அந்நியன் படம் ஏன் ஓடவில்லை?

Wednesday, March 24, 2010

இயக்குனர் ஷங்கரின் மற்ற "கருத்து கந்தசாமி" படங்கள் அளவிற்கு அந்நியன் ஏன் ஓடவில்லை என்று நான் பல முறை நினைத்திருக்கிறேன். ஒன்றே ஒன்று மட்டும் புரிந்தது. 'அடுத்தவன் டவுசர் கிழிஞ்சுருக்குன்னு' சொன்ன கிண்டலடிச்சு கை தட்டி சிரிக்கும் நாம் (நானும் தான்) 'உன் டவுசரும் கிழிஞ்சு தான் மக்கா இருக்கு' என்று யாரவது சொன்னால் அதை மூடி மறைத்துக்கொண்டு அடுத்தவன் டவுசரை பற்றி மட்டுமே பேசுவோமே, அந்த கதை தான் இந்த படத்திற்கு நிகழ்ந்தது.

அவர் 'ஜென்டில்மேன்' என்று ஒரு திருடன் போலீஸ் கதை எடுத்து, நாட்டில் நடக்கிற எல்லா அக்கிரமத்துக்கும் அரசியல்வாதி தான் காரணம்னு மதுபாலா தொப்புள அர்ஜுன் நோன்டுற கேப்புல சொல்லிருப்பாரு. அத நாம ஆஹா ஓஹோ னு கை தட்டி ஹிட் ஆக்குனோம்; ஏன்னா அரசியல்வாத்திய பத்தி கரக்ட்டா காட்டிருக்கர்னு சொல்லிட்டோம்.

காதலன் படத்த விட்ருவோம், பொழச்சு போட்டும். மூனாவதா 'இந்தியன்' அப்டின்னு ஒரு படம் எடுத்தார். கொள்கைக்காக மகனையே கொல்ற அப்பான்னு ரொம்ப புதுசான தங்கப்பதக்கம் கால லைன். அதுல வர்மம், சுதந்திரப்போராட்டம், லஞ்ச ஒழிப்புன்னு அழகா திரைக்கதை 'பின்னிருப்பார்'. "அரசு ஊழியன் லஞ்சம் வாங்குறனால தான் நம்ம நாடு சின்ன சின்ன நாடு குட்டி குட்டி தீவெல்லாம் விட பின்தங்கி இருக்குன்னு" சொன்னார். நம்ம தமிழகத்தின் உலக நாயகன் அதுக்காக தேசிய விருதுல்லாம் வாங்குனாரே?! அந்த படத்தையும் வசூல் சாதனை ஆக்குனோம். ஏன்னா ஒரு அரசு அலுவலகம் எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு காமிச்சாரே அதனால தான். 'ச்சே இந்த அரசு ஊழுயர் எல்லாம் எவ்வளவு மோசமானவங்க?'

கொஞ்ச நாள் கழிச்சு ஜீன்ஸலாம் கழட்டி வச்சுட்டு 'முதல்வன்' னு ஒரு படம் எடுத்தார். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒழுங்காக இருந்தால், அவருக்கு கீழுள்ள அமைச்சர், ஊழியன், என்று எல்லோரும் உருப்படியாக மாறி ஒரு நாடே விளங்கிடும் என்று தில்லாக சொல்லி மதுரையில் மட்டும் அண்ணனிடம் மாட்டிக்கொண்டார். சரி, அது வேற கதை. நம்ம மேட்டருக்கு வருவோம். 'இப்போ தான் த நம்ம நாடு ஏன் முன்னேரலன்னு தெரியுது. காமராஜருக்கு அப்பறம் ஒரு பயலும் உருப்படியா வரல அதான். இல்லேனா, நம்ம நாடு எப்பவோ சிங்கப்பூர் அளவுக்கு போயிருக்கும்' என்று தினமலர் (சந்திரபாபு நாயுடு ஷங்கர கூப்பிட்டு விருந்து வச்சத அவங்க தான பப்ளிக்குட்டி பண்ணுனாங்க?) படித்துக்கொண்டு தெளிவாக பேசினோம்.

இந்த வரிசைல அடுத்து யாரடா குத்தம் சொல்லலாமுன்னு அவர் யோசிச்சு ஒரு தப்பான முடிவெடுத்துட்டார். ஆமா, படம் பாக்க வரவனையே, 'டாய் உன் மேல தான் தப்பு' அப்படின்னு சொன்ன எவன் கேப்பான்? அதிலும் பெரிய தவறு காந்தி ஜெயந்தி அன்னைக்கு டாஸ்மாக் தொறந்தது தப்புன்னு அவர் சொன்னத கேட்டு, இத்தன நாள் தண்ணியடிச்சுட்டு, கை தட்டிட்டு, இருந்தவனை கடுப்பாக்கிடுச்சு. 'கோவிலுக்கு போகாம போனத்தையா தூக்கிட்டு போறது புது வண்டில? என்னடா ராம் குமாரு கொடுமையா இருக்கு?' என்று என் அம்மா என்னிடம் கேட்டார்.

மொகரையில அடிக்குற மாதிரி 'நே தாண்டா நாடு முன்னேறாததுக்கு காரணம்' என்று ஒரு குடிமகனிடம் சொன்ன உடன் அவன் கோபத்தைப்பார்த்தீர்களா? அவரின் மற்ற சமூகப்படங்களுக்கு நிகராக அந்நியன் ஓடவில்லை.

நம்மால் நம் தவறை அடுத்தவர் சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியவில்லை. பிறர் மீதே குற்றம் சுமத்தப்பழகிவிட்டோம். சிறு வயதில் கடைக்கு போகச்சொல்லும் அம்மாவிடம் "அப்போ எனக்கு அம்பது காசு குடு" என்று கேட்கும் போதே லஞ்சம் ஆரம்பித்து விடுகிறதே? சில வீடுகளில் அம்மாவே லஞ்சம் கொடுத்து பிள்ளைகளை கடைக்கு அனுப்புவார்கள். இப்போது அரசுத்துறை மட்டும் அல்ல, எங்கும் லஞ்சம் தான். நாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்; அப்போது கொத்தனார் ஒரு கடையை குறிப்பிட்டு அங்கு தான் சிமென்ட், செங்கல், கம்பி எல்லாம் வாங்க சொல்லுவார். அதே போல் ஆசாரி ஒரு குறிப்பிட்ட கடையில் தான் மரம் வாங்க சொல்லுவார். ஏன் இப்படி? இந்த கடைகளில் இருந்தெல்லாம் கொத்தனாருக்கும், ஆசாரிக்கும் கமிஷன் வரும் அதனால் தான். சம்பளத்த விட்டு இப்படி சம்பாதிக்க நெனச்சா அப்பறம் எப்படி வேலைய ஒழுங்கா பாக்குறது?

இது சும்மா ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி தான் எல்லோரும் அவர் அவர் தொழிலில் இருக்கிறோம். இதை ஒருவர் குற்றம் என்று சொல்லி மிக பிரம்மாண்டமாக படமாக எடுக்கும் போதும் நமக்கு குற்ற உணர்வு வராமல் கோபமே வருகிறது. இப்போது புரிகிறதா அந்நியன் ஏன் ஓடவில்லை என்று?

1 comment

  1. ஹா ஹா...இது தான் காரணமா....
    ஆனா அந்நியன் படத்தை சென்னையில்
    நூறு நாட்கள் ஒட்டினார்கள் நண்பா.....

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One