பீட்சா - தைரியம் ஒடஞ்சு போச்சு பீஸ் பீஸா..

Sunday, October 21, 2012




உருவம், துருவ நட்சத்திரம், மைடியர் லிசா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சிறு வயதில் நாம் பார்த்த பேய்ப்படங்கள் நம்மை எப்படி பயமுறுத்தின என்று கொஞ்சம் கொசுவர்த்தி சுருளை கண் முன் சுற்றி ப்ளாஸ்பேக் விட்டுப்பாருங்கள். வெள்ளை உடையுடன் ஒரு உருவம், தலை முடி விரிந்து பறக்கும், ஊஊஊ என்னும் ஓநாயின் ஊளை, காற்று, கடைசியில் பேயை காமிக்கும் போது முகமெல்லாம் ஈரமான பவுடரை அப்பியிருப்பார்கள். கொஞ்சம் அறிவாளி இயக்குனர் அதில் சில கோடுகளை போட்டிருப்பார். இப்போது பார்த்தால் காமெடிப்படமாக இருக்கும் இவைகள் தான் சில வருடங்களுக்கு முன்பு வரை பேய்ப்படம். 



ஆனால் சமீபமாக வரும் “யாவரும் நலம்”, “ஈரம்” போன்ற படங்களை அறிவார்த்தமான பேய்ப்படங்கள் என்று சொல்லலாம். கொடூர மேக் அப் இல்லாமல், ஊஊஊ ஊஊ சவுண்ட் இல்லாமல், முக்கியமாக வெள்ளை புடவையில் பேயை காட்டாமல், காட்சிகள் மூலமும், இசையின் மூலமுமே  நம்மை பீதியடைய வைப்பது தான் இப்போதைய படங்களின் யுக்தி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் “பீட்சா”..



பீட்சா கடையில் டெலிவெரி பாயாக இருக்கும் விஜய சேதுபதியும், பேய்க்கதைகளில் ஆர்வம் இருக்கும் பேய் நாவல் எழுத நினைக்கும் ரம்யா நம்பீசனும் லிவிங் டுகெதர் ஜோடிகள். ஒரு இரவில் பீட்சா டெலிவரிக்கு போகும் போது பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறார் ஹீரோ. அங்கிருக்கும் பெண், அவளின் கணவன், குழந்தை என்று ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொருவர் கொல்லப்படும் போதும் ஹீரோ கொண்டு வரும் பீட்சாவில் ஒவ்வொரு பீஸ் காணாமல் போகிறது. பயந்து போன ஹீரோவுக்கு பிறகு தான் தெரிகிறது அந்த மூன்று பேரும் ஏற்கனவே இறந்து போனவர்கள் என்று. அங்கிருந்து எப்படியோ தப்பிவிடுகிறார். ஆனால் அந்த மூன்று பேர் யார், அங்கிருந்த குழந்தைக்கும் பீட்சா ஓனரின் பேய் பிடித்திருக்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம், ரம்யா நம்பீசன் யார் என்று ஒவ்வொரு முடிச்சாக அவிழும் இடம் தான் உச்சம். க்ளமைக்ஸ் ட்விஸ்ட் செம..




விஜய் சேதுபதியின் நடிப்பு உண்மையான பயத்தையும், நாமும் அவரருகில் இருப்பது போன்றதொரு பதைபதைப்பையும் கொண்டுவருகிறது. ‘தென்மேற்கு பருவக்காற்று’ பார்த்ததில்லை என்றாலும், ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருப்பார். கரெண்ட் இல்லாத பெரிய பங்களாவில் வெறும் டார்ச் லைட்டை மட்டும் வைத்துக்கொண்டு அவர் படும் பாடு அருமை. ரம்யா நம்பீசன் - தமிழகம் கொஞ்ச வருடங்களாக மறந்திருக்கும் பப்ளி ஹீரோயின் ட்ரெண்ட் மீண்டும் இவர் மூலம் வந்தால் தேவலை. எல்லாமே வத்தலும் தொத்தலுமாக இருக்கின்றார்கள். நடிக்க பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருக்கிறார்.





முதல் அரை மணி நேரம் ரொம்ப ரொம்ப நார்மலாக போகும் கதை, சேதுபதி தன் ஓனரின் மகளை பார்க்கும் காட்சியில் இருந்து சில்லிட வைக்கும் அழுத்தமான காட்சிகள் மூலம் பறக்க ஆரம்பிக்கிறது. இன்டர்வலுக்கு முந்தைய அரை மணி நேரமும், அடுத்த அரை மணி நேரமும் நம் மயிரெல்லாம் நட்டுக்கொள்ளும் அளவுக்கு டெரர் காட்சிகள் இருக்கின்றன. அந்த குழந்தை “அங்க இருக்கு” என்று கையை காட்டும் திசையில் சேதுபதி திரும்பிவிட்டு மீண்டும் அந்த குழந்தை பக்கம் திரும்பும் காட்சி, முதுகுத்தண்டை ஐஸ் ஊசியால் குத்துவது போல் இருந்தது. கொஞ்சமான பாத்திரங்கள் தான் என்றாலும் அனைத்துமே கதைக்கு தேவையான, தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கும் பாத்திரங்கள்.




வசனங்களும் வத வதவென்று இல்லாமல் சிம்பிளாக, சமயத்தில் நக்கலாக, சில நேரங்களில் மிரட்டலாக (கடைசியில் அந்த பாட்டி “நித்யா வந்து பீட்சா எடுத்துட்டு போ” என்று சொல்லும் வசனம்) இருக்கின்றன. “நான் எப்பையாவது கேர்லெஸ்ஸா இருந்திருக்கேனா?” என்று ஹீரோயினிடம் கோவப்படும் ஹீரோவை மெதுவாக பார்த்து “நான் ப்ரெக்னண்ட்டாக இருக்கேன்” என்று ஹீரோயின் சொல்லும் காட்சியும், “கல்யாணத்துக்கு ரொம்ப செலவாகும்” என்று ஹீரோ சொல்ல, நண்பன் “கல்யாணாத்துக்கு காரணமான கம்பெனி மேல கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்ரலாமா?” என்று கேட்பதும் சரியான நக்கல்கள்.



சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை சில நேரங்களில் கொஞ்சம் தலைவலி கொடுப்பது போல் இருந்தாலும், அந்த பங்களா காட்சியில் ஃபோன் மணி அடிக்கும் போதும், குழந்தையின் அறைக்கு ஹீரோ செல்லும் போதும் ஏற்கனவே மனதிற்குள் இருக்கும் திக் திக்கை இன்னும் கூட்டிவிடுகிறது. சில சமயங்களில் காட்சியோடு சேர்த்து பார்ப்பவர்களையும் அலற செய்து விடுகிறது. பேய் படங்களில் கேமராமேனின் பங்கு மிக மிக முக்கியம். ‘யாவரும் நலம்’ல் பி.சி.ஸ்ரீராமின் காட்சிகள் படத்தின் பெரும் பலம். இதிலும் கேமரா காட்சிகள் நம்மை அந்த பங்களாவின் அறைகளுக்குள் இன்ச் பை இன்ச்சாக திகிலுடன் உடன் அழைத்து செல்கிறது. அந்த பங்களாவின் மேப்பை மனப்பாடமாக நாம் சொல்லும் அளவிற்கு பிரித்து மேய்கிறது கோபியின் கேமரா.




க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க ஒரு வேளை ‘குடைக்குள் மழை’ போல் இருக்குமோ என்று நினைக்க தோன்றினாலும் இயக்குனர் ஜெயித்திருப்பது அந்த ட்விஸ்ட்டில் தான். சரி அந்த ட்விஸ்டோடு விட்டாரா என்றால் அதற்கு அடுத்தும் கடைசி காட்சியில் டிவியில் ”தில்லு முள்ளு தில்லு முள்ளு” பாடலை காட்டி அடுத்த உச்சகட்ட ட்விஸ்ட்டையும் வைத்து படத்தை முடிக்கிறார்.




ஒரு முழுமையான திகில் படம் பார்த்த உணர்வு கிடைக்கும் உங்களுக்கு “பீட்சா” மூலம். படம் பார்த்துவிட்டு ரூமுக்கு போக கொஞ்சம் பயமாக இருந்ததால் ஊரை சுற்றி விட்டு நண்பர்களிடம் ஃபோனில் மொக்கை போட்டுவிட்டு கொஞ்சம் பயம் மறைந்தவுடன் தான் அறைக்கு திரும்பினேன். கதவை திறந்தேன். கட்டிலில் யாரோ தின்றது போக மீதி பாதி இருந்தது ஒரு பீட்சா.. கதவு மூடிக்கொண்டு என் வீட்டு டிவியில் தில்லு முள்ளு பாடல் ஓட ஆரம்பிக்கிறது..

மழை நேர புலம்பல்கள்..

Friday, October 19, 2012



     இந்த மழை தான் எவ்வளவு விசால மனதுடையது? சரியாக பெய்யவில்லை என்று நாம் வைதாலும், கோவித்துக்கொண்டு மறுமுறை வராமல் இருப்பதில்லை.. அதிகம் பெய்கிறதே என்று ஏசினாலும் பெய்வதை நிறுத்துவதில்லை. வில்லனால் துரத்தப்படும் கதாநாயகியை கடைசியில் கதாநாயகன் காப்பாற்றுவது போல், பஞ்சத்தால் நாம் துரத்தப்பட்டால், நம்மை காப்பாற்றும் கதாநாயகன் மழை தான். தேவை இல்லாத நேரத்தில் தொந்தரவு செய்தாலும் காதலியை வெறுக்க முடியுமா? தாமதமாக வரும் காதலனை தான் மறுக்க முடியுமா? அதே போல் தான், தேவை இல்லாத நேரத்தில் வந்தாலும், தாமதமாக வந்தாலும் நாம் மழையை வெறுப்பதுமில்லை, மறுப்பதில்லை..
 
  
  

     இன்று நாம் ஒவ்வொரு பெயரில் அழைக்கும் ஏரி, குளம், கண்மாய், ஆறு, ஓடை, கால்வாய், வாய்க்கால், கடல், அருவி எல்லாவற்றுக்கும் ஒரே தாய் மழை தான். தன்னை பற்றி எத்தனை பாடல்கள் எழுதினாலும், எத்தனை கதைகளை சொன்னாலும் இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுத புதுப்புது வார்த்தைகளை கொடுக்கும் சக்தி மழைக்கு உண்டு. மழை மட்டும் தான் ஆச்சரியமா? வானத்தில் நிகழும் இடி மின்னலின் ஒலியும் ஒளியும் எத்தனை சிலிர்ப்பூட்டும் விசயங்கள்? ஒரு மின்னலில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு ஆண்டு தொடர்ந்து கரெண்ட் தரளாம் என்று சொன்னாலும், சிறு வயதில் “சாமி வீட்ல டியூப் லைட் சரியா எரியல, அதான்” என்று மின்னலுக்கு என் மொழியில் அப்பா கொடுத்த விளக்கம் தான் பிரமாண்டமாய் இருக்கிறது இன்றும் எனக்கு.

         


           ஆனால் இந்த மழை சில விசயங்களில் மிகவும் மோசமானது.. அடர்ந்த குளிர் காற்றில் யாரோ புகைக்கும் சிகரெட் மனம் நம் நாசியை தொடும் போது, தன் சாரலை நம் மீது தெளித்து, சிகரெட்டின் மேல் கூட காதல் கொள்ள செய்கிறது. வாழ்வில் நாம் மறந்து விட்ட மிக மிகிழ்ச்சியான சம்பவங்களும், மறக்க நினைக்கும் மிக துக்கமான நினைவுகளும் மழையின் வடிவில் மீண்டும் மனதை தட்டும். கஷ்டப்பட்டு மறக்க நினைக்கும் பல விசயங்களை முதலில் இருந்து தெளிவாக ஞாபகப்படுத்திவிட்டு, இரவு நேர தவளைகளுடன் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறது இந்த நல்ல மழை. நாமும் அன்று அழுததை இன்று நினைத்து சிரிப்போம், அன்று சிரித்ததை இன்று நினைத்து அழுவோம்.





        நாயகியை பார்க்காமல் அவளின் நினைவுகளுடனே வாழ்க்கையை நகர்த்தும் சினிமா காதலன் போல், ‘மழை கூட வேண்டாம். எங்கோ பெய்த மழையின் மண் வாசம் மட்டும் போதும், அந்த மனத்தோடே நாட்களை கடத்திவிட’ எண்ணும் நான் மழையின் நிஜக்காதலன். மழை பலருக்கு தண்ணீரை கொடுக்கும், சிலருக்கு விவசாயம் கொடுக்கும், ஆனால் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியை கொடுக்கும். நாள் முழுதும் சூடாக எரிந்து விழும் கணவனை, ஒரே ராத்திரியில் வசியம் செய்திடும் மனைவியை போல, வருடம் முழுதும் சூரியனால் வெந்துகொண்டிருக்கும் பூமியை தன் தூரல் விழுதுகளால் சட்டென குளிர்வித்துவிடுகிறது சாரல் மழை..





        பள்ளி காலங்களில் வரும் மழை தான் எவ்வளவு சுகமானவை? விருப்பப்பட்டு கடைசியாக மழையில் நனைந்தது எப்போது என்கிற கேள்விக்கு எல்லோரும் சொல்லும் ஒரே பதில், “பள்ளி காலம்” தான். வகுப்புக்குள் மழையின் போது வரும் ஒரு இருட்டும், அழுத்தமான அமைதியும், சளிப்பிடித்தவனின் குரல் போல மெது மெதுவாக ஆரம்பித்து வரும் மழையின் சத்தமும் நமக்கு பிடித்த ஆசிரியரின் வகுப்பில் தான் பெரும்பாலும் நடக்கும். அல்லது மழை வரும் போது பாடம் நடத்தும் ஆசிரியர் நமக்கு பிடித்துப்போய்விடுகிறாரோ? ’மழையால் இன்று பள்ளி விடுமுறை’  - பள்ளி அறிவிப்பு பலகை கூட நமக்கு சிநேகம் ஆகிவிடும் பரிட்சை அன்று வரும் காலை வேளை மழையால். தேச தலைவரின் பிறந்த நாள் போல், ஒரு பண்டிகை போல் விடுமுறை விட்டு மழையை கொண்டாடுவது பள்ளிகள் மட்டும் தான். மழையை பார்த்தாலே துள்ளி ஓடி நனையும் பால்யம், மழையை பார்த்தாலே அலறி ஓடி ஒளியும் “பொறுப்பான வாழ்க்கையை” ஏளனம் செய்கிறது.





        மழை வானத்தில் இருந்து மலையில் விழுந்து அருவியாகி, பள்ளத்தில் இறங்கி நதியாகி, சம்வெளியில் ஓடி ஓடையாகி, கடலில் கலந்த காலம் எல்லாம் புவியியல் புத்தகத்தில் மட்டும் தான். இன்று வானத்தில் இருந்து பெய்யும் மழை நேராக நம் தெரு சாக்கடையில் தான் கலக்கிறது. மனிதன் சென்று வரவே இடம் பத்தாத இந்த பூமியில் மழைக்கு இடம் கொடுப்பார் யாரோ? மழையில் குழந்தைகளை நனையவிடும் பெற்றோர்கள் கூட அரிதாகிவிட்டார்கள். குழந்தைகளும் கதவுக்கு பின் நின்றோ, கார் கண்ணாடிக்கு மறுபுறம் நின்றோ மழையை ஒரு கூண்டுக்குள் இருக்கும் மிருகம் போல பார்க்க பழகிக்கொண்டார்கள். ஊருக்கே பொதுவாக எல்லோருக்குமே சமமாக பெய்தாலும் மழை ஒரு அநாதை தான், சீண்டுவார் யாரும் இல்லாமல் அழுதுகொண்டே சாக்கடையில் ஓடுகிறது.

சித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்..

Sunday, October 14, 2012

சமீபத்தில் வேலை மாற்றலாகி புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை என்றதும் நண்பர்கள் அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி சொன்னார்கள். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல், செட்டிநாட்டு கட்டிடங்கள் என்று புதுக்கோட்டையை சுற்றி இவ்வளவு இடங்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன். இதுமட்டுமல்லாமல் அமைதியான கடற்கரை, நண்டும் ஆமையும் ஓடும் வயல்வெளிகள் என்று சிவகாசி மாதிரி காய்ந்து கருகிப்போன இடத்தில் இருந்து அங்கு சென்ற எனக்கு பல விசயங்களும் குளு குளுவென மனதுக்கு இனிமை தருவதாக இருந்தன.

நான் ரசித்த செட்டிநாட்டு கட்டிடங்களையும், கடற்கரையையும், சித்தன்னவாசல் படங்களையும் ஃபேஸ்புக்கில் போட்ட போது, என் பெருமதிப்பிற்குரிய  ஐயா திரு.ரத்தினவேல் அவர்கள், எனது ப்ளாக்கில் சித்தன்னவாசல் அனுபவங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட பெரும்பாலான விசயங்களை நான் செய்ய முயற்சி செய்வேன் (அவரிடம் வாங்கிய புத்தகங்களை திரும்ப கொடுப்பதை தவிர). அந்த வரிசையில் இந்த சித்தன்னவாசல் அனுபவ & பயணக் கட்டுரை.




 புதுக்கோட்டையில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. சாலை ஆரம்பத்தில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே செல்லும் வரை வழிநெடுக பள்ளி கல்லூரி காதல் ஜோடிகள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதில் பூங்காவில் நான் படம் எடுக்க, “என் ஆள ஃபோட்டோ எடுக்குறான், மாப்ள” என்று எவனாவது அடியாளை கூப்பிட்டால் என்ன ஆவது? பிழைக்க போன எடத்துல வம்பு வேண்டான்டா ராம்கொமாரு என்று கிளம்பிவிட்டேன் ஓவியப்பாறைக்கு. இங்கு வரும் பலரும் காதல் ஜோடிகளாகவே இருப்பதால் பார்க்கோடு தங்கள் சில்மிஷங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.

அங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.

இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? 





  முனிவர் நின்று பூ பறிப்பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.




இந்த ஓவியத்தை நான் இன்னும் தெளிவாக எடுப்பதற்குள் அந்த ஊழியர் என்னை தடுத்துவிட்டார். படங்கள் எடுக்க கூடாதாம். இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.



இது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள்? மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள்? இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்?

ஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும்? இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள்? இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம்? நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா? ஒன்னுமே இல்ல?’ என்று சலித்துக்கொண்டு தங்கள் மகனையும் வம்பாக இழுத்து சென்றனர். இன்னும் பலர் தங்கள் காதலை காதலன்/காதலியிடம் சொல்ல துப்பில்லாமல் இங்கு சுவர்களின் காதலை கொட்டுகின்றனர். ஒரு வரலாற்று விந்தையின் மீது அக்கறை இல்லாத இதுகள் எல்லாம் காதலில் என்ன அக்கறையுடன் இருந்துவிட போகின்றன? வெயில் பட்டால் கூட வண்ணமும் ஓவியமும் உரிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வெயில் கூட படாமல் அரசாங்கம் இதை பராமரிப்பது மிகவும் நல்ல வரவேற்கத்தக்க செயல்.

இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.




இது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள். 


ஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.




இந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ‘ம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியம். 

அடுத்ததாக இங்கேயே இருக்கும் சமணர் படுகைக்கு சென்றேன். மணி மதியம் 3. மாலை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அங்கும்5ரூ.க்கு டோக்கன் எடுத்தேன். டோக்கன் எடுக்கும் போதே ஊழியர் சொன்னார், “நீங்க தான் சார் மத்தியானத்துல மொத  ஆளு”.. கேட்டதுமே பீதியாகிவிட்டது எனக்கு. அந்த மலை மீது நான் மட்டும் தனியாக ஏற வேண்டும் என்னும் நினைப்பே வியர்க்க வைத்துவிட்டது. துணைக்கு யாரும் கிடையாது.  ஒரு முறை அந்த குன்றை மீண்டும் பார்த்தேன். கடவுளின் மீதும் அம்மா அப்பாவின் புண்ணியங்கள் மீதும் சுமையை ஏற்றி விட்டு மலையேற ஆரம்பித்தேன்.



மெதுவாக அடி மேல் அடி வைத்தேன். இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும்? இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.




மேலே படத்தில் இருக்கும் இந்த இடத்தில் நிற்கும் போது எனக்கு பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயில். கையில் தண்ணீரும் இல்லை.  கீழே இறங்கலாம் என்றால் மேலே ஏறியதை விட இறங்குவது இன்னும் டெரராக இருந்தது. உதவிக்கு கூப்பிடக்கூட ஆள் இல்லை. செல் ஃபோனில் டவரும் படுத்துவிட்டது. இந்த வள்ளலின் குரங்குகள் வேறு.. கிளைகளின் அங்கும் இங்கும் தாவிக்கொண்டும் நம் வழியில் குறுக்கே வந்து கொண்டும் மயான அமைதியில் பயமேற்றும் சல சலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சியை கிட்டத்தட்ட தவழ்ந்தே அடைந்துவிட்டேன்.



ஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா?’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.

பிறந்ததில் இருந்து நான் இவ்வளவு தைரியமாகவும் பயத்துடனும் ஒரே நேரத்தில் இருந்ததில்லை. கூட்டமாக நண்பர்களோடு சென்றால் இந்த பயமெல்லாம் இருக்காது. தனிமையும் மதிய வெயிலும் குரங்கு சேட்டைகளும் பீதியை கிளப்பத்தான் செய்யும்.


இப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும். கொஞ்சம் லம்பினாலும் கீழே விழுந்துவிடுவோம். கடவுள் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு மெல்ல மெல்ல அருகில் சென்றேன். சமணர் படுகைக்கு அருகில் சென்றுவிட்டேன்.




திடீரென்று பட படவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு வௌவால்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இவ்வளவு தூரம் தைரியமாக வந்த என்னை இந்த வௌவால்கள் மொத்தமாக சாய்த்துவிட்டன. ஆள விட்டா போதும் என்று வேக வேகமாக திரும்பிவிட்டேன். தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை? ஆனால் பயம் என்பது ஒரு முறை லேசாக வந்துவிட்டால், மனதை மூடுபனி போல் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். கீழே இறங்கியதும் நினைத்துக்கொண்டேன், அடுத்த முறை நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்து கண்டிப்பாக சமணர் படுகையையும் பார்க்க வேண்டுமென்று.


எதிலும் மெத்தனமாக இருக்கும்  நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். அரசை எவ்வளவோ விசயங்களில் குறை  சொல்லும் மக்கள், தொல்லியல் துறையில் அரசின் இந்த அக்கறையில் ஓரளவாவது தாங்கள் செய்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். காதல் கதைகளை கிறுக்குவதற்கும், காதலிகளோடு அசிங்கம் செய்வதற்கும், கலைச்செல்வங்களை பாழ்படுத்துவதற்கும் இந்த இடங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். 

இன்னொரு முக்கியமான விசயம், நீங்கள் இங்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையில் தண்ணீரும் துணைக்கு உங்கள் மனதொத்த ஆட்களும் இருக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் ஓவியத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். சமணர் படுகை வயதானவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் தான். வரலாற்றின் ஆச்சரியங்களை அறியும் ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தீனி போடும் இடம் தான் இந்த சித்தன்னவாசல். நான் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன். என்னோடு யாரெல்லாம் வரப்போகிறீர்கள்? அதே போல் அடுத்த முறை குடுமியான்மலை பற்றி எழுதவிருக்கிறேன். அடுத்த வாரம் குடுமியான்மலை விசிட்.. வெகு விரைவில் படங்களுடன் பதிவு..

மின்வெட்டு - The Beginning..

Tuesday, October 2, 2012

நண்பர் இளவரசன் (Don Ashok) அருமையாக எழுதியிருந்த ”மின்வெட்டு இனிமையாய் இருந்த காலம்!” என்னும் பதிவைப் படிக்கும் என் சின்ன வயது மின்வெட்டு ஞாபகங்களும் வந்துவிட்டன.. அவர் அனுமதியுடன் அந்த பதிவிற்கு பார்ட்2 அல்லது என் பாணியில் ஒரு ரீ-ரைட் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..





அப்போதெல்லாம் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது மட்டும் தான் கரெண்ட் போகும். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் தான் தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டும், வெயிலும் வாட்டி எடுக்கும். முழுப்பரிட்சை விடுமுறையில் நாங்கள் (தெரு நண்பர்கள்) சின்ன சின்ன அச்சாபிஸ், கட்டிங் ஆபிஸ், தாள் பிரிக்க என்று எதாவது வேலைக்கு செல்வோம். அந்தக்காசில் தான் அடுத்த வருடத்திற்கு ஆகும் புத்தகச்செலவு சுமையில் பாதியை குறைக்க முடியும் அப்பாவுக்கு. சில ‘ஓனர்’கள் ‘மே’ கடைசியில் சம்பளத்திற்கு பதிலாக நோட்டு புத்தகங்களே வாங்கி கொடுத்து விடுவார்கள். சரி, சிவகாசி கதையை இன்னொரு பதிவில் பார்க்கலாம், இப்போது அந்த மின்வெட்டு அனுபவங்களை பேசலாம்.

மின்வெட்டு பெரும்பாலும் மதிய நேரங்களில் தான் இருக்கும்.. 1-3, அல்லது 2-4 மணிக்கு தான் கரெண்ட் போகும். அப்போது தான் எங்களுக்கு மதிய உணவு இடைவேளை விடுவார் கட்டர்/ப்ரிண்டர் (இவர்கள் அச்சாபிஸில் மேனேஜர் கேடர் என்று வைத்துக்கொள்ளுங்கள்). சாப்பிட தெருவிற்குள் நுழைவோம். 6அடி அகலம் தான் எங்கள் தெரு. இரு பக்கத்திலும் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து கெட்டு (தீப்பெட்டி, மத்தாப்பு பெட்டி) ஒட்டிக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் நடந்த விசயம் எல்லா வீட்டிற்கும் தெரியும் நேரம் அது தான். கரெண்ட் இருக்கும் போது பெரும்பாலும் டிவி இருக்கும் வீட்டிற்குள் எல்லா பெண்களும் அமர்ந்து கெட்டு ஒட்டிக்கொண்டு அமைதியாக நாடகத்தை பார்த்து விளம்பர இடைவேளையில் நாடக விமர்சனத்தை செய்வார்கள்.

மதிய நேரங்களில் பிள்ளைகள் வேலையில் இருந்து வருவதை பார்த்ததும் தங்கள் கதைகளை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டு பிள்ளைகளுக்கு சோறு போட வீட்டிற்குள் வருவார்கள். ஆண்கள் காலையிலேயே சோறு எடுத்துக்கொண்டு ஃபேக்டரிக்கோ அச்சாபிஸுக்கோ போய் விடுவார்கள். என் ஆச்சிக்கு மதியம் கரெண்ட் போனாலே மிகவும் கோவம் வந்துவிடும். அப்போது நம் மந்திரா பேடி குடும்பப்பாங்காக நடித்த ஹிந்தி டப்பிங் “சாந்தி” என்னும் சீரியல் மிகப்பிரபலம். மதியம் ரெண்டு மணிக்கு போடுவார்கள். சரியாக டைட்டில் கார்டு போடும் போது கரெண்ட் போய் விடும். ‘இனி இரண்டு மாதங்கள் அந்த நாடகம் பார்க்க முடியாதே’ என்கிற கடுப்பில் இருப்பார். 

சாப்பிட்டு விட்டு கரெண்ட் வந்தவுடன் வேலைக்கு போனால் போதும் என்பதால் நாங்கள் எல்லோரும் ஒன்றாக பேசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் நேத்து நைட்டு அப்பா அம்மா போட்ட சண்டை, பரிட்சை ரிசல்ட் என்பது பற்றியே எங்கள் பேச்சு இருக்கும். பரிட்சை ரிசல்ட் பற்றி பேசும் போது எல்லாருக்குமே கண்ணில் ஒரு பீதி இருக்கும். “பெயில் ஆயிட்டேன்னா இந்த கம்பெனிலேயே வேலைக்கு சேந்துரலாம்னு இருக்கேன்”னு என்று வருங்காலத்திற்கும் சேர்த்து யோசித்துக்கொண்டிருப்போம். 



4மணிக்கு வர வேண்டிய கரெண்ட் சில சமயங்களில் 3.30க்கே வந்துவிட்டால் “யுக்” என்னும் சுதந்திர போராட்ட  நாடகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு வேலைக்கு திரும்பிவிடுவோம். நாங்கள் வேலைக்கு புறப்பட்டவுடன் பெண்கள் மீண்டும் கெட்டு ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சாய்ந்திரம் 6 அல்லது 7 மணிக்கு வேலை முடிந்துவிடும். சில நேரங்களில் அவசர வேலை இருந்தால், நைட்டு வேலை பார்க்க விருப்பப்படுபவர்களை இருக்க சொல்வார்கள். அதற்கு தனியாக் O.T கிடைக்கும். நாங்க யாரும் இருக்க மாட்டோம்.. ஏழு மணிக்கே கிளம்பி வீட்டிற்கு வந்துவிடுவோம். அப்போது தான் 8 மணிக்கு கரெண்ட் போகும் போது நிறைய விளையாட முடியும் என்பதற்காக..



மாலை வீட்டுக்கு  வரும் போதும் பெண்கள் தெருவில் ஒட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். தங்கள் கணவன்மார்களும் அப்பாமார்களும் வர வர ஒவ்வொரு பெண்ணாக தங்கள் வீட்டிற்குள் செல்வார். தினமும் ஃபேக்டரி வேலை முடிந்து வரும் என் தாத்தா எங்கள் வீட்டில் இருக்கு அரிக்கேன் லைட்டை அழகாக துடைத்துக்கொண்டிருப்பார். ’இத இப்படி கஷ்டப்பட்டு தொடைக்குறதுக்கு, பேசாம மெழுகுவர்த்தி வாங்கிராம்’னு நினைத்தாலும் பயந்துகொண்டு அவரிடம் சொல்ல மாட்டேன். எப்படா கரெண்ட் போகும் என்று 8மணி வரை காத்துக்கொண்டிருப்பேன். அதற்கு முன் வெளியே போனால் தாத்தாவின் குரல் வரும் “எங்கடா ஆட்டம் போட ஓடுற? ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியலயா?” என்று. இப்போது மணி 8..



கரெண்ட் கட் ஆகும். உடனே தெருவெங்கும் ஓஓஓவென சத்தம் கேட்கும் எல்லா வீட்டிலும் இருந்து. “கரெண்டுக்காரன் போயிட்டான் கரெண்டுக்காரன் போயிட்டான்” என்று கத்திக்கொண்டே ஒவ்வொரு வீட்டில் இருக்கும் சிறுவர்களும் வெளியில் குடு குடுவென ஓடி வருவொம்.. பெரியவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் கட்டிலை தெருவில் போட்டுக்கொண்டு கையில் ஒரு விசிறியையும் எடுத்து வீசிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். எங்களுக்குள் இன்று என்ன விளையாடலாம் என்று விவாதம் வரும். எங்கள் ஃபேவரைட் விளையாட்டுக்கள், ஒளிந்து பிடித்து, பாட்டுக்கு பாட்டு, கழுதைப்பட்டம். கழுதைப்பட்டத்தில் தான் அறிவுக்கு வேலை இருக்கும். சுற்றி அமர்ந்து கொண்டு ஒரு படத்தின் முதல் எழுத்தை ஒருவர் சொல்ல வேண்டும். அடுத்த அடுத்த ஆட்கள் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் படத்தை எல்லாம் மனதில் ஓட விட்டு அந்த படத்தின் பெயர் தன்னோடு முடியாமல் இருக்குமாறு பார்த்து ஒவ்வொரு எழுத்தாக சொல்ல வேண்டும். ஒருவர் ‘கா’ எனறு ஆரம்பித்தால் ரெண்டாவது ஆள் ‘த’ என சொல்கிறார். இப்போது நான்காவதாக இருப்பவனுக்கு லேசாக பீதியாகி விடும். மூன்றாமவன் “ல” என சொல்லிவிட்டால் தான் ‘ன்’ என சொல்லி படப்பெயர் தன்னோடு முடிந்து விடும். அப்படி முடிந்துவிட்டால், கழுதைப்பட்டத்தில் தனக்கு “க” என்னும் பட்டம் கிடைக்கும். அதனால் அவன் எப்படி தப்பிப்பது என யோசிக்க வேண்டும். மூன்றாமவன் “ல” என சொன்னாலும் நான்காவதாக இருப்பவன் “ன்” என சொல்லி ’தொடரும்’ என சொல்லி விட்டால் அந்தப்படத்தின் பெயரில் இன்னும் மிச்சம் இருக்கிறது என அர்த்தம். நான்காவது ஆள் தப்பித்தான். ஆனால் அந்த வட்டத்தில் இருக்கும் எவனோடாவது படப்பெயர் முடியும். அவனுக்கு “க” எனும் பட்டம் கிடைக்கும். இப்படியே “க”, “ழு” என்று ஒவ்வொரு எழுத்தாக கூடிக்கொண்டே போகும். யார் முதலில் “கழுதைப்பட்ட”த்தை முழுதாக பெறுகிறாரோ அவர் மற்ற எல்லோரையும் கழுதை போல் சுமந்து கொண்டு தெருவில் செல்ல வேண்டும். என்ன ஒரு அற்புதமான விளையாட்டு?!



விளையாடி களைப்படைந்ததும் எல்லோரும் சாப்பிட தயாராவோம். ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தும் நேற்று எரிந்து மிச்சமான மெழுகுவர்த்தியும் வட்டிலில் சோறும் எடுத்து வருவோம். பெரும்பாலும் இரவு யார் வீட்டிலும் குழம்போ பொறிக்கறியோ கிடையாது. வெறும் பாலும், தெரு முக்கில் இருக்கும் தள்ளுவண்டியில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய பக்கோடாவும் தான். நாங்கள் அமைதியாக சாப்பிட ஆரம்பிக்கும் போது வீட்டு பெரியவர்கள் தங்கள் பேச்சை ஆரம்பிப்பார்கள். கரெண்ட் கட்டுக்கு காரணமான முதல்வரில் இருந்து தெரு கவுன்சிலர் வரை எல்லாருக்கும் கெட்ட வார்த்தையில் அர்ச்சனை விழும். அந்த அமைதியான இரவுக்கும் வெள்ளந்தியான பேச்சுக்கும் எங்கோ தூரத்தில் ஓடும் அச்சாபிஸ் ஜெனரேட்டர் தான் பின்னணி இசை. 


ஜெனரேட்டர் என்பது EBக்காரர்கள் கரெண்ட்டை தங்கள் ஆபிஸில் இருந்து வீடுகளுக்கு கொண்டு வருவதற்காக கண்டுபிடித்திருக்கும் இயந்திரம் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இப்படி என்று மணி பத்தை நெருங்கும். மணியும் பத்தாகிவிடும். போகும் போது சரியாக எட்டு மணிக்கு போகும் கரெண்ட் வரும் போது கொஞ்சம் முன்னப்பின்ன தான் வரும். 10மணிக்கு மேலும் கரெண்ட் வரவில்லை என்றால் மிகவும் அச்சலாத்தியாகிவிடும். எல்லோரும் தூக்க கலக்கத்தில் மிதக்க ஆரம்பித்துவிடுவோம். விளையாடவும் பிடிக்காது. பத்தே காலுக்கு கரெண்ட் வரும். ஓஓஓ வென்று மீண்டும் தெருவெங்கும் சத்தம் வரும். “கரெண்டுக்காரன் வந்துட்டான், கரெண்ட்டுக்காரன் வந்துட்டான்” என்று கத்திக்கொண்டே வீட்டினுள் ஓடிச்சென்று படுத்துவிடுவோம். மீண்டும் அடுத்த நாள் அதே அச்சாபீஸ், கட்டிங் ஆபிஸ் என்று வேலைக்கு போய், அதே உணவு இடைவேளை, இரவு அதே கரெண்டுக்காரன் போயிட்டான், வந்துட்டான் கத்தல்கள் என்று இருந்தாலும் வாழ்க்கை என்றுமே போரடித்ததில்லை. விளையாடும் போது சண்டை வந்தாலும் மறுநாள் விளையாட்டு எங்களை ஒன்று சேர்த்துவிடும்.



பள்ளி ஆரம்பிக்கும் வரை இப்படியே தான் தினப்படி வாழ்க்கை. பள்ளி ஆரம்பித்தவுடன் கரெண்ட் கட் என்பது வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து இருந்தாலும் ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பதற்கான ஒரு காரணமாகவே இருந்து வந்தது. பின் கொஞ்சம் கொஞ்சமாக பவர் கட் எங்களையும், நாங்கள் ஒற்றுமையான விளையாட்டுக்களையும் மறந்து டிவிக்குள் தஞ்சம் புகுந்திருந்தோம். சக்திமானும், மாயாவி மாரீசனும் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் விளையாட்டுக்களை எங்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் வீட்டுப்பெண்களும் தெருவில் அமர்ந்து கெட்டு ஒட்டுவதை நிறுத்தியிருந்தார்கள். இரண்டு காரணங்கள் - டிவி, வாகனப்பெருக்கல். வீட்டிற்கு ஒரு சைக்கிள் இருந்தது மாறி, ஆளுக்கொரு சைக்கிள் வீட்டிற்கொரு வண்டி என மாறியது. அதனால் காலை நீட்டி சாவகாசமாக கதை பேசிக்கொண்டு தெருவில் அவர்களால் இருக்க முடியவில்லை. வீட்டிற்குள் கெட்டு ஒட்டும் போது பேச்சுத்துணைக்கு டிவி வந்துவிட்டது. மங்கை என்று ஒருவள் வந்தாள். இன்று வரை வீட்டுப்பெண்களுக்கு அவளைப் போல் மெகா சீரியல் நாயகிகள் தான் பேச்சுத்துணை.



இப்போது மீண்டும் சில வருடங்களாய் மின்வெட்டுக்கு நம் மீது பாசம் வந்திருக்கிறது. ஆனால் நம்மால் அதை சட்டை செய்யக்கூட முடியவில்லை. நேரமும் இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்? அன்பு என்றால் என்ன? சகமனிதரிடம் பழகுதல், எல்லோரும் ஒன்றாக உணவருந்துதல், பேசி களிப்புறுதல் என்று எல்லாவற்றையும் மறந்து இன்வெர்டர் வாங்கி வைத்துக்கொண்டு அதிலும் டிவியை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம் உருப்படியாய் ஒன்றும் இல்லாவிட்டாலும் ரிமோட்டில் வேகமாய சேனலை மாற்றிக்கொண்டு..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One