சும்மா இருங்கப்பா..

Thursday, January 31, 2013

இதோ நான் நின்றுகொண்டிருக்கிறேனே ஒரு கரைச்சலான, வெயிலின் பிசுபிசுப்போடு, புழுதி பறந்து கொண்டு, காம்ப்ளெக்ஸ் கட்டிடங்களும், சைக்கிளின் பெல் சத்தத்தை தன் இன்ஜின் சத்தத்தால் ஓவர்டேக் செய்யும் வண்டிகளும் நிறைந்திருக்கும் இந்த சாலைக்கு எதிர்ப்புறம் தான் எங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் இருக்கு.. நான் சாலையின் இந்தப்பக்கம் நிறுத்தப்பட்டிருக்கும் எனது சைக்கிளின் ஹேண்ட் பாரில் ஒரு கையை வைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறேன் என் மகனின் வருகைக்காக..

“10நிமிஷத்துக்கு முன்னாடியே திருத்தங்கல் தாண்டிட்டேன்னு சொன்னானே?” வாட்சை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் பேருந்து நிலையத்தினுள் ஒரு பேருந்து நுழைந்தது. வேக வேகமாக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு பேருந்து நிலையம் நுழைந்து அந்த பஸ்ஸை பார்த்தேன். அது மதுரையில் இருந்து வந்தது அல்ல. அடுத்த பஸ்ஸு வரதுக்குள்ள உங்களுக்கு சீக்கிரமா அவன பத்தி சொல்லிறேன்.

 பரமேஷ் போன வருசம் தான் பி.காம் முடிச்சான். எங்கூர்ல தான் படிச்சான். நல்லாத்தான் படிச்சிருப்பான்னு நெனைக்கிறேன். சும்மாவா? அதனால தான் படிச்சி முடிச்சவொடனே பேங்க் வேலைக்கு போயிட்டான். அவங்கூட படிச்ச பாதி பயலுக இன்னும் சும்மா தான் இருக்காய்ங்க. இது சூட்டிப்பான புள்ள. டக்குனு வேலைக்கு போயிருச்சி பாருங்க. இப்ப மதுரைல தான் வேல பாக்குறான். வாரவாரம் ஊருக்கு வந்துருவான். அங்கருந்து 3 மணிக்கு கெளம்புவான், இங்க சாந்தரம் 5மணிக்குக்குள்ள வந்துருவான். திரும்ப திங்கக்கெழம காலைல 7மணிக்கு இங்க இருந்து கெளம்பிருவான். பொறுப்பான பிள்ள. ஹ்ம் இவன இப்படி ஒரு நெலமைக்கு கொண்டு வர, நான்.... இருங்க இருங்க, ஒங்கட்ட நான் இதப்பத்தி பெறகு சொல்றேன். எம்பய வந்துட்டான்.. அவன வீட்டுக்கு கூட்டிட்டு போணும்ல? அந்தா பாருங்க, அந்த ஊதா பஸ்ல இருந்து எறங்கி வரானே.. ஆ, அந்த வெள்ள சட்ட தான், அவந்தான் பரமேஷ்..

“என்ன தம்பி அப்பையே வண்டி திருத்தங்கல தாண்டிருச்சினு சொன்ன?”

“பஸ்ஸ உருட்டு உருட்டுனு உருட்டிய்யாங்கப்பா, மதுரைல இருந்து விருதுநகருக்கு 1மணி நேரத்துல வந்துரான், ஆனா விருதுநகர்ல இருந்து நம்ம ஊருக்கு 1மணிநேரம் ஆக்குறான். ச்செய் என்ன தான் ரோடோ?”

இவன் இப்படித்தான். எல்லாமே டக்கு டக்குனு முடியணும். ஒரு பஸ்ஸு ஊர்ல இருக்குற மேடு பள்ளத்தலாம் தாண்டி வரணும்னுலாம் யோசிக்க மாட்டான். அவன் வேல நடக்கணும். நடக்கலேனா கோவம் தான். ஆமா, அதனால தான பேங்க்ல மேனேஜரா இருக்கான்? ஷ்ஷ் நான் மேனேஜர்னு சொன்னேன்னு அவன்ட்ட சொல்லிறாதீங்க. அவன் அங்க மேனேஜருக்கு அடுத்த லெவல்ல தான் இருக்கான் போல. எனக்கு அந்த பேரு வாய்ல நொழையாதனால மேனேஜர்னு தான் சொல்லுவேன். “எப்பா இப்டிலாம் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க”னு அதுக்கும் கோவப்படுவான். ஹா ஹா என் பிள்ளைக்கு எப்பவுமே ஒரு கோவம் இருக்கும்.

“என்னப்பா நீங்க கூப்ட வந்திருக்கீங்க? வழக்காம நானே நடந்து வந்துருவேன்ல? இன்னைக்கு எதும் லீவா?”

“அதெல்லாம் இல்ல தம்பி, சும்மா தான்” அவன் பையை வாங்கி சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு, “ஒக்காருப்பா போலாம்”..

“சைக்கிள்லயா? இருக்கட்டும்ப்பா.. நீங்க வேணா ஓட்டிக்கிட்டு முன்னாடி போங்க. நா மெதுவா நடந்து வாரேன்”

“ஏ ச்சீ கிறுக்கா, ஒன்ன விட்டுட்டு நான் என்னத்த ஓட்டிட்டு போக? இந்தா நீ வேணா ஓட்டிட்டு போ, அப்பா நடந்து வாரேன்” - இந்தக்கால பிள்ளைகளுக்கு சைக்கிள்ல ஒக்காந்து வரதுக்கு எவ்வளவு கூச்சம் பாருங்களேன்!

“சைக்கிள்லாம் ஓட்டி ரொம்ப நாள் ஆயிருச்சிப்பா. இருக்கட்டும் வேண்டாம்”

“சரிப்பா, அப்ப அப்பா உருட்டிக்கிட்டே வாரேன். ரெண்டு பேரும் நடந்தே போவோம்”.. சொல்லிவிட்டு சின்ன வயசுல இவன் சைக்கிள் கேட்டு அடம்பிடிச்சத ஞாபகப்படுத்தி பாக்குறேன். ஹா ஹா, இவன் ரெண்டாப்பு படிக்கிறப்ப இருந்து சைக்கிள் வேணும் சைக்கிள் வேணும்னு கேட்டான். எட்டாப்பு படிக்கும் போது தான் தீவாளி போனஸ்ல கொஞ்சத்த மிச்சப்படுத்தி, ஏற்கனவே கடன் வாங்காத ஆளுங்கள எப்படியோ தேடிப்பிடிச்சி நெறையா கடன் வாங்கி ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். இப்ப நெனைச்சா லேசா சிரிப்பு வரவைக்குற இந்த விசயம் அன்னைக்கு எவ்வளவு கஷ்டத்துக்கு ஊடால நடந்துச்சினு தெரியுமா? ஹ்ம்....

“என்னப்பா சிரிக்குறீங்க?” 

ஓ, வெளியில் தெரியுற மாதிரி சிரிச்சிட்டேனோ? “அது ஒன்னுமில்ல தம்பி. ஒனக்கு சைக்கிள் எப்ப வாங்கிக்கொடுத்தேன்னு ஞாபகம் இருக்கா?”

“இல்லப்பா” என்று சுரத்தே இல்லாமல் சொல்லிக்கொண்டு புதுப்பட வால்போஸ்டர பாத்துக்கிட்டே வாரான்.. 



அது ஒரு கார்த்திகை நாள். ஊர்ல எல்லாரு வீட்லயும் வெளக்கு ஏத்தி வச்சி தீவாளிக்கி மிஞ்சிப்போன வேட்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த பொழுதடையுற வேளேல வெளக்கு, வேட்டு வெளிச்சத்துல இவன் சைக்கிள குறுக்க கால போட்டு ஓட்டிட்டு வந்தது இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிக்கிது.. “கரி நாள்ல போயி சைக்கிள் வாங்கி குடுக்கிறியேப்பா?”னு கேக்காத ஆள் இல்ல. சைக்கிள் கடக்காரன் கூட, “நாளைக்கு டெலிவெரி எடுத்துக்கிறீங்களா அண்ணாச்சி?”ன்னான்.. நான் பரமேச பாத்தேன். அவன் நல்லா கண்ண பெருசா தொறந்துக்கிட்டு, மூக்கு பொடச்சிக்கிட்டு, அந்த சின்ன வாய அழுத்தி மூடிக்கிட்டு என்னைய பாத்தான். நான் திரும்பி கடக்காரன்ட்ட “இல்லண்ணாச்சி, நான் இப்பையே எடுத்துக்கிடுறேன்”னு சொல்லிட்டு அவன பாத்தேன். அவனோட அந்த பெரிய கண்ணுல லேசா தண்ணியும், மூடுன வாயில ஒரு ஓரமா ஒரு சிரிப்பும் இருந்துச்சி. இதுக்காண்டியே இன்னும் எவ்வளவுனாலும் கடன் வாங்கலாம்.

இந்த மாதிரி பழசெல்லாம் ஞாவத்துக்கு வரும் போது எங்க இருக்கோம், எவ்ளோ நேரம் ஆச்சுனு எல்லாமே மறந்துரும். பாருங்க இத யோசிச்சுக்கிட்டே எப்படி வீட்டுக்குள்ள வந்தேன்னே தெரில. வெளிலே இருக்கும் போது இருந்த சந்தோசம் வீட்டுக்குள்ள வந்ததும் கொஞ்சம் கொறஞ்ச மாதிரி இருக்கு. வெளில எல்லையே இல்லாம விரிஞ்சி இருக்குற ஒலகம் எதெதையோ ஞாபகப்படுத்தும். என்னென்னமோ நெனைக்க சொல்லும். ஆனா வீட்டுக்குள்ள வந்ததும், ‘இதாண்டா ஒன் எல்ல, நீ இனிமேலு இதுக்குள்ள தான் யோசிக்கணும், இதப்பத்தி தான் யோசிக்கணும், இதுக்குள்ள தான் வாழணும்’னு யாரோ நம்மள கட்டாயப்படுத்துற மாதிரியே இருக்கும்.

அதுலயும் இந்த நாலு நாளா ரொம்ப அச்சலாத்தியா இருக்கு வீட்டுக்குள்ள இருக்குறதுக்கே.. ஏன்னா,

“என்னம்மா இன்னைக்கு அப்பா வேலைக்கு போலையா?” - நான் ஒங்கட்ட மட்டும் சொல்லலாம்னு நெனச்சேன். இப்ப இவன் அவாகிட்ட கேக்குறியான். நான் அவனுக்கு சொல்ற மாரியே உங்களுக்கும் சேத்து சொல்றேன். ஆனாலும் இவனுக்கு எம்மேல, படிச்சிட்டு வேலைக்கு போனாலும் இன்னும் மரியாத இருக்க தான் செய்யுது. அதான் என்ட்ட கேக்காம வீட்டுக்குள்ள வந்ததும் அவாகிட்ட கேக்குறியான்.

“அது ஒன்னுமில்ல தம்பி. அப்பா ஆபிஸ்ல ஒரு சின்ன பிரச்சன. அதான் கொஞ்ச நாளு லீவு விட்டிருக்காங்க”

“அப்படியாம்மா?”. இந்த பயலுக கிட்ட இது தான் எனக்கு பிடிக்காத விசயம். வளருற வரைக்கும் அப்பா சொல்ற எல்லாத்தையும் நம்புவாய்ங்க. வளந்த பெறகு அம்மா என்ன சொல்லுறாளோ அதத்தான் நம்புவாய்ங்க. நான் என் பொண்டாட்டிய பாத்தேன், என்ன சொல்றான்னு கேக்க.

“சின்ன பிரச்சனலாம் ஒன்னும் இல்ல. அவுக ஆபிஸ்ல மொதலாளிமாருக்குள்ள ஏதோ சொத்து தகராறு. அதனால கம்பெனிய இழுத்து மூடிட்டாங்களாம். எப்ப தொறப்பாங்க, எத்தன நாளு மூடிருக்க போறாங்கன்னு எதுவுமே தெரிலப்பா”

அவன் என்ன திரும்பி பாக்குறியான். நா வேற பக்கம் திரும்பலாம்னு பாக்குறேன், ஆனா முடியல. “எத்தன நாளா இப்டி இருக்குமாம்மா?”

“இப்பத்தாம்ப்பா ஒரு ரெண்டு நாளா”னு நான் சொல்லுறதுக்குள்ள அவ வாய தொறந்துட்டா, “செவ்வா கெழமேல இருந்தே வீட்ல தான் இருக்காக” சொல்லிக்கிட்டே என்ன மொறச்சு பாத்தா.. இந்த பொம்பளைக பிள்ள வளந்து ஒரு லெவலுக்கு வர வரைக்கும் புருஷன் அடிச்சாலும் புடிச்சாலும் அமைதியா தாங்கிக்கிட்டு நாலு வார்த்த கத்திக்கிட்டு சும்மா இருப்பாளுக. ஆனா புள்ள வளந்து பெரியவனாகி ஒரு லெவலுக்கு வந்தவொடனே புருஷனுக்கு மதிப்பே கெடையாது. 

”ஏம்ப்பா என்ட்ட மொதையே சொல்லல?” என்னப்பாத்து கேக்குறியான்.

“இல்லப்பா நீ வேற வெளியூர்ல வேல செய்யிற, உன்ட்ட சொல்லி நீ வேற அங்க டென்சனாக கூடாதுல்ல?”

“இதுல என்னப்பா டென்ஸன் இருக்கு? நா படிச்சி முடிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன். இனிமேல் நீங்க ஒக்காந்து ரெஸ்ட் எடுங்கப்பா அது போதும்” என்றான். எனக்கு பெருமையாக இருந்தது. எனக்கும் மனசுல இந்த நெனப்பு இருந்தாலும் யார்ட்டயும் இப்ப வரைக்கும் சொல்லல. இப்ப எம்மகனே சொல்லிட்டான். இனிமே நா எதுக்கு கஷ்டப்படணும்?

“சரிப்பா” என்றேன் சிரித்துக்கொண்டே.

அவள் சத்தம் வந்தது. “அதெல்லா ஒன்னும் வேண்டாம். ஒன் ஃப்ரெண்ட் கடைல எதாவது வேல இருந்தா அங்க சேத்துவுடு, இல்லேனா எதாவது பலசரக்கு கடைல சேத்துவுடு”

“ஏம்மா? அதான் நான் வேலைக்கு போறேன்ல? அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்களும் கெட்டு ஒட்டுறதலாம் மொத நிறுத்துங்க”

“அவன் சொல்றது சரிதான? நீயும் கெட்டு ஒட்டுறத நிறுத்துட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான? நா இத எத்தன தடவ சொல்லிருப்பேன்? இப்ப  பாரு அவனும் சொல்லுறியான். இப்பையாவது கேளு”

“தேவ இல்லாம என்ட்ட யாரும் பேச வேண்டான்னு சொல்லு பரமேசு” அவன்ட்ட விரல நீட்டி  எனக்கு எச்சரிக்கை கொடுக்கிறாளாம்.

“ஏம்மா? என்ன ஆச்சி?”

“அது ஒன்னும் இல்லப்பா.. இப்ப நீ சொன்னத தான் அப்பா அன்னைக்கே அவாகிட்ட சொன்னேன். அதுக்குப்போயி கழுத தங்கு தங்குனு குதிக்குது”

“பரமேசு, பெத்த பிள்ள எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும் பெத்தவங்க அவங்க செலவ அவங்களே தான் பாத்துக்கிடணும். ஒனக்கு இன்னும் எவ்வளவு பொறுப்பு இருக்கு? வீட்டுக்கு தேவையான சாமானே நீ வேலைக்கு போன பெறகு தான் ஒன்னொன்னா வாங்கிக்கிட்டு இருக்கோம். இதுல இப்ப, இவுகளும் வேலைக்கு போலேனா, நீயே குடும்ப செலவையும் எப்படி பாப்ப? இத கேட்டதுக்கு தான் என்ன ரொம்ப வையுறாக, அன்னைக்கு அடிக்கவே வந்துட்டாக”

“எதுக்குப்பா தேவை இல்லாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எம்மா நீங்களும் வீட்ல வாயக்குடுக்காம இருங்க. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் சும்மா இருங்க, அது போதும்.”

”வேண்டாம் பரமேசு, ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது”

“நீ வேலைய பாருப்பா, இவ இப்படித்தான் எதாவது கொழப்பிக்கிட்டு இருப்பா” நான் அவளை முறைத்துக்கொண்டே சொல்கிறேன்.

“ஆமாப்பா நாங்க சொன்னா கொழப்புற மாரி தான் இருக்கும். என்னமோ பண்ணுங்க. ஆனா நான் கெட்டு ஒட்டுறத ஒட்டிக்கிட்டு தான் இருப்பேன்”.

“ஏ இப்ப என்ன பண்ணனுங்கிற? இத்தன வருசம் நீயும் நானும் எப்டிலாம் கஷ்டப்பட்டிருக்கோம்? இப்ப கடவுள் புண்ணியத்துல இல்லங்காத அளவுக்கு இருக்கோம். பெறகு என்ன?”

“அதான் சொல்லிட்டேன்ல, ஒருக்க சொன்னா புரியிற ஜென்மங்களுக்கு சொல்லலாம். சிலதுகலாம் பட்டாத்தான் திருந்தும்” இவா இதே வார்த்தைய கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லிருந்தான்னு வைங்களேன், இவ காத பொளந்திருப்பேன், பல்ல ஒடச்சிருப்பேன். ஆனா, ஒரு வயசுக்கு மேல, பொண்டாட்டி என்ன சொன்னாலும், நமக்கு பிடிக்கலேனாலும் அடங்கித்தான் போக வேண்டியிருக்கு. 

ஆனாலும் எனக்கு வேலைக்கு போக பிடிக்கல. பரமேசு கிட்டயும் ரெண்டும் மூனு தடவ கேட்டுட்டேன் வேலைக்கு போறத பத்தி. அவன் தெளிவா சொல்லிட்டான், “நான் பாத்துக்கிறேம்ப்பா.. நீங்க வீட்ட மட்டும் கவனிச்சிக்கோங்க”.. எவ்வளவு பொறுப்பான அக்கறையான பிள்ள? பிள்ளைய நல்லாத்தான் வளத்திருக்கேன், இல்ல? ஞாயித்துக்கெழம பிள்ளைக்கு நல்லா கறி வாங்கி ஈரல் வதக்கி சோறு போட்டோம்.. வீட்ல சாப்பிடுறப்பலாம், அவன் ‘ஒடம்பு குண்டாயிருச்சி, ஒடம்பு குண்டாயிருச்சி’னு கவலப்பட்டுக்கிட்டே இருப்பான். எனக்கென்னமோ அப்படி தெரியுறதே இல்ல. அவனோட பழைய ட்ரெஸ் எல்லாம் சிறிசாயிருச்சி, ஆனாலும் அவன் ஒன்னும் குண்டான மாதிரி எனக்கு தெரில. ஞாயித்துக்கெழம நல்லா தூங்குனோம், சாந்தரம் டிவி பாத்தோம், திரும்ப திங்கக்கெழம காலேல அவன சீக்கிரம் எழுப்பிவிட்டு, பஸ் ஸ்டாண்ட்ல அவனுக்கு டாட்டா காட்டி அனுப்பிவச்சேன். அடுத்த சனிக்கிழம திரும்ப என் பிள்ளைய கூப்பிட வர வேல மட்டுந்தான் இருக்கு. இனிமேல் நான் சந்தோசமா சுதந்திரமா எங்கேயும் போலாம்.



வீட்டுக்கு வந்தேன். மணி காலை ஏழு. பேப்பரை எடுக்கிறேன். ஹ்ம் சாவகாசமா பேப்பர் படிச்சி எத்தன வருசமாகுது? அதுவும் டீ குடிச்சுக்கிட்டே படிக்குறது இன்னும் சந்தோசமா இருக்கு. ரொம்ப நேரமா பேப்பர் படிக்குறேன் போலனு நெனச்சி மணிய பாத்தேன். எட்டே கால். என்னது இவ்வளவு நேரம் ஆன மாதிரி இருக்கு, ஆனா கா மணிநேரம் தான் ஆயிருக்கா?னு நெனச்சுக்கிட்டே, பேப்பர முடிச்சிட்டு, குளிச்சி சாப்பிட்டு, டிவிய போட்டேன். ஒரு அர மணி நேரந்தான் பாத்தேன். அதுக்கு மேல பாக்க முடியல. எல்லா சேனல்லயும் சீரியல். பொம்பளைக எல்லாம் அழகா இருந்தாலும், இந்த சீரியல் எதுவுமே பாக்க சகிக்காது எனக்கு. சரி, வெளிய கெளம்பலாம்னு கெள்மபுனேன். 

“இந்தா, வரும் போது, மத்தியானம் கொழம்புக்கு வைக்க காய்கறி வாங்கிட்டு வாங்க”னு சொல்லி ஒரு லிஸ்ட் குடுத்தா..

”காசு?”

“என்ட்ட கேட்டா?”

“ஏ காசு இல்லாம இதெல்லாம் எப்படி வாங்குறது?”

“இதெல்லாம் வாங்கிட்டு வந்தா கொழம்பு வைக்கலாம். இல்லேனா காலேல ஆக்குன சோறும் பாலும் இருக்கு. நேத்து வாங்குன பக்கடா கொஞ்சம் இருக்கு. சாப்பிட்டுக்கோங்க”

என் கையில கொஞ்சம் காசு இருந்தாலும், இவா கிட்ட நான் ஒன்னும் சொல்லிக்கிடல.. பேசாம மார்க்கெட்டுக்கு போயி கொஞ்சம் காய்கறிலாம் வாங்கிட்டு வந்தேன். மத்தியானமும் டிவில சீரியல் தாங்க ஓடுது.. இது எப்ப முடியும்? சூடா சமைச்சு கொடுத்தா. ஹ்ம் டெய்லி வேலைக்கு போனா இப்டி சூடா சாப்புட முடியுமா? காலேல ஆக்குன சோற, டிஃபன் பாக்ஸுல கொண்டு போயி, மத்தியானம் அது ஆறிப்போயி குளு குளுனு இருக்கும். அதெல்லாம் சாப்பாடா? இதான் சாப்பாடு. சாப்புட்டுட்டு ஒரு தூக்கம் போட்டேன். சாந்தரம் டீ போட்டு எழுப்பிவிட்டாள். இப்பயும் டிவில சீரியல் தான் ஓடுது. நான் வேலைக்கு போறப்பலாம் நெனப்பேன், இந்த சீரியல் எல்லாம் நைட்டு மட்டுந்தான் போடுறாய்ங்கன்னு. ஆனா இப்பத்தான் தெரியுது, காலேல இருந்து நைட்டு வரைக்கும் அது பூமி சுத்துற மாதிரி நம்ம வீட்ட சுத்திக்கிட்டு இருக்குனு.

நைட்டு வெறும் சோறு மட்டும் தான் வச்சா. கடிச்சிக்கிட எதுவும் இல்ல. “என்ன ஒன்னத்தையும் காணோம்?” 

“என்ன வேணும்?”

“பக்கடா கிக்கடா இருக்கா?”

“இல்ல, மத்தியானமே காலி.. வேணும்னா போயி வாங்கிட்டு வாங்க” வீட்ல அன்றாட செலவுக்கு கூட என்னால காசு குடுக்க முடியல இப்பலாம்.

வேலைல இருந்து நின்ன இந்த ஒரு வாரமா வீட்டு செலவெல்லாம் நாந்தான் பாத்துக்கிறேன். இன்னைக்கு நைட்டு சோத்துக்கு பக்கடா வாங்குற இந்த பத்து ரூவாயோட என் கையில் இருக்குற காசு எல்லாம் போயிருச்சி.

நாளைக்கு காலேல 9மணிக்கு தான் எந்திரிக்கணும்னு கங்கனம் கட்டிக்கிட்டு படுத்தேன். பாத்தா, கரெக்ட்டா எப்பயும் போல, அஞ்சரைக்கு முழிப்பு தட்டிருச்சி. அதுக்கு மேல எவ்வளவு பொரண்டு படுத்தாலும் தூக்கமே வரல. ரொம்ப போர் அடிக்குது. சீக்கிரம் எந்திரிச்சிட்டேன். ஒரு வேலையும் இல்ல. ஒரு நாள் ரெண்டு நாள்னா நல்லா இருந்தது. ஒரு வாரமா இப்டியே இருக்குறது, கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்கு. வெளிய எங்கேயாச்சும் போலான்னா கைல காசு இல்ல. சோறு சரியா ஆக்கல, கொழம்பு தண்ணியா இருக்குனு நான் எதாவது குத்தம் சொன்னா, இவளுக்கு இப்பலாம் கோவம் ரொம்ப வருது.. அடிக்கடி குத்திக்காமிக்குறா, “நீங்க குடுக்குற காசுக்கு இதத்தான் ஆக்கிப்போட முடியும்”னு.. நாளைக்கு குடுக்க என்ட்ட காசே இல்லையே, நாளைக்கு என்னத்த வப்பா?

வழக்கம் போல பையன் இந்த வாரம் வந்தான். அவன் வந்து இருந்த ரெண்டு நாளும் பொழுது ஏதோ சுமாரா போச்சு. மத்த நாள் எல்லாம் ரொம்ப மோசம். படுத்தா தூக்கம் வரல, வீட்டுக்குள்ளயே எவ்வளவு நேரம் அடஞ்சு கெடக்க? வெளிய போணும்னா எவனாவது தெரிஞ்சவன் வருவான். அவன் கூட டீக்கடைக்கு போணும்னா அதுக்கு கூட காசு இல்ல. பையன் கிட்ட கேக்கலாம்னா சொல்றீங்க? அது நல்லா இருக்காது. ஒரு பையன் தான் அப்பன் கிட்ட கூசாம என்ன வேணும்னாலும் கேக்கணும். அதே மாதிரி ஒரு வயசுக்கு பிறகு அப்பனுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சி அப்பன் கேக்குறதுக்கு முன்னாடியே கொடுத்திரணும். ஆனா இவன் என்ன வேலைக்கு போக வேண்டான்னு சொல்லி 2வாரம் ஆகிருச்சி, இது வரைக்கும், “என்னப்பா, செலவுக்கு என்ன பண்ணுறீங்க? எதுவும் வேணுமா?”னு கேக்கவே இல்ல. அதே மாதிரி முன்னாடி மாதிரி என் கிட்ட சிரிச்சி பேசுறது இல்ல. நான் என்ன கேட்டாலும் ஒரு வார்த்தையில மட்டும் தான் பதில் சொல்றான். என்ன கண்டுக்கிற மாதிரியே இல்ல. நேத்து “எப்பா எதாவது திங்க இருக்கா?”ன்னான். 

”எதுவும் இல்லையேப்பா”

“வேலாயுத நாடார் கடேல பக்கடா வாங்கிடு வரீங்களா?”

“அம்மாட்ட காசு வாங்கி தாப்பா”

“இருக்கட்டும்ப்பா, பெறகு பாத்துக்கிடலாம்”

அடுத்து அவன் ஒன்னும் சொல்லல.. எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சி, பிள்ளைக்கு கேட்ட பலகாரம் கூட வாங்கி குடுக்க முடியலையேனு. இந்தா, இன்னைக்கு காலேல திரும்ப மதுரைக்கு கெளம்பிட்டான். எப்பவும் ரொம்ப நேரம் டாட்டா காட்டுவான், இன்னைக்கு சும்மா ரெண்டு தடவ மட்டும் பேருக்கு கைய வீசுன மாதிரி இருக்கு, கவனிச்சீங்களா?

நா வீட்டுக்கு வந்தேன். தலைல முடி பங்கர மாதிரி வளந்திருக்கு. முடி வெட்டணும். கையில காசு இல்ல. இவா கிட்ட இருக்கு. பய, ஒவ்வொரு மாசமும் சம்பளம் வந்ததும் இவா கிட்ட கொஞ்சத்த குடுக்குறியான். “ஏ எனக்கு முடி வெட்டப்போணும், ஒரு அம்பது ரூவா குடேன்”

“என்ட்டலாம் காசு இல்ல” - இவளும் இப்ப என் கிட்ட சரியா பேசுறது இல்ல. நான் எது கேட்டாலும் எரிஞ்சி விழுற மாதிரியே பேசுறா. எதுக்கெடுத்தாலும் எம் பையன என் கூட ஒப்பிட்டு பேசுறா. “சின்னப்பையன், அவனுக்கு இந்த குடும்பத்து மேல இருக்குற அக்கற, வேலைக்கு போய் சம்பாதிக்கணுனு இருக்குற சுறுசுறுப்பு இவ்வளவு பெரிய ஆம்பள ஒங்களுக்கு இல்லையா?”னு அடிக்கடி குத்திக்காமிக்குறா. இத்தன நாளா வீட்ல, ‘ஒரு ஆம்பள’னு எல்லாரும் என்ன சார்ந்து இருந்த அந்த பிம்பம் இப்ப கொஞ்ச கொஞ்சமா ஒடையுது. என்னால இத தாங்க முடியல. வீட்டுக்கு வர சொந்தக்காரங்க யாரும் என்ட்ட சரியா பேசுற மாதிரியே தெரில. எல்லாரும் எம்பையன பத்தி வெசாரிக்குறாங்க, என் வீட்டுக்காரிகிட்ட பேசுறாங்க. நான் ஒரு மூலையில இருக்கேன். எனக்கு இந்த வீட்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்த முக்கியத்துவம் இல்ல. எல்லாமே என் பையனுக்கு போயிருச்சி. பக்கத்து வீட்ல, சொந்தக்காரங்க வீட்ல எதுவும் முக்கிய விசேசம்னா எம்பையனுக்கு தான் மொத ஃபோன் பண்ணி சொல்றா.. எனக்கு அது ரொம்ப லேட்டா தான் தெரியுது. எனக்கு இந்த குடும்பத்துல கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் இருந்த பேரு, முக்கயத்துவம் எல்லாம் இப்ப எம் பையனுக்கு போயிருச்சி. எனக்கு அவன் மேல பொறாமையா கோவமானு தெரில, ஏதோ ஒன்னு இப்ப வருது. ஒரு வீட்ல பையன் வளந்து வேலைக்கு போனதும் அந்த வீட்ல இருக்குற தகப்பனோட மரியாத கொஞ்சம் கொறையத்தான் செய்யுது. வெளிய எப்படியோ, ஆனா பொண்டாட்டிக்கு கண்டிப்பா பிள்ள மேல பாசம் கூடிரும், புருசன் மேல வெறுப்பு கூடிரும்.



என்னால இப்ப வீட்ல முன்னாடி மாதிரி தைரியமா படுக்க முடியல. கம்பளிய ஒடம்பு பூரா சுத்திக்கிட்டு ஒடம்ப வளைச்சி, ஒரு மாதிரி சுருட்டிக்கிட்டு படுத்துக்கெடக்கேன். கூனிக்குறுகி படுத்திருக்கேன்னு சொன்னா பொறுத்தமா இருக்கும். எப்பையுமே படுத்தே கெடக்கேன். தூக்கம் வரலேனாலும், படுத்துக்கெடக்கேன். உடம்பு தெம்பா இருந்தாலும் மனசுக்குள்ள ஏதோ நான் ஒரு சீக்காளி மாதிரி நெனச்சி சுருண்டு படுத்து கெடக்கேன்.

நான் வீட்டுக்கு சரியா காய்கறி எதுவும் வாங்கிக்குடுக்காம அவா சரியா சமைக்குறதும் இல்ல. வேலைக்கு போலேன்னாலும் நாந்தான் இந்த குடும்பத்துக்கு தலைவன். ஒரு ஆம்பளையா நாந்தான் எல்லாத்தையும் வாங்கிக்குடுக்கணும். வீட்டுக்கு பெரிய ஆம்பளன்னு காட்ட இனிமேல் வீட்டுக்கு எல்லாம் நான் தான் என் காசுல வாங்கணும்னு முடிவு செஞ்சேன். இன்னைக்கு அவா அடுப்படியில இருக்குறப்ப தான் அத செஞ்சேன். மெதுவா சத்தம் வரமா அலமாறிய தொறந்தேன்.  கையெல்லாம் லேசா நடுங்குது. யாரோ நெஞ்சுக்குள்ள திடு திடுனு ஓடுற மாதிரி இருக்கு. வேக வேகமா பெருமூச்சா வருது. சத்தம் வராம மூச்ச விட்டுக்கிட்டே, அவளோட பர்ஸ எடுத்தேன். நெறைய ரூவா தாளா இருந்தது. அதுல ஒரே ஒரு நூறு ரூவா தாள மட்டும் உருவி எடுத்துக்கிட்டு திரும்பவும் அந்த பர்ஸ எடுத்த எடத்துலேயே வச்சுட்டேன். ரெண்டு நாளைக்கு வழக்கம் போல காய்கறி வாங்கலாம்னு முடிவு பண்ணிக்கிட்டு மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்தேன். நான் காய்கறி வாங்கிட்டு வரத பாத்தவொடனே கேட்டா,

“ஏது காசு?”

“அதெல்லாம் ஒனக்கு எதுக்கு? போயி இன்னைக்காவது நல்ல கொழம்பா வையி”..

ஒரு ரெண்டு நாள் அந்தக்காச வச்சு ஓட்டுனேன். இன்னொரு நாள் அவா பக்கத்து வீட்டுல பேசிக்கிட்டு இருக்கும் போது, அதே மாதிரி மெதுவா அலமாறிய தொறந்து பாத்தேன், அங்க அவா பர்சு இல்ல. பீரோலுக்குள்ள இருக்குமோனு அங்கயும் பாத்தேன், அங்கயும் இல்ல. பீரோல மூடும் போது அவா சேல கீழ நழுவி விழுந்துச்சி. அதுல ரெண்டு நூறு ரூவா நோட்டு இருந்துச்சி. இந்த பொம்பளைகள நெனச்சி பெருமப்படுறதா, இல்ல, சிரிக்குறதானே தெரியல. நல்லா சேத்து வைக்குறாளுக, ஆனா காச ஒழிச்சு வைக்குறேங்குற பேர்ல ஆம்பளைங்க கண்டுபிடிக்குற மாரியே வப்பாளுக.. ஒவ்வொரு சேலையா எடுத்து பாக்குறேன், ஒவ்வொன்னுக்குள்ளேயும், நூறு ஐநூறுனு இருக்கு. மெதுவா ஒரு ஐநூறு ரூவாய எடுத்து என் சட்ட பாக்கெட்டுல வைக்குறப்ப,

“என்னங்க பண்ணிக்கிட்டு இருக்கீங்க?”

“அது, அது வந்து, பீரோல ஒதுக்கிட்டு இருக்கேன், ஒரே தூசியும் தும்பட்டையுமா இருக்கு, அதான்”னு சொல்லிக்கிட்டே அவா சேலைய எல்லாம் எடுத்து அவசர அவசரா உள்ள வைக்குறேன். லேசாக உடம்பு நடுங்க ஆரம்பித்துவிட்டது. சாதாரணமா பேச நெனச்சாலும் நாக்கு குளற ஆரம்பித்துவிட்டது.

“நான் அலமாறில நூறு நூவா காணப்போனப்பவே நெனச்சேன், நீங்க தான் இப்படி பண்ணிருப்பீங்கன்னு.. சொந்த வீட்லயே திருட்டுத்தனம் பண்ண வெக்கமா இல்ல ஒங்களுக்கு?” என் மூஞ்சுக்கு நேரா கைய நீட்டி கேக்குறா.

“ஏ இப்ப எதுக்கு கூப்பாடு போடுற?” என்னோட அசிங்கமான செயல மறைக்க கோவப்படுற மாதிரி கத்துறேன்.

“ஆமாப்பா நா கூப்பாடு தான் போடுறேன். தாந்தான் சம்பாதிக்கிறது இல்ல, பிள்ள சம்பாதிக்குறதயும் சேத்து வைக்காம, இப்படி திருடுற அப்பன இப்பத்தான் பாக்குறேன்.”

”நா வீட்டு செலவுக்கு தான எடுக்குறேன்”

“வீட்டு செலவுக்கு சொந்த வீட்லயே திருடணுமா? உங்களுக்கு இப்படி காசு எடுக்கணும்னு அவசியமாங்க? ஏங்க, வீட்ல ஒரு பெரிய ஆளு, நீங்க தாங்க சம்பாதிச்சு குடுக்கணும், பிள்ள வேலைக்கு போனாலும் தெம்பு இருக்குற வரைக்கும் சம்பாதிக்கணும்னு அன்னைக்கே சொன்னேனே கேட்டிங்களா? உங்களால பையன் கிட்ட வாய தொறந்து காசும் கேக்க முடியல.. இத்தன நாளா நீங்க பாத்துக்கிட்டு இருந்த வீட்டு பொறுப்பையும் அவன் கிட்ட கொடுக்க உங்க தன்மானமும் எடம் கொடுக்கல, இன்னைக்கு பாருங்க, அதனால திருடுற அளவுக்கு வந்துட்டீங்க. நான் அன்னைக்கு என்ன சொன்னேன்? ஒங்க சக்திக்கு, ஒங்க உடம்பு ஒத்துழைக்குற அளவுக்கு ஒரு வேல பாருங்கன்னு, கேட்டிங்களா? இப்படி ஒரு திருட்டுப்பய மாதிரி பயந்து, ஒடுங்கி.. உங்கள பாக்குறதுக்கே எனக்கு இப்ப அசிங்கமா இருக்குங்க” அவா உதடு துடுக்குது. கண்ல தண்ணி கட்டுது. அழ ஆரம்பித்துவிட்டாள்.

அழுதுக்கிட்டே பேசுறா, “இந்த வயசுல, நம்ம செலவுக்கே கூட பையன எதிர்பாக்குற அளவுல தாங்க இருக்கோம். நாம ஒன்னும் கவர்மெண்ட் வேல பாத்து பென்சன் கெடைக்குற அளவுல இல்ல. இருக்குற வரைக்கும் நீங்களும் நானும் சோத்துக்கு இன்னொரு ஆள் கிட்ட கையேந்த கூடாதுன்னு தான் அன்னைக்கே நீங்க வேலைக்கு போகலனு முடிவு செஞ்சப்ப வேண்டான்னு சொன்னேன். பெத்த பிள்ளையாவே இருந்தாலும் எத்தன நாளைக்கு தாங்க நாம அவன்கிட்ட போயி நிக்க முடியும்? அவனே நமக்கு செய்யுறேன்னு சொன்னாலும், வேண்டாம்ப்பானு சொல்லி நம்ம சோத்துக்கு நாம தாங்க ஒழைக்கணும். அதாங்க ஒங்களுக்கும் எனக்கும் மரியாத. பெத்து வளத்து ஆளாக்கி வேலைக்கு போற வரைக்கும் தான் பிள்ள. வேலைக்கு போனதும் அவனும் ஒரு மனுசன். அவனுக்குனு பொறுப்பு வந்துரும், அவன் அதுக்கு ஏத்த மாரி போயிருவான். அத புரிஞ்சிக்கிட்டு நாம் தான் ஒதுங்கி நிக்கணும். அதுக்காக பிள்ளைய ஒதுக்க சொல்லல, அவன எப்பையுமே எல்லாத்துக்குமே சின்ன விசயத்துக்கு மொதக்கொண்டு எதிர்ப்பாக்க வேண்டான்னு தான் சொல்றேன்” அழுதுக்கிட்டே இருந்தா ரொம்ப நேரமா.. நா என்ன செய்யனு தெரியாம அவளையே பாத்துக்கிட்டு நிக்குறேன், கையில எடுத்த அந்த ஐநூறு ரூவாய அந்த சேல மடிப்புக்குள்ளேவே வச்சுட்டு..



இந்த வாரம் சனிக்கிழம சாந்தரம் எனக்கு ஃபோன் வந்துச்சி. ஆமா எம்பையன் தான். “எப்பா திருந்தங்கல் தாண்டிட்டேன், பஸ் ஸ்டாண்டுக்கு வந்துறீங்களா?”

“இல்லப்பா அப்பா ஒரு வேலையில இருக்கேன்”

“என்னது வேலையா?”

“ஆமாப்பா நேத்துல இருந்து ஒரு பலசரக்கு கடையில சேந்திருக்கேன்”

“நாந்தான் ஒங்கள வேலைக்கிலாம் போக வேண்டான்னு சொன்னேன்ல?”

“இருக்கட்டும் பரவாயில்லப்பா, பெறகு பேசுறேன், வீட்டுக்கு பாத்து போயிட்டு வா” ஃபோனை வைத்துவிட்டேன்.

நைட்டு வீட்டுக்கு போறப்ப என் பையனுக்கு பிடித்த வேலாயுத நாடார் கடை பக்கடாவும் மிச்சரும் என் காசில் சந்தோசமா வாங்கிட்டு வேகமா என் சைக்கிளை அழுத்திக்கிட்டு இருக்கேன் எங்க வீட்டுக்கு போற பாதையில..

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

Monday, January 14, 2013


சந்தானத்தின் முதல் தயாரிப்பு, 1981ல் பாக்யராஜின் இயக்கத்தில் வந்த ‘இன்று போய் நாளை வா’வின் தழுவல், பவரின் பங்கு என இந்தப்படம் பார்க்க பல ுவியான காரணங்கள் இருந்ததால் இன்று அங்கிங்கு ரெகமெண்டுக்கு ஆள் பிடித்து ஒரு வழியாக நைட் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க சென்றேன். படம் எப்படி, பழைய இன்று போய் நாளை வா-வை மிஞ்சியதா என பார்க்கலாம். முதலில், பழையதை மறக்காமல் தன்னோடு ‘லொள்ளு சபா’வில் இருந்தவர்களுக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதற்கு சந்தானத்திற்கு பாராட்டுகள்.


தெரிந்த கதை தான். மூன்று நண்பர்கள் ஒரு ஃபிகரை டாவடிக்கிறார்கள். முதலில் யாரையுமே விரும்பாத அவள் கடைசியில் அவர்களில் ஒருவனை விரும்பி கைப்பிடிக்கிறாள். இந்த லட்டும் மாதிரி கதையை காமெடி என்னும் சீனியில் முக்கி தந்திருக்கிறார்கள். தன் சொந்தப்படம் என்றாலும் பவருக்கு அதிகமான வாய்ப்புகளை தந்திருக்கும் சந்தானத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். எழுத்து போடும் போது, பவர் பெயருக்கு வந்த விசிலும் கைதட்டலும் பிரமிக்க செய்து விட்டது. படத்திலும் அவர் பெயர் பவர் தான். பவரை விட வேறு பவரான பெயரை பவருக்கு வைக்க முடியுமா?


ஆரம்ப காட்சியில் இருந்தே நகைச்சுவையே பிரதானம் என வரிந்து கட்டி கிளம்பியிருப்பதால், நீங்கள் குறுகுறுவென்று கதையையும் லாஜிக்கையும் தேட நினைத்து தோற்றுப்போகாதீர்கள். பவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் இருந்து கதை டாப் கியரில் எகிறுகிறது. முதல் பாதி வரை அவர்கள் ஹீரோயின் விஷாகா சிங்கை கரெக்ட் பண்ண செய்யும் லூட்டிகள் தான் நிரம்பி இருக்கின்றன. அதிலும் பவர் நடனம் ஆடுகிறேன் பேர்வழி என செய்யும் அலம்பல்கள், ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆ... செம.. உண்மையை சொல்கிறேன், ஒரு படத்திற்கு போய் சிரித்து சிரித்தே தொண்டை கட்டியது எனக்கு இதில் பவரை பார்க்கும் போது தான். என்னா நடிப்பு? இவர் இதே லைனை பிக்-அப் செய்து போனால் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் நிச்சயம் உண்டு. ஆமா, மக்கள் மனதில் ஏற்கனவே அரியாசனம் போட்டு அமர்ந்து தான் இருக்கிறார். இருந்தாலும் சினிமாவிலும் இடம் வேண்டாமா? பவரு, எல்லாருக்கும் காட்டு உன் பவரு..


ஹீரோயின் விஷாகா சிங், ‘பிடிச்சிருக்கு’ படத்திலும் இன்னும் சில விளம்பரங்களிலும் போர்த்திக்கொண்டு வந்தாலும் இதில் கவர்ச்சியில் விளையாண்டிருக்கிறார். காமெடி படத்திற்கு இவ்வளவு கவர்ச்சி தேவை இல்லை. சில நேரங்களில் அழகாகவும் பல நேரங்களில் சுமாராகவும் இருக்கிறார். ஷீலா கி ஜவானி போல் இவருக்கு இதில் ஒரு பாடல் வேறு. மூன்று ஹீரோக்களில் பவர் தான் முதல் இடம். சந்தானத்தையே தன் மேனரிஸங்களாலும் டயலாக் டெலிவரியாலும் காலி பண்ணிவிடுகிறார். கதைக்கு ஹீரோவாக வரும் சேது, பாவம் தக்கி முக்கி நடிக்கிறார். கோவை சரளா, விடிவி கணேஷ், ஹீரோயினின் அப்பா அந்த நடன இயக்குனர் என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி கொஞ்சம் சறுக்கினாலும் முடிவில் ஓரளவு நிமிர்ந்து விட்டது.


வசனங்கள் பலவும் ஒன் லைனர்களாகவே இருப்பதால் நினைத்து சிரிக்கும் அளவுக்கோ மனதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவுக்கோ இல்லை. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளும் முன் இன்னொரு ஒன் லைனர் வந்துவிடுகிறது. படம் பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்திருந்தாலும், படம் முடிந்தவுடன், “என்னாச்சி?” என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஹீரோ போல் நாமும் கேள்வி கேட்போம் மனதில் எதுவும் நிற்காததால். பாடல்களில் “லவ் லெட்டர்” மட்டும் நல்லா இருக்கு. பின்னணி இசையும் சுமார் தான். என்னாச்சு தமன்? படத்தை பவரை வைத்தே தூக்கி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். அது பல இடங்களில் ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.


 ஆனால் என்ன தான் படம் காமெடியாக இருந்தாலும் பழைய ‘இன்று போய் நாளை வா’வோடு பொருத்திப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதில் பாக்யராஜ் அந்தக்கால இளைஞர்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக அவர்களின் நட்பை, ஒரு பெண்ணுக்காக அதில் வரும் விரிசலை இயல்பாக காட்டியிருப்பார். அதில் திரைக்கதையில் இயல்பாகவே நகைச்சுவை சேர்ந்திருந்தது. ஆனால் இதில் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு காதலர்களும் ராதிகா வேறொருவனை விரும்புவது தெரிந்ததும் அவள் குடும்பத்து ஆட்களை அடித்து அனுப்புவார்கள், ஆனால் ஹீரோ மட்டும் வழக்கம் போல மிகவும் அப்ராணியாக வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வந்து கொடுப்பான். நமக்கே அவன் மீது ஒரு சிம்பதி வந்துவிடும். ஹீரோயினுக்கு லவ் வர இது ஒரு ஆழமான காரணமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கும். இது தான் பாக்யராஜ் டச். ஆனால் இதில் ஹீரோ ஹீரோயினின் தம்பிக்கு நீச்சல் கற்றுத்தருகிறான். அதிலேயே லவ் வந்துவிடுகிறது. அதே போல் அந்த கொலுசு காட்சி, ஹிந்தி டியூஷனை வீட்டிற்கு மாற்றும் காட்சி எல்லாம் அவ்வளவு இயல்பான நகைச்சுவையாக இருக்கும். இதில் பவர் ஸ்டார் கோயிலில் இருந்து வீட்டிற்கு நாட்டியம் கற்க வரும் காட்சி மட்டுமே சூப்பர்.



பவரை எடுத்துவிட்டு பார்த்தால் இது மிக மிக சுமாரான படம் தான். தனக்கு கொடுத்திருக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். “சிம்புவுக்கு நான் தான் போட்டி. ஆனந்த தொல்லை கொடுக்க போறேன்” என்று சொல்வதாகட்டும், ரசிகர்களை செட் செய்து பொது இடத்தில் சீன் போட்டன்னத்ான கலாய்ப்பது ஆகட்டும், பவர் பிரித்து மேய்ந்திருக்கிறார். மனிதருக்கு நகைச்சுவைக்கு ஏற்ற அருமையான உடல்மொழி வருகிறது. அந்த ஸ்நேக் ஃபைட் மூவ்மெண்ட் மரண மாஸ். ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமை கூட ஓவர் டேக் செய்து விடுவார் என எதிர்பார்க்கலாம்.


மொத்தத்தில் ரெண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு கேரண்டி கொடுக்கும் ஒரு நகைச்சுவை திரைப்படம், நீங்கள் பழைய ‘இன்று போய் நாளை வா’வை நினைவில் கொள்ளாமல் இருந்தால். ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிப்பு தான். நினைவில் நீங்கா காவியம் எல்லாம் இல்லை. ஆனால் பார்க்கும் அந்த ரெண்டரை மணிநேரம் நல்ல பொழ்துபோக்கு உண்டு. முதல்வன் அர்ஜூன் ஸ்டைலில் “கடைசில என்னையும் ஃபைட் பண்ண வச்சுட்டாங்களே”, “நானாவது காமெடியன்னு எனக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா நீ காமெடியன்னு தெரியாம இன்னும் ஹீரோவாவே நெனச்சுக்கிட்டு இருக்கியே” என சந்தானமும் பவர் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில் இது ஒரு பவர் ஸ்டார் விளையாட்டு. கொண்டாடுங்கள்..


முடிவாக, பாக்யராஜின் கதையை தான் சுட முடியுிர அவரின் திரைக்கதை யுக்தியை எந்த கொம்பனாலும் நெருங்க முடியாது என ஆணித்தரமாக விளக்கும் படம். தலைவர் பவர் மட்டும் இல்லையென்றால் படம் காலியாகியிருக்கும்.. ஒரு முறை பார்க்கலாம், சம்பந்தமே இல்லாமல் சிரித்துவிட்டு வரலாம். “கண்ணா லட்டின்ன ஆசையா” - ிகட்டும் இனிப்பு..

ஹார்ட் அட்டாக்!!!!!

Wednesday, January 9, 2013

எனக்கு இந்த சத்தம் தலைவலி கொடுப்பது போல் இருக்கிறது. இது என்ன சத்தம் என உணர முயற்சிக்கிறேன். லேசாக கண்களை திறக்கிறேன். ராணியின் முகம் மங்கலாக தெரிகிறது. அழுதுகொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன். ஆம்புலன்ஸ் வேறு, சினிமாவில் காமிப்பார்களே, அது போன்ற சத்தத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நான் அவள் மடியில் கிடக்கிறேன். மெதுவாக அவளை பார்த்தவாறே யோசிக்கிறேன், “இவளுக்கு உண்மை தெரிந்தால் என்னாவது?” என.. எங்களுக்கு பக்கவாட்டில் வெள்ளை ஆடையில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தார்கள். நான் கண் விழிப்பதை பார்த்ததும் ராணியிடம், “மேடம், சார் கண்ண தொறக்குறாரு, பாருங்க” என்கிறாள் அந்த பெண். 



“என்னங்க.............” ஆம்புலன்ஸே கவிழ்ந்து விழும் அளவுக்கு கத்துகிறாள் என் பதிபத்தினி. டிரைவர் கூட லேசாக பயந்திருப்பார் என நினைக்கிறேன். என் தலைவலிக்கான காரணம் புரிந்து விட்டது. ‘இந்த சத்தத்தை தடுக்க முடியாது’ என என் 27வருட இல்லறம் கற்றுக்கொடுத்திருந்ததால் தலைவலியை ஏற்றுக்கொண்டு கண்களை மூடுகிறேன்.

இன்று மதியம் தான் அது நடந்தது. மிகவும் டென்ஸனோடு வீட்டிற்கு சாப்பிட வந்தேன். டென்ஸன் ஏனென்றால், டென்ஸன். எனக்கு காரணம் எல்லாம் தெரியாது. காலை ஆபிஸ் கிளம்பும் போது, மதியம் சாப்பிட வரும் போது, மாலை ஆபிஸில் இருந்து வந்து மீண்டும் மறுநாள் காலை கிளம்பும் வரை, பின் ஆஃபீஸில் இருக்கும் நேரம் இந்த சமயங்களில் மட்டும் தான் நான் டென்ஸனாக இருப்பேன். ஆனால் இந்த ராணி நான் எப்போதுமே டென்ஸனாக இருப்பதாக சொல்வாள். பொறுமை கெட்டவள். ஆனால் எவ்வளவு டென்ஸன் என்றாலும் அவளிடம் என் டென்ஸன் 25வது ஓவரில் விளையாடிக்கொண்டிருக்கும் டெயில் என்டர்களை போல் பம்மிவிடும்.

இன்று மதியம் இவள் வேறு என்னை கோவப்படுத்திவிட்டாள். கோவப்படுத்தினாலும் கோவத்தை காட்ட முடியாது. ஒவ்வொரு மணமான ஆணும் வீட்டில் இருக்கும் குட்டி மன்மோகன் சிங் தான். வீட்டிற்கு வந்ததும் சமையக்கட்டு பரணில் புத்தாண்டுக்கு செய்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்திருந்த குலாப் ஜாமூனை எடுத்து கொஞ்சம் வாயில் போட்டேன். அந்த இனிப்பை நாக்கு உணரும் முன்,

“என்னங்க..............................” தன் ரயில் வண்டி சத்தத்தோடு என்னை நோக்கி வந்தவள், “ஒங்களுக்கு தான் சுகர் இருக்குல, டாக்டர் இனிப்பு பலகாரமெல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காருல?” என கேட்டு அதை பிடிங்கி நான் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டாள். சண்டாளி, எப்படி கண்டுபிடித்தாள் என தெரியவில்லை. 

ரெண்டு பேர் இருக்கும் வீட்டில் ஒன்று நான் திங்க வேண்டும், அல்லது அவள் திங்க வேண்டும். புத்தாண்டு பிறந்த 25வது மணிநேரத்தில் இருந்து அது அந்த பரணில் தான் இருக்கிறது. அவளுக்கு தெரியாமல் ஒன்றிரண்டு தின்னலாம் என்றாலும், “என்னங்க.............................” இதோ இந்த ரயில் வண்டி ஓட ஆரம்பித்துவிடும். நான் எப்போது இனிப்பை எடுத்தாலும் சரியாக கண்டுபிடித்து ரயில் வண்டியை ஓட்ட ஆரம்பித்துவிடுவாள். அலுவலகத்தில் மாலை டீயோடு கொடுக்கும் இனிப்புகளை வாயில் வைக்கும் போது கூட, மூளை, காதுகளை கொஞ்சம் உஷாராக இருக்க சொல்லி செய்தி அனுப்புமளவுக்கு அந்த ரயில் வண்டி என்னை டார்ச்சர் செய்தது.


“என்னங்க..........................”

“சொல்லும்மா” - அங்கு ரயில் வண்டி ஓடினாலும் நாம் சைக்கிள் கூட மிதிக்க முடியாது. ஒன்லி வாக்கிங் தான். 

“சாப்புட வாங்க, மணி மூனாகுது”

“இந்தா வந்துட்டேன்மா”

எனக்கு சுகர், பிரஷர் எல்லாமே உண்டு. நம் குழந்தைகள் ஃபிகர் பார்க்கும் வயதில் நாம் ஆஸ்பத்திரியில் சுகர் பார்த்தால் தானே அந்த வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டு? என் மூத்த பையன் இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் கோட் எழுதிக்கொண்டிருக்கிறான், ரெண்டாவது பையன் இப்போது தான் எம்.பி.ஏ முடித்துவிட்டு மூத்தவனோடு தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறான். நான் 30வருடங்களுக்கு முன்பே பி.காம் முடித்துவிட்டு, ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸ் மேனேஜராக இருக்கிறேன்.

“ஏம்மா ரெண்டு குலாம்ஜாமுன் சாப்புடுறதுல என்ன ஆகிறப்போகுது?” டைனிங் டேபிள் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு கேட்டேன்.

“ரெண்டா? ஒங்கள டாக்டர் இனிப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிருக்காருல?”

டாக்டர் என்னிடம் இனிப்பை குறைத்துக்கொள்ளத்தான் சொன்னார். ‘இனிப்பு பக்கமே போகக்கூடாது’னு இவா சேத்து சொல்றா..

“சரி, அப்ப அதெல்லாம் எதுக்கு இன்னும் பத்திரமா மேலேயே வச்சிருக்க? நான் ஆஃபிஸ் போன பிறகு நீ திங்கவா?”

“ஆமா திங்குறாங்க.. எனக்கும் சுகர் தான?”

“அப்ப அத கீழேயாவது கொட்ட வேண்டியது தானம்மா?”

“இல்லைங்க, கணேஷும், வெங்கெட்டும் பொங்கல் லீவுக்கு வராங்கல, அதான் அவங்களுக்காக பத்திரமா வச்சிருக்கேன்”

இந்த மாதிரி எல்லார் வீட்டிலேயும் இருக்கும் போல? அதான் சாப்பிட்டு வயித்துக்கு எதும் ஆனாலும் ஆகும்னு நெனச்சு, ரெண்டு நாள் லீவு விடுறாய்ங்க பொங்கல் தீபாவளி மாதிரி பண்டிகைகளுக்கு. இந்த பெண்களும் இந்த மாதிரி மிச்சம் இருக்கும் ஐட்டங்களை கீழே கொட்டாமல் ஏதோ பொக்கிஷம் போல் சேர்த்துக்கொண்டிருப்பார்கள்.

“ஏ ஏ ஏம்மா கொஞ்சமா சோறு வைக்குற?”

“இன்னைக்கு காலைலேயும் சோறு தான் சாப்பிட்டுருக்கீங்க.. இப்பவும் சோறு. ஒடம்புல சுகர் அதிகமாயிரும், அதான் கொஞ்சமா வைக்குறேன்”

“எனக்கு ரொம்ப பசிக்குதும்மா, இது காணாது”

“அதான் கூட்டு, அவியல் நிறைய இருக்குல?” என்று கூறிக்கொண்டே அந்த கண்றாவிகளை என் தட்டில் வைத்தாள்.

முட்டைகோஸ், கீரை, வாழைத்தண்டு என்று ஆடு மாடுகளுக்கு கொடுப்பதை அடுப்பில் வேக வைத்து எனக்கு கொடுத்திருந்தாள். கோவமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ஒரு வயதிற்கு மேல், வீட்டுக்காரியிடம் கோவப்பட முடியாது.கோவப்பட்டால் மாலை மகன்களிடம் இருந்து ஃபோன் வரும், “என்னப்பா, இந்த வயசுல எதுக்கு அம்மாவ அழுக வைக்குறீங்க?” என்று.

பாவம் அவர்களுக்கு தெரியாது அவள் இங்கே என்னை படுத்தும் பாடு. நான் 30வருடங்களுக்கு முன் அப்பாவை பார்த்து இதே கேள்வியை கேட்கும் போது அவர் என்னை ”உனக்கும் காலம் வரும் மகனே” என்பது போல் நக்கலாக பார்த்தார். இப்போது அதே பார்வையை என் மகன்களை நோக்கி நான் பார்க்கிறேன். வருங்காலத்தில் என் பேரனை நோக்கி அவர்கள் இதே பார்வையை பார்ப்பார்கள். இதெல்லாமே ஒரு சைக்கிள் தானே?

”சரி, எல்லாத்தையும் இப்படி அவியலாவே பண்ணணுமா? ஏதாவது பொறிச்சி கிறிச்சி வச்சிருந்தா நல்லாருக்கும்ல?”

“உங்களுக்கு எண்ணெயும் சுத்தமா சேக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காருல்லங்க?”

நாம் போன பிறவியில் செய்த பழிபாவங்கள் தான் இந்த பிறவியில் நோயாகவும், அக்கறை என்னும் பெயரில் நம்மை சுவையாக சாப்பிடக்கூட விடாத பொண்டாட்டியாகவும் வரும். இவள் என்னை கடைசியாக சுவையான இனிப்பான பலகாரங்கள் சாப்பிட விட்டது, இவள் அப்பா இறந்த போது தான். இவள் அழுது கொண்டிருக்கும் கேப்பில் நான் ரெண்டு லட்டை, கார்டூனில் ஜெர்ரி விழுங்குமே அது போல், இவள் அசந்திருக்கும் கணப்பொழுதில் விழுங்கிவிட்டேன். மூச்சு முட்டாமல் தொண்டையில் இறங்கியது என் மாமனார் செய்த புண்ணியம்.

”சரி எண்ணெய் தான் சேக்கக்கூடாது, கொஞ்சம் உப்பு ஒரப்பாவது சேத்து போட்டிருக்கலாம்ல?”

“என்னங்க, ப்ரெஷர் இருக்கும் போது இதெல்லாம் சேக்க முடியுமா? வயசாக வயசாக உப்பு ஒரப்பு எல்லாத்தையும் கொறச்சிக்கிணும்ங்க”

’அப்புறம் ஏன்டீ சோத்த மட்டும் போடுற? அந்த கருமத்தையும் போடுறத நிறுத்திரு’ என்று சொல்லும் அளவுக்கு எனக்கு ரோசம் இல்லை. எல்லாம் இவள் உப்பில்லாமல் வைக்கும் சமையல் தான் காரணம் என நினைக்கிறேன். பேசாமல் சாப்பிட ஆரம்பித்துவிட்டேன். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் காலையிலேயே ஆஃபீஸில் பியூன் மணியை அனுப்பி கால் கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸஸும் சீனி அதிகம் போட்டு ரெண்டு காஃபியும் வாங்கி வரச்சொல்லி வயிறு முட்ட சாப்பிட்டிருந்தேன். ’சார் என்ன சார் இதெல்லாத்தையும் ஒரே ஆளா சாப்பிடிறீங்க?” என அவன் கண் வைத்த காரணத்தினால் அவனுக்கு மட்டும் ரெண்டு சிப்ஸை முறைத்துக்கொண்டு கொடுத்தேன்.


தினமும் நான் ஆஃபிஸில் தின்னும் கேக், அல்வா, முந்திரி, கிரீம் பிஸ்கட், சிப்ஸ் வகைகள், சீனி அதிகம் போட்ட ஜூஸ் ஐட்டங்கள் & டீ காஃபி இதையெல்லாம் நான் சாப்பிடுகிறேன் என தெரிந்தால் என்னை விட அதிகம் பிரஷர் வந்துவிடும் என் ராணிக்கு. நாக்கு நம்மை பார்த்து கேள்வி கேட்கும் போது, டாக்டர், சுகர், பிரஷர், ஹார்ட், உயிர், பொண்டாட்டி, பிள்ளைகள் இது எதைப்பற்றியும் அக்கறை வராது. நாக்கை சந்தோஷப்படுத்திவிட்டால் மனம் தானாக சந்தோஷமாகிவிடும். உடல் ஏதாவது கோளாறு செய்தாலும் டாக்டர் இன்னொரு கார் வாங்கும் அளவுக்கு செலவு செய்து சரி செய்து கொள்ளலாம். ஆனால் நாக்கை மட்டும் எத்தனை கோடி கொடுத்தாலும் கட்டுப்படுத்தகூடாது, இது தான் என் பாலிஸி.

”ஜெயில் கைதிகங்களுக்கு கூட வாரத்துக்கு ரெண்டு தடவ சிக்கன் போடுறாங்களாம், தெரியுமா ஒனக்கு?”

என்னை அவள் திரும்பி முறைக்கும் போது நான் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்துவிட்டேன். கை கழுவ நடக்கும் போது தான் நான் அதை உணர்ந்தேன். என் இடது தோள்பட்டை, புஜம், நடு மார்பில் வலி. தோளிலும் புஜத்திலும் அழுத்தமான வலி, மார்பில் சுறுக்கென முள்ளால் தைப்பது போன்ற வலி.ஒரு சில நொடிகளில் முகமெல்லாம் வியர்க்க ஆரம்பித்துவிட்டது. கை கால்கள் நடுங்கின. எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. 

“என்னங்க, என்ன அங்கேயே நிக்குறீங்க?” - அவள் பேசுவது ஒரு தெளிவில்லாமல் என் காதில் விழுந்தது. மெதுவாக திரும்பி கண்களை சிமிட்டாமல் அவளை பார்த்தவாறு கீழே சரிந்தேன்.

இதோ இப்போது தலைவலி கொடுக்கும் அவளின் “என்னங்க” சத்தத்தோடு ஆம்புலன்ஸில். ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரிக்குள் நுழைகிறது. வேகமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றி ஐ.சி.யூ.விற்கு கொண்டு செல்கிறார்கள். நான் அவளை பார்த்துக்கொண்டே ஸ்ட்ரெச்சரில் பயணம் ஆகிறேன். அவளைப்பார்த்து கையசைக்க எண்ணுகிறேன். வழக்கம் போல் ஆஸ்பத்திரியே அதிரும் அளவிற்கு “என்னங்க” என ஆரம்பித்தாள். கையசைக்கும் முடிவை கைவிட்டு ஸ்ட்ரெச்சரில் வசதியாக சாய்ந்துகொண்டேன்.

டாக்டர் உள்ளே வந்தார். எதெதையோ வைத்து டெஸ்ட் எடுத்தார். என்னை சந்தேகமாக பார்த்தார். “கொஞ்சம் எந்திரிச்சி உக்காருங்க” என்றார்.

“முடியல டாக்டர் புஜம் நெஞ்சு எல்லா பக்கமும் ஒரே வலி”

ப்ரெஷர் டெஸ்ட் செய்து கொண்டே ”மதியம் என்ன சாப்பிட்டிங்க?” என்றார்.

இவள் அவித்து போட்ட அந்த தாவர வகைகளை சொன்னேன். நெற்றியை சுறுக்கி தன் மூளையில் இருக்கும் எம்.பி.பி.எஸ். பாடத்தில் எந்த பக்கத்தையோ புரட்டிக்கொண்டிருந்தார். “எதாவது கிழங்கு, காலிஃப்ளவர், கொண்டை கடலை மாதிரி சாப்பிட்டீங்களா?” என்றார்.

“ஏன் டாக்டர் எங்க பியூன் மணி நீங்க சிப்ஸ் வாங்குற கடையில தான் எனக்கு ஸ்நாக்ஸ் வாங்குனானா?”

“என்னது?”

“இல்ல, டாக்டர் காலையில கொஞ்சமா உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டேன்” என்றேன். அவர் அருகில் இருந்த நர்ஸிடம், “இவரோட வைஃப கூப்பிடுங்க” என்றார்.

”பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.. சிப்ஸ் அதிகமா சாப்பிட்டனால பிரஷர் கொஞ்சம் அதிகமாகி மயக்கம் வந்திருக்கு, வாயுத்தொல்லையும் வந்திருக்கு, அவ்வளவு தான். அத நீங்க ஹார்ட் அட்டாக்னு நெனச்சு பய்ந்துட்டீங்க” என்றார். 

அவர் சொல்வதை நினைத்து சந்தோஷப்படுவதா அல்லது என் மனைவிக்கு சிப்ஸ் மேட்டர் எல்லாம் தெரியப்போவதை நினைத்து வருத்தப்படுவதா? அவள் உள்ளே வந்தாள். “சாருக்கு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, சிப்ஸ்...............” அப்படின்னு அவர் ஆரம்பிக்கும் போது நான் எகிறிக்குதித்து அந்த ஆஸ்பத்திரியை கடந்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தேன், எனக்கு பின்னால் “என்னங்க......................” என்னும் ரயில் வண்டி சதாப்தி வேகத்தில் கோவமாக துரத்தி வந்தது..

கள்ளத்துப்பாக்கி - கவுத்தி போட்டு மிதி..

Sunday, January 6, 2013


இளைய தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கே கண்ணில் விரலை விட்டு ஆட்டம் காட்டி, “துப்பாக்கி ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் எங்கள் படத்தையும் ரிலீஸ் செய்வோம்” என்று தைரியமாக அறிக்கை விட்டவர்களின் படம். இவ்வளவு தூரம் சவால் விடுபவனிடம் கண்டிப்பாக சரக்கும் இல்லாமலா போகும்? என்கிற நப்பாசையில் நான் தியேட்டரை மிதித்தேன். அது போக இது எங்கள் ஊரை சுற்றியிருக்கும் கிராமங்களில் படமாக்கப்பட்ட படம். ”பூ” மாதிரி தரமாக இருக்கும் என ஒரு எதிர்பார்ப்பு. எங்கள் ஊரில் முன்னணி தொழிலதிபர் இருவருக்கும் இந்த படத்தில் பங்கு இருப்பதாக சொன்னார்கள். இது எல்லாம் படம் பார்க்க தூண்டின. இன்று மாலை காட்சிக்கு வரலாற்று சிறப்பு மிக்க இந்த படத்துக்கு சென்றேன்.


சிவகாசி அருகில் இருக்கும் ஒரு கிராம பள்ளி (மேனிலை பள்ளி என்கிறார்கள், மொத்தமே 3ஆசிரியர்கள், 40 மாணவர்கள் தான் இருந்தார்கள்), அங்கிருக்கும் ஐந்து தறுதலைகள், ஒரு P.T வாத்தியார் இவர்களுக்குள் நடக்கும் சண்டை, இது தான் முதல் பாதி. இந்த ஐந்து தறுதலைகளும் ஆசிரியர் மேல் பொய்ப்புகார் கொடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய வைப்பது, ஆசிரியரின் பெண்ணை நடு ரோட்டில் வம்புக்கிழுத்து “நாங்க பஞ்ச பாண்டவரு, எங்களுக்கு நீ பாஞ்சாலியா இரு” என்பது போல் இதிகாச கருத்துள்ள வசனம் பேசுவது, கையில் துப்பாக்கியோடு பள்ளிக்கு வருவது என்று யதார்த்த சினிமாவின் கதைநாயர்களாக வாழ்ந்துள்ளனர்.  இப்படி கருமம் பிடித்த மாதிரி கதை செல்கிறது. இது போன்ற பள்ளி மாணவர்கள் உலகில் எங்கிருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆரம்பத்தில் டைட்டில் கார்டு போடும் போது இவர்கள் ஐவரையும் முறையே, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித்தோடு கம்பேர் செய்து எழுத்து போடுகிறார்கள். அதாவது விஜய்யின் பேரை மட்டும் சொல்லாமல் அசிங்கப்படுத்துகிறார்களாம். 


இடைவேளையில் பி.டி வாத்தியாரின் பெண்ணையும் இந்த தறுதலைகளையும் ஒரு முகமூடி கும்பல் கடத்தி செல்கிறது. சரி, செகண்ட் ஆஃப்ல எதாவது சொல்லுவாய்ங்கன்னு பாத்தா ஒரு சொத்த காரணம். ஒரு முக்கிய கள்ள துப்பாக்கிய இந்த தறுதலைகள் சென்னை டூர் வந்த போது அந்த கும்பலிடம் இருந்து தூக்கி சென்றுவிட்டதாம். இவர்களை கண்டுபிடித்து மீண்டும் துப்பாக்கியை வாங்க அந்த கும்பல் வருகிறது. கடைசியில் வில்லனை அழித்து தறுதலைகள் தப்பிக்கின்றன. பி.டி. யின் மகள் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள்.. பி.டி. பைத்தியம் ஆகிறார், நாம் நம் குடும்பத்திற்கு இது போன்ற படங்களில் இருந்து தப்பிக்க ஒரு இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கிறோம்.. இவ்வளவு தான் படம்.


ஒரு படம் என்பது அந்த திரையில் ஏதாவது ஒரு இடத்தில் நம்மை பார்க்க வைக்க வேண்டும். அல்லது “இப்படியும் நடக்குமா?” என்று வாய் பிளந்து சீட் நுனியில் அமர வைக்க வேண்டும். நமக்கும் அந்த திரைக்கும் இருக்கும் இடைவெளி எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றி முடிவாகும். ஆனால் படத்தின் ’ஆ...ரம்பம்’ முதல் கடைசி வரை, “எப்படா முடிச்சி தொலைவீங்க?” என்று எரிச்சல் பட வைத்த ஒரே படம் இது தான் எனக்கு. குடுத்த காசு வீணாகிவிடக்கூடதே என்று கடைசி வரை அமைதியாக பார்த்தேன். இல்லையென்றால் அரை மணி நேரம் கூட உட்கார்ந்திருக்க மாட்டேன். ஜாலியான பள்ளி மாணவர்களை காட்டுகிறேன் பேர்வழி என்று, குண்டர் சட்டத்தில் கைதாக வேண்டிய ரவுடிகளை ஹீரோவாக காட்டியிருப்பதிலேயே படத்தின் தோல்வி முடிவாகிவிட்டது. படத்தில் ஓரளவு உருப்படியாக நடித்திருப்பவர் பி.டி. வாத்தியார் தான்.




சம்பந்தமே இல்லாமல் கடைசியில் ஏன் ஹீரோயினை கொல்கிறார்கள்? பி.டி. ஏன் லூசாகிறது? ஒரு கள்ளத்துப்பாக்கிக்கு எதுக்குய்யா இவ்வளவு கஷ்டப்படணும்? என எதையுமே தெளிவாக சொல்லாமல் ஒரு லாங் ஷாட்டில் "A Film by லோகியாஸ்” என்று முடிக்கிறார்கள். அந்த லோகியாஸ் மட்டும் கையில் கிடைத்தால்??????????????? காஞ்சிபுரம், சென்னை, என்று கதை எங்கெங்கோ நடப்பதாக காட்டினாலும் இடங்கள் எல்லாம் சிவகாசியை சுற்றியே இருக்கின்றன. க்ளைமேக்ஸ் ஃபைட் (அதை நீங்கள் பார்த்து ஃபைட் என்று ஒத்துக்கொண்டால்) சென்னையில் நடக்கவேண்டியது, ஆனால் சிவகாசியில் இருக்கும் ஏதோ ஒரு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரியில் நடக்கிறது. பின்னணி இசை காதில் டமாரம், கேமரா - பேரரசு படம் மாதிரி ஸ்வைங் ஸ்வைங் என்று சுற்றி வருகிறது, ஒரு சில சேஸிங் காட்சிகளை தவிர மஹா மட்டம். பாடல்கள் என்று என்னவோ வருகிறது. கிராமத்து பள்ளி மாணவர்கள் சென்னை சாலைகளில் கார் ஓட்டுகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள். நீங்கள் பொறுமையாக உயிரோடு இருந்தால் இரண்டாம் பாதியில் இந்த ஆச்சரியமான காட்சிகளை பார்க்கலாம்.


இயக்குனரையோ நடிகர்களையோ நடிகையையோ பாராட்டும் இடம் என்று எதுவும் இல்லை. ஒரு வில்லன் இருக்கிறான், அவன் சில வருடங்கள் முன்பு பசுபதியும் தனுஷும் ‘ஏஏஏஏஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்” என்று கத்திக்கொண்டிருந்தார்களே அதே போல் சவுண்ட் மட்டும் விடுகிறான். வில்லன் குரூப்பில் யார் மெயின் வில்லன் யார் சைடு வில்லன் என்பது க்ளைமேக்ஸ் வரை குழப்பமாக இருக்கிறது. யார்யாரோ வருகிறார்கள், பேசுகிறார்கள், போகிறார்கள். க்ளைமேக்ஸில் ஹீரோயின் தன் குடும்பத்து உறுப்பினர்கள் ஒவ்விருவரிடமும் வந்து “கன்னத்துல குத்துங்க கன்னத்துல குத்துங்க’ என்று அழும் போது நமக்கு வரும் கடுப்பில் கத்தியை எடுத்து எல்லோரையும் ஓங்கி குத்த வேண்டும் போல் இருக்கும்.




இங்கு நான் போட்டிருக்கும் இந்த ஸ்டில்களில் இருக்கும் தரம் கூட இந்த படத்தில் இல்லை. விஜய்யின் துப்பாக்கியை வைத்து தங்கள் படத்துக்கு நன்றாக விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எங்கள் ஊர் முதலாளியின் சப்போர்ட் வேறு. ஒரு நல்ல தொழிலதிபருக்கு ஏன் இது போன்ற வேண்டாத வேலை? படம் மொக்கையாக இருந்ததை கூட தாங்கிக்கொள்ளலாம், ஆனால் படம் சம்பந்தப்பட்ட எவனோ தியேட்டருக்கு சில அல்லக்கைகளை கூட்டி வந்து, சம்பந்தமே இல்லாமல் கை தட்ட வைத்ததும், சவுண்ட் விட வைத்ததும், விசில் அடிக்க வைத்ததும் தான் என்னை பயங்கர டென்சன் ஆக்கியது.. இனிமேல் எவனாவது எங்க ஊரு பக்கம் படம் எடுக்க வந்தீங்க, மவனே பிடிச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்ருவேன்..

நல்ல வளர்ப்பு = பாலியல் வன்முறை ஒழிப்பு..



நம் பேப்பர்காரர்களுக்கும் டிவிக்காரர்களுக்கும் எப்போதும் பக்கத்தை நிரப்ப, நேரத்தை கடத்த ஏதாவது ஒன்று கிடைத்துவிடுகிறது. தேர்தல், தேர்தல் முடிந்தால் டெங்கு, அது முடிந்தால் ஜாதி கலவரம், பின் கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ண டைம் கொடுக்காமல் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் வன்முறைகள், அதுபோக ஆல்-டைம் அட்டெண்டஸ் கொடுப்பதற்கு இருக்கிறது நமது மின்சார பிரச்சனை. ஆனால் அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு இதைப்பற்றி எல்லாம் செய்தியும் விவாதமும் போடுவது பக்கத்தை நிரப்பவும், தங்கள் சர்குலேஷனை கூட்டுவதற்காகவும் தானே அன்றி ஒருவருக்கும் சமுதாய அக்கறையோ கவலையோ இல்லை. அவர்கள் தரும் ஒவ்வொரு செய்திகளிலும் கூட, “இன்னும் அடுத்து எங்கே இது மாதிரி நடக்கும்” என்கிற எதிர்பார்ப்பும் அசிங்கமான தேடலும் தான் இருக்கின்றன. பொறுப்போடு யாரும் அணுகுவதில்லை. சரி, பத்திரிகை தொலைக்காட்சியை குற்றம் சொல்ல நான் இந்த பதிவை எழுத வரவில்லை. அவர்கள் வியாபாரிகள், அப்படித்தான் இருப்பார்கள்.




நாம், ஒரு குடிமகனாக, நம் வீட்டில் நம்முடன் பிறந்திருக்கும் சகோதரிகளுக்காக, நம் காதலிக்காக, அம்மாவுக்காக, மனைவிக்காக என்ன செய்ய வேண்டும்? என்பதை எனக்கு தெரிந்த பாமர வழியில் சொல்லலாம் என்றிருக்கிறேன். கண்டிப்பாக உங்களுடைய வழியில் உங்களுக்கு தெரியும் தீர்வுகளையும், என்னுடைய கருத்துக்கு இருக்கும் எதிர்கருத்தையும் பதியுங்கள். எங்கோ டில்லியிலோ புதுவையிலோ நடப்பது அது அல்ல இது, நாம் வீட்டில் இல்லாத போது நமக்கு தெரியாமல், நம் உறவினரோ அல்லது நண்பர் மூலமாகவோ நம் வீட்டு குழந்தைகளுக்கு கூட நடக்கலாம், நடக்கிறது. இது தான் இன்றைய கலாச்சார சூழல்.




ஒரு சின்ன கணக்கெடுப்பை பார்த்துவிட்டு கட்டுரைக்குள்ளே செல்லலாம். 70% பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலின வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு 34 நிமிடத்திற்கு ஒரு வன்புணர்வு நடக்கிறது, 16நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பாலியல் வன்முறையோ அத்துமீறலோ நடக்கிறது, ஒவ்வொரு 12 நிமிடத்திலும் ஒரு பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள். இதெல்லாம் வீட்டிற்கு வெளியில் தான் நடக்கிறது, அதனால் தான் பெண்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம், வேலைக்கு செல்ல வேண்டாம் என சொல்கிறோம் என பேசுபவர்கள் கொஞ்சம் பொறுக்கவும்.




வரதட்சணை கொடுமையால் 78நிமிடங்களுக்கு ஒரு சாவு நடக்கிறது,  45%மணமான பெண்கள் அடித்து உதைக்கப்படுகிறார்கள், அப்படி அடித்து உதைக்கப்படுபவர்களில் 75% பெண்கள் தற்கொலைக்கு முயல்கிறார்கள், 55% பெண்கள் அடியும் உதையும் திருமண வாழ்வில் நடக்கும் சாதாரண விசயம் தான் என்று நம்புகிறார்கள், 77% ஆண்கள் மனைவி தாங்கள் சொல்வதை கேட்காத போது தங்கள் ஆண்மையே கேலிப்பொருளாக ஆக்கப்படுவதாக நினைக்கிறார்கள். பெண்களை தெய்வம் என்று போற்றும் நாம் தான் தெய்வத்தை கருவறைக்குள் அடைத்து வைப்பதை போல் பெண்களையும் வீட்டிற்குள் இருக்க சொல்கிறோம். அப்போது தான் வெளியில் இருக்கும் ஆபத்து அவர்களை அணுகாதாம். வீட்டிலேயே இவ்வளவு கஷ்டங்களுக்கு ஆட்படும் அவளுக்கு வெளியில் வேறு தனி வன்முறை வேண்டுமா? இது தான் நம் குடும்ப வாழ்க்கையின் நம் கலாச்சாரத்தின் லட்சணம்.




இந்த கணக்கெடுப்புகள் எல்லாம் ஏதோ ஒரு வித தைரியத்தில் வீட்டில் யாரும் யாரும் இல்லாத போது சில பெண்கள் சொன்னதாக இருக்கும். இன்னும் சொல்லாமல் பயந்து போய், பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பெண்களை எல்லாம் சேர்த்தால் நாம் எளிதாக நூற்றுக்கு நூறை எட்டி விடலாம். படிப்பில் மட்டும் அல்ல, நம்மிடம் அடிபட்டு மிதிபட்டு காலத்தை கழிப்பதிலும் பெண்கள் என்றுமே முன்னோடி தான். இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி இன்னொரு ஆணின் பால் அன்பு வைத்திருக்கிறார் என்பதையே பொறுத்துக்கொள்ளாத ஆண்கள் தான் ’முதல் மரியாதை’சிவாஜி காதலை கை தட்டி ரசிக்கிறார்கள்.




ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து உறவினர்கள் வந்து குசலம் விசாரித்து “ச்சோச்சோச்சோ, பொம்பள புள்ளையா பொறந்திருச்சா?” என்று சொல்லும் போதே டைட்டில் கார்டு போட்டு ஆரம்பித்துவிடுகிறது பெண்களின் மீது நாம் செலுத்தும் வன்முறை. அவள் வளரும் போது உறவினர்கள் என்னும் பெயரில் வரும் காமுகர்களில் இருந்து, பள்ளியில் ஆசிரியர்கள், உடன் வேலை செய்பவன் என்று தெரிந்தவர்களும், சாலையில் செல்லும் போதும், பேருந்திலும், மின்சார ரயிலிலும் நசுங்கும் போது தெரியாதவனும் அவளை ஒவ்வொரு விதத்திலும் இம்சிக்கிறான். பொறுபான ஆண்கள் இதற்கு சொல்லும் காரணம் என்ன தெரியுமா? பெண் மோசமாக ஆடை உடுத்துகிறாள், அவள் இரவில் தனியாக வருகிறாள், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? என்பது போன்ற சூப்பரான கருத்தாழமிக்க கேள்விகள்.

இப்போது இவ்வளவு வக்கனையாக பேசும் நானும் ஒன்றும் யோக்கியன் இல்லை. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன் கலாச்சாரம் என்னும் பெயரில் நான் எழுதிய கட்டுரையை படித்து பாருங்கள், நான் எப்படி இருந்திருப்பேன் என்று புரியும். நானும் பெண்களை மட்டுமே இது போன்ற வன்முறைகளுக்கு குற்றம் சொன்னவன் தான். ‘ஆண் என்றுமே பெண்ணை விட ஒசத்தி தான்’ என்று என் அம்மா, சகோதரி, தோழி என்று எல்லோரிடமும் திமிராக பேசியவன் தான்.  தோழி ஒருவர் 2012ன் முடிவின் ஒரு அர்த்த ராத்திரியில் தன் தூக்கத்தையும் என் தூக்கத்தையும் கெடுத்து ’ஆண்கள் தங்களை அறியாமலே இது போன்ற பெண்ணடிமைத்தனத்தை சார்ந்து வளர்க்கப்பட்டுவிட்டனர்’ என்பதை தெளிவாக புரிய வைத்தார்.




உண்மை தானே? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், ஆணாகிய நாம் வளர்ந்த பின் நண்பர்களோடு எங்கும் போகலாம், எப்போதும் வரலாம், இரவு சினிமாவுக்கு செல்லலாம், ஓட்டலில் தனியாக சென்று உண்ணலாம். ஆனால் இதையே ஒரு பெண் செய்தால்? நம் அம்மாவே அவளை, “ச்சே என்ன பொம்பள இவ?” என்று ஏசுவார். இது தான் இன்றைய சூழல். நான் ஒரு ஆடை எடுக்க வேண்டுமானால் அது எனக்கு பிடித்திருக்கிறதா, என் நண்பர்களுக்கு பிடித்திருக்கிறதா என்று பார்த்தால் போதும். ஆனால் ஒரு பெண்? அவள் ஊரில் இருக்கும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணை உறுத்தாத அளவுக்கு அவள் ஆடை உடுத்த வேண்டுமாம், சொல்கிறார்கள் நம் புரட்சியாளர்கள்.




ஒரு ஆணுக்கு கவர்ச்சியாக ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை பார்த்தால் உணர்ச்சி பொங்குகிறதாம் அதனால் அவளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்குகிறானாம். ஆனால் நான் பார்த்த வரை கேள்விப்பட்ட வரை எவனும் கவர்ச்சியாக (கவர்ச்சிக்கு அளவுகோல் என்ன?) ஆடை உடுத்தியிருக்கும் பெண்ணை நோண்டியதில்லை. தான் உண்டு தன்  வேலை உண்டு என்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் அலுவலகத்திற்கும் செல்லும் பெண்களை தான் தொந்தரவு செய்கிறான். பெண் என்றால் அவனை பொறுத்தவரை கறிக்கடையில் தொங்கும் ஒரு மாமிச துண்டு, அவ்வளவு தான். ஒரு துண்டு கறிக்காக காத்திருக்கும் வெறி நாயும், ஒரு அல்ப வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆணும் ஒன்று தான்.




இது போன்ற குரூரங்கள் நடக்காமல் இருக்க நம் அறிவாளிகள் சொல்லும் தீர்வுகளை பாருங்கள், ‘பெண்கள் இரவில் வெளியில் நடமாடக்கூடாது”, ”இறுக்கமான அங்கங்கள் வெளிப்படுத்தும் ஆடை அணியக்கூடாது” என்பது போன்ற புரட்சிகரமான கருத்துக்களை சொல்கிறார்கள். அதாவது, உங்கள் வீட்டில் கொசு இருந்தால் நீங்கள் வீட்டிற்கே செல்லக்கூடாது என்பது தான் இவர்களின் தீர்வு. வசதியாக சிறு மாணவிகளும், வீட்டில் இருக்கும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு ஆட்படுவதை பற்றி இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். திறந்தால், தாங்கள் மறைக்க முயலும் ஆண்களின் லட்சணம் தெரிந்துவிடுமே?




பாலியல் வன்முறைகளுக்கு முழு  முதல் காரணம் ஆண்கள் தான். தில்லியிலும், பாண்டியிலும், இன்னும் செய்தியில் சொல்லப்படாத இண்டு இடுக்குகளிலும் நடக்கும் வன்முறை யாரோ ஒரு சில ஆண்களுக்கும் சில பாவப்பட்ட பெண்களுக்கும் இடைப்பட்டவை அல்ல. அவை நம் வளர்ப்புமுறை நம்மிடம் கேட்கும் கேள்விகள். கொஞ்சம் யோசியுங்கள், எந்த பெண்ணை ஒரு சில வயதுக்கு பிறகு ஆண்களிடம் சகஜமாக பேச அனுமதித்துள்ளோம்? இன்னும் சில பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால், அபராதம், அபாலஜி, என்று அல்பத்தனமாய் நடந்துகொள்கிறார்கள். கேட்டால் கல்லூரியின் ஒழுக்கத்திற்காக செய்கிறார்களாம். அவர்கள் செய்வது ஒரு தற்காலிக தீர்வு. அழுத்தி மூடி மூடி வைத்தால் எங்கோ ஒரு பக்கம் திடீர் வெடிப்பு வரும் என்பது இயற்கை. தடுத்தால், ‘ஏன்?” என கேள்வி கேட்கும் வயது. வகுப்பில் ஆசிரியர் முன் ஒழுக்கமாக நடிக்கத்தான் இந்த மாதிரி ஒழுக்கமான பாடசாலைகள் கற்றுத்தருகின்றன. வெளியில், கூட்டத்திலோ இருட்டிலோ, அவன் அந்த அழுத்தத்தையெல்லாம் அசிங்கமாக பெண்களிடம் காட்டத்தான் செய்வான்.



பாலியல் வன்முறை குற்றங்கள் குறைய வேண்டுமானால் முதலில் பள்ளிகளும் கல்லூரிகளும் அதை விட முக்கியமாக வீடுகளும் மாற வேண்டும். கெட்ட வார்த்தைகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தி இருக்கும் சமூகத்தில், வீட்டில் அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசும் போது தானாகவே பெண்களை பற்றி மட்டமான எண்ணம் தான் வரும். “பொம்பள பிள்ள அடக்க ஒடுக்கமா இரு”, “இப்படியே ஒரு வேல செய்யாம இரு, நாளைக்கு வரப்போறவன் இடிப்பான்” என்று அன்றாடம் வீட்டில் பேசும் வார்த்தைகள் தான் இவை. ஆனால் வீட்டில் அவளுடைய தம்பிக்கோ அண்ணனுக்கோ இதை கேட்கும் போதே, பெண் என்பவள் தனக்கு கீழ் தான், தனக்கு சேவகம் செய்யத்தான் என்கிற எண்ணம் வந்துவிடும். பெற்றோர் பிள்ளைகளை பேதம் இல்லாமல் வளர்க்க வேண்டும். ஒழுக்கம் என்பதை ஆண்களுக்கும் போதிக்க வேண்டும். ஒரு பெண் என்பவள் தன்னை போல் ஒரு மனித ஜென்மம் என்பதை புரிய வைக்க வேண்டும். எந்த ஒரு மாற்றம் என்றாலும் அது தன்னிடம் இருந்தும் தன் வீட்டில் இருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். அது போல் தான் இதுவும். ஒரு பெண்ணை மதிக்க, அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள, அவளிடம் எப்படி பழக வேண்டும் என சிறு வயதில் இருந்தே ஆண்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்நியரோ, உறவினரோ, நண்பரோ யாராக இருந்தாலும் அவர்களை நம் குழந்தைகளோடு தனியாக இருக்க அனுமதிக்கவே கூடாது. பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும், தவறான தொடுதல்கள் இருந்தால் நம்மிடம் உடனே சொல்லச்சொல்லி.




அடுத்ததாக பள்ளி. பள்ளி நிர்வாகங்கள் முதலில் ஆண் பெண் என பிரிக்காமல் அனைவரையும் மாணவர்கள் என்று மட்டும் பார்த்தால் தான், விடலைக்காதல், ஆசிட் ஊற்றுவது, வீட்டிற்கு அசிங்கமாக மொட்டைக்கடிதாசி போடுவது, ஃபோனில் டார்ச்சர் பண்ணுவது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் போகும். ஆண் பெண்ணை சகஜமாக பாலின வித்தியாசம் பார்க்காமல் வளர்க்க வேண்டும். இன்றைய சீர்கெட்ட சமுதாய சூழலில் இது கொஞ்சம் கடினம் தான் என்றாலும், வேறு வழி இல்லை. இதை செய்தால் தான் ஊர் உருப்படும். கல்விக்கூடங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், “மாணவன் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமா? அல்லது நல்லவனாக இருக்க வேண்டுமா?”. ஒருவனை நல்லவனாக உருவாக்குங்கள், அவனுக்குள் இருக்கும் மிருகத்தை குச்சியால் காயப்படுத்திக்கொண்டே இருக்காமல் அதை அவனிடம் இருந்து அகற்றுங்கள்.



வீட்டிலும் பள்ளியிலும் ஆண் பெண் உறவு சரியாக இருந்தால் தான் சமூகத்தில் பாலியல் வன்முறைகள் மறையும். அதற்கு முதலில் இப்போதிருக்கும் சினிமாவை குழந்தைகள் பார்க்காமல் இருக்க வேண்டும்.. ஏனென்றால் சினிமாக்காரர்களை ”இப்படி எடுக்காதே, சமுதாயம் நாசமாகிறது” என்று சொன்னால் அவர்கள் ஒவ்வொரு பத்திரிகையாக, ஒவ்வொரு டிவி சேனலாக வந்து அளந்துவிட்டுக்கொண்டிருப்பார்கள். சில நடிகைகளே இப்படி பேசுவது தான் கொடூர காமெடி. இதில் “சென்ஸார் தான் இருக்கிறதே?” என லாஜிக்காக கேள்வி வேறு. அவர்கள், தாங்கள் கறுப்பு நிற ஸீ த்ரூ சேலை அணிந்து மழையில் நனைந்து ஆடியதை, கேமரா தங்கள் வளைவுகளை அளவெடுத்ததை, ஹீரோ ஆம்லெட், பம்பரம் விட்டதை என எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள். பெண்கள் என்றாலே கோழிக்கறி கடையில் ரெக்கை விரித்து தொங்க விடப்பட்டிருக்கும் சதைகள் தான் என சித்தரிப்பதில் நம் சினிமாவிற்கு தான் அதிக பங்கு. சினிமாக்காரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஒழுங்காக படம் எடுக்க வேண்டும். அல்லது, தன் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என நினைக்கும் பெற்றோர் குழந்தைகளை படம் பார்க்காமல் தடுக்க வேண்டும். சுய ஒழுக்கம் என்பது எல்லோருக்கும் வர வேண்டும். அது வளர்ப்பினால் தான் முடியும். ஒரு பெண்ணை தவறாக பார்க்கும் போது எந்த இடத்தில் தன் குடும்பத்தினரை நினைத்துப்பார்த்தால் தெரியும், நாம் எவ்வளவு அசிங்கமான காரியம் செய்கிறோம் என்று.


என்னை பொறுத்தவரை இது தான் தீர்வு. நான் சொல்லும் தீர்வெல்லாம் உடனே நடக்க சாத்தியமில்லை. இன்னும் குறைந்தது பத்தாண்டுகள் ஆகும். வீட்டில் பெற்றவர்கள் முதலில் குழந்தை வளர்ப்பு பற்றி புரிந்துகொள்ள வேண்டும். சுயஒழுக்கத்தை, ஆண் பெண் சமம் என்பதை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும், கல்லூரி காலம் முழுதும் அவர்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சினிமா, அதை விடுங்கள், நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்பதை சினிமாக்காரர்கள் தீர்மானிக்காத அளவுக்கு நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போதைக்கு சினிமாக்காரர்களுக்கு பொறுப்பு வராது.


இனியும் இது ஆணின் தவறு பெண்ணின் தவறு, என்று மாற்றி மாற்றி குற்றம் சொல்லாமல், இனி தவறு நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து நம் வளர்ப்பு முறைகளில் வீட்டிலும், வெளியிலும் மாற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் பாலியல் வன்முறை என்பது முற்றிலும் குறைந்து விடும் என்பது தான் என் கருத்து. நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டங்களில் இது சம்பந்தமான உங்கள் கருத்துக்களை இடுங்கள்.
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One