Showing posts with label சிவகாசி. Show all posts
Showing posts with label சிவகாசி. Show all posts

ஏன் கார்ப்பரேட் வேண்டும்?

Saturday, July 21, 2018

மோடி எதிர்ப்பாளர்களின் அதிக பட்ச கூக்குரலே ‘அம்பானி, அதானி, கார்ப்பரேட்’ தான்.. ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதார மந்தம், சட்ட ஒழுங்குக் கேடு, நாட்டின் பாதுகாப்பின்மை என எதையும் சொல்ல முடியாமல் இவர்கள் எடுத்திருக்கும் கடைசி ஆயுதம் தான் இந்த கார்ப்பரேட் மேட்டர்.. சரி கார்ப்பரேட்டுன்னு கத்துறவனெல்லாம் யாருன்னு பாத்தோம்னா கார்ப்பரேட்டிலோ கார்ப்பரேட்டுக்கோ வேலை செய்துகொண்டு, கார்ப்பரேட் தயாரித்த கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் கார்ப்பரேட் ஒழிகன்னு கூவிக்கிட்டு இருப்பான்.. சரி இப்ப நம்ம சங்கதிக்கு வருவோம்..

கார்ப்பரேட் என்ன அவ்வளவு மோசமான வார்த்தையா? அதென்ன நாட்டிற்கு அவ்வளவு கேடான விசயமா? ஏன் இவ்வளவு எதிர்ப்பு? கார்ப்பரேட்டுகள் இல்லாமல் இங்கு எதுவும் நடக்காதா?

கக்கூஸ் போக ஒரு மறைவான இடம் கூட இல்லாதவனில் தொடங்கி, ஒரு வேளை உணவே பேராசையாக இருப்பவனும் உலகிலேயே அதிக விலைமதிப்பிலான வீட்டைக் கட்டியவனும் வாழும் அனைத்து நிலை மக்களும் வாழும் தேசம் இது.. இங்கு அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.. பெண்களுக்குக் கழிப்பிடம், ஏழைகளுக்கு வீடு, மருத்துவம், போக்குவரத்து, கல்வி என அனைத்துத் தரப்பு மக்களுக்குமானத் தேவைகளைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். இதற்கு நடுவில் டூவீலரில் போறவனில் இருந்து போர்ஷா கார் வைத்திருப்பவன் வரை வழுவழு ரோடு வேண்டும், அதுவும் ஓசிக்கு வேண்டும்..

ஒரு அரசாங்கத்திற்கான முழுமுதல் வருமானம் வரி.. அந்த வரியை நாம் எப்படிப் பார்க்கிறோம்? வரி என்றாலே வலிக்கிறதே நமக்கு? நாட்டில் வண்டிகளின் விற்பனையும் விலையும் ஏறிக்கொண்டே தான் போகிறது.. ஆனால் பெட்ரோல் மட்டும் லிட்டர் 10ஓவாய்க்கு வேண்டும் என்பார்கள் என்னமோ மாதம் 100லிட்டர் பெட்ரோல் போடுவது போல்.. சரி எல்லாம் செஞ்சிரலாம் வரியை ஒழுங்காக் கட்டுங்கடான்னா அதுவும் பிடிக்காது.. வரி கட்டவும் வலிக்கும், ஆனால் எல்லாம் ஓசியாகவும் வேண்டும் என்றால் ஒரு அரசாங்கம் என்ன தான் செய்யும்?

என்னது அரசு நிறுவனங்கள் மூலமான வருமானமா? அரசாங்க ஊழியர்கள் எல்லாம் பே கமிஷன் வேண்டும் என்று மட்டும் தான் பேயாகக் குதிப்பார்களே தவிர தங்கள் நிறுவனம் லாபமாக ஓட வேண்டுமே எனத் துளியும் யோசிப்பவர்கள் அல்லர்.. அரசு நிறுவனங்களும் தங்கள் வருமானத்தை விட அதிகமாக ஊதியம், பென்சன் போன்றவற்றிற்கே  செலவழிக்கின்றன.. சங்கமே அபராதத்தில் ஓடும் போது எங்கிருந்து நாட்டிற்காகப் பணம் எடுப்பது?

சரி எல்லோரும் விவசாயம் பார்த்து இந்தியாவை மிகப்பெரிய விவசாய நாடாக மாற்றினால் என்ன? பாஸ், இன்னைக்கு நிலைக்கு பலரும் விவசாயத்தை விட்டுட்டு நகரத்துக்கு வந்துட்டு இருக்காங்க.. அப்போ லாஜிக்படி விவசாயத்திற்கான தேவை அதிகரித்திருக்க வேண்டும்.. ஆனால் நம் விவசாயிகள் தக்காளியையும் வெங்காயத்தையும் கிலோ 150ரூ வரை விற்பார்கள், அடுத்த சில நாட்களிலேயே விலையில்லை எனச் சாலையில் வீசுவார்கள்.. அதுவும் போக நாம் விவசாயத்தில் தன்னிறைவு அடைந்து தான் இருக்கிறோம்.. அரிசிக்கும் பருப்புக்கும் எவனிடத்திலும் கையேந்திக்கொண்டு இருப்பதில்லை.. இந்த நேரத்தில் அனைவரும் விவசாயத்தின் பக்கம் திரும்பினால் மொத்தமாக அந்தத் துறையையே ஷட்டர் போட்டு மூடிவிடுவது தான் ஒரே வழி.. ஒரு சில “பசுமை விவசாயிகளின்” பகட்டைக் கண்டு ஏமாறாதீர்கள்.. மிகக் குறிப்பாக ஆடு, மாடு மேய்ப்பதைத் தேசியத் தொழிலாக ஆக்குவேன் என்பதெல்லாம் நம்மை கோவனத்தோடு அலைய விடுவதற்கான வேலைகள் தான்.. 

இப்ப என்ன தான்யா செய்யலாம் இந்த 120 கோடி ஜனங்களின் தேவைகளுக்கு? அம்பானி, அதானி, டாடா, பிர்லா, கோட்ரெஜ், வேதாந்தா, எனப் பெரும் முதலாளிகளைத் தான் தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும் அதுவும் சல்லிசு விலையில்.. ஏன் சல்லிசு விலை? ஏன்னா நாம கொடுக்கலேன்னா அவனுக்கு இடமும் வசதியும் கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன அதனால் தான்.. அதாவது இப்ப எல்லா கம்பெனிகளும் ஆந்திரா தெலுங்கானாவை மொய்ப்பது போல்.. சரி அவன் தொழில் தொடங்கிட்டானா? இப்ப என்ன செய்வான்? வேலைக்கு ஆள் எடுப்பான்.. எங்க இருந்து? அந்த நாட்டில் இருந்து.. சரி ஆள் எடுத்தாச்சி, அடுத்து? தனியார் கம்பெனிக்காரன் தொழில் தொடங்கிட்டுச் சும்மாவா இருப்பான்? லாபம் பாக்கணும்.. ஆளுங்கள சக்கையாப் பிழிவான், சுளையாய்ப் பணமும் தருவான்.. வேலை செய்பவன் கையில் பணம், முதலாளி கையில் பணம்.. வேலை செய்பவன் வீட்டுக்குப் பொருட்கள் வாங்குவான், சேமிப்பான்.. முதலாளி லாபத்தைக் கொண்டு இன்னொரு ஊரில் கிளை ஆரம்பிப்பான்..

இப்ப அந்த நிறுவனத்தைச் சுற்றி ஓட்டல், டீக்கடை, ஃபாக்டரி என்றால் டூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ், மெக்கானிக் கடை, புதிதாகக் குடியிருப்புகள், ஆட்டோ சர்வீஸ், காய்கறி, பலசரக்கு, மருந்துக்கடை என ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும்.. சரி அந்த நிறுவனத்திற்கான மூலப்பொருட்கள் தருவதற்கு ஒரு கம்பெனி வேண்டுமே? பேக்கிங் செய்ய இன்னொரு கம்பெனி முளைக்குமே? பொருட்களைக் கொண்டு செல்ல டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள் புதிதாக வருமே? ஆம், இப்படித்தான் பொருளாதாரம் வளரும்.. கார்ப்பரேட்டுகள் அதிகபட்சம் 10% வரை இந்தியாவில் வேலை வாய்ப்பைக் கொடுத்தால் அவனைச் சார்ந்து இன்னொரு 20-30% வேலை வாய்ப்பு உருவாகும்.. நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும், வரி வருமானம் கூடும், தொழில்வளம் பெருகும்.. 

இதனால் தான் சார் நாங்க கார்ப்பரேட்டை வரவேற்கிறோம்.. அதற்காக சிறு தொழில்களை வேண்டாம் என முடக்கவில்லை.. அவர்களுக்கு MSME லோன்கள் கொடுக்கப்படுகின்றன மிக அதிக அளவில்.. சரி இதையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக உள்ளூர்த் தொழிலான பட்டாசு, பின்னலாடை, அச்சுத் தொழில் போன்ற நிறுவனங்களை வைத்துச் செய்ய முடியாதா என்கிற கேள்வி எழலாம்..

சிவகாசி - கிட்டத்தட்ட 100ஆண்டு காலமாய் பட்டாசுத் தொழிலையும் அச்சுத் தொழிலையும் நம்பிப் பிழைக்கும் (பிழைத்த??) ஊர்.. இங்கு என்ன சம்பளம் தெரியுமா ஒரு வேலையாளுக்கு? வெறும் 4000ரூபாய்.. ஆபிஸ் மேனேஜர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் சம்பளமே 5இலக்கத்திற்குப் போகாது பெரும்பாலும்.. PF, ESI, Gratuity பற்றியெல்லாம் இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை.. சரி லாபத்தில் அந்த முதலாளிகள் ஊருக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? மூன்று தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் பிழைக்கத் தெரியாமல் கொஞ்சம் எய்டட் பள்ளி & கல்லூரிகளைக் கட்டிவிட்டுப் போனதோடு சரி.. இப்போது இருப்பவர்கள் எல்லாம் international பள்ளிகளையும், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளையும் தான் கட்டுகிறார்கள்.. Strictly no for employees’ children without capitation fees என்று போர்டு மாட்டாத குறை தான்.. இன்றும் மாலை நேர சிவகாசிச் சாலைகளில் மினி பஸ்சில் போனால் 2 ரூபாய் மிச்சப்படுத்தலாமே என அரசு பஸ்களில் ஏறாமல் மினி பஸ்களில் நசுங்கிப் போய் வீடு திரும்பும் எத்தனையோ அச்சாபிஸ் & பட்டாசு ஃபேக்டரி ஊழியர்களைப் பார்க்கலாம்.. அதே சாலையில் BMW, Audi, Porsche, Jaguar கார்களும் பறந்து கொண்டிருக்கும்.. 

ஒரு ஊருக்குள், ஒரு ஜாதிக்குள் என உருவாக்கப்படும் தொழில்களால் இப்படியான ஏற்றத்தாழ்வுகள் தான் உருவாகும்.. கார்ப்பரேட்டுகள் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யும் வினையூக்கிகள்.. அங்கு ஜாதி, மதத்திற்கு இடமில்லை.. நிஜமான சமத்துவபுரங்கள் அவை.. ஒவ்வொருத்தனும் சொந்தக் காசில் கல்யாணம் செய்துவிடலாம், வீடு வாங்கிவிடலாம் என நம்பிக்கையூட்டுபவை அவை.. நல்லாப் படித்தால் நல்ல வேலையில் அமர்ந்து வயக்காட்டிலும், ஃபாக்ட்ரியிலும் பிழியப்படும் பெற்றவர்களைக் காப்பாற்றி விடலாம் என்கிற பாசிடிவ் எனர்ஜியைக் கொடுப்பவை அவை..

இனியாவது கார்ப்பரேட்டைக் குறை சொல்லும் முன், கொஞ்சம் யோசித்துவிட்டுக் குறை சொல்லவும்.. இந்த தேசத்தை, இத்தனைக் கோடி மக்களை நிஜமான வளர்ச்சிக்குக் கூட்டிச் செல்லப்போபவை அவை தான்..

மழைக்கால ஆஸ்பத்திரி..

Monday, November 23, 2015

ஒரு நாள் ஒரே ஒரு நாள் வந்தாலும் இந்த காய்ச்சல் செம காட்டு காட்டிவிட்டது.. மசக்கையான பெண் மாதிரி, உட்கார்ந்தால் எழ முடியவில்லை, படுத்தால் எந்திரிக்க முடிவவில்லை, கிறுகிறுவென வருகிறது, ஒவ்வொரு எலும்பும் தனித்தனியாக கழண்டு விட்டது போன்ற உணர்வு.. சரி சனியன் இந்த  ஆஸ்பத்திரிக்காவது போலாம்னு பாத்தா வெளிய நசநசன்னு மழை.. 

ஒரு வழியா மதியம் மழை விட்டு லேசா தூரும் போது, ஒரு கையில குடையையும், இன்னொரு கையில அம்மாவின் மணிக்கட்டையும் பிடித்துக்கொண்டு, நடக்கப் பழகும் பிள்ளை போல் மெதுவாகத் தள்ளாடி ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.. அங்கு நிற்கிறது பொங்கலுக்கு வேட்டி சேலை வாங்க நிற்கும் கும்பல் போல் ஒழுங்கற்ற ஒரு வரிசை.. முக்கால்வாசி குழந்தைகள் தான்.. இந்த மழை தான் டாக்டர்களுக்கு எவ்வளவு பெரிய வரத்தைக் கொடுக்கிறது? தனக்குக் காய்ச்சல் என்றால் பொறுத்துக்கொள்ளும் மனது, பிள்ளைகளுக்கென்றால் துடிதுடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறதே?!

“ம்மா இந்த வரிசைல நின்னு அடுத்த வாரம் டாக்டர பாக்குற வரைக்கும்லாம் நான் உயிரோட இருக்க மாட்டேம்மா.. வாங்க பேசாம வீட்டுக்கே பெயிரலாம்” - மேலுக்கு முடியாத போது, உடன் ஒரு ஆள் இருந்தால் இந்த மனம் தான் எவ்வளவு கோழையாகவும், பிறர் சார்ந்தும் மாறிவிடுகிறது? தனிமையில் இதை விட அதிக வலியைத் தாங்கிய நான் இன்று அம்மா அருகில் இருக்கும் தைரியத்தில் மிகவும் கொஞ்சிக்கொண்டிருந்தேன்.. நான் பண்ணும் அலம்பலை எல்லாம் கண்டுகொள்ளாமல் சீட்டு எடுத்து வைத்தார் அம்மா.. தரை முழுவதும் ஈரம், சகதி, அழுக்கு, ஒரே நசநசப்பு. இதெல்லாம் அந்தச் சூழலை இன்னும் எரிச்சலூட்டுவதாய் மாற்றியது. இதில் எப்படி பிள்ளைகளைத் தரையில் விளையாட விடுகிறார்கள் என ஆச்சரியமாய் இருந்தது. ஹ்ம் இப்படிலாம் விளையாட விட்டதால் தான் ஆஸ்பத்திரிக்குத் தூக்கி வந்திருக்கிறார்கள் என சமாதானம் செய்து கொண்டேன்.

”48. ராம்குமார்” என்று நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைப் பேப்பரில் அந்தப் பெண் எழுதினாள்.. இப்போது தான் அந்த லிஸ்டில்  எட்டாவதாக இருந்த ‘நிகிதா’ என்கிற பெயர் வாசிக்கப்பட்டது.. ‘இன்னும் 40 பேரா?’ என சோர்ந்து விட்டேன். ’நிகிதா’ - அந்தப் பெயர் எங்கள் ஊருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லாததாய் இருந்தது.. மெதுவாக அந்த லிஸ்டில் இருக்கும் பிற பெயர்களைப் பார்த்தேன், அவைகளும் அப்படியே. தக்‌ஷா, தீப்தி, வேததர்ஷினி, அஜித்குமார், ரோஹித்.. ஹா ஹா இப்போதெல்லாம் சிவகாசியில் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கும் பெயர் எல்லாம் ஆச்சரியமாய் இருக்கிறது.. பட்டன் இல்லாமல் ஊக்கு குத்தியிருக்கும், எந்நேரமும் அழுதுகொண்டிருக்கும் அந்த அழுக்கு ஸ்வெட்டருக்குப் பெயர் அஜித் குமார். தங்கள் வாழ்க்கை தான் நவீனமாக மாறவில்லை, அட்லீஸ்ட் பெயரிலாவது கொஞ்சம் மாடர்னாக இருப்போம் என மக்கள் முடிவு செய்திருப்பார்கள் போல..  தீக்குச்சி அடுக்கிக்கொண்டும், தீப்பெட்டி ஒட்டிக்கொண்டும் அன்றாடங்காச்சிகளாய் இருக்கும் நம் பிழைப்பு, இந்தக் குழந்தைகள் மூலமாகத்தான் மாறப்போகிறது என்கிற அவர்களின் எதிர்பார்ப்பின் அடையாளமாகத் தான் அந்த மாடர்ன் பெயர்களை நான் பார்க்கிறேன்..

ஒத்தக் குடையைப் பிடித்துக் கொண்டு, மழையில் தான் நனைந்தாலும், பிள்ளைகளை நனையவிடாமல் தூக்கிக்கொண்டு அம்மாமார்கள் ஆஸ்பத்திரிக்குப் படையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மா என்னும் பொறுப்புத் தான் இந்தப் பெண்களை எவ்வளவு அழகாக மாற்றிவிடுகிறது? ரஜினி பட முதல் ஷோ மாதிரி கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.. எண்ணெய் பார்க்காத கந்தல் தலை, அழுக்கு உடுப்பு, ஒரே அழுகை, ஒழுங்கில்லாமல் இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுவது, ஊசி குத்துவதற்கு முன்பே வரும் வீல்ல்ல்ல் சத்தம் என சிறுவர்களுக்கான ஆஸ்பத்திரி ஒரு சந்தையைப் போல் அலறிக்கொண்டிருந்தது, இந்த அமைதியான ஞாயிற்றின் மதியத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல்..

மேலே வீடும், கீழே ஆஸ்பத்திரியும் என ஒன்றாகக் கட்டியிருந்தார் அந்த டாக்டர். மேலேயிருந்தும் ஒரே சத்தம். நிறைய உறவுக்காரர்கள் எல்லாம் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். டாக்டரின் மனைவி கீழே வந்து அவரை அழைத்தார். கிளம்பிய டாக்டர் வெடுவெடுவென மேலே ஏறினார்.. நம் நிகிதா, அஜித் போன்றோர்களின் பெற்றோருக்கெல்லாம் ஒரே கடுப்பு, ’பிள்ளைக்கு மேலு நெருப்பா சுடுது, இத்தன பேரு காத்துக்கெடக்கோம் இந்தாள் பாட்டுக்க பொண்டாட்டி கூப்ட்ருச்சின்னு பின்னாடியே போறியான் பாரு’ என முனுமுனுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ’நம்ம கஷ்டமெல்லாம் எங்க தெரியப்போகுது, இவன் பிள்ளைகளுக்கு வந்தா தெரியும்’ போன்ற சாபங்களும் சில பல கெட்ட வார்த்தைகளும் முனுமுனுக்கப்பட்டன.. பத்தே நிமிடத்தில் கீழே வந்துவிட்டார். மீண்டும் தன் பணியைத் தொடர்ந்தார். இப்போது மேலே இருந்து ஒரு பெண் கையில் பெரிய தட்டுடன் கீழே இறங்கி வந்தார்.

“டாக்டர் பையனுக்கு இன்னைக்குப் பொறந்த நாளு.. இந்தாங்க எல்லாரும் மிட்டாயி எடுத்துக்கோங்க” என்று வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு கொடுக்கப்பட்டது. அந்த மிட்டாயை எடுக்க எனக்குக் கைகள் கூசின.. ’என்னய்யா மனுசன் இந்த ஆளு? பையனோட பொறந்த நாளுக்குக் கூட அவசர அவசரமா ஓடி, அஞ்சே நிமிசம் தலையக் காட்டி, கேக் வெட்டி ஊட்டிவிட்டு வருவதற்கா இப்படி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் இத்தனை பேரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு?’ என அவர் மேல் எனக்கு பரிதாபமாய்ப் போய்விட்டது. டாக்டரைப் பார்த்துக் கருவிய வாய்கள் எல்லாம் இளித்துக்கொண்டே மிட்டாயை மென்று கொண்டிருந்தன. ‘அடுத்தது ராம் குமார்’ - அழைப்பு வந்தது.

“இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு வரணும்? ரெண்டே நாள்ல சரியாப்போயிரும்” சில மாத்திரைகளை எழுதிக்கொடுத்து, முதுகில் லேசாக ரெண்டு தட்டு தட்டி அனுப்பிவைத்தார்.. முகத்தில் ஒரு சின்ன கவலை, எரிச்சல், விரக்தி, கடுகடுப்பு ஏதாவது இருக்க வேண்டுமே? எவ்வளவு தேடினாலும் இல்லை. ஹ்ம் பழகிப்போயிருக்கும். ’விடுமுறை, நல்ல நாள், பொல்ல நாள், ராத்திரி, பகல், மழை, வெயில், தீபாவளி, பொங்கல் என எது வந்தாலும் தன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக நினைத்துக்கொண்டு நமக்காகவே உழைக்கும் மருத்துவர்கள், டிரைவர்கள், போலீசார் போன்றவர்களுக்கெல்லாம் நாம் என்ன கைமாறு செய்யப்போகிறோம்? நம்மைப் போல் விரும்பிய நேரத்தில் ஒன்றுக்கு இருக்கக் கூட முடியாதே இவர்களால்? இவர்களின் குடும்பத்தினருக்கான நாட்களை அல்லவா இவர் நமக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்? அவர்களின் சாபம் நம்மை என்ன செய்யும்? ஒரு வேளை அவர் குடும்பத்தினரும் பெருந்தன்மையாக நமக்காக பொறுத்துக்கொள்வார்களோ?! அப்பாவோடு படத்திற்குப் போக வேண்டும், தூங்கும் போது அப்பா கதை சொல்ல வேண்டும், விசேஷ வீடுங்களுக்குக் கணவனோடு செல்ல வேண்டும் என அந்தக் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு ஆசைகள் இருக்கும்? உண்மையில் நாம் அந்த குடும்பத்தினருக்குத் தான் கடமைப் பட்டிருக்கிறோம்.’ என பலவாறாக யோசித்துக்கொண்டே வெளியே வந்தேன்.. 

ஊசி போட்டு அழுது கொண்டிருந்த ரோஹித்தை அவன் அம்மா கொஞ்சிக்கொண்டிருந்தார், ‘தம்பி பாரு நீயும் படிச்சி நாளைக்குப் பெரிய டாக்டர் ஆகணும், இது மாரி நம்மளும் எல்லாத்துக்கும் ஊசி போட்ரலாம், சேரியா?’ என்று.. எனக்கு ரோஹித்தின் வருங்கால குடும்பத்தை நினைத்துக் கவலையாக இருந்தது.. அவர்களுக்காகவாவது நமக்கு நோய் நொடி எதுவும் வந்துவிடக்கூடாது என இறைவனை மனது வேண்டுகிறது.. 

உலகப்போரால் உலகப்புகழ் பெற்ற சிவகாசி... - தீபாவளி ஸ்பெசல்..

Tuesday, November 10, 2015

நான் எழுதிய இந்தக் கட்டுரை 6/11/15 வியாழன் அன்று தினமலர் தீபாவளி மலரில் “சித்திரைப் பூப்போலே சிதறும் மத்தாப்பு” என்கிற பெயரில் வெளியானது.. அவர்கள் கொஞ்சம் எடிட் செய்து போட்டார்கள்.. அந்த பத்திரிகையை வாசிக்க முடியாத நண்பர்களுக்காக, தினமலருக்கு நான் அனுப்பிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே..
______________________________________________________________________________

சினிமா தியேட்டரில் ஹீரோ வில்லனைப் பார்த்து செமத்தியான ஒரு பன்ச் டயலாக் விடுகிறான். குஷியான ரசிகர் கூட்டம் ஓஓவென கூக்குரலிட்டுக்கொண்டு விசில் சத்தத்தால் அந்தத் தியேட்டரை நிரப்புகிறது. நண்பர்களோடு செம ஜாலியான அரட்டை ஓடிக்கொண்டிருக்கிறது. உற்சாகமிகுதியில் அனைவரும் அந்த இடமே அதிர்வது போல் கை தட்டிக்கொண்டாடுகிறார்கள். இந்த இரண்டு விசயங்களிலும் பொதுவானத் தன்மை எது? சந்தோசமும் அதை வெளிப்படுத்தும் சத்தமும். மனிதனின் உணர்ச்சிகளை, குறிப்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில் சத்தங்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இன்றும் வீட்டு மற்றும் கோவில் விசேஷங்களில் வாத்தியங்கள் இசைப்பதைப் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? சத்தங்கள் மனிதனின் மன உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை.. தியேட்டரில் விசில் அடிப்பது, நண்பர்களோடு கை தட்டி சிரித்துப் பேசுவது போன்ற வரிசையில் வருவது தான் தீபாவளியை வெடிச்சத்தத்தோடு கொண்டாடுவதும். அந்த வெடிச்சத்தத்துக்குப் பின் இருக்கும் மௌனக் கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு சந்தோசமாகக் கொண்டாடலாமே?

தீபாவளி என்றால் உடனே வெடி ஞாபகம் வருவது போல, வெடி என்றால் உடனே சிவகாசி தான் ஞாபகம் வரும். இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் கிட்டத்தட்ட 85சதவிகிதத்தைத் தன் தோள்களில் சுமந்திருக்கும் ஊர் இது. அதாவது வருடத்திற்கு 2000கோடி ரூபாய் புழங்கும் தொழிலாகத் தன் விழுதுகளைப் பரப்பி வளர்ந்து நிற்கிறது. இன்றும் தீபாவளி நெருங்க நெருங்க வெளியூர்களில் இருந்தெல்லாம் கார்களில் இங்கு வந்து சல்லிசாகக் கிடைக்கும் என பட்டாசுகளை அள்ளிச்செல்கிறார்கள். மற்ற எந்த ஊரிலும் இல்லாமல் சிவகாசியில் மட்டும் இந்த அளவிற்கு பட்டாசுத் தொழில் வளர்ந்து நிற்க என்ன காரணம்? சிவகாசி என்னும், விவசாயத்தால் விவாகரத்து செய்யப்பட்ட ஊர் எப்படி இந்த பட்டாசுக்கு வாக்கப்பட்டது? சிவகாசிக்கு முன் பட்டாசு என்பதே யாருக்கும் தெரியாத விசயமா?

பட்டாசு என்பது சீனத் தொழில்நுட்பம் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை தான். நம் கிராமப்புறங்களிலும் கூட இன்று வரை கோயில் திருவிழாக்களின் போது அந்தந்த ஊர்களில் சிறிய அளவில் பட்டாசு உற்பத்தி செய்கிறார்கள். அவ்வளவு ஏன் சிவகாசியில் கூட வானக்காரர் தெரு என்று ஒரு தெருவே இருக்கிறது மாரியம்மன் கோவிலுக்கு அருகில். கோவில் திருவிழாக்களின் போது பட்டாசு வெடித்துக்கொண்டாடுவதற்கு ஏதுவாக, அந்தத் தொழில்நுட்பம் தெரிந்த சிலரை கோவில் நிர்வாகத்தினர் அருகிலேயே குடிவைத்து ஒரு தெருவை உருவாக்கினர் அந்தக் காலத்தில். அதனால் பட்டாசுத் தொழில்நுட்பம் என்பது அரசல்புரசலாக பல ஊர்களிலும், ஃபார்முலா என்று எதுவும் இல்லாமல், பழக்க வழக்கம் மூலம் மட்டுமே பழக்கதில் இருந்து வந்த ஒரு விசயம் தான். அதை ஒரு organized businessஆக மாற்றியதில் தான் சிவகாசி வெற்றிபெற்றது..



அது 1920களின் ஆரம்பம். சிவகாசியில் இருந்து அய்ய நாடார், சண்முக நாடார் என்கிற இரண்டு இளைஞர்கள் தீப்பெட்டித் தயாரிப்புத் தொழில்நுட்பம் பற்றித்தெரிந்துகொள்ள கல்கத்தா புறப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வருட படிப்பிற்குப் பின் உள்ளூர் திரும்பிய அவர்கள் ஜெர்மனியில் இருந்து சில எந்திரங்களை இறக்குமதி செய்து சிவகாசியில் முதல் தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வானத்தை நம்பியே காத்திருந்து, அது கொடுக்கும் தூரலில் விளையுமோ விளையாதோ என்கிற பயத்தில் பருத்தியையும், கம்பையும், புகையிலையையும் விதைத்துக் கஷ்டப்படுவது என்கிற எண்ணத்தில் இருந்த மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் புதுத் தொழிலின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். வியாபாரம் வளர ஆரம்பித்தது..

இணைந்து நடித்துப் பல வெற்றிகளைக் குவித்த ரஜினியும் கமலும் ஒரு கட்டத்தில் ‘இனி பிரிந்திருந்தால் தான் இருவருக்கும் நல்லது’ என்கிற முடிவை எடுத்ததற்கெல்லாம் முன்பே இவர்கள் அதைப் போன்ற முடிவுடன் இரு வேறு பெயரில் வியாபாரத்தை ஆரம்பித்தார்கள். அணில் பிராண்ட் அய்யன் ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பெயரில் அய்யநாடாரும், காக்கா பிராண்ட் காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பெயரில் சண்முக நாடாரும் புது நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.. மத்தாப்பு மற்றும் தீப்பெட்டித் தொழிலின் வளர்ச்சியை அடுத்து அய்யநாடாரும் சண்முக நாடாரும் தங்கள் வியாபார ஆர்வத்தைப் பட்டாசுப் பக்கம் திருப்பினார்கள். 1923ல் முதல் ஃபேக்டரி ஆரம்பிக்கப்பட்டது.



அப்போது வரை பட்டாசு என்றால் அது கம்பி மத்தாப்புக்கள் தான்.. அதுவும் ஜெர்மனில் இருந்து தான் இங்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. சிவகாசி, கேரளத்தின் திரிச்சூர் என அங்கும் இங்கும் சிறிய அளவில் தான் இந்தியாவில் உற்பத்தி இருந்து வந்தது.. இந்தச் சூழலில் தான் 1934ல் பட்டாசு உற்பத்திக்கு கலால் வரி விதிக்கப்பட்டு அது ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டது. மூலப்பொருட்களும் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.. இந்த நேரத்திலா இரண்டாம் உலகப்போர் வர வேண்டும்? வெடி பொருட்கள் ஆதலால் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் பல கெடுபிடிகள். மூலப்பொருட்களுக்கும், இறக்குமதி பட்டாசுகளுக்கும் பயங்கர தட்டுப்பாடு வர ஆரம்பித்தது. உற்பத்தி பாதித்தது. இதனால் பிற ஊர்களில் இருந்த பட்டாசு ஆலைகள் எல்லாம் தொழில் நசிந்துவிடுமோ என்கிற பயத்தில் மூடப்பட்டன.. ஆனால் இந்த இடத்தில் தான் சிவகாசிக்காரர்கள் வேறு மாதிரி யோசித்தார்கள். நிர்வாகவியலில் SWOT அனாலிசிஸ் என்பார்கள். ஒரு வியாபாரம் அதனுடைய பலம் (strength), பலவீனம் (weakness), வாய்ப்பு (opportunities), அச்சுறுத்தல் (threats) என்கிற நான்கையும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். இரண்டாம் உலகப்போரால் நேர்ந்த இந்தத் தடையை மற்ற ஊர் பட்டாசு முதலாளிகள் ஒரு அச்சுறுத்தலாகப் பார்த்தார்கள் என்றால், சிவகாசிக்காரர்கள் மட்டும் அதை ஒரு வாய்ப்பாகப் பார்த்தார்கள், ஜெயித்தார்கள்.

’மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யமுடியாவிட்டால் என்ன? நாமே உற்பத்தி செய்வோமே?’ என பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களையும் அவர்களே உற்பத்திச் செய்ய ஆரம்பித்தார்கள்.. இங்கும் ஒரு நிர்வாகவியல் தியரி இருக்கிறது. High risk = high returns என்பது தான் அது. ரிஸ்க் எடுத்து இறங்கினார்கள். அது பலனைக் கொடுத்தது. மூலப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்ய ஆரம்பித்த பின், இறக்குமதி செய்வதை விட விலை மலிவாகவும், உடனுக்குடன் கிடைக்கக்கூடியதாகவும் மாறியது. இதனால் பட்டாசு உற்பத்தி அதிகரித்து குறைந்த விலையில் கிடைக்க ஆரம்பித்தது. அழகிய தீப்பொறியுடன் சுருசுருவென எரியும் கம்பி மத்தாப்பை அனைவரும் வாங்க ஆரம்பித்தார்கள். கம்பி மத்தாப்பில் இருந்து சங்கு சக்கரம், புஸ்வானம், சீனிவெடி, சரவெடி என்று பட்டாசுத்தொழில் ஒவ்வொரு படியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தது. இன்று சிவகாசியில் கிட்டத்தட்ட 500 பட்டாசு ஃபேக்டரிகள் இருக்கின்றன.

பட்டாசு மட்டுமல்லாது மூலப்பொருட்கள் கம்பெனிகளும், பிரிண்டிங் ப்ரெஸ்களும், அந்த பிரிண்டிங் ப்ரெஸ்களுக்காக மை கம்பெனிகளும், இன்னும் பல சிறு தொழில்களும், பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே தீப்பெட்டி, பட்டாசுப் பெட்டிகள் ஒட்டுவது என கைச்செலவுக்கு சம்பாதிப்பதும் என்று சிவகாசி ஒரு பொருளாதார மையமாக உருவாகியது. வருடம் முழுக்க இங்கு கொழுத்தித் தீர்க்கும் வெயிலும் சிவகாசிக்கு மட்டுமே சாத்தியமானதாய் இந்தத் தொழில்களை மாற்றியது. சிறிய அளவில் வெறும் கம்பி மத்தாப்பை உற்பத்திச் செய்ய ஆரம்பித்தவர்கள், தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத இந்த இரண்டாம் உலகப்போரினால், உலகையே திரும்பிப் பார்க்க வைத்து, ஒரு ஊரின் பொருளாதரத்தையே திருப்பிப் போட்டார்கள் என்பது ஆச்சரியமான கேயாஸ் தியரி தான்..



சரி இது வரலாறு. அப்படியே நிகழ்காலத்திற்கு வருவோம். ’பணத்தாசை பிடித்த சிவகாசி முதலாளிகள்’, ’யாருமே சட்டத்தைப் பின்பற்றுவதில்லை’, ‘எங்கு பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள்’, ‘வேலையாட்களுக்கு பாதுகாப்போ சரியான சம்பளாமோ இல்லை’  - தீபாவளி நெருங்கும் சமயத்திலும், பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படும் வேளைகளிலும் இது போன்றச் செய்திகள் டிவி, செய்தித்தாள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என எதன் மூலமாவது வந்து அடிக்கடி நம் கண்களில் படும். அவற்றில் பலவும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன என்பது தான் கொடுமை.

யாரும் எந்த ஒரு தொழிலையும் கொலை செய்வதற்காக ஆரம்பிப்பதுமில்லை, யாரும் தன் உயிர் போக வேண்டும் என்பதற்காக எந்த வேலையிலும் ஈடுபடுவதும் இல்லை. பிறந்ததில் இருந்து பார்த்த வளர்ந்த தொழில் என்பதாலும், அதைத் தவிர்த்த வேறு விசயங்கள் தெரியாது என்பதாலும் சிவகாசி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலரும் பட்டாசு மற்றும் பிரிண்டிங் சார்ந்த துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். கொஞ்சம் காசு இருப்பவர்கள் சொந்தமாக வியாபாரம் ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் எண்ணம் எல்லாம் சம்பாதித்துத் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே ஒழிய செத்துப்போவது கிடையாது. பின் ஏன் இவ்வளவு விபத்துக்கள்? இங்கு தான் ஒரு பிரச்சனை தொக்கி நிற்கிறது.



ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒருவர் தவறாகக் கோட் எழுதினால் என்னவாகும்? ப்ரோகிராம் execute செய்தால் error காட்டும். டெஸ்டிங் டிபார்ட்மெண்ட்டில் அதைச் சுட்டிக்காட்டுவார்கள், தவறைச் சரி செய்து மீண்டும் அந்தப் ப்ரோகிராமை execute செய்து சரியாக்கி விடலாம். அதுவே ஒரு பட்டாசு ஆலையில் ஒருவர் தவறு செய்தால்? அவ்வளவு தான் விசயம். பொறுப்பு பெரியது, அதனால் சிறிய தவறுகள் கூட பெரும்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒவ்வொரு வருடமும் கேம்பஸ் இண்டர்வியூவின் போது எப்படி பல பெரிய ஐடி நிறுவனங்களும் தங்களுக்குத் தரமான மனித சக்திகள் கிடைக்கவில்லை என்று புலம்புகின்றனவோ அதே மாதிரி தான் இங்கிருக்கும் ஆலைகளும் புலம்புகின்றன, தொழில் தெரிந்த ஆட்கள் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை என.

படிப்பின் வாசம் கிடைத்தவர்கள் இந்தத் தொழிலின் ரிஸ்க்கைக் கருத்தில் கொண்டு வேறு ஊர்களுக்குப் பிழைக்கச் சென்றுவிடுகிறார்கள். படிக்காத ஒரு சிலர் மட்டும் ஃபயர் ஆஃபிஸ் பக்கம் வேலைக்கு வருகிறார்கள். எப்படியோ ஆள் கிடைத்தால் சரி என்றிருக்கும் முதலாளிகளும் முறையான அனுபவம் இல்லாத ஆட்களிடம் ஃபோர்மோன் பொறுப்பையும், காண்ட்ராக்ட் வேலைகளையும் ஒப்படைக்கிறார்கள். ஐடி கம்பெனி போல் இங்கு டெஸ்டிங் டிபார்ட்மெண்ட் எல்லாம் இருப்பதில்லையே தவறுகளைச் சுட்டிக்காட்ட? ஒரு தவறு, சரி செய்வதற்கான வாய்ப்பையேக் கொடுக்காமல் மொத்த உயிர்களையும் கொத்தாக அள்ளிச்சென்று விடுகிறது. பெரிய நிறுவனங்களில் இது போல் அனுபவம் இல்லாத ஆட்களை ஃபோர்மேனாகவோ காண்ட்ராக்டராகவோ அமர்த்துவதில்லை என்றாலும், தொழில் தொடங்கும் ஆசையில் சிறு முதலீட்டில் ஆரம்பிக்கும் பலரும் அனுபவமற்றவர்களை நம்பி இறங்குவதால் வரும் பிரச்சனை இது. சமீபத்தில் நடந்த விபத்துக்களும் இதைத்தான் சொல்கின்றன. இதற்கு என்ன தான் தீர்வு?



சிவகாசியில் வளர்ந்து வரும் அச்சுத்துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தவும், அதை இன்னும் நெறிப்படுத்திச் செல்லவும் 1977ல் பிரிண்டிங் டெக்னாலஜிக்கென தனி தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதை விட முக்கியமான, பாதுகாப்புக் குறைந்த பட்டாசுத் தொழிலுக்கென தனி கல்லூரியோ, அரசு மையமோ, படிப்போ எதுவும் இன்று வரை கிடையாது. இதனால் பட்டாசுத் தொழில் படித்து அறிந்து, புது நுட்பங்களைப் புகுத்தும் தொழில்நுட்பம் என்கிற நிலைக்கு உயராமல், செவி வழிச்செய்தியாகக் கேட்டுச் செய்யும் ஒரு சாதாரண வேலை என்கிற அளவிலேயே தேங்கி நிற்கிறது. புதிதாக வருபவர்களும் முறையான அனுபவம் கிடைப்பதற்கு முன்பே, ஆள் பற்றாக்குறையால் பெரிய பொறுப்பை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதுகாப்பு பற்றியோ, பயன்படுத்தும் மருந்துகளின் உண்மையான வேதியியல் தன்மை பற்றியோ முழுதாகத் தெரியாமல் அதைப் பயன்படுத்தும் ஒருவன் நிச்சயம் கவனக்குறைவாகத்தான் இருப்பான். இன்று வீட்டில் கேஸ் சிலிண்டரை மாட்டும் பொழுது எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறோம்? லேசாக வாடை வந்தாலே எவ்வளவு உஷார் ஆகிறோம்? ஆனால் அதை விட ஆபத்தான மருந்துகளை, முறையான அனுபவம் இல்லாத ஆட்கள் மிகவும் சர்வசாதாரணமாகக் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கு விழிப்புணர்வு வரும்.

அதனால் முறையான படிப்பு இதற்கு மிகவும் அவசியமாகிறது. அட்லீஸ்ட் அரசாங்கம் வேளாண் மையம் நிறுவுவது மாதிரி சிவகாசியில் பட்டாசுத் தொழில் மையங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்பச் சந்தேகங்களைத் தீர்ப்பதில் இருந்து, பாதுகாப்பாக வெடிகள் தயாரிப்பது வரை அடிக்கடி முகாம்கள் நடத்தி ஒவ்வொன்றையும் வேலையாட்களுக்கும் முதலாளிகளுக்கும் மனதில் பதிய வைக்க வேண்டும். பட்டாசு தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களையும் தீர்ப்பதற்கான ஒரு இடமாக இந்த மையம் செயல்பட வேண்டும். முதலாளிகள் எல்லாம் ஒன்றாகச் சேந்து பிரிண்டிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பித்தது போல பைரோடெக் இன்ஸ்டிட்யூட்டும் ஆரம்பிக்கலாம். வெறும் வேலையாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பமாகவும் மாற்றலாம் பட்டாசு தயாரிக்கும் கலையை!!

அடுத்த விசயம் விதிகளைப் பின்பற்றுவது. என்ன தான் ஹெல்மெட் நம் உயிரைக் காப்பாற்றுவதாய் இருந்தாலும், ரோட்டில் போலீஸ் இருந்தால் மட்டும் தான் நாம் அதை அணிகிறோம். தேர்வறையில் ஆசிரியர் அசந்து இருக்கும் போது பக்கத்துப் பேப்பரை எட்டிப்பார்த்து எழுதி வளர்ந்தவர்கள் தானே நம்மில் பலரும்? இங்கு விதிகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் முறையான கண்காணிப்பு இல்லாவிட்டால் எந்த ஒரு விசயமும் விதிகளை மீறி தன் இஷ்டத்திற்குச் செயல்பட ஆரம்பிக்கத்தான் செய்யும். பட்டாசுத் தொழிலும் இதற்கு விதிவிலக்கல்லவே? பாட்டாசுத் தொழிலைப் பாதுகாப்பாகச் செய்ய பல விதிகள் இருக்கின்றன. ஆனால் அவைகள் எல்லாம் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டியவர்கள் பெயருக்குத் தான் ஆய்வு செய்கிறார்கள் என்பது தான் வேதனை. நாளை ஒரு ஃபேக்டரியில் ஆய்வு என்றால் இன்று மாலையே அந்த முதலாளிக்குத் தகவல் போய்விடும், மறுநாள் அந்த சுற்றுவட்டார ஃபேக்டரிகள் அனைத்திற்கும் லீவு விடப்பட்டிருக்கும். இழுத்து மூடப்பட்டிருக்கும் ஃபேக்டரியில் என்னத்தை ஆய்வு செய்வது?



இன்னும் சில ஃபேக்டரிகளில் திடீரென ஆய்வு செய்ய வருவார்கள். ‘நாக்பூர் லைசன்ஸ் இல்லையே அண்ணாச்சி?’, ‘இத்தன பேர எப்படி வேலைக்கு வைக்கலாம்ணே?’, ‘என்ன இப்படி வேட்ட எல்லாம் வெயில்ல போட்டு வச்சிருக்கீங்கண்ணாச்சி?’ என்று கேள்விகளால் குடைந்து எடுப்பார்கள். ’சரி ரூல்ஸ் ஒன்னத்தையும் ஃபாலோ பண்ணல, நம்ம மொதலாளி ஆபிசுக்கு சீல் தான் இன்னைக்கு’ என்று வேலையாட்கள் கூடப் பதறமாட்டார்கள். ஏனென்றால் மறுநாளோ அல்லது ஒரு இரண்டு நாட்கள் லீவு விட்டோ வழக்கம் போல ஃபேக்டரி மீண்டும் செயல்பட ஆரம்பிக்கும் என அனைவருக்கும் நன்றாகத் தெரியும். நடுவில் என்ன நடந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. வீடுகளிலேயே சிலர் திருட்டுத்தனமாகப் பட்டாசு தயாரிப்பதையும் யாரும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. ஏதாவது விபத்து நடந்தால் மட்டும் கண் துடைப்பிற்கு சில நாட்கள் அதிகாரிகள் அங்கும் இங்கும் ஆய்வு செய்வார்கள். பின் பழைய குருடி கதவைத் திறடி கதை தான் மீண்டும்.
பெரியவனோ சிறியவனோ, யார் விதிகளைப் பின்பற்றாவிட்டாலும் பாரபட்சம் பார்க்காமல் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். விதிகளைப் பின்பற்றாவிட்டால் அதற்கான விலை மிகவும் மோசமானதாக இருக்கும் என முதலாளிகளும் தொழிலாளிகளும் உணர வேண்டும். சாலையில் லைசன்ஸ் இல்லாமல் போகிறவனுக்கு இருக்கும் பயம் கூட விதிகளைப் பின்பற்றாமல் ஃபேக்டரி நடத்தும் ஆட்களுக்கு இருப்பதில்லை. பயம் வர வேண்டும் என்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆட்கள் யோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் தான் மனது வைக்க வேண்டும். முதலாளிகளும் தங்கள் பொறுப்பையும், தங்களை நம்பி வந்திருக்கும் உயிர்களையும், அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களையும் மனதில் கொண்டு விதிகளைப் பின்பற்ற முனைய வேண்டும்.

பட்டாசு ஆலைகளுக்கான அனைத்து விதிகளையும் பின்பற்றுவது சாத்தியமில்லை என்பார்கள் சிலர். இப்படி சாத்தியமே இல்லை என்று 90களில் சொல்லப்பட்டு வந்த குழந்தைத் தொழிலாளர் முறை இன்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதே அது எப்படிச் சாத்தியமானது? சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் எந்த ஃபேக்டரியிலும் வேலை பார்க்கும் ஒரு சிறுவனைக் கூட இன்று நம்மால் பார்க்க முடியாது. யாராவது சிவகாசி பட்டாசு ஆலைகளில் இன்னமும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரது காலண்டர் 1990களிலேயே நின்றுவிட்டது என அர்த்தம். எப்படி இது சாத்தியமானது? அரசு, அரசு அதிகாரிகள், முதலாளிகள், பொதுமக்கள் என்கிற நான்கு பேரின் கூட்டு முயற்சியினால் தானே? சட்டத்தின் மீது இருந்த பயமும், விழிப்புணர்வும் தானே? அது போல் மற்ற விதிகளையும் அனைவரும் பொறுப்புடன் பின்பற்றினால் பட்டாசுத் தொழில் விபத்தில்லாத, அமைதியான, குதூகலத்தை மட்டுமே தரக்கூடிய ஒரு தொழிலாக மாறும் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் வெகுதொலைவிலும் இல்லை.

கடைசியாக ஒரு சிறிய வேண்டுகோள். “இந்த தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டேன், சுற்றுப்புறத்தைக் காப்பேன்” என்று திடீர் புரட்சியாளனாகி உறுதிமொழியெல்லாம் எடுப்பதற்கு முன் கொஞ்சம் இதை நினைத்துப் பாருங்கள். பட்டாசு விபத்தால் ஒரு நொடியில் போகும் அவர்களின் உயிர், நீங்கள் பட்டாசு வாங்கவில்லையென்றால் பசியில் கொஞ்சம் கொஞ்சமாக போகும், அவ்வளவு தான் வித்தியாசம். சுற்றுச்சூழல் மீது நிஜமாகவே அக்கறை உள்ள புரட்சிக்காரன் என்றால், இயற்கையைக் கொன்று உருவாக்கும் பேப்பரையும், வருடம் முழுவதும் இயற்கையைப் பாழ்படுத்தும் பெட்ரோல்/டீசல் வண்டிகளையும், ஏசி, ஃப்ரிட்ஜ் போன்ற ஓசோனை ஓட்டையாக்கும் சாதனங்களையும் பயன்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். வருடத்தில் ஒரே ஒரு நாள் சந்தோசத்தைக் கொடுக்கும் பட்டாசைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.


 உயிரைப் பணயம் வைத்துத் தான் தயாரித்த ஒரு பொருள் சுக்குநூறாக உடைந்து அழிவதைப் பார்த்து சந்தோசப்படும் ஒரே ஆள் ஃபயர் வொர்க்ஸ் ஃபேக்டரி தொழிலாளி தான். அவன் தயாரிக்கும் பொருள் மட்டும் வெடித்து சிதறட்டும், அவன் குடும்பமும் வாழ்வும் சந்தோசமாய் இருக்கட்டும்.. பட்டாசு கொழுத்துங்கள் மகிழ்ச்சியாய்க் கொண்டாடுங்கள். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. 




நன்றி: தினமலர்

”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ் & மீடியா...

Saturday, May 16, 2015

அது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான தெருக்களைக் காட்டுவார்களே? ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை மச்சான்னு ஒரு பாடல் வருமே? அதில் ஒடுக்கமான தெருக்கள் வருமே? என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஹ்ம் நான் சொல்லும் தெருக்களும் அப்படித்தான் இருக்கும்..
அந்தத் தெருவில் இரண்டு புறமும் காலையில் இருந்து மாலை வரைப் பெண்கள் கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.. கெட்டு என்றால், வெறும் அட்டையை அல்லது மரச்சில்லும் தாளுமாகவும் இருப்பதை மடித்து, பசையால் ஒட்டி, தீப்பெட்டி ஆக்கும் கலை தான் கெட்டு ஒட்டுவது.. கதை பேசிக்கொண்டும், ரேடியோ கேட்டுக்கொண்டும் கெட்டு ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். சில பெண்கள் அணுகுண்டு டியூப், புஸ்வானக் குப்பி, சாட்டை சுற்றுவது என்று இருப்பார்கள்.. இன்னும் சிலர் கட்டை அடுக்குவார்கள். தீக்குச்சிக்கு மருந்து வைக்க ஏதுவாக ஆயிரக்கணக்கான குச்சிகளை வரிசையாக ஒரு கட்டையில் அடுக்கி வைப்பது தான் கட்டை அடுக்கவது எனப்படும்.. இது அனைத்தும் அன்றன்று முடிக்கப்பெற்று, மறுநாள் மீண்டும் தங்கள் பொருளாதாரத் தேவைக்கு ஏற்றவாறு கெட்டொ, அணுகுண்டோ, கட்டையோ வாங்கி வந்து மீண்டும் தெருவின் இருபக்கமும் அமர்ந்து வேலையைப் பார்ப்பார்கள்..

மாலை நேரம் நெருங்க நெருங்க, பள்ளியில் இருந்து பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டுக்கு வர வர, அந்தப் பெண்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.. பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் பைக்கட்டை வீட்டிற்குள் தூக்கி வீசிவிட்டு, வாசலில் அம்மாவுடன் அமர்ந்து கெட்டு ஒட்ட ஆரம்பிப்பார்கள்.. இதில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. எல்லா பிள்ளைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையான பத்து குரோஸ் கெட்டோ, ஐந்து கட்டையோ அடுக்கி விட்டுத்தான் வீட்டுப்பாடம், சோறு, தூக்கம் என எதையும் நினைத்துப் பார்க்க முடியும்.. ஒரு நாள் முரண்டு பிடித்தால் கூட, தேர்வோ, உடல்நலமோ காரணம் என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.. அடியும் பட்டினியும் நிச்சயம்.. அதனால் அந்தத் தெருப் பிள்ளைகளுக்குக் கெட்டு ஒட்டுவதும் பள்ளி செல்வது போல, பிடிக்காவிட்டாலும் செய்து தொலைக்க வேண்டிய கட்டாயமாகிப்போனது..



இது அந்தத் தெரு என்று அல்ல, சிவகாசியில் இருக்கும் எல்லாத் தெருவிலும் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சகஜமாகக் காணக்கிடைத்த விசயம் தான்.. இப்போதும் கூட சில தெருக்கள் இப்படித்தான் இருக்கின்றன..

சரி அப்படியே டெல்லி அரசியலுக்கு வாருங்கள்.. சமீபத்தில் மத்திய அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர் ஒழிக்கும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.. அதாவது, குழந்தைகள் தாங்கள் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்தபின் தங்கள் பெற்றோர்கள் ஈடுபட்டிருக்கும் வேலைகளிலோ தொழில்களிலோ அவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்பது தான் அது.. ஆனால் அந்தத் தொழில் ஆபத்தானதாகவோ, ஆரோக்கியக் கேடானதாகவோ இருக்கக்கூடாது.. அது போகக் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஆட்களுக்கு தண்டனையை அதிகப்படுத்துவது, குடும்பத்தாருக்கும் தண்டனை என சில பல விசயங்களும் சேர்ந்திருக்கிறது.. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்தச் சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்களும் மீடியாக்களும் என்ன மாதிரி விளையாடுகிறார்கள் என்பதைத்தான்..

அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று பாருங்கள்.. இந்தச் சட்டம் குலக்கல்வியை மறைமுகமாக ஊக்குவிக்கிறதாம், இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் தான் பெருகுவார்களாம், இது பார்ப்பனீய சூழ்ச்சியாம்.. கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை இது கேலிக்கூத்து ஆக்கிவிடுமாம்..

”சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா? இது குலக்கல்வி இல்லையா? அவன் முன்னேற வேண்டாமா? அவன் பிள்ளை ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ வேண்டாமா?” என்றெல்லாம் நரம்புப் புடைக்கப் பேசுகிறார்கள்.. இதையெல்லாம் இவர்கள் பேசும் தொனி ஏதோ இவர்கள் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்கள் போல் ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது.. கொஞ்சம் லேசாக ஆராய்ந்து பார்த்தால், as usual, இந்த ப்ளூ கிராஸ் ஆட்கள், மனித உரிமை ஆட்கள், பெண்ணுரிமைப் போராளிகள் மாதிரி இவர்களும் உருப்படியான விசயங்களுக்குப் போராடாமல், விளம்பரத்திற்காக வெற்றுக்கூச்சல் இடுபவர்கள் தான் என்று நன்றாகத் தெரியும்..

ஏங்க, தன் பிள்ளையை தன் சம்பளத்திலேயே படிக்க வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும் எந்த அப்பனும் அம்மாவும் அந்தப் பையனைக் கஷ்டப்படுத்தவோ வேலைக்கோ அனுப்ப மாட்டார்கள்.. இந்தச் சட்டம் எந்த விதத்திலும் கல்வியை மறுக்கவும் இல்லை. பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் பெற்றோருக்குப் பிள்ளைகள் உதவியாய் இருக்கலாம் என்று தான் சொல்கிறது.. இதனால் அந்தக் குடும்பத்திற்கு இன்னொரு ஆளின் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வசதியும் கிட்டும்.. அது அந்தப் பையனின் பள்ளிக்கூட செலவிற்குக் கூட உபயோகமாகும்.. “இல்லை அப்படியெல்லாம் இல்லை.. பிள்ளைகள் மூலம் வருமானத்தைப் பார்க்கும் பெற்றோர் அந்தப் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களை மொத்தமாக வேலைக்கு அனுப்பி விடுவார்கள்” என்று குதிக்கும் ஆட்களுக்காகத்தான் நான் முதலில் எங்கள் ஊரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தேன்.. 

எங்கள் தெருவில் என் வயதை விட 5வயது மூத்தவர்களில் இருந்து அனைவருமே பட்டதாரிகள்.. அனைவரும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து அம்மா, அப்பாவிடம் அடி மிதி வாங்கிக் கட்டாயமாகக் கெட்டு ஒட்ட வைக்கப்பட்டவர்கள் தான்.. இன்று நாங்கள் படித்திருக்கிறோம், ஒரு நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாங்கள் அன்று ஒட்டிய கெட்டுக்களும், எங்கள் பெற்றோர் எங்களை அந்த வேலைகளைச் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தியதும் தான்.. ஒரு வேளை இந்த சமூக சீர்திருத்தவாதிகள் அன்று எங்கள் பெற்றோர்களை எல்லாம் கண்டித்து, எங்களைக் கெட்டு ஒட்ட வைக்காமல் தடுத்திருந்தால், நாங்கள் ஒம்பதாப்போ, பத்தாப்போ படித்துவிட்டு ஏதாவது ஃபயர் ஆபிசிலோ, அச்சாபிசிலோ இன்று மையுடனும், மருந்துடனும் உடலை வறுத்திக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருப்போம்.. அது தான் நிதர்சனம்.. ஏனென்றால் நாங்கள் ஒட்டிய ஒவ்வொரு கெட்டும் எங்கள் தட்டில் அரிசியாக, எங்கள் பள்ளிப் பையில் புத்தகமாக, எங்கள் சீருடையாக, எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியாக, எங்கள் சமூகத்தின் முன்னேற்றமாக மாறியது.. இந்த சீர்திருத்தவாதிகளுக்கு அதெல்லாம் தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது.. ஒவ்வொரு குடும்பத்தின் முதல் பட்டதாரியையும் கேட்டுப்பாருங்கள், அவனும் நிச்சயம் தன் தந்தைக்கோ தாய்க்கோ அவர்கள் வேலையில் உறுதுணையாக இருந்திருப்பான், அல்லது எங்காவது வேலை பார்த்துக்கொண்டே தான் படித்திருப்பான்..





ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள்? அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமாம்.. ஏன்யா பிள்ளைய எப்பாடுபட்டாவது படிக்க வைக்கணும்னு நெனைக்கிற பெத்தவனுக்கு தண்டை கொடுத்துட்டா மட்டும் அந்தப் பிள்ளை படிச்சிருமாய்யா? பள்ளி இல்லாத நேரத்தில் வேலைக்குப் போற அந்தப்புள்ள, அடுத்ததாக அப்பன் இல்லாத அந்தக் குடும்பத்தைக் காப்பாத்த முழு நேரமும் வேலைக்குப் போணும்யா.. புரிஞ்சி பேசுங்க.. என் சித்தப்பா ஒரு காய்கறிக்கடை வைத்திருந்தார்.. நான் லீவு நாட்களில் அங்கு வேலை செய்து அந்தக் காசில் தான் என் 9 மற்றும் 10ம் வகுப்பின் செலவுகளைக் கவனித்துக்கொண்டேன்.. இல்லாவிட்டால் நான் எல்லாம் எட்டாங்கிளாசோட படிப்புக்கு டாட்டா சொல்லிருக்க வேண்டிய ஆளு..

இந்த சீர்திருத்தவாதிகள் சொல்லும் அடுத்த விசயம், இந்தச் சட்டம் குலக்கல்விக்கு வக்காலத்து வாங்குகிறது என்று.. அதாவது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஒரு சிறுவன் தன் அப்பாவிற்கு தச்சு வேலையில் உதவியாக இருந்தால் அவனும் தச்சனாக, தன் ஆசாரி என்னும் ஜாதிக்கு ஏற்றத்தொழிலைத் தான் செய்வான் என்கிறார்கள் இவர்கள்.. இப்படிப் பேசுபவர்கள் எல்லாம் முக்கால்வாசிப்பேர் பெரியாரின் பாசறை ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.. இன்னும் இவர்கள் பெரியாரின் காலத்தைத் தாண்டி வளரவேயில்லை என்பது மட்டும் புரிகிறது.. இது 2015 என்று தெரியாமல் இன்னும் 1940களிலேயே இருக்கிறார்கள் பாவம்.. 

ஒரு ஆசாரியோ, குயவரோ, வண்ணாரோ, மருத்துவரோ தன் தொழிலை வைத்து ஜாதியால் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால் தான் இடஒதுக்கீடு என்னும் சலுகையை அனுபவிக்கிறார்.. அவர் பையன் அந்தக் குலத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போனாலும் கூட அவனுக்கும், பின் அவன் பிள்ளைகளுக்கும் கூட அதே இடஒதுக்கீடு கிடைக்கும் என்று தான் இடஒதுக்கீட்டுச் சட்டம் சொல்கிறது.. ”நீ உன்னை அடையாளப்படுத்தும் ஜாதியத் தொழிலை விட்டுவிட்டாய் அதனால் உனக்கு இடஒதுக்கீடு இல்லை, ஓடிப்போ” என்றா சொல்கிறது? ஒரு குயவன் அந்தத் தொழிலைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் குயவன் தான் நம் அரசாங்கத்தின் சட்டப்படி.. இப்படி இருக்கும் போது, ஒரு பையன் தன் தகப்பனின் தொழிலில் உறுதுணையாக இருந்து, அந்தத் தொழிலில் நல்ல எதிர்காலமும் லாபமும் இருந்தால் அதே தொழிலைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு ஆசாரியையோ, குயவனையோ, வண்ணானையோ நீங்கள் ஏன் இன்னமும் மட்டமாகப் பார்க்கிறீர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே? படித்து முடித்து ஏதோ ஒரு MNCயில் எவனுக்கோ அடிமையாகக் குப்பை கொட்டுவதை விட, சொந்தத் தொழிலில் நாலு பேருக்கு வேலை கொடுப்பதில் என்ன குறையைக் கண்டீர்கள்?

இப்படிக் கேட்டால் அடுத்து ஒரு குண்டைப் போடுவார்கள்.. “சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா?” என்று.. என் பதில் என்னவென்றால், சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை, வருங்காலத்தில் சாக்கடை அள்ளாமல் இருப்பதற்கு இன்று தன் தந்தைக்கு அந்தத் தொழிலில் உறுதுணையாக இருந்து தன் படிப்பிற்காக சம்பாதிப்பதில் தப்பே இல்லை.. அந்தப் பையனும் உங்களைப் போல சாக்கடை அள்ளுவது தப்பு என்று புரட்சியாளன் போல் நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால், படிக்கக் காசும் கிடைக்காது, படிக்கவும் முடியாது, கடைசியில் அவனும் தன் அப்பா போல் சாக்கடை அள்ள வரலாம், அல்லது ஏதாவது கூலி வேலைக்குத் தான் செல்லலாம்.. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.. எங்கள் தெருவில் சாக்கடை அள்ளும் ஒரு பெண் இருக்கிறார்.. லீவு நாட்களில் அவர் பையனும் அவருடன் வருவான் ஒத்தாசையாக.. வீடுகளிலும் சுத்தம் செய்வான் அந்தப் பையன்.. தெரு மக்களும் அவன் வேலைக்கு ஏற்றவாறு காசு கொடுப்பார்கள்.. அந்தப் பெண் தன் பையனை இவ்வளவு கஷ்டத்திலும் படிக்க வைப்பதை உணர்ந்து அடிக்கடி உதவினார்கள்.. சும்மா ஒன்றும் இல்லை, அந்தப் பையனும் வேலை செய்ததால் தான்.. சிவகாசியிலேயே ஒரு aided கல்லூரியில் டிகிரி வாங்கினான்.. அடுத்தது TANCET எழுதினான்.. அவன் பட்டியல் வகுப்பு என்பதால் கோட்டாவில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலேயே MCA சீட் கிடைத்தது.. இன்று ஒரு ஐடி கம்பெனியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.. இப்போது அவன் அம்மா சாக்கடை அள்ளுவதில்லை.. தெருவே அந்த அம்மாவையும் பையனையும் பெருமையாகத்தான் பேசுகிறார்கள்.. யாரும் “சாக்கடை அள்ளுறவா பிள்ள சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறான்.. அவளுக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களா?” என்று வயிறு எரியவில்லை..

இந்த சமூக சீர்திருத்தவாதிகளும் மீடியாவும் அந்த அம்மாவிடம் சென்று ”உன் பிள்ளையை ஏன் சாக்கடை அள்ள அனுப்புகிறாய்? அது பார்ப்பனீயம், குலக்கல்வி” என்றெல்லாம் சொல்லியிருந்தால் தன் வெற்றிலை வாயாலேயே துப்பியிருப்பார் அவர்கள் மேல்.. ஏனென்றால் நிதர்சனம் என்பது சீர்திருத்தவாதிகளின் எண்ணங்களுக்கு எதிர்மறையாய் இருக்கிறது.. அன்று அந்த அம்மா அவனையும் ஒத்தாசைக்கு அழைத்து வந்திருக்கவில்லை என்றால், தன் மகனைப் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க வைத்திருக்க முடியாது.. 

இப்போதும் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலையில் பேப்பர் போடுவதையும், மாலையில் வியாபார இடங்களுக்கு டீ விற்பதையும் காண்கிறோம்.. நாங்களும் சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது ஏதாவது அச்சு ஆபிசுக்கோ, உறவினர் வீட்டு பலசரக்குக் கடைக்கோ சென்று அந்த இரண்டு மாதமும் சம்பாதித்து, அந்தக் காசில் தான் எங்கள் அடுத்த வருடப் படிப்பிற்கான நோட்டுப்புத்தகத்தை வாங்கினோன்.. எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை.. நான் அப்போதிருந்தே சோம்பேறி.. ஒழுங்காக வேலைக்குச் செல்ல மாட்டேன்.. என் அப்பாவும் கடன் வாங்கியாவது படிக்க வைத்துவிட்டார்.. ஆனால் பல வீடுகளில் முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போதே பையனுக்கு எங்காவது இரண்டு மாதங்களுக்கு வேலை விசாரித்து வைத்திருப்பார்கள்.. அவன் அடுத்த ஆண்டு பள்ளிக்குப் போக வேண்டுமானால் அந்த இரண்டு மாதங்கள் வேலை செய்தே ஆக வேண்டும்.. வீட்டில் வாங்கும் கெட்டை விட இரு மடங்கு அதிகமாகக் கெட்டு வாங்குவார்கள்.. இது பெண்களுக்கு. அந்தப் பெண் ஒட்டும் கெட்டிற்கு வரும் காசு அவளுக்கே கொடுக்கப்பட்டு விடும்.. பையன் சம்பாதிக்கும் காசு பையனின் படிப்பிற்கு.. பெண் சம்பாதிக்கும் காசு அவளின் படிப்பிற்கு.. ஏதோ கொஞ்சம் வேண்டுமானால் அப்பாவும் அம்மாவும் கொடுப்பார்கள்.. இதனால் முழு ஆண்டுத்தேர்வு நடக்கும் போதே நாங்கள் இரண்டு மாதங்களுக்கான வேலையைத் தேட ஆரம்பித்திருப்போம்.. எவனாவது ஒருவனுக்கு வேலை கிடைத்துவிட்டால், அவன் அந்த அச்சு ஆபிசிலேயே தன் தோஸ்துகளுக்கும் வேலையை ரெடி செய்து விடுவான்..



டியர் சமூக சீர்திருத்தவாதிகளே, மீடியாக்களே, நீங்கள் இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் அந்த சிறுவர்களின் படிப்பு தான் பாதிக்கப்படுமே ஒழிய, நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஒன்றுமே நடக்காது.. “அரசாங்கம் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும்” என்பீர்கள்.. சோற்றுக்கே வழி இல்லாத குடும்பம் கல்வியை வைத்து நாக்கா வழிக்கப்போகிறது? கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம்.. ஆனால் சோற்றை? நோட்டுப் புத்தகத்தை? போக்குவரத்துச் செலவை? இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. ஏனென்றால் நீங்கள் எல்லாம் இது போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள்.. கஷ்டப்பட்டிருந்தால் நிச்சயமாக உங்களுக்கு படிக்கும் போதே செய்யும் வேலையின் அருமையும் அதனால் கிடைக்கும் பயனும் தெரிந்திருக்கும்.. 

இன்றும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் இருக்கிறார்கள்; நெல்லைப் பகுதியில் பீடி சுற்றும் வேலையில் குழந்தைகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்கிறீர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதே விருதுநகர் மாவட்டம் தான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக 10 மற்றும் ப்ளஸ்2 தேர்வுகளில் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றது.. தென்னகத்தில் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படும் நெல்லை மாவட்டம் டாப்3ல் எப்போதும் இருக்கும்..



என் தாழ்மையான வேண்டுகோள், உங்கள் புரட்சி, புண்ணாக்கு, டிஆர்பி ரேட்டிங்கை எல்லாம் தாண்டி நிதர்சனம் என்ன? உண்மை என்ன? அதன் பின்னணி என்ன? அதன் விளைவுகள் என்ன? என்றெல்லாம் அலசுங்கள்.. இந்தியா போன்ற ஒரு முன்னேறும் நாட்டில், கிட்டத்தட்ட 35% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் நாட்டில் பிள்ளைகளும் பள்ளி இல்லாத நேரங்களில் வேலை செய்தால் தான் படிக்க முடியும் என்கிற அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள்.. குலத்தொழில், பார்ப்பனீயம் என்றெல்லாம் புலம்புவதைக் கைவிடுங்கள்.. குலத்தொழில் என்னும் வழக்கமே குறைந்து கொண்டு வருகிறது.. இன்றைய தேதியில் சலூன்கடை வைத்திருப்பவர் எல்லாம் மருத்துவ ஜாதியும் அல்ல, இஸ்திரி கடை வைத்திருப்பவர் எல்லாம் வண்ணாரும் அல்ல.. அதனால் வெற்றுக்கூப்பாடுகளை விட்டொழியுங்கள்.. என்னைக் கேட்டால் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ளது என்பேன்.. தன் அப்பா அம்மாவுக்கு அவர்கள் வேலையில் உறுதுணையாக இருக்கலாம் என்று தான் சொல்கிறதே தவிர, தன் குலத்தொழிலைத் தேடிக்கண்டுபிடித்து அதைத்தான் செய்ய வேண்டும் என சொல்லவில்லை இந்தச் சட்டம்.. சமூகச் சீர்திருத்தவாதிகளும், நாட்டின் நான்காம் தூண்களான மீடியாவும் தான் சமூகத்தை அதிகம் கெடுக்க நினைக்கிறார்கள் என்பதற்கான மற்றொரு சான்றாக இந்த சட்டத்திற்காக அவர்கள் கொடுக்கும் கூக்குரலை வைத்தே தெரிந்து கொள்ளலாம்..

நாம் எப்பவும் போல முன்னேற என்ன வழியோ அதை நோக்கிச் செல்வோம்.. இந்த சமூக ஆர்வலர்/சீர்திருத்தவாதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஆட்கள் வழக்கம் போல வெற்றுக்கூச்சல்களைப் போட்டுக்கொண்டே இருக்கட்டும்.. 

அம்மன் கோவில்பட்டி அழகிகள் - டாட்டாவின் அம்மா

Saturday, February 22, 2014

”சாப்புட வந்த பய அப்டியே தூங்கிட்டியாம்மா.. இனிமே எதுக்கு எழுப்பிக்கிட்டு? காலேல எந்திரிச்சதும் நானே அனுப்பி வைக்கிறேன். இல்லேனா நீயும் இங்கயே படுத்துக்கோயேன்” வாசலில் நின்று கொண்டிருந்த லட்சுமியிடம் விசிறியால் தனக்கும் பேரனுக்கும் விசிறிக்கொண்டே சிதம்பரம் சொன்னார்..

“இல்ல இருக்கட்டும்ப்பா.. அவுகளும் இன்னும் வல்ல. எப்ப வாராகன்னும் தெரில. நான் வீட்ல இல்லேனா சோறு சாப்புடாமயே படுத்துருவாக”
“ஆமா அவரு சாப்டுட்டாலும் அப்டியே ரோசம் வந்துறப்போது பாரு” தன் கணவனைப்பற்றி பேசினாலே அப்பாவுக்கு கோபம் வந்துவிடும் என்பது லட்சுமிக்கு தெரியும். வெட்டியாக திரிந்து கொண்டிருக்கும் மாப்பிள்ளையை எந்த மாமனாருக்குத்தான் பிடிக்கும்?

அவர் கோபத்தை கண்டுகொள்ளாதவளாக, “நான் காலேல வந்து இவன பாத்துக்கிடுறேன்” என சொல்லிவிட்டு வேண்டா வெறுப்பாக வெறுமையாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள் லட்சுமி. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவள் போல, டக்கென்று திரும்பி, “செல்வம் சாப்டான்ல?” என்றாள்.



“சாப்புடாமயா தூங்க விடுவோம்? அதெல்லாம் டாட்டா நல்லா சாப்டுட்டு தான் தூங்குறாரு” லட்சுமியின் தங்கை சங்கரியின் மடியில் ஒரு கறுத்த முயல்குட்டி போல் சுருண்டு படுத்திருந்த செல்வத்தின் தலையை ஒரு லேசான புன்னகையுடன் வருடிக்கொடுத்துக்கொண்டே சிதம்பரம் சொன்னார். மீண்டும் பேரனுக்கு விசிற ஆரம்பித்துவிட்டார். சிதம்பரம் மட்டும் செல்வத்தை டாட்டா என்று தான் அழைப்பார். அவன் பிறந்த ராசிப்படி அவன் பெயர் ’ட’ வரிசையில் தான் ஆரம்பிக்க வேண்டும் என யாரோ ஜோசியர் சொன்னதால் அந்த தாத்தாவுக்கு அவன் ‘டாட்டா’வாகி விட்டான். மகளுக்கு லட்சுமி என்கிற பெயர் வைத்து தான் வீட்டில் செல்வம் கொழிக்கவில்லை, பேரனுக்கு டாட்டா என்று பெயர் வைத்தாலாவது ஏதாவது நடந்து விடாதா என்கிற நப்பாசை அவருக்கு. பாவம் அவரும் என்ன செய்வார்? பத்து வயதில் இருந்து இதோ இந்த அறுபது வயது வரை பயர் ஆபிசில் வெடி மருந்துக்கு மத்தியில் தன் வீட்டுக்கான சோற்றை தேடுபவர்.

தன் பையனை மடியில் கிடத்தியிருக்கும் சங்கரியை பார்க்கும் போது லட்சுமிக்கு பொறாமையாக இருந்தது. தன் தங்கை என்றாலும் சங்கரியை லட்சுமி கோபத்தோடு முறைத்துக்கொண்டிருந்தாள். இன்னைக்கும் பையன் தன்னுடன் தூங்க மாட்டான் என்கிற சோகம் அவள் தொண்டையை அடைத்தது. தனிமையின் பயத்தை எண்ணிக்கொண்டே லட்சுமி அடுத்த தெருவில் இருக்கும் தன் வீட்டை நோக்கி, தன் வயிற்றை தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டாள். ஆம், இப்போது அவள் வயித்துப்பிள்ளைக்காரி, மூனு மாசம் ஆகிறது. அந்த பிள்ளைக்கு கூட பிர்லா என்கிற பெயரை சிதம்பரம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார் என்பது இங்கு ஒரு கொசுறு. இன்றிரவும் புருஷன் வர மாட்டான் என லட்சுமிக்கு தெரியும். இருந்தாலும் தன் அம்மாவின் வீட்டில் தங்க அவளுக்கு விருப்பம் இல்லை. நன்கு விசாரித்து மகளை கட்டிக்கொடுத்தும், அவள் கஷ்டப்படுவதை ஒரு தகப்பன் கண்ணெதிரே பார்த்து வருந்துவதை அவளால் காண முடியாது. ஒரு வித குற்றவுணர்வு அவளை ஆட்கொள்ளும். அதனால் தனியாக தான் மட்டும் வருந்தினால் போதும் என தன் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறாள். அவளுக்கு தெரியாது சிதம்பரம் தினம் தினம் மனதுக்குள் வருந்திக்கொண்டு தான் இருக்கிறாரென்பது.

லட்சுமியின் புருசன் வைரமுத்து ஒன்றும் குடிகாரனோ, மோசமானவனோ இல்லை. கொஞ்சம் பொறுப்பற்றவன். கொஞ்சம் என்ன கொஞ்சம், நிறையவே பொறுப்பற்றவன் தான். சிவகாசியில் எந்த வேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் தங்களுக்கென்று எந்த வித தகுதியையும் வளர்த்துக்கொள்ளாத அந்த ஊரின் சாதாரண குடிமகனில் ஒருவன் தான் அவனும். இந்த வாரம் ஏதாவது அச்சாபீசில் வேலை பார்ப்பான்.. அடுத்த வாரம் தன் உறவினர் ஒருவரின் பலசரக்கு கடையில் பொட்டலம் மடித்துக்கொண்டிருப்பான். அதற்கும் அடுத்த வாரம் தான் முதலில் வேலை பார்த்த பயர்ஆபிசில் வெடிக்கு மருந்து அடைத்துக்கொண்டிருப்பான். ஒரு இடத்தில் அவனால் குண்டியை அமுக்கி வேலை செய்ய முடியாது. கல்யாணம் ஆன மூன்றாவது நாளில் இருந்து அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், ஆனால் சம்பளம் தான் வாங்கியபாடு இல்லை.

“வீட்ல ஆம்பளனா செலவுக்கு காசு குடுக்கணும். ஒழுங்கா வேலைக்கு போயி குடும்பத்த காப்பாத்தணும்.. ஒன்னத்துக்கும் லாய்க்கி இல்லாம எனக்குன்னு வந்து வாச்சிருக்கே” என்று லட்சுமியிடம் வைரமுத்து பாட்டு வாங்காத நாளே இல்லை. கோபத்தில், அழுகையில், ஆற்றாமையில் என லட்சுமி அவனிடம் பல நூறு முறைகள் இந்த வார்த்தைகளை சொல்லியிருப்பாள். அவனுக்கு தான் பொறுப்பு வந்த பாடில்லை. கல்யாணம் ஆன நாளில் இருந்து சண்டை தான். லட்சுமி ஒன்றும் பங்குனிப்பொங்கலுக்கு புதுத்துணி வாங்கும் அளவிற்கெல்லாம் அவனை சம்பாதிக்க சொல்லவில்லை. வேளாவேளைக்கு சாப்பிடும் அளவிற்காவது சம்பாதிக்க சொன்னாள். அதற்கு கூட அவன் லாயக்கு இல்லை என்றால் அவளும் என்ன தான் செய்வாள்? வீட்டிற்கு வந்தாலே சண்டை என்பதால் அவன் பல நாட்கள் வீட்டிற்கு வர மாட்டான். அவனுக்கும் சேர்த்து சமைத்து வைப்பாள். ரெண்டு ரூவாய்க்கு பக்கோடா பொட்டலமும் வாங்கி வைப்பாள். இரவில் அவன் வந்து தின்றால் உண்டு, இல்லையென்றால் காலையில் அதுவே லட்சுமிக்கு பழைய சோறாகிவிடும்.

இப்போதெல்லாம் லட்சுமி அவனை அதிகம் எதிர்பார்ப்பதில்லை. புருஷன் உருப்படியாக இல்லாத வீட்டில் பொண்டாட்டி தானே குடும்பத்தலைவன்? லட்சுமி ’மேப்ட்டி’ கெட்டு ஒட்ட ஆரம்பித்திருந்தாள். முக்காலியின் ஒரு மூலையில் பசையை கொட்டி, இன்னொரு மூலையில் நீல நிறத்தில் இருக்கும் தாள்களை சரித்து வைத்திருப்பாள். தன் வலது கை சுட்டு விரலால் அந்த பசையை தாளில் தேய்த்து, அதை அப்படியே எடுத்து தன் இடது கையில் வைத்திருக்கும் மரச்சில்லில் ஒட்டி மடித்துபோடுவாள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தீப்பெட்டியின் டப்பா உருவாகிவிடும் அவள் கையின் சில நொடி வேலையில். விளக்கு பொருத்தவோ, வீட்டைக்கொழுத்தவோ, சிகரெட் ஊதவோ, இருட்டை போக்கவோ எதற்கு அவைகள் ஒவ்வொன்றும் பயன்படுத்தப்படும் என அவளுக்கு தெரியாது. ஆனால் இப்போது மூன்று வேளையும் அவள் உண்ணும் உணவு மேப்ட்டியால் தான் என்பது மட்டும் நன்கு தெரியும். அதனால் தான் அதிகாலை முதல் மறுநாள் அதிகாலை வரை தன்னருகில் ஒரு பாக்கெட் ரேடியோவை நண்பனாக கூட்டு சேர்த்துக்கொண்டு வெறிபிடித்த ஒரு ஓட்டக்காரனைப்போல் வேகவேகமாக கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பாள். சிவகாசிப்பெண்கள் தீப்பெட்டிக்கும், தண்ணீர்க்குடங்களுக்கும் தானே காலம் காலமாக வாழ்க்கைப்பட்டிருக்கிறார்கள்? லட்சுமி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

புருஷனோடு சண்டையிட்டதால் ஒரு சில முறை அவள் துத்தம் தின்று தற்கொலைக்கும் முயன்றிருக்கிறாள். ஆனால் செல்வம் பிறந்த பின் தான் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு, நம்பிக்கை வந்தது. அவளுக்கு ஒரே ஒரு ஆசை உண்டு. தன்னைப்போலோ, தன் தகப்பனைப்போலோ, உருப்படாத தன் புருஷனைப்போலோ செல்வம் ஒரு சாதாரண சிவகாசிக்காரனாக வளர்ந்துவிடக்கூடாது என்பது தான் அது. அவன் படிக்க வேண்டும், அதுவும் மெட்ரிகுலேசனில் படிக்க வேண்டும்; படித்துவிட்டு இந்த ஊருக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, உயிருக்கு உத்திரவாதமான ஒரு வேலையில் சேர்ந்து கைநிறைய சம்பாதித்து அவளையும் வைரமுத்துவையும் கடைசி காலத்தில் காப்பாற்ற வேண்டும். ச்சேய் வைரமுத்துவை ஏன் காப்பாற்ற வேண்டும்? ஒரு அப்பனாக அவன் என்ன செய்தான்? தன்னை மட்டும் தன் மகன் கவனித்துக்கொண்டால் போதும். நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோசமாக இருக்கும் அவளுக்கு. கெட்டு ஒட்டிக்கொண்டே லேசாக சிரித்துக்கொள்வாள் வருங்காலத்தில் தன் மகன் தனக்கு பங்குனிப்பொங்கலுக்கு பட்டுச்சேலை எடுத்துத்தருவதாகவும், தன்னை கெட்டு ஒட்ட விடாமல் சந்தோசமாக பார்த்துக்கொள்வதாகவும், தண்ணீருக்கு அடுத்த தெரு வரை குடத்தை தூக்கி அலைய விடாமல் வீட்டிலேயே தண்ணீர் மோட்டார் வாங்கி தருவதாகவும், திருப்பதி கோயிலுக்கு கூட்டிப்போவதாகவும். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் படிப்புக்கு காசு? மேப்ட்டி ஒட்டுற காசுல ஞாயித்துக்கிழமை கறி கூட எடுக்கமுடியலையே? என்ன பண்ணுறது?

”எப்பா எம்மகன நான் படிக்க வக்க போறேன்”

“நல்ல விசயம் தானம்மா? நல்லா படிக்க வையி..எந்த ஸ்கூல்லா பாரம் வாங்கிட்டு வாரது? மங்களா ஸ்கூல்லயா? முனிசிபல் ஸ்கூல்லயா?”

“இல்லப்பா நான் அவன பாய்ஸ் ஸ்கூல்ல சேக்கப்போறேன்” கர்வமாய் சொன்னாள் லட்சுமி. அது அந்த ஊரின் மிகப்பெரிய பள்ளிகளில் ஒன்று.

“ஒனக்கு கூறுகீறு இருக்கா இல்லையா? அங்க அவன படிக்க வைக்க ஒனக்கு ஏது காசு?”

“அதாம்ப்பா ஒங்கள தேடி வந்திருக்கேன்”.. வெறுமையாக சிரித்தார் அவர். அதில் அவரது இயலாமை இயன்ற வரை தெரிந்தது. “நான் என்னம்மா பண்ண முடியும்? நீயே பாக்குறீல? சங்கரிய எத்தன பேரு கேட்டு வாராங்க? நம்மளால அதுக்கே ஒரு பதில் சொல்ல முடியுதா? இதுல டாட்டாவோட படிப்பு செலவையும் நான் எப்படிம்மா பாப்பேன்?”

“எம்பையன நான் படிக்க வைக்கிறேன்ப்பா.. யூனிபாரம், பள்ளிட செலவு எல்லாத்தையும் நானே பாத்துக்கிடுறேன். என்ன, தெனமும் இன்னும் கொஞ்ச நேரம் கண்ணுமுழிச்சு கெட்டு ஒட்டணும், அவ்ளோ தான? நீங்க எம்பையனுக்கு மூனு வேள சோறு மட்டும் போட்ருவீங்களாப்பா?” சொல்லும் போதே லட்சுமியின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. எந்த கஷ்டத்திலும் யாரிடமும் உதவி என்று வந்து கேட்காதவள் அவள். இன்று சோற்றுக்காக, தகப்பனாகவே இருந்தாலும் இப்படி வந்து அவர் முன் கூனிக்குறுகி நிற்கிறோமே என்கிற எண்ணமே அவளை அழச்செய்து விட்டது.. அரிசி வாங்கும் காசில் ரெண்டு பென்சிலும் நோட்டும் வாங்கி விடலாமே?  

“அய்யோ என்னம்மா இப்டி கேட்டுட்ட?” மகள் அழுவதை பார்த்து சிதம்பரம் திகைத்துவிட்டார். எந்த கஷ்டத்திலும் அழாதவள் அவள். நெஞ்சழுத்தக்காரி.

“எம்பையன் தெனமும் ஒரு கைப்பிடி சோறு திம்பானா? அத மட்டும் நீங்க பாத்துக்கோங்கப்பா. பசின்னு மட்டும் அவன் கேட்டுறவே கூடாது. எந்த கஷ்டமும் அவனுக்கு தெரிய கூடாது. அவன நான் படிக்கவைக்கிறேன். தயவு செஞ்சு நீங்க ……………………………………” அவளால் சொல்லி முடிக்க முடியவில்லை. தன் தகப்பனை நோக்கி இருகைகளை குவித்து கும்பிட்டுக்கொண்டே மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள்.



ஒன்றாம் வகுப்பு பாய்ஸ் ஸ்கூலில் சேர்ந்துவிட்டான் செல்வம். மஞ்சள் சட்டையும், பச்சை டவுசரும், பச்சை டையும் கட்டிக்கொண்டு அவன் பள்ளிக்கு கிளம்பும் அழகை அந்த தெருவே பார்த்தது. பின்ன? அந்த தெருவுல மொத மொத மஞ்ச ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு போற ஆளு நம்ம செல்வம் தானே? எல்லாரும் வெள்ள சட்ட போட்ட முனிசிபாலிட்டி ஸ்கூல் பயலுக.

ஆச்சி வீட்டில் சங்கரி அவனுக்கு சோற்றில் பால் ஊற்றி பெரியதாக ரெண்டு பக்கோடா துண்டுகளை வைத்தாள்.. சோற்றை மென்றுகொண்டே 
“சித்தி ஸ்கூல்ல மிஸ்ஸு அடிப்பாங்களா?”

“அவுங்க மக்கு பயலுகள தான் அடிப்பாங்க.. நீ தான் நல்ல புள்ளேல?
ஒன்ன எதுக்கு அடிக்கப்போறாங்க?.”

“இல்ல, எங்கம்மா காலேல நான் கெளம்பும் போது, ஒழுங்கா படிக்கலேனா மிஸ்ஸு அடிப்பாங்கன்னு சொன்னாங்க.. நான் ஒழுங்க படிப்பேன்ல சித்தி?”

“ஒங்க ஸ்கூல்லயே நீ தான்டா சூப்பரா படிப்ப” அவன் தலையை கோதிக்கொண்டே சங்கரி சொன்னாள்..

“ம்ம்ம் சித்தி…. அம்மா அழகா சேக்கு சீவிருக்காங்க..ஒழைக்காதீங்க” செல்லமாக அவள் கையை தட்டி விட்டு சினுங்கினான்.

அவன் சாப்பிட்டு வருவதற்குள் லட்சுமி ரெண்டு கெட்டு ஒட்டிவிட்டாள். வீட்டை பூட்டி அவனுக்காக தெருமுக்கில் பையோடு காத்திருந்தாள். அவன் வந்ததும் ஒரு கையில் அவனையும் இன்னொரு கையில் பள்ளிப்பையையும் இழுத்துக்கொண்டு பள்ளியை நோக்கி நடப்பாள். பள்ளிக்கு செல்லும் வழியிலேயே ஏபிசிடி, ஒன் டூ ஹண்ட்ரெட், எல்லாம் அவன் சொல்லிக்கொண்டே போக வேண்டும். லட்சுமியும் சும்மா கிடையாது. மங்களா ஸ்கூலில் எட்டாம் வகுப்பு வரை படித்தவள். தப்பாக ஏதாவது அவன் சொல்லிவிட்டால் ‘நறுக்’கென்று தலையில் ஒரு கொட்டு விழும். அவளைப்பொறுத்தவரை அந்த கொட்டெல்லாம் பையன் நன்றாக படித்து ஒரு நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக.. ஆனால் செல்வத்தை பொறுத்தவரை அது எல்லாமே ’அம்மா நம்மமேல வச்சிருக்கிற கோவம்’. பள்ளி செல்ல ஆரம்பிக்கும் முன்வரை அவனுக்கு பிடித்திருந்த அம்மா, அவன் பள்ளி செல்ல ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்காமல் போக ஆரம்பித்தாள்..

மிஸ்ஸுக்கு பயப்படுவதை விட அவன் லட்சுமிக்கு தான் ரொம்ப பயந்தான். பள்ளியில் அவனை விட்டுவிட்டு டாட்டா சொல்லும் போது லட்சுமிக்கு கண்கள் கலங்கிவிடும். ‘நல்லா படிக்கணும் கனி. மிஸ்ஸு சொல்றத கவனிக்கணும்யா. அம்மா மத்தியானம் சோறு கொண்டுவாரேன், என்ன?” அவன் முகத்தை வருடிக்கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவாள்.

வீட்டிற்கு வந்த பின் ரேடியோவை அருகில் வைத்துக்கொண்டு நாளை உலகமே அழிந்துவிடுவது போல் கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பாள் மதியம் வரை. செல்வத்தை பள்ளியில் சேர்த்ததில் இருந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் லட்சுமி சமைத்தாள். வெறும் சோறு, பால், ஊறுகாய் போதும் அவளுக்கு, பக்கோடாவெல்லாம் அவள் மறந்து நாட்களாகிவிட்டன. செல்வம் வீட்டில் சாப்பிடாததால் அவளுக்கு சமையல் வேலையும் மிச்சம், சமையல் செலவும் மிச்சம். ’எல்லாமே அவன் படிப்புக்கு தான?’ என மனதிற்குள் நினைத்துக்கொள்வாள். பசியை பொறுக்கவே முடியாது என்கிற நிலை வரும் போது மட்டும் சாப்பிட்டுக்கொள்வாள். அருகில் எப்போதும் ஒரு சொம்பில் தண்ணீர் மட்டும் இருந்து கொண்டே இருக்கும்.

மதியம் சங்கரி கொடுக்கும் சாப்பாட்டுக்கூடையை எடுத்துக்கொண்டு விறுவிறுவென சாப்பாட்டு மணி அடிப்பதற்கு முன் பள்ளிக்கு சென்று விட வேண்டும், செல்வம் பசி பொறுக்க மாட்டான். சாப்பாட்டு நேரத்தில் அன்று நடத்திய பாடங்களை எல்லாம் ஒவ்வொன்றாக அவனிடம் கேட்பாள். அவன் ராமர் வில் ஒடித்த கதையையும், சிங்கம் எருமையை வேட்டை ஆடிய கதையையும் கைகளால் விவரித்துக்கொண்டே சொல்வதை கேட்கும் போது அவளுக்கு வாய் பூரா பல்லாகிவிடும், ஏதோ தன் மகன் சிவகாசியில் அச்சாபீஸ் தொறந்து நாலு பேருக்கு சம்பளம் கொடுப்பது போல. மதியம் டீச்சர் வரும் வரை காத்திருந்து ஜன்னல் வழியாக டாட்டா காட்டிவிட்டுத்தான் கிளம்புவாள். வீட்டிற்கு திரும்பியவுடன் சோறு, தண்ணீர் மறந்து கெட்டு, கெட்டு கெட்டு தான். குறுக்கெல்லாம் கடுக்கும். லேசாக படுக்கலாம் என்று படுத்தாலும் முதுகு வின் வின்னென்று தெறிக்கும். உட்காரவும் முடியாது, படுக்கவும் முடியாது. ஆனால் என்ன செய்வது? கெட்டு ஒட்டினால் தான் அவனின் அடுத்த டேர்ம் பீஸை கட்ட முடியும்.

மதியம் கெட்டு ஒட்டிய பின் மீண்டும் மாலை அழைக்க வந்துவிடுவாள். வீட்டிற்கு செல்லும் வழியில் காலை போல் அவன் வாய்ப்பாடு, அது இதுவென்று என்று மிஸ் நடத்திய பாடத்தை ஒப்பித்துக்கொண்டே வர வேண்டும். தவறாக சொன்னாலோ தெரியாமல் முழித்தாலோ வழக்கம் போல கொட்டு விழும். வலியில் ரோட்டிலேயே அவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிடுவான். அவள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் அடுத்தடுத்த கேள்விகளை அடுக்கிக்கொண்டே போவாள். அம்மா என்றாளே அடிப்பவள் தான் என நினைத்துக்கொண்டான்.

வீட்டிற்கு சென்றதும் அவனை மீண்டும் படிக்க சொல்லுவாள். கெட்டு ஒட்டிக்கொண்டே அவனிடம் கேள்வி கேட்டு ஒப்பிக்க வைத்துக்கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் மட்டும் ரேடியோ ஓடாது. அவன் சரியான பதில் சொல்லிவிட்டால், “குட் பாய்” என கட்டிப்பிடித்துக்கொள்வாள். தவறான பதில் அவன் கூறினாலும் கெட்டு ஒட்டும் மும்முரத்தில் “இன்னொருக்க படிச்சிட்டு வா” என நோட்டை கொடுத்துவிடுவாள். அடுத்து அவன் சரியாக ஒப்பித்துவிடுவான். மீண்டும் “என் செல்லம் குட் பாய்” என அவனை கொஞ்சுவாள்.

“இப்ப என்ன பாத்து சிரிக்குறீங்க.. அப்பத மட்டும் எதுக்கு தலையிலயே கொட்டுனீங்க? எனக்கு இன்னும் மண்டேல வலிக்குது தெரியுமா?” தலையை தடவிக்கொண்டே சொன்னான்.

“ஆமா படிக்கலேனா பெறகு செல்லம் கொஞ்சுவாங்களா தம்பிய? ஒழுங்கா படிச்சாத்தான நாளைக்கு நல்ல வேலைக்கு போலாம்?”

“நல்ல வேலைக்கு போயி?”

“அம்மாவ கெட்டு ஒட்டாம பாத்துக்கலாம்”

“அப்பறம்?” தலையை சாய்த்துக்கொண்டு அழகாக கேட்பான்.

“பெரிய வீடு கட்டலாம்”

“பெரிய வீடா?” கையை அகலமாக விரித்து கண்களை பெரிதாக்குவான், “அப்பறம்?”

“அப்பறம் ஒரு காரு வாங்கலாம்”

“எம்மா டைவருலாம் வேண்டாம். நாந்தான் ஓட்டுவேன். டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” கார் ஓட்டுவது போல் சைகை செய்துகொண்டிருப்பான்.

வெளியே சங்கரியின் சத்தம் கேட்டது, “செல்வம்…………………” அவன் நிமிர்ந்து அம்மாவை பார்ப்பான். “போ, சித்தி கூப்டுறால? போயி ஆச்சிவீட்ல சாப்ட்டு வா”

இப்படியே கொஞ்ச நாள் சென்றது. செல்வம் என்றால் ஆச்சி வீட்டில் தாத்தாவுக்கும் சித்திக்கும் மிகவும் செல்லம் என்றாகி விட்டது. ஆச்சி வீட்டில் யாரும் அவனை டேபில்ஸ், போயம் எல்லாம் ஒப்பிக்க சொல்லி கேட்பதில்லை, தலையில் நறுக் கொட்டு கிடையாது. அவனுக்கு ஆச்சி வீடு மிகவும் பிடித்துப்போய்விட்டது. சித்தியிடம் மிகவும் ஒட்டிக்கொண்டான்.

ஒரு சனிக்கிழமை இரவு, “சித்தி நாளைக்கு எனக்கு லீவு தான? நான் இங்கயே படுத்துக்கிறேனே? ப்ளீஸ் சித்தி” அவள் நாடியை பிடித்து கொஞ்சிக்கொண்டே கேட்டான். சாப்பிட போனவன் இன்னும் வராததை நினைத்து பயந்து லட்சுமி வந்தாள். “சாப்ட்டு இன்னைக்கு இங்கயே தூங்கிட்டான், ரொம்ப அலுப்பு போல” என சிதம்பரம் சொன்னார். அன்று லட்சுமிக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. ஆனால் அதன் பின் அடிக்கடி, என்ன அடிக்கடி, தினமுமே அவன் அங்கு தூங்க ஆரம்பித்துவிட்டான். சங்கரியுடன் தான் மிகவும் ஒட்டுகிறான். எதுவென்றாலும் சித்தி சித்தி என்று உயிரை விடுகிறான். ”வீட்ல போயி தூங்குப்பா”னு சொன்னாலும் கேட்காமல் அழ அரம்பித்துவிடுவான். ’வீட்டுக்கு போ மாட்டேன் சித்தி’ என அடம்பிடிப்பான் சங்கரியை இறுக்க கட்டிக்கொண்டு. லட்சுமிக்கும் சங்கரி மேல் லேசான பொறாமை வந்துவிட்டது. இப்போதெல்லாம் அவனின் யூனிபாரம் கூட ஆச்சிவிட்டில் தான் உள்ளது.

இந்த நேரத்தில் தான் லட்சுமி மீண்டும் உண்டாகியிருந்தாள். ஒரு ஞாயிறன்று மதியம் சாப்பிடப்போனவனைத்தேடி அம்மா வீட்டிற்கு வந்தவள் தெருவில் அவன் மற்றவர்களோடு விளையாடுவதைக்கண்டாள்.

“டேய் செல்வம் ஒங்கம்மா வாராங்கடா” டவுசர் கூட போடாத அவன் நண்பன் ஒருத்தன் சொன்னான்.

செல்வம் மெல்ல திரும்பி பார்த்துவிட்டு, “டேய் அது எங்க பழைய அம்மாடா. எங்க புது அம்மா யாருன்னு தெரியுமா? ஆச்சி வீட்டுக்குள்ள பாத்திரம் மினுக்கிட்டு இருக்காங்க பாரு அவங்க தான்” என சங்கரியை சொன்னான். லட்சுமிக்கு அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிய சில நொடிகள் தேவைப்பட்டன. புரிந்தவுடன், டக்கென்று இதயம் நின்றுவிடுவது போல் இருந்தது. அவள் தலையில் பலமான ஏதோ இறங்குவது போல் உணர்ந்தாள்.

”என்னடா சொன்ன?”

“எம்மா நல்லாருக்குல? நீங்க இனிமேல் பழைய அம்மா.. சித்தி தான் புது அம்மா” சுட்டுவிரலை மடக்கிக்காட்டி சிரித்தான். உதட்டைக்கடித்துக்கொண்டு அழுகையை அடக்கியவாறே அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் லட்சுமி. அடி வாங்கிய அதிர்ச்சியில் பெரிதாக வாயைத்திறந்த அவனால் அழமுடியவில்லை. மூச்சு முட்டிக்கொண்டது. சில நொடிகள் கழித்து தான் குரல் வெளியே வந்தது. தெருவே அதிரும் அளவிற்கு அழுதான். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் சங்கரி. “ஏன்க்கா பிள்ளைய அடிச்ச?” செல்வத்தை தூக்கிக்கொண்டு அவன் முதுகில் தடவிக்கொண்டே கேட்டாள்.

“ஒன்னுமில்ல என் பிள்ளைய என்ட்ட குடுக்குறீயா இல்லையா? நான் பாத்துக்கிறேன்” வெடுக்கென்று சங்கரியின் கையில் இருந்த செல்வத்தை பிடுங்கிக்கொண்டு, ’அக்கா அக்கா’வென சங்கரி கத்துவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். லட்சுமியின் தோளில் கிடந்த செல்வம் சித்தி சித்தி என சங்கரியை நோக்கி பாய்ந்து கத்தினான். சங்கரிக்கு லட்சுமியின் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.

இரவு அவன் சாப்பிட வரவில்லை. வேலை முடிந்து வந்த சிதம்பரம் நடந்தவைகளை எல்லாம் கேள்விப்பட்டு, லட்சுமியிடம் வந்து, தூங்கிக்கொண்டிருந்த செல்வத்தை காட்டி, “பையன சாப்ட அனுப்பலையா?”

“இல்ல” கெட்டு ஒட்டிக்கொண்டே அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் சொன்னாள்.

“எதுக்கு?”

“நான் பெத்த பிள்ள எவளையோ அம்மான்னு சொல்லும். என்ன பழைய அம்மான்னு சொல்லும். இதெல்லாத்தையும் பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா?” பொங்கி வரும் அழுகையை கைகளால் துடைத்துக்கொண்டே அவள் குனிந்தபடி கெட்டு ஒட்டிக்கொண்டிருந்தாள்.

“ஏ கூறுகெட்டவளே சின்னப்பய ஏதோ தெரியாம சொல்லிட்டியான் அதுக்கு ஏன் அழுகுற?”

“எனக்குன்னு வேற யாருப்பா இருக்கா? அவனுக்காக தான நான் இவ்ளோ கஷ்டப்படுறேன்? வயித்துல ஒன்ன வச்சுக்கிட்டு அதுக்கு ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட போயி காட்டாம நான் எதுக்கு இருக்கேன்? அவனுக்காகத்தான? அவன் அப்படி சொன்னா மனசு கேக்குமா? நீங்களே சொல்லுங்க” சிதம்பரத்தை நிமிர்ந்து பார்த்து இன்னும் அதிகமாக அழுதாள்.

“அவன் யார சொல்லிட்டான்? சங்கரியத்தான? இதுல என்ன இருக்கு?”

“என்னப்பா இப்டி சொல்றீங்க?”

“சொல்றேன்னு கோவப்படாத லட்சுமி.. நானே கேக்கணும்னு தான் நெனச்சேன். நீயும் இப்ப உண்டாயிட்ட. நாளைக்கே ஒனக்கு இன்னொரு பிள்ள வந்ததும் நீ ரெண்டு பேரையும் எப்படி கவனிப்ப?”

லட்சுமிக்கு லேசாக குழம்பியது, “அதுக்கு?”

“இல்ல சங்கரிக்கும் இப்போதைக்கு கல்யாணம் ஆகப்போற மாதிரி தெரில. அதனால செல்வம் எங்க கூடயே இருந்திரட்டுமே?”

தன் அப்பா இப்படி கேட்பார் என லட்சுமி கனவிலும் எதிர்பார்க்கவில்லை. “எப்டிப்பா இப்டி கேக்குறீங்க? நான் வாழுறதே செல்வதுக்காண்டி தாம்ப்பா!”

“ஆமா அதான் இப்ப வயித்துல ஒன்ன சொமந்துட்டு நிக்குறியா?” குத்தலாக கேட்டார் சிதம்பரம். “யோசிச்சு பாரு, இன்னொரு பிள்ளயும் வந்துட்டா ஒன்னால இவனயும் படிக்க வச்சு, அவனுக்கும் செலவழிக்க முடியுமா? செல்வம் எங்க கூடயே இருந்திரட்டும். கொஞ்ச நாள் ஒரு மாதிரி தான் இருக்கும். எங்க போயிற போறோம்? பக்கத்து தெரு தான? வேணும்னா வந்து பாத்துக்கோ”

வீட்டில் பேச்சு சத்தம் வருவதை கேட்டு விழித்துக்கொண்ட செல்வம் தாத்தாவை பார்த்ததும் அவரிடம் ஒட்டிக்கொண்டான். “தாத்தா நான் ஒங்க கூடயே வந்துறேன் தாத்தா” அடம்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டான்.

“இங்காரு லட்சுமி பய சாப்டாம வேற இருக்கியான். இப்ப நான் சாப்ட கூட்டு போறேன். நாளைக்கு சாவகாசமா பேசிக்கலாம்” லட்சுமியின் பதிலுக்கு எதிர்பாராமால் செல்வத்தை தூக்கொண்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்துவிட்டார் சிதம்பரம். ‘அய்யா செல்வம் வேண்டாம்யா அம்மாட்ட வந்துருய்யா’ என அவள் சொல்வதை சிதம்பரமும் செல்வமும் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் நடையை கட்டினர். 

மறுநாள் காலை லட்சுமி வரவில்லை. சரி மதியமாவது வருவாள் என எதிர்பார்த்தார் சிதம்பரம். அப்போதும் வரவில்லை. நேற்று தாத்தாவோடு வந்தவனுக்கு அம்மாவை இவ்வளவு நேரமாக காணாததால், அம்மா ஞாபகம் வந்துவிட்டது. “தாத்தா நான் அம்மாட்ட போறேன், அம்மாவ எங்க?” என்று நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். லேசாக சினுங்கியவனை சமாதானம் செய்து கொஞ்ச நேரத்தில் உறங்க வைத்து விட்டார். லட்சுமி இன்னமும் வராததால் சந்தேகமடைந்தவர் ஒரு எட்டு போய் அவள் வீட்டை பார்த்தார். வீடும் பூட்டிக்கிடந்ததால் சிதம்பரத்திற்கு பயமாகிவிட்டது, லட்சுமி எதுவும் ஏட்டிக்குப்பூட்டி செய்துவிட்டாளோ என. பதறியடித்து சங்கரியிடம் வந்து விசயத்தை சொன்னார். இருவரும் என்னவோ ஏதோ என பதறியடித்து லட்சுமியை தேட கிளம்புகையில் அவள் சோர்ந்து போய் மிக மெதுவாக சிதம்பரத்தின் வீட்டு வாசலில் ஏறினாள். “எங்கக்கா போய் தொலஞ்ச? நானும் அப்பாவும் எப்படி பதறிட்டோம் தெரியுமா?”

மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்ததும் சிதம்பரத்திற்கு எல்லாம் புரிந்துவிட்டது. “அய்யோ ஏம்மா இப்டி பண்ணுன? அய்யோ” தலையில் அடித்துக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டார். லட்சுமி புடவையால் வாயை மூடிக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவளால் முடியவில்லை. இருவரும் அழுவதைப்பார்த்த சங்கரிக்கு என்ன ஏதென்று புரியவில்லை. “எப்பா ஏன்ப்பா அழுகுறீங்க? எப்பா சொல்லுங்கப்பா” என்று சங்கரி சிதம்பரத்தின் தோளை பிடித்து உலுக்கினாள்.

“ஒங்கக்கா வயித்துல இருந்தத கழுவிட்டு வந்துட்டாம்மா. ஒரு பிஞ்சு உசுர கொன்னுட்டாடீ ஒங்கக்கா. அய்யோ பாவி இப்படி பண்ணிட்டியேடீ” சிதம்பரம் பெருங்குரலெடுத்து அழுதார். சங்கரிக்கு யாருக்கு ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். மதியம் சாப்பிட்டு உறங்கிக்கொண்டிருந்த செல்வம் அழுகை சத்தம் கேட்டு எழுந்தான். எல்லோரும் ஏன் அழுகிறார்கள் என அவனுக்கு புரியவில்லை. அவன் முழித்துவிட்டதை பார்த்த லட்சுமி மெதுவாக அவன் அருகில் சென்றாள். ரொம்ப நேரம் கழித்து அம்மாவை பார்த்ததும் அவனுக்கு அவள் அடித்தது, கொட்டியது எதுவும் ஞாபகம் வரவில்லை. “அம்மா’ என கத்திக்கொண்டே அவளை இடுப்போடு சேர்த்துக்காட்டிக்கொண்டான். லேசாக அவளுக்கு வலித்தாலும் மகன் ஆனந்தமாக கட்டிக்கொண்ட சந்தோசம் அந்த வலியை மறக்கடித்துவிட்டது.



அவன் கையை பிடித்துக்கொண்டு “வாப்பா போலாம் நம்ம வீட்டுக்கு, நாளைக்கு ஸ்கூலுக்கு ஹோம் வொர்க் எழுதாம போனா மிஸ்ஸு அடிப்பாங்கல்ல? வா” அழுகையை அடக்கிக்கொண்டு அவனை அழைத்தாள் லட்சுமி. லட்சுமி அழுவதை பார்க்கும் போது அவனுக்கும் அழுகை வந்துவிட்டது. சித்தி, தாத்தா யாரும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை. அம்மா வயிற்றில் இருந்த தம்பியை காணவில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது. கம்மென அவள் பின் நடக்க ஆரம்பித்துவிட்டான்.

வாசலை விட்டு வெளியே இறங்கியவள் மெதுவாக சிதம்பரம் பக்கம் திரும்பி, “யூனிஃபாரம், நோட்டெல்லாம் வாங்க தெரிஞ்ச என்னால எம்பிள்ளைக்கு இனிமேல் மூனு வேள சோறாக்க முடியாதா? என்ன, தெனமும் இன்னொரு பத்து கெட்டு சேத்து ஒட்டுனா போதும். அவ்வளவு தான? ரெண்டு மன்னேரம் கம்மியா தூங்கணும், அவ்வளவு தான? எம் பிள்ளைய நான் நல்லா படிக்க வப்பேன். அவன் ஒருத்தன நல்லா வளத்தாலே போதும் எனக்கு. அவனும் எம்பிள்ளையா மட்டும் இருந்தா போதும். நான் எவ்வளவோ கஷ்டப்படுறது வேற யாரையோ அவன் அம்மான்னு கூப்டுறதுக்கா? பெரிய படிப்பெல்லாம் படிச்சி எனக்கு என்ன பிரயோஜனம்? அம்மான்னு ஒரு வார்த்த என்ன அவன் சொல்லலேனா எனக்கு எதுக்கு இந்த சீவன்? ஒரு வேள அவன் படிக்காம, இந்த ஊருக்காரனாவே ஆயி பயர் ஆபிஸ், அச்சாபீஸ்னு போனாலும், எம்பிள்ளையா இருந்தா அதுவே எனக்கு போதும்ப்பா” கண்களில் கண்ணீர் வந்தாலும் அவள் முகத்தில் ஒரு சின்ன சந்தோசம் தெரிந்தது. செல்வத்தின் கையை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டாள் தன் தெருவை நோக்கி. சிதம்பரம் அவளை தடுக்கவில்லை. செல்வம் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு அவளோடு நடந்து கொண்டிருந்தான்.

போகும் வழியில், “தம்பி இனிமேல் அம்மா ஒன்ன அடிக்கவே மாட்டேன். ஆனா நீயி நல்லா படிக்கணும், சேரியா?”

“தப்பா சொன்னா தான அடிப்பிங்க? நான் தான் இனிமேல் கரெக்ட்டா சொல்லிருவேனே!?”

“சரிடா செல்லம்” அவன் தலையை வருடிச்சொன்னாள்..

“ம்மா தம்பிய எங்கம்மா?”

“அது நீ நல்லா படிச்சாத்தான் தருவேன்னு சொல்லிட்டு சாமி திரும்ப எடுத்துக்கிட்டருப்பா”

“எம்மா நா நல்லா படிச்சி, நாம வீடு, காரெல்லாம் வாங்கிட்டு சாமிட்ட இருந்து தம்பியவும் திருப்பி வாங்கிருவோம், சேரியா?….” நிமிர்ந்து அம்மாவை பார்த்துக்கேட்டான்.

அவனை தன் உடலோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கண்ணீரின் ஆனந்தத்தை சுவைத்துக்கொண்டே நம்பிக்கையோடு நடந்துபோனாள் கெட்டுக்கும் வறுமைக்கும் வாக்கப்பட்டு பிள்ளைகளின் மேல் அனைத்து கனவையும் சுமந்து திரியும் ஒரு சாதாரண சிவகாசித்தாய்…

- சிவகாசிக்காரன்..


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One