அவள் பெயர் தெரியாது!!! வயது 35 வெள்ளை நிறம்..

Wednesday, April 14, 2010

இன்று வேலை விஷயமாக எங்கள் ஊரில் உள்ள பெண்கள் கல்லூரிக்கு சென்றேன். படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்கு வந்துவிட்ட பிறகும் சரி, இந்த பெண்கள் கல்லூரியில் தான் பல நேரம் செலவிட்டிருக்கிறேன். படிக்கும் பொது கல்லூரிக்கு வெளியே, இப்போது கல்லூரிக்கு உள்ளே. பயந்து பயந்து, படிக்கும் காலத்தில் சைட் அடித்த கிக் இப்போது நேருக்கு நேராக அவர்களை கல்லூரிக்குள்ளேயே பார்க்கும் போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

கல்லூரியின் கட்டிட மேற்பார்வையாளரிடம் பேசிவிட்டு, நிர்வாக அலுவலகத்தின் முதல் தளத்தில் இருக்கும் அவர் அறையை விட்டு வெளியேறி கீழிறங்கி வருகிறேன். அடுப்பில் இருந்து கங்கை கொட்டுவது போல் வெயில் வாட்டிக்கொண்டிருந்தது. கல்லூரியின் முக்கிய வாயிலை அடையும் பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது தான் அவரை (அவளை) பார்த்தேன்.

'இவா இங்க தான் இப்போ வேல செயராளா?' என்று எண்ணிக்கொண்டே ஆச்சரியமாக பார்த்தேன். நடந்து செல்லும் போது அவளும் என்னை பார்த்தாள். கடந்து சென்றாள். அவளுக்கு என்னை தெரியாது; ஆனால் எனக்கும், கல்லூரி நாட்களில் எங்கள் பாட்ச்சில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் எப்போதும் அவளை மறக்க முடியாது. 'மறக்கக்கூடிய பிகராடா அது?' என்று மனதில் ஒரு பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டேன்.

என் நினைவுகள் இப்போது 2004ம் ஆண்டிற்கு சென்றது. நான் கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைத்த வருடம் அது. எங்கள் கல்லூரி சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. மாணவர்களிடம் "பால்வாடி" என்னும் செல்லப்பெயரையும் பெற்றிருந்தது. காரணம் மிகுதியான கணடிப்பு. பெயருக்கு கூட ஒரு பெண் கிடையாது. துப்புரவு பணியாளர் முதல் அனைவரும் ஆண்களே. முதல் ஆறு மாதங்கள் கவலைக்கிடமாகவே சென்றன. ஆசிரியரின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னால் தண்டிக்கும் ஒரே கல்லூரி, நான் படித்த கல்லூரி தான்.

இப்படி வறட்சியாக சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் தான் அந்த தேன் வந்து பாயும் செய்தி எங்கள் காதில் விழுந்தது. கல்லூரி அலுவலகத்தில் அடிக்கடி சில பெண்களின் தலைகள் தென்பட்டன. என்ன ஏது என்று விசாரித்த பொது, அடுத்த ஆண்டு முதல் எங்கள் கல்லூரியில் மாணவிகளையும் சேர்க்க இருக்கிறார்கள், அதனால் பெண் விரிவுரையாளர்களை வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற தகவல் வந்தது.இத கேட்டவுடன் அவனவனுக்கு தலைகால் புரியவில்லை. பெல்ட் என்றாலோ, ஷூ என்றாலோ என்னவென்றே தெரியாமல் இருந்தவனும், பிராண்டட் ஷூவும், சட்டைகளும் அணிந்து வர ஆரம்பித்து விட்டான். சில ஆசிரியர்கள் தான் மிகவும் காமெடி பீசாக வந்தார்கள் - டக் இன் என்ற பெயரில் நெஞ்சில் பாண்ட்டை மாட்டுவது, ஓட்டை ஆங்கிலத்தில் வகுப்பில் பேசிப்பழகுவது என்று பட்டப்பெயர் வைப்பதற்கு ஏதுவாக பல செயல்களில் வெறிகொண்டு இறங்கினார்கள்.

இந்த நிலையில் தான் தாவரவியல் துறைக்கு அவள் விரிவுரையாளராக வந்தாள். கல்லூரி காலத்தில் நாம் யாருக்கு தான் மரியாதை கொடுத்தோம்? அப்பாவையே "எங்க அப்பன்" என்று பேசி தான் நண்பனிடம் கெத்து காட்டுவோம்; இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? சரி அவளை பற்றி சொல்லிவிடுகிறேன். அவளுக்கு 25ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும். எங்கள் ஊரில் எவனும் இப்படிப்பட்ட கலரில் ஒரு பெண்ணை பார்த்திருக்க மாட்டான். அம்புட்டும் கரிச்சட்டி மாதிரி தான் இருக்கும். ஆனால் இவள் முகத்தில் பாலை கொட்டினால் பாலுக்கும் இவள் கலருக்கும் வித்தியாசம் தெரியாது. இவள் கழுத்தில் தெரியும் பச்சை நெரம்பு எந்த ஆணையும் சுண்டி இழுக்கும். எப்பொழுதும் அடர் நிறங்களிலேயே ஆடை அணிந்து வருவாள். முட்டை வடிவில் சற்றே சதைப்பற்றான முகம், மூக்கின் வலது புறத்தில் உத்து கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு ஒரு மூக்குத்தி, கொழுக்மொளுக் என்ற தேகம் - இது தான் அவள். அவள் ஒரு கையில் எதாவது புத்தகத்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் பேனாவை பிடித்துக்கொண்டு அந்த கையை குறுக்காக வீசி அகலமான எட்டு வைத்து காலை விரித்துக்கொண்டே தான் நடந்து வருவாள். அவளின் நடை அவளுக்கு பலவிதமான பட்டபெயர்களை பெற்று தந்தது. சேலையின் எந்த பாகமும் தோள் பகுதியை தாண்டி இருக்காது. இதனாலேயே அவளுக்கு இடது புறம் தான் பலரும் திரிவோம்.

"டேய் மாப்ள, அவ திருச்சிகாரியாம்டா.."

"போடா வெளக்கென்ன, அவள பாத்தா நாகர்கோயில் ஆளு மாதிரி இருக்கா.. ஆளும் நல்ல அமைதியானவளா இருக்காடா."

"டேய் அவ எந்த ஊர்காரியா இருந்தாலும் நம்ம கண்ணு மூடப்போரதில்ல. பொறவு என்ன? மூடிட்டு சைட் மட்டும் அடிங்கடா" ஒரு சீனியர் மாணவனின் அறிவுரை ஏற்பதாக இருந்தது.

ஆனால் நாங்கள் நினைத்தது போல் அவள் இல்லை. வகுப்பில் அவள் யாரிடமாவது கேள்வி கேட்கும் போது சுட்டு விரலை நீட்டாமல் நாடு விரலை நீட்டி "நீ சொல்லு" என்பாள். யாருக்கும் பதில் தெரியவில்லை என்றால் "நீங்க எல்லாவனும் வேஸ்ட், ஒருத்தனுக்கும் ஒன்னு கூட தெரியலையா?' என்று நடுவிரலை உயர்த்திக்காட்டி நக்கலாக சொல்லுவாள். பாடம் நடத்தும் போது மட்டும் தான் அவள் கெடுபிடியாக இருப்பாள். சாதாரணமான நேரங்களில், மிகவும் உரிமையோடு மாணவர்களிடம் நடந்துகொள்வாள். நாங்களும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளிடம் வறுத்து தள்ளிக்கொண்டு இருப்போம். "இப்போ எல்லாம் வருவிங்கடா. அடுத்த செமெஸ்டர்ல இருந்து நீங்க கண்டுக்கவே மாட்டேங்க. உங்க கிளாஸ்லையே ஏகப்பட்ட பொண்ணுங்க வந்துரும் கடலை போட" என்று அவள் கவலையாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாள். அப்போதெல்லாம் "அப்படியெல்லாம் சொல்லாதீங்க மேடம், எங்களுக்கு நீங்க தான் குட் பிரண்ட்" என்று வலிந்துகொண்டிருப்போம்.

அன்றும் வழக்கம் போல் மதிய உணவு இடைவேளையில் அவளைப்பற்றி கமென்ட் அடித்துக்கொண்டிருந்தோம். அவளுக்கு வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மிகவும் அசிங்கமான கெட்டவார்த்தை ஒன்றை பட்டப்பெயராக வைத்திருந்தோம். அந்தப்பெயரை இப்போது நினைத்தாலும் மனதிற்குள் ஒரு கிளர்ச்சியும் சிலிர்ப்பும் சிரிப்பும் பொங்கும். கல்லூரி நாட்களில் தான் நாம் எவ்வளவு சந்தோசமாக சிரித்துக்கொண்டிருப்போம்? ஆனால் அந்த சிரிப்பு யாரோ ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்திய சிரிப்பாகத்தான் இருக்கும். அன்றும் அப்படித்தான் பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்.

"மாப்ள கல்யாணம் பண்ணுனா அவள மாதிரி ஒரு பிகர கல்யாணம் பண்ணனும்டா.."

"ஏன்டா, அவளையே பண்ண வேண்டியது தான?"

"இவளையா? என்ன என்ன செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட சொல்லுறியா?"

"என்னது செகண்ட் இன்னிங்ஸா? மொத இன்னிங்க்ஸ் எவன்டா? நம்ம கட்டக்காலனா (ஹாஸ்டல் சப் வார்டன்)?"

"டேய் நான் சீரியஸா பேசுறேன்."

"ஓ.. அப்போ அவ வந்தா வேண்டாம்னு சொல்லுருவ?"

"டேய் அவ பவம் டா. அவளுக்கு கல்யாணம் ஆகிருச்சு. டிவர்சும் ஆகிருச்சு"

"உனக்கு எவன்டா சொன்னது? பாத்தா அப்படி தெரியலையே"

"நேத்து பேசிட்டு இருக்கும் போது அவ தான் சொன்னா."

"பாருடா இவன் கூட தான் நாமளும் சுத்துறோம். நம்மகிட்ட சொல்லாம இவன்ட மட்டும் சொல்லுறானா என்ன அர்த்தம்? இவன வசதிக்கு இல்லேனாலும் அசதிக்கு..."

"டேய் இவன அப்பறம் ஓட்டலாம். மொத அவ கதைய மொத கேப்போம். நீ சொல்லுடா மாப்ள"

"அவளுக்கு கோயில்பட்டி பக்கமாம்டா. 20 வயசுலேயே கல்யாணம் ஆகிருச்சாம். அவ புருஷன் ஒரு தீப்பட்டி ஆபிஸ்ல சூப்பர்வைசரா இருந்தானாம். ஒரு ஆக்சிடண்ட்ல செத்துப்போயிட்டானாம். கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே புருஷன் செத்துப்போயிட்டதால இவள இவங்க அம்மா வீட்டுக்கே அனுப்பிட்டாங்களாம்"

"நாங்க ரியாக்சன் எல்லாம் குடுக்க மாட்டோம்; கதைய மட்டும் சொல்லு"

"அதுக்கு அப்பறம் படிச்சு M.Phil முடிச்சு இங்க வந்துருக்கா"

"கடவுள் நம்ம கண்ணுல இவள சிக்க வைக்கக்குடாதுன்னு நினைச்சுருக்கார். ஆனா விதிய பாத்தியா? என்னென்னமோ சதி பண்ணி நம்ம கண்ணுக்கு விருந்து குடுத்துருச்சு"

"ச்சே ஏன்டா இப்படி பேசுறிங்க? அவள பாத்தா உங்களுக்கு பாவமா இல்லையா?"

"சொல்லிட்டாருயா கலக்டரு. சரி விடு, வேற எதுவும் சொன்னாளா?"

"நான் தான் 'நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு' கேட்டேன்"

"உன்ன கட்டிக்குறேன்னு சொல்லிட்டாளாடா?"

"அவ வீட்ட மீறி அவ எதுவும் செய்ய முடியாதாம். வீட்ல பாத்து பண்ணி வச்ச தான் உண்டாம். அண்ணா அவங்க பண்ணமாட்டாங்களாம்"

அவளுக்கு சீன் பார்த்துக்கொண்டே இரண்டாவது செமேஸ்டேரையும் முடித்துவிட்டோம். இரண்டாம் ஆண்டு கல்லூரி வண்ணமயமாக காட்சி தந்தது. வெல்கம் பார்ட்டி வைத்து ஓரளவு ஜூனியர் பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டோம். "அண்ணா" என்று எவளாவது சொன்னால், 'நான் ஒன்னும் உனக்கு ப்ரொபோஸ் பண்ணிட மாட்டேன். அதனால அண்ணான்னு கூப்பிட்டு அசிங்க படுத்தாத' என்று விவரமாக சமாளித்து அந்த உறவுச்சொல்லை தவிர்த்துவிடுவோம். அவனவன் கடலை, பிக்கப், லவ் என்று திரிந்து கொண்டிருந்த நிலையில் நாங்கள் எப்படி அந்த கோவில்பட்டிக்காரியை நினைத்துக்கொண்டிருக்க முடியும்? சென்ற வருடம் இருந்த மார்க்கெட் அவளுக்கு இப்போது இல்லை. அதே போல் அவளும் எங்களிடமோ, மற்ற பெண்களிடமோ பேசுவதில்லை. பாடம் நடத்துவதிலும் முன்புபோல் சுருசுருப்போ விறுவிறுப்போ இல்லை.

இப்படி எங்கள் வாழ்வு வலமாக போய்க்கொண்டிருந்த நிலையில் தான் ஒரு வதந்தி பரவியது. அது, அந்த கோவில்பட்டிக்காரியும் எங்கள் துறையில் உள்ள ஒரு விரிவுரையாளரும் காதலிக்கிறார்கள் என்பது. இந்த வதந்தி உண்மை என்பது போல் தான் பல நம்பககரமான இடங்களில் இருந்து செய்திகள் வந்தன.
'நேத்து கூட பாத்தேன் மாப்ள, சாந்தரம் ஆறுமணி வரைக்கும் கிளாஸ்ல உக்காந்து அவன் அவாட்ட கடலை போட்டுட்டு இருந்தான்டா', ' லாப்லையும் இது தான் டா நடக்குது. நாங்க செடிய நோண்டிக்கிட்டு இருக்கும் போது அவன் அவள நோண்டிக்கிட்டு இருக்கான்டா' என்று பல விதமான செய்திகள். அவளுக்கு 'எச்சி இலை' என்று இந்த காலகட்டத்தில் பெயர் மாற்றினோம். அவள் விஷயம் எங்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. அவர்கள் அவனை மிரட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டார்கள்.

அந்த நிகழ்விற்கு பிறகு இவளும் ஒரு வாரத்திற்கு கல்லூரிக்கு வரவில்லை. பின்புவந்த அவளிடம் பலவிதமான மாற்றங்கள். யாரிடமும் சரியாக பேசுவதில்லை. ஆடைகளும் கொஞ்சம் தாறுமாறாக கட்டிவர ஆரம்பித்தால். இடை தெரியும் என்பதாலேயே மாணவிகளுக்கு சேலை அணியும் சுதந்திரம் இல்லை எங்கள் கல்லூரியில். ஆனால் பெண் விரிவுரையாளர்கள் சேலை மட்டுமே அணிந்து வரவேண்டும் ஒருசில நிபந்தனைகளுடன். இவள் இப்போதெல்லாம் இடையை அகலாமாக காட்டும் விதமாகவே சேலை அணிந்து வந்தாள். மெல்லிய புகைச்சல் கிளம்பியது. ஒரு நாள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்து புகைச்சலை மேலும் கிண்டி எரிய வைத்தாள். மாணவர்கள் யாராவது பாடத்தில் சந்தேகம் கேட்க துறைக்கு சென்றால், 'நான் இந்த மாதிரி டிரஸ் போட்டு வந்தா தான் என்கிட்டே பேசுவிங்களா?' என்று கேட்டிருக்கிறாள்.

ஒரு நாள் அவள் சிகப்பு நிற சேலை லோஹிப்பாக அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு வந்தாள். வகுப்பில் அவள் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது கல்லூரி முதல்வரும் இயக்குனரும் வந்தனர்.

"மேடம் டிபார்ட்மென்ட் வாங்க உங்ககிட்ட பேசணும்"

"இல்ல எனக்கு சிலபஸ் முடிக்கணும், இங்கவே சொல்லுங்க"

"நீங்க நடத்துனதேல்லாம் போதும், இனி உங்களுக்கு இங்க வேல இல்ல, நீங்க கிளம்பலாம்"

"நான் எதுக்கு சார் போகணும்"

"என்னடி கத்துற? பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்க வரமாதிரியா நீ வர? ஏதோ அவுசாரி மாதிரில வர." கல்லூரி முதல்வரும் அவளும் பேசிக்கொண்டிருக்கும் போது இயக்குனர் கத்திவிட்டார்.

அந்த வார்த்தையை கேட்ட உடன் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டன. கலங்கிய கண்களுடன், நாங்கள் இதை கவனிக்கிறோமா என்று பார்த்தாள். நாங்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தோம்.

"நான் கண்ணன கல்யாணம் பண்ணி ஒழுங்கா இருந்திருப்பேன். நீங்க அவர வெளிய அனுப்புனனாலதான் இன்னைக்கு இப்படி நிக்குறேன்"

பேச வந்த முதல்வரை இயக்குனர் தடுத்து "நாங்க என்ன காலேஜ் கட்டி வச்சுருக்கோமா இல்ல மாமா வேல பாத்துட்டு இருக்க லாட்ஜ் கட்டிருக்கோமா?. முண்ட, பண்ணுறதையும் பண்ணிட்டு இப்போ வக்கனையா பேசுறத பாரு சனியன்" என்று கூறிக்கொண்டே அவள் முடியைப்பிடித்து தரதரவென்று இழுத்து தள்ளிவிட்டார். அவள் திரும்ப வரவே இல்லை. ஒரு வாரத்திற்கு கல்லூரி முழுவதும் எங்கள் வகுப்பு மாணவர்களிடம் நடந்தவற்றை தெளிவாக விசாரித்துக்கொண்டிருந்தார்கள். நாங்களும் 'நல்ல பிகர்' போச்சே என்ற துக்கத்தில் சில நாட்கள் இருந்தோம். மீண்டும் சக மாணவிகள் ஆசிரியைகள் என்று கடமையை செவ்வனே செய்தோம்.

படிப்பு முடிந்து இதோ இப்போது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளை அவளை எங்கள் ஊரில் அதுவும் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பார்ப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. இப்போதும் அதே பழைய குறுகுறுப்புடன் அவள் இடையை பார்த்தேன். ஒழுங்காக சேலை கட்டியிருந்தாள். நடையில் மிகுந்த நிதானமும் மென்மையும் தெரிந்தன. என்னைக்கடந்து சென்றுவிட்டாள்.

எவ்வளவு யோசித்தும் எனக்கு அவள் பெயர் ஞாபகம் வரவில்லை. அவள் பட்டபெயர் மாட்டும் ஞாபகம் வந்தது. ஏனோ, அந்த பெயர் இப்போது ஞாபகம் வந்ததற்கு மனம் வருத்தமாக இருந்தது. இனிமேல் அந்த கல்லூரிக்கு வேரயாரையாவது அனுப்பிவிட வேண்டும் என்று முடிவுசெய்து குற்ற உணர்வோடு வெளியேறினேன்.


1 comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One