இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்....

Tuesday, April 20, 2010

"யே ச்சீ வைடி போன" என்று கோபமாக கத்திக்கொண்டே வராண்டாவில் இருந்து அறைக்குள் நுழைந்தேன்.

"என்ன பாஸு ரொம்ப கோபமா வரிங்க போல?" - நக்கலாக கேட்டான் நண்பன்.

யார் மீதோ இருந்த எரிச்சல் இப்போது அவன் மீதும் எனக்கு வந்தது. ஆனாலும் யாரையும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இவன் என் நண்பன், படிக்கும் போதும் சரி வேலைக்கு சேரும் போதும் சரி, ஒரே அறையில் இவனை கட்டித்தான் நான் மாரடிக்க வேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டார் போலும். இன்னொரு யார் வந்து, அவள். நான் காதலித்து தொலைந்தவள்.

"பாஸு என்ன விஷயம் பாஸு? சொல்லுங்க.." - சொல்லாமல் என்னை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பதுபோல் கேட்டான்.

"ஒரே வெறுப்பா இருக்கு பாஸு"

"என்ன பாஸு ஆச்சு?" - அடுத்தவன் கதைய தெரிஞ்சுக்கிரதுல அவ்வளவு ஆனந்தம்.

"காதல்னு சொல்லிட்டு திரியுற வரைக்கும் சந்தோசமா தான் இருக்காளுக பாஸு. ஆனா கல்யாணம்னு பேச ஆரம்பிச்சா எப்படி பேய் பிடிக்குதுன்னு தெரியுமா?"- விரக்தியும் கோபமும் கலந்து நான் புலம்ப ஆரம்பித்தேன்.

"ஏன் பாஸு? நேத்து கூட நல்லாத்தான பேசிக்கிட்டு இருந்திங்க?"

"இப்போ வரைக்கும் கூட நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்டா. அவங்க வீட்ல மாப்ள பாக்குறதா சொன்னா. அதுக்கு பெறகு தான் சண்டையே ஆரம்பம்"

"இப்போ என்ன கல்யாணம் நிச்சயமா ஆகிருச்சி? மெதுவா உங்க மேட்டர வீட்ல சொல்லவேண்டியது தான?"

"அவளுக்கு பயமா இருக்காம்". சொல்லிக்கொண்டிருக்கும் போதே போன் ஒலித்தது. அவள் தான்.

"ம் சொல்லு"

"..."

"இனிமேல் உன்கிட்ட பேசுனா என்ன செருப்பால அடி. இனிமேல் என்ன தொல்ல பண்ணாத. பேசாம போன வச்சுடு"

என்ன பேசியிருப்போம் என்ற கேள்வியோடு என்னை பார்த்தான் அவன்.

"என்ன கன்வின்ஸ் பண்றாளாம். அதாவது நாங்க கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் சந்தோசமா இருப்போமாம். எங்க அம்மா அப்பாலாம் மனசு ஒடஞ்சு போயிடுவாங்களாம். அதே அவங்க சொல்ற ஆளா கல்யாணம் பண்ணுனா நாங்க மட்டும் தான் கொஞ்ச நாள் கஷ்டப்படனுமாம். மத்த எல்லாரும் நல்ல இருக்குறதுக்காக நாம கஷ்டப்படுறதுல என்ன தப்புன்னு கேக்குறா?"

"நீ போன வாரம் விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு அவள கூட்டிட்டு போனதுக்கு இன்னைக்கு இப்டி ரியாக்சன் வருதா?"

அவன் சீரியசா பேசுறானா இல்ல நக்கலடிக்குறானா என்று தெரியவில்லை. அவனை மறந்து, நான் என் வாழ்கையை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். இந்த பெண்கள் தான் எவ்வளவு மோசமானவர்கள்? சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்று எல்லா வார்த்தைகளும் அவர்களுக்காகவே படைக்கப்பட்டனவா?

வீட்டில் பார்ப்பவனை தான் கல்யாணம் செய்துகொள்வாளாம். அப்பறம் என்ன மயித்துக்கு என்ன லவ் பண்ணுனா? அவளை கண்டமானைக்கு வைதுகொண்டே தூங்கிவிட்டேன்.

இன்று அவளிடம் இருந்து போன் வரவே இல்லை. எஸ்எம்எஸ் அனுப்பாமல் எரிச்சலாய் இருந்தது. இந்த போன் தான் நம்மை எவ்வளவு அடிமை ஆக்கி விட்டது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அவளுக்கு மட்டும் இனி ஒரு எஸ்எம்எஸ்ஸோ காலோ செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கடைசியில் வேறு வழி இல்லாமல் போனில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். என்ன செய்தும் முடியவில்லை. ஆபீஸ் போனில் இருந்து அவளுக்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன். நண்பனிடம் இருந்து இரண்டு முறை போன் வந்தது. வீட்டில் இருந்து ஒரு முறை வந்தது. எதையும் ஏற்கவில்லை. மாலை அறைக்கு வந்தேன்.

"என்ன பாஸு ரெண்டு தடவ போன் பண்ணுனேன், அட்டன்ட் பண்ணவே இல்ல?"

"கொஞ்சம் வேல இருந்ததுடா"

"பொதுவா உனக்கு போன் பண்ணுனா 'உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது'னு ஒரு பாட்டு பாடும், இன்னைக்கு ஒன்னும் வரலையே, தூக்கிட்டியா?" - இன்றும் என்னை புலம்ப வைப்பது என்ற வெறியோடு கிளம்பியிருப்பான் என்று நினைக்கிறேன்.

"அவளே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன், பெறகு அந்த பாட்டு மட்டும் எதுக்கு?"

"மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல, அவ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நீ தான சொல்லிருக்க? அவ உன் லைப்ல பொக்கிஷம்னு நீ தான சொன்ன? இப்போ ஏன் இப்டி பேசுற?"

"யாருடா நல்ல பொண்ணு? அவளா? ஊர் சுத்துறதுக்கும், படம் பாக்குறதுக்கும், எதாவது பிரச்சனைனா போன் பண்ணி அழுகுறதுக்கும், அவளுக்கு பரிச்சைனா என்ன தூங்க விடாம டவுட் கேக்குறதுக்கும் நான் தேவ. ஆனா கல்யாணம் பண்றதுக்கு மட்டும் நான் தேவ இல்லையா?"

"டேய் பொண்ணுங்க சொசைட்டிக்கு ரொம்ப பயப்படுவாங்கடா. படிச்சவளோ படிக்காதவளோ எவளா இருந்தாலும் இந்த சமூகத்துக்கு பயப்படுவா பாஸு. உன்ன கல்யாணம் பண்ணி, நாளைக்கே அவ குடும்பமும் உன்ன ஏத்துக்கிட்டாலும் இந்த ஊர் தப்பா தான பேசும்னு அவ பயப்படுவா"

"கரக்ட்டு தான் பாஸு. இந்த சொசைட்டி இருக்குறனாலதான் அவளுக ஒருத்தன் கூட மட்டும் அடக்கிட்டு வாழுறாளுக. இல்லேனா புருசனையும் கலட்டி விட்டுட்டு வேற யார்கூட வேணும்னாலும் போயிடுவாளுக. காதல் விசயத்துல நமக்கு எதிரா இருக்குற அதே சொசைட்டி கல்யாணத்துக்கு அப்பறம் நமக்கு எவ்வளவு உதவியா இருக்கு?"

"பாஸு ஏன் இப்டி குதர்க்கமா யோசிக்குறீங்க?"

"பெண் கல்வி, பெண் விடுதலைன்னு பேசுறவன எல்லாம் நிக்க வச்சு சுடனும். அவளுக வீட்டுக்குள்ள இருக்கும் போது ஒழுங்கா தான் இருந்தாளுக. என்னைக்கு வெளிய வந்து படிப்பு வேலைனு இறங்குனாளுகளோ அன்னைக்கே கெட்டு நாசமா போயிட்டாளுக."

"டேய் அவள பத்தி பேசும் போது அவள பத்தி மட்டும் பேசுடா. எதுக்கு எல்லா பொம்பளைகளையும் வம்புக்கு இழுக்குற?"

"உனக்கு ஏன்டா கோவம் வருது? நீ எவளையும் லவ் கிவ் பண்ணி தொலைக்குரியா? வேண்டாம்டா. என்ன பாத்தாவது திருந்து."

"ஹி ஹி அப்டிலாம் ஒன்னும் இல்ல. பொதுவா சொன்னேன்"

"முன்னாடிலாம் அவ என்ட மட்டும் தான் பேசுவா. அவ கஷ்டத்தலாம் என்ட சொல்லித்தான் அழுவா. அடிக்கடி சொல்லுவா, நான் காட்டுற மாதிரி பாசத்த வேற யாரும் இந்த உலகத்துல அவ மேல காட்ட முடியாதுன்னு. இப்போ அவளோட எல்லா பிரச்சனையும் தீந்து போயிடுச்சி. இப்போ அவ கஷ்டத்த சொல்றதுக்கு ஆள் தேவ இல்ல. அதனால நான் தேவ இல்ல. இப்போ ஏதோ பார்ட் டைம் வேலைக்கு வேற போறா. அங்க எவனோ இவளுக்கு பிரண்டாம். அவன் அவ்வளவு ஜாலிய பேசுவானாம். என்கிட்டயே சொல்றா பாஸு. என்னால அப்டிலாம் ஜாலிய பேச முடியாதுல்ல அதான் என்ன விட்டுட்டு போயிட்டா"

"அவ மேல சந்தேகபடுறியா பாஸு?"

"அப்படியும் வச்சுக்கலாம். சரி, அவள பத்தி பேசி எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு? நான் தூங்கப்போறேன்"

ஒரு இரண்டு நாள் கொஞ்சம் போர் அடித்தது. யாரிடம் இருந்தும் எனக்கு போன் வரவில்லை. சும்மா ஃபோனை நோண்டிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது எனது கான்டேக்ட் லிஸ்ட்டில் 300 பேர் இருக்கிறார்கள் என்று.. இத்தனை பேரையும் இழந்து நான் அவளிடம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது யாரிடமும் பேசாமல் எதற்கு போன் என்றும் தோன்றியது. போகப்போக எல்லாம் பழகிவிட்டது. நண்பன் மட்டும் எப்போதாவது கேட்பான், அவளிடம் இருந்து போன் வந்ததா என்று. இப்போது அவனும் கேட்பது இல்லை.

நண்பர்களிடம் எல்லாம், 'இப்போ தாண்டா நிம்மதியா இருக்கேன். 'good morning', 'sweet dreams', 'had ur lunch?' 'had ur breakfast?' லொட்டு லொசுக்குனு எதுவும் அனுப்ப தேவ இல்ல. மிஸ்டு கால் வந்ததும் பதறி அடிச்சு போன் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. எத பத்தியும் கவலை இல்லாம சந்தோசமா இருக்கேன்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு ஞாயிற்று கிழமை, மிகவும் போர் அடித்துக்கொண்டிருந்தது. அருகில் இருக்கும் ப்ரொவ்சிங் சென்டருக்கு சென்றேன். மெயில்களை பார்த்த எனக்கு அதிர்ச்சி. அவளிடம் இருந்து வழக்கமான ஓட்டை ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.
"y ram? y v depart? without understanding u nd ur situation even a single sec z my great mistake......sorry ram...... now internal z going on...... im missing ur care on me.......im extremely sorry ram......still now im missing ur care,pasam everything.....anyway im extremely sorry ......sorry ram..... still 2day i dont want 2 loose my ego,dignity.....i left all nd typing 4 u........sorry 4 my hurting.....extremely sorry" - என்றிருந்தது.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சந்தோசமா வருத்தமா குழப்பமா எது என்று புரியவில்லை.. அதைப் படித்ததும் ஒரு மாதிரியாக இருந்தது.

அறைக்கு வந்து நண்பனிடம் விஷயத்தை சொன்னேன்.

'நீ என்ன ரிப்ளை அனுப்புன?" - பெண்களை விட ஆண்கள் அழகாக புரணி பேசுவார்கள் என்பதை இவன் போன்ற நண்பர்கள் தான் உணர்த்துகிறார்கள்.

ஒன்றும் சொல்லாமல் அவனை பார்த்தேன்.

"கரக்ட்டு தான். அவ உன்ன எவ்வளவு பாடு படுத்தியிருக்கா? அவளுக்கு போய் ரிப்ளை அனுப்பிக்கிட்டு. அவாளாம் வருங்காலத்துல நல்ல அனுபவிப்பாடா. 'ஐயோ இவன மிஸ் பண்ணிட்டோமேன்னு' ஏங்குவாடா"

எனக்கு கோவம் வந்து விட்டது.. "டேய் இப்போ ஏன்டா அவளுக்கு சாபம் விடுற? அவ என்னடா தப்பு பண்ணுனா? ஏதோ நான் தான் கோபத்துல அவாட்ட தப்பா பேசிட்டேன். ஆனா, இப்போ அவ வந்து என்ட மன்னிப்பு கேக்குறாடா. அவளைப்போய் இப்டி பேசுற? பாவம் அவளுக்கு அன்னைக்கு என்ன பிரச்சனையோ, என்கிட்டே கொஞ்சம் கோபமா பேசிட்டா, அதுக்கு நானே வருத்தப்படல, உனக்கு என்னடா இவ்வளவு கோபம் அவ மேல? அவளும் ஒரு பொம்பள தான?" என்று சொல்லிக்கொண்டே என் போனில் இருந்து அவளுக்கு கால் செய்தேன்.

"டேய் ஐயம் சாரிமா. its my mistake, நான் தான் உன்ன புரிஞ்சுக்கல..........." என்று பேசிக்கொண்டே வராண்டாவிற்கு சென்றேன். நண்பன் பித்துப்பிடித்தவனைப்போல் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நான் மெதுவாக பக்கத்தில் இருக்கும் செல் போன் கடைக்கு ”உனக்காக தானே இந்த உயிர் உள்ளது” காலர்டோன் வைப்பதற்கு சென்றுகொண்டிருந்தேன்.

4 comments

  1. It seems i've heard this full story and dialogues somewhere.I don't know where i Heard these things and all.I believe u may not have stolen from any of my friends.moreover u have to improve the way of expressing ur ideas in the form of a story.a lot u have to improve

    ReplyDelete
  2. அருமை ராம்குமார். உங்கள் சிந்தனை வித்தியாசமாக, ஆனால் சரியாக இருக்கிறது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One