புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி.... - சிறுகதை

Friday, April 19, 2013

கையில புது வாட்ச்ச மாட்டிட்டு, ‘நான் கன்னி கழியாமத்தான் இருக்கேன்’ என தன் வாசனையால் ஊருக்கு சேதி சொல்லும் புது சட்டையை அணிந்து கொண்டு, முகம் பூரா சந்தோசத்தோட எங்கேயோ கிளம்பிட்டு இருக்கானே, அவன் தான் நம்ம விஸ்வநாதன். பய அவ்வளவு சந்தோசத்தோட எங்க கெளம்புறான்னு தான கேக்குறீங்க? பொண்ணு பாக்க.. என்னது யாருக்கா? அட அவனுக்கு தாங்க.. வயசு தான் 37 ஆகுது.. ஆனா இன்னும் யூத்து தான்.. இது வரைக்கும் 47 பொண்ணுங்கள பாத்துட்டான்.. இப்ப 48வது.. 

இவனுக்கு இது வரை பார்த்த நாற்பத்தி ஏழும் ஏன் பிடிக்காமல் போயின என்பது அவனுக்கும் அவன் குல தெய்வம் குன்று மலை சாஸ்தாவிற்கு மட்டுமே வெளிச்சம். மணல் கயிறு எஸ்.வீ.சேகர் அளவுக்கு இல்லையென்றாலும் இவனுக்கும் ஒரு சில கண்டிசன்கள் உண்டு..

1. பொண்ணுக்கு நீளமா கூந்தல் இருக்கணும்..
2. பொண்ணு UG டிகிரி மட்டுந்தான் படிச்சிருக்கணும்.. அதுவும் ஏதாவது லோக்கல் கல்லூரியில் தான் படித்திருக்கணும்.. யுனிவர்சிட்டியிலோ ஹாஸ்டலிலோ தங்கி படித்திருந்தால், இமிடியேட் ரிஜெக்டட் தான்..
3. வேலைக்கு போகக்கூடாது.. அப்படியே வேலைக்கு தான் போவேன் என்று அடம்பிடித்தால் டீச்சர் வேலைக்கு மட்டும் போகலாம்.. இந்த டீச்சர் வேலைக்காக தனது ரெண்டாவது கண்டிசனின் முதல் பாயிண்டில் UG டிகிரி+B.Ed என்று amendment செய்யப்பட்டது..
4. அவளுக்கு சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.. விளையாட்டை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.. ஏனென்றால் இவனுக்கு விளையாட்டு பற்றி சுத்தமாக தெரியாது..
5. ஃபேஸ்புக் ப்ரொஃபைல் இருக்கலாம்.. ஆனால் உண்மையான படம் அதில் இருக்க கூடாது.. ஏதாவது கார்டூன், அனிமேட்டட் தேவதை, பூப்போட்ட கோலம் என்று தான் ப்ரொஃபைல் படம் இருக்க வேண்டும்.
6. ஒரு வேளை பெண்ணை பிடித்து கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டால் கல்யாணத்திற்கு அவளின் பள்ளி, கல்லூரி தோழர்கள் ஒருத்தனும் வரக்கூடாது..

இந்த கண்டிசன்களில் ஒன்று குறைந்தாலும் பெண்ணின் பெற்றோரில் இருந்து அவர்கள் வீட்டு வேலைக்காரி, ஒரு மூலையில் கம்மென்று படுத்திருக்கும் நாய், துடைக்காமல் இருக்கும் பைக், உப்பு கம்மியாக போட்ட வாழைக்காய் பஜ்ஜி, தண்ணீர் அதிகம் கலந்த டீ வரை அனைத்தையும் பிரித்து மேய்ந்து ஏளனம் செய்துவிட்டு கிளம்பிவிடுவான். இவன் ஏரியாவில் இவனால் ரிஜெக்ட் செய்யப்படாத பெண்களே இல்லை. இவன் வந்தாலே தெருவில் ஒவ்வொருவரும் கரித்துக்கொட்டி தங்கள் வீட்டு கதவை மூடிக்கொள்வார்கள். ஒரு பெண்ணை வேண்டாம் என சொல்வதை ஒரு கெத்தாக நினைத்துக்கொண்டிருப்பான் போல.. ஆனாலும் அவன் மூளைக்கு லேசாக இப்போது தான் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. தன் அனைத்து கண்டிசனுக்கும் ஒத்து வரும் பெண்ணாக இவன் தேடித்தேடி, திருப்தியில்லாமல் 25 பெண்களை ரிஜக்ட் செய்யும் போது தான் புரிந்தது தன் கண்டிசன்களின் லட்சணம் பற்றியும் தான் செய்யும் அட்டூழியங்கள் பற்றியும்.. இனியும் பெண் கிடைக்க வேண்டுமானால்  தன்னுடைய கண்டிசன்கள் ஒவ்வொன்றையாக தியாகம் செய்யதால் தான் முடியும் என நினைத்து அந்த கடினமான முடிவை எடுத்தான்.

ஆம் தன் கண்டிசன் அனைத்தையும் விஸ்வநாதன் நீக்கிக்கொண்டான். ஆனாலும் அவனால் நீள கூந்தல் கண்டிசனை மட்டும் தியாகம் செய்யவே முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. தன் மண்டை கிளார் அடிக்க ஆரம்பித்தவுடன் அந்த கண்டிசனையும் வேறு வழியில்லாமல் தியாகம் செய்து விட்டான். இப்படி தியாகம் செய்து தியாகம் செய்து இன்று அவன் தலையில் முடி, முகத்தில் பொலிவு, வயதில் இளமை என்றும் எல்லாமே தியாகமானாலும், 37வயசிலும் முழு மூச்சோடு பெண் தேடுகிறான். கண்டிசன் இருந்த போது  வயது இருந்தது.. இப்போது கண்டிசன் இல்லை.. வயதும் இல்லை.. அது போக இவன் ஏற்கனவே பெண் பார்த்த வீடுகளின் கணக்கு கிட்டத்தட்ட அரை சதத்தை நெருங்குவதால் ஊரில் இவனை பற்றி, கல்யாண வயதில் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பலருக்கும் தெரிந்திருந்தது.. தரகரிடமே ’அந்த தெக்குத்தெரு விஸ்வநாதன் பய ஜாதகம்னா வேண்டாம்’ என இவனை பார்க்காமலே ஒதுக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தான் என்றால் பய என்ன மாதிரி அட்ராசிட்டி பண்ணிருப்பான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க..



 இவன் ஒவ்வொரு காரணமாக சொல்லி பெண்களை மறுத்த காரணம் போய், இன்று பெண்கள் இவனை ஒவ்வொரு காரணம் சொல்லி மறுக்கிறார்கள்.. அந்த காரணங்களை எல்லாம் கேட்டால் நமக்கே சிரிப்பாக வரும், இதையெல்லாம் சொல்லி மறுப்பார்களா என்று.. ஒரு பெண், ‘மாப்ளை ரொம்ப வெள்ளையா இருக்காரு’னு சொல்லி மறுத்திருக்கு.. எனக்கு அந்த பெண்ணை பார்த்து கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்ல ஆசை.. நான் முதல்வரனால் பீச்சில் அவளுக்கு ஒரு சிலை வைக்கவும் என் டைரியில் குறித்துக்கொண்டேன். என்னை பல முறை கறுப்பு என கிண்டல் செய்தவனுக்கு இப்படி ஒரு தண்டனை கொடுத்த அந்த பெண் தான் மங்கையர் குல திலகம். இவனுக்கு ஒழுங்காக இன் பண்ணி பெல்ட் மாட்ட தெரியாது.. அதை கூட காரணமாக சொல்லி கழட்டி விட்டனர் சில பெண்கள். ‘மாப்ள எந்த ஸ்போர்ட்ஸ்லயும் இல்ல’.. ‘மாப்ள பல சரக்கு கடை வ்ச்சிருக்காரு’.. ‘மாப்ள ஒரு மாரி மொறச்சி பாக்குறாரு, பார்வையே சரியில்ல’.. ‘மாப்ள மூக்க கொடஞ்சுக்கிட்டே இருக்காரு, அறுவெறுப்பா இருக்கு’.. ‘மாப்ள சிரிச்சா பயமா இருக்கு’.. இதெல்லாம் அவனை மறுத்த பெண்கள் சொன்ன காரணம்.. 

இவன் இப்படி ஒவ்வொருத்தியும் தன்னை ரிஜெக்ட் செய்தவுடன் என்னிடம் தான் புலம்புவான்.. “டேய் மாப்ள, இந்த பொம்பளைங்கலாம் இப்ப என்னமா கண்டிசன் போடுறாளுகடா? நானும் ஒரு காலத்துல கண்டிசன் போட்டவன் தான்.. இப்ப எப்படி அமைதியா இருக்கேன்? நான் கண்டிசன் போட்டா தாங்க மாட்டாளுகடா இவளுக.. கண்டிசன் போட்ட என் கதி தான் இவளுகளுக்கும் கூடிய சீக்கிரம் வரும் மாப்ள.. நீ வேனா பாரேன்” என் புலம்பிக்கொண்டிருப்பான்.. சரி சரி இப்ப 48வது பொண்ண பாக்க போறான்.. அபசகுணமா பழைய விசய்ங்கள பத்தி எதுக்கு பேசிக்கிட்டு? பயலுக்கு இப்பயாவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்...


ரெண்டு நாள் கழிந்தன..

”டேய் மாப்ள இன்னைக்கு ஒரு பொண்ணோட பயோடேட்டா வந்துச்சிடா.. சூப்பர் பொண்ணுடா” ஃபோனில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான். குரல் மட்டுமே கேட்டாலும், அங்கு அவன் வீட்டில் வாய் முழுக்க பல்லாக இளித்துக்கொண்டே பேசுவது இங்கு என் ஃபோனில் தெரிந்தது. சிரிக்கலாம் அதுக்காக ஒரு மனுசன் இவ்வளவு கேவலமாவா சிரிப்பான்? ஏதோ வரன் ஃபோட்டோவை பார்த்து வழிந்துகொண்டிருக்கிறான். எவ்வளவு அசிங்கப்பட்டாலும் விடாமல் முயற்சி செய்கிற இவனை பற்றி எங்கள் கல்லூரியில் ஒரு கேஸ் ஸ்டடி வைக்கலாமா என்று கூட பல முறை யோசித்திருக்கிறேன்.

“டேய் பொண்ணு பாத்தத பெருமையா சொல்லி சந்தோசப்படுற வயசாடா ஒனக்கு? இந்நியாரம் உனக்கு ரெண்டு பிள்ளைக பொறந்து ஒன்னு ஒன்ட்ட ரேங்க் கார்டுல கையெழுத்து போட சொல்லியும், இன்னொன்னு கொல்லைக்கு போயிட்டு கழுவி விட சொல்லியும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்குற வயசுடா. இன்னும் ஏதோ சின்னப்பய மாதிரி வெக்கமே இல்லாம பொண்ணு பாத்ததுக்கு வெக்கப்பட்டுக்கிட்டு இருக்க?” சமீபத்தில் கல்யாணம் ஆன திமிரில் கல்யாணம் ஆகாத என் உயிரை, என் நண்பனை, என் மாப்ளையை நான் ஓட்டிக்கொண்டிருந்தேன்.. ஆனால் தேவை இல்லாமல் அவன் ரெண்டு நாட்களுக்கு முன் பெண் பார்க்க போனதை பற்றி கேட்கவில்லை.. கேட்கும் அவசியமும் இல்லை.. எல்லாம் தெரிந்தது தானே? இவன் வருகிறான் என்று தெரிந்ததும் பெண் வீட்டில் எல்லோரும் ஊரை காலி செய்து ஓடியிருப்பார்கள்..

“டேய் ஒங்க மாமனாரு பாவம், ஏதோ வெசாரிக்காம ஒனக்கு பொண்ணு குடுத்துட்டான்.. நாங்கலாம் நாலாபக்கமும் வெசாரிச்சி கல்யாணம் பண்ணுவோன்டா”

“டேய் ஆனா ஒலகத்துல இத்தன வயசு ஆகியும் கல்யாணமே ஆகாம கல்யாணத்த பத்தி ஃபீல் பண்ணி இவ்ளோ பில்ட்-அப் குடுக்குற ஒரே ஆள் நீ தான்டா.. சரி, அந்த கருமம் பிடிச்ச புது காமெடி கதைய சொல்லித்தொல.. கேக்கலேனா விட மாட்டில?” எனக்கு ஒவ்வொரு முறையும் இவன் பெண் பார்க்கும் கதையை கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும்.. ஒரு பெண்ணை நேரில் பார்க்கும் வரை பயலுக்கு மிகவும் பிடிக்கும்.. வானத்துக்கும் பூமிக்கும் குத்திப்பான்.. பெண்ணை நேரில் பார்த்தவுடன் ஒன்று இவனுக்கு பிடிக்காது அல்லது அந்த பெண்ணுக்கு பிடிக்காது.. அது என்னமோ தெரியவில்லை, இவனை விட சுமாராக இருக்கும் எங்கள் வயதொத்த பலரும் கல்யாணம் ஆகி அவர்களின் பிள்ளைகள் இரவில் படுக்கையில் ஒன்னுக்கு போகாத அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். ஆனால் இவன் இன்னும் பெண் பார்க்கும் லெவலில் தான் இருக்கிறான். ம், என் கணிப்பு சரியென்றால் இவன் சென்சுரி கூட அடிப்பான்.

”ஹ்ம் நீ கேக்க மாட்டேன்னு சொன்னா மட்டும் நான் விட்ருவேனா?” தனக்கு மட்டும் புரிந்த அறிவியல் பாடத்தை நமக்கு புரிந்து விடாதோ என்கிற நப்பாசையில் அதீத ஆர்வத்தோடு ஆசிரியர் வகுப்பில் நடத்துவாரே அது போன்ற ஆவலில் என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.. “பொண்ணு நம்ம மதுரைக்காரி தான் மாப்ள.. அமெரிக்கால  ஏதோ சாஃப்ட்வேர் கம்பெனில இருக்கா போல. மாசம் 4லட்ச ரூவா சம்பளமான்டா”..

ஆரம்பத்தில் அவன் வாயெல்லாம் பல்லாக இருந்ததற்காக காரணம் புரிந்தது - 4லட்சம். “சரி மாப்ள, பொண்ணு பாக்க எப்டிருக்கு?”

“டேய் அப்படியே லஷ்மி மேனன் மாரி இருக்காடா.. அப்டியே பாத்துக்கிட்டே இருக்கலான்டா வாழ்க்க பூரா”.. 

’பெறகு ஏன்டா கல்யாணம் பண்ணுற? பேசாம ஃபோட்டவையே பாத்து இளிச்சுக்கிட்டு இரு’னு சொல்ல நினைத்தேன்.. ஆனால் என் உயிர் நண்பன் என்பதால் அவன் தன்மானத்தை நானே அழிக்க விரும்பவில்லை. “டேய் போன மாசம் பாத்த பொண்ணு காஜல் அகர்வால் மாதிரி இருக்குனு சொன்னியேடா?”

“காஜல் அகர்வால் எல்லாம் ஒரு மூஞ்சியாடா? லக்‌ஷ்மி மேனன் தான்டா பாக்குறதுக்கு குடும்ப பொண்ணு மாரி இருப்பா”..

“சரி அதுக்கு முன்னாடி பாத்த பொண்ண அனுஷ்கா மாதிரினு சொன்னது?”

“டேய் அனுஷ்கா ரொம்ப ஒசரன்டா.. நமக்கு செட் ஆவாது”

மீண்டும் என் மனதில் ஒரு மைண்ட் வாய்ஸ் வந்தது, ‘பெறகு என்ன மயித்துக்குடா அன்னைக்கு பொண்ணு அனுஷ்கா மாரி, பொண்ணு அனுஷ்கா மாரினு ஊரு பூரா வழிஞ்ச?னு’ கேக்கலாம்னு நெனச்சேன்.. சரி பயலோட நல்ல மூட கெடுக்க வேணாமேனு மறுபடியும் மன்னிச்சுட்டு, “டேய் ஒனக்கு இன்னைக்கு எந்த ஹீரோயின் டாப்ல இருக்காளோ அவள மாதிரி பொண்ணுங்க கண்ணுக்கு தெரியுது.. நல்ல விசயம் தான்.. ஆனா மீனா காலத்துல இருந்து இதே மாதிரி இருக்க கூடாதுடா.. சீக்கிரம் கல்யாணத்த முடிச்சி தொலடா”

“மாப்ள இந்த தடவ மேரேஜ் கன்ஃபார்ம்.. லக்‌ஷ்மி மேனன எனக்கு பிடிச்சிருச்சி.. அவளுக்கும் என்ன பிடிச்சிருச்சி.. நெக்ஸ்ட் மேரேஜ் தான்.. ஒனக்கு ட்ரீட் தான்...”

அவன் சீரியஸா பேசுறானா காமெடியா பேசுறானா என்றே புரியவில்லை.. “டேய் புரிஞ்சு தான் பேசுறியா?”

“ஏன் மாப்ள?”

“அந்த புள்ள எங்க வேல பாக்குது?”

“அமெரிக்காலடா.. கல்யாணத்துக்கு பெறகு நானும் ஷொய்ய்ய்ய்ய்ங்... அமெரிக்காவுக்கு.. ஃப்ளைட்ல” - மீண்டும் வாயெல்லாம் பல்..

“எவ்வளவு சம்பளம்?”

“நாலு லட்சன்டா.. மாசம் சொளையா நாலு லட்சம்”  உள்நாக்கு தெரியும் அளவுக்கு பெருமை சிரிப்பு வேறு...

“சரி இப்ப சொல்லுங்க, சார் நீங்க என்ன வேல பாக்குறீங்க? எவ்வளவு சம்பளம்?”

“நா நா நா இங்க வந்து எங்க அப்பா கூட துணைக்கு எங்க கடையில... சரி இப்ப எதுக்கு இத கேக்குற?” நான் கேட்ட கேள்வியை அவன் மனசாட்சி அவனிடம் இது வரை கேட்காமல் இருப்பது ஆச்சரியம் தான்.. இப்படி இருப்பதால் தான் இவனுக்கு எந்த பெண்ணும் செட் ஆவதில்லை என அவதானிக்கிறேன்.. 

“இல்ல, சார் கல்யாணம் ஆன ஒடனே அமெரிக்காவுக்கு போறீங்களே அங்க போயி என்ன பண்ணுவிங்க? ஒங்க அப்பா அங்க ஒரு பல சரக்கு கட வச்சி குடுப்பாரா?”

“டேய் ஏன்டா கிறுக்குப்பய மாரி கேள்வி கேக்குற? பொண்டாட்டி நாலு லட்சம் சம்பாதிக்கும் போது எந்த புருசனாவது வேலைக்கு போவானா? நான் நல்லா அமெரிக்காவ சுத்தி பாப்பேன்டா”.. 

இவன் தெரிந்து தான் பேசுகிறானா இல்லை தெரியாமல் உளறுகிறானா என புரியவில்லை.. ”டேய் விஸ்வரூபம் படம் பாத்தியா?”

“ஆமா.. சூப்பர் படம்.. நீ கூட கேவலமா இருக்குனு சொல்லி எல்லார்ட்டயும் வாங்கி கட்டுனியே?”

“ஆமா நான் வாங்கி கட்டுனேன்.. நீ அவள கட்டிட்டு வாங்கப்போற..”

“புரியுற மாதிரி சொல்லு மாப்ள..”

“அந்த படத்துல ஹீரோயின் தான் வேல பாப்பா.. கமல், வீட்ல அவளுக்கு சிக்கன் சமைச்சி கொடுப்பாரு.. அவா அங்க தீபக்னு ஒருத்தங்கூட மஜா பண்ணவும் புருசன கழட்டி விடவும் ட்ரை பண்ணுவா.. ஞாபகம் இருக்கா?” - ஒக்கா மக்க, என் பொண்டாட்டிக்கு ஒழுங்கா சமைக்கவே தெரியாது, இவனுக்கு 4லட்சம் சம்பாதிக்குற பொண்டாட்டியா? மனதிற்குள் லேசான பொறாமை.. நான் செய்வது தவறு என்றாலும் ‘ஆமா எத்தனையோ பொண்ணுங்க இவனுக்கு செட் ஆகல.. அதோட இதுவும் செட் ஆகாம போனா என்ன?’ என மனதை தேற்றிக்கொண்டேன்..

“டேய் மாப்ள என்னடா சொல்ற?”

“இன்னும் முடிக்கலடா.. முழுசா கேளு.. அதுல கமல் பேரு விஸ்வநாத்,.. ஒம்பேரு விஸ்வநாதன்.. பேரு கூட ஒரே மாதிரி இருக்கு பாரு..  நீ வீட்ல ஒக்காந்து ‘உனை காணாமல் நானிங்கு நானில்லையே’னு உருகி பாடிக்கிட்டு இருப்ப.. அவ எதாவது ஒரு வக்கீல் கிட்ட ஒன்ன டைவர்ஸ் பண்ண பேசிக்கிட்டு இருப்பா.. தேவையா ஒனக்கு ஃபாரின் பொண்ணு? நம்ம ஊர்லயே எவ்வளவு அழகான பண்பான அடக்க ஒடுக்கமான பொண்ணுங்க இருக்காங்க?”

“அப்படினு சொல்றியாடா?” - என் ப்ளான் ஒர்க் அவுட் ஆகுதுனு நெனைக்கிறேன்..

“ஆமாடா”

“நீ சொல்றதும் சரி தான்.. இவா கூட பாக்க லக்‌ஷ்மி மேனேன மாரி இல்லடா.. பூஜா குமார் மாரி தான் இருந்தா.. இப்பத்தான் முகம் சரியா ஞாபகம் வருது..” அவன் குரலில் லேசான கவலை தெரிந்தது.

அய்யய்யோ திரும்ப நடிகைய பத்தி ஆரம்பிச்சுட்டான்.. “சரி விடு மாப்ள.. ஒனக்குனு கண்டிப்பா ஒரு பொண்ணு எங்கேயாவது பொறந்திருப்பாடா.. கவலைய விடு”...

அவனிடம் இருந்து பதிலே இல்லை.. நான் ரெண்டு முறை ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு ஃபோனை வைத்துவிட்டேன்... மனசு லேசாக உறுத்தியது.. நான் கம்மென்று இருந்திருந்தால் கூட அமெரிக்காவிற்கு போகும் வாய்ப்பு அவனுக்கு வந்திருக்கலாம்.. சரி இப்ப என்ன குடி முழுகி போயிருச்சி? நம்ம ஃப்ரெண்டு நம்ம கூடயே இருக்கட்டும் என நினைத்து என தினப்படி வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.. எப்படியும் தான் 50வது பொண்ணை பார்க்க போகும் போது என்னை கண்டிப்பாக அழைப்பான் என தெரியும்.. அப்போது எப்படியாவது அவனுக்கு அந்த 50வது பெண்ணை மணமுடிக்க வேண்டும் என சத்தியப்பிரமானம் எடுத்துக்கொண்டேன்.. 

பல நாட்களாக அவனிடம் இருந்து பதிலே வரவில்லை.. சில மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் தினப்படி அலுவல்களில் பிஸியாக இருந்தேன்.. ஒரு நாள் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு திரும்பும் போது தான் அந்த போஸ்டரை கவனித்தேன்.. ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு நம்ம ஊர் சாமியார் ஆசிர்வாதம் கொடுத்துக்கிட்டு இருக்காரு.. அந்த சாமியாரை சுற்றி அழகழகான நிறைய இளம் பெண்கள் இருந்தார்கள்.. அந்த சாமியாரை சில மைக்ரோ செகண்டுகள் மட்டுமே பார்த்த என் கண்கள் திடீரென்று விரிந்தன.. 

”டேய் விஸ்வநாதா” என்று கத்தினேன்.. அந்த சாமியார் 49 பெண்களால் கழட்டிவிடப்பட்ட என் உயிர்த்தோழன் விஸ்வநாதன். வாழ்வில் ஒரே ஒரு பெண்ணை கூட கல்யாணம் செய்யவே முக்கிக்கொண்டு இருந்த விஸ்வநாதன் இன்று ஒரு பெரிய சாமியாராக தன் ஆன்மீக ஆராய்ச்சியில் இத்தனை பெண்களுடன் சிறப்பாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதை பெருமையுடன் பார்த்து நினைத்துக்கொண்டேன், “அன்னைக்கு நாம அந்த அமெரிக்காக்காரிய வேண்டான்னு சொன்னனால தான் இன்னைக்கு இவனுக்கு இப்படி ஒரு வாழ்வு” என்று... என் நண்பன் ஒரு சாமியார் என நினைக்கவே ’ஹ்ம் இவனுக்கு வந்த வாழ்வு!’ என சிலிர்ப்பாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் என் மனைவி, “ஏங்க விஸ்வநாதானந்தா ஒரு சாமியார் வந்திருக்காராம்.. அவர் கிட்ட ஆன்மிக பயிற்சிக்கு போலாமா? நிறைய அற்புதங்கள் எல்லாம் செய்யுறாராம்” என கேட்ட நொடியில் என் சிலிர்ப்பெல்லாம் மொத்தமாக கலைந்து, “அவன பேசமா அந்த 4லட்ச சம்பளக்காரி கூட சேத்து வச்சிருக்கலாமோ” என சீரியஸாக புலம்பிக்கொண்டிருந்தேன்.. என்னை கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் தர்மபத்தினி விஸ்நாதானந்தா ஆன்மிக இல்லத்தில் சேர நெட்டில் அப்ளிகேசன் பாரமை பதிவிறக்கம் செய்து கொண்டிருந்தாள்...

தமிழ்ப்புத்தாண்டா? இந்து புத்தாண்டா?

Sunday, April 14, 2013

எங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்.. சித்திரை ஒன்னு இந்துக்களோட புது வருசம்’ என்று எதையாவது வந்து கத்திக்கொண்டு இருப்பார்கள்.. சித்திரை ரெண்டாம் தேதிக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாது.. மீண்டும் அடுத்த ஆண்டு பங்குனி கடைசியில் வருவார்கள். ’தை தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று தொண்டை கிழிய கத்துவார்கள். மீண்டும் போய் விடுவார்கள். அவர்களுக்கும், லேசான குழப்பத்தில் இருக்கும் சில தமிழர்களுக்கும் எனக்கு தெரிந்த விபரங்களை வைத்து விளக்க முயல்கிறேன்.

தமிழன் தை முதல் நாளை தன் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறான். அது நன்றி சொல்லும் ஒரு பண்டிகை. நன்றியை நீங்கள் ஒருவருக்கு ஆரம்பத்திலா சொல்வீர்கள்? அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம்? சித்திரையில் தான் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பான் தமிழன். தன் தொழிலை வாழ்வை புதிதாக ஆரம்பிக்கும் காலத்தை புத்தாண்டாக கொண்டாடினான். அறுவடை செய்து எல்லாவற்றையும் வழித்து அள்ளுவதை புத்தாண்டாக கொண்டாட அவன் மடையன் இல்லை.

உலகின் பெரும்பாலான கலாச்சார, வரலாற்று சிறப்புகள் இருக்கும் நாடுகளில் இளவேனில் காலத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இளவேனில் என்பது நமது சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் தான். தை மாதம் என்பது முன்பனிக் காலம். இதை பற்றி விபரம் தெரியாத பலரும், அரைகுறையாக எங்கோ கேட்டதை வைத்துக்கொண்டு தை மாதத்தில் தான் இளவேனில் காலம் வருகிறது என்கிறார்கள். பத்தாங்கிளாஸ் தமிழ் தான் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், ஒரு விசயத்தை சொல்லும் முன் நெட்டிலாவது தேடி சரி பார்த்த பின் சொல்லலாமே மக்களே?  இளவேனில் காலம் சித்திரை வைகாசியில் வருவது. தமிழர்கள் வரலாறு மற்றும் கலாச்சார சிறப்பு உடையவர்கள் என்பது உண்மையானால் அவர்கள் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதும், சித்திரை தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதும் உண்மை. உலக இலக்கியங்களில் பனிக்காலத்தை ஒரு முடிவாக/அழிவாக தான் உவமைப்படுத்துவார்கள்.. தை என்பது முன்பனிக்காலம். அப்படிப்பட்ட பனிக்காலத்திலா தமிழ்ப்புத்தாண்டை நாம் கொண்டாடியிருப்போம்?

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. ’சித்திரை மாதம் இந்துக்களின் புத்தாண்டு, தமிழர்களுக்கு இல்லை’.. ‘தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது’ என்று குட்டையை குழப்ப ஆரம்பிப்பார்கள். என் பெயர் ஒரு சம்ஸ்கிருத பெயர் தான்.. (திராவிடம் என்பதே கூட சமஸ்கிருத பெயர் தான் என்கிறார்கள் சில அறிஞர்கள்).. நான் ஒரு இந்து தான்.. இவர்களின் கூற்றுப்படி நான் தமிழன் இல்லையா? இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா? தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா? ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா? ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள். அதிலும் சித்திரை ஒன்று என்னும் தமிழர் புத்தாண்டை கூட இந்துக்களுக்கு மட்டுமானது என்பது போல் விசமத்தனமாக பேசுவது இவர்கள் மக்களின் மனதில் என்ன விதமான எண்ணத்தை விதைக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

இவர்கள் சொல்ல வருவது ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்பது. ஆரியர்கள் என்ன சூழ்ச்சி செய்தார்கள் இதில் என்று எனக்கு புரியவில்லை. நாம் கும்பிடும் மாரியம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்களை ஆரியர்கள் வணங்க மாட்டார்கள். நம் முருகன் கூட அவர்களுக்கு சுப்ரமணியன் தான். மாரியம்மனும் காளியம்மனும் தமிழர்களின் தெய்வங்கள். இந்த கோயில்களில் ஆரியர்கள் சம்பளத்திற்கு பூஜை செய்தாலும் நம்மை போல் வணங்க மாட்டார்கள். நாம் வணங்கும் மாரியம்மன் காளியம்மன் மற்றும் சிறு தெய்வ கோயில்களில் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடக்கின்றன? பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான்? சும்மா பொழுது போகாமலா? தன் விவசாய தொழில் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், தான் கோயிலுக்கு போய் கடவுளிடம் ஆசி பெற்று தொழிலை ஆரம்பிக்கிறான். சம்பந்தமே இல்லாத தையில் எந்த கோயிலில் திருவிழா நடக்கிறது? எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா? தமிழும் மலயாளமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழியாக இருந்தன. அத்தகைய மலயாள மக்கள் சித்திரையில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்களும் பார்ப்பன அடிமைகளா?

சரி, இதெல்லாம் வரலாறு மற்றும் ஒவ்வொருவரின் எண்ணங்களை வைத்து அமைவது. இப்போது அரசியலுக்கு வருவோம்.. 1921ல் சில அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து தை தான் தமிழ் புத்தாண்டு என முடிவு செய்தார்களாம். அதை ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர், 4 முறையும் ஞாபகமே இல்லாமல் தான் ஐந்தாவது முறை பதவிக்கு வரும் போது மட்டும், மண்டையில் திடீரென பல்ப் எரிந்து “இனி தை 1 தான் தமிழ் புத்தாண்டு’ என்று அறிவித்தாராம்.. ஆனால் அவர் ஆட்சியிலேயே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னரும் கூட சித்திரை ஒன்றுக்கு லீவு விடுவாராம். இது தான் அவரின் இரட்டை வேசம். ஏன் லீவு என்று கேட்டால் “சித்திரை திங்கள் விடுமுறை” என்பார். அப்போ வைகாசி திங்கள், ஆனி திங்கள் மார்கழி திங்களுக்கெல்லாம் லீவு விடுவாரா என்று யாரும் அவரிடம் கேள்வி கேட்க கூடாது. ஏன்னா, அவர் தான் ’தி ஒன் அண்ட் ஒன்லி தமிழன தலிவர்’.. கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் சொன்னதுக்கு எதிரா கேள்வி கேட்டா நீங்க தமிழின துரோகி ஆகிருவிங்க.. பார்ப்பன அடிவருடினு ஒரு எக்ஸ்ட்ரா பட்டமும் சேர்ந்து கிடைக்கும்.

சரித்திரம் என்பதே யாரோ ஒருவர் தன் கற்பனையை சேர்த்து சொன்ன ஒன்றை, எல்லோரும் உண்மை என நம்பிக்கொண்டிருப்பது தான். அத்தகைய சரித்திர ஆராய்ச்சி என்பது புதிதான, வழக்கத்தில் இல்லாத ஒன்றை பற்றி இருக்கலாம். ஏற்கனவே காலம் காலமாக சித்திரையில் கொண்டாடி வருவதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? சரி அந்த ஆராய்ச்சியில் தமிழன் தை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடினான் என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. வெறும் ஊகங்கள் தான். இவர்கள் வெறும் ஊகத்தை வைத்துக்கொண்டு தையில் புத்தாண்டை கொண்டாட சொல்வார்களாம். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நிறுத்திவிட்டு இவர்கள் பின் வாலை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டுமாம். தமிழனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.

சுருக்கமாக, தமிழன் தன் கடவுள்களுக்கு இளவேனில் காலத்தில் பண்டிகை வைத்து தன் தொழிலை ஆரம்பித்து கொண்டாடிய மாதமான சித்திரையில் தான் அவனின் புத்தாண்டு தொடங்குகிறது. தை என்னும் அறுவடை மாதத்தில் அவன் தனக்கும் தன் தொழிலுக்கும் உதவி செய்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்கிறான். அதுவும் ஒரு சிறப்பான முக்கியமான பண்டிகை தான் என்றாலும் அது நம் புத்தாண்டோடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. தமிழர்களாகிய நம் புத்தாண்டு சித்திரை ஒன்றே...

மிக சீரியசான பின்குறிப்பு:
ஜனவரி ஒன்றோ, தை ஒன்றோ, சித்திரை ஒன்றோ - புத்தாண்டு என்று கொண்டாடப்படும் நாள் வெறும் இன்னொரு நாள் தான். அதே சூரியன், அதே வெயில், அதே வேலை, அதே குடும்பம், அதே மின்வெட்டு, அதே உலகம், அதே டிராஃபிக், அதே ஆஃபிஸ், அதே டென்சன் என எல்லாமே மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் நடந்தது தான். அடுத்த நாளும் நடக்கப்போவது தான். புத்தாண்டில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. பின் புத்தாண்டை மட்டும் மாற்றி என்ன ஆகிவிடப்போகிறது? நாட்டில் நாம் சண்டை போட எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. ஒரு அரசியல்வாதி சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக, நம் பழக்க வழக்கங்களை அறியாமல் அவர் சொல்வதை கேட்டு அப்படியே பின் செல்வது எந்த வகையில் சிறந்தது என தெரியவில்லை. 

இந்த இனிய தமிழ்ப்புத்தாண்டில் அனைவருக்கும் என் அப்பன் தமிழ்க்கடவுள் முருகனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டுகிறேன்.. எல்லாருக்கும் நல்ல புத்திய குடு ஆண்டவா..............

ஆகோய்.. அய்யாகோய்... எங்க ஊரு பொங்கல்...

Monday, April 8, 2013

தென் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் பங்குனியும் சித்திரையும் தான் மிகவும் விஷேசமான மாதங்கள்.. மாரியம்மன் கோயில் திருவிழாக்களும் சிறு தெய்வ வழிபாடுகளும் இந்த மாதங்களில் தான் பெரும்பாலும் இருக்கும். இன்று நான் வேலை செய்யும் புதுக்கோட்டையில் கூட நார்த்தாமலை மாரியம்மனுக்கு பொங்கல் திருவிழா.. எங்கள் சிவகாசியிலும் இன்று தான் பங்குனி திருவிழா.. நேற்று பொங்கல், இன்று கயிறு குத்து..  அது என்ன கயிறு குத்து என்று தானே கேட்கிறீர்கள்? எங்கள் ஊர் ஸ்பெசலே அது தானே.. சொல்கிறேன்... கேளுங்கள்..

பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் சூரிய பகவானுக்கு நம்மீது மிகவும் பாசம் பொங்கி வந்து தன் உஷ்ண பார்வையை அதிகமாக செலுத்துவார்.. மாரியம்மன் மழைக்கு உகந்த கடவுள் அல்லவா?.. மாரி என்றால் மழை தானே?! சூரியனின் உஷ்ணத்தில் இருந்தும் அதனால் வரும் நோய் நொடிகளில் இருந்தும் தங்களை காக்கவும், மழை தர வேண்டியும் மக்கள் மாரியம்மனுக்கு இந்த மாதங்களில் கொண்டாடும் விழாக்கள் தான் பங்குனி மற்றும் சித்திரை பொங்கல் விழாக்கள்..

எங்கள் பகுதியில், அதாவது விருதுநகர், சிவகாசி பகுதியில் இது மிகவும் விஷேசமாக இருக்கும்.. முதல் நாள் பொங்கலன்று பலரும் வீட்டிலும் கோயிலிலும் பொங்கல் கிண்டி கடவுளுக்கு படைப்பர்.. மறுநாள் கயிறு குத்து. இது தான் பிற பகுதிகளுக்கும் எங்களுக்கும் இருக்கும் வித்தியாசம். கயிறு குத்து அன்று சிலர் அலகு குத்துவார்கள், சிலர் தீச்சட்டி எடுப்பார்கள், சிலர் கரும்புள்ளி செம்புள்ளி குத்துவார்கள், சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு வரனை பார்த்து நிச்சயம் செய்வார்கள் (இது விருதுநகரில் மட்டும் இருக்கும் பழக்கம்).. இதை பற்றி ஒவ்வொன்றாக சொல்கிறேன்..


கயிறு குத்தன்று காலையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கரும்புள்ளி செம்புள்ளி போல் தங்கள் முகத்திலும் உடலிலும் கறுப்பு வெள்ளை இன்னும் பல வண்ணங்களால் புள்ளி வைத்துக்கொள்வார்கள். கையில் வேப்பிலை கொத்தை பிடித்துக்கொண்டு மாரியம்மன் கோயிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் கீழே உள்ள படத்தில் இருப்பது போல் கொஞ்சம் கொடூரமாக கூட மேக்-அப் போட்டுக்கொண்டு கோயிலுக்கு செல்வார்கள். நீங்கள் வெயில் படத்தில் வரும், ‘வெயிலோடு விளையாடி’ பாடலில் இது போல் அந்த சிறுவர்கள் வேஷமிட்டு கோயிலுக்கு செல்வதை கவனித்திருப்பீர்களா என்று தெரியவில்லை. அது விருதுநகரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..

எனது பள்ளிக்காலங்களில் கயிறு குத்துக்கு முந்தைய நாள் இரவே எங்கள் தெரு பையன்களோடு சேர்ந்து பக்கத்து ஏரியாவில் இருக்கும் வேப்ப மரக்கிளைகளை மொத்தமாக வெட்டி வந்து எங்கள் தெருவில் போட்டுக்கொள்வோம். மறுநாள் காட்டுவாசி போல் வேப்பிலையிலேயே ட்ரெஸ் போட்டுக்கொண்டு கோயிலை நோக்கி மாரியம்மனை நினைத்து பாடிக்கொண்டே செல்வோம்.. அந்த பாடலும் சூப்பரா இருக்கும்.. இது தான் அந்தப்பாடல்..

ஆகோய்.. அய்யாகோய்..
ஆத்தாத்தா.. பெரியாத்தா..
அம்பது பிள்ள பெத்தாத்தா..
ஒனக்கு நாலு.. எனக்கு நாலு போடாத்தா...
கம்பு குத்து.. கயிறு குத்து..
ஆகோய் அய்யாகோய்...

இதை நம் குழுவில் ஒருவர் சொல்ல சொல்ல மற்றவர்கள் அவரை தொடர்ந்து பாடிக்கொண்டே வர வேண்டும்.. கோயில் வரை இதே தான்.. கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருக்கும் வேப்பிலையை அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் போட்டுவிட்டு அந்த வேப்பிலை குவியலில் ரெண்டு உருண்டு உருண்டுவிட்டு வர வேண்டும்..

கரும்புள்ளி செம்புள்ளி வெயில் காலங்களில் வரும் அம்மை நோயின் தழும்புகளை குறிப்பதாகும். அதில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே பக்தர்கள் அம்மனை வேண்டி உடம்பில் அது போல் வரைந்துகொண்டு கோயிலில் உருண்டு கொடுக்கிறார்கள்.. வேப்பிலை உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது.. அதனால் வேப்பிலையை கையில் எடுத்து சென்று மொத்தமாக ஒரு இடத்தில் போட்டு அங்கே உருண்டு கொடுக்கும் போது உடம்புக்கும் குளிர்ச்சி கிடைக்கிறது.. அதே போல் ஊர்  முழுக்க பக்தர்களின் தாகத்தை தீர்க்க இலவசமாக நீர் மோர்ப்பந்தலும் பானக்கிரமும் இருக்கும்.. இந்த பானக்கிரம் என்பது புளியும் வெல்லமும் கலந்த ஒரு இனிப்பு பானம்.. அவ்வளவு ருசியாக இருக்கும்.. உடம்புக்கும் குளிர்ச்சி தர வல்லது.. கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிருச்சினா உங்களோட பேக் ஓபன் ஆகி வயிற்றால் போக ஆரம்பித்துவிடும்.. அளவாக குடித்தால் உடம்புக்கு குளிர்ச்சி..


அடுத்தது பூச்சட்டி/தீச்சட்டி எடுப்பது. ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆட்கள் தங்கள் ஊர் கயிறு குத்து முடிந்ததும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் (சும்மா பேச்சு சண்டை தான்) விசயம், யார் ஊரில் அதிகமான பூச்சட்டி எடுக்கப்பட்டது என்பதை பற்றியதாகத்தான் இருக்கும்.. ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் மக்களில் இருந்து பக்கத்து கிராம மக்கள் என ஆயிரக்கணக்கான பூச்சட்டிகள் எடுப்பார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் இருக்கும்.. பூச்சட்டி எடுக்கும் பலரும் ஒரு முறைக்கு மேல் தான் எடுப்பார்கள்.. என் அப்பா எல்லாம் மூன்று முறை பூச்சட்டி எடுத்தவர்.. 

ஒரு சிலர் 11 சட்டி, 21 சட்டி என்று ஒரே முறையில் பூச்சட்டி எடுப்பார்கள்.. மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.. இவர் எடுப்பது 21 சட்டி.. உடம்பில் அதற்கான உபகரணத்தை மாட்டிக்கொண்டு சட்டி எடுப்பார்.. முன்னே ஒருவர் கொட்டு அடித்துக்கொண்டும் இன்னொருவர் நாதஸ்வரம் இசைத்துக்கொண்டும் பின்னால் இப்படி ஒருவர் சட்டி எடுத்து வருவதை பார்க்கவே அவ்வளவு அழகாக பிரமாண்டமாக இருக்கும். இதுவும் வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களின் இருந்து தங்களை காப்பாற்ற மக்கள் செய்யும் நேர்த்திகடன் தான்.. பக்தர்கள் இப்படி தீச்சட்டி எடுத்து வருபவரின் மேல் நீரூற்றி வேண்டிக்கொள்வார்கள்.


தாங்கள் எடுத்துவரும் சட்டியை ஒவ்வொருவரும் கோயிலில் அதற்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடுக்கிவைத்துவிட்டு வந்துவிடுவர். 

இன்னும் சில பக்தர்கள் இது போல் இருக்கும் சிலைகளை வாங்கி கோயிலில் செலுத்தி வேண்டிக்கொள்வார்கள். கை, கால், மனித உருவம் போல் இருக்கும் சிலைகள் கை கால் பலத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் குறிப்பன. இதை கோயிலில் வேண்டி வைக்கும் போது தங்களுக்கு உடல் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தைப்பேறு இல்லாதோர் குழந்தைகள் பொம்மையும், வீடு கட்டும் ஆசை இருப்பவர்கள் வீட்டு பொம்மையையும் வாங்கி வேண்டி வைப்பார்கள்.  எங்கள் பக்கத்து வீட்டில் கூட ஒருவர் வீட்டு பொம்மையை வேண்டி வைத்திருக்கிறார். சீக்கிரமே அவர் சொந்த வீடு கட்ட நானும் மாரியம்மனை வேண்டிக்கொள்கிறேன். 

அடுத்தது தான் மிக மிக முக்கியமான விசயம். இது விருதுநகரில் மட்டுமே நடக்கும் பழக்கம். விருதுநகர் பஜார் வழியாகத்தான் அந்த ஊர் மாரியம்மன் கோயிலுக்கு செல்ல முடியும். விருதுநகர் பஜாரில் கடை வைத்திருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடைகளுக்கு வெளியே விருதுநகருக்கே உரித்தான தேக்கு மர கட்டில்களை போட்டு அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வீட்டுப்பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால் அந்தப்பெண்ணும் அவர்களுடன் அமர்ந்திருக்கும். மாப்பிள்ளை வீட்டாருக்கு, பஜாரின் இந்த வீதியில் இந்த கடையில் பெண் வீட்டார் அமர்ந்திருக்கிறார்கள், பெண் இந்தக்கலர் பட்டு உடுத்தியிருக்கிறது என்னும் தகவல் போய்விடும். பெண் வீட்டாருக்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டார் யாரென்றே தெரியாது.. மாப்பிள்ளை வீட்டார் அந்த வழியாக கோயிலுக்கு போவது போல் பெண் வீட்டார் இருக்கும் வழியில் வருவார்கள். மெதுவாக பெண், அவரின் குடும்பம் என ஒவ்வொருவரையும் நோட்டம் விடுவார்கள். எல்லாமே தங்களுக்கு ஏற்றது போல் இருந்தால் கோயிலில் சாமி கும்பிட்டு திரும்பி வரும் வழியில் பூ வாங்கி பொண்ணுக்கு சூட்டி அப்போதே நிச்சயம் செய்து விடுவார்கள். எனக்கு தெரிந்து விருதுநகரை தவிர வேறு எந்த ஊரிலும் இது போன்ற பழக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் விருதுநகர் பொங்கல் அன்று கண்டிப்பாக ஒரு நாள் சென்று பாருங்கள் பஜார் வீதியில்.. பார்க்கவே கனஜோராக இருக்கும் அந்த வீதி.. 

எங்கள் ஊரில் தீபாவளி மற்றும் பங்குனிப்பொங்கல் இரண்டுக்கும் போனஸ் உண்டு. தீபாவளிக்கு புதுத்துணி எடுக்கிறோமோ இல்லையோ எப்பாடுபட்டாவது பங்குனிப்பொங்கலுக்கு கண்டிப்பாக புதுத்துணி எடுத்துவிடுவோம். மற்ற ஊர்களிலும் பொங்கல் இப்படித்தான் இருக்குமா? பெண் பார்க்கும் படலம் எல்லாம் உண்டா என எனக்கு தெரியாது. ஆனால் இது எங்கள் ஊர் கலாச்சாரம்.. இதை சொல்ல வேண்டும் என பல நாள் ஆசை.. பொங்கல் நாளானே இன்றே இதை பற்றி சொல்லியிருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசயம் தான். தீச்சட்டி எடுப்பது, முகத்தில் கரியை அப்பி வேசம் போடுவது எல்லாம் பகுத்தறிவா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.. எங்கள் மக்கள் சந்தோசமாக கறி சாப்பிட்டு மாரியாத்தா நம்மை காப்பாற்றுவாள் என குடும்பத்தோடு நம்பிக்கையுடன் இருக்கும் ஒரு நன்னாள் தான் இந்த பங்குனிப்பொங்கல்.. பங்குனிப்பொங்கல் அன்று மழை வரும் என்பது நம்பிக்கை. அதை நிரூபிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனிப்பொங்கல் அன்றோ அல்லது கயிறு குத்து அன்றோ தூறலாவது விழும். நேற்றும் கூட எங்கள் பகுதியில் சில இடங்களில் மழையும் சில இடங்களில் தூரலும் விழுந்தன. இதெல்லாம் தற்செயலான சம்பவங்கள் என்று கூறினால், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தன்று மட்டும் ஏன் இந்த தற்செயல் சம்பவங்கள் நடக்கின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமான வினா தான்..
ஆகோய் அய்யாகோய்
ஆத்தாத்தா.. பெரியாத்தா...
அம்பது பிள்ள பெத்தாத்தா...
ஒனக்கு நாலு.. எனக்கு நாலு.. போடாத்தா..
கம்பு குத்து.. கயிறு குத்து..
ஆகோய் அய்யாகோய்...

மாரியம்மன் கோவிலை விட இன்னும் பிரமாண்டமாய் இருக்கும் எங்கள் ஊர் பத்திரகாளியம்மன் சித்திரை பொங்கல் விழா.. அப்போது ஊரில் பொருட்காட்சி எல்லாம் போடுவார்கள்.. சில பல வரலாற்று விசயங்களோடு உங்களை அடுத்த மாதம் இதன் தொடர்ச்சியில் சந்திக்கிறேன்..

யூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..

Saturday, April 6, 2013

 "ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் காட்ட முடியாமலும் மென்று முழுங்கி நான் நிவேதாவை பார்த்து கத்திக்கொண்டிருந்தேன்..

“நீங்களே என்ன வெறுத்து ஒதுக்கலாமாங்க? நான் என்னங்க பாவம் செஞ்சேன்? இதெல்லாமே தலைவிதிங்க.. என்ன தயவு செஞ்சி ஏத்துக்கோங்க” என்னை பார்த்து இரு கைகளையும் குவித்து அழுது ஏங்கிக்கொண்டிருந்தாள் அவள்.. 

எப்படி இவளால் மட்டும் இப்படி சுற்றி இருக்கும் மக்களை சட்டை செய்யாமல் அழ முடிகிறது என வியப்பு இருந்தாலும், என் கண்களில் மீண்டும் கோவத்தை கொண்டு வர முயற்சி செய்து சொன்னேன், “என்னது ஒன்ன ஏத்துக்கணுமா? எதுக்கு? இன்னொருக்க வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா?” என்று திக்கித்திணறி சொல்லிமுடிப்பதற்குள் அவள் சடாரெனெ என் சட்டையை கழுத்துக்குக் கீழாக ஒரு ரெண்டு இன்ச்சில் இறுகப்பற்றிக்கொண்டாள்.. அவள் கண்களில் வெறியும் கோவமும் ஆற்றாமையும் அவமானமும் ஒரு சேர இருந்தன. கிட்டத்தட்ட என் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்தாள். சட்டையின் முதல் பட்டன் அவள் இழுத்து பிடித்த வேகத்தில் தெறித்து தரையில் விழுந்தது.

“என்ன வார்த்தைங்க சொல்லீட்டீங்க? நீங்களும் ஒரு மனுசனா? ச்சீ உங்கள நெனச்சா அருவெறுப்பா இருக்கு”. அவள் என் சட்டையை பிடித்து இப்படி கேள்வி கேட்பாள் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் அவளை பார்த்து திரு திரு வென முழித்துக்கொண்டிருந்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் எதாவது சொல்ல மாட்டேனா என எதிர்பார்த்து அவள் அழுகையை நீட்டித்துக்கொண்டிருந்தாள். எனக்குத்தான் அவள் சட்டையை பிடித்தவுடன் என்ன பேசுவது என்றே மறந்துவிட்டது. பின்னால் இருந்து சத்தம் கேட்டது.. “என்னடீ நடிக்குற? போடீ வெளிய”.. 



அதை கேட்டவுடன் நானும் சுதாரித்துவிட்டு “என்னடீ நடிக்குற? போடீ வெளிய..” என நிவேதாவை பிடித்து தள்ளினேன்.. அந்தக்காட்சி முடிந்து ஸ்கிரீனை மூடினார்கள்.. ‘அப்பாடி’ என உணர்ந்தேன். ஸ்கிரீன் மூடியவுடன் எல்லோரும் என்னை கொன்றுவிடுவது போல் பார்த்தார்கள்..

“நாந்தான் சொன்னேன்ல, எனக்கு நடிக்கலாம் வராதுன்னு? நான் ஷார்ட் ஸ்டோரி ரைட்டிங்குக்கு தான் பேரு குடுத்தேன்.. நீங்க என்ன டிராமாலலாம் நடிக்க சொல்றீங்க?”

“ஆமாண்டா ஒத்த ஈவன்ட்ல மட்டும் பார்டிசிபேட் பண்ணுறதுக்கா இவ்ளோ தூரம் வந்திருக்க? மொத்தம் 57 ஈவண்ட்.. ஒரு காலேஜுக்கு முப்பதே பேரு தான்.. எப்படி சமாளிக்குறது? சும்மா ஒரு ரூம்ல ஒக்காந்து பேப்பர்ல கத எழுதுறது ஈசி.. இந்த மாதிரி ஸ்டேஜ்ல நடிக்குறது தான் கஷ்டம் மகனே.. உன் பேட்ச் தான நிவேதா, அவா எவ்வளவு அழகா நடிக்குறா? நீயும் நடிக்க வேண்டியது தான?” ஒரு சீனியர் எனக்கு அட்வைஸ் என்னும் பெயரில் இருக்கும் எங்கள் கல்லூரி பெண்கள் மத்தியில் என்னை வைத்து பஞ்சாயத்து பண்ணி அவன் கெத்தை காட்டிக்கொண்டிருந்தான்.

”அதுக்காக? ப்ராக்டீஸ் பண்ணும் போது அவா என் சட்டைய பிடிக்குற சீனே இல்ல.. திடீர்னு ஏன் பிடிச்சா?” நான் கேட்டுக்கொண்டே நிவேதாவை முறைத்தேன்.. அவள் கண்களாலேயே சாரி கேட்டாள்.. அவள் சாரி கேட்பது கூட ஒரு தேர்ந்த நடிப்பு போல் தான் இருந்தது.. என் சட்டையை பிடித்தாலும் நல்ல நடிகை தான் அவள்.. மேடைக்கு முன்னாடி இருக்கும் அத்தனை பேரையும் மறந்து ஒருவனின் மனைவியாகவே அந்த மேடையில் வாழ்ந்திருந்தாள்..

“டே அதான்டா டிராமா.. நடிக்கும் போதே ‘டக்’னு எதாவது ஸ்பார்க் தோனும்.. அத அப்படியே டயலாக்கா மாத்தி சொல்லணும்.. அதுக்கு ஏத்த மாதிரி அடுத்தவங்களும் டயலாக்க மாத்தி நடிக்கணும்.. ஒன்னப்போயி கூட்டிட்டு வந்தோம் பாரு.. நீயெல்லாம் பேப்பர்ல மார்ஜின் போட்டு கலர் கலரா டெகரேசன் பண்ணி கதை எழுத தான் லாயக்கு” சொல்லிவிட்டு ஹி ஹி ஹினு சிரிச்சான் அந்த சீனியர்.. யாராவது தனக்கு துணையாக சிரிக்கிறார்களா என்றும் பார்த்துக்கொண்டான்.. ஒரு பய சிரிக்கல.. எனக்கு அவன் சிரிச்சப்ப வந்த கோவம், ஒருத்தனும் அவனுக்கு சப்போர்ட்டா சிரிக்கலைன்னதும், கொஞ்சம் சந்தோசமாயிருச்சி..

தைரியத்தோடு, “ஆமாண்ணே.. பேப்பர்ல எழுதுறது ஈசின்னா நீங்களே அதையும் பண்ணிரலாம்ல? எதுக்கு அதுக்கு மட்டும் நானு? நா வேனா கெளம்புறேன்.. நீங்களே கதையும் எழுதிக்கோங்க” என்று அவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு வெடுக்கென நடையைக்கட்டினேன்.. எனக்கு தெரியும் அவர்கள் என்னை விட மாட்டார்கள் என்று..

“டேய் கண்ணா ப்ளீஸ்டா போகாத” என்று என்னை கொஞ்ச நேரம் முன்னாடி மட்டமா பேசுன சீனியர்ல இருந்து எல்லாரும் வந்தாங்க.. “ஏன்டா கோவப்படுற? சரி விடு, இனிமேல் டிராமாக்கு வேற யாரையாச்சும் பாத்துக்கிறோம்.. நீ கதைய மட்டும் எழுது.. போதுமா?” சீனியர் சிரித்துக்கொண்டே சொன்னார்.. சிரிப்பில் லேசான வஞ்சமும் பொறாமையும்  இருந்தது.. சண்டையும் கோவமும் பொறாமையும் பாராட்டும் ஆறுதலும் ஊக்கமும் இல்லாத கல்லூரி போட்டிகள் உண்டா?


இப்ப நாங்க இருக்குறது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்.. யூத் ஃபெஸ்டிவல் என்று அழைக்கப்படும் இளைஞர் திருவிழாவில்.. வருடத்தில் 3நாள்.. அவ்வளவு கொண்டாட்டமாக கனவு உலகம் போல் இருக்கும். கனவு உலகம் என்று சொல்வதை விட, சினிமாவில் காட்டும் கல்லூரி உலகம் போல் இருக்கும் அந்த மூன்று நாட்களும். ஆடல், பாடல், சண்டை, தோற்ற கல்லூரிகள் ஜெயித்த கல்லூரிகளை பார்த்து டவுன் டவுன் சொல்வது, வெறியோடு தங்கள் கல்லூரியை ஆதரிப்பது, போட்டியாளனுக்கு ஏதாவது அவசரமாக தேவை என்றால் ப்ரொஃபசரில் இருந்து சீனியர் வரை எல்லோரும் ஓடி ஓடி அவனுக்கு உதவுவது என்று அது ஒரு தனி அனுபவம்.. நிறைய கல்லூரி காதல்களுக்கு யூத் ஃபெஸ்டிவல் அச்சாணியாக இருக்கும் என்பது கொசுறு தகவல். ஆசிரியர்களுக்குள் இருக்கும் நல்ல மனிதனும், சீனியருக்குள் இருக்கும் நல்ல நண்பனும் அப்போது தான் நம் கண்களுக்கு தெரிவார்கள். 

ஒவ்வொரு வருடமும் எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண் விடுதலை, மனித நேயம் என தூர்தர்ஷத்தனமான தலைப்புகளை கொடுப்பார்கள்.. அந்த தலைப்பில் தான் ஒவ்வொரு கல்லூரியும் நாடகம், கட்டுரை, சிறுகதை, ஓவியம், இசை, நடனம் என தங்கள் திறமைகளை காட்ட வேண்டும். இந்த வருடம் எய்ட்ஸ் தான் தலைப்பு.. அப்படி எய்ட்ஸ் பற்றிய ஒரு டிராமாவில் தான் எய்ட்ஸ் வந்த என் மனைவியை நான் சந்தேகப்படுவது போன்ற காட்சி.. அதில் தான் ரிகர்சலில் இல்லாத காட்சியாக என் சட்டையை அவள் பிடித்து நான் டயலாக்கை மறந்து என அத்தனையும் அரங்கேறியது. நான் வழக்கமாக சிறுகதையில் மட்டும் தான் பங்கேற்பேன். வழக்கமாக என்றால் இது என் ரெண்டாவது வருடம்.. மேடை, ஃபோகஸ் லைட், முன்னாடி கும்பலாக இருந்து நாம் என்ன செய்கிறோம் என வெறித்து பார்க்கும் ஆடியன்ஸ் இதெல்லாம் தான் என்னை நாடகத்தை பார்த்து பயப்பட செய்தன. அதை விட அவர்கள் போடும் ரோஸ் பவுடர் மேக்-அப்பும் அந்த பஃப்பில் வரும் நாற்றமும்.. அதுவே ஒரு பேப்பர் பேனா என்றால், நான் என்ன செய்கிறேன் என யாரும் பார்க்க மாட்டார்கள். மேஜையில் படுத்துக்கொண்டே நான் எழுதுவேன் ஒன்னரை மணிநேரம். அது என் மனசாட்சிக்கும் பேனாவுக்கும் நடக்கும் கூடலில் கதைப்பிள்ளைகளை பேப்பரில் பெற்றுப்போடும் வித்தை. போன முறை நான் தான் சிறுகதையில் ஃபர்ஸ்ட்.. இந்த ஒரு வருட இடைவெளியில் கல்லூரிகளுக்குட்பட்ட, பல்கலைகளுக்குட்பட்ட, ரோட்டரி, லயன்ஸ் கிளப் என்று கிட்டத்தட்ட 13 பரிசுகள் வென்றுள்ளேன் சிறுகதையில். அதனால் எனக்கு தான் இந்த முறையும் சிறுகதையில் பரிசு கிடைக்கும் என நான் திமிராகவும், என் கல்லூரி ஆட்கள் நம்பிக்கையாகவும் இருந்தார்கள்.. என் கல்லூரியும் சும்மா கிடையாது, பல வருடங்களாக யூத் ஃபெஸ்டிவல் சேம்பியன் எங்கள் கல்லூரி.. எங்களை வெறித்தனமாக பழக்குவார்கள்.. கதை என்பதால் எனக்கு பிரச்சனை இல்லை.. நடனம், நாடகம் போன்றவர்கள் மிக பாவம்.. ராத்திரி பகலாக ரிகர்சல் பார்ப்பார்கள்.. ஒரு சில கல்லூரிகளுக்கு யூத் ஃபெஸ்டிவல் என்பது ப்ரெஸ்டிஜ் சமாச்சாரம்.. தாங்கள் எப்பாடு பட்டாவது ஜெயித்துவிட வேண்டும் என்கிற வெறியில் முதல்வரில் இருந்து மாணவன் வரை போராடுவார்கள். அப்படி ஒரு கல்லூரி தான் எங்களிது.


எப்படியோ நாடகத்தில் இருந்து தப்பித்த நிம்மதியில் நான் டான்ஸ் பிரோகிராம் பார்க்க மு.வ. அரங்கத்தினுள் நுழைந்தேன். அங்கே விருதுநகரை சேர்ந்த பெண்கள் கல்லூரி இப்போது classical நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அதில் முன் வரிசையில் ஒருத்தி வெள்ளைப்பட்டும், நீண்ட அடர்த்தியான பின்னப்படாத கூந்தலும், இடது மூக்கில் மின்னும் ஒரு சிறிய மூக்குத்தியும், தலையில் நெட்த்ஹிசுட்டியுமாக மஹாலட்சுமி போல, இல்ல இல்ல, அவ கையில தேசியக்கொடி இருக்கு.. சோ, அவா மகாலட்சுமி இல்ல, பாரத மாதா.. ச்சே, பாரத மாதா வேசம் போட்டிருந்ததால் அவள் அழகை ரசிப்பதை அப்படியே நிறுத்திக்கொண்டு, நடனத்தை மட்டும் சமத்தாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது என் காதருகே “அந்த பிகர் சூப்பரா இருக்கால்லடா?” என்றது கரகரப்பான ஒரு குரல். அந்த குரலில் இருந்த சிகரெட் நெடி ‘இது நமக்கு தெரிந்த குரல்’ தான் என மூளைக்கு அவசர செய்தி அனுப்பியது.

‘யார்ரா இது, நம்ம பாரத மாதாவ பிகர்னு சொல்றது?’னு திரும்பி பாத்தா தேவராஜன் சார்.. ”சார் அப்படிலாம் இல்ல சார்”.. இவர் தான் எங்கள்கல்லூரி யூத் ஃபெஸ்டிவல் டீமின் ஹெட்.. ஆங்கிலத் துறை விரிவுரையாளர். பார்க்க நம்மவர் கமல் மாதிரி இருப்பார்.. செயலிலும் தான். அவர் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு, என் HODயிடம் அடிக்கடி சண்டை போட்டு என்னை இது போன்ற போட்டிகளுக்கு அழைத்து வந்து என்னை ஒரு வெற்றியாளனாக பார்ப்பதால்.. என் HODக்கு நான் செமெஸ்டரில் பாதி நாட்கள் வகுப்புக்கு வராமல் ODல் இப்படி ஊர் சுற்றுவதே பிடிக்காது..

“பெறகு எதுக்குடா அவள இப்டி வெறிச்சி பாத்துட்டு இருக்க? அந்த நீள முடி, மூக்குத்தி எல்லாம் டான்ஸ் முடிஞ்ச ஒடனே கழட்டி குடுத்துருவா.. ஒரிஜினல் இல்ல.. சோ, ரொம்ப வெரிச்சி பாக்காத” என்னை பார்த்து கண்ணடித்து சொன்னார்..

“இல்ல சார் சும்மா அவைங்க காலேஜ் டான்ஸ தான் பாத்தேன்..”

“இல்ல நீ அவளையும் நல்லா பாத்துக்கோ.. ஒனக்கு அவள தெரியணும்” சீரியஸான குரலில் பேசினார்..

“எதுக்கு சார்?”

”போன மாசம் நடந்த ரோடரி க்ளப் ஃபெஸ்டிவலுக்கு ஒங்க HOD ஒன்ன விட மாட்டேன்னு சொன்னான்ல,” அவர் என் HODஐ மரியாதை இல்லாமல் பேசுவது எனக்கு சந்தோசமாக இருந்தது, “டேய் நான் மட்டும் தான் அவன அப்டி பேசுவேன், நீயும் அதுக்காக அவன் இவன்னு பேசாத, பின்னிருவேன்” என் சிரிப்பை பார்த்திருப்பார் போல.. “நீ கூட அந்த ஃபெஸ்டிவலுக்கு அவனால வர முடியாம போயிருச்சே?”..

“ஆமா சார்.. என்ன அதுக்கு?”

“அப்ப அவங்க காலேஜ்ல இருந்து இந்த பொண்ணு தான் ஷார்ட் ஸ்டோரில வின் பண்ணுனா.. நம்ம காலேஜ் நீ இல்லாதனால பார்டிசிபேட் பண்ணல. அவா எழுதுன கதைய நான் கூட வாசிச்சி பாத்தேன்.. ப்ரிலியண்ட்.. ஃபர்ஸ்ட் இயர் தான் படிக்குறா, ஆனா என்னமா எழுதுறா? இப்ப கூட சிறுகதையும் எழுதுவான்னு தான் நெனைக்குறேன்.. கொஞ்சம் இப்பையே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிரு. ஒனக்கு டஃப் ஃபைட் தான்.. நம்ம காலேஜ் தான் எப்பயும் போல ஃபர்ஸ்ட் வாங்கணும் ஞாபகத்துல வச்சுக்கோ”

எனக்கு அவர் என் முன் இன்னொருத்தியை அதுவும் என் போட்டியாளரை புகழ்வது பிடிக்கவில்லை. என்னை விட ரெண்டு வயது சின்னப்பெண்ணை வைத்து என்னை பயமுறுத்துவதும் பிடிக்கவில்லை.. அவரிடம் கேட்டேன், “என்ன சார், பரத நாட்டியம் தான ஆடிக்கிட்டு இருக்கா? அவா எப்படி ஷார்ட் ஸ்டோரி எழுத வருவா?”

“எல்லாரும் ஒன்னைய மாதிரியே ஒரு ஈவன்ட்ல மட்டுமா பார்டிசிபேட் பண்ண வருவாய்ங்க? நீ மட்டும் இவா கிட்ட தோத்துட்ட அடுத்த வருசம் ஒன்ன வெறும் கதைக்கு மட்டும் இல்லாம, டிராமா டான்ஸ்னு எல்லாத்துலயும் சேத்து விட்ருவேன், பாத்துக்கோ.. அந்த பொண்ணு இன்னும் என்னென்ன ஈவன்ட்லலாம் வந்து பின்னப்போகுதோ!!”

‘என்னடா ஆளாளுக்கு பில்ட்-அப் குடுக்குறாய்ங்க, என எண்ணிக்கொண்டு நான் நடையைக்கட்டினேன்.. எனக்கு அவர் கொடுத்த பில்ட்-அப்பை விட, அடுத்த வருடம் ஒரு வேளை என்னை டான்ஸ் ஆட வைத்து விடுவார்களோ என்கிற பயம் தான் இருந்தது.. நாளை தான் சிறுகதை போட்டி.. தலைப்பு எப்படியும் எய்ட்ஸை வைத்து தான் இருக்கும் என்பதால், நான் இப்போதே அதற்கான முதல் பத்தி எப்படி இருக்க வேண்டும் முடிவை எப்படி அமைக்க வேண்டும் என யோசித்துக்கொண்டிருந்தேன்.. இது வரை நான் இப்படி யோசித்ததில்லை. பேப்பரை கையில் வாங்கி பேனாவை திறந்துவுடன் தோன்றுவதை தான் எழுதுவேன்.. ஆனால் இப்போது நானே இப்படி முன்னக்குடி யோசிப்பது எனக்கே வித்தியாசமாக இருந்தது.. ‘ஒரு வேளை நாம் பயந்துவிட்டோமோ’ என்கிற எண்ணம் வந்தது. உடனே கதையை பற்றி யோசிப்பதை நிறுத்திவிட்டேன்..

“வழக்கம் போல பேப்பர கைல வாங்கிட்டு அங்கனயே யோசிப்போம்.. அங்கனயே எழுதுவோம்.. அங்கனயே ஜெயிப்போம்.. அஞ்சாக்னா சும்மாவா? ஹா ஹா ஹா” சினிமா ஹீரோ செய்வது போல் கையை ஆட்டி டயலாக் பேச டரை பண்ணினேன்.. எல்லாம் காலையில் என் சட்டை பட்டனை பிய்த்த நாடகத்தின் எஃபக்ட்.. ‘அட நமக்கு கூட கொஞ்சம் நடிக்க வருதே என நினைத்துக்கொண்டே மு.வ.ஹால் படியில் இறங்கி மதியம் சாப்பாடு போடும் இடத்திற்கு போய்க்கொண்டிருந்தேன்.. நம்ம கதையில ஹீரோவை நடிகனா காட்டலாமா? சினிமா நடிகனா, நாடக நடிகனா? சே சே, இப்ப எதுக்கு நான் கதைய பத்தி யோசிக்கிறேன்? ஒழுங்கா கேண்டினுக்கு மட்டும் போகணும் என் நினைத்து நடந்தேன்.

எல்லா ஆண்களும் பெண்களை கிண்டல் அடித்துக்கொண்டும், கை காட்டிக்கொண்டும் சுதந்திரமாக சந்தோசமாக சென்று கொண்டிருந்தார்கள்.. பெண்களும் அதை சிரித்துக்கொண்டே ரசித்துக்கொண்டிருந்தார்கள். சில பெண்களும் ஆண்களை சரி சமமாய் ஓட்டினார்கள். பேண்ட் சட்டை மட்டும் இல்லாமல் வேட்டி, ஜிப்பா, ஜீன்ஸ், கைலி, என ஆண்களும், விதமான வண்ணங்களில் சேலைகள், தினுசு தினுசான சுடிதார், ஜீன்ஸ் டாப்ஸ், என பெண்களும் தங்கள் ஆசைப்படி மகிழ்ச்சியாக இருந்தார்கள், ப்ராக்டிகல், இன்டர்னல், செமினார் என அனைத்தையும் மறந்து. ஆனால் யாரும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. இந்த மாதிரி விழா நேரங்களில் மட்டும் இல்லாமல், மற்ற நேரங்களிலும் கல்லூரிகள் இது போலவே இருந்துவிட்டால் வீணான பிரச்சனைகள், இழுத்துக்கொண்டு ஓடுவதெல்லாம் நடக்காது என நினைத்துக்கொண்டிருந்தேன். இதையும் கதையில் சேர்க்கலாமா என்னும் எண்ணம் தேவையில்லாமல் வந்தது. கொஞ்ச நேரமாகவே எனக்கு எப்போதும் சிறுகதை ஞாபகமாகவே இருக்கிறது. நான் அவளை நினைத்து பயப்படுகிறேனோ? என்னோடு நேரடியாக ஒரு முறை கூட மோதாதவளை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? தெரியவில்லை. ஒரு வேளை தேவராஜன் சாரே அவளை பாராட்டியதாலா? இருக்கலாம்.. 

“எக்ஸ்க்யூஸ் மீ..” ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பினேன். “ஐயம் கயல்... கயல்விழி..” கை நீட்டினாள்.. ஒரு பெண்ணே தானாக வந்து கை கொடுப்பதால், லேசான அதிர்ச்சியில் என் கையை மெதுவாக கொடுத்தேன்..

“நீங்க தான கண்ணன்?”

“ஆமா.. நீங்க?”

“அதான் சொன்னேனே, கயல்னு.. த்ரி வீ காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் பிசிக்ஸ் படிக்குறேன்..”

“ஓ அப்படியா? சரி, என்ன எப்படி தெரியும்?” இந்த கேள்வி நான் அவளை கேட்கும் போது தான் என் மண்டைக்கு உரைத்தது, மேடையில் பரத நாட்டியம் ஆடிய என் எதிரி தான் இவள் என்று..

“இல்ல, நான் ஷார்ட் ஸ்டோரில பார்டிசிபேட் பண்றேன் எங்க காலேஜுக்காக.. எங்க மேம்ட்ட ஐடியா கேட்டேன் கதைக்கு.. உங்கள ரெஃபர் பண்ணாங்க” என்றாள்..

அவள் பேசுவதில் எதுவும் நக்கல் இருப்பதாக எனக்கு படவில்லை.. சீரியஸாக தான் கேட்டாள்.. “நீங்க தான் அல்ரெடி பரத நாட்டியம் எல்லாம் ஆடுனீங்களே? பெறகு எதுக்கு தேவயில்லாம கதயெல்லாம்?”

“சும்மா ஒரு ஆச தான்.. அட்லீஸ்ட் செகண்ட் ப்ரைசுக்காவது ட்ரை பண்ணலாம்ல?” அவள் இப்போதும் நக்கல் அடிப்பதாக எனக்கு தெரியவில்லை.

“கதை எழுதுறதெல்லாம் எனக்கு எப்படினு சொல்ல தெரில.. அது அப்படியே தன்னால வரணும்.. நம்மையும் மீறி ஏதோ ஒன்னு நமக்குள்ள புகுந்து நம்மள எழுத வைக்கும். நல்லா பேசுற எல்லாராலயும் நல்லா எழுதிற முடியாது” என அவளுக்கு கதை எழுதுவதை ஏதோ செயற்கைக்கோள் செய்வது போன்ற கஷ்டமான ஒன்றாக விளக்க எண்ணினேன்..

“ஓ இவ்ளோ விசயம் இருக்கா? நல்ல வேள, நீங்க ரோடரி க்ளப் ஃபெஸ்டிவல்ல பார்டிசிபேட் பண்ணல.. இல்லேனா நான் செகண்ட் தான் வாங்கிருப்பேன்”.. அவள் கூட நான் தான் ஜெயிப்பேன் என நம்புகிறாள் என நினைக்கும் போது தான் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. நான் அவளையே பார்த்தேன்.. லேசாக சிரித்தேன்..

“என்ன சிரிக்குறீங்க?”

“இல்ல நீங்க பரதம் ஆடும் போது பாத்தேன், நீளமான முடி, மூக்குத்தி எல்லாம் போட்டிருந்தீங்க.. எங்க சார் அதெல்லாம் மேக்-அப்.. டான்ஸ் ஆடி முடிஞ்சதும் கழட்டிருவாங்கனு சொன்னாரு.. ஆனா நீங்க இன்னும் கழட்டாம அதையே போட்டுக்கிட்டு இருக்கீங்களே அதான் சிரிச்சேன்”..

“ஹலோ இது என் ஒரிஜினல் முடி தாங்க.. மூக்குத்தி எங்கப்பா காசு போட்டு வாங்கிக்கொடுத்த சொந்த மூக்குத்தி” பொய்க்கோபம் காட்டினாள்..

எனக்கு குட்டை கூந்தல் இருக்கும் பெண்களை மிக பிடிக்கும்.. நீளக்கூந்தல் பெண்கள் என்றால் மிக மிக பிடிக்கும்.. என் அம்மாவுக்கும் நீளக்கூந்தல் இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.. போதாக்குறைக்கு இவள் மூக்குத்தி வேறு போட்டிருந்தாள்.. கேட்கவா வேண்டும்? அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஹீல்ஸ் போடவில்லை, வலது கையில் சிம்பிளான வாட்ச், இடது கையில் இரண்டு சிறிய தங்க வளையல்கள், கழுத்தில் ஒரு சிறிய தங்க சங்கிலி, சங்கிலியின் டாலரில் என்ன இருந்தது என பார்க்க முடியாத இடத்தில் அது இருந்தது, ட்ரெஸுக்கு மேட்ச்சான கலரில் கர்சீப்பும் கம்மலும்.. பெண்களிடம் தான் அழகு படுத்தும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் போல.. நான் குறுகுறுவென பார்ப்பதை கவனித்து விட்டாள் என நினைக்கிறேன்.. “சரி நான் வரேன்.. நாளைக்கு கதை எழுதும் போது மீட் பண்ணலாம்.. பை” என்று கூறி என் பதிலுக்கு காத்திராமல் வேகமாக சென்றுவிட்டாள்.. ஆண்கள் கொஞ்சம் உத்து பார்த்தாலே அங்கிருந்து விலகி செல்லும் பெண்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹ்ம் கல்லூரி காலத்தில் எந்த பெண்ணைத்தான் பிடிக்காமல் இருக்கும்?

மறுநாள் பல்கலையின் ஒரு வகுப்பறையில் காலை 10மணிக்கு சிறுகதைப்போட்டி துவங்கியது. என்னைப்பார்த்து சிநேகமாக சிரித்தாள். அந்த சிரிப்பில் வாழ்த்தும், ‘இவன் நம்மை ஜெயித்துவிடுவானா?’ என்கிற பயமும் கூட இருந்தன. நானும் அவளை பார்த்து சிரித்தேன்.. பேப்பரை கொடுத்தார்கள்.. தலைப்பை சொன்னார்கள்.. நான் சர சர வென எழுத ஆரம்பித்தேன்.. ஆரம்பிக்கும் முன் அவளை பார்த்தேன்.. பேனா நுனியை வாயில் வைத்துக்கொண்டு வாசல் பக்கம் வெறித்துக்கொண்டிருந்தாள்.. ‘இதெல்லாம் என்னத்த ஜெயிக்க போகுது? பேசாம பரத நாட்டியம், கோலப்போட்டி, சமையல் போட்டில மட்டும் இனிமேல் கலந்துக்கட்டும்’ என நினைத்துக்கொண்டு என் எழுத்தை தொடந்தேன்.

ஒன்னரை மணி நேர அவகாசம் உண்டு கதைக்கு.. அவள் ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டு கிளம்பிவிட்டாள். நான் வெளியில் செல்லும் அவளை பார்த்தேன்.. வாசலை கடந்ததும் திரும்பி என்னை பார்த்து சிரித்து தன் பெருவிரலை உயர்த்திக்காட்டிச்சென்றாள்.. புது உத்வேகத்துடன் நான் இன்னும் வேகமாக எழுதினேன்.. ஒரு மணி நேரம் முப்பத்திரெண்டு நிமிடத்தில் என் கதையின் கடைசி வரையை முடித்துக்கொடுத்தேன். கை விரலகளுக்கு சொடுக்கு போட்டுக்கொண்டே வெளியில் வந்தேன். அவள் நின்று கொண்டிருந்தாள். 

“என்ன இங்கேயே நிக்குறீங்க?”

“இல்ல காலையில எங்க மேம் இங்க கொண்டு வந்து விட்டாங்க.. இப்ப அடுத்த ஈவண்டுக்கு போய்ட்டாங்கனு நெனைக்குறேன்.. எனக்கு எப்படி போறதுனு தெரில.. சரி வாங்க நான் உங்கள் மு.வ.ஹால்ல விட்டுறேன்.. அங்க தான் எல்லா காலேஜும் இருப்பாங்க”..

அவளோடு பேசிக்கொண்டு நடந்ததில் அவள் சொந்த ஊரே விருதுநகர் தான் என்றும், அவங்க அப்பா சொந்தமாக கமிஷன் வியாபாரம் பார்ப்பதாகவும் தெரிந்து கொண்டேன்.. அவளுக்கு நானோ டெக்னாலஜியில் ஆராய்ச்சி படிப்பு படிக்க ஆசையாம். பிசிக்ஸ் பற்றி நிறைய பேசினாள். நானும் பிசிகஸ் தான் என்பதை அவளிடம் சொல்லவே இல்லை. ஏன்னா, எனக்கு பிசிக்ஸில் பிசிக்ஸ் என்னும் வார்த்தையை தவிர எதுவும் தெரியாது.. அவளுக்கென்று செல்ஃபோனோ, ஈமெயில் முகவரியோ கூட இல்லை. பேசிக்கொண்டே மு.வ.ஹாலுக்கு வந்துவிட்டோம்.. அவள் தன் மேமை பார்த்ததும் என்னை அறிமுகப்படுத்தினாள்..

“மேம் இவங்க தான் அஞ்சாக காலேஜ் கண்ணன்.. லாஸ்ட் டூ இயர்ஸா இவங்க தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்.. இன்னைக்கு என்னால அர மந்நேரத்துக்கு மேல கூட எழுத முடில... ஆனால் இவங்க ஒன்னரை மந்நேரம் எழுதுறாங்க. கண்டிப்பா இவங்களுக்கு தான் ப்ரைஸ் கிடைக்கும்” என்றாள் வெள்ளந்தியாக பொறாமையே இல்லாமல் என்னை பாராட்டிக்கொண்டு.. என்னை அவள் ஓவராக புகழ்வதை கண்ட அந்த மேம், ‘கொஞ்சம் கெளம்புறியா?’ என்பது போல் என்னை பார்த்தார்.. வேண்டா வெறுப்பாக விடைபெற்று வந்தேன்.. 

இன்று மாலையோடு எல்லாம் முடிந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.. அடுத்து இங்கு மாப்ளையாக மாம்ஸாக, நண்பனாக, தோழியாக காதலியாக இருந்த ஒவ்வொருவரும் பிரிந்து சென்றுவிட வேண்டியது தான்.. அடுத்த ஆண்டோ அல்லது இது போல் வேறு எங்காவதோ நடக்கும் போட்டிகளில் வேண்டுமானால் இனி பார்க்க முடியும். நாளை முதல் இந்த அனுபவங்கள் எல்லாம் ஒரு கனவு போல் மாறிவிடும். பெண்களிடம் பேசாமல், தோழர்களோடு அரட்டை அடிக்காமல், மரத்தடியில் படுத்துக்கிடக்காமல், நேரம் காலம் அறியாமல் இருந்தது போல் இல்லாமல், இனி வழக்கம் போல் டைம் டேபிள் போட்ட கல்லூரி வாழ்க்கைக்கு மீண்டும் போக வேண்டும். இந்த சந்தோசம் இன்னும் அரைநாளில் முடியப்போவதை நினைக்கும் போதே யாரைவாது கொண்டு வந்து அப்படியே காலத்தை இந்த நொடியோடு நிறுத்திவிடலாமா என யோசித்துக்கொண்டிருந்தேன்.. நான் மட்டும் அல்ல, பலரும் இப்படித்தான் யோசித்துக்கொண்டிருப்பார்கள். 

மாலை கிளம்ப வேண்டுமே என சோகத்தில் இருந்த என்னை தேவராஜன் சார் அழைத்தாக கூறினார்கள் கல்லூரி நண்பர்கள்.. அவரிடம் சென்றேன். அவர் என்னை பல்கலையின் ஊழியர் குடியிருப்பினுள் கூட்டி சென்றார்.

அங்கே ஒரு வீட்டிற்குள் சென்றோம்.. எங்கள் கல்லூரி முதல்வர், யூத் ஃபெஸ்டிவலின் பொறுப்பு ஆசிரியர், போட்டிகளின் நடுவர்கள் சிலர் என அமர்ந்திருந்தார்கள். எங்கள் பிரின்சிபல் என்னை பார்த்துக்கேட்டார்..

“கதை எப்படி எழுதிருக்கே?” தலையை குனிந்து கொண்டு கண்களை மட்டும் மேல் உயர்த்தி பார்த்து என்னை குத்தலாக கேட்பது போல் இருந்தது.

“நல்லா எழுதிருக்கேன் சார்” லேசான தயக்கம் இருந்தாலும் தைரியமாக சொல்ல நினைத்தேன்.. 

என் கையில் சில பேப்பர்களை திணித்து ”இத படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லு”

நான் மெதுவாக அவற்றை பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.. மொத்தமே 6பக்கங்கள் தான்.. முதல் இரண்டு வரிகளில் சாதாரணமாக ஆரம்பித்த கதை அந்த ஆறாவது பக்கத்தில் மனதில்  மிகப்பெரிய சுமையை ஏற்றிவிட்டு முடிந்தது. கண்களில் லேசாக கண்ணீர் வந்தாலும், கல்லூரி முதல்வருக்கு பயந்து அவை கண்களுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டன..

“கதை எப்படியிருக்கு?”

“சூப்பராருக்கு சார்”

“ஆமா இன்னொருத்தி எழுதுன கதைய நல்லாருக்குனு சொல்லி பாராட்டு.. வெளங்கிருவ..” என்னை ஏன் முதல்வர் வைகிறார் என தெரியவில்லை. நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.. “என்னடா மொறைக்குற?”

“ஒன்னுமில்ல சார்”

“அந்த த்ரி வீ காலேஜ் காரி எழுதுனத விட நல்லதா ஒரு கத ஒன்னால இப்ப ஒடனே எழுதித்தர முடியுமா?” என்னை பார்த்து நேராக கேட்டார் என் முதல்வர் எந்த தயக்கமும் இல்லாமல். த்ரீ வீ காலேஜ்.. எனக்கு அப்போது தான் புரிந்தது, இது கயல் எழுதிய கதை என்றும், அவள் இவ்வளவு சிறப்பாக எழுதுபவள் என்றும். என்னமாக எழுதியிருக்கிறாள்? நிச்சயம் என்னால் இதை விட சிறப்பாக எழுத முடியாது. நல்ல வேளை எனக்கு ரெண்டு வருடம் பிந்தி பிறந்திருக்கிறாள்.. இல்லையென்றால் என்னால் சிறுகதையில் ஜெயித்திருக்கவே முடியாது.. அவள் மேல் பொறாமையாக இருந்தாலும், இவ்வளவு நல்ல கதை எழுதியிருப்பதால் எனக்கு அவள் மேல் மதிப்பும் வந்திருந்தது.

“என்னடா எழுத முடியுமா முடியாதா? சாந்தரம் வரைக்கும் டைம் தரோம்.. யோசிச்சி நிதானமா எழுது” எனக்கு கட்டளையிட்டார் முதல்வர். போட்டி நடுவர்களை பார்த்து, “நல்ல வேள சார் எனக்கு மொதையே சொல்லிட்டீங்க.. இல்லேனா நாங்க தோத்திருப்போம் எங்க மானம் போயிருக்கும். அந்தக்கத அவ்ளோ நல்லாவா இருக்கு?”

“சார் நீங்க படிக்கலையா? பிரமாதமா இருக்கு?”

“ச்செய் கதை படிக்குறது, கட்டுரை எழுதுறது, பேச்சுப்போட்டில பேசுறதெல்லாம் நமக்கு பிடிக்காது சார்.. சரி அத விடுங்க, நான் இவன வச்சி இத விட நல்லா எழுதித்தாரேன்.. நமக்கு முடிச்சி குடுத்துருங்க” என்று என்னை பார்த்தார்.. “என்ன நீ இன்னும் எழுத ஆரம்பிக்கலையா?”

“சார்”

“என்னடா?”

“இல்ல, இத விட நல்லா எழுத முடியாது சார்.. கத ரொம்ப ரொம்ப நல்லாருக்கு சார்” நான் அவர் என்ன சொல்வாரோ என்கிற பயத்தில் பார்த்தேன்.. கல்லூரியில் இருந்து தூக்கி விடுவார்களோ? ’சே சே இதுக்காண்டிலாம் தூக்க மாட்டாங்க’ என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

முதல்வர் தேவராஜ் சாரை பார்த்து, “யோவ் என்னய்யா டீம் வச்சிருக்க? சொந்தமாவும் எழுத மாட்டீங்க.. ஒன்ன குடுத்து அத விட நல்லா எழுத சொன்னா அதையும் பண்ண மாட்டீங்க? பெறகு எதுக்கு ஒங்களுக்கு இத்தன நாள் OD ப்ராக்டீஸ் எல்லாம்?”

தேவராஜ் சார் என்னை பார்த்து கண்களாயே ‘எழுது’ என கெஞ்சினார்.. நானும் பதிலுக்கு கண்களாலேயே ‘முடியாது’ என்றேன்.. 

பிரின்சிபல் என்னை மீண்டும் பார்த்தார். “ஒனக்கு பர்ஸ்ட் ப்ரைஸ் வேணும்னா எழுதிக்குடு”..

“இல்ல சார், இதுக்கு மேல நல்லா எழுத முடியாது சார்.. இதுக்கு தான் சார் பர்ஸ்ட் ப்ரைஸ் குடுக்கணும்.. நான் எழுதுனதுக்கு என்ன கெடைக்குதோ அது போதும் சார்” சொல்லிவிட்டு தேவராஜ் சார் கையில் கயல்விழியின் பேப்பரை கொடுத்துவிட்டு அந்த அறையில் இருந்து வந்துவிட்டேன்.. கொஞ்ச நேரம் வெளியில் தேவராஜ் சார் வருகிறாரா என காத்திருந்தேன்.,. உள்ளே அவருக்கு செம டோஸ் விழுந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் அங்கு இருப்பது சரியாக இருக்காது என்பதால் கிளம்பிவிட்டேன்.. முதலில் கயலை பார்த்து கை கொடுத்து “நீ தான் வின்னர்” என சொல்ல வேண்டும்.. வேக வேகமாக மு.வ. ஹாலுக்கு நடந்தேன்.


மணி இப்போது மாலை 3.. இன்னும் ஒரு மணி நேரத்தில் பரிசளிப்பு விழா ஆரம்பமாகிவிடும். நான் கயலை தேடினேன். காணவில்லை. ஹாலுக்குள் நுழைந்தேன்.. அங்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் இடம் ஒதுக்கி சீட்டிங் அரேஞ்மெண்ட் செய்திருந்தார்கள். எங்கள் கல்லூரிக்கு பக்கவாட்டில் அவளின் த்ரீ வி கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவள் அங்கு தான் அமர்ந்திருந்தாள். நான் எங்கள் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து அவள் என்னை பார்க்கிறாளா என கவனித்துக்கொண்டிருந்தேன்.. அவள் கவனிக்கவில்லை.. தோழிகளோடு சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள். அவளின் கண்களில் படுமாறு இங்கும் அங்கும் நடந்து ஒரு வழியாக அவளை என்னை பார்க்க வைத்துவிட்டேன்.. ‘ஒரு நிமிடம் இங்க வா, உன்ட்ட பேசணும்’ என சைகை செய்தேன்.. அவள் தன் பிரின்சிபல் வந்திருப்பதாகவும் பேச முடியாது என்றும் பதில் சைகை செய்துவிட்டு போலி சோகம் காட்டினாள்.. நான் பதிலுக்கு சைகையிலேயே, ‘பரவாயில்ல நீ தான் ஷார்ட் ஸ்டோரில ஃபர்ஸ்ட்’ என்றேன்.. அவள், ‘சும்மா டூப்பு விடாத’ என சைக்கை காட்டி வாயை கோணினாள்.. ‘அட சத்தியமா நீ தான் பர்ஸ்ட்’ என கையில் சத்தியம் செய்யும் முன், தேவராஜா சார் என்னை வந்து இழுத்துக்கொண்டு எங்கள் கல்லூரிக்கு போட்டிருக்கும் இடத்தில் அமர வைத்தார்..

“Function ஆரம்பிக்க போகுது, நடு ஹால்ல நின்னும் கடல போட்டுக்கிட்டு இருக்க?” என்று செல்லமாக கோவித்தார்.. என் மேல கோவமாக இருப்பார் என நினைத்தேன்.. ஆனால் ஆள் ஜாலியாகத்தான் இருந்தார். 

“சார் சாரி சார்.. நெஜமாவே அந்த பொண்ணு சூப்பரா எழுதிருந்தது சார். அதுக்கு தான் சார் ப்ரைஸ் கெடைக்கணும்”

“அதுக்காக பிரின்சிபல்ட்ட அபப்டித்தான் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுவியா? நாளைக்கு காலேஜ்ல என்ன ஆட்டம் ஆடப்போறானோ?”

“நான் வந்ததுக்கு பெறகு என்ன ஆச்சி சார்? ஒரே சத்தமா கேட்டுச்சி.. ஒங்கள ரொம்ப வஞ்சாய்ங்களா?”

“எலேய் மரியாதையா பேசு ஒன்ன விட மூத்தவங்கள”

“சாரி சார்”.. 

இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துடன் பரிசளிப்பு விழா தொடங்கும் என அறிவிப்பு வந்தது. ஒவ்வொரு போட்டியாக பரிசை அறிவித்துக்கொண்டு வந்தார்கள். எங்கள் கல்லூரிக்கும் த்ரீ வி கல்லூரிக்கும் தான் பயங்கர போட்டி. பரதத்தில் அவர்கள் கல்லூரி தான் ஜெயித்தது. அவள் தான் பரிசை வாங்கினாள். அவர்கள் கல்லூரியும் எங்கள் கல்லூரியும் ஒவ்வொரு முறை பரிசு ஜெயிக்கும் போதும் மாற்றி மாற்றி போட்டி போட்டு கத்தினார்கள்.. வகுப்பு நேரங்களிலும் வளாகத்திலும் சுத்தமாக பிடிக்காத நம் கல்லூரிக்காக தான் இது போன்ற போட்டிகளில் உயிரை கொடுத்து ஜெயித்தும் கொடுக்கிறோம், கல்லூரிக்கு ஆதரவாகவும் கத்துகிறோம் என்பதே ஒரு நகைமுரணாக இருந்தது. ‘அதான் இது ஒன்னுல வாங்கிட்டாளே, சிறுகதை போட்டிலயாச்சும் நமக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம்’ என நப்பாசையாக நினைத்துக்கொண்டேன். தமிழ் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி என பரிசை அறிவித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்ததாக சிறுகதைப்போட்டி.. நானும் கயலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு “நீ தான் பர்ஸ்ட், நீ தான் பர்ஸ்ட்” என சிரித்துக்கொண்டே சைகை காட்டினோம்.

“மூன்றாம் பரிசு திருமங்கலம் PKN கல்லூரி”... அவைங்க காலேஜ்ல இருந்து ஓவர் சவுண்டு.. ‘அடப்பாவிகளா மூனாவதுக்கேவா?’ என நினைத்துக்கொண்டேன்.

“இரண்டாம் பரிசு விருதுநகர் த்ரீ வி காலேஜ்” என்றதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.. நான் தேவராஜ் சாரை கேள்விப்பார்வை பார்த்தேன்.. கயல் பரிசு வாங்க போவதற்கும் என் பெயரை வாசிப்பதற்கும் இடையில் இருக்கும் நேரத்தில் தேவராஜ் சார் அதை சொன்னார்.

“நீ முடியாதுனு சொல்லிட்டு போயிட்டா நம்ம காலேஜ் தோத்துரும்னு நெனச்சியா? நீ எழுதி குடுத்திருந்தா 5000ரூபாயோட முடிஞ்சிருக்கும்.. இப்ப ஒவ்வொரு ஜட்ஜுக்கும் 10000 ரூபாய் செலவு.. அவ்வளவு சீக்கிரத்துல நம்ம காலேஜ தோக்க விட்ருவோமா?” என சிரித்தார்.. அவர் சிரிப்பு எனக்கு மிக அசிங்கமாய் கேவலமாய் இருந்தது.. “முதல் பரிசு அஞ்சாக்” என்று மேடையில் சொல்லி முடிக்கும் முன்னர் இங்கு எங்கள் கல்லூரி நண்பர்கள் “ஊஊஊஊஊஊஊஊ ஏஏஏஏஏஏ” என கத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்கு தெரியாதே அது உண்மையான திறமைக்கு சமாதி கட்டிவிட்டு வந்த பரிசு என்று.. நான் மேடைக்கு மெல்ல நடந்து போனேன்.. எங்க பிரின்சிபல் யார் கிட்டயோ சொன்னாரு, “எங்க கண்ணன் இருக்குற வரைக்கும் சிறுகதை போட்டில எங்கள அடிக்க ஆளே கிடையாது” என.. 

மேடையில் பரிசை வாங்கிவிட்டு எங்கள் கல்லூரிக்கான இடத்தை நோக்கி வரும் போது, கயல் என்னை வழி மறித்து எனக்கு கை கொடுத்தாள். “நாந்தான் சொன்னேன்ல நீங்க தான் ஜெயிப்பீங்கன்னு? கங்கிராட்ஸ்”..

என் கையில் இருந்த பரிசை பார்க்கும் போது முந்தைய நாள் நாடகத்தில் நான் பேசிய வசனம் தேவையில்லாமல் ஞாபகம் வந்து போனது ”வேற எவனுக்காவது பிள்ளைய பெத்து எதுக்கு என்ன அப்பானு கைய காட்டவா?”...

அந்த கோப்பையை நான் தொலைத்தால் கூட தேவலை தான்.. ஆனால் அடுத்த ஆண்டு இதே யூத் ஃபெஸ்டிவலில் கயலை பார்த்து “இந்தா இது ஒனக்கு தான்”னு சொல்லி கொடுக்கணும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த ஆண்டு யூத் ஃபெஸ்டிவல் போகும் போது கயல் அந்த டீமில் இல்லை.. கேட்ட போது, ஒரு பெண் சொன்னாள், “அவளுக்கு கதை சரியா எழுத வரலனு இந்த தடவ அவள எங்க காலேஜ் டீம்ல செலெக்ட் பண்ணலைங்க” என்று..

யூத் ஃபெஸ்டிவல் - நிஜமாகவே கல்லூரிகளின் ப்ரெஸ்டீஜ் விசயம் தான்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One