Showing posts with label விஸ்வரூபம். Show all posts
Showing posts with label விஸ்வரூபம். Show all posts

விஸ்வரூபம் - விமர்சனம் (சினிமாவுக்கு மட்டும் அல்ல)..

Sunday, February 10, 2013

ஒரு படம் வருவதற்கு முன்பே எவ்வளவு பிரச்சனைகள்? அந்த பிரச்சனைகளை ஒட்டி படத்திற்கு வந்த அபரிமிதமான ஆதரவும், கடும் எதிர்ப்பும், எல்லோரையும் ஒன்றை மட்டும் முடிவு செய்ய வைத்தன.. ‘பிடிச்சிருக்கோ இல்லையோ இந்த படத்துல அப்படி என்ன தான் இருக்குனு பாக்கணும்’.. சரி அப்படி என்ன தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது?




தனக்கென்று இருக்கும் ஒரு சிறிய உலகத்தை பெண் தன்மையோடு, தன் மனைவியின் வெறுப்பையும் தாங்கிக்கொண்டு வாமனனாக இருக்கும் விஸ்வநாதன் என்னும் ஒரு சாதாரண கதக் டான்ஸ் மாஸ்டர், ஒரு சூழலில் தான் ஒரு தலிபான் பயிற்சியாளன் என்கிற விஸ்வரூபத்தை காட்டுவது தான் கதை. கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கிறது? ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்திற்கு இதை வைத்து என்னென்னமோ பண்ணலாம். ஆனால் கமல் எனக்கு நிறைய கொட்டாவியும் லேசான தலைவலியையும் தான் கொடுத்திருக்கிறார். “ஏ ஒனக்கு கலைய ரசிக்க தெரில, இன்னொரு 10வருசம் கழிச்சு ஒலகமே இந்த படத்த புகழும், அப்ப உன் மூஞ்ச எங்க வச்சுக்கிடப்போற? கமல் யாருனு தெரியுமா? சினிமாவுக்கு என்னலாம் செஞ்சிருக்காருனு தெரியுமா?’ என வரிசையாக கேள்வி கேட்பவர்கள் என் டிக்கெட் காசான 120ரூபாய்+7ரூபாய் வண்டி பார்க்கிங் காசையும் கொடுத்துவிட்டு கேளுங்கள். சாவகாசமாய் பதில் அனுப்புகிறேன்.


”சாகுறதுக்கு முன்னாடி என்ன தொழுகை பண்ண விடுங்க” என்று கேட்டு ஓதிக்கொண்டே பொங்கி எழும் காட்சி, பிறந்ததில் இருந்தே மசாலாப்படமாக பார்த்து நெஞ்சுக்கரிப்பிலேயே வளர்ந்தவன் எனக்கு பெரிய ஆச்சரியமாக இல்லை. அந்தக்காட்சி, ஆனாலும் நன்றாக இருந்தது. ஸ்லோ மோஷனில் இன்னொரு தடவை காட்டியிருக்க வேண்டாம். தசாவதாரத்தில் அசினை பார்க்கும் போது உங்களுக்கு எவ்வளவு எரிச்சல் வந்ததோ, (உங்களுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு நிறைய வந்தது), அதே அளவு எரிச்சல் இதில் பூஜா குமாரை பார்க்கும் போது வருகிறது. முதல் காட்சியில் இருந்தே அசட்டுத்தனமான ஓவர் ரியாக்‌ஷன்.. பிடிக்காத, கொஞ்சம் கூட மதிக்காத கணவன் பிரதமரோடு பேசும் அளவுக்கு பெரிய ஆள் என்றவுடன் பொசுக்கென்று அன்பு, காதல், பாசம், மரியாதை இன்னும் பிற இல்லத்தரசிகளுக்கான அம்சங்களும் சேர்ந்துகொள்கின்றன.. 24 அமைப்புகளோடு சேர்ந்து பெண்கள் அமைப்புகளும் ”எங்களை தவறாககாட்டுகிறார் கமல்” என கொடி பிடித்திருக்கலாம்.. 



படத்தில் எதற்கென்றே தெரியாத நிறைய பாத்திரங்கள் உள்ளன. அதில் ஒருவர் தான் ஆண்ட்ரியா.. கமல் வீட்டில் நடனம் பயில்கிறார், நடனம் முடிந்தாலும் அவர் வீட்டிலேயே இருக்கிறார், கடைசி வரை கமல் கூடவே சுத்துகிறார். இவரை அட்லீஸ்ட் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கூடவே இருந்து குழிபறிக்கும் வில்லியாக ஒரு பாத்திரம் நிச்சயம் வரும், அது போல் காட்டியிருந்தால் கதையில் சின்ன டுவிஸ்டாவது இருந்திருக்கும். முதல் பாதியில் கமலைப்பற்றி காட்டும் ஃப்ளாஷ்பேக், ஊஞ்சல் ஆட விரும்பும் அடலசண்ட் ஜிகாதி பையன், ‘போன வருசமே ஸ்கூல் எல்லாத்தையும் இடிச்சிட்டோம்’ என மிக சாதாரணமாக சொல்லும் முல்லா ஓமர், தசாவதாரத்தில் வந்த மாறுவேட கலைஞர், ஜெயலலிதா போல் இதில் வந்த ஒசாமா என சில இடங்கள் வாயைப்பிளக்க வைத்து அட போட வைக்கின்றன..




நாம் முதல் பாதியில் ஒரு சில இடங்களில் போட்ட ‘அட’ ரெண்டாம் பாதியில் ‘அடடடா’ என்னும் புலம்பலாக மாறிவிடுகிறது. திரைக்கதை எங்கெங்கோ தறிகெட்டு ஓடுகிறது. ஒரு சில வசனங்களும், அமெரிக்க குளிரை உணர வைக்கும் காட்சியமைப்பும் தான் நம்மை உட்கார வைத்திருக்கின்றன. இல்லையென்றால் பலரும் பாதியிலே எழுந்து போயிருப்பார்கள். முதல் பாடல் தவிர அனைத்தும் திரைக்கதையோடு வந்திருப்பதால், தியேட்டரில் சிகரெட் விற்பனை கம்மி. கமலுக்கே மிகுந்த குழப்பம் போல தன் பாத்திர படைப்பில்.. “அவங்கள கடவுள் காப்பாத்துவார்” என பூஜா குமார் சொல்லும் போது “எந்த கடவுள்?” என பகுத்தறிவு பேசும் அதே கமல் தான், வில்லனின் திட்டத்தை அழிக்கும் முன் கடவுளிடம் தொழுகை செய்கிறார். ஒய் திஸ் கன்ப்யூஸன்?




வில்லன் ஓமராக வருபவர் தாலிபான் தளபதி முல்லா ஓமரை ஞாபகப்படுத்துகிறார். நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் நினைத்த நேரத்தில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா என எப்படித்தான் பறக்க முடிகிறதோ? இப்பலாம் தியேட்டருக்கு வந்தாக்கூட பாக்கெட்ட எல்லாம் செக் பண்ணிட்டு தான் உள்ள விடுறாங்க பாஸ்.. நீங்க ஏதோ ஃபாரின் போறத, பக்கத்து வீட்டுக்கு போற மாதிரி சொய்ங் சொய்ங்னு போயிட்டு வரீங்க?

உண்மை பாத்திரங்களையும் சில வரலாற்று சம்பவங்களையும் தன் கறபனையையும் வைத்து ‘ஹே ராம்’ என்னும் முக்கியமான படத்தை எடுத்த அதே கமல் தான், முல்லா ஓமர் என்னும் உண்மை பாத்திரத்தை எடுத்து, அதில் ஒரு இந்திய உளவாளி வந்தால் என்ன ஆகும் என்கிற தன் அழகான கற்பனையை வைத்து இப்படி ஒரு சொத்தப்பல் படத்தை தந்திருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை ரகம். தியேட்டரில் எல்லோரும் எழுந்த போது தான் படம் முடிந்து விட்டதே தெரிந்தது. சப்பென்ற ஒரு கிளைமேக்ஸ். ஆனால் அதற்கு அடுத்து பார்ட்2 விற்கு காட்டிய ட்ரைலர் போன்ற சங்கதி நன்றாக இருந்தது. ஆனால் பார்ட்2 எல்லாம் வருமா என்பது அல்லாவுக்கே வெளிச்சம்.





மொத்தத்தில் காக்கிச்சட்டை, பாண்டியன், போக்கிரி வரிசையில் ஒரு விஸ்வரூபம்.. லோக்கல் தாதா, போலீஸ் கதையை, தாலிபன், உளவுத்துறை என்று எடுத்திருக்கிறார்கள்.. சில இடங்களில் கமலின் நடிப்பும், இசையும், வசனங்களும் நன்றாக இருக்கின்றன.. ஆனால் அது மட்டும் படம் வெற்றியடைய போதாதே? “கமல் படமா? ஒன்னும் புரியாதேப்பா? அதப்போயி எவன் தியேட்டர்ல பாப்பான்?” என்று சொன்னவர்கள் கூட படத்தை பார்த்துவிட்டு, “எதுவுமே புரியல, ஆனா என்ன தான் சொல்ல வாரான்னு இன்னொரு தடவ போயி கண்டிப்பா பாக்கணும்” என்கிறார்கள்.. ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாத ஒரு படத்தை, வெற்றிப்படமாக்க உழைத்த 24 குழுக்களுக்கும், சிலரின் திமிரான நடவடிக்கைகளுக்கும், அதையெல்லாம் வியாபாரத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொண்ட கமலுக்கும் வாழ்த்துக்கள்..

படத்தை பற்றி இவ்வளவு போதும். இனி கமலை பற்றி. ‘அன்பே சிவ’த்தில் கிடைத்த கேப்பில் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் கிழி கிழியென்று கிழித்த கமலா இது? ஒரு பெண்ணை தவறுதலாக சுட்டுவிட்ட அமெரிக்க ராணுவ வீரன், அதற்காக உச் கொட்டி ஃபீல் பண்ணுவதெல்லாம் எதற்காக? அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் போது, தன் மனைவி குழந்தை பற்றி கவலைப்படாமல் ஓமர் இப்படி சொல்கிறான், “அவர்கள் (அமெரிக்கர்கள்) பெண்கள் குழந்தைகளை தாக்க மாட்டார்கள்”.. சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி ஒரு வசனம்? அவர்கள் என்ன தரையில் இருந்தா தாக்குகிறார்கள் யார் குழந்தை யார் பெண் என தெரிந்துகொள்ள? வான்வெளித்தாக்குதலுக்கு சம்பந்தமே இல்லாமல் அப்படி ஒரு வசனம். அமெரிக்கா என்ன நம் நாட்டு ராஜபுத்திர மன்னர்களா, போய் விதிமுறைகளையெல்லாம் பின்பற்ற? போர் விதிமுறையை பின்பற்றுபவனா இன்னொரு நாட்டின் மீது அணுகுண்டை போடுவான்? ஒவ்வொரு நாட்டு சர்வதேச எல்லையில் தன் போர்க்கப்பல்களையும் உளவு விமானங்களையும் பறக்க விடுவான்?

”உன்னைப்போல் ஒருவன்” படத்தின் ஒரிஜினலான “A Wednesday"வில் நாயகன் இந்துவா கிறிஸ்தவனா இஸ்லாமியனா என எதுவும் தெரியாது.. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ல் கமல் தன்னை ஒரு இஸ்லாமியனாக காட்டியிருப்பார். அதாவது தவறு செய்த ஒருவனை அவன் மதம் சார்ந்த இன்னொருவன் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற தொனியில் அமைத்திருப்பார். தட்டிக்கேட்பவனுக்கு அடையாளமே இல்லை என்று ஹிந்தியில் சொன்ன இயக்குனரின் தைரியம் தமிழில் கமலுக்கு வரவில்லை. இதே தான் இங்கு வேறு மாதிரி “விஸ்வரூப”த்தில். இதில் இவர் விஸ்வனாத்தாகவே கூட இருந்திருக்கலாம். ஆனால் கேஷ்மிரி என்கிற இஸ்லாமியனாக காட்ட விளைந்திருப்பது ‘உன்னைப்போல் ஒருவன்’ போன்ற காரணமாக கூட இருக்கலாம்.

கமல் தனது ஹாலிவுட் என்ட்ரியை மனதில் வைத்து இப்படியெல்லாம் எடுத்திருப்பதாய் சொல்கிறார்கள். ஹாலிவுட்டில் இருந்து தானே இங்கு "Mrs.Doubtfire", "Trains, palnes and automobiles", "9 to 5" என பல படங்களை எடுத்திருக்கிறார்? அங்கு போனால் இவரின் பப்பு வேகுமா எனத்தெரியவில்லை.. வேண்டுமானால் இங்கு எடுத்த ஹேராம், மகாநதி, அபூர்வ சகோதரர்கள் போன்றவற்றை அங்கு முயற்சிக்கலாம். கமல் நமக்கு என்றைக்குமே உலக நாயகன் தான். ஆனால் தமிழக எல்லையை தாண்ட விரும்பாத உலக நாயகன். அவருக்கு உலக நாயகன் என்னும் பிம்பம் பிடித்திருக்கிறது. தமிழகத்தை/இந்தியாவை தாண்டினால் அந்த பிம்பம் உடைய வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்தியாவெல்லாம் தாண்டிப்போய் செட்டில் ஆகவோ படம் எடுக்கவோ மாட்டார் என உறுதியாக நம்பலாம். விஸ்வரூபம் அடுத்த பாகம் வருகிறது, என்றிருக்கிறார், பார்க்கலாம் அதையாவது ரசிக்கிற மாதிரி ஒரு நல்ல கமெர்ஷியல் ஆக்‌ஷன் படமாக கொடுக்கிறாரா என்று..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One