சமீபத்தில் வேலை மாற்றலாகி புதுக்கோட்டை சென்றேன். புதுக்கோட்டை என்றதும் நண்பர்கள் அங்கிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி சொன்னார்கள். ஆவுடையார்கோவில், சித்தன்னவாசல், செட்டிநாட்டு கட்டிடங்கள் என்று புதுக்கோட்டையை சுற்றி இவ்வளவு இடங்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன். இதுமட்டுமல்லாமல் அமைதியான கடற்கரை, நண்டும் ஆமையும் ஓடும் வயல்வெளிகள் என்று சிவகாசி மாதிரி காய்ந்து கருகிப்போன இடத்தில் இருந்து அங்கு சென்ற எனக்கு பல விசயங்களும் குளு குளுவென மனதுக்கு இனிமை தருவதாக இருந்தன.
நான் ரசித்த செட்டிநாட்டு கட்டிடங்களையும், கடற்கரையையும், சித்தன்னவாசல் படங்களையும் ஃபேஸ்புக்கில் போட்ட போது, என் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.ரத்தினவேல் அவர்கள், எனது ப்ளாக்கில் சித்தன்னவாசல் அனுபவங்களை பற்றி எழுத கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட பெரும்பாலான விசயங்களை நான் செய்ய முயற்சி செய்வேன் (அவரிடம் வாங்கிய புத்தகங்களை திரும்ப கொடுப்பதை தவிர). அந்த வரிசையில் இந்த சித்தன்னவாசல் அனுபவ & பயணக் கட்டுரை.
புதுக்கோட்டையில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தன்னவாசல். 5ரூபாய்க்கு டோக்கன் வாங்கினால் யாரும் உள்ளே செல்லலாம். பூங்கா எல்லாம் கட்டி வைத்து அழகாக பராமரிக்கிறார்கள். பூங்காவில் தமிழன்னை சிலை போல் ஒன்று இருக்கிறது. என்னால் பூங்காவினுள் படம் எடுக்க முடியவில்லை. சாலை ஆரம்பத்தில் இருந்து டோக்கன் வாங்கி உள்ளே செல்லும் வரை வழிநெடுக பள்ளி கல்லூரி காதல் ஜோடிகள் தோள் மீது கையை போட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதில் பூங்காவில் நான் படம் எடுக்க, “என் ஆள ஃபோட்டோ எடுக்குறான், மாப்ள” என்று எவனாவது அடியாளை கூப்பிட்டால் என்ன ஆவது? பிழைக்க போன எடத்துல வம்பு வேண்டான்டா ராம்கொமாரு என்று கிளம்பிவிட்டேன் ஓவியப்பாறைக்கு. இங்கு வரும் பலரும் காதல் ஜோடிகளாகவே இருப்பதால் பார்க்கோடு தங்கள் சில்மிஷங்களை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். மேலே இருப்பது தான் ஓவியப்பாறைக்கு செல்லும் வழி.
அங்கு மத்திய அரசு ஊழியர் ஒருவர் இருப்பார். எனக்கு பல அரிய விசயங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் சொன்னவர் அவர் தான். அங்கிருக்கும் ஓவியங்களை பாருங்கள்.
இவை அனைத்தும் மேல் சுவரில் வரையப்பட்டிருக்கும் 3ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்கள். சுண்ணாம்பு பூசிய சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள். குளத்தில் நிறைய தாமரைகள் மலர்ந்துள்ளன, கொக்குகளும், மீன்களும், முதலையும் யானையும் இருக்கின்றன.. முனிவர் ஒருவர் குளத்தில் பூ பறிக்கிறார். அத்தனையும் அச்சு அசலாக தத்ரூபமாக இருக்கின்றன.. இந்த மாதிரி ஒரு ஓவியத்தில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?
முனிவர் நின்று பூ பறிப்பதும் யானை ஒன்று நிற்பதும் இதில் எவ்வளவு அழகாக வரையப்பட்டிருக்கிறது பாருங்கள். பூவிதழ்களின் வண்ணம், தண்டு, இலைகள், என்று ஒவ்வொன்றும் தங்களின் நிஜமான வண்ணங்களில் இந்த ஓவியத்தில் இருப்பதை பாருங்கள்.
இந்த ஓவியத்தை நான் இன்னும் தெளிவாக எடுப்பதற்குள் அந்த ஊழியர் என்னை தடுத்துவிட்டார். படங்கள் எடுக்க கூடாதாம். இந்த ஓவியத்தில் ஒரு பூ மொட்டாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரும்பி மலர்வதை மிகவும் தத்ரூபமாக வரைந்திருப்பார்கள். தங்க வண்ண பின்புலத்தில் வரைந்திருக்கிறார்கள்.
இது போன்ற ஓவியங்களும் இதை விட இன்னும் அழகான மாடர்ன் ஆர்ட்டும் நம்மில் பலர் பார்த்திருக்கலாம். ஆனால் இதில் என்ன சிறப்பு என்றால், நாம் இது வரையப்பட்ட காலத்தை கொஞ்சம் மனதில் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும். 1700 ஆண்டுகளுக்கு முன் சமணர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. இவை வரையப்பட்ட காலத்தில் பெயிண்ட்டோ, வண்ணங்களை கொண்டு படம் வரையும் முறை கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் சிற்பங்கள் மட்டும் தான் அப்போதைய காலத்தில். எப்படி இவர்கள் வண்ணங்களை கண்டுபிடித்தார்கள்? மூலிகைகள் மூலம் வண்ணங்களை உருவாக்கினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் எது உண்மை என்று தெரியவில்லை. மேலும் அப்போதைய காலத்தில் பெயிண்ட் அடிக்க பிரஷ் எதுவும் கிடையாது. பின் எப்படி இவ்வளவு நேர்த்தியாக, சரியான அளவில் படம் வரைந்து வண்ணங்களை பரவ விட்டிருக்கிறார்கள்? இதுவும் மிகப்பெரிய கேள்வி தான். இந்தப்படங்கள் எல்லாம் மேல் சுவரில் வரையப்பட்டவை. அண்ணாந்து பார்த்துக்கோண்டே இந்த ஓவியங்களை எத்தனை நாட்கள், எத்தனை பேர்கள் வரைந்திருப்பார்கள்?
ஒரு சின்ன தவறு நேர்ந்தால் அதை மாற்றி வரைய முடியாது. எவ்வளவு கவனமும் உழைப்பும் நேர்த்தியும் தேவைப்பட்டிருக்கும்? இத்தனை காலம் அழியாமல் இருக்க என்ன செய்திருப்பார்கள்? இத்தனை கேள்விகளையும் உங்கள் மனதில் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஒரு முறை அந்த ஓவியங்களை பாருங்கள். காணக்கண்கோடி வேண்டும் என்று நீங்கள் உணர்வீர்கள். ஆனால் இதை எத்தனை பேர் உணர்வோம்? நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் வந்தனர். அந்த சிறுவன் அவ்வளவு ஆச்சரியமாக பார்த்தான். ஆனால் பெற்றோர், “என்ன இவ்ளோ சின்ன இடம் தானா? ஒன்னுமே இல்ல?’ என்று சலித்துக்கொண்டு தங்கள் மகனையும் வம்பாக இழுத்து சென்றனர். இன்னும் பலர் தங்கள் காதலை காதலன்/காதலியிடம் சொல்ல துப்பில்லாமல் இங்கு சுவர்களின் காதலை கொட்டுகின்றனர். ஒரு வரலாற்று விந்தையின் மீது அக்கறை இல்லாத இதுகள் எல்லாம் காதலில் என்ன அக்கறையுடன் இருந்துவிட போகின்றன? வெயில் பட்டால் கூட வண்ணமும் ஓவியமும் உரிந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் வெயில் கூட படாமல் அரசாங்கம் இதை பராமரிப்பது மிகவும் நல்ல வரவேற்கத்தக்க செயல்.
இந்த ஓவியங்கள் மட்டுமல்லாமல் சமண மத தலைவர்கள் இருவரின் சிற்பங்களும் உள்ளன.. இது மஹாவீரரின் சிற்பம். இங்கு இப்போது ஆயிரக்கணக்கில் சமணர்கள் வந்து இதை ஒரு கோவிலாக வழிபட்டு செல்கிறார்களாம்.
இது சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் பர்ஷவர். இவர்கள் இருவரும் தான் சமணர்களின் கடைசி இரண்டு தீர்த்தங்கரர்கள்.
ஓவியங்கள் இருக்கும் அதே இடத்தின் பக்கவாட்டில் தான் இந்த சிற்பங்கள் இருக்கின்றன.. இதை தாண்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. அங்கே மூன்று சிற்பங்கள் இருக்கின்றன. அவர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களும் சமண மத துறவிகளாக இருக்கலாம்.
இந்த அறையின் சிறப்பு என்னவென்றால், இங்கு அடிவயிற்றில் இருந்து ‘ம்ம்ம்ம்’ என்று நீண்ட சப்தம் எழுப்பினால் அது ஒரு வித அதிர்வை உங்கள் உடம்பில் உண்டு பண்ணி சிலிர்க்கவைக்கும்.. நல்ல அனுபவம் அது. சித்தன்னவாசல் ஓவியமும் இந்த சிறப்ங்களும் ஒரு பாறையை குடைந்து அமைக்கப்பெற்றவை என்பது அச்சரியத்தில் இன்னொரு ஆச்சரியம்.
அடுத்ததாக இங்கேயே இருக்கும் சமணர் படுகைக்கு சென்றேன். மணி மதியம் 3. மாலை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அங்கும்5ரூ.க்கு டோக்கன் எடுத்தேன். டோக்கன் எடுக்கும் போதே ஊழியர் சொன்னார், “நீங்க தான் சார் மத்தியானத்துல மொத ஆளு”.. கேட்டதுமே பீதியாகிவிட்டது எனக்கு. அந்த மலை மீது நான் மட்டும் தனியாக ஏற வேண்டும் என்னும் நினைப்பே வியர்க்க வைத்துவிட்டது. துணைக்கு யாரும் கிடையாது. ஒரு முறை அந்த குன்றை மீண்டும் பார்த்தேன். கடவுளின் மீதும் அம்மா அப்பாவின் புண்ணியங்கள் மீதும் சுமையை ஏற்றி விட்டு மலையேற ஆரம்பித்தேன்.
மெதுவாக அடி மேல் அடி வைத்தேன். இது சமணர்கள் கி.மு.3ம் நூற்றாண்டில் பாண்டிய சைவ சமய மன்னர்களுக்கு பயந்து இங்கு வந்து ஒளிந்து வாழ்ந்ததாக கூறுகிறார்கள். மலை ஏறும் போதே நீங்கள் நினைப்பீர்கள், ‘தப்பி பிழைக்க வரும் பாவி இங்கு வந்தா ஒளிய வேண்டும்? இதுக்கு இவைங்க பாண்டிய மன்னன் கையால செத்தே போயிருக்கலாம்” என்று. அந்த அளவுக்கு உங்களை கஷ்டப்படுத்தும். மேலே ஏறி உச்சியை அடைந்து மீண்டும் அந்தப்பக்கம் கீழே இறங்க வேண்டும்.
மேலே படத்தில் இருக்கும் இந்த இடத்தில் நிற்கும் போது எனக்கு பயங்கரமாக மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. கொளுத்தும் வெயில். கையில் தண்ணீரும் இல்லை. கீழே இறங்கலாம் என்றால் மேலே ஏறியதை விட இறங்குவது இன்னும் டெரராக இருந்தது. உதவிக்கு கூப்பிடக்கூட ஆள் இல்லை. செல் ஃபோனில் டவரும் படுத்துவிட்டது. இந்த வள்ளலின் குரங்குகள் வேறு.. கிளைகளின் அங்கும் இங்கும் தாவிக்கொண்டும் நம் வழியில் குறுக்கே வந்து கொண்டும் மயான அமைதியில் பயமேற்றும் சல சலப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சியை கிட்டத்தட்ட தவழ்ந்தே அடைந்துவிட்டேன்.
ஏறிச்செல்லும் பாதையை பாருங்கள். கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்பிவிடலாம் (யாராவது உங்களை கண்டுபிடித்தால் மட்டுமே). உச்சிக்கு வந்தாகிவிட்டது, சரி எங்கப்பா சமணர் படுகை என்று தேடினால் பாதை மீண்டும் கீழே இறங்கியது. என்னங்கடா இது கொடுமை என்று கைப்பிடியை பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கி செல்ல ஆரம்பித்தேன். பலமான காற்று வேறு. குரங்குகளும் ‘இவன்ட்ட எதாவது இருக்காதா?’ என்று என்னை ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்தன.
பிறந்ததில் இருந்து நான் இவ்வளவு தைரியமாகவும் பயத்துடனும் ஒரே நேரத்தில் இருந்ததில்லை. கூட்டமாக நண்பர்களோடு சென்றால் இந்த பயமெல்லாம் இருக்காது. தனிமையும் மதிய வெயிலும் குரங்கு சேட்டைகளும் பீதியை கிளப்பத்தான் செய்யும்.
இப்படியே கொஞ்ச தூரம் சுத்தி சென்றால் ஒரு நுழைவு வாயில் மாதிரி கட்டிவைத்திருக்கிறார்கள். செல்லும் போதே அணில்களின் சத்தமும் வௌவால்களின் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும். கொஞ்சம் தூரத்தில் கம்பிகள் போட்டு பாதுகாப்பாக “நான் தான் சமணர் படுகை” என்று நின்று கொண்டிருக்கும் சமணர் படுகை. முழங்கால் வரை தான் தடுப்பு இருக்கும். கொஞ்சம் லம்பினாலும் கீழே விழுந்துவிடுவோம். கடவுள் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு மெல்ல மெல்ல அருகில் சென்றேன். சமணர் படுகைக்கு அருகில் சென்றுவிட்டேன்.
திடீரென்று பட படவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு வௌவால்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. இவ்வளவு தூரம் தைரியமாக வந்த என்னை இந்த வௌவால்கள் மொத்தமாக சாய்த்துவிட்டன. ஆள விட்டா போதும் என்று வேக வேகமாக திரும்பிவிட்டேன். தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை? ஆனால் பயம் என்பது ஒரு முறை லேசாக வந்துவிட்டால், மனதை மூடுபனி போல் மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்ளும். கீழே இறங்கியதும் நினைத்துக்கொண்டேன், அடுத்த முறை நண்பர்கள் அல்லது உறவினர்களோடு வந்து கண்டிப்பாக சமணர் படுகையையும் பார்க்க வேண்டுமென்று.
எதிலும் மெத்தனமாக இருக்கும் நம் அரசாங்கம் சித்தன்னவாசலை நன்றாக பராமரித்துக்கொண்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க செயல். அரசை எவ்வளவோ விசயங்களில் குறை சொல்லும் மக்கள், தொல்லியல் துறையில் அரசின் இந்த அக்கறையில் ஓரளவாவது தாங்கள் செய்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். காதல் கதைகளை கிறுக்குவதற்கும், காதலிகளோடு அசிங்கம் செய்வதற்கும், கலைச்செல்வங்களை பாழ்படுத்துவதற்கும் இந்த இடங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விசயம், நீங்கள் இங்கு செல்வதாக இருந்தால் கண்டிப்பாக கையில் தண்ணீரும் துணைக்கு உங்கள் மனதொத்த ஆட்களும் இருக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் ஓவியத்தை மட்டும் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம். சமணர் படுகை வயதானவர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க் தான். வரலாற்றின் ஆச்சரியங்களை அறியும் ஆசை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக நல்ல தீனி போடும் இடம் தான் இந்த சித்தன்னவாசல். நான் மீண்டும் ஒரு முறை செல்லலாம் என்று இருக்கிறேன். என்னோடு யாரெல்லாம் வரப்போகிறீர்கள்? அதே போல் அடுத்த முறை குடுமியான்மலை பற்றி எழுதவிருக்கிறேன். அடுத்த வாரம் குடுமியான்மலை விசிட்.. வெகு விரைவில் படங்களுடன் பதிவு..
மிகச் சிறப்பான பதிவு சித்தன்னவாசல் குறித்து! சில வருடங்களுக்கு முன்பு சென்ற இடம். மீண்டும் செல்ல வேண்டும்! குடுமியான்மலையை எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஸ்ரீ....
கண்டிப்பாக.. இன்னும் இரண்டொரு வாரங்களில் குடுமியான்மலை உங்கள் மேலான பார்வைக்கு வரும்.. தங்கள் ஊக்கத்திற்கு நன்றி..
ReplyDeleteகழுகுமலையில் பார்த்ததை நினைவுப் படுத்துகின்றது.
ReplyDeleteமிக்க நன்றி அக்கா.. கழுகுமலையை மிக அருகில் வைத்துக்கொண்டு இத்தனை நாள் பார்க்காமல் இருந்திருக்கிறேன்.. அதையும் ஒரு நாள் பார்க்க வேண்டும்.. சிவகாசியில் இருந்து 40 கி.மீ தான்..
ReplyDeleteவணக்கம் நண்பனே மிக அருமை
ReplyDeleteசித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்..
ReplyDeleteஇனிய நண்பர்களே,
முகநூல் நண்பரும் பாசத்தில் எனது நண்பருமாகிய திரு ராம்குமார் (சிவகாசி) அருமையான சிந்தனையாளர், இப்போது உள்ள இளைஞர்களில் முற்றிலும் வேறு பட்டவர். திருப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு பணி நிமித்தம் மாறுதலாகி சென்றிருக்கிறார். நான் அவரை அங்கு சுற்றியுள்ள இடங்களை பார்த்து காமிராவில் பதித்து பதிவுகளில் எழுதும்படி கேட்டுக் கொண்டேன்.
அவர் சித்தன்ன வாசன் சிரமங்களுக்கிடையே சென்றிருக்கிறார். எனது வேண்டுகோளுக்கிணங்க அருமையான பதிவு - அங்குள்ள சிற்பங்கள், ஓவியங்கள், சமண மதத்தைப் பற்றி அவருக்கு தெரிந்த தகவல்கள் - எழுதியுள்ளார். நீங்களும் படித்து பின்னூட்டத்தில் உங்களுக்குத் தெரிந்த கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொண்டு, நல்ல சிந்தனை வளம் படைத்த இளம் எழுத்தாளரை உற்சாகப் படுத்துங்கள்.
நன்றி நண்பர்களே.
எனது முகநூலிலும் பகிர்ந்திருக்கிறேன்.
பதிவின் இணைப்பு.
http://sivakaasikaaran.blogspot.in/2012/10/blog-post_7349.html
தைரியம் என்பது பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பது தான் என்பது எவ்வளவு பெரிய உண்மை?
ReplyDeleteமிக அற்புதமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
THANKS RAMKUMAR AND RATNAVEL...I REALLY ENJOY YOUR SERVICE TO TAMIL UNITY AND PROGRESS! I HOPE MANY WILL WRITE ABOUT TN-HISTORY AS WELL AS THEIR OWN BIOGRAPHY IN VARIOUS FIELDS!
ReplyDeleteமிக்க நன்றி Rathnavel சார், இராஜராஜேஸ்வரி & Shan Nalliah
ReplyDeleteமிகவும் அருமை. மேலும் எதிர் பார்க்கிறேன். நன்றி.
ReplyDeleteஅன்பின் ராம்குமார் - புதுக்கோட்டை சென்றதும் சித்தன்ன வாசல் சென்று - அனைத்து ஓவியங்களையும் படமெடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி. விளக்கங்கள் அத்தனையும் அருமை. தனியாகச் செல்லக் கூடாதென்பது சரியான அறிவுரை. நண்பர்களை அழைத்துச் செல்ல வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநல்ல பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியமைக்கு சீனா அய்யாவிற்கும், இந்தப் பயணத்தை பதிவாக எழுதத்தூண்டிய ரத்னவேல் நடராஜன் ஐயாவிற்கும் சித்திரவீதிக்காரனின் நன்றிகள் பல.
Deleteநன்றி சீனா ஐயா & சித்திரவீதிக்காரன்
Deleteநண்பரே! நாங்கள் மதுரையிலிருந்து ஒரு குழுவாக சமீபத்தில் கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி&திருமலாபுரம் குடைவரைக்கோயில், எல்லாம் சென்று வந்தோம். தங்கள் பதிவை பார்த்ததும் விரைவில் சித்தன்னவாசல் செல்ல வேண்டும் போலிருக்கிறது.
ReplyDeleteஅந்த இடத்தின் சூழல், தனியே செல்ல வேண்டிய நிலை, தெளிவாக எடுக்கப்பட்ட படங்கள் என எல்லாவற்றையும் சொல்லியவிதம் நன்றாகயிருந்தது.
பகிர்விற்கு நன்றி. குடுமியான்மலை, திருமயம், கொடும்பாளுர் போன்ற இடங்களுக்கும் சென்று பாருங்கள். பதிவேற்றுங்கள்.
அன்புடன்,
சித்திரவீதிக்காரன்
திருமயமும் குடுமியான்மலையும் அடுத்த வாரத்திற்குள் சென்றுவிடுவேன்.. கொடும்பாளுர் எங்குஇருக்கிறது?
DeleteThanks a lot for the report and photos. Amazing... ஒரு புதுக்கோட்டைக்காரனாக, இன்னும் இதையெல்லாம் பார்க்காதிருக்கும் அவலம் பிடுங்கித்தின்கிறது.
ReplyDeleteஎம்.கே.குமார்
வாருங்கள் எம்.கே.குமார் ஒரு நாள் செல்லலாம் நாம்..
Deleteஇக்கட்டுரையை நானும் வாசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி. இப்படித் தனிய ஏற முயற்சிப்பது அவ்வளவு நல்லதில்லையே.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இனி நண்பர்களோடு மட்டுமே செல்வேன்.. நன்றி Kovaikkavi..
DeleteExcellant one.i saw my place from Coimbatore
ReplyDeleteமனதில் பட்டதை அத்தனை எதார்த்தமாக எழுதியுள்ளீர்கள். என்னை என் வீட்டில் வெளியே சுற்றுலா என்று நிறைய அழைத்துச் செல்வது கிடையாது. இதோ, இப்படிப் பதிவுகளைப் படித்து தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி அருமையான பதிவிற்கு.
நமது ஊரில் கிறுக்குகள் நிறைய இருக்கின்றன. இதோ உங்களைப் போல நானும் இவர்களைத் திட்டி ஒரு பதிவு எழுதினேன். நன்றி.
http://kanmani-anbodu.blogspot.in/2012/04/blog-post_17.html
மிக்க நன்றி கண்மணி.. நானும் சுற்றுலாவிற்கெல்லாம் சென்றதில்லை.. வேலை நேரத்தில் ஓப்பி அடித்து பார்த்தவை இவை
ReplyDeleteஏதோ ஒரு வகுப்பில் சமுக அறிவியல் வகுப்பில் சித்தன்ன வாசல் பற்றி படித்துள்ளேன் என்று நினைகிறேன்... நிச்சயம் ஒருநாள் சென்று வர வேண்டும்..
ReplyDeleteஒரேநேரத்தில் பயத்தையும் தைரியத்தையும் உணர்ந்தேன் என்று எழுதிய எழுத்துக்களில் சுவையும் உண்மையும் அதிகம்... சூப்பர் நண்பா....
நன்றி நண்பா.. ஒரு நாள் இந்தப்பக்கம் வாங்க.. நிறைய சுவையான, வரலாற்று சிறப்புள்ள இடங்கள் இருக்கின்றன..
Deleteமிகச் சிறப்பானத் தொகுப்பு! அழகான பதிவு!
ReplyDeleteவாழ்த்துக்கள்! தொடர்கிறோம்!