செல்லாக்காசு...

Tuesday, February 22, 2011

"ஆமா பயர் ஆபிசுல வேல செய்ற ஆளுக்கு இது ரொம்ப முக்கியம் பாருங்க" - தனக்கு சீதனமாக வந்த இரும்பு பீரோவுக்குள் அப்பா அதை பார்த்துக்கொண்டிருக்கும் போது தான் அம்மா இப்படி கத்தினார்.

"நான் அதப்பாக்கலத்தா. நீ எதும் துட்டு கிட்டு ஒளிச்சு வச்சுருக்கியான்னு பாக்குறேன்" - என்னையும் தம்பியையும் பார்த்து கணடித்துக்கொண்டே சொன்னார் அப்பா.

சமையல் வேலையை அப்படியே போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தார் அம்மா. "ஒருக்க சொன்னா அறிவு இருக்காது?" அப்பாவை பீரோவிடம் இருந்து தள்ளி விட்டு, தான் இப்போதும் காசை ஒளித்து வைத்துள்ள புது இடத்தை தன் கணவன் கண்டுபிடித்து விட்டானே என்கிற ஏமாற்றத்தால் அழுதுகொண்டே பொறிய ஆரம்பித்தார், "என்ன ஜென்மமோ எனக்குன்னு வந்து வாச்சிருக்கு. இருக்குறத எல்லாம் இப்படி புடிங்கிட்டு போறதுக்குன்னே இருந்து என் உயிர வாங்குது".

ஆனால் அப்பா உண்மையில் காசை எடுக்கப்போகவில்லை என்பது அம்மாவுக்கு தெரியும். இருந்தாலும் தன் ஆற்றாமையாலும் குடும்பத்தை காப்பாற்ற இந்த மனிதன் என்ன தான் செய்யப்போகிறாரோ என்கிற அக்கறையுமே அவரை இப்படி பேச வைத்தது. சமைத்துக்கொண்டே தன் ஏச்சை தொடர்ந்தார்.

"ஒவ்வொரு வீட்லயும் ஆம்பள, பொண்டாட்டி பிள்ளைகளுக்கு என்னென்னமோ செய்துங்க.. ஆனா இங்க ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல. பிள்ளைக படிப்புல இருந்து வீட்டுக்கு சாமான் வாங்கிப் போடுறது வரைக்கும் எத பத்தியும் கவல இல்ல. எப்ப பாத்தாலும் பீரோலுக்குள்ள நோண்டிக்கிட்டே இருக்குறது" புலம்பலோடு சமையலும் சேர்ந்து கொதித்தது.

"நான் காசு எடுக்கப்போகலத்தா. நேத்து எங்கூட வேல செய்ற பையன் ஒருத்தேன் அந்த காலத்து பழய காசு ஒன்னு குடுத்தான். அதத்தான் பீரோலுக்குள்ள வைக்கப்போனேன்" அப்பாவின் தன்னிலை விளக்கம் அம்மாவை இன்னும் அதிகமாக கோபப்படுத்தியது. ஏனென்றால் அப்பவுக்கு எங்கள் மீது எவ்வளவு பாசம் உள்ளதோ அதே அளவுக்கு தான் சேர்த்து வைத்திருக்கும் அந்தக்கால செப்புக்காசில் இருந்து, மன்னர் கால காசு, ராமர் பட்டாபிஷேக காசு, வெளிநாட்டு நாணயம் என்று பலவிதமாக சேர்த்து வைத்திருந்தார். தினமும் சாமி கும்பிட மறந்தாலும் தன் பொக்கிஷங்களை பார்க்க மறப்பதில்லை. காலையும் மாலையும் அவைகளைப்பார்த்து வெறுமையாக ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டே இருப்பர்.. அதிலும் அந்த ராமர் பட்டாபிஷேக காசு அவருக்கு மிகவும் பிடித்தது. அதை கொண்டுபோய் சாமிப்படத்துக்கு அருகில் வைத்தார்.

"அந்த ஒன்னத்துக்கும் ஒதவாத செல்லாத காச அவேங்கிட்ட எவ்வளவு ரூவா குடுத்து வாங்குனிங்களோ? இந்த புள்ள ரெண்டு நாளா வகுப்புக்கு வெளிய நிக்குது பீஸ் கட்டாததால." என்னை காட்டி அம்மா சொன்னார். "அத பத்தி எதாவது அக்கற இருக்கா உங்களுக்கு? புள்ள இங்கிலிஸ் மிடியத்துல படிக்கணும்னு ஆசப்பட்டா மட்டும் போதாது, அது படிக்குறதுக்கு காசு, வருசா வருசம் யூனிபாமு எல்லாம் எடுத்து குடுக்கணும்." வைது கொண்டே அப்பாவுக்கு தூக்காளியில் சோறை எடுத்து வைத்தார்.

அப்பா என்னைப்பார்த்தார். "அப்பாவால ரெண்டு நாளா வெளிய நின்னியாப்பா" கேட்க்கும் போதே அவரின் கண்கள் சுருங்கி, மூக்கு விரிந்து அழுவது போல் ஆகிவிட்டார்.

"இல்லப்பா நாளைக்கு தான் கடைசி டேட்டு. அம்மா சும்மா சொல்றங்க" - ஏழு வயது குழந்தை பொய் பேசாதே..

"ஆமாப்பா இப்படி சொல்லு, உங்க அப்பா அப்பத்தான் இன்னும் ஒரு வாரம் இழுத்தடிப்பாரு. வந்து வாச்சதுதான் அப்படினா, நான் பெத்ததும் அதுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கு. பீஸ் கட்டாம நெஜமாவே ரெண்டு நாள் வெளிய நின்னா தான் உனக்கு அறிவு வரும்" - அம்மா பயமுறுத்தினார்.

'எப்படியாவது கொண்டுவந்துருங்கப்பா' என்று சொல்வது போல் அப்பாவைப்பார்த்தேன்.

என்னை கவனித்துவிட்டவர் இப்படி சொன்னார். "பிள்ளைய வையாதத்தா. எம்புள்ளை ஒன்னாம் கிளாஸ் படிக்கும் போதே எவ்வளவு அறிவா பேசுது. நீ ஒன்னும் கவலப்படாத தம்பி, அப்பா ஒனக்கு நாளைக்கு ஸ்க்கூலுக்கு போகும் போது கரக்ட்டா குடுக்குறேன். சரியா?"

"யப்பா நான் போன வருஷம் தான் பஸ்ட் ஸ்டேண்டர்ட். இப்ப செகண்ட்" இரண்டு விரல்களைக்காட்டி நான் சொன்னேன். இது வேறயா என்பது போல் அப்பா தலையை சொறிந்தார்.

"ம்க்கும் பிள்ள ஒன்னாம் கிளாஸ் படிக்குதா ரெண்டாம் கிளாஸ் படிக்குதானே தெரில, இந்த வள்ளலுல இவரு நாளைக்கு கரக்ட்டா குடுப்பாராம். டேய் ராம்குமாரு நீ பெசாம உங்க அப்பா காசு குடுக்குற வரைக்கும் பள்ளிடம் போகாத. ஒன்னத்துக்கும் வக்கில்லாத இந்த மனுசனுக்கு அப்படியாவது புத்தி வந்து உனக்கு காசு குடுக்குறாரான்னு பாப்போம்" 

பழைய சோறை சட்டியில் இருந்து எடுத்து வட்டிலில் வைத்துக்கொண்டிருந்த அப்பா "இப்ப என்ன என்னத்தா பண்ண சொல்ற? அதான் நாளைக்கு குடுக்குறேன்னு சொல்லிட்டேன்ல? கொஞச நேரம் அனத்தாம இரு, மனுசன் வேலைக்கு கெளம்புற நேரத்துல" அம்மாவை பார்க்காமல் தரையை பார்த்துக்கொண்டே சொன்னார்.


"நாளைக்கு கொண்டுவந்து கிழிக்குறதத்தான் பாப்போம்" சொல்லிக்கொண்டே அம்மா தீப்பெட்டி ஒட்டும் முக்காலியை எடுத்து வந்தாள். 

"இப்ப எதுக்கு கெட்டு ஒட்டாப்போற? பிள்ளைய பள்ளிடத்துக்கு கெளப்பிவிட்டுட்டு ஒட்டு" அப்பாவுக்கு அம்மா கெட்டு ஒட்டுவது பிடிக்காது. வீட்டில் ஆண் தான் இருக்கும் போது தன் மனைவி சம்பாதிப்பது தனக்கு ஒரு அசிங்கம் என்று கருதினார். அதானால் அம்மா எப்போது கெட்டு ஒட்ட உட்கார்ந்தாலும் எதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அப்பா என்ன சொன்னாலும் அம்மா கண்டுகொள்வதே இல்லை.

"இன்னைக்கு அவனா கெளம்புவான். தம்பி இன்னைக்கு நீயா கெளம்பு. அம்மா கெட்டு ஒட்டுனாதான் உனக்கு பீஸ் கட்ட முடியும். அப்பறம் நீயும் தெல்லாம் எப்ப பழகுறது? ரெண்டாங்கிளாஸ் படிக்குற நீயா கெளம்ப பழகிக்கோ"

"அவனுக்கு நீ கெட்டு ஒட்டி தான் பீஸ் கட்டணுமா? பெறகு நான் எதுக்கு இருக்கேன்? அதான் நாளைக்கு கொண்டுவரேன்னு சொல்றேன்ல? ஏன் இப்டி செய்ற?"

"சாப்ட்டு முடிச்சுடிங்கல்ல? மதியத்துக்கு சோறு தூக்காளில எடுத்து வச்சுருக்கேன். அத எடுத்துட்டு உங்க வேலைய பாக்க கெளம்புங்க. எனக்கும் நெறய வேல இருக்கு" அப்பாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் அம்மா கெட்டு ஒட்டுவதில் மும்முரமாக இருந்தார்.

அப்பா ஒன்றும் சொல்லாமல் பீரோவுக்குள் இருக்கும் தன் பொக்கிஷங்களை மறுபடியும் ஒருமுறை பார்த்துவிட்டு வேலைக்கு சென்றார். அப்பா சென்றதும் அம்மா எழுந்து என்னையும் தம்பியையும் பள்ளிக்கு கிளப்பினார். தம்பி இப்போது பால்வாடியில் படிக்கிறான். அவனுக்கு பீஸ் எல்லாம் கெடையாது. ஏன் எல்லா ஸ்கூலும் பால்வாடி மாதிரி இருக்கக்கூடாது என்று நான் அடிக்கடி நினைப்பேன்.

"இங்க பாருப்பா அம்மாவும் அப்பாவும் சண்ட போடுறாங்க, பள்ளிடத்துக்கு பீஸ் கட்ட முடியல அப்டினுலாம் நீ ஒன்னும் பயப்படாத. எதுக்கும் பயப்படாம நீ நல்லா படிக்கணும் அவ்வளவு தான். சரியா?" என்னை குளிப்பாட்டிக்கொண்டே அம்மா சொன்னார்.

"இன்னைக்கு நைட்டு அப்பா பீஸ் கொண்டுவருவாங்களாமா?"

"கண்டிப்பா கொண்டுவருவாங்கப்பா. நாளைக்கு நீ கண்டிப்பா பீஸ் கட்டிரலாம், சரியா?" ஒவ்வொரு முறை டேர்ம் பீஸ் கட்டும் போதும் இதே மாதிரி தான் நானும் அம்மாவும் பேசிக்கொள்வோம். ஆனால் அப்பா எந்த டேர்ம் பீசும் சரியான தேதியில் கொடுத்ததில்லை. எங்களை கிளப்பி அம்மா ஸ்கூலில் கொண்டு வந்து விட்டார். "இந்த தடவனாலும் கடைசி டேட்குள்ள கட்டுங்க" வகுப்பின் கடைசி மூலையில் இருந்து வெளியில் நிற்கும் அம்மாவை பார்த்து மிஸ் சொன்னார். சொன்னார் என்பதை விட கத்தினார் என்று சொல்லலாம். "சரி மிஸ்" அம்மா வேறொன்றும் சொல்லவில்லை. அன்று முழுவதும் அந்த மிஸ் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது போல இருந்தது எனக்கு.

மதியம் அம்மா சோறு கொடுக்க வந்தார். "காலைல டிக்டேசன்லாம் சரியா எழுதுனியா? - அம்மா

"நானும் மதனும் தான்மா பஸ்ட்டு. நைன்ட்டி நைன் மார்க்" நோட்டை காட்டினேன். கன்னத்தை பிடித்து கிள்ளினார். "calcutta சரியா எழுத தெரியாதா? ரெண்டு T வரும்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன்? இப்ப பாரு அந்த மதன் உன் மார்க்கு எடுத்துட்டான். சரியா எழுதிருந்தா நீ 100மார்க் வாங்கிருப்பில?" நான் 100 மார்க் எடுத்திருந்தாலும் அம்மா அதிலும் திருப்தி இல்லாமல் அடிப்பர் என்று எனக்கு தெரியும்.

"அம்மா அப்பா இன்னைக்கு நைட்டு கண்டிப்பா பீஸ் கொண்டு வந்துருவாங்கள?"

"ஆமா நீ இந்த வள்ளலுல படிச்சா உனக்கு எதுக்கு பீஸ் கட்டணும்? உங்க அப்பாவே கொண்டுவந்தாலும் நான் நாளைக்கு கட்ட விடமாட்டேன்". நான் அழ ஆரம்பித்துவிட்டேன். கன்னத்தை மீண்டும் கிள்ளினார், "நாளைக்கு 100 மார்க் எடுப்பியா? சொல்லு, எடுப்பியா? 100 மார்க் எடுத்தா தான் பீஸ். இல்லாட்டி நீ ஸ்கூலுக்கே போக வேண்டாம்" சொல்லி முடிக்கும் வரை கன்னம் அம்மாவின் சுட்டு விரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு நசுங்கியது.

சாயந்திரம் பள்ளியில் இருந்து கூட்டிப்போக அம்மா வந்தார். "அப்பா பீஸ் கொண்டுவருவாங்களாமா?"

"நாளைக்கு நீ பீஸ் கட்டிருவ, போதுமா?" அம்மாவின் அந்த பதிலில் அவருக்கே திருப்தி இல்லாதது அவர் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.

மன்த்லி டெஸ்ட்டுக்கு படித்துக்கொண்டிருந்தேன். மணி இரவு ஏழு இருக்கும். அப்பா வந்தார். நானும் கெட்டு ஒட்டிக்கொண்டிருந்த அம்மாவும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களை கவனிக்காதது போல குளிக்க சென்றார். நான் அம்மாவைப்பார்த்தேன். கெட்டையும் முக்காலியையும் ஒரு ஓரத்தில் வைத்து விட்டு அப்பாவை நோக்கிபோனார். இருவரும் மெதுவாக பேசும் சத்தம் எனக்கு கேட்டது. அம்மா வந்தார்.

"அப்பா இப்ப அவங்க மொதலாளி வீட்ல ஏதோ விசேசமாம், அங்க போறாங்க. நீயும் அப்டியே அப்பா கூடப்போ". நான் ஒன்றும் புரியாமல் அம்மாவை பார்த்தேன். "நீ அப்பா கூட போ. நாளைக்கு கண்டிப்பா பீஸ் கட்டிரலாம்"

அப்பா குளித்து வந்ததும், அவரும் நானும் இருப்பதிலேயே கொஞ்சமாக வெளுத்துப்போன சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினோம். கிளம்பும் முன்னும் அப்பா பீரோவை திறந்து தான் இன்று கொண்டுவந்த சில வெளிநாட்டு காசுகளை வைத்தார். "நீங்களும் அந்த செல்லாக்காசும் ஒன்னுதான். எதுக்கு ஆகாது........." என்று அம்மா ஆரம்பிக்கும் போதே அப்பா வேகமாக வெளியேறிவிட்டார். சைக்கிளின் முன் கம்பியில் என்னை உட்காரவைத்தார். "நாம இப்ப எங்கப்பா போறோம்?"

"எங்க மொதலாளி வீட்ல இன்னைக்கு கல்யாணம். அதுக்கு தான் போறோம்"

"நான் எதுக்குப்பா அங்க?"

"மொதலாளி உன்ன பாக்கணும்னு சொன்னாரு. அதான்" கல்யாண வீட்ல அவரு எதுக்கு என்ன பாக்கணும்னு யோசித்துக்கொண்டே சென்றேன்.

எங்கள் ஊரில் அப்படி ஒரு திருமண மண்டபம் இருப்பதை நான் இப்போது தான் பார்க்கிறேன். அவ்வளவு பெரியது. எங்கும் கண் கூசும் அளவு, இருள் இருப்பதை செயற்கை ஒளியால் மறைக்கும் பணக்கார வெளிச்சம். நாங்கள் உள்ளே செல்லும் போது பாட்டுக்கச்சேரி ஓடிக்கொண்டிருந்தது. ரஜினியின் "ஒரு சோலைக்கிளி" பாடலைப்பாடுபவரின் மைக்கில் வயர் இல்லை. மைக் இல்லாத வயரும் ஆச்சரியமாக இருந்தது. அப்பாவுடன் வேலை செய்பவர்கள் எல்லோரும் என்னிடம் அன்பாக பேசினார்கள். அப்பா முதலாளியை தேடிக்கொண்டிருந்தார். என் கையைப்பிடித்து வேகமாக கூட்டத்தை விலக்கி என்னை கூட்டிசென்றார். அங்கு ஒருவர் வெள்ளை வேட்டியும் அரைக்கை வெள்ளை சட்டையும் அவருக்கென்றெ இருப்பது போல மிக அழகாக உடுத்தியிருந்தார். அவருக்கு அருகில் சென்ற அப்பா அவரைப்பார்த்து கும்பிட்டார்.  

"என்னய்யா தங்கமணி இவ்வளவு லேட்டா வாரிரு? இங்க எவ்வளவு வேல இருக்கு?" அதட்டல் தொனியில் கேட்டார்.

"அஞ்சு நிமிசம் மொதலாளி, எல்லா வேலையும் முடிச்சுரேன்" அப்பா பதட்டமாக சொன்னார்.

"என்னத்த முடிச்சி கிழிச்சீரு? நீரு ஒன்னும் புடுங்க வேண்டாம். அதெல்லாம் அவைங்க பாத்துக்குவாய்ங்க. நீரு பந்தி ஆரம்பிச்சதும் அத கவனியும்."

"சரி மொதலாளி" என் அப்பா யார் முன்னும் இப்படி நின்று பேசி நான் பார்த்ததில்லை. அப்பா அப்படி இருப்பதும் எனக்குப்பிடிக்கவில்லை. என்னை இங்கு கூட்டி வந்ததை நினைத்து அப்பா வருத்தப்பட்டதாகவே தெரியவில்லை. அப்போது என் வயதைவிட ஒன்றிரண்டு வயது மூத்த ஒருவன் வந்தான். அவன் இந்த வயதிலேயெ கோட்டும் ஷூவும் போட்டிருந்தான். 

"இவர் தான்யா என் பேரன், மெட்ராஸ்ல இருக்குற மகளோட பையன்" என் அப்பாவிடம் அவனைக்காட்டி சொன்னார்.

"தாத்தா இவன பலூன் வாங்கி குடுக்க சொல்லு" அவன் அப்படி கேட்டதும் என் அப்பாவின் மீது நான் வைத்திருந்த மொத்த பயமும் மரியாதையும் ஆடிப்போனது. அப்பா என்னைப் பார்த்தார். அவர் பார்க்கும் பார்வையில் நான் இதை கேட்டிருக்கக்கூடாது என்கிற வேண்டுதல் தெரிந்தது.

முதலாளி அப்பாவைப்பார்த்தார். "துட்டு இல்ல மொதலாளி" அப்பா ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே சொன்னார். தன் பேரனைப்பார்த்து "எவன் வந்தாலும் யாரு என்னன்னு தெரியாம கையேந்துவியா?" என்று அவனை பத்திவிட்டார். "சரி நீரு போயி பந்திய கவனியும்"

"மொதலாளி..'

"என்ன?"

"இது எம் மகன். பள்ளிடத்துல ஒன்னாப்பு படிக்குறான்" ஒன்னு இல்ல ரெண்டு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது எனக்கு. "பீஸு கட்டுறதுக்கு நாளைக்கு தான் கடைசி தேதி"

"அதுக்கு"

"ஒரு 85ரூவா அட்வான்சா குடுத்தீங்கன்னா...."

"மொத போயி பந்திய கவனியும் பெறவு பாக்கலாம்" சொல்லிக்கொண்டே யாரையோ பார்த்து கையை மேலே தூக்கி ஆட்டிக்கொண்டே சென்றுவிட்டார் முதலாளி.

அப்பா தன்னுடன் வேலை செய்யும் ஒருவரிடம் பந்தியை பார்க்க சொல்லிவிட்டு அங்கிருந்து என்னை கூட்டிக்கொண்டு எங்கள் தூரத்து உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்தார்.

"வாங்க மச்சான். அக்கா வரலயா? ஐ, ராம்குமார், எப்டி இருக்க?" 

"நல்லா இருக்கேன் சித்தி" - என் அப்பா அழைத்து வந்தது என் அம்மாவின் சித்தி வீட்டிற்கு. வீட்டில் சித்தியும் தாத்தாவும் தான் இருந்தனர். ஆச்சி கோயிலுக்கு சென்றிருக்கிறாராம்.

நாங்கள் வீட்டு வராந்தாவில் போட்டிருந்த மரமேஜையில் அமர்ந்திருந்தோம். "வாங்க மாப்ள" சொல்லிக்கொண்டே தாத்தா வந்தார் உள்ளிருந்து, "என்ன விசேசம்"

"விசேசம் ஒன்னும் இல்ல மாமா. ராம்குமாருக்கு நாளைக்கு தான் பீஸ் கட்ட கடைசி நாளு ஒரு 85ரூவா குடுத்தீங்கன்னா, கொஞ்சம் ஒதவியா இருக்கும். நான் கண்டிப்பா ஒரு வாரத்துல திருப்பி கொடுத்துறேன் மாமா" அப்பா வேகமாக ஒரு வித பதட்டத்துடன் சொன்னார்.

"போனதடவ வாங்குன காசயே இன்னும் குடுக்கலயே மாப்ள?"

"இந்த தடவ ரெண்டையும் சேத்து குடுத்துறேன் மாமா. தயவு செஞ்சி குடுங்க மாமா" அப்பாவின் குரல் மிகவும் கம்மியானது.

"இருங்க வரேன்" உள்ளே சென்றார். "இந்தாங்க அம்பது ரூவா தான் இருக்கு. என்னால இந்த நிலமைல இவ்வளவு தான் குடுக்க முடியும்"

அந்தப்பணம் காணாது என்றாலும் என்னாலும் அப்பாவாலும் அப்போது இருந்த நிலமையில் அதை வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை. வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். வீட்டில் இருந்து இறங்கி சைக்கிளை நோக்கி சென்றோம். மனம் கொஞ்சம் அமைதியானது. நான் அப்பாவிடம் "அப்பா இருங்க நான் தாத்தாகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு வாரேன்" குடுகுடுவென்று படி ஏறி அவர்கள் வீட்டுக்குள் சென்றேன். "போன மாசம் என்னடானா அவா வந்து பையனுக்கு ஸ்கூல்ல ஷூ போட்டுட்டு வர சொல்றாங்கனு 100ரூவா வாங்கிட்டு போறா, அதுக்கு முன்னாலயும் நாம தான் பீஸுக்கு காசு கொடுத்தோம். அய்யோ பாவம்னு ஒரு தடவ ஒதவி செஞ்சா எல்லா தடவயும் நம்ம தலைலயே மொளகா அரைக்க பாக்குறாங்க. பிள்ளைய பெக்க மட்டும் தெரியுதுல? பெழைக்குரதுக்கே வக்கில்ல, இதுல மவனுக்கு இங்கிலீஸ் மீடியம் கேக்குதாம்" சித்தியிடம் கத்திக்கொண்டிருந்தார் தாத்தா. சித்தி என்னை பார்த்துவிட்டார். நான் தாத்தாவின் பின்புறம் நின்றுகொண்டிருந்தேன். "அப்பா ராம்குமாரு வந்துருக்கான்" சித்தி கண்ணால் என்னை சுட்டிக்காட்டினார். தாத்தா திரும்பி என்னை பார்த்தார்.

"தேங்க்ஸ் தாத்தா. போயிட்டு வரேன் சித்தி" நான் சிரித்துக்கொண்டே விடை பெற்றேன்.

"அப்பா, தாத்தாகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டேன்"

"கேட்டுச்சிப்பா" அப்பா மிகவும் வருத்தமாக சொன்னார்.

வீட்டிற்கு வந்தோம். அப்பா சின்ன ஆச்சி வீட்டில் 50ரூபாய் கிடைத்ததை சொன்னார். "அப்படியெல்லாமா சொன்னாரு? சரி விடுங்க, நாமளும் அவங்கள எவ்வளவு நாள் தான் தொந்தரவு பண்ண முடியும்?". இப்போது மீதி 35ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் தான் எங்கள் அனைவர் மனதிலும். அம்மா நாங்கள் வருவதற்கு முன்பே தான் வாங்கி வைத்திருந்த கெட்டு ஒட்டிய காசு 10 ரூபாயை கொடுத்தார்.

"அம்மா இன்னும் 25ரூவா வேணும்மா" மறுநாள் பள்ளிபோகவேண்டிய கவலை எனக்கு. நான் அழ ஆரம்பித்தேன். "கிளாஸ்ல எல்லாரும் பீஸ் கட்டிட்டாங்கப்பா. நாளைக்கு நான் கட்டலைன்னா மிஸ்ஸு வெளிய நிக்க வச்சுருவாங்கம்மா. எல்லாரும் ஏற்கனவே என் பொறந்த நாளைக்கு  சாக்லெட் குடுக்காததுக்கு கிண்டல் செய்றங்க" நான் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தேன்.

"அழாத தம்பி, நீ மொத தூங்கு. நாளைக்கு எல்லாம் சரியாகிடும்" என்னை அம்மா தூங்க வைக்க முயன்றார்.

நான் அழுவதைப்பார்த்து அப்பாவும் அழ ஆரம்பித்தார். "என் பிள்ளைய நல்லா படிக்கவைக்க கூட வக்கில்லாம அகிட்டேனே? இப்படி ஒவ்வொருத்தன் கிட்டயும் கையேந்தவேண்டியிருக்கே?! ஆண்டவா ஏன் இப்படி என்ன சோதிக்குற? ஒரு அப்பனா என்னால எதுவுமே செய்யமுடியலயே?!"

அழுதுகொண்டே இருந்தவர் திடீரென்று ஏதோ யோசனை வந்தவராக பீரோவைத் திறந்தார். தான் இத்தனை நாள் சேர்த்து வைத்த அந்த நாணயங்களை எல்லாம் ஒரு மஞ்சள் பையில் அள்ளிப்போட்டார். "என்னங்க பண்ணப்போறீங்க?"

"இரும்புக்கடைல இந்த காசெல்லாம் போட்டு எவ்வளவு கெடைக்குதுன்னு பாப்போம்"

"என்னங்க நீங்க ஆசையா சேத்து வச்ச காசு, அதப்போயி.."

"என்னால தான் என் பிள்ளைக்கு ஒன்னும் செய்ய முடியல. நான் சேத்து வச்ச இந்த செல்லாக்காசாவது ஒதவுதான்னு பாப்போம்." அந்தப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக இரும்புக்கடைக்கு புறப்பட்டார். "அப்பா" என்றழைத்து காலையில் அவர் சாமிப்படத்தின் அருகில் வைத்த அந்த ராமர் பட்டாபிஷேக காசையும் அவரிடம் கொடுத்தேன். என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே அதையும் வாங்கி பையில் போட்டார்.

சிறிது நேரத்தில் கையில் 30ரூபாயோடு வந்தார். "தம்பி நாளைக்கு நீ பள்ளிடத்துக்கு சந்தோசமா போலாம். உனக்கு பீஸ் ரெடி" அப்பா புன்னகைத்தார்.

"செல்லாக்காசு செல்லாக்காசுன்னு சொன்னோம் இன்னைக்கு அது தான் நம்ம புள்ள படிப்புக்கு ஒதவியிருக்கு. சே, உங்க கிட்ட அந்த காசுக்காக நான் எவ்வளவு சண்ட போட்டிருக்கேன்?" - அம்மா

"அத விடுத்தா. அந்த செல்லாக்காசு அளவுக்கு கூட நான் என் புள்ள படிப்புக்கு ஒதவ முடியலயே?" அப்பா மீண்டும் வருந்தினார். "விடுங்க அந்த செல்லாக்காசே நீங்க கொண்டுவந்தது தானே?"

இரவு அனைவரும் பால் சோறும் பக்கோடாவும் சாப்பிட்டு உறங்கினோம். மறுநாள் நான் சந்தோசமாக பள்ளி சென்றேன். அடுத்த டேர்ம் பீஸ் கட்டும் வரை இந்த சந்தோசம் தொடரும்..

இப்போது ஒரு சில நாட்களுக்கு முன், எங்கள் டீலர் இருவர் தான் கட்டி வரும் புது வீட்டிற்கு நிலைக்கால் வைப்பதற்கு என்னையும் அழைத்தார். சென்றிருந்தேன். அப்போது ஒரு சில அந்தக்கால பழைய ஓட்டைக்காசுகளையும் சில செல்லாக்காசுகளையும் போட்டார். 'ஒரு காலத்தில் நம் அப்பா கஷ்ட்டப்பட்டு சேகரித்த காசு இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக கிடைத்தது? அதுவும் அதை சாதாரணமாக மண்ணில் போடுகிறாரே' என் வியந்து அவரிடம் கேட்டேன்.

"நம்ம தங்கவேல் நாடார் பாத்திரக்கடைல வாங்குனது சார். அங்க போயி நிலைக்கு வைக்க பழைய காசுன்னு கேட்டா குடுப்பாங்க."

"ஓஹ் அப்படியா?"

"ஆமா சார். சொல்ல மறந்துட்டேன். நேத்து அப்படி வாங்கும் போது எனக்கு ஒரு காசு கெடச்சுச்சி. இருங்க வரேன்"

சில நிமிடங்களில் அவர் அந்த காசை கொண்டுவந்தார். "இது தான் ராமர் பட்டாபிஷேக காசு. இதோட மதிப்பு இப்ப லட்சக்கணக்குல போகுமாம். போனவாரம் எதோ பேப்பர்ல போட்டிருந்தான்"

இது அதே காசு தான். அப்பாவிடம் சாமி படத்துக்கு அருகில் இருந்து நான் எடுத்துக்கொடுத்தது. "இந்த மாதிரி காச பாத்துருக்கிங்களா சார்?" தன் கையில் அதைத் திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டே அவர் கேட்டார்.

"இல்ல சார் பாத்ததில்ல"

"இந்தாங்க சார் பாத்துட்டு குடுங்க. ராமர் பட்டாபிஷேக காசு. ரொம்ப விஷேசமானது"

"இல்ல வேண்டாம் இருக்கட்டும் சார். நான் வரேன்" அவர் பதிலை எதிர் பாராமல் நான் கிளம்பினேன். மனதுக்குள் ஒரு சோகமான மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது..

வேண்டுமா தனித்தமிழ்நாடு?

Sunday, February 6, 2011

இரண்டு நாட்களுக்கு முன்பு நானும் நண்பர் ஒருவரும் அளவில்லாமல் அலவலாவிக்கொண்டிருந்தோம். பேச்சு அரசியல், சினிமா, (என்) காதல் என்று நீண்டது. தனித்தமிழ் நாடு என்று சிலர் பேசி வரும் காமெடியையும் விவாதித்தோம். 

சம உரிமைகளோடு ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் போதே இந்த மக்களாலும் அரசியல்வாதிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை தன் மாநிலத்தவனுக்கும், அருகில் இருக்கும் தன் இனத்தவனுக்கும். இதில் தனிநாடாக வாங்கி விட்டால் ரொம்ப சந்தோசமாகிவிடும், அதை எதிர் பார்ப்பவர்களுக்கும் ஆள்பவர்களுக்கும். மொத்தாமாக கொள்ளையடித்து இங்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் காசுக்கும் பதவிக்கும் விற்றோ அல்லது கொன்றோகூட போட்டு விடுவார்கள். 

நாங்கள் பேசும் போது எனக்குள் இது சம்பந்தமாக கேட்டுக்கொண்ட பல கேள்விகளை இங்கே வைக்கிறேன். தனித்தமிழ் நாட்டிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் கொஞ்சம் பதில் கூறினால் எங்களுக்கும் அதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவென்று தெரியுமல்லவா?



1. சமஉரிமையோடு இருக்கும் வாய்ப்பை எல்லாம் விடுத்து தனிநாடு தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் தான் நம் இனம் அழிந்தது இங்கு மிக அருகில். கிட்டத்தட்ட நம் தமிழகத்திற்கும் இதே நிலைமை வரவேண்டுமா?

2. சரி, உங்கள் ஆசைப்படி தனித்தமிழ் நாடு கிடைத்துவிட்டது.. உங்களுக்கு யாரை தலைவனாக தேர்ந்து எடுப்பீர்கள்? இப்போது இருப்பவர்களில் யாருக்காவது அதற்கான தகுதி இருப்பதாய் நினைக்கிறீர்களா? இங்கு இருக்கும் யாராவது உங்களுக்காய் உண்மையாக போராடுவாரா?

3. நீங்கள் நினைப்பது போல் தனி தமிழ்நாடு கிடைத்ததும், அருகில் இலங்கையில் முகாம் இட்டிருக்கும் சீன மற்றும் பாகிஸ்தான் இராணுவம் லைட்டா ஒரு குண்டு வீசினால், நீங்கள் பிரிந்து வந்த இந்தியாவிடமே மீண்டும் போய் கையேந்துவீர்களா?

4. ஒரே நாடாக இருக்கும் போதே இந்த கேரளம் ஆந்திரம் கர்நாடகாக்காரன் எல்லாம் நீர் குடுக்கமாட்றான். தனி நாடாக மாறிவிட்டால் நீர் பீறிட்டு வந்துவிடுமோ?! சும்மாவே டெல்டா விவசாயி தூக்கில் தொங்கியும், பூச்சி மருந்தை குடித்தும் நம்மை பாவியாக்கிக்கொண்டிருக்கிறான்.. தனி நாடாகிவிட்டால் மொத்தமாக விவசாயிகளை ஒரு மைதானத்தில் நிற்க வைத்து எல்லோரையும் கொன்றுவிட்டு தனிநாட்டை உருவாக்குங்கள்..

5. பெங்களூருவிலும், ஹைதராபாத்திலும் இன்னும் பிற வெளிமாநிலங்களிலும் படிக்கும், வேலை பார்க்கும் தமிழருக்கெல்லாம் இலவச விசா வாங்கிக்கொடுப்பீர்களா? அல்லது, அவர்களை அங்கிருந்து பத்திவிட்டால் அவர்களுக்கு அதே தரமான படிப்பையும், அதே வேலைவாய்ப்பையும் இங்கே ஏற்படுத்திகொடுப்பீர்களா?

6. இங்கே வேலை செய்யும் பிற மாநிலத்தவற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

7. வருஷத்துக்கு ஒரு தடவையாவது சபரிமலை, திருப்பதி என்று நினைத்தவுடன் சாதாரணமாக செல்லும் மக்களுக்கு அண்டை நாட்டு மாநிலங்களான கேரளம் ஆந்திரத்தோடு என்ன மாதிரி உடன்படிக்கை போட்டு அனுப்புவீர்கள்?

8.ஏற்கனவே பெட்ரோலுக்கு யானை விலை இருக்கிறது. இந்த நிலையில் அதை நீங்கள் இறக்குமதி செய்து மலிவு விலைக்கு விற்று, மக்களை விலைவாசியில் இருந்து காப்பாற்றி... அப்பப்பா நினைக்கவே பயமாக இருக்கிறது. பொருளாதாரம் என்ன ஆகும் என்று யாராவது யோசித்துப்பார்க்கிறீர்களா? நாணயத்தின் மதிப்பை எப்படி காப்பாற்றுவீர்கள்? இங்கு இருக்கும் பல கம்பெனிகளும் தெரித்து ஓடிவிடும்.. ஏற்கனவே இலவத்திற்கு பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது மத்திய அரசில் கையேந்திக்கொண்டு.. இதில் தனி நாடு கேட்டால் எல்லோரும் கை ஏந்த வேண்டியது தான்..

9. வெளிநாடுகளில் (குஜராத், மராட்டியம், உத்திரபிரதேசம் போன்றவை) இருந்து வரும் வியாபாரிகள் கோவை திருப்பூரில் துணியையும், ராஜபாளையத்தில் நூலையும், சிவகாசியில் பட்டாசையும் வாங்க வருவார்களா? இங்கிருந்து ஏற்றுமதி செய்வதற்கு வரி வேறு இருக்குமே?! தொழில்துறைக்கு என்ன திட்டம் போடுவீர்கள்?

10. தினமும் 'சர், சர்' என்று செல்லும் பைக், கார் எல்லாமே இறக்குமதி செய்து தான் விற்கவேண்டும். ஏற்றுமதி எதிலுமே இருக்காது.. ஆஆ, ஒரே ஒரு பொருளை மட்டும் நம் புது தனி தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் நன்றாக ஏற்றுமதி செய்வார்கள்.. அது தான் நம் ஆற்றுப்படுகைகளில் இருக்கும் மணல்..

11. தெலுங்கு சினிமாவையோ மலையாள சினிமாவையோ காப்பி அடித்து காப்பிரைட்ஸ் வழக்குவந்தால், முந்தைய நாள் பணத்தை செட்டில் செய்து படத்தை ரிலீஸ் செய்து தப்பிக்க இயலாது. அந்த நாட்டில் கழி திண்ண வேண்டியது தான்.

12. தமிழக கிரிக்கெட் அணி இந்திய அணியோடு சேப்பாக்கத்தில் மோதும்.

13. அப்படி விளையாடும் கிரிகெட்டையும் நீங்கள் எந்த தொலைக்காட்சியில் பார்ப்பீர்கள்? Sony, Ten Cricket, Star Sports, ESPN எதில் பார்ப்பீர்கள்? இதெல்லாம் தெரியுமா? தனி காசு கொடுக்க வேண்டியது இருக்கும்.. ஒரு வேளை sun cricket என்று எதாவது சேனல் வந்து நம்மை காப்பாற்றலாம்..

14. கேரளாத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளையும், ஆந்திர நக்ஸல்களையும் கர்நாடக அத்துமீறல்களையும் என்ன செய்துவிட முடியும்?

15. மத்திய மந்திரி சபையில் இருக்கும் தமிழக அமைச்சர்களை என்ன செய்வீர்கள்? கஷ்ட்டப்பட்டு பெற்ற பதவி அல்லவா?

16. தமிழகத்துக்குள் இருக்கும் ரயில் பாதைகளையும் நான்கு வழிப்பாதைகளையும் அவர்கள் இடிக்க சொன்னால் என்ன செய்வீர்கள்? அல்லது எல்ல விலை கொடுத்து அதையெல்லாம் வாங்குவீர்கள்? அவ்வளவு பொருளாதார வசதி இருக்கிறதா இங்கே? மத்திய அரசு அலுவலகங்களை எல்லாம் சூறையாடி விடலாமா? நமக்கு ரொம்ப பிடித்த விளையாட்டு அது தானே?

17. மத்திய அரசில் வேலை செய்யும் தமிழக ஊழியர்களின் நிலை என்ன? என்ன வேலை வாய்ப்பை கொடுப்பீர்கள்?

18. விலை மலிவாக இருக்கிறதே என்று நினைத்து வாங்கிப்படிக்கும் deccan chronicle, economic times போன்ற தமிழகத்தில் அச்சகம் இல்லாத பத்திரிகைகள் எல்லாம் படிக்க முடியுமா?

19. NDTV, AajTak போன்ற டிவிக்களை பார்த்து அறிவாளிகளாக சீன் போடமுடியுமா?

20. ஆசையாக வீடு கட்டி அழகுபடுத்த கடப்பா கல், டைல்ஸ், மொசைக், கிரானைட் போன்றவைகள் வானத்தில் இருந்து நேராக வந்துவிடுமா?

21. அட, எல்லாத்தையும் விடுங்க, ஒவ்வொரு படத்திலும் அழகழகாக பிற நாட்டு அழகியை நடிக்கவைக்க முடியுமாய்யா உங்களால? இப்போ பாருங்க ஈசியா கேரளா ஃபிகரு, பாம்பே ஃபிகரு எல்லாம் வருது. அதெல்லாம் நடக்காம போயிருமேங்கிறது தான் என் உண்மையான ஆதங்கம்..

22. இந்த தனித்தமிழ் நாடு கோஷம் போடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தான்.. அவர்கள் எல்லாம் தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு ஏதாவது வேலையோ தொழிலோ செய்து விட்டு அதன் பின் இந்த கோஷத்தை போடுவதை பற்றி யோசிக்கலாம்.. தன் கையில் காசு இருக்கும் வரை அடுத்தவனின் கஷ்டம் தெரியாது.. அட்லீஸ்ட் தனி நாடாக பிரிந்தவுடனாவது அவர்கள் எல்லாம் நம் நாட்டிற்கு பிழைக்க வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். வருவார்களா? அல்லது புது நாடு வாங்கிய பின்னும் வெளிநாட்டுக்காரனுக்கு உழைத்துக்கொடுப்பார்களா?

தனித்தமிழ் நாடு கேட்கும் ஒவ்வொருவரும், இந்திய பாகிஸ்தான் பிரிவினையை பற்றி நன்றாக படித்துவிட்டு அதற்கு மேலும் தனித்தமிழ் நாடு கேட்க ஆசை இருந்தால் தாரளமாக கேளுங்கள்...

தல நீங்க இப்போ விஜய்ய சப்போர்ட் பண்ணணுமா?

Thursday, February 3, 2011

"எங்களை யாராலும் இனி பிரிக்க முடியாது" - இந்த வார குமுதத்தில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்துவிட்டதாகவும், இனி யாரும் எதுவும் செய்ய முடியாது என்பது போலும் இருந்தது. இதைப்படித்ததுமே அஜித் ரசிகனான எனக்கு அஜித் மீது வெறுப்பு தான் வந்தது, ''தல க்கு அறிவே வராதா?' என்று.

அஜித் ரசிகர்களில் பல பேர் என்னைப்போல விஜய் &அவரின் அலம்பல் பிடிக்காமல் 'இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி இல்லையா?' என்று நினைத்து அஜித் பின் சென்றவர்கள். ஒருவர் படத்தில் மட்டும் (வெட்டியாக) சீன் போடுவார், நேரில் ஊமை; இன்னொருவர் ஏனோ தானோவென்று இருக்கும் கதையிலும் உயிரைக்கொடுத்து நடித்துவிட்டு, நேரிலும் பேட்டியிலும் சீருவார். எனக்கு இரண்டாமவர் தான் பிடித்தது. அவரின் நேர்மை, மற்றும் முதலாமவரின் ஆட்டம் அதிகமானதால். சும்மா இருந்த அஜித்தை சீண்டியவர் இவர் தான். தன் படங்களில் தேவை இல்லாத வசனங்களை வைத்து அஜித்தை நேரடியாகவே தாக்கினார். அஜித்தும் அவ்வப்போது தன் படங்களில் பதிலடி கொடுத்தார். ஆனால் அவை எடுபடவில்லை. ஏனென்றால் விஜய்க்கு அப்போது இருந்த மீடியா சப்போர்ட் தலக்கு இல்லை.

இந்த நிலையில் இப்போது இருவரும் சேருவது தான் பிடிக்கவில்லை. விஜய், தன் படத்துக்கு ஒரு ஆபத்து என்றதும் தான் இப்போது இவர் கண்ணுக்கு அஜித் தெரிய ஆரம்பித்திருக்கிறார். இருவரும் சேர்ந்து போஸ் கொடுக்கிறார்கள், ஏதோ பால்ய சிநேகிதர்களைபோல சமீப காலமாக இவரது பேச்சும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. இத்தனை நாள் தல மீது இல்லாத பாசமும் நட்பும் இப்போது மட்டும் இந்த விஜய்க்கு ஏன் திடீர் என்று வர வேண்டும்? 

"ஏன்ப்பா இத்தனை நாட்கள் எலியும் பூனையுமாக இருந்தவர்கள் இப்போதாவது சேருகிறார்களே, இதில் ஏன் உனக்கு வயித்தெரிச்சல்?" என்று நீங்கள் கேட்கலாம்.

இதற்கு என் பதில், "நான் ஒரு அஜித் ஃபேன். எனக்கு என் தல தான் முக்கியம். சரியாக 8,9 வருடங்களுக்கு முன்பும் தல அஜித்துக்கு கிட்டத்தட்ட இப்போது விஜய் அனுபவிக்கும் இதே போன்றதொரு நிலைமை தான். அப்போது இந்த விஜய்க்கு சன் டிவி சப்போர்ட்டாக இருந்தது. அஜித் படமும் விஜய் படமும் ஒன்றாக வந்தால், இந்த சன் டிவி தனது டாப்10 மூவீஸில் விஜய் படதிற்கு தான் முதல் இடம் கொடுக்கும். வில்லன் பகவதி காலத்தில் இருந்து இப்போது வரை இந்த நிலை தான். மோசமான விஜய் படங்கள் எல்லாம், நன்றாக இருக்கும் அஜித் படங்களை விட சூப்பராக ஓடும். கிட்டத்தட்ட அஜித்தின் ஒவ்வொரு படமும் ஹிட் ஆவதே பெரிய விசயம். இந்த கால கட்டத்தில் தான் அவரும் சறுக்க ஆரம்பித்தார், ஜனா, ஆஞ்சநேயா, ஜி என்று. அவருக்கு தியேட்டரும் கிடைக்காது, மீடியா சப்போர்ட்டும் இருக்காது. 

அப்போதும் கூட தல எவன் காலிலும் விழவில்லை. அமைதியாகத்தான் இருந்தார். இந்த விஜய் அப்போது மிகவும் சந்தோசமாக எதைப்பற்றியும் கவலைப்படமால் இருந்தார். ஏனென்றால் அவர் படங்களுக்கு தான் தாருமாறாக சப்போர்ட் இருந்ததே?! ஏன், 'என் துறையில் இருக்கும் அஜித்திற்கு மீடியா சப்போர்ட் இல்லை' என்று அன்று இவர் அஜித்திற்கு ஒரு குரல் கொடுத்திருக்கலாமே?தனக்கு என்று வந்தால் தான் எல்லா வலியும் எப்படி என்று தெரியும்.

திருவாளர் விஜய் அவர்களே, உங்களுக்கு காலம் இருக்கும் போது, நீங்கள் 'எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன?' என்பது போல் இருப்பீர்கள். உங்கள் ரசிகர்களும் உங்கள் கெப்பாகுட்டி எவ்வளவு என்றே தெரியாமல் உங்கள் பின்னால் துதி பாடிகொண்டும், அஜித் ரசிகனை அசிங்கப்படுத்திக்கொண்டும், அஜித் போஸ்ட்டர்களை கிழித்துக்கொண்டும் இருப்பார்கள். அதுவே உங்களுக்கு ஒன்று என்றால் என் தலயும் நாங்களும் இப்போது வர வேண்டுமா? இணைந்த கைகள் என்று நீங்கள் இப்போது காட்டிக்கொள்வீர்களா? ஒரே ஒரு படத்திற்கே நீங்கள் இவ்வளவு கொதித்தீர்கள் என்றால், கிட்டத்தட்ட 10வருடங்களாக இந்த நெருக்கடியை அனுபவிக்கும் அஜித்துக்கும், என்னைப்போன்ற ரசிகர்களுக்கும் எப்படி இருந்திருக்கும்?

நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு உங்கள் ரசிகர்களைப்போல் எங்களையும் ஊறுகாயாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கவேண்டாம். உங்கள் துறையிலேயே இத்தனை நாட்களாய் உங்களால் கஷ்டப்பட்ட, கஷ்டப்படுத்தப்பட்ட் ஒருவரின் தயவை எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிர் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பெர்சனலாக பிரச்சனை வரும் போது தான் உங்களுக்கு மக்கள் கஷ்டப்படுவது, அரசியல்வாதிகளின் அராஜகம் எல்லாம் தெரியும். டெல்லியில் சாலையில் நடந்து கொண்டே ஒரு மத்திய மந்திரியிடம் பேட்டி எடுத்த போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு?

அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தை வைத்து உங்கள் படத்தை வெளியிட விடவில்லை என்று சொன்ன நீங்கள் தான் சில வருடங்களுக்கு முன்பு, "லொள்ளு சபா' என்னும் அருமையான நிகழ்ச்சியை உங்கள் அரசியல் மற்றும் ஆட்சி அதிகார பலத்துடன் மன்னிப்புகேட்க வைத்து நிறுத்தினீர்கள். உங்களுக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயமா?

எப்போதும் அடுத்தவன் சப்போர்டிலேயே முன்னேறிய உங்களுக்கு இப்போது தான் முதல் பிரச்சனையே வந்திருக்கிறது. அதற்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இதைகூட சொந்தமாக தீர்க்க முடியாமல் பிறரின் தயவை எதிர் பார்க்கும் நீங்களா அரசியலுக்கு வந்து இந்த மக்களுக்கு தைரியமாக சொந்த முயற்சியில் நல்லது செய்யப்போகிறீர்கள்? இந்த நிலையில் உங்களுக்கு இப்போது அஜித் உதவி செய்தால் அவரை விட முட்டாள் யாரும் கிடையாது. ஆனால் அவர் நல்லவர், எவனையும் கழுத்தறுக்கமாட்டார். உங்களுக்கு தன்மானம் என்ற ஒன்று இருந்தால், நீங்களே அஜித்திடமும் பிறரிடமும் கை ஏந்தாமல் சொந்த முயற்சியில் இறங்குங்கள். முதலில் தினமும் ஏதாவது நாளிதழுக்கோ, பத்திரிகைக்கோ ஒப்பாரி வைத்து பேட்டி கொடுப்பதை நிறுத்துங்கள்.

பி.கு: இன்றைய ஆனந்த விகடனில், விஜய் தன்னை, விஜயகாந்த், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர், மற்றும் உச்ச கட்டமாக காந்திஜி போன்றோர்களோடு ஒப்பிட்டு மிகவும் கொந்தளித்து பேசியுல்லது கெட்ட காமடி.. மேடைல 10நிமிசம் தடுமாறாம பேசவே முடியாத உங்களுக்கெல்லாம் எதுக்குங்க அரசியல் ஆச? ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ், என்னத்தையோ பண்ணுங்க போங்க...
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One