சாமி காப்பாத்து - சிறுகதை..

Friday, March 29, 2013

குளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும் விருதுநகர் மாரியம்மனின் ஃபோட்டோ முன் நிறுத்தினான். ஃபோட்டோ உயரமாக மாட்டியிருந்ததால் அதன் அருகில் இருக்கும் ஸ்டூலில் நிப்பாட்டினான் வைரமுத்து. அப்பா எங்கேயோ தூக்கிட்டு போகிறாரோ என நினைத்த கண்ணன் சாமி படம் முன் வந்து அவர் இறக்கி விட்டதும், “எப்பா ஸ்கூலுக்கு கெளம்பிக்கிட்டு இருக்கேன், இப்ப எதுக்குப்பா இங்க கொண்டாந்து விட்டீங்க?”னு அலுத்துக்கொண்டே கீழே இறங்கினான்..

“அப்டிலாம் சொல்லக்கூடாதுப்பா.. சாமி கும்பிட்டாத்தான நல்லா படிக்க முடியும்?” கண்ணத்தில் பயபக்தியோடு போட்டுக்கொண்டே வைரமுத்து சொன்னான்.
“எப்பா ஏற்கனவே நாந்தாம்ப்பா ஃபர்ஸ்ட் ரேன்க்கு” ஸ்டூலில் இருந்து இறங்கிவிட்டான் கண்ணன். 

அவனை திரும்பவும் மேலே ஏற்றிவிட்டு, ஒலித்துக்கொண்டிருந்த இலங்கை வானொலியை கொஞ்ச நேரம் மௌனத்தில் போட்டுவிட்டு ”நீ எப்பயுமே ஃபர்ஸ்ட் ரேன்க் தான் அறிவு.. ஆனா பரிச்ச எழுதுறதுக்கு, என் செல்லத்துக்கு நல்ல கை கால் சொகத்த கொடுக்குறது எல்லாமே நம்ம மாரியாத்தா தாம்ப்பா.. மாரியாத்தா தான் ஒன்ன ஃபர்ஸ்ட் ரேன்க் எடுக்க வைக்குறாப்பா. எங்க, அப்பா சொல்ற மாதிரி கும்பிடு பாப்போம்” தன் மகனின் இரண்டு கைகளையும் எடுத்து குவித்து சாமி கும்பிடக்கற்றுக்கொடுத்தான் வைரமுத்து..

“அப்பா சொல்றதலாம் அப்டியே திரும்ப சொல்லணும், என்ன?”

“சேரிப்பா”

கண்ண மூடிக்கோ.. எங்க சொல்லு, “சாமி.. காப்பாத்து”

இறுக்கி கண்ணை மூடிக்கொண்டான், “சாமி காப்பாத்து”

“என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு” - லேசாக கண்களை திறந்து கொண்டு அப்பாவும் கண்களை மூடியிருக்கிறாரா என்று பார்த்தான். அவரும் மூடியிருப்பதை பார்த்துவிட்டு தன் கண்களை மூடிக்கொண்டான்.

“என் கை கால் மேலுக்கு.. எப்பா மேலுனா என்னப்பா?”

“மேலுனா ஒடம்புப்பா.. சரி சொல்லு என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு”

“என் கை கால் மேலுக்கு நல்ல சொகத்த குடு”

“தம்பி கண்ண மூடுனு சொன்னேன்.. கண்ண மூடிட்டு சொல்லு, நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“எம்மா அப்பா ஏற்கனவே பெரிய ஆளு..ஸ்கூலுக்கு போயி படிக்க போறாங்களாம்” ஏதோ ஜோக் சொல்லிவிட்டதை போல் விழுந்து விழுந்து சிரித்தான் அந்த ஐந்து வயது யூ.கே.ஜி. க்ளாஸ் டாப்பர். அம்மாவிடம் இருந்து பதில் வரவில்லை.. அவளுக்கு இது ரொம்ப பிஸியான நேரம்.. பிள்ளையையும் கணவனையும் கிளப்பி பள்ளிக்கும் வேலைக்கும் அனுப்ப வேண்டுமல்லவா? சமையல் வேலையை அவசர அவசரமாக செய்து கொண்டிருந்தாள் லெட்சுமி.

“தம்பி சாமி கும்பிடும் போது சிரிக்க கூடாது. ஒழுங்கா சொல்லு.. நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“நான் நல்லா படிச்சி பெரிய ஆளா வரணும்”

“ம் வெரி குட்.. எங்க கண்ண தொறங்க” அவன் நெற்றியில் திருநீரு இட்டு அதை ஊதிவிட்டான் வைரமுத்து. அடிக்கடி வெரிகுட், குட் பாய், ஐயம் ரியலி சாரி என்று தன் பையனிடம் மட்டும் ஆங்கிலம் பேசுவார்கள் வைரமுத்துவும் அவன் மனைவு லட்சுமியும். அதாவது ஆங்கில மீடியத்தில் படிக்கும் பையனுக்கு தாங்களும் ஆங்கிலத்தில் பேசினால் தான் ஆங்கில அறிவு சிறப்பாக வரும் என எண்ணியதால் இருவரும் அப்படி பேசிக்கொண்டிருப்பார்கள்.

“எப்பா சாமி எதுக்குப்பா கும்பிடுறோம்?”

“சாமி தாம்ப்பா நம்ம எல்லாரையும் காப்பாத்துது. நம்ம எல்லாருக்கும் சாமி தாம்ப்பா நல்லது செய்யும். யாரு என்ன தப்பு செஞ்சாலும் சாமி அவங்கள தண்டிச்சிரும்”

“தப்பா?”

“ஆமா.. பொய் சொல்லுறது, மத்தவங்கள அடிக்கிறது, ஸ்கூல்லயும் வீட்லயும் சேட்ட செய்யுறது, சொன்னடி கேக்காம இருக்குறது, நெறையா சீனி சேவு திங்குறது இந்த மாதிரிலாம் தப்பு செஞ்சா சாமி வந்து நைட்டு கண்ண குத்திரும்” வைரமுத்து சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்ணன் பயத்தில் தன் அப்பாவின் கையை இருக பிடித்துக்கொண்டான்.

“இனிமேல் சேட்ட செய்யாம சொன்னடி கேப்பியா?”
கண்ணனுக்கு அழுகை வருவது போல் இருந்தது, “கேப்பேம்ப்பா” லேசான பயத்துடன் தான் சொன்னான்.. அவனுக்கு சாமியை பிடிக்கவில்லை. ப்ரேமா மிஸ்ஸை விட சாமி மிகவும் கோவமான ஆளாக தெரிந்தது அவனுக்கு. இனிமேல் அப்பா சாமி கும்பிட சொன்னாலும் கும்பிட கூடாது என்று முடிவு செய்துகொண்டான்.

“சரி வா.. ஸ்கூலுக்கு லேட்டாவுது, சாப்புட்டு கெளம்பலாம்.. தேய் சோறு எடுத்துட்டு வாத்தா”. ரேடியாவில் சவுண்டை மீண்டும் வைத்துவிட்டு அம்மாவை அழைத்தார் அப்பா. அப்பா எப்போதும் அம்மாவை வா போ என்று தான் அழைப்பார்.. ஆனால் அம்மா மட்டும் ஏன் அப்பாவை வாங்க போங்க என்று அழைக்கிறார் என்று கண்ணனுக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம். ஆனால் இதை யாரிடம் கேட்பது என குழப்பமாக இருந்ததால் அவன் கேட்டதேயில்லை. ஏற்கனவே நிறைய கிராஸ் கொஸ்டீன் கேட்பதாக அவனை அவன் அம்மா வேறு கண்டித்திருக்கிறார்.

அவர்கள் இப்போது தங்கியிருக்கும் வீட்டை வீடு என்று சொல்ல முடியாது. ஒரே ஒரு பத்துக்கு பத்து அறை. அதில் தான் ஒரு ஸ்டூல், ஒரு பலா கட்டில், ஒரு சிறிய சிமிண்ட் தொட்டி, ஒரு மண்ணெண்ணெய் அடுப்பு, சில பல பாத்திரங்கள், கொஞ்சம் துணிமணி, நிறைய சாமி ஃபோட்டோ, ஒரு ட்ரான்சிஸ்டர், ஒரு வாட்ச், வைரமுத்துவுக்கு கம்பெனி கொடுத்த ஒரு சைக்கிள் என்று வாழ்ந்துவருகிறார்கள் அந்த மூவரும். படுப்பது, சாப்பிடுவது, உட்காருவது, உறங்குவது எல்லாம் இந்த இடத்தில் தான். இந்த மாதிரி வீட்டில் இருப்பதில் இருக்கும் ஒரே பிரச்சனை வயித்தால போனா அடிக்கடி முள்ளு காட தேடி ஓட முடியாது. நல்ல விசயமும் இருக்கு. ஒன்னுக்கு கூட போக வசதி இல்லாத இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க யாரும் வரமாட்டாங்க. ஆனால் ஒரு நிரந்தர சொந்தக்காரர் வரப்போகிறார் அந்த வீட்டுக்கு. ஆமா கண்ணனுக்கு ஒரு தம்பியோ தங்கையோ சீக்கிரம் விளையாட வந்துவிடுவார்கள். லட்சுமி இப்ப ஆறு மாசம்.

லெட்சுமி வட்டிலில் சோறு எடுத்து வந்து கண்ணனுக்கு மட்டும் கொடுத்தாள். வைரமுத்துவுக்கு வைக்கவில்லை. அவன் கேள்வியோடு தன் மனைவியை பார்த்தான். ”எம்மா அப்பாவுக்கும் சோறு போடுங்கம்மா” விவரம் தெரியாமல் கண்ணன் கேட்டான்.

“இருந்த கொஞ்ச நஞ்ச அரிசில ஒனக்கு தான் சோறு போட முடியும். ஒங்கப்பாவுக்கு இத்தன நாள் சோத்த வடிச்சி நான் என்னத்த கண்டேன்? ஒனக்கு சோறு போட்டாலாச்சும் நீ கடைசி காலத்துல அம்மாவுக்கு மூனு வேள கஞ்சி ஊத்த மாட்டியா? அதான்” சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கண்ணனுக்கு சத்தியமாக அவன் அம்மா என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. எதற்கு அழுகிறாள் என்றும் புரியவில்லை.

“ஏ கொஞ்சம் பொறுத்துக்கோத்தா. கோவப்படாத.. இன்னைக்கு நைட்டு அரிசி, பலசரக்கு சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துறேன். இன்னைக்கு எங்க மொதலாளி கண்டிப்பா அட்வான்ஸ் குடுத்துருவேன்னு சொல்லிருக்காரு”

“நீங்க அட்வான்ஸ் வாங்குங்க, அரிசி வாங்குங்க, பலசரக்கு வாங்குங்க, எனக்கு கவலை இல்ல. ஆனா கடன்காரன எதுக்கு வீடு வரைக்கும் வர விடுறீங்க?”

“என்னது? வீட்டுக்கா? அபப்டியெல்லாம் யாரும் வந்திருக்க மாட்டாங்களே? நான் என்ன அந்த அளவுக்கா வச்சுக்கிடப் போறேன்?”

”சும்மா நடிக்காதீங்க.. கஷ்டத்துல கடன் வாங்குறது எல்லா எடத்துலயும் நடக்குறது தான். அதுக்காக கடன்காரன் வீட்டுக்கு வரது அசிங்கமா தெரில? சோறு திங்கிறோமோ இல்லையோ மொத அவன்ட்ட வாங்குன கடன திரும்ப கொடுத்திரணும்னு அக்கற வேண்டாம் மனுசனுக்கு?”

“சரி சரி இன்னைக்கு நைட்டு அதையும் குடுத்துறேன். பாரு பிள்ள பாத்துக்கிட்டு இருக்கியான். அவனும் சாப்பிடாம இருக்கியான். உன் அழுகைய பெறகு நடத்து. அவன் சாப்பிடட்டும்.. நீ சாப்பிடுப்பா” மகனின் முதுகில் தட்டிக்கொடுத்து அவனை சாப்பிடச்சொன்னான் வைரமுத்து.

கண்ணனுக்கும் அழுகையாக வந்தது ஏனோ. அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை என்பது மட்டும் தெரிந்தது அவனுக்கு. சாப்பிட பிடிக்காமல் அப்படியே இருவர் பேசுவதையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஆமா ஒங்க மொதலாளி குடுக்குற அட்வான்ஸ்ல நீங்க எத்தன வேலையத்தான் செய்யுறீங்கன்னு பாப்போம். வீட்டுக்கு ஆம்பளையானது நாலு காசு சம்பாதிச்சு பொண்டாட்டி பிள்ளைகள சந்தோசமா பாத்துக்கணும். சோத்துக்கு வழி இல்லேனாலும் பரவாயில்ல, கண்ட கண்ட கடன்காரனுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கே? இதுக்கா எங்க அம்மாவும் அப்பாவும் என்ன கட்டிக்குடுத்தாங்க? இந்த லட்சணத்துல நமக்கு இன்னொரு பிள்ள வேற.. இருக்குற ஒன்னையே கஷ்டப்பட்டு வளக்க வேண்டியிருக்கு.. நான் என்ன செய்ய?” மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் லட்சுமி.

“அதான் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லுறேன்ல? அப்புறம் எதுக்கு ஒப்பாரி வைக்குற? பிள்ளைய வளக்குறது ஒனக்கு கஷ்டமா இருக்கா?” வைரமுத்துவுக்கு கோவம் வந்துவிட்டது. அப்பாவுக்கு கோவம் வந்தால் என்ன ஆகும் என்று கண்ணனுக்கு தெரியும். அமைதியாக சாப்பிட ஆரம்பித்து விட்டான்.

“என்னமோ பண்ணித்தொலைங்க. இனிமேல் எவனும் கடன்காரன் வீட்டுக்கு வரக்கூடாது. அவ்வளவு தான் சொல்லிட்டேன். ஒவ்வொருத்தியும் புருசன் கிட்ட அத வாங்கிக்குடு இத வாங்கிக்குடுனு கேக்குறாளுக. நமக்கு அதுக்கு தான் குடுப்பன இல்லேனாலும் கடன் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னா அதுக்கும் குடுப்பன இல்ல.. எல்லாம் நம்ம தலையெழுத்துனு போக வேண்டியது தான். என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ இனிமேல் வீட்டுக்கு எவனும் தேடி வரக்கூடாது, அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“ம் சரி பாத்துக்கிறேன்”. இதற்குள் தனக்கு வைக்கப்பட்டிருந்த கொஞ்சமான சோறை கண்ணன் சாப்பிட்டு முடித்துவிட்டான். அவனுக்கு அம்மா மேல் ஒரே கோவம் அப்பாவுக்கு சோறாக்கி கொடுக்கவில்லை என்று. அரிசி இருந்தால் தான் சோறாக்க முடியும் என்று அவனுக்கு எப்படி தெரியும்? அம்மா தினமும் காலை அப்பாவுடன் சண்டை போடுவதும் அவனுக்கு பிடிக்காது. தன் நல்ல அப்பாவை இந்த அம்மா தான் சண்டை போட்டு கோவப்பட வைக்கிறாள் என்பது அவன் எண்ணம். 

அப்பா அவனை சைக்கிளில் முன்னாடி உட்கார வைத்துக்கொண்டு பள்ளிக்கு கூட்டிப்போகிறார். ”எப்பா கடன்காரங்கன்னா யாருப்பா?” மகனின் இந்த கேள்வியை வைரமுத்து கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவனுக்கு எப்படி சொல்வது? சொன்னாலும் தான் அப்பன் என்கிற மதிப்பு குறைந்துவிடுமே? இன்னொருத்தனின் காசில் தான் தான் உண்ணும் உணவில் இருந்து போடும் ஆடை படிக்கும் படிப்பு என்று எல்லாமே இருக்கிறது என்று தெரிந்தால் இந்த பிஞ்சு மன்சு என்னவாகும்? தன் அப்பாவை பற்றி அதுவும் மட்டமாகத்தானே நினைக்கும்?

“அதாவதுப்பா, இப்ப அப்பாக்கு சம்பளம் போட லேட் ஆகுது.. ஆனா வீட்டு செலவுக்கு காசு வேணும்ல? அதான் அப்பா சம்பளம் போடுற வரைக்கும் ஒன்னொரு ஆள்கிட்ட கொஞ்சம் காசு வாங்கிட்டு வருவேன். அவங்க தான் கடன்காரங்க. சம்பளம் போட்ட ஒடனே அவங்களுக்கு திருப்பி குடுத்துருவேன். புரியுதா?”

“அவங்க எதுக்குப்பா வீட்டுக்கு வாராங்க?”

“அது அப்பா ஃபேக்டரில வேலையா இருக்குறனா அங்க பாக்க முடியாதுல, அதான் வீட்டுக்கு வாராங்க.. சரி சரி வெட்டிக்கத பேசாம, நேத்து நடத்துன குள்ள குள்ள வாத்து பாட்ட படி பாப்போம்..”

“குள்ள குள்ள வாத்து..
குவா குவா வாத்து..
தலையை மெல்ல சாய்த்து..
மேலும் கீழும் பாத்து..” பள்ளி வரும் வரை கையையும் காலையும் தலையையும் ஆட்டிக்கொண்டே பாட்டுப்பாடிக்கொண்டிருந்தான் கண்ணன்.
காலையில் பள்ளியில் விட்டுவிட்டு பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு போய் விடுவான் வைரமுத்து. மதியம் சோறு கொடுப்பது சாய்ந்தரம் பள்ளியில் இருந்து அழைத்து வருவதும் லட்சுமியின் வேலை. அவள் ஒன்றும் சும்மா இல்லை. வீட்டில் அணுகுண்டு டியூப் ஒட்டிக்கொண்டிருக்கிறாள்.

ஒரு வாரம் நாள் கடந்திருக்கும். காலையில் வழக்கம் போல் கண்ணன் மட்டும் தான் சாப்பிடுகிறான். அம்மாவோ அப்பாவோ சாப்பிடுவதில்லை. மத்தியானமும் சாப்பிடுகிறார்களா என்று அவனுக்கு தெரியவில்லை. இரவில் மட்டும் கொஞ்சமாக எல்லாரும் சாப்பிடுகிறார்கள். அப்பா சொன்ன கடன்காரர்கள் இன்னமும் வீட்டுக்கு வருகிறார்கள் என்பது கண்ணனுக்கு அம்மாவின் அழுகை மூலமும் அப்பாவின் அரட்டல் மூலமும் தெரிந்தது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வதில்லை. 

கண்ணனுக்கு தன் அம்மாவும் அப்பாவும் பேசாமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது. வீட்டிற்கு வந்தாலே அவனுக்கு அழ வேண்டும் போல் இருக்கும். வீட்டில் வெறும் வானொலி சத்தமும் அம்மா பெட்டி ஒட்டிப்போடும் சத்தமும் மட்டும் தான் கேட்கிறது. யாரும் பேசும் சத்தம் கொஞ்சம் கூட கேட்கவில்லை. கண்ணன் மட்டும் அடிக்கடி அவன் அம்மாவிடமும் அப்பாவிடமும், “எம்மா இன்னைக்கு புது ரைம்ஸ் சொல்லிக்குடுத்தாங்க, படிக்கவா?” “எப்பா நான் ஒரு ரைம்ஸ் பாடுறேன் கேக்குறீங்களா?” என்று ரெண்டு வரி பாடுவான். வழக்கமாக அவனை சிரித்து ஊக்குவிக்கும் அவர்கள் அவனை கண்டுகொள்ளாமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து அவனும் சோகாம ரைம்ஸ் பாடுவதை நிறுத்திவிடுவான்.

கண்ணனுக்கு தன் க்ளாஸில் தன்னுடன் படிக்கும் ஷியாமா, சுந்தர், ப்ரவீன், வர்சினி, ப்ரின்ஸ் இவர்களை போல் தன் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து தன்னை தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளிக்கு கொண்டு வந்து விட்டு கூட்டிப்போக வேண்டும் என்னும் ஆசை. வீட்டில் யாருமே பேசாமல் இருப்பது அவனுக்கு கவலையாக இருந்தது. ஒரு நாள் மாலை அவன் அம்மாவிடம் ரைம்ஸ் பாடும் போது தான் தன் வீட்டில் இருக்கும் மாரியம்மன் ஃபோட்டோவை கண்டான் கண்ணன். அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது, ‘சாமி நமக்கு எப்பயுமே நல்லது தாம்ப்பா செய்யும்’..

மெதுவாக ஸ்டூலில் ஏறி நின்று இரு கைகளையும் கூப்பி வணங்கி கண்களை மூடிக்கொண்டு “சாமி காப்பாத்து. எங்க அம்மாவையும் அப்பாவையும் பேச வையி.. இனிமேலு அவங்க சண்டையே போடக்கூடாது, ப்ளீஸ்.. நான் இனிமேலு சீனி சேவுலாம் சாப்பிட மாட்டேன்” என்று வேண்ட ஆரம்பித்துவிட்டான். அவன் சாமியிடம் வேண்ட வேண்ட உதடு துடித்தது, கண்கள் கலங்கின, மூக்கு பெரிதானது.. அழ ஆரம்பித்துவிட்டான். இவன் வேண்டுவது லட்சுமியின் காதில் விழுந்துவிட்டது. அவளும் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டு, “ஒங்க அப்பா பொறுப்பா இருந்தா நான் எதுக்குப்பா அவுக கூட பேசாம இருக்கப்போறேன், சரி அழுகாத” என்று கூறி மகனோடு அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். மாரியம்மன் எப்பவும் போல் சிரித்துக்கொண்டிருந்தது.

மாலை வழக்கமாக ஏழு மணிக்கு வரும் வைரமுத்து அன்று மணி ஏழை தாண்டியும் வரவில்லை. லட்சுமியும் கண்ணனும் வாசலில் அவனுக்காக உட்கார்ந்திருந்தார்கள். நேரம் தான் ஆகிக்கொண்டே இருந்தது. ஃபயர் ஆபிசில் வேலை செய்யும் ஆண் தான் வழக்கமாக வரும் நேரத்தில் வரவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அதற்கடுத்த நொடிகள் மிக மிக கஷ்டம் கொடுப்பவை. என்னவாகியிருக்குமோ என்கிற பயம் ஏதேதோ தப்புகளை கற்பனை செய்ய ஆரம்பிக்கும் ஆனால் அந்த கற்பனையை கட்டுப்படுத்தவும் முடியாது..

யாரோ சைக்கிளில் வருவது போல் இருந்தது. “எம்மா அது அப்பாவோட சைக்கிள் சத்தம் தான்” சந்தோசமாக சொன்னான் கண்ணன். ஆனால் அருகில் வரும் போது தான் தெரிந்தது, அது கணேசன் என்று. அவன் தான் வைரமுத்துவின் சைக்கிளில் வந்திருந்தான். கணேசன் தினமும் மதியம் வைரமுத்துவிற்கும் அவனைப்போன்று டவுனில் இருந்து வேலைக்கு வரும் பிறருக்காகவும் அவரவர் வீட்டில் இருந்து சாப்பாடு வாங்கி வரும் வேலை பார்ப்பவன். சைக்கிளை நிறுத்திவிட்டு கொஞ்சம் பீதியாகவும், அந்த பீதியை வெளிக்காட்டாமல் இருக்க சிரிக்கவும் முயற்சி செய்துகொண்டிருந்தான்.

“என்ன கணேசா அவுக சைக்கிள்ள நீ வந்திருக்க? அவுகள எங்க?” அம்மா கணேசனை பார்த்ததும் வாசலில் இருந்து எழுந்து கொஞ்சம் பதட்டத்துடனும் பயத்துடனும் கேட்டாள். 

“இல்லக்கா இன்னைக்கு ஃபேக்ட்ரி பக்கம் மழை பெஞ்சது. எல்லா வெடியையும் கேஸ் பெட்டில அடுக்கி வச்சிருந்தோம். கேஸ் பெட்டி எல்லாம் மூடாம இருந்துச்சி. மழை வரத பாத்த ஒடனே அண்ணாச்சி வேமா தார்ப்பாய எடுத்துட்டு மூடுறதுக்கு ஓடுனாங்க. கேஸ் பெட்டி மேல ஏறி வேமா தார்ப்பாய விரிச்சி விடும் போது ஒரு கேஸ் பெட்டில இருந்த கத்தி அண்ணாச்சி கணுக்கால்ல நரம்ப வெட்டி விட்டுருச்சிக்கா” வேகமாக, எப்படியாவது சொல்லிவிட வேண்டுமே என்கிற பதட்டத்தில் கணேசன் சொல்லிவிட்டான். கணுக்கால் நரம்பு அறுந்துவிட்டால் ஒரு மனிதன் தன் ஆயுசுக்கும் நடக்க முடியாது.. நொண்டிக்கொண்டே செல்ல வேண்டியது தான்.

“என்ன கணேசா சொல்ற?” லட்சுமி உடைந்துவிட்டாள். கண்ணனை தன் கையோடு அணைத்து இடுப்பில் சாய்த்துக்கொண்டு “இப்ப அவுக எங்க இருக்காக?” என்றாள்.

“இங்க தான்க்கா டவுன்ல நம்ம பிராபகரன் ஆஸ்பத்திரில. ஒடனே ஆபரேசன் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம். இந்நியாரம் ஆபரேசன் நடந்துக்கிட்டு  இருக்கும்” கணேசனுக்கும் லேசாக கண்ணீர் வந்திருக்க வேண்டும். கண்கள் எல்லாம் கலங்கியிருந்தன.

“ஆபரேசன் பண்ணுற அளவுக்கு வெட்டுற வரைக்கும் நீங்கலாம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? இப்ப நா என்ன செய்யுவேன்?” அவள் அழுகையை  நிறுத்தவே இல்லை.

“எக்கா அழாதீங்க.. வாங்க ஆஸ்பத்திரிக்கு போலாம்” கணேசன் கண்ணனை சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு லட்சுமியோடு சைக்கிளை உருட்டிக்கொண்டே ஆஸ்பத்திரி வரை சென்றான். 

அங்கு வைரமுத்துவை வைத்திருக்கும் அறைக்கு வெளியே ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். “அவர் தான்க்கா மொதலாளி” என்றான் கணேசன். லட்சுமி கத்திக்கொண்டே வரை நோக்கி ஓடி வந்தாள்.. ”அண்ணாச்சி என் வீட்டுக்காரர இபப்டி மூலையில ஒக்கார வச்சுட்டீங்களே அண்ணாச்சி” என்று அவரிடம் கையேந்துவது போல் நின்று அழுதுகொண்டிருந்தாள்.

“ச்சே அப்படியெல்லாம் சொல்லிறாதம்மா.. நாங்க அப்படி விட்ருவோமா? ஆபரேசன் நல்லபடியா முடிஞ்சதா டாக்டரு சொல்லிருக்காரு.. நீ ஒன்னும் சங்கடப்படாத.. எல்லா செலவையும் நாங்களே பாத்துக்குறோம்.. என்ன? இன்னும் கொஞ்ச நாள்ல வைரமுத்து எந்திரிச்சு நடந்தே எங்க ஃபேக்டரிக்கு வந்துருவான் பாரேன்” கணேசனிடம் லட்சுமியை உள்ளே அழைத்து செல்லுமாறு சைகை காட்டினார்.

லட்சுமியும் கண்ணனும் உள்ளே சென்றார்கள். வைரமுத்து லேசாக முனகிக்கொண்டிருந்தான். அவனை அப்படி அவ்வளவு சோர்வாக அவள் பார்த்ததே இல்லை.. அவனது வலது கால் தொடையில் இருந்து பாதம் வரை பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. “என்னங்க ஒங்களுக்கு இப்படி ஆகிருச்சே. அய்யோ நான் என்ன பண்ணுவேன்?” என்று வீறிட்டு அழுக ஆரம்பித்துவிட்டாள். 

கண்ணனுக்கு தன் அப்பாவை இப்படிப்பார்க்க பிடிக்கவில்லை. ஒரு சின்ன கத்தி தன் அப்பாவை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தியிருக்கும் என்று அவனால் நம்பமுடியவில்லை. தன் அப்பா தான் உலகிலேயே பெரிய பலசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தான் அவன். அப்படிப்பட்ட ஒரு பலசாலி இப்படி கிடந்து முனகுவதை பார்க்கும் போதும் அவனாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. முனகிக்கொண்டிருக்கும் வைரமுத்துவின் கை விரலகளை பிடித்துக்கொண்டு, “எப்பா எந்திரிங்கப்பா.. எப்பா வாங்கப்பா வீட்டுக்கு போலாம், எப்பா...” என்று அழுது கொண்டே அவன் கை விரல்களை இழுக்க ஆரம்பித்தான். ஒரு குடும்பத்தில் உழைக்கும் ஆண் நோய்பட்டு படுத்துவிட்டால் அந்த குடும்பமே படுத்துவிடுமல்லவா?


“மேடம் மயக்க மருந்து கொடுத்திருக்கோம்.. அவரு கொஞ்ச நேரம் தூங்கட்டும், தொந்தரவு பண்ணாதீங்க” என்று லட்சுமியையும் கண்ணனையும் வெளியே அழைத்து வந்துவிட்டாள் அங்கிருந்த ஒரு நர்ஸ். லட்சுமி இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.

ரெண்டு மூன்று வாரங்களாக கண்ணன் பள்ளிக்கு போகவில்லை. ஆஸ்பத்திரியில் தான் தங்கியிருந்தான் அவன் அம்மாவுடன். தங்கள் வீட்டை விட அந்த ஆஸ்பத்திரி அறை அவனுக்கு பெரியதாக இருந்தது. அடிக்கடி ஆச்சியும் தாத்தாவும் மட்டும் வந்து பார்த்துவிட்டு கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டு போவார்கள். முதலாளி ஆஸ்பத்திரி செலவை மட்டும் தானே பார்த்துக்கொள்வார்? சாப்பாட்டிற்கு எதாவது வழி வேண்டுமே? அதனால் தான் தன் அம்மா அப்பா கொடுப்பதை அவள் அமைதியாக ஏற்றுக்கொள்வாள். ஒரு சில கடன்காரர்கள் வந்தாலும் முன்பு போல் பயந்து போகாமல், தைரியமாக, “இப்ப அவுக கொஞ்சம் மேலுக்கு முடியாம இருக்காக, உங்களுக்கு கூடிய சீக்கிரத்துல எல்லா காசையும் கண்டிப்பா குடுத்துருவாக.. இத்தன நாளு பொறுத்துக்கிட்டீங்க, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க” என்பாள்.. ஆஸ்பத்திரியிலேயே அணுகுண்டு டியூப் ஒட்ட ஆரம்பித்துவிட்டாள்.

வைரமுத்துவை குளிப்பாட்டுவதில் இருந்து, சோறு ஊட்டி, உடம்பை பஞ்சால் துடைத்து, அவனுக்கு கழுவி விடுவது வரை எல்லாமே பார்த்துக்கொண்டாள். இப்போதெல்லாம் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்வதில்லை. வாழ்வில் பெரியதாக ஒரு கஷ்டம் வரும் போது அது வரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் பனித்துளி போல் ஆகிவிடுமே? கிட்டத்தட்ட அவன் காலில் அடிபட்டு ஒரு மாதம் ஆகியும் இன்னும் அவனால் ஒரு பிடிப்பு இல்லாமல் நடக்க முடியவில்லை. கணவனுக்கு மிக ஆறுதலாக இருந்தாள். கண்ணனுக்கு தன் அம்மாவும் அப்பாவும் இப்போதெல்லாம் சண்டை போடாமல் பேசிக்கொள்வதை மிகுந்த ஆச்சரியமாக பார்த்தான். தான் அன்று சாமியிடம் அம்மாவும் அப்பாவும் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என வேண்டியதை நினைத்துக்கொண்டான். அவனுக்கு சாமி மேல் கோவம் வந்தது, தான் வேண்டியதை நிறைவேற்றுவதற்காக அப்பாவை இப்படி ஆக்கிவிட்டதால்.

சில நாட்களில் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய் அந்த மாரியம்மன் ஃபோட்டோவை தூக்கி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக்கொண்டான் கண்ணன். அதை தூக்கி தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்கள் நிறைந்த பொட்டலில் போட்டு விட்டான்.. அந்த வீட்டில் அடுத்து லட்சுமியும் வைரமுத்துவும் சண்டை போடவேயில்லை. கண்ணனுக்கு ஒரு தம்பியும் பிறந்தான். வீட்டில் எப்போதும் சந்தோசமும் மகிழ்ச்சியும் மட்டுமே நிறைந்திருந்தது. இந்த சந்தோசத்தின் ஒலிகள் அருகில் பொட்டல் காடில் இருக்கும் மாரியம்மனின் காதிலும் வைழுந்திருக்கும் போல.. எப்போதையும் விட அந்த ஃபோட்டோவில் அதிகமான சிரிப்பு இருந்தது..

நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்..

Friday, March 22, 2013

நம் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு சிறு தொழில் செய்பவருடனோ, சேல்ஸ் வேலையில் இருப்பவருடனோ கொஞ்ச நேரம் செலவழித்து பாருங்கள் புரியும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குள் ஆயிரம் பிரச்சனை. உற்பத்தி முடிந்து அதை விற்பனைக்கு அனுப்பும் போது, வாங்க ஆள் இல்லை. எனக்கு தெரிந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வியாபாரம் கம்மி. அப்படியே நடக்கும் வியாபாரம் கூட கடனுக்கு தான் நடக்கிறது. பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை ஆட்சி செய்யும் பொருளாதார வல்லுனர்களின் சில அரசியல்/ஓட்டு ஆசைகள் தான். இதை மைக்ரோ லெவலில் அதாவது நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்களை வைத்து கொஞ்சம் தெளிவாக பேசலாம் வாருங்கள். 

பொதுவாக ஒரு நாட்டில் பணப்புழக்கம் என்பது இரண்டு வழிகளின் மூலம் தான் பெரும்பாலும் நடக்கும். ஒன்று அரசின் மூலம்.. அதாவது அரசு தன்னுடைய உள்கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் பணப்புழக்கத்தை கொண்டு வரும். இது பணம் மேல் இருந்து கீழ் பாயும் நிலை.. அரசிடம் இருந்து கான்ட்ராக்டர் ---> கூலிகள் ----> வியாபாரிகள்  என்று ஒவ்வொரு படிநிலையாக பணம் கைமாறி புழக்கத்தில் இருக்கும். இரண்டாவது வழி சிறு தொழில் முனைவோர் மூலம். சிறு தொழில் முனைவோரில் விவசாயிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்றுவிட்டு அந்த பணத்தில் தங்களின் தேவைகளுக்கு செலவு செய்வார்கள். இது கீழிருந்து மேல் போகும் நிலை. அதாவது சிறு தொழில் முனைவோரிடம் இருந்து வியாபாரி, கச்சா பொருள் விற்பவன், அரசு என்று மேல் நோக்கி போகும். நம்மை போன்ற நுகர்வோர் இந்த இரண்டு நிலைகளிலும் நடுவில் இருப்போம்.. அதாவது அரசும் சிறு தொழில் முனைவோரும் தான் பணப்புழக்கத்தின் ஆரம்பம் மற்றும் கடைசி புள்ளி.. அந்த பணத்தை நடுவில் இருந்து புழங்கிக்கொண்டிருப்பது நாம் தான். நம் மூலம் தான் அந்தப்பணம் ஆரம்பப்புள்ளிக்கோ கடைசி புள்ளிக்கோ போகும். அதாவது பணப்புழக்கம் என்பது ஆரம்பமும் முடிவும் தெரிந்த ஒரு வட்டம்.

சரி இப்போது இதை ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? பிரச்சனையே இந்த வட்டத்தினால் தானே? முதலில் வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு தொழில் முனைவோரையும் விவசாயிகளையும் பற்றி பார்க்கலாம். எங்கள் சிவகாசியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். கடந்த நான்கு வருடங்களாக எங்கும் நிரந்தரமான மின் உற்பத்தியோ, மின் சேவையோ இல்லை. (நம் அரசுகளின் மோசமான திட்டமிடல் தான் இதற்கு காரணம் என்பது கொசுறு செய்தி). சிவகாசியில் தீப்பெட்டியும் அச்சுத்தொழிலும் தான் வருமானத்திற்கு ஆதாரம். பட்டாசு உற்பத்தியும் முக்கியமான தொழில் என்றாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வால் அது கொஞ்சம் டல்லடித்து தான் இருக்கிறது. மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் ஒவ்வொரு தீப்பெட்டி மற்றும் அச்சாபிஸ் உரிமையாளர்கள். ஜெனெரேட்டருக்கு மண்ணெண்ணையோ டீசலோ கொட்ட வேண்டும் அதன் வயிற்றில். இரண்டும் கடந்த சில வருடங்களாக விற்கும் விலையை பார்த்தால் பேசாமல் ஒரு லிட்டரை வாங்கி அதன் வயிற்றில் ஊற்றாமல் நம் உடம்பில் ஊற்றி பற்ற வைத்துக்கொள்ளலாம். சரி வேறு வழி இல்லை என்று எங்கள் ஊர் சிறு தொழில் முனைவோர் ஜெனரேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம், மூன்று மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு ஒரு நாளைக்கு 15 மணி நேரம் என்னும் கின்னஸ் ரெக்கார்டில் வந்து நிற்கிறது. ஒரு நாளில் வரும் 15 மணிநேர மின்வெட்டு வேலை நேரத்தில் மட்டும் 10மணி நேரம் போய்விடுகிறது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஜெனெரேட்டர் போட்டால் பொருளின் விலை என்னவாகும்? மின்சாரத்தை பயன்படுத்து உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் இதனால் இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலை கூடுகிறது. 

பொருளின் இந்த யானை விலை, குதிரை விலையை பார்த்து, ஆர்டர் கொடுத்த பார்டிகள் பலர் பொருளை வாங்காமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பொருளை வாங்கிய இன்னும் சிலரோ பாதி பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் ஓடிவிட்டார்கள். இங்கு எங்கள் சிறு தொழில் முனைவோர்களால் தங்களின் கச்சா பொருள் உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கச்சா பொருள் விற்பவருக்கு தன் பொருளுக்கான பணம் கிடைக்காததால் அவரால் தொடர்ந்து பொருட்களை சப்ளை செய்ய முடியவில்லை. உற்பத்தி பாதிக்கிறது. பொருளின் விலை ஏற்கனவே இருக்கும் மின்சார பிரச்சனையோடு இந்த கச்சா பொருள் பிரச்சனையும் சேர்ந்து விடுவதால் மீண்டும் அதிகரிக்கிறது. ஆனால் விலை அதிகமாக இருப்பதால் வாங்க ஆள் இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட பொருள் யாருக்கும் பலனில்லாமல் கிட்டங்கியில் தூங்குகிறது. இது சிவகாசியில் மட்டும் என்று இல்லை. சிறு தொழில் பெருத்திருக்கும் பல நகரங்களிலும் இது தான் கதை. என்னை பொறுத்தவரை நவீன இந்தியாவின் முதுகெலும்பு சிறு தொழில் தான். ஒவ்வொரு சிறு தொழிலும் ஒரு நீரூற்று, ஒரு பொன் முட்டையிடும் வாத்து. ஆனால் நம் அரசாங்கங்களின் மட்டமான திட்டமிடல்களினாலும், மோசமான உள்கட்டமைப்புகளினாலும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது சிறு தொழில் வணிகம்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு டவுட் வரலாம், நாம் ஜெனரேட்டருக்கு ஊத்து ஊத்து என்று எண்ணெயும் டீசலும் ஊற்றுகிறோமே அந்த பணம் அரசுக்கு தானே போகிறது? அப்போது நமது ’பணப்புழக்க வட்ட விதி’யின் படி அரசிடம் இருந்து அந்தப்பணம் மக்களுக்கு வந்து பணப்புழக்கத்தை அதிகரித்து பிரச்சனையை சரியாக்கலாமே என்று.. அப்படி ஒரு டவுட் வந்தால் உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்கள் புத்தி கூர்மையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் நம் நாட்டில் நடக்கவில்லையே!! நம் ஆட்கள் நடக்கவிடவில்லையே? ஏன் எப்படி  என்று பின்னர் கூறுகிறேன்.

நாம் அடுத்து பார்க்கப்போவது விவசாயம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். அந்த விவசாயத்தின் நிலையை கொஞ்சம் பார்ப்போம்.. என்ன பெருமூச்சு? விவசாயம் பற்றி பேசினாலே மனதில் ஒரு வித சோகம் வந்துவிடுகிறதா? என்ன செய்ய? “விவசாயிகள் வேறு நல்ல தொழிலை பார்த்து பிழைத்துக்கொள்ளட்டும்” என்று சொல்லும் பிரதமர் அல்லவா நமக்கு கிடைத்திருக்கிறார்? விவசாயத்திற்கும் அதே மின்சார பிரச்சனை தான். டெல்டா பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கிணற்றுப்பாசனம் தான். மின்சாரம் இல்லாததால் எங்கும் பயிர் சரி வர விளையவில்லை. கர்நாடகாக்காரன் நம்மை பிச்சைக்காரனை விட கேவலமாக நடத்தி, டெல்டா பகுதிகளையும் மலடாக்கிவிட்டான். முழுதாக விளைந்தாலே முதலுக்கு மோசமில்லை என்பது தான் விவசாயியின் நிலை. ஆனால் இந்த முறை ஒன்றுமே இல்லை. உர மானியம் ரத்து, பூச்சுக்கொல்லியின் விலை அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு, மழை பொய்ப்பு, தண்ணீர் தட்டுப்பாடு என்று விவசாயம் சரியான அடி வாங்கியிருக்கிறது. டெல்டா பகுதியில் தரையில் இருந்து 5அடி தோண்டினாலே நீர் வரும் பகுதியில் வசிக்கும் என் டீலர் ஒருவரது வயலில் வழக்கமாக 100மூடை நெல் விளையுமாம் போன வருடம் வரை. இந்த வருடத்தில் போன வாரம் தான் அறுப்பு முடிந்திருக்கிறது. எத்தனை மூடை நெல் வந்தது தெரியுமா? 35 மூடைக்கு கொஞ்சம் கம்மி.. முப்பத்தி நாலே முக்கால் மூடை.. இன்று என் முன் தான் அளந்து கொண்டிருந்தார். ஆனால் செலவுக்கணக்கை பார்த்தால் 100 மூடைக்கும் அதிகமான செலவு.’என்ன பண்ண சார்? நஷ்டம் வந்தாலும் எங்களால விவசாயத்த விட முடியாது’ - இது என் டீலரின் பதில் மட்டும் அல்ல, செத்துப்போகும், அடுத்து செத்துக்ப்போக வரிசையில் நிற்கும் ஒவ்வொரு விவசாயியின் பதிலும் இது தான்..

ஆக பணப்புழக்கத்திற்கு ஒரு வகையில் ஆதாரமாக இருக்கும் சிறுதொழில்களும் விவசாயமும் இந்த ஆண்டு மிக மிக மோசமான நிலையில் வீழ்ந்துவிட்டன. இன்னொரு பக்கம் ஆதாரமாக இருக்கும் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்,  நடுவில் இருக்கும் நம்மை போன்ற சாதாரண மக்களைப்பற்றி பார்த்துவிடலாம். ஏனென்றால் நாம் பணப்புழக்கத்திற்கு ஆதாரமோ முடிவோ இல்லை. அப்படியென்றால் நம் கையில் போன வருடம் இருந்த பணம் தானே இப்போதும் புலங்க வேண்டும்? அதனால் நம்மை பற்றி பார்ப்போம்.

உங்கள் ஊரில் நான் சொல்லும் தொழில்கள் எல்லாம் இப்போது இருக்கின்றனவா என உங்கள் மனதில் லேசாக ஓட்டிப்பாருங்கள். செருப்பு தைப்பது, கிழிந்த துணி தைப்பது, குடை ரிப்பேர் செய்வது, டிவி ரிப்பேர் செய்வது, சிறு மின் சாதனங்களான டியூப் லைட், மின்விசிறி ரிப்பேர் பார்ப்பது, ஒழுகும் பைப்பை அடைக்கும் ப்ளம்பிங் வேலை, சிறு மர வேலை, கட்டிலுக்கு வயர்/நார் பின்னுவது.. இது எதாவது இருக்கிறதா இன்னும் உங்கள் ஊரில்? என்ன ஞாபகம் இல்லையா? முன்பெல்லாம் (ரொம்ப வருசத்துக்கு முன்னாடியெல்லாம் இல்லை, ஜஸ்ட் 5வருடங்களுக்கு முன்பு வரை) எங்கள் தெருவில் தினமும் குடை ரிப்பேர் செய்பவரும், கிழிந்த துணி தைப்பவரும் வருவார்கள். கிழிந்த துணியையும் செருப்பையும் தைக்க ஒரு சிறு ஏரியாவே உண்டு எங்கள் ஊரில். இப்போது தான் நாம் எல்லாமே புதுசாக வாங்கி விடுகிறோமே? டிவியில் பிரச்சனையா? புது டிவி.. செருப்பு அறுந்துவிட்டதா? புது செருப்பு.. லைட்டு ஃபேனில் பிரச்சனையா? புது லைட்டு.. இதெல்லாம் கடந்த 5,6 வருடங்களில் வந்த மாற்றங்கள். இதனால் சிறு வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டார்கள். எங்கேவாது ஒரு சிலர் அப்படியே கிடைத்தாலும் அவர்களின் கூலி அதிகம். எல்லோரும் இன்று ஓரளவுக்கு படித்திருப்பதும் இது போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காததற்கு காரணம். ஆள் கிடைக்காததால் தொழில் தெரிகிறதோ இல்லையோ, அந்த தொழிலை செய்ய எவனோ ஒருவன் வந்து விண்ணை முட்டும் கூலி கேட்பான்.

நாமும் எல்லா முறையும் புது டிவியோ, புது செருப்போ வாங்கி விட முடியாது. வீட்டில் குழாய் ஒழுகுகிறது. மொத்தமாக குழாயை எடுத்துவிட்டு புதுசாக மாட்ட முடியுமா? ஆனால் அந்த சின்ன ரிப்பேருக்காக நீங்கள் ப்ளம்பரை கூப்பிட்டால் அவர் தெனாவட்டாக சொல்வார், “இந்த மாதிரி சின்ன வேலைக்குலாம் வரதில்ல.. நீங்க எனக்கு ஒரு நாள் கூலி குடுத்தீங்கன்னா வாரேன்”.. சரி அவரின் ஒரு நாள் கூலி என்ன என்று கேட்கிறீர்களா? வெறும் 500ரூபாய் தான்!!!!! ஒரு மணி நேர வேலைக்கு அந்த காசை கொடுக்க நீங்கள் ஒத்துக்கொண்டாலும் அவர் உடனே வர மாட்டார். ஒரு வாரம் உங்களை பழனிக்கு பால் காவடி எடுக்க வைத்துவிட்டு தான் வருவார். சென்னையில் இருப்பவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில் இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். இன்று ஒரு சித்தாளின் கூலி 200ரூபாய்.. கொத்தனார்களின் கூலி, 450ல் இருந்து 600ரூபாய் வரை. கிட்டத்தட்ட B.E. முடித்து வேலையில் சேரும் ஒரு இன்ஜினியரும் ஒரு கொத்தனாரும் மாதம் ஒரே அளவு சம்பாதிப்பார்கள். போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இது போல் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டும் கூலி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூடியிருக்கிறது. ஆனாலும் ஆள் கிடைப்பதில்லை. நுகர்வோர் நம்மின் சம்பளம் போன வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவு கூடியிருக்கிறது? அதாவது நம் கையில் போன வருடம் இருந்த அதே பணம் தான் இப்போதும் இருக்கிறது, ஆனால் பொருட்களின் விலையும் கூலியும் அசுர வேகத்தில் கூடிவிட்டன. ஒரு பக்கம் பொருளின் விலையேற்றம், மற்றொரு பக்கம் வேலையாட்கள் தட்டுப்பாடு+கூலி உயர்வு.. அதனால் பணப்புழக்க வட்டத்தில் இடையில் இருக்கும் நாமும் சென்ற வருடங்கள் போல் இப்போது பணத்தை செலவழிக்க முடியவில்லை. செலவழித்தாலும் சரியான பலன் இருபப்தில்லை.

சரி இப்போது நம் பணப்புழக்க வட்டத்தின் ஆரம்ப புள்ளியான அரசாங்கத்தை பற்றி பார்ப்போம். முதலில் நம் மதிப்பிற்குரிய மத்திய அரசின் பணப்புழக்கம் பற்றி. நாம் கொடுக்கும் வரி, பெட்ரோல் டீசலுக்கு அழும் தண்டம் என்று மத்திய அரசுக்கு நல்ல வருமானம் தான். சும்மா எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் நஷ்டம் என்று சொன்னாலும் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டும் உண்மையை பேசிவிடுகிறது. பின்னே, இவ்வளவு மக்கள் தொகையும் வாகன போக்குவரத்தும் இருக்கும் தேசத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு எப்படி நஷ்டம் வரும்? வரியின் மூலமும் பெட்ரோலிய பொருட்களின் மூலமும் வரும் வருமானத்தை கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தையும் பணப்புழக்கத்தையும் எவ்வளவோ மேம்படுத்தியிருக்கலாம் நம் மத்திய அரசு. ஆனால் என்ன செய்தார்கள் நம் மத்திய அரசில் இருக்கும் வெளிநாட்டு பல்கலையில் பொருளாதார பட்டம் பெற்ற இருவர்?


ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த 100 நாள் வேலை வாய்ப்பு என்பது விவசாயம் இல்லாத கிராமங்களில்/விவசாயம் இல்லாத நேரங்களில் கிராமவாசிகளிக்கு வருமானம் கிடைக்க கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் திட்டம். ஆனால் நிஜத்தில் இவை தான் விவசாயத்தையே அழிக்கின்றன. ‘கலகலப்பு’ படத்தில் சந்தானம் சொல்வாரே, “டேய் நீ குடவுன்ல இருக்குற மூட்டைய தென்னந்தோப்புல போட்டிரு.. நீ தென்னந்தோப்புல  போடுற மூட்டைய எடுத்து திரும்ப குடவுன்லயே போட்டிரு.. குடுத்த காசுக்கு உங்களுக்கு எதாவது வேல குடுக்கணும்ல?” என்று.. அது போல் தான் நம் 100 நாள் திட்டமும். ஏரியை சுத்தம் செய்கிறோம் என்று மண்ணை அள்ளுவார்கள் இன்று.. மறுநாள் ஏரியை சமப்படுத்துகிறோம் என்று அதே மணலை மீண்டும் அங்கேயே கொட்டிவிடுவார்கள். இது கூட பரவாயில்லை. பல இடங்களில் காலையில் இருந்து சும்மாவே அமர்ந்திருப்பார்கள். மாலையில் கூலி 70ல் இருந்து 80ரூபாய் வரை உங்களை தேடி வரும். ஆம் மொத்த பணம் 100ரூ கிடைக்காது. கமிசன் பிடித்துக்கொண்டு தான் கொடுப்பார்கள். ஒருவன் இப்படி ஒன்றுமே செய்யாமல் 70ரூ சம்பாதிக்க நினைப்பானா அல்லது வயலுக்கு வந்து காலையில் இருந்து மாலை வரை முதுகு வலிக்க வெயிலில் உழன்று 100ரூ சம்பாதிக்க நினைப்பானா?  அப்படியே விவசாயத்திற்கு ஆள் வந்தாலும் கூலி குறைந்தது 200ரூ.. பின் விவசாயம் எப்படி வளரும்?

அரசாங்கம் நாம் கொடுக்கும் பணத்தை முறையாக அதை பெருக்கும் வழியில் செலவழிக்காமல் இப்படி ஓசிக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவன் அந்த 70ரூபாயோடு திருப்திப்பட்டுக்கொண்டும் இலவசங்களை அனுபவித்துக்கொண்டும் தானும் முன்னேறாமல் மொத்த முன்னேற்றத்தையும் கூட தடுக்கிறான். அவனால் விவசாயம் தடைபடுகிறது. பொருளாதாரமே கூட கொஞ்சம் ஆட்டம் காணுகிறது. ஆனால் இந்த 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம் காங்கிரஸ் அரசு ரொம்ப பெருமையாக பேசுகிறது. ஆனால் நாட்டில் பாதி விவசாயத்தை கொன்றதே இவர்களின் இந்த திட்டம் தான். அதுவும் போக ஒரு சோம்பேறி சமுதாயத்தை உருவாக்குகிறது. பொருளாதாரத்தில் ”மக்கள் தொகை அதிகரிப்பால் மொத்த வளர்ச்சியும் சிதைந்துவிடும்” என்று மால்தஸ் சொல்லியிருப்பார் தன்னுடைய Malthusian Theory of Populationல். ஆனால் அவரின் மக்கள் தொகை தியரியை மறுத்து சொன்னவர்கள் கூறிய அற்புதமான வாக்கியம், ”ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது ஒரு வாயுடன் தான் பிறக்கிறது. ஆனால் அதற்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்கிறன்றன. அதனால் எப்படியும் தானும் உழைத்து பொருளாதாரத்தையும் பெருக்கும்” என்று.. ஆனால் நம் அரசாங்கம் இங்கு நமக்கு கையும் காலும் இருப்பதை மறந்து தினமும் 70ரூபாயும் 80ரூபாயும் பிச்சை போட்டுக்கொண்டிருக்கிறது. நாமும் சொகுசாக தின்று விட்டு நம்மோடு சேர்த்து இன்னொருவனின் பிழைப்பை மறைமுகமாகவும் நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும் கெடுக்கிறோம்.. 

சரி மத்திய அரசு தான் இப்படி என்றால் மாநில அரசு அதை விட ஒரு படி மேலே இருக்கிறது. மத்திய அரசுக்கு எப்படி வரியும், பெட்ரோலும் கை கொடுக்கிறதோ, மாநில அரசுக்கு அதை விட அதிகமாக கை கொடுப்பது TASMAC.. TamilNadu State Marketing Corporation என்பதன் சுருக்கம் தான் நம் டாஸ்மாக். ஆனால் அவர்கள் என்ன மார்க்கெட்டிங் செய்கிறார்கள்? ஊரையே குடிகாரன் ஆக்குகிறார்கள். சாராயக் கடை வருமானத்தை நம்பித்தான் அரசே இயங்கிக்கொண்டிருக்கும் சூழல் இங்கு.. அகில இந்திய அளவில் நம் டாஸ்மாக் மூன்றாவது அதிக வருமானம் கொடுக்கும் ஒரு மாநில அரசின் ஸ்தாபனம். முதல் இரண்டு இடத்தில் மராட்டிய மின்துறையும் குஜராத்தின் ஒரு துறையும் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 18000கோடி ரூபாய், நம் குடிகார ஜனங்களால் நம் மாநில அரசுக்கு கிடைக்கிறது.. சரி இவ்வளவு வருமானம் கிடைக்கிறதே, அதை மக்களின் முன்னேற்றங்களுக்கு பயன் படுத்தும் விதத்திலோ வேலை வாய்ப்பை பெருக்கும் விதத்திலோ பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. இலவச டிவி, இலவசை மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன், இலவச அரிசி, இலவச கேஸ் அடுப்பு, இலவச லேப்டாப் (இந்த கட்டுரையை கூட நான் இலவச லேப்டாப்பில் தான் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்) என்று எங்கும் இலவசம். இன்னும் நம் அரசாங்கம் விடலை பசங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களை தான் இலவசமாக தரவில்லை என்று நினைக்கிறேன்.. ஒருவனுக்கு நல்ல கல்வியை இலவசமாக கொடுத்துவிட்டால் வருங்கால சமுதாயமே சிறந்து விளங்கும் என்று நினைத்த காமராஜர் எங்கே? கல்வியை தவிர எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து ஒரு சமுதாயத்தையே சோம்பேறியாக்கும் இவர்கள் எங்கே?

ஒருவன் வேற்று ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். அந்த பெண் கொஞ்சம் படித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு அரசு திருமணத்திற்கு மானியம் கொடுக்கும், தாலிக்கு தங்கம் கொடுக்கும், அடுத்து அவர்களுக்கு பசுமை வீடு கொடுக்கும், ரேசன் அரிசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கேஸ் அடுப்பு, etc.. ஒரு குடும்பத்தலைவன் என்று அவன் எதற்கு இருக்கிறான் என்று யாருக்குமே தெரியாது? பேசாமல் ஒவ்வொரு குடம்பத்திற்கும் இலவசமாக குடும்பத்தலைவனையும் கொடுத்துவிட்டால் எல்லா ஆணும் வீட்டிற்கே வராமல் சொகுசாக நிம்மதியாக டாஸ்மாக்கிலேயே பொழுதை கழித்துவிடுவான்..

இலவசம் கொடுப்பதால் ஏழைகளின் வாழ்வாதாரம் முன்னேறுகிறது என்று சிலர் சொல்வார்கள்.. எப்படி முன்னேறும்? இலவசமாக கொடுத்த பொருட்களில் பாதி மின்சாதன பொருட்கள். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின்வெட்டு. மின்சாரம் இருக்கும் நேரத்தில் இலவச அரிசியையும் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைத்த காசில் கொஞ்சம் காய்கறியும் வாங்கி தின்றுவிட்டு, டிவியில் சினிமா பாட்டை பார்த்துக்கொண்டே தூங்கிக்கொண்டிருக்கிறான் நம் நாட்டின் குடிமகன். அங்கு தூங்குவது அவன் மட்டும் அல்ல. ஒருவனின் productivity அதாவது உற்பத்தித்திறன் அங்கு தூங்குகிறது. அவன் மூலம் அவன் குடும்பத்திற்கும் இந்த நாட்டிற்கும் கிடைக்கப்போகும் வருமானம் தூங்குகிறது. நம் பொருளாதாரம் தூங்குகிறது. மொத்தத்தில் சோம்பேறி குடிமக்களை உருவாக்கி, அவர்களை குடிக்கு அடிமைப்படுத்தி எதிர்காலத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நம் பொருளாதாரத்தை நாசமாக்கும் வேலையை மத்திய அரசும் மாநில அரசும் தெளிவாக செய்கின்றன. 

இப்படி ஒருவர் குடித்துவிட்டு தூங்குவதால், சிறு தொழில் முனைவோருக்கும், விவசாயம் செய்வதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.. ஆட்கள் கிடைக்காததால் பொருட்களின் உற்பத்தி பாதிக்கிறது..இது பொருளின் விலையை உயர்த்துகிறது. அரசு தன் பணத்தை எல்லாம் இலவசங்களுக்கு தாரை வார்ப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து பொருளை வாங்க முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். பணப்புழக்கம் குறைவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது.. பண வீக்க அதிகரிப்பால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது. அரசு அக்கறை இல்லாமல் இலவசத்தை தொடர்கிறது. இலவசத்தை பெற்று குடிமகன் உழைக்காமல் எப்பவும் போல் தூங்கிக்கொண்டிருக்கிறான். அதனால் மீண்டும் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. ஆள் கிடைக்காததால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது.. இப்படியே இது ஒரு வட்டமாக மீண்டும் மீண்டும் சுற்றுகிறது.. ஒவ்வொரு முறை சுற்றும் போதும் பொருளின் விலை இன்னும் கூடுகிறது, நமது வாங்கும் சக்தி இன்னும் குறைகிறது, ரூபாயின் மதிப்பு இன்னும் வீழ்கிறது, பண வீக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் நம் பொருளாதாரம் சீரழிகிறது.. இதை தடுக்க ஒரே வழி, தங்களின் பெரிய சாதனையாக மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையும், மாநில அரசு பீற்றிக்கொண்டிருக்கும் இலவசத்தையும் நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்.. செய்வார்களா நம் அரசியல்வாதிகள்???????

நடிகர்கள் ஏன் போராட வேண்டும்???

Friday, March 15, 2013

உண்ணாவிரதம் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்து இன்று (14/03/2013) அங்கு வந்து அமர்ந்திருந்த ஃபோட்டாவை ஃபேஸ்புக்கில் பலரும் போட்டு “இந்த அக்கறை மற்றவர்களுக்கு ஏன் வரவில்லை”, “நீ தான்டா தமிழன்” என்று என்னென்னமோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட மனிதனாக ஒரு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சிம்புவுக்கு எல்லா உரிமையும் உண்டு. ஆனால் நடிகன் என்கிற ஒரே காரணத்தால் நாம் ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களை என்ன பாடு படுத்துகிறோம் என எப்போதாவது யோசித்திருக்கிறோமா? ஒருவரை போராட வேண்டும் என நிர்பந்திக்க நாம் யார்? அப்படியே போராட வேண்டும் என்றாலும் இன்றைய சினிமா நடிகர்கள் அந்த போராட்டத்தை எந்த அளவில் சுயநலம் இல்லாமல் செய்வார்கள்? சரி கொஞ்சம் தெளிவாக ஆரம்பம் முதல் அலசலாம், வாருங்கள்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த போது நம் தமிழ் நடிகர் நடிகைகள் (சிவாஜி, சாவித்திரி போன்றவர்கள்) தாங்களாக முன் வந்து நாடகம் போட்டு அந்த பணத்தை போர் நிவாரண நிதிக்கு கொடுத்தார்கள். இதை யாரும் குறையோ குற்றமோ சொல்ல முடியாது. அதே போல் இதை யாரும் பெரிதாக சொல்லி விளம்பரம் தேடிக்கொள்ள வில்லை. அன்று எல்லாமே பொதுநலமாக பார்க்கப்பட்டது. ஒற்றுமையாக நாடகம் போட்டார்கள். இன்று அப்படி ஒரு சூழலை நம்மால் நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு மக்கள் பிரச்சனைக்கு எல்லா நடிகர்களும் விளம்பரம் தேடாமல் ஒற்றுமையாக பேசுவார்களா? இந்த இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தான் எத்தனை நடிகர்கள் எத்தனை விதமாய் பேசினார்கள்?


நடிகர் விஜய் முதலில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாய் ஒரு மீட்டிங் போடுவதாக செய்தி வந்தது ஒரு சில ஆண்டுகளுக்கு முன். சில அரசியல் நிர்பந்தங்களால் அது ‘தமிழக மீனவர்களுக்கு ஆதரவான’ கூட்டமாக மாறியது. அந்த மேடையில் இவர் ஏதாவது உருப்படியாக அல்லது அரசின் கவனம் ஈர்க்கும் விதமாக பேசுவார் என்று பார்த்தால், மேடையில் தோன்றி, “இலங்கை கடற்படைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்” என வீராவேசமாய் ”நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்னும் கருத்தாழமிக்க பாடலை பாடினார். மொத்த நாகையும் அதிர்ந்தது. விசிலடிச்சான் குஞ்சுகள் புலங்காகிதம் அடைந்தன தங்கள் இளைய தளபதியின் துணிச்சலை நினைத்து. இது போன்ற புகழ் பெற்ற நடிகர்கள் இந்த மாதிரி தான் மக்கள் பிரச்சனைகளுக்கு போராட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? அவர்களால் கை தட்டலை மீறி எதையும் யோசிக்க முடியாது.

அடுத்தது என் தலைவர் ரஜினி. நாட்டில் ஒவ்வொரு முறை ஏதாவது பொது பிரச்சனை, நீர் பிரச்சனை என்று வரும் போது எனக்கு முதல் கவலை தலைவரை நினைத்து தான். எவனாவது இவரைப் பற்றி தப்பாய் பேசி விடுவானோ என்பதை விட இவர் எங்காவது வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே என் வருத்தமாக இருக்கும். கர்நாடகத்திற்கு எதிராக மொத்த நடிகர் சங்கமும் நெய்வேலியில் மின்சாரத்தை நிறுத்துவோம் என புறப்பட்டு சென்றது. அங்கே பாரதிராஜா, நெஞ்சு புடைக்க கண்களில் அனல் கக்கி ரஜினிக்கு சவால் விட்டார் “எங்கள் நாட்டில் பிழைத்து விட்டு எங்களுக்காக குரல் கொடுக்க மாட்டாயா?” என்று கோவம் கொப்பளிக்க ரஜினியை கேட்டார்.  மேடையில் கத்திக்கொண்டே ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை அநாயசமாக குடித்து விட்டு மீண்டும் ரஜினிக்கு சவால் விட்டார், “எங்கள் திண்ணையில் படுக்க இடம் கேட்டு வந்த நீ இன்று எங்கள் வீட்டையே அபகரிக்க நினைப்பாயா?” என்று கர்ஜித்தார். இந்த நேரத்தில் இந்த கிராமத்து இயக்குனர் இயக்கிய ‘கொடி பறக்குது’ என்னும் படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை. நெய்வேலியில் இவர் பேசிய போது பயங்கரமான கைதட்டல்கள்..
.
தலைவர் ஒன்றுமே பதில் கூற வில்லை. ரெண்டொரு நாட்களில் தன் பங்குக்கு தன் கெத்தை காட்ட, சென்னையில் ஒரு உண்ணாவிரத போராட்டம் இருந்தார். மாலையில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல்வரிடம் ஒரு லெட்டரை கொடுத்து கடமையை முடித்துக்கொண்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், காவிரி பிர்ச்சனை என்பது ரஜினியின் அந்த உண்ணாவிரதத்தினால், அவரின் இமேஜை கொஞ்சம் பெருக்கியது.  அவ்வளவு தான். எங்கு பார்த்தாலும் ரஜினியின் உண்ணாவிரதம் தான் செய்தி. எல்லோரும் காவிரியை மறந்துவிட்டார்கள்.. போராட்டத்தின் தாக்க, அதன் கருத்து எல்லோருக்கும் மறந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் ரஜினி ரஜினி தான்.. அதே போல், அதற்கு முன் தேசிய நதி நீர் இணைப்புக்கு தான் கொடுப்பதாய் சொன்ன ஒரு கோடி என்ன ஆனது என்பது தலைவருக்கு மட்டுமே வெளிச்சம். அவர் அந்த ஒரு கோடி பற்றி சொன்னதும் அவரது இமேஜ் தான் கூடியதே தவிர இன்று வரை அந்த ஒரு கொடி என்ன ஆனது என்று யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒவ்வொரு முறை காவிரி பிரச்சனை வரும் போதும் நாம் முதலில் அரசின் பதிலை எதிர்பார்க்கிறோமோ இல்லையோ ரஜினியை வம்புக்கு இழுக்கிறோம்.
.
ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். ரஜினி என்பவர் பிறப்பால் ஒரு மராட்டியர். கர்நாடகத்தில் பிறந்து ஒரு கண்டக்ட்ராக இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகராக பிழைக்கவந்தவர். அவர் ஒன்னும் கர்நாடக முதல்வர் இல்லை. எதற்கெடுத்தாலும் காவிரிக்கு அவரை குரல் கொடுக்க சொல்ல. அவர் மேல் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு ‘குசேலன்’ படத்தை வெளியிடும் பொருட்டு கர்நாடக அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் என்பது. 100கோடி ரூபாய் வியாபாரத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று சொல்லிவிட்டு இந்த விசயத்தில் ரஜினியை குற்றம் சொல்லலாம்..
  
அடுத்ததாக மிக சமீபத்தில் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடிய சேவை வரி பிரச்சனை. தங்களுக்கும், தங்கள் வருமானத்திற்கும் ஒரு பாதிப்பு என்று வரும் போது அவர்கள் என்ன ஒற்றுமையாக போராடினார்கள் என ஊர் உலகமே பார்த்தது. மற்ற போராட்டங்களில் தனித்தனியாக போராடி தங்கள் பலத்தை யாருக்கோ காட்ட நினைக்கும் அவர்கள் இதில் தனியாக போராடவில்லை. ஏன்? ஏனென்றால் அவர்கள் தனியாக கெத்து காட்டுவதற்காக போராடியிருந்தால் ஒவ்வொரு ரசிகனுமே கேள்வி கேட்டிருப்பான். “அதான் சம்பாத்திக்குறாய்ங்கல்ல, வரி கட்டுறதுக்கு என்னவாம்?” என்று மூகத்தில் அடிப்பது போல். மொத்தமாக போராட்டம் இருந்த போதே பலரும் நடிகர்களைப் பார்த்து கேட்ட கேள்வி தான் அது. ஏதாவது ஒரு பெரிய நடிகர் சேவை வரியை எதிர்த்து தனியாக உண்ணாவிரதமோ மாநாடோ போட்டிருந்தால் அங்கு ஒரு ஈ காக்கா நின்று விசிலடித்திருக்காது. நடிகர்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் அதை நாம் கிசுகிசுவாகவோ, அல்லது ஒரு பொழுதுபோக்காகவோ பேசி சென்று விடுகிறோம்.. ஆனால் நமக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது, அது காவிரியோ, பெரியாறோ அல்லது ஈழமோ, அப்போது மட்டும் அந்த பொழுதுபோக்கு ஆசாமிகள் நமக்கு ஆதரவாக வர வேண்டும் என நினைக்கிறோம்.
சரி, ஒரு நடிகன் நமக்காக ஏன் போராட வேண்டும் என கேட்டால் பலரும் சொல்லும் ஒரே பதில், “அதான் நாம குடுக்குற காசுல கோடி கோடியா சம்பாதிக்கிறான்ல?” என்பதாகவே வருகிறது பெரும்பாலும். நாம் அதிகபட்சமாக கொடுக்கும் 100ரூபாய்க்காக அவன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? நடிகனின் தொழில் நடிப்பு. நடிப்பும் சினிமாவும் நமக்கான பொழுதுபோக்கு விசயங்களில் ஒன்று. அவர்களை நாம் பொழுதுபோக்கு என்னும் வளையத்தை தாண்டி வர சொல்லுவது நமக்கு தான் ஆபத்து. ஒரு நடிகனிடம் நாம் ஏன் நடிப்பை தவிர பிற விசயங்களை எதிர்பார்க்கிறோம்? நமக்கு சேவை செய்யவே தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கும் அரசியல்வாதியை கேள்வி கேட்க துப்பில்லாத நாம், நமக்கு சேவை செய்வதற்காக மட்டுமே தேர்வு எழுதி அரசு வேலையில் இருக்கும் அதிகாரிகளை கேள்வி கேட்க வக்கில்லாத நாம், ஒரு நடிகனை எப்படி கேள்வி கேட்கலாம்?
.
நாம் கொடுக்கும் காசில் சம்பாதித்தவன் என்கிற முறையில் கேளி கேட்பதானால், நாம் காலையில் எழுந்து பல் தேய்ப்பதில் ஆரம்பித்து இரவு தூங்கும் போது கொசு விரட்ட போடும் குட் நைட் வரை ஒவ்வொரு கம்பெனியும் நாம் கொடுக்கும் காசில் சம்பாதித்து வளர்ந்தவை தான். ”நான் தினமும் பல் தேய்ப்பதால் இன்று பெரியதாக வளர்ந்திருக்கும் கோல்கேட் கம்பெனி காவிரி பிரச்சனைக்கு போராட வேண்டும்” என்றோ, “நான் சின்ன வயசுல இருந்தே பேட்டா செருப்பு தான் போடுவேன். இலங்கை பிரச்சனைக்கு பேட்டா கம்பெனி முதலாளி குரல் கொடுக்க வேண்டும்” என்போமோ? “நான் ரிலையன்ஸ் ஃபோன் தான் யூஸ் பண்ணுறேன். அதனால அம்பானி இனிமேல் முல்லை பெரியாறு பிரச்சனைக்கு நான் சார்ந்த தமிழ் நாட்டுக்கு தான் சப்போர்ட் பண்ணனும்”னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவோமா? இல்லையே? அவ்வளவு ஏன்? நாம் நாள் முழுக்க உழைப்பதால் தான் நம் முதலாளி கோடீஸ்வரராக இருக்கிறார். அவரிடம் போய் யாராவது ஒருவர் கேட்க வேண்டியது தானே, “முதலாளி நான் உழைக்குறனால தான் நீங்க இன்னைக்கு இவ்வளவு பெரிய முதலாளியா இருக்கிங்க. அதனால எனக்கு ஆதரவா நீங்க போராடணும்”னு அவர் கிட்ட சொன்னா எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே ஒரு மாதிரி இருக்கிறதே, பின் ஏன் நடிகர்களை மட்டும் இப்படி மிக எளிதாக மரியாதை இல்லாமல் பேசிவிடுகிறோம்? அதிலும் அசிங்கமாக அவர்கள் சார்ந்த ஜாதி இனத்தை எல்லாம் அசிங்கமாக குறிப்பிடுகிறோம்.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர், நான் மேலே சொன்ன காரணங்களை எல்லாம் ஒத்துக்கொண்டார். ஆனால் கடைசியில் அவர் கேட்ட கேள்வி மிக சரியானதாக நடிகர்களை பொளேர் என்று அறைவதாக இருந்தது. “அதெல்லாம் சரி, அவன் சம்பாதிக்கிறான், அவன் ஒரு நடிகன் மட்டும் தான். அவன போராட சொல்லுற உரிமை நமக்கு இல்ல. ஆனா பின்ன எதுக்கு சினிமால, ‘நான் அப்படி, நான் அத செஞ்சிருவேன், இத கிழிச்சிருவேன்’னு பன்ச் டயலாக் பேசணும்?” என கேட்டார் அந்த நண்பர். ஆனால் கொஞ்சம் யோசித்தால் இதற்கான ஆரம்பமும் நாம் தான் என்பது தெளிவாகும். ஒரு நடிகன் திரையில் பேசுவதை படம் முடிந்ததோடு மறக்காமல், அந்த நடிகனின் பிம்பத்தை அப்படியே நம்புகிறோம். படம் முடிந்த பின்பும் அவனுடைய சூப்பர் பவர்களோடு வந்து பன்ச் டயலாக் பேசி தீவிரவாதிகளை அழித்து, லஞ்சத்தை ஒழித்து நாட்டையே திருத்தும் பராக்கிரமங்களை நாம் நிஜ வாழ்விலும் நடக்கும் என அப்பாவித்தனமாக நம்புகிறோம். சினிமாவை நாம் சினிமாவாக பார்க்காததன் விளைவு இது. நம் அறிவிலித்தனத்தை நடிகன் பயன்படுத்திக்கொள்கிறான். நாம் அது தெரியாமல் அவனை ’அரசியலுக்கு வா தலைவா’, ’போராட்டத்தில் குதி’ என கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன் ‘சக்திமான் வந்து என்னை காப்பாற்றுவார்’ என நம்பி உயிரை விட்ட குழந்தைகளுக்கும், பன்ச் டயலாக் பேசும் நடிகர் அரசியலுக்கு வந்து நம்மை காப்பாற்றுவார் என நினைக்கும் நமக்கும் வித்தியாசமே இல்லை.

ஒரு நடிகனை போராட சொல்லி இவ்வளவு பேசுகிறோமே? நாம் என்றாவது ஒரு நாள் இறங்கி போராடுகிறோமா? அட்லீஸ்ட் போராட்டம் செய்ய நாம் ஒரு சிறு முயற்சியாவது செய்திருக்கிறோமா? குடும்பம், மேனேஜர், வீட்டு லோன், சம்பளம், சீட்டு பணம் என்று எல்லாமே ஞாபகம் வந்து நம் போராட்டத்தை அலுவலக டீ பிரேக் அளவிலோ அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அளவிலோ  நிறுத்திவிடுகிறது. ஆனால் கோடிக்கணக்கான பணம் புழங்கும் வியாபாரத்தில் இருக்கும் நடிகனை மட்டும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து போராட சொல்லுவோம். இது என்ன ஞாயம்? அவனுக்கு மட்டும் குடும்பம் இல்லையா? அவன் போராட்டத்திற்கு வந்தால் அன்று அந்த தயாரிப்பாளருக்கு எத்தனை கோடி இழப்பாகும்? அந்த போராட்டத்தினால் அவனது வியாபாரமே அழிந்து போகலாம். அவனது கரியரே அஸ்தமிக்கலாம்.

சரி இவர்கள் கூறுவது போல் ஒரு நடிகர் வந்து குரல் கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடுமா? நடிகர் ஒரு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதெல்லாம் உண்மையா? நாம் நடிகர்களை கூட்டம் கூட்டமாய் போய் வேடிக்கை வேண்டுமானால் பார்ப்போம்.. ஆனால் அவர் சொல்வதையெல்லாம் கேட்போம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு போய் விட்ட கதை. ஒரு நடிகர் என்பவர் கூட்டத்தை இழுக்கும் கவர்ச்சி சக்தி. உங்கள் ஆஸ்தான நடிகர் உண்ணாவிரத மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் அவர்களின் உண்ணாவிரத பந்தலுக்கு வருகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், என்னவெல்லாம் நடக்கும்? மொத்த மீடியாவும் அங்கு குவியும். திடீரென்று அந்த போராட்டத்தை பற்றியும் அந்த நடிகர் பற்றியும் எல்லோரும் பேசுவார்கள். எல்லோர் கவனமும் அந்த போராட்டத்தின் மீது இருந்து கொஞ்ச கொஞ்சமாக நடிகரின் பக்கம் திரும்பம். நடிகருக்கு ஒரு மாஸ் இமேஜ் கிடைக்கும். அந்த நடிகர் கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் இருந்து கிளம்பியதும் மொத்த மீடியாவும் அங்கிருந்து கிளம்பிவிடும். அந்த போராட்ட களத்தில் அதன் பின் அப்பாவி உணர்வாளர்களை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.  அந்த போராட்டத்தின் வீரியம் குறைந்து மறுநாளில் இருந்து அந்த நடிகரின் பேட்டி, புரட்சிகர கருத்து என பத்திரிகைகளும் டிவிகளும் நிரம்பி வழியும். அவர் மறுநாளில் இருந்து ஷூட்டிங்க் பிஸியில் மூழ்கிவிடுவார். நாம் அந்த போராட்டத்தையே மறந்து நம் வேலையில் இறங்கிவிடுவோம். ஆனால் உண்மைய எண்ணத்தோடு போராடியவர்கள்? அவர்களும் அவர்களின் எண்ணமும் தான் பாவம்!!


இதே அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எந்த நடிகரும் வரவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், இது நிச்சயமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மாணவராக, ஒவ்வொரு கல்லூரியாக, பின் ஒவ்வொரு தனி மனிதனுக்குமாக கண்டிப்பாக பரவும். நிதானமாக அதே நேரத்தின் மிக உறுதியுடன் பரவும்.  எல்லோருக்கும் போராட எண்ணம் வரும். அல்லது அதை பற்றி நல்ல விதமாக பேசும் எண்ணம் வரும். இதோ இன்று சிம்பு வருவதற்கு முன்பு வரை எப்படி மாணவர்களின் உண்ணாவிரதம் தமிழகம் முழுதும் இத்தனை மாணவர்களை இணைத்தது? ஒரு நடிகர் வந்தால் தடபுடலாக அந்த விசயம் கவனம் பெறுமே தவிர அதற்கு பின் அதன் தாக்கம் நிச்சயமாக குறைந்துவிடும். அதே போல் ஒரு நடிகன் வந்தால் ஒரு போராட்டமோ, ஒரு பொது விசயமோ வெற்றி பெறும் என்பதும் கற்பனையே. 2011 தேர்தலில் வடிவேலுவின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் கருணாநிதி ஜெயலலிதாவிற்கு கூட வந்திருக்குமா என தெரியவில்லை. அவ்வளவு கூட்டம். ஆனால் அந்த கூட்டத்தினால் ஏதாவது பிரயோஜனம் இருந்ததா? எல்லாம் நடிகனை பார்க்க வந்த கூட்டமே அன்றி வேறில்லை. மக்கள் நடிகனை வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள். அவன் போராடினால் தாங்களும் போராட மாட்டார்கள். சர்க்கஸ் புலி, கோயில் யானை, தெருவிற்குள் வரும் திடீர் குரங்கு போல் தான் நடிகர்கள் ஆதரவு தரும் போராட்டமும். கூட்டம் கூடும், கை தட்டல் இருக்கும், பொழுது போகும்... ஆனால் அதனால் பிரயோஜனம் எதுவும் இருக்காது.
.
இந்த உலகில் எல்லோரும் சுயநலவாதிகள் தான். நாம இறங்கி போராடாதவரை யாரையும் கை காட்டும் உரிமை நமக்கு இல்லை. அதே போல் ஒருவனை போராட சொல்லும் உரிமையோ தகுதியோ நமக்கு இல்லை. தனி மனித சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசும் பலரும் கூட நடிகர்களை பொது விசயங்களுக்கு குரல் கொடுக்க அழைக்கிறார்கள். குரல் கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். நடிகர்கள் தனி மனிதர்கள் இல்லையா? தாங்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லையா? கருணாநிதி முதல்வராக இருந்த போது அவருக்கு வைத்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் தங்களை இது போன்ற விழாக்களுக்கு வரச்சொல்லி மிரட்டுவதாக சொன்னார். கிட்டத்தட்ட அதே போன்ற மிரட்டல்களை தான் இன்று நாம் போராட்டங்களின் வாயிலாக நடிகர்களுக்கு விடுத்துக்கொண்டிருக்கிறோம்.. இதுவும் ஒரு வன்முறை தான்.
.
முடிவாக நான் சொல்ல வருவது, நடிகர்களை மட்டும் இல்லை, யாரையும் ’போராட வா, எனக்காக குரல் கொடு’ என கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை.  ஒரு நடிகன் எதாவது போராட்டத்திற்கோ பொது விசயத்திற்கோ குரல் கொடுத்தால் அந்த நேரத்தில் அந்த விசயத்தின் வீரியமும் முக்கியத்துவமும் முற்றிலும் குறைந்து மொத்த கவனமும் நடிகரின் பக்கம் செல்லும். இதெல்லாம் தேவையா? சாதாரண குடிமகனான நாம் தான் நமக்காக போராட வேண்டும். நமக்கு வேலை செய்ய இருக்கும் அரசு அதிகாரியையும் அரசியல்வாதியையும் தான் கேள்வி கேட்க வேண்டும். நமக்கு ஒரு பொழுது போக்கு சாதனமாக இருக்கும் நடிகர்களை நம்மை இயக்கும் ஆட்களாக மாற்ற நினைத்தால், அது அவர்களுக்கும் நரி நமக்கும் சரி மிகப்பெரிய ஆபத்து தான். நடிகர்கள் எதாவது பொது விசயத்திற்கோ போராட்டத்திற்கோ குரல் கொடுத்தால் நாம் ஒதுங்கி செல்ல வேண்டும். அவன் வேலை நடிப்பது மட்டும் தான்.. அதை மட்டும் அவன் தெளிவாக பார்த்தால் போதும் என்கிற எண்ணம் நமக்குள் எப்போதும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நமக்கு ஒரு அநீதி என்றால் களத்தில் இறங்கி போராட மக்களாகிய நாமும் தயாராக இருக்க வேண்டும். உடுக்கை இழந்தவனுக்கு அவனின் சொந்த கை தான் உதவும். ஆனால் இப்போது நாம் போகும் நிலையை பார்த்தால் உடுக்கை இழந்தாலும் நடிகன் தான் அவன் கையை கொண்டு நம் அம்மணத்தை மறைக்க வர வேண்டும் என்று கூட குரல் கொடுப்பார்கள் சில சமூக ஆர்வலர்கள்.. புரிந்து நடப்போம்..

ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை...

Sunday, March 10, 2013

தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் எப்போதும் உண்டு.. தாலி செண்டிமெண்ட் படம் ஒன்று ஹிட் ஆகிவிட்டால் அடுத்த ரெண்டு மூன்று வருடங்களுக்கு, “புருஷன்னா யாருன்னு தெரியுமா?” என்று தத்துவம் பேசும் படங்களாக வந்து தள்ளும்.. திடீரென்று ஒரு சாமி படம் வரும். டிவி, பத்திரிகை, நாடகம், தியேட்டர் என்று எங்கு பார்த்தாலும் சாமியாட்டம் தான் இருக்கும். படம் பார்க்கு போது தியேட்டரில் இத்தனை பேர் சாமியாடினார்கள் என்று புள்ளிவிவர செய்திகள் வாய் வழியாக வந்துகொண்டிருக்கும். குடும்ப கதைகள் சினிமாவை படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமா? ஏதோ இப்போது சீரியல் வந்து என்னை போன்றவர்களை காப்பாற்றி விட்டது. பாட்ஷா வந்த இந்த 18 வருடங்களில் ஹீரோவுக்கான ”அவன் யாருனு தெரியுமா?” என்கிற ஃப்ளாஷ்பேக் கதை விஸ்வரூபம் வரை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆக்‌ஷன் படம் வந்தால், நாம் சளிப்படைந்து அந்த ஹீரோவையும் இயக்குனரையும் கிண்டல் செய்யும் வரை நம்மை விடாமல் நம் முகத்தை பார்த்து பன்ச் டயலாக் பேசி சாகடிப்பார்கள்.. இப்போது சில ஆண்டுகளாய் தமிழ் சினிமாவில் காமெடி பட ட்ரெண்டு இருக்கிறது.


சுந்தர்.சி எப்போதும் விடாமல் வைத்திருந்த காமெடி சினிமாவை கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் ராஜேஷ் எஸ்.எம்.எஸ் படம் மூலம் குத்தகைக்கு எடுத்தார். அடுத்து பாஸ்@பாஸ்கரன். இந்த ரெண்டு படங்களும் காமெடிக்கு கொடுத்த முக்கியத்துவமும் அதற்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பார்த்து ஆக்‌ஷன் பக்கம்  போயிருந்த சுந்தர்.சி யே கூட மீண்டும் காமெடிக்கு வந்துவிட்டார். எங்கு பார்த்தாலும் காமெடி படங்கள். காமெடிப் படங்களில் மூன்று வகை இருக்கின்றன. கதையோடு சேர்ந்து வரும் காமெடி.. இதை சுந்தர்.சி படங்களில் அதிகமாக பார்க்கலாம்.. உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு, முறை மாமன், எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, பஞ்ச தந்திரம் படங்களில் எல்லாம் காமெடி படத்தோடு சேர்ந்து வரும். அடுத்த வகை தனி காமெடி ட்ராக் வருவது. கரகாட்டக்காரன், வின்னர், ரன், வைதேகி காத்திருந்தாள் போன்ற படங்கள் இதற்கு உதாரணம். மூன்றாவது spoof வகை காமெடி. தமிழ்ப்படம் தான் இதில் உருப்படியாக சொல்லும் ஒரே உதாரணம்.

முன்னாடியே சொன்னது போல் இப்போது காமெடி ட்ரெண்ட் தான் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லா ட்ரெண்டும் எப்போது முடியும் என்றால் ‘இந்த ட்ரெண்ட் தான் ஹிட் அடிக்கும்’ என்கிற நம்பிக்கையில் சிலர் மொக்கையாக படங்கள் எடுக்கும் போது தான். ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கூட பவர் இல்லையென்றால் ஒரு மொக்கை காமெடிப்படமாக தான் அமைந்திருக்கும். ஆனாலும் காமெடி ட்ரெண்டை முடித்து வைக்க மொக்கையாக வந்திருக்கும் ஒரு படமாக “ஒன்பதுல குரு” இருக்கும் என நம்பலாம்.


தங்கள் திருமண வாழ்வால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் மூன்று நண்பர்கள் தங்கள் நண்பர்கள் குரூப்பில் அடுத்ததாக திருமணமாகப் போகும் இன்னொருவனை காப்பாற்றுவதாக நினைத்து அவனை கல்யாணத்திற்கு முந்தைய நாள் கடத்திக்கொண்டு போவதும் அதற்கு அடுத்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதையும் நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்ய, முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி நம்மை சில பல கொட்டாவிகளும், சேர் தேயும் அளவுக்கு அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி உட்கார வைத்தும் பக்கத்து சீட்டில் இருந்து கோபத்தில் வெளிவரும் கெட்ட வார்த்தைகளுக்கும் நடுவிலும் நம்மை இம்சிக்கிறது.

படம் ஹிட் ஆக குத்துப்பாடலும் கவர்ச்சி டான்ஸும் இருந்தாலே போதும் என்கிற காலம் எல்லாம் எல்லாம் போய் இப்போது பவர் ஸ்டார் தலை காட்டினாலே போதும் என்றாகிவிட்டது. வால் போஸ்டர் முழுதும் பவரை பார்த்து தியேட்டருக்கு போய் ஏமாறாதீர்கள். சம்பந்தமே இல்லாமல் ஆரம்ப பாடலில் பவரை காட்டுகிறார்கள். மீண்டும் படம் முடிந்தவுடன் “அடுத்து பார்ட் 2 ல மீட் பண்ணுறேன்” என்று சொல்லும் போது மட்டும் வருகிறார் பவர். ‘ஐயய்யோ பார்ட் 2 வேறயா?’ என்று பலரும் பதறிவிட்டார்கள். பவரின் இடது கை சுண்டு விரலில் பேண்ட் எய்ட் சுற்றி இருக்கிறது. தலைவருக்கு என்ன ஆகிவிட்டதோ, இப்போது சரியாகியிருக்குமோ என என் நெஞ்சம் பதறுகிறது. விவரம் தெரிந்தவர்கள் உடனடியாக சொல்லவும்.

நாயகர்களுக்கு பில்லா, ரங்கா, குரு, கோச்சடையான் என்று பெயர் வைத்ததில் காமெடி இருக்கும் என்று நினைத்து கடுப்பை கிளப்பியிருக்கிறார்கள். பழைய படங்களில் இருந்து வசனங்கள், கதாபாத்திரங்கள், என்று சுட்டு, காமெடி என்னும் பெயரில் மொக்கையான காட்சிகளை வைத்து, யார் ஹீரோ, யார் காமெடியன் என தெரியாமல் குழம்பி, ஏன் க்ளைமேக்ஸில் திடீரென்று அப்படி ஒரு வில்லி?, ஹீரோ புசுக்கென்று எப்படி திருந்துகிறான்? என உங்களுக்குள் 1008 கேள்விகள் எழும். காமெடி படத்தில் இருக்கும் பெரிய ரிஸ்க், அந்த காமெடி மொக்கையாக அமைந்து விட்டால் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கவே முடியாமல் போய்விடும். ஆக்‌ஷம் படங்கள் சில மொக்கையாக இருந்தால் கூட சண்டைக்காக பார்க்கலாம். ஆனால் காமெடி படத்தில் காமெடி மொக்கையாகி விட்டால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.


அதற்காக படத்தில் காமெடியே இல்லை என்று சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன் ஒன்னே முக்கால் தடவையும், இடைவேளைக்கு பின் ரெண்டே கால் தடவையும் சிரித்தேன். எழுத்து போடும் போது, ‘அழகு தேவதை’ லஷ்மி ராய் என போடுகிறார்கள்.. இவர்களுக்கு காமெடிக்கு தான் அர்த்தம் தெரியாது என்று பார்த்தால் அழகு என்பதற்கும் தேவதை என்பதற்கும் கூட அர்த்தம் தெரியவில்லை. ஒரு வேளை அழகு தேவதை என்று லஷ்மி ராயை சொன்னதை கூட நாம் காமெடி என்று நினைத்துக்கொள்வோம் என்று நினைத்திருப்பார் போல இயக்குனர். லஷ்மி ராயை வைத்து க்ளைமேக்ஸில் வரும் ட்விஸ்டை பார்த்து என் பக்கத்தில் ஒருவர் கொதித்தெழுந்து ஹீரோ, இயக்குனரில் இருந்து தியேட்டர் ஓனர் வரை செந்தமிழில் கிழித்துவிட்டார். ரெண்டு புது வார்த்தைகள் கூட நான் கற்றுக்கொண்டேன். சரி பேக் டூ விமர்சனம், ப்ரேம்ஜி அமரன் திடீரென்று வருகிறார், திடீரென்று அப்பீட் ஆகிவிடுகிறார். ஒரு காட்சியில் ”நான் பிரியாணில பிஸி” என்று மறைமுகமாக உண்மையை சொல்லி கழண்டுகொள்கிறார். பாவப்பட்ட ஏதோ ஒரு தயாரிப்பாளரின் பணத்தில் ஒரு கும்பல் மஞ்சள் குளித்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

எல்லோரும் மிக மொக்கையாய் நடித்திருக்கிறார்கள், சத்யனை தவிர. கேட்கும் போது சுமாராக இருந்த ரெண்டு பாடல்கள் கூட படத்தில் மிக மொக்கையாக இருக்கின்றன. மொத்தத்தில் கதையோடு இழையோட வேண்டிய காமெடியாகவும் இல்லாமல், பழைய படங்களில் இருந்து காட்சியையும் வசனத்தையும் சுட்டிருந்தாலும், ஒரு spoof படமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது ஒன்பதுல குரு. இனி காமெடி ட்ரெண்ட் முடிந்து வேறு ஒரு ட்ரெண்ட் திரையுலகில் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கலாம். கல்யாணம் முடிந்து வாழ்க்கையின் இன்பத்தையே தொலைத்து நகைச்சுவை என்றால் என்னவென்றே தெரியாத சில மத்திய வயது ஆண்களுக்கு வேண்டுமானால் இந்த படம் பிடிக்கலாம்.. மற்றபடி ஒன்பதுல குரு - தியேட்டர்ல ஏழரை..

டிஸ்கி:
1. முப்பது ரூபாய் டிக்கெட்டை கொடுத்து எழுபது ரூபாய் வாங்கிய தியேட்டரை எதிர்த்து பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு போராட வேண்டும்.. தியேட்டருக்குள் பெருச்சாளி வேறு ஓடுகிறது..
2. பேசாம வசந்த மாளிகைக்கே போயிருக்கலாம்..



நீங்கள் இந்த விமர்சனங்களையும் ரசிக்கலாம்..

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல).. 

ஸ்பெசல் 26 - சினிமா விமர்சனம்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா - திகட்டும் இனிப்பு..

 

 

 

சோடாபுட்டி...

Thursday, March 7, 2013

ஒங்கப்பா ஒங்கள அடிப்பாரா? இல்ல எதுக்கு கேக்குறேன்னா எங்க க்ளாஸ்லலாம் யாரையும் அவைங்க அப்பாலாம் அடிக்காமாட்டாங்களாம். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அதெப்படி அப்பா அடிக்காம இருப்பாரு? இன்னைக்கு கூட க்ளாஸ்ல கடைசி பென்ச்ல ஒக்காந்திருப்பானே போன வருசம் பெயிலான மாணிக்கவேலு, அவன்ட்ட கேட்டேன். “அந்தாளா? சின்ன புள்ளேல தான் அடிச்சாரு.. போன வருசம் நான் பெயிலானப்ப கூட கம்முனு போயிட்டாரு.. எங்கம்மா தான் அழுதுச்சி. எதுக்கு கேக்குற?”ன்னான்.. அவன்ட்ட நான் எதுக்குன்னு சொல்லல.. ஆனா அவன் சொன்னத கேட்டு எனக்கு எங்கப்பா மேல ரொம்ப கோவம் வந்திருச்சி . பெயிலானவன கூட அவங்கப்பா அடிச்சதில்ல. ஆனா எங்கப்பா?

போன வாரம் நானு ரிமோட்டுல டிவிய மாத்திக்கிட்டே இருந்தேன். பின்னாடி இருந்து வந்து ”உருப்படியா ஒன்ன வச்சு பாக்க மாட்டியா?”னு மண்டையில நங்குனு கொட்டிட்டாரு. இன்னைக்கு வரைக்கும் நடு மண்ட வீங்கிப்போயி இருக்கு.. வலிக்காம தொட்டுப்பாருங்க.. ம் இங்க தான் லேசா மேடு மாதிரி இருக்கா? அதான் அவரு கொட்டுனது.. என்னமா வீங்கிருக்கு பாத்தீங்களா?

அதுக்கு முன்னாடி ஞாயித்துக்கெழம எங்க தெரு பயலுகளோட தெருவுல கிரிக்கெட் வெளாண்டுக்கிட்டு இருந்தேன். பந்து வாய்க்கால்ல வுழுந்திருச்சி. நான் அத எடுக்கும் போது பாத்துட்டாரு. “டேய் குமாரு”னு கத்திக்கிட்டே வந்து கன்னத்துல ஓங்கி ஒரு அற விட்டாரு.. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பாத்து, “ஓடுங்கடா அவராரு வீட்டுக்கு”னு அரட்ட ஆரம்பிச்சுட்டாரு. எனக்கு கண்ணெல்லாம் கலங்கிருச்சி. ஆனா நான் அழுகல. எட்டாங்கிளாஸ் வரைக்கும் அழுகுவேன் அவரு அடிச்சா. இப்ப ஒம்பதாவது வந்ததுல இருந்து என்னனே தெரில, அழுக வர மாதிரி இருக்கு ஆனா நான் அழுக மாட்றேன். ஸ்கூல்ல வாத்தியாரு அடிச்சாலும் அழுகை வாரது இல்ல இப்பலாம். எனக்கு என்ன கோவம்னா தெருவுல எல்லாரும் தான வெளாடுறோம்? எல்லாரு வீட்டுலேயும் தெரியும் நாங்க வெளாண்டா வாய்க்கால்ல பந்து வுழும்னு. அவங்க வீட்டுலலாம் யாரும் அடிக்க மாட்றாங்க. ஆனா எங்கப்பா மட்டும் எதுக்கு அடிக்குறாருனு தான் எனக்கு புரியல.

ஒரு நாளு சாந்தரம் ஸ்கூல்ல இருந்து வந்து மூஞ்ச கழுவிக்கிட்டு இருந்தேன். கையில வாட்சு கட்டுனமானைக்கே கழுவிக்கிட்டு இருந்தேன். “குமாரு வாட்ச்ச கழட்டி வச்சுட்டு மூஞ்ச கழுவு”னு சொன்னாரு. நான் “எப்பா இது வாட்டர் ரெஸிஸ்டண்ட் வாட்சுப்பா, ஒன்னும் ஆகாது”னு தண்ணிக்குள்ள கைய விட்டேன். சோப்ப எடுத்து மூஞ்சில தேய்க்கும் போது என் முதுகுல ஒரு அடி குடுத்தாரு பாருங்க, என்னால கொஞ்ச நேரம் மூச்சே விட முடியல.. வாயி தொறந்து கெடக்கு, அழுக முடியல, வாய மூடவும் முடியல, பேச்சும் வரல.  “சொல்லிக்கிட்டே இருக்கேன், கேக்குறானா பாரு ரஸ்கல்”னு சொல்லிக்கிட்டு அவரு பாட்டுக்க போயிட்டாரு. இப்படி என்ன எதுக்கெடுத்தாலும் அடிக்குறனால மனசுக்குள்ளயே கெட்ட வார்த்தையில கூட ஒன்ரெண்டு தடவ அவர வஞ்சிருக்கேன். கெட்ட வார்த்தை கூட நான் அவர்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டேன்.



ஆனா தெனமும் காலையில என்ன அவரு தான் எழுப்பிவிடுவாரு.. அப்பலாம் நல்லாத்தான் இருப்பாரு. நான் எந்திரிக்காம பொறண்டு பொறண்டு படுத்தேன்னா என் முதுகுல செல்லமா தட்டி அப்படியே தூக்கிட்டு போயி பாத்ரூம் கிட்ட எறக்கி விட்ருவாரு. திடீர்னு ஒரு நாள் எங்கேயாச்சும் படத்துக்கு, ஓட்டலுக்கு கூட்டிட்டு போவாரு. ரஜினி படம் வந்தா நான் கேக்கவே தேவயில்ல. அவரே ரெண்டு தடவ கூட்டிட்டு போயிருவாரு. ஆனா அவருக்கு எப்ப கோவம் வரும்னு தான் சொல்லவே முடியாது. திடீர்னு வரும். இப்படித்தான் ஒரு நாள் வீட்டுல எல்லாரும் மத்தியானம் டிவில படம் பாத்து சிரிச்சுக்கிட்டு இருந்தோம். திடீர்னு என் முதுகுல சப்பு சப்புனு அடிக்க ஆரம்பிச்சுட்டாரு. “எத்தன தடவ சொல்லிருக்கேன் என் கண்ணாடிய போடாதன்னு?”னு சொல்லிட்டு அவர் பாட்டுக்க படம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு. படம் பாத்துக்கிட்டே சொன்னாரு, “இன்னொரு ஆளு கண்ணாடிய போட்டா கண்ணு கெட்டுப்பொயிரும்னு எத்தன தடவ சொல்றது? குருட்டுப்பயலா ஆகப்போறியா? எல்லா பயலும் ஒன்ன சோடாபுட்டினு கூப்டணுமா?”. என்ன பாத்து மொறச்சாரு. நான் கம்முனு அவரையே பாத்துக்கிட்டு இருந்தேன்.

 ஆனா ரொம்ப கோவம் வந்துச்சுனா எத எடுத்து அடிப்பாருன்னு சொல்ல முடியாது. போன மாசம் சயின்ஸ்ல ஜஸ்ட் பாஸ் தான் எடுத்திருந்தேன். ரேன்க் கார்ட்ட பாத்த ஒடனே சைக்கிள் டியூப்ப எடுத்து அடிக்க வந்துட்டாரு.. எங்கம்மா தான் என்ன காப்பாத்துனாங்க. இல்லேனா என்ன ரவ ரவையா உரிச்சிருப்பாரு அன்னைக்கே. ஆனா அடுத்த நாளு அவரு தான் என்ன வழக்கம் போல எழுப்பிவிட்டாரு. எனக்கு இதான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாக்கு எம்மேல கோவம் வந்தா நானா போயி பேசுற வரைக்கும் எங்கூட பேச மாட்டாங்க. ஆனா எங்கப்பா கோவப்பட்டு அடிச்சாலும் திரும்ப அவரே வந்து எங்கிட்ட பேசுவாரு. அப்படி பேசும் போது முந்துன நாளு அவர மனசுக்குள்ள கெட்ட வார்த்த சொல்லி வஞ்சது வருத்தமா இருக்கும். ஆனா திரும்ப அவரு அடிக்கும் போது நானும் கெட்ட வார்த்தைய சொல்லி மனசுக்குள்ள அவர வஞ்சிருவேன்.

வேல விசயமா எங்க அப்பா அடிக்கடி வெளியூருக்கு போயிருவாரு. போனாருன்னா வாரதுக்கு எப்படியும் 10, 15 நாள் ஆகும். என் வாழ்க்கையோட ரொம்ப சந்தோசமான நாள்லாம் அப்பத்தான். ரெண்டு காரணம். ஒன்னு எங்கப்பா வீட்ல இருக்க மாட்டாரு, ரெண்டாவது வரும் போது எதாவது வெளாட்டு சாமான் வாங்கிட்டு வருவாரு. எங்க தெருவுல எவன் கிட்டயும் அது மாதிரி வெளாட்டு சாமான் இருக்காது. இந்த 15 நாளும் நான் என்ன சேட்ட செஞ்சாலும் எங்கம்மா “இரு ஒங்கப்பா வரட்டும், சொல்லி நல்லா கைய கால ஒடைக்க சொல்றேன்”னு சொன்னாலும் எங்க அப்பாக்கிட்ட என்ன சொல்லிக்குடுக்க மாட்டாங்க. எங்கம்மாவ மாதிரி ஏன் எங்கப்பா இருக்க மாட்றாருனு அடிக்கடி எனக்கு சந்தேகம் வரும். அந்த 15 நாளும் ஸ்கூலுக்கும் சந்தோசமா போவேன்.

அப்படி எங்கப்பா ஊருக்கு போயிருந்த ஒரு நாள்ல, வாத்தியாரு க்ளாஸ்ல கணக்கு நடத்திக்கிட்டு இருந்தாரு. எங்க க்ளாஸ்ல நான் எப்பயுமே கடைசிக்கு முந்தின பென்ச்ல தான் இருப்பேன். போர்ட பாத்துலாம் எழுத மாட்டேன். போர்ட பாத்தா என்னால வேமா எழுத முடியாது. அதனால பக்கத்துல ஒக்காந்திருக்கிறவன் கிட்ட கத பேசிக்கிட்டே அவன் நோட்ட பாத்து தான் எழுதுவேன். போர்ட பாத்து எழுதுனா பேசுற விசயம் மறந்து போயிரும். அதனாலயும் நான் போர்ட பாக்கவே மாட்டேன்.


 “டேய் ’தீனா’ படம் பாத்திட்டியாடா?” நான் அவன் முகத்தப் பாத்துக்கேட்டேன்.

”இன்னும் பாக்கலடா. நீ பாத்துட்டியா?” அவன் என்ன பாக்காம போர்ட பாத்துக்கிட்டே சொன்னியான்.

“நானும் பாக்கலடா எங்கப்பா ரஜினி படத்துக்கு மட்டும் தான் கூட்டிட்டு போவாருன்னு சொல்லிருக்கேன்ல? படத்த தேட்டர்ல இருந்து தூக்குன பிறகு கேபிள் டிவில போடுவாய்ங்கல, அப்பத்தான் பாக்கணும்”..

“எங்க தெரு பயலுக ரெண்டு பேரு பாத்துட்டாய்ங்களான்டா. படம் சூப்பரா இருக்காம். படத்த பாத்துட்டு அஜித்த வேற தல தலனு சொல்றாய்ங்கடா...”

“தலயா? அப்டினா என்னடா?”

“தெரிலடா.. லைலாவும் சூப்பரா இருக்காளாம்” அவன் இதை சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி வெக்கமா இருந்துச்சி. ஒரு நடிகைய பத்தி முன்னாடிலாம் இப்டி நாங்க பேசுனதே கெடையாது. இப்ப கொஞ்ச நாளா படத்துல, வெளம்பரத்துல, நாடகத்துல வர நடிகைய பத்திலாம் அவா அழகா இருக்காளா இல்லையானு ரொம்ப ஆர்வமா சண்ட போட்டு பேசுறோம்.

“அப்டியாடா? சரி அஜித்த எதுக்கு தலனு சொல்றாய்ங்கடா ஒங்க தெருக்காறய்ங்க?”னு நான் மீண்டும் கேட்டு முடிக்குறதுக்குள்ள தன் தலைல ஏதோ ஒன்னு சுர்ருனு வலிக்குற மாதிரி வேமா வந்து பட்டுச்சி. நான் டக்குனு நிமிந்து பாத்தேன், போர்டு கிட்ட நின்னு எங்க வாத்தியார் என்ன மொறச்சி பாத்துக்கிட்டு இருந்தாரு. அவர் தான் சாப்பீஸ தூக்கி எறிஞ்சிருக்காரு.

 ”என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” எப்பையுமே எங்க வாத்தியார் இப்படித்தான் எல்லாரையும் மரியாதையா பேசுவாரு. ஆள் பாக்குறதுக்கு நல்லா வாட்ட சாட்டமா இருப்பாரு. ஆனா மேக்ஸ் வாத்தியாருக்கேனு இருக்குற லேசான வழுக்க, ஒரு பக்கம் நீட்டமாவும் இன்னொரு பக்கம் கம்மியாவும் இருக்குற மீச, முழுக்கை சட்ட போட்டு ஒரு கைய மடிச்சு விட்டுட்டு இன்னொரு கைய அப்டியே தொங்க விட்டுறதுனு கொஞ்ச குணம் இவருக்கும் உண்டு. யாரையும் அடிக்க மாட்டாரு. ஆனா இவரு வஞ்சாலே பயமா இருக்கும். எரும, பன்னினு மட்டும் அடிக்கடி சொல்லுவாரு.

“ஒன்னுமில்ல சார்”

“ஒன்னுமில்லாமத்தான் அவங்கிட்ட கதையடிச்சுக்கிட்டு இருக்கியா பன்னி? என்னனு சொன்னா நாங்களும் கேப்போம்ல? நான் சொல்றத விட நீ சொல்றது நல்லா இருந்தா மத்த பயலுகளுக்கும் பொழுது போகும்ல?”

“இல்ல சார் ஒரு டவுட்டு தான் சார் கேட்டேன் இந்த sumல” இப்படி சொன்னா என்ன நல்லவன்னு நெனச்சு, ‘சரி இனிமேல் பேசக்கூடாது’ன்னு விட்டுருவாருன்னு தான் சொன்னேன். ஆனா எந்த மேக்ஸ் வாத்தியாரு நாம் நெனைக்குற மாதிரி நடந்துருக்காரு?

“சம்பளம் கவர்மெண்டு எனக்கு குடுக்குதா? இல்ல ஒன் ஃப்ரெண்டுக்கு குடுக்குதா? என்ட்ட கேளு உன் சந்தேகத்த”

நான் கம்முனு நின்னுக்கிட்டு இருந்தேன். “என்னய்யா பராக்கு பாத்துக்கிட்டு நிக்குற? என்ன சந்தேகம் கேளு?”

“இல்ல சார் இப்ப புரிஞ்சிருச்சி எனக்கு. இவன் கரெக்ட்டா சொல்லிக்குடுத்துட்டான்”னு நான் தீனா பத்தி பேசிக்கிட்டு இருந்தவன கைய காட்டுனேன்.

அவன் பயந்து போயிட்டான் நான் கைய காட்டுனத பாத்து. மெதுவா என்ட்ட கெஞ்சுற மாதிரி, ‘டேய் டேய் ப்ளீஸ்ரா என்ன எதுவும் மாட்டி விட்றாதரா’ன்னான்.

“ஓ அந்த எரும ஒனக்கு சொல்லிக்குடுத்துருச்சா? சரி, அப்ப இந்த sumல அடுத்த ஸ்டெப் என்னனு சொல்லு” அவரோட தொப்பைய ஸ்டாண்ட் மாதிரி நெனச்சி அதுல கைய கட்டிக்கிட்டு என்ன பாத்து கேட்டாரு.

“சார் இப்ப எழுதுன கடைசி ஸ்டெப் வரைக்கும் தான் சார் புரிஞ்சிருக்கு. அடுத்த ஸ்டெப் நீங்க நடத்துன ஒடனே புரிஞ்சுக்கிறேன் சார்.” தப்பிக்குறதுக்காக அறிவாளித்தனமா பேசிக்கிறதா நெனச்சு அவர்கிட்ட கொஞ்ச கொஞ்சமா மாட்டிக்கிட்டு இருக்கேன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது..

“ம் நீ சொல்றதும் கரெக்ட்டு தான். சரி, இந்த ஸ்டெப் வரைக்கும் ஒனக்கு என்ன புரிஞ்சிருக்குனு சொல்லு பாப்போம்”

“.....”

“சரி அட்லீஸ்ட் இந்த கணக்குல போர்டுல என்ன இருக்கோ அதையாவது வாசிய்யா”

நான் போர்டை பாத்தேன்.. கறுப்பு சொவருல வெள்ள வெள்ள திட்டா இருக்குற மாதிரி தான் தெரிஞ்சது.. “சார் எனக்கு போர்டுல என்ன இருக்குனே தெரில சார்”

”அப்புறம் எப்படி எரும ஒனக்கு கணக்கு மட்டும் புரியுது?”

“சார் அதான் சார், இவன் நோட்ட பாத்து எழுதுறேன்ல சார், அந்நியாரமே இவன்ட்ட கேட்டுக்கிடுவேன் சார், அப்படியே புரிஞ்சிரும் சார்.”

“ஒரு பொய்ய மறைக்க எத்தன பொய் சொல்லுவய்யா? பேசலேங்குற, கண்ணு தெரியலேங்குற, கணக்கு புரியுதுங்குற.. நான் எதத்தான் நம்புறது?”

எனக்கு அவர் இப்படி கேட்டவொடனே என்ன சொல்றதுனு தெரியல. நான் பக்கத்துல இருந்தவன் கிட்ட கத பேசுனேன். எனக்கு அவர் போர்டுல எழுதுறது என்னனு கூட தெரியாது. ஆனா நான் கண்ணு தெரியலனு சொன்னது உண்ம தான். “சார் சத்தியமா சார், எனக்கு போர்டுல இருக்குறது தெரில சார்”

“என்னய்யா சொல்ற? நெஜமாத்தான் சொல்றியா?” அவரு நான் பக்கத்துல இருந்தவன் கூட பேசுனது, எனக்கு கணக்கு புரியாதத எல்லாம் மறந்துட்டு இதப்பத்தி கேக்குறது எனக்கு கொஞ்சம் சந்தோசமா இருந்துச்சி, ‘நல்ல வேள தப்பிச்சோம்’னு.

“ஆமா சார் நெஜமாவே தெரில”..

நான் அப்படி சொன்னவொடனே போர்டுல என்னமோ எழுதுனாரு. “இத வாசி”

கறுப்பு போர்டுல வெள்ளையா ஒரு கோடு கிறுக்குன மாதிரி இருந்துச்சி.  “தெரில சார்”

“கொஞ்சம் முன்னாடி வந்து வாசிச்சுப்பாரு”

ரெண்டு பெஞ்ச் தள்ளி முன்னாடி வந்தேன். இப்ப அந்த கோடு கோடு மாதிரி இல்லாம ஏதோ எழுதிருக்குற மாதிரி இருந்துச்சி. “இப்பையும் தெரில சார்”

“இன்னும் கிட்டத்துல வந்து வாசி”ன்னாரு..

கிட்டத்தட்ட போர்டுக்கு பக்கத்துல போயி நின்னு, “சுரேஷ் குமா...” படிக்கிறப்பவே புரிஞ்சிருச்சி அது என் பேருன்னு.. “எம்பேரு சார்”னேன் அவர பயந்துக்கிட்டே பாத்து.

"நெஜமாவே தெரியலையாய்யா?” அவர் கிட்ட மொத இருந்த கோவம் இப்ப இல்ல..

“ஆமா சார்.. சத்தியமா தெரில” எனக்கும் புரிஞ்சிருச்சி, என் கண்ணுல என்னமோ பிரச்சனைனு..

“நாளைக்கு ஸ்கூலுக்கு வரும் போது ஒங்கம்மாவ கூட்டிட்டு வாய்யா”

“சார் சார் வேண்டாம் சார். ப்ளீஸ் சார்”

“ஒன்ன கோள் மூட்டுறதுக்கு இல்லய்யா.. அவங்களுக்கு உனக்கு இப்படி ஒரு பிரச்சன இருக்கிறது தெரியணும்ல?”

நான் எவ்வளவு கெஞ்சியும் அவரு, வீட்ல இருந்து ஆள் வரணும்னு சொல்லிட்டாரு. நான் எங்கம்மா கிட்ட அத அடுத்த நாள் காலையில ஸ்கூலுக்கு போறப்ப தான் சொன்னேன்.

“ம்மா எங்க சாரு உங்கள ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு”

இத கேட்டவுடனே எங்கம்மாக்கு கொஞ்சம் பயமாகிருச்சி.. “நீ என்னடா பண்ணுனா? எதுலயும் பெயில் கியில் ஆயிட்டியா?”

“இல்லம்மா எனக்கு போர்டுல எழுதுறது தெரில.. அதான் உங்கட்ட அது விசயமா பேசணும்னு சொன்னாரு”

“என்னடா சொல்ற? கண்ணு தெரியலையா? இத ஏன்டா நேத்து சாந்தரமே சொல்லல?”

“நீங்க பாட்டுக்க நைட்டு அப்பா ஃபோன் போடும் போது அவர் கிட்ட சொல்லிட்டீங்கன்னா? அதான் சொல்லல..” நான் இத ரொம்ப சாதாரணமாத்தான் சொன்னேன்.. ஆனா எங்கம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க..

“டிவி பாக்காத டிவி பாக்காதனு சொன்னேன்ல, கேட்டாத்தான? பிள்ளையானது பெத்தவங்க சொல்றத கேக்கணும்.. இப்படி ஆட்டம் போட்டா என்ன செய்றது? தெனமும் தெரு பயலுக கூட சேந்து ஆடுனா கண்ணு மட்டுமா கெட்டுப்போகும்?....” இப்படி நிறையா சம்பந்தமே இல்லாம பொலம்ப ஆரம்பிச்சுட்டாங்க..

ஒரு வழியா எங்கம்மா பொலம்பி முடிச்ச பெறகு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனேன்.. அங்க வாத்தியார் என்ன சீக்கிரமா ஒரு கண் டாக்டர் கிட்ட காட்டி செக் பண்ண சொன்னார்.


கண் ஆஸ்பத்திரில எனக்கு செக் பண்ணிட்டு ”பவர் மைனஸ் ஒன்னர இருக்கு, கண்ணாடி கண்டிப்பா போடணும்”னு சொல்லிட்டாங்க.. எங்க அம்மாவுக்கு ஒரே வருத்தம் பிள்ள இப்படி கண்ணு தெரியாம கண்ணாடி போட்டிருச்சேன்னு.. அம்மா அழுகுறது ஒரு பக்கம் வருத்தம்னா, எங்க அப்பா என்ன சொல்லப்போறாரோன்னு நெனச்சு வர பயம் தான் நெறையா இருந்துச்சி.. ஏன்னா இன்னும் ரெண்டு நாள்ல அவரு ஊருக்கு திரும்ப வந்துருவாரு.

மறுநாள் ஸ்கூலுக்கு கண்ணாடி மாட்டிட்டு போனேன்.. எங்க தாத்தா, அப்பாவோட கண்ணாடியெல்லாம் போட்டு அழகு பாத்திருக்கேன்.. கண்ணாடி போட்டா மொகம் அழகா தெரியும்னு நம்பிக்கிட்டு இருந்தேன். ஆனா நான் கண்ணாடி போட்டு ஸ்கூலுக்கு போகும் போது தான் கண்ணாடி போடுறது எவ்வளவு கஷ்டம்னு தெரிஞ்சது.. எல்லாரும், “டேய் கண்ணாடி, டேய் சோடாபுட்டி”னு கூப்புட ஆரம்பிச்சாய்ங்க.. கண்ணாடி போட்ட பெறகு நம்மளப் பாத்து “அண்ணே”னு பயப்படுற சின்னப்பயலுக கூட “கண்ணாடி”னு நக்கலா கூப்பிடுவாய்ங்க.. இன்னைக்கு ஒரு நாள்லயே ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல இருந்து, கூட படிக்குறவன்ல இருந்து, தமிழ் வாத்தியார், ஸ்கூலுக்கு வெளிய கொய்யாப்பழம் விக்குற அண்ணாச்சினு நெறையா பேரு என்ன “டேய் சோடாபுட்டி”னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க..

எனக்கு இது ரொம்ப அசிங்கமா இருந்துச்சி.. சின்ன வயசுல இருந்து கண்ணாடி போடணும்னு ஆசப்பட்டேன்.. ஆனா இப்ப அத போட்டவொடனே எல்லாரும் இப்படி கிண்டல் அடிக்குறத பாத்து ஏன்டா கண்ணாடி போட்டிருக்கோம்னு நெனச்சி ரொம்ப வருத்தமாகிருச்சி.. அதுலயும் கண்ணாடி போட்டதுல இருந்து யாரோ என் தலைய பிடிச்சி அமுக்குற மாதிரி இருக்கு.. தல வேற வலிக்குது.. பக்கத்துல கிளாஸ்ல ஒருத்தன் கண்ணாடி போட்டிருப்பான்.. அவன் கிட்ட கேட்டதுக்கு, “டேய் மொத ரெண்டு மூனு நாள் அப்படித்தான்டா இருக்கும்.. அடுத்து போகப்போக பழகிரும்டா”ன்னான்.. எனக்கு கண்ணாடி போடவே பிடிக்கல.. ஆனா கண்ணாடி போடலேனா எதுவுமே தெரியல.. கண்ணாடி போட்டு என்ன கண்ணாடில பாத்தா எனக்கே அசிங்கமா இருந்துச்சி.. கண்ணாடி போட்டா என்ன எனக்கே பிடிக்கல..

ரெண்டு நாளா எல்லாரும் என்ன ‘சோடாபுட்டி சோடாபுட்டி’னு சொல்லியே கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க.. எனக்கு ரொம்ப அழுகையா இருக்கு. யார் கிட்டயும் சரியா பேச முடியல.. எல்லாரும் என்னோட கண்ணாடியவே உத்து பாக்குற மாதிரி, என்னப்பாத்து சிரிக்குற மாதிரி இருக்கு... ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல.. தெருவுலயும் எல்லாரும் என்ன “டேய் கண்ணாடி”னு தான் கூப்பிடுறாய்ங்க.. ஆனா எனக்கு இன்னைக்கு அதெல்லாம் விட ஒரு பெரிய பயம் இருந்துச்சி.. ஏன்னா இன்னைக்கு தான் எங்கப்பா ஊர்ல இருந்து திரும்பி வர நாள்.. எப்படியும் பகல்லயே வந்திருப்பாரு.. நான் சாந்தரம் வீட்டுக்கு போறப்ப தூங்கிக்கிடோ, இல்ல டீ குடிச்சிக்கிடோ இருப்பாரு.. வெளாட்டுக்கு அவர் கண்ணாடிய அன்னைக்கு எடுத்து போட்டதுக்கே என்ன அடி பின்னிட்டாரு. இன்னைக்கு என்ன பண்ணப்போறாருன்னு தெரியல..

சாந்தரம் வீட்டுக்கு போனேன்.. மெதுவா சைக்கிள நிப்பாட்டிட்டு வீட்டுக்குள்ள நொழஞ்சேன்.. கண்ணாடிய மொதையே கழட்டி பைக்குள்ள வச்சிக்கிட்டேன்.. எங்கப்பா ஒக்காந்து டிவி பாத்துக்கிட்டு இருந்தாரு. அம்மா பக்கத்துல இருந்தாங்க.

“என்னடா கண்ண கெடுத்துக்கிட்டு கண்ணாடி போட ஆரம்பிச்சுட்டியாமே?” அவர் என்ன மொறச்சி பாத்து கேக்கும் போதே எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சி..

“சரி விடுங்க, புஸ்தகத்த கிட்டத்துல வச்சி படிச்சனால தான் அப்படி ஆகிருச்ச்சாம், டாக்டரு சொன்னாரு” இந்த மாதிரி பொய் சொல்லி காப்பாத்துறனால தான் எங்கம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.. “நீ போயி மூஞ்ச கழுவிட்டு படிக்க ஒக்காருப்பா”.. நான் மெதுவா அவங்கள தாண்டி போனேன்..

“டேய் நில்லுறா..” எங்கப்பா தான்.. நான் அப்படியே மெதுவா திரும்பி அவர பாத்தேன்..

“எங்கடா கண்ணாடி?”

“பைக்குள்ள இருக்குப்பா”

“பைக்குள்ள வச்சிருக்கிறதுக்காடா ஒனக்கு கண்ணாடி வாங்கி குடுத்திருக்கு? எடுத்து மாட்றா”

“இல்ல வேண்டாம்ப்பா.. ஸ்கூலுக்கு போகும் போது மாட்டிக்கிறேன்” என் கொரல் ஒரு மாதிரி கட்டியா அடைக்குற மாதிரி இருந்திச்சி.. எங்கப்பா கிட்ட இவ்வளவு பயம் எனக்கு வந்ததே இல்ல.. அவர் முன்னாடி கண்ணாடிய எடுத்து போடுற தைரியம் எனக்கு இல்ல.. எடுத்து போட்ட ஒடனே அவரு இன்னும் கோவம் வந்து ரெண்டு அடியோட விடாம, சைக்கிள் டியூப்ப எடுத்து வெளாசிருவாரோன்னு பயமா இருந்துச்சி..

“டேய் அழகு பாக்குறதுக்கா வாங்கி குடுத்திருக்கு? தொடந்து போட்டாத்தான்டா சரியாவும்.. எடுத்து மாட்டு”.

“இல்ல இருக்கட்டும்ப்பா” ரெண்டு கண்லயும் கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சி..

“என்ன நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ மாடேங்குற?”னு சொல்லிக்கிட்டே சேர்ல இருந்து எந்திரிச்சிட்டாரு.. நான் மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன் அவர் கையில அந்த சைக்கிள் டியூப் கெடைக்க கூடாதுன்னு.. என் பக்கத்துல வந்தாரு.. “கண்ணாடி எங்க? எடு” என்ன பாத்து கைய நீட்டுனாரு.. தோள்ல மாட்டிருந்த பைய கீழ எறக்கி உள்ள இருந்து பயந்துக்கிட்டே கண்ணாடிய எடுத்து அவர் கிட்ட குடுத்தேன்..

“ம் மாட்டு இப்ப” இவ்வளவு பக்கத்துல நின்னுக்கிட்டு அவர் சொல்றத நான் செய்யலேனா என்ன ஆகும்னு தெரியும்.. அதனால ஒன்னுமே சொல்லாம கண்னாடிய மாட்டுனேன்..

என்ன கொஞ்ச நேரம் கம்முனு பாத்தாரு.. எனக்கு என்ன ஆகப்போகுதோன்னு பக்கு பக்குனு இருந்துச்சி.. என் கன்னமும் அறை வாங்குறதுக்கும் ரெடியா இருந்திச்சி.. எப்பனாலும் எனக்கு அடி வுழலாம்னு இருந்த நேரத்துல எங்க அம்மா பக்கம் வெடுக்குனு திரும்பி சொன்னாரு, “ஏன்டீ இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல ஃப்ரேமா வாங்கிருக்க கூடாது? நான் வார வரைக்கும் ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணிருக்கலாம்ல? சரி அடுத்து பாத்துக்கிடலாம்.. ஆனா எம்புள்ள கண்ணாடி போட்ட பெறகு இன்னும் அழகா பணக்கார வீட்டுப்பய மாதிரி இருக்கியான். டேய் கண்ணாடி ஒனக்கு சூப்பரா இருக்குடா” சிரிச்சுக்கிடே என் கன்னத்த தட்டிக்கொடுத்தாரு..

எனக்கு ஒரு மாதிரி சப்புனு ஆகிருச்சி.. ஆனா என்னனு தெரில, பயங்கர அழுக வந்துருச்சி.. “எப்பா”னு கத்திகிட்டே அவர் இடுப்ப கட்டி புடிச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சுட்டேன்... “என்னடா? ஏன் அழுகுற? டேய் அழுகாதரா..” என் கைய அவரு இடுப்புல இருந்து எடுக்க பாத்தாரு.. முடியல.. நான் ரொம்ப டைட்டா பிடிச்சி அழுதுக்கிட்டே இருக்கேன்...

அன்னைக்கு மட்டும் இல்ல, அதுக்கு பெறகு என்னைக்குமே அவர் என்ன அடிச்சது இல்ல.. ஆனாலும் கண்ணாடி போட்டதுக்காக அவரு என்ன அடிக்காதது இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு கொறையாவே இருக்கு...






நீங்கள் இந்த கதைகளையும் படிக்கலாம்..
சும்மா இருங்கப்பா...
டைம் மிஷின்..
கலர்க்காதல்..
முத்துச்செல்வி..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One