ஆகோய்.. அய்யாகோய்... எங்க ஊரு பொங்கல்...

Monday, April 8, 2013

தென் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பங்குனியும் சித்திரையும் தான் மிகவும் விஷேசமான மாதங்கள்.. மாரியம்மன் கோயில் திருவிழாக்களும் சிறு தெய்வ வழிபாடுகளும் இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் இருக்கும். இன்று நான் வேலை செய்யும் புதுக்கோட்டையில் கூட நார்த்தாமலை மாரியம்மனுக்கு பொங்கல் திருவிழா.. எங்கள் சிவகாசியிலும் இன்று தான் பங்குனி திருவிழா.. நேற்று பொங்கல், இன்று கயிறு குத்து..  அது என்ன கயிறு குத்து என்று தானே கேட்கிறீர்கள்? எங்கள் ஊர் ஸ்பெசலே அது தானே.. சொல்கிறேன்... கேளுங்கள்..

பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் சூரிய பகவானுக்கு நம்மீது மிகவும் பாசம் பொங்கி வந்து தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்.. மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா?.. மாரி என்றால் மழை தானே?! சூரியனின் உஷ்ணத்தில் இருந்தும் அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள் தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள்..

எங்கள் பகுதியில், அதாவது விருதுநகர், சிவகாசி பகுதியில் இது மிகவும் விஷேசமாக இருக்கும்.. முதல் நாள் பொங்கலன்று பலரும் வீட்டிலும் கோயிலிலும் பொங்கல் கிண்டி கடவுளுக்கு படைப்பர்.. மறுநாள் கயிறு குத்து. இது தான் பிற பகுதிகளுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். கயிறு குத்து அன்று சிலர் அலகு குத்துவார்கள், சிலர் தீச்சட்டி எடுப்பார்கள், சிலர் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவார்கள், சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வரனை பார்த்து நிச்சயம் செய்வார்கள் (இது விருதுநகரில் மட்டும் இருக்கும் பழக்கம்).. இதை பற்றி ஒவ்வொன்றாக சொல்கிறேன்..


கயிறு குத்தன்று காலையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கரும்புள்ளி செம்புள்ளி போல் தங்கள் முகத்திலும் உடலிலும் கறுப்பு வெள்ளை இன்னும் பல வண்ணங்களால் புள்ளி வைத்துக்கொள்வார்கள். கையில் வேப்பிலை கொத்தை பிடித்துக்கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் கொஞ்சம் கொடூரமாக கூட மேக்-அப் போட்டுக்கொண்டு கோயிலுக்கு செல்வார்கள். நீங்கள் வெயில் படத்தில் வரும், ‘வெயிலோடு விளையாடி’ பாடலில் இது போல் அந்த சிறுவர்கள் வேஷமிட்டு கோயிலுக்கு செல்வதை கவனித்திருப்பீர்களா என்று தெரியவில்லை. அது விருதுநகரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..

எனது பள்ளிக்காலங்களில் கயிறு குத்துக்கு முந்தைய நாள் இரவே எங்கள் தெரு பையன்களோடு சேர்ந்து பக்கத்து ஏரியாவில் இருக்கும் வேப்ப மரக்கிளைகளை மொத்தமாக வெட்டி வந்து எங்கள் தெருவில் போட்டுக்கொள்வோம். மறுநாள் காட்டுவாசி போல் வேப்பிலையிலேயே ட்ரெஸ் போட்டுக்கொண்டு கோயிலை நோக்கி மாரியம்மனை நினைத்து பாடிக்கொண்டே செல்வோம்.. அந்த பாடலும் சூப்பரா இருக்கும்.. இது தான் அந்தப்பாடல்..

ஆகோய்.. அய்யாகோய்..
ஆத்தாத்தா.. பெரியாத்தா..
அம்பது பிள்ள பெத்தாத்தா..
ஒனக்கு நாலு.. எனக்கு நாலு போடாத்தா...
கம்பு குத்து.. கயிறு குத்து..
ஆகோய் அய்யாகோய்...

இதை நம் குழுவில் ஒருவர் சொல்ல சொல்ல மற்றவர்கள் அவரை தொடர்ந்து பாடிக்கொண்டே வர வேண்டும்.. கோயில் வரை இதே தான்.. கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருக்கும் வேப்பிலையை அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போட்டுவிட்டு அந்த வேப்பிலை குவியலில் ரெண்டு உருண்டு உருண்டுவிட்டு வர வேண்டும்..

கரும்புள்ளி செம்புள்ளி வெயில் காலங்களில் வரும் அம்மை நோயின் தழும்புகளை குறிப்பதாகும். அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே பக்தர்கள் அம்மனை வேண்டி உடம்பில் அது போல் வரைந்துகொண்டு கோயிலில் உருண்டு கொடுக்கிறார்கள்.. வேப்பிலை உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது.. அதனால் வேப்பிலையை கையில் எடுத்து சென்று மொத்தமாக ஒரு இடத்தில் போட்டு அங்கே உருண்டு கொடுக்கும் போது உடம்புக்கும் குளிர்ச்சி கிடைக்கிறது.. அதே போல் ஊர்  முழுக்க பக்தர்களின் தாகத்தை தீர்க்க இலவசமாக நீர் மோர்ப்பந்தலும் பானக்கிரமும் இருக்கும்.. இந்த பானக்கிரம் என்பது புளியும் வெல்லமும் கலந்த ஒரு இனிப்பு பானம்.. அவ்வளவு ருசியாக இருக்கும்.. உடம்புக்கும் குளிர்ச்சி தர வல்லது.. கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிருச்சினா உங்களோட பேக் ஓபன் ஆகி வயிற்றால் போக ஆரம்பித்துவிடும்.. அளவாக குடித்தால் உடம்புக்கு குளிர்ச்சி..


அடுத்தது பூச்சட்டி/தீச்சட்டி எடுப்பது. ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆட்கள் தங்கள் ஊர் கயிறு குத்து முடிந்ததும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் (சும்மா பேச்சு சண்டை தான்) விசயம், யார் ஊரில் அதிகமான பூச்சட்டி எடுக்கப்பட்டது என்பதை பற்றியதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மக்களில் இருந்து பக்கத்து கிராம மக்கள் என ஆயிரக்கணக்கான பூச்சட்டிகள் எடுப்பார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் இருக்கும்.. பூச்சட்டி எடுக்கும் பலரும் ஒரு முறைக்கு மேல் தான் எடுப்பார்கள்.. என் அப்பா எல்லாம் மூன்று முறை பூச்சட்டி எடுத்தவர்.. 

ஒரு சிலர் 11 சட்டி, 21 சட்டி என்று ஒரே முறையில் பூச்சட்டி எடுப்பார்கள்.. மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.. இவர் எடுப்பது 21 சட்டி.. உடம்பில் அதற்கான உபகரணத்தை மாட்டிக்கொண்டு சட்டி எடுப்பார்.. முன்னே ஒருவர் கொட்டு அடித்துக்கொண்டும் இன்னொருவர் நாதஸ்வரம் இசைத்துக்கொண்டும் பின்னால் இப்படி ஒருவர் சட்டி எடுத்து வருவதை பார்க்கவே அவ்வளவு அழகாக பிரமாண்டமாக இருக்கும். இதுவும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களின் இருந்து தங்களை காப்பாற்ற மக்கள் செய்யும் நேர்த்திகடன் தான்.. பக்தர்கள் இப்படி தீச்சட்டி எடுத்து வருபவரின் மேல் நீரூற்றி வேண்டிக்கொள்வார்கள்.


தாங்கள் எடுத்துவரும் சட்டியை ஒவ்வொருவரும் கோயிலில் அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடுக்கிவைத்துவிட்டு வந்துவிடுவர். 

இன்னும் சில பக்தர்கள் இது போல் இருக்கும் சிலைகளை வாங்கி கோயிலில் செலுத்தி வேண்டிக்கொள்வார்கள். கை, கால், மனித உருவம் போல் இருக்கும் சிலைகள் கை கால் பலத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் குறிப்பன. இதை கோயிலில் வேண்டி வைக்கும் போது தங்களுக்கு உடல் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு இல்லாதோர் குழந்தைகள் பொம்மையும், வீடு கட்டும் ஆசை இருப்பவர்கள் வீட்டு பொம்மையையும் வாங்கி வேண்டி வைப்பார்கள்.  எங்கள் பக்கத்து வீட்டில் கூட ஒருவர் வீட்டு பொம்மையை வேண்டி வைத்திருக்கிறார். சீக்கிரமே அவர் சொந்த வீடு கட்ட நானும் மாரியம்மனை வேண்டிக்கொள்கிறேன். 

அடுத்தது தான் மிக மிக முக்கியமான விசயம். இது விருதுநகரில் மட்டுமே நடக்கும் பழக்கம். விருதுநகர் பஜார் வழியாகத்தான் அந்த ஊர் மாரியம்மன் கோயிலுக்கு செல்ல முடியும். விருதுநகர் பஜாரில் கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடைகளுக்கு வெளியே விருதுநகருக்கே உரித்தான தேக்கு மர கட்டில்களை போட்டு அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வீட்டுப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால் அந்தப்பெண்ணும் அவர்களுடன் அமர்ந்திருக்கும். மாப்பிள்ளை வீட்டாருக்கு, பஜாரின் இந்த வீதியில் இந்த கடையில் பெண் வீட்டார் அமர்ந்திருக்கிறார்கள், பெண் இந்தக்கலர் பட்டு உடுத்தியிருக்கிறது என்னும் தகவல் போய்விடும். பெண் வீட்டாருக்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டார் யாரென்றே தெரியாது.. மாப்பிள்ளை வீட்டார் அந்த வழியாக கோயிலுக்கு போவது போல் பெண் வீட்டார் இருக்கும் வழியில் வருவார்கள். மெதுவாக பெண், அவரின் குடும்பம் என ஒவ்வொருவரையும் நோட்டம் விடுவார்கள். எல்லாமே தங்களுக்கு ஏற்றது போல் இருந்தால் கோயிலில் சாமி கும்பிட்டு திரும்பி வரும் வழியில் பூ வாங்கி பொண்ணுக்கு சூட்டி அப்போதே நிச்சயம் செய்து விடுவார்கள். எனக்கு தெரிந்து விருதுநகரை தவிர வேறு எந்த ஊரிலும் இது போன்ற பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் விருதுநகர் பொங்கல் அன்று கண்டிப்பாக ஒரு நாள் சென்று பாருங்கள் பஜார் வீதியில்.. பார்க்கவே கனஜோராக இருக்கும் அந்த வீதி.. 

எங்கள் ஊரில் தீபாவளி மற்றும் பங்குனிப்பொங்கல் இரண்டுக்கும் போனஸ் உண்டு. தீபாவளிக்கு புதுத்துணி எடுக்கிறோமோ இல்லையோ எப்பாடுபட்டாவது பங்குனிப்பொங்கலுக்கு கண்டிப்பாக புதுத்துணி எடுத்துவிடுவோம். மற்ற ஊர்களிலும் பொங்கல் இப்படித்தான் இருக்குமா? பெண் பார்க்கும் படலம் எல்லாம் உண்டா என எனக்கு தெரியாது. ஆனால் இது எங்கள் ஊர் கலாச்சாரம்.. இதை சொல்ல வேண்டும் என பல நாள் ஆசை.. பொங்கல் நாளானே இன்றே இதை பற்றி சொல்லியிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம் தான். தீச்சட்டி எடுப்பது, முகத்தில் கரியை அப்பி வேசம் போடுவது எல்லாம் பகுத்தறிவா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.. எங்கள் மக்கள் சந்தோசமாக கறி சாப்பிட்டு மாரியாத்தா நம்மை காப்பாற்றுவாள் என குடும்பத்தோடு நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு நன்னாள் தான் இந்த பங்குனிப்பொங்கல்.. பங்குனிப்பொங்கல் அன்று மழை வரும் என்பது நம்பிக்கை. அதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனிப்பொங்கல் அன்றோ அல்லது கயிறு குத்து அன்றோ தூறலாவது விழும். நேற்றும் கூட எங்கள் பகுதியில் சில இடங்களில் மழையும் சில இடங்களில் தூரலும் விழுந்தன. இதெல்லாம் தற்செயலான சம்பவங்கள் என்று கூறினால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று மட்டும் ஏன் இந்த தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமான வினா தான்..
ஆகோய் அய்யாகோய்
ஆத்தாத்தா.. பெரியாத்தா...
அம்பது பிள்ள பெத்தாத்தா...
ஒனக்கு நாலு.. எனக்கு நாலு.. போடாத்தா..
கம்பு குத்து.. கயிறு குத்து..
ஆகோய் அய்யாகோய்...

மாரியம்மன் கோவிலை விட இன்னும் பிரமாண்டமாய் இருக்கும் எங்கள் ஊர் பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கல் விழா.. அப்போது ஊரில் பொருட்காட்சி எல்லாம் போடுவார்கள்.. சில பல வரலாற்று விசயங்களோடு உங்களை அடுத்த மாதம் இதன் தொடர்ச்சியில் சந்திக்கிறேன்..

23 comments

  1. பங்குனி பொங்கல் ஏன் கொண்டாடப் படுகிறது,
    சிவகாசியில் எப்படி கொண்டாடப் படுகிறது,
    விருதுநகரில் அதன் முக்கியத்துவம் என்ன,
    எங்கள் அருமை ராம்குமார் அருமையாக விளக்கியிருக்கிறார்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்; வாழ்த்துகள் ராம்குமார்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்.. நம்ம பகுதி கலாச்சாரத்தை நாம் தானே எடுத்து சொல்ல வேண்டும்? அதற்கான ஒரு சிறு முயற்சி..

      Delete
  2. ராஜபாளையத்தில் (PACR) படிக்கும் போது சிவகாசி நண்பனுடன் ஒருமுறை கலந்து கொண்டதுண்டு... அந்த நாள் ஞாபகம் வந்தது...

    இவ்வளவு விளக்கம் ( கயிறு குத்து ) இன்று தான் தெரியும்... தொடர்க...

    பாட்டு சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அண்ணே.. இன்னொரு நாள் கண்டிப்பாக வாங்க.. அடுத்த மாதம் சித்திரைப் பொங்கலுக்கு வாங்க.. இதை விட சிறப்பாக இருக்கும்..

      Delete
  3. அருமையாய் பதிந்து உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஊர்க்காரர்கள் அருமையாய் கொண்டாடுவதால் தான் பதிவும் அப்படி இருக்கிறது :-) நன்றிங்க கிருத்திகாதரன்

      Delete
  4. தங்கள் ஊர் நிகழ்ச்சியை அழகாக பகிர்ந்துள்ளீர்கள் . நன்றி

    ReplyDelete
  5. சூப்பர், அட்டகாஷ்.

    தமிழ் நாட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஊர் சிவகாசிதான். அதனைப்பற்றிய அட்டகாசமான தகவல் பதிவுக்கு நன்றிகள் கோடி

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒலகத்துலயே பிடிச்ச ஊரு செவாசி தாங்க... கோடி நன்றிகள் எல்லாம் வேண்டாங்க.. இதை விரும்பி படித்த உங்களுக்கு தான் நன்றி :-)

      Delete
  6. ஆகோய் அய்யாகோய்
    மாரியாத்தா பாட்டு ரொம்ப சூப்பர் டோய்...

    விருதுநகர் கலாச்சாரம் வித்தியாசமானதாய் உள்ளது... பூச்சட்டி பொங்கல் எல்லா ஊரிலும் இருப்பதும்... கயிறு குத்து, பெண் பார்க்கும் படலம் எல்லாமே வித்தியாசமாய் உள்ளது...

    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி நண்பா.. அந்த பாட்டுல இன்னொரு வரிய விட்டுட்டேன்.. “மாரியாத்தா கும்பா மாவிடிச்சு திம்பா... காளியாத்தா கும்பா கறியும் சோறும் உம்பா...”... இது தான் விடுபட்ட அந்த வரி..

      Delete
  7. நல்ல பதிவு ராம் . நார்த்தாமலை பொங்கல் மிக விசேசமானது . அப்டியே கொஞ்ச தூரம் பொன்னமராவதி பக்கமா போனிங்ககன்னா கொன்னையூர் பூ ( கொப்பனாபட்டி ) ரெம்ப பிரமாதமா இருக்கும் . விசாரிச்சு போய் பாருங்க .

    அப்புறம் மேலோட்டமாக மட்டுமே தீ சட்டியின் காரணத்தையும் , கரும்புள்ளி குத்துவதையும் சொல்லி சென்றுள்ளீர்கள் . புதுகை ஏரியாவில் உள்ள பெரிய மனிதர்களிடம் கேட்டு பாருங்கள் . ஆழமான அறிவியல் காரணம் நிச்சயமாக இருக்கும் . அதையும் பதிவிடுங்கள் .

    கரும்புள்ளி குத்துவதற்கு மூலிகைகளை பயன்படுத்தவார்கள் . தீயில் போட்டு வதக்கி அதற்கென்று ஒரு கல் வைத்திருப்பார்கள் , அதை எடுத்து உடம்பில் சுட்டுக்கொண்டும் , படமாக வரைந்து கொண்டும் செல்வார்கள் . அது ஒரு அட்டகாசமான ஆண்டிபயாடிக் . கொப்பனாபட்டி அருகே காட்டுப்பட்டி என்ற கிராமம் உள்ளது , அங்கு சுட்டுக்குறது அப்டிங்குற ஒரு வைத்திய முறையே இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. ஆம்.. கொப்பனாப்பட்டிக்கும் சென்ற ஞாயிறன்று தான் பொங்கல்.. அந்த கோயில் சத்தியம் செய்வதற்கு விசேசமான கோயில் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. காட்டுப்பட்டி பற்றி கேள்விப்பட்டத்தில்லை.. கொப்பனாப்பட்டி காட்டுப்பட்டி இரண்டை பற்றியும் செய்திகள் சேகரிக்கிறேன்.. விபரங்களுக்கு ரொம்ப நன்றி ஜீவன்சுப்பு..

      Delete
  8. அன்பின் ராம்குமார் - சிவகாசிப் பொங்கல் - பதிவு அருமை - அத்தனை சிறு சிறு செய்திகளைக் கூட விடாமல் பதிவில் இணைத்தமை நன்று - நலல்தொரு விளக்கமான பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி cheena (சீனா)..

      Delete
  9. கயிறு குத்து அன்று பலரும் இடுப்பின் மேல் பகுதியில் இருபுறமும் ஊசி கொண்டு குத்தி நூலைக் கட்டிக் கொண்டு சென்று மாரியம்மன் கோவிலில் அந்த நூலை அவிழ்ப்பார்கள். எனவே அன்றைக்கு கயிறுகுத்து என்ற பெயர் வந்திருக்கின்றது. நல்ல கட்டுரை. நன்றி ராம்குமார்.

    ReplyDelete
  10. வணக்கம். மாரியம்மன் பற்றிய பதிவுகளை இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது உங்கள் பதிவு பார்க்கக்கிடைத்தது. என் தாயின் ஊர் புதுக்கோட்டை. மாரியம்மன், அம்மை பற்றியது என் ஆய்வு. தற்போது நியூயார்க் அருகே பணிபுரிகிறேன். உங்களது தொடர்பு மின்னஞ்சல் தரமுடியுமா? அல்லது முகநூலில் இருக்கிறீர்களா? அன்புடன், பெருந்தேவி

    ReplyDelete
  11. மிக சிறப்பான பகிர்வு,,,, நன்றி

    ReplyDelete

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One