விஸ்வநாதன் ஆனந்தா? யாரு அது?

Tuesday, August 24, 2010

இன்று அம்மா 'திருமதி செல்வம்' பார்த்துக்கொண்டிருந்த போது, கிடைத்த மிகப்பெரிய விளம்பர இடைவெளியில், மெதுவாக ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டிருந்தேன். ஜெயா டிவி யில் யாரோ விஸ்வநாதன் ஆனந்த் என்பவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பதில் தாமதம்; அவருடைய இந்தியக்குடியுரிமையில் சந்தேகம் என்கிற தோரணையில் செய்தி ஓடவிட்டார்கள்.

இதைப்பார்த்தவுடன் எனக்கு சில கேள்விகள் எழுந்தன..
*கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பதில் என்ன வரைமுறைகள் இருக்கின்றன?
*விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டவராக இருந்தாலும் அவர் இந்தியாவிற்கு தானே ஆடினார்? ஒவ்வொரு கோப்பை வந்ததும் நீங்கள் தானே பல் இழித்து வாங்கிக்கொண்டீர்கள்?
*ஒரு வேலை அவர் வெளிநாட்டவராகவே இருந்தாலும் என்ன பிரச்சனை?

ஓ.. வெளி நாட்டவர் என்றால் இதை விட மிகப்பெரிய பட்டம் எதாவது கொடுக்கலாம் என்று யோசித்திருப்பார்கள் போல. நாம் தான் வெளிநாட்டவர்களை அவர்கள் என்ன செய்தாலும் உயர்வாகத்தானே பார்ப்போம்? அப்படி இல்லாமலா ஒரு ஊரையே விஷம் பாய்ச்சி கொன்ற வெளி நாட்டவனை அரசு மரியாதையோடு விமானம் ஏற்றி அனுப்பிவைத்திருப்போம்?

நல்ல வேலை இந்த விஸ்வநாதன் ஆனந்த் என்பவரின் பெயரை பார்த்தால் இவர் ஹிந்து என்பது போல் தெரிகிறது. இவர் மட்டும் வேறொரு மதத்தவராக இருந்திருந்தால், இந்நேரம் நமது முதல்வர் கொதித்து எழுந்திருப்பார், மைனாரிட்டி மக்களின் உணர்வை பாதுகாக்க.. நல்ல வேலை, அவர் கோபப்பட்டு கேள்வி பதில் வெளியிடும் அளவிற்கு எதுவும் நடந்து விடவில்லை.

ஒரு டவுட்:
"டாக்டர் பட்டம் குடுக்குற அளவுக்கு இந்த விஸ்வநாதன் ஆனந்த் யாரு? Dr.விஜய்யை விட பெரிய ஆளா?" - அப்பாவி தமிழன்..

வம்சம் - விமர்சனம்...

Sunday, August 15, 2010


மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சிலம்பாட்டம் என்ற குப்பை படத்தின் கதையை அருமையான விதத்தில் படைத்திருப்பது தான் இந்த வம்சம்..

கதை மிகவும் பழக்கப்பட்ட சாதாரண கதை தான். ஆனால் அதில் 11 வம்சம், மண்டகப்படி, சாணி ஊற்றுவது, சூடம் பாலில் சத்தியம் செய்வது என்று ஒரு அசலான கிராமப்பின்னணியில் படம் கொடுத்திருப்பது நல்ல அம்சம். "எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்" என்று அறிவிக்கும் போது ஒற்றை ஆளாக அறிவுநிதி நடந்து வரும் இடம், அவர் ஒரு மாஸ் ஹீரோ இல்லை என்றாலும், ஜிவ் என்று இருந்தது. ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சுனைனாவின் பாத்திரப்படைப்பு ஒரு அசல் மறவர் பெண்ணை கண்முன் நிறுத்துகிறது. அவரே ஆள் வைத்து அறிவுநிதியை மிரட்ட செய்வது, சாணி ஊற்றுவது, என்று கொஞ்சம் (ரொம்பவே ) தைரியமான பாத்திரம் தான். அதுவும் இடுப்பில் இருந்து சைக்கிள் செயினை அவர் எடுக்கும் இடம் அருமை. ஆனால் இப்போதும் புரியாத ஒன்று, ஆடியோ ரிலீசின் போது 'இந்த மாதிரி படத்துல நடிப்பது பெருமையா இருக்கு' என்று கண்ணீர் விட்டார். நல்ல பாத்திரம் என்றாலும் இவர் அழும் அளவிற்கு ஒன்றும் கஷ்டமான பாத்திரம் இல்லை.

ஜெயப்ரகாஷின் நடிப்பு அருமை. 'என்ன மாதிரி அல்ப புத்திக்காரன் எவனும் கெடையாது' என்று அசால்டாக கடைசியில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தன் பாத்திரத்தை ஒரே வரியில் முடித்து விடுவார். கிஷோரும் கஞ்சா கருப்பும் உணர்து நடித்துள்ளனர்.

பசங்க படத்தின் புஜ்ஜிமா சின்ன வயது அருள்நிதியாக வருகிறான். அதே பள்ளி, பக்கோடா, அப்பத்தா என்று பசங்க படத்தின் பாத்திரங்களும் வருகின்றன. 'இந்த மைக் செட் அமைப்பாளர் LIC ஏஜெண்ட் மீனாட்சி சுந்தரம்' என்று விமல் பாத்திரமும் வாய் வழியாக வருகிறது. பசங்க படத்தில் செல் போனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ அதே முக்கியத்துவம் இதிலும். சிக்னல் இல்லாத ஊரில் கூட மக்கள் செல் போன் வைத்துள்ளார்கள் என்பதை இயல்பாக நக்கலுடன் சொல்லியுள்ளார் பாண்டி குமார்.

படம் முழுக்க எவ்வளவு தகவல்கள்? இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. காட்சிப்பதிவும் பின்னணி இசையும் ரசிக்கும் படி உள்ளது. முதல் திருவிழா பாடலை தவிர மற்றை கவரவில்லை. கற்றாழை மூலம் கொல்வது, பழிச்சொல்லுக்கு அஞ்சுவது, மானம் மரியாதைக்கு முதல் மரியாதை கொடுப்பது, பெண்களை அடிக்காமல் இருப்பது, ஓட்டை பிரித்து வீட்டில் ஆள் இருக்கிறானா என்று பார்ப்பது, கோழி பசு போன்ற கிராமத்து விலங்குகளுக்கும் மனித பாஷை புரியும் என்பது போன்ற சில புதுமைகளும் உள்ளன. பசங்க, களவாணி, வம்சம் என்று தமிழ் சினிமா புதுக்கோட்டை, தஞ்சாவூர் பக்கம் பயணம் செய்து மதுரையை காப்பாற்றுகிறது.


மொத்தத்தில் தங்கள் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள ஒவ்வொரு தேவரின மக்களும், தமிழக கிராமங்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய அம்சம் பலவும் கொண்டது இந்த வம்சம்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One