வண்டிச்சக்கரம் - சிறுகதை

Monday, May 30, 2011

"என்னது? டிராக்டர் ஓட்டிக்கிட்டிருந்த பயலுக்கு வெற்றிவிலாஸ்ல லாரி ஓட்டுற வேலையா?" வாயைப்பிளந்தார் மாயாண்டி, நம்ம குருவம்மா புருஷன் செல்லப்பாண்டியின் மாமனார். ஆமா குருவம்மாவோட அப்பான்னும் சொல்லலாம்.

"ஆமாப்பா. இது வயக்காடு வேல மாதிரி இல்லயாம். தெனமும் வேல இருக்குமாம். மாசம் 3000ரூவா சம்பளம், அது போக தெனப்படி 100ரூவா வரைக்கும் வருமாம்" ஏற்கனவே திறந்திருந்த தன் அப்பனின் வாயை இன்னும் கொஞ்சம் பிளக்கவைத்தாள் குருவம்மா.
"எப்படியோ உருப்பட்டா சரி தான்" வாயை மூடி இயல்புக்கு வந்துவிட்டார் மாயாண்டி. "உன்ன எப்ப கூட்டிட்டு போறானாம்?"

"எப்பா கொஞ்சம் மரியாதயா பேசுங்க, அவர் உங்க மருமவன்". மகளைநேராகப் பார்த்து முறைத்தார் மாயாண்டி.. பிறகு என்ன, நேற்று வரை அவருக்குக் கூட தெரியாத புதுப்புது கெட்ட வார்த்தையில் புருசனை வைதுவிட்டு இன்னைக்கு அப்பனிடம் மரியாதை பற்றி பாடம் எடுத்தால் அவனுக்கு பற்றிக்கொண்டு வராதா?

'நேத்து வரைக்கும் அந்த நாபகம் எங்கம்மா போச்சி?' மனதுக்குள்ளே கேட்டுக்கொண்டார் நக்கலான கோபமுடன். ஆனாலும் அவருக்கு மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. கிட்டத்தட்ட 2மாதம் ஆகிறது அவள் கணவனுடன் சண்டை போட்டு கைக்குழந்தையுடன் வந்து. ஒரு பெண் (கர்ப்பம்) உண்டானதில் இருந்து குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை மட்டும் ஏன் இவ்வளாவு சண்டைகள்? தினமும் ஒப்பாரி, வாரம் இரண்டு முறை செல்லப்பாண்டி வந்து சண்டை என்று அவர்கள் தெருவிற்கே சில காலம் பொழுதுபோக்காய் இருந்தவள் இன்று முதல் ஒழுங்காக வாழப்போகிறாள் புருசனுடன் என்கிற திருப்தி அவருக்கு லேசான சந்தோசத்தை கொடுத்தது.

சந்தோசம் என்பதை விட நம்பிக்கை என்று சொல்லலாம். பின்ன, வெற்றிவிலாஸில் வேலை கிடைப்பது கவர்மென்ட்டில் வேலை கிடைப்பது போன்றது. இனிமேலாவது புருசனும் பொண்டாட்டியும் நன்றாக வாழ்வார்கள் என அவர் நம்புவதற்கு வெற்றிவிலாஸ் தான் வெற்றிகரமான காரணம். மாலையில் அவன் வந்தான். வழக்கமாக கையில் பீடியோடும், உடம்பில் சாராய நெடியோடும் இடுப்பில் இருந்து அவிழ்ந்து விழும் நிலையில் போனாபோகட்டும் என்பது போல இருக்கும் ஒரு கைலியோடும் வரும் செல்லப்பாண்டி இப்போது வெளுத்த வேட்டி கட்டி கலையாக வந்தான். கடைசியாக அவன் தன் பெண்ணுக்கு தாலி கட்டிய தினத்தில் தான் வேட்டி கட்டியதாக ஞாபகம் மாயாண்டிக்கு.

"மாமா....... எப்படி இருக்கீய?" சிரித்துகொண்டே வந்தான்.

'போன வாரம் வந்து தான மானத்த வாங்குன, எப்படி நல்லா இருப்பேன்?'.. "வாங்க மாப்ள நல்லா இருக்கேன்" இவருக்கும் பதிலுக்கு எப்படித்தான் சிரிப்பு வந்ததோ! குருவம்மா அதற்குள் தன் பிள்ளையை தூக்கிகொண்டு அந்த சாக்குப்பையுடன் செல்லப்பாண்டி அருகில் வந்து நின்றுகொண்டாள் முகத்தையே மறைக்கும் சிரிப்புடன். பல நாளைக்கு அப்பறம் இப்போது தான் அங்கு மகிழ்ச்சி. டீ குடித்து விட்டு "போய்ட்டு வாரேன் மாமா, போய்ட்டு வாரேன் அத்த" மாறாத சிரிப்புடன் விடைபெற்றான் செல்லப்பாண்டி.

"ஏங்க இந்தத் தீவாளிக்கு பட்டுச்சேல கண்டிப்பா வாங்கித்தருவீகல்ல?" சைக்கிளின் பின்புறம் இருந்து மெதுவாக எட்டிப்பார்த்துக்கேட்டாள்.

"மொத கடன அடைச்சுக்கிறேன்டீ பொறவு பாக்கலாம். புள்ளய கீழ விழாம பிடிச்சிக்கோ"

உம்மென்று ஆகிவிட்டாள் குருவம்மா. இந்த தீவாளிக்கும் பட்டுச்சேல இல்லேனா எப்படி? அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். வீட்டை நன்றாக நோட்டம் விட்டாள். "இப்படியா வீட்ட குப்ப மாதிரி வச்சுருப்பிங்க?"

"யாத்தா திரும்ப ஆரம்பிச்சுறாத. நீ கம்முனு அங்கிட்டு உக்காந்திரு, நானே தூத்துவிட்டுட்டு உன்ன கூப்பிடுறேன்" இவனுக்கு பைத்தியம் எதுவும் பிடித்துவிட்டதா? இவ்வளவு பொறுப்பாக பேசுகிறானே என்ற ஆச்சரியத்தோடு "வேணா வேணா நானே தூத்துவிடுறேன், பிள்ளய பிடிங்க" அவன் கையில் இருந்த விளக்குமாறை வாங்கிக்கொண்டாள். அவள் தூத்துக்கொண்டிருக்கும் போது சொன்னான், "உனக்கு இந்த தீவாளிக்கு கண்டிப்பா பட்டுச்சேல தான்". அவள் ஒன்றும் சொல்லவில்லை. கவனிக்கவில்லையா இல்லை கவனிக்காதது போல் நடிக்கிறாளா? 

"ஏய் உன்ன தான் சொல்றேன். கண்டிப்பா பட்டுச்சேல தான், சரியா?"

"எதுக்கு உங்களுக்கு செரமம்? நீங்க மொத கடன அடைங்க" நக்கலாக எங்கோ பார்த்துக்கொண்டு செல்லக் கோபத்துடன் சொன்னாள்.

"கடனலாம் ரெண்டே மாசத்துல அடச்சுரலாம், சரியா? ஆனா பட்டுசேல வாங்கணும்னா ஒரு கண்டிசன்"

"என்ன கண்டிசன்? எங்கப்பா கிட்ட குடுக்க இனிமே பத்து வெரல் தான் இருக்கு"

"யே ச்சீ அதெல்லாம் இல்ல. இந்தச்சேல உனக்கு நல்லால்ல. பட்டுச்சேல வாங்கித்தாரேன் இத இப்போ கழட்டலாமா?" குழந்தையை கீழே வைத்துவிட்டு அழுந்தான்.

"மொத குளிச்சிட்டு வேலைக்கு போற வழியப்பாருங்க. சாந்தரம் 5மணிக்கு அங்க இருக்கணும். நாபகம் இருக்குல?" நெருங்கி வந்தவனை லேசாக தள்ளிவிட்டு அடுப்பு வேலையை கவனிக்க சென்றாள்.

"சரி போயிட்டு வந்து கவனிச்சுக்கிறேன்" வேறு வழியில்லாமல் சிரித்துகொண்டு கிளம்ப ஆயத்தமானான்.

"என்னையா ஒழுங்கா ஆக்ஸிடண்ட் பண்ணாம ஓட்டுவியா? இல்ல நீயும் தாலி அறுப்பியா?" வெள்ளை வேட்டி சட்டையுடன் இடது கையில் பிரேஸ்லட்டும் வலது கையில் தங்க நிற கடிகாரத்துடனும் பணத்தை எண்ணி பாங்க சலானில் நிறப்பிக்கொண்டே பேசினார் முதலாளி.

"அதெல்லாம் நல்லா ஓட்டுவேன் அண்ணாச்சி"

"எல்லா பயலும் ஆரம்பத்துல இப்படித்தான் சொல்றான், கடைசில எங்கயாவது முட்டிக்கிட்டு வந்து நம்ம தாலிய அறுப்பாய்ங்க" அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் கேட்க செல்லப்பாண்டிக்கு ஒரு மாதிரியாய் இருந்தது.

 "என்னத்த ஓட்டுவியோ. இந்தா பிடி சாவிய" சாவியைத் தூக்கி மேஜை மீது போட்டார். "அண்ணே செல்லப்பாண்டியண்ணே கரும்பு லோடு ஏத்தணும் கொஞ்சம் டிராக்ட்டர் எடுத்துட்டு வாங்கண்ணே" - ஏனோ பழைய ஞாபகம் வருவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. "வெளிய கணக்குப்பிள்ள கிட்ட கேட்டுக்கோ எங்க போணும்னு"

சாவியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியில் வந்தான். எவ்வளவு பெரிய மில்? பேசாம இந்த ஆளுக்கு மருமகன் ஆகியிருக்கலாம் என்று ஒரு நொடி யோசித்தான். "எலேய் அங்க என்ன பார்வ? இங்கவா" கணக்குப்பிள்ளை குரல் வந்த திசை நோக்கி நடந்தான். "அப்படி ஆகிருந்துச்சினா இந்த கணக்குப்பிள்ளலாம் என்ன வைவானா? ஏன், அந்த மொதலாளியே என் கிட்ட பம்மிக்கிட்டு தான பேசுவான்?" கணக்குப்பிள்ளை அருகில் வந்ததும் கற்பனை கடிவாளம் போட்டு நின்றது. இன்னைக்கு நைட்டு நீ நம்ம செவாசி ராலி செட்ல இருந்து.." செல்லப்பாண்டி சிரித்துவிட்டான்.

"ஏம்லே சிரிக்குற?"

"இல்லண்ணாச்சி, அது ராலி இல்ல லாரி"

"கொழுப்புடா ஒனக்கு. சரி அங்க இருந்து லோடு ஏத்திட்டு அருப்புக்கோட்ட போகணும். நைட்டு 10மணிக்கு வந்துரு, சரியா?"

"சேரிண்ணாச்சி" விடை பெற்றான். "எலேய் சாவிய  குடுத்துட்டு போ"

"அய்யயே ஒங்க லாரிய ஒன்னும் பண்ணிட மாட்டேன். இந்தாங்க ஒங்க சாவி" கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

இரவு வண்டியை எடுத்துக்கிளம்பும் போது  அவன் கையில் ஒரு செல்போன் கொடுக்கப்பட்டது. "இந்தா போன். எதும் பிரச்சனனா கூப்டு"

"சரிண்ணே" சாமி கும்பிட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினான். 10 மணி என்பது இவர்கள் பாசையில் இரவு 1மணி போல. மெதுவாக சென்றான். போன் மணி அடித்தது. "டேய் பாண்டி, காலைல 6மணிக்கு தான் குடவுன் தெறப்பாய்ங்க. நீ வழில வண்டிய போட்டுட்டு தூங்கிட்டு போ"

"த்தாளி மொதயே சொல்லித் தொலஞ்சுருந்தாய்ங்கன்னா வீட்ல இருந்து மெதுவா கெளம்பிருக்கலாம்" முன்முனுத்துக்கொண்டே வண்டியை ஆள் அரவம் இல்லாத சாலையின் மரத்தடியில் ஓரம் கட்டினான். அலாரம் வைத்தது போல் 4மணிக்கு எழுந்து வண்டியைக் கிளப்பினான்.


விருதுநகரைத்தாண்டி வில்லிபத்திரியில் போய்க்கொண்டு இருந்தான். 'டம்' என்று ஒரு சத்தம். வண்டி வலது புறம் எதிலோ ஏறியது போல் லேசாக குழுங்கியது. செல்லப்பாண்டிக்கு திக்கென்று ஆகிவிட்டது. கண்ணாடியில் பார்த்தான் ஒரு வண்டி நசுங்கிக்கிடந்தது. ஆள் தெரியவில்லை. உடம்பெல்லாம் வியர்த்து கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தன் கவனக்குறைவா வந்தவனின் அலட்சியமா தெரியவில்லை. முதல் நாளே இப்படியா ஆண்டவா என்று விதியை நொந்து கொண்டு வண்டியை நிறுத்தாமல் வேகமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தை நோக்கிப்போனான்.

அந்த நிலையில் அவனுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை. வண்டியில் முன் பக்கம் இருந்து மிக மெலிசாக 'டக் டக்' என்று ஏதோ தட்டப்படும் சத்தம் கேட்டது. வழியில் வரும் ஒன்றிரண்டு பேரும் இவன் வண்டியைப்பார்த்து கையைக் காட்டி நிறுத்தச்சொன்னார்கள். மிகுந்த பதற்றத்துடன் வேகமாக மல்லங்கிணறு  காவல் நிலையத்தில் வண்டியை நிறுத்தினான். 

வெளியில் நின்ற காவலர் "யோவ் யோவ் மெதுவா நிறுத்துயா" வண்டியின் கீழே பார்த்துவிட்டு அவனும் பதறினான். வண்டியை காவல் நிலையம் ஒட்டிய அந்த இறங்குமுகமான சாலையில் நிறுத்தினான். போலிஸ்காரன் வண்டியின் முன்பக்கம் எதையோ நோக்கி ஓடினான். இவன் இறங்க ஆயத்தமான போது சாலையில் சருகலில் வண்டி இறங்கியது. ஏதோ ஒன்றின் மீது நசுக்கி ஏறுவது போல் தோன்றியது செல்லப்பாண்டிக்கு. போலிஸ்காரன் தலையில் அடித்துக்கொண்டான். "டேய் எறங்குடா கீழ" கழுத்தைப்பிடித்து கீழே இறக்கப்பட்டான்.

அப்போது தான் அதை செல்லப்பாண்டி பார்த்தான். இத்தனை நேரம் இடி பட்டவன் வண்டியின் முன்புறம் பிடித்துக்கொண்டு தட்டிக்கொண்டே வந்திருக்கிறான். இவன் அதை உணராமல் இப்போது அவன் மீதே ஏற்றி விட்டான். நல்ல லேசான ஊதா நிற சட்டை அணிந்து அதை கறுப்பு நிற பாண்டிற்குள் நேர்த்தியாக விட்டிருக்கிறான். காலில் ஷூ இடுப்பில் பெல்ட்டில் சொருகியிருக்கும் செல்போன் கூடு. தலை மட்டும் தான் இப்படி எதுவும் சொல்ல முடியாத படி ரோட்டோடு ஒட்டியிருந்தது. செல்லப்பாண்டிக்கு வாந்தியும் அழுகையும் ஒரு சேர வந்துவிட்டது. வாயை பொத்திக்கொண்டு காவல் நிலையத்திற்குள் சென்றுவிட்டான்.

காவல் நிலையம் முன் ஒரு காவலரின் கண் எதிரிலே அது ஒரு சுத்தமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விபத்தாக மட்டுமே நடந்தது. சாலையிலும் வண்டி இவன் லாரியின் வலதுபுறம் வந்தே மோதியதால் இவன் மீது குற்றம் இல்லை என்பதை எப்படியோ நிரூபித்து கொண்டுவந்துவிட்டார் இவன் முதலாளி. வேலையை விட்டு தூக்குவார் என்று பார்த்தால் அவரே ஜாமினும் எடுத்து விடுதலை பெறவும் உதவி செய்தார். "டிரைவர் வேலைக்கு ஆளே கெடைக்க மாட்டெங்குதுல, அதான்" என்று காதைக் கடித்தார் கணக்குப்பிள்ளை.

"ஏன்டா கைல தான் போன் இருக்குல, ஏத்துனவொடனே என்ன கூப்ட வேண்டியதுதான?"

"ஒங்க நம்பர் தெரியாது அண்ணாச்சி, அதான். பதட்டத்துல வேற இருந்தேனா அதான் கையும் ஓடல காலும் ஓடல"

"சரி என் நம்பர வாங்கிக்கோ.  இதெல்லாம் தொழில்ல சகஜம். இதுக்கு பயந்துட்டு வேலைக்கு வராம போயிறாத. சரியா?"

உண்மையில் வேலைக்கு வரவில்லை என்று சொல்லத்தான் அங்கு வந்தான் செல்லப்பாண்டி. முதலாளியே சொல்லியவுடன் வேலையை விட்டு செல்லும் முடிவை தூக்கிப்போட்டான். "இனிமே இது மாரி எதும் ஆச்சின்னா என்ன கூப்டு, என்ன?"

"சரிண்ணாச்சி"

வீட்டில் வேலை போய்விடும் பயத்தில் இருந்த குருவம்மாளுக்கு இது இனிமையான செய்தியாக இருந்தது. "இனிமேலாவது பாத்தி வண்டி ஓட்டுங்க. உங்களுக்கு எதாவது ஆயிருந்திருச்சினா?"

"அதெல்லாம் நாம் பாத்துக்கிறேன்"

அன்றிலிருந்து பல விபத்துகளை செய்துவிட்டான். எல்லாமே ஸ்பாட் மரணங்கள். குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொலைகள் அவனுக்கு பழகிப்போயின. அவன் செய்த முதல் விபத்தைத் தவிர வேறு எதுவும் குருவம்மாளுக்கு தெரியாது. முதல் விபத்தை மட்டும் முதலாளியிடம் சொல்லாமல் விட்டவன் அதற்குப் பின் அவருக்குத் தெரியாமல் ஒருவன் கதையையும் முடித்ததில்லை.

"மொதலாளி ஒருத்தன் கால்ல ஏத்திட்டேன். இன்னும் உசுரோட தான் இருக்கான். அப்டியே வழக்கம் போல வேமா வந்துரவா?"

"எலேய் அடிபட்டு  செத்துப்போனா மட்டும் தான் வேமா வரணும். இவன் சாகலேல?"

"என்னைய கைய காட்டி காப்பாத்த கூப்டுறான் மொதலாளி"

"பொழச்சான்னா நம்ம தாலி தான் அறுபடும். அவன ஏத்திட்டு வேமா வந்துரு. செத்துரணும்டா அவன், பாத்துக்கோ" இவன் சரி என்று சொல்வதற்குள் முதலாளி போனை வைத்துவிட்டார்.

வண்டியில் ஏறினான். சாவியைப்போட்டு ரிவர்ஸ் கியருக்கு மாற்றினான். தன் ரப்பர் செருப்பு அணிந்திருக்கும் கால்களால் அந்த மஞ்சள் நிற எமனை பின்னோக்கி செலுத்தினான். கண்ணாடியில் அடிபட்டு இருப்பவன் 'வேண்டாம் வேண்டாம்' என்று செய்கை செய்வது தெரிந்தது. கண்ணாடியில் தூரமாக தெரிந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன் சாவை அருகில் பார்த்துக்கொண்டிருந்தான். வண்டி பூப்போல மெதுவாக அவன் உடலில் ஏறி இறங்கியது இரண்டு முறை.

முதன்முதலாக விபத்தையே கொலை என்று பயந்த செல்லப்பாண்டியின் மனம் இப்போது ஒரு கொலையை விபத்தாக மாற்றிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றுக்கொண்டது. ஒரு வருடம் ஆகப்போகிறது இவன் லாரி ஓட்ட ஆரம்பித்து. அதற்குள் 6விபத்துகள், உண்மையில் 2விபத்துகள் 4 கொலைகள்.

ஆனால் குருவம்மாளுக்கு எதுவும் தெரியாது. தன் புருசன் மிகவும் ஒழுங்காக வண்டி ஓட்டுவதாக நினைத்துக்கொண்டிருந்தாள். கடனை அடைத்துவிட்டான். அவளுக்கு ஒரு கம்மலும் புது மூக்குத்தியும் வாங்கிக்கொடுத்துவிட்டான். இன்னும் பட்டுச்சேலை மாட்டும் தான் பாக்கி. இன்னும் இரண்டு மாதத்தில் தீபாவளி. ஆனால் எப்படியும் வாங்கிக்கொடுத்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை இருவருக்கும்.

தீபாவளி போனஸ் 6000ரூபாய் வாங்கிக்கொண்டான். முதலாளி இரவில் மதுரைக்கு வரச்சொல்லி கொடுத்தார். இந்த இரண்டு மாதங்களில் ஒரு விபத்து கூட நடக்கவில்லை. செல்லப்பாண்டிக்கு ஒரு விதமான சலிப்பு வந்துவிட்டது, கொலையே செய்யாமல். ஆனால் மனதில் ஒரு நிறைவு இருந்தது சட்டை நிறைந்ததால். பட்டுச்சேலை எடுக்க வீட்டிற்கு விரைந்தான் வண்டியில்.

திருமங்கலம் தாண்டி நான்குவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தான். இவ லாரியை பைக்காரன் சைட் எடுத்து முந்தினான். தலையை சாய்த்துக்கொண்டு செல்போனில் பேசியபடி வண்டியில் போனான் அவன். லாரிக்கு முன்புறம் இன்னொரு லாரி செல்வதை அவன் கனிக்காமல் சைட் எடுத்தான். திடீரென்று அதை உணர்ந்தவன் பதட்டத்தில் தள்ளாடி செல்லப்பாண்டியின் சக்கரத்தின் பல நாள் பசிக்கு இரையானான். வண்டியை நிறுத்திய செல்லப்பாண்டி மெதுவாக இறங்கி வந்தான். தலை நசுங்கியிருந்தவன் அழகாக இருந்திருக்க வேண்டும் என்பதை அவன் உடலின் மற்ற பாகங்கள் கூறின. மெதுவாக கொஞ்சம் தள்ளி விழுந்திருந்த செல்போனை எடுத்து காதில் வைத்தான்..

"என்னங்க என்னங்க, என்ன ஆச்சி" எதிர் முனையில் ஒரு பெண்குரல். இவன் மனைவியாக இருக்கலாம்.

"ஏய் அறிவில்ல உனக்கு? வீட்டுக்கு வரதுக்குள்ள என்னடீ அவசரம்? வண்டில போறவன போன் போட்டு கொன்னுட்ட. என் லாரில விழுந்து செத்துப்போயிட்டான். வந்து சொரண்டி எடுத்துட்டுப்போங்க. சந்தோசமா தீவாளி கொண்டாடு"

"...த்தா வந்து வாய்க்குறாய்ங்க பாரு நம்ம வண்டில விழுந்து சாகணும்னே" போனை தூக்கி எறிந்து சென்றுவிட்டான்.

மறுநாள் குருவம்மாள் மற்றும் விஷாலுடன் - ஆமா அவன் மகன் பேரு தான் - சைக்கிளில் தீபாவளிக்கு துணிமணி எடுக்க சென்றுகொண்டிருந்தான். புது ஜவுளி, பலகாரம் எல்லாம் வாங்கிக்கொண்டு சாயந்திர வேளையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். விஷால் நிறுத்தமாட்டாமல் அழுதுகொண்டிருந்தான். சைக்கிளில் சரியாக உட்காராமல் துருத்ருத்துக்கொண்டிருந்தான். குருவம்மாவால் அவனை அடக்க முடியவில்லை. இவனுக்கும் சைக்கிள் லம்பியது. அவன் ஊருக்கு போகும் பாதைத்திருப்பத்தில் மூவரும் விழுந்தனர். இவர்களுக்குப்பின் வந்த கார் டக்கென்று வெலகியது. ஆனால் காரைத்துரத்தி வந்த லாரிக்கு  இதைக்கவனிக்க எல்லாம் நேரம் இல்லை.

என்ன நடந்தது என்று உணர்வதற்குள் எல்லாம் முடிந்தது. முனகல் சத்தம் கேட்ட செல்லப்பாண்டியால் கண் திறக்க முடியவில்லை. லேசாக சத்தம் காதில் விழுந்தது. "மொதலாளி மூனு பேரு யாரும் சாகல, ஆனா கை காலு நஞ்சுபோயிருக்கு. " இரு இடைவெளிக்குப் பின் "சரி முதலாளி"

செல்லப்பாண்டியின் காதில் மனைவியின் கதறலும் குழந்தையின் அழுகையையும் மீறி அந்தப் பின்னோக்கி வரும் லாரியின் சத்தம் நிறைந்து ஒலித்தது...

சலூன் கடை - கவிதை

Sunday, May 8, 2011

இருக்கும் தொல்லைகளில் பெரிய தொல்லை
ஞாயிற்றுக்கிழமையில் முடி வெட்ட செல்வது தான்..
விடுமுறை தினங்களில்
திரையரங்கிற்கு அடுத்த படியாக
கூட்டம் கூடி - காத்திருத்தலில்
நமக்கு எரிச்சலைத் தருவது
இந்த சலூன் கடைகள் தான்..

சிறு வயதில் இருந்து
'ஒரே அம்பட்டன் கிட்டத்தான்
மசிர குடுக்கணும்' என்பார் அப்பா..
அவருக்குத் தெரியாமல் சென்ற
திருமுருகன் சலூன் - எங்கள் ஊரின்
முதல் குளிரூட்டப்பட்ட ஆண்கள்
அழகு நிலையம்! - ஆம்
அது சலூன் இல்லை.

சுவரில் ஒட்டியிருந்த
கையில் மைக்கோடு
வெள்ளை ஆடை அணிந்த
கறுப்பு மைக்கெல் ஜாக்சனும்
காதிலிருந்து வாய்க்கு நீட்டப்பட்ட மைக்கோடு
கறுப்பு ஆடை அணிந்த
வெள்ளை மைக்கெல் ஜாக்சனும்
வேறு வேறு என்றே நினைப்பேன் அப்போது..

பெரும்பாலும் யார் என்றே தெரியாத
வேற்று மொழி நடிகர்களும்
நடிகைகளுமே சுவரில் - ஆனால் தெரிந்த
முகங்களை விட அழகாக..
அங்கு இருக்கும் இரண்டே தெரிந்த முகம்
சச்சினும் சலூன்காரனும்..
புசு புசுவென்று வெட்டாத (வெட்ட முடியாத)
முடியைக் கொண்ட சச்சினுக்கு
இந்த சுவரில் என்ன வேலை
என்றெல்லாம் யோசித்ததில்லை அப்போது..

தலையில் முடிவெட்டுபவர் தண்ணீரை
ஸ்ப்ரே பண்ணும் போது - மனதில்
ஒரு சின்ன சந்தோசம் அந்த
கொஞ்சமான குளிர்ந்த நீரின் கிளர்ச்சியில்..
'டேய் தண்ணி விடாதடா பிள்ளைக்கு
சளி பிடிச்சுரப்போகுது'
தடுத்துவிடுவார் அப்பா..
கோவம் வரும் அவர் மேல்
தண்ணீர் கிளர்ச்சியை நிப்பாட்டியதற்காக
மட்டும் இல்லை - முடிவெட்டுபவரை
'டேய்' என்று விளித்ததாலும்..

சைக்கிளில் வீடு வரும் போது
'ஏன்ப்பா அந்த அண்ணன
டேய் வாடா போடானு சொல்றிங்க?'
என்னிடம் கோபமாக 'என்னது அண்ணனா?'
பிடரியில் வலிக்குமாறு தட்டினார்.
'அவனலாம் அப்படித்தான் சொல்லணும்
என்ன புரிஞ்சதா?' என்பார்
அப்பாவிற்கு பயந்தா இல்லை
வயதில் மூத்தவரை மரியாதை
இல்லாமல் கூப்பிடுவதில்
இருக்கும் ஒரு குரூர சந்தோசமா
தெரியாது - நானும் அன்றில் இருந்து
'யோவ் ஒட்ட வெட்டிராத'
என்று ஒருமையில் அழைக்க ஆரம்பித்தேன்.

இன்று வரை அப்படித்தான்
இதோ இப்போது தாடியை
எடுக்கும் போது என்
மூக்கின் அருகில் இரண்டு
கன்னங்களிலும் விரல்களைப்
பதித்தவாறு அவனின்
உள்ளங்கை அதில் ஒருவித
அசிங்கமான பலரின்
புழுக்கம் கலந்த ஈர வாடை.
'யோவ் கைய எடுய்யா
ரொம்ப நாறுது' கையை தட்டிவிட்டேன்.

'தெரியாம தம்பி' என்றார்.
பக்கத்து இருக்கையில் ஒரு
கல்லூரி மாணவன் போன்றவன்.
அவனுக்கு முடி வெட்டும்
பள்ளி மாணவன் போன்றவன்.
"கைய தூக்குங்க அண்ணே
கம்மங்கூட்டில் முடி எடுக்கணும்" என்றான்.
'இருக்கட்டும் தம்பி
வீட்ல நானே எடுத்துக்கறேன்' என்று
சிரித்த முகத்தோடு கூறிச்சென்றான்.
அவமானத்தோடு நானும்
பொறாமையோடு
எனக்கு முடி வெட்டிய அண்ணனும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One