மோடி ஏன் பிரதமர் ஆக வேண்டும்/கூடாது?

Sunday, July 28, 2013

நண்பர் செல்வக்குமார் வினையூக்கி (http://vinaiooki.blogspot.in/) அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் தன் பக்கத்தில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார்..
1. மோடி ஏன் பிரதமராக வேண்டும்?
2. மோடி ஏன் பிரதமராகக்கூடாது?
இது தான் அந்தக்கேள்விகள்.. இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில்களை வரிசையாக எழுதி எந்தப்பக்கம் அதிகமான பாயிண்டுகள் வருகின்றனவோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்பது நண்பரின் எண்ணமாக இருக்கலாம்.. சரி, நம் பங்குக்கு நாமும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லிப்பார்ப்போமே என்று எழுதிய ஒரு பதிவு தான் இது.. 

முதலில், மோடி ஏன் பிரதமராக வேண்டும்?

குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மிகச்சிறந்த அளவில் உயர்த்தும் நிர்வாகத்திறன் படைத்திருப்பவர் இன்றைய சூழலில் அவர் மட்டும் தான்.. மிகப்பெரிய இரண்டு பொருளாதார வல்லுநர்கள் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருக்கும் தேசத்தில், இந்திய பொருளாதாரம் கஷ்டப்படும் போது, இந்திய மக்கள் தொகையில் 5% மட்டும் இருக்கும் குஜராத்திகள், நம் தேசத்தின் GDPக்கு 7% பங்களிக்கிறது. பஞ்சம் மிகுந்த பூமிகளில் ஒன்றான குஜராத் இன்று விவசாயத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆற்று நீர்ப்பாசனம் கிடையாது.. முழுவதும் கிணற்று நீர்ப்பாசனம் தான்.. காரணம்?


பொருளாதார வல்லுநர்களே இலவசத்தை கையில் எடுக்க துணியும் போது, தைரியமாக தன் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளைப்பார்த்துக்கேட்டார், “உங்களுக்கு நான் இலவச மின்சாரம் தருகிறேன்.. ஆனால் எப்போது கரெண்ட் வரும், எப்போது போகும் என்று எனக்கே தெரியாது.. ஆனால் மின்சாரத்திற்கு குறைந்த பட்ச கட்டணம் வசூலிப்பேன். 24மணி நேரமும் மின்சாரம் இருக்கும். உங்களுக்கு இலவசம் வேண்டுமா? அல்லது மின்சாரம் வேண்டுமா?”. நாம் ஜெயிப்போமா இல்லையா என்று கவலைப்படாமல் இப்படி தைரியமாக கேட்டு, ஜெயிக்கவும் செய்தார். இன்று 24மணி நேர மின்சாரமும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
உற்பத்தித்துறையில் இன்று இந்தியாவில் குஜராத் தான் முன்மாதிரி மாநிலம். வெளிநாட்டு முதலீடுகளை மிக அதிக அளவில் ஈர்த்துக்கொண்டிருப்பது அது தான். UNICEF சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றிருப்பதாக குஜராத்தை பாராட்டுகிறது. அதே போல் தொடக்கக்கல்வி பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையும், தொடக்கக்கல்வி கொடுக்கும் பள்ளிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. இதை எல்லாம் மோடி என்கிற ஒருவர் மட்டும் செய்கிறார் என்று பொய் கூற விரும்பவில்லை. அவருக்கு பின் இருக்கும் IAS, IPS, போன்றவர்களின் திட்டமிடல் தான்.. ஆனால் அதே போல் மற்ற முதல்வர்களுக்கும் IAS, IPS ஆட்கள் இருக்கிறார்களே? அவர்களின் அறிவை எந்த முதல்வர் ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்?

அனைத்தையும் விட, ஒரு இந்துவாக, இந்த தேசத்தின் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவனாக எனக்கு மோடி போன்ற என் சமூகத்துக்கு உதவும், கட்டாய மதமாற்றத்தை எதிர்க்கும், தீவிரவாதத்தை ஒடுக்கும் (சுவாமி நாராயண் கோவில் தீவிரவாத பிரச்சனைக்கு பிறகு அங்கே தீவிரவாதிகளால் வாலாட்ட முடியவில்லை), சிறுபான்மையினர் உரிமை என்னும் பெயரில் நடக்கும் மத துவேசங்களையும் அவர் எதிர்ப்பதும் ஒரு காரணம்.. ஆனால் இந்த நேரத்தில் இன்னொன்றையும் மனதில் கொள்ள வேண்டும். மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றால், அவர் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளின் தோற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அவர் கடந்த் தேர்தலை விட அதிக தொகுதிகளில், இஸ்லாமியர் அதிகம் வாழும் தொகுதிகளிலும் அதிகம் வென்றிருக்கிறார். உலகில் இருக்கும் எந்த நாட்டிலும், பெரும்பான்மை மக்களை இந்திய அரசியல்வாதிகள் போல் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்ததில்லை.. இந்தியாவில் இந்த அநீதி நடக்கிறது. அரசு கோப்புகளின் இந்துவாக இருந்து சலுகைகளை அனுபவிக்கும் ஒருவன், தனிப்பட்ட வாழ்வில் வேறொரு மதத்தை பின்பற்றி அரசுக்கும், தான் சார்ந்திருக்கும் மதத்துக்கும், உண்மையாக சலுகை கிடைக்க வேண்டியவனுக்கும் துரோகம் செய்கிறான். மோடி தன் பெரும்பான்மை சமூகத்துக்கு உண்மை செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.


சரி இப்போது, மோடி ஏன் பிரதமராகக்கூடாது?

குஜராத் என்கிற இந்தியாவின் நீளமான கடற்கரை பகுதியை கொண்டிருக்கிற ஒரு மாநிலத்தின் முதல்வரை இன்று ஒரு நாடே ‘பிரதமராக வா’ என்று அழைத்துக்கொண்டிருப்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு தெரிந்திருக்கும் உண்மை, ‘யார் பிரதமராக வந்தாலும் நம் வாழ்க்கை ஒன்றும் பெரிதாக மாறிவிடப்போவதில்லை. நம் பொருளாதாரம் என்பது நம் பொருளாதார வல்லுநர்களை சார்ந்து இல்லை. தான் உழைத்தால் தான் தனக்கு சோறு’ என்று புரிந்து கொண்ட மக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். இந்த சூழலில் மக்கள் யாரும் மோடியை பிரதமராக கனவு கண்டு கொண்டிருக்கவில்லை. In fact, அவர்களுக்கு மோடி வந்தால் என்ன பிரச்சனை எல்லாம் வருமோ என்னும் கவலை தான் இருக்கிறது.

சில மீடியா ஆட்களும் ஏதோ மோடி தான் இந்தியாவை காப்பாற்ற வந்த மோஸஸ் போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைக்கின்றன. உண்மை தான் அவர் ஆட்சியில் தான் குஜராத் பொருளாதார வளர்ச்சி பெற்றது. ஆனால், பெண்களின் சுகாதாரம், அரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியம், குழந்தைப்பேறின் போது நிகழும் மரணம், ஆண்-பெண் விகிதாச்சாரம் இது எல்லாமே அங்கு மிக மிக குறைவாக, அதன் பொருளாதார வளர்ச்சிக்கு சற்றும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது. இது ஏன் என்று லேசாக யோசித்தால் ஒரு விசயம் நமக்கு புலனாகும்.. ஈசியாக புகழ்ச்சி கிடைக்கும் விசயங்கள், பணத்தை வைத்து காட்டும் ஜிகினா வேலைகள் தான். ஏழைகளை கண்டுகொள்ளாமல், நாட்டின் சுகாதாரத்தில், அக்கறை கொள்ளாமல் இருந்தால் இங்கு யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை.. ஏனென்றால் எல்லா மாநிலமும் அப்படித்தான் இருக்கின்றன. அதனால் பொருளாதாரம், பள பள சாலைகள், வெளிநாட்டு முதலீடு என்று மீடியாக்களின் கேமராவை குளுகுளுவென்று வைத்திருந்தாலே போதும், ஈசியாக ‘நல்லவனாகி’ விடலாம் என்று அவர் போட்ட கணக்கு தப்பவில்லை.

 

அது போக, ஒரு நாட்டின் தலைவனாக வருபவனுக்கு தன் குடிமக்களிடம் பேதம் இருக்க கூடாது.. ஒரு இஸ்லாமிய மன்னர் தாடி, மீசை வைத்திருக்கும் இந்துக்களுக்கு ”ஜிசியா” என்னும் அதிக வரி போட்டாராம்.. ஆனால் அவருடை ஆட்சியைத்தான் முகலாயர்களின் பொற்கால ஆட்சி என்கிறோம்.. அதே போல் தான், தன் குடிமக்களிடம் பேதம் பார்த்து, அவர்களை இம்சிக்கும், போலி என்கௌண்டர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர் பிரதமராக வந்தால் நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்னவாகும் என்கிற ஐயமும் இருக்கிறது. பெரும்பான்மையினர் வேண்டுமானால் சந்தோசமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம். மோடி குஜராத் கலவரத்தில் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்து விட்டதே என அவர் ஆதரவாளர்கள் கூறலாம். தான் அமைச்சராக இருந்தே ஒரே காரணத்துக்காக தனக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த ரயில் விபத்துக்காக பதவியை துறந்த அரசியல்வாதிகளை கண்டவர்கள் நாம். தான் முதல்வராக இருக்கும் ஒரு மாநிலத்தில் நடந்த கலவரத்தை அடக்காமல் அதை வேடிக்கை பார்த்த இவரை எப்படி நம்பி ஆட்சியை கொடுக்க முடியும்?

நாடாளுமன்றம் என்பது அனைத்து கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து நடக்கும் ஒரு அரசு நிர்வாக அலுவலகம். ஆனால் மோடியின் பெயரை பிரதம வேட்பாளராக சொன்னதுமே, பா.ஜ,க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துவிட்டன. ஒரு வேளை நாளை இவர் பிரதமரானால் இவரால் அவர்களோடு ஒத்துப்போக முடியுமா? அல்லது அவர்களால் இவரோடு ஒத்துப்போக முடியுமா? இவரை எதிர்த்த கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிலை என்னவாகும்? குறிப்பாக ஏற்கனவே பின் தங்கியிருக்கும் பிஹாரை நினைத்தால் மிக கவலையாக இருக்கிறது. மோடி ஒரு நிர்வாகியாக இருக்கலாம். ஆனால் துவேசம் இல்லாத, ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற வஸ்துக்கள் எதுவும் அவரிடம் இருப்பதாகப்படவில்லை. நம் நாடு பொருளாதாரத்தில் மிக மெதுவாக கூட முன்னேறட்டும். ஆனால் மக்களின் சுகாதாரம் வாழ்வாதாரம் போன்றவற்றின் மேல் அக்கறையில்லாத, உயிர்களில் இந்து உயிர் இஸ்லாமிய உயிர் என்று பேதம் பார்க்கும் ஒருவரின் தயவில் அது வல்லரசானால், நாளை அந்த வல்லரசு நாட்டில் நல்ல குடிமகனுக்கு பஞ்சம் வந்துவிடும்.. வேண்டாம் எங்களுக்கு மோடி..


பின் குறிப்பு:
நீங்களும் ஒருவரை ஆதரிகக்வோ எதிர்க்கவோ செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து விட்டு அதன் சாதக பாதகங்களை எல்லா விதத்திலும் தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களுக்கு ஒருவரை பிடித்திருந்தால் அவரின் negative விசயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.. அப்போது தான் அட்லீஸ்ட் ஒரு விவாதத்திலாவது நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க உதவியாக இருக்கும்.. 

நானும் வாலியும்...

Friday, July 19, 2013

தலைப்பை பார்த்தவுடன், ‘என்னடா இவன் என்னமோ வாலி கூடவே ஒன்னு மண்ணா திரிஞ்சவன் மாதிரி தலைப்பு வச்சிருக்கான்?’னு கடுப்பாகாதீங்க.. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் வாலியை நேரில் பார்த்து அவருடன் அரை மணி நேரம் செலவழித்திருக்கிறேன் என்கிற கர்வத்தில் தான் இந்த தலைப்பு.. நேற்று மாலை பாஸோடு மார்க்கெட் விசிட்டில் இருந்த போது நண்பர் ஒருவரிடம் இருந்து 7மணி அளவில் ஒரு எஸ்.எம்.எஸ், "ur favorite vaali is dead" என்று.. ஒரு சிலர் இறந்தால் நமக்கு மிகவும் வருத்தமாக, அன்று முழுவதும் மனதுக்கு மிக பாரமாக கஷ்டமாக இருக்கும், சிலர் இறந்தால் நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு பாதிப்பும் இருக்காது.. ஆனால் வாலி இறந்த செய்தி கேட்டதும் எனக்கு இந்த இரண்டு விதமாகவும் தோன்றவில்லை.. அவருடைய பாடல் வரிகள் சில மனதில் வந்து போயின. பின் அவர் இறந்தார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் பாடல்கள் நம் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் வரை, வாயில் நாம் முனுமுனுத்துக்கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவு  என்பதே இல்லை.. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை’ என்கிற கண்ணதாசனின் வரிகள் வாலிக்கும் பொருந்தும்.. இனி நானும் வாலியும்..


சென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் அமைந்திருக்கும் சௌத் போக் சாலையில் ஒரு சிறிய மண்டபம். அங்கு 2005ம் ஆண்டில் ‘விகடன் மாணவ பத்திரிகையாளர்களாக’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 32 பேரும் மதிய சாப்பாடெல்லாம் முடித்துவிட்டு ஒருவருக்காக காத்துக்கொண்டிருந்தோம். அமைதியாக, நமக்கு அறிமுகமில்லாத ஆனால் இனி அறிமுகப்பட்டுக்கொள்ள வேண்டிய ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தோம்.. அப்போது ஒரு சிறு சலசலப்பு.. காற்றில் திருநீறும், குங்குமமும், ஜவ்வாதும் கலந்த ஒரு தெய்வீகமான மெல்லிய வாசனை வந்தது.. வாசனையை மூக்கும் மனதும் உணர்ந்து லயிக்கும் அந்த நொடியில் வெள்ளை நிற பட்டு வேட்டியும் முழுக்கை ஜிப்பாவும் போட்டு ஒரு வாலி எங்களை விறுவிறுவென சிரித்த முகத்துடன் கடந்தார். நாங்கள் எல்லாம் அமர்ந்திருந்த இருக்கை வரிசைகளைத்தாண்டி எங்களுக்கு முன் பேசும் இடத்தில் கம்பீரமாக தொண்டையை செருமியபடி மைக்கை பிடித்துக்கொண்டு நின்றார். ’இவ்வளவு வெள்ளையா உலகத்துல ஒருத்தன் இருப்பானா?’னு நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கலர்.. எங்க ஊர் பக்கமெல்லாம் நான் இந்த கலரில் ஆளை பார்த்ததே இல்லை.. கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்..


அதற்கு முன் வாலி என்றால் சினிமாவில் பாட்டு எழுதுபவர் என்பது மட்டும் தான் தெரியும்.. அவரின் வரலாறு, குறும்பு, நகைச்சுவை இது எதுவும் தெரியாது.. என்ன தைரியத்தில் ஒரு கிழவரை, 20வயது இளைஞர்களுக்கு மத்தியில் பேச வைக்க விகடன் குழுமம் முடிவு செய்திருக்கும் என்று கூட யோசித்தேன்.. பேச ஆரம்பித்தார்.. அந்த 30நிமிடங்களும், யாரோ நம் கல்லூரி நண்பன் நம்மோடு சகஜமாக, நகைச்சுவையாக, ஊக்கு சக்தியாக, கிண்டலாக, பேசுவது போல் அவ்வளவு அருமையாக இருந்தது அவரின் பேச்சு. ’நான் இன்னைக்கு இங்க பேசுறதுக்கு எதுவுமே prepare பண்ணல.. கார்ல வரும் போது அவசர அவசரமா ஒரு கவிதை உங்களுக்காக எழுதிருக்கேன்”னு சொல்லி அந்த கவிதையை வாசித்தார். அந்த கவிதை எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை இரு கருத்துக்களை தவிர்த்து.. 

”யானையின் பலம் தும்பிக்கை
மனிதனின் பலம் நம்பிக்கை..
உங்களின் பலத்திற்கு இன்னொரு கை
அது தான் விகடன் பத்திரிகை”

“எவன் ஒருவர் வேர்வைக்கும் - வெற்றி
நிச்சயம் வேர் வைக்கும்”

அவர் பாட்டுக்க வார்த்தைகளை பிரித்து மேய்ந்து கவிதை பாடிக்கொண்டிருந்தார்.. அவரே அவரை ’பாக்கெட் பேப்பர் கவிஞன்’ என்று சொல்லிக்கொண்டார்.. கண்டேன் காதலை படத்தில் சந்தானம் சொல்வாரே, “இப்படித்தாம்ப்பா நான் பாட்ட எழுதி அங்கங்க விட்டுட்டு போயிருவேன், அத எடுத்து யாராவது சினிமால எழுதி பேர் வாங்கிறாங்க”னு, கிட்டத்தட்ட வாலியும் அதே வகையறா தான்.. தான் அவசரத்தில் மேடையில் பேசுவதற்காக எழுதிய பல கவிதைகளை முறையாக பாதுகாக்காமல் விட்டுவிடுவாராம்.. அதை பின் ஏதாவது ஒரு சினிமாவில் பாடலாக கேட்கும் போது தான் அவருக்கே தெரியுமாம் ’எவனோ நம்ம கருத்த களவாண்டுட்டாய்ங்க’னு...

அழகிய தமிழ் மகன் படம் வந்த புதிதில் ‘எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடல் கேட்டதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.. அதில் “எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர் வைக்குமே” என்று ஒரு வரி வரும்.. ‘ஆஹா வாலி சொன்ன மாதிரியே எவனோ அவர் கவிதைய லவட்டிட்டு போயி பாட்டு எழுதிட்டான்’ என அலர்ட் ஆகி வேகவேகமாக நெட்டில் மேய்ந்ததில், நல்ல வேளையாக அந்த பாடலை வாலி தான் எழுதியிருந்தார்.. பரவாயில்ல நம்ம மீட்டிங்கிற்கு பிறகு ஆள் உஷாராகத்தான் இருக்கிறார் என மனதை தேற்றிக்கொண்டேன்..


வாலிக்கு எம்.ஜி.ஆர் மீது மிகப்பெரிய அன்பு இருந்தது.. எங்களிடம் பேசும் போது கூட எம்.ஜி.ஆர் தன்னிடம் ஒரு விசயம் கூறி மிகவும் வருந்தியதாகவும், தான் அவரை எப்படி தேற்றினேன் எனவும் கூறினார்.. “கவிஞரே நீர் எனக்கு எழுதிருக்கிற எல்லா பாட்டும் வாழ்க்கையில நடந்திருக்கும்.. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு எழுதின.. நடந்தது.. நான் ஆணையிட்டால்னு எழுதுன, நாட்டுக்கே ஆணையிடுற அளவுக்கு வந்துட்டேன்.. ஆனா எனக்கொரு மகன் பிறப்பான்னு எழுதுன.. அது மட்டும் நடக்கலியே?” என்றாராம் மிகவும் வருந்தி.. அதற்கு நம்ம ஆள், ‘தலைவரே ஒரு பிள்ளை மட்டும் இருந்தா தமிழ் நாட்டுல உங்கள நம்பி இருக்குற மத்த பிள்ளைகள யாரு கவனிக்குறது? இந்த தமிழ் நாட்டு மக்களே உங்க பிள்ளைங்க” தான்னு சொல்லி அவரை சமாதானப்படுத்தினாராம்..

வாலியின் உண்மையான பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர்.. வாலிக்கு ஓவியத்தில் மீது தான் ஆரம்பத்தில் ஈர்ப்பு இருந்ததாம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஓவியரின் பெயர் மாலி.. அவரைப்போல் தானும் பிரபலமான ஓவியனாக ஆக வேண்டும் என்கிற ஆசையில் தன் பெயரை ‘வாலி’ என்று மாற்றிக்கொண்டாராம்.. ஒரு பத்திரிகை ஆபிசில் தன் ஓவியத்தை கொடுத்திருக்கிறார்.. அதன் ஆசிரியர் சிரித்துக்கொண்டே, “அதென்னப்பா பேரு வாலி? வாலே இல்ல, நீ வாலியா?” என்றாராம்.. நம்ம ஆளுக்கு தான் கோவம் பயங்கரமா வருமே.. 

“வால் இல்லை என்பதால் வாலியாகக்கூடாதா?
கால் இல்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?”

என்று  சட்டென ஒரு கவிதை பாடியிருக்கிறார்.. “ஒனக்கு ஓவியத்தை விட கவிதை நல்லா வருது, நீ ஒழுங்கா கவிதை எழுது”னு அவர் தான் வாலியை கவிதை பக்கம் திருப்பிவிட்டவராம்..


அப்படியே வாலி சினிமாவில் நுழைந்து பாடல் எழுத ஆரம்பித்திருந்தார்.. கண்ணாதசன் என்னும் இமயமலை இருந்ததால் வாலி என்னும் சஞ்சீவி மலையை அப்போது பலரும் கண்டு கொள்ளவில்லை.. சினிமா வாய்ப்பே இல்லாமல் பெட்டி படுக்கையோடு வேறு பிழைப்பு பார்க்க கிளம்பி ரயில்வே ஸ்டேசனின் காத்திருந்தார்.. அப்போது காற்றில் ஒரு பாடல் மெதுவாக அவர் காதில் நுழைந்திருக்கிறது.. ‘மயக்கமா கலக்கமா.. மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?’ பாடலை முழுதும் கேட்டவர் ஊருக்கு போகாமல் சென்னைக்கே வந்துவிட்டார்.. மீண்டும் புது உத்வேகத்துடன் பாடல் எழுதி வாலிப கவிஞராக இன்று வரை இருக்கிறார்.. அவரை மீண்டும் பாடல் எழுத தூண்டிய அந்த பாடலை எழுதியவர், வாலி இனி சினிமாவே வேண்டாம் என கிளம்ப காரணமாக இருந்த கண்ணதாசன்!!!! இது தான் விதி என்பது..

வாலி மிகுந்த கோபக்காரராம். ”என் கிட்ட வேலை வாங்க தெரிஞ்ச ரெண்டே பேரு எம்.ஜி.ஆரும் கமலும் தான்” என்றார் வாலி.. ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வந்த “ஒன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்” பாட்டு இப்பவும் நமது favorite காதல் தோல்வி பாடல்.. ஆனால் அந்த பாடலை வாலி ஒவ்வொரு முறை எழுதும் போதும் கமல் ‘எனக்கு பிடித்த மாதிரி இல்லை’ என்று வேறுவேற மாதிரி கேட்டிருக்கிறார்.. பயங்கர கடுப்பான வாலி, கடைசியாக ஒரு பேப்பரில் வேகமாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் நீட்டி, “போய்யா இதுக்கு மேல ஒனக்கு எழுத முடியாது”னு சொல்லிட்டாராம்.. அதை படித்த கமல் வாலையை கட்டிப்பிடித்துக்கொண்டார்..

இதெல்லாம் நாங்கள் ஓவ்வொருவராக கேள்வி கேட்டு அதற்கு வாலி சொன்ன பதில்களின் தொகுப்பு.. இப்போது அவரிடம் நான் கேட்ட கேள்வி.. “சார் ஒரே படத்துல ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா’னு பாட்டு எழுதுறீங்க.. ‘சக்கர இனிக்குற சக்கர’னு ‘ஒரு மாதிரியான’ பாட்டும் எழுதுறீங்க.. எப்படி முடியுது?”.. இந்த உலக முக்கிய கேள்விக்கு அவர் சொன்ன பதில் “உங்கள மாதிரி இளைஞர்கள் கூட பழகிட்டு மனசு சந்தோசமா இருந்தா எப்படியும் எழுதலாம்.. எல்லாத்தையும் விட சரஸ்வதி தேவியின் அருள்னு தான் நான் நெனைக்கிறேன்” என்றார்..


உண்மை தான்.. யாருக்குமே புரியாத, முக்காலா முக்காபுலா, முஸ்தஃபா முஸ்தஃபா, கலாசலா கலசலா, தத்தை தத்தை தத்தை பல அத்தை பெத்த தத்தை, சல்சா பண்ணுங்கடா என்கிற புரட்சி வார்த்தைகளை எல்லாம் அவரால் தான் கண்டுபுடிக்க முடியும்.. அதை தமிழர்களின் வாயில் முனுமுனுக்கவும் வைக்க முடியும்.. வாலியே ஒரு பேட்டியில் சொன்னது, “நானும் ரகுமானும் சேர்ந்து எழுதும் பாட்டு ‘ம’ வரிசையில் வந்தாலே அது ஹிட் தான்” என்று.. உண்மை தான்.. டாக்ஸி டாக்ஸி என்று நட்புக்கும் நவீன இலக்கணம் கொடுப்பார், secret of successம் சொல்லிக்கொடுப்பார்.. காதல் வெப்சைட் ஒன்றை கண்ணில் காண வைப்பார், மல மல மருதமலனு ஒரு மார்க்கமாவும் எழுதுவார், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி என்று கடவுளுக்கும் எழுதுவார். கடவுளுக்கு எழுதினாலும் காசுக்கு எழுதினாலும் அவரின் வார்த்தை விளையாட்டும், எழுத்தில் இருக்கும் துள்ளலும் என்றுமே மாறாது..

”இவ்வளவு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள்.. உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? அதற்காக நீங்கள் வருந்தியிருக்கிறீர்களா?” என்று கேட்ட போது, அதை கூட வார்த்தையில் விளையாண்டு, ‘நான் recognitionக்காக எழுதல, remunerationக்காக எழுதுறேன்’ என்று தைரியமாக ஓபனாக பதில் சொன்னவர் அவர்.. “நான் இதுவரை டில்லி தாண்டி போனது இல்ல. கடல் கடந்து போகாத ஒரே ஒரு விசயத்துலயாவது நான் பிராமணனா இருக்கேனே?” என்று தன் சூழலை வைத்து தன்னையே கிண்டல் அடித்துக்கொள்பவர்.. அந்த நகைச்சுவை உணர்வும், தைரியமும் தான் அவரை என்றும் இளமையாக வைத்திருந்தது என்றால் மிகையில்லை.. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.. ஆனால் இறந்த பின் ஆண்டுக்கு ஒரு முறை நம் குடும்பத்தினர்கள் மட்டும் நம் நினைவு தினத்தில் நம் ஃபோட்டோவை வைத்து சாமி கும்பிட்டு கறியும் சோறும் தின்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. நான்கு பேர் நினைத்துப்பார்க்கும் அளவிற்காவது வாழ வேண்டும்.. நான்கு பேர் என்ன நான்கு பேர், லட்சக்கணக்கான பேர்களில் நாவில் வாலியின் தமிழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வரை அவருக்கு அழிவில்லை..

”வருகிறாய் தொடுகிறாய் என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்.. 
போ போ என்கிறேன், போகாமல் நீ நிற்கிறாய்...”

வாலியின் பாடலுக்கு சிவாஜி நடிக்க T.M.S குரல் கொடுக்க வானில் இன்று ஒரு அழகான பாடல் அரங்கேறிக்கொண்டிருக்கும் என நம்புவோம்...

தல படமும் மலமாடுகளும் - சிறுகதை..

Saturday, July 6, 2013

உங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா? 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவும் வேலை பாத்துட்டு இருக்குற எனக்கு இன்னைக்கு தான் அப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கு.. ஆமா, ‘தல’யோட படத்துக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகப்போறேன்.. தேட்டரில் தெரிக்கும் விசில் சத்தம், தொண்டை கிழியும் கோஷம் என நினைத்துப்பார்க்கவே சிலிர்ப்பாக இருக்கிறது.. கேள்வி ஞானமாகவே இருந்த ஃபர்ஸ்ட் ஷோ இன்று எனக்கும் ஒரு அனுபவமாக போகிறது.. நானும் 4 பேரிடம் சொல்லி சந்தோசப்படுவேன் இனி.. ஆனா கரெக்ட் டயத்துக்கு தேட்டருக்கு போயிருவேனானு தான் தெரில..

எங்க ஊர்ல என்னமோ எனக்கு இந்த படத்த பாக்க பிடிக்கல.. அதனால மதுரைக்கு போயி பாக்கலாம்னு ப்ளான்.. பாட்டிய கொன்னு, வேலைக்கு லீவு போட்டு, காலையில 6மணிக்கே அலாரம் வச்சு, 6.30க்கு அம்மா தண்ணிய ஊத்தி எழுப்பிவிட்டதும் அவசர அவசரமா கெளம்பிட்டு இருக்கேன் இப்ப... படம் 9.30க்கு போட்ருவான்.. மணி இப்பயே 7ஆகப்போகுது.. எங்க ஊர்ல இருந்து மதுரைக்கு ரெண்டு மந்நேரம் ஆவும்.. ‘கடவுளே படம் போடுறதுக்குள்ள நான் தேட்டருக்கு போயிரணும்’னு அவசரத்தில் சாமியை வேண்டி நெத்தியிலும் வாயிலும் கொஞ்சம் விபூதியை போட்டுக்கொண்டு, ஏதோ ஞாபகம் வந்தவனாய் மீண்டும் கடவுளிடம், ‘கடவுளே இந்தப்படமாவது கண்டிப்பா ஹிட் ஆவணும்’ என எக்ஸ்ட்ரா வேண்டுதலையும் போட்டுவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினேன்..காலையில ஏழு மணிக்கு எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு.. மெதுவா எட்டிப்பாக்குற வெயில், அதுல தெரியுற தூசித்துகள், கூட்டம் வர ஆரம்பிக்கும் டீக்கடை, வாக்கிங் போன அலுப்பில் அமர்ந்திருக்கும் சர்க்கரை பிண்டங்கள், மிக குறைவான பேருந்துகள், அதை விட குறைவான ஜன நடமாட்டம்னு எங்க ஊரு பஸ் ஸ்டாண்டு எனக்கே கொஞ்சம் அந்நியமாத்தான் தெரியுது இப்ப.. அஞ்சு நிமிசத்துக்கு ஒரு மதுர பஸ்ஸு உண்டு.. ஆனா இப்ப ஒன்னையும் காணோம்.. “இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?” என் செல்ஃபோன் அலறுகிறது.. 

“சொல்றா மாப்ள”

“.....”

“டே இல்லடா பஸ்ஸுக்கு தான்டா வெயிட் பண்றேன்.. கரெக்ட் டயத்துக்கு வந்துருவேன்டா..”

“...”

“சரி சரி படம் ஆரம்பிச்சுட்டா நீ உள்ள போயிரு.. நான் வந்து ஒனக்கு கால் பண்ணுறேன்”..

என் நண்பன் வேற அவசரப்படுத்துறான்.. அவன் மதுரைக்கு நேத்து நைட்டே போயி எனக்கும் அவனுக்கும் டிக்கெட் ரெடி பண்ணிட்டான்.. நான் தான் இங்க லேட் பண்ணிட்டு இருக்கேன்.. பஸ்ஸையும் காணோம்.. ஒவ்வொரு நொடியும் நான் ஃபர்ஸ்ட் ஷோவில் இருந்தும், தலயிடம் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போற மாதிரி இருக்கு.. எவனாவது கார் வச்சிருக்குற ஃப்ரெண்ட்டுக்கு கால் பண்ணி வர சொல்லலாமானு யோசிச்சேன்.. காலையில 7மணிக்கே கூப்ட்டா கடுப்பாயிருவாய்ங்க.. அதும் ஒரு படத்துக்கு போணும்னு சொல்லி கார ஓசிக்கு கேட்டா காரித்துப்புவாய்ங்க.. அவைங்கலாம் படம் ரிலீஸ் ஆகி நல்லா இருக்கா நல்லா இல்லையானு ரிசல்ட் தெரிஞ்ச பிறகு சிடி வாங்கி வீட்டு ஹோம் தேட்டர்ல பாக்குறவய்ங்க.. நாம என்ன அப்படியா? ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ.. கெத்து.. மாஸு.. அய்யோ பஸ்ஸ இன்னும் காணோமே... ஒரு வெள்ளக் கலர் ப்ரைவேட் பஸ்ஸு ஒன்னு வேமா பஸ் ஸ்டாண்டுக்குள்ள வருது.. தூரத்துல தெரிஞ்ச அந்த பஸ் பக்கத்துல வர வர அதில் எழுதியிருக்கும் பெயர் கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சது.. “மதுரை”..


பஸ் நிக்குறதுக்கு முன்னாடியே ஓடியே போயி ஜம்ப் பண்ணி ஏறி என் ஃபேவரைட்டான ரெண்டாவது சீட்ல எடம் போட்டு ஒக்காந்துட்டேன்.. கண்டக்டர் என்ன ஒரு மாதிரி பாத்தான்.. ஏன் அப்படி பாக்குறான்னு தெரில.. பஸ்ஸு மெதுவா அது நிக்குற எடத்துக்கு வந்துச்சி.. 2காலேஜ் பிள்ளைக, வியாபாரத்த முடிச்சிட்டு சொந்த ஊருக்கு கெளம்புற சேட்டு, இன்னும் ரெண்டு மூனு பேரு மொத்தமே பஸ்ல 8பேரு தான் இருக்கோம்.. கண்டக்டரு என்ன இன்னொருக்க பாத்து மொறச்சான்.. இப்பத்தான் அதுக்கு அர்த்தமே புரிஞ்சது.. மொத்ததுலயே எட்டு பேரு ஏறியிருக்கிற பஸ்ஸுல குடுகுடுனு ஓடி வந்து அரக்கபறக்க சீட் போட்டா அவனுக்கு கடுப்பாகுமா ஆகாதா? கொஞ்ச நேரத்துல பஸ்ஸு கெளம்பிருச்சி.. மணி இப்பத்தான் கரெக்ட்டா ஏழு ஆகுது.. எப்டியும் ஒம்பதுக்குள்ள ஆட்டோ பிடிச்சாவது தேட்டருக்கு போயிரணும்னு முடிவு பண்ணிட்டேன்..

அந்த ரெண்டு காலேஜ் பிள்ளைகளும் எனக்கு பின்னாடி இருந்த சீட்ல தான் இருந்தாளுக. பஸ்ஸு கெளம்ப ஆரம்பிச்ச ஒடனே எல்லாரும் டப்பு டப்புனு அவங்க அவங்க சீட்டு ஜன்னல மூட ஆரம்பிச்சாய்ங்க.. ரொம்ப குளிரும் போல.. எனக்கு இந்த சிலு சிலு குற்றால சீசன் காத்து ரொம்ப பிடிச்சிருந்தனால நான் ஜன்னல மூடல.. எனக்கு பின்னாடி இருந்த காலேஜ் பிள்ளைகளும் ஜன்னலை மூடிட்டாங்க.. எனக்கு லேசா குளிர் அடிக்குற மாதிரி இருந்தாலும், பொம்பள பிள்ளைக முன்னாடி கெத்தா இருக்கணும்னு நான் ஜன்னல மூடாமலே குளிர தாங்கிட்டு எனக்கு குளிராத மாதிரியே இருந்தேன்.. அந்த பிள்ளைக ஏதோ பேசுறது என் காதுல விழுந்துச்சி.. சரி நாம குளிர தாங்கி கெத்தா இருக்குற மேட்டரத்தான் பேசுனாலும் பேசுவாளுகனு நெனச்சி என் காத கொஞ்சம் அந்தப்பக்கம் தீட்டி வச்சேன்..

“ஏன்டீ நம்மளுக்குலாம் எப்படி குளிருது? பாரு ஜன்னல கூட மூடிட்டோம்.. ஆனா அவன பாரு ஜன்னலயும் மூடாம எப்படிடீ இப்படி வரியான்?”

அதுக்கு அந்த இன்னொருத்தி சொன்னாள், “கறுப்பா இருக்கறவய்ங்களுக்குலாம் குளிராதுடீ.. அதான் அவன் இப்படி தொறந்து போட்டுட்டு வரியான்”...

இப்ப அந்த பஸ்ஸுல டப்புனு இன்னொரு ஜன்னலும் மூடுற சவுண்டு கேட்டுச்சி.. அது என் ஜன்னல் தான்னு வேற சொல்லணுமா?

ச்சே இவளுக்க நம்மள இப்படி அசிங்கப்படுத்திட்டாளுகளேனு பயங்கர கடுப்பு எனக்கு.. நண்பனுக்கு ஃபோன் அடிச்சி பஸ் கிளம்பிட்டதையும் நான் 9மணிக்குள்ள வந்துருவேன்னும் சொல்லிட்டேன்.. பஸ் இப்ப எங்க ஊர தாண்டி இருக்குற திருத்தங்கல்லுக்கு வந்துருச்சி.. இங்கயும் ஒரு ரெண்டு மூனு பேரு ஏறுவாய்ங்கனு தான் நெனச்சேன்.. ஆனா வத வதனு கொத்தனார் வேலைக்கு போறவன், பயர் ஆபிஸ் வேலைக்கு போறவன்ல இருந்து பள்ளீடத்துக்கு போற பிள்ளைக வர நெறைய பேரு ஏறிட்டாங்க.. நான் இருக்கிற சீட்ல ஏதாவது ஸ்கூல் பயல ஒக்கார வைக்கலாம்னு பாக்குறதுக்குள்ள ஒரு ஏதோ ஒரு எருமை எம்மேல வந்து முட்டுன மாதிரி ஒரு ஃபீல்.. என்னனு சுதாரிச்சி பாத்தா என் பக்கத்துல, இல்ல இல்ல கிட்டத்தட்ட என் மேல ஏறி என் மடில ஒருத்தன் ஒக்காந்திருந்தியான்..


நான் அவன மொறச்சி பாக்குறேன்.. பயபுள்ள அவன் என்ன கண்டுக்காம அவன் பாட்டுக்க வேற எங்கயோ மொறச்சி பாத்துட்டு இருந்தியான்.. எனக்கு செம கடுப்பு. “ஹலோ கொஞ்சம் தள்ளி ஒக்காருங்க”னு அவன்ட்ட கோவமா சொல்லலாம்னு நெனச்சாலும், அவன் முழியும், மொறப்பும், முறுக்கு மீசையும், 10நாள் தாடியும் எனக்கு கொஞ்சம் பீதிய கொடுத்திச்சி.. அவன் பார்வையே அப்படித்தானானு எனக்கு தெரில.. ஒரு கோவமான திருட்டு முழி அது.. ஒங்கள அவன் பாத்தான்னா, அப்படியே மொறைக்குற மாதிரியே இருக்கும்.. நீங்களும் பதிலுக்கு மொறைச்சா அவன் அடிச்சாலும் அடிச்சிருவியான்.. கையில ஒரு பத்து செண்டிமீட்டருக்கு கறுப்பு கயறு, கழுத்துல இரும்பு சங்கிலி, பீடி குடிச்சனால கறுத்துப்போன ஒதடு, மஞ்ச பூத்த பல்லுனு பாக்குறதுக்கு கொஞ்சம் ரவுடி மாதிரி தான் இருந்தியான். அதனால நான் ஒன்னும் சொல்லாம போனா போகுதுனு லேசா என் ஒடம்ப அவன்ட்ட இருந்து கொஞ்சம் நகட்டி வச்சுக்கிட்டேன்.. சீட்ல நான் ஒரு ஓரமா நஞ்சு போன எலிக்குஞ்சு மாதிரி ஒடுங்கி ஒக்காந்திருக்கேன்.. அவன் சிம்மாசனத்துல இருக்குற ராஜா மாதிரி கம்பீரமா இருந்தான்.. கையில செங்கோலுக்கு பதிலா முன்னாடி சீட்டு கம்பிய பிடிச்சிருந்தியான்.. என்னோட ராஜ்ஜியத்துல பாதிய அவன் புடிங்கிட்டு போயிட்ட மாதிரி எனக்கு கடுப்பு.. எப்படியாவது என்னோட எடத்த அவன்ட்ட இருந்து மீட்டு நானும் கம்பீரமா ராஜா மாதிரி ஒக்காரணும்னு முடிவு பண்ணிட்டேன்..

அப்படியே மெதுவா என்னோட உடம்புக்கும் அவனோட கையிக்கும் எடையில சிக்கி தவிச்சிட்டு இருக்குற என்னோட வலது கைய கஷ்டப்பட்டு உருவி எடுத்து முன்னாடி இருந்த கம்பில வச்சேன்.. இப்படி வைக்கும் போது என்னோட கை முட்டிய லேசா மடக்கி வச்சேன்.. என் ஒடம்புக்கும் கைக்கும் கொஞ்சம் இடம் கெடச்சது இப்ப.. கொஞ்சம் சொகுசா ஒக்காந்த மாதிரி இருந்தது எனக்கு. என் கை முட்டி அவன லேசா இடிச்சது.. நானும் இது தான் சாக்குனு என் கையால ரொம்ப ரொம்ப மெதுவா, ஆனா பலமா அவனயும் அவன் கையையும் தள்ளுனேன் கொஞ்ச கொஞ்சமா.. வண்டிய ஓட்டுன டிரைவர் பாவி இப்ப ஒரு ஸ்பீடு பிரேக்கர்ல வேமா வண்டிய விட்டுட்டான்.. வண்டியே ஒரு குலுங்கு குலுங்குச்சி. என் பக்கத்துல இருந்த ரவுடி அந்த குலுக்கல்ல அப்படியே ஜம்ப் பண்ணி பழைய மாதிரி என் மடில ஏறி ஒக்காந்துட்டான்.. நானும் பழைய மாதிரி நஞ்ச எலிக்குஞ்சி மாதிரி ஆயிட்டேன்.. அவன் நான் என்ன நெலமைல இருக்கேன்னு கூட கண்டுக்கல.. பஸ்ஸுல ஏறுனதுல இருந்து இப்ப வரைக்கும் எங்கயோ பாத்து மொறச்சுட்டே தான் இருக்கான்.. ஆனா எங்க பாக்குறியான், எதுக்கு மொறைக்குறியான்னு தான் தெரில.. அய்யோ இப்ப என்ன பாத்து மொறைக்குறியான்.. நான் உதடே விரியாம லேசா சிரிக்க ட்ரை பண்ணேன்.. அதுக்குள்ள வேற பக்கம் பாத்து மொறைக்க ஆரம்பிச்சுட்டியான்..

சரி அடுத்த ஸ்பீடு பிரேக்கர்ல அவன் செஞ்ச அதே டெக்னிக்க நாம செஞ்சு அவன தள்ளி ஒக்கார வச்சிராம்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன்,... அடுத்த ஸ்பீடு பிரேக்கர் வந்துச்சி.. பஸ் ஸ்பீடு பிரேக்கர்ல ஏறுன ஒடனே நான் அப்படியே ஜம்ப் ஆகி அவன இடிச்சேன் பாருங்க, பயபுள்ள ஒரு இன்ச் கூட நகரல.. சிலை மாதிரி அப்படியே இருந்தான்.. ‘ஆள் கொஞ்சம் ஸ்ட்ராங் பாடி தான் போல”னு நெனச்சுக்கிட்டு வேற டெக்னிக் எதும் இருக்கானு யோசிச்சேன்..

இப்ப நம்ம ராஜா பாக்கெட்டுக்குள்ள கைய விட்டு ஒரு செல்ஃபோன எடுத்தாரு.. எங்கயோ ஒரு வருசத்துக்கு முன்னாடி செகண்ட் ஹேண்டுல வாங்குன சைனா ஃபோன் மாதிரியே இருந்திச்சி.. அவன் அதுல ஒவ்வொரு பட்டன அமுக்கும் போதும் அதுல இருந்து டொய்ங் டொய்ங்னு கேவலமா ஒரு சவுண்ட் வேற வந்துச்சி.. ஒரு 30செகண்டுல அத விட கொடூரமா ஒரு சவுண்டு.. “சம்பர பர பர சிப்பிப்பா பிலகண்டா குலகண்டா அந்தானு லவகுண்டா ஓம் சாந்தி சாந்தி”னு ஏதோ கலவரம் பண்ண போறவைங்க பாடுற மாதிரியே இருந்துச்சி.. அந்த ஃபோன் குடுக்குற சவுண்டுக்கு சடங்கு வீட்டுல கட்டுன கொழாய் ஸ்பீக்கர் கூட தோத்து போயிரும்.. அப்படி ஒரு அலறல்.. ஒரு அஞ்சு நிமிசம் போயிருக்கும்.. இப்ப அந்த ஃபோனல யுவனோட “உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது” பாட்டு.. இத மட்டும் யுவன் கேட்டா மியூசிக் போடுறதையே நிறுத்திட்டு, வெள்ளம் வந்தாலும் பரவாயில்லனு ரிஷிகேசுக்கே போயிருவாரு, அப்படி ஒரு ரணகொடூரம்.. இந்த மாதிரி டப்பா ஃபோன்லலாம் எப்படி பாட்டு கேக்குறாய்ங்கனே தெரில.. அதும் கொஞ்சம் கூட டீசன்சி இல்லாம, இப்படி ஸ்பீக்கர் போட்டு மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டு.. ச்சே ச்சே.. எனக்கு யாராவது அவன எதுத்து கேக்க மாட்டாங்களா, சவுண்ட கொறச்சி வைக்க சொல்ல மாட்டாங்களானு ஒரே ஏக்கம்.. இப்ப இளையராஜா போட்ட, “என்னை தாலாட்ட வருவாளா”.. எனக்கு இவன் டேஸ்டு என்னனே புரிஞ்சுக்க முடியல.. ஆனா ஒன்னே ஒன்னும் மட்டும் புரிஞ்சுச்சி.. ஒங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு கூட, கேட்டாலே நாராசமா சுத்தமா பிடிக்காம போகணும்னு நெனச்சீங்கன்னா அத நீங்க சைனா ஃபோன்ல ஸ்பீக்கர்ல போட்டு கேட்டா போதும்.. 

இவன் இப்படியே ஒவ்வொரு பாட்டையா போட்டு எனக்கு பிடிக்காம ஆக்கிருவானோனு பயமா வேற இருந்துச்சி.. நான் இப்ப இன்னொருக்க என் கைய மெதுவா கைபிடி கம்பியில தள்ளிக்கிட்டே கொண்டு போயி அவன இடிச்சி கொஞ்சமா தள்ளி ஒக்கார பாத்தேன்.. அவன் திரும்பி என்ன ஒரு மொற மொறச்சியான்.. நானே பழைய மாதிரி என் கைய எடுத்துட்டு, என் நஞ்சு போன எலிக்குஞ்சு பொசிசன்ல ஒக்காந்துட்டு அவன பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சேன்.. எனக்கே கேவலமா இருக்கு என்ன நெனச்சி.. இவன் டார்ச்சர்ல இருந்து தப்பிக்கலாம்னு நெனச்சு என ஃபோன எடுத்தேன்.. மதுரையில டிக்கெட்டோட காத்திருக்குற நண்பன் எனக்கு 4தடவ கால் பண்ணிருக்கான்.. ஃபோன் எப்படியோ சைலண்ட் மோடுக்கு மாறிட்டனால எனக்கு கேக்கல..

ஃபோன திரும்ப சவுண்ட் மோடுக்கு மாத்திட்டு என் நண்பனுக்கு நான் ஃபோன் அடிச்சேன்.. அவன் ஃபோன எடுத்து என்னமோ சொன்னான்.. எனக்கு சுத்தமா கேக்கல.. எல்லாம் நம்ம சடங்கு வீட்டு கொழாய் ஸ்பீக்கர மகிமை.. ஆனா சமஸ்தான ராஜாவ எதுவும் சொல்ல முடியாதுல? அதனால கம்முனு பொத்திக்கிட்டு என் கைய ஃபோன் ரிசீவர் பக்கத்துல பொத்துனாப்புல வச்சிட்டு கொஞ்சம் பேசுனேன் நண்பன்ட்ட.. அவன் “டேய் ஒன்னுமே கேக்கலடா.. கொஞ்சம் சத்தமா பேசு”ன்னான்.. நான் என்னத்த சத்தமா பேசுறது? சரினு சொல்லிட்டு என் முழு பலத்தோட சத்தமா பேசுனேன்.. “டேய் இங்க எனக்கு பக்கத்துல ஒரு மலமாடு ஒக்காந்துட்டு சவுண்ட்டா மொக்கத்தனமா சைனா செட்ல பாட்டு கேட்டு உசுர வாங்கிறியான்டா, அதான் ஒன்னும் கேக்கல.. நான் அங்க 9மணிக்கு வந்துருவேன்.. வெயிட் பண்ணு”னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணுறேன், அந்த மலமாடு என்னயே பாத்து மொறச்சுட்டு இருக்கு.. எனக்கு ஏதோ கொஞ்சம் வித்தியாசமா தெரிஞ்சது அப்ப.. அட ஆமா, சடங்கு வீட்டு கொழாய் செட்டு இப்ப ஓடல... நான் என் ஃப்ரெண்டுட்ட கத்துனது எல்லாம் நம்மாளு காதுல தெளிவா விழுந்துருச்சி..

அவன் என்னையே மொறச்சி பாத்துட்டு இருந்தியான். எனக்கு என்ன பண்ணனே தெரில.. ஒரு வேள அடிச்சாலும் அடிச்சிருவானோனு வேற பயமா இருந்துச்சி.. நான் ஒரு மாதிரி அசடு வழிஞ்ச மாதிரி அவன பாத்து சிரிச்சுட்டு கீழ குனிஞ்சி சீரியஸா என் ஃபோன நோண்டுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டேன்.. இப்ப அவன் மெதுவா குனிஞ்சு என் முகத்துக்கு நேரா அவன் முகத்த கொண்டு வந்து மொறச்சி பாத்தியான்.. எனக்கு இவ்ளோ பக்கத்துல அவனோட மொகறைய பாக்கவே பயமா இருந்துச்சி.. “நான் மலமாடா?”னு மண்டைய ஆட்டிக்கிட்டே பல்ல கடிச்சிக்கிட்டே என்ன பாத்து கேட்டான்.. “மதுரேல தான எறங்குற? இரு மகனே ஒன்ன வச்சுக்கிறேன்”னு சொல்லிட்டு அந்த செகண்ட் ஹேண்ட் டப்பா சைனா செல்லுல யாருக்கோ கூப்பிட்டான், “டேய் மாப்ள இங்க பஸ்ஸுல ஒருத்தன் கொஞ்சம் ஓவரா வெளாண்டுட்டான்.. நீ ஒரு எட்டே முக்காக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துரு”னு சொல்லிட்டு என்ன பாத்து மொறச்சுக்கிட்டே சிரிச்சான்.. எனக்கு என்ன பண்ணனே தெரில.. வண்டி இப்பத்தான் திருமங்கலம் வருது.. 

நான் திருமங்கலத்துலயே எறங்கி எஸ்கேப் ஆகிரலாம்னு எந்திரிச்சேன்.. அவன் என்ன பாத்து, “என்ன?”னு கேள்வி கேக்குற மாதிரி மண்டைய ஆட்டுனான்.. “இல்ல கொஞ்சம் அர்ஜென்ட்டா ஒன்னுக்கு வருது.. போயிட்டு வந்துரட்டா?”னு பாவம் போல கேட்டேன்.. “பரவாயில்ல பஸ்ஸுலயே அடிச்சிவிடு”னு சொல்லிட்டு வேற பக்கம் திரும்பிட்டான்.. எனக்கு இப்ப ஒன்னுக்கு கூட வரல.. ஆனா அழுகை தான் பயங்கரமா வர மாதிரி இருந்துச்சி.. சரி நம்ம நண்பன கூப்பிட்டு அவனுக்கு தெரிஞ்ச ஆள கூட்டிட்டு வர சொல்லலாம்னு அவனுக்கு ஃபோன் அடிச்சேன்.. மேட்டர சொன்னேன்..

“டேய் ஏன்டா வரும் போதே பிரச்சனைய இழுத்துட்டு வர?”

“நீ தானடா என்ன கத்தி பேசச்சொன்னா? ஒன்னால பாரு என்ன ஒன்னுக்கு கூட போக விட மாட்றியான்டா.. ஏதாவது பண்ணு.. நீயும் ஒரு 4,5 பேர பெரியாருக்கு கூட்டிட்டு வா”

“போடா எனக்கு வேற வேல இல்ல? அங்க வந்து ஒங்கூட சண்ட போட்டா இங்க யாரு படத்த பாக்குறது? 300ரூ வேஸ்ட் ஆகிரும்.. நீ எப்படியாவது அவன சமாளிச்சிட்டு மெதுவா வா, நான் தேட்டர்ல ஒனக்கு வெயிட் பண்ணுறேன்”னு சொல்லி கால கட் பண்ணிட்டான்.. திரும்ப நான் ரெண்டு மூனு தடவ கூப்பிடுறேன்.. ம்ஹீம் அவன் ஃபோன எடுக்கவே இல்ல.. பஸ்ஸு வேற பெரியார நெருங்கிக்கிட்டே இருக்கு.. எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி.. நாக்கும் தொண்டையும் வறண்டு போச்சி.. என்ன பண்ணனே தெரில..

“பாஸ் தெரியாம சொல்லிட்டேன் பாஸ்.. சாரி.. என்ன விட்ருங்களேன், ப்ளீஸ்”

“எந்த ஊருக்காரன்டா நீயி?”

“சிவகாசிக்காரன் பாஸ்”

“சிவகாசில இருந்து மதுரைக்கு எதுக்கு வர? என்ட்ட அடி வாங்கவா?”

“பாஸ் வேணும்னா நீங்களும் என்ன கெட்ட வார்த்தைல கூட வஞ்சிருங்க.. ஆனா அடிக்கலாம் செய்யாதீங்க”

அவன் நான் பொலம்புறத எல்லாம் கேக்க ரெடியா இல்ல. வழக்கம் போல வேற எங்கயோ பாத்து மொறைக்க ஆரம்பிச்சுட்டான்.. பெரியார் பஸ் ஸ்டாண்டும் வந்துருச்சி.. ”வாப்பா தம்பி”னு என கைய பிடிச்சி கூட்டிட்டு போறான்.. “காப்பாத்துங்க யாராச்சும்”னு கத்த நெனச்சாலும் கத்தவும் பயமா இருக்கு.. பஸ் படில நானும் அவனும் எறங்குறோம்.. கீழ அவன விட பெருசா 4 மலமாடுங்க நின்னுட்டு இருந்ததுங்க.. என்ன அதுங்கட்ட காட்டி, “மாப்ள நாம்பாட்டுக்க செவனேனு வந்துட்டு இருக்கேன், என்ன பாத்து ‘மலமாடு’னு கமெண்ட் அடிக்கிறாய்ன்டா”னு சொன்னான்.. அதுல ஒருத்தன் என்னோட பிடறில அடிக்க வந்தான்.. அப்ப என் ஃபோன் சவுண்ட் குடுத்துச்சி.. “இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?”

எனக்கு பீதியாகிருச்சி.. பஸ்ல வேற இவன் விஜய் பாட்டு கேட்டுட்டு வந்தியான்.. விஜய் ரசிகனாத்தான் இருப்பியான்.. நான் அஜித் ரசிகன், அதும் மொத நாள் மொத ஷோவுக்கு போறவன் தெரிஞ்சா என்ன இன்னும் டார்ச்சர் பண்ணுவானேனு நெனைக்கும் போதே எனக்கு இன்னும் பயம் அதிகமாயிருச்சி.. என்ன பிடறில அடிக்க வந்தவன் அப்படியே நிப்பாட்டிட்டான்... 

“பாஸ் நீங்க தல ஃபேனா?” அந்த மலமாடுகளில் ஒன்னு என்ன பாத்து கேட்டுச்சி.. எனக்கு ஆமானு மண்டைய ஆட்டுறதா, இல்லனு மண்டைய ஆட்டுறதானே புரியல..

“அட சும்மா சொல்லுங்க பாஸ்.. நீங்க தல ஃபேனா?” லேசா ஒரு நல்ல சிரிப்பு சிரிச்சி திரும்பயும் கேட்டான்.. நான் கொஞ்சம் தயக்கமா, “ஆ.. ஆமா”ன்னேன்..

“அட பார்ரா.. பாஸ்ஸு மொதயே சொல்லிருக்கலாம்ல?”ன்னான் என்கூட பஸ்ல வந்த மலமாடு..

“ஏங்க?” நான் என்ன நடக்குதுனே புரியாம கேட்டேன்..

“அட நாங்க எல்லாருமே தல ஃபேன்ஸ் தான் பாஸு.. கைய குடுங்க” இவ்ளோ நேரம் என்ன ஜென்ம விரோதியா பாத்த அந்த மலமாடுகள் கூட்டம் என்ன டக்குனு நண்பனா  ஏத்துக்கிட்டு என் கைய குலுக்குச்சிங்க...

“சரி என்ன காலங்காத்தாலையே மதுரைக்கு?”

“இல்ல தல படம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்கலாமேனு”

“அட நாங்களும் அதுக்கு தான் பாஸு போறோம்.. வாங்க போலாம்”னு என் கூட பஸ்ல வந்த மலமாடு என் தோள் மேல கைய போட்டு தேட்டருக்கு என்ன கூட்டிட்டு போச்சி..

தேட்டர் வாசல்ல நான் இந்த மலமாடுங்க கூட வர்ரத பாத்த என் ஃப்ரெண்டு லேசா மெரண்டுட்டான்.. அவன்ட்ட நடந்த கதையெல்லாம் ரெண்டு பேரும் சிரிச்சுட்டே சொல்லி தேட்டருக்குள்ள போனோம்.. ”சரி சரி படம் ஆரம்பிக்க போது.. தலய பாத்துட்டு வந்து நம்ம கதைய கண்டினியூ பண்ணலாம்”னு சொல்லிட்டு படத்த பாக்க ஆரம்பிச்சோம்.. வழக்கம் போல ட்ரைலர்ல மெரட்டுன தல, படத்துல சொதப்பிட்டாரு.. சோகமா வெளிய வந்தேன்..ச்சே தல இப்படி பண்ணிட்டாரேனு சோகமா வரும் போது, “பாஸு”னு ஒரு குரல் கேட்டுச்சி.. மெல்ல திரும்பி பாத்தேன்.. அந்த மலமாடு தான் என்ன கூப்பிட்டான்.. சிரிச்சுட்டே கை அசைச்சி கூப்பிட்டான்...

படம் நல்லா இல்லாத சோகத்தில் இருந்த நான் கஷ்டப்பட்டு சிரிச்சுட்டே அவன் பக்கத்துல போனேன்.. “என்ன பாஸு சோகமா இருக்கிங்க?”

“படம் நால்லா இல்லையேங்க”

“அட விடுங்க பாஸு.. தல படம் ஃப்ளாப் ஆனா என்ன? தல ஃபேன் நீங்க ஃப்ரெண்ட்டா கெடச்சிட்டீங்கல்ல? தல அடுத்த படத்துல கலக்குவாரு.. அப்ப பாத்துக்கலாம்.. வாங்க நாம ஜானகிராம்ல சாப்டுட்டு சிவகாசிக்கு போலாம்” என் தோள்ல உரிமையோட கைய போட்டு அந்த மலமாடு என்ன சாப்பிட கூட்டிட்டு போச்சி...
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One