பன்னாட்டு CEOக்களின் பார்வையில் இந்திய உழைப்பு..

Saturday, December 27, 2014

என்ன தான் ப்ளாக்கில் சினிமா, அரசியல், மதம், ’மொளச்சி மூனு எல விடுறதுக்குள்ள’ ஊருக்கு புத்தி சொல்வது மாதிரி பதிவுகள் எழுதினாலும் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்த (பேங்க் காசுல தான்), MBAவுக்கு ஞாயம் கற்பிக்கும் வகையில் நான் எழுதியது என்றால் அது சேல்ஸ் வேலை பற்றிய ஒரே ஒரு தொடர் பதிவு மட்டும் தான், எனது இந்த 5 ஆண்டு கால ப்ளாக் வாழ்க்கையில்.. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் படித்த நிர்வாகவியலை ஒட்டிய மற்றொரு பதிவை இப்போது தான் எழுதுகிறேன். 

இந்த உலகமே ஒரு சிறு காலனி போல் மாறிவிட்டது இப்போதெல்லாம்.. இந்த மதத்துக்காரனிடம் வேலைக்குப் போக மாட்டேன், இந்த ஜாதிக்காரனை தான் வேலைக்கு வைப்பேன் என்று சொன்ன காலமும் இருந்தது ஒரு காலத்தில். ஆனால் இப்போது, என்ன ஜாதி, என்ன மதம், எந்த ஊர், எந்த மொழிக்காரன் என எதுவும் தெரியாத ஒருவன் தான் நமக்கு பாஸாக, நமக்குக் கீழ் வேலை செய்பவனாக, நம் வாடிக்கையாளராக என்று நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். அட பல நிறுவனங்களில் பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் நம்மையும் ஒரு உலகளாவிய வகையில் மெருகேற்றுவதற்காக, உலக அளவில், middle management என்று சொல்லப்படும் மேனேஜர் லெவல் வேலையாட்களிடம் அந்த நிறுவனங்களில் CEOக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அழகாக சொல்லப்பட்டிருந்தது நான் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில்.. அதை என்னால் முடிந்த அளவிற்கு தமிழில் சுவாரசியமாக கொடுக்க முயல்கிறேன்.. Expatriate CEOக்கள் (நம் நாட்டில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பவர்கள்) சிலரிடம், ”இந்திய வேலையாட்கள் எப்படி?” என்று சமீபத்தில் கருத்து கேட்டிருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் காஃபி வித் டிடி மாதிரி நம்மைப் புகழ்வார்கள் என்று பார்த்தால் ஆளாளுக்குக் கழுவி தான் ஊற்றியிருக்கிறார்கள்.. கழுவி ஊற்றியவர்கள் சாதாரணமான டப்பா கம்பெனியில் CEOக்கள் கிடையாது.. அவர்கள் எல்லோரும் மிட்சுபிஷி, BMW, ஹயட், வால்வோ, MTS, லோரியல், ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், வேதாந்தா, நிசான் போன்ற படா கம்பெனிகளின் இந்தியப்பிரிவிற்கான CEOக்கள்.. அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களும் ஒரு விதத்தில் உண்மை தானோ என்கிற எண்ணத்தை, சந்தேகத்தை எனக்குள் எழுப்பின.. 

அவர்கள் சொல்லும் முதல் கம்ப்ளெயிண்ட்டே நாம் எதற்கும் லேட்டாகத்தான் வருவோம் என்பது தான்.. கல்யாண வீடு, சினிமா தியேட்டர், ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன் என்று எதற்கும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கவோ, அல்லது ஹாயாக லேட்டாக போவதோ, நம் DNAவில் கலந்துவிட்ட விசயம்.. ஆனால் ஃபாரினில் இருந்து வந்த ஒரு CEO, போர்டு மீட்டிங் என்றால் 5 நிமிடம் லேட்டாக வருபவனையும், ஒரு get together, dinner, அலுவலகத்தில் ஒரு function என்றால் சர்வசாதரணமாக ஒரு மணிநேரம் லேட்டாக வருபவனையும் பார்த்தால் டென்சன் ஆகத்தானே செய்வான்?.. லேட்டாக வருகிறோமே என்கிற பிரஞ்கையோ குற்றவுணர்வோ கூட இந்தியர்கள் யாருக்கும் இல்லை என வருத்தப்படுகிறார்கள் அந்த CEOக்கள்.. நாம் லேட்டாக வருவது அடுத்தவர்கள் நமக்காக ஒதுக்கியிருக்கும் நேரத்தை, கொஞ்சம் கூட மதிக்காமல் அழிப்பதற்குச் சமம்.. இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய ஆட்கள் கூட இதை சட்டையே செய்யாமல் அவர்களும் லேட்டாக வருவதும், லேட்டாக வருவதை ஒரு கௌரவமாக நினைப்பதும் பன்னாட்டுத் தொழிலுக்கு உகந்ததல்ல என்கிறார்கள்..

இரண்டாவது முக்கியமான விஷயம் நம் தேசியத் தொழிலைப் பற்றி.. அட அதாங்க, விவாதம் செய்வது. இந்தியர்கள் நாம் எதற்கெடுத்தாலும் விவாதம், விதாண்டாவாதம் செய்கிறோமாம்.. ஒரு மீட்டிங் என்றால், நம் ஆட்கள் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று எதையாவது கொழுத்திப் போட, அவரை வழிமொழிந்தோ, வழிமறித்தோ இன்னொரு ஆள் தொடர, இப்படியே போய் அந்த மீட்டிங் தன் இலக்கை விட்டுவிட்டு வேறு எங்கோ தறி கெட்டு ஓடும்.. ஒவ்வொருவரும் தன் கருத்தை வாந்தி எடுக்க ஆரம்பித்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் தங்களுக்கு வாய்ப்பு கிட்டாத வரை யாரும் வாயைத் திறப்பதில்லை மீட்டிங்குகளில்.. அப்படி முந்திரிக்கொட்டை மாதிரி பேசுவதும் அங்கு அநாகரிகமாகக் கருதப்படுகிறது.. ஒரு வேளை, மீட்டிங்கில் ஒருவனுக்கு வாய்ப்பே கிட்டவில்லை, ஆனால் அவன் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்றால், அந்த மீட்டிங்கை தொந்தரவு செய்யாமல் அது முடிந்ததும் தான் பேசுகிறான்.. ஆனால் இந்தியர்கள் மீட்டிங் ஹாலை ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் ஷூடிட்ங் ஸ்பாட் போல் ஆக்கிவிடுகிறார்கள்.இந்தியர்கள் சரியான வாயாடிகள் என்பது அவர்களின் கருத்து. இங்கு யாரும் சும்மா இருப்பதில்லை. எங்கு பார்த்தாலும் எதையாவது, யாரைப்பற்றியாவது பேசிக்கொண்டே இருக்கிறார்கள் சிறு சிறு குழுக்களாக அமைத்துக்கொண்டு. இது வேலையை மிகவும் கெடுக்கும் செயல் என்று பொறுமுகிறார்கள்.. அதுவும் அரசியல் என்றால் நம் ஆட்கள் விடிய விடிய அடித்துக்கொள்கிறார்களாம் விவாதம் என்னும் பெயரில். மூன்றாவது விஷயம் நமது பரந்து விரிந்த வித்தியாசங்கள். பல CEOக்களும் இந்தியாவிற்கு வரும் முன் இந்தி தான் இங்கு இருக்கும் மொழி, எல்லோரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி வாழ்க்கை முறையோடு தான் இருப்போம் என்கிற நினைப்பில் தான் வருகிறார்கள்.. ஆனால் இங்கிருக்கும் மேனேஜர் மலையாளியாக இருப்பான், அவனுடைய subordinate ஒரு பஞ்சாபி, சேல்ஸ் ஹெட் ஒரு மராட்டி ப்ராமின் என்று இருந்தால், பாவம் புதிதாக வரும் CEO என்ன ஆவார்? இவர்களைப் புரிந்து கொள்வதற்குள் அவர் ரிட்டையர் ஆகி தன் தேசத்திற்கு மீண்டும் கிளம்பிவிடுவார்.. இந்தியாவின் இவ்வளவு பெரிய கலாச்சார பிரிவுகள் சந்தைப்படுத்துதலில் இருந்து வேலையாட்களை மேய்ப்பது வரை பல கஷ்டங்களை கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார்கள் அவர்கள்.. ஆனால் அவர்களுக்காக நாம் நம் அடையாளத்தை விட முடியாது தானே? தக்காளி ஒரு இந்தி பேசும் ஐயர் நம் பாஸாக இருந்தால் சும்மா விடுவோமா? நம் பகுத்தறிவு என்ன ஆவது? நம் தமிழன் என்கிற அடையாளம் என்ன ஆவது? ஃபேஸ்புக்கில் cross belt ஸ்டேட்டஸ் போட்டு பொங்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்போம்? ஆனால் அதையெல்லாம் தப்பு என்கிறான் அந்த வெள்ளைக்கார CEO..

MTS நிறுவனத்தின் இந்தியாவிற்கான CEO நம் டெல்லி ஏர்போர்டில் முதல் முறையாக இறங்கும் போது தான் அதைக் கவனித்தாராம்.. நம் ஆட்கள் ஒரு எட்டு பேர் ஏரோப்பிளேனில் இருந்து இறங்குவதற்கான ஏணியை தள்ளிக்கொண்டு வந்தார்களாம்.. அவர் ரஷ்யாக்காரர்.. இதைப் பார்த்து பதறிப்போய், “டேய் எங்க ஊர்லலாம் ஒருத்தனே இந்த வேலைய செஞ்சிருவானேடா?” என்கிறார்.. அதே போல் இங்கிருக்கும் நமது சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஓட்டல் மற்றும் ஆஸ்பத்திரி போன்ற சேவைத்துறை நிறுவனங்களிலும் கூட அளவுக்கு அதிகமான ஆட்கள் இருக்கிறார்களாம்.. அங்கெல்லாம் இது போன்ற சில்லறை வேலைகளைச் செய்ய ஆட்களே கிடைப்பதில்லையாம், கிடைத்தாலும் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் எங்கும் மெஷின் தானாம். அதை வேலை செய்ய ஒரே ஒரு ஆள் மட்டும் தான் இருப்பானாம்.

ஆனால் இன்னமும் நாம் டெக்னாலஜியை நம்பாமல் ஆட்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம். இது தான் எந்த வேலையை செய்வதற்கும் ஆட்கள் கூட்டமாக வருவதற்கான காரணமாம். ஆனால், வெளிநாட்டில் டெக்னாலஜியை பயன்படுத்தி ஆட்களைக் குறைத்து, எட்டு பேர் பார்க்கும் வேலையை ஒருவனை செய்ய வைத்தால் ஆகும் செலவை விட, இந்தியாவில் எட்டு மனிதர்கள் செய்யும் போது குறைவாகத் தான் ஆகிறது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். ’அப்புறம் ஏன்டா இதை ஒரு பிரச்சனையா சொல்றீங்க?’ என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் ஒலித்தால் நான் பொறுப்பல்ல.. ஒரு CEO சொல்கிறார், “எங்கள் ஊரில் கடினமான ஒன்றை நகர்த்த வேண்டும் என்றால் அதன் அடியில் சக்கரம் பொருத்துவோம்.. ஆனால் இந்தியாவில் இன்னும் இருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டாலே போதும், நகர்த்தி விடலாம்” என்கிறார் நகைச்சுவையாக.. அதாவது நம் மேன் பவர் என்னும் அசாத்திய மனித சக்தியை பெருமையாகவும் சொல்கிறார்கள், அதே நேரத்தில் டெக்னாலஜியை பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தியாவில் ஒருத்தன் மோசமாக வேலை செய்கிறான் என்றால், அவனை மோசமாக வேலை செய்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் மோசமான வேலைக்காரன் என்றாலும், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டும் போது, அவன் அதை மிகவும் பெர்சனால எடுத்துக்கொள்கிறான். அவன் மட்டும் இல்லை, உடன் வேலை செய்வோரும் இப்படிப் பேசுவதை தவறாகத் தான் பார்க்கிறார்கள். இங்கு வேலை என்பது, கூலி பெறுவதற்காக கொடுக்கும் உழைப்பு என்பதையும் தாண்டி, மக்களால் ஒரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் அப்ரைசல் காலத்தில் வேலையாட்களை விட, மேலதிகாரிகள் தான் மிகவும் கஷ்டப்படுகிறார்களாம். எந்த வேலையாளையும் மோசம் என்று சொல்ல முடியாமல், அனைவரையும் சுமார் என்கிற வரையறைக்குக் கீழ் குறிப்பிட்டு, அவரை “அவமானப்படுத்த” எந்த இந்திய மேலதிகாரியும் விரும்புவதில்லையாம். தனிப்பட்ட முறையில் ஒருவரின் வேலை மீது குற்றச்சாட்டு இருந்தாலும் அப்ரைசல் காலத்தில் நம் இந்திய மேனேஜர்கள் பெரும்பாலும் அதை எல்லாம் மறைக்கத்தான் பார்க்கிறார்களாம். வேலையை வேலையாக மட்டும் பார்க்காமல் இருப்பதால் நடக்கும் தவறான செயல் என்கிறார்கள். ஒருவன் வேலை செய்யவில்லை என்றால், தைரியமாக “செய்யவில்லை” என்று கூறவேண்டுமாம்.. மாலையில் வேலை முடிந்ததும் அவன் தோளில் கை போட்டுக்கொண்டு ஒரு ஃப்ரெண்டாக பேசலாமாம். ஆனால் வேலையில் எ பாஸ் இஸ் எ பாஸ் என்று இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். வேலையை, பெர்சனலோடு, கௌரவத்தோடு எக்காரணமும் இணைக்கக்கூடாது என்கிறார்கள்.

”இண்டிபெண்டென்ஸ் டே” படத்தில் ஒரு சாதாரண மிலிட்டரி ஆளான வில் ஸ்மித் அந்த நாட்டின் ஜனாதிபதியை ரொம்ப கேசுவலாக “மிஸ்டர் ப்ரெசிடெண்ட்” என்பார்.. அந்த ஜனாதிபதியும் அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்.. பொதுவாக பல ஆங்கிலப் படங்களிலும் எல்லோரும் பெயர் சொல்லியே அழைத்துக்கொள்வார்கள். யாரும் யாரையும் “சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” போட்டு அழைக்கவே மாட்டார்கள்.. ’அதெப்படிய்யா அங்கெல்லாம் கம்பெனி ஓனரையே ”மிஸ்டர்.ஸாம்”னு பேரச்சொல்லியே கூப்புடுறாய்ங்க?” என நான் வியந்திருக்கிறேன்.. ஆனால் அங்கு பழக்கமே அது தானாம். ஆனால் இங்கு இந்தியாவில் பெயர் சொல்லி ஒருவன் அவன் மேலதிகாரியை அழைத்தாலே அவன் காலி.. வேதாந்தா நிறுவனத்தில் CEO சொல்கிறார், “இந்தியாவில் கொடுக்கப்படும் அதிகபட்ச மரியாதை என்னை எரிச்சலூட்டுகிறது” என்று.. ஒவ்வொரு முறை அவர் வரும் போதும் மாலை போட்டு, பொட்டு வைத்து, மிகவும் பவ்யமாக குனிந்து வணக்கம் சொல்லி, ஒவ்வொருவரும் “சார்ர்ர்ர்ர்ர்ர், சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று அழைப்பது அசிங்கமாக தெரிகிறதாம். தன் சக ஊழியனை பெயர் சொல்லி அழைப்பதில் என்ன தவறு என்கிறார். பதவி என்பது ஒவ்வொருவரின் தகுதிக்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் இடம். அதற்காக ஒருவருக்கு கூழைக்கும்பிடு போட்டு, மரியாதை கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஸ்ட்ரிக்ட்டாக. ”இருவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்கிறோம், உன் பொறுப்பை நீ கவனிக்கிறாய், என் பொறுப்பை நான் கவனிக்கிறேன்” என்கிற எண்ணம் இருந்தாலே தேவையற்ற மரியாதைகள் விலகிவிடும் என்றும் விளக்கம் கொடுக்கிறார்..

ஆனால் இன்னொரு CEOவின் கதை அப்படியே தலைகீழ்.. முதல் நாள் அவருக்கு “Respected sir" என்று ஆரம்பித்து வந்திருந்த ஈமெயிலைப் பார்த்து காண்டாகி, எல்லோரையும் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களில் ஆஃபிசில் அடிதடி சண்டையே வந்துவிட்டதாம். இப்போது அந்த CEO தன் ஆஃபிசில் எல்லோரையும் ஜீ போட்டு அழைக்கிறாராம், ”ராம்குமார்ஜீ சொல்லுங்கஜீ” என்று.. Hierarchyக்குக் கொடுக்கப்படும் அதிகபட்ச முக்கியத்துவம் தான் அனைத்திற்கும் காரணம், அது ஒரு ஆரோக்கியமான நிறுவனத்திற்கு, அதன் உலகளாவிய வளர்ச்சிக்குத்தடை என்கிறார்கள்.. இதைப் படிக்கும் யாரும் உங்கள் நிறுவனத்தை உலகளாவிய வளர்ச்சிக்கு எடுத்துப்போகிறேன் பேர்வழி என்று நாளையே உங்கள் பாஸை பேர் சொல்லி அழைத்துவிட்டு, அப்ரைசலில் ஆப்பு வாங்காதீர்கள்..

பொதுவாக நம் மக்கள் ஒரு பொறுப்பை ஏற்கவும், முடிவை எடுக்கவும் மிகவும் தயங்குபவர்கள்.. விடிய விடிய விவாதிப்போமே ஒழிய உருப்படியாக ஒரு முடிவை எடுக்க மாட்டோம். முடிவை எடுத்துவிட்டாலும் அதை வழிநடத்திச் சொல்ல யாரும் முன்வர மாட்டோம்.. வேலை இடங்களிலும் இதே தான்.. ஒரு பொறுப்போ, அல்லது ஒரு முடிவெடுக்கும் சூழலோ வந்தால் எல்லோரும் அதை நம் பாஸ் இருக்கும் திசையை நோக்கித் திருப்பி விடுவோம்.. அவர் அவரின் பாஸிற்குத் திருப்பி விடுவார்.. இது தான் ஒவ்வொரு அலுவலகத்திலும் அன்றாட வேலை பலருக்கும்.. இதற்கான முக்கிய காரணம், தோல்வி பயமும், நம்மை யாரும் குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையும் தான். எந்த எண்ணமும் நம்மிடம் இருந்து சீக்கிரம் மறைய வேண்டும் என்கிறார்கள் அவர்கள்..

பொதுவாக நம் ஆட்கள், பாஸ் எதை கேட்டால் சந்தோசப்படுவாரோ அதைத் தான் சொல்வார்கள் அது தவறாகவே இருந்தாலும், பொய்யாகவே இருந்தாலும்.. உண்மையை பட்டென்று போட்டு உடைக்கும் தைரியம் இல்லாதவர்கள். ஒரு வேலையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவே முடியாது என்று தெரிந்தாலும் பாஸ் கேட்கும் போது “முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்றேன் சார்” என்பார்கள். புத்திசாலி பாஸ்களுக்கு மட்டும் தான் தெரியும், ஒருத்தன் ”முடிந்த வரை” என்று சொன்னாலே அவன் ஒன்றையும் முடிக்க மாட்டான் என்று. நம் ஆட்கள் வக்கனையாக பேச மட்டும் தான் லாயக்கி, ஆனால் செயல் “ஆளப்பாத்தா அழகு, வேலையப்பாத்தா எழவு”ங்கிற ரேஞ்சில் தான் இருக்கும் என்கிறார்கள்.. 
அடுத்தது, நம் ஆட்களிடம் இருக்கும் work life balance.. இரவு 12 மணிக்கு பாஸிற்கு மெயில் அனுப்பி வேலை மேல் தனக்கு இருக்கும் காதலைக் காட்டுவார்கள். இந்த ஒரு விசயத்தை வைத்தே இரண்டு கருத்துக்களை சொல்கிறார்கள் நம் ஃபாரின்  CEOக்கள். முதலில், ஒருவன் வேலை நேரம் முடிந்த பின்னும், வேலை செய்கிறான் என்றால் அவன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கும் தகுதி அற்றவன். அடுத்ததாக அவன் குடும்பத்திற்குள் வேலையின் பிரச்சனைகளை கொண்டு சென்று, குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சிறுசிறு பிரச்சனைகள் வந்து, அது ஒரு கட்டத்தில் அவன் வேலையைக் கெடுக்கும். சரியான நேரத்திற்குள் வேலையை முடிக்கத் தெரிந்தவன் அலுவலக நேரத்தைக் கடந்தும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு time management மிகவும் முக்கியம், இந்தியர்களுக்கு அந்தக் கலை போதாது என்கிறார்கள்..
Time managementல் நாம் மோசமாக இருப்பது தான் அவர்களை மிகவும் வெறுப்பேற்றும் செயல் என்று அந்தக் கட்டுரையை படிக்கும் போதே உணர்ந்தேன்.. பலரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைத் தான் சொல்லியிருந்தார்கள் அந்தக் கட்டுரையில். ஒரு CEOவின் BPயை எகிற வைக்கும் ஒரே விசயம் என்றால், அது மீட்டிங்கிற்கு முந்தைய நாள் நள்ளிரவு வரை அவரின் செகரட்டரி அவசர அவசரமாக ரிப்போர்ட் தயார் செய்வது தானாம். ”இந்தியர்களுக்கு எதையும் கடைசி நேரத்தில் அரக்கப்பறக்கச் செய்வது தான் பிடித்திருக்கிறது.. அந்த ஒரு பரபரப்பு வந்தால் தான் அவர்கள் வேலையே செய்கிறார்கள்.. அந்த வேலையும் பெரும்பாலும் சரியாகவே முடிந்து விடுகிறது.. ஆனால் அதனால் எங்களுக்குக் கிடைக்கும் டென்சன் சொல்லி மாளாது” என்று அவர்கள் நொந்து போகும் அளவிற்கு நம் ஆட்கள் பாடு படுத்தியிருக்கிறார்கள்.. 

இவ்வளவு தான் அந்தக் கட்டுரை.. இது முழுக்க முழுக்க middle management ஆட்களுக்கான கட்டுரை.. இதைப் படித்துவிட்டு front line ஆட்களோ, சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களோ, அடிமட்ட அடிமைகளோ உங்கள் லோக்கல் மேனேஜரிடம் ட்ரைப் பண்ணி டவுசரை கிழித்துக்கொள்ள வேண்டாம் என்று சிவகாசிக்காரன் கம்பெனி சார்பாக எச்சரிக்கை விடப்படுகிறது.. வேண்டுமானால் நீங்கள் இன்னும் 2,3 ஆண்டுகளில் ப்ரொமோசன் ஆகி மேனேஜராக வரும் போது உங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் இந்தப் பழக்கங்களை கொண்டு வாருங்கள்.. உங்கள் நிறுவனம் உங்களை ஒரு முன்மாதிரி மேனேஜராகப் பார்க்கும்.. Best wishes :-)

லிங்கா - வந்துட்டார்யா என் தலைவர் கிங்கா....

Saturday, December 13, 2014

இதுவரை தமிழ்ப் படங்களுக்கும், பாஷையே தெரியாவிட்டாலும் சில தெலுங்கு, இந்திப் படங்களுக்கும் விமர்சனம் எழுதியிருக்கிறேன்.. ஆனால், ஒரு ரஜினி ரசிகனாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு திரிந்தாலும் நான் இதுவரை தலைவர் படத்திற்கு விமர்சனம் எழுதியதில்லை என்பது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமான விசயம் தான்.. ஏன் எழுதியதில்லை என்று யோசித்ததில் வந்த முதல் & ஒரே காரணம், அவர் படங்களை என்னால் விமர்சனக் கண்களோடு பார்க்க முடியாது.. ஒரு முக்கியமான இடத்திற்குப் போகிறீர்கள், அங்கு ஃபோட்டோ எடுப்பது ஒரு சுகம் என்றால், அனைத்தையும் மறந்து அந்த இடத்தைக் கண் கொட்டாமல் பார்ப்பது அதை விட சுகம்.. ரஜினி படம், ஃபோட்டோ எடுப்பதை மறந்து நம்மை ரசித்துப்பார்க்க வைக்கும் இடம் போன்றது.. படத்துக்குப் போனாமோ, என்ஜாய் பண்ணுனோமா என்று இருக்க வைப்பவை.. பட், ஒரு ஃபேஸ்புக் & பிளாக் பிரபலம் என்று ஃபார்ம் ஆக வேண்டுமானால் இந்த மாதிரி செண்டிமெண்ட் எல்லாம் பார்க்காமல் நம் சமூகக் கடமையை ஆற்ற வேண்டுமல்லவா? அதனால் தலைவருக்கான என் கன்னி விமர்சனத்தைக் கொடுக்கிறேன்.. Lets begin.. 


கதை அல்ரெடி நேற்று இரவில் இருந்தே பலரும் பிரித்து மேய்ந்து துவைத்து அயன் செய்து விட்டார்கள்.. நாம ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கே போயிருவோம்.. கோச்சடையானில் “பொம்மை ரஜினி” என்று ஊரே பேசியது.. அதை விட, “ஏ, ரஜினியால இனிமேலு நடக்கக் கூட முடியாதுப்பா, இதுல எங்க நடிக்கிறது? அதான் யாரையோ வச்சி பொம்மப்படம் எடுத்திருக்காய்ங்க” என்றெல்லாம் சொன்னார்கள்.. இந்தப் படம் அப்படிப் பேசியவர்களுக்கு எதிராக ரஜினி கொடுத்திருக்கும் செயல்முறை விளக்கம்.. எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பியதும், “அந்த ஆள் அவ்வளவு தான், நடக்கக்கூட முடியாது” என்று பேசினார்கள்.. அடுத்தப் பொதுக்கூட்டத்தில், கரூர் என்று நினைக்கிறேன், மனுசன் விறுவிறுவென்று யார் உதவியும் இல்லாமல் படிகளில் துள்ளி ஏறி மேடைக்கு வந்தார்.. மொத்தத் தமிழ்நாடும் அன்று சந்தோசத்தில் அலறியது.. கிட்டத்தட்ட அதே மாதிரி தான், ”ஓ நண்பா” பாடலில் ரஜினி காட்டியிருக்கும் அந்த வேகம், நடனம், துள்ளல் எல்லாம்.. “தக்காளி மூனு மாசம் ஆஸ்பத்திரில படுத்துகெடந்து, ‘கண்ணா எப்படி இருக்கீங்க?’ என்று நடுங்கிய குரலில் வாய்ஸ் டேப் ரிலீஸ் பண்ணுன ஆளாடா இது?” என்று ஒவ்வொருத்தனையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது.. அந்த ஒரு பாடல் போதும் ரசிகன் கொடுத்த 250ரூபாய்க்கு.. அதற்கு மேல் வருபவை எல்லாம் போனஸ்..


படத்தில், தற்கால ரஜினி செய்யும் ஸ்டைல், சேட்டைகள், அலப்பறைகள், முகபாவனைகள் எல்லாம், ‘தலைவர் இன்னும் ஃபார்மில் இருக்கிறார்’ என்று ஒவ்வொரு ரசிகனையும் மனதிற்குள் குதூகலம் அடையச்செய்பவை.. ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்ததும் ரசிகர்கள் லேசாக சோர்வாக ஆரம்பிக்கிறார்கள், ஆனால் குடும்பம் குட்டியோடு வந்தவன், அதன் பின் தான் படத்தை ரசிக்க ஆரம்பிக்கிறான்.. ரசிகர்கள் எதிர்பார்க்கும் படி ஃப்ளாஷ்பேக்கில் ரஜினியின் ஹீரோயிஸமோ, பன்ச் டயலாக்கோ, சேட்டையோ, ஸ்டைலோ எதுவும் இருக்காது.. மனுசன் வேலையை ராஜினாமா செய்து விட்டு வீராப்பாய் நடந்து வருவதும், ராஜாவாய் கம்பீரம் காட்டுவதும், அணை கட்டுவதற்காக அனைத்தையும் இழப்பதும், பின் அவருக்கு ஏற்படும் முடிவும் ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்பது டவுட் தான்.. ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் தான் பெண்களையும், ஃபேமிலி ஆடியன்ஸையும் இந்தப் படத்தின் பக்கம் இழுத்து வரப்போகின்றன.. ஒரு குழாய் மைக்கை கையில் வைத்துக்கொண்டு, “உன் உடம்புல இந்தியனோட ரெத்தம் ஓடுனா வாடா” என்று சொல்கிற காட்சி மாஸ் & கிளாஸ்.. இந்த மாதிரி சின்னச்சின்ன விசயங்களில் தான் ரசிகர்களுக்கான ரஜினி தெரிகிறார்..


முக்கால்வாசிப்படம் அணை கட்டுவதிலேயே முடிந்துவிடுகிறது.. இரண்டாம் பாதி மெதுவாகச் சென்றாலும் நிறைவாய் இருக்கிறது.. ஒரு படத்தின் கதை மெதுவாய் நகர்ந்தாலும் போர் அடிக்கக் கூடாது.. இரண்டாம் பாதி அப்படித்தான், நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு காட்சியையும் விளக்கிக்கொண்டிருப்பார்கள்.. மேதாவி சினிமா ஞானிகளுக்கு அதெல்லாம் போர் அடிக்கலாம்.. எனக்கு இரண்டாம் பாதி தான் மிகவும் பிடித்திருந்தது.. கதையின் முக்கியத்துவமே அந்தக் காட்சிகள் தானே? அதை அப்படிச் சொன்னால் தானே அழகு? சும்மா, ரெண்டு சவால், நாலு ஃபைட்டு என்று எடுத்தால் இப்போது நடிக்கும் மற்றவர்களுக்கும் ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிக்கும் “இந்தியனே வா” பாடல் அங்கங்கு வந்து அணை கட்டுவதை படத்துடன் அழகாகக் காட்டுகிறது.. இந்த இடத்தில் பாடலைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.. இரண்டு டூயட், ஒரு இண்ட்ரோ சாங்க் மட்டும் தான் படத்தில்.. மற்றவை எல்லாம் கதையின் பின்னணியில் வருபவை.. அந்த இரண்டு டூயட்டும் அழகாக எடுத்திருக்கிறார்கள்..  படத்தில் இரண்டு ஹீரோயின் என்றாலும், என் பார்வை முழுவதும் அனுஷ்கா மீது தான்.. சோனாக்‌ஷி சின்காவை விட இவருக்குக் காட்சிகள் குறைவு என்றாலும், அந்த ஒரு சில காட்சிகளிலேயே ஸ்கோர் செய்து விடுகிறார்.. நகை திருடும் காட்சியில் கேபினுக்குள் ரஜினிக்கு அவ்வளவு அருகில், அவருக்கு ஈடாக சரி சமமாய் அசால்ட்டாக நடித்திருப்பதற்காகவே அனுஷ் செல்லத்திற்கு என் கிஸ்சஸ்.. சோனாக்‌ஷி சின்ஹா வழக்கமான கிராமத்தின் நல்ல, அப்பாவி, கொஞ்சம் விபரமான & பணக்கார ஹீரோவை லவ்வும் பொண்ணு.. தலைவருக்கும் நம்மள மாதிரி தான் டேஸ்ட் போல.. கொஞ்சம் கொழுக் மொழுக்குனு தான் அவர் படங்களில் ஹீரோயின் இருப்பார்கள், சிவாஜி & எந்திரன் விதிவிலக்கு.. இதிலும் அப்படித்தான் இரண்டு கொழுக் மொழுக் ஹீரோயின்கள்.. ரெண்டு ஹீரோயின்களும் லட்டு மாதிரி இன்னும் அழகாக இருக்கிறார்கள் பாடல்களில்.. ரஜினி படம் என்றாலே கவர்ச்சி கம்மியாக இருக்க வேண்டும் என்பது இந்தப் படத்திலும் பின்பற்றப்பட்டிருக்கிறது..


சந்தானத்தின் கவுன்ட்டர் டயலாக்குகள் & உவமைகள் எல்லாம் சூப்பர்.. இந்த ஆளு எங்க இருந்து தான் இது மாதிரி உவமைகளை எல்லாம் பிடிக்கிறார் என்று தெரியவில்லை.. கடைசிக் காட்சியில் கே.எஸ்.ரவிக்குமார் வரும் போது, “இவர் பேரு தான் finishing குமாரு” என்று அவரையும் கலாய்க்கத் தவறவில்லை.. கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இருக்கும் அந்த வழக்கமான “ஊர்ப் பெரிய மனுஷ, பெரிய குடும்ப கும்பல்” இந்தப் படத்திலும் உண்டு.. அவர்களுக்கு ஆளுக்கு ரெண்டு டயலாக் என்று சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு சோசியலிசம் போற்றப்பட்டிருக்கிறது,.. அந்த பிரிட்டீஷ் வில்லனின் பொண்டாட்டி மாதிரி இந்திய வைஸ்ராய்களுக்கெல்லாம் பொண்டாட்டிகள் அமைந்திருந்தால் இந்திய சுதந்திரம் மிக எளிதாய் கிடைத்திருக்கும்.. ஜெகபதி பாபுவின் வில்லத்தனம் மட்டும் தான் எடுபடவில்லை.. 


பாடல்கள் சூப்பர்.. பின்னணி இசை, படமே அடக்கி வாசிக்கப்பட்டிருப்பதால் அதுவும் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது.. ரத்னவேலுவின் உழைப்பு பல காட்சிகளில் தெரிகிறது.. கண்ணை உறுத்தாமல் பல நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.. ஹீரோயிச வசனங்கள் எங்குமே இல்லாமல், தத்துவம் & சில தேசப்பற்று வசனங்கள் இருப்பது ரஜினி படத்தில் பெரிய வித்தியாசம்.. வசனங்களில் லேசான அரசியல் வாடை இருந்தாலும், ரஜினி அதற்குப் பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.. ஷங்கரின் பிரமாண்டம் எல்லாம் வருடக்கணக்கில் நேரம் எடுத்தால், கே.எஸ்.ரவிக்குமாரின் பிரமாண்டம் நாள் கணக்கில் மட்டுமே நேரத்தை எடுக்கிறது.. மனுசன் மிலிட்டரியில் பெரிய ஆஃபிசராக ஆகியிருக்க வேண்டியவர்.. தப்பித்தவறி சினிமாவிற்குள் வந்துவிட்டார் போல.. இவ்வளவு பெரிய, பிரமாண்டமான படத்தை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் எடுத்திருப்பதற்காகவே அவருக்குப் பெரிய சபாஷ் போட வேண்டும்.. பிரமாண்ட அணை கட்டிய லிங்கேஷ்வரனுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டியவர் இந்த பிரமாண்டமான படத்தை ஆறே மாதத்தில் கொடுத்த நம் finishing குமார்..


இப்போது ரசிகர்களுக்காக சில வரிகள்.. ரஜினியைக் கட்டி வைத்து அடிக்கும் போதோ, அல்லது அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிறகோ ஒரு சோகப்பாட்டைப் போட வேண்டும், நாம் தியேட்டரில் தலைவருக்காகக் கதறி அழ வேண்டும் என்றெல்லாம் இன்னும் எதிர்பார்க்காதீர்கள்.. பன்ச் டயலாக் பேசிக்கொண்டும், பறந்து பறந்து வில்லன்களை அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காதீர்கள்.. இப்போதெல்லாம் இரண்டாவது படத்திலேயே பக்கிகள் பன்ச் டயலாக் எல்லாம் பேசுகிறார்கள்.. பன்ச் டயலாக்கிற்கான மதிப்பே போய்விட்டது அவர்களால்.. இன்னமும் தலைவர் அதையெல்லாம் பேசுவது அவர் கௌரவத்திற்கும் மாஸிற்கும் அழகல்ல.. அதனால் அவர் இப்போது ஒரு நீட்டான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டார்.. மக்களின் ரசனையும் மாறிவிட்டது.. இன்னமும் அழுகாச்சி செண்டிமெண்ட், பன்ச் டயலாக், விஷ்க் விஷ்க் சவுண்ட், 20 பேரை அடிப்பதெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.. தனக்கு இருக்கும் பிம்பத்தை உடைத்துத் தானும் நல்ல கதை இருக்கும் படங்களில் நடிப்பேன் எனத் தலைவர் எந்திரனைத் தொடர்ந்து இதிலும் காட்டியிருக்கிறார்.. அவரே மாறிவிட்ட போது நாம் இன்னமும் படையப்பா, பாட்ஷா மாதிரி 20 வருடங்கள் ஏன் பின் தங்கி இருக்க வேண்டும்? நாமும் இந்த மாற்றத்தைப் பின் தொடர்வோம்.. ஓ நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா????மொத்தத்தில், ஒரு பெரிய கண்டத்தில் இருந்து மீண்டு வந்து, “நான் இன்னமும் அதே வேகமும் துள்ளலும் இருக்கும் பழைய ரஜினி தான்” என்று நிரூபித்திருப்பதற்காகவே ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.. அவர்கள் கொண்டாடத் தயங்கினாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்தப் படத்தை மிகப்பெரிய ஹிட் ஆக்கிவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. மூன்று மணிநேரம் ரஜினியின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை ரசித்து விட்டு வாருங்கள்.. ரஜினி படத்தில் ரஜினியைத் தவிர வேறு என்ன இருந்தால் நமக்கென்ன, இல்லாவிட்டால் நமக்கென்ன? மொத்தத்தில், லிங்கா- எங்க தலைவர் வந்துட்டார்யா கிங்கா, பவர்ஃபுல்லா..

ரஜினி - மீடியாக்களின் லட்சணம்..

Wednesday, December 10, 2014

உங்கள் ஏரியாவில் ஒரு டீக்கடை. நீங்கள் வழக்கமாக அங்கு தான் டீ குடிப்பீர்கள் ஓசி தினத்தந்தியை மேய்ந்து கொண்டே.. ஒரு பக்கத்தைத் திருப்புவதற்குள் ஓராயிரம் வியாக்கியானம், அரசியல் பன்ச்சுகள், மேதாவி டயலாக்குகள், நாட்டைத் திருத்தும் ஐடியாக்கள், “இந்த மாதிரி ஆளுங்கள மிலிட்டரிய விட்டு சுடணும் சார்”, “அரசியல்வாதியாலத் தான் சார் நாடே கெட்டுப்போகுது”, “ஊழல் பண்ணுறவன ஒடனே பிடிச்சி தூக்குல போடணும் சார்” போன்ற அனல் பறக்கும் வசனங்களை எல்லாம் அந்த ஆறிப்போன டீயை உறிந்து கொண்டே பேசுவீர்கள்.. உங்கள் பேச்சை வாய் பிளந்து கேட்கவும் அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது.. 

அந்த டீக்கடை வழியே செல்லும் சில வயித்தெரிச்சல் பிடித்த ஆட்கள் உங்களிடம், “ஏம்ப்பா இவ்வளவு வியாக்கியானம் பேசுறீல, பேசாம நீ அரசியலுக்கு வந்து நல்லது எல்லாம் செய்யலாமே?” என்கிறார்கள்.. பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? “எனக்கு ஆசையாத்தான் இருக்கு... ஆனா கால நேரம் கனிஞ்சு வரும் போது பாக்கலாம்” என்கிறீர்கள்.. மீண்டும் உங்களுக்கென்று இருக்கும் அந்த டீக்கடை ரசிகர்களிடம் அரசியல் பேசுகிறீர்கள்.. அந்த வயித்தெரிச்சல் குரூப் இப்போது உங்களை விட்டுவிட்டு உங்கள் ரசிகர்களை தூண்டுகிறது.. “ஏ பாத்தியா இவன? சும்மா பில்ட்-அப் மட்டும் தான் குடுக்குறான்.. இவ்வளவு பேசுறவன் நம்ம ஊர் எலக்சன்ல நிக்க வேண்டியது தான? அவன் கூடயே சுத்துறீங்கல்ல, உங்களுக்கு ஒரு பதவி குடுக்க வேண்டியது தான?” என்று.. சில அப்பாவிகளும் அவர்களின் பேச்சை நம்பிக்கொண்டு உங்களுக்கு எதிராய் திரும்புகிறார்கள்.. ஆனாலும் நீங்கள் உங்கள் முடிவில் தெளிவாய் இருக்கிறீர்கள். இன்னும் அதற்கான காலம் வரவில்லை என்பதைத் தெளிவாக நம்புகிறீர்கள்.. இப்போது அந்த வயித்தெரிச்சல் பிடித்த கும்பல் உங்களைப் பற்றி ஊர் முழுக்கத் தப்பாகப் பேசுகிறது கோழை, பிழைக்கத் தெரிந்தவன், சுற்றி இருப்பவரை ஏமாற்றுபவன், வியாபாரி, அது இதுவென்று.. நீங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் உங்கள் வேலையை எப்பவும் போல் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.. அவர்களின் குரைக்கும் சத்தம் உங்களை எதுவும் செய்யவில்லை..
மேலே சொன்ன கதையில் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று தனியாக ஒரு முறை விளக்கத்தேவையில்லை.. இதில் அந்த வயித்தெரிச்சல் குரூப் என்று குறிப்பிடுவது நம் லுச்சா லெட்டர் பேட் அரசியல்வாதிகளையும், மீடியாக்களையும், ஃபேஸ்புக்/ட்விட்டர் போராளிகளையும் தான்.. முதலில் ஒரு விஷயம், “நாம் டீக்கடையில் அரசியல் பேசுவதும், ரஜினி மேடையில், சினிமாவில் பேசுவதும் ஒன்றா?” என்கிற கேள்வி வரலாம் உங்கள் மனதில்.. நம் சக்திக்கு நமக்கு கிடைத்திருக்கும் தளம் டீக்கடை தான்.. அவருக்கு சினிமா, அதனால் அங்கு பேசுகிறார்.. மற்றபடி டீக்கடையில் நாலு பேர் நம்மை உற்று கவனிக்க வேண்டும் என்கிற ஆசையில் நாம் பேசும் அளவில் பாதியைக் கூட  அவர் மேடைகளில் பேசுவதில்லை என்பதே உண்மை.. அதற்கே இந்த அரசியல்வாதிகளும், மீடியாவும் அவரை என்னமாய் காய்ச்சுகிறார்கள்? இத்தனைக்கும் இந்த மீடியாக்காரர்கள் தான் அவரிடம் போய் “எப்போது அரசியலுக்கு வரப்போகிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டே இருப்பது..

ஆனால் அதை அச்சில் ஏற்றும் போது, என்னமோ ரஜினியே இவர்களை எல்லாம் அழைத்து ஒரு பிரஸ் மீட் வைத்து, “நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமான்னு குழப்பத்துல இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க.. அடுத்த படம் வரப்ப திரும்ப இதே மாதிரி பிரஸ் மீட் வைக்குறேன்.. அப்பயும் இதே மாதிரி தான் பதில் சொல்வேன்” என்று சொல்வது போல் எழுதுவார்கள்.. பாட்ஷா வந்த காலத்தில் இருந்து தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்த இந்த மீடியாக்காரர்கள் எடுத்துக்கொண்ட ஆயுதங்களில் ஒன்று தான் ரஜினியின் அரசியல் எண்ட்ரி.. ஆனால் இவர்களின் அந்த ஈனப்பிழைப்பிற்கு கூட ரஜினி மீது தான் பழி போட்டார்கள்.. ஏதோ புதிதாகப் படம் வரும் போதெல்லாம் ரஜினி அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் என்று..

சந்திரமுகியோ சிவாஜியோ எந்திரனோ வந்த போது ரஜினி அரசியல் பற்றி வாய் திறந்தாரா? இந்த மீடியாக்காரர்கள் தான் ஒவ்வொரு படமும் வரும் போதும் பிச்சை கேட்பவன் போல், இல்லை இல்லை, பிக் பாக்கெட் அடிப்பவன் போல் அவர் வாயில் இருந்து வார்த்தைகளைப் பிடுங்கப் பார்க்கிறார்கள்.. பின் இவர்களே “படம் வரும் போது மட்டும் அரசியல் ஸ்டண்ட் செய்கிறார் ரஜினி” என்பது போல் கார்டூன், கட்டுரை, பாரதிராஜா பேட்டி எல்லாம் எடுத்துப் போடுவார்கள்.. ஏன்யா அரசியல் ஸ்டண்ட் அடித்துத் தான் படத்தை ஓட வைக்க வேண்டும் என்கிற நிலையிலா இருக்கிறார் ரஜினி? மீண்டும் இந்த பாராவின் முதல் வரியைப் பாருங்கள்.. அந்தப் படங்கள் வரும் போது இந்த மீடியாக்காரர்களை அவர் மதிக்கவே இல்லை.. ஆனால் படங்கள் பட்டையைக் கிளப்பின.. அவர் ஒன்றும் அரசியல் ஸ்டண்ட் அடித்து படம் ஓட வைக்க வேண்டிய நிலையில் இல்லை என்பதற்கு சமீபத்தில் வந்த அவரின் அந்தப் படங்கள் தான் தகுந்த உதாரணங்கள்..தன் ஆரம்ப காலத்தில் இருந்தே ரஜினி மீடியாவின் காற்று படாமலேயே தான் இருக்க விரும்பினார் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.. ஆனால் மீடியா தான் அவரை, அவரின் மனநிலை, அவரின் திருமண செய்தி, அவர் மகள்களின் சொந்த வாழ்க்கை, அவரின் உடல் நிலை, அவரின் படங்கள், அவரின் அரசியல் பேச்சு என்று அனைத்தையும் “மீடியா சுதந்திரம்” என்கிற பெயரில் மூக்கை நுழைத்து எழுதிக்கொண்டே இருந்தன.. அவர்களுக்குத் தெரியும் ரஜினி ஒரு பொன்முட்டை இடும் வாத்து என்று.. அதனால் அவர் சும்மாவே இருந்தாலும் மீடியா அவரைப் பின் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது இந்தக் கேடு கெட்ட நான்காம் தூண். நிம்மதி வேண்டி இமயமலை சென்றாலும் நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.. அவர் என்ன செய்தாலும் அதில் ஒரு குதர்க்கமான விசயத்தை அவர்களாக டெவலப் செய்து, அச்சிலேற்றி தங்கள் சர்குலேசனை அதிகப்படுத்திக்கொண்டார்கள்..

இப்போது கூட ‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் என்னமோ ரஜினி தான் வாலண்டியராக வந்து அரசியல் எண்ட்ரி பற்றிப் பேசியது போல் அனைத்து மீடியாக்கரர்களும், திடீர் ஃபேஸ்புக் போராளிகளும் பொங்குகிறார்கள்.. அந்த நிகழ்ச்சியில் அமீர், சேரன் இருவரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசுகிறார்கள்.. அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லாவிட்டால் அது அவர்களை அவமதிப்பதாகிவிடும், அதுவும் போக தன்னை தலைக்கனம் கொண்டவன் என்றும் சொல்லிவிடுவார்கள் என்கிற எண்ணத்தில் அவர்களுக்குக் கூறிய பதிலை நம் மீடியாக்களும் ஃபேஸ்புக் புரட்சியாளர்களும் இங்கு என்னமாய் இட்டுக்கட்டி, ட்விஸ்ட் செய்து போட்டார்கள் என்பதை ஊரே அறியும்.. 
அதாவது இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தானாம்.. ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர் தெளிவாகச் சொல்லிவிட வேண்டுமாம்.. ஏன்யா நாட்டுல என்னென்னமோ பிரச்சனை நடக்குது, உங்களுக்கு இதப் பத்தி ஏன்யா இவ்வளவு அக்கறை? அவர் வந்தால் உங்களுக்கென்னா? வராவிட்டால் உங்களுக்கென்ன? அது அவர் இஷ்டம்.. வாழ்வில் எல்லா விசயத்திலும் உங்களால் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பதில் சொல்லிவிட முடியுமா? பின் ஏன் ஒரு நடிகர் மட்டும் மிகவும் சென்சிடிவ்வான, ரிஸ்க்கான விசயத்தில் மட்டும் அப்படி ஒரு முடிவைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அப்படி அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னாலோ, வர மாட்டேன் என்றாலோ அதனால் யாருக்கு என்ன பயன்? நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் அவர்கள் அரசியலுக்கு வந்ததும் தீர்ந்து விடுமா, அல்லது அவர் வராவிட்டால் நாடே அழிந்துவிடுமா? பின் ஏன்யா ‘பதில் சொல், பதில் சொல்’ என்று அந்த மனிதரை துன்புறுத்துகிறீர்கள்?

என்னது, ரசிகர்களுக்காக இதையெல்லாம் கேட்கிறீர்களா? இதுவரை எந்த ரசிகனும் ரஜினியை நிர்பந்திக்கவில்லை உங்களைப் போல்.. எங்களுக்கு அவர் அரசியலுக்கு வந்தால் சந்தோசம், வராவிட்டால் ரொம்ப சந்தோசம் என்று தான் இருக்கிறோம்.. ஆனால் அது அவரின் சொந்த முடிவு.. நாங்களே கம்மென்று இருக்கும் போது உங்களுக்கு என்னய்யா எங்கள் மீது இவ்வளவு கரிசனம்?

சரி, அவர் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம், என்ன செய்யும் இந்த மீடியா? அப்போதும் எதையாவது ஆரம்பிப்பார்கள். “இதை முதலிலேயே செய்திருக்கலாம், கிட்டத்தட்ட 20 வருடங்களாக ரசிகர்களை ஏமாற்றி விட்டார்” என்று.. இல்லை, தெரியாமல் தான் கேட்கிறேன், ஒரு நடிகனின் உச்ச பட்ச நிலையே கட்சி ஆரம்பித்து தன் ரசிகர்களை தேர்தல் போஸ்டர் ஒட்ட வைக்கும் வேலைக்கு அனுப்புவது தானா? அல்லது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தேர்தலில் சீட் கொடுப்பதா? ரசிகனுக்காகக் கேள்வி கேட்கும் மீடியா முதலில் இதை விளக்க வேண்டும்.. ஒரு நடிகன் கட்சி ஆரம்பித்து, 35 வருடமாக தன் ரசிகன் என்கிற ஒரே தகுதியை மட்டும் உடைய, கொஞ்சம் கூட நிர்வாக அறிவே இல்லாத, ஒருவனுக்கு மந்திரி பதவி கொடுப்பதைத் தான் இந்த மீடியாக்கள் விரும்புகின்றனவா? இதைத் தான் “ரசிகனுக்காகக் கேட்கிறோம்” என்கிற பதம் மூலம் அவர்கள் சொல்ல வருகிறார்களா? மீடியாக்களுக்கு நாட்டின் முன்னேற்றத்தை விட பாலாபிசேகம் செய்யும் ரசிகன் ஒருவன் அதற்கு பிரதிபலனாக கட்சி போஸ்டிங்கோ, எம்.எல்.ஏ பதவியோ பெறுவது தான் முக்கியமா? அப்படியானால் ”ஜனநாயகத்தின் நான்காம் தூண் நாங்கள் தான்” என்று கம்பீரமாகக் கூறிக்கொள்ள இந்தக் கேடு கெட்ட மீடியாவிற்கு என்ன அருகதை இருக்கிறது?
மீடியாக்கள் மட்டும் இல்லை, இந்த தனிமனித மீடியாவான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரிலும் கூட ரஜினியை வைத்து தங்கள் புகழை வளர்க்கத் தான் பலரும் பயன்படுத்துகிறார்கள்.. அதுவும் இந்த ஃபேஸ்புக்கில் லைக் விழுகிறது என்கிற ஒரே காரணத்திற்காக, முந்தாநாள் வரை ரஜினி ரசிகனாக தன்னைக் காட்டிக்கொண்டவன் எல்லாம், ரஜினியை ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்குப் புகழ்ந்து எழுதியவன் எல்லாம் அவரைக் கிண்டலடித்து எழுதுகிறான்.. அவன் அன்று எழுதியதும் அவனின் சொந்த புகழ்ச்சிக்காக, லைக்குக்காக.. இன்று எழுதுவதும் அவனின் புகழ்ச்சிக்காக மட்டுமே.. இன்று அவனைக் கொண்டாடும் லூசுகள், அவன் ”முந்தாநேத்து ரஜினியை பற்றிப் புகழந்து எழுதியது ஏன்?” என்று கேட்க முடியாத அறிவிலிகளாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.. 

முதலில் ஒரு நடிகன் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதில் இவ்வளவு பெரிய debate ஏன் செய்ய வேண்டும்? அவர் ரசிகர்களை exploit செய்கிறார் என்கிறார்கள்.. யார் தான் யாரைத்தான் exploit செய்யவில்லை? பெற்றவர்கள் பிள்ளைகளைச் செய்யவில்லையா? அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களைச் செய்யவில்லையா? முதலாளி தொழிலாளியைச் செய்யவில்லையா? புருஷன் பொண்டாட்டியைச் செய்யவில்லையா? காதலி காதலனைச் செய்யவில்லையா? இவர்கள் எல்லாம் செய்வதால் ரஜினியும் தன் ரசிகர்களை exploit செய்வதைச் சரி என்று சொல்லவில்லை நான்.. அவர் செய்யும் exploitationஐ விட இந்த நாட்டில் மாற்றப்பட வேண்டிய பல exploitationகள் இருக்கின்றன.. மீடியாவும், திடுதிப் ஃபேஸ்புக் புரட்சிக்குஞ்சுகளும் முதலில் அதைப் பற்றியத் தங்கள் சமூக அக்கறையைக் காட்டட்டும்.. 

எம்ஜிஆர் காலத்திலேயே சினிமா என்னும் பொழுது போக்கு அம்சத்தை மக்களின் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் இரண்டறக் கலந்து விட்டதில் இந்த மீடியாவிற்குத் தான் பெரும்பங்கு இருக்கிறது.. இன்று வரை மக்களுக்குத் தேவையான செய்தியைக் கொடுக்காமல், நடிகைகளின் சதைகளையும், நடிகர்களின் கிசுகிசுக்களையும் நம்பி, மஞ்சள் பத்திரிகை போன்று டிஷ்யூ பேப்பருக்குக் கூட பயன்படாத, டைம் பாஸ் செய்வதற்காகப் பத்திரிகையை நடத்தும் யாருக்கும் ரஜினியைக் கேட்க அருகதை கிடையாது.. ரஜினியைக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்க முயலும் மீடியா, முதலில் தன்னை அங்கு நிறுத்திக்கொண்டு ஒரு சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்.. ஒவ்வொரு வாரமும் சினிமா ஸ்பெசல், ரஜினி ஸ்பெசல், என்று போட்டு தங்களில் சர்குலேசனைக் கூட்டி கல்லா கட்டுவதில் குறியாக இருக்கும் மீடியாக்கள், கொஞ்சமாவது மக்களுக்குத் தேவையான செய்தியை இனிமேலாவது கொடுக்கட்டும்.. விரைவில் லிங்கா விமர்சனம்... :)

வாட்ஸ் அப் அவசரங்களும் நாளேடுகளின் நொன்னாட்டியங்களும்...

Tuesday, November 18, 2014

சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் எழுத்தாளர் பாமரன் அவர்கள், தான் ’எப்படி படிப்படியாக ஒரு எழுத்தாளர் ஆனேன்?’ என்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.. ’தென்னமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகரில் இருந்து 217கிமீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருப்பவர் தான் ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்பவர். இவர் ஒரு நாள் தன் வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டிருக்கிறார்.. அவருக்கு எதுவுமே ஆகவில்லை.. இதை அவர் சொன்ன போது முதலில் யாரும் நம்பவில்லை என்றாலும் அவர் மீண்டும் மின்கம்பியைத் தொட்டுக்காட்டிய போது தான் நம்பியிருக்கிறார்கள்.. ஊரில் இருக்கும் ஒரு டிரான்ஸ்ஃபார்மரில் கூட அவருக்கு எதுவும் ஆகவில்லையாம்.. மருத்துவர்கள் அவரை சோதித்து விட்டு இதற்கான காரணம் தெரியாமல் மண்டையைக் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர்.. இப்போது அவரது கிராமத்தில் அவரை மின்சார மனிதன் என்று செல்லமாக அழைக்கிறார்கள்’ என்று ஒரு துணுக்கு எழுதி அதற்கு ‘மின்சார மனிதன்’ என்று தலைப்பிட்டு ஏதாவது ஒரு வாரப்பத்திரிகைக்கு அனுப்புவாராம்..

25,30 ஆண்டுகளுக்கு முன் துணுக்குச் செய்திகளுக்காகவே பல பத்திரிகைகள் வந்தனவே? அவற்றில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்புவாராம்.. ஒன்று பிரசுரிக்கவில்லை என்றால் இன்னொன்றுக்கு என்று வரிசையாக அனுப்புவாராம்.. ஏதாவது ஒன்றில் அவர் பெயர் போட்டு அதுவும் பிரசுரமாகி விடுமாம்.. உடனே ஊர் பூரா ”நான் எழுதுனது புக்ல வந்திருக்கு பாத்தியா?” என்று அதைக் காட்டி சந்தோசப்படுவாராம்.. இதில் என்ன விசேஷம் என்றால் அந்த ஃபெர்னாண்டோ ஹென்ரிக் என்று  ஒருவனோ, அவனுக்கு மின்சாரம் ஷாக் அடிக்காது என்பதோ எதுவும் உண்மை கிடையாது.. சும்மா கை போன போக்கில் எதையாவது எழுதி அனுப்புவாராம்.. அது பிரசுரம் ஆகிவிட்டால் போதுமாம்.. ஒரு முறை பிரசுரம் ஆனதும், அது கொடுத்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் இதே போல் லண்டனில் ஒரு கதை, ஆஸ்திரேலியாவில் ஒரு கதை என்று எதையாவது அனுப்பி தன் பெயரில் அவை பிரசுரம் ஆவதைப் பெருமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டாராம்..

ஒரு விசயம் உண்மையா, பொய்யா, நடந்ததா, இல்லையா என்பதை விட நம் பெயரில் அது வெளிவந்து அதை ஊர் முழுக்க, உலகம் முழுக்க தமிழ் தெரிந்த அனைவரும் வாசிப்பது ஒரு பெருமை தானே? புகழ்ச்சி தானே? போதை கொடுக்கும் தானே? அந்தப் பத்திரிகைகளிடமும் அவற்றையெல்லாம் உண்மை தானா என்று சரி பார்க்கும் அளவிற்கு அப்போது  தொழில்நுட்பமும் கிடையாது, நேரில் பார்த்து வர வசதியும் கிடையாது.. அதனால் பெயர் வந்தால் போதும் என்கிற எண்ணத்தில் எழுதும் பல துணுக்கு எழுத்தாளர்கள் அப்போது இருந்தார்கள் என்றார்.. பின் போகப்போக எப்படி  அதில் இருந்து தான் வெளிவந்து ஒரு சீரியஸ் ரைட்டர் ஆனேன் என்றும், அதில் அவர் பெற்ற கஷ்டங்களையும் கண் கலங்க குறிப்பிட்டார்.. ஆனால் அவர் சீரியஸ் ரைட்டர் ஆன கதை இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை.. அதனால் நமக்குத் தேவையானதை மட்டும் உறிந்து கொண்டு கட்டுரைக்குள் வருவோம்.. 

திரு.பாமரன் துணுக்கு மாதிரி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிய சங்கதிகள் உங்களுக்கு எதையாவது நினைவூட்டுகிறதா? இப்போதும் அது போல் எங்கேயோ நீங்கள் தினசரி பார்ப்பது போல், அனுபவிப்பது போல் உணர்கீறீர்கள் தானே? ஹ்ம் உண்மை தான், அன்றாடம் நாம் பார்க்கும் வாட்ஸ் அப் மெசேஜ்கள் தான் அவை.. மோடி சொன்னார், அவங்க டாடி சொன்னார், அப்துல் கலாம் சொன்னார், சார்லி சாப்ளின் சொன்னார் என்று வரும் அட்வைஸ்கள், பொன்மொழிகளில் இருந்து, ஐஏஎஸ் கேள்விகள் என்கிற லேபிலில் வரும் சப்பைக் கேள்விகளும், அன்றாட விசயங்களைப் பற்றிய பொது அறிவு என்று அனைத்தும் வருகின்றன இந்த வாட்ஸ்-அப்பில்.. ஆனால் அவற்றில் 90% பொய்யாக இருப்பது தான் இதில் இருக்கும் பெரிய கடுப்பு.. ஐஏஎஸ் செலெக்‌ஷன் கமிட்டில இருக்குற மாதிரி தினமும் ஒரு ஐஏஎஸ் கேள்வி கேக்குறாய்ங்க வாட்ஸ்-அப்ல.. கொடுமைடா சாமி.. அந்தக் கேள்விகள் தான் ஐஏஎஸ்சில் கேட்கப்படும் என்றால் எங்கள் மார்க்கஸ் கூட இன்று ஒரு ஜில்லா கலெக்டர் ஆகியிருக்கும்..

ஒரு காலத்தில் நாம் தகவல்கள் அறிந்து கொள்ள புத்தகங்களை மட்டும் தான் நம்பிக்கொண்டிருந்தோம்.. 25 வருடத்திற்கு முன் ”பிரேசில் கிராமத்தில் ஒருவனுக்கு மின்சாரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, அவன் மின்சார மனிதன் என்று அழைக்கப்பட்டான்” என்கிற செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டால் நாம் நம்பிக்கொண்டும், அதை பிறரிடம் ஆச்சரியமாகக் கூறிக்கொண்டும் தான் இருந்திருப்போம், வேறு வழி இல்லை.. ஏனென்றால் அன்றையக் கால சூழல் அப்படி.. ஆனாலும் அப்போது சில அன்றாட, முக்கியமான விசயங்களை எந்த பத்திரிகையும் பொறுப்பில்லாமல் பொய்யாகத் தந்ததில்லை என்றே கணிக்கிறேன் என் ஞாபகத்திற்கு எட்டிய வரை..

இப்போது நாம் இருப்பதோ தொழில்நுட்ப யுகம்.. உலகமே உள்ளங்கையில் வந்துவிட்டது.. நமக்குப் பிடித்த பாடலின் வரி மறந்து விட்டால் அதை தெரிந்து கொள்வதில் இருந்து, சமையல் ரெசிப்பி, பள்ளிக்கூட எதிரி, கல்லூரி நண்பன், நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, சினிமா, அரசியல் என்று எதையும் செல்ஃபோனில் பார்த்துவிடலாம்.. ஒரு தகவல் உண்மையா பொய்யா என்று நொடியில் தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளத் தான் நாம் முயல்வதே இல்லை; சோம்பேறித்தனம்.. அதற்கு பல உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.. கீழே நான் கொடுத்திருக்கும், எனக்கு வந்திருந்த சில வாட்ஸ்-அப் மெசேஜ்களைப் பாருங்கள், உங்களுக்கும் அவை வந்திருக்கலாம்..

1. ”இன்றில் இருந்து ஒரு வாரத்திற்கு இந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.. அப்படி செய்தால் எண்ணி ஏழாவது நாளில் 12 மணி அடிக்கும் போது இந்தியா வல்லரசாகி விடும்.. ஒரு ரூ = ஒரு $ ஆகிவிடும்.. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? தேச பக்தி இருக்கும் எவனும் இதைச் செய்வான்” என்று செண்டிமெண்ட்டாக ட்ச் செய்து கீழே எதெது இந்தியப் பொருள், எதெது அந்நியப் பொருள் என்று பெரிய லிஸ்டே இருக்கும்..

2. கையில் தீக்காயம் பட்டுவிட்டால் தண்ணீர் ஊற்றுவதோ, துணியால் சுற்றி அணைப்பதோ கூட சமயங்களில் காயத்தை பெரிதாக்கலாம்.. வீட்டில் மாவு இருந்தால் தீக்காயத்தில் அதைக்கொட்டுங்கள்.. இது ஒரு வியட்நாம் மருத்துவ முறை.. காயத்தில் தொடர்ந்து போட்டு வந்தால் தழும்பே கூட மறைந்து விடும்.. என் ஒன்று விட்ட சித்தப்பாவின் மருமகனின் பெரியம்மா பெண் இப்படித்தான் செய்தாள்.. இப்போது அவள் கையில் தீப்பட்ட சுவடே இல்லை..

3. நீங்கள் ஸ்விஸ் பேங்கில் போட மறந்து போய், பாழாய்ப் போன இந்திய நாட்டு வங்கியில் போட்ட உங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்மில் நடு இரவில் நிற்கிறீர்கள்.. அப்போது எவனோ ஒருவன் உங்களை கத்தியை வைத்து மிரட்டுகிறான் உங்கள் காசையெல்லாம் கொடுக்கச்சொல்லி.. உடனே நீங்கள் பயப்படாமல், ஆழமாக உங்கள் மூச்சை இழுத்துக்கொண்டு, தீர்க்கமான முடிவுடன் உங்கள் பின் நம்பரை தலைகீழாக டைப் செய்யுங்கள்.. ஏற்கனவே ஏடிஎம்முடன் கல்யாணம் செய்து வைக்கப்பட்டிருக்கும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உங்கள் ஏடிஎம்மிற்கு அந்த நட்டநடு ராத்திரியிலும் போலீஸ் விரைந்து வந்து, சடுதியில் செயல்பட்டு அந்தத் திருடனைப் பிடித்து விடுவார்கள்..

4. ஃப்ரூட்டி கம்பெனியில் எய்ட்ஸ் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு கிறுக்கன், எய்ட்ஸ் கிருமி இருக்கும் அவன் ரத்தத்தை ஃப்ரூட்டியில் கலந்து விட்டான்.. அதனால் யாரும் ஃப்ரூட்டி குடிக்காதீர்கள்..

போதும் உதாரணம் என்று நினைக்கிறேன்.. இவை அனைத்தும் உங்களுக்கும் வந்திருக்கிறது தானே? மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், இதில் எத்தனையை நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் ஃபார்வேர்டு செய்தீர்கள்? இது அத்தனையுமே பொய்.. வீட்டின் வரவு செலவு கணக்கைப் பார்க்கும், லேசான common sense இருக்கும் ஒருவனே சொல்லிவிடுவான் முதல் விசயம் சத்தியமாக சாத்தியம் இல்லை என்று.. அதிலும் 100% இந்தியப் பொருள் என்று எதையும் இன்றைய LPG பொருளாதாரத்தில் சொல்லிவிட முடியாது.. கடைசி விசயமும் அப்படித்தான்.. எய்ட்ஸ் கிருமி இப்படியெல்லாம் எளிதாக பரப்பப்பட வாய்ப்பில்லை என்கிற சிறிய பொது அறிவு போதும்.. ஆனாலும் ஃப்ரூட்டி குடிக்காமல் இருப்பது நல்லது தான் என்பதால் ஒரு வகையில் அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் மற்ற விசயங்களின் சீரியஸ்னஸ் தெரியாமல் ஃபார்வேர்டு செய்தால் அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்..

நிஜமாகவே தீக்காயம் பட்ட ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் போகாமல் கையில் மாவை மட்டும் போட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? செப்டிக் ஆகி கையையே எடுக்க வேண்டியது தான்.. தீப்புண்ணிற்கு கையில் மாவு போடுவது சரியான முறை அல்ல என்பது கூகிளில் நீங்கள் அரை குறையாகத் தேடினாலே பதில் தெளிவாகக் கிடைத்துவிடும்.. அடுத்தது ஏடிஎம் விசயம்.. அந்த மெசேஜில் சொன்ன பாயிண்ட் சரி என்றே வைத்துக்கொள்வோம்.. எனது பின் நம்பர் 2222, அல்லது 7887 என்றோ இருந்தால் நான் என்ன செய்வது? சரி ரேண்டமாக 2591 என்கிற நம்பர் இருக்கும் ஒருவன் ஏடிஎம்மில் ஒரு திருடனிடம் மாட்டிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் உங்களைப் போன்ற ஒரு சமூக சேவகர் அனுப்பிய செய்தியை உண்மை என்று நம்பி, 1952 என்று தலைகீழாக அடித்துவிட்டு போலீசுக்காக காத்திருந்து கத்திக்குத்து பட்டு செத்துப்போனால் என்ன செய்வீர்கள்? மறுநாள் அதையும் வாட்ஸ்-அப்பில் அனுப்புவோம், அபப்டித்தானே? ஒரு செய்தியை, அதுவும் பின்விளைவுகள் மோசமாக ஏற்படும் சாத்தியம் உள்ள செய்தியைப் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை சோதிக்க வேண்டும் என்கிற அக்கறை கிஞ்சித்தும் நமக்கு இல்லையே?.. 

ஃபேஸ்புக்கும் வாட்ஸ்-அப்பும் நம் ஒவ்வொருவரையும் ஒரு மீடியாவாக மாற்றியிருக்கிறது.. நம் கருத்துக்களைப் படைக்கிறோம், சினிமா, அரசியலைப் பகடி செய்கிறோம்.. பத்திரிகைகள், செய்திச்சேனல்கள் போல் நாமும் ஹாட் நியூஸை முதன் ஆளாகக் கொடுக்க பதைபதைக்கிறோம்.. பந்தாவாக ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கி, 3G நெட் பேக் எல்லாம் போட்டுக்கொண்டு, வருபவர் போகிறவருக்கெல்லாம் வாட்ஸ்-அப் நம்பர் கொடுத்து, ஊர் ஞாயம் உலக ஞாயம் பேசும் நமக்கு, அதில் வரும் செய்தியின் உண்மைத் தன்மையை கூகிளில் 5நிமிடம் தேட மட்டும் கறி வலிக்கிறது.. ஒரு செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை, ஏன் சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும் என்பதில் காட்டுவதில்லை? 

சமீபத்தில் என் தோழி ஒருத்தி ஒரு அழகான பெண்ணின் ஃபோட்டோவையும், ஒரு வாய்ஸ் மெசேஜையும் வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருந்தாள். அந்த அழகான பெண் வீட்டிற்கு கேஸ் ரிப்பேர் செய்ய வருவது போல் வந்து, மயக்க மருந்து கொடுத்து, வீட்டில் இருக்கும் சாமான்களைத் திருடி விடுவாள் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருந்தது.. அந்தப் பெண் அந்த ஃபோட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதத்திலேயே தெரிந்தது அது அவள் வீட்டிலோ, அல்லது அவளுக்கு பழக்கமான இடத்திலோ யாரோ எடுத்த ஃபோட்டோ என்று.. அவள் கொடுக்கும் போஸிற்கும் அந்த செய்திக்கும் சம்பந்தம் இல்லை. என் தோழிக்கும் இதைச் சொன்னேன், “உண்மையை அறியாமல் பகிராதே” என்று.. “எதா இருந்தா உனக்கென்ன? பிடிச்சா ஃபார்வேர்டு பண்ணு, இல்லாட்டி டெலிட் பண்ணு” என்றாள்.. “உன் ஃபோட்டோவ போட்டு ஃபார்வேர்டு பண்ணவா?” என்றேன்.. கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.. மறுநாள் தினகரனில் அந்தப்பெண்ணின் ஃபோட்டோவைப் போட்டு அந்த வாய்ஸ் மெசேஜ் செய்தியை அப்படியே போட்டிருந்தார்கள். உடனே என் தோழி என்னை அழைத்து, “நேத்து பெரிய வெண்ண மாதிரி சொன்ன? இன்னைக்கு பாரு பேப்பர்லயே போட்டிருக்கான்” என்று அதை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்பினாள்.. 

அடுத்த இரண்டு நாளில் பார்த்தால் அது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. அந்தப் பெண் பாவம் எங்கோ வடநாட்டில் கேஸ் கம்பெனியில் வேலை செய்பவள். உடன் வேலை செய்யும் எவனோ ஒருவன், ஏதோ ஒரு சொந்தக் காரணத்தால் அவள் ஃபோட்டோவைப் போட்டு வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறான் என்று பின்பு தான் தெரிய வந்திருக்கிறது.. அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? சரி நாம் தான் கூறுகெட்ட பாமர மக்கள், இந்த மீடியாவுக்கு என்னவாம்? ஒரு செய்தியைப் போடும் முன் ஆராய மாட்டார்களா, அது உண்மையா இல்லையா என்று? மாட்டார்கள்.. அவர்களுக்கு அன்னன்னைக்கு செய்தி வேண்டும். அது சரியோ தவறோ ஒரு ஹாட் நியூஸ் வேண்டும்.. கிடைத்ததைப் போடுவார்கள், மறுநாள் மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.. ஒருவர் தன் கையில் இரட்டை விரல்களைக் காட்டியதை மட்டும் வைத்தே, ஜெ.வுக்கு ஜாமீன் என்று அனைத்து ஆன்லைன் செய்தி நிறுவனங்களும், செய்திச் சேனல்களும் ஸ்க்ரோலிங் ஓட்டவில்லையா? அதற்கு எத்தனை சேனல்கள் மன்னிப்பு கேட்டன? மக்களாகிய நாமும் இதை மறுநாள் மறந்துவிடுவோம்.. ஞாபம் இருந்தாலும் கேட்க நமக்கென்ன அருகதை இருக்கிறது? நாமும் ஏடிஎம், மாவு, ஃப்ரூட்டி, என்று கண்டதையும் கிறுக்குத்தனமாக அவர்களைப் போல் பகிர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்? செய்தி நிறுவங்கள் பற்றி நான் சொன்னது ஒரு பானைச் சோறு தான், அதுவும் பழைய சோறு.. சுடு சோறு ஒன்றைக் கேளுங்கள், இன்டர்நேஷன்ல் லெவலில் நம் செய்தி நிறுவனங்கள் நாறிய கதை அது..

கேரளத்தைச் சேர்ந்த அருண் என்னும் நபர் நம் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார்.. அதாவது தனக்கு நாசாவில் ETயைப் பற்றி, அதாவது வேற்று கிரக ஜீவராசிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அழைப்பு வந்திருப்பதாகவும், அதே நேரத்தில் உலகப்புகழ் பெற்ற MITயில் இருந்தும் டாக்ட்ரேட் படிப்புக்கான வாய்ப்பு வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.. இது நடந்தது 2012 ஆகஸ்டில்.. கேரள சேனல்களும், மாத்ருபூமியும், The Hindu, The New Indian Express, Telegraph போன்ற ஆங்கில நாளேடுகளும் கவர் ஸ்டோரிகளாகப் போட்டுத் தள்ளின.. இவரின் பேட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு ஒவ்வொரு நாளேடுகளிலும் வந்தன.. இதை எல்லாம் உண்மை என்று நம்பிய மத்திய மனிதவள மேம்பாட்டு மையமும் அந்தப் பையனுக்கு பாராட்டு விழா நடத்தியது.. அவனும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூலமாக, தான் பிரதமர் மோடியை சந்தித்து அரைமணிநேரம் உரையாடியதாகவும், தேசத்தின் ஆராய்ச்சிக்கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்தே இருப்பதாக மோடி சொல்லியிருப்பதாகவும் கப்சா விட்டிருக்கிறான்.. நம் மீடியாக்களும் டைமிங்காக, ரைமிங்காக அவனைப் பற்றிய கட்டுரைகளைப் போட்டுத் தள்ளயிருக்கின்றன.. இரண்டு வருடங்கள் இதே சங்கதி ஓடிக்கொண்டிருந்தன கடந்த அக்டோபர் வரை..

கடைசியில் MITயில் இருக்கும் சில மலையாளிகள் மூலம் விசாரித்த போது அவனுக்கும் MITக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்திருக்கிறது.. நாசாவிலும் இந்தப் பையனைத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.. பின் இவன் யாரென்று தேடிப்பிடித்து விசாரித்தால் இவன் சிறுவயதிலேயே அமெரிக்கா செல்லும் ஆசையில் இருந்தவனாம்... நண்பர்கள் எல்லாரும் வெளிநாடு செல்வதால், ஒரு வித ஏக்கத்தில் தானும் அப்படி கப்சா விட்டானாம்.. அவன் கப்சாவை எல்லாம் உண்மை என்று நம்பிய நம் நான்காம் தூண்களாக பத்திரிகைகள் அதை அச்சில் ஏற்றினவாம், இந்த ஜனங்கள் நாம் எதைச் செய்தி என்று கொடுத்தாலும் படிப்பார்கள் என்று.. ஆனால் அவனோ பூடானில் ஒரு கல்லூரியில் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான்.. நாசா, MIT, ராஜ்நாத் சிங், மோடி சந்திப்பு எல்லாமே அவன் கச்சிதமாகச் சொன்ன பொய்கள்.. 

உலகம் முழுக்க செய்தி சேகரிப்பாளர்களை வைத்திருக்கும் இன்றைய நவீன நாளேடுகள் கூட எதனால் கோட்டை விட்டன? லேசான ஒரு விசாரணை செய்திருந்தாலே இவன் ஒரு ஃப்ராடு என்று தெரிந்திருக்குமே? ஏன் செய்யவில்லை? அவசரம், எல்லாம் அவசரம்.. செய்தியை நான் தான் முதலில் தருவேன் என்கிற அவசரம், என் செய்தி வெப்சைட்டில் தான் ஸ்க்ரோலிங் முதலில் ஓட வேண்டும் என்கிற அவசரம், நான் தான் இந்தியாவின் இந்த அறிவாளியை முதன் முதலாகப் படம் பிடித்து பேட்டி எடுத்தேன் என்று தண்டோரா போட அவசரம்.. ஆனால் இப்போது என்ன நடந்தது? அவனை வாழ்த்திய அனைத்து பத்திரிகைகளும் என்ன செய்வதென்று தெரியாமல், இப்போது மூடிக்கொண்டு இருக்கின்றன.. அப்போது சுடச்சுட செய்தி கொடுக்க முடியாத Deccan Chronicle, BBC, மனோரமா போன்றவைகள் இப்போது வரிந்து கட்டிக்கொண்டு அவன் ஃப்ராடுத்தனத்தை கிழிக்கின்றன.. இப்போது சுடச்சுட செய்தியும் ஸ்கோரிலிங்கும் போட அவர்களுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது..

இது தான் இன்றைய நிதர்சனம்.. எந்த ஒரு விசயத்தையும் நிறுத்தி, நிதானமாகப் பார்த்து, ஆராய்ந்து செல்வதற்கெல்லாம் யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லை.. அந்த விசயம் சரி என்றால் கொண்டாட்டம், தவறு என்றால் ஒரே ஒரு சாரி.. அவ்வளவு தான்.. அறிவியலும் முன்னேற்றமும் தரத்தைக் காவு வாங்கிக்கொண்டன.. தரத்தை விட ஜிகினா வேலைகள் தான் பெரியது என்கிற பிம்பத்தை உருவாக்கி விட்டன.. அதற்கான உதாரணங்கள் தான் நமது வாட்ஸ்-அப் மெசேஜ்களும், நான் மேலே சொன்ன நம் நாளிதழ்கள் மற்றும் செய்திச்சேனலகளின் லட்சணங்களும்.. ஹாட் நியூஸைத் தரத்துடிக்கும் பத்திரிகைகள் எதற்குமே பெஸ்ட் நியூஸைத் தர வேண்டும் என்கிற அக்கறைக் கொஞ்சம் கூட இல்லை.. இந்த லட்சணத்தில் இருக்கும் இவர்கள் தான் தங்களைத் தாங்களே நான்காம் தூண் என்று பெருமையாக அழைத்துக்கொள்கிறார்கள்..

சரி அவர்களுக்குத் தான் அக்கறை இல்லை.. ஒரு மனிதனாக சக மனிதன் மேல் அக்கறைக் கொண்ட நாமாவது இனி அக்கறையாக இருப்போம்.. நமக்கு வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பிறரிடம் பகிர்வோம்.. இனி மெசேஜை ஃபார்வேர்டு செய்யும் முன் கூகிள் ஆண்டவரை ஒரு முறை தரிசித்து விட்டு ஃபார்வேர்டு செய்யுங்கள்.. இங்கே பாருங்கள் நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் எனக்கு வந்திருக்கும் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் இது.. ”044-40504050 என்னும் நம்பருக்கு நீங்க ஃபோன் பண்ணுனா உங்க நம்பருக்கு 3G டேட்டா கார்டு 1GB கொடுக்கிறார்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த ஆஃபர்.. நேரத்தை வீணாக்காமல் வேகமாகக் கால் செய்..” அடப்பாவிகளா டேய் அது அமேசான் காட்டை அழிக்கும் எர்வாமேட்டின் காரனோட நம்பர்டா.. ஃபோன் கீன் பண்ணித் தொலஞ்சிறாதீங்க.. உங்கள ஜென்மத்துக்கும் தூங்க விட மாட்டாய்ங்க.. 

எத்தனை சிவகாசிக்காரன் வந்தாலும் உங்களைத் திருத்தவே முடியாது போலயே....

ஏழ்மையில் உழலும் வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்...

Tuesday, November 4, 2014

வரும் 12ம் தேதி ஊதிய உயர்வு, வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை போன்ற “ஞாயமான” (!!!!!) கோரிக்கைகளை ஏற்கக்கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம்.. ஏற்கனவே இந்த வருட ஆரம்பத்தில் இதே போல் அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உங்களுக்கு ஞாபம் இருக்கலாம்.. 

சரி எதற்கு சம்பளம் கூட்டிக் கொடுக்க வேண்டுமாம்? ஒழுங்காக வேலை செய்யும் ஆட்களுக்கு கொடுக்கலாம்.. எந்த அரசு வங்கியில் வேலையும், வாடிக்கையாளர் சேவையும் உருப்படியாக இருக்கிறது? ஸ்டேட் பேங்க்கை தவிர்த்து உருப்படியாக ஒரு வங்கியும் கிடையாது.. ஹ்ம் கொஞ்சம் அப்படியே உங்கள் மனதில் ஒரு அரசு வங்கிக்குள் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்..

ஜூம் செய்யப்பட்ட ஒரு விஏஓ அலுவலகம் போல எங்கும் பேப்பராக நிறைந்து, எல்லோரும் ஒரு வித உர் முகத்துடன் உட்கார்ந்து கொண்டு, தரையில் காகிதங்கள் பரவி, நத்தையை ஜெயிக்க வைக்கும் வேகத்தில் வரிசை நகர்ந்து கொண்டு, எரிந்து விழும் கேஷ் கவுண்டர்கள் என்று அது ஒரு விதமான கெட்ட கனவின் பிறப்பிடம்.. இன்று ஒரு சாதாரண மனிதனிடம் கேளுங்கள் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்க ஆசை என.. அவன் வாயில் இருந்து வரும் முதல் இரண்டு பெயர்கள் தனியார் வங்கிகளாகத் தான் இருக்கும்.. அரசு வங்கிகளில் தொடங்கப்படும் புதிய சேமிப்புக் கணக்குகள் கூட பெரும்பாலும் பிஎஃப், மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அரசு சார்ந்த விசயங்களுக்காக அரசு மூலம் ஆரம்பிக்கப்படும் கணக்குகள் தான்.. அதில் பணம் போட/எடுக்க செல்லும் மக்களைக் கூட ”ஏய் இந்தா இங்க வா...” “சும்மா ஏன் தொனத்தொனன்னு நச்சரிக்குற? பேசாம அங்க போய் ஒக்காரு போ..” “இப்படி அடிக்கடி தொந்தரவு பண்ணுனா நாளைக்குத் தான் காசைக் கொடுப்பேன்” என ஏதோ ஐந்தறிவு ஜீவன் போல் நடத்துவார்கள் நம் அரசு வங்கிகளில்.. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க வேண்டுமானால் ஏதாவது கிராமத்து வங்கிக்குப் போய்ப் பாருங்கள்..

சரி இதையெல்லாம் விடுங்கள், உங்கள் கணக்கில் பணம் போட ஒரு அரசு வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது? அதுவே தனியார் வங்கியில் எவ்வளவு நேரம் ஆகிறது என்று பாருங்கள்.. எனது டீலர்கள் பலரும் NEFT/RTGS முறையில் பணம் கட்டுபவர்கள் தான்.. பல கிராமங்களில் இருக்கும் 30 வருட, 35 வருட பேங்க் அனுபவஸ்த மேனேஜர்களுக்கு கூட அப்படியென்றால் என்னவென்றே தெரியாது.. சொகுசாக கிராமத்தில் வந்து காதைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.. அட அந்த வங்கியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஆட்களைக் கூட நாய் போல் குரைக்க வைத்து, வாடிக்கையாளரிடம் எரிந்து விழ வைத்து, அசமந்தமாக வேலை பார்க்க வைத்து கெடுத்து விடுவார்கள்.. இரண்டும் கிழட்டு மேனேஜர்களுக்கு நான் சொல்லிக்கொடுத்தேன் RTGS எப்படி அனுப்புவது என்று.. அதைக் கற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பது அவர்கள் என்னிடம் பேசிய விதத்திலேயே புரிந்தது. “இவன் எப்படா பிரான்ச்ல இருந்து கெளம்புவான்?” என்பது போலேயே முறைத்துக்கொண்டிருந்தார்கள்..

நான் ஏதோ அரசு வங்கிகள் மீது அபாண்டமாகப் பழி போடுவது போல் நினைக்காதீர்கள்.. கிராமங்களில் இருக்கும் அரசு வங்கிகளைக் கண்கூடாகப் பார்ப்பதால், அடிக்கடி அதன் பிரச்சனைகளை அனுபவிப்பதால் தான் இதைச்சொல்கிறேன்.. ஒரு சில நல்ல கிளைகளும் மேனேஜர்களும் ஊழியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் பொதுவாக அரசு வங்கி என்பது நான் சொல்வது போல் தான் இருக்கிறது.. ஒரு ஸ்ட்ரைக் செய்வதற்கு ஒன்றாகக் கூடி விடும் இவர்கள், என்றாவது இந்த அக்கறையை வேலை செய்வதில் காட்டியிருக்கிறார்களா? மொத்தமாக கம்ப்யூட்டர் கிளாஸ் போவோம், ஏதாவது பேங்கிங் சம்பந்தமான கோர்ஸை மொத்தமாகப் படிப்போம் என்று ஒன்று சேர்ந்திருக்கிறார்களா? ஆனால் ஸ்ட்ரைக் என்றால் வந்துவிடுவார்கள் முதல் ஆளாக.. ஒரு கவுண்ட்டரில் இருக்கும் ஊழியர் ஏதாவது வேலையாகக் கொஞ்ச நேரம் வெளியே சென்று விட்டால், அங்கு நின்று கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை தன் கவுண்ட்டருக்குள் அனுமதிக்காமல், அவர் வரும் வரை காத்திருக்க வைக்கும் வங்கி ஊழியர்கள் தானே இங்கு அதிகம்? தனியார் வங்கிகள் எல்லாம் வரவில்லை என்றால் இவர்களின் வேலை இதை விட மோசமாக இருந்திருக்கும்.. சரி இப்போது எதற்கு இவர்களுக்கு சம்பள உயர்வு? வங்கியில் என்ன குறையாகவா சம்பளம் கொடுக்கப்படுகிறது? 

முதலில் ஒரு விசயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.. உடல் உழைப்பு அல்லாத பிற வேலைகளை அளவிட முடியாது.. அதாவது ஒரு லோடுமேன் இத்தனை மூட்டை சுமந்திருக்கிறான் என கணக்கிட முடியும்.. அதை வைத்து அவன் உழைப்பிற்குக் கூலி கொடுக்க முடியும்.. அதுவே ஒரு software engineer இத்தனை வேலை செய்திருக்கிறான் என்று அளவிட முடியாது.. அதனால் இங்கு அவனின் உழைப்பை அளவிட்டு கூலி கொடுக்க முடியாது, ஆனால் அவன் தகுதிக்கு கூலி கொடுக்க முடியும்.. So, உடல் உழைப்பை அளவிட முடிந்த வேலைகளுக்கு உழைப்பிற்கு ஏற்றபடியும், புத்தியைப் பயன்படுத்தும் வேலைக்கு அவனின் தகுதிக்கு ஏற்பவும் கூலி கிடைக்கும்.. அதாவது இந்த இடத்தில் BE என்னும் தகுதிக்கு.. இதில் வங்கி வேலை என்பது இரண்டாவது ரகம்.. இங்கு உங்கள் வேலை உங்கள் அறிவைச் சார்ந்து இருக்கிறது.. உடல் உழைப்பு தேவைப்படும் வேலையில் அதிகம் சம்பாதிக்க வேண்டுமானால் உங்கள் உடல் அதிகம் உழைக்க வேண்டும்.. அதாவது தினமும் 100மூட்டை சுமக்கும் லோடுமேன் 120 மூட்டை சுமந்தால் அவனால் அதிகம் சம்பாதிக்க முடியும்.. அவனுக்கு உடல் தான் மூலதனம், அதனால் அதை அவன் அதிகம் உழைப்பதற்கு ஏற்றவாறு பராமரிக்க வேண்டும்.. அதே போல் புத்தியை பயன்படுத்தி வேலை செய்பவன் அதிகம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்? தன் புத்தியை, தன் திறமையை அதிகம் வளர்க்க வேண்டும்...

இரண்டு software engineerகள் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சேரும் போது அவர்களுக்கு அந்த BE என்னும் தகுதிக்கு ஏற்ப 15000ரூ சம்பளம் தரப்படுகிறது.. இருவரில் ஒருவன் அவன் வேலைக்கு என்ன என்னவெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் தானாக கற்றுக்கொள்கிறான்.. அனைத்து வேலைகளையும் உடனுக்குடன் முடிக்கிறான்.. அப்பப்போ update ஆகும் தன் வேலை சம்பந்தமான சமாச்சாரங்களயும் தெரிந்து வைத்துக்கொள்கிறான்.. அந்த இன்னொரு ஆள் இருக்கானே அவன், மாசாமாசம் சம்பளம் வாங்கிக்கொண்டு, கேண்டினுக்கும், ரெஸ்ட் ரூமுக்கும், அலைந்து கொண்டு ஒரு வேலையும் பார்க்காமல், வேலைக்குத் தேவையான தன் தகுதியையும் வளர்த்துக்கொள்ளாமல் அப்படியே இருக்கிறான்.. ஒரு வருடம் முடிகிறது.. சம்பளம் யாருக்குமே கூட்டவில்லை.. வேலை செய்தவனுக்கும் கூட்டவில்லை.. செய்யாதவனுக்கும் கூட்டவில்லை.. இதில் வேலை செய்தவனை விட செய்யாதவனுக்குத் தான் கடுப்பு அதிகம்.. வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறான்.. ”சம்பள உயர்வு வேண்டும், நான் காலை 8மணியில் இருந்து மாலை 8 மணி வரை நாயாக அலுவலகத்தில் இருக்கிறேன், எனக்கு ஏன் சம்பளம் கூட்டவில்லை?” என பொங்குகிறான்.. ஒழுங்காக வேலை பார்த்து தன் திறமையை வளர்த்துக்கொண்டவனோ ‘இங்கு இல்லையா, என் திறமைக்கு இன்னொரு இடம் இருக்கும்’ என்று இன்னொரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் 30000 ரூபாய் சம்பளத்திற்கு.. அந்த அறிவை வளார்த்துக்கொள்ளவே விரும்பாத ஆள் சம்பள உயர்வு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறான்.. இது software என்றில்லை, நான் இருக்கும் சேல்ஸ் வேலைக்கும், ஆசிரியர் வேலைக்கும், குமாஸ்தா வேலைக்கும் கூட இது பொருந்தும்.. உங்கள் ஆரம்ப சம்பளம் தகுதியை வைத்தும், அடுத்தடுத்த சம்பள உயர்வு உங்கள் updation மற்றும் வேலை சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்வதை வைத்தும் இருக்கும்.. இப்போது இதே இடத்தில் வங்கி ஊழியர்களை வைத்துப் பாருங்கள்..

அரசு வங்கியில் வேலைக்கு சேரும் நான் அரசு உத்தியோகம் கிடைத்து விட்ட சந்தோசத்தில் செக்கு மாடு மாதிரி பணத்தை எண்ணவும், சீல் குத்தவும், கையெழுத்துப் போடவும் நன்றாகக் கற்றுக்கொண்டேன்.. காலம் பூராவும் இதே வேலை தான்.. ஏதாவது ப்ரொமோசன் கிடைத்தால் லோன் அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போடுவேன்.. அவ்வளவு தான்.. இந்த வேலைக்கு எனக்கு வருடத்திற்கு 1000ரூ ஊதிய உயர்வு போதாதா? இன்று ஒரு அரசு வங்கியில் நீங்கள் கிளர்க் வேலைக்கு சேர்ந்தால் குறைந்த பட்சம் 16000ரூபாய் சம்பளம்.. ஒவ்வொரு வருடமும் 1000ரூபாய் உயர்வு இருக்கும்.. ஆஃபிசராக சேர்ந்தால் 25000ரூபாய் சம்பளம், இரண்டாயிரம் ரூபாய் வருடாவருடம் ஊதிய உயர்வு இருக்கும்.. அனுபவத்திற்கு ஏற்ப இந்த ஊதிய உயர்வு வேறுபடும்..  அது போக அந்த அலவன்ஸ், இந்த அலவன்ஸ், லோன் சலுகைகள் என்று வேறு பலவும் இருக்கும்.. இதற்கு மேல் என்ன வேண்டும் இந்த வங்கி ஊழியர்களுக்கு? ஏன் ஸ்ட்ரைக் செய்கிறார்கள்?

ஐயா வங்கி ஊழியர்களே, நீங்கள் வங்கியில் வேலைக்குச் சேரும் போது இவ்வளவு தான் சம்பளம் என்று தெரிந்து தான் சேர்கிறீர்கள்.. வாரத்தில் 6 நாட்களும் வேலை இருக்கும் என்பதும் தெரியும் தானே? வருடத்திற்கு இவ்வளவு தான் increment இருக்கும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. எல்லாம் தெரிந்து தான் வேலைக்குச் சேர்கிறீர்கள்.. பின் எதற்கு வேலைக்கு சேர்ந்த பின் மட்டும் ஸ்ட்ரைக் செய்ய வேண்டும்? ஒன்று இவ்வளவு கஷ்டமான வேலைக்கு வந்திருக்கவே கூடாது.. சரி வந்துவிட்டீர்கள், இந்த வேலை பிடிக்கா விட்டால் வேறு வேலைக்கு போக வேண்டியது தானே? அதையும் செய்யாமல் ஏன் ஸ்ட்ரைக் செய்கிறீர்கள்? ஏனென்றால் உங்களால் வேறு வேலைக்குப் போக முடியாது.. ஒரு கல்லூரி lecturer மாதிரியோ, மென்பொருள் வல்லுநர் மாதிரியோ, சேல்ஸ் ஆட்கள் மாதிரியோ உங்கள் திறமையை வளர்த்திருந்தால் எங்காவது செல்லலாம்.. ஆனால் நீங்கள் தான் ஒரே இடத்தில் கடிவாளம் கட்டிய குதிரை போல் அல்லவா உட்கார்ந்து விட்டீர்கள்? கம்யூட்டர் தெரியாது, கஸ்டமர் சர்வீஸ் தெரியாது, எந்த விதமான up-gradationஐயும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்காது.. பின் எந்த தைரியத்தில் ஊதிய உயர்வை மட்டும் எதிர்பார்க்கிறீர்கள்? 

உங்கள் வேலை கம்ப்யூட்டர் வந்த பின் பாதியாக குறைந்து விட்டது சார்.. ஏடிஎம் மிஷின் வைத்து விட்டீர்கள்.. ஆன்லைன் பேங்கிங் கொண்டு வந்துவிட்டீர்கள்.. உங்கள் வேலையே பாதியாகக் குறைந்த பின் சம்பளம் மட்டும் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும்? வங்கியில் வேலை பார்க்கும் ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப்பேசினேன்.. பணம் எண்ணுவதில் வரும் தவறு, லோன் கொடுப்பதில் நேரும் தவறுகள் என்று வங்கி வேலையில் அதிகம் ”ரிஸ்க்” (!!!!) இருப்பதால் ஊதிய உயர்வு வேண்டும் என்றார்.. அதை விட அவர் சொன்ன இன்னொரு விசயம், மத்திய அரசு ஊழியர்களுக்கு எல்லாம் சம்பளம் ஜாஸ்தியாம்.. அதனால் அதை ஈடுகட்டும் வகையில் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம்.. நல்ல வேளை எம்பி, எம்.எல்.ஏ சம்பளத்தோடு எல்லாம் அவர் போட்டி போடவில்லை என்று சந்தோசப்பட்டுக்கொண்டேன்.. 

நம்மில் பெரும்பாலானவர்கள் நம் அன்றாட வேலையையே ஏதோ பெரிய சாதனை போல் நினைத்துக்கொள்கிறோம்.. அதற்கு சரியான உதாரணம் தான் நண்பர் சொன்ன ”ரிஸ்க்”.. ஏன்யா பணத்தை கவனமாக எண்ணுவதும், சரியான ஆளுக்கு லோன் கொடுத்து அதை ஒழுங்காக வாங்குவதும் தானே உங்கள் வேலை? என்னமோ அதை பெரிய ரிஸ்க் என்கிறீர்கள்? உங்களின் அந்த வேலைக்குத் தானே சம்பளம் வருகிறது? உங்கள் வேலையில் என்ன விதமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறீர்கள் என்று சம்பளம் அதிகம் கோருகிறீர்கள்? அடுத்த விசயம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் பற்றி.. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் இருப்பார்களா இந்த மத்திய அரசு ஊழியர்கள்? அவர்களை பென்ச் மார்க்காக வைத்திருப்பதெல்லாம் மிகவும் அபத்தம்.. அப்படி மத்திய அரசு ஊழியர் அதிகம் சம்பளம் வாங்குவது போல் இருந்தால், நீங்களும் படித்து அந்தப் பரிட்சையை க்ளியர் செய்து அந்த சம்பளத்தை வாங்க வேண்டியது தானே? இந்திய ஜனாதிபதிக்கும் தான் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள்.. முடிந்தால் ஜனாதிபதியாகக் கூட ஆகுங்கள் உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.. ஆனால் நீங்கள் பார்க்கும் செக்கு மாட்டு வேலைக்கு ஜனாதிபதி சம்பளம் வேண்டும் என எதிர்பார்ப்பது தான் தவறு..

இன்னும் சிலர் சொல்கிறார்கள் விலைவாசியெல்லாம் கூடிவிட்டதால் சம்பள உயர்வு வேண்டுமாம்.. போன வருடத்தை விட இந்த வருடம் மாச சம்பளத்தில் 2000 முதல் 4000 வரை உயர்வு கிடைக்கிறது.. இந்தப் பணம் போதாதா அதிகரிக்கும் விலைவாசியை சரிக்கட்ட? உங்களின் ஒரு வருட ஊதிய உயர்வு தான் இந்திய நாட்டில் பலருக்கும் மாதச்சம்பளமே.. இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு 30000ரூபாய் சம்பளம் வாங்கும் வேறு நிறுவன ஊழியனையும், அதே அளவு சம்பளம் வாங்கும் வங்கி ஊழியனையும் எடுத்துக்கொள்ளுங்கள்.. அவனுக்கு சலுகைகளே கிடையாது.. ஆனால் இந்த வங்கி ஊழியர்களுக்கு பெட்ரோல், நியூஸ் பேப்பர், ஹவுஸிங் அலவன்ஸில் இருந்து, லோனுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் வரை எவ்வளவோ இருக்கின்றன.. அதையெல்லாம் கணக்கிட்டுப்பார்த்தால் அவர்கள் சம்பளத்தின் மதிப்பு அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் தான்.. 

இனியும் ஸ்ட்ரைக் அது இதுவென்று சொன்னால், அரசாங்கம் கூச்சமே படாமல் கூண்டாடு மாற்றிவிட்டு இளைஞர்களைக் கொண்டு வரலாம்.. பாவம் டிகிரி முடித்துவிட்டும், இன்ஜினியரிங் முடித்துவிட்டும் வேலை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள்.. இப்போதைய ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதியைக் கொடுத்தால் கூட அவர்களை விட கவனமாக வேலை செய்வார்கள்.. சம்பள உயர்வினால் வரும் பண வீக்கம் கூட குறையும் அதனால்..

வாரத்தில் இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்றும் ஸ்டரைக்குகிறார்கள்.. இதை வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கலாம்.. அதற்கும் என்னிடம் ஒரு பிளான் உள்ளது.. அதாவது வாரத்தின் ஏழு நாளும் பேங்க் இயங்கும்.. வேலை செய்பவர்கள் வாரத்தின் ஏதாவது இரண்டு நாட்கள் லீவு போட்டுக்கொள்ளலாம்.. திங்களும் செவ்வாயும் ஒருவர் லீவு போட்டால் இன்னொருவர் புதனும் வியாழனும் போடலாம்.. வங்கியில் அன்றாட வேலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த off இருக்குமாறு மேனேஜர் பார்த்துக்கொள்ள வேண்டும்.. மக்களும் வாரத்தின் 7நாட்களும் வங்கி இருப்பதால் பயன்பெறுவர், இவர்களுக்கும் கேட்டது போல் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கும்..

இன்னொரு முக்கிய விசயம் தனியார் துறையில் இருப்பது போல் online performance appraisal போன்ற விசயங்களை அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும்.. அதை பாரபட்சம் இல்லாமல் சரியாக கவனித்து வேலையை, வேலையாட்களை அளவிட வேண்டும்.. வேலை செய்பவன் செய்யாதவன் என எல்லோருக்கும் சகட்டு மேனிக்கு ஊதிய உயர்வு கொடுப்பதை விட இது போன்ற நவீன உத்திகளால் ஒழுங்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பைல்ஸ் வரும் அளவிற்கு சீட்டைத் தேய்க்கும் ஆட்களுக்கு ஆப்பும் அடிக்கப்படும்.. கம்பெனிக்காகவோ, வாடிக்கையாளர்களுக்காகவோ இல்லாமல் அட்லீஸ்ட் தன் ஊதிய உயர்வுக்காகவாவது ஒரு தனியார் நிறுவன ஊழியன் பயந்து போய் வேலை பார்ப்பான்.. அந்த எண்ணம் அரசு ஊழியர்கள் மத்தியில் வராத வரை அவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் கேட்டுக்கொண்டிருப்பார்கள்..

பி.கு: இந்தக் கட்டுரை, தன் கடமையை ஒழுங்காக செய்யும் வங்கி ஊழியர்களைக் குறிப்பிடவில்லை..

இவ்விடம் கடவுள் விற்கப்படும்...

Wednesday, September 17, 2014

இந்தக் கட்டுரையை எப்படி பாலீஷாக ஆரம்பிப்பது என்கிற யோசனையிலேயே நான்கைந்து நாட்களை வீணாக்கிவிட்டதாலும், இனியும் வீணாக்கினால் ஆறிய கஞ்சி பழைய கஞ்சி ஆகிவிடும் என்பதாலும் நேரடியாக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்..


மேலே இருக்கும் இந்த கிறிஸ்தவ மத சம்பந்தப்பட்ட பேனரை சமீபத்தில் புதுக்கோட்டையில் பார்த்தேன்.. இது போல் இப்போது ஊர் முழுவதும் பார்க்க முடிகிறது என்றாலும் இது ஒரு சாம்பிள்.. இந்த பேனரைப் பார்த்ததும் என் மனதில் சில கேள்விகள் எழுந்தன.. அவை,

1. யாருக்கிட்ட இருந்து யாருக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப்போறீங்க?

2. ஒருவரின் பெயரை பெரியதாக 'ஆனந்தன் ஐயங்கார்' என்று போட்டு, அதற்கு கீழே ”மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தலைமை தீட்ஷர் மகன்” என்று போட்டிருக்கிறீர்களே? அதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் கடவுளைப் பற்றிப் பேச மீனாட்சி அம்மன் கோயிலின் தீட்சிதர் பையனாக இருப்பது தான் பெரிய தகுதியா? 

3. வலது பக்கம் மேலே ஒரு டப்பாவில் சிறியதாக சிறப்பு சாட்சி என்று ஒரு பெண்ணின் பெயரைப் போட்டு, அதற்குக் கீழே “நரிக்குறவர் இனத்திலிருந்து ஒரு ஜீவனுள்ள சாட்சி” என்று அதை விடச் சிறியதாகப் போட்டிருக்கிறீர்கள்.. ஏன்யா ஜாதி வித்தியாசமே இல்லைன்னு சொல்லித்தான் மதமே மாத்துறீங்க.. ஆனா உங்க பேனர்லயே ஜாதி வித்தியாசம் பாத்துத் தான் பெயரை பெரியதாகவோ சிறியதாகவோ போடுகிறீர்கள்.. ஐயங்கார்னா பெருசு, நரிக்குறவர்னா இளப்பமா? இது தான் உங்கள் ஜாதி பேதம் இல்லாத மதமா?

4. சரி அது கூடப் பரவாயில்லை, அதென்ன ஜீவனுள்ள சாட்சி? அப்ப மேடையில் தேவன் மேல் உண்மையான நம்பிக்கையுடன் கண்ணீரோடு பேசும் மற்றவர்கள் எல்லாம் ஜீவனில்லாத போலி சாட்சிகளா?

என் மனதில் தோன்றிய இந்தக் கேள்விகளை ஃபேஸ்புக்கில் கேட்டேன்.. ஃபேஸ்புக்கில் மாய்ந்து மாய்ந்து மதத்தைப் பரப்பும் ஒரு கிறிஸ்தவர் கூட முழுமையாகப் பதில் சொல்லவில்லை.. ஒரு சிலர் வந்து “நீயெல்லாம் தீர்ப்பு நாளில் நல்லா அனுபவிப்படா” என்று சாபமெல்லாம் விட்டார்கள்.. இன்னும் சிலரோ அந்த ஆனந்தன் ஐயங்கார் என்பவர் முக்கியப் பேச்சாளராக இருப்பதால் அவர் பெயர் பெரியதாகவும், குறவர் இனத்தைச் சார்ந்த பிரேமா என்பவரின் பெயர் சிறியதாகவும் இருப்பதாகச் சொன்னார்கள்.. ஆனால் என் கேள்விகளுக்கு ஒருவரும் நேரடியாகப் பதில் சொல்லவேயில்லை.. ஜாதியே இல்லை என்று கூறி மதம் மாற்றுபவர்கள் ஏன் தங்கள் பேனரில் ஜாதியைக் குறிப்பிட வேண்டும்?

நான் ஃபேஸ்புக்கில் அந்த ஃபோட்டோவைப் பதிந்த போது கூட பலரும், “மீனாட்சி அம்மன் கோயிலில் ஏது தீட்சிதர்? அங்கு இருப்பது பட்டர் தானே? தீட்சிதர் என்றால் சிதம்பரத்தில் இருப்பவர் தான்.. அதுவும் போக இங்கு ஐயங்கார் என்று போட்டிருக்கிறதே? தீட்சிதர் என்னும் சைவ சமய ஆள் எப்படி ஐயங்கார் என்னும் வைணவராக இருக்க முடியும்?” என்றெல்லாம் கேள்விகள் கேட்டிருந்தார்கள்.. “இப்படி இந்து மதத்தைப் பற்றி ஒன்று கூடத்தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக மதம் மாற்ற எண்ணுகிறார்கள்” என்றெல்லாம் கோபப்பட்டார்கள்.. அவர்களுக்கு என் பதில் இது தான்.. 

ஐயா, அவங்களுக்கு தீட்சிதர், பட்டர், ஐயங்கார் பேதம் எல்லாம் தேவையில்லை.. இந்து மதத்தில் உயர்வானவர்களாக பிராமணர்கள் தான் கருதப்படுகிறார்கள்.. அவர் ஐயரோ, ஐயங்காரோ, தீட்சிதரோ, பட்டரோ, சாஸ்திரியோ - பெரும்பாலான இந்துக்களைப் பொறுத்தவரை கோயிலின் கருவறையில் தீபாராதனை காட்டுபவர் ஐயர் தான்.. பெருமாள் கோயிலில் தீபாராதனைக் காட்டினாலும் அவரை ஐயர் என்று தான் அழைக்கிறோம்.. ஒரு மதத்தின் உயர்வான நிலையில் இருப்பதாகக் கருதப்படும் ஒருவர், அந்த மதத்தை விட்டுவிட்டு தங்கள் மதத்துக்கு மாறிவிட்டதைப் பெருமையாகக் கூறி, “பார் உங்கள் மதத்தில் பெரிய ஆளாக நீ நினைக்கும் ஐயரே மாறிவிட்டார், நீ எப்போது மாறப்போகிறாய்?” என்று மறைமுகமாகக் கேட்பது தான் அது.. அந்த பேனரைப் பார்க்கும் பாமரனுக்கு ”மீனாட்சி அம்மன் கோயிலில் ஏதுடா தீட்சிதர் அதுவும் ஐயங்கார் தீட்சிதர்?” என்கிற கேள்வி எல்லாம் தோன்றாது.. “என்னது ஒரு ஐயரே மதம் மாறிட்டாரா?” என்கிற ஆச்சரியம் தான் தோன்றும்.. அந்த ஆச்சரியம் தான் மதம் மாற்ற நினைப்பவர்களின் முதல் வெற்றி..

எனக்கு ஒரு சந்தேகம்.. ஒரு காலத்தில் ஜாதியின் பெயரால் சீரழிந்து போயிருந்த இந்து மதத்தில், கீழ் நிலையில் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை, “நீ கர்த்தரைத் துதி.. எங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடெல்லாம் கிடையாது” என்று ஏமாற்றி மாரியம்மாள் கோயிலில் தீ மிதித்தவனை மேரியம்மாள் கோயிலில் சப்பரம் இழுக்க வைத்தார்கள்.. கோயில் தேரின் வடத்தில் தன் கை பட்டாலே தீட்டு என்று இத்தனை நாளாக ஒதுக்கப்பட்டு வந்த அவனுக்கு மாதா கோயில் சப்பரத்தை இழுக்கும் போது ஒரு நம்பிக்கை கிடைத்தது.. ஆனால் அதே சர்ச்சில் ஒரு கீற்றுக்கொட்டகை மூலம் அவன் உட்காரும் பகுதியை தனியாகப் பிரித்த போது அவன் நம்பிக்கை தவிடு பொடியாக ஆரம்பித்தது.. பின் அவன் தனக்கென்று தனி சர்ச்சை கட்டிக்கொண்டான் என்பது வேறு விசயம்.. ஆனால் மதம் விட்டு மதம் சென்றாலும் அவன் இழிவாகத் தான் பார்க்கப்படுகிறான்.. ஆனால் என்ன செய்வது? இரண்டு மூன்று தலைமுறைகளாக அவன் இந்தக்கடவுளைத் தானே கும்பிடுகிறான்? இப்போது கிட்டத்தட்ட அவன் சார்ந்த ஜாதியில் பாதி பேரை தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டார்கள்.. அடுத்து தான் அதிர்ச்சி ஆரம்பித்தது..

இப்போது அவனின் இழிநிலைக்குக் காரணமானவர்களாகக் கருதப்படும் அந்த மேல் வர்க்கத்தை மதம் மாற்றத் தொடங்குகிறார்கள்.. அதாவது கீழ் நிலையில் இருப்பவனிடம் ஒரு காலத்தில் ’எங்கள் மதத்தில் ஜாதி பேதம் இல்லை’ என்று சொன்ன அதே வாய், இன்று மேல் சாதிகளை மதம் மாற்றும் போது, அவர்களின் சாதிப்பெயரைக் குறிப்பிட்டு பெருமையாய்ச் சொல்லி பூரிப்படைந்து கொள்கிறது போஸ்டரிலும் ஃப்ளெக்ஸ் பேனர்களிலும்.. சாதியால் அவமானப்பட்ட அந்த தாழ்த்தப்பட்டவன் ”ங்யே” என்று இதையெல்லாம் செய்வதறியாது பார்த்துக்கொண்டிருக்கிறான்.. அங்கும் ஒரு பிராமன அசோசியேசன் ஆரம்பிக்கப்படுகிறது.. இந்துப் பள்ளராக இருந்தவர், இப்போது கிறிஸ்தவப் பள்ளராக இருக்கிறார்.. வேறு பெரிய வித்தியாசம் இல்லை.. இந்து ஐயராக இருந்தவர், கிறிஸ்தவ ஐயராக ப்ரொமோசன் ஆகிறார்.. 

நானும் கூட தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் தான் இந்த மாதிரி சாதிப்பாகுபாடு எல்லாம் இருக்கிறது, அதனால் தான் கிறிஸ்தவத்தில் அதைத் தடுக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டிருந்தேன்.. ஆனால் இதே இந்தியாவில் இருக்கும் இஸ்லாத்தில் சாதிப்பாகுபாடு துளியும் இல்லையே? அவர்களால் முடியும் போது ஏன் இவர்களால் முடியவில்லை? காரணம் பைபிளிலேயே ஒரு கதை வருகிறது, அது இதற்கான பதிலைக் கொடுக்கும்.. அதாவது ஏசுநாதர் தன் சீடர்களுடன் ஒரு ஊர் வழியாக உபதேசம் செய்து கொண்டே செல்கிறார்.. அப்போது ஒரு கானானியப்பெண் (கீழ்சாதிப்பெண்), அவரிடம் வந்து, “தேவனே என் மகள் நோய்வாய்ப்பட்டு இருக்கிறாள். அவளை ஆசிர்வதிக்க எங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்கிறாள்.. உடனே தேவன் சொல்கிறார், “எஜமானர்கள் சாப்பிடுவதற்காகத் தயார் செய்யப்பட்ட உணவை நாய்க்குட்டிகளுக்குத் தர முடியாது” என்று.. அதாவது மேல் ஜாதி எஜமானர்களுக்கான உணவு போன்றது தான் இவரின் போதனை மற்றும் ஆசிர்வாதம் என்றும், அது கீழ் ஜாதி நாய்களுக்கு கிடைக்காது என்றும் கூறுகிறார்.. இதைப் பின்பற்றி வருபவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றுவதில் ஆச்சரியம் என்ன இருக்கப்போகிறது? கீழ்சாதி மக்களை லாபத்திற்காக தங்கள் மதத்திற்கு மாற்றிவிட்டு, பின் நாய் போலத்தானே நடத்துகிறார்கள்? எந்த கிறிஸ்தவப் பறையரும் கிறிஸ்தவ பிள்ளையோடோ, எந்த கிறிஸ்தவப் பள்ளரும் கிறிஸ்தவ நாடாரோடோ சம்பந்தம் செய்து கொண்டதை நான் பார்த்ததேயில்லை.. மதம் மாறும் வரை தான் ஜாதி இல்லாதது போன்ற பிம்பம், அதுவே மதம் மாறிய பின் பழைய குருடி கதவைத்திறடி கதை தான்..

”பிரமாண சகோதரியின் தேவ சாட்சி” என்று விளம்பரம் கொடுக்கிறார்கள், போஸ்டர் ஒட்டுகிறார்கள்.. அதில் அந்த பிராமண சகோதரி, மடிசார் கட்டிக்கொண்டு திருமணக்கோலத்தில் நிற்கும் படத்தைப் போட்டு “அன்று இருளில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. அருகிலேயே அவர் கைகளில் பைபிளை வைத்துக்கொண்டு நிற்கும் இன்னொரு படத்தைப் போட்டுவிட்டு “இன்று வெளிச்சத்தில்” என்று குறிப்பிடுகிறார்கள்.. கீழே இருக்கும் படத்தையும் பாருங்கள்..


இந்த போஸ்டரில் பார்த்தீர்களா? ஜாம்பஜார் சார்லஸ் என்பவர் நெற்றியில் விபூதி குங்குமத்தோடு இருக்கும் படம் இருளாம், அதுவே கையில் ஒரு பைபிளைப் பிடித்துக்கொண்டு இருக்கும் படம் வெளிச்சமாம்.. என் கேள்வி எல்லாம் இந்துக்களை குறி வைத்து, இந்து மதத்தை இருள் என்று பேசும் இவர்களால், இந்துக்களை மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் இந்த மத வியாபாரிகளால் ஏன் ஒரு இஸ்லாமியரைக் கூட மதம் மாற்ற முடியவில்லை? ஒரு வேளை கிறிஸ்தவ வெளிச்சத்தை விட இஸ்லாமிய வெளிச்சம் இன்னும் பளீர் என்று இருப்பதால் இவர்களால் அதனை நெருங்க முடியவில்லையோ? கொஞ்ச நாளைக்கு முன்பு கூட ஒரு கிசுகிசு வந்தது, கிறிஸ்தவர்களின் உலகத்தலைவராக இருக்கும் போப் ஆண்டவரே இஸ்லாத்தை தழுவிவிட்டார் என.. அதனால் தான் தன் போப் பதவியைக் கூட ராஜனாமா செய்தார் என்றும் சொன்னார்கள்.. இந்த லாஜிக்கை வைத்துப் பார்த்தால் கிறிஸ்தவத்தை விட இஸ்லாம் தானே பெரிய வெளிச்சம்? அப்படியானால் முதலில் இந்த மதம் மாற்றம் செய்யும் மதவியாபாரிகள் எல்லாம் இஸ்லாத்திற்கு மாறிவிட்டு, பின் இருளில் இருக்கும் இந்துக்களை மாற்ற நினைக்கலாம்.. அல்லது இஸ்லாமியர்களை உங்கள் வெளிச்சத்திற்கு இழுத்து வந்துவிட்டு இந்துக்களை இழுக்க நினைக்கலாம்.. ஆனால் செய்ய மாட்டீர்கள்.. ஏன்?

ஏனென்றால் அவர்கள் ஒற்றுமையானவர்கள்.. அவர்களின் ஒற்றுமையின் முன்னால் உலகின் அனைத்துமே அற்பம் தான்.. ஒரு தகவல் சடுதியில் தமிழ்நாடு முழுக்கப் பரவ வேண்டுமானால் எது சிறந்த சாதனம்? டிவி? இணையம்? செல்ஃபோன்? இவை எதுவும் இல்லை.. தமிழ்நாடு முழுக்க இருக்கும் கிட்டத்தட்ட 7500 பள்ளி வாசல்கள் தான் சிறந்த தகவல் பரப்பும் இடங்கள்.. சென்னையின் ஒரு பள்ளி வாசலில் சொல்லப்படும் கருத்து இம்மி பிசகாமல் கன்னியாகுமரியின் எல்லையில் இருக்கும் பள்ளி வாசலை சடுதியில் வந்து அடைந்துவிடும்.. ஒற்றுமை இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது.. அதே போல் இந்துக்கள் இருக்கும் தெருக்களில் அசால்ட்டாக வந்து பெண்களை குழப்புவது, நோட்டீஸ் கொடுப்பது, இந்துக் கடவுள்களையே மட்டமாகப் பேசும் புத்தகங்களைக் கொடுப்பது போல் இஸ்லாமியர்கள் மிகுதியாக வசிக்கும் தெருக்களில் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.. அங்கு இப்படி செய்ய ஆரம்பித்தால் அது மொத்த இஸ்லாமியர்களுக்கும் பள்ளி வாசல்கள் மூலம் தீ வேகத்தில் அடுத்த அரை மணிநேரத்திற்குள் தெரிவிக்கப் பட்டுவிடும். அவர்களும் இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்க வேண்டுமோ அப்படிச் சமாளிப்பார்கள்.. அந்த ஒற்றுமை இருப்பதால் தான் இந்த மாதிரி மத வியாபாரிகளால் இஸ்லாமியர்களை நெருங்கக் கூட முடியவில்லை.. அது போன்ற ஒற்றுமை இந்துக்களிடம் இல்லாததால் தான் இந்துக்களை ஏமாற்றி அவர்களிடம் மதத்தை விற்று வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார்கள்..

”அப்பாஸ் கூட எங்கள் பினாயிலை வைத்துத் தான் கக்கூஸைக் கழுவுகிறார், நீயும் அதனால் எங்கள் பினாயிலை வாங்கு” என்கிறான் பொருளை விற்பவன்.. “ஐயரே எங்கள் மதத்துக்கு மாறிட்டான்.. அதனால் நீயும் எங்கள் மதத்துக்கு மாறிரு” என்கிறான் மதத்தை/கடவுளை விற்பவன்.. அதாவது ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் கிரிக்கெட் வீரர், நடிகர் போல் பிராமண மக்கள் மதத்தை விளம்பரப்படுத்தும் ஏஜெண்டுகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள்.. சிகரெட், ஷேவிங் க்ரீம், பினாயில், ஊறுகாய், தேங்காய் எண்ணெய் போல கடவுளையும் ஒரு சந்தைப் பொருளாக மாற்றிவிட்டார்கள்.. ஹ்ம் கடவுளை வைத்து பணம் பார்க்க நினைப்பவர்கள் கடவுளை ஒரு சந்தைப் பொருளாக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம்?

கடவுள் அதிசயத்தை நிகழ்த்தி விடுவார் என்றால் ஏன் கிறிஸ்தவ நாடுகளில் கூட ஆஸ்பத்திரிகளும், பள்ளிகளும், காவல் நிலையங்களும் இருக்கின்றன? அட அவ்வளவு ஏன், தேவன், முடவரை நடக்க வைத்தார், இதய ஓட்டையை அடைத்தார், வயிற்று கேன்சரை சரி செய்தார் என்று மேடைக்கு மேடை சாட்சியங்களை செட் செய்து புழுகியே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்த ஆள், ஏன் தன் கடைசிக் காலத்தில் தேவனிடம் தன்னை குணப்படுத்தச்சொல்லி வேண்டாமல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்? இன்னமும் எந்த தைரியத்தில் அவர் இறந்த பின்னும் அவரின் குடும்பத்தினர் ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? "The Mummy" என்னும் படத்தில் அந்த மம்மியால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாய் “Imhotep... Imhotep" என்று அந்த மம்மியின் பெயரை மட்டும் உச்சரித்துக்கொண்டே தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாய் அந்த மம்மியின் கட்டளையை மட்டும் நிறைவேற்றுவார்கள்.. மதவியாபாரிகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தெருத்தெருவாய் மதமாற்றம் செய்ய வரும் அப்பாவிகளுக்கும், மம்மி படத்தில் "Imhotep" என்று பித்து பிடித்த மாதிரி கத்திக்கொண்டே வருபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது..

தெளிவாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. கடவுள் ஒன்றும் விற்பனைப் பொருள் அல்ல.. சாம்பிள் பல்பொடி விற்பவன் போல ஒருவன் தெருத்தெருவாய் வந்து கடவுளை விற்றுக்கொண்டிருந்தால் கொஞ்சமாவது யோசியுங்கள்.. வேலை, குடும்பம், குட்டியை விட்டுவிட்டு எந்தக் கிறுக்கனாவது கடவுளுக்காக இப்படியெல்லாம் செய்வானா என்று? எல்லாம் காசு படுத்தும் பாடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் நல்வாழ்க்கையில் உங்களை விட வேறு எவனும், ஏன் அந்தக் கடவுளே கூட அதிக அக்கறை காட்டிவிட முடியாது.. அதனால் நம் கஷ்டத்தில் பங்கேற்று, நம் மீது அக்கறை உள்ளது போல் நடிக்கும் கடவுளை விற்கும் ஆட்களைப் புறந்தள்ளுவோம்... மூளைச்சலவை செய்யப்பட்ட அந்தப் பைத்தியங்களை மாற்ற முடியாது.. அவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழி தான் உள்ளது.. ஒன்று, ஒதுங்கிச் செல்ல வேண்டும்.. இரண்டு, இஸ்லாமியர்கள் போல் ஒற்றுமையாய் நிற்க வேண்டும்.. இரண்டாவது வழி தான் நிரந்தரத் தீர்வைக் கொடுக்கும் என்பது என் கருத்து..

சுப்ரமணிய சாமியும் தமிழுணர்வும்...

Thursday, September 4, 2014

இரண்டு, மூன்று நாட்களாகவே ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி பேசியதைப் போட்டுத்தான் நாளிதழ்கள், டிவிக்கள் இரண்டும் கூவிக்கூவி காசு பார்த்துக்கொண்டிருக்கின்றன... நம்ம ஆளும் சும்மா இருக்க மாட்டார்.. திடீரென்று ஒரு ப்ரெஸ்மீட் வைத்து, உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஒரு விசயத்தைக் கொழுத்திப்போட்டு அவர் பாட்டுக்கப் போய்விடுவார்.. இங்கு ஒவ்வொருத்தனும் தலையைப் பிய்த்துக்கொண்டு தங்களுக்குள் ஒரு ரத்தக்களறியையே நடத்திக்கொண்டு இருப்பார்கள்.. சமீபத்தில் அவர் பேசியதும் அப்படிப்பட்ட விசயம் தான்.. அது என்னவென்று தெரியாதவர்களுக்காக, அவர் சொன்னதன் சுருக்கம் கீழே:

“இலங்கை அரசிடம், எல்லை தாண்டி மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை விட்டுவிட்டு அவர்களின் படகுகளை மட்டும் பிடித்து வைத்துக்கொள்ளச் சொன்னவன் நான் தான்.. ஏனென்றால் படகுகள் பெரும் முதலாளிகளினுடையது.. அதைப் பிடித்து வைத்துக்கொண்டால் மீண்டும் எல்லை தாண்ட மாட்டார்கள் நம் மீனவர்கள்.. ஏழை மீனவனின் உயிர் போய்விடக்கூடாது என்பதற்காகவே படகை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு, அவர்களை மட்டும் விடச் சொல்லிவிட்டேன்.. நான் சொன்னதைத் தான் இலங்கை அரசாங்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறது..”என் முதல் சந்தேகமே இவர் எப்படி ஹார்வர்டில் பொருளாதாரத்தில் டாக்டரேட் வாங்கினார் என்பது தான்.. சிலர் சொல்வார்கள், ”சிவகாசியில் பட்டாசு ஆலைகளை எல்லாம் மூடிவிட்டால், விபத்துக்களே நடக்காது, சிவகாசி மக்கள் உயிரோடு, சந்தோசமாக இருப்பார்கள்” என.. பட்டாசு ஆலையில் விபத்து வந்தால் அன்றோடு அவன் உயிர் போய்விடும்.. குடும்பமும் ஒரு வாரம் அழுதுவிட்டுத் திரும்ப தன் பிழைப்பைப் பார்க்க ஓடிவிடும்.. அதுவே விபத்தைத் தடுக்கிறேன் பேர்வழி என்று எல்லா ஆலைகளையும் மூடினால், விபத்தன்று ஒரேடியாகப் போகும் அவன் உயிர் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாகப் போகும்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. ஏனென்றால் எங்களுக்கு அதைத்தவிர வேறு தொழில் தெரியாது, அரசும் எங்கள் பிழைப்பிற்கு வேறு வழியைக் காட்டவில்லை.. கிட்டத்தட்ட கூலிக்கு மீன் பிடிப்பவனின் கதியும் இதே தான்...

ஒரு முதலாளியின் படகைப் பிடித்து வைத்துகொண்டு, மீனவனை மட்டும் விடுவித்தால் என்ன பயன்? அந்த மீனவன் அதன் பின் எங்கு வேலைக்குப் போவான்? அட்லீஸ்ட் படகோடு சேர்த்து அவனையும் பிடித்து வைத்துக்கொண்டால், இலங்கை ஜெயிலில் மூன்று வேளை சோறாவது போடுவார்கள் என நம்புகிறேன்.. படகு இல்லாமல் கரைக்குத் திரும்பும் அவனுக்குச் சொந்தப் படகு வாங்கவும் காசு இருக்காது.. முதலாளிகளின் படகையும் நம்ம சு.சாமியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இலங்கை பிடித்து வைத்துக்கொள்வதால் கூலிக்கும் மீன் பிடிக்கப் போக முடியாது.. அரசாங்கமும் மீனவர்களுக்கு பிழைப்பிற்கான வேறு வழிமுறைகளை இதுவரைச் செய்ததில்லை.. பின் அவனால் என்ன தான் செய்ய முடியும்? சாக வேண்டியது தான்.. இலங்கைக் கப்பல் படையின் ஒரு துப்பாக்கி குண்டினால் உடனே போக வேண்டிய அவன் உயிர், தமிழ் மண்ணில் தினம் தினம் பசியால் போய்க்கொண்டிருக்கும்.. அவ்வளவு தான் வித்தியாசம்..

அதனால் தான் ஏதோ பெரிய உலக சாதனை நிகழ்த்தி விட்டது போல் பேசிக்கொண்டிருக்கும் சு.சாமி, பொருளாதார ரீதியில் இது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனமானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த மிகப்பெரிய ஓட்டையைத் தவிர அவரது பேட்டியில் வேறு எந்தப் பெரியக் குற்றமும் எனக்குத் தெரியவில்லை.. சு.சாமியின் கருத்தை எதிர்ப்பதால் நான் ஒன்றும் தமிழக மீனவர்களின் ஆதரவாளனும் கிடையாது!!!! சரி மேட்டருக்கு வருகிறேன்..

உங்கள் வீடும் உங்கள் தம்பி வீடும் அருகருகே இருக்கிறது.. உங்கள் வீட்டில் இருக்கும் மளிகைச் சாமான் மற்றும் காய்கறிகளை நீங்கள் ஊதாரித்தனமாய் கணக்கு வழக்கு இல்லாமல் எடுத்துக் காலியாக்கி விட்டீர்கள்.. இப்போது உங்கள் வீட்டில் சோறாக்க அரிசி இல்லை, குழம்பு வைக்கக் காய்கறி, பலசரக்குச் சாமான்கள் இல்லை.. நீங்கள் நேராக, உங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் உங்கள் தம்பி வீட்டிற்குள் நுழைகிறீர்கள்.. அவன் ஒரு சிக்கனப் பேர்வழி.. பார்த்துப்பார்த்துச் செலவு செய்பவன்.. நீங்கள் அவனைக் கேட்காமலேயே அவன் வீட்டில் இருக்கும் சமையல் ஐட்டங்களை ஆட்டையைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறீர்கள்.. ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக நீங்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.. எத்தனை நாள் தான் அவன் பொறுமையாக இருப்பான்? அண்ணன் தம்பி என்றாலும், தொப்புள்க்கொடி உறவு என்றாலும் அவரவர் வயிற்றுக்கு அவரவர் தானே சாப்பிட வேண்டும்?

இந்த அண்ணன் இடத்தில் நம் கடல் வளங்களையும், மீன் வளங்களையும் அனுமதிக்கப்படாத வாரியல்களைக் கொண்டு அழித்துவிட்டத் தமிழக மீனவர்களையும், தம்பி இடத்தில் இலங்கையின் வடக்கு மாகானங்களில் இன்னமும் தங்கள் மீன் வளங்களைக் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் மீனவர்களையும் வைத்துக்கொள்ளுங்கள்.. இப்போது இந்தக் கதையின் அர்த்தமும், இலங்கை அரசின் நடவடிக்கைகளில் இருக்கும் ஞாயமும் உங்களுக்குப் புரியும்..
இலங்கையைச் சேர்ந்தத் தமிழக மீனவர்கள் பல முறை சொல்லிவிட்டார்கள், நம் இந்தியத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகள் மிக மிக மோசமானவை; அவை கடல் வளங்களை மொத்தமாக அழித்துவிடும் என்று.. நாம் அதைப் பற்றிக் கொஞ்சம் கூட சட்டையே செய்யாமல், “என் இனம், என் தமிழன்.. அவனுக்கு மீன் பிடிக்கக்கூட உரிமை இல்லையா?” என்று பொங்குகிறோம்.. இதே தமிழன், தன் கடல் வளத்தை அனுமதி இல்லாத வாரியல்கள் கொண்டு அழித்த போது இன்று கூப்பாடு போடும் ஆட்கள் எல்லாம் எங்கே போனார்கள்? சரி நம் நாட்டுக் கடல் வளத்தை அழித்த போது நாம் மூடிக்கொண்டு இருந்த மாதிரி, மற்ற நாட்டுக்காரனும் இருப்பானா? கடலில் எல்லை தெரியாது, மீனவனுக்குக் கடல் சொந்தம் என்று சொல்வதெல்லாம் லாஜிக்கலாக ஏற்கக்கூடிய வாதமே இல்லை.. கடல் எல்லை தெரியாத மீனவன் இருக்கவே மாட்டான்.. தெரிந்தே தான் போகிறான்.. இந்த பார்டரைத் தாண்டிப் போனால் இலங்கை கப்பற்படை பிடிக்கிறது, சுடுகிறது என்றுத் தெரிந்தும் ஏன் போகிறான்? எல்லாம் பேராசை.. இது அவன் தவறு தானே?

இன்னொரு முக்கிய விசயம் நாம் பாகிஸ்தானை எப்படிப் பார்க்கிறோமோ, ஒரு பாகிஸ்தான்காரனை எப்படி பயத்துடன் அணுகுவோமோ அப்படித்தான் இலங்கைக்காரனுக்கு நாம்.. அவனுக்கு தமிழன் என்றாலே, “ஒரு வேளைத் தீவிரவாதியாக இருப்பானோ?” என்கிற பயம் இருக்கத்தானே செய்யும்? இப்படிப் பட்டச் சூழலில் நம் உயிரையும், பொருட்களையும் காப்பாற்றிக்கொள்ளப் பார்ப்போமோ, அல்லது திமிர் பிடித்துக் கடலில் எல்லை தாண்டிச் செல்வோமா?சில தமிழ் உணர்வாளர்கள் இருக்கிறார்கள்.. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் உணர்வு இதற்கெல்லாம் அவர்கள் தான் wholesale agency எடுத்து, கிட்டத்தட்ட ஒரு carrying and forwarding agent ஆகச் செயல்படுவார்கள்.. இவர்களைப் பொறுத்தவரை, தமிழன் கொலையே செய்தாலும் அதுவும் சரியே.. ஏன்னா அவன் தமிழன்.. தமிழன் எதுவும் செய்யலாம்.. அதற்கு இவர்களின் ஆதரவு என்றும் உண்டு.. ஆனால் இலங்கையிடம் மட்டும் ”இனவாதம் கூடாது” என்பார்கள்.. அதாவது தமிழனுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு அளிக்கும் இவர்கள் தான், அதே போல் கண்ணை மூடிக்கொண்டு தன் இன மக்களுக்கு ஆதரவளிக்கும் இலங்கை செய்வதைத் தவறு என்பார்கள்.. சரி அவர்களுக்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சொல்கிறேன்..

இதே தமிழின ஆதரவாளர்கள் தான், இலங்கைத் தமிழருக்காக இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.. ஆனால் இவர்கள் இந்தியாவில் அகதிகள் முகாமில் அடைபட்டு, வாழ்வை இழந்த ஈழத் தமிழனைப் பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது வேறு விசயம்.. இந்தத் தமிழின ஆதரவாளர்கள் இலங்கையில் இருக்கும் தமிழனின் வளத்தைத் தன் இந்தியத் தமிழன் அழிப்பதை மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை? அவனும் தமிழன் தானே? அவனது உயிரை போர் என்னும் பெயரில் இலங்கை பறித்தது.. அவன் வளத்தை, வாழ்வாதாரத்தை “இனம்” என்கிறப் பெயரில் இவர்கள் பறிக்கிறார்கள்.. தான் மீன் திங்க வேண்டும் என்பதற்காக, தொப்புள்க்கொடியின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, அவனின் வளத்தைத் திருடலாமா? உன் வீட்டுக்குள் எவனோ ஒருவன் வந்து பீரோவில் இருக்கும் நகை, பணத்தை எல்லாம் அள்ளிக்கொண்டு போனால் சும்மா இருப்பியா நீ? ஆனா நீ மட்டும் இன்னொருத்தன் நாட்டுக்குள்ள போயி அவன் கடல் வளத்தை அழிப்ப, அதை அவன் தட்டிக்கேட்டா ”இன அழிப்பு”, “இன வெறி”னு பட்டம் கொடுத்து அரசியல் ஆக்குவ, அப்படித்தானே மை டியர் டமிலின போராளீஸ்? 

இன்னும் சிலர் இருக்கிறார்கள், ”மனிதாபிமான அடிப்படையில் பாருங்கள்.. வெறும் மீன் பிடித்ததற்காக மீனவனைக் கொல்லலாமா? வலையை அறுக்கலாமா? படகைப் பிடிக்கலாமா?” என்று ஜீவகாருண்யம் பேசுவார்கள்.. ஐயா வாழும் வள்ளலாரே, உலகமே பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஓடுகிறது.. ஒரு நாடு தன் வளத்தைப் பாதுகாத்து, அதைப்பெருக்குவதில் முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது மனிதமாவது மானமாவது.. பக்கத்து வீட்டுக்காரன் செத்தாலும் கண்டுகொள்ளாத, ரோட்டில் ஒருவர் அடிபட்டுக்கிடந்தாலும் ஆஃபிஸுக்கு லேட் ஆகிவிடும் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் போகிற நாம் தான் மனிதாபிமானம் பேசுகிறோம் என்பது மிகப்பெரிய நகைமுரண்.. தனிமனிதனான நமக்கே பணம் தான் முக்கியம் என்று ஆன பின்பு, ஒரு நாடு, அதற்குத் தன் இயற்கை வளங்களும் பொருளாதாரமும் தானே முக்கியம்? அதைத் தன் குடிமக்களுக்குத் தானே கொடுக்க நினைக்கும்? வருபவன் போறவன் எல்லாம் அள்ளிக்கொண்டுப் போக அது என்ன தமிழ்நாட்டு ஆற்று மணலா? இந்த விசயத்தில் தவறை எல்லாம் நம் பக்கம் வைத்துக்கொண்டு இலங்கையைக் கண்டிப்பது, இலங்கை மீது கோபப்படுவது என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தெரிகிறது..முதலில் இந்திய அரசு தன் மீனவர்களுக்கு இந்திய எல்லைக்குள் மட்டும் தான் மீன் பிடிக்க வேண்டும் என்கிற உத்தரவைப் போட வேண்டும்.. மீறிச் செல்பவர்கள் அதன் பின் கடலுக்குள்ளேயே இறங்க முடியாத அளவிற்கு தடை விதிக்க வேண்டும்.. இந்திய எல்லையில் மீன் வளம் இல்லையென்றால் மீனவர்களுக்கு வேறு சில வாழ்வாதார வழிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு அவர்களின் உயிரோடும் உடமையோடும் இன்னொரு நாடு விளையாண்டு கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.. அதே போல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முடிவுகள் தேவைப்படும் இது போன்ற விசயங்களில், மக்களின் உணர்வுகளைத் தூண்டிப் பிழைப்பை நடத்தும், பொது அறிவே இல்லாத மூன்றாம் தர அரசியல்வாதிகள் மூக்கை நுழைப்பதையும் உடனுக்குடன் கண்டிக்க வேண்டும்.. சும்மா “தமிழ், தமிழன், என் இனம், தொப்புள்க்கொடி உறவு” என்று மேடைக்கு மேடை மைக்கைப் பிடித்துக் கத்துவதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்று தெரிந்தும் கத்திக்கொண்டிருக்கும் அது போன்ற சில்லறை அரசியல்வாதிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One