சிவகாசி வட்டார வழக்கு வார்த்தைகள்...

Thursday, December 12, 2013

சமீபத்தில் சென்னையில் வேலை செய்யும் ஃப்ரெண்ட் ஒருத்தனிடம் பேச வேண்டியிருந்தது.. சென்னை கிளம்பும் வரை “மாப்ள, மாப்ள” என்று வாயார அழைத்தவன், சென்னையின் yo yo guy ஆன பின் ’மச்சி’ என்று தான் விளிப்பான்.. நான் பேசும் போது, ’அவிய்ங்க, இவிய்ங்க’ என்பேன்.. ‘டேய் நீங்க இன்னும் மாறவேயில்லையாடா கண்ட்ரி ஃப்ரூட்ஸ்’ என்பது போல் ஒரு லுக் விடுவான்.. அவனைப்பொறுத்தவரை அவிய்ங்க, இவிய்ங்க என்பதெல்லாம் பட்டிக்காட்டான் வார்த்தைகள்.. ‘அவனுக, இவனுக’ என்று சொல்வது தான் சிட்டி ஸ்டைல்.. மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும் ஒரு விசயம் தான் இது.. ஆனால் இன்றைய பொருளாதார தேடுதலின் முக்கிய அங்கமாக சென்னையிலும் பெங்களூருவிலும் ஒவ்வொருவராக பிழைக்க போவதால், தங்கள் வட்டார வழக்கு என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட இவர்கள் அறியாமல் இருப்பது தான் வேதனையான விசயம்.. 

புதுக்கோட்டையில் வேலைக்கு சேர்ந்த புதிதில் என் மேனேஜரும், ஒரு சில டீலர்களும் என்னை கிண்டலடிப்பார்கள் நான் ‘வைவாய்ங்க’, ‘வசவு விழும்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால்.. ”அது என்ன கிராமத்தான் மாதிரி ‘வைவாய்ங்க’னு சொல்ற? டீசண்ட்டா ’திட்டுறாய்ங்க’னு சொல்லு” என்பார் என் மேனேஜர்.. எனக்கு புரியவில்லை, ரெண்டுமே தமிழ் வார்த்தை, அதில் ஒன்று டீசண்ட்டாகவும் இன்னொன்று எப்படி கிராமத்து வார்த்தையாகவும் மாறிப்போனது என்று.. வைவது என்பது எங்கள் பகுதிகளில் நாங்கள் பேசும் சொல். ஆனால் எங்கள் பகுதிகளிலும் பலர் இப்போது ‘திட்டுறான்’ என்று தான் சொல்கிறார்கள். நெல்லை பகுதிகளில் “ஏசுதாம்லே என்னைய” என்பார்கள் முன்பெல்லாம்.. இப்போது அவர்களும் “திட்டுதாம்லே” என்கிறார்கள்.. ’திட்டுறான்’ என்கிற வார்த்தை ஆல் ஓவர் தமிழ்நாடு பொதுவாகி விட்டது இப்போது.. 



இந்த மாதிரி பொதுவான வார்த்தைகள் வரும் போது தான் நம் பகுதியில் நாம் பேசிய வார்த்தைகளை மறக்க ஆரம்பிக்கிறோம்.. இப்போது எங்கள் பகுதியிலேயே நாங்கள் மறந்து கொண்டு வரும், ஒரு சில நல்ல வார்த்தைகளை பற்றி இங்கு சொல்லலாம் என்றிருக்கிறேன்.. முதலில் உறவு முறைகளை கூப்பிடுவதில் இருந்து ஆரம்பிப்போம்.. அப்பாவின் அம்மா, அப்பா; அம்மாவின் அம்மா, அப்பா என எல்லாருமே தாத்தா பாட்டி தான் இப்போது.. எங்கள் பகுதிகளில் அம்மாவின் அம்மாவை “மாம்மை/மாம்மே” என்பார்கள்.. அதாவது மாமனின் அம்மா.. அம்மாவின் அப்பாவை ”மாம்ப்பா” (மாமனின் அப்பா) என்பார்கள்.. நான் வளர்ந்தது சிவகாசி என்றாலும், என் அப்பாவின் ஊர் விருதுநகர் என்பதால் நான் “ஆச்சி” என்பேன், அது விருதுநகர் வழக்கு.. எங்கள் தெருவில் அம்மாவின் அம்மாவை ஆச்சி என்றும், அம்மாவின் அப்பாவை தாத்தா என்றும் சொல்லும் ஒரே ஆள் நான் மட்டும் தான்.. மற்ற அனைவரும் மாம்மே, மாம்ப்பா தான்.. அதே போல் அப்பாவின் அம்மாவை, “ஐயம்மா/ஐயாம்மா” என்போம்.. அப்பாவின் அப்பாவை “ஐயப்பா/ஐயாப்பா” என்போம்.. விருதுநகரில் நான் சிறுவனாக இருந்த போது தங்களது அப்பாவை எல்லோரும் ‘ஐயா’ என்று தான் அழைப்பார்கள்.. ஆனால் இப்போது அங்கும் மற்ற ஊர்களை போல் ’அப்பா’ தான்.. என் அக்காவும், அண்ணனும் இப்போதும் என் பெரியப்பாவை பற்றி பேசும் போது, ஐயா என்று தான் குறிப்பிடுவார்கள்..

அத்தை மகள் நம்மை விட மூத்தவளாக இருந்தால் அண்ணி என சொல்லிவிடலாம் இப்போது.. அதே போல் மனைவியின் அக்காவையும், கணவனின் அக்காவையும் கூட அண்ணி என்று தான் சொல்கிறார்கள்.. அந்த உறவுகளை எல்லாம் எங்கள் பகுதியில் “மைனி” (மதினி என்னும் வார்த்தையின் மரூஉ) என்று தான் once upon a time சொன்னோம். அக்காவின் கணவனோ, தங்கையின் கணவனோ, அல்லது மனைவியின் அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் ‘மாப்ளை’ என்கிறார்கள் இப்போதெல்லாம்.. ஆனால் அக்காவின் கணவனாகவோ, மனைவியின் அண்ணனாகவோ , இருந்தால் ’மச்சான்’ என்று தான் சொல்ல வேண்டும்.. தங்கையின் கணவனாகவோ, அல்லது மனைவியின் தம்பியாகவோ இருந்தால் தான் ‘மாப்பிள்ளை’ என அழைக்க வேண்டும். ஒரு முறை மட்டும் மேலே இருக்கும் பாயிண்ட்டை வாசித்தால் லேசாக தலைவலியும் கிறு கிறுவெனவும் வரும்.. இன்னொரு முறை நிதானமாக வாசியுங்கள், புரியும்.. அதே போல், கொழுந்தியாள், நாத்தனாள் என்கிற உறவுமுறைக்கெல்லாம் இப்போதும் யாருக்கும் அர்த்தம் தெரியுமா என ஒரு கருத்துக்கணிப்பு நடத்த வேண்டும்.. 

நம்மை விட மூத்த, பக்கத்து வீட்டுக்காரரையோ, கடைக்காரரையோ, அல்லது சாலையில் செல்லும் ஒரு நபரையோ யாரை அழைக்க வேண்டுமானாலும் “அண்ணாச்சி” என்று தான் அழைப்போம் எனக்கு விபரம் தெரிந்த வயதில் கூட.. பின் அண்ணன்/அண்ணே என்று ஆனது கொஞ்சம் கொஞ்சமாக.. இப்போது ஸ்டைலாக ’அண்ணா’வாகி விட்டது. ’அண்ணே’ என்கிற வார்த்தை என்றாலே அது மதுரை தான்.. மதுரையில் ஒவ்வொருவரும் “அண்ணே” என்று கூப்பிடும் அழகே தனி.. ஆனால் அங்கு கூட எல்லா திக்கும் அண்ணா தான் இப்போது.. அண்ணே என்று யாரையாவது அழைத்தால் “நீங்க கிராமமா பாஸ்?” என்கிறார்கள்.. “அண்ணாச்சி”னு மட்டும் சொன்னோம், அவ்ளோ தான் அவன் சொத்துல பங்கு கேட்ட மாதிரி மொறைக்க ஆரம்பிச்சிருவாய்ங்க.. அண்ணாச்சி என்று கூப்பிடுவதை நிறுத்தியிருந்தாலும் இப்போது கொஞ்ச நாட்களாய் மீண்டும் அண்ணாச்சி என கூப்பிட ஆரம்பித்திருக்கிறேன்.. 

கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வயித்துப்பிள்ளைக்காரி என்போம்.. தாலி கட்டுவதை திருப்பூட்டுறது என்போம்.. சந்து என்று சொல்ல மாட்டோம், கடவு என்று தான் சொல்லுவோம். ”தம்பி கடவுக்குள்ள காயிற துணிய எடுத்துட்டு வா மழ வார மாரி இருக்கு” என என் ஆச்சி சொன்னது இப்போதும் ஞாபகம் உள்ளது.. மழை என்றதும் இதுவும் ஞாபகம் வருகிறது. மழைத்தண்ணீர் மாடியில் இருந்து விழும் குழாயை ‘மடாய்’ என்போம்.. இப்போது யாரும் மடாய் என்கிற வார்த்தையை பயன்படுத்துவாக எனக்கு ஞாபகம் இல்லை.. சோறு சாப்பிடும் தட்டை 'வட்டில்' என்போம். சோறு எடுக்கும் கரண்டியை 'சட்டுவம்' என்போம்.. பல ஊர்களிலும் அமைதியாக இருப்பதை, ‘அவன் பாட்டுக்க செவனே (சிவனே)னு இருக்கான்” என்பார்கள்.. எங்கள் பக்கம் அதை, “சூசோன்னு இருக்கிறவன ஏன்டா வம்பிழுக்கிற?” என்போம்.. சிவனேவும் சூசோவும் எப்படி நாம் பேசும் அர்த்தத்தில் வந்தன என எனக்கு சத்தியமாக ஐடியாவே இல்லை. 

”சீவனயும் (ஜீவன்) பலனயும் (பலன்) வாங்காத பெசாசே” என்பார் கோபமாக என் அம்மா, சிறு வயதில் நான் அடம் பிடிக்கும் போது.. இப்போதெல்லாம் அந்த வார்த்தையை ஏதாவது சர்ச் வாசலிலோ, சேனல் மாற்றும் போது ஏதாவது கிறிஸ்தவ போதகரின் வாயில் இருந்தோ தான் பெற முடிகிறது. ”ஒரே அச்சலாத்தியா இருக்கு”.. “டேய் அச்சலாத்தி படுத்தாம போடா” என்றும் என்னால் சிவகாசி பக்கம் இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. அச்சலாத்தி என்பதற்கு, எரிச்சல், தொந்தரவு என்று இடத்திற்கு தகுந்தவாறு பொருள் உண்டு.. அச்சலாத்தி என்கிற வார்த்தை எப்படி பயன்பாட்டுக்கு வந்திருக்கும், அல்லது எந்த வார்த்தையின் திரிபு, மரூஉ என்றும் யோசிக்கிறேன்.. ஆனால் பதில் தான் இல்லை.. 

தினமும் இரவு ஃபேக்டரியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் எங்கள் அப்பா ஃபோன் அடித்து, “தம்பி இன்னைக்கு கடிச்சிக்கிட என்ன வாங்கிட்டு வர?” என்பார்.. கடிச்சிக்கிட - பெயரிலேயே அர்த்தம் இருக்கிறதே, இரவு உணவிற்கு side dish.. பெரும்பாலும் அந்த ’கடிச்சிக்கிட’ பக்கோடாவாகத்தான் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா? கடிச்சிக்கிட என்னும் வார்த்தையை சுஜாதா முதல்வன் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.. ”உப்புக்கருவாடு” பாடல் ஆரம்பிக்கும் ஒரு சில நொடிகளுக்கு முன் அர்ஜூனிம் மனிஷா கொய்ராலாவும் பேசும் போது, “பழைய சோறும், கடிச்சிக்கிட வெங்காயமும் போதாதா?” என்பார்.. 

தூங்கி முழித்த பின்னும் அதே களைப்பான முகத்துடன் இருப்பதை எங்கள் பக்கம், ‘தூக்கச்சடவு’ என்பார்கள். இறப்பு நிகழ்ந்த ஒரு வீட்டிற்கு செல்வதை “கேதம் கேக்க போறேன்” என்பார்கள்.. துஷ்டி என்று சொல்பவர்களும் உண்டு.. அதே போல் நான் சிறுவனாக இருந்த போது என் வயதொத்த, என்னை விட சிறிய பெண்களை “ஏப்ள” என்று தான் அழைத்தேன்.. வயது ஆக ஆக அப்படி அழைப்பதை நிறுத்திக்கொண்டாலும், இப்போதைய சிறுசுகள் யாரும் “ஏப்ள” என்று அழைப்பதாக தெரியவில்லை..

மேலும் பாத்திரம் கழுவுவதை, பாத்திரம் மினுக்குவது என்போம்.. மேலே இருக்கிறது என்பதை ஒசக்க/ஒசர (உயர) கெடக்கு என்போம்.. மாடியை மெத்து என்போம்.. “உண்ணாம்தாய்க்கா, முத்துக்குமார் அண்ணே எங்க ஆளையே காணோம்?” எங்கள் தெரு டெரரான உண்ணாமலைத்தாய் அக்காவிடம் கேட்டால் இப்போதும் அவர் சொல்வார், “அவேன் மெத்துல தூங்கிட்டு இருக்கியான்டா சாரதாக்கா பேராண்டி” என..

எங்கள் வீட்டில் இரும்பாலான ஒரு மக்/ஜக்/கப் இருக்கும் குளிப்பதற்காக.. அதை நாழி என்போம்.. (நாழியா, நாளியா என சரியாகத்தெரியவில்லை).. அந்த நாழி/ளி இப்போது எந்த இரும்புக்கடையில் உள்ளது என தெரியவில்லை.. குளிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்பை இப்போதும் பலர் கைப்பட்டை என்று தான் அழைக்கிறார்கள்.. 

எங்கள் ஊரில் இருக்கும்/இருந்த பெரும்பாலான வழக்கு சொற்களை கூறி விட்டேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது ஏன் இந்த பதிவு என நீங்கள் யோசிக்கலாம்.. போகிற போக்கை பார்த்தால் என் ஊர் பாஷையை நானே மறந்துவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது இந்த உலகமயமாக்கலால். அதனால் தான் ஒரு முறை எழுதிப்பார்த்துக்கொண்டேன்.. எழுதுவதின் பயன் என்னவென்றால் அவ்வளவு எளிதில் அது மறக்காது, அதனால் தான்... சிவகாசி வட்டார வழக்கு என்றில்லை, நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை என எல்லா வட்டார வழக்கும் மறைந்து கொண்டே தான் வருகின்றன.. பொதுவான வார்த்தைகள் உருவாகிக்கொண்டே வருகின்றன.. நாமும் தமிழ் தானே பேசுகிறோம் என்கிற எண்ணத்தில் நம் வழக்கு மொழிகளை நமக்கு தெரியாமலே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.. எல்லோரும் ஊர்விட்டு ஊர் பிழைக்க போவது பிரச்சனை அல்ல.. அப்படி பிழைக்கப்போனதால் தான் வழக்கு சொற்கள் அழிகின்றன என குற்றம் சுமத்தும் ஒப்பாரி பதிவும் அல்ல.. ஹிந்தி, ஆங்கிலத்தால் தமிழ் சாகிறது என்பது போல் பழி போடும் தமிழ் உணர்வு பேசும் பதிவும் அல்ல.. ’அப்புறம் என்ன தான்யா இந்த பதிவு?’னு கேட்டா எனக்கு பதிலும் தெரில.. 

‘சொல்லாமலே’ படத்தில் நாக்கை வெட்டிக்கொள்ளும் முன் லிவிங்க்ஸ்டன் கடைசியாக தனக்கு பிடித்தமான பெயர்களை எல்லாம் சொல்லிப்பார்ப்பாரே, அது போன்ற ஒரு பதிவாக இதை எடுத்துக்கொள்ளலாம். எங்க ஊர் பாஷை சீக்கிரம் வழக்கில் இருந்து போய்விடுமோ என்கிற பயம் எனக்கு அதிகமாகிவிட்டதால் அந்த வார்த்தைகளை எல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு, எங்கள் வழக்கு சொற்களின் ஞாபகார்த்தமாக இந்த பதிவு.. முடிந்தால் உங்கள் ஊர் வட்டார வழக்கு சொற்களையும் கூறிவிட்டு செல்லுங்களேன் கமெண்ட்டில்.. உங்களுக்கும் ஞாபகார்த்தமாக இருக்கும்.. :-)

மதுரை....

Wednesday, December 4, 2013




ஒவ்வொரு வாரமும் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் போது என் கண்ணில் பட்டுவிடும் காட்சி அது.. மதுரை மாட்டுத்தாவணியை தாண்டி திருமங்கலத்தை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒரு சிறிய ஏர்போர்ட். அங்கு தினமும் விடிகாலையும், மாலையும் ஒன்றிரெண்டு ஏரோப்பிளேன்கள் வந்து போகும். மாலையாகிவிட்டால், குழந்தை முதல் குடும்பம் முழுவதும் ஏதோ திருவிழா தேர் பார்ப்பது போல் கூட்டமாக விமான நிலைய காம்பவுண்ட் சுவர் அருகில் வந்துவிடுகிறார்கள். ஆசை ஆசையாய் விமானம் கிளம்புவதை பார்க்க காத்திருக்கிறார்கள். அவர்களின் அந்த அனுபவத்திற்கு மேலும் இனிமை சேர்க்க ஐஸ் க்ரீம் வண்டிகளும், சோளக்கருது வண்டிகளும், பலூன்காரரும் பாடுபட்டுக்கொண்டிருப்பார்கள். விமானம் கிளம்புவதை அண்ணாந்து பார்த்து மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பி விடுவார்கள். மீண்டும் மறுநாள் அதே நேரம், அதே இடம், அதே காத்திருப்பு, அதே மகிழ்ச்சி.. இது தினமும் மதுரை விமான நிலையத்திற்கு வெளியே நடக்கும் சங்கதி தான். இன்னமும் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை கூட நிறுத்தி நிதானமாக ரசித்து, வாழ்வை அனுபவத்து வாழும் மக்கள் இருப்பதால் தான், வாழ்வை நிதானமாக ரசித்து வாழ நினைக்கும் பலருக்கும் பிடித்த ஊராக இருக்கிறது, மதுரை.

சிவகாசிக்கு அடுத்து எனக்கு பிடித்த, வீட்டில் இருப்பது போன்ற நிம்மதியை பாதுகாப்பு உணர்வை கொடுத்தது, கொடுப்பது மதுரை தான். “மதுரைல சுத்துன கழுத கூட வீடு வந்து சேராதுடா” - நான் முதல் முதலாக மதுரைக்கு போகிறேன் என்ற போது என் தாத்தா சொன்ன வாக்கியம் இது. ’என்னடா இது நம்ம தாத்தா ஓவர் பில்ட்-அப் குக்குறாரு?’ என ஆச்சரியப்பட்டுப்போனேன்.. ஆமாம், அவர் பொதுவாக எதையுமே பாராட்ட மாட்டார்.. எனக்கு தெரிந்து அவர் காமராஜருக்கு பிறகு positiveஆக சர்டிஃபிகேட் கொடுத்த ஒரே விசயம் மதுரை தான். வீட்டை விட்டு முதல் முறையாக தனியாக வெளியில் மூன்று நாட்கள் தங்க போகிறோம் என்கிற பயம் இருந்தாலும், தாத்தாவே பாராட்டு பத்திரம் கொடுத்ததால், மதுரையை நோக்கி ஓரளவு தைரியமாகவே போனேன். அப்போது எனக்கு தெரியாது மதுரை எனக்கு பல மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கப்போகும் ஊர் என்று.



அப்பா, தாத்தா, வேத ராஜா சார் என்று பலரிடமும் சிவகாசியில் இருந்து பல்கலைக்கு போக பஸ் ரூட் எல்லாம் கேட்டு பாக்கெட் டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன். மதுரை கிளம்பும் அந்த சுபயோக சுக தினத்தில் அதிகாலை அவசர அவசரமாக கிளம்பும் போது அந்த பாக்கெட் டைரியை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டது, நான் திருமங்கலம் வந்து இறங்கிய போது தான் உரைத்தது. செல்ஃபோன் எல்லாம் அப்போது (7,8 வருடங்களுக்கு முன்) நான் சினிமாவிலும் சாலையில் ஒன்றிரெண்டு பேரிடமும் பார்த்ததோடு சரி. வீட்டிலும் ஃபோன் கிடையாது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நான் மட்டும் தனியாக அந்த ஊருக்கே சம்பந்தம் இல்லாமல் நின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன். அழுகை கண்களை முட்டிக்கொண்டு வந்தது. என் பக்கவாட்டில் யார் என்றே தெரியாத ஒரு ஜீவனின் முரட்டு குரல் கேட்டது, “டேய் தம்பி ஏன்டா அழுகுற?”

“யுனிவர்சிட்டிக்கு போணும்ணே.. எப்படி போணும்னு தெரில” சொல்லும் போதே அழுகை இன்னும் ஜாஸ்தியானது.

“எலேய் இதுக்கெல்லாமாடா அழுவாய்ங்க? இரு இரு இப்ப சோழவந்தான், செக்கானூரணி போற பஸ்ஸு வரும்” என்று சொல்லிவிட்டு என் கூடவே காத்திருந்தார். அரைமணிநேரத்தில் செக்கானூரணி செல்லும் பேருந்து வந்ததும், என்னை அதில் ஏற்றிவிட்டு, “இங்காரு இது நேரா செக்கானூரணி போவும்.. அங்க எறங்கி மதுரைக்கு போற பஸ்ஸு எதுல ஏறுனாலும் அது யுனிவர்சிட்டி வழியாத்தான் போவும், என்ன? சரியா?” என்றார். 

“சரி.. நீங்க செக்கானூரணி வல்லயா?”

“ஓய் நான் தெக்குவாசல் போணும்டா, ஒன்ன கரெக்ட்டான பஸ்ஸுல ஏத்தி விடணும்னு தான் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தேன்.. நீ அழுகாம போ” என் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு போய்விட்டார்.. அந்த ஜன நெருக்கடியில் பேருந்தை விட்டு இறங்கிய சில நொடிகளிலேயே அவர் கரைந்து விட்டார். அவரைப்பார்த்தால் வேலை வெட்டி இல்லாதவன் போன்றும் தெரியவில்லை. அவரின் வேலைக்கு நடுவிலும் ஒரு விபரம் அறியாத சிறுவனுக்கு அரைமணிநேரம் ஒதுக்கி தைரியம் கொடுத்திருந்தார் அவர். அவரின் அந்த கம்பீர அதட்டல் குரல், கறுத்த தேகம் (என் அளவுக்கு கறுப்பு இல்லை), சஃபாரி ட்ரெஸ், கையில் கோல்டு வாட்ச், முறுக்கிய மீசை, பவுடர் முகம் என எதையும் என்னால் இப்போது வரை மறக்க முடியவில்லை. யார் என்றே தெரியாத ஒரு ஆள், பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் ஒரு பையனுக்காக அரைமணிநேரம் காத்திருந்து பஸ் ஏத்திவிட்டு, வழி சொல்லி அக்கறையாக அனுப்பி வைப்பது மதுரையில் மட்டும் தான் நடக்கும். அந்த மனிதன் தான் என்றில்லை, மதுரையில் பலரும் அப்படித்தான்.

நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவை அடைந்து, அந்த ஏரியாவில் எந்த தெரு என  சரியாக தெரியாமல் திணறிக்கொண்டிருந்தால், அங்கிருக்கும் யாரிடமாவது கேட்பேன்... சைக்கிளோ, பைக்கோ, அல்லது நடந்தோ கூட என்னுடன் வந்து சரியான தெருவிற்கு என்னை கையோடு அழைத்து சென்றவர்கள் தான் பலரும்.. மற்ற ஊர்களில் எல்லாம், ’அப்டியே லெஃப்ட்ல திரும்பி செகண்ட் ரைட்ல ஒரு கட் வரும் நேரா போயி அங்க ஒரு ஆலமரத்துல முட்டும், அதுல இன்னொருக்க லெஃப்ட் எடுத்து.............’னு கூகிள் மேப் போட்டு காட்டுவார்கள். ஆனால் நம் தேவையை தன் தேவையாக நினைத்து கூடவே இருந்து உதவுவதில் என்றுமே மதுரைக்கார மக்கள் தான் முதலில் இருப்பார்கள். பண உதவியோ, அல்லது வேறு உதவியோ, எனக்கு இதுவரை கிடைத்தது பெரும்பாலும் மதுரைக்கார நண்பர்களிடம் இருந்து தான்.

நீங்கள் விடிகாலை, நடு ராத்திரி, பட்டப்பகல் என எப்போது போய் மதுரையில் இறங்கினாலும், அங்கு அருகிலேயே ஏதாவது ஒரு கடையில் நிச்சயமாக சுட சுட புரோட்டா தயாராகிக்கொண்டிருக்கும். இன்றும் ரெண்டு ரூபாய்க்கு இட்லி கிடைக்கும் ஒரே ஊர் மதுரை தான் எனக்கு தெரிந்து. 4 வருடங்களுக்கு முன்பு வரை கூட நான் ’ஒத்த ரூவா இட்லி’ சாப்பிட்டிருக்கிறேன் மதுரையில். இப்போதும் இருக்கிறதா என தெரியவில்லை. சிவகாசியில் நான் கல்லூரி படித்த காலத்தில் பாதி நாட்கள் மதுரை காமராஜர் பல்கலையில் தான் கிடப்பேன் அந்தப்போட்டி இந்தப்போட்டி என்று. மதுரை காமராஜ் பல்கலைக்கு வெளியே இருக்கும் கிராமம் வடபழஞ்சி.. நாங்கள் போட்டிகளுக்காக பல்கலை செல்லும் போதெல்லாம் பல்கலை கேண்டினை தவிர்த்துவிட்டு வடபழஞ்சியில் தான் சாப்பிடுவோம்.. 15ரூபாய்க்கு மட்டன் குழம்பு எங்கு கிடைக்கும்? அங்கு ஊற்றுவார்கள் கறியுடன். கறி பீஸ் எல்லாம் நாம் போகும் போது காலியாகிவிட்டால், நம்மிடம் அந்த கடைக்காரர் கெஞ்சும் தொனியில் பல முறை சாரி கேட்பார்.. கறி இல்லாத மட்டன் குழம்பை ஊற்றி விட்டு அதற்கான காசும் வாங்க மாட்டார். ரயிலடியில் மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அந்த வெக்கை காற்றில் நல்லி எலும்பை உறிந்து கொண்டிருப்பதின் சுகமே தனி தான். 



மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் - என் வாழ்வில் நான் மறக்க முடியாத இடம். நீங்கள் உங்கள் காதலியை எங்கு சந்தித்திருப்பீர்கள்? தியேட்டர், கோயில், ரெஸ்டாரெண்ட், ஏன் பஸ் ஸ்டாண்டில் கூட சந்தித்திருக்கலாம். உங்கள் காதல் காலத்தில் எத்தனை முறை சந்தித்திருப்பீர்கள்? குறைந்தது மாதத்தில் ஒரு முறையாவது இருந்திருக்குமல்லவா? என் 4 வருட காதலில் நான் அவளை சந்தித்திருந்தது வெறும் 6முறை தான். அத்தனை முறையும் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், மெரினா ஓட்டலுக்கு அருகில் இருக்கும் பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில்..

பென்ச்சில் ஒரு மூலையில் நானும் இன்னொரு மூலையில் அவளும் அமர்ந்திருப்போம். அவள் உட்கார்ந்திருக்கும் அழகிலேயே தெரிந்துவிடும், ‘யார் கண்ணிலும் பட்டுவிடாமல் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்’ என்கிற சங்கடம். அவள் அன்று சமைத்த சப்பாத்தியை ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்து வந்திருப்பள் எனக்காக. அந்த பென்ச்சில் சர்ரென என் பக்கம் அதை தள்ளி விடுவாள். வெறும் சப்பாத்தி மட்டும் தான் இருக்கும். “என்ன ரானு வெறும் சப்பாத்தி தான் இருக்கு? குருமா, சட்னி எதுமே இல்லயா?”

“நான் சப்பாத்தி மட்டும் தான் சமைச்சேன். குருமாலாம் அம்மா வச்சாங்க.. அதான் அதை எடுத்துட்டு வரல. நான் சமைச்சத மட்டும் நீங்க சாப்பிட்டா போதும், சரியா?” அந்த பதட்டத்திலும் பயத்திலும் கூட என்னை அரட்டுவாள் அவள். ’சர்தான் போடீ’ என கெத்தாக மனதிற்குள் நினைத்துக்கொண்டு, தண்ணீர் தவித்தாலும், விக்கல் எடுத்தாலும் அத்தனை சப்பாத்தியையும் குருமா, சட்னி என எந்த சைடு டிஷ்சும் இல்லாமல் நான் விழுங்கித்தொலைய வேண்டும் என்பது என் அப்போதைய விதி.. சப்பாத்தி சாப்பிட்டு முடியும் வரை தான் எங்கள் நேரம். சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்பிவிடுவாள். சாப்பாத்தி டப்பாவை அவளிடம் இருந்து வாங்கி அதை சாப்பிட்டு முடிக்கும் நேரத்திற்குள் பேசுவது தான் எங்கள் காதல் வார்த்தைகள். குடும்ப ஃபோட்டோ, அவள் project சம்பந்தமான சந்தேகங்கள், வீட்டு பிரச்சனைகள், கல்லூரி கலகலப்புகள், என அவள் வரிசையாக ஒப்பித்துக்கொண்டிருப்பாள். நான் சப்பாத்தியை மென்றுகொண்டிருப்பேன். நான் சப்பாத்தி டப்பாவை காலியாக்கும் போது “அப்புறம், வேற என்ன?” என்பாள். அதற்கு அர்த்தம், ‘நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி முடிச்சிட்டேன், என் டிஃபன் பாக்ஸை குடு நான் போகணும்’ என்பதாகும். அதிக பட்சம் 15 நிமிடங்கள் பேசியிருப்போம். சின்ன சின்ன கிஃப்ட், சில சமயம் ஏதாவது கோபம் என்றால் ஒன்றுமே பேசாமல் அவள் சப்பாத்தி டப்பாவை என் பக்கம் தள்ளுவாள். நானும் ஒன்றுமே பேசாமல் அதை தின்று முடித்து அவள் பக்கம் தள்ளுவேன், அவள் கம்மென்று அதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். 

4 வருடங்கள், வெறும் ஆறே ஆறு சந்திப்புகள் என்றாலும் அந்த சந்திப்புகளின் இனிமை, படபடப்பு, த்ரில், தந்தி போல் பேசிக்கொண்ட வார்த்தைகள், என அத்தனையும் இப்போதும் நினைவில் உள்ளன. தினமும் ஃபோனிலும் மணிக்கணக்கில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த பக் பக் மாட்டுத்தாவணி நிமிடங்கள் தான் அப்படியே இருக்கின்றன இன்னமும் மனதில். அவள் வீடு பெரியாருக்கு அருகில். நானும் அவளை பார்த்து விட்டு பெரியார் வழியாகத்தான் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவள் போகும் பஸ்ஸில் நான் போகக்கூடாது. நான் அவளுக்கு  முன்பே கிளம்பி பெரியாருக்கு போய் காத்திருக்க வேண்டும். அவள் அடுத்த 5நிமிடங்களில் வருவாள். பத்தடி தூர இடைவெளியில் என்னோடு எதிர்ப்புறம் இருக்கும் காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் வரை வந்து நான் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் ஏறுவதை தூரத்தில் இருந்து கவனித்து விட்டு செல்வாள். எங்கள் அடுத்த சந்திப்பு நிகழப்போகும் அடுத்த 6மாத சொச்ச நாட்களுக்கு இந்த நினைவுகளே போதும் போதும் என்கிற அளவிற்கு மனம் திருப்தியாக இருக்கும். 

இப்போதும் அவள் சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கிறாள் தினமும் குருமாவுடன், அமெரிக்காவில் தன் கணவனுக்காக...




மதுரை காமராஜர் பல்கலையில் நடந்த தென்னிந்தய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான youth festivalல் நாங்கள் காமராஜர் பல்கலை சார்பாக கலந்து கொள்ள சென்றிருந்தோம். மொத்தம் நான்கு நாட்கள். நாங்கள் பங்கேற்ற Quiz முதல் நாளே முடிந்து விட்டதால் அடுத்த மூன்று நாட்களும் கேரளம், ஆந்திரம், கன்னடம் ஒவ்வொரு மாநில பல்கலையின் பெண்கள் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தோம் ஜாலியாக.. இங்கு நாங்கள் நாங்கள் என குறிப்பிடுவது ஏதோ 10,12 பேரை அல்ல. நானும் அனீஷ் என்னும் என் மாப்புவும் தான்.. அவனும் மதுரைக்கார பயல் தான். நாங்கள் follow செய்த ஒரு பெண்கள் கும்பல் மிமிக்ரி போட்டி காண போனதால் நாங்களும் மிமிக்ரி போட்டி நடக்கும் அரங்கினுள் நுழைந்தோம். அப்போது மேடையில் ஒரு பையனை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். மைக்குக்கு அருகில் நிற்க வைத்தார்கள். கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தான் அவன். மைக்கை மெதுவாக தொட்டுப்பார்த்தான் அவனிடம் இருந்து அது எவ்வளவு தூரத்தில் நின்றுகொண்டிருக்கிறது என அறிந்து கொள்ள.. இரண்டு முறை அதை டொக் டொக் என்று தட்டிவிட்டு ஆரம்பித்தான். அனைவரும் சினிமா நடிகர், கிரிக்கெட் வீரர் என செய்ததையே செய்ய, அவன் மட்டும் வித்தியாசமாய்,மனித குரல்களை மிமிக்ரி செய்யாமல், பறவைகள், விலங்குகள், நம்மை சுற்றி இருக்கும் ஒலிகள் என அனைத்தையும் துல்லியமாக மிமிக்ரி செய்தான். அவன் மிமிக்ரியை முடித்த போது அரங்கம் முழுவதும் ஒரு விதமான பயங்கர அமைதி நிலவியது. பின் மெதுவாக எழுந்த கைதட்டல் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் தொடர்ந்தது. கைதட்டல் எல்லாம் ஓய்ந்து முடிந்ததும் அவன் சார்ந்த பல்கலையின் பெயரை சொன்னார்கள்.

கண்ணனூர் யுனிவர்சிட்டி அது. நானும் அனீஷும் ஒருவரை பார்த்து ஒருவர் ஈஈஈ என இளித்துக்கொண்டோம். ஏனென்றால் கேரளத்துப்பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் அப்போது ஒரு சபதம் போட்டிருந்தோம் (அனீஷ் இப்போதும் அந்த சபதத்தை கை விடவில்லை). அந்த பையன் மூலம் எங்கள் சபதத்தை சாதிக்க வாய்ப்பிருக்குமா என இருவரும் ஒரே நேரத்தில் நினைத்ததால் வந்த சிரிப்பு அது. வேக வேகமாக போய் அந்த பையனுக்கு கை கொடுத்து அவனை நண்பனாக்கி கொண்டோம். அடுத்த மூன்று நாட்களும் அவனுடனேயே சுற்றி, அவனுடனேயே உண்டு, கடைசி நாளில் அவனை ரயில் ஏற்றி விடும் வரை அவனுடன் தான் இருந்தோம், அவனுடன் மட்டும் தான் இருந்தோம் வேறு எதைப்பற்றியும் அவனிடம் கேட்காமல். பெண்களை பற்றிக்கூட நினைக்க விடாத ஒரு கலகலப்பான மனிதன் அவன். அவனோடு பேசிக்கொண்டிருக்கும் போது உலக அழகியே வந்தால் கூட கண்டுகொள்ள மாட்டோம், அப்படி பேசுவான். தமிழ் சினிமா மிகவும் ரசித்து பார்ப்பான் அவன். இன்று வரை தொடர்பில் இருக்கும் அவன் உடன் பிறந்தோர் இரண்டு பேர். அவர்களுக்கும் கண் தெரியாது. வரலாற்றில் M.Phil முடித்துவிட்டு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். மதுரை எனக்களித்த நல்ல மனிதர்களில் அவன் ஒரு முக்கியமான ஆள்.

மீனாட்சி அம்மன் கோயில் சிற்பங்களை பற்றி அவனிடம் கூறி, அவன் கைகளை என் கைகளால் பற்றி, அந்த சிற்பங்கள் மீது அவற்றை தவழ விட்டு, சிற்பங்களை அவன் கைகளால் ரசித்து சிரித்த அந்த நொடி, உண்மையிலேயே தெய்வீகத்தை கண்ட நொடி. மீனாட்சி அம்மன் கோயிலை ஒரு கண் தெரியாதவன் ரசித்தான், அதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது இப்போதும் உடம்பு புல்லரிக்கும்.

மதுரைக்காரனாக இல்லாமல், அங்கு வந்து போகும் ஒரு விருந்தாளியாக அந்த ஊரோடு நல்ல அனுபவம் இருக்கும் எனக்கே இப்போதெல்லாம் சினிமாக்களில் காட்டப்படும் மதுரையை பார்க்க பார்க்க அந்தப்படம் எடுத்தவர்கள் மீது கோபமும் வெறுப்பும் தான் வருகிறது. எவனோ ஒருத்தன் மதுரையை ரவுடிகளின் கூடாரமாக சித்தரித்து போய்விட்டான். அதற்கு பின் வரிசையாக ஒவ்வொருவரும் மதுரை என்றால் வெட்டு, குத்து, கொலை என்றே காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சினிமாவில். இதுவரை 8 ஊர்களில் பிழைப்பிற்காக இருந்திருக்கிறேன். நான் பார்த்தவரை அன்பும், கரிசனமும், பாசமும், மனிதனுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் ஒரே ஊர் என்றால் அது மதுரை மட்டும் தான்.

என் வாழ்வில் மறக்க முடியாத பல சம்பவங்களையும், மனிதர்களையும், அனுபவங்களையும் கொடுத்திருக்கும் ஊர் தான் மதுரை. மிக மிக சாதாரணமான, அன்றாட வாழ்க்கையை நிதானமாக ரசித்து வாழும் மக்கள் நிறைந்த ஊர் அது. இப்போது எனக்கும் அந்த ஊருக்கும் இருக்கும் ஒரே பந்தம், நான் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசி செல்லும் போது, மதுரை வழியாக செல்வது மட்டும் தான். சமீபத்தில் நண்பனின் திருமணத்திற்கு மதுரை சென்றிருந்தேன். இரவு 12 மணி, நண்பனின் உறவினர் என்னை மாட்டுத்தாவணியில் வந்து அழைத்துப்போவதாக சொல்லியிருந்தார். நான் மெரினா ஓட்டலுக்கு முன் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தேன். அந்த இடத்தில் குருமா இல்லாத சப்பாத்தி சாப்பிட்ட நினைவுகள் மனதை முழுதாக ஆக்கிரமித்தன. இதற்கு முன்பும் அந்த ஞாபகங்கள் எல்லாம் வந்தாலும் அடுத்த வேலைப்பளுவில் மறந்துவிடும். ஆனால் அதே இடத்தில் இரவு 12மணியில் அருகில் யாரும் இல்லாமல்  பழைய நினைவை அசைபோடுவது வலி நிறைந்தது. நண்பனின் உறவினர் வந்த 10 நிடங்கள், 10மணி நேரம் போல் கடந்தது. அவருடன் மதுரை வீதிகளை கடந்து பெரியார், காம்ப்ளெக்ஸ் பஸ் ஸ்டாண்ட் என மண்டபத்தை நோக்கி சென்ற போது மனது முழுக்க ஒரு வெறுமை குடிகொண்டிருந்தது. 

உடம்பில் ஏதாவது காயம் என்றால் அதை ஆறவிடாமல், ஓயாமல் நோண்டிக்கொண்டே இருப்போமே? அந்த வலியில் ஒரு வித சுகத்தை உணர்வோமே? அது போல் நண்பனின் கல்யாணம் முடிந்ததும் அவசர அவசரமாக மண்டபத்தில் இருந்து கிளம்பி, யுனிவர்சிட்டி, திருப்பரங்குன்றம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், என சுற்றி கடைசியாக மாட்டுத்தாவணி மெரினா ஓட்டல் முன் வந்து ஒரு நொடி அந்த பயணிகள் காத்திருக்கும் பென்ச்சில் வெற்றுப்பார்வையை வீசினேன். சில வருடங்களுக்கு முன் மனம் முழுதும் மகிழ்ச்சியை கொடுத்த இடங்கள், சம்பவங்கள், இன்று நினைத்து பார்க்கும் போது வெறும் வலியையும், ஏக்கத்தையும் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நினைவுகள் ஆறாத புண் போல் வலித்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வலியை ஒரு சுகமாக உணர தொடங்கிவிட்டேன். அடிக்கடி புண்ணை நோண்டி வலியில் சுகம் காணுவதை போல், இனி அடிக்கடி மதுரை போய், அங்கு ஒரு காலத்தில் மகிழ்ந்திருந்த இடங்களை எல்லாம் பார்த்து, வருந்தி, ஏங்கி, பெருமூச்சு விட்டு, திருப்தி பட்டுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.. பார்க்கலாம், வாழ்க்கை என்ன முடிவு செய்திருக்கிறது என்று..


ஆயுதம்...

Tuesday, November 19, 2013

இன்று அதிகாலை பேருந்தில் சிவகாசி - மதுரை சென்று கொண்டிருந்தேன்.. லேசான குளிரால் பேருந்துக்குள் எப்போதும் இருக்கும் வெக்கையும் அதன் அழுக்கு வாடையும் இல்லாமல் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. குறிப்பிட்டு பார்க்கும் படி பேருந்தில் யாரும் இல்லாததால் நான் வெளியில் நான்கு வழிச்சாலையின் செயற்கையை ரசித்துக்கொண்டே வந்தேன்.. அப்போது ஒரு பெண்மணி, ஸ்வெட்டர் மாட்ட அடம்பிடித்துக்கொண்டிருக்கும் தன் மூன்று வயது மதிக்கத்தக்க மகனிடம், “என்ன அடி வேணுங்கிதா? சீப்ப கொண்டு கையிலேயே நொட்டுனு அடிச்சிருவேன்” என்றார். அந்த குழந்தை ‘கம்’மென்று ஸ்வெட்டரை அணிந்து கொண்டது. எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம், ’தலை சீவும் சீப்பை வைத்து மிரட்டுவதை இன்னமும் பெற்றவர்கள் கடை பிடிக்கிறார்களா?’ என்று. என் சிறு வயதுகளில் கேள்விப்பட்டு, அனுபவித்திருந்த ஒரு செயல் பல வருடங்கள் கழித்து இன்று தான் காணக்கிடைத்தது.. அதுவும் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு பயப்படும் பிள்ளைகள் இப்போதும் உண்டா?



"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்..
மாதாவை.. மாதாவை.. “
சீராக ஒப்பித்துக்கொண்டிருக்கும் செய்யுள் திடீரென ஒரு இடத்தில் திக்கும்.. கையில் தமிழ் புத்தகத்தோடு என்னை முறைத்துக்கொண்டிருக்கும் அம்மாவை பார்ப்பேன் பயத்துடன். நீளமான தன் கூந்தலை பிண்ணிக்கொண்டே என்னை ஒப்பிக்க வைத்துக்கொண்டிருப்பார் அவர். நான் திக்குவதை பார்த்ததும் தன் கையில் இருக்கும் சீப்பை மடித்து ‘சொத்’ என என் தொடையில் சுண்டிவிட்டு சொல்லுவார், “மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்” என.. அந்த வலியில் எனக்கு அடுத்த வரியும் மறந்துபோயிருக்கும்.. அடுத்த வரிக்கு தொடையில் இன்னும் ஒரு சுண்டு. நான் அழுதாலும், கண்ணீர் வற்றினாலும் முழுதாக ஒப்பித்து முடிக்கும் வரை சீப்பில் இருந்தும் அம்மாவிடம் இருந்தும் விடுதலை கிடையாது. ஒவ்வொரு முறை மறக்கும் போதும் ஒரு சுண்டு விழும். நான் எழுந்து வேகமாக குடுகுடுவென ஓடிவிட்டால் அம்மாவால் பிடிக்க முடியாது என தெரிந்தாலும் ஓட மாட்டேன்.. ஓடினால் மீண்டும் வீட்டிற்கு தானே வர வேண்டும்? அப்போது இதை விட அதிக அடி விழுமே?

இப்போது நினைத்தால் ஒரு பசுமையான அழகிய கனவு போல் இருக்கும் அந்த நினைப்புகள் எல்லாம் அந்த காலத்தில் என் அம்மாவை ஒரு அரக்கி போல் நினைக்க வைத்தன. அம்மாவை பிடிக்காது எதெற்கெடுத்தாலும் அடிப்பார் என.. சீப்பு தான் என்றில்லை. கையில் கிடைக்கும் எதிலும் அடி உண்டு.. தயிர் மத்து, பனையோலை விசிறி, தோசை கரண்டி, எரியும் தீக்குச்சி, விளக்குமாறு, சைக்கிள் டியூப், வீட்டிற்கு வெளியில் இருக்கும் வேப்பங்குச்சி, என என்னை தாக்க பல ஆயுதங்கள் இருந்தன. என் தம்பி பிறந்து ஓரளவு வளரும் வரை நான் மட்டும் தனியாக வாங்கிக்கொண்டிருந்த பரிசுகளை, அவன் வளர்ந்த பின் பங்கிட்டுக்கொண்டோம்.. அப்போதெல்லாம் பிள்ளைகளை அடித்தால் பக்கத்து வீட்டில் இருந்து கூட வந்துவிடுவார்கள் காப்பாற்ற. இப்போதெல்லாம் பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால் கூட பேப்பர் பார்த்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது..

ஒரு முறை நான் என் அப்பா கொடுத்த கால் ரூபாய்க்கு வாங்கிய 5 தேன் மிட்டாய்களை கையில் வைத்திருந்தேன். எதுத்த வீட்டு சாமுவேல் பங்கு கேட்டும் கொடுக்காமல் அனைத்தையும் மொக்கிவிட்டேன். அவன் என் அம்மாவிடம் போய், “அத்த ராம் குமாரு கூரக்கடக்காரருக்கு தெரியாம முட்டாய திருடி திங்குறியான்” என அவன் கற்பனை வளத்திற்கு தகுந்தவாறு என்னை மாட்டிவிட்டான். நான் தேன் மிட்டாயில் இருந்து கையில் வடிந்த சீனிப்பாலை நக்கிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும் போது பொளேர் என என் செவிட்டில் ஒரு அறை விழுந்தது. என்ன ஏதுவென்று நான் சுதாரிப்பதற்குள், என் உதட்டில் எரிந்து கொண்டிருந்த ஒரு தீக்குச்சியை அம்மா தேய்த்துவிட்டார். சரியான வலி. உதடு எரிகிறது. மீண்டும் கண்ணத்தில் ஒரு பொளேர், தலையில் ஒரு நங்,.. காரணமே தெரியாமல் அம்மா அடிப்பது தான் எனக்கு மிகவும் கோபமாக வந்தது. அந்த வயதில் கோபத்தையும் அழுகையில் தானே காட்ட முடியும்? நான் அழுத அழுகையில் தெருவே எங்கள் வீட்டில் கூடி விட்டது. என் கீழ் உதட்டில் அதற்குள் லேசான கொப்பளம் வேறு வந்து விட்டது. எல்லோரும் என் அம்மாவை வைய ஆரம்பித்துவிட்டார்கள்... ‘இருந்தாலும் தனத்துக்கு ரொம்பத்தான் கோவம் வருது. பிள்ளைய இப்டியா போட்டு அடிப்பா?”. அம்மா ஒன்றுமே சொல்லாமல் என்னை முறைத்துக்கொண்டிருந்தார். நான் இப்பவும் ஏன் என்னவென்று புரியாமல் அழுது கொண்டிருந்தேன். “இருங்க அப்பா வந்தவொனே சொல்றேன்” என கண்ணீரோடு விரலை ஆட்டிக்கொண்டே அம்மவை மிரட்டியதாக ஞாபகம். 

என் கதியை பார்த்த என் துரோகி (அப்புறம், மாட்டி விட்டா அவன் என்ன நண்பனா?) “அத்த நான் சும்மா சொன்னேன். இவேன் காசு குடுத்து தான் கடேல வாங்குனியான். நான் சும்மா சொன்னேன்” என்றான். அவன் சொல்லி முடிக்கும் போது அவன் அம்மா அவன் முதுகில் ஒன்று கொடுத்தார் பாருங்கள், பக்கி, திறந்த வாயை மூட முடியவில்லை அவனால். அப்படி ஒரு அடி. கொஞ்ச நேரம் கழித்து தான் குரலே வெளிவந்தது அவனுக்கு. இவ்வளவு நேரம் என் அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருந்த தெரு இப்போது அவன் அம்மாவை சமாதானம் செய்ய வந்துவிட்டது. நான் அழுகை லேசாக குறைந்த நிலையில் வெறும் விம்மலோடு என் அம்மாவை பார்த்தேன். அவரைக்காணோம். தலையை திருப்பி தேடலாம் என்றால் தலையை திருப்ப முடியவில்லை. யாரோ என் தலையிலும் முகத்திலும் தங்கள் இரு கைகளாலும் என்னை அழுத்திப்பிடித்திருந்தார்கள். நான் மெதுவாக அண்ணாந்து பார்த்தேன். அம்மா என்னை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. அவ்வளவு தூரம் என்னை அடித்திருந்தாலும், அம்மா அழும் போது நானும் ஏன் அழுதேன் என்று எனக்கு தெரியவில்லை. அது தான் முதலும் கடைசியுமாக சூடு பட்டது என்றாலும், அதற்கு பின்னும் அடிக்கடி சூடு வைத்து விடுவதாக மிரட்டுவார். அடுப்பில் ஒரு கம்பியை காய வைப்பார். என் கண்ணீரின் அளவு, கம்பி அடுப்பில் காயும் நேரத்திற்கு inversely proportionalஆக இருக்கும்.


சரி அம்மா தான் இப்படி என்றால், எங்க அப்பாவிற்கு கோபம் வந்தால் அவ்வளவு தான். இது வரை என்னை மூன்றே மூன்று முறை தான் அடித்திருக்கிறார். ஆனால் அடித்த மூன்று முறையும் காய்ச்சல் வந்து படுத்துவிட்டேன். அப்படி ஒரு அடி. ஒரு படத்தில் வருமே ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுனு, அது மாதிரி. அம்மாவுக்கு என்று சில பெண்பால் ஆயுதங்கள் இருப்பது போல், அப்பாவுக்கும் ஆண்பால் ஆயுதங்கள் உண்டு. அதில் முதன்மையானது சைக்கிள் டியூப். சிவகாசி போன்ற தண்ணீருக்கு சீரழியும் ஒரு ஊரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தலைவனின் முதல் வேலை, அதிகாலையில் எங்காவது அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது. அப்படி வந்தால் தான் அன்று வீட்டில் எல்லோரும், கழுவ, குளிக்க, பிழங்க முடியும். சைக்கிளில் இரண்டு பக்கமும் இரண்டு குடம் தொங்கும் கேரியரில் ஒரு குடத்தை நிறுத்தி அதை சைக்கிள் டியூப்பால் இறுக்கி கட்டி, சீட்டில் மாட்டுவார்கள்.  ஒரே நடையில் மூன்று குடங்கள் தண்ணீர் கொண்டு வரும் வசதி இது. இதற்காகவே சிவகாசியில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சைக்கிள் டியூப் நிச்சயம் இருக்கும்.



ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து நான் முகத்தை கழுவிக்கொண்டிருந்தேன். அது தீபாவளி முடிந்த சமயம். மீண்டும் வேலை ஆரம்பிக்கும் வரை அப்பாவுக்கு விடுமுறை. அப்பாவிடம் பல ஆண்டுகளாக கேட்ட வாட்சை அந்த தீபாவளிக்கு  தான் வாங்கி கொடுத்திருந்தார்.. புது வாட்ச் வாங்கிய ஆசையில் அதை நான் கழட்டுவதே இல்லை. தூங்கும் போது கூட வாட்ச் தான். அப்போதும் அப்படித்தான், கையில் வாட்ச் கட்டியவாறே முகத்தை, கை, கால்களை கழுவினேன். என் அப்பா அங்கிருந்து குரல் கொடுத்தார். “தம்பி வாச்ச கழட்டி வச்சிட்டு மூஞ்ச கழுவு”... நான் அசால்ட்டாக, “எப்பா இது வாட்டர் ப்ரூஃப் வாச்சி.. ஒன்னும் ஆவாது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் கப்புக்குள் கையை விட்டேன்.. கையை கப்பில் இருந்து எடுக்கும் நொடியில் சுளீர் என்று என் முதுகில் ஏதோ படர்ந்தது. அப்படியே தரையில் விழுந்தேன். ஒரு சாதாரண ரப்பர் டியூப் இவ்வளவு வலிக்குமா என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. வழக்கமாக என்னை அடிக்கும் அம்மா, அன்று மிக மிக ஆச்சரியமாய் அடியில் இருந்து என்னை காப்பாற்றினார். மற்ற இரு முறைகளும் அப்பா கைகளால் மட்டுமே அடித்ததால், அது ஆயுதம் என்னும் இக்கட்டுரை தலைப்புக்கு வெளியில் செல்வதால் அதைப்பற்றிய விளக்கங்கள் வேண்டாம்.

எங்கள் தெருவில் முதலில் கல்லூரி சென்று டிகிரி முடித்தவர் என் மாமா தான். என் போல் இல்லாமல், கொஞ்சம் டீசண்ட்டான ஆள்.. அவருக்கு நான் தெரு பயல்களோடு விளையாடுவது சுத்தமாக பிடிக்காது. அதுவும் சாக்கைடையில் விழுந்த பந்தை கையை விட்டு எடுத்து மீண்டும் அதை வைத்தே கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் பார்த்தால் என்னை கழுவேற்றிவிடுவார். அதனால் மாமா இருக்கும் போது நான் நல்லபடி நாணயமாக வீட்டில் அமைதியாக இருப்பேன். அது மாமா டிகிரி முடித்து விட்டு வேலை தேடிய சமயம். ஒரு நாள் வேலை விசயமாக விருதுநகரில் யாரையோ பார்க்க சென்று விட்டார்.. நான் விருதுநகர் என்றால் ஏதோ காலையில் கிளம்பினால் நைட்டு தான் வர முடியும் என்று நினைத்து தைரியமாக தெரு பயல்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். வெயில் காலம் வேறு அது. அதனால் ஸ்டைலாக ரஜினி மாமா மாதிரி சட்டை பட்டனை எல்லாம் கழட்டிவிட்டு, சட்டையை காற்றில் பறக்க விட்டு பேர் பாடியாக விளையாடிக்கொண்டிருந்தேன். 





சிவாத்தம்பி அடித்த பந்து மேரிக்கா வீட்டு சாக்கடையில் விழுந்தது. அந்த சாக்கடை தான் ஃபோர் லைன். நான் தான் அங்கு ஃபீல்டிங். ஃபோருக்கு போன பந்தை ஸ்டைலாக குனிந்து சாக்கடையில் கையை விட்டு எடுத்துக்கொண்டே தெருவை பார்த்தேன். எப்போதும் நின்ற வாக்கிலேயே தெருவை பார்த்துவிட்டு, இன்று தரையோடு ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட படுத்துக்கொண்டே பார்ப்பது தெருவை மிகவும் நீளமாக காட்டியது. ’நம்ம தெரு எவ்ளோ பெருசு!’ என வியக்கும் போது தூரத்தில் ஏதோ தெரிந்த உருவம் ஒன்று வந்தது தெரு முக்கில். ஆமா, அது நம்ம மாமா தான். நான் பந்தை எடுத்து வீசிவிட்டு, “ஏ நான் வெளாட வல்லப்பா” என்று குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி ஆச்சிக்கு அருகில் அமைதியாக படுத்துவிட்டேன், சட்டை பட்டனை எல்லாம் ஒழுங்காக மாட்டி. மாமா கதைவை திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்ததும் அவர் பனையோலை விசிறியை எடுத்தார். படுத்திருந்த என்னை ஒரே கையில் விச்சென தூக்கி இன்னொரு கையால் தொடையிலும், முதுகிலும், இன்னும் பிற பின் பகுதிகளிலும் அவர் பாணி கிரிக்கெட் ஆடிவிட்டார். தடுத்த ஆச்சிக்கும் வசவு விழுந்தது, அவர் கொடுக்கும் செல்லத்தால் தான் நான் தெருப்பயல்களோடு சேர்ந்து கெட்டுப்போவதாக. அடுத்த சில் நாட்களில் மாமாவுக்கு ஐராபாத்தில் வேலை கிடைத்து சென்று விட்டார். நான் மீண்டும் சிவாத்தம்பி அடித்த பந்தை தேடி மேரிக்கா வீட்டு சாக்கடையை நோண்ட ஆரம்பித்துவிட்டேன் சந்தோசமாக..

ஒரு காலத்தில் அம்மா என்றாலே நம்மை அடிக்க கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜந்து என நினைத்த நான் இன்று அம்மா என்பதற்கு கொண்டிருக்கும் அர்த்தமே வேறு. ஆனாலும் என் அம்மா ஒன்றும் என்னை அடிப்பதை நிறுத்திவிடவில்லை. இப்போதும் நன்றாக வாங்குவேன். வாங்கினால் இருவருக்கும் சிரிப்பு தான் வரும். என் அம்மாவுக்கும் எனக்கும் ஆல்டைம் ஃபேவரைட் எங்கள் வீட்டு தோசைக்கரண்டி தான். அதில் கல்லில் தோசை சுட்ட நாட்களை விட என் முதுகில் தோசை சுட்ட நாட்கள் தான் அதிகம். என்னை அடித்ததால் கைப்பிடியின் நடுவில் வளைந்திருக்கும் அந்த தோசைக்கரண்டி ஆயுசு கெட்டியாக இப்போதும் தோசையை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தன் பழைய கடமையையும் மறக்காமல் இன்றும் அம்மாவால் என் முதுகில் சில சமயம் செல்லமாக விளையாடவும் செய்கிறது.




வீட்டில் இருக்கும் ஆயுதங்களை விடுங்கள். பள்ளியில்? அந்த ஒல்லியான நீண்ட குச்சிக்கு பயந்து நாம் எழுதிய வீட்டுப்பாடங்களும், மனப்பாடம் செய்த போயம்களும் தான் எத்தனை எத்தனை? சின்ன வயதில் எல்லாம், டீச்சர் நம்மை நொட்டு நொட்டு என அடிப்பதால் தான் அதற்கு அடி ஸ்கேல் என்று பெயர் வைத்ததாக நினைத்துக்கொண்டிருப்பேன். வாத்தியார் பிரம்பை பயன்படுத்திய 10ம் வகுப்பு வரையிலான போயம் ஞாபகம் இருக்கிறது. பிரம்புக்கு வேலை இல்லாத 11, 12, கல்லூரிகளில் படித்த அனைத்தும் மறந்துவிட்டன. இன்றைய தேதியில் வாத்தியார் யாராவது ஒரு பையனை லேசாக காதை திருகினால் கூட டிவி, பேப்பர் எல்லாம் வந்துவிடுகிறார்கள். பாவம், இப்போது இருக்கும் பிள்ளைகள் எங்களை போல் தினுசு தினுசாக அடி வாங்குவது, வகுப்புத்தோழன் அடி வாங்கும் போது அஷ்டகோணலாக முகம் மாறுவதை ரசிப்பது, அடுத்தவன் அழுவதை பார்த்து நம் வலியை மறந்து சிரிப்பது போன்ற பல அருமையான அனுபவங்களை இழக்கிறார்கள்.... அவர்கள் அப்பாக்களுக்காவது தாங்கள் அடிவாங்கிய கதைகளை சொல்ல நேரம் இருக்குமா என்று தெரியவில்லை.. 

எனக்கு தெரிந்து எங்கள் தெருவில் கம்மியாக அடி வாங்கிய ஆள் நானாகத்தான் இருப்பேன். முத்துக்குமார் அண்ணனுக்கு எல்லாம் மிதியே விழுகும். அவங்க அப்பாவும் எங்க அப்பா மாதிரி தான். அவ்வளவு லேசில் கோபப்பட மாட்டார். ஆனால் கோபம் வந்தால் மூஞ்சு முகறை எல்லாம் பெயர்ந்து விடும். இவ்வளவு அடி வாங்கினாலும் எங்கள் தெருவில் என் செட்டு ஆள் வரை யாரும் இதுவரை எங்கள் பெற்றவர்களை எதிர்த்தோ பிறரிடம் மரியாதை குறைந்தோ ஒரு முறை கூட பேசியது இல்லை. சின்ன வயதில் இருந்த பயம் இப்போது பன்மடங்காக பெருகி மரியாதையாக மாறிவிட்டது.. எந்த சூழலில் பயமெல்லாம் மரியாதையாக மாறியது என்பதை இப்போது வரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றும் பள்ளியில் எந்த ஆசிரியர் என்னை வெளுவெளு என்று வெளுத்தாரோ அவரை தான் அதிகம் பிடிக்கிறது. இதுவெல்லாம் அடிமை புத்தியா என்று கூட யோசிப்பேன். இருந்துவிட்டு போகட்டுமே, ஒன்றுக்கும் உருப்படாத எஜமானனாக இருப்பதை விட பக்குவப்பட்ட அடிமை எவ்வளவோ சிறந்தவன் தானே?


இப்போது யாரும் பிள்ளைகளை அடிப்பதையோ, ஏன் மிரட்டுவதையோ அதட்டுவதையோ கூட பார்க்க முடிவதில்லை. அப்படி பெற்றவர்கள் அதட்டினால் பிள்ளைகள் லேசாக அழுவது போல பாவலா காட்டுகின்றன. உடனே பெற்றவர்கள் பிள்ளைகளிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். 3 வயது 4 வயது நண்டு நசுக்கான் சொல்வதை தான் 30 வயது பெற்றோர்கள் கேட்க வேண்டும் போல.. வீட்டில், வெளியில், பள்ளியில், ஓட்டலில், கோயிலில், பொருட்காட்சியில் எங்கும் பெற்றவர்களுக்கு பயப்படாத பிள்ளைகளின் சத்தம் தான். பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்திற்கு இப்படியெல்லாம் கண்டிக்கப்படாமல் இருப்பது சரியா தவறா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு புரிதல் இல்லை. ஆனால் சிறு வயதில் பிரம்பிற்கும், விசிறி கட்டைக்கும், விளக்குமாறுக்கும், தோசைக்கரண்டிக்கும் வேலை வைத்தவனுக்கு, வருங்காலத்தில் லத்திக்கு வேலை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திடமாக நம்புகிறேன்.. 

காலையில் அந்த பயல் ஒழுங்காக ஸ்வெட்டர் மாட்டியிருந்தால் நீங்கள் என் செந்தில்தனமான அடி உதை கதைகளை எல்லாம் கேட்க வேண்டியே அவசியமே இருந்திருக்காதல்லவா? ஹ்ம் எல்லாம் உங்கள் விதி.. முடிந்தால் நீங்கள் வீட்டில் வாங்கிக்கட்டிய கதைகளை கமெண்ட்டுங்கள்..

அம்மன் கோவில்பட்டி அழகிகள் - அம்மாவின் நண்பன்..

Wednesday, October 30, 2013

இன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வந்துவிடும் எனக்கு.  இந்த பாடல் என்றில்லை, பொதுவாக பழைய பாடல்களை கேட்டாலே அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். ரேடியோவை அருகில் வைத்துக்கொண்டு, தனக்கு மட்டுமே கேட்கும் அளவில் மிக மிக அமைதியாக ஒலிக்கும் பழைய பாடல்களை அதனோடு சேர்ந்து தானும் பாடிக்கொண்டே வீட்டு கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி தீப்பெட்டி கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார் எங்கள் அம்மா. நான் என் படிக்கும் நாட்களில் ‘அம்மா’ என்று நினைத்துப்பார்த்தால் இந்த poseல் தான் அவர் எப்போதும் ஞாபகம் வருவார். கெட்டு ஒட்டி கெட்டு ஒட்டியே என்னையும் என் தம்பியையும் படிக்க வைத்த ஜீவன்!! இப்போதும் பல பழைய பாடல்கள் மனதில் ரீங்காரமிடும் போது அவையெல்லாம் என் அம்மாவின் குரலில் தான் என் மனதில் ஒலிக்கும்.. அவ்வளவு அழகான குரல். அவரின் ஒரே துணை அந்த பாக்கெட் ரேடியோ தான்.



சிவகாசியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களின் நிலை என்ன தெரியுமா? காலை எழுவது. அச்சாபிசுக்கோ ஃபயர் ஒர்க்ஸ்சுக்கோ வேலைக்கு போகும் கணவனுக்கு சமையல் செய்வது. மதியத்திற்கும் அதே சமையலை பயன்படுத்திக்கொள்வது. மீண்டும் இரவு கணவன் வரும் போது சோறு மட்டும் ஆக்கி பொறியல், குழம்பு எதுவும் வைக்காமல் வெறும் பாலை மட்டும் காய்ச்சி வைத்திருப்பார்கள். கணவன் பக்கோடாவும் மிச்சரும் வாங்கி வருவான். சோற்றில் பாலை ஊற்றி பக்கோடாவை கடித்துக்கொண்டு திருப்தியாக இரவு உணவை முடித்துக்கொள்வார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஏழைப்பெண்கள் கட்டை அடுக்குவது, கெட்டு ஒட்டுவது, என்று தங்கள் அடுத்த வேளை சோற்றுக்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். சின்ன சின்ன தெருக்களாக இருக்கும் சிவகாசியில் அப்படிப்பட்ட ஒரு தெருவில் பகல் நேரத்தில் சென்றால், தெருவின் இரு பக்கமும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு வெளியில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பதை காணலாம். அருகில் கண்டிப்பாக மெதுவான குரலில் ஒரு ரேடியோ பாட்டுப்பாடிக்கொண்டிருக்கும் அந்த சிவகாசி வெயிலை மறக்கடிக்கும் வகையில் மிக மிக இனிமையாக..



ஃபுல் சவுண்ட் வைத்தாலும் காதில் விழாத அளவிற்கு பாட்டு பாட ஆரம்பித்திருக்கும் அந்த ரேடியோவின் கிட்னி செயல் இழந்து பேட்டரி தீர்ந்து போயிருக்கும். அப்பாவிடம் அன்று மாலை வேலையில் இருந்து வரும் போது பேட்டரி வாங்கி வரச்சொல்லுவார் அம்மா. கண்டிப்பாக என் அப்பா வாங்கி வர மாட்டார் என்று என் அம்மாவுக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லுவார். அப்பா வாங்காமல் வருவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று காசு இல்லாமல் வாங்கியிருக்க மாட்டார், அல்லது தன் வேலைப்பளுவால் மறந்திருப்பார். ஆமாம், 7,8 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பெயர் தெரியாத ஒரு கிராமத்தில் இருந்து தன் ஃபயர் ஒர்க்ஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும் ஆணுக்கு ரேடியோ பேட்டரி வாங்குவது  தான் ஞாபகத்தில் இருக்குமா? இரவு சாப்பாட்டிற்கு பக்கோடா வாங்கவே கஷ்டப்படும் ஆளுக்கு, பேட்டரி வாங்க ஞாபகம் இருந்தாலும், வாங்கத்தான் முடியுமா? அப்பா பேட்டரி வாங்கி வரவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின் அவரோடு அம்மா போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, அப்படி இருக்கும். இவர் அழுவதும் அவர் கத்துவதும் நானும் என் தம்பியும் ‘பே’ என்று அதை வெறித்துப்பார்ப்பதும்.. தன் நகைகளை எல்லாம் தன் கணவன் விற்ற போது போது அப்படி சண்டை போட்டிருக்க மாட்டார் அவர். ஆனால் பகல் நேரங்களில் தனக்கு உற்ற தோழனாய், தன் வேலைகளுக்கு ஒரு இளைப்பாறுதலாய் இருக்கும் அந்த உயிரற்ற நண்பன் நாளை தன்னுடன் பேச மாட்டான் என்பதன் ஏமாற்றமும் ஆற்றாமையும் தான் அந்த சண்டையை இன்னும் இன்னும் பெரிதாக்கும்.



ஆனாலும் என் அம்மா மறு நாள் தன் நண்பனுக்கு உயிர் கொடுத்து அவனோடு பேசிவிடுவார். எப்படி தெரியுமா? பகலில் ரேடியோவில் நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் அதன் பேட்டரியை வெயிலில் காய வைப்பார் அம்மா.. வெயிலில் காய்ந்த பேட்டரி, டயாலிசிஸ் செய்யப்பட்ட கிட்னி ஃபெயிலியர் பேசண்ட் போல் கொஞ்ச நேரம் கஷ்டப்பட்டு வாழ்ந்து திரும்பவும் மூச்சை நிறுத்திவிடும். மீண்டும் வெயிலில் காய வைத்து டயாலிசிஸ் ட்ரீட்மெண்ட், கொஞ்ச நேர உயிர் என மாறி மாறி ஓரிரு நாட்கள் அது குற்றுயிரும் கொலையுயிருமாக தன் பணியை செய்யும். அது முழுதாக சாகும் போது அப்பா புது பேட்டரியை கடன் வாங்கியாவது வீட்டிற்கு கொண்டு வந்திருப்பார். ஆனாலும் பேட்டரியை வெயிலில் காய வைப்பது என்ன விதமான அறிவியல் என்று இப்போது வரை எனக்கு புரிந்ததில்லை. அந்த டெக்னிக்கை என் அம்மாவிற்கு கற்றுக்கொடுத்தது ரேடியோவை உற்ற நண்பனாக நினைத்து வாழ்ந்த இன்னொரு சிவகாசிக்காரியாகத்தான் இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன் நான்..

அம்மா காலை எழுந்தவுடன் தொடும் முதல் பொருள் ரேடியோ தான்.. நான் எவ்வளவு சீக்கிரம் கண் விழித்தாலும், எனக்கு முன் எழுந்திருத்து தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பார்கள் அம்மாவும் அவர் ரேடியோவும். நிகழ்ச்சிகள் காலை 5மணிக்கு மேல் தான் என்றாலும், 4.55க்கே அதன் “கொர்” சத்தத்தில் இருந்து கேட்க ஆரம்பித்துவிடுவார். ஆகாசவானியின் ‘ஆ’வை விட்டுவிட்டு வெறும் காசவானியில் இருந்து கேட்டால் கூட அன்றைய பொழுது முழுதாக முடிந்தது போல் இருக்காது அம்மாவுக்கு. அதனால் தான் கொர் சவுண்டில் கூட ஒரு 5நிமிடம் ஓடினாலும் பரவாயில்லை என்று அதனை கதறவிடுவார் காலையிலேயே. இரவு பல நேரங்களில் அதன் பாடல்களை கேட்டுக்கொண்டே அதற்கு ஒரு “குட் நைட்” கூட சொல்லாமல் நாங்கள் அனைவரும் தூங்கிப்போயிருந்தாலும் கூட, அது விழித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் குட் நைட் சொல்லும் வரை. அம்மாவோ நானோ அப்பாவோ ”என்ன சத்தம் அது?” என்று குழம்பி எழும் போது அது தன் “கொர்” சவுண்டோடு அழுது கொண்டிருக்கும் எங்கள் குட் நைட்டுக்கு ஏங்கி. அதன் காதை திருகி குட் நைட் சொன்னதும் அதன் சத்தம் நின்று சமத்தாக எங்களுடன் தூங்க ஆரம்பித்துவிடும்.



அம்மா ரேடியோவில் பாடல் கேட்பதை பார்க்கும் போதே எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக சந்தோசமாக இருக்கும். ஒரு பாடல் முடிந்ததும் அறிவிப்பு வரும் - “ஒலித்த பாடலை பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா” என்று. அந்த அறிவிப்பை அவர்கள் தொனியிலேயே அவர்கள் கூடவே அழகாக சொல்லுவார்.. அடுத்த அறிவிப்பு, - “இனி ஒலிக்க இருக்கும் பாடலை பாடுபவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி” என்றதும், அந்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் முன்பே மிகச்சரியாக அதே பாடலை பாட ஆரம்பித்துவிடுவார். எனக்கு மிகுந்த வியப்பாக இருக்கும், வீட்டிலேயே உட்கார்ந்து தினமும் சமையலுக்கும், கெட்டு ஒட்டுவதற்கும் வாக்கப்பட்டு வந்த அம்மாவால் எப்படி ஒவ்வொரு பாடலையும், அதைப் பாடிய சினிமா பாடகர்களையும் சரியாக நினைவில் வைத்துக்கொண்டிருக்க முடிகிறது என்று. என்றாவது ஒரு நாள் அம்மா மாற்றி சொல்லிவிடுவார். மனோவிற்கு பதிலாக எஸ்.பி.பி என்றோ, ஏ.எம்.ராஜாவிற்கு பதிலாக பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றோ.. நான் ரேடியோக்காரன் தான் மாற்றி தப்பாக சொல்லுகிறான், அம்மா சொல்வது தான் சரி என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்வேன். அம்மாவிற்கு தெரியாத பழைய பாடல்களே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து பாடல்களையும் ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடுவார். ரேடியோ நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் கூட தனக்கு தானே பாடல்கள் பாடி சந்தோசப்பட்டுக் கொண்டிருப்பார். நாங்கள் யாராவது அவர் பாடுவதை கவனிப்பது தெரிந்துவிட்டால், வெட்கமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு பாடுவதை டக்கென்று நிறுத்திவிடுவார். ஆனால் சில நிமிடங்களில் அவரையே அறியாமல் மீண்டும் பாட ஆரம்பித்திருப்பார்.




ஆனால் பாடகர்களை நன்றாக தெரிந்த என் அம்மாவிற்கு அதில் நடித்தவர்கள் யார் என்று கூட தெரியாது! தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டதில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது அவருக்கு? ரேடியோவில் வெறும் குரலோடு திருப்திப்பட்டுக்கொண்டு தன் கற்பனைகளால் ஜெய்சங்கரின் பாட்டுக்கு சிவாஜியை வைத்து உயிர் கொடுக்கும் என் அம்மாவிற்கு நிஜமான அந்த பாடலின் நாயகர்களைப்பற்றி கவலை இல்லை. அதனால் தான் இன்று வரை அவரை டிவி பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு பிடித்த பாடல்களை இப்போது டிவியில் பார்க்கும் போது லேசான ஆச்சரியத்தோடு “இது ரவிச்சந்திரன் பாட்டா? நான் ஜெமினி பாட்டுனே நெனச்சிட்டு இருந்தேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். ஆனாலும் அவர் விரும்பி டிவி பார்ப்பதில்லை. டிவியில் பழைய பாடல்கள் ஒலிக்கும் நேரங்களில் மட்டும் டிவியை ஓட விட்டு, அவர் தன் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார். கண்ணும் கையும் வேலையில் இருக்கும், காது மட்டும் தான் டிவியில் இருக்கும். டிவியையும் ஒரு ரேடியோ போல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அம்மா.

பெரும்பாலும் காலை 9மணிக்கு பல டிவி சேனல்களில் பழைய பாடல்கள் தான். அது முடிந்ததும் டிவியை அணைத்துவிட்டு, இப்போதும் தன் good old friend ரேடியோவை கையில் எடுத்து அருகில் வைத்துக்கொண்டு, கால்களை நீட்டி, வீட்டு கதவின் நிலை பலகையில் சாய்ந்து தன் trademark நிலையில் அமர்ந்து, கெட்டு ஒட்டிக்கொண்டே பி.சுசிலாவோடு சேர்ந்து, “உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னை பாட சொன்னால் என்ன பாடத்தோன்றும்” என்று அழகாக பாடிக்கொண்டிருக்கிறார் அம்மா. ஆம் காலங்கள் மாறினாலும், ஓரளவு வசதி வாய்ப்பு வந்தாலும் அவரால் ரேடியோவையும் கெட்டு ஒட்டுவதையும் விட முடிவதில்லை. ஹா ஹா என் அப்பாவும் வழக்கம் போல் பேட்டரி வாங்கி வருவதில் சொதப்பாமல் இருப்பதில்லை இப்போதும்.. 


பொழப்பத்த ஒரு நாளிலே, பொக்கிஷத்தின் நடுவிலே... - பார்ட் 2

Thursday, September 26, 2013

அது என்னவென்று தெரியவில்லை, வரலாற்றை சுமந்து கொண்டு நிற்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் உடம்பில் லேசான நடுக்கமும், சிறு பயமும், எதையும் யோசிக்க முடியாத வெறுமையும், பேசாமல் இப்போதிருக்கும் அனைத்தையும் துறந்துவிட்டு அந்த காலத்துக்கே எப்படியாவது ஓடிப்போய்விடலாமா என்கிற பேராசையும் மனதை மொத்தமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது. சிகரெட், மது, பெண் போல் வரலாற்று இடங்களை சுற்றி அலைவதும் மிகவும் போதையாக இருப்பதென்னவோ உண்மை தான். வெறுமையும், நிறைவும் மொத்தமாக அமையப்பெற்ற இடங்கள் அவை. பதில் தெரியாத கேள்விகளும் எழும், திருப்பி கேள்வி கேட்க முடியாத அளவிற்கு பதில்களும் தோன்றும். சித்தன்னவாசலும், நார்த்தாமலையும்  என்னுள் அது போன்ற ஒரு தெளிவான குழப்பத்தை, போதையை உண்டு பண்ணின. அந்த போதை தந்த உத்வேகத்தில், மீண்டும் அதே போன்ற ஒரு போதையை தேடிச்சென்ற இடம் தான் குடுமியான் மலையும் கொடும்பாளூரும்..

முதலில் குடுமியான் மலை.


புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் 20வது கிலோமீட்டரில் அமைந்திருக்கிறது இந்த குடுமியான்மலை. இந்த ஊரின் பெயர் எனக்கு புதுக்கோட்டைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பே பரிச்சயம் என்றாலும், நான் புதுக்கோட்டைக்கு வந்தவுடன் பார்க்க நினைத்தாலும் இப்போது ஒரு வருடம் கழித்து தான் பார்க்க முடிந்தது.. குடுமியான் மலை என்னும் ஒரு சிறிய கிராமத்தில், சாதாரணமாக சென்று கொண்டிருக்கும் ஒரு சாலையில் அந்த கோயில் கம்பீரமாக பிரமாண்டமாக நின்று கொண்டிருக்கிறது, இப்போதைய கிராமத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல..

இது ஆரம்பத்தில் சிவஸ்தலமாக இருந்ததாகவும் நாயக்க மன்னர்களின் படையெடுப்புக்கு பின் வைணவ ஸ்தலமாகவும் மாறியதாக சொல்கிறார்கள். இப்போது மீண்டும் சிவஸ்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது ஒரு சில வைணவ சிற்பங்களை மட்டும் விட்டு வைத்து.. 

இந்த ஊரின் பெயருக்கும் ஒரு கதை இருக்கிறது. இந்த கோயிலில் இருந்து தினமும் சிவபெருமானுக்கு சாத்தப்பட்ட மாலைகள் அரசனுக்கு சென்றுவிடும். கோயிலில் வழக்கமாக பூஜை செய்யும் பூசாரிக்கு ஒரு காதலி இருந்திருக்கிறாள். அவள் ஒரு நாள் ஆசையாக மன்னருக்கு செல்லும் முன் தான் அந்த பூ மாலையை சூடிப்பார்த்து அனுப்புகிறாள். அதில் தெரியாமல் அவளின் நீளமான முடி ஒன்று மாட்டிக்கொள்கிறது. மாலையில் முடி இருப்பதை பார்த்து டென்சனான மன்னன் பூசாரியை வரவழைத்து விசாரித்தான். “அது கடவுளோட முடி தான்”னு சொல்லி பூசாரி, ராஜாவ சமாளிக்க பாக்குறாரு.. அதை நம்பாத நம்ம ராஜா, “நான் நாளைக்கு கோயிலுக்கு வந்து செக் பண்ணுவேன். மவனே சாமிக்கு முடி இல்ல, நீ செத்த”னு வார்ன் பண்ணி அனுப்பினார்.. நைட்டு முழுவதும் சாமியிடம் பூசாரி மன்றாடி வேண்டுகிறார்.. மறுநாள் கோயிலுக்கு மன்னன் வந்து பார்க்கும் போது சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு குடுமி இருக்கிறது. மன்னனும் பூசாரியை விட்டு விடுகிறான். அதில் இருந்து இந்த ஊருக்கு குடுமியான்மலை என்று பெயர். அதற்கு அடுத்த நாளில் இருந்தும் பூசாரியின் டாவு அந்த மாலையை சூடிப்பார்த்து மன்னரை ஏமாற்றினாளா இல்லையா என்பதற்கான கதைகளோ சான்றுகளோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது நம் தொல்பொருள் துறையின் தோல்வி தான்..








கோயிலின் உள்ளே நுழைந்ததும் நம்மை முதலில் வரவேற்பது வைஷ்ணவ சிற்பங்கள் தான்.. அதில் விஷ்ணுவின் அவதாரங்களை அழகாக செதுக்கியிருகிறார்கள். ஒவ்வொன்றும் அவ்வளவு அருமை. ஒரே கல்லில் தூணும் சிற்பமும் செதுக்கப்பட்டு ஆள் அரவமற்ற ஒரு கோயிலில் வரிசையாக பல சிற்பங்களை பார்க்கும் போது நீங்களும் அது செதுக்கப்பட்ட காலத்தில் அதை மக்கள் வணங்கிய காலத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வு நிச்சயம் வரும். இந்த சிற்பங்களில் முருகனும் விநாயகரும் கூட இருக்கிறார்கள். சைவ சமயத்தை கிண்டல் செய்வது போன்ற சிற்பமும் உண்டு. அதாவது ஒரு அழகான பெண், அவளை நெற்றியில் பட்டை  அடித்த சைவ சமய ஆண்கள் எல்லாம் ஜொள் வடித்துக்கொண்டு சைட் அடிப்பது போன்ற சிற்பமும் உண்டு.



மேலே இருக்கும் இந்த சிற்பம் தான் சைவ சமய ஆட்களை கிண்டல் செய்வது போல் உள்ளது. இந்த சிற்பம் அடல்ட்ஸ் ஒன்லி சிற்பம் (கூர்ந்து கவனித்து பார்த்து புரிந்து கொள்ளவும்).. ஆனால் இதில் இருக்கும் நுணுக்கம், அந்த பெண்ணின் கழுத்தில் இருக்கும் அணிகலனில் இருந்து, அவளது அல்குல், அவளின் ஆடை, கை, கால் நகங்கள், சுற்றி இருக்கும் சைவ சமய ஆட்களின் முகத்தோற்றத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசம் என அவ்வளவு அற்புதமாக நம்மை வாய் பிளக்க வைக்கிறது அதன் நுட்பமான வேலைப்பாடு. இந்த நுழைவு பிரகாரத்தில் இருக்கும் பெரும்பான்மையான ஆண் சிற்பங்களின் மூக்கு உடைக்கப்பட்டிருக்கின்றன. பெண் சிற்பங்களில் கொண்டைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன.. தெரியாமல் உடைந்ததா அல்லது ஏதும் படையெடுப்பில் அவமானப்படுத்தும் நோக்கத்தோடு உடைக்கப்பட்டதா என தெரியவில்லை.


அப்படியே அந்த பிரகாரத்தை தாண்டி உள்ளே சென்றால் மெயின் கோயில் வருகிறது. இந்த மெயின் கோயிலில் தான் குடுமியோடு சிவபெருமான் காட்சி தருவார்.. சரியான வெளிச்சம் இல்லாததால் அதை என்னால் படம் பிடிக்க இயலவில்லை.. நெட்டில் இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள். 


பின் கோயிலுக்கு பின் பக்கம் வந்தால் அங்கு இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அந்த மண்டபங்கள் தான் கலைநிகழ்ச்சிகள் எல்லாம் அந்த காலத்தில் நடத்தப்பட்டவையாம். 

இது தான் அந்த மண்டபம். இந்த மண்டபத்திற்கு சரியாக பின்பக்கத்தில் இருந்தே மலை ஆரம்பித்துவிடுகிறது. குடவரை கோயிலையும் சிற்பத்தையும் பார்க்க கோயில் வாட்ச்மேனிடம் ஸ்பெசல் அனுமதி பெற்று இந்த கோயிலின் கோட்டை சுவருக்கு அந்த பக்கம் இருக்கும் குடவரை கோயிலுக்கு  சென்றோம். அங்கும் ஒரு சிவபெருமான் சன்னதி இருக்கிறது. 

அங்கும் வழக்கம் போல் நந்தி இருக்கிறார். இந்த சன்னதியின் உயரம் ஆறரை அடி தான் இருக்கும். ஒரு குகைக்குள் இருப்பது போன்ற கதகதப்பும், அழுத்தமும் இருக்கும். 


குகையில் வடிக்கப்பட்டிருக்கும் சிவபெருமானை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள். 




இது அந்த சன்னதிக்கு வெளிப்புற சுவரில் மிக மிக சிறிய கல்லில் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை. இதை செதுக்கியவரின் வேலைப்பாடு நிச்சயம் அந்தக்காலத்தில் ஊரையே பெருமையாக பார்க்க வைத்திருக்கும்..


பின் மலையிலேயே செதுக்கிய விநாயகர் இருக்கிறார்.. மழை, வெயிலில் அவர் மிகவும் டய்ர்டு ஆகிவிடாமல் இருப்பதற்காக நமது தொல்லியல் துறை கூரையெல்லாம் போட்டு பாதுக்காப்பது நல்ல விசயம்.



இந்த பிள்ளையாரின் மூக்கும் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விசயம். இந்த மலையில் இன்னும் கொஞ்சம் உயரத்தில் நடுவில் சிவலிங்கமும் அதற்கு இரண்டு பக்கமும் 63 நாயன்மார்களும் செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.. அதை கீழேயிருந்தே எடுக்கும் அளவிற்கு என் கேமராவிற்கு சக்தி இல்லாததால் எடுக்கவில்லை. நீங்கள் நேரில் வரும் போது அதை உங்களுக்கு காட்டுகிறேன். 



அந்தக்காலத்தில் நமது ஆட்களுக்கெல்லாம் மூன்றே மூன்று வேலைகள் தான். விவசாயம், போர், பிள்ளை பெறுவது. எல்லாரும் விவசாயத்தில் இருந்திருக்க மாட்டார்கள். எல்லா காலமும் போர் நடந்திருக்காது. மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் சும்மா தான் இருக்க வேண்டும் கணவன். அந்த மாதிரி நேரத்தில் இது போன்ற சிற்பங்களும் சிலைகளும் கோயில்களும் வடித்து, அவன் வாழ்ந்ததற்கான ஒரு சாட்சியை, ஒரு அடையாளத்தை விட்டு வைத்துப்போயிருக்கிறான் நம்ம முப்பாட்டன். எந்த வித அறிவியல் உபகரணமும் இல்லாத அந்த காலத்திலேயே அவன் செய்த இதையெல்லாம் பார்க்கும் போது, இன்று இருக்கும் அறிவியலை வைத்து நாம் இன்னும் இந்த மாதிரி விசயங்களில் தவண்டு கொண்டு தான் இருக்கிறோம் ஒரு மழலை போல. 

இன்னொரு விசயம் இந்த கோயிலிலும் சித்தன்னவாசல் போன்ற மூலிகை கலவை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.. ஆனால் அவையெல்லாம் மழை, வெயிலால் அழிந்து இன்று வெறும் தடம் மட்டுமே இருக்கின்றன


மேலே இருக்கும் படத்தில் ஓவியங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தெரிகிறதா? ஏன் வேலை மெனக்கட்டு சித்தன்னவாசலில் இருந்து இங்கு வரை இருக்கும் எல்லா ஓவியங்களையும் ஏன் வேலை மெனக்கெட்டு உச்சியில் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.. சில நொடிகள் தலையை அன்னாந்து பார்க்கும் நமக்கே கழுத்து வலிக்கிறதே, இவர்கள் எப்படி வரைந்திருப்பார்கள்? 

குடுமியான் மலை என்பது நான் பார்த்த மற்ற இடங்களை போல், சமணம், சைவம் என்று மட்டும் குழப்பாமல், புதிதாக வைணவத்தையும் சேர்த்துக்கொண்டு 3ம் நூற்றாண்டையும், 15ம் நூற்றாண்டையும் தன்னுள் அமைதியாக அடக்கிக்கொண்டு இருக்கிறது. நாமும் சைவம் வைணவம் என்று ஆராயாமல் கம்மென்று சாமியை கும்பிட்டுவிட்டு அந்தக்கால ஆட்களின் கைவண்ணத்தை கொஞ்ச நேரம் வியந்துவிட்டு வரலாம்.. ஒரு முக்கிய விசயம் இங்கு சாப்பிட உருப்படியான ஒரு கடை கூட கிடையாது.. கையில் ஒரு புளியோதரை பொட்டலத்தோடு வருவது நலம்..



குடுமியான்மலை பற்றி கொஞ்சம் நீளமாக வந்துவிட்டதால் கொடும்பாளூர் பற்றி சுருக்கமாக சொல்லி படங்களை மட்டும் போட்டு விடுகிறேன்.. விவரங்களை கமெண்டில் உங்கள் வினாவுக்கு ஏற்றவாறு தருகிறேன்..

கொடும்பாளூர்:

குடுமியான்மலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் 23வது கிலோமீட்டரில் வருகிறது கொடும்பாளூர். ரோட்டில் ஒரு பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஒரு சிமெண்ட் போர்டு வைத்திருக்கிறார்கள்.. அதில் கோயில் கட்டிய மன்னன் அவன் காலத்தில் ஏதோ எழுதியிருப்பான் போல என நினைத்தேன். பின் தான் தெரிந்தது ”கோயிலுக்கு செல்லும் வழி” என அரசாங்கம் தான் அவ்வளவு அழகாக எழுதி அதை பராமரித்து வருகிறது என.. அவ்வளவு புதுசாக இருந்தது அந்த போர்டு..




பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாக சிறியதாக இருக்கிறது அல்லவா? ஆனால் இது மிகவும் பெரிய கோயிலாக இருந்திருக்கிறது.. மிகவும் அழிந்து சிதைவுற்று போன கோயிலை ஓரளவு செப்பனிட்டு வைத்ததால் இந்த இரண்டை தான் முழு வடிவத்திற்கு கொண்டு வர முடிந்திருக்கிறது. 


இந்தக்கோயிலில் கலசத்தை பாருங்கள், வித்தியாசம் எதுவும் தெரிகிறதா? ஆம் கல்லிலேயே செதுக்கப்பட்ட கலசங்கள் அவை.. மகாபலிபுரத்திற்கு பிறகு  இங்கு தான் அப்படி இருப்பதாக சொல்கிறார்கள்.. நிஜமா என்று தெரியவில்லை.. இந்த கோயிலில் ஒரு சன்னதியில் சிவபெருமானும் மற்றொரு சன்னிதியில் அம்பாளும் இருந்திருக்கிறார்கள்.. இப்போது அம்பாள் இல்லை. சிவபெருமான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமான கெட்-அப்பில் இருக்கிறார் பாருங்கள்.


அதே போல் சிவபெருமான் இருக்கும் இந்த சன்னிதியின் வழியாக மேலே கோபுரத்தின் வடிவமைப்பு படி போல் கட்டப்பட்டிருக்கிறது..


மேலே தெரிவது தான் கோபுரத்தின் உச்சி.. ஒரு சில வௌவால்கள் பீதியை கிளப்பினாலும் சில பல தைரிய முயற்சிகளில் எடுத்த படம் இது.. இப்படி ஒரு கோபுரம் எழுப்பி அதில் நாலாபக்கமும் சிற்பங்களை வடித்த ஆட்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்கள் தான்.

இந்த கோயிலில் ஒரு அழகாக கிணறும், அந்த கிணறுக்கு சைடாக செல்ல ஒரு படிப்பாத்தையும் கூட இருக்கின்றன.. 




கீழே பெரிய மைதானம் போல் தெரிகிறதே அங்கு எல்லாம் கோபுரங்களும் கோயிலும் இருந்திருக்கின்றன... அவையெல்லாம் போரில் அழிந்ததாக சொல்கிறார்கள். எந்த போரில் யார் அழித்தது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவையெல்லாம் அழியாமல் இருந்திருந்தால் வரலாற்றை, சிற்ப வேலைப்பாட்டை பறைசாற்ற ஒரு பெரிய கோயில் சாட்சியாய் இருந்திருக்கும்...







இந்த கோயிலிலும் கோபுரம் & கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களை எல்லாம் பாருங்கள் எவ்வளவு அழகு என்று. கீழே இருப்பது அர்த்தநாதீஸ்வரர்.











எனக்கு இது போன்ற வரலாற்றின் எச்சங்களை சுமந்து நிற்கும் இடங்களில் ஆளே இல்லாமல் தனிமையில் பார்க்கும் வாய்ப்பு தான் கிடைக்கிறது. இப்படி ஒரு இடம் இருப்பது பற்றி அருகில் இருக்கும் விராலிமலை, புதுக்கோட்டை ஆட்களுக்கு கூட தெரியவில்லை.. அவ்வளவு ஏன் இந்த இடத்தின் வரலாறு பற்றி கொடும்பாளூர் மக்களுக்கே தெரியவில்லை. தொல்லியல் துறையில் தண்டத்திற்கு இருக்கும் ஆளுக்கும் தெரியவில்லையா அல்லது சொல்ல விருப்பமில்லையே என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வரலாறு என்ற ஒன்றை இப்போது யார் சொன்னாலும் அது நாம் டீக்கடையில் குடிக்கும் பால் போலத்தான்.. சுத்தமான வரலாறாக இருக்காது. நிச்சயம் கலப்படம் இருக்கும். அதனால் இது போன்ற இடங்களை, அதன் அறியமுடியாத ரகசியங்களை, இழப்புகளை, சண்டைகளை, வேண்டுதல்களை தெரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அவற்றையெல்லாம் சொல்ல முடியாமல் ஏங்கிக்கொண்டு அந்த இடமெங்கும் அதன் வரலாறு அமைதியாக நிறைந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடியும்.



ஒரு சின்ன வேண்டுகோள். அடிக்கடி குடும்பத்துடன் படத்திற்கு, ஓட்டலுக்கு, டூருக்கு, கோயிலுக்கு என்று செல்கிறோம்.. நமக்கு அருகில் இருக்கும் இது போன்ற இடங்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து சென்றோமானால், நமக்கும் மனதுக்கு ஒரு வித அமைதியும் நிறைவும் கிடைக்கும். அட்லீஸ்ட், “இதில் ஏதோ சிறப்பு இருக்கு போல, ரொம்ப முக்கியமான இடம் போல”னு அந்த லோக்கலில் இருக்கும் ஊர் மக்களுக்கும் இதன் முக்கியத்துவம் தெரியும். அவர்களுக்கு அவர்களின் ஊரின் சிறப்பு தெரிந்தால் தான், இது போன்ற இடங்களை கவனமாக வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுச்செல்ல முடியும். நான் சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை. எனக்கு வரலாறும் அதன் சொல்ல முடியாத வெளியே தெரியாத உண்மைகளும் ஒரு வித கிரக்கத்தை கொடுக்கின்றன. அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆசை இருக்கிறது. அதனால் தான் இப்படியெல்லம் உளறிக்கொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்வதென்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.. என் பிளாக்கும் இதில் இருக்கும் படங்களும் அந்த இடங்களும் அழிந்தாலும் வரலாறு என்றும் அழியாது. அது எங்கோ காற்றில் கலந்து ஒரு பேய் போல் தன் கதையை சொல்ல முடியாமல் சுற்றிக்கொண்டு தான் இருக்கும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One