சமீபத்தில் சென்னையில் வேலை செய்யும் ஃப்ரெண்ட் ஒருத்தனிடம் பேச வேண்டியிருந்தது.. சென்னை கிளம்பும் வரை “மாப்ள, மாப்ள” என்று வாயார அழைத்தவன், சென்னையின் yo yo guy ஆன பின் ’மச்சி’ என்று தான் விளிப்பான்.. நான் பேசும் போது, ’அவிய்ங்க, இவிய்ங்க’ என்பேன்.. ‘டேய் நீங்க இன்னும் மாறவேயில்லையாடா கண்ட்ரி ஃப்ரூட்ஸ்’ என்பது போல் ஒரு லுக் விடுவான்.. அவனைப்பொறுத்தவரை அவிய்ங்க, இவிய்ங்க என்பதெல்லாம் பட்டிக்காட்டான் வார்த்தைகள்.. ‘அவனுக, இவனுக’ என்று சொல்வது தான் சிட்டி ஸ்டைல்.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும் ஒரு விசயம் தான் இது.. ஆனால் இன்றைய பொருளாதார தேடுதலின் முக்கிய அங்கமாக சென்னையிலும் பெங்களூருவிலும் ஒவ்வொருவராக பிழைக்க போவதால், தங்கள் வட்டார வழக்கு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட இவர்கள் அறியாமல் இருப்பது தான் வேதனையான விசயம்..
புதுக்கோட்டையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் மேனேஜரும், ஒரு சில டீலர்களும் என்னை கிண்டலடிப்பார்கள் நான் ‘வைவாய்ங்க’, ‘வசவு விழும்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால்.. ”அது என்ன கிராமத்தான் மாதிரி ‘வைவாய்ங்க’னு சொல்ற? டீசண்ட்டா ’திட்டுறாய்ங்க’னு சொல்லு” என்பார் என் மேனேஜர்.. எனக்கு புரியவில்லை, ரெண்டுமே தமிழ் வார்த்தை, அதில் ஒன்று டீசண்ட்டாகவும் இன்னொன்று எப்படி கிராமத்து வார்த்தையாகவும் மாறிப்போனது என்று.. வைவது என்பது எங்கள் பகுதிகளில் நாங்கள் பேசும் சொல். ஆனால் எங்கள் பகுதிகளிலும் பலர் இப்போது ‘திட்டுறான்’ என்று தான் சொல்கிறார்கள். நெல்லை பகுதிகளில் “ஏசுதாம்லே என்னைய” என்பார்கள் முன்பெல்லாம்.. இப்போது அவர்களும் “திட்டுதாம்லே” என்கிறார்கள்.. ’திட்டுறான்’ என்கிற வார்த்தை ஆல் ஓவர் தமிழ்நாடு பொதுவாகி விட்டது இப்போது..
இந்த மாதிரி பொதுவான வார்த்தைகள் வரும் போது தான் நம் பகுதியில் நாம் பேசிய வார்த்தைகளை மறக்க ஆரம்பிக்கிறோம்.. இப்போது எங்கள் பகுதியிலேயே நாங்கள் மறந்து கொண்டு வரும், ஒரு சில நல்ல வார்த்தைகளை பற்றி இங்கு சொல்லலாம் என்றிருக்கிறேன்.. முதலில் உறவு முறைகளை கூப்பிடுவதில் இருந்து ஆரம்பிப்போம்.. அப்பாவின் அம்மா, அப்பா; அம்மாவின் அம்மா, அப்பா என எல்லாருமே தாத்தா பாட்டி தான் இப்போது.. எங்கள் பகுதிகளில் அம்மாவின் அம்மாவை “மாம்மை/மாம்மே” என்பார்கள்.. அதாவது மாமனின் அம்மா.. அம்மாவின் அப்பாவை ”மாம்ப்பா” (மாமனின் அப்பா) என்பார்கள்.. நான் வளர்ந்தது சிவகாசி என்றாலும், என் அப்பாவின் ஊர் விருதுநகர் என்பதால் நான் “ஆச்சி” என்பேன், அது விருதுநகர் வழக்கு.. எங்கள் தெருவில் அம்மாவின் அம்மாவை ஆச்சி என்றும், அம்மாவின் அப்பாவை தாத்தா என்றும் சொல்லும் ஒரே ஆள் நான் மட்டும் தான்.. மற்ற அனைவரும் மாம்மே, மாம்ப்பா தான்.. அதே போல் அப்பாவின் அம்மாவை, “ஐயம்மா/ஐயாம்மா” என்போம்.. அப்பாவின் அப்பாவை “ஐயப்பா/ஐயாப்பா” என்போம்.. விருதுநகரில் நான் சிறுவனாக இருந்த போது தங்களது அப்பாவை எல்லோரும் ‘ஐயா’ என்று தான் அழைப்பார்கள்.. ஆனால் இப்போது அங்கும் மற்ற ஊர்களை போல் ’அப்பா’ தான்.. என் அக்காவும், அண்ணனும் இப்போதும் என் பெரியப்பாவை பற்றி பேசும் போது, ஐயா என்று தான் குறிப்பிடுவார்கள்..
அத்தை மகள் நம்மை விட மூத்தவளாக இருந்தால் அண்ணி என சொல்லிவிடலாம் இப்போது.. அதே போல் மனைவியின் அக்காவையும், கணவனின் அக்காவையும் கூட அண்ணி என்று தான் சொல்கிறார்கள்.. அந்த உறவுகளை எல்லாம் எங்கள் பகுதியில் “மைனி” (மதினி என்னும் வார்த்தையின் மரூஉ) என்று தான் once upon a time சொன்னோம். அக்காவின் கணவனோ, தங்கையின் கணவனோ, அல்லது மனைவியின் அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் ‘மாப்ளை’ என்கிறார்கள் இப்போதெல்லாம்.. ஆனால் அக்காவின் கணவனாகவோ, மனைவியின் அண்ணனாகவோ , இருந்தால் ’மச்சான்’ என்று தான் சொல்ல வேண்டும்.. தங்கையின் கணவனாகவோ, அல்லது மனைவியின் தம்பியாகவோ இருந்தால் தான் ‘மாப்பிள்ளை’ என அழைக்க வேண்டும். ஒரு முறை மட்டும் மேலே இருக்கும் பாயிண்ட்டை வாசித்தால் லேசாக தலைவலியும் கிறு கிறுவெனவும் வரும்.. இன்னொரு முறை நிதானமாக வாசியுங்கள், புரியும்.. அதே போல், கொழுந்தியாள், நாத்தனாள் என்கிற உறவுமுறைக்கெல்லாம் இப்போதும் யாருக்கும் அர்த்தம் தெரியுமா என ஒரு கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும்..
நம்மை விட மூத்த, பக்கத்து வீட்டுக்காரரையோ, கடைக்காரரையோ, அல்லது சாலையில் செல்லும் ஒரு நபரையோ யாரை அழைக்க வேண்டுமானாலும் “அண்ணாச்சி” என்று தான் அழைப்போம் எனக்கு விபரம் தெரிந்த வயதில் கூட.. பின் அண்ணன்/அண்ணே என்று ஆனது கொஞ்சம் கொஞ்சமாக.. இப்போது ஸ்டைலாக ’அண்ணா’வாகி விட்டது. ’அண்ணே’ என்கிற வார்த்தை என்றாலே அது மதுரை தான்.. மதுரையில் ஒவ்வொருவரும் “அண்ணே” என்று கூப்பிடும் அழகே தனி.. ஆனால் அங்கு கூட எல்லா திக்கும் அண்ணா தான் இப்போது.. அண்ணே என்று யாரையாவது அழைத்தால் “நீங்க கிராமமா பாஸ்?” என்கிறார்கள்.. “அண்ணாச்சி”னு மட்டும் சொன்னோம், அவ்ளோ தான் அவன் சொத்துல பங்கு கேட்ட மாதிரி மொறைக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.. அண்ணாச்சி என்று கூப்பிடுவதை நிறுத்தியிருந்தாலும் இப்போது கொஞ்ச நாட்களாய் மீண்டும் அண்ணாச்சி என கூப்பிட ஆரம்பித்திருக்கிறேன்..
கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வயித்துப்பிள்ளைக்காரி என்போம்.. தாலி கட்டுவதை திருப்பூட்டுறது என்போம்.. சந்து என்று சொல்ல மாட்டோம், கடவு என்று தான் சொல்லுவோம். ”தம்பி கடவுக்குள்ள காயிற துணிய எடுத்துட்டு வா மழ வார மாரி இருக்கு” என என் ஆச்சி சொன்னது இப்போதும் ஞாபகம் உள்ளது.. மழை என்றதும் இதுவும் ஞாபகம் வருகிறது. மழைத்தண்ணீர் மாடியில் இருந்து விழும் குழாயை ‘மடாய்’ என்போம்.. இப்போது யாரும் மடாய் என்கிற வார்த்தையை பயன்படுத்துவாக எனக்கு ஞாபகம் இல்லை.. சோறு சாப்பிடும் தட்டை 'வட்டில்' என்போம். சோறு எடுக்கும் கரண்டியை 'சட்டுவம்' என்போம்.. பல ஊர்களிலும் அமைதியாக இருப்பதை, ‘அவன் பாட்டுக்க செவனே (சிவனே)னு இருக்கான்” என்பார்கள்.. எங்கள் பக்கம் அதை, “சூசோன்னு இருக்கிறவன ஏன்டா வம்பிழுக்கிற?” என்போம்.. சிவனேவும் சூசோவும் எப்படி நாம் பேசும் அர்த்தத்தில் வந்தன என எனக்கு சத்தியமாக ஐடியாவே இல்லை.
”சீவனயும் (ஜீவன்) பலனயும் (பலன்) வாங்காத பெசாசே” என்பார் கோபமாக என் அம்மா, சிறு வயதில் நான் அடம் பிடிக்கும் போது.. இப்போதெல்லாம் அந்த வார்த்தையை ஏதாவது சர்ச் வாசலிலோ, சேனல் மாற்றும் போது ஏதாவது கிறிஸ்தவ போதகரின் வாயில் இருந்தோ தான் பெற முடிகிறது. ”ஒரே அச்சலாத்தியா இருக்கு”.. “டேய் அச்சலாத்தி படுத்தாம போடா” என்றும் என்னால் சிவகாசி பக்கம் இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. அச்சலாத்தி என்பதற்கு, எரிச்சல், தொந்தரவு என்று இடத்திற்கு தகுந்தவாறு பொருள் உண்டு.. அச்சலாத்தி என்கிற வார்த்தை எப்படி பயன்பாட்டுக்கு வந்திருக்கும், அல்லது எந்த வார்த்தையின் திரிபு, மரூஉ என்றும் யோசிக்கிறேன்.. ஆனால் பதில் தான் இல்லை..
தினமும் இரவு ஃபேக்டரியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் எங்கள் அப்பா ஃபோன் அடித்து, “தம்பி இன்னைக்கு கடிச்சிக்கிட என்ன வாங்கிட்டு வர?” என்பார்.. கடிச்சிக்கிட - பெயரிலேயே அர்த்தம் இருக்கிறதே, இரவு உணவிற்கு side dish.. பெரும்பாலும் அந்த ’கடிச்சிக்கிட’ பக்கோடாவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? கடிச்சிக்கிட என்னும் வார்த்தையை சுஜாதா முதல்வன் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.. ”உப்புக்கருவாடு” பாடல் ஆரம்பிக்கும் ஒரு சில நொடிகளுக்கு முன் அர்ஜூனிம் மனிஷா கொய்ராலாவும் பேசும் போது, “பழைய சோறும், கடிச்சிக்கிட வெங்காயமும் போதாதா?” என்பார்..
தூங்கி முழித்த பின்னும் அதே களைப்பான முகத்துடன் இருப்பதை எங்கள் பக்கம், ‘தூக்கச்சடவு’ என்பார்கள். இறப்பு நிகழ்ந்த ஒரு வீட்டிற்கு செல்வதை “கேதம் கேக்க போறேன்” என்பார்கள்.. துஷ்டி என்று சொல்பவர்களும் உண்டு.. அதே போல் நான் சிறுவனாக இருந்த போது என் வயதொத்த, என்னை விட சிறிய பெண்களை “ஏப்ள” என்று தான் அழைத்தேன்.. வயது ஆக ஆக அப்படி அழைப்பதை நிறுத்திக்கொண்டாலும், இப்போதைய சிறுசுகள் யாரும் “ஏப்ள” என்று அழைப்பதாக தெரியவில்லை..
மேலும் பாத்திரம் கழுவுவதை, பாத்திரம் மினுக்குவது என்போம்.. மேலே இருக்கிறது என்பதை ஒசக்க/ஒசர (உயர) கெடக்கு என்போம்.. மாடியை மெத்து என்போம்.. “உண்ணாம்தாய்க்கா, முத்துக்குமார் அண்ணே எங்க ஆளையே காணோம்?” எங்கள் தெரு டெரரான உண்ணாமலைத்தாய் அக்காவிடம் கேட்டால் இப்போதும் அவர் சொல்வார், “அவேன் மெத்துல தூங்கிட்டு இருக்கியான்டா சாரதாக்கா பேராண்டி” என..
எங்கள் வீட்டில் இரும்பாலான ஒரு மக்/ஜக்/கப் இருக்கும் குளிப்பதற்காக.. அதை நாழி என்போம்.. (நாழியா, நாளியா என சரியாகத்தெரியவில்லை).. அந்த நாழி/ளி இப்போது எந்த இரும்புக்கடையில் உள்ளது என தெரியவில்லை.. குளிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்பை இப்போதும் பலர் கைப்பட்டை என்று தான் அழைக்கிறார்கள்..
எங்கள் ஊரில் இருக்கும்/இருந்த பெரும்பாலான வழக்கு சொற்களை கூறி விட்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது ஏன் இந்த பதிவு என நீங்கள் யோசிக்கலாம்.. போகிற போக்கை பார்த்தால் என் ஊர் பாஷையை நானே மறந்துவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது இந்த உலகமயமாக்கலால். அதனால் தான் ஒரு முறை எழுதிப்பார்த்துக்கொண்டேன்.. எழுதுவதின் பயன் என்னவென்றால் அவ்வளவு எளிதில் அது மறக்காது, அதனால் தான்... சிவகாசி வட்டார வழக்கு என்றில்லை, நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை என எல்லா வட்டார வழக்கும் மறைந்து கொண்டே தான் வருகின்றன.. பொதுவான வார்த்தைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.. நாமும் தமிழ் தானே பேசுகிறோம் என்கிற எண்ணத்தில் நம் வழக்கு மொழிகளை நமக்கு தெரியாமலே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.. எல்லோரும் ஊர்விட்டு ஊர் பிழைக்க போவது பிரச்சனை அல்ல.. அப்படி பிழைக்கப்போனதால் தான் வழக்கு சொற்கள் அழிகின்றன என குற்றம் சுமத்தும் ஒப்பாரி பதிவும் அல்ல.. ஹிந்தி, ஆங்கிலத்தால் தமிழ் சாகிறது என்பது போல் பழி போடும் தமிழ் உணர்வு பேசும் பதிவும் அல்ல.. ’அப்புறம் என்ன தான்யா இந்த பதிவு?’னு கேட்டா எனக்கு பதிலும் தெரில..
‘சொல்லாமலே’ படத்தில் நாக்கை வெட்டிக்கொள்ளும் முன் லிவிங்க்ஸ்டன் கடைசியாக தனக்கு பிடித்தமான பெயர்களை எல்லாம் சொல்லிப்பார்ப்பாரே, அது போன்ற ஒரு பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம். எங்க ஊர் பாஷை சீக்கிரம் வழக்கில் இருந்து போய்விடுமோ என்கிற பயம் எனக்கு அதிகமாகிவிட்டதால் அந்த வார்த்தைகளை எல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு, எங்கள் வழக்கு சொற்களின் ஞாபகார்த்தமாக இந்த பதிவு.. முடிந்தால் உங்கள் ஊர் வட்டார வழக்கு சொற்களையும் கூறிவிட்டு செல்லுங்களேன் கமெண்ட்டில்.. உங்களுக்கும் ஞாபகார்த்தமாக இருக்கும்.. :-)