தூத்துக்குடிப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள் (பரதவர்கள்) கொழும்பு நடை செல்லும் போது, மணப்பாடு எல்லை வந்ததும் “மச்சானுக்கு ஒரு காய்” என்றும், குமரியை நெருங்கும் போது “ஆத்தாவுக்கு ஒரு காய்” என்றும் வேண்டிக்கொண்டு தேங்காய் உடைக்கிறார்கள். கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் தேங்காய் உடைப்பது எப்படி வந்தது? இதில் இன்னொரு விசயம், அந்த மச்சானும் ஆத்தாவும் யார்? பல பரதவர்களுக்குமே இது தெரியாது. பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் செய்ததை இன்று வரை தொடந்து கொண்டிருக்கிறார்கள்.
மச்சான் என்பது பரத்தியான வள்ளியை மணந்த முருகனையும், ஆத்தா என்பது குமரிக்கடல் ஆத்தாவையும் குறிக்கிறது. ஒரே ஒரு தேவனான ஏசுகிறிஸ்துவைக் கும்பிடும் பரதவர்களுக்குக் கடலில் பாதுகாப்புக்கு எப்படி முருகனும் குமரியாத்தாவும் வந்தார்கள்!! சொல்கிறேன்.
பிரிட்டீஷாருடன் கடல் உரிமைக்காக நடந்த சண்டையில் பரதவர்களுக்குப் போர்த்துக்கீசியர்கள் உதவினர், ஆனால் ஒரு நிபந்தனையுடன். அதாவது அவர்களின் உதவிக்குப் பிரதியுபகாரமாக பரதவர்கள் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்பது தான் அது. அந்தச் சண்டையில் பரதவர்கள் வென்றனர், பிரிட்டீஷார் பின் வாங்கினார். முடிவில், மணப்பாடு போர்த்துக்கீசியர் கைகளில்; பரதவர்களுக்கு மீன் பிடிக்க இருந்தத் தடை விலகியது; சொன்னபடி அவர்களும் மதம் மாறினர். மதம் மாறிய பரதவர்கள் மேல் போர்த்துக்கீசியர்களுக்கு இன்னும் ஏனோ நம்பிக்கை வரவே இல்லை. இவர்கள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பிவிடுவார்களோ என்கிற பயம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது போர்த்துக்கீசியர்கள் இவர்களிடம் “நீங்கள் மிகப்பெரியதாக மதிக்கும் ஒருவர் மேல் சத்தியம் செய்து நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்குப் போக மாட்டோம் என உறுதி அளியுங்கள்” எனக் கேட்டிருக்கிறார்கள். அப்போது பரதவர்கள் எப்படி சத்தியம் செய்தார்கள் தெரியுமா? "குமரியாத்தாவின் மீது சத்தியமாக நாங்கள் கிறிஸ்தவர்கள் தான்" என!!
பெரிய பெரிய மீன்கள் தங்கள் படகையோ தங்களையோ தாக்க வரும் போது இப்போதும் “குமரியாத்தா மேல் சத்தியமாகச் சொல்கிறேன் என்னால் உனக்கோ உன்னால் எனக்கோ எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்கிறார்கள். பரதவர்கள் கிறிஸ்தவத்தை மதமாக எடுத்துக்கொண்டார்கள், அதில் வீம்பாகவும் இருக்கிறார்கள். ஆனால் முருகனையும் குமரியாத்தாளையும் வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களையே அறியாமல் அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.
மதம் மாறுவதற்கு முன்பு வரை நிலத்தில் பரதவர்களின் ஆஸ்தான தெய்வம், தூத்துக்குடி பகுதியின் தாய் முத்தாரம்மன் தான். ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழாவில் பரதவர்கள் தான் அம்மனை சப்பரத்தில் தூக்கி வைப்பார்கள். மதம் மாறிய பின் அவளைப் பரதவர்கள் கண்டுகொள்ளவில்லை. 'ஏசுவைத் தவிர ஏனைய அனைத்தும் கற்சிலைகள் தான்' என மூளையில் ஏற்றப்பட்டுவிட்டதால் ஒவ்வொரு ஆண்டும் முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழாவிற்கு அவர்கள் வருவதை நிறுத்திவிட்டார்கள். அந்த ஆண்டு சப்பரத்தில் ஏற்றுவதற்காக முத்தாரம்மனைத் தூக்க ஊர் மக்கள் முயல்கிறார்கள். 10 பேர், 20 பேர், எத்தனை பேர் வந்தும் முடியவில்லை. பூசாரி சில சாங்கியங்கள் செய்தும் பலனில்லை. கடைசியில் ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பரதவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் கோவிலுக்கு வரச் சம்மதிக்கவில்லை.
கடைசியாக, அலேக் பிச்சை என்னும் பரதவர் மட்டும் வர ஒத்துக்கொண்டார். கோவிலில் வந்து அம்மனின் மேல் அவர் கை படுகிறது. ஆத்தா அப்படியே ஒரு பஞ்சு மூட்டை போல் துள்ளிவந்து சந்தோசமாகச் சப்பரத்தில் அமர்ந்து கொண்டாளாம். அலேக் பிச்சை கோவிலுக்குப் போனது தெரிந்ததும், “நீ எப்படி வேறு மதத்தைச் சேர்ந்த கடவுளைத் தொட்டு வணங்கலாம்?” எனக் கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் எல்லாம் அவரை ஊரை விட்டுத் தள்ளிவைத்தார்களாம்!!
என்ன ஒரு முரண் பார்த்தீர்களா??? யார் யாரைத் தள்ளி வைப்பது?!?!
- சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் பேச்சில் இருந்து.
முகநூலில் படித்தேன். இங்கேயும் பகிர்ந்து நல்லது.
ReplyDelete