என் நண்பேன்டா..

Friday, December 31, 2010

ஓட்டலில் சாப்பிடும் போது
இருவருக்கும் வைக்கப்படும்
பாயாசக்கின்னத்தை அளவு பார்த்து
அதிகம் உள்ளதை உனக்காக
எடுத்துக்கொள்ளும் போது
நினைப்பேன் "என் நண்பேன்டா"..

துணிக்கடையில் 'இந்த சட்டை
எனக்கு நல்லா இருக்குமா மாப்ளே?'
என்று கேட்கும் போது, 'மாப்ள இத
நான் வச்சுக்கறேன்டா' என்று
ஆசையாக சொல்லும் போதும்
நினைத்துக்கொள்வேன் "என் நண்பேன்டா"

பஸ்ஸில் செல்லும் போது
"மாப்ள நான் ஜன்னல் ஓரத்துல
உக்காந்துக்கிறேன்டா" என்று என்
பதிலுக்கு காத்திராமல் சென்று அமர்ந்து
இயற்கையை ரசிக்கும் போதும்
நினைத்துக்கொள்வேன் "என் நண்பேன்டா"

ஒரே ஒரு முறை மட்டும் என்னால்
சொல்ல முடியவில்லை நண்பேன்டா என்று..
நான் காதலிக்கும் பெண்ணை நீ
தள்ளிக்கொண்டு வந்து
"மாப்ள இது தான்டா நான்
கட்டிக்கப்போற பொண்ணு
உனக்கு சிஸ்டர் மாதிரி"
என்று சொன்னபோது...

வம்சம்.. நிஜமும் கொஞ்சம் கற்பனையும் கலந்த கதை..

Thursday, December 30, 2010

இந்த சம்பவம் நடந்தது 1900 களின் ஆரம்ப கட்டத்தில் சிவகாசி என்றொரு இயற்கையால் சபிக்கப்பட்ட மலட்டு மண்ணில்.. இனி கதைக்குள்..

பஞ்சத்தால் அடிபட்டு, வெளியூருக்கும் செல்ல வக்கில்லாத சிறு வியாபாரிகளும், நிலத்தை நம்பி இனி பயன் இல்லை என்று உணர்ந்து பலசரக்கு கடைகளில் வேலை செய்யும் சில விவசாயிகளும், அவர்களிடம் கடனுக்கு மட்டுமே பொருட்களை வாங்கி செல்லும் பல அன்னக்காவடிகளும் நிறைந்தது தான் இந்த சிறிய கிராமம். அதோ தெரிகிறதே ஊரின் நடுவில் சிவன் கோயில், அது தான் இந்த ஊர் சிவகாசி என்று பெயர் பெறக்காரணமாக அமைந்தது. இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு ரத வீதி தான் இந்த ஊர். பெரும்பான்மை நாடார்களும் கொஞ்சம் ஐயர்களும் இருக்கிறார்கள். பக்கத்து பதினெட்டு பட்டியில் இருந்து அடிக்கடி தேவர்கள் வருவார்கள். பொருட்கள் வாங்க அல்ல, பொருட்களை எடுக்க. எடுக்க என்று கூட சொல்ல முடியாது. எடுப்பது வேறு கொள்ளையடிப்பது வேறு அல்லவா?

சிவன் கோவிலின் வாசலான கீழ ரதவீதியில் தான் கடைகள் இருந்ததன. கோவிலை சுற்றி ஐயர்களும் அதற்கு அடுத்த தெருக்களில் நாடார்களும். கோவிலுக்கு அருகிலேயே இருந்தாலும் கோவிலுக்குள் நுழைய முடியாது நாடார்களால். அது தேவர் கோவில், ஐயர்களுக்கும் தேவர்களுக்கும் மட்டும் அனுமதி. இந்தக்கோவில் என்று அல்ல, ஊரின் பிற கோவில்களிலும் இது தான் நிலைமை. சொந்த ஊர்க்காரன் கோவிலுக்குள் செல்ல முடியாது என்று பக்கத்து ஊர்க்காரன் அடக்கி வைத்திருந்தான்..

தன் தந்தை பழனியப்ப நாடாரின் கடையில் தான் அய்யன் இன்று முதல் வேலை பார்க்க ஆரம்பித்தான். விருதுநகரில் இருந்து மொத்தமாக பலசரக்கு வாங்கி வருவதும் அதை பிரித்து வைப்பதும் தான் அவன் வேலை. கோவிலுக்கு எதிர்புறம் அவர்களின் கடை. கோவிலுக்குள் வருவோர் போவோரை பார்த்துக்கொண்டே இருப்பான். பழனியப்ப நாடாரிடம் 'அதோ பல்லி, என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் கூட பதறி ஓடும் பயம் உண்டு. பரம சாது.. நெற்றியில் எப்போதும் பட்டை இருக்கும். இடுப்பில் வெள்ளை வேட்டி. 'கூழுக்கு வக்கில்லேனாலும் சானாப்ப்ய குண்டிக்கு வெளுத்த உட தான் போடுவான்' என்பார்கள்.

"ஏன்ப்பா, நாமெல்லாம் கோவிலுக்குள்ள போகக்கூடாதா?"

"அய்யா, அதெல்லாம் சாமிக்குத்தம்யா. சாமியும் (ஐயர்) தேவரும் தான் போவனும். நாமெல்லாம் போனா சாமிக்கு ஆகாது. ஊரே பஞ்சத்துல செத்துரும்"

இப்போ மட்டும் என்னவாம், ஊரில் முப்போகமா விளைகிறது என்று நினைத்துக்கொண்ட அய்யன், "நம்ம கடை அரிசி பருப்பு தானப்பா கோவிலுக்கும் ஐயர் வீட்டுக்கும் போவுது? அப்போ மட்டும் ஒன்னும் ஆகிடாதா?"

"யலேய் ஈனப்பயபுள்ள போய் எடைய சரியா போடுடா. ஊருக்குள்ள யாவாரம் பண்ணிப்பொழைக்குறது இவனுக்கு புடிக்கலையோ?"

"இதுல என்னப்பா தப்பு இருக்கு? ஐயரு மட்டும் தான் சாமிகிட்ட போகனுமா? தேவமாரு மட்டும் தான் கோயிலுக்குள்ள போவனுமா? திருவிழா அன்னிக்கு சாமி வரும் போது கூட நாமெல்லாம் கடைய அடைச்சுட்டு வீட்டுல தானப்பா இருக்கோம்?"

"ஒரு நாள் கடைக்கு வந்ததுக்கே உனக்கு இவ்ளோ திமுராடா? உங்க ஆத்தா உன்ன இந்த வள்ளலுல தான் வளத்துருக்கா" - பேசிக்கொண்டே அய்யனின் முதுகுல் ஒரு சத்து சாத்தி அவனை வீட்டுக்கு பத்தி விட்டார்.

கடையில் அரிசி வாங்கிக்கொண்டிருந்த பதினெட்டு பட்டிக்காரி ஒருத்தி இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு, ஒரு பைசா லாபம் இல்லாமல் பேரம் பேசி வாங்கிக்கொண்டு அவள் புருஷன் பெரியசாமிப்பாண்டியிடம் கொழுத்திப்போட்டாள். அவன் நேராக ஊர்த்தலைவன் சீனிமுத்துத்தேவரிடம் ஒப்பித்தான்.

இங்கு பழனியப்ப நாடார் வீட்டில் அவர் மனைவி நாகம்மாளிடம் "யாத்தா நாளைல இருந்து இந்தப்பய கடப்பக்கம் வரேன்டாம். ஒதவின்னு இருப்பான்னு பாத்தா ஒபத்திரவமால இருக்கான்"

"சின்னப்புள்ள தானேங்க, ஏதாவது தெரியாம பேசிருக்கும் பண்ணிருக்கும். சும்மா, ஒரு ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க"

"போடி பொழப்பத்தவளே, இவன கூட்டிட்டு போனா ஒத்தாச பண்ணுறதுக்கு நானும் இருக்க மாட்டேன், அந்த கடையும் இருக்காது. இன்னைக்கு இவேன் பேசுன பேச்சுக்கு என்ன நடக்கும்னு கூட தெரியலையே? அந்த பெரியசாமிப்பய பொண்டாட்டி வேற எல்லாத்தையும் கேட்டுட்டா"

"பதறாம இருங்க. அந்த மாரித்தாய் எல்லாத்தையும் காப்பாத்துவா" என்று பழனியப்பனுக்கு சமாதானம் சொல்லி தூங்க வைத்தாலும் நாகம்மாளின் மனதில் ஒரு வித சலனம் இருந்து கொண்டே இருந்தது..

மறுநாள் கடைத்தெருவில் ஒரே சத்தம். சீனிமுத்துத்தேவர் பழனியப்ப நாடாரின் கடையை சில ஆட்கள் கொண்டு நொறுக்கிக்கொண்டிருந்தார்.

"அய்யா அய்யா என் பொழப்ப கெடுத்துராதிங்கய்யா, அய்யா" என்று பொழப்பே போன பின்னும் அர்த்தம் புரியாமல் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

"அவ்வளவு தயிரியமாலே உனக்கும் உம் மவனுக்கும்? சானாப்பயலுக்கு கோவிலு கேக்குதோ? செருப்புலாம் கோயிலுக்கு வெளிய தாம்லே இருக்கனும். ஈனப்பய நீயும் அப்படித்தான்டே. இன்னைக்கு நீ கேப்ப, நாளைக்கு உன்ன வச்சு பரப்பயலும் சக்கிலியனும் கேப்பான். வாரவேன் போறவனெல்லாம் நுழையுரதுக்கு அதென்ன ஔசாரி வீடாடே?"

சீனிமுத்துத்தேவர், பார்ப்பதற்கு முரட்டு உடல். ஆறடி உயரம் இருப்பார். மொழிங்கால் வரை தான் வேட்டி இருக்கும். சட்டை போடாத மயிர் நிரம்பிய உரம் ஏற்றப்பட்ட மார்பு. வாயில் எப்போதும் சுருட்டு. பார்த்தாலே பயம் வரும் உருவம். குரலும் கம்பீரம்.

இப்போது மொத்த கடைக்காரர்களையும் பார்த்து, "எலேய் சானாப்பயலுவலா, ஒழுங்கா பொழப்ப பாத்துக்கெடந்தீகன்னா இந்த ஊருக்குள கெடங்க. இல்லாட்டி ஒரு பய உசுரோட இருக்க முடியாது. கடையெல்லாம் கொழுத்திப்புடுவேன் ஜாக்கிரத" - கூறிக்கொண்டே உடன் வந்தவர்களை அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கு திரும்பினார்.

அவர் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட பின் பழனியப்பனின் உறவினர்கள், "அவைங்களுக்கு முன்னாடியே நாம இங்க பொழைக்க வந்தவைங்கடா. என்ன பேச்சு பேசுறான் பாத்தியா?"

"காலம் காலமா இந்த ஊருல இருக்கோம்டா. அஞ்சு மைல் தள்ளி இருக்குறவன் வந்து நம்மள அதிகாரம் பண்ணிட்டு போறான் பாத்தியா?" என்று மெதுவாக புலம்பிக்கொண்டே ஒவ்வொருவராக தங்கள் கடையை அடைத்து வீட்டுக்கு சென்றனர்.

மறு நாள் காலையில் பல கடைகளின் பூட்டு உடைந்திருந்தது. பலசரக்கு பொருட்களும் பணமும் திருடு போயிருந்தன. கடைத்தெருவே ஒப்பாரிமயமாய் இருந்தது. யார் என்னவென்று ஒன்னும் புரிபடவில்லை. அன்று பதினெட்டு பட்டியில் இருந்து யாரும் பொருட்கள் வாங்க வரவில்லை. சிலர் அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள் இது சீனிமுத்துத்தேவரின் வேலையாகத்தான் இருக்கும் என்று. புலம்பிக்கொண்டே வீடு போய் சேர்ந்தார்கள். மறுநாளும் கடைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

"அண்ணாச்சி சாமான் குடுங்க" னு கேட்டு வாங்குனவன அந்த இடத்துலேயே வைக்காம வளர விட்டுட்டோமேடா? ரொக்கம் குடுத்து வாங்குனவன், கடனுக்கு வாங்க ஆரம்பிச்சான், கடன் வாங்குறதையே பழக்கமாக்குனான், பொறவு மிரட்டி தண்டல் காரன் மாதிரி கொள்ளையடிக்க ஆரம்பிச்சான். இப்ப நம்மகிட்டேயே திருட ஆரம்பிச்சுட்டானேடா?" ஒரு பெருசு தனக்கு தெரிந்த வரலாறை உளற ஆரம்பித்தது.

"பகல்ல வந்தாலாவது யாருன்னு தெரியும், ராவுல வந்தா யாருன்னு யாருக்கு தெரியும் அண்ணாச்சி?"

"ஆமாடா இன்னும் எத்தன நாளைக்கு தெரியாத மாதிரி நடிக்கப்போறீங்க?" - எவனோ ஒரு வீரன் உசுப்பேத்தி விட்டான்.

"இப்போ என்ன தான் அண்ணாச்சி செய்யுறது?"

"ஓசில கெடச்சாலும் லாபத்துக்கு விக்குறது தான் நம்ம பொழப்பு. கோயிலுக்கு போகலேனா குடி ஒன்னும் முழுகிறாது. அதனால அவைங்க செஞ்சத நாம கண்டுக்கிடல, ஆனா நம்ம பொழப்பையே அவன் கெடுக்க நெனச்சுட்டான். இத விட்டா நமக்கு வேற என்ன பொழப்பு தெரியும்? இனிமே அவன் நம்மள பொழைக்க விடமாட்டான். இப்பிடியே தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருப்பான். இனிமேலும் சும்மா விடக்கூடாது. மோதிப்பாத்துறவேண்டியதுதான்."

"ஏ என்னப்பா சொல்லுற? அவைங்க சுத்த ரவுடிப்பயளுகப்பா. அவைங்க கூடப்போயி..." என ஒரு பெருசு சொல்லி முடிப்பதற்குள்,

"காலம்காலமா இருந்த ஊரையும் பாத்த தொழிலையும் விடணுமா, இல்ல இவைங்கள எதுத்து நின்னு பொழைக்கனுமா? நீங்க தான் முடிவு செய்யணும்"

நீண்ட அமைதிக்குப்பின் பலராலும் அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

மறுநாள் விடிந்தும் விடியாமல் பதினெட்டு பட்டியில் சேர்வாரமுத்து கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டே ஓடிவந்தான் சீனிமுத்துத்தேவர் வீட்டுக்கு. எல்லோரும் பட்டி எல்லையில் இருக்கும் சேர்வாரன் வீட்டு சுவரையே வெறித்துப்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அதில், "நீ மறவன் என்றால் பகலில் வா, சக்கிலியன் என்றால் ராத்திரியில் வா" என்று கரிக்கட்டையில் எழுதி இருந்தது.

பதினெட்டு பட்டியில் அனைவருக்கும் ரெத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. துணைக்கு பத்து பதினைந்து பேரோடும், மனத்தில் வெறியோடும் சீனிமுத்து கிளம்பினார். ஊரின் வட எல்லையை அவர்கள் அடைந்த போது, இவர்களுக்காகவே காத்து இருந்தது போல் நூற்றுக்கணக்கான நாடார்கள் திரண்டு இருந்தனர். முதல் வரிசையில் பழனியப்பனின் பையன் ஐயனும் இருந்தான் கையில் படிக்கல்லோடு. இந்தக்கூட்டத்தை சற்றும் எதிர்பாராத சீனிமுத்துவின் கூட்டம் மெதுவாக அதிர்ச்சியுடன் ஒரு நொடி நின்றதும். பின் மெதுவாக வந்தவழி திரும்பியது மனதில் வஞ்சனையோடு.

அன்று முதல் இரு சமுதாயத்திற்கும் நேரடி பகை ஆரம்பித்தது. பகை உச்சகட்டம் அடைந்தது, நாடார்கள் தங்களுக்கென்று ஒரு கோவில் கட்ட தீர்மானித்தபோது. ஆனால் ஒரு கோயில் கட்டுவதெல்லாம் அய்யனுக்கு பிரச்னையை தீர்க்கும் வழியாக தெரியவில்ல, இன்னும் பெரிதாக்குவதாக தான் தெரிந்தது. ஒன்றிரெண்டு பேரிடம் தன் மனதில் பட்டதை சொன்னான். யாரும், சிறுவன் என்று அவனை சட்டை செய்யவில்லை.

நாடார்கள் தங்களுக்கு என்று ஊரின் வட திசையில் பத்திரகாளியம்மன் கோவிலை கட்ட தீர்மானித்தார்கள். கோவிலுக்குள் எல்லா சாதிக்காரர்களும் வரலாம். பூஜை முதற்கொண்டு எல்லா கோவில் வேலையும் செய்வது நாடார்கள் தான். தங்களை பத்திரகாளியம்மனின் பிள்ளைகளாக சொல்லிக்கொண்டார்கள்.

தங்களை விட கீழானவர்கள் கோயில் கட்டுவதை பொறுக்காத பதினெட்டு பட்டியினர் சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தனர். மீண்டும் ஊர் கடைவீதியில் ஒரு சின்ன தகராறு வந்தது. சண்டையை விலக்கிவிட்டு, இரு பிரிவினரும் ஒரு பொதுவான இடத்தில் சண்டை போடுவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் படி மறு வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ஊருக்கு வடக்கு புறத்தில் சண்டை என்று முடிவு செய்யப்பட்டது.

ஞாயிறு காலை மணி பத்து. வடக்குப்புறத்தில் தயாராக காத்திருந்தார்கள் நாடார்கள். ஊருக்குள் வீட்டை பூட்டிக்கொண்டு, உள்ளே பெண்கள் கையில் மிளகாய் பொடியோடும், அடுப்பில் கொதிக்கும் எண்ணெய்யோடும் இருந்தார்கள். அப்போது தான் வட எல்லையில் நின்றுகொண்டிருந்த ஆண்களுக்கு அந்த செய்தி குத்தீட்டியை இறக்கியது. சண்டை போடுவதாக சொன்ன இடத்திற்கு வராமல் ஊருக்குள் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தேவர்கள் கொள்ளை அடிப்பதாக தகவல் வந்தது. இவர்கள் விரைந்து செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. பெண்கள் இருந்த அறைகளை வெளியில் பூட்டிவிட்டு வீட்டிலும் கொள்ளை அடித்திருந்தார்கள்.

இதையெல்லாம் பார்த்து ஊரே “அய்யோ அம்மா” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தது. அப்போது தான் அய்யன் ஒன்று சொன்னான். "அண்ணாச்சி நீங்க கோயில் கட்டுறதாலேயோ சண்ட போடுறதாலேயோ எந்த முடிவும் வரப்போறதில்ல. நம்மள மட்டமா நெனைக்குறவன் கூட நாம மோதுனா நாம எப்பையுமே மட்டமா தான் இருப்போம். அவன நமக்கு கீழ வரவைக்கணும்னா நாம அவனுக்கு மேல போகணும். அதுக்கு எனக்கு ஒரு வழி இருக்கு" என்று தனது மனதில் இருந்த அந்த திட்டத்தை சொன்னான்.

அவனும் அவன் மாமா பையன் சண்முகமும் கல்கத்தா சென்றார்கள். சிலகாலம் அங்கிருந்து தீப்பெட்டி தயாரிப்பதையும் வெடி தயாரிப்பதையும் கற்று வந்தனர். சிவகாசியில் தொழில் ஆரம்பித்தனர். திருட்டு மட்டுமே பிழைக்க வழி என்று நினைத்த பதினெட்டு பட்டியும், நாடார்களை மதிக்காவிட்டாலும் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு வந்தது. "முதலாளி" என்றும் "அண்ணாச்சி" என்றும் அந்த "சானாப்பயல்கள்", உயர் சாதிக்காரர்களால் வாயாற அழைக்கப்பட்டார்கள். ஒன்றுமே விளையாது என்று இருந்த பூமி பணம் விளையும் பொக்கிஷமாக மாறியது. கல்கத்தா போன அந்த இருவரும் தான், நவீன சிவகாசியின் தந்தை என அழைக்கப்படும் அய்யா நாடார் மற்றும் காக்கா ஷண்முகநாடார்.

இப்போதும் கூட எங்கள் ஊர் பகுதியில் தீப்பெட்டி மற்றும் வெடி ஆலைகளில் சனிக்கிழமை கூலி வாங்கிக்கொண்டு பிள்ளைகளை மாவட்டத்திலேயே பெரியதான 120 ஆண்டு பழமையான நாடார் பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு பதினெட்டு பட்டிக்கார்கள் தங்கள் வீட்டுக்கு போவார்கள். போகும் வழியில் தங்கள் பிள்ளைகளிடம் "தாயோழி" என்றும் "தேவடியாப்பயல்" என்றும் வைது கொண்டே செல்வார்கள் சில நிமிடங்கள் முன்பு சம்பளம் வாங்கும் போது "ரொம்ப நன்றி அண்ணாச்சி" என்றவர்களை..

எனக்குப்பிடித்த என் கணவர் - கவிதை..

Tuesday, December 28, 2010

முதலிரவு அன்று
'அழுப்பாக இருந்தால் தூங்கு'
என்று என் முகம் பார்த்தே
அகம் கண்ட என் கணவரை
அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு..

காலையில் எனக்கு முன்பே
விழித்து இருந்தாலும்
நான் எழுப்பி விடும் வரை
காத்திருப்பதும்..

கால் விரல்களில்
இறுக்கமாக மாட்டிக்கொண்ட
மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே
கடித்து எடுக்கும் போதும்..

என் கர்ப்ப காலத்தில்
என்னைவிடவும்
என்னையும் குழந்தையையும்
பேணி கவனித்துக்கொண்ட போதும்..

விடுமுறை நாட்களில் கூட
வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல்
சோம்பேறியாக இருக்கும் போதும்..

வேலைக்கு செல்லும் சமயத்தில்
சாமி கும்பிட மறந்தாலும்
என் நெற்றியில் முத்தமிட
மறக்காத போதும்..

செய்திகள் ஓடிக்கொண்டிருக்கும்
அரசியல்வாதிகளை
அசிங்கமாக திட்டும்போதும்..

என் வீட்டில் இருந்து
யார் வந்தாலும் அவர்களிடம்
பேச கூச்சப்படும் போதும்;
ஆனால் அவர்களிடமும்
மறக்காமல் என்னை கிண்டல்
செய்யும் போதும்..

என் பிறந்தநாளையும்
எங்கள் திருமண நாளையும்
மறந்து என்னிடம்
மன்னிப்பு கேட்கும் போதும்..

மெகா சீரியல் அன்று கிரிக்கெட் இருந்தால்
ஹைலைட்சிலேயே
திருப்தி பட்டுக்கொள்ளும் போதும்..

நினைத்துக்கொள்வேன், "நல்ல வேலை
அந்த கணேஷை கழட்டி விட்டேன்
இந்த நல்ல கணவன் கிடைத்தான்.."
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One