மக்களை மக்காக்கும் தி.மு.க. விளம்பரங்கள்...

Friday, April 18, 2014

கொஞ்ச நாளாவே எங்கும், எதிலும் அரசியல் தான்.. டீக்கடை, ஃபேஸ்புக், பஸ், தியேட்டர் க்யூ, அட அவ்வளவு ஏங்க சிக்னல்ல நிக்கிற முப்பது செகண்டுல கூட அரசியல் தான் பேசுறாங்க மக்கள்.. சினிமா, கிரிக்கெட் மாதிரி நம்ம மக்களுக்கு அரசியலும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் தான்.. தனக்கு பிடித்த நடிகரின் படம் ஹிட் ஆனால், தனக்கு பிடித்த ஐபிஎல் அணி வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசப்படுவானோ அதே அளவிற்கு, தான் ஓட்டுப்போட்ட கட்சி வெற்றி பெற்றால் சந்தோசப்படுபவன் தான் என் தமிழன். கிரிக்கெட், சினிமாவால் நம் குடிமகனுக்கு என்ன பயன் கிடைத்ததோ அதை விட அதிகமாய் அரசியலால் பயன் கிடைக்கவில்லை என்று நிச்சயமாய் சொல்லலாம். ஆனாலும் நமக்கு அரசியல் பேசுவது, அரசியல் சண்டை போடுவது, அரசியலால் குடும்பத்திற்குள், நண்பர்களுக்குள் கட்டி உருளுவது போன்றவை மிகவும் பிடிக்கும்.

இந்த அரசியல் கட்சிகளும், ‘ஜெயித்தால் நான் இதை செய்வேன்’ என்று சொல்வதை விட, ‘என்னை விட அவன் தான் பெரிய கேப்மாறி’ என்று சொல்வதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றன, ஆனந்தப்படுகின்றன..  சமீபத்தில் கூட ஒரு பிரச்சாரத்தில் ஒருவர், “ஊழலில் எங்களையே மிஞ்சி விடுவார்கள் போலேயே அவர்கள்” என்று வாய் தவறி ”உண்மை”யை உளறிவிட்டதாக கேள்விப்பட்டேன்.. தாங்கள் என்ன தான் மோசமானவர்களாக இருந்தாலும், எவ்வளவு தான் தவறுகள், அட்டூழியங்கள் செய்திருந்தாலும் தேர்தல் சமயத்தில் பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்பகிற நப்பாசையும் நம்பிக்கையும் தான் தெரிகிறது நம் அரசியல்வாதிகளின் பிரச்சாரத்தில். 

ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது இதுவரை. தேர்தல் கமிஷன், இந்தி பேசும் சப்பாத்தி மாவு முகமுடைய போலீஸ்காரர்களை இங்கு அனுப்பி சைக்கிளில் செல்லும் கொய்யாக்காய் வியாபாரியை கூட விடாமல் சோதனை செய்கிறார்கள். அங்கிங்கு பணப்பட்டுவாடா நடந்தாலும், கட்சிகளால் எதிர்பார்த்த அளவிற்கு பணத்தை கொடுக்க முடியவில்லை என்பது செவிவழிச்செய்தி. ஆனாலும் கட்சிகள் எல்லாம் ஓட்டுக்கு காசு கொடுக்க கோடி கோடியாக பணத்தை ரெடி பண்ணி வைத்திருப்பார்களே? அதை என்ன செய்வது? எப்படியாவது அதையெல்லாம் ஓட்டாய் மாற்ற வேண்டுமே? இந்த சூழலில் அவர்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்தமாய் வந்த ஞானோதயம் தான் டிவியில் விளம்பரம் செய்வது. முன்பும் கட்சிகள் டிவியில் விளம்பரம் செய்தன. ஆனால் அந்த பழைய விளம்பரங்கள் எல்லாம், ”வளமான பாரதத்திற்கு வாக்களியுங்கள் வாக்மேன் சின்னத்திற்கு” போன்ற எதுகை மோனை வார்த்தைகளைக்கொண்டிருக்கும். அதன் கட்சித்தலைவர் நன்றாக குளித்து பவுடர் எல்லாம் போட்டு நம்மை நோக்கி கை கூப்பி சிரித்துக்கொண்டிருப்பார். மொத்தமே 10 செகண்டிற்குள் அந்த விளம்பரங்கள் முடிந்துவிடும்..

இப்போது வரும் கட்சி விளம்பரங்கள் எல்லாம் கதை, திரைக்கதை, பின்னணி இசை, அருமையான நடிகர்கள் என ஒரு மினி சினிமா ரேஞ்சிற்கு இருக்கிறது. தி.மு.க., அள்ளி வீசும் பொய்களும், காங்கிரஸின் காமெடியும், ஜெயலலிதாவின் சாந்த சொரூபமான அரிய முகபாவமும், வைகோவின் as usual மெகா சீரியல் பாணி அழுகாச்சியும் (அவை உண்மையாகவே இருந்தாலும் பார்க்க ஒரு மாதிரியாக இருக்கிறது), என அனைத்துக் கட்சி விளம்பரங்களும் பெரும்பாலும் எல்லா செய்தி சேனல்களையும் ஆக்கிரமித்து நம் உயிரை எடுக்கின்றன.. ”இந்த கருமத்துக்கு ஓட்டுக்கு காசே கொடுத்திருக்கலாம், தயவு செய்து விளம்பரங்களை நிறுத்த சொல்லுங்க”னு தேர்தல் ஆணையத்துக்கு மனு போடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருக்கேன்.. இந்த விளம்பரத்தை எல்லாம் பாத்தா ஓட்டுப்போடணும்னு நெனைக்கிறவன் கூட போட மாட்டான்.. எல்லாம் தெலுங்கு படம் மாதிரி நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு. இதில் என்னை மிக மிக வெறுப்பேற்றுபவை தி.மு.க.வின் விளம்பரங்கள் தான்.. அவர்கள் மக்களை எவ்வளவு மட்டமாக, அறிவு கெட்டவர்களாக நினைத்தால் இப்படியெல்லாம் எடுப்பார்கள்? கொஞ்சம் கீழே இருக்கும் சில உதாரணங்களைப் பாருங்கள்.

விளம்பரம் 1:

ஒரு பையன் புக்கை திறக்கிறான்.. அதுவரை எரிந்து கொண்டிருந்த பல்பு பட்டென்று அணைந்துவிடுகிறது - பவர் கட்.. “அய்யோ கரெண்ட்டு போயிருச்சே”னு தலைய பிடிச்சிக்கிட்டு புலம்புறான்.. அவன் அப்பா, அக்கா, தங்கை, அம்மா என அனைவரும் மின்வெட்டால் புலம்புகிறார்கள்.. பின், கடைசியில ஒரு வெண்தாடி கோட், சூட், டை, ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (பெரிய வல்லுநராமாம்), ஒரு சேரில் அமர்ந்து கொண்டு, இன்றைய ஆட்சியில் கரெண்ட் கட்டுக்கான காரணங்களையும், இன்றைய ஆட்சியின் அவலங்களையும் அடுக்குகிறார்.. அவர் அடுக்கியதும், “மாற்றத்திற்கு உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்” என்று அந்த விளம்பரம் முடிகிறது..

இந்த விளம்பரத்தை எப்படி கூச்ச நாச்சமே இல்லாமல் தி.மு.க.காரர்கள் எடுத்து ஒளிபரப்புகிறார்கள் என்றே தெரியவில்லை. மின்வெட்டுக்கு அடித்தளமே அவர்கள் தானே? தி.மு.க ஆட்சியில் பவர் கட் 10ல் இருந்து 16 மணி நேரம் வரைக்கும் ஆனதற்கு தானே நாம் இந்தம்மாவிடம் ஆட்சியை கொடுத்தோம்?.. ”3 மாசத்துல மின்வெட்டே இருக்காது”ன்னு சொல்லிட்டு ஆட்சிக்கு வந்த இந்தம்மாவும் ஒன்னும் பண்ணலங்கிறது வேற விசயம்.. ஆனா மின்வெட்டுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லங்கிற மாதிரி ஒரு விளம்பரம் எடுத்து ஓட்டு கேக்குறாங்க பாத்தீங்களா, இந்த மொள்ளமாறித்தனத்துக்கு தான் தி.மு.க.விற்கு விழுகிற ஓட்டும் விழுகாம போகுது.. மக்கள்னா ஒன்னுமே தெரியாத மக்காவே இருப்பாங்கன்னு இன்னமும் 1967 மாதிரியே நெனச்சிட்டு இருக்காங்க. பேசிப்பேசியே ஏமாற்றும் காலம் எல்லாம் முடிந்து விட்டது என்பதை தி.மு.க. உணர வேண்டும்.. மின்வெட்டில் அ.தி.மு.க.விற்கு என்ன பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு தி.மு.க.விற்கும் உண்டு. யோக்கியன் வேஷம் போடுவது எரிச்சலைத்தான் கொடுக்கும்..

விளம்பரம் 2:

ஒரு அக்கா சொல்லுது, “எங்க வீட்ல இப்பலாம் வரக்காப்பித்தான்.. பால் விக்கிற விலையில பால் வாங்க முடியுமா?” இன்னொரு அக்கா, அரிசி, பருப்பு எல்லாம் தி.மு.க., ஆட்சியில் என்ன விலை, அ.தி.மு.க. ஆட்சியில் என்ன விலை என்று விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்கிறது. இந்த விளம்பரத்திலும் முதல் விளம்பரத்தில் வந்த மாதிரி ஒரு ஆள் கோட், சூட்டெல்லாம் போட்டு வருகிறார்.. “மாற்றம் வேணும்னு தானே தி.மு.க.வை தூக்கி போட்டுட்டு, போன தேர்தல்ல அ.தி.மு.க.வை தேர்ந்தெடுத்தீங்க, உங்களுக்கு நல்லா வேணும், அனுபவிங்க”ங்கிற மாதிரி டயலாக் பேசிட்டு கடைசியா நமக்கு ஆர்டர் போடுறார் ஒழுங்கா தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கன்னு..

முதலில் எனக்கு தோன்றிய விசயம், பொதுவாக தேர்தலில் தோற்றதும் கலைஞர் மக்களை கன்னாபின்னாவென்று ஏசுவார், சபிப்பார். இந்த விளம்பரம் சற்றும் அதற்கு குறைந்தது இல்லை.. ”எங்களை தேர்ந்தெடுக்கவில்லை, அதனால் நீங்கள் நல்லா அனுபவிங்க” என்று மக்களின் கஷ்டத்தை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல் உள்ளது..

எனக்கு புரியாத விசயம் என்னவென்றால் விலை வாசியே ஏறாமல் இந்த உலகில் யாராவது ஆட்சி செய்ய முடியுமா? கலைஞர் ஆட்சியிலும் தான் விலைவாசி ஏறியது. விதவிதமான கலரில் பஸ்ஸை விட்டு, டிக்கெட் காசை இரு மடங்காக மறைமுகமாக ஏற்றினார். விலை உயர்வு என்பது யாராலும் மாற்ற முடியாதது. எனக்கு தெரிந்து கடந்த பல வருடங்களாக விலை மாறாத ரெண்டே பொருட்கள் ஹால்ஸ் மிட்டாயும், தீப்பெட்டியும் தான். விலை உயர்வுக்கு ஏற்ற மாதிரி ஒரு அரசாங்கம் தன் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே தோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை.. இதில் அ.தி.மு.க. மட்டும் தான் பெரிய வில்லன், தான் தான் தமிழகத்தை காக்க இருக்கும் இரட்சகர் என்பது போல் பேசுவதெல்லாம் ஓவர் கடுப்படிக்கிறது..

சரி, அ.தி.மு.க அரசு தான் பால், பஸ், கரெண்ட், அரிசி, பருப்பு விலைவாசி உயர்வுக்கெல்லாம் காரணம் என்றே வைத்துக்கொள்வோம்.. 1999ல் இருந்து (ஏன்? இந்திரா காலத்தில் இருந்து என்று சொன்னால் கூட சரியாகத்தான் இருக்கும்), இந்த 2014 வரை மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த தி.மு.க., பெட்ரோல், டீசல், காஸ், தங்கம் போன்ற பொருட்களின் விலை உயர்வின் போதெல்லாம் என்ன செய்தது? நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு தன் ஆதரவை தொடர்ந்து கொண்டு தானே இருந்தது? இன்று நம் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்படுவதை பார்த்து ஆற்றொன்னா துயரத்தில் மூழ்கும் தி.மு.க., எத்தனை முறை மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றிய போது தன் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கிறது? ‘கலைஞர் கண்டனம் செய்தாரே?’ என்று யாராவது சொன்னீர்கள் என்றால் கொலைவெறி ஆகிவிடுவேன்.. ஜெயலலிதா ‘கசப்பு மருந்து’ என்று சொன்னதற்கும், கலைஞர் கண்டனம் செய்ததற்கும் என்ன வித்தியாசம்?

விளம்பரம் 3:

”நாங்கெல்லாம் ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ். நாங்க யாருக்கு ஓட்டுப்போடுறது?”னு சில ஜீன்ஸ் டீசர்ட் ஆண்களும், ஃபேன்ஸி டாப்ஸ் போட்ட பெண்களும் தாங்களே கேள்வி கேட்டு தாங்களே பதில் சொல்லிக்கொள்கிறார்கள். “துணை நகரை கைவிட்டவருக்கா உங்கள் ஓட்டு?”, “புதிதாக பாலமே கட்டாதவருக்கா உங்கள் ஓட்டு?”, “மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தியவருக்கா உங்கள் ஓட்டு?” ஒரு வரிசையாக கேள்வி கேட்டுவிட்டு, “எங்கள் ஓட்டு தி.மு.க.விற்கு தான்” என முடிக்கிறார்கள்..

அந்த ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ் எல்லாம் இன்னும் சில கேள்விகளை கேட்டிருக்கலாம். “மத்தியில் ஒன்றாக சேர்ந்து கோடி கோடியாக ஊழல் செய்தவருக்கா உங்கள் ஓட்டு?”, “Breakfastக்கும், lunchக்கும் இடைப்பட்ட கேப்பில் சாகும் வரை உண்ணாவிரத டிராமா போட்டவருக்கா உங்கள் ஓட்டு?”, “தமிழ் நாட்டை வடக்கு தெற்கு என்று பிரித்து தன் மகன்களை சிற்றரசர்களாக மாற்றியவருக்கா உங்கள் ஓட்டு?’, “மான ரோசமே இல்லாமல் முந்தா நாள் பிரச்சாரத்தில் கூட ‘கையை கை விட மாட்டோம்’னு சொன்னவருக்கா உங்கள் ஓட்டு?”.. ஆனால் இப்படியெல்லாம் கேள்வி கேட்க அந்த ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ்க்கு அறிவு இல்லை போல.. பாவம், அவர்கள் சென்னையை தாண்டி யோசிக்க தெரியாத ஃபர்ஸ்ட் டைம் ஓட்டர்ஸ் போல.. முதல் முறை ஓட்டுப்போடும் இளைஞர்களை இவ்வளவு மட்டமாக காட்டுவார்கள் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... மோடிக்கு ஓட்டுப்போட்டது போக மிச்சம் இருக்கும் ரெண்டரை சதவிகித முதல் முறை வாக்காளர்கள் தி.மு.க.விற்கு போடுவார்கள் என நினைத்திருந்தேன்.. ஆனால் இந்த விளம்பரம் பார்த்ததும் அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையுமே விவரமே தெரியாத முட்டாள்கள் போல் சித்தரித்து விளம்பரம் எடுத்து ஓட்டு கேட்கிறார்கள்.

நான் மேலே சொன்ன மூன்று விளம்பரங்களிலும் இருக்கும் இன்னொரு முக்கியமான விசயம் இவர்கள் தாக்குவது ஜெயலலிதாவை மட்டுமே.. காங்கிரஸையோ, பி.ஜே.பி.யையோ கண்டுகொள்வதே இல்லை. ஜெயா அரசின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்கிறார்கள்.. நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல் தானே? ஏதோ சட்டசபை தேர்தல் போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். உதயசூரியனுக்கு ஓட்டுப்போட்டால் விலைவாசி எல்லாம் மாசக்கடைசி பேங்க் அக்கவுண்ட் மாதிரி ஜீரோ ஆயிரும் என்பது போலவும், தி.மு.க., 40க்கு 40 ஜெயித்து விட்டால் மே17ல் இருந்து 24 மணி நேரமும் கரெண்ட் வந்து விடும் என்பது போலவும், சென்னையில் தடைபட்ட பாலம், மெட்ரோ ரயில், துணை நகரம் எல்லாம் உடனே நடந்து விடுவது போலவும் அள்ளி விடுகிறார்கள். நம் மக்கள் சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் கூட வித்தியாசம் தெரியாத கூமுட்டைகள் என தி.மு.க.காரர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை..

இதில் இன்னொரு மிகப்பெரிய காமெடி, மாநிலக்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., இரண்டுமே மத்தியில் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்பது போல் தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த சூழலில் தி.மு.க., எப்படி விலைவாசியை குறைத்து, கரெண்ட்டை கொடுத்து, இன்னும் தன் விளம்பரத்தில் அள்ளி வீசிய பல திட்டங்களையும் செயல்படுத்தும்? இதே கலைஞர் தானே இந்திரா காலத்தில் இருந்து ”மத்திய அரசுடன் இணக்கமான கூட்டணி இருந்தால் தான் மாநிலத்தில் மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் வாங்கித்தர முடியும்?” என்று கூறி 2014 வரை மத்திய அரசுடன் ஒட்டிக்கொண்டார்? மாநிலத்திற்கு செய்தாரோ இல்லையோ, தன் குடும்பத்திற்கு மட்டும் அனைத்து சலுகைகளையும் பெற்றுக்கொண்டார்.. இன்று மத்தியில் யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லும் இவரால் விளம்பரங்களில் சொல்லப்பட்ட அத்தனையையும் மத்திய அரசின் உதவி இல்லாமல் எப்படி செய்ய முடியும்? அதில் 1% கூட இவர்களால் செய்து காட்ட முடியாது..

மக்கள், வரப்போகும் புது மத்திய அரசு தங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால் இந்த தி.மு.க., அ.தி.மு.க., இரண்டையும் கண்டு கொள்ளாமல் பேசாமல் மத்தியில் ஆளப்போகும் கட்சிக்கே ஓட்டுப்போட்டு அவர்களை ஜெயிக்க வைக்கலாம்.. அது காங்கிரஸா, பி.ஜே.பி.யா என்று தேர்ந்தெடுப்பதில் தான் நம் புத்திசாலித்தனம் இருக்கிறது.. யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லும் இந்த இரு திராவிட கட்சிகளையும் நம்பி, இருப்பதையும் இழப்பதை விட மத்தியில் வரப்போகும் கட்சிக்கு அட்லீஸ்ட் ஒரு 10 எம்.பி.யாவது தமிழகத்தில் இருந்து போனால் தான் நமக்கான உரிமைகள், சலுகைகள் கிடைக்கும்..

அடுத்ததாக நம்ம தி.மு.க.விற்கு.. 1950களில் இருந்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பேசியே ஏமாற்றினீர்கள். காமராஜரை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினீர்கள். இன்று உங்கள் சுவர் விளபரத்திற்கு அவர் படத்தை பயன்படுத்துகிறீர்கள். எம்.ஜி.ஆரை இல்லாத வார்த்தை எல்லாம் கூறி துரோகி பட்டம் கொடுத்தீர்கள். ஆனால் இன்று அவரை புகழா விட்டால் ஓட்டு கிடைக்காது என்பதால் அவரையும் புகழ்கிறீர்கள்; கண்டும் காணாமல் சில போஸ்டர்களிலும் போட்டுக்கொள்கிறீர்கள். பேசிப்பேசிய இரண்டு தலைமுறைகளை ஏமாற்றி வீட்டீர்கள். இப்போது அடுத்த தலைமுறையை டிவி விளம்பரம் வழியாக ஏமாற்ற நினைக்கிறீர்கள். நம் மக்களை சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக, மின்வெட்டுக்கு அடிப்படையே நீங்கள் தான் என்பதை மறந்தவர்களாக, மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை மத்திய அரசு ஏற்றும் போதெல்லாம் பதவி சுகத்திற்கு அதனோடு ஒட்டி உறவாடினீர்கள் என்பதை தெரியாதவர்களாக இருப்பார்கள் என நீங்களாகவே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். 

மக்கள் இப்போதெல்லாம் 1967 போல் இல்லை. அதுவும் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகமானதால் எல்லா தகவல்களும் உடனுக்குடன் கிடைத்து விடுகின்றன. தி.மு.க. தலைவர் நாளொரு பேச்சு, பொழுதொரு நிலைப்பாடு எடுத்ததெல்லாம் தினமும் ஃபேஸ்புக்கில் கழுவி ஊற்றப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.. இந்த சூழலில் மக்களை விபரம் தெரியாதவர்கள் போல் நினைத்துக்கொண்டு இப்படியா மொக்கைத்தனமாக விளம்பரங்கள் எடுக்க வேண்டும்? உங்களுக்கு கிடைக்கும் அற்ப ஓட்டுக்கள் கூட இல்லாமல் போய் விடப்போகிறது, ஜாக்கிரதை. ஃபேஸ்புக்கிலும், வலை உலகிலும், ஏன் எழுத்துலகிலும் கூட உயிரை மையாக வடித்து எழுதும் பல எழுத்தாளர்கள் உங்களுக்காக இருக்கிறார்கள்.. அவர்களிடம் நல்ல ஸ்க்ரிப்ட்டாக ரெடி பண்ணிக் கொடுக்கச்சொல்லி அடுத்த தேர்தலிலாவது உருப்படியாய் ஓட்டு கேளுங்கள்.. Better luck next time.. 

மரியாத ராமண்ணா (தெலுங்கு) - சினிமா விமர்சனம்..

Tuesday, April 8, 2014

இப்ப ஒரு ரெண்டு மூனு மாசமா நம்ம ஏர்டெல் புண்ணியவாளன் நெட் பேக்குக்கு வழக்கமா கொடுக்கிறத விட ரெண்டு ஜி.பி அதிகமா தரான்.. அதனால மாசம் ஒன்னோ ரெண்டோ படம் டவுன்லோடு பண்ணி பாத்துட்டு இருக்கேன்.. பிறமொழிப்படங்கள் மட்டும் தான் ஸ்ட்ரிக்ட்டாக.. இந்திப்படங்கள் எல்லாம் ஹாலிவுட்டுடன் போட்டிக்கு போய்விட்டதாலும், நான் இந்திப்படம் பார்க்க காரணமானவரும் ஹாலிவுட்டுக்கு போய்விட்டதாலும், என் தகுதிக்கு தெலுங்கும், மலையாளமும் தான் சரி என முடிவு செய்து கொண்டேன்.. உடனே, ’அப்படினா, இப்ப தெலுங்கு, மலையாளப்படம் எல்லாம் பாக்க யார் காரணமா இருக்காங்க?’னு குதர்க்கமான கேள்வி கேக்கிறவங்களுக்கு எல்லாம் கேப்டனின் பிரச்சார சிடி அனுப்பி வைக்கப்படும், ஜாக்கிரதை..

மலையாளத்தை விட தெலுங்குப்படங்கள் ஒரு விதத்தில் வசதி.. அவை எல்லாம் நம் தமிழ்ப்படங்கள் மாதிரி லாஜிக், ஹீரோவின் தகுதி தராதரம் எல்லாம் பார்க்காது.. ரெண்டரை மணிநேரம் பொழுதுபோக்கு. அவ்வளவு தான். ஏற்கனவே நான் பார்த்த தம்மு, தம்மாருகம் போன்றவை எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நன்றாக பொழுதுபோயின. அந்த வகையில் சமீபகாலமாக கப்பார் சிங், அத்தரின்டிக்கி டாரிடி, பாட்ஷா போன்ற ஆக்சன், ஃபேமிலி படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.. இந்த மாதம் என் ஃபேவரைட் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மரியாத ராமண்ணா (2010) பார்க்கலாம் என்று முடிவு செய்து நேற்று தான் டவுன்லோடு பண்ணி முடித்தேன்..இந்த இடத்தில் நான் ராஜமௌலியைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.. இவர் ஷங்கர் பாதி, கே.எஸ்.ரவிக்குமார் பாதி கலந்து செய்த கலவை. 2001ல் இருந்து இதுவரை இவர் இயக்கிய படங்கள் மொத்தமே ஒன்பது. அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.. இவரின் பல படங்களும் இந்தி, தமிழ் என்று பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் கல்லாவை நிரப்பியிருக்கின்றன.. அனைத்துப்படங்களுமே மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கர்ஷியல், குடும்பம், ஆக்‌ஷன், ஃபேண்டஸி ரகப்படங்கள் தான். இவரிடம் எனக்குப்பிடித்த விசயம், இதுவரை இவர் தெலுங்கை தாண்டி திறமையை நிரூபிக்கிறேன் பேர்வழி என்று இந்தியிலோ தமிழிலோ நேரடிப்படம் எடுத்து பெயரைக்கெடுத்துக்கொள்ளவில்லை. தனக்கு எது வலுவான இடமோ அங்கிருந்து அடி வெளுக்கிறார். அனைத்தும் சிக்ஸருக்கு பறக்கின்றன.. இவரின் ஒவ்வொரு படத்திலும், படப்பெயருக்கு அருகில் “an s.s.rajamouli film" என்று ஒரு ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி அடித்திருக்கும்.. தன் பெயரை ஒரு முத்திரை போல் குத்தி படத்தை வெளியிடுகிறார் என்றால் தன் திறமை மேல் அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையும், தைரியமும் இருக்க வேண்டும்? நம்பிக்கையும், திறமையும், ஆடியன்ஸின் பல்ஸை அறிந்து வைத்திருக்கும் நுணுக்கமும் தான் அவரின் படங்களை எல்லாம் பாக்ஸ் ஆஃபிசில் சிதறடிக்கின்றன.

சரி இப்போது மரியாத ராமண்ணா படத்திற்கு வருவோம். ஒரு கிராமம், அதில் ஊர்ப்பெரியவரான ஒரு தாதா குடும்பம், அந்த ரவுடிக்குடும்பத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம்/கொள்கை/செண்டிமெண்ட், அந்த செண்டிமென்ட்டை பயன்படுத்தி அவர்களின் எதிரி அதாவது கதையின் நாயகன் எப்படி தப்பிக்கிறான் என்பதை நகைச்சுவையுடன் விறுவிறுப்பாக சொல்கிற படம் தான் இது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கொலைகள் செய்திருக்கும் நாகிநீடு & சன்ஸின் மேல் இதுவரை ஒரு குற்றம் கூட நிரூபிக்கப்பட்டதில்லை. தனக்கு ஒருவன் சிறு தீங்கு இழைத்தாலும் அவன் வம்சத்தையே அழித்துவிடும் கொடூர வில்லன் அவர். ஆனால் இவ்வளவு கொடூரமான ஆளாக இருந்தாலும், தன் வீட்டிற்குள் ஒருவர் வந்து விட்டால், ஒரு கடவுளைப்போல் அவரை உபசரிப்பார், அவன் பரம எதிரியாகவே இருந்தாலும். விருந்தோம்பல் என்பது அவர் குலவழக்கம் மற்றும் வீடு அவரின் கோயில் மாதிரி. அங்கு எப்போதும் சந்தோசம் மட்டுமே இருக்க வேண்டும், யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்பது அவர் கருத்து. ஆனால் வீட்டிற்குள் வந்துவிட்ட எதிரி தப்பித்தவறி வீட்டு வாசலை தாண்டி வெளியே காலை வைக்கிறான் என்றால் அவன் நரகத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்கிறான் என்று அர்த்தம்.

இந்த சூழலில் ஊரை விட்டு ஓடிப்போன அவரின் பரம எதிரி ஒருவனின் மகன், ஊரின் பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் தன் பூர்வீக நிலத்தை விற்க வருகிறான். வந்தவன் ஊர் மக்களின் அறிவுரைக்கிணங்க ஊர்ப்பெரியவர் நாகிநீடுவிடமே உதவி கேட்டு செல்கிறான். அவனை வரவேற்று, உள்ளங்கையில் தாங்கி, வீட்டில் பந்தி பரிமாறும் போது தான் தெரிகிறது பயல், 28 வருடங்களாக தான்  பழிவாங்கத்துடிக்கும் எதிரியின் மகன் என்று. இதையும், அவர்களின் கொலை செய்யும் எல்லை வீட்டு வாசலை தாண்டித்தான் ஆரம்பிக்கிறது என்பதையும் அறிந்து கொண்ட நம் ஹீரோ என்னவெல்லாம் செய்து தப்பிக்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.அதுவரை காமெடி பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சுனில் இந்தப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கினார். அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம். காமெடி ஓவர் டோசாகி விட்டால் படத்தின் சீரியஸ்னஸ் குறைந்து விடும்.. சீரியஸ்னஸ் ஓவர் ஆகிவிட்டால் ஒரு ஆக்‌ஷன் படம் போல் காமெடி ஹீரோவுக்கு சூட் ஆகாமல் போய்விடும் என்கிற ரிஸ்க்கான மெல்லிய கயிற்றில் அழகாக பயணித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, டான்ஸ், காமெடி, நடிப்பு என்று பிரமாதப்படுத்திவிட்டார்.. என்னைக்கேட்டால் பல தெலுங்கு மாஸ் ஹீரோக்களை விட இவர் கொஞ்சம் லட்சணமாகவே இருக்கிறார். வீட்டிற்குள் அழகான, பாசத்தை மட்டுமே கொட்டும் ஒரு குடும்பம், வீட்டு வாசலில் கையில் கத்தி, அரிவாளுடன் நூறு பேர் கொல்ல காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் வீட்டில் இருந்து போகாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முறையும் இவர் செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.. ஹீரோயின் அக்மார்க் கமர்ஷியல் சினிமா ஹீரோயினாக இருக்கிறார். அது போக படத்தில் ரயில் வண்டி போல 20,30 பாத்திரங்கள் இருக்கின்றன.. 

ஆனாலும் ஹீரோவை விட விஞ்சி நிற்பது நாகிநீடுவின் பாத்திரம் தான். ஒரு ஊர்த்தலைவராக, தாதாவாக, வீட்டிற்குள் பாசமான பெரியவராக என்று இவரின் நடிப்பும், பேச்சும், குரலும், கண்களும், அவற்றையெல்லாம் ஒரு கெத்தாக காட்டும் மீசையும் அருமையிலும் அருமை. சமகாலத்தில் தமிழ் சினிமாவில் இதே மாதிரி ஆள் என்றால் ஜெயப்பிரகாஷ் தான். ஆரம்ப காட்சியில் தன் கிராமத்தில் தொழிற்சாலை ஆரம்பிக்க வரும் கம்பெனி ஆட்களை தன் வீட்டில் உபசரித்து நன்றாக கவனித்துக்கொண்டிருப்பார். அதில் ஒருவன் இவரின் பணிவிடையை ஓவர் அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருப்பான். எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசிக்கொண்டிருப்பான். இவரும் அது எதையும் கண்டுகொள்ளாமல் சிரித்த முகத்துடன் சாந்தமாக எல்லா பணிவிடைகளையும் செய்வார். எல்லாம் முடிந்து அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பும் போது அவனுக்கு முன் இவர் வாசலில் போய் நின்றுவிடுவார். அவனின் கால் சரியாக அந்த வாசலை தாண்டி ஒரு எட்டு வைக்கும் போது அருகில் உலக்கை குத்திக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து அதை வெடுக்கென பிடுங்கி இவன் கழுத்தில் ஓங்கி ஒன்னு விடுவார். அவ்வளவு தான், ரெண்டு பேர் வந்து அவனை எங்கோ அள்ளிக்கொண்டு போவார்கள். மீண்டும் சிரித்த முகத்துடன் மற்ற ஆட்களிடம், “நீங்க ஹைதராபாத் போற வரைக்கும் ஓட்டல் ஒன்னும் சரி இருக்காது. அதனால இத எடுத்துக்கோங்க”னு ரெண்டு பெரிய டிஃபன் கேரியர்ல சாப்பாடு கொடுத்து அனுப்பிவைப்பார். நமக்கே இந்த ஆள் தான் இப்போது உலக்கையால் அடித்த ஆளா என்று டவுட் வரும் அளவிற்கு மிகவும் பாந்தமாக பேசுவார். அந்த பாத்திரம் ஒரு முழுமையை அடைவது அந்த இடத்தில் தான். சினிமாவில் தான் இப்படிப்பட்ட பெரிய மனிதர்கள் சாத்தியம் என்றாலும், அவரின் பாத்திரம் மேல் நமக்கு நிச்சயம் மரியாதை வரத்தான் செய்கிறது.ஒரு சுவாரசியமான ஒன்லைனை, இன்னும் சுவாரசியமான திரைக்கதையால் அழகுபடுத்தியிருப்பார் ராஜமௌலி. ஹீரோயினை இம்ப்ரஸ் பண்ண, அல்லது ஹீரோ எதையோ பண்ணப்போக அதைப்பார்த்து ஹீரோயின் இம்ப்ரஸ் ஆகும் வழக்கமான ராஜமௌலி டெக்னிக் இந்தப்படத்திலும் உண்டு. ஆனால் ஒன்றிரெண்டு விசயங்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். ஹீரோயின் மேல் முறைப்பையனுக்கு வரும் காதல், ஹீரோ மேல் ஹீரோயினுக்கு வரும் காதல், ஹீரோயின் மேல் ஹீரோவுக்கு வரும் காதல் எல்லாம் சினிமாவுல கூட நடக்குமாங்கிறது டவுட்டு தான். பொசுக்கு பொசுக்குனு காதல் வந்துருது மை லார்ட்.. அதிலும் வில்லன்கள் துரத்தி வரும் போது ஹீரோவிடம்  ஹீரோயின் தன் காதலை சொல்கிறாள். அது வரை அவளை காதலிக்கும் எண்ணமே இல்லாதவன், புறமுதுகிட்டு ஓடிக்கொண்டிருந்தவன் திடீரென ஓடுவதை நிறுத்திவிட்டு ஒரு டயலாக் சொல்கிறான் பாருங்கள், “நான் ஓடிப்போயி என் உயிர காப்பாத்திக்கணும்னு நெனச்சேன்.. ஆனா ஒன்ன மாதிரி ஒரு பொண்ண விட்டுட்டு ஓடிப்போயி நான் உயிர் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? வாழ்வோ சாவோ அது உன் கூடத்தான்”னு... எப்பா சாமி ஒரு ஃபிகரு லவ் பண்ணுறேன்னு சொன்ன உடனே நம்ம பயலுக உசுர கொடுக்கிற அளவுக்கு எல்லாம் போயிருவாய்ங்களா என்ன? ஆனா அதுக்காக நீங்க நெனைக்கிற மாதிரி ஹீரோ ஆவேசம் வந்து எல்லா வில்லன்களையும் அடித்து துவம்சம் எல்லாம் பண்ண மாட்டார்.. ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து ஹீரோயின் ஹீரோவை காப்பாற்றி குடும்பத்தினரையும் சமாதானப்படுத்திவிடுவாள். Happy endings.. :-)பாடல்கள், இசை, காட்சியோடு ஒன்றச்செய்யும் ஒளிப்பதிவு, ஒரு பாத்திரமாகவே வரும் ஹீரோவின் இத்துப்போன சைக்கிள் (மம்மி ரிட்டன்ஸ் படத்தில் வருமே ஒரு பலூன் ஹீரோ & கோவை காப்பாற்ற, அது மாதிரி இந்த சைக்கிள்) என படத்தில் நம்மை போரடிக்காமல் ரெண்டே கால் மணிநேரம் கட்டிப்போட பல விசயங்கள் திரைக்கதையில் உண்டு.. இல்லாமலா இந்த படத்தை கன்னடம், பெங்காளி, இந்தி என்று எடுத்து எல்லா இடத்திலும் ஹிட் அடித்திருக்கிறார்கள்? ஒவ்வொரு முக்கியமான காட்சியிலும், ஊரின் பாரம்பரியத்தை, பழக்க வழக்கத்தை சொல்லும் அந்த பின்னணிப்பாடல் சூப்பர்.. 

இந்தப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்கிறார்கள் இப்போது.. நம்ம சந்தானம் தான் ஹீரோவாம். தன் அதிகப்பிரசங்கித்தனத்தையும், ஓவர் டயலாக்கையும் அடித்து விடாமல், கதைக்கு தேவையானதை மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்கும். படத்தின் அடிநாதமான அந்த வீடும், அதன் ”சம்பிரதாயமும்” தான் ஹீரோ, வில்லன் அனைத்தையும் விட முக்கியம். அதை கெடுக்காத அளவிற்கு கொடுத்து, கிளைமேக்ஸில் இருக்கும் சிறு குறையையும் மாற்றி அமைத்தால் படம் நிச்சயம் தமிழிலும் பட்டையைக்கிளப்பும்.. தெலுங்கில் ரெட்டி ரெட்டி என்பார்கள்.. தமிழ் சினிமாவின் இலக்கணப்படி அது தேவராகவோ கவுண்டராகவோ இருக்கும்.. வேறு எந்த ஜாதி வீரமானதாக காட்டப்பட்டிருக்கிறது தமிழ் சினிமாவில்?

அடுத்ததாக “நான் ஈ” மிகப்பெரிய வெற்றிக்குப்பின் இரண்டு ஆண்டுகளாக ராஜமௌலி இயக்கிக்கொண்டிருக்கும் என் டார்லிங் அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் ’பாகுபலி’யை மிகவும் எதிர்பார்க்கிறேன்.. 9படங்களில் கொடுத்த வெற்றியை எல்லாம் தாண்டி மிகப்பெரிய வெற்றியைக்கொடுக்க ராஜமௌலிக்கு வாழ்த்துக்கள்.. என் டார்லிங்கிற்கு வாழ்த்துக்கள் எல்லாம் வேண்டாம்.. ஸ்க்ரீனில் நீ வந்தா மட்டும் போதும்.. நீ வந்தா மட்டும் போதும்.. :-D
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One