அது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையும் யோசிக்க முடியாத வெறுமையும், பேசாமல் இப்போதிருக்கும் அனைத்தையும் துறந்துவிட்டு அந்த காலத்துக்கே எப்படியாவது ஓடிப்போய்விடலாமா என்கிற பேராசையும் மனதை மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது. சிகரெட், மது, பெண் போல் வரலாற்று இடங்களை சுற்றி அலைவதும் மிகவும் போதையாக இருப்பதென்னவோ உண்மை தான். வெறுமையும், நிறைவும் மொத்தமாக அமையப்பெற்ற இடங்கள் அவை. பதில் தெரியாத கேள்விகளும் எழும், திருப்பி கேள்வி கேட்க முடியாத அளவிற்கு பதில்களும் தோன்றும். சித்தன்னவாசலும், நார்த்தாமலையும் என்னுள் அது போன்ற ஒரு தெளிவான குழப்பத்தை, போதையை உண்டு பண்ணின. அந்த போதை தந்த உத்வேகத்தில், மீண்டும் அதே போன்ற ஒரு போதையை தேடிச்சென்ற இடம் தான் குடுமியான் மலையும் கொடும்பாளூரும்..
முதலில் குடுமியான் மலை.
புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் 20வது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது இந்த குடுமியான்மலை. இந்த ஊரின் பெயர் எனக்கு புதுக்கோட்டைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பே பரிச்சயம் என்றாலும், நான் புதுக்கோட்டைக்கு வந்தவுடன் பார்க்க நினைத்தாலும் இப்போது ஒரு வருடம் கழித்து தான் பார்க்க முடிந்தது.. குடுமியான் மலை என்னும் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் ஒரு சாலையில் அந்த கோயில் கம்பீரமாக பிரமாண்டமாக நின்று கொண்டிருக்கிறது, இப்போதைய கிராமத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல..
இது ஆரம்பத்தில் சிவஸ்தலமாக இருந்ததாகவும் நாயக்க மன்னர்களின் படையெடுப்புக்கு பின் வைணவ ஸ்தலமாகவும் மாறியதாக சொல்கிறார்கள். இப்போது மீண்டும் சிவஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது ஒரு சில வைணவ சிற்பங்களை மட்டும் விட்டு வைத்து..
இந்த ஊரின் பெயருக்கும் ஒரு கதை இருக்கிறது. இந்த கோயிலில் இருந்து தினமும் சிவபெருமானுக்கு சாத்தப்பட்ட மாலைகள் அரசனுக்கு சென்றுவிடும். கோயிலில் வழக்கமாக பூஜை செய்யும் பூசாரிக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவள் ஒரு நாள் ஆசையாக மன்னருக்கு செல்லும் முன் தான் அந்த பூ மாலையை சூடிப்பார்த்து அனுப்புகிறாள். அதில் தெரியாமல் அவளின் நீளமான முடி ஒன்று மாட்டிக்கொள்கிறது. மாலையில் முடி இருப்பதை பார்த்து டென்சனான மன்னன் பூசாரியை வரவழைத்து விசாரித்தான். “அது கடவுளோட முடி தான்”னு சொல்லி பூசாரி, ராஜாவ சமாளிக்க பாக்குறாரு.. அதை நம்பாத நம்ம ராஜா, “நான் நாளைக்கு கோயிலுக்கு வந்து செக் பண்ணுவேன். மவனே சாமிக்கு முடி இல்ல, நீ செத்த”னு வார்ன் பண்ணி அனுப்பினார்.. நைட்டு முழுவதும் சாமியிடம் பூசாரி மன்றாடி வேண்டுகிறார்.. மறுநாள் கோயிலுக்கு மன்னன் வந்து பார்க்கும் போது சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு குடுமி இருக்கிறது. மன்னனும் பூசாரியை விட்டு விடுகிறான். அதில் இருந்து இந்த ஊருக்கு குடுமியான்மலை என்று பெயர். அதற்கு அடுத்த நாளில் இருந்தும் பூசாரியின் டாவு அந்த மாலையை சூடிப்பார்த்து மன்னரை ஏமாற்றினாளா இல்லையா என்பதற்கான கதைகளோ சான்றுகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது நம் தொல்பொருள் துறையின் தோல்வி தான்..
கோயிலின் உள்ளே நுழைந்ததும் நம்மை முதலில் வரவேற்பது வைஷ்ணவ சிற்பங்கள் தான்.. அதில் விஷ்ணுவின் அவதாரங்களை அழகாக செதுக்கியிருகிறார்கள். ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை. ஒரே கல்லில் தூணும் சிற்பமும் செதுக்கப்பட்டு ஆள் அரவமற்ற ஒரு கோயிலில் வரிசையாக பல சிற்பங்களை பார்க்கும் போது நீங்களும் அது செதுக்கப்பட்ட காலத்தில் அதை மக்கள் வணங்கிய காலத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு நிச்சயம் வரும். இந்த சிற்பங்களில் முருகனும் விநாயகரும் கூட இருக்கிறார்கள். சைவ சமயத்தை கிண்டல் செய்வது போன்ற சிற்பமும் உண்டு. அதாவது ஒரு அழகான பெண், அவளை நெற்றியில் பட்டை அடித்த சைவ சமய ஆண்கள் எல்லாம் ஜொள் வடித்துக்கொண்டு சைட் அடிப்பது போன்ற சிற்பமும் உண்டு.
மேலே இருக்கும் இந்த சிற்பம் தான் சைவ சமய ஆட்களை கிண்டல் செய்வது போல் உள்ளது. இந்த சிற்பம் அடல்ட்ஸ் ஒன்லி சிற்பம் (கூர்ந்து கவனித்து பார்த்து புரிந்து கொள்ளவும்).. ஆனால் இதில் இருக்கும் நுணுக்கம், அந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும் அணிகலனில் இருந்து, அவளது அல்குல், அவளின் ஆடை, கை, கால் நகங்கள், சுற்றி இருக்கும் சைவ சமய ஆட்களின் முகத்தோற்றத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசம் என அவ்வளவு அற்புதமாக நம்மை வாய் பிளக்க வைக்கிறது அதன் நுட்பமான வேலைப்பாடு. இந்த நுழைவு பிரகாரத்தில் இருக்கும் பெரும்பான்மையான ஆண் சிற்பங்களின் மூக்கு உடைக்கப்பட்டிருக்கின்றன. பெண் சிற்பங்களில் கொண்டைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.. தெரியாமல் உடைந்ததா அல்லது ஏதும் படையெடுப்பில் அவமானப்படுத்தும் நோக்கத்தோடு உடைக்கப்பட்டதா என தெரியவில்லை.
அப்படியே அந்த பிரகாரத்தை தாண்டி உள்ளே சென்றால் மெயின் கோயில் வருகிறது. இந்த மெயின் கோயிலில் தான் குடுமியோடு சிவபெருமான் காட்சி தருவார்.. சரியான வெளிச்சம் இல்லாததால் அதை என்னால் படம் பிடிக்க இயலவில்லை.. நெட்டில் இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்.
பின் கோயிலுக்கு பின் பக்கம் வந்தால் அங்கு இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அந்த மண்டபங்கள் தான் கலைநிகழ்ச்சிகள் எல்லாம் அந்த காலத்தில் நடத்தப்பட்டவையாம்.
இது தான் அந்த மண்டபம். இந்த மண்டபத்திற்கு சரியாக பின்பக்கத்தில் இருந்தே மலை ஆரம்பித்துவிடுகிறது. குடவரை கோயிலையும் சிற்பத்தையும் பார்க்க கோயில் வாட்ச்மேனிடம் ஸ்பெசல் அனுமதி பெற்று இந்த கோயிலின் கோட்டை சுவருக்கு அந்த பக்கம் இருக்கும் குடவரை கோயிலுக்கு சென்றோம். அங்கும் ஒரு சிவபெருமான் சன்னதி இருக்கிறது.
அங்கும் வழக்கம் போல் நந்தி இருக்கிறார். இந்த சன்னதியின் உயரம் ஆறரை அடி தான் இருக்கும். ஒரு குகைக்குள் இருப்பது போன்ற கதகதப்பும், அழுத்தமும் இருக்கும்.
குகையில் வடிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.
இது அந்த சன்னதிக்கு வெளிப்புற சுவரில் மிக மிக சிறிய கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை. இதை செதுக்கியவரின் வேலைப்பாடு நிச்சயம் அந்தக்காலத்தில் ஊரையே பெருமையாக பார்க்க வைத்திருக்கும்..
பின் மலையிலேயே செதுக்கிய விநாயகர் இருக்கிறார்.. மழை, வெயிலில் அவர் மிகவும் டய்ர்டு ஆகிவிடாமல் இருப்பதற்காக நமது தொல்லியல் துறை கூரையெல்லாம் போட்டு பாதுக்காப்பது நல்ல விசயம்.
இந்த பிள்ளையாரின் மூக்கும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விசயம். இந்த மலையில் இன்னும் கொஞ்சம் உயரத்தில் நடுவில் சிவலிங்கமும் அதற்கு இரண்டு பக்கமும் 63 நாயன்மார்களும் செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.. அதை கீழேயிருந்தே எடுக்கும் அளவிற்கு என் கேமராவிற்கு சக்தி இல்லாததால் எடுக்கவில்லை. நீங்கள் நேரில் வரும் போது அதை உங்களுக்கு காட்டுகிறேன்.
அந்தக்காலத்தில் நமது ஆட்களுக்கெல்லாம் மூன்றே மூன்று வேலைகள் தான். விவசாயம், போர், பிள்ளை பெறுவது. எல்லாரும் விவசாயத்தில் இருந்திருக்க மாட்டார்கள். எல்லா காலமும் போர் நடந்திருக்காது. மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் சும்மா தான் இருக்க வேண்டும் கணவன். அந்த மாதிரி நேரத்தில் இது போன்ற சிற்பங்களும் சிலைகளும் கோயில்களும் வடித்து, அவன் வாழ்ந்ததற்கான ஒரு சாட்சியை, ஒரு அடையாளத்தை விட்டு வைத்துப்போயிருக்கிறான் நம்ம முப்பாட்டன். எந்த வித அறிவியல் உபகரணமும் இல்லாத அந்த காலத்திலேயே அவன் செய்த இதையெல்லாம் பார்க்கும் போது, இன்று இருக்கும் அறிவியலை வைத்து நாம் இன்னும் இந்த மாதிரி விசயங்களில் தவண்டு கொண்டு தான் இருக்கிறோம் ஒரு மழலை போல.
இன்னொரு விசயம் இந்த கோயிலிலும் சித்தன்னவாசல் போன்ற மூலிகை கலவை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.. ஆனால் அவையெல்லாம் மழை, வெயிலால் அழிந்து இன்று வெறும் தடம் மட்டுமே இருக்கின்றன
மேலே இருக்கும் படத்தில் ஓவியங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தெரிகிறதா? ஏன் வேலை மெனக்கட்டு சித்தன்னவாசலில் இருந்து இங்கு வரை இருக்கும் எல்லா ஓவியங்களையும் ஏன் வேலை மெனக்கெட்டு உச்சியில் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.. சில நொடிகள் தலையை அன்னாந்து பார்க்கும் நமக்கே கழுத்து வலிக்கிறதே, இவர்கள் எப்படி வரைந்திருப்பார்கள்?
குடுமியான் மலை என்பது நான் பார்த்த மற்ற இடங்களை போல், சமணம், சைவம் என்று மட்டும் குழப்பாமல், புதிதாக வைணவத்தையும் சேர்த்துக்கொண்டு 3ம் நூற்றாண்டையும், 15ம் நூற்றாண்டையும் தன்னுள் அமைதியாக அடக்கிக்கொண்டு இருக்கிறது. நாமும் சைவம் வைணவம் என்று ஆராயாமல் கம்மென்று சாமியை கும்பிட்டுவிட்டு அந்தக்கால ஆட்களின் கைவண்ணத்தை கொஞ்ச நேரம் வியந்துவிட்டு வரலாம்.. ஒரு முக்கிய விசயம் இங்கு சாப்பிட உருப்படியான ஒரு கடை கூட கிடையாது.. கையில் ஒரு புளியோதரை பொட்டலத்தோடு வருவது நலம்..
குடுமியான்மலை பற்றி கொஞ்சம் நீளமாக வந்துவிட்டதால் கொடும்பாளூர் பற்றி சுருக்கமாக சொல்லி படங்களை மட்டும் போட்டு விடுகிறேன்.. விவரங்களை கமெண்டில் உங்கள் வினாவுக்கு ஏற்றவாறு தருகிறேன்..
கொடும்பாளூர்:
குடுமியான்மலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் 23வது கிலோமீட்டரில் வருகிறது கொடும்பாளூர். ரோட்டில் ஒரு பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஒரு சிமெண்ட் போர்டு வைத்திருக்கிறார்கள்.. அதில் கோயில் கட்டிய மன்னன் அவன் காலத்தில் ஏதோ எழுதியிருப்பான் போல என நினைத்தேன். பின் தான் தெரிந்தது ”கோயிலுக்கு செல்லும் வழி” என அரசாங்கம் தான் அவ்வளவு அழகாக எழுதி அதை பராமரித்து வருகிறது என.. அவ்வளவு புதுசாக இருந்தது அந்த போர்டு..
பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக சிறியதாக இருக்கிறது அல்லவா? ஆனால் இது மிகவும் பெரிய கோயிலாக இருந்திருக்கிறது.. மிகவும் அழிந்து சிதைவுற்று போன கோயிலை ஓரளவு செப்பனிட்டு வைத்ததால் இந்த இரண்டை தான் முழு வடிவத்திற்கு கொண்டு வர முடிந்திருக்கிறது.
இந்தக்கோயிலில் கலசத்தை பாருங்கள், வித்தியாசம் எதுவும் தெரிகிறதா? ஆம் கல்லிலேயே செதுக்கப்பட்ட கலசங்கள் அவை.. மகாபலிபுரத்திற்கு பிறகு இங்கு தான் அப்படி இருப்பதாக சொல்கிறார்கள்.. நிஜமா என்று தெரியவில்லை.. இந்த கோயிலில் ஒரு சன்னதியில் சிவபெருமானும் மற்றொரு சன்னிதியில் அம்பாளும் இருந்திருக்கிறார்கள்.. இப்போது அம்பாள் இல்லை. சிவபெருமான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான கெட்-அப்பில் இருக்கிறார் பாருங்கள்.
அதே போல் சிவபெருமான் இருக்கும் இந்த சன்னிதியின் வழியாக மேலே கோபுரத்தின் வடிவமைப்பு படி போல் கட்டப்பட்டிருக்கிறது..
மேலே தெரிவது தான் கோபுரத்தின் உச்சி.. ஒரு சில வௌவால்கள் பீதியை கிளப்பினாலும் சில பல தைரிய முயற்சிகளில் எடுத்த படம் இது.. இப்படி ஒரு கோபுரம் எழுப்பி அதில் நாலாபக்கமும் சிற்பங்களை வடித்த ஆட்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்கள் தான்.
இந்த கோயிலில் ஒரு அழகாக கிணறும், அந்த கிணறுக்கு சைடாக செல்ல ஒரு படிப்பாத்தையும் கூட இருக்கின்றன..
கீழே பெரிய மைதானம் போல் தெரிகிறதே அங்கு எல்லாம் கோபுரங்களும் கோயிலும் இருந்திருக்கின்றன... அவையெல்லாம் போரில் அழிந்ததாக சொல்கிறார்கள். எந்த போரில் யார் அழித்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவையெல்லாம் அழியாமல் இருந்திருந்தால் வரலாற்றை, சிற்ப வேலைப்பாட்டை பறைசாற்ற ஒரு பெரிய கோயில் சாட்சியாய் இருந்திருக்கும்...
இந்த கோயிலிலும் கோபுரம் & கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை எல்லாம் பாருங்கள் எவ்வளவு அழகு என்று. கீழே இருப்பது அர்த்தநாதீஸ்வரர்.
எனக்கு இது போன்ற வரலாற்றின் எச்சங்களை சுமந்து நிற்கும் இடங்களில் ஆளே இல்லாமல் தனிமையில் பார்க்கும் வாய்ப்பு தான் கிடைக்கிறது. இப்படி ஒரு இடம் இருப்பது பற்றி அருகில் இருக்கும் விராலிமலை, புதுக்கோட்டை ஆட்களுக்கு கூட தெரியவில்லை.. அவ்வளவு ஏன் இந்த இடத்தின் வரலாறு பற்றி கொடும்பாளூர் மக்களுக்கே தெரியவில்லை. தொல்லியல் துறையில் தண்டத்திற்கு இருக்கும் ஆளுக்கும் தெரியவில்லையா அல்லது சொல்ல விருப்பமில்லையே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வரலாறு என்ற ஒன்றை இப்போது யார் சொன்னாலும் அது நாம் டீக்கடையில் குடிக்கும் பால் போலத்தான்.. சுத்தமான வரலாறாக இருக்காது. நிச்சயம் கலப்படம் இருக்கும். அதனால் இது போன்ற இடங்களை, அதன் அறியமுடியாத ரகசியங்களை, இழப்புகளை, சண்டைகளை, வேண்டுதல்களை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவற்றையெல்லாம் சொல்ல முடியாமல் ஏங்கிக்கொண்டு அந்த இடமெங்கும் அதன் வரலாறு அமைதியாக நிறைந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.
ஒரு சின்ன வேண்டுகோள். அடிக்கடி குடும்பத்துடன் படத்திற்கு, ஓட்டலுக்கு, டூருக்கு, கோயிலுக்கு என்று செல்கிறோம்.. நமக்கு அருகில் இருக்கும் இது போன்ற இடங்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து சென்றோமானால், நமக்கும் மனதுக்கு ஒரு வித அமைதியும் நிறைவும் கிடைக்கும். அட்லீஸ்ட், “இதில் ஏதோ சிறப்பு இருக்கு போல, ரொம்ப முக்கியமான இடம் போல”னு அந்த லோக்கலில் இருக்கும் ஊர் மக்களுக்கும் இதன் முக்கியத்துவம் தெரியும். அவர்களுக்கு அவர்களின் ஊரின் சிறப்பு தெரிந்தால் தான், இது போன்ற இடங்களை கவனமாக வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்ல முடியும். நான் சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை. எனக்கு வரலாறும் அதன் சொல்ல முடியாத வெளியே தெரியாத உண்மைகளும் ஒரு வித கிரக்கத்தை கொடுக்கின்றன. அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆசை இருக்கிறது. அதனால் தான் இப்படியெல்லம் உளறிக்கொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்வதென்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.. என் பிளாக்கும் இதில் இருக்கும் படங்களும் அந்த இடங்களும் அழிந்தாலும் வரலாறு என்றும் அழியாது. அது எங்கோ காற்றில் கலந்து ஒரு பேய் போல் தன் கதையை சொல்ல முடியாமல் சுற்றிக்கொண்டு தான் இருக்கும்..