என்னைத்துரத்திய மழை - அப்பாவின் கடவுள்... (கவிதை (அப்படினும் சொல்லலாம்))....

Saturday, September 25, 2010

சிறு வயதில் இருந்தே
நான் கண்டுணர்ந்தது -
காலாண்டு தேர்வின் போது தான்
எங்கள் ஊரின்
முழு ஆண்டுக்குமான மழை ஒழுகும்..

இப்போதும் காலாண்டு தேர்வு எங்கும்
நடந்தும் முடிந்தும் விட்டது..
ஆனால்
வழக்கமாக நாய் மூத்திரம் போல
சிந்தும் அந்த மழையும் இந்த ஆண்டு
பெயருக்கும் இல்லை..

'போரிங்ல தண்ணி வரல;
நல்ல தண்ணி வந்தும்
ஒரு வாரம் ஆகுது..
மாரித்தாயே நீ தான் மழை குடுக்கணும்'
காலையில், வேண்டுதல் என்ற பெயரில்
கடவுளிடம் கத்திக்கொண்டிருந்தார் அம்மா..

மெதுவாக எழுந்து
சோம்பேறியாக வேலைக்கு கிளம்பினேன்..
'இன்னைக்கு ஸ்ரீவி மார்க்கெட்' - என்
பாஸ் சொன்னபடி
கிளம்பினேன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு..

சிவகாசியின் வெயிலை கடந்து
ஸ்ரீவியின் எல்லைக்குள் சென்றேன்
அருமையான வானிலை அலாதியான குளிர்ச்சி
'வெறும் 20km தூரத்திற்குள் இவ்வளவு மாற்றங்களா?'
இயற்கையின் விந்தையையும் ஓரவஞ்சனயையும்
ஒரு சேர ரசித்து நொந்தேன்..

மாலை நேரம் நெருங்க நெருங்க
'மழை வரும்' என்று மேகங்கள் முழங்கின..
'அய்யயோ, மழை வந்துறுமோ?
அதுக்குள்ள கிளம்பிடணும்'
என்று பயந்தேன்..
ஆம், மழைக்கு பயந்தேன்..
அதை ஒவ்வாமை என்றும் சொல்லலாம்..

எம்மூர் மக்கள் உருக்கும் வெயிலையும்
வெற்றுடம்பில் வியர்வையின்
குளிர்ச்சியால் அணைத்துக்கொள்வோம்..
ஆனால் எங்களால் சிறு
மழையையோ குளிரையோ
தாங்குவது ரொம்பவே கடினம்..

அதனால் தான்
மழை வானில் இருந்து
கிளம்பும் முன்
நான் ஸ்ரீவியில் இருந்து கிளம்பினேன்..

செல்லும் வழி எங்கும் மழையின் சாரல்
என்னை துரத்தி வருகிறது கோடை மழை
நனைந்து விடாமல் மிக வேகமாக
செலுத்துகிறேன் என் வண்டியை..
விடாமல் துரத்துகிறது இந்த வருணனின் கொடையும்...

மனதில் ஒரு ஆசைவினா..
இந்த மழையை இப்படியே
நம் ஊர் வரை
இழுத்து செல்லலாமா? என்று

எப்படி?
எனக்குள் ஒரு போட்டியை முடிவு செய்தேன்
இப்படியே மழையை என்னை துரத்த செய்து
ஏமாற்றி
எங்கள் ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று..

நான் என் வண்டியில்
இது வரை செல்லாத வேகத்தில் விரைந்தேன்..
மழையும் என்னை துரத்தி வந்தது..
மேகத்தின் தாறு மாறான இதய துடிப்பை
காட்டும் கருவியாய் மின்னல்கள்..

'சிவகாசி உட்கோட்ட எல்லை ஆரம்பம்'
நெடுஞ்சாலை அமைத்த கல் பலகை
என்னை வரவேற்றது..
இன்னும் 3km தூரத்தில் என் ஊர்..

துரத்தி வரும் இந்த மழையை
இன்னும் கொஞ்ச தூரம்
இழுத்து வந்தால்
'ஆஹா, என் ஊரிலும் இன்று மழை பெய்யும்'..

என் போட்டியை தெரிந்து கொண்டதாலோ என்னவோ
மழை அந்த பலகையோடு
நின்று கொண்டது,
"சிவகாசி எல்லை வரை தான் என் எல்லை" என்பது போல்..
அம்மாவின் வேண்டுதல் வீணாகி விட்டதே?!?!

ஏமாற்றத்தோடு வீட்டிற்குள் நுழைந்தேன் நான்
வேலை முடிந்து அப்போது தான்
அப்பாவும் பட்டாசு ஆலையில் இருந்து வந்திருந்தார்..
'நல்ல வேல தம்பி என் வேண்டுதல்
வீண் போகல' - புன்னகை தவழும்
முகத்தோடு சொன்னார்.
தொடர்ந்து
'சீசன் டயத்துல மழை வந்து
கெடுத்துருமோனு பயந்துட்டேன்;
அந்த கடவுள் என் வேண்டுதல
நிறைவேத்திட்டான்' என்றார்.

நான் வேண்டிக்கொண்டேன்
அந்த male chauvinist கடவுளிடம்,
'கடவுளே நீயாவது இட ஒதுக்கீடு கொடு
எங்கள் ஊர் பெண்களுக்கு' என்று..

காதலிக்கு கடிதம் - காதல் தோல்விக்கு பின்...

Sunday, September 5, 2010

நான்: உனக்காக நான் செய்த ஏர்டெல்-ஏர்டெல்
10 பைசா திட்டம்
பயன்படுத்தப்படாமலே இருக்கிறது..
மனசாட்சி: 150 ரூபாய் போச்சுடீ..

நான்: என் விடுமுறைகள்
உன்னைப்பார்க்க ஏங்கிக்கிடக்கின்றன..
மனசாட்சி: பஸ் காசு மிச்சம்..

நான்: நீ கொடுத்த வாழ்த்து அட்டையும்
என் வீட்டு பூஜை அறையில் காதல் கடவுள் உன்னால்
சிபாரிசு செய்யப்பட்ட மனிதனின் கடவுள் பிள்ளையாரும்
உன்னை ஞாபகப்படுத்தி
மனம் வலிக்கச்செய்கிறார்கள்..
மனசாட்சி: எட்டணா கலர் அட்டைல கவுத்திப்புட்டாலே..

நான்: நன் கொடுத்த புத்தகங்களையோ
பிறந்த நாளுக்கு நான் பரிசளித்த மோதிரத்தை பார்க்கும் போதோ
அந்த வெள்ளை நிற சுடிதார் அணியும் போதோ
உனக்கு ஒரு நொடி கூட என் எண்ணம் வரவில்லையா?
மனசாட்சி: ஆயிரக்கணக்குல செலவழிச்சதுலாம் வீணா போச்சே...

நான்: வீட்டில் யாரும் உன் படிப்புக்கு துணை நில்லாத போது
என் மடிக்கணினியை விற்று
உனக்கு கல்வி கட்டணம் செலுத்தியபோது
நீ சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும்
என் நினைவுகளில் உள்ளது..
'என் family a விட நீ தான் எனக்கு எப்பவும் வேணும் ராம்'
என்று சொல்லியதை கூடவா மறந்து விட்டாய்?
மனசாட்சி: இன்னைக்கு அவளே தானடா
'எங்க குடும்ப மானமே போயிடும்
உன்ன கட்டிக்கிட்டா' னு சொல்லிட்டா..

நான்: உன்னால் நான் இழந்தது
என் வாழ்வில் பல..
மனசாட்சி: ஆமா ஆமா,
இதுவரைக்கும் எழுபத்தாயிரத்தி சொச்சம்..
வட்டி என்ன ஆச்சு?

நான்: இழந்தவை எல்லாம் திரும்ப வருமா?
உன்னையும் சேர்த்து தான் கேட்கிறேன்..
மனசாட்சி: நீ கூட வர வேண்டாம் தாயி..
அந்த காச மட்டும் ரிட்டன் பன்னிரு..
என்னோட அடுத்த பிகருக்கு செலவழிக்கணும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One