ஹலால் - உலகின் மூன்றாம் பெரிய வல்லரசு பொருளாதாரம்!!

Wednesday, May 31, 2023

 ஓட்டல்களில் நீங்கள் 'ஹலால்' என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். முஸ்லிம்கள் உண்ணத் தகுதியான உணவு என்பதற்கான அத்தாட்சி/சான்றிதழ்/அறிவிப்பு தான் இந்த ஹலால் என்கிற அளவில் தான் நம்மில் பலரும் இதைப் பற்றி அறிந்து வைத்திருப்பபோம். ஆனால் இந்த ஹலால் ஒரு மிகப்பெரிய வணிகச் சக்கரம் என்பது புதிய & ஆச்சரியமான விஷயம். அதாவது ஆண்டுக்குத் தோராயமாக 4-7ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்த ஹலால் பொருட்களின் வணிகம் இருக்கும் எனக் கணிக்கிறார்கள். 4 ட்ரில்லியன்னா எவ்வளவு? பெரிய அளவெல்லாம் இல்லை,  ஜஸ்ட் நம் இந்திய நாட்டின் ஓராண்டு ஜிடிபியை விடக் கொஞ்சம் அதிகம், அவ்வளவு தான். கொஞ்சம் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ஹலால் வணிகத்தை உலக நாடுகளின் ஜிடிபியோடு ஒப்பிட்டால், மூன்றாம் அல்லது நான்காம் இடம் பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு வல்லரசு நாட்டின் பொருளாதாரத்திற்குச் சமம் இந்த ஹலால் வணிகம்!!



ஒரு காலத்தில் உணவில் மட்டுமே இருந்தது, பின் ஆடை, அழகு சாதனப் பொருட்கள், டூர் பேக்கேஜுகள், அவ்வளவு ஏன், உயிர் காக்கும் மருந்துகளில் கூட ஹலால் வந்து விட்டது. இஸ்லாமியச் சமூகம், தன் பொருளாதாரம் வெளியே சென்று விடாமல், தனக்குள் மட்டுமே சுற்றிக்கொண்டு, தன் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கைக் கொடுக்கவே இந்த ஹலால் என்னும் வணிகத்தை முன்னெடுக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். அதனால் தான், குரான் காலத்தில் இல்லாத பொருட்களுக்கு எல்லாம் கூட ஹலால் எனக் கூறி வியாபார வட்டத்திற்குள் இழுக்கிறார்கள். உதாரணம், அழகு சாதனப் பொருட்கள்.




ஹலால் தரச்சான்று பெறுவதும் வணிகமயமாகி விட்டது. நாம் வண்டிக்கு இன்சூரன்ஸ் ரெனியூ செய்வது போல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹலால் தரச்சான்று தரும் அமைப்பிற்கு 15000 கொடுத்து ரெனியூ செய்து கொள்ள வேண்டும். அதில் ஒவ்வொரு பொருளையும் இணைக்க, ஒவ்வொரு பொருளுக்கும் தனியாக இவ்வளவு பணம் என்றும் கட்ட வேண்டும். நேரடியாக வேலை வாய்ப்பு (இஸ்லாமியர் மட்டுமே ஹலால் சடங்கைச் செய்ய இயலும்), மறைமுகமாக அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி என இது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இன்றைய தேதியில் உலக வல்லரசுகள் எல்லாம் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்காமல் இருந்தாலே போதும் எனத் திணறும் போது, ஹலால் பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் கிட்டத்தட்ட 11%!!! எந்த வல்லரசு நாடும் அந்த அளவில் வளருவதில்லை.


உலக இஸ்லாமிய மக்கள் தொகை 180கோடி. அதுவும் பரவலாக பல தேசங்களில் பிரிந்து வாழும் இனம். இந்துக்கள் போலோ, அமெரிக்க ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் போலோ ஒரே இடத்தில் குவிந்திருக்கும் மக்கள் தொகை அல்ல. இப்படிப்பட்ட பரவலான மக்கள் தொகை, ஒற்றுமையாக ஒரு மதப்பொருளாதார வல்லரசை உருவாக்கியிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். தமிழகத்தில் கூட நாடார் இனம் இது போன்ற ஒரு முன்னெடுப்பைச் செய்து தான் தன் சமூக அந்தஸ்தை உறுதி செய்து கொண்டது என்றாலும், நாடார்களின் 'மகமைபண்டு' ஹலால் அளவிற்குக் கண்டிப்பானதோ, கட்டாயமானதோ, உக்கிரமானதோ, அசுர பலமானதோ அல்ல.. ஹலால் சரி, தப்பு என்கிற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இதை அவர்கள் இன்று ஒரு விருட்சமாய் வார்த்து எடுத்திருப்பதை தான் ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்.



கிட்டத்தட்ட 1500 வருடத்திற்கு முந்தைய கலாச்சாரத்தை, தன் புனிதநூல் சொல்லியிருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர்கள் பலர். ஆனால் மாறி வரும் உலகப் பொருளாதாரச் சூழலில், குரானை அட்சரம் பிசகாமல் அப்படியே பிடித்துக் கொண்டிருக்க முடியாது என அந்த ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமியர்களே கொஞ்சம் வளைத்துக் கொண்டது இரண்டே இரண்டு விஷயங்களில் தான். ஒன்று பணம், இன்னொன்று ஹலால். மனித முகம் இருக்கும் எதுவும் இஸ்லாத்தில் ஹராம் என்றாலும், பணத்தில் காந்தி, ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃப்ரான்க்ளின் என இருக்கலாம், அதெல்லாம் ஹராம் ஆகாது. குரானை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்தால் இன்று இஸ்லாமியர் ஒருத்தரும் கரன்ஸியைப் பாவிக்க முடியாது. அதே போல் குரான் காலத்தில் இல்லாத, குரானில் சொல்லப்படாத மருந்துகள், வெளிநாட்டு சுற்றுலா, மேக்-அப் சாதனங்கள், மீடியா, அவ்வளவு ஏன், அப்பார்ட்மெண்ட் வரை அனைத்தையும் ஹலால் என அடையாளப்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு பிரித்தது. இந்த இரண்டு சமரசங்களால் தான் இஸ்லாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறியிருக்கிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை அடிப்படைவாதத்தில் இருந்தும் வெளிவர உதவினால் மகிழ்ச்சி.



ஒரு சின்ன விண்ணப்பம். இந்த ஹலால் கலாச்சாரம் இத்தோடு நின்று கொண்டால் தேவலை. ஹலால் தெரு, ஹலால் காலனி, ஹலால் ஊர், தேசம், ஹலால் உத்தியோகம், ஹலால் கார், ஹலால் பள்ளி, ஹலால் தியேட்டர் என இன்னமும் விஸ்திகரித்துக் கொண்டே போகாமல் இருப்பது நலம். இல்லையென்றால் ஏற்கனவே கடந்த 10-15 ஆண்டுகளாக சமூகக் கட்டமைப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கும் இஸ்லாமியச் சமூகம், இன்னும் அதிகமாக விலகி தனித்து விடப்பட்டிருக்கும். இன்றைய நாகரிக யுகத்திற்கு அது எந்த வகையிலும் பயனற்றதாகவும் அச்சுறுத்தல் தருவதுமாகவே இருக்கும்.

கிறிஸ்தவ மதம், இந்து வாழ்க்கை முறை - பரதவர்கள்

Tuesday, May 30, 2023

தூத்துக்குடிப் பகுதியில் மீன்பிடிக்கும் தொழில் செய்யும் கிறிஸ்தவர்கள் (பரதவர்கள்) கொழும்பு நடை செல்லும் போது, மணப்பாடு எல்லை வந்ததும் “மச்சானுக்கு ஒரு காய்” என்றும், குமரியை நெருங்கும் போது “ஆத்தாவுக்கு ஒரு காய்” என்றும் வேண்டிக்கொண்டு தேங்காய் உடைக்கிறார்கள். கிறிஸ்தவக் கலாச்சாரத்தில் தேங்காய் உடைப்பது எப்படி வந்தது? இதில் இன்னொரு விசயம், அந்த மச்சானும் ஆத்தாவும் யார்? பல பரதவர்களுக்குமே இது தெரியாது. பாரம்பரியமாகத் தங்கள் முன்னோர்கள் செய்ததை இன்று வரை தொடந்து கொண்டிருக்கிறார்கள்.


மச்சான் என்பது பரத்தியான வள்ளியை மணந்த முருகனையும், ஆத்தா என்பது குமரிக்கடல் ஆத்தாவையும் குறிக்கிறது. ஒரே ஒரு தேவனான ஏசுகிறிஸ்துவைக் கும்பிடும் பரதவர்களுக்குக் கடலில் பாதுகாப்புக்கு எப்படி முருகனும் குமரியாத்தாவும் வந்தார்கள்!! சொல்கிறேன்.



பிரிட்டீஷாருடன் கடல் உரிமைக்காக நடந்த சண்டையில் பரதவர்களுக்குப் போர்த்துக்கீசியர்கள் உதவினர், ஆனால் ஒரு நிபந்தனையுடன். அதாவது அவர்களின் உதவிக்குப் பிரதியுபகாரமாக பரதவர்கள் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்பது தான் அது. அந்தச் சண்டையில் பரதவர்கள் வென்றனர், பிரிட்டீஷார் பின் வாங்கினார். முடிவில், மணப்பாடு போர்த்துக்கீசியர் கைகளில்; பரதவர்களுக்கு மீன் பிடிக்க இருந்தத் தடை விலகியது; சொன்னபடி அவர்களும் மதம் மாறினர். மதம் மாறிய பரதவர்கள் மேல் போர்த்துக்கீசியர்களுக்கு இன்னும் ஏனோ நம்பிக்கை வரவே இல்லை. இவர்கள் மீண்டும் இந்து மதத்திற்குத் திரும்பிவிடுவார்களோ என்கிற பயம் இருந்துகொண்டே இருந்தது. அப்போது போர்த்துக்கீசியர்கள் இவர்களிடம் “நீங்கள் மிகப்பெரியதாக மதிக்கும் ஒருவர் மேல் சத்தியம் செய்து நாங்கள் மீண்டும் இந்து மதத்திற்குப் போக மாட்டோம் என உறுதி அளியுங்கள்” எனக் கேட்டிருக்கிறார்கள். அப்போது பரதவர்கள் எப்படி சத்தியம் செய்தார்கள் தெரியுமா? "குமரியாத்தாவின் மீது சத்தியமாக நாங்கள் கிறிஸ்தவர்கள் தான்" என!! 



பெரிய பெரிய மீன்கள் தங்கள் படகையோ தங்களையோ தாக்க வரும் போது இப்போதும் “குமரியாத்தா மேல் சத்தியமாகச் சொல்கிறேன் என்னால் உனக்கோ உன்னால் எனக்கோ எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்கிறார்கள். பரதவர்கள் கிறிஸ்தவத்தை மதமாக எடுத்துக்கொண்டார்கள், அதில் வீம்பாகவும் இருக்கிறார்கள். ஆனால் முருகனையும் குமரியாத்தாளையும் வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களையே அறியாமல் அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.


மதம் மாறுவதற்கு முன்பு வரை நிலத்தில் பரதவர்களின் ஆஸ்தான தெய்வம், தூத்துக்குடி பகுதியின் தாய் முத்தாரம்மன் தான். ஒவ்வொரு ஆண்டும் தேர்த் திருவிழாவில் பரதவர்கள் தான் அம்மனை சப்பரத்தில் தூக்கி வைப்பார்கள். மதம் மாறிய பின் அவளைப் பரதவர்கள் கண்டுகொள்ளவில்லை. 'ஏசுவைத் தவிர ஏனைய அனைத்தும் கற்சிலைகள் தான்' என மூளையில் ஏற்றப்பட்டுவிட்டதால் ஒவ்வொரு ஆண்டும் முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழாவிற்கு அவர்கள் வருவதை நிறுத்திவிட்டார்கள். அந்த ஆண்டு சப்பரத்தில் ஏற்றுவதற்காக முத்தாரம்மனைத் தூக்க ஊர் மக்கள் முயல்கிறார்கள். 10 பேர், 20 பேர், எத்தனை பேர் வந்தும் முடியவில்லை. பூசாரி சில சாங்கியங்கள் செய்தும் பலனில்லை. கடைசியில் ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பரதவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் கோவிலுக்கு வரச் சம்மதிக்கவில்லை.



கடைசியாக, அலேக் பிச்சை என்னும் பரதவர் மட்டும் வர ஒத்துக்கொண்டார். கோவிலில் வந்து அம்மனின் மேல் அவர் கை படுகிறது. ஆத்தா அப்படியே ஒரு பஞ்சு மூட்டை போல் துள்ளிவந்து சந்தோசமாகச் சப்பரத்தில் அமர்ந்து கொண்டாளாம். அலேக் பிச்சை கோவிலுக்குப் போனது தெரிந்ததும், “நீ எப்படி வேறு மதத்தைச் சேர்ந்த கடவுளைத் தொட்டு வணங்கலாம்?” எனக் கேள்வி கேட்டு கிறிஸ்தவர்கள் எல்லாம் அவரை ஊரை விட்டுத் தள்ளிவைத்தார்களாம்!!


என்ன ஒரு முரண் பார்த்தீர்களா??? யார் யாரைத் தள்ளி வைப்பது?!?!


- சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களின் பேச்சில் இருந்து.

கமலை விடப் பெரிய வேஷதாரியா போஸ்?!?!

Friday, May 12, 2023

சுபாஷ் சந்திரபோஸ் தவிர்த்து இன்னொரு போஸ் இருந்தார், உங்களுக்குத் தெரியுமா? என்னது, தென்னகத்து போஸ் ஐயா முத்துராமலிங்கத் தேவரா? உஷ்ஷ்ஷ். சரி, அவரையும் தவிர இன்னொரு போஸ் இருந்தார்.. அவர் தான் ராஷ் பெஹாரி போஸ். இவரால் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் INAவிற்கு தலைமை ஏற்றார் என்றால் நம்ப முடிகிறதா?



போஸ் என்னும் பெயர் ராசிப்படி இவரும் வங்காளத்தைச் சார்ந்தவர் தான். சுதந்திரத்திற்காக தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர் தான். அதன் ஒரு பங்காக இந்திய வைஸ்ராய் ஹார்டிங்கைக் கொல்லத் திட்டம் தீட்டினார்.


1912ம் ஆண்டில் புதுடில்லி உருவாக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக ஹார்டிங்கும் அவரின் மனைவியும் யானையின் மீது கம்பீரமாக வர, அவர்களின் பாதுகாப்பிற்காக 3000 பிரிட்டிஷ் படை வீரர்களும் வந்தார்கள். வைஸ்ராயின் பாதுகாப்புக்காக உயரமான கட்டிடங்களில் யாரும் இருக்கத் தடை செய்யப்பட்டிருந்தது. இது போக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு காவலர் நின்று கொண்டிருந்தார். இத்தனைப் பாதுகாப்பு கொடுத்த தைரியத்தில் ஹார்டிங் கம்பீரமாக இந்தியர்களைப் பார்த்தபடியே யானையில் வந்தார். அப்போது அருகில் இருந்த மணிக்கூண்டில் இருந்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அந்த இடத்திலேயே பாகன் உடல் சிதறி இறந்தான். ஹார்டிங் மற்றும் அவனது மனைவி படுகாயங்களுடன் தப்பித்தனர். அப்படியே கட் செய்தால் டெராடூன் நகரம்.



அந்தக் குண்டுவீச்சிற்கு முழுத் திட்டமும் போட்டுக்கொடுத்த ராஷ்பெஹாரி போஸ் ஒன்றுமே தெரியாதது போல் டெராடூனில் தன்னுடைய காட்டிலாகா அதிகாரி வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். இவர் தான் முக்கியக் குற்றவாளி எனக் கண்டுபிடித்த பிரிட்டீஷ் அரசாங்கம் அவரைப் பிடிக்க விரைந்தது. அங்கு கிடைத்தது என்னவோ கொஞ்சம் பேப்பரும் பேனா மைப்புட்டியும் தான். போஸ் அங்கிருந்து ஏற்கனவே தப்பி லாகூர், பின் வங்காளம் என தன் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். ”நினைத்த நேரத்தில் உருவத்தையும் இடத்தையும் மாற்றிக்கொள்ளும் மாயாவியைப் போல் இருந்தார்” என்று அன்றைய போலீஸ் குறிப்புகள் இவரைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இவரது மாறுவேடங்கள் எல்லாம் சினிமாக்கதைகளை விட சுவாரசியமானவை.


ஓடும் ரயிலில் போலீஸ் சுற்றி வளைத்த போது, ஒரு துறவி போல் சாந்தமான வேடமிட்டுத் தப்பித்திருக்கிறார். இன்னொரு முறை பிரிட்டிஷ் அதிகாரியின் குதிரை வண்டி ஓட்டுனர் போல் வேடமிட்டு அந்த அதிகாரி கூடேயே சென்று தப்பித்திருக்கிறார். இரவு நேரம் தன்னைப் பிடிக்க வந்தக் காவலர்களிடம் செத்துப் போன ஒரு கிழவனின் ஆவி போல் பயமுறுத்தித் தப்பித்திருக்கிறார். பிறிதொரு முறை, தன்னைத் தேடிக்கொண்டிருந்த அதிகாரிகளிடமே சென்று, ஒரு ஜோசியன் போல் ’நீங்கள் ராஷ்பெஹாரியைத் தானே தேடி வந்திருக்கிறீர்கள்? எல்லாம் எனக்குத் தெரியும். நாளை அவன் நிச்சயம் உங்கள் கைகளில் தான். மேற்கே சென்று தேடுங்கள் வெற்றி நமதே’ என்று கூறிவிட்டு கிழக்கே சென்று தப்பிவிட்டார். இந்தியாவில் இருந்தால் இப்படித்தான் ஓயாமல் டார்ச்சர் செய்வார்கள் என்று உணர்ந்து, கல்கத்தாவில் இருந்து கப்பலில், தாகூரின் செயலாளர் எனக் கூறி சிங்கப்பூர் வழியாக ஜப்பானுக்குப் போய்விட்டார்.



ஜப்பான் பல்கலையில் இருந்த சில கேரள மாணவர்களோடு சேர்ந்து கொண்டு அந்த வளாகத்திற்குள்ளேயே கொஞ்ச நாட்கள் சுற்றியிருக்கிறார். இங்கும் பிரிட்டிஷ் மோப்பம் பிடித்து வந்துவிட மேக் அப் கிட்டுக்கு மீண்டும் வேலை கொடுத்தார். புத்தத் துறவி, டீக்கடை நடத்துபவர், கூலி, நாடக நடிகர் எனப் பல வேஷம் போட்டுத் தப்பிவிட்டார். கடைசியாக டோக்யோவின் பிரபலமான நகமுரயா என்னும் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். உணவக ஓனரின் பெண் மீது காதல் வந்தது. ஜப்பான் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் பிரிட்டிஷ் போலீஸ் ஓவராக நோண்டாது என்பதைப் புரிந்துகொண்டு அந்தப் பெண்ணையே திருமணமும் செய்துகொண்டார். அந்த ஓட்டலில் நிறைய இந்திய உணவு வகைகளை அறிமுகம் செய்து பிரபலப்படுத்தியிருக்கிறார். இன்றும் அந்த ஓட்டலில் இந்திய உணவுகள் பிரசித்தம் என்கிறார்கள். யாராவது ஜப்பான் போனால் கொஞ்சம் இந்திய பிரியாணி வாங்கிட்டு வாங்க நகமுரயா ஓட்டலில். சரி, இப்ப மெயின் மேட்டர்.



பிரிட்டீஷாரின் பார்வை இவர் மீதிருந்து கொஞ்சம் அகண்டதும், ஜப்பான் சிறையில் போர்க்கைதிகளாக இருந்த இந்தியர்களையும் விடுதலை வேட்கை கொண்ட பலரையும் வைத்து ஒரு சுதந்திரப் போராட்ட படையை உருவாக்கினார். அந்தப் படைக்கு இந்திய தேசிய ராணுவம் (INA) எனப் பெயர் வைத்தார். தன்னைப் போலவே சுதந்திர வேட்கை கொண்டப் போராளியான நேதாஜியை அழைத்துத் தலைமைப் பதவியைக் கொடுத்தார் ராஷ்பெஹாரி போஸ். அதன் பின் INAவின் வரலாறு பலவும் நமக்குத் தெரியும். ஜப்பான் படைகளின் சொதப்பலால் INA சின்னாபின்னமானது. இந்த இரண்டு போஸ்களின் கனவும் கொஞ்சம் தள்ளிப்போனது. இந்திய சுதந்திரத்தைக் காணாமலேயே, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் மரணமடைந்தார் ராஷ்பெஹாரி போஸ்.


வழக்கம் போலவே இவரின் சாதனைகளும் சாகசங்களும் மழுங்கடிக்கப்பட்டு இப்படி ஒருத்தர் இருந்ததே தெரியாத அளவிற்கு நம் வரலாறும் எழுதப்பட்டு விட்டது. அதாவது பிரிட்டிஷால் நேரடியாகவோ மறைமுகமாகவோ தோற்கடிக்கப்படாத அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறும் நமக்கு மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன. அதற்கு ராஷ்பெஹாரி போஸும் விதிவிலக்கல்ல. ஆனால் ஒரு நல்ல கமர்ஷியல் சினிமாவை விட பரபரப்பான திருப்பஙகளைக் கொண்டிருந்தது தான் ராஷ்பெஹாரியின் சுதந்திரப் போராட்டம். 



இந்திய சுதந்திரம் என்பது எந்த ஒரு குடும்பமோ தனி நபரோ பெற்றுத் தந்ததல்ல. இது போன்ற எண்ணற்ற நபர்கள் மண்ணை, குடும்பத்தை, சொந்தத்தை மறந்து, போராடி பெற்றுத் தந்தது என்பதை மறக்க வேண்டாம்.

இந்தியாவின் காலனியாதிக்கம்!!

Monday, May 8, 2023

1947, ஆகஸ்ட் 15ல் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், நமக்கு பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த நாள். In other words, பிரிட்டீஷ்காரன் தனக்குக் கீழ் இருந்த இந்தியப் பகுதிகளை காங்கிரஸிடம் ஒப்படைத்து விட்டு அதிகாரப்பூர்வமாகக் கிளம்பிய நாள். பாகிஸ்தான், பங்களாதேஷ் எனக் கடித்துக் குதறியும், காஷ்மீர், ஜுனாகட், ஹைதராபாத் என நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை என்ன செய்வது எனச் சொல்லாமலும் அப்படியே அவர்களும் கிளம்பிவிட்டார்கள், நேரு மாமாவும் கிடைத்தது போதும் எனத் திருப்திப்பட்டுக் கொண்டார். இரும்பு மனிதர் படேல் தான் காஷ்மீர் முதலான பல சமஸ்தானங்களை, ஆடியும் பாடியும் அடித்தும் கறந்து இந்தியாவுடன் இணைத்தார். இதெல்லாம் நம்ம பத்தாங்கிளாஸ் ஹிஸ்ட்ரியில் படித்த ஞாபகமும் உங்களுக்கு இருக்கலாம்.



சரி பிரிட்டீஷ்காரன் ஆண்ட பகுதியையும் அவனுக்குக் கப்பம் கட்டி சொகுசாக வாழ்ந்த ராஜாக்களின் சமஸ்தானங்களையும் இந்தியாவாக்கி விட்டோம். ஆனால் இந்தியா என்பது பிரிட்டீஷிடம் மட்டும் அடிமையாக இல்லையே?! போர்த்துக்கீசியரும் ப்ரென்ச்சுக்காரர்களும், அழகான தேகத்தில் துருத்திக்கொண்டு தெரியும் சிறு தழும்பு போல நம் சுதந்திர நாட்டில் அங்கங்கு காயத்தழும்பாக இருந்தார்களே?! ஏனோ நேருவுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் அதில் பெரிதாக அக்கறையோ, அந்த மக்களின் சுதந்திரம் பற்றிய கவலையோ இல்லை. போர்த்துக்கீசியர் ஆதிக்கப் பகுதி மக்கள் தங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் எனக் கேட்டாலும் அந்த தேசம் அதைக் காதிலேயே வாங்கவில்லை. இந்தியாவில் அமைந்த புது அரசாங்கமும், 'போர்த்துக்கீசியப் பகுதியை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம், கோவா, டையூ டாமன் & தாத்ரா நகர்ஹவேலி பகுதியில் போர்த்துக்கீசிய நாட்டிற்கு இருக்கும் ஆட்சி அதிகார உரிமையை நாங்கள் மதிக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது!! கையில் இத்தனை பெரிய நிலப்பரப்பு இருக்கும் போது, அல்பமாக கோவா, டையூ, டாமன், தாத்ராநகர் ஹவேலி பற்றியெல்லாம் எவனாவது யோசிப்பானா?


ஆனால் RSS யோசித்தது. இந்தியா என்பது அதன் ஒவ்வொரு பிடி மண்ணும் அந்த ஒவ்வொரு பிடி மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.  ஆரம்பத்தில் நேருவிடம் சொல்லிப் பார்த்தது RSS. அவருக்கு பாகிஸ்தான் & காஷ்மீர் பிரச்சினையே போதுமானதாக இருந்ததால் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பார்த்த சங்கத்தினர் 1954ல் களத்தில் இறங்கினர். 


நானா கஜ்ரேகர் மற்றும் ராஜா வகாங்கர் என்னும் இரு உறுப்பினர்கள் கள நிலவரத்தை ஆராயச் சென்றனர். Azad Gomantak Dal மற்றும் National Movement Liberation Organization ஆகிய இரு சுதந்திரப் போராட்ட அமைப்புகள் RSSக்கு உதவ முன்வந்தன.


தாத்ரா ஒரு சிறிய ஊர். அங்கு நிர்வாகம் என்பது, ஒரு போலீஸ் ஸ்டேசன் & அதன் 3 காவலர்களை நம்பியே இருந்தது. அதைத் தகர்த்தால் தாத்ரா இந்தியர்கள் கையில். ஜூலை 21 இரவு 1955, காவல் நிலையம் தாக்கப்பட்டு தாத்ரா காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, அது இந்தியாவோடு இணைக்கப்பட்டது. சரியாக ஒரு வாரம், ஜூலை 28ல், அதன் தலைநகர் சில்வாசாவிலும் இதே போன்ற தாக்குதல். போர்த்துக்கீசிய அதிகாரிகள் சரணடைந்தனர். இப்போது தாத்ரா நகர்ஹவேலி இந்தியா வசம். ஒரு தழும்பு மறைந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் பெரிய தழும்பு தெற்கே கோவாவில் இருந்தது.


ஏற்கனவே Inquisition மூலம் தன் அடையாளம், கலாசாரம் என அனைத்தையும் இழந்து இருந்தது கோவா. பிரதமர் நேருவிடம், RSS பல முறை, கோவா மேல் சிறு ராணுவ நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் அதை எளிதாக இந்தியாவுடன் இணைத்து விடலாம் என வற்புறுத்தியது. அவருக்கு அதில் நாட்டமில்லை. அதற்காக எத்தனை நாள் அந்நியர்களை நம் மண்ணின் ஒரு பகுதியை இன்னமும் ஆள விடுவது? ஜெகன்னாத் ராவ் ஜோஷி என்கிற RSS தலைவர் பார்த்தார், 1955ம் ஆண்டு நேராக கோவா சென்று சுதந்திரம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம் செய்ய ஆரம்பித்தார். அவரைப் போர்த்துக்கீசிய அரசாங்கம் கைது செய்தது. பொதுமக்களும் RSS தொண்டர்களும் சத்தியாகிரம் செய்ய இறங்கினார்கள். 1955, ஆகஸ்ட் 15 அன்று கிட்டத்தட்ட 3000 பேர் மக்கள் கோவாவிற்குள் விடுதலை கோஷ்த்துடன் நுழைந்தார்கள். வெறிகொண்ட போர்த்துக்கீசிய அரசாங்கம் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 30 இந்தியர்கள் பலியாயினர். ஆனாலும் நேரு எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார். ஏனென்றால் கொலை நடந்தது கோவா என்னும் அந்நிய நாட்டில் (!!!!) என்பதால்.


தாத்ரா நகர்ஹவேலி கைப்பற்றல், இப்போது இந்தச் சம்பவம் என போர்த்துக்கீசிய & இந்திய அரசாங்கங்களுக்குள் உரசல் எழ அனைத்து முகாந்திரமும் அமைந்தன. இந்தியர்கள் ஒரு வேளை ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது எனப் பயந்த போர்சுகல், ஐநா சபை உதவியை நாடியது, 'எங்கள் மேல் இந்திய அரசாங்கம் எந்த ராணுவ நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது' என. 1961 நவம்பரில் இந்தியப் பகுதியில் இருந்து கோவாவின் பகுதிக்குச் சென்ற பயணியர் படகை ராணுவப் படகு என நினைத்து சுட்டு வீழ்த்தி ஒரு மிகப்பெரிய தவறை, பதட்டமான சூழலில் செய்து தானாக மாட்டிக்கொண்டது போர்த்துக்கீசிய அரசு. இதற்கு மேலும் அமைதி காத்தால் பெயர் கெட்டுவிடும் என நினைத்த நேரு,  'ஆபரேஷன் விஜய்'யை செயல்படுத்தினார். கோவா வீழ்ந்தது.


இந்தச் சம்பவங்களைப் பற்றிப் படித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்த ஒரு விஷயம், நான் முதலில் சொன்னேனே,  'போர்த்துக்கீசியப் பகுதியை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம், அவர்களின் ஆட்சி அதிகார உரிமையை நாங்கள் மதிக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாக இந்தியா தெரிவித்திருந்தது தான். இந்த ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு, போர்த்துக்கீசிய அரசாங்கம் ஐநா சபை, உலக நீதிமன்றம் வரை சென்றது. கோவா & தாத்ராவை இந்தியா தன்னோடு இணைத்துக் கொண்டது, 'காலனி ஆதிக்க மனோநிலை' என போர்ச்சுகல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் குற்றம் சொன்னது தான் இதில் மிகப்பெரிய துயரம்.

1498ல் இந்தியாவுக்குள் வியாபாரம் என்னும் பெயரில் அதிகாரம் செலுத்த வந்த போர்த்துக்கீசியன், நம் மும்பையை ஆங்கிலேயனுக்குக் கல்யாணச் சீராகக் கொடுத்த அதே போர்த்துக்கீசியன் சொன்னான், இந்தியா கோவாவைத் தன்னோடு இணைத்தது காலனியாதிக்கம் என்று. இதைத் தான் கலீஜர் சொல்வார் 'ஊரான் வீட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையே' என.


கடைசியில் ஒரு வழியாக 1974ல் கோவா இந்தியப் பகுதி தான் என ஒத்துக்கொண்டது போர்ச்சுகல். இப்போது நாம் பார்க்கும் இந்திய வரைபடம் முழுமையுற்றது இப்படித்தான். நடுவில் நடந்த சீனப்போரை மறந்துவிடலாம், கம்மீக்கள் பாவம்.

"அவர்கள்" விவேகானந்தர் பாறையையும் விட்டு வைக்கலையா???

Sunday, May 7, 2023

 அது 1962ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்ப முடிவு செய்கிறார்கள். விவேகானந்தர் என்றாலே குமரி தானே? கன்னியாகுமரியில் அவர் தவம் செய்த ஸ்ரீபாதப்பாறையில் எழுப்பலாம் என ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தேவி கன்னியாகுமரி, சிவபெருமானை மணப்பதற்காக தவமிருந்த பாறையும் அது தான். அங்கிருக்கும் பாதத்தடம் அவளுடையது தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதனால் தான் அது ஸ்ரீபாதப்பாறை. அங்கு மண்டபம் எழுப்பக் கோவில் குழுவினரும் சம்மதித்து விட்டார்கள்.



அது எப்படி எல்லாம் நல்லபடியாகப் போகலாம்?? இந்துக்களின் நம்பிக்கைகள், மதநூல்களின் நல்ல கருத்துக்களை எல்லாம் உருவி தன்னிது எனச் சொல்லிக்கொள்ளும் மதமாற்ற மாறுவேட மதம் ஒன்று இருக்கிறதல்லவா? அது இப்போது தன் குயுக்தியை ஆரம்பிக்கிறது. ‘அது ஸ்ரீபாதப்பாறை அல்ல. நானூறு வருடங்களுக்கு முன் மதம் மாற்ற வந்த புனித சேவியர் ஜெபம் செய்த பாறை அது. அது எங்களுக்குத் தான் சொந்தம்’ என இரவோடு இரவாக ஒரு சிலுவையை நட்டுவைத்து விட்டார்கள். சிலுவை என்றால் சாதாரணமாக இல்லை, கரையில் இருந்து பார்த்தாலே தெரியக்கூடிய அளவு பெரிதாக. ரஜினி முருகனில் வரும் அதே ஏழரை மூக்கன் டெக்னிக் தான்.




இப்போது இந்து, கிறிஸ்தவ மதப்பிரச்சினையாக இது மாற ஆரம்பிக்கிறது. மாறி மாறி போஸ்டர், கண்டனக் கூட்டம் என நடக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் அல்திரு.பக்தவத்சலம், ஒரு விசாரணைக் குழுவை அனுப்புகிறார். விசாரணை முடிவில் கிறிஸ்தவர்களுக்கும் அந்தப் பாறைக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிய வருகிறது. வருவாய்த்துறை மூலம் சிலுவையைப் பெயர்த்து எடுக்க ஆணை போகிறது. விடுவார்களா? கேரளாவில் இருந்து ஒரு கிறிஸ்தவ அமைப்பு மீடியாவைத் தூண்டி விடுகிறது. ‘பல ஆண்டுகளுக்கு முன் புனித சேவிதர் வைத்த சிலுவையை யாரோ அகற்றிவிட்டார்கள். இப்போது இருப்பதையாவது அரசு பாதுகாக்கக் கூடாதா? ஏன் கிறிஸ்தவர்களின் உணர்வோடு விளையாடுகிறது?’ என லுட்டியன் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்துவிட்டன. அதற்குத் தூபம் போட பல அமைப்புகளும் உதிறிக் கட்சிகளும். ‘இதென்னடா வம்பாப்போச்சி!’ எனத் துணுக்குற்ற முதல்வர், சிலுவையும் வேண்டாம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம் என முடிவு செய்தார். ‘அப்போ ஓக்கே ஓக்கே’ எனப் போராடிய அமைப்புகள் அமைதியாகிவிட்டன. அப்படியானால் அவர்களுக்குத் தேவை உரிமையோ சிலுவையோ அல்ல, விவேகானந்தர் பாறை வரக் கூடாது என்கிற கெட்ட எண்ணம் மட்டுமே.


ஆனால் விவேகானந்தருக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும் என நினைத்த பலரும், RSSற்கு இந்தத் தகவல்களை அனுப்புகிறார்கள். ரானடே என்னும் அகில இந்திய பொதுச்செயலாளரை கோல்வால்கர் அனுப்புகிறார். அவருக்குத் தமிழும் தெரியாது, தமிழ்நாடும் தெரியாது, கன்னியாகுமரியும் தெரியாது, அங்கிருக்கும் மதமாற்றம், மதச் சண்டை என எதுவும் தெரியாது.. ஆனாலும் வருகிறார். ‘இவரால் என்ன செய்ய முடியும்?’ என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.


நேராக வந்தார். எந்த அமைப்புகளிடமும் கருத்துக் கேட்கவில்லை. ஜஸ்ட், விவேகானந்தர் பாறை சம்பந்தமான அறிக்கைகள், செய்திகள் என அனைத்தையும் படித்தார். கடைசியில் அவருக்குத் தெரிய வந்த விஷயம், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் "ஹுமாயூன் கபீர்" தான் ஆரம்பத்தில் இருந்தே இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பது. (இவர் இரண்டு முறை மத்தியில் கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார்.) எப்படி இருக்கிறது இது பாருங்கள்! ஒரு கலாசாரத்துறை அமைச்சர், இந்திய கலாசாரத்தை அமெரிக்காவில் முழங்கிவிட்டு வந்த விவேகானந்தருக்கு மண்டபம் கட்ட மறுக்கிறார், கூட்டணிக்குக் கேரள அமைப்புகளும் பத்திரிகையும். மல்லுக்கள் அன்றிலிருந்தே இப்படித் தான் போல.




ரானடே பார்த்தார். நேராக வங்காளம் சென்றார். ஹுமாயூன் கபீர் கல்கத்தாவில் இருந்து தான் எம்.பி.யாகித் தேர்வாகி மந்திரியானவர். பத்திரிகைகளை அழைத்தார். “நம் வங்காளத்தின் பெருமையான விவேகானந்தருக்கு, எங்கோ கடைக்கோடியில் மண்டபம் கட்ட ஆசைப்படுகிறார்கள். அந்தப் பெருமையை  ஒருத்தர் தடுக்கப் பார்க்கிறார். அவர் வேறு யாருமல்ல, விவேகானந்தரின் மண்ணில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய உங்கள் எம்.பி. தான். இது ஏதோ கன்னியாகுமரி மக்களின் பிரச்சினை அல்ல, உங்களின் பிரச்சினை, உங்களின் பெருமை’ எனப் பேட்டி கொடுக்கிறார். கேரள அமைப்பு மண்டபத்திற்கு எதிராகச் செய்த அதே டெக்னிக். வங்கப் பத்திரிகைகள் ஹுமாயூன் கபீரைக் கிழித்து எடுக்கின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிகிறது. பயந்து போன அமைச்சர், ‘நம் விவேகானந்தருக்கு நான் மறுப்பேனா? தாராளமாகக் கட்டிக்கொள்ளலாம்’ என ஜகா வாங்கிவிட்டார். So, officially அனைத்தும் ஓக்கே. ஆனாலும் உடனடியாக கட்டிட வேலைகளை ரானடே ஆரம்பிக்கவில்லை. அதை வெறும் ஆன்மீக மண்டபமாக இல்லாமல், தேசிய உணர்வோடு sentiment ஆகவும் கொண்டுவர நினைக்கிறார்.

இது அவருடைய அடுத்த strategic move. விவேகானந்தர் மண்டபம் கட்ட ஒரு கமிட்டி அமைக்கிறார் ரானடே. வெறும் RSS, லோக்கல் இந்துக்கள் என்றில்லாமல், காங்கிரஸார், அண்ணாதுரை (ஆம் அவரே தான்), கம்மீஸ் எனப் பலரையும் அழைக்கிறார், இணைக்கிறார். இதில் உச்சகட்டம் என்னவென்றால், ஜோதிபாசுவிடமே நன்கொடை கேட்டது தான். அவர் இதெல்லாம் தன் கட்சியின் கொள்கைக்கு விரோதமானது (பின்னே அவர்களிடமே உண்டியல் குலுக்கினால்??) எனச் சொல்லி, தன் மனைவியை நன்கொடை அளிக்கச் செய்தார்.




பல மாநிலங்களிலும் RSSகாரர்கள் நன்கொடை வசூலித்தார்கள். கிறிஸ்தவர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் நாகாலாந்தில் கூட சில ஆயிரம் வசூலானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ரானடேவின் எண்ணம், விவேகானந்தர் என்பவர் ஏதோ இந்து மதத்திற்கு மட்டுமான ஒரு துறவி அல்ல. அவர் இந்த ஒட்டுமொத்த தேசத்திற்குமான அடையாளம் என அனைத்து மதக்காரர்களின் மனத்திலும் நிலைக்க வைப்பது தான். அதனால் தான் தேசம் முழுவதும் மக்களிடம் இதைப் பற்றிப் பேசி நன்கொடை வசூலிக்க வைத்தார் தன் சேவகர்களை. அதில் அவர் ஜெயித்தும் காட்டினார். இப்படி உருவானது தான் நம் விவேகானந்தர் மண்டபம்.



ரானடே தான் இறந்த பின் விவேகானந்தர் மண்டபம் அருகிலேயே புதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதே போல் அவர் இறந்த பின் அங்கேயே புதைக்கப்பாட்டார். அவர் சமாதிக்கு அருகிலேயே விவேகானந்தர் சிலையும் வைக்கப்பட்டது. விவேகானந்தரின் பாதஙகள் வழியாகப் பார்த்தால் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபம் தெரியும் வகையில் அருமையாக இருக்கும் அதன் வடிவமைப்பு. இன்னொரு விஷயம் சொல்லவா? இதே ரானடே தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைக்கவும் முதல் அடியை எடுத்து வைத்தவர். அவர் பல முறை தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தினால் தான் வள்ளுவர் சிலைக்கான அச்சாரம் இடப்பட்டது.



இறந்த பின்னும் இந்த தேசத்தின் உணர்வாக இருந்ததால் தான், ஒட்டு மொத்த தேசமும் விவேகானந்தருக்காகக்  கூடியது. பல மதவெறியர்களையும் தாண்டி மண்டபமும் சாத்தியமானது. 'இறந்தும் போராடிய' என்று பீச்சோர இடம் பற்றி ஸ்டேட்டஸ் போடும் வம்சாவளிகள் இந்த வரலாற்றைப் பற்றிப் பேசாததில் ஆச்சரியமேதுமில்லை.

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One