பெண்களைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் முழுதாக சொல்லி முடித்த நிறைவு வருவதே இல்லை. அவர்களை முழுதாகவும் சொல்லிவிட விட முடியாது. 'இவள் இந்த சூழ்நிலையில் இதைத்தான் செய்வாள்' என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, அதற்கு நேரெதிராக ஒன்றை செய்து காட்டுவாள்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தின் வெளியே திருமங்கலம் செல்லும் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்தேன் பல நூறு பேர்களோடு. சென்னைக்கு அருகில் என்கின்ற காரணத்தால் தாம்பரம் என்ற ஊரை எப்படி பாடாய்ப்படுத்துகிறோமோ அதே போல் தான் இந்த திருமங்கலமும் அவதிப்படுகிறது. நகரம் என்கின்ற "black hole" விரிந்துகொண்டே சென்று அருகில் இருக்கும் சிறு ஊர்களையும் தன் வசத்திற்குள் தன் வேகத்துனுள் கொண்டு வந்து விடுகிறது. அந்த சிறு ஊர்களும் சில வருடங்களில் "black hole" ஆகிவிடுகின்றன. கழுத்து அறுபடும் ஆட்டைப்போல முதலில் நகர மாற்றத்திற்கு மிரளும் இந்த ஊர்கள் சில நாட்களிலேயே அறுபட்ட ஆட்டின் நிலையை அடைந்து விடும். நம்ம சிவகாசி அந்த நிலைமைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்று மனதை தேற்றிக்கொண்டே பேருந்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன். டிசம்பர் மாத குளிர் வேறு இந்த இரவில் என்னை கொடுமைப்படுத்துகிறது. காத்துக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு; பேருந்து வருகிறது. அதைப்பிடித்து இடம் போட எத்தனிக்கும் மக்களின் நடவடிக்கைகளின் சத்தம் என்னையும் பேருந்து வருவதை கவனிக்க செய்தது.
கல்லூரியில் மூன்று ஆண்டுகள் day-scholar ஆக இருந்ததினால் எளிதாக இடம் பிடித்து விட்டேன் ஜன்னல் அருகில் இருக்கும் சீட்டில். கூட்டத்தினுள் நுழைந்து reserve பண்ணிய சீட்டை confirm ஆக்கினேன். சரியான கூட்டம். நின்று கொண்டிருந்த மக்கள் பலரும் இறங்கி ஓடினார்கள் - இன்னொரு பேருந்து வந்தது திருமங்கலம் செல்வதற்கு. எது முதலில் கிளம்பும் என்று தெரியாததாலும், என் சீட்டை இழக்க விரும்பாததாலும் நான் இந்த பஸ்சிலேயே இருந்து விட்டேன்.
அப்போது தான் அதை கவனித்தேன். நான் அமர்ந்து இருந்தது, டிரைவரின் பக்கவாட்டில் மூன்றாவது சீட், அதாவது முன்பக்கம் ஏறியவுடன், இடப்பக்கம் இருக்கும் முதல் சீட். என் சீட்டுக்கு அருகில் இருந்து டிரைவரின் முதுகுப்பக்கம் இருக்கும் சீட் வரை பையும் கூடையும் இருந்தது. பஸ்ஸில் இப்போது முன் பக்கம் ஏறும் யாரும் இடது புறம் செல்ல முடியாது. அந்த அளவிற்கு பை நிறைந்து இருந்தது. ஒரு இல்லாதவன், வீட்டில் இருந்து சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்லும் போதோ சென்று திரும்பும் போதோ அவன் துணிகள் கொண்டு செல்லும் பை எப்படி இருக்குமோ, அப்படியே இருந்தன அந்த பைகள். சரி, ஒரு ஐந்தாறு பெரியவர்கள் இருப்பார்கள், அதனால் தான் இவ்வளவு பெரிய லக்கேஜ் என்று எண்ணிக்கொண்டு அந்த பைக்கு சொந்தமான முகத்தை தேடினேன்.
டிரைவருக்கு பின்புறம் இருக்கும் சீட்டில் அந்த பெண் அமர்ந்து இருந்தாள். இந்த பஸ்ஸில் அந்த பைககளுக்கு சொந்தமான முகம் என்று அந்த முகத்தை மட்டும் தான் பொருத்திப்பார்க்க முடிந்தது. கருத்த தோல், சற்றே பருமனான உடல், முட்டைக்கண்கள், சேலைக்கு சம்பந்தமே இல்லாத சட்டை, முகத்தில் இருக்கவேண்டிய பளபளப்பு எலிவால் தடிமனில் நீண்டு இருந்த அவளின் கூந்தலில், அவ்வளவு எண்ணெய், கழுத்தில் அழுக்குத்தோய்ந்து கருப்பேறியிருந்த மஞ்சள் கயிறு, காதிலும் மூக்கிலும் இருக்க வேண்டிய ஆபரணங்கள் ஒரு காலத்தில் இருந்ததற்கான சுவடுகளாய் சிறு துளைகள். இதை எல்லாம் வைத்து அங்கிருந்த பொருட்களெல்லாம் அவளுடையது தான் என்று எண்ணிக்கொண்டேன். அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது. ஆறு மாதம் இருக்கலாம் அது பிறந்து. குழந்தைப்பேருக்கு பிறகு தான் இவள் பருமனாக மாறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. அழாமல் அமைதியாக இருந்தது குழந்தை. குளிருக்கு இதமாக மஞ்சளும் சிகப்பும் இடம்பெற்ற ஒரு ஸ்வட்டர் அணிந்திருந்தது அந்த குழந்தை. இவ்வளவையும் இவள் எப்படி தூக்கி சுமப்பாள் என்று வியந்தேன்! அப்போது என் அருகிலும் இருக்கும் அவளின் பொருட்களில் ஏதோ அசைவது போல் உணர்ந்தேன்.
ஆமாம், எவனோ ஒருவன் அவளின் பைகளில் தன் வெற்றுக்கால்களால் மிதித்து ஏறினான். எண்ணெய் தேக்காமல் காய்ந்து போய் புழுதி படர்ந்த அந்தக்கால்களின் அழுக்கு பட்டாலும் அந்த பைகளில் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை, ஏனென்றால் அவை அவன் கால்களை விட அழுக்காக இருந்தன. இவன் மேல் ஒரு வித வெறுப்பு வந்தது, மற்றவர்களின் பொருட்களில் இப்படி நடந்து கொள்கிறானே என்று. பைகளில் மிதித்து ஏறி அவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவளை ஏற்றி விட வந்தவனா இல்லை உடன் செல்கிறவனா என்று தெரியவில்லை. அவன் வந்ததை உணர்ந்து கொண்டவள் அவன் பக்கம் திரும்பாமல் ஜன்னல் வழியாக வெளியே கார்த்திக் ஹோட்டலின் பிளக்ஸ் போர்டை பார்த்துக்கொண்டிருந்தாள். வெறும் பார்வை தான், அதில் அர்த்தம் ஏதும் இல்லை. கண்ணை சிமிட்டக்கூட மறந்துபோய் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும் அவளிடம் ஏதும் பேசாமல் பஸ்சுக்குள் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தலை கழுத்தில் ஒழுங்காக நிற்காமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஆடிக்கொண்டிருந்தது. தண்ணி போட்டிருந்தான் என்பது தெளிவாகியது. சிறிது நொடியில் அவன் சீட்டில் இருந்து எழுந்தான். பையை மிதித்துக்கொண்டே இறங்கினான். "பைய மிதிக்காதீங்க!" யாரும் பார்க்கிறோமா என்பதை கவனித்துக்கொண்டே அவனிடம் சொன்னாள். அவன் எதையும் காதில் வாங்காமல் இறங்கினான்.
அவளிடம், "நான் சொல்ல சொல்ல கேக்காம நீ போரியாடி?" திக்கித்திணறி பேசினான்.
"நீங்களும் வாங்கன்னு தான சொல்றேன்" அவள் யாருக்கும் கேட்கக்கூடாது என்று சீட்டுக்கு பின் புறம் நின்ற அவனைப்பார்த்து கழுத்தை திருப்பி மெதுவாக பேசினாள்.
"நீ போய் பிச்சை எடுடி. என்ன என்ன பொண்டுகபையன்னு நெனச்சியா? அவைங்ககிட்ட என்னால வர முடியாதுடி" கூறிக்கொண்டே அவளின் கண்களுக்கு கீழ் தன் முஷ்டியால் குத்தினான். அவளுக்கு அழுகை வரும் முன் கண்களில் நீர் வந்துவிட்டது. சேலையை கொண்டு தன் முகத்தை மூடி அழுகின்றாள் அவள். அவள் உடல் குழுங்குகிறது. கையில் குழந்தை எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தது.
அவன் கீழின்றங்கி அவள் சீட்டிற்கு அருகில் வெளியே நின்றான். முதலில் அவள் இதை கவனிக்கவில்லை. அவன் சிகரட்டை எடுத்து பற்ற வைத்து புகையை அவள் முகத்திற்கு அருகில் வந்து ஊதினான். அந்த வாடை அவளுக்கு பழக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முகத்தில் இருக்கும் சேலையை விலக்கிக்கொண்டு அவனைப்பார்த்தாள். இன்னமும் அவள் கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது.
"ஏங்க உள்ளகக வாங்கங்க" - அழுததில் அவள் தொண்டை கட்டியிருந்தது.
"வரமுடியாது பொடி. என்ன மதிக்காம போரில? போடி போ" ஏதோ சாதனை புரிந்தவன் தெனாவட்டாக பேசுவாதைப்போல பேசினான்.
"ஏங்க இப்படி பண்ணுறிங்க? காலைல கேட்டதுக்கு வரேன்னு சொன்னிங்கள்ள? இப்போ என்னங்க ஆச்சி?" அவனை சமாதானப்படுத்தும் விதமாக, அதே நேரத்தில் யாரும் தன்னை கவனித்து விடுவார்களோ என்ற கூச்சத்தில் அவனிடம் பயந்து பயந்து பேசினாள். ஆனால் எல்லோரும் அவர்களைத்தான் பாத்துக்கொண்டிருந்தோம். அது அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
"நீயும் பேசாம எறங்கி வந்திரி" நாக்கை துரித்துக்கொண்டு கத்தினான்.
ரோட்டில் செல்பவர்களும் திரும்பிப்பார்த்து சென்றார்கள். "கத்தாம பேசுங்க. எல்லாரும் பாக்குறாங்க. தயவுசெஞ்சு உள்ள வாங்க" மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்.
"ஏய் முடியாதுன்னு சொல்லிட்டேன்லடி? ஒரு ஆம்பளைக்கு நீ இவ்வளவு தான் மரியாதை குடுப்பியா?"
"உங்களுக்கு அசிங்கமா தெரியலையாங்க இப்படி பண்றது? என் மானத்த ஏன் இப்படி வாங்குறிங்க?"
"நீ தாண்டி புருஷன் மானத்த வாங்குற ஊர்க்காரைங்க முன்னாடி" சிகரட் கையை சுட்டவுடன் அதை வீசி எறிந்துவிட்டு மீண்டும் பேருந்திற்கும் வந்தான்.
இப்போது அவள் அருகே இன்னொரு பெண் அமர்ந்திருந்தாள். அந்த பெண் இவன் வருவதைக்கண்டு எழுந்தாள். ஆனால் அவன் மனைவி, "இல்லமா, நீ உக்காரு" என்று அவளை உட்காரவைத்தாள். ஒரு பாதுகாப்புக்காக குட இருக்கலாம்.
"புருஷன் நின்னுக்கிட்டு வரணும், யானோ எவளோ ஒருத்திக்கு நீ உக்கார இடம் குடுப்ப? நக்கல் தொனியில் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு பேசினான். திடீரென்று என்ன நினைத்தானோ, அவள் கையில் இருந்த குழந்தையை, "குடுடீ, என் புள்ளைய" எண்டு பற்றி இழுக்க ஆரம்பித்தான், "நீ மட்டும் போ, என் பிள்ள என் கிட்டே இருக்கட்டும்"
"என் புள்ளைய விடுங்க" தன் பங்குக்கு அவளும் குழந்தையை இழுத்தாள். இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த குழந்தை தனக்கு ஒரு ஆபத்து என்றதும் அழ ஆரம்பித்தது. அவள் அழுதுகொண்டே குழந்தையை தன் பக்கம் இழுக்கிறாள். கடைசியில் குழந்தையை தன் வசமே இழுத்து காப்பாற்றிக்கொண்டாள். இதை எல்லாம் ஒரு இறையாண்மை மிக்க இந்தியக்குடிமகனாக சிந்தை அலைபாயாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். அவனை அரற்றி சத்தம் போட அங்கு யாருக்கும் அக்கறை இல்லை, நான் உட்பட.
குழந்தையை கவர முடியாத கோபத்தில் அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். "அம்மா" என்று ஒரு சிறிய கதறல். அவன் மீண்டும் இறங்கி விட்டான் பேருந்தில் இருந்து. கீழிருந்து அவளிடம் சொன்னான் "இனிமேல் ஜன்மத்துக்கும் நீ என்ன பாக்க முடியாதுடி. எங்க போறியோ அங்கேயே இருந்துக்கோ"
"என்ன இப்படி ரோட்ல வச்சு அடிக்குறீள? நாளைக்கு பாரு எங்க வீட்ல இருந்து உன்ன என்ன செய்றாங்கன்னு" மரியாதை குறைந்தது. பொது இடம் என்று அவள் அழுகையை எவ்வளவு தான் அடக்க நினைத்தாலும், அந்த கண்ணீருக்கு பொது இடம் தான் மிகவும் பிடித்தது. அடிக்கடி வந்தது அவள் கண்களின் வழியாக அந்த பொதுவை பார்த்தது.. இவள் இடத்தில் என் அம்மாவை வைத்துப்பார்த்தேன். இந்நேரத்தில் அவன் கன்னம் வீங்கி இருக்கும். காலில் விழுந்திருப்பான். 'நம்ம அம்மாவும் பெண் தான். அவங்க தைரியம் இவளுக்கு இல்லையே!'
'இவன மாதிரி ஆளெல்லாம் பிடிச்சி உள்ள போடணும்னே' பேருந்தில் பின் சீட்டுகளில் இருந்து ஒரு குரல் கேட்டது.
'நடு ரோட்ல பொண்டாட்டிய அடிக்குறான், இவனெல்லாம் ஒரு ஆம்பளையா?' இன்னொரு குரல். எல்லாமே சத்தமாக. இந்தக்குரல்கள் எல்லாம் அவளை தான் தாக்கின, ஏனென்றால், அவர்கள் வைவது அவளின் கணவனைத்தானே? அவள் தானே கேட்கும், உணரும் நிலையில் இருந்தாள்? அவன் போதையில் தானே இருந்தான்? அவளுக்கு வறுமையும் கண்ணீரும் தான் நிறைவாக கொடுத்திருக்கிறான் போல ஆண்டவன்.
ரைவர் பஸ்சிற்குள் ஏறினார். "ஏங்க உள்ள வாங்க, பஸ்சு கெளம்பப்போகுது" அவள் பதட்டமாக அக்கறையுடன் அவனிடம் சொன்னாள்.
"வர முடியாது போடி"
'அவன் கிட்ட எதுக்குமா கெஞ்சுற?" பழம் விற்கும் ஒரு கிழவி சொன்னது, "படுபாவி போனா போறான் விடு". அந்தக்கிழவியின் அக்கறை வார்த்தையை விட அவளும் நம்மை, நாம் இப்படி அசிங்கப்படுவதை பார்க்கிறாளே என்ற எண்ணம் தான் அவளுக்கு அதிகமாக இருந்தது. மிகவும் கூனிக்குறுகி இருந்தாள். டிரைவர் பேருந்தை எடுத்தார். அவன் ஏறுவது போல் தெரியவில்லை. பேருந்து முன்னெடுத்து சென்றது. இவள் ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் பதறினேன், இந்த பெண்ணிற்கு டிக்கட் எடுக்க காசு இருக்குமா? இவள் எந்த ஊருக்கு போவாள்? அங்கு இவளின் தாய் வீட்டில் நிலைமை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி இவளை புரிந்து கொள்வார்கள்? இவளுக்கும் சேர்த்து சம்பாதிக்க அங்கு யாரும் இருப்பார்களா? இவள் முதலில் தைரியமாக தன் வீட்டிற்கு செல்வாளா? அல்லது அவர்களிடமும் சொல்ல கூச்சப்பட்டு இந்த மானஸ்தி ஏதேனும் விபரீத முடிவு எடுத்துவிடுவாளோ? பிறந்த வீட்டில் இருந்து சமாதானம் செய்து இவளை இவனிடம் மறுபடியும் கொண்டு வந்து விட்டாள் இவள் நிலை மீண்டும் இது தானா? என்னென்னவோ நினைத்துக்கொண்டே இருந்தேன்.
அவள் அழுது கொண்டே வந்தாள். திருமங்கலத்திற்கு டிக்கட் எடுத்தாள். பேருந்து பை பாஸில் சென்று கொண்டிருந்தது. அப்போது என் அருகில் என் சீட்டில் இவன் அவன் பின் பக்கத்தை முட்டு கொடுத்து நின்று கொண்டிருந்தான். அது அவன் தான். பஸ்ஸில் ஏறிவிட்டான் போல. அவள் அவனைப்பார்க்கவில்லை. அழுவதையும் நிறுத்தவில்லை. ஜன்னல் வழியாக வெளியே இருட்டை பார்த்துக்கொண்டே அழுதாள். இந்தப்பக்கம் திரும்பி மனிதர்களின் முகத்தை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை. குழந்தைக்கு குளிரடிக்காதவாறு தன் சேலையால் மூடி இருந்தாள்.
கப்பலூரில் எனக்கும் முன் இருக்கும் சீட் காலியானது. அங்கு அவன் வந்து அமர்ந்தான். அவளும் அழுது முடித்திருந்தாள். கன்னங்கள் வீங்கி இருந்தன. குளிரும் அவளை அடித்திருக்க வேண்டும், ஜன்னலின் பக்கமிருந்து முகத்தை இந்தப்பக்கம் திருப்பினாள். அங்கு அவன் உட்கார்ந்து இருந்ததை கவனித்தாள். "என்னடி போயிருவேன்னு நெனச்சியா?" சிரித்தான் அசிங்கமாக அவன்.
அவள் ஒன்றுமே சொல்லாமல் அவனைப்பார்த்தாள். எனக்கு அவன் மீது எரிச்சலும் கோபமும் வந்திருந்தது. சிரிக்கும் அவன் முகத்தில் மிதிக்க வேண்டும் போல் இருந்தது. "ஏய் புள்ளைய இங்கிட்டு திருப்புடி" அவனை நோக்கி குழந்தையை திருப்ப சொன்னான்.
அவளும் திருப்பினாள். "உங்கம்மாவ அடிடா தம்பி, அடிடா அவள" சிரித்துக்கொண்டே சொன்னான்.
குழந்தையும் சிரித்தது. "புள்ளைக்கு நல்ல பழக்கமா சொல்லிக்குடுங்க" சொல்லிக்கொண்டே அவளும் மெலிதாக புன்னகைத்தால் அவனைப்பார்த்து.
அவள் சிரித்ததைப்பார்த்ததுமே எனக்கு அவள் மேல் மிகுந்த பச்சாதாபம் தான் வந்தது. மனம் கனமாக இருந்தது. திருமங்கலத்தில் இறங்கி அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்காளா என்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. அவள் அவனை விட்டு செல்லமாட்டாள். அவன்? தெரியவில்லை.
வீட்டில் வந்து நடந்ததை அம்மாவிடம் சொன்னேன். "அவா செஞ்சது சரியாமா?
"சரி தான்" ஒரு சலனமும் இல்லாமல் பதில் வந்தது.
"என்னம்மா இப்டி சொல்றீங்க?"
"ஒரு பொம்பளயால வேற என்னப்பா செய்ய முடியும்? அவளுக்கு வாய்க்கப்பட்டது அவ்வளவு தான்" அம்மா சொன்ன அந்த வாக்கியத்தில் நிறைய அர்த்தம் இருப்பதாக தெரிந்தது. அதை ஆராய நினைத்தால் மனது லேசாக வலிக்கிறது, ஆண்களை நினைத்து வெட்கப்படுகிறது. யார் அவள் இடத்தில் இருந்திருந்தாலும் இப்படி தான் செய்திருப்பார்கள் என்று தேற்றிக்கொண்டேன் மனதை.