ஜப்பான் பிரதமரைக் கொன்ற சர்ச்???

Wednesday, March 22, 2023

சில மாதங்களுக்கு முன் ஜப்பானிய முன்னாள் பிரதமர் Shinzo Abe சுட்டுக் கொல்லப்பட்டது சர்ச் ஃபாதரின் பாவமன்னிப்பு லீலைகள், யூ ட்யூப் மதனின் ஸ்டிங் ஆபரேஷன் எல்லாம் தாண்டி உங்கள் நினைவில் இருந்தால் அதிசயம் தான். அவருடைய கொலைக்கான காரணம் பற்றி படித்துப் போது 'டேய் நீங்க அங்கேயுமாடா?' என அதிர்ச்சியாய் இருந்தது. சரி, Shinzo Abe ஏன் கொல்லப்பட்டார்? யார் அவரைக் கொன்றது? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கிற்காக 55கோடி ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்!!


55 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியை southern hemisphere, northern hemisphere எனப் பிரிக்கவில்லை. Gondwana & Laurasia எனப் பிரித்திருந்தார்கள். Gondwana நிலப்பரப்பில் தான் இன்றைய தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் இருந்தன. பின் பூமிக்கடியில் இருக்கும் tectanic plates நகர்வுகளால் இந்த நிலப்பரப்புகள் எல்லாம் இன்றைய கண்டங்கள், கடல்கள், மலைகள், தீவுகளாயின. 



மனித இனம், Gondwana & Laurasia நிலப்பரப்புகள் நகர்ந்து இன்றைய நிலப்பரப்பு போல் மாறிய பிறகே உருவாகின என்றாலும், இன்றும் இந்த Gondwana பகுதி மக்களின் முக அமைப்பு ஒரே மாதிரி தான் இருக்கும். லத்தீன் அமெரிக்க நாட்டினர் எல்லாம் நம்மூர் ஆட்கள் மாதிரித் தான் இருப்பார்கள். அது மட்டுமல்ல இந்த Gondwana பகுதி மக்களின் வழிபாடும் ஒரே மாதிரியானது தான்; இயற்கை முதற்கொண்டு பல தெய்வங்களை வணங்குபவர்கள். நெருப்பு, மழை, பாம்பு, கோரமான முகம் கொண்ட சிலை என இவர்களுக்கு அனைத்துமே கடவுள் தான்.



இப்ப அப்படியே Laurasia பகுதியில் தோன்றிய மதங்களைப் பாருங்கள். ஓரிறைக் கொள்கை கொண்ட ஆபிரஹாமிய மதங்கள். ஓரிறைக் கொள்கை கொண்டவர்களுக்குத் தங்கள் மதத்தைப் பரப்புவது ஒரு தலையாயக் கடமை, அது அன்பினாலோ, வாள் முனையிலோ, ஏகாதிபத்தியம் மூலமோ. இந்த Gondwana லூசுகள் பல கடவுள்களைக் கும்பிடுவதால், அந்த ஓரிறையையும் தங்களின் ஒரு கடவுளாக ஏற்க ஆரம்பித்து, முடிவில் நெகிழ்வுத்தன்மை கொண்ட தங்கள் வழிபாட்டு முறையை விட்டுவிட்டு, வறட்டுத்தனமான அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா எனப் பல கோடி உதாரணங்கள் உண்டு. இவர்களின் இந்த மதமாற்றும் வெறியால் பல கோடி உயிர்களும் பல லட்சம் கோடி வளங்களும் அழிந்தது தான் மிச்சம். Shinzo Abe அதில் ஒரு சிறு துரும்பு.



1920ல் கொரியாவில் Sun Myung Moon என்பவர் பிறக்கிறார். இவருடைய 15வது வயதில், "ஏசுபிரான் என் கனவில் தோன்றி, 'மகனே என்னால் முடிக்க முடியாத பல காரியங்களை நீ தான் முடிக்க வேண்டும் மொத்த மனித குலத்திற்கும் தகப்பனாக இருந்து" எனச் சொன்னதாக அறிவிக்கிறார். இந்த பல இறைக் கொள்கை கொண்ட கும்பல் தான் எவன் சாமியாராக வந்தாலும் ஏற்றுக்கொள்ளுமே? கொரியாவிலும் ஜப்பானிலும் இவரைப் பின்பற்றும் மக்கள் உருவாக ஆரம்பித்தார்கள். Unification Church என்கிற அமைப்பை உருவாக்குகிறார். இந்த UCன் முக்கிய வேலையே பணக்காரர்களையும் அதிகாரமிக்கவர்களையும் தங்கள் மதத்திற்கு மாற்றுவது. அப்படி முடியவில்லை என்றால், அட்லீஸ்ட் அவர்களுக்குக் காசு கொடுத்துத் தங்கள் மதத்தைப் பற்றி மேடைகளில் பேச வைப்பது. நம்மூரில் மார்க்கெட் போன நடிகர்கள், துணை நடிகைகள் ஜீவ சாட்சி சொல்கிறார்களே, அப்படி.



இது போன்ற influencers மூலமாக ஆள் பிடிக்கிறார்கள். ஆள் பிடித்தால் மட்டும் போதுமா? வருமானத்திற்கு வழி என்ன? "உங்கள் மூதாதையர்களோடு பேச வைக்கிறேன்", உங்களின் கஷ்டங்களைப் போக்க வைக்கிறேன், இந்த எண்ணிற்கு அழைக்கவும்" என விளம்பரப்படுத்துகிறார்கள். நம்பிய மக்களும் அந்த எண்ணிற்கு அழைத்தால் ஆரம்பநிலை வேண்டுதலுக்கே பல ஆயிரம் செலவு. ஆனால் அரசியல்வாதிகள், நடிகர்கள் எனப் பலரும் இந்த மதம் பற்றிய தங்கள் அனுபவங்களைப்(!!!) பேசுவதால் நம்பிப் பணம் கட்ட ஆரம்பித்தார்கள். UCன் கல்லா நிறைய ஆரம்பித்தது.



இந்த சர்ச்சில் தான் Shinzo Abeவின் தாத்தா ஒரு உறுப்பினராகச் சேர்கிறார். அப்போது அவர் ஜப்பான் பாராளுமன்ற உறுப்பினர். பின் Shinzo Abeவின் அப்பா ஜப்பானின் வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த காலத்தில் UC அவர்களின் LDP கட்சிக்காகப் பிரச்சாரமே செய்தது. இது Shinzo Abe பிரதமராக ஆகும் வரை தொடர்ந்தது. LDP கட்சியின் உறுப்பினர்கள், ஜப்பானிய அரசியல் தலைவர்கள் எனப் பலரையும் UCயின் தலைமையகத்துக்கு அனுப்பி "இறையியல்" பற்றிப் பாடம் படிக்க வைத்தார். அவர்களுக்குத் தேவ சாட்சியம் அளிக்க வைத்தார். அரசாங்கத்திற்குள் இந்த UCன் மூக்கு அதிகமாகவே நுழைந்தது. 



இந்த 70 ஆண்டுகளில் UCயை நம்பிப் பல மக்கள் தங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவிற்கு வந்தார்கள். இவர்கள் வீடு புகுந்து, "உங்கள் கொள்ளுப்பாட்டியின் ஆத்துமா உங்களிடம் பேசத்துடிக்கிறது. குடும்ப ரகசியம் உள்ளதாம்" என ஆரம்பித்து, கொள்ளுப்பாட்டியிடம் பேச லட்சக்கணக்கில் கொள்ளையடித்தால் தெருவிற்கு வராமல் தேவலோகமா போவார்கள்? வீட்டில் கெட்ட ஆவிகளை (ஜப்பானியக் கடவுள்) ஓட்டுகிறோம் எனச் சொல்லி, அலங்காரப் பானைகள் & பொம்மைகளை ஆயிரக்கணக்கில் விற்றார்கள். 1980களிலேயே இந்த UC ஜப்பானின் மிகப்பெரிய nuisance என பொதுமக்களும் வக்கீல்களும் அங்கங்கு போராட்டம், வழக்கு என ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. படிப்படியாக வளர்ந்த UCயிடம் இப்போது கிட்டத்தட்ட 1.24லட்சம் கோடி சொத்து உள்ளது!! அதில் 70% ஜப்பானில் மட்டும்.


இந்த UCயில் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொண்டு, தன் சொத்து அனைத்தையும் தேவனுக்காக அழித்தார் ஒரு பெண்மணி. அவருடைய குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. குழந்தைகளின் எதிர்காலம் நாசமாய் போனது. அவருடைய பையன், தன் குடும்பம் அழியக் காரணமாய் இருந்த UC மேல் உருவான கோபத்தை, அது ஜப்பானில் வளர முக்கிய காரணமாக இருந்த Shinzo Abe மீது துப்பாக்கி குண்டு வழியே காட்டினான். அவர் செத்தார். இவன் ஜெயிலில். ஆனால் இது எதையுமே கண்டுகொள்ளாதது போல் UC எப்போதும் போல் "இறை சேவை" செய்து வருகிறது.


ஆனாலும் Abeவின் இறப்பு ஜப்பான் முழுவதும் UC மேல் மிகப்பெரிய வெறுப்பையும் அதன் செயல்பாடுகள் மீதான விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இருந்தாலும் அதெல்லாமே too late than. ஏனென்றால்,


ஜப்பானில் கட்டற்ற மத சுதந்திரம் உண்டு. இங்கு நீங்கள் ஒரு Shintoவாக (புத்த மதப்பிரிவு) இருந்து கொண்டே non religious/secular என்றும் சொல்லிக்கொள்ளலாம். பல பெரும்பான்மை புத்த மதத்தினரும் பெருமையாகத் தங்களை secular என அழைத்துக் கொள்கிறார்கள். சமீப நாட்களாக அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடுவது, மேற்கத்திய பாணியில் திருமணம் செய்து கொள்வது எனப் பல விஷயங்களும் UC போன்ற அமைப்பினரால் "மதச்சார்பற்ற" சடங்குகளாக, திருவிழாக்களாக அந்த மக்களின் மீது திணிக்கப்படுகிறது. அது ஒரு ஃபேஷனாகவும் மாறி வருகிறது. ஜப்பானிய இளைஞர்கள் தங்கள் சடங்குகளை விட இந்த மதச்சார்பற்றச் சடங்குகளையே விரும்புகிறார்கள். ஒரு Shinzo Abe போனால் என்ன, மதத்தை எந்த வழியிலும் திணிக்கப் பல Abeக்களை அவர்களால் உருவாக்க முடியும் என UC நிரூபிக்கிறது. ரெக்கார்ட் படி ஜப்பானில் 1.5% - 2% தான் கிறிஸ்தவர்கள். ஆனால் நிஜத்தில் இதை விடப் பல மடங்கு இருக்கலாம் என்கிறார்கள். நான் முதல் பத்தியில் சொன்ன "டேய் நீங்க அங்கேயுமாடா?" என்பதன் அர்த்தம் இப்போது விளங்கியிருக்கும் உங்களுக்கு. 


கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள். கார்ப்பரேட்டுகளுக்கெல்லாம் அப்பன் தான் இந்த மதமாற்ற கும்பல். கடவுள் என்னும் தங்கள் காஸ்ட்லி பொருளை விற்க, கல்லா கட்ட அவர்கள் யாரையும் அழிக்கத் துணிவார்கள், எந்த கலாசாரத்தையும் கேவலப்படுத்துவார்கள், எத்தனைக் குடும்பஙகளையும் சீரழிப்பார்கள். தங்களுடைய சரக்கு விற்றால் சரி அவர்களுக்கு.


பல இறைக்கொள்கை கொண்ட Gondwanaவில் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து அடுத்த பலி ஜப்பானாகத் தான் இருக்கும் என்றால் அதை யாரால் மாற்ற முடியும்? அதன் பின் மிச்சம் இருப்பது "இந்தியா".

என்ன ஒரு ரேடியா வியாபாரி தான் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமா!!!

Sunday, March 19, 2023

ஒரு ரேடியா கம்பெனிக்காரர் தான் இரண்டாம் உலகப்போருக்கும் பல லட்ச உயிர் இழப்புக்கும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? மீடியாக்காரர்கள் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதற்கான costly & deadly உதாரணம் இது.


இரண்டாம் உலகப்போரின் ஆரம்ப காலகட்டம் அது. உலகப்போர் என்பதை விட, ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் இரண்டாகப் பிரிந்து அடித்துக் கொண்டிருந்த கண்டப் போர் தான் அது. மற்ற கண்டங்கள் எனப் பார்த்தால் ஆசியாவில் இருந்த ரஷ்யா ஒரு அணிக்கும், ஜப்பான் இன்னொரு அணிக்கும் ஆதரவு.


போரில் ஜெர்மனியின் கையே ஓங்கி இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் ஜெர்மன் & இத்தாலிப் படைகளின் குண்டு இங்கிலாந்து மற்றும் ஃப்ரான்ஸ் நாட்டைத் துளைத்தெடுத்துவிடும் என்கிற நிலை. வெற்றி பெற இன்னொரு பலமான நாட்டின் ஆதரவு தேவைப்படுகிறது இங்கிலாந்திற்கு. அமெரிக்காவைத் தங்களுக்கு ஆதரவாக உள்ளே இழுக்கலாமா என நினைக்கிறது. அப்போது தான் இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI6ற்கு ஸ்டீபன்சன் என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது.


பிறப்பால் கனடியரான ஸ்டீபன்சன் முதல் உலகப்போரில் போர் விமானியாக இருந்தவர். பின் இங்கிலாந்தில் ரேடியோ தொழிலில் கொடிகட்டிப் பறந்தார். அதுவும் போரடித்த பின், சில நிபுணர்கள் & தனியார் உளவாளிகளின் துணை கொண்டு British Industrial Secret Service என்கிற பெயரில் ஒரு உளவு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். இங்கிலாந்தின் MP ஒருவர் இவரைப் பற்றி வின்ஸ்டன் சர்ச்சிலிடம் தெரிவிக்கிறார். ஸ்டீபன்சன்னைப் பற்றி விசாரித்து, சில பல விபரங்களைச் சேகரித்த பின், அமெரிக்காவை உலகப் போருக்குள் இழுக்கும் திட்டத்திற்கு அவரைத் தலைவராக நியமிக்கிறது MI6.



இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் ஈடுபடலாமா என்கிற கேள்விக்கு வெறும் 7% குடிமக்களே சரி என்றார்கள். ஆனாலும் ஹிட்லர் ஒரு கொடுங்கோளன் எனப் பலரும் நம்பினர். அதிபர் ரூஸ்வெல்ட்டும் பெரிதாக உலகப் போரில் ஆர்வம் காட்டவில்லை. 1929-30 காலகட்டத்தில் நடந்த மாதிரியான ஒரு பொருளாதாரச் சரிவை மீண்டும் ஏற்க அமெரிக்கா தயாராக இல்லை. ஆனால் அமெரிக்கா வராவிட்டால் இங்கிலாந்து காலியாகிவிடும். இந்த இக்கட்டான சூழலில் தான் ஸ்டீபன்சன் புதுப் பொறுப்பில் அமர்கிறார்.



இப்போது ஜெர்மானிய அரசு அதிகாரி ஒருத்தர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவர் ஒரு செய்தி நிறுவன அதிபரோடு இருக்கும் புகைப்படம் ஸ்டீபன்சன்னின் கைகளுக்குக் கிடைக்கிறது. விடுவாரா?? 'ஹிட்லரின் ரகசிய உளவாளியோடு இருக்கும் அமெரிக்க முதலாளி' எனச் செய்தி வெளியிடுகிறார். அவ்வளவு தான். அந்த நிறுவனம் ஒரே வாரத்தில் இழுத்து மூடப்படுகிறது. அந்த ஜெர்மானிய அதிகாரி உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுகிறார். லேசாக ஜெர்க் ஆன அதிபர் ரூஸ்வெல்ட், பணி ஓய்வு  பெற்ற ஒரு முன்னாள் ராணுவ அதிகாரியை இங்கிலாந்திற்கு அனுப்பி, உலகப்போர் பற்றிய விபரங்களைச் சேகரிக்கச் சொல்கிறார். போதாதா ஸ்டீபன்சன்னுக்கு?


அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு இங்கிலாந்தின் மன்னர் நான்காம் ஜார்ஜ், மகாராணி மற்றும் சர்ச்சில் அனைவரிடமும் செல்கிறார். ஒவ்வொருத்தரும் ஸ்டீபன்சன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே அந்த அதிகாரியிடம் சொன்னார்கள். அதாவது 'இங்கிலாந்தைப் போன்ற மிகப்பெரிய நாட்டின் ஆதரவு உங்களுக்கு இல்லாமல் போனால் ஹிட்லரிடம் இருந்து அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது' என்பது தான் அது. ஆனால் உண்மை அப்படியேத் தலைகீழ் என்பது இங்கிலாந்திற்கு மட்டுமே தெரியும். அத்தனையும் கேட்ட அந்த அமெரிக்க அதிகாரிக்கு வியர்த்துக் கொட்டியது. உடனடியாக அமெரிக்கா கிளம்பினார் ரூஸ்வெல்ட்டைப் பார்க்க.


அதிபர் ரூஸ்வெல்ட்டிடம் கிளிப்பிள்ளை போல் அனைத்தையும் ஒப்பித்தார். ஸ்டீபன்சன் தொடர்ந்து அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்து, பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டார். ரூஸ்வெல்ட்டின் காதுகளுக்கு அந்தக் கட்டுக்கதைகள் எல்லாம் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். அடுத்ததாக மக்களைப் பீதியாக்க வேண்டுமே???


"அமெரிக்கத் தெருக்களில் வலம்வரும் நூற்றுக்கணக்கான ஜெர்மானிய உளவாளிகள்", "அமெரிக்காவில் கிறிஸ்தவ மதத்தை அழிக்கச் சபதம் பூண்ட ஹிட்லர்", "உலக வரைபடத்தில் பல நாடுகளை 'ஜெர்மன்' என மாற்றி அமைத்து வெளியிட்டு மகிழ்ந்த ஹிட்லர்" என இரும்புக் கை மாயாவி ரேஞ்சிற்கு அமெரிக்கச் செய்தி நிறுவனங்களுக்கு தினம் ஒரு தகவலைக் கசிய விடுகிறார். செய்தி நிறுவனங்களுக்குத் தான் இtaப்படிப்பட்டச் செய்திகள் அல்வா மேட்டர் ஆயிற்றே?! ஊரே பற்றிக்கொண்டது. இப்போது அமெரிக்கா முழுவதும் இரண்டாம் உலகப்போர் பற்றித் தான் பேச்சு.


'எங்களிடம் MI6 என்கிற உலகத்தில் சிறந்த உளவு அமைப்பு உள்ளது. நீங்களும் அது போல் ஆரம்பியுங்களேன்' என அமெரிக்காவிற்கு ஆலோசனையும் தருகிறார்.. அப்படி உருவானது தான் அமெரிக்க உளவு அமைப்பான CIA.


அமெரிக்கர்கள் மத்தியில் பயம் வந்துவிட்டது இப்போது. செய்தித்தாள்களில் வேறு மாதிரி செய்தி கொடுத்தார் ஸ்டீபன்சன் இப்போது. 'ஜெர்மானியப் படையைத் துவம்சம் செய்த இங்கிலாந்து ராணுவம்', 'ஹிட்லரின் பிடியில் இருந்த கிறிஸ்தவர்களைக் காத்த இங்கிலாந்து பாராசூட் வீரர்கள்' என இங்கிலாந்தை ஒரு ஆபத்பாந்தவன் போல் காட்டும்படி செய்தி வருமாறு பார்த்துக்கொண்டார். ஹிட்லருக்கு மட்டுமல்ல அமெரிக்கர்களுக்கும் மூட நம்பிக்கைகள் உண்டென தெரியும் ஸ்டீபன்சனுக்கு. 'ஜோசியர்களின் கணிப்புப்படி ஹிட்லரின் ஆயுசு இன்னும் சொற்பம் தானாம். ஒரு மேற்கத்திய தேசத்தால் தான் ஹிட்லரின் மரணம் நிகழுமாம் - ஆந்தையாரின் நேரடி ரிப்போர்ட்' எனச் செய்தி வெளியிட்டார். 'ஐயா சாமி நீங்க தான் எங்களக் காப்பாத சரியான ஆள்' என அமெரிக்கா இங்கிலாந்திடம் உதவிக்கு வந்துவிட்டது. 75% அமெரிக்கர்கள் இப்போது உலகப்போருக்கு ஆதரவாக. அமெரிக்கா போரில் இறங்குவதாக அறிவித்தது.



அதன் தொடர்ச்சியாக நடந்த பேர்ல் ஹார்பர், ஹிரோஷிமா என அடுத்தடுத்த ரத்தச் சகதிகள் மற்றும் அதற்குப் பிந்தைய வரலாறெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனால் அதற்கு முந்தைய இந்தக் குள்ளநரி விளையாட்டு நாம் அறியாதது. இந்த ஸ்டீபன்சன் நம்ம இயான் ஃப்ளெம்மிங்கிற்கு நண்பர். ஸ்டீபன்சன்னின் திறமைகளைக் கண்டு வியந்து தான் ஃப்ளெம்மிங், ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கினார் எனக் கூறுவோரும் உண்டு.



சாதாரண வதந்திகள், எந்த அளவிற்கு மக்களைப் பீதிக்குள்ளாக்கி, ரத்தக்களறியான  உலகப்போரையே நிகழ்த்தி முடித்திருக்கிறது எனப் பார்த்தீர்களா?? இதனால் அறியப்படும் நீதி என்ன??? வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளையும் செய்திச் சேனல்களையும் தவிர்க்கவும்.

ஆதிக்க சாதி மனோபாவ தமிழ்நாடு!!

Sunday, March 5, 2023

சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் ஏ.டி.எம் மெஷினில் நடந்த கொள்ளைச் சம்பவம் உங்கள் நினைவில் இருக்கலாம். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு எந்தச் சேனலைத் திருப்பினாலும் "ஏ.டி.எம்.மை உடைத்துத் திருடிய வடமாநில கும்பல்", " வடக்கன்ஸின் கைவரிசை" என்று தான் ஓயாமல் செய்தி ஓடியது. அந்தக் கொள்ளைக் கும்பலில் இருந்து ஒவ்வொருத்தனாகப் பிடிபட்டு, அவர்களுடைய பெயர் வெளி உலகிற்குத் தெரிய வந்த போது, வடக்கன்ஸ் வடக்கன்ஸ் என மூச்சுக்கு முன்னூறு தரம் முழங்கிய சேனல்கள் எல்லாம் அமுங்கிவிட்டன. நேற்று கூட ஒருத்தன் அதே வழக்கில் பிடிபட்டான். அவனுடைய பெயரைச் சொல்லக் கூட மீடியாவிற்குத் தயக்கம். அதுவும் போக அவனை வடமாநிலத்தவன் என்றும் அவர்கள் குறிப்பிடவில்லை. வெறும் "திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளி கைது" என பொதுப்படையாகச் செய்தி போட்டார்கள். அது எப்படி வடக்கன், வடநாட்டான் என்றெல்லாம் குத்தப்பட்ட முத்திரை சடக்கென அமுங்கியது?

நம்மூரில் நீங்கள் ஒருத்தனை மதம் பார்த்தோ ஜாதி பார்த்தோ ஒதுக்கினால், ஒதுக்க வேண்டாம், அட்லீஸ்ட் "அவங்க என்ன ஆளுங்க?" எனக் கேட்டாலே உங்களை ஒரு நாகரீகமற்ற நபராகத் தான் பார்ப்பார்கள். அந்த அளவிற்குத் தமிழர்கள் நாம் முன்னேறி வருகிறோம். அனைவரும் படிக்கிறோம், உலக விஷயங்கள் அறிகிறோம், சமநிலை சமுதாயம் என்பதை நோக்கி நகர்கிறோம். அதனால் தான் 90களில் டாமினேட் செய்த ஜாதிக் கட்சிகள் இன்று கூட்டணிக்கு அல்லாடுகின்றன; சொந்தச் சின்னத்தில் அல்லாமல் வேறு சின்னத்தில் நிற்கின்றன. மதத்தை முன்னிறுத்தும் பாஜக போன்றக் கட்சிகள் இன்னமும் இங்கு வளர முடியாமல் தடுமாறுவதற்கும் மதத்தைப் பிரதானமாக அது முன்னிறுத்திவிடுமோ என்கிற ஐயத்தில் தான்.


ஆனால் ஜாதி, மதம் என்கிற பிரிவினைவாதக் கட்டமைப்பை விட்டு வெளியே வரத்துடிக்கும் தமிழகம், மொழி & இனப் பிரிவினைவாதக் கட்டமைப்பிற்குள் விழுவது தான் மிகவும் வருத்தமான விஷயம்.





யோசித்துப் பாருங்கள், நம்மை ஒருத்தன் அடிமை எனப் பேசியதால் அந்த மதத்தையும் அந்த ஜாதியையும் நாம் எவ்வளவு கேவலமாகப் பார்க்கிறோம்? ஒருவரால் கீழ்நிலையில் பார்க்கப்படுவதன் வலியை அறிந்தவர்கள் தானே நாம்? அதே நாம் இன்று வேறொருத்தனை கீழானவனாகப் பார்க்கிறோமே இது ஞாயமா? 


அவன் ஒன்றும் நம்மிடம் திருட வரவில்லையே? உழைத்துத் தானே தின்கிறான்? நாம் உழைக்கத் தயாராய் இருந்தால் அவனுக்கும் நிச்சயம் அந்த வேலை கிடைத்திருக்காது, வந்திருக்கவும் மாட்டானே? நம் சோம்பேறித்தனத்தால், நாம் பார்க்காமல் தவிர்க்கும் வேலையைப் பார்க்க வருபவன் மேல் ஏன் இத்தனை வஞ்சம் நமக்கு? 'தமிழ்நாடு மாதிரி ஒரு வளர்ந்த மாநிலத்திற்குக் போகிறோம். இனி நாம் நன்கு சம்பாதித்து நம் குடும்பக் கஷ்டங்களை எல்லாம் போக்கிவிடலாம்" என எண்ணி வருபவனுக்கு நாம் கொடுக்கும் பரிசு, 'வடக்கன்ஸ்' என்னும் பட்டம், கிண்டல் யூட்யூப் வீடியோஸ் & மீம்ஸ். உச்சகட்டமாக, மீடியாவே அவர்களை "வடக்கன்ஸ்" என அழைப்பது தான். "குண்டு வைப்பவனை மதம் வைத்து அடையாளப்படுத்தாதீர்கள் டோலர்" எனச் சொல்லும் புரட்சியாளர்கள் வட இந்தியரை மட்டும் ஏன் பொதுமைப்படுத்துகிறார்கள் என்னும் சூட்சுமத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.





அவன் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன?


ட்ரெயினில் ரிசர்வ்டு சீட்டில் ஏறி அமர்கிறான். ஓட்டல், கட்டிடக் கூலி, சூப்பர் மார்க்கெட், நூற்பாலை என எங்கும் அவன் தான் வேலை செய்கிறான். குற்றச் செயல் செய்கிறான்.


சாதா டிக்கெட் எடுத்துட்டு ரிசர்வ்டு சீட்டில் பயணிப்பது சட்டபடி குற்றம் தான். ஆனால் அவனைக் குற்றம் சொல்லும் நம்மில் எத்தனை பேர் வரி கட்டி, லஞ்சம் கொடுக்காமல், சாலை விதிகளை மதித்து, ஏமாற்றாமல் வாழ்கிறோம் என மன்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். இது எல்லாவுமே கூடக் குற்றங்கள் தான் சார். அவன் டிக்கெட் எடுக்காம வாரத விட இதெல்லாம் சட்டப்படி மிகப்பெரிய குற்றங்கள். அடுத்தது வேலைவாய்ப்பு. நீங்கள் செய்யாத/செய்ய அதிகம் கூலி கேட்கும் வேலைகளை அவன் செய்கிறான். இதில் என்ன தவறு? வேலை வாய்ப்பு என்பது demand vs supply சார்ந்தது தானே? இரண்டு கடைகள் அருகருகில் உள்ளன. ஒன்று தமிழனது, மற்றொன்று வடமாநிலத்தவரது. நம்மாள் அதிக விலை, நல்ல கஸ்டமர் சர்வீஸ் இல்லை, ஞாயிறு லீவு என இருக்கிறார். அந்த ஹிந்திவாலா கம்மி விலை, நல்ல சேவை & அனைத்து நாட்களிலும் வியாபாரம் என இருக்கிறான். நாம் யாரிடம் பொருள் வாங்குவோம்? அதையே தான் இன்றைய ஓட்டல், கட்டுமான & ஜவுளி முதலாளிகள் செய்கிறார்கள். அடுத்தது குற்றச் செயல்கள். குற்றச் செயல்களை எல்லாம் இனம், மொழி, ஜாதி, மதம் வைத்துப் பார்ப்பதே அபத்தம். அப்படியெல்லாம் பார்த்தால் குண்டு வைப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான். தமிழக ஜெயில்களில் இருப்பதெல்லாம் சில குறிப்பிட்ட ஜாதிப்பிரிவினர் தான். குற்றச் செயல்களைக் குற்றங்களாகப் பார்க்காமல், செய்தவனின் ஜாதி, மத, இன, மொழியை நோண்டுவதைப் போன்ற அசிங்கம் எதுவுமில்லை.


சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் 'இந்தியர்களை வெளியேற்றுவேன்' என பகிரங்கமாகச் சொல்லியே ஒரு ஜனாதிபதி வேட்பாளர் ஓட்டுக் கேட்டார். ஏனென்றால் இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கனை விடக் கம்மிக் கூலிக்கு கம்ப்யூட்டரில் கோட் எழுதத் தயாராய் இருந்தோம். அமெரிக்கனைப் பொருத்தவரை அது கம்மிக் கூலி. ஆனால் நம்மாள் அதே கம்மிக் கூலியைக் கொண்டு இங்கு இந்தியாவில் என்னென்ன வசதிகளோடு குடும்பத்தை முன்னேற்றினான் என்பதையெல்லாம் கடந்த 20,30 ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டு தானே வருகிறோம்? 




நாம் அமெரிக்கா போய் அமெரிக்கனின் கம்பெனியில் வேலை செய்தால் முன்னேற்றம், ஃபாரின் ரிட்டன், ஆன் சைட் ஆஃபர். வளைகுடாவிலும் சிங்கப்பூர் மலேஷியாவிலும் கட்டிட வேலை, ஓட்டல் சர்வர் வேலை, கூலி வேலை செய்வது பெருமை. அதையே வட மாநிலத்தவன் இங்கு செய்தால் அசிங்கம். அப்படித் தானே? நாம் வட மாநிலத்தவனைப் பார்ப்பது போல் தானே, அமெரிக்கனும் ஐரோப்பியனும் நம்மைப் பார்க்கிறான்? நமக்கு ஒரு வடக்கன் மாதிரி, மேற்கத்தியனுக்கு நாம் ஒரு colored தானே? ஒரு இடைநிலை ஜாதிக்காரன் பட்டியலினத்தவரை நடத்துவது போன்ற ஆதிக்கத் திமிரில் தானே நாம் வடமாநிலத்தவரை நடத்துகிறோம்? பின்ன 'தமிழன்னா படிச்சவன்', 'தமிழ்நாடு ஒரு முன்னேறிய மாநிலம்' போன்ற வெற்றுப் பெருமைகளினால் துளிப் பிரயோஜனம் இல்லை.


"எங்கள் மத நூலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்டதைத் தான் இப்போது கண்டுபிடிக்கிறார்கள்" என விமானம் முதல் அணு ஆயுதம் வரை எந்த ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நடந்தாலும் புலங்காகிதப்படும் கும்பல் நம் நாட்டில் உண்டு. அவர்களை நாம் சங்கிகள் என நக்கலாகக் கூறுகிறோம். புத்தர், மஹாவீரர் என அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் மதத்தை ஒரு மதமே இல்லை என ஏசுகிறோம். பூமியில் இருந்து எந்தச் சிலையை எடுத்தாலும் அதைக் கடவுள் எனச் சொல்லும் அவன் ஒரு காட்டுமிராண்டி நமக்கு. இத்தனையும் செய்யும் நாம் தமிழனுக்கு மதமே இல்லை, தமிழ் தான் மூத்த குடி, மொழிகளுக்கெல்லாம் தாய் எனப் பெருமையும் படுகிறோம். அதையே அவன் செய்தால் சங்கி. நாம் அப்போ என்ன மொழிச்சங்கியா?? 


மொழிப் பெருமை பேசும் நம்மில் எத்தனை பேருக்குத் தமிழ் கல்வெட்டுக்களைப் படிக்க முடியும்? நாம் பேசும், எழுதும் தமிழுக்கும் அந்தக் கல்வெட்டுக்கு ஏதாவது சம்பந்தம் உண்டா சொல்லுங்கள்? அட அதை விடுங்கள், 60 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் செய்தித் தாளைப் படிக்க முடியுமா இன்றைய இளைஞர்களால்? பின்ன என்னங்க தமிழ், தமிழன்னு பெருமை? சாதிப் பெருமை, மதவெறி மாதிரி இதுவும் ஒரு வகை வறட்டுப் பிடிவாதம் தானே? அதைத் தாண்டி இந்தப் பெருமையால் நீங்கள் முன்னேறினீர்களா அல்லது உங்கள் மொழி தான் முன்னேறியுள்ளதா? மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதியைத் தவிர ஒருத்தனும் முன்னேறவில்லை என்பதே நிஜம்.


சாதி, மதம் மட்டுமே பிரிவினை அல்ல. இனமும் மொழியும் கூடப் பிரிவினை தான். ஒருத்தனைச் சாதி, மதம் பார்த்து ஒதுக்கினால் மட்டுமே எனக்குள் இருக்கும் புரட்சிக்காரன் பொங்கி எழுவான்; அதுவே மொழி&இனம் பார்த்து ஒருத்தனை ஒதுக்கினால், எனக்குள் இருக்கும் புரட்சிக்காரன் படுத்துறங்கிவிடுவான் என்பது என்ன ஞாயம்? இதென்ன புதுவகையான புரட்சிப் பிரிவினைவாதமா? மனிதம் என்பதற்கு மொழி & இனம் மட்டும் விதிவிலக்கா என்ன? பிரிவினைவாதம் எந்த வகையில் பேசினாலும் அது மனிதத்திற்கு இழுக்கு தானே? தமிழன் என்பதற்காக ஒருத்தன் பேசும் பிரிவினைவாதத்தைக் கை கொட்டி ரசித்தால், "என் சாதி", "என் மதம்" எனப் பிறர் பிரிவினைவாதம் பேசுவதைத் தட்டிக் கேட்க நமக்கு என்ன அருகதை உள்ளது சொல்லுங்கள்.




ஒரு கொள்ளை வழக்கில் சந்தேகப்படும் நபர் வடமாநிலத்தவர் என்பதற்காக மூச்சுக்கு முன்னூறு தரம், அவனை இனத்தால் பொதுமைப்படுத்தி, வடக்கன் வடக்கன் எனச் சொல்வது உங்களுக்குச் சரியெனப் படுகிறதா? சரி, அப்படியானால் அவன் பிடிபட்ட பின், அவனுடைய பெயர் ஒரு இஸ்லாமியப் பெயராக இருக்கும் சூழலில் ஏன் எந்த பொதுப் பெயரும் வைத்து அழைக்கவில்லை? அட வட மாநிலத்தவர் என்று கூட இப்போது அவர்களைச் செய்திச் சேனல்கள் சொல்வதில்லை. ஜஸ்ட், "முக்கியக் குற்றவாளி கைது" என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மதத்தால் பிரிவினை பேசுவது தப்பு எனத் தெரிந்திருக்கும் மீடியாவிற்கு இனத்தால் பிரிவினைவாதம் பேசுவது மட்டும் சரியாகப் படுகிறது போல.


தமிழர்கள் இது போன்ற ஆதிக்க சாதி மனோபாவத்தில் இருந்து வெளிவர வேண்டும். இல்லையென்றால் மொழியை வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின் ஆயுதங்களாக்கி விடுவார்கள் நம்மை. நமக்கு மேலும் எவனும் இல்லை, கீழும் எவனும் இல்லை என்பதை உணர்ந்து மனிதனாக நடக்க முயற்சிப்போம். பெருமை என்பது நாம் பிறந்த ஜாதியிலோ, பின்பற்றும் மதத்திலோ, பேசும் மொழியிலோ, வாழும் இனத்திலோ இல்லை. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது.





'அமெரிக்கர் வேலை அமெரிக்கருக்கே. இங்கிருக்கும் இந்தியர்களை விரட்டிவிடுவோம்' எனப் பேசி ஓட்டு கேட்ட அந்த ஜனாதிபதி வேட்பாளர் உலக அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட்டார். உள்நாட்டில் மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள். சமூக வலைதத்தில் அவரை ஒரு காமெடிப் பீஸாக்கினார்கள். தமிழர்களுக்கும் அதே அளவு பக்குவம் வர வாழ்த்துகள்.

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One