என் செல்ல நாயே - சிறுகதை...

Thursday, June 27, 2013

முன் குறிப்பு:
2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங்கில கதையான "My Dog Marcus”ன் தமிழ் படுத்தல்.. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில சமாச்சாரம் சேந்திருக்கும், கண்டுக்காதீங்க.. சரி, கதையை வாசிக்கலாம்..

வீட்டில் அம்மா மிகவும் சோகமாக இருந்தார். வழக்கமாக வேலை முடிந்து நான் படியேறி வரும் சத்தம் கேட்டவுடனேயே ஓடி வரும் மார்க்கஸும் இன்று வரவில்லை. அம்மா சோகமாக இருப்பதை விட மார்க்கஸ் வராமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அம்மாவின் சோக முகம் பார்த்து பழகி சலித்துவிட்ட ஒன்று. ஆனால் நான் வீட்டில் நுழையும் போதே, மூச்சு இரைக்க குடுகுடுவென்று ஓடி வந்து என் இடுப்பில் தனது முன் கால்கள் இரண்டையும் தூக்கி வைத்துக்கொண்டு, என்னை தன் நாக்கால் நக்கிவிடும் மார்க்கஸ் இன்று என்னை கண்டுகொள்ளாமல் வேறு எங்கோ முகத்தை திருப்பியபடி இருப்பதைத் தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை..

”ம்மா மார்க்கஸ் ஏம்மா உம்முனு கெடக்கு?”

’நான் உம்முனு இருக்குறதவிட மார்க்கஸ் உம்முனு இருக்கிறது தான் ஒங்கண்ணுக்கு தெரியுதா?’னு தான் அம்மா கேட்பார் என நினைத்திருந்தேன்.. ஆனால் அம்மா “தம்பி நம்ம மார்க்கஸுக்கு காது கேக்க மாட்டேங்குதுனு நெனைக்கிறேன்ப்பா” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டார்..

நான் லேசாக பதறினாலும், ”எம்மா அப்படிலாம் இருக்காது.. இருங்க நான் பாக்குறேன்” என்றேன்.. மெதுவாக மார்க்கஸ் அருகில் சென்று “மார்க்கஸ்” என்றேன்.. அது அப்படியே எனக்கு எதிர் திசையில் முகத்தை திருப்பியது போல் படுத்திருந்தது.. இப்போது இன்னும் சத்தமாக “மார்க்கஸ்” என்றேன்.. ஹ்ம்ஹிம் என் குரல் அதற்கு கேட்டதாகவே தெரியவில்லை. நான் அதை மெதுவாக தொட்டேன்.. சடாரென்று பதறி திரும்பியது.. என்னை பார்த்தவுடன் தன் வழக்கமான இரண்டு லொள் லொள்களை உதிர்த்துவிட்டு வாலை ஆட்டி கொஞ்சமாக நக்கிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.. நான் மார்க்கஸ் மார்க்கஸ் என்கிறேன், பதிலே இல்லை.. ஆம் எங்கள் மார்க்கஸுக்கு காது கேட்கவில்லை.

மார்க்கஸ் - இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்த லேப்ரடார் வகை நாய்.. வந்த சில நாட்களுக்கு மட்டும் தான் அது ‘நாய்’ என்று விளிக்கப்பட்டது.. அதன் பின் ஆசையாக தேடிப்பிடித்து ‘மார்க்கஸ்’ என எல்லோரும் நாய்களுக்கு வைப்பது போல் ஒரு வெளிநாட்டு பெயரை வைத்தோம்.. 


எங்கள் வீட்டிற்கு வந்த போது மார்க்கஸ் பால் குடி மறக்காத 25நாள் குட்டி.. அதைப்பார்க்கவே மிகவும் பாவமாக இருக்கும்.. அது முகம் சோகமாக இருப்பது போலவே எங்கள் எல்லோருக்கும் தெரிந்தது. அப்பா தினமும் சொல்லி விடுவார், “தம்பி அத வாங்குனவங்கட்டயே குடுத்துட்டு வந்துரு, பாவமா இருக்கு”னு.. பால் வைத்தால் மட்டும் குடிக்கும்.. எங்களை பார்த்தாலே பயப்படும்.. பாத்ரூம் அருகில் இருக்கும் ஈரப்பதத்தை தேடிப்பிடித்து படுத்துக்கொள்ளும். இதெல்லாம் முதல் ஒரு வாரம் தான்.. அடுத்தடுத்த நாட்களில் அது செய்த வயலென்ஸ் எல்லாம் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் அளவுக்கு மோசமானவை..


பல் முளைக்க ஆரம்பித்த போது அது எங்கள் வீட்டில் கடித்து கிழிக்காமல் பாவப்ப்ட்டு விட்டுவைத்த ஒரே பொருள் எங்கள் வீட்டு பீரோ தான்..  மற்ற அனைத்தும் கலவர பூமியில் கண்டெடுத்த பொருட்கள் போலவே இருக்கும்.. நாயால் கடிக்கவே முடியாத பொருள் இரும்பு மட்டும் தான் என்பதை புரிந்துகொண்டோம்.. ஆனால் அதற்காக ஷீ, பர்ஸ், செய்தித்தாள், துணிமணி என எல்லாவற்றையும் இரும்பிலா செய்ய முடியும்? அது முழித்திருக்கும் போது யார் தூங்கினாலும் அதற்கு பிடிக்காது.. குரைத்துக்கொண்டே இருக்கும்.. நாங்கள் எழுந்தால் வாலை ஆட்டிவிட்டு அது படுத்துக்கொள்ளும் எங்கள் தூக்கம் போய்விடும்.. பின் அதற்கு முழிப்பு வந்தவுடன் பழையபடி எங்களை எழுப்பிவிட்டு மீண்டும் வாலை ஆட்டிவிட்டு அது உறங்கிவிடும். 

இதாவது பரவாயில்லை, என் அப்பா எப்போதும் தரையில் தான் படுத்திருப்பார்.. தன் குட்டி உடலை ஆட்டிக்கொண்டே ஓடி அவரின் மேல் தாவிக்கொண்டு காதை நக்க ஆரம்பித்துவிடும்.. சில சமயம் கடித்தும்விடும். அவர் பதறி எழுந்து சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்துவிட்டு மீண்டும் படுப்பார்.. மார்க்கஸ் மீண்டும் கடிக்கும்.. அவர் மீண்டும் கெட்ட வார்த்தை, மார்க்கஸ் மீண்டும் கடிக்கும்.. கெட்ட வார்த்தை - கடி என்றே அவரின் தூக்கங்கள் கலைந்தன. நாங்கள் கட்டிலில் படுத்திருப்பதால் தப்பித்தோம்.. சரி, கட்டிப்போடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. கட்டிப்போட்டால் பயங்கரமாக குரைக்கும்.. பின் சோகமாக உட்கார்ந்து எங்களை ஒரு மாதிரியாக பார்க்கும்.. எங்களுக்கு ஒரு மாதிரியாக ஆகிவிடும். நாங்களும் அவிழ்த்துவிட்டுவிடுவோம்.. பின் சந்தோசமாக வழக்கம் போல தன் அட்ராசிட்டியை ஆரம்பித்துவிடும் மார்க்கஸ்..


மார்க்கஸிற்கு மிகப்பிடித்த 3 விசயங்கள் 1.சோறு, 2.சோறு, 3.சோறு மட்டும் தான்.. என் தம்பி அதற்கு ஜம்ப் பண்ண, சொன்னபடி கேட்க, தூக்கி போடும் பொருளை மீண்டும் எடுத்த வர என்று பல விசயங்களை கற்றுக்கொடுக்க முயன்றாலும், மார்க்கஸ் தானாக மிக வேகமாக கற்றுக்கொண்டே ஒரே விசயம், தன் சோத்து தட்டை வேளா வேளைக்கு எடுத்து வந்து என் அம்மாவிடம் கொடுப்பதை தான்.. அம்மா சோறு போடும்வரை விடாது.. காலையே சுற்றி சுற்றி வரும்.. அதன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு,.. அந்த எல்லையை தாண்டியும் என் அம்மா அதற்கு சோறு போடவில்லை என்றால் தன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காட்ட ஆரம்பித்துவிடும். அம்மாவின் சேலையை கிழிக்க ஆரம்பித்துவிடும். ஆனால் பாசத்தில் அதை மிஞ்ச ஆள் இல்லை.. சாயந்தரம் அப்பாவின் வண்டி தெருவில் நுழையும் சத்தம் கேட்கும் போதே, உறங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்துவிடும். அப்பா கதவைத்திறக்கும் போது அது ரெடியாக அவரை வரவேற்க வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். அப்பாவிற்கு மட்டும் அல்ல, வீட்டில் யார் வெளியில் சென்றுவிட்டு திரும்பினாலும் இப்படித்தான்.


நாய் வளர்ப்பு பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாதலால், நாங்கள் அதை அதன் போக்கிலேயே விட்டுவிட்டோம்.. இப்போது அது எங்கள் வீட்டில் ஒரு ஆள் சாப்பிடும் சாப்பாட்டை விழுங்கிக்கொண்டிருக்கிறது.. விளையாட அழைத்தாலும் வருவதே இல்லை.. உடலும் மிகவும் சோர்ந்து போய், குண்டாகி நடக்கவே முடியாமல் இருக்கிறது. கஷ்டப்பட்டுத்தான் நடக்கும். ஆனாலும் சோறு போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் திங்கும். தின்றுவிட்டு அங்கேயே படுத்துக்கொள்ளும்.. அவ்வளவு தான்.. அதன் உடம்பில் அசையும் ஒரே பாகம் அதன் வாய் மட்டும் தான். ஒரு நாள் ஒரு வெடினரி டாக்டரை அழைத்து மார்க்கஸை காட்டினோம்.. அவர் அதை பார்த்தவுடனே, “டெய்லி காலைலயும் சாந்தரமும் நாயை ஒரு 2கி.மீ வாக்கிங் கூட்டிட்டு போங்க” என்று சொல்லிவிட்டு ஊசியும் போடாமல், மருந்தும் கொடுக்காமல் 500ரூ புடுங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.. அவர் ஊசி போடாமல் போனதை விட, அதற்காக 500ரூ வாங்கியதை விட மார்க்கஸை ‘நாய்’ என்று சொன்னது தான் எங்களுக்கு கடுப்பாக இருந்தது. எங்கப்பா அந்த டாக்டர் போனவுடன், “நாய்க்கு பொறந்த பய, நம்ம மார்க்கஸ நாய்ங்கிறியான்” என்றார் கோவமாக..

டாக்டர் மார்க்கஸை வாக்கிங் போகச் சொன்னதில் அம்மாவிற்கு சந்தோசம் தான்.. அப்பாவை டாக்டர் பல முறை வாக்கிங் போகச்சொல்லியும் அப்பா இது வரை சென்றதே இல்லை.. இனி மார்க்கஸோடு அப்பாவும் வாக்கிங் செல்வார்.. முதல் நாள் காலை அப்பா ”மார்க் செல்லம் வா அப்பா கூட வாக்கிங் போலாம்” என்றபடியே மார்க்கஸின் கழுத்தில் பெல்ட்டை மாற்றி அதை வாக்கிங் அழைத்து சென்றார்.. அப்போதே அது ஒரு முடிவோடு அவரைப்பார்த்தது. அதை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டு சென்றார் அப்பா.. சில நிமிடங்களில் அவரின் சத்தம் தெருவே அலறும் அளவிற்கு கேட்டது. தெரு முக்கை தாண்டும் முன்பே மார்க்கஸ் ரோட்டில் படுத்துக்கொண்டது. அவர் அரட்டியும், அடித்தும், மன்றாடியும், இன்னும் என்னென்னவோ சர்க்கஸ் வேலைகள் செய்தும் அது ஒரு இன்ச் கூட நகரவில்லை. மீண்உம் வீட்டிற்கு கூட்டி வந்துவிட்டோம். ‘சரி கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்ல பழக்கலாம்’ என முடிவு செய்து எங்கள் வீட்டு மாடியில் உலாவ விட்டோம்.. ஹிம்ஹிம், அது இப்போதும் எப்போதும் போல் படுத்துக்கொண்டுவிட்டது.. 

சரி, சோறு போடாமல் விடலாம் என்றால், சரியாக சாப்பாட்டு நேரத்திற்கு எங்கள் அருகில் வந்து எங்கள் முகத்தை எல்லாம் ஒரு மாதிரி பார்க்கும்.. அம்மாவிற்கு உடனே கண்டிப்பு எல்லாம் விலகி பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடும்,.., அதன் சோத்து கிண்ணத்தை எடுத்து சோறு பிசைந்து கொடுத்துவிடுவார்.. ஆனால் அது சாப்பிடுவதை தவிர வேறு எதுவும் செய்யவேயில்லை.. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அது கஷ்டப்படுவது எங்களுக்கு மிக வருத்தமாக இருந்தது.. மீண்டும் டாக்டரை அழைத்து இதற்கு ஏதாவது தீர்வு உண்டா என விசாரித்தோம்.. “வாக்கிங் தான் ஒரே தீர்வு.. இல்லேனா ஒங்க நாயி சீக்கிரம் செத்துரும்” என்று குண்டை தூக்கிப்போட்டார்.. ”சார் அது நாயி இல்ல மார்க்கஸ்” என்று சொல்லிவிட்டு அவரை அப்பா வழியனுப்பினார். “நம்ம மார்க்கஸ நாயினு சொன்னது மட்டும் இல்லாம, அது செத்துப்போயிரும்னு நம்மட்டயே தைரியமா சொல்லிட்டு 500ரூவா காசு வேற வாங்கிட்டு போறான் பாத்தியா? இவனுக்கு என்ன தைரியம்?” என்றார் அப்பா உண்மையான கோவத்தோடு.. எங்கள் யாருக்கும் மார்க்கஸை எங்கள் வீட்டில் இல்லாமல் நினைத்துப்பார்க்கவே மனம் வரவில்லை. அது ரேசன் கார்டில் பெயர் இணைக்க முடியாவிட்டாலும் எங்கள் குடும்ப உறுப்பினராகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன..



இனி பாவம் புண்ணியம் பார்த்து பிரயோஜனம் இல்லை என்பதை முடிவு செய்துகொண்டு, அதை எப்பாடுபட்டாவது வாக்கிங் கூட்டிப்போக மொத்த குடும்பமும் முயற்சி செய்தோம்.. முதலிலாவது தெருமுக்கில் படுத்து அடம் பிடித்தது.. இப்போது ”வீட்டு வாசலை தாண்டி இறங்குவேனா?” என மல்லுக்கட்டியது.. அதனால் நடக்க முடியாது என்று இல்லை.. நடக்க சோம்பேறித்தனம் அவ்வளவு தான்.. நான், தம்பி, அப்பா அம்மா என எல்லாரும் அதை ஒரே ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் வீட்டில் இருந்து 10அடி தூரம் நடக்கவைத்துவிட்டோம்.. வீட்டில் யாராவது “வாக்கிங்” என்று சொல்வதை கேட்டால் கூட அது பெருங்குரலெடுத்து குரைக்க ஆரம்பித்தது... அதற்கு வாக்கிங் செல்லவே சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. இதற்கு மேலும் அதை நாங்கள் கட்டாயப்படுத்த விரும்பவில்லை.. அதன் விதிப்படி என்று விட்டுவிட்டோம்.. அதுவும் ‘இந்த கொடுமையில் இருந்தெல்லாம் தப்பிக்க முடியாதா?’ என்கிற மாதிரி ஏக்கத்தோடேயே எங்களை பார்க்கும்.. சரி, இனிமேல் வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டாம் என இன்று காலை தான் முடிவு செய்தோம்.. மாலையில் வீடு வந்து பார்த்தால் அதற்கு காது கேட்கவில்லை..

மீண்டும் டாக்டரை அழைத்தோம்..  அவர் வந்து மார்க்கஸின் காதில் டார்ச்சை அடித்து பார்த்து விட்டு, ”நீங்க நாய வாக்கிங் கூட்டிட்டு போறீங்கல்ல?”

“அது நாயி இல்ல சார், மார்க்கஸ்” - எங்கப்பா..

“சரி சரி மார்கஸ்.. அத வாக்கிங் கூட்டிட்டு போறீங்கலா இல்லையா?”

“அது நடக்கவே கஷ்டப்படுது டாக்டர்.. அதனால இருக்குற வர இப்படியே இருக்கட்டும்.. பாவம்”

“ஹ்ம் நீங்க ஒழுங்கா வாக்கிங் கூட்டிட்டு போகாதனால தான் அதுக்கு காது கேக்காம போயிருச்சி.. இப்டியே வச்சிருந்தீங்கன்னா ஒடம்புல ஒவ்வொரு பார்ட்டா இப்படி தான் போயிரும், பாத்துக்கோங்க”னு சாதரணமா சொல்லிட்டு வழக்கம்போல தன் 500ரூபாயை வாங்கிக்கொண்டார்.. 500 அவரின் லக்கி நம்பர் போல...

நானும் தம்பியும் மார்க்கஸை வாக்கிங் கூட்டிப்போக உறுதியாக இருந்தாலும் அம்மாவும் அப்பாவும் விடாப்படியாக மறுத்துவிட்டார்கள்.. அதை கஷ்டப்படுத்துவதை விட, அது இஷ்டப்படி நிம்மதியாக வாழ விடுவதே சரி என்பது அவர்கள் கருத்து.. நானும் தம்பியும் ஒத்துக்கொண்டோம்.. நாங்கள் என்ன பேசினாலும் மார்க்கஸிற்கு கேட்பதில்லை. நாங்களும் அதை வழக்கம் போல கவனித்துக்கொண்டோம்.. அதை அருகிலேயே வைத்திருந்து தடவிக்கொடுத்துக்கொண்டே இருந்தோம்.. எல்லோர் மனதிலும் மார்க்கஸை நினைத்த ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது..

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை.. 

நாங்கள் எல்லோரும் டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.. மார்க்கஸிற்கு மிகவும் பிடித்த எலும்புக்குழம்பு. வழக்கமாக நாங்கள் சாப்பிட்டுவிட்டுத்தான் மார்க்கஸிற்கு சோறு வைப்போம்.. அது எங்கள் டைனிங் டேபிளை தாண்டி, டேபிளிற்கு எதிர்ப்புறம் முகத்தை திருப்பி வைத்திருந்து படுத்துக்கிடந்தது.. என் அப்பா ஒரு நல்லி எலும்பை நன்றாக உரிந்துவிட்டு டேபிளில் வைக்கும் போது, அது நழுவி தரையில் இருந்த ஒரு எவர்சில்வர் தட்டின் மீது “டங்” என்கிற சத்தத்தோடு விழுந்தது. அந்த சத்தம் கேட்ட மறுநொடி, மார்க்கஸ் டக்கென்று திரும்பி எலும்பு விழுந்த திசையை பார்த்தது. மார்க்கஸின் இந்த திடீர் செயல்பாடு, டக்கென்ற அதன் உடல் அசைவு எங்கள் அனைவரையும் அதை பார்க்கச்செய்தது. ஒரு நொடி சுதாரித்து விட்டு எங்களை பார்த்தது மார்க்கஸ்... நாங்கள் அனைவரும் அதையே பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து மெதுவாக ஒன்றும் நடக்காதது போல் முகத்தை அந்தப்பக்கம் திருப்பி வைத்துக்கொண்டு படுத்துவிட்டது..

அம்மாவும் அப்பாவும் ‘மார்க்கஸ், மார்க்கஸ்’ என்று பல முறை அழைத்தும் அது திரும்பவில்லை. என் தம்பி அவன் கையில் இருந்த ஒரு எலும்பை எடுத்து  மீண்டும் அந்த சில்வர் தட்டில் போட்டான்.. ‘டங்’ என சத்தம் வந்த மறுநொடி மார்க்கஸ் திரும்பி எலும்பை பார்த்தது.. டக்கென்று சுதாரித்து எங்களை பார்த்தது.. நாங்கள் அனைவரும் கண்களை சிமிட்டாமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தோம்.. ஒன்றுமே நடக்காதது போல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் திரும்பிவிட்டது.. எங்களுக்கெல்லாம் ஒரே குஷி..

அம்மா, “நம்ம மார்க்கஸுக்கு காது கேக்க ஆரம்பிச்சிருச்சா?” என்றார் சந்தோசமாக..

“எம்மா அது இத்தன நாளா காது கேக்காத மாரி நடிச்சிருக்கு” - கோவமாக என் தம்பி..

எங்கள் எல்லோருக்கும் அவன் மார்க்கஸை இப்படி சொன்னதை நினைத்து பயங்கர கோபம்.. “இருங்க ஒங்க எல்லாருக்கும் ப்ரூவ் பண்ணுறேன்”னு அவன் சவால் விட்டான்.. அனைவரும் சாப்பிட்டு முடித்தோம்.. மார்க்கஸ் எங்கள் பக்கம் அடுத்து திரும்பவே இல்லை.. நாங்கள் எல்லோரும் சமையல் அறையில் நுழைந்துகொண்டு ஒன்றுமே பேசாமல் கம்மென்று இருந்தோம்.. என் தம்பி அவன் கையில் இருந்த எலும்புத்துண்டை சரியாக அந்த சில்வர் தட்டில் தூக்கி எறிந்தான்.. டக்கென்று திரும்பிய மார்க்கஸ் நாங்கள் அங்கு இல்லை என்பதை அறிந்ததும், குடுகுடுவென்று ஓடி அந்த எலும்பை கவ்விக்கொண்டு மீண்டும் தன் இடத்திலேயே படுத்துக்கொண்டது.. இத்தனை நாள் நாங்கள் நடக்கவே முடியாது என்று நினைத்த மார்க்கஸ் எங்கள் கண் முன் குடுகுடுவென்று ஓடுவதை எங்களாலேயே நம்ப முடியவில்லை. நாங்கள் அடுத்து “மார்க்கஸ்” என்று பல முறை கத்தினோம், அது திரும்பவே இல்லை.. இரண்டு மூன்று முறை இதை செக் செய்து பார்த்த பின்பு தான் தெரிந்தது, மார்க்கஸ் எங்களை காது கேட்காத மாதிரியும் நடக்க முடியாத மாதிரியும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்று..

இதில் என் அம்மாவுக்கு தான் பயங்கர கோவம்.. “பாரேன், நாம அது மேல எவ்வளவு பாசமா இருந்திருக்கோம்? ஒரு மனுசன விட கேவலமா இப்படி பண்ணிருச்சே?” என்று மிகவும் வருத்தப்பட்டவரும் அம்மா தான்.. ஏனென்றால் எங்கள் எல்லோரையும் விட மார்க்கஸிடம் அதிக நேரம் செலவிட்டது, மார்க்கஸின் மேல் அதிக பாசம் கொண்டவர் அம்மா தான்.. அது அப்படி எங்களை ஏமாற்றினாலும், அம்மா பலமுறை அதை மார்க்கஸ் மார்க்கஸ் என்று அழைத்து ஒரு முறையாவது திரும்பி பார்க்காத என ஏங்குவார். அது காது கேட்காத மாதிரியே தன் நடிப்பை தொடர்ந்தது.. அம்மாவுக்கு அப்போதெல்லாம் அழுகையாக வந்துவிடும்.. சில நேரங்களில் அழவும் செய்துவிட்டார்..

நான் இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தேன்.. ஒரு நாள் மார்க்கஸ் தூங்கும் போது அதன் காதுகளில் பஞ்சை வைத்துவிட்டேன்.. அது இருக்கும் அறையில் வெளி சத்தம் எதுவும் கேட்காதவாறு சன்னல்களையும் மூடிவைத்துவிட்டேன். வீட்டில் எல்லோரிடமும் மார்க்கஸின் முன் பேசும் போது சத்தம் இல்லாமல் வாயை மட்டும் அசைக்குமாறு சொல்லியாகிவிட்டது.. மாலை மார்க்கஸ் மெதுவாக தூங்கி முழித்தது.. அம்மா அதன் முன் சென்று “மார்க்கஸ் மார்க்கஸ்” என்று சிரித்துக்கொண்டே வாயை மட்டும் அசைத்தார்.. ”என்னடா நடக்குது இங்க?” என்பது போல் அது டக்கென்று தன் முகத்தை பின்னால் இழுத்து ஒரு கனம் யோசித்தது..

நான் என் அம்மாவின் அருகில் வந்து என்னமோ சொல்வது போல் வாயையும் கையையும் அசைத்தேன்.. மார்க்கஸின் முகத்தில் லேசான பீதி தெரிந்தது.. பின் டிவியை ஆன் செய்து மியூட்டில் வைத்தே படத்தை பார்த்தோம்.. இது வரை லேசாக கூட நடக்காத மார்க்கஸ் இப்போது வேகமாக எழுந்து வந்து டிவியையும் எங்களையும் மாறி மாறி பார்த்தது. நாங்கள் அதை பார்த்து ஏதோ பேசுவது போல் வாய் அசைத்தோம்.. மார்க்கஸ் மிகவும் குழம்பி விட்டது.. அங்கும் இங்கும் ஓடியது.. சில நிமிடம் குரைத்தது.. நாங்கள் எங்கள் நடிப்பை விடவே இல்லை.. பின் எங்களை மிகவும் சோகமாக பார்த்தது.. 

அன்றைய தினம் முழுவதும் எங்கள் வீட்டில் எந்த சத்தமும் கேட்கவேயில்லை.. மிக மிக அமைதியாக அனைத்தையும் செய்தோம்.. மார்க்கஸ் கொஞ்ச நேரத்திலேயே மிகவும் வருந்தி ஒரு மூலையில் படுத்துக்கொண்டு எங்கள் செய்கைகளையே சோகமாக பார்த்துக்கொண்டிருந்தது.. அன்று முழுவதும் அம்மா வைத்த உணவை அது உண்ணவே இல்லை.. ‘நிஜமாவே நமக்கு காது செவிடாகி விட்டதோ’ என்கிற பீதி அதன் பார்வையில் தெளிவாக தெரிந்தது.. அது சாப்பிடாவிட்டாலும் நாங்கள் எங்கள் செய்கை பாஷையை நிறுத்தவே இல்லை. எங்களை எத்தனை நாள் ஏமாற்றியிருக்கிறது இந்த மார்க்கஸ்? நாங்கள் இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்தோம்.. மார்க்கஸ் மிக மிக சோர்ந்துவிட்டது... எங்கள் அனைவரையும் அழுவது போல் பார்க்கும், வாலை ஆட்டிவிட்டு அப்படியே படுத்துக்கொள்ளும்.. சில நேரம், ‘நீங்க பேசுறது எதுவுமே எனக்கு கேக்கலடா’ என்று உரக்க சொல்வது போல் குரைக்கும். எங்களுக்கும் அதைப்பார்க்க  பாவமாகத்தான் இருந்தது.. 

இரண்டாம் நாட்கள் இப்படியே ஓடின. இரண்டாம் நாளின் இரவில் மார்க்கஸின் காதில் இருந்த பஞ்சை எடுத்துவிட்டோம்.. மூன்றாம் நாள் காலை...

என் அப்பா “மார்க்கஸ் வா வாக்கிங் போலாம்” என்று மிக சத்தமாக கூறினார்.. ஏதோ உலமகே அழிந்துவிடுவது போன்ற வேகத்தில் என் அப்பாவிடம் வேகமாக ஓடி வந்த மார்க்கஸ் ’லொள் லொள்’ என மிக சந்தோசமாக குரைத்து அம்மா, நான், தம்பி, அப்பா என அனைவரையும் பாசத்தோடு நக்கிவிட்டு, அப்பாவை வாசல் நோக்கி இழுத்தது வாக்கிங் செல்ல...



தலைக்கூத்தல் - சிறுகதை...

Thursday, June 6, 2013

முன் குறிப்பு:
இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும்.


 ”டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, எங்க அம்மாவ” பதட்டமுடன் சொல்ல வந்த கண்ணனை டாக்டர் தன் கோப பார்வையால் வாயடைக்க செய்தார்..

”டேய் கண்ணா நான் ஒங்க ஃபேமிலி டாக்டர் தான்.. அதுக்காக என்ன இந்த மாதிரிலாம் செய்ய சொல்லாதடா.. நான் படிச்சது இதுக்காக இல்ல” கண்களில் கோபம் இருந்தாலும் வார்த்தைகளில் அக்கறை இருந்தது டாக்டருக்கு.. எண்ணெய் பசை இல்லாத புசு புசு முடி, கழுத்தில் ஸ்டெத், முகத்தில் தெரியும் ஒரு பணக்கார மினுமினுப்பு, தொப்பை இல்லை என்கிற தைரியத்தில் இன் பண்ணப்பட்டிருக்கும் சட்டை - பார்த்தாலே தெரிந்துவிடும் இவர் ஒரு டாக்டர் என்று..

“இல்ல எனக்கு வேற வழி தெரில.. எவ்வளவு செலவாகும்னு சொல்லுங்க.. இல்லனா வேற யாரு மூலமா செய்யலாம்னு சொல்லுங்க, ப்ளீஸ்..” இது வரை தன்னிடம் உயிரை காப்பாற்ற கெஞ்சிய மனிதர்களை மட்டுமே பார்த்துப்பழகிய டாக்டர் முதல் முறையாக உயிரை எடுக்க கெஞ்சும் ஒருவனை பார்க்கிறார்.. அவருக்கு கண்ணனை பார்க்க பார்க்க வெறுப்பு தான் வந்தது.

“இங்க பாரு, இதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க.. இது அஃபென்ஸ் தெரியுமா? பேசாம மதுரைக்கு அம்மாவ கொண்டு போற வழியப்பாரு.. சரியா? நான் இப்ப கெளம்புறேன்.. நாளைக்கு சாய்ங்காலம் வாரேன்..”

“டாக்டர் நான் தான் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லனு சொல்றேன்ல?” வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்த டாக்டர், அவன் பக்கம் திரும்பி, ”இன்னொருக்க இப்படி எதாவது சொன்ன, ஒன்ன நானே போலீஸ்ட்ட பிடிச்சி குடுத்துருவேன்.. ஒழுங்கா அம்மாவ கவனிச்சிக்கோ. இல்லேனா மதுரைக்கு கூட்டிட்டு போ...” அவனை பார்த்து முறைத்துக்கொண்டே கிளம்பிவிட்டார்...

அவர் கிளம்பும் வரை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தவன், கிளம்பிய பின் வீட்டிற்குள் வந்தான். மிக அழகான கிரானைட்டால் தரையிடப்பட்ட அந்த வீட்டின் உள்ளே ஒரு அறையில் இருந்து மருந்து, மூத்திரம், அழுக்கு துணி எல்லாம் கலந்த ஒரு வித விநோத வாடை அடித்துக்கொண்டிருந்தது. அந்த அறையின் பக்கவாட்டு சுவற்றில் அவன், அவன் மனைவி, அவன் பையன் சந்தோஷ், அவன் அம்மா மூவரும் குடும்ப ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தனர். அவன் அம்மா அந்த படத்தில் தன் பேரனை பார்த்து என்னவோ சொல்வது போல் சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவனும் புரிந்தது போல் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த படத்துக்கு நேர் கீழே ஒரு மரக்கட்டிலில் கிளை ஒடிந்த ஒரு முள் செடிக்கு கருப்பாக தோல் போர்த்தியது போல் ஒரு உருவம் படுத்துக்கிடந்தது. அது ஒரு சாய்ந்து படுத்திருக்கிறதா, மல்லாக்க படுத்திருக்கிறதா, குப்புறப் படுத்திருக்கிறதா என்று சொல்வது சற்று சிரமம்.. கூன் போட்ட அந்த உருவம் கிட்டத்தட்ட ஒரு பந்து போல் கிடந்தது அதற்கு மேல், கீழ், வலது, இடது பேதம் கிடையாது. அந்த உருவத்தின் பெயர் தனம்.. கடந்த 42 வருடமாக கண்ணனுக்கு அம்மா.. 

இவன் உள்ளே வருவதை அந்த உருவம் தன் கோணல் வாயோடு கவனித்துக்கொண்டிருந்தது. வாயில் இருந்து லேசாக எச்சில் வடிந்து கொண்டிருந்தது. தனத்தின் அருகில் இவன் மனைவி ராணி உட்கார்ந்திருந்தாள். அவளும் இவனை கண்டு கொண்டாள்..

“டாக்டர் என்ன சொல்றாரு?”

“முடியாதுங்கிறான் கிறுக்குப்பய... நானும் எவ்வளவு காசானாலும் பரவாயில்லனு சொல்றேன்.. கேக்கவே மாட்றான்.. ஹ்ம் நாட்டுல காசு பணத்துக்கு அவ்வளவு தான் மதிப்பு போல?”

“அப்ப இன்னும் எத்தன நாளுக்கு நான் இந்த பீயத்தொடச்சிக்கிட்டு, பீத்துணிய அள்ளிப்போட்டுக்கிட்டு இருக்கிறதாம்?” ராணி மிகுந்த சலிப்புடன் கோபமாக அதே நேரத்தில் கணவனுக்கு அந்த கோபம் வருத்தமாக அறியப்பட வேண்டிய தொனியில் சொன்னாள்.

“எனக்கு மட்டும் என்ன ஆசையா? இரு இவன் இல்லேனா வேற டாக்டரு.. எவ்வளவு செலவானாலும் முடிச்சிற வேண்டியது தான்”..

இவர்கள் பேசுவது எல்லாம் தனத்தின் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது. அவள் காதில் விழுவதை பற்றி இவர்களுக்கு என்ன கவலை? அவளால் தான் பதில் பேச முடியாதே? இதுவே ஒரு மாதத்திற்கு முன்பு என்றால் தனத்தை கேட்டுத்தான் வீட்டில் எல்லாம் நடக்கும்.. ஆனால் இப்போது?

இவன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்வதை கேட்கும் போது அந்த கோணல் வாயிலும் லேசாக ஒரு சிரிப்பு.. தேவையில்லாத ஒரு ஞாபகம் வந்து போனது.. ”அய்யா எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல எம்புள்ளைய காப்பாத்தீருங்கய்யா.. என் உசுரே போனாலும் பரவாயில்ல.” சிரிப்போடு சிறு கண்ணீரும் வழிகிறது அந்த நினைவில்..

“ஏங்க இங்க பாருங்க உங்க அம்மா அழுகுறாங்க..”

“கெழவி இதால நம்ம தான் அழுகுறோம்.. சும்மா எதாவது தூசி விழுந்திருக்கும்.. இதுவா அழும்? சீக்கிரம் போயித்தொலையாம நம்மள தான் அழ வச்சிட்டு இருக்கு..”

கண்ணனின் இந்தப்பேச்செல்லாம் தனத்திற்கு பல தேவையில்லாத நினைவுகளை மனதில் தோண்டி எடுத்துக்கொண்டிருந்தன. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு வளந்த பய தான் கண்ணன். அவன் வயித்துல இருக்கும் போதே அவன் அப்பா ஏதோ சீக்கு வந்து செத்துபோய்யிட்டான். ரெண்டு கை, மூனு வயித்துக்கு சோறு போட்டுச்சி.. இப்ப வயிறு ரெண்டாயிருச்சி.. ஆனா உழைக்குறதுக்கு கையி?  அவளே, பக்கத்துல இருக்குற முனிசிபாலிட்டி ஸ்கூல்ல கூட்டி விட்டு சுத்தம் செய்யுற வேலைக்கு சேந்தா.. அவங்க ஜாதில யாரும் இந்த வேலயெல்லாம் பாக்க மாட்டாங்க.. ஆனா வயித்துக்கு ஜாதி மதம் எல்லாம் தெரியாதுல? மகனப்படிக்க வச்சா.. சொந்த பந்தம் எல்லாம் இருந்தும் இல்லாத மாதிரி தான். அவளுக்கு கண்ணன் தான் சொந்தம். கண்ணனுக்கு அவள் தான் சொந்தம். 



ஒரு முறை கண்ணனுக்கு மஞ்சள் காமாலை. நோய் முத்திப்போயிருச்சி.. ”அய்யா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லய்யா எம்புள்ளய மட்டும் காப்பாத்திருங்கய்யா”னு அவா போகாத ஆஸ்பத்திரி இல்ல. எல்லாருமே கைய விரிச்சுட்டாங்க.. கடைசில ஒரு டாக்டரு 150ரூவா ஆகும்னாரு.. அந்த 150ரூவாய அவா எங்கேயோ புரட்டி குடுத்துட்டா.. ஆனா அத அடைக்குற வரைக்கும் அவா ரெண்டு நாளைக்கு ஒருக்க தான் சாப்பிட்டா.. மத்த நாளெல்லாம் பழைய சோறு ஊறும் வெறும் நீஸ் தண்ணி தான்.. அதும் பக்கத்து வீடுகள்ல கிட்டத்தட்ட பிச்சை மாதிரி எடுத்துத்தான்.. இதெல்லாம் கண்ணனுக்கு தெரியாது. அவளும் சொல்லிக்கிட்டது இல்ல.. அந்த நீஸ் தண்ணியின் புளிப்பு இப்பக்கூட அவளோட நாக்குல ஒரு மூலையில எங்கேயோ இருந்து அடிக்கடி எச்சி ஊறும் போது வந்துட்டுப்போகும்..

தனத்தின் மனசு பழைய விசயத்தலாம் அச போட்டுக்கிட்டே இருந்துச்சி.. அவளால தாங்கிக்கவே முடியாத வார்த்த, “எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்”.. நம்ம கண்ணனா இப்படி பேசுறான்னு அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம்.. இப்பக்கூட அறைக்கு வெளிய இருந்து அவன் குரல் கேக்குது. யார்ட்டயோ ஃபோன்ல பேசுறான்.. “ஆமா எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...”

தனத்துக்கு ‘ச்சீ’னு ஆகிருச்சி.. ’நாம உசுரையே வச்சிருந்த நம்ம மகன் நம்மள கொல்ல ஊர் பூரா பேரம் பேசுறானே.. இதயெல்லாம் பாக்குறதுக்கு கீழ வுழுந்த அன்னைக்கே போயிருக்கலாம்’னு நெனச்சிட்டு இருந்தா.. 

ஃபோன் பேசி முடிச்சிட்டு கோவமா உள்ள வந்தான்.. “என்னங்க என்ன சொல்றாங்க?” வழக்கம் போல ராணி கேட்டாள்..

“யாரும் ஊசி போட ரெடியா இல்ல.. ஆனா எனக்கு ஒரு ஐடியா இருக்கு”

“என்னங்க?”

“ஒன்னுமில்ல.. நீ நைட்டு நீ சீயக்கா, நல்லெண்ண எல்லாம் ரெடி பண்ணி வச்சிரு.. நான் வரும் போது இளநீ வாங்கிட்டு வரேன்.. தலைக்கூத்திரலாம், என்ன?” இதை தனம் கொஞ்சங்கூட எதிர்ப்பாக்கல.. மகனே பெத்த தாய கொல்லுவானானு அவளால இன்னும் நம்ப முடியல.. அவனையே வெறிச்சு பாத்துட்டு இருந்தா..

“என்னங்க சொல்றீங்க? நம்மளேவா?” ராணியும் பயந்துவிட்டாள்.

“வேற வழி? எத்தன நாளைக்கு இந்த கெழவிய சேவிச்சுக்கிட்டு, இந்த நாத்தத்துக்குள்ளயே கெடக்குறது? வீட்டுக்கு வந்தா ஒரு நிம்மதி இருக்கா?  அன்னைக்கே செத்துப்போகாம இத்தன நாளு கெடந்து என் சீவனையும் பலனையும் வாங்குது” தனத்தை பார்த்து கையை நீட்டிக்கொண்டே கத்தினான்.

“ஏங்க உங்க அம்மாவுக்கு கேக்க போகுது”

”கேக்கட்டுமே நல்லா.. அப்பையாவது சொரண வந்து நைட்டு நான் வாரதுக்குள்ள சாவுறாளானு பாப்போம்” சொல்லிக்கொண்டே வெளியே கிளம்பிவிட்டான் கண்ணன்.

ராணிக்கு அதற்கு மேல் அவளின் அத்தைக்கு அருகில் உட்கார்ந்து அவள் முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் தைரியம் இல்லை. அவளும் அந்த அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்.



மாலை கண்ணன் வீட்டிற்கு வந்தான். வாசலில் அவன் வண்டியை நிறுத்தும் சத்தம் தனத்திற்கு தெளிவாக கேட்டது. கையில் இரண்டு இளநீர்காய்களை தூக்கிக்கொண்டு தனம் இருக்கும் அறைக்கு வந்தான். அவன் கையில் இருக்கும் இளநீரை பார்த்ததும் அவள் அந்த கோணல் வாயில் ஒரு சிரிப்பு வந்தது. கைகளில் இருந்த இளநீரை பார்த்ததும் அவள் உதட்டின் சிரிப்பு இன்னும் அகலமானது. “இன்னும் சாகலையா?” என்பது போல் அவன் அவளை பார்த்துவிட்டு வீட்டிற்குள் போய்விட்டான். 

அடுத்த கொஞ்ச நேரத்தில் கண்ணனும் ராணியும் அவள் அறைக்கு முகத்தில் எந்த வித தயக்கமோ சலனமோ இல்லாமல் ஒரு திடமான எண்ணத்தோடு வந்தார்கள்.. 

”எம்மா எம்மா இந்த எள்நீய கொஞ்சம் குடிங்கம்மா” அவள் அருகில் வந்து டம்ளரில் இருக்கும் இளநீரை கண்ணன் அவள் வாயருகே கொண்டு போனான். தனம் அவனை மெதுவாக பார்த்தாள். பூ விழுந்த, கோடுகளால் சூழப்பட்டு ஒரு பள்ளத்துக்குள் கிடந்த அவளின் அந்த இரண்டு சிறிய கண்களும் அவனிடம் என்னவோ கேள்வி கேட்பது போலவே அவனை பார்த்தன. டம்ளரை உதட்டருகில் கொண்டு போனான். தனம் கொஞ்சம் கொஞ்சமா உறிய ஆரம்பித்தாள் அந்த இளநீரை. இவனின் சிறு வயதில் 150 ரூபாய் கடனுக்காக அவள் குடித்த நீஸ் தண்ணியின் புளிப்பு சுவை இந்த இளநீரில் அவளுக்கு தெரிந்தது. இளநீரின் சுவை மொத்தமாக மறந்து, வெறும் நீஸ் தண்ணியை குடிப்பதாக நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக பருகிக்கொண்டிருந்தாள். 

“வேமா குடிங்கம்மா.. எவ்வளவு நேரம் தான் நான் குனிஞ்சுக்கிட்டே கைய நீட்டிக்கிட்டே நிக்குறது? கையெல்லா வலிக்குது”.. தனத்தின் கண்களில் பெயர் அளவிற்கு கூட கண்ணீர் வரவில்லை. மெது மெதுவாக இரண்டு இளநீரையும் குடித்து முடித்தாள்..

“ஏய் இந்தா நீ இப்ப எண்ணெய தேச்சி விடு”

“ஏங்க எனக்கு பயமா இருக்குங்க.. இதுலாம் பாவமில்லையா?”

“கஷ்டப்படுறவங்கள கொன்னு நாம அவங்க கஷ்டத்த கொறைக்கிறோம்.. இது பாவமில்ல புண்ணியம்” காமாலையில் கஷ்டப்பட்டு உயிர் பிழைத்த அவன் சொன்னான் இப்படி..

அவள் கையில் இருந்த கிண்ணத்தை வேகமாக புடிங்கினான். ”சரி நீ போயி அண்டால தண்ணிய ஊத்தி வையி நா வரேன்”..

“இல்லைங்க தனியா போக ஒரு மாதிரி இருக்கு.. நீங்க இத முடிங்க.. சேந்து போவோம்..”

“சரி அந்த ஃபேன ஃபுல் ஸ்பீடுல வையி” என்று கூறிக்கொண்டே கையில் எண்ணெய்யை அள்ளி, வெள்ளை வெளேர் என மின்னிக்கொண்டிருந்த, பல நாள் கவனிக்கப்படாமல் இருந்த தனத்தின் கூந்தலில் குளிர தேய்த்தான். மீண்டும் ஒரு முறை தலையில் எண்ணெய் விட்டான். அடுத்து அவள் முகத்தில் கை கால்களில் எல்லாம் குளிர தேய்த்தான்.. காத்தாடி மிக வேகமாக குளிர் காற்றை அறை முழுவதும் பரவ விட்டுக்கொண்டிருந்தது. ஊரில் இருக்கும் எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, தானும் கண்ணனும் எண்ணெய் வாங்க காசு இல்லாமல் வேடிக்கை மட்டுமே பார்த்து கழித்த ஒரு தீபாவளி அவளுக்கு ஞாபகம் வந்தது எங்கோ ஒரு மூலையில். சட்டென்று அந்த ஞாபகம் மறைந்து, தனத்திற்கு உடல் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவளுக்கு தன் மகன் செய்வதையெல்லாம் பார்க்கும் போது அழுகையோ சிரிப்போ எதுவுமே இப்போது வரவில்லை. சொல்லப்போனால் அழுவதற்கும் சிரிப்பதற்கும் அவள் உடம்பு ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை.. காத்தாடி முழு வேகத்தோடு ஓசை எழுப்பிக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தது.. காத்தாடியின் ஓசை, தனத்தில் அடித்தொண்டையில் இருந்து வரும் வேகமான மூச்சுக்காற்றின் ஓசையை வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மூச்சையும் மிகவும் கஷ்டப்பட்டு வறண்டு போன அந்த தொண்டைக்குழிக்குள் இருந்து மிக மிக மெதுவாக ஆழமாக எடுக்க முயற்சி செய்தாள்.. பாதி மூச்சு பாதியிலேயே நின்றது.. ஒரு சில மூச்சு தான் தொண்டையையும் தாண்டி வாய் வழியாக காற்றை எடுத்து அவள் நுரையீரலுக்கு அனுப்பிக்கொண்டிருந்தன..

ஒருவழியாக அவள் உடம்பில் எண்ணெய்யை அழகாக பரவ விட்டுவிட்டான்.. அவள் உடல் இப்போது முன்னை விட வேகமாக நடுங்கியது.. மூச்சு விட ரொம்ப சிரமப்பட ஆரம்பித்துவிட்டாள். “என்னங்க, ஒங்கம்மாவுக்கு இப்படி நடுங்குது?”

“ஆமா.. சரி ஒரு கை பிடி.. தூக்கிட்டு போய் குளிப்பாட்டிருவோம்”

“என்னங்க, பாக்கவே ரொம்ப பாவமா இருக்குங்க.. விட்ருவோம்ங்க”

“ஏன்டீ இப்டி அரகொறையா விட்டுட்டு போயி, சாகாம, இன்னும் நம்மள பாடாப்படுத்துனா என்ன பண்ணுவ? ஒழுங்கா ஒரு கை பிடி”.. ஒரு வேளை மாமியார் பிழைத்துக்கொண்டால், மீண்டும் பீ அள்ளிப்போட வேண்டுமோ என பயந்து ராணியும் ஒரு கை பிடித்தாள்.. தனத்தில் உடல் மிகவும் குளிராக இருந்தது.. இருவரும் தனத்தை வீட்டின் பின் பக்கம் அள்ளிக்கொண்டு சென்றனர்.. அங்கு ஒரு அண்டாவில் தண்ணீர் நல்ல குளிரில் இருந்தது தலைக்கூத்த...

கண்ணன், தனத்தை தரையில் சுவரோடு சாய்த்து உட்கார வைத்தான்.. தனத்தின் உடல் குளிரில் இன்னும் அதிகமாக நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் கூட லேசாய் சொருகிப்போயிருந்தன.. ஒவ்வொரு மூச்சும் ஒரு வறட்சியான சத்தத்தை உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. ஒரு கைப்பட்டையில் தண்ணீரை எடுத்து எண்ணெய் வழிந்து கொண்டிருந்த தன் தாயின் தலையில் ஊற்றினான். குளிர்ந்த நீர் பட்டதும் தனம் கொஞ்சம் வேகமாக எம்பினாள் தரையில் இருந்து. மகனுக்கு எந்த எதிர்ப்பும் காட்டக்கூடாது என்று அவள் மனம் நினைத்தாலும், உடல் இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ளத்தானே எத்தனிக்கும்?

“ஏய் எங்கம்மாவ கொஞ்சம் அழுத்திப்பிடிடீ..” மனைவிக்கு கட்டளை இட்டுக்கொண்டே அடுத்த சொம்பு நீரை எடுத்து ஊற்றினான். இந்த முறை முதல் தடவையை விட இன்னும் அதிகமாக எம்பினாள் தனம். காற்று அவள் வாய் வழியாக உள்ளே போனாலும், உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்ற முடியாமல் அவள் தொண்டையும் முதுகுத்தண்டுவடமும் தவித்தன. கொர் கொர் என்கிற சத்தம் மட்டும் தான் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது. சுற்றி நடக்கும் அனைத்தும் தனத்தின் கண்கள் வழியாக மூளைக்கு செல்வது கொஞ்சம் கொஞ்சமாக தடை பட ஆரம்பித்தது. கண்கள் சொருகின. உடலில் வெறும் உணர்ச்சி தான் இருந்ததே தவிர, அந்த உணர்ச்சி முன்பை போல் எம்பி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது. சில செம்பு நீரூற்றலுக்கு பிறகு தனம் அதிகமாக துடிக்க ஆரம்பித்துவிட்டாள். முன்னைப்போல் எம்பவில்லை.. ஆனால் உடலில் வெறும் துடிப்பும் நடுக்கமும் மட்டும் தான். தொண்டையில் சத்தமும் வரவில்லை.. 

“ஏங்க.. ப்ச் ஏங்க பாருங்க இங்க.. தண்ணி ஊத்துறத நிறுத்துங்க.. மூச்சு சத்தம் கூட வரலைங்க.. ஒடம்பு மட்டும் நடுங்குது.. கண்ணெல்லாம் மூடிட்டாங்க பாருங்க.”

“ஹ்ம் ஆமா பாத்தேன்.. இருந்தாலும் முழு அண்டாவையும் ஊத்திருவோம்.. பேப்பர்ல பாக்குறது இல்ல? தீடீர்னு பொழச்சி வந்தாலும் வந்துரும் எங்க அம்மா.. அதனால எல்லா தண்ணியவும் ஊத்திருவோம்”..

முழு அண்டாவும் காலியான போது, தண்ணீர் பட்ட சுவரும் தனமும் ஒரே மாதிரி தான் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் இருந்தார்கள்.. “ஏ உன் கைய எடு” என்றான்.. 

ராணி தனத்தின் மீது இருந்த தன் கையை எடுத்தாள்.. தனம் சுவரோடு சாய்ந்து மெதுவாக தரையில் சரிந்தாள். கண்ணன் தனத்தில் அருகில் வந்து, அவள் பால் கொடுத்த மாரில் காதை வைத்து இதயம் துடிக்கிறதா என பார்த்தான்.  துடிக்கவில்லை. அவனை தூக்கி ஆடிய கையில் நாடி இருக்கிறதா என பார்த்தான். நாடித்துடிப்பும் அடங்கியிருந்தது. துடிக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்டவுடன் அவன் முகத்தில் ஒரு பெருமூச்சு.. “ஏ தொடைக்க துண்ட எடுத்துட்டு வா”

தனம் அழகாக துடைக்கப்பட்டு, குளியலின் அடையாளமே இல்லாமல் தன் படுக்கையில் வேறு ஒரு ஆடையுடன் கிடத்தப்பட்டாள். கண்ணனுக்கு தன் அம்மா இல்லாதது மனதில் ஏதோ குறைந்த ஒரு உணர்வை லேசாக கொடுத்தது. நகத்தை கடித்துக்கொண்டு யாருக்கு முதலில் சொல்வது என யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது...

கதவை திறந்து கொண்டு கண்ணனின் மகன் சந்தோஷ் பள்ளி, டியூசன் என அனைத்தையும் முடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவனை பார்த்ததும் கண்ணன் பெருங்குரலெடுத்து கதறினான், “டேய் சந்தோஷ் அய்யம்மாவ பாத்தியாடா? நம்மளலாம் விட்டுட்டு போயிட்டாங்களேடா”..  தனம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால்ம் தன் மகனுக்கு தன் மேல் இருக்கும் இந்த பாசத்தை நினைத்து பூரித்துப்போயிருப்பாள்.. அப்படி அழுதான் கண்ணன்...

அந்த அறையின் பக்கவாட்டு சுவற்றில் அவன், அவன் மனைவி, அவன் பையன் சந்தோஷ், அவன் அம்மா மூவரும் குடும்ப ஃபோட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தனர். தனம் அந்த படத்தில் தன் பேரனை பார்த்து என்னவோ சொல்வது போல் சிரித்துக்கொண்டிருந்தாள்.. அவனும் புரிந்தது போல் கேட்டுக்கொண்டிருந்தான்.



பின் குறிப்பு:

தலைக்கூத்தல் (தலைக்கு ஊத்தல்) என்பது தென் மாவட்டங்களில், குறிப்பாக எங்கள் விருதுநகர் மாவட்டத்தில், வீட்டில் பராமரிக்க முடியாத முதியவர்களை கொலை செய்யும் டெக்னிக்கிற்கு பெயர். இது அந்த கொலைகாரர்களால் இங்கு தவறாக பார்க்கப்படுவதில்லை!!!
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One