலைக்காரன்”, “முத்து” என நடித்தாலும் படங்கள் சில்வர் ஜூப்ளி தான். ஏனென்றால் அங்கு எங்களுக்கு கதை முக்கியமில்லை.. ரஜினி என்னும் அந்த மனிதரின் நடை, அழகு, வசன உச்சரிப்பு, பன்ச் டயலாக், அந்த ஸ்டைல், வேகம் இது இருந்தால் போது.. கதையெல்லாம் தங்களை அறிவாளியாக காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் தேடுவது..


இன்னும் சில மேதாவிகள் இருக்கிறார்கள்.. “ரஜினி இந்த மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?”, என்றும் “ஏம்ப்பா தமிழ்நாட்டுல சம்பாதிச்சத தமிழ்நாட்டுல முதலீடு செய்ய மாட்டாரோ?” என்றும், “இத்தன வயசுக்கு பிறகும் நடிக்கணுமா?” என்றும் ”இவ்வளவு செய்த ரசிகர்களுக்காகவாவது அவர் அரசியலுக்கு வர வேண்டாமா?” என்றும் சும்மா நய நயவென்று ஓலைப்பாயில் மோண்டுகொண்டிருப்பவர்களுக்கு இது தான் என் முதலும் கடைசியுமான பதில். மக்களுக்கு ஏதாவது செய்ய அவர் என்ன பொது சேவகரா இல்லை அரசியல்வாதியா அல்லது உங்களுக்கு சேவை செய்ய UPSC, TNPSC தேர்வெழுதி பாஸாகி வந்த அரசு ஊழியனா? அவர் ஒரு கலைஞன், நடிகன். நடிப்பது அவர் தொழில். அதில் சிறப்பாக செய்யவில்லை என்றால் கிழி கிழியென்று கிழியுங்கள், கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து சிறுபிள்ளைத்தனமாக மக்களுக்கு என்ன செய்தார் என கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஒருவனை அவன் வேலையை மீறி எதையாவது செய் என்று கட்டாயப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஓட்டு போட்ட மக்களுக்கு சேவை செய்வதை மட்டுமே முழு வேலையா இருக்கும் அரசியல்வாதிகளை கேள்விகேட்காத நாம் ஒரு நடிகரை ஏன் கேள்வி கேட்கிறோம்? நம் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசு ஊழியனை கேள்வி கேட்காத நாம், ஒரு பொழுது போக்கு துறை ஆசாமியை ஏன் கேட்கிறோம்? நமக்கு உதவ வேண்டும் என்று அவருக்கு கட்டாயம் கிடையாது.. நம்மால் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது.. மக்களுக்கு அவர் உதவவில்லை என நாம் குற்றம் சொல்லவும் முடியாது..



 இங்கிருந்து வெளிநாட்டில் போய் சம்பாதிக்கும் நம் நாட்டுக்காரர்களை அங்கிருப்பவரிகள் எல்லாம், “எப்பா இங்காரு, நீ எங்கூருல தான் லட்ச லட்சமா சம்பாதிச்சிருக்க, ஒழுங்கா இங்கேயே எல்லாத்தையும் குடுத்துட்டு போயிரு”னு சொன்னா எவ்வளவு அசிங்கமாக இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் கேள்வி. ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்ததை எப்படி உங்களால் வாய் கூசாமல் திருட முற்பட்டு அதற்கு புரட்சி என்னும் பெயரில் ஞாயம் கற்பிக்க முடிகிறது? நான் உங்களுக்கு லட்ச ரூபாய் கொடுக்கிறேன்.. உங்களால் என்னை என் எல்லா கவலைகளையும் மறக்கடித்து குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொள்ளாமல் சந்தோசப்படுத்த முடியுமா? ஆனால் ஒரு நடிகன் கடந்து இருபத்தைந்து வருடங்களாக வெறும் சொற்ப ரூபாயை வாங்கிக்கொண்டு என் கவலைகள், வேலைப்பளு, என எல்லாவற்றையும் ரெண்டரை மணி நேரம் மறக்க செய்து ஒரு வித மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் கொடுக்கிறான் என்றால், அந்த மனிதனிடம் அதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்? எனக்கு ரஜினியை ரசிக்கும் அந்த நேர சந்தோசம் போதும்..


ரஜினியையும் அரசியலையும் அடிக்கடி இணைத்து அவரின் நிம்மதியையும் என்னைப்போன்ற ரசிகர்களின் நிம்மதியையும் கெடுப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை ‘நீ இதைத்தான் செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது’ என்று கட்டாயப்படுத்த உங்களுக்கோ எனக்கோ உரிமையில்லை. அவர் என்ன செய்கிறாரோ அது அவர் விருப்பம். ஒரு வேளை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தால், எப்போது எப்படி வரணும்னு அவருக்கு நல்லா தெரியும். அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் மட்டும், வரிசையை மதித்து க்யூவில் நிற்பீர்களா? சாலை விதிகளை ஃபாலோ செய்வீர்களா? லஞ்சம் கொடுத்து உங்களுக்கு முன் முறையாக காத்திருப்பவனை பின்னுக்கு தள்ளி உங்கள் வேலையை மட்டும் வேகமாக முடிக்காமல் இருந்துவிடுவீர்களா? எந்த விதத்திலும் ஒரு நல்ல குடிமகனாக இல்லாத உங்களுக்கு ரஜினி போல் ஒரு நல்லவர் ஆள வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் ஏன் இருக்கிறது? ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என நினைத்தீர்களானால், அவர் ஆளும் அளவுக்கு உங்கள் தகுதிகளை வளப்படுத்திக்கொண்டு வாருங்கள்.


பாருங்கள் தலைவரின் பிறந்த நாளுக்கு ஒரு போஸ்ட் போட நினைத்தால் அது எங்கெங்கோ நம்மை சுற்றியடித்து விட்டது. சரி விசயத்துக்கு வருவோம். மற்றவர் போல் நாம் தலைவரை இங்கேயே தொழில் தொடங்கவோ, அரசியல்  ஆரம்பிக்கவோ சொல்லவில்லை.. வருடத்திற்கு ஒரு படம், அல்லது ரெண்டு வருடத்திற்காவது ஒரு படம் நடிக்க வேண்டும்.. அவ்வளவு தான்.. அந்த சிறிய விசீகரமான உலகின் மிக சக்திமிகுந்த கண்களை நாங்கள் அடிக்கடி பெரிய திரையில் பார்த்து தொண்டை கட்டும் அளவுக்கு விசில் அடிக்க வேண்டும். படம் பார்த்த அன்று இரவு ஏதோ தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி மனதில் இருக்க வேண்டும். அந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக உறங்க வேண்டும். இதையெல்லாம் நாங்கள் இன்னும் பல ஆண்டுகள் அனுபவிக்க, தலைவரின் இந்த பிறந்த நாளில், இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளையும், நல்ல டைரக்டர்களையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன். ஒரு வேளை அவர் நடிப்பதை நிறுத்தினாலும் அவரின் படங்கள் கொடுத்த மகிழ்ச்சி எங்களுக்கு போதும். இப்போதைக்கு சிவாஜி 3D தான் எங்களின் கவனம் முழுதும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு ரஜினி மாமா...


ஒரு சின்ன லிஸ்ட். எனக்கு பிடித்த ரஜினியின் 15 படங்கள். முதலில் 5 என முடிவு செய்து, அது 10 ஆகி பின் 10ம் காணாமல் இப்போது 15. பதினைந்தும் கம்மி தான். எல்லா படங்களும் பிடித்த படங்கள் தான். விட்டுப்போன் மற்ற படங்கள் என்னை மன்னிக்கட்டும். இந்த பதினைந்து படங்களுக்கு ரேன்க் எல்லாம் இல்லை. எல்லாமே சமமாக பிடிக்கும். ஒரே நேரத்தில் இவை அனைத்தும் பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகினால் பதினைந்து புது டிவிக்கள் வாங்க கூட தயங்க மாட்டேன். இனி லிஸ்ட்

1. ஆறிலிருந்து அறுபது வரை
2. முள்ளும் மலரும்
3. தில்லு முல்லு
4. படிக்காதவன்
5. பணக்காரன்
6. தளபதி
7. வீரா
8. அண்ணாமலை
9. பாட்ஷா
10. முத்து
11. படையப்பா
12. சிவாஜி
13. குரு சிஷ்யன்
14. மன்னன்
15. நான் சிகப்பு மனிதன்

மீண்டும் சொல்கிறேன், ரஜினி என்கிற நடிகரை பாருங்கள். அவரின் தனி மனித சுதந்திரத்திற்குள் மூக்கை நுழைக்க உங்களுக்கோ எனக்கோ தகுதியோ உரிமையோ கிடையாது.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்..

முத்துச்செல்வி...

Saturday, December 8, 2012

புது லோன் ஆபிஸர எப்படியாவது ‘கவர்’ பண்ணிரணும்னு கடலை, வாழைப்பூ, முந்திரியோடு வந்தவர்கள் ஒரு கணம் கொஞ்சம் அதிர்ந்துவிட்டார்கள் அந்த பெண்ணை பார்த்ததும். கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டன இப்போது இந்த ஊருக்கு ஆபிஸராக அறியப்படும் அந்த முகத்தை கடைசியாக பார்த்து. வருடங்கள் ஆனாலும் மறக்கக்கூடிய முகமா அது? லேசாக சந்தேகம் இருந்தவர்கள் கூட, “ஒங்க எல்லாருக்கும் வணக்கம். நாந்தான் முத்துச்செல்வி, இந்த பேங்குக்கு புதுசா வந்திருக்குற லோன் செக்‌ஷன் ஸ்டாஃப்” என்று இரு கை கூப்பி புன்னகையுடன் அவள் சொன்னதை பார்த்ததும் லேசாக ஆடித்தான் போய்விட்டார்கள். அப்படியும் யாரென்று புரிந்துகொள்ளமுடியாத சில பெருசுகளுக்கு இள, மத்திய வயதுடைய ஆட்கள் ‘இது கூட தெரியாம இந்த ஊர்ல என்ன புடுங்குன?’ என்கிற தொனியில் உண்மையை சொன்னார்கள். சில நேரம் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்த கடலை, வாழை, முந்திரி தலைகள் எல்லாம் மெதுவாக வங்கியை காலிசெய்ய ஆரம்பித்தன. “அப்படி ஒன்னும் நாம லோன் வாங்கணும்னு அவசியம் இல்ல” என்பது போல் இருந்தது அவர்களின் செயல். 

இது, தான் எதிர்பார்த்தது தான் என்பது போல் அமைதியாக புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துச்செல்வி. “என்ன மேடம், சொந்த ஊர் வேணும்னு மேல வரைக்கும் சண்ட போட்டு கேட்டு வாங்கிட்டு வந்தீங்க? இங்க என்னடானா உங்க ஊருக்காரங்க இப்படி பண்ணுறாங்க?” - மேனேஜர்.

“அவங்க இப்படி பண்ணலேனா தான் சார் ஆச்சரியம்” சொல்லிக்கொண்டே தன் இருக்கையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டாள். இவளிடம் எதையும் கறக்க முடியாது என்று உணர்ந்துகொண்டு மேனேஜரும் தன் இருக்கைக்கு ஓடிவிட்டார். ’அவன் வந்தானா? நாம தான் சரியா பாக்கலையா?’ யாரையோ அவள் எதிர்பார்த்திருந்தாள்.

ஊருக்குள் அவளுக்கு யாரும் வீடு கொடுக்கவும் தயாராக இல்லை. எப்படியோ தன்னுடன் வேலை செய்யும் மற்றொரு பெண் குடியிருக்கும் வீட்டில் வீட்டு ஓனரின் முறைப்புக்கும் முனுமுனுப்புக்கும் இடையில் தங்கியிருக்கிறாள். அவளுக்கும் சரி, ஊர்க்காரர்களுக்கும் சரி, இருப்பு கொள்ளவில்லை.. இவள் அமைதியாக பழசை நினைக்க ஆரம்பித்தாள். அவர்கள் ஒருவருக்கொருவர் அதே பழசை அசிங்கமாக பேச ஆரம்பித்தனர்.

ரோட்டோரத்தில் முந்திரி வறுத்துக்கொடுக்கும் கடை வைத்திருந்தான் சுயம்பு. அதை கடை என்று சொல்ல முடியாது. சில கம்புகள் நட்டு, அதில் உலகின் முதல் தென்னை மரஓலையோ என்று நினைக்க தோன்றும் ஓலைகளை சாய்த்து வைத்திருந்தான். முந்திரி கடை என்று சொன்னால் முந்திரி எல்லாம் சண்டைக்கு வந்துவிடும். நான்கைந்து முந்திரிகளை வறுத்துக்கொண்டிருப்பான். சில நேரம் வறுக்க அடுப்புக்கரியும் இருக்காது.. வெறும் சட்டியில் கர் கர்ரென்று தேய்த்துக்கொண்டிருப்பான். வாயில் எப்போதும் பீடி புகைந்து கொண்டிருக்கும். எண்ணெய் பார்க்காத வறண்ட தலை. அவன் பொண்டாட்டி பெயர் ராணி. பெயருக்கு ஏற்றாற்போல் அவள் ராணி போல் அழகு தான். இந்த ராணிக்கு பிறந்தவர்கள் தான் முத்துச்செல்வியும், தங்கராசுவும். பேரிலாவது இருக்கட்டுமே என்று சுயம்பு ஆசை ஆசையாக தன் பிள்ளைகளுக்கு முத்து தங்கம் என்று பெயர் வைத்து அழகு பார்த்தான். கடையில் இருந்து பத்தடி தள்ளி அதோ ஓடை ஓரத்தில் ஒரு ஓலைக்குடிசை தெரிகிறதே, அது தான் இவர்கள் வீடு. இவன் தினமும் வறுத்துக்கொடுக்கும் அந்த 4,5 முந்திரியில் தான் வீட்டுச்செலவும் இவன் பீடிச்செலவும் பிள்ளைகள் படிப்பும் நடக்கிறது என்று நினைத்தால், நீங்கள் ஊருக்கு புதுசாக இருக்க வேண்டும்.

வறுக்கும் சொற்ப முந்திரி கொடுக்கும் வருமானம் போக மீதத்துக்கும் கடன் வாங்கி லாட்டரியை வெறி கொண்டு பேராசையுடன் சுரண்டுவது தான் அவன் முழு நேர தொழில். அவனுக்கு குடும்பத்து மேல அக்கறை இல்லையென்று யாராவது சொன்னால் கோவம் வந்துவிடும். “குடும்பத்து மேல அக்கர இருக்குறனால தான் லாட்டரி சொரண்டுறேன்.. காசு வுழுந்தா நானா அள்ளிக்கிட்டு போகப்போறேன்? எல்லாம் என் புள்ளைகளுக்கு தான?” என்று வியாக்கியானம் பேசுவான். 

ஊரில் இருக்கும் சில பெரிய மனிதர்கள், சுயம்பு லாட்டரி சுரண்டும் நேரத்திலோ, 4,5 முந்திரி வறுக்கும் நேரத்திலோ அவனின் ஓலைக்குடிசைக்கு அடிக்கடி வந்து போவதால் தான் வீட்டுச்செலவும் பிள்ளைகளின் படிப்பும் நடக்கிறது. சுயம்புவுக்கு இது தெரிந்தாலும் அவன் பெரிதாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை. ஏன்னென்றால் சுரண்டலுக்கு அடிக்கடி பணம் கொடுப்பது ராணி தானே? ஆனால் ராணி இந்த விசயம் தன் பிள்ளைகளுக்கு எக்காரணம் கொண்டும் தெரியாமல் பார்த்துக்கொண்டாள். 

ஒரு நாள் சுயம்புவும் செத்துப்போனான். அவன் வாங்கிய கடனை சுட்டிக்காட்டியே ஊர் பெரிய மனிதர்கள் ராணியே கதி என்பது போல் கிடக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பிள்ளைகள் பள்ளிக்கு போகும் நேரம், வரும் நேரம் என்று எந்த பாகுபாடும் கிடையாது. ராணியாலும் அவர்களை தடுக்கவோ அதட்டவோ முடியவில்லை. வெளியில் ஆணின் செருப்பு இருந்தால் முத்துச்செல்வியும் தங்கராசுவும் காத்துக்கொண்டிருப்பார்கள் அந்த செருப்பு வீட்டை விட்டு போகும் வரை. அப்போது முத்துச்செல்வி 11ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். 17 வயது. பெரிய மனுஷியாகி மூன்று வருடம் ஆகியிருந்தது. தங்கராசு 5ம் வகுப்பு. 

இருள் சூழ்ந்திருக்கும் அழுக்கான இரவில் லேசான அழுகையுடன் பொங்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டு மெதுவாக அடிக்கடி முத்துச்செல்வி அம்மாவிடம் கேட்பது உண்டு, “ஏம்மா இப்படி?”

எங்கோ பார்த்துக்கொண்டு அம்மா சொல்லுவாள்,”நாளைக்கு காலேல பசிக்குமே? பள்ளிக்கூடத்துக்கு காசு கெட்டணுமே?”

முத்துச்செல்வி பதில் பேசாமல் திரும்பி படுத்துக்கொள்வாள். தாயும் மகளும் அடிக்கடி செய்து கொள்ளும் சம்பாசனை இது. ”எப்படியாவது நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிரணும்” இது தான் ராணி அடிக்கடி சொல்வது. 

முத்துச்செல்விக்கும் வாத்தியார் மகன் அந்தோணிக்கும் ஒரு விதமான காதல் இருந்தது. அந்தோணிக்கு அவள் மேல் இருக்கும் பச்சாதாபம் காதலாக மாறியிருந்தது. அவளுக்கும் சாய்ந்து அழ ஒரு தோள் கிடைத்ததால் அவன் அன்பை ஏற்றுக்கொண்டாள். தன் குடும்ப சூழல், அம்மாவிடம் அழுதது என எல்லாவற்றையும் தினமும் அவனிடம் சொல்லி சிறிது நேரம் அழுதால் தான் அவள் மனம் லேசாக இருக்கும். அவனால் அவளுக்கு ஆறுதல் சொல்லத்தெரியவில்லை என்றாலும் அவளுடைய தலையை மெதுவாக வருடிவிட்டுக்கொண்டு அவள் அழுது முடிக்கும் வரை காத்திருப்பான்.

ராணியின் உடல் மோசமானாலும் பெரிய மனிதர்களின் மனம் அதை விட மோசமாக இருந்தது. தினமும் ரணம் தான். எங்கே தான் மறுத்தால் மகளை பாழாக்கிவிடுவார்களோ என்ற பயத்திலேயே ராணி எப்போதும் சம்மதித்தாள்.

ஒரு நாள் பள்ளியில் இருந்து அக்காவும் தம்பியும் வரும் போது தங்கராசு கேட்டான், “ஏன்க்கா, தேவுடியா மவன்னா என்னது?”

கோவமும் அழுகையும் முட்டுக்கொண்டு நிற்க அவனை பார்த்து “ஏன்டா கேக்குற?”

“இல்லக்கா என்ன எல்லாரும் அப்படித்தான் கூப்புடுறாய்ங்க.. எங்கூட யாருமே பேச மாட்றாய்ங்க. நான் பேசுனாலும் ’தேவுடியா மவனே’னு சொல்லி அடிக்குறாய்ங்கக்கா” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் தங்கராசு. ஏன் எதற்கென்றே தெரியாத வலி அவனுக்கு. அவனோடு சேர்ந்து முத்துசெல்வியாலும் அழத்தான் முடிந்தது. இருவரும் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். இருபரும் வீட்டுக்கு அருகில் வரும் போது வீட்டுக்கு வெளியில் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தனர். பெண்களும் நின்று கொண்டிருந்ததால் முத்துச்செல்விக்கு உண்மை புரிந்துவிட்டது.

ராணி இறந்ததில் பிறகு பள்ளிக்கு போக வேண்டும் என ஆசையாக இருந்தாலும் அவர்களால் முடியவில்லை. இத்தனை நாள் அவர்கள் வீட்டிற்கு வந்த பெரிய மனிதர்களால் இனிமேல் மட்டும் சும்மா இருக்க முடியுமா என்ன? தன் அம்மா செய்த வியாபாரத்தை தன் அம்மாவை விட நல்ல மூலதனத்துடன் செய்ய ஆரம்பித்தாள் முத்துச்செல்வி. அவளுக்கு தன் அம்மா சொன்னது எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ”எப்படியாவது நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சிரணும்”.. தரையில் தன்னை அந்த பெரிய மனிதர்கள் உருட்டும் போதும் அவள் வாயில் முனுமுனுப்பது அதை தான்.சிறிய பெண் என்பதால் அவள் வயதொத்த ஆண்களில் இருந்து எல்லோரும் அவளை பயன்படுத்திக்கொண்டனர். காலையில் அப்பன் வந்துபோயிருப்பான், இரவில் மகன்காரன் கதவைத்தட்டுவான். தன் அம்மா சொன்ன அதே வார்த்தையை தங்கராசுவிடம் தினமும் மந்திரம் போல் சொல்ல ஆரம்பித்தாள். “எப்படியாவது நாம் படிச்சிரணும்”...

அவள் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு பெரிய மனிதனும் அவள் கண்களுக்கு அறிவியல் புத்தகமாகவும் கணக்கு புத்தகமாகவும் தான் தெரிந்தார்கள். படுத்த நேரம் போக கிடைத்த நேரமெல்லாம் படித்தால். படுத்தலும் படித்தலும் அவளின் முழு நேர வேலையாகிப்போனது. தெருவில் அவள் நடந்தாலே பெண்கள் கரித்துக்கொட்டினர். சாபம் விட்டனர். 

”ஒனக்கு ஏன் இவ்வளவு அழுத்தம்? என் கூட வந்துரு நான் ஒன்ன பாத்துக்கிறேன்” தனக்கு கிடைத்த ஒரு நிம்மதியான நேரத்தில் அந்தோணியை பார்த்த போது சொன்னான்.

“எங்க வர? ஒங்கப்பா என்ன ஏத்துக்கிவாரா?” - இது வரை அந்தோணியின் அப்பா மட்டும் தான் அவளிடம் வராத அந்த ஊரின் பெரிய மனுசன்.

“இல்லனா நாம ஓடிப்போயிரமாம் முத்து. நீ தயவு செஞ்சி இந்த வேலைய விட்டிரு”

“ஒங்கூட ஓடி வந்து? அப்ப என் தம்பிய யாரு பாப்பாங்க? அவன் பொம்பளையா இருந்தாலாவது என்ன மாதிரி எதாவது செஞ்சி பொழப்பான். பாவம், ஆம்பளயா பொறந்துட்டான்” விரக்தியாக சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“அறிவுகெட்டத்தனமா பேசாத. அவன ஏதாவது வேல செஞ்சி பொழைக்க சொல்லு”

“முடியாது அந்தோணி. படிக்குற காலத்துல மனசு படிப்பு மேல தான் இருக்கணும். அவன் எந்த கஷ்டமும் இல்லாம படிக்கணும். படிச்சி நல்ல வேலைக்கு போகணும்”

”எங்கூட இப்ப வர முடியுமா? முடியாதா?”

“கொஞ்ச நாள் ஆகட்டும் அந்தோணி”

“கொஞ்ச நாள்னா?” சற்றே கோபமாக கேட்டான்.

“தங்கராசு படிச்சு முடிக்குற வரைக்கும்”

அந்தோணி நக்கலாக சிரித்தான். ”உனக்கு ஒடம்பு சுகம் ரொம்ப பிடிச்சு போச்சு, இல்ல முத்து?”

“ச்சீ நீயும் இப்படி பேசாத அந்தோணி, அசிங்கமா இருக்கு”

“பின்ன என்ன? ஒனக்கு நல்ல வாழ்க்க வேணும்னு, என் கூட வாழணும்னு ஆச இருந்தா வந்துரு”

“எங்க போய் பொழைக்க? ஒனக்கு என்ன வேல தெரியும்?”

“எதுவும் தெரியாது. ஆனா எப்படியாவது உன்ன காப்பாத்துவேன்”

“இல்ல அந்தோணி, என் தம்பி படிப்பு முடியுற வரைக்கும் பொறுத்துக்கோ.. அதுக்கு பிறகு நீ எங்க கூப்டாலும் வாரேன்”


அவன் முகத்தை ஒரு வித ஏக்கத்தோடு கருணையை எதிர்பார்த்து பார்த்தாள். அவன் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பிவிட்டான். அவளும் அவனை தடுக்கவில்லை. தன்னை தேடி வரும் யாரையும் அவள் ஏனென்று கேட்டதில்லை, போகும் போது தடுத்ததில்லை என்றாலும், அந்தோணி மட்டும் விதிவிலக்கு. இப்போது அவனும் மற்றவர் போல் ஆகிவிட்டான். அவள் மீதிருக்கும் உரிமையை அவன் இழந்துவிட்டதாகவே கருதினாள்.

பக்கத்து ஊரில் கல்லூரியில் சேர்ந்தாள். அந்தோணியை இடையில் சந்தித்தாலும் பேசிக்கொள்வது இல்லை. வைராக்கியமாக படித்தாள். கல்லூரி முடிக்கும் நேரத்தில் ஒரு நாள் அவனே அவளிடம் வந்து, “ஒனக்காக நான் எவ்வளவு காலம்னாலும் காத்துக்கிட்டு இருப்பேன் முத்து” என்றான். அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. “கண்டிப்பா நானே ஒன்ன தேடி வருவேன் அந்தோணி”. தன்னை அந்தோணி புரிந்து கொண்டதில் அவளுக்கு நிம்மதி. அன்று இரவே அவளும் அவள் தம்பியும் ஊரை விட்டு போய்விட்டனர். தன்னை கட்டிக்கொண்டு அவன் ஊரின் ஏச்சையும் பேச்சையும் கேட்கக்கூடாதென்று அவள் அவனை விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். தன்னை அவன் புரிந்து கொண்டதே போதும் அவளுக்கு.

இதோ இன்று ஊர் பெருசுகள் அவளை ”ஔசாரி” என்றும் ”தேவடியா” என்றும், “இவா கிட்ட லோன் வாங்குனா வெள்ளாம உருப்பட்டாப்ல தான்”என்று வசைமாறி பொழிந்து கொண்டிருந்தனர். எத்தனை நாளைக்கு? மழை காலம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மீண்டும் வங்கிக்கு வந்துவிட்டனர் லோன் கேட்டு.

“முத்து என்ன தெரியுதாம்மா? நாந்தான் முருகேசேன்.. ஒரு நாள் சயின்ஸு புக்கு வாங்கணும்னு என்கிட்ட கேட்டியே?” என்று வலிந்து கொண்டே வந்தது அன்றைய பெரிய மனுசனாகிய இன்றைய கிழடு. 

அவள் அதற்கும் புன்முறுவலுடன் “நல்லா ஞாபகம் இருக்குங்க” என்று அவன் லோனை சான்க்‌ஷன் பண்ணினாள். ரொம்ப நன்றி என்று கும்பிடு போட்டுவிட்டு திரும்பிய அந்த பெருசு முனுமுனுத்தது, “ஔசாரி, இவ அப்பன் வீட்டு காச எடுத்து குடுக்குற மாரில பேசுறா?”..

தன் காதில் விழுந்தாலும் அவள் அதை கண்டுகொள்ளவில்லை. அவளிடம் லோன் கேட்டு வரும் பலரும் லோன் கிடைக்கும் வரை, அவள் முன்பு கூழைக்கும்பிடு போட்டுவிட்டு, முதுகுப்பக்கம் “ஔசாரி”, “தேவுடியா” என்று தான் விளிக்கிறார்கள். அவளுக்கு அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. தான் இன்று இந்த நிலைக்கு வந்திருப்பதற்கு அன்று அவர்கள் செய்த “உதவி” தான் காரணம் என நம்பினாள். இன்று தன்னை திட்டுபவர்கள் அனைவரும் ஒரு காலத்தில் தன் மேல் பைத்தியமாக இருந்தவர்கள் தான் என்று நினைக்கும் போது அவளுக்கு அவர்களை நினைத்து சிரிப்பாக வந்தது. அவளை திட்டும் எல்லோரும் இப்போதும் அவள் கண்ணுக்கு அறிவியலாகவும், கணிதமாகவும், வங்கி தேர்வு புத்தகமாகவும் தான் தெரிந்தார்கள்.

இதோ இன்று அவள் தேடிய அவன் வந்து விட்டான். அந்தோணி!! லோன் கேட்க நின்று கொண்டிருக்கிறான். 

“அந்தோணி” ஆச்சரியமும் சந்தோசமும் கலந்து அழைத்தாள் அவனை. அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் காட்டாமல், ஒரு வங்கி அதிகாரியை சந்திப்பது போலவே வந்தான். கூடவே மூக்கு ஒழுகிக்கொண்டிருக்கும் ஒரு பாவாடை சட்டையும் அவன் கையை பிடித்து நடந்துவந்தது. 

”நல்லாருக்கியா? என்ன பண்ணிட்டிருக்க? அப்பா என்ன பண்ணுறாரு? என் தம்பியும்  இப்ப பேங்க்ல தான் இருக்கான்”

“என்ன வெளைய போடுறீங்க?”

“கரும்பு”

லோன் சம்பந்தமாக கேட்டால் மட்டுமே அந்தோணி பதில் அளிப்பதை கண்டு அவளும் அவனிடம் எதுவும் பெர்சனலாக கேட்கவில்லை.

“இங்க லேண்ட் ஓனர் சைன் பண்ணனும்” என்று காட்டினாள்...

“லூர்து, ஏ லூர்து” திரும்பி அழைத்தான் யாரையோ.. அங்கு வயிற்றை தள்ளிக்கொண்டு அந்தப்பெண் வந்து “A.லூர்து” என கையெழுத்து போட்டாள். தான் எதிர்பார்த்தபடி அந்தோணி நன்றாக வாழ்வதை எண்ணி மகிழ்ந்தாள். சிரித்த முகத்துடன் அவனுக்கும் லோன் பாஸ் பண்ணினாள். அவனும் அவன் மனைவியும் லோன் வாங்கி திரும்பியவுடன், அவன் மனைவியிடம் சொன்னான், “தேவுடியா எப்படி ஈஈனு இளிக்குறா பாத்தியா?” என்று..

முத்துச்செல்வியின் முகத்தில் இருந்த சிரிப்பு மட்டும் மாறவேயில்லை. ஆனால் கண்களில் மட்டும் ஏனோ தெரியவில்லை, கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. மேனேஜர் அறைக்கு போனாள் ட்ரான்ஸ்ஃபர் கேட்க..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One