50வது பதிவு!!!! - தூர்தர்ஷனில் சிறு வயதில் கவரந்த நிகழ்ச்சிகள்..

Tuesday, March 29, 2011

பலரும் பிளாக் ஆரம்பித்து மாதத்துக்கு 100பதிவுகள் வரைப் போட்டுக்கொண்டிருக்கும் போது, 3வருடங்கள் கழித்து வரும் 50வது பதிவை பெரிதாக நினைக்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சிறு மகிழ்ச்சி. 50 நெருங்கிவிட்டதால். என் பதிவுகள் பலவும் பழைமையையும் பழைய நிகழ்வுகளையும் சார்ந்தே அமைந்திருப்பதை நண்பர்களில் சிலர் அறிந்திருப்பார்கள். எனக்கு எப்போதுமே இனிமையான பசுமையான பால்ய காலத்து விசயங்களை அசை போடப்பிடிக்கும். அந்த வரிசையில் என் 50வது பதிவாக சிறு வயதில் தூர்தார்ஷனில் என்னைக் கவரந்த சில நிகழ்ச்சிகளை (தமிழ் & ஆங்கிலம்) இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஜங்கிள் புக்:
சின்ன சின்ன சிட்டுகளாம் என்று தமிழில் ஆரம்பிக்கும் பாட்டு இது.. என் வயதொத்த அனைவரையும் தன்  சந்தோசங்களால் சிரிக்க வைத்த பாலு கரடியையும், பிரிவால் அழ வைத்த மௌக்லியையும், வில்லத்தனத்தால் பயமுறுத்திய ஷேர்கான் புலியையும் எப்படி மறக்க முடியும்? இதன் இரண்டாம் பாகமும் தூர்தர்ஷனில் போடப்பட்டது. மௌக்லி காட்டில் இருந்து ஊருக்குள் வருவது. ஆனால் அது முதல் பாகம் அளவுக்கு என்னைக் கவரவில்லை. அந்தக் காடும் காட்டு விலங்குகளும் சித்திரங்கள் தான் என்றாலும் அவை நம் கண் முன் நின்று நம்மிடமே பேசுவது போல் இருக்கும். ருட்யாட் கிப்லிங் (Rudyard Kipling) இந்தியாவில் நடப்பது போல் இந்தக் கதையை எழுதியிருப்பார். (அவர் இந்தியாவில் பிறந்தவர் தான், ஆங்கிலேயெ ஆட்சியின் போது)


அலிஃப் லைலா:
இந்த நாடகம் ஒவ்வொரு திங்களும் இரவு 9.30க்குப் போடுவார்கள். அரேபிய இரவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மர்மத்தொடர். எனக்கு இதில் வரும் கதாநாயகன் முகம் மட்டுமே நினைவில் உள்ளது இப்போது வரை. பார்ப்பதர்க்கு கண்ணாடி போடாத பாக்கியராஜையும் அனில் கபூரையும் கலந்த கலவை போல் இருப்பார். அவர் கோபப்படும் போது இடது மேல் உதடை உயர்த்தி கோபப்படுவர். இப்போது வரை நான் அதை தினமும் முயற்சி செய்து பார்க்கிறேன். என்னால் வலது உதடை மட்டுமே உயர்த்த முடிகிறது. இடது உதடு சொல் பேச்சு கேட்கவில்லை. அதே போல் இந்தத் தொடரில் வரும் இன்னொரு பாத்திரமும் மனதில் உள்ளது. அது கதாநாயகனின் தோழனாக வரும் ஒரு மந்திரவாதி. அவர் ஒரு தோல் பையை எப்போதும் வைத்திருப்பார். தன் உள்ளங்கையை மடக்கி அதில் ஒரு முத்தமிட்டு, கையை விரித்து இவர் உரிய ஆரம்பித்தால் சுற்றி இருக்கும் அனைத்தும் அந்தப் பைக்குள் வந்துவிடும். அதே போல் இவர் ஊதினால் அந்தப் பையில் இருந்து இவர் எது வர வேண்டும் என நினைக்கிறாரோ அது வந்து விடும். ஒரு முறை அவர் தண்ணீரை வெளியிட்டு எதிரிகளை சுற்றிவழைத்து கதாநாயகனைக் காப்பார். அப்போது நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பக்கத்து வீட்டு அக்கா சொன்னது, "பாவிங்க, தண்ணிய இப்படி செலவழிக்குராய்ங்க பாரு" என்று.


சந்திரகாந்தா:


வாராவாரம் ஞாயிறு காலை 9 மணிக்குப் போடப்பட்ட நாடகம். "சந்திரகாந்தா சந்திரகாந்தா அவள் கதையே..." என்று வரும் அருமையான பாடல். சுடச்சுட இட்லி தின்று கொண்டே பார்ப்பதால் டபுள் சந்தோசம். (அப்போதெல்லாம் வாரத்தில் ஞாயிரில் மட்டும் தான் இட்லி, தோசை, பூரி போன்ற டிபன் ஐட்டங்கள்.) பிற நாடகங்களைப்போல் இதில் ஆரம்பத்திலேயெ பாடல் வராது. முதலில் ஒரு சிறு முன்குறிப்பு கொடுப்பார்கள், சந்திரகாந்தாவைத் தேடிச்செல்லும் இளவரசன் பற்றி. இடை இடையில் பாடல் வரும். "இந்த சூழ்நிலையிலே இளவரசனின் நினைவிலே உருகுகின்றாள் சந்திரகாந்தா.. உருகுகின்றாள் சந்திரகாந்தா" என்கிற வரியை இப்போதும் முனுமுனுத்து உருகிக்கொண்டிருக்கிறேன். இதில் வரும் எஃகு என்னும் வில்லனும், பண்டிதரும், மறக்க முடியாதவர்கள். அதே போல் சேட்டக் என்னும் குதிரையும் மறக்கவே முடியாத ஒன்று. பல நேரங்களில் நல்லவர்களை எதிரிகளிடம் இருந்து காக்க தக்க சமயத்தில் வந்து நம் வயிற்றில் பாலை வார்ப்பது இந்த சேத்தக் தான்..

சுரபி


ஞாயிறு இரவு 9.30க்குப் போடுவார்கள். அரை மணி நேர நிகழ்ச்சி.  பொது அறிவை வளர்க்கும் நிகழ்ச்சி. மிகவும் ஆச்சரியமான பல விசயங்களைப் பற்றி பேசுவார்கள். நம் இந்திய நாட்டின் வரலாறு, கலாசாரம், பழக்க வழக்கங்களைப் பிரதானமாகக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி. சில நேரங்களில் வெளிநாட்டுத் தகவல்களும் வரும். அப்படித்தான் நான் Dead Sea பற்றி அறிந்து கொண்டேன், அங்கே யாரும் மூழ்கிவிட முடியாது என்று. டைட்டிலில் வரும் இசை மனதை மிருதுவாக வருடக்கூடியது., இதைத் தொகுத்து வழங்கிய ரேணுகா ஷஹானேவிற்கு (Hum aapke hain kaunல் மாதுரி தீக்ஸித்தின் அக்கா) நான் தீவிர ரசிகன். தொகுத்து வழங்கும் ஆணின்  பெயர் சித்தார்த் என்று நினைக்கிறேன். இப்போது மதுரை வானொலியிலும் கோடை எப்.எம்.லும் இருக்கும் சுந்தர ஆவுடையப்பனின் குரலுக்கு நான் இவரின் முகத்தையே கற்பனை செய்து கொள்வேன். ரேணுகா மற்றும் அந்த ஆணின் சிரித்த முகமும் அதற்கு கொடுத்த எளிய தமிழ் மொழி மாற்றமும், அவர்களின் உடைகளும் மறக்கமுடியாதவை.

மகாபாரதம்:


இந்த நாடகத்தைப் பற்றி நினைத்தாலே எனக்கு முதலில் நினைவு வருவது எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் நான் போட்ட சண்டை. அவள் அந்த சண்டைக்குத் தண்டனையாக தனது வீட்டிற்கு இனி மகாபாரதம் பார்க்க வரக்கூடாது என்று சொன்னாள். நானும் அதற்குப் பின் இதைப் பார்த்தது இல்லை. எங்கள் வீடும் ஆச்சி வீடும் பக்கத்துப் பக்கத்து தெருவில் இருந்தன. ஞாயிறு காலையில் என்னை எழுப்பி விட வருவார் இந்த நாடகம் பார்ப்பதற்கு. எழுத்துப் போட ஆரம்பிக்கும் போது கேட்கும் சங்கொலி, நாடகத்தின் இடையிடையில் அண்ட வெளியில் ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு கம்பீரக்குரல் கேட்கும். அந்தக் குரல் சொல்லும் கருத்துக்கள் எதுவும் புரியாது என்றாலும், அந்தக் குரல் நம்மை வசீகரித்து 'என்ன தான் சொல்றாய்ங்க?' என்று கவனிக்க வைக்கவல்லது..


மேலும் சாந்தி, யுக், ஷக்திமான், ஸ்ரீகிருஷ்ணா போன்ற பலவும் மறக்க முடியாதவை. அதிலும் ஷக்திமானில், இரண்டு கைகளையும் குறுக்காக ஒன்றின் பின்புறத்தை மற்றொன்று பார்ப்பது போல் வைத்து "இருள் நீடிக்கட்டும்" என்று சொல்லும் வசனம் அப்போது எங்கள் பள்ளியில் பிரபலம். தினமும் பள்ளி முடிந்து வந்தவுடன் ஆச்சியிடம் என்றைய சாந்தி மற்றும் யுக் கதைகளைப்பற்றி கேட்பேன். சாந்தி கதையை மட்டும் சொல்லுவார். யுக் அவருக்குப் பிடிக்காது. ஏனென்றால் அது சாந்தி போல குடும்பக்க்கதை  (ஏக் கர் கி ககானி என்று ஹிந்தியில் நாடகம் போடும் போது சொல்வார்கள்) இல்லை. சுதந்திரப் போராட்ட கதை. இன்னொரு முக்கியமான விசயம், 3மணி அவர் தூங்கும் நேரம். 2.30க்கு சாந்தி ஆரம்பித்து 3 மணிக்கு முடிந்து விடும். ஆச்சியும் சாந்தி முடிந்ததும் 4 மணி வரைத் தூங்கிவிடுவார். அதனால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததா இல்லையா என்பதே எனக்கு கடைசி வரைத் தெரியாமல் போனது. !

இதெல்லாம் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டவை. தமிழிலும் பல நல்ல நாடகங்கள் வந்தன. காத்தாடி ராமமூர்த்தி இயக்கி நடித்த "ஸ்ரீமான் சுதர்சனம்" என்னும் குடும்ப சிக்கனத்தை வலியுறுத்தும் நாடகம், விவேக்கின் "மேல்மாடி காலி" என்னும் நகைச்சுவை நாடகம். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் போன்று ஒன்று வருமா? வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் இருந்து அழைத்து வரும் அம்மாவிடம் "எம்மா இன்னைக்கு ஒலியும் ஒலியும்ல என்ன பாட்டுலாம் போடுவாங்க?" என்பேன். அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்லுவார் "வால் போஸ்டர் எல்லாம் பாத்துக்கிட்டே வா, இன்னைக்கு என்ன படம்லாம் வந்துருக்குன்னு. அதுல இருந்து தான் பாட்டு போடுவாங்க" என்பார். 

ஆனால் ஒரு முறை கூட அவ்வாறு எங்கள் ஊரில் ஓடும் படத்தின் பாடலை ஒளியும் ஒலியுமில் போட்டதில்லை.. அதே போல் புதன் கிழமைகளில் இரவு 7.20 க்கு ஒளிபரப்பப்படும் "சித்ரகார்" மூலம் தான் "பர்தேசி, பர்தேசி - ராஜா ஹிந்துஸ்தானி", "தூ ச்சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த் - மொஹ்ரா"  போன்ற பல ஹிந்திப்படப் பாடல்களும் பிரியமான பாடல்கள் வரிசையில் வந்தன.. தொடர்ந்து பல வாரங்களாக அவர்கள் முதல் பாடலாக பர்தேசி பாடலைத்தான் போட்டார்கள். இப்போது வரை அந்தப்பாடல் ஒரு எவர்கிரீன் தான். தூர்தர்ஷனைப் பற்றி இன்னும் நிறைய இப்படி பேசிக்கொண்டே போகலாம்..

டிஸ்கி : தூர்தர்ஷன் மட்டும் இருந்தபோது என்ன மாதிரி நிகழ்ச்சிகள் இருந்தது என்று பாருங்கள். வரலாறு மற்றும் அதன் புனைவுகள், இதிகாசங்கள், இலக்கியங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட நாடகங்கள், பொது அறிவு சார்ந்த விசயங்கள் என்று நமக்குக் கற்பிக்க பலவும் இருந்தன. ஆனால் இப்போது கேபிள் சேனல்களில் போடப்படும் நாடகங்களைப் பார்த்தால்........... சரி விடுங்க, அதப் பத்தி பேசுனா வாயில் ரொம்ப அசிங்க அசிங்கமா வரும்..

கருணாநிதியை ஆதரிப்பவர்களின் லட்சணம்...

Wednesday, March 23, 2011

தேர்தல் வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு கருத்துக்கணிப்பு, கட்சி ஆதரவு, மத, இன, ஜாதிச் சாயம் பூசுவது, கொடியைத்தூக்கிக் கொண்டு அலைவது என்று கிளம்பிவிட்டார்கள்.. பெரியார், secularism, என்று பேசுபவர்கள் தி.மு.க வையும், ஸ்பெக்ட்ரம், குடும்ப அரசியல் என்று குற்றம் சாட்டுவோர் அ.தி.மு.க. வையும் ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நம் மக்களுக்கு எப்போதுமே ஒரே விதமான விஷயங்கள் போர் அடித்து விடும்.. அதனால் தான், ஒரு ஆட்சி நல்லா இருந்தாலும் சரி, நல்லா இல்லாவிட்டாலும் சரி, இந்த ஆட்சி நல்ல ஆட்சியா இல்லையா என்பது புரியாவிட்டாலும் சரி, அதைத் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த 5 வருடத்துக்கு இன்னொருவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவார்கள். அந்த அளவுக்குப் புதுமை விரும்பிகள்!

2001ன் அ.தி.மு.க ஆட்சியையும், 2006 தி.மு.க ஆட்சியையும் அப்படிச் சொல்லலாம். வென்றவர்களுக்கே நாம் எப்படி வென்றோம் என்று புரிபடவில்லை. ஆனால் ஆட்சியின் கடைசி வருடத்தில் இருவரும் ஒரு சில தவறுகளை செய்தது நிதர்சனம். என்னதான் மக்களின் மனம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும், ஒரு சிலர் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இந்த இரு கட்சிகளையும் ஆதரித்துக்கொண்டு தான் வருகிறார்கள்..

தி.மு.க வை அப்படி யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்று பார்ப்போம். அ.தி.மு.க தான் தெரியுமே நமக்கு.. பார்ப்பனர்களும், தேவர் சமுதாயத்தில் பலரும்.. சரி மேட்டருக்கு வருவோம்..

இந்தக் கட்சியின் (தி.மு.க) ஆதரவாளர்கள் என்று நினைத்தவுடன் மனதிற்குள் வரும் முதல் பிரிவினர் அரசு ஊழியர்கள். கருணாநிதியைப் போல் அரசு ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் எவரும் இல்லை. வகை தொகை இல்லாமல் எல்லாருக்கும் அடிப்படை சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு என்று இவர் செய்வது ஏராளம். ஓட்டுச் சாவடியிலும் ஓட்டு எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இவர் ஆசிரியர்களுக்கு அளித்துள்ள சலுகைகள் கொஞ்ச நஞ்சமா?

சென்னை போன்ற பெருநகரங்களில் விலைவாசி ஏற்றத்திற்கு இப்போது சில நாட்களாக கணினித்துறையைக் குற்றம் சுமத்தி வருகிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் 20000, 30000 என்று சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் அரசு ஊழியர்கள் தான். எந்த அரசு ஊழியர் குடியிருப்புக்கு அருகிலாவது குடிசை இருக்கிறதா? இருக்காது.. அங்குள்ள விலைவாசி குடிசையில் இருப்பவனுக்குக் கட்டாது. சொந்த வீடு இல்லாத, 10 வருடம் அரசுத் துறையில் பணியாற்றும் ஒருவரை காண்பியுங்கள் பார்க்கலாம். ஒன்னாம் வகுப்புக்குப் பாடம் எடுக்கும், அனுபவமே இல்லாத ஆசிரியர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் ரூ.21,000.. ஆனால் இதை விட "அதிகமாக வேண்டும்" என்று சில நாட்களுக்கு முன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் என்றால் தான் ஓட்டுக்கு ஆசைப்பட்டு கலைஞர் கொடுத்துவிடிவாரே?! இந்த ஆட்சியிலே பெற்றால் தான் உண்டு. இல்லை என்றால் அடுத்த ஆட்சியில் ஒன்னும் கிடைக்காதே. அரசு நடத்துனர், ஓட்டுனர் முதல் எல்லாருக்கும் இதே தான். ஆனால் இப்போதும் எங்கள் ஊரில் படித்து முடித்துவிட்டு (அது SSLC யாக இருந்தாலும் சரி MBA வாக இருந்தாலும் சரி) ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸிலோ, பட்டாசு அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்பவரின் முதல் மாத சம்பளம் 3,000ல் இருந்து 4000 க்குள் தான்.. தனியாரில் ஒருவன் எங்கள் ஊரில் 10000ரூ சம்பாதித்தால் அது பெரிய விசயம்.. ஆனால் அரசு இவ்வளவு இருந்தும் இந்த அரசு ஊழியர்கள் "இன்னும் இன்னும்" என்று திருப்திப் படாமல் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால் சாதாரண மக்களுக்கு அவர்கள் மேல் கோபம் வரத்தான் செய்யும்.


இந்த அரசு ஊழியர்கள் எல்லாம் எதற்கு அ.தி.மு.க வை எதிர்க்கிறார்கள் என்று புரியவில்லை. "வேலையை ஒழுங்காக செய்" என்று கூறுவதாலா? தேவைக்கு அதிகமாக அரசு வேலைக்கு ஆட்களை எடுக்காததாலா? "இருப்பவர்கள் ஒழுங்காக வேலை செய்தாலே போதும். பலரை தேர்ந்தெடுத்து அதிகமான சோம்பேரிகளை நாட்டில் உருவாக்க வேண்டாம்" என்று அந்தம்மா நினைப்பதாலா?

தி.மு.க.விற்கு அரசு ஊழியர்களுக்குப் பிறகு அதிக செலவாக்குள்ளது கிறிஸ்தவர்களிடம். கருணாநிதி இவர்களுக்கு அப்படி என்ன தான் செய்தார்? ஹிந்து மதத்தைப்போல் தங்களின் மதத்தை அவர் அசிங்கப்படுத்தாமல் இருக்கிறாரே, அதுவே அவர் இவர்களுக்குச் செய்யும் உதவி தான். ஆனால் அந்தம்மா கட்டாய மத மாற்றத்தடைச் சட்டம் கொண்டு வந்து வெளிநாட்டில் இருந்து கோடி கோடியாக பணத்தை இறைத்து மக்களை மூளைசலவை செய்வதை நிறுத்தியது. அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை. யாருடைய தொழில் நஷ்டமடையும், எந்த குடும்பத்தில் பணக்கஷ்டம் வரும், யாருக்காவது தீராத நோய் வருமா?, எந்த வீட்டில் இழவு விழும் என்று காத்துக்கொண்டிருந்து அவர்கள் துன்பப்படும் நேரத்தில் அவர்களை மதம் மாற்றுவது எவ்வளவு குரூரமானது? இவர்கள் திருச்சபையில் 'இத்தனை பேரை மதம் மாற்றினேன்' என்று பெயர் எடுப்பதற்காக மற்றவர்களின் இயலாமையை பயன்படுத்துவது என்ன ஞாயம்? ஆனால் கருணாநிதியின் பகுத்தறிவுக்கு இதெல்லாம் மிகவும் சரியான செயல்கள். எனக்குத் தெரிந்த சிலர், கருணாநிதி ஹிந்து மதத்தை அசிங்கப்படுத்தும் போது அவ்வளவு ஆனந்தப்படுவார்கள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நான் மனதிற்குள் சொல்லிக்கொள்வது "பாபர் மசூதியை இடித்ததால் சந்தோசப் பட்ட சில முட்டாள் ஹிந்துக்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை". இவர்களும் அரசு ஊழியர்களைப் போல எந்த ஒரு ஞாயமான செயலுக்காகவும் கருணாநிதியை ஆதரிப்பதில்லை.

அடுத்து வருபவர்கள் போலி ஜாதி மறுப்பாளார்கள். எப்படி ஹிந்து மதத்துவேசம் secularism எனப்படுகிறதோ, அதே போல பார்ப்பனர் துவேசம் ஜாதி மறுப்பு என்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த போலி ஜாதி மறுப்பாளர்கள் எப்போது பார்த்தாலும் "பாப்பான் பாப்பான்" என்று கத்திக்கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்கு  மலச்சிக்கல் என்றால் அதற்கும், ஆரிய திராவிட கதையை உருவாக்கி அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் என்று கிளப்பிவிடுவார்கள். இதையே இவர்களின் தமிழினத் தலைவரும் செய்வதால் இவர்களுக்கு இவரை ரொம்பப் பிடித்து விட்டது. சரி அந்த பாப்பானுக்கு நிகராக முன்னேறுங்கள் என்றால் மாட்டார்கள்.. "பாப்பானையும் எங்களைப்போல் கீழே இறக்கு" என்று கத்துவார்கள்.

இப்படிப்பட்ட சுயநல வல்லுனர்களால் தான் இந்த ஆட்சியும் இந்தக் கட்சியும் நல்லவையாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.. பார்ப்பனர் என்றாலே அவன் அ.தி.மு.க விசுவாசி என்பதையும் மாற்றிக்கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த, நான் படித்த ஒரு ஆசிரியர். அவர் ஐயர், தீவிரமான கடவுள் பக்தர் போல் தன்னைக் காட்டிக்கொள்வார். ஜாதி வெறியும் அவருக்கும் உண்டு. ஆனால் அவர் தி.மு.க அனுதாபி. "என்ன சார், இந்த ஆளு உங்க ஜாதிய இப்படிப் போட்டு கிழிக்குறாரு, அவர்ப்போயி சப்போர்ட் பண்றீங்க?" என்றேன் ஒரு நாள். "போடா, சாமியும் ஜாதியுமா சோறு போடப்போகுது" என்று 'டக்' என்று சொன்னவர், சில நொடிகளில் சுதாரித்து "ஈஸ்வரா என்ன மன்னிச்சுரு" என்றார்.. எதற்க்கு இந்தப் பாவ மன்னிப்பு, கடவுளிடம் பம்மாத்து எல்லாம்?

இன்னொரு ஆசிரியர். அவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்த போது தீவிர தி.மு.க எதிர்ப்பாளர். "படிச்சவன், வெவரம் தெரிஞ்சவன் எவனும் தி.மு.க வுக்கு ஓட்டுப் போட மாட்டான். அந்தம்மா மாதிரி யாருக்குப்பா administration capacity இருக்கு? எல்லாத்தையும் ஓசில குடுத்து நாட்ட சீரழிச்சுட்டான்" என்பார்.. சென்ற வருடம் அவருக்கு கலைஞர் கையால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்கான அரசானை கொடுக்கப்பட்டது. நேற்று பேசும் போது சொல்கிறார், "கலைஞர் தொலைநோக்குப் பார்வையோட நெறய விசயம் பண்ணிருக்காருப்பா.." அப்படி என்னத்தை செய்து கிழித்தார் என்று தான் தெரியவில்லை..

பேசாமல் நம் முதல்வர் இலவச அரிசியும் மிக்ஸியும் கிரைண்டரும் கொடுப்பதற்குப் பதில், தினமும் காலையில் கொஞ்சம் இட்லியும் தொட்டுக்கொள்ள கெட்டிச்சட்னியும் கொடுத்தால் நானும் அவருக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிடுவேன் போல...

ஜமீன் கோட்டையும் ஒரு லூசுக்கிழவியும் ..

Thursday, March 10, 2011

இதோ கிராமமா நகரமா என்று புரிபடாமல், உரக்கடையும் செல்பேசி கடையும் அடுத்தடுத்து இருக்கும், கிராமத்து அழுக்கில் இருந்து நகரத்துக்கு தூசிக்கி மாறிக்கொண்டிருக்கும் இந்த வளர்ந்து வரும் நகர கிராமம் தான் சிவகிரி. 

"எலேய், பசிக்குதுடா சோறு போடுங்கடா" - அந்த ஊரின் கல்யாண மண்டப வாயிலில் இருந்த கிழவி கத்திக்கொண்டிருந்தாள். அவள் கத்துவதில் ஒரு பயமோ தயக்கமோ இல்லை. தனக்கு இல்லாமல் சோறு காலியாகிவிடுமோ என்கிற கோபம் மட்டும் தெரிகிறது. 'எலேய்' என்று அவள் கத்துவதில் ஒரு சுதி தெரிந்தது. அந்த வார்த்தையை அவள் ராகம் பாடுவது போல் சொன்னாள். சேலை கட்டி அதன் மீது நைட்டி அணிந்திருந்தாள் அந்தக் கிழவி. நைட்டியை வேட்டி போல் மடித்து கட்டியிருந்தாள். கையில் ஒரு தூக்குவாளியும் பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலும் இருந்தன. அந்த தண்ணி பாட்டிலில் ஒரு கயிறை கட்டி கையில் தொங்க விட்டிருந்தாள். அவளை பிச்சைக்காரி என்றும் சொல்ல முடியாது. தலைக்கு எண்ணெய் தேய்த்து படிய வாரி கிளிப் மாட்டியிருந்தாள்.

"யேத்தா உனக்கு குடுக்காம வேற யாருக்கு குடுக்கப்போறான் நம்ம சுப்ரமணி? செத்த பொறு" ஒருவன் சொன்னான்.

"எவ்வளவு நேரண்டா பொறுக்குறது? இந்தப்பய ஊருக்கெல்லாம் சோறு போடுறான், எனக்கு ஒரு கை போடவேண்டியது தானடா? நீயும் நல்லா தின்னுட்டு தானடா வந்துருக்க? அவங்கிட்ட சொல்றா" கிழவி யாருக்கும் மரியாதை தரவில்லை.

"சரி நான் சொல்றேன்" என்று கூறிக்கொண்டே மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

"எலேய் சொல்லிட்டு போடா. டேய் நில்ரா.. அய்யோ.." கிழவி போலியாக அழுதாள். குரலில் அழுகை தெரிந்தது கண்ணில் நீர் வரவில்லை.

"எலேய் அவன் சோறு போடமாட்டேன்னு சொல்லிடான்டா. இன்னைக்கு நான் என்னத்தடா சமப்பேன்?" அந்த கிழவி தன் முரட்டுத்தன்மான கீச்சுக்குரலோடு கத்திக்கொண்டே பேருந்து நிலையத்துக்குள் வந்தாள். நேராக பயணிகளுக்கு போட்டிருக்கும் கல் இருக்கைக்கு அருகில் வந்து, அதற்கு பின்புறம் இருக்கும் கோழிக்கறிக் கடைக்காரனைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.

"எலேய் நான் கேட்டத போட்டுட்டியாடா? என்னடா பண்ற?" கடைக்காரனிடமும் அதிகார தொனியில் சற்றே கெஞ்சலோடு கேட்டாள்.

"அங்க நின்னு கேட்டாலாம் குடுக்கமுடியாது. இங்க வா தாரேன்" கையில் இருக்கும் கத்தியை அவளை நோக்கி நீட்டி அழைத்தான் கடைக்காரன்.

"நான் வரமாட்டேன்டா. அந்த சனியன் என்ன கடிச்சுரும். அன்னைக்கே என்ன தொரத்தி கீழ தள்ளி விட்ருச்சில்ல? நீயும் பாத்திலடா? மறந்துட்டியாடா?" அவன் கடைக்கு வெளியில் கறியை எதிர் பார்த்துக்காத்திருக்கும் நாயைக் காட்டி சொன்னாள்.

"இங்க வந்தாத்தான் தருவேன் கெழவி" அவன் அவளிடம் விளையாடிப்பார்த்தான்.

"எலேய் நானும் காசுதானடா குடுக்குறேன்? ஓசிலயா வாங்குறேன்? கொஞ்சம் இங்க வந்து குடுடா. அடியே பாப்பா நீயாவது சொல்றி" தன் தந்தையோடு கடைக்கு வந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையப் பார்த்துச் சொன்னாள்.

"ஆமா காசுகுடுத்துக் கிழிச்சா" புலம்பிக்கொண்டே அந்த குழந்தையிடம் கொடுத்து கிழவியிடம் கொடுக்குமாறு கூறினான்.

"இவ்வளவு நேரமாடா? அடேய் கறி வேண்டாம்டா ஈரல் மட்டும் போடுடா.. பாப்பா வேமா வாடீ. குடு குடு குடு.. " குழந்தையிடம் பெற்றுக்கொண்டாள். அந்த பாலித்தின் பைக்குள் பார்த்ததும் அவளுக்கு கோபம் வந்துவிட்டது.

"எலேய் ஒன்ன என்னடா சொன்னேன்? ஏன்டா என்ன இப்டி அழவைக்குற? நான் போயி சமைக்கணும்டா. துட்டு குடுத்தேன்லடா பன்னெண்டு ரூவா? இப்டி கறியா போட்டு வச்சுரிக்கியேடா? எலேய் உன்னத்தான்டா" மும்முரமாக கறி வெட்டிக்கொண்டிருக்கும் அவனை அழைத்தாள். "எனக்கு ஒழுங்கா ஈரல மட்டும் குடுடா. நான் போயி சமைக்கணும்டா. வவுறு பசிக்குதுடா. எலேய்" கத்தினாள்.

அந்தக் குழந்தை அந்தப் பையை கிழவியிடம் இருந்து மீண்டும் வாங்கி கடைக்காரனிடம் கொடுத்து, அவன் சிறு மாறுதல்கள் செய்தவுடன் கிழவியிடம் மீண்டும் கொடுத்தாள். "திரும்பவும் பாரு.. எலேய்.. இங்க பாருடா, ஈரல்ல கறி ஒட்டிருக்கு. நான் குடுத்த துட்டுக்கு என்னடா மரியாத?"

"யேத்தா அத எடுத்து போட்டு சமைக்க வேண்டியது தான?" பஸ் ஸ்டாப்பில் பீடி பிடித்துக்கொண்டிருந்த ஒருவன் சொன்னான்.

"துட்டு குடுத்துருக்கேன்டா துட்டு. நான் சம்பாரிச்சத குடுத்து வாங்குறேன்டா. இப்டி குடுத்தா நான் என்னடா செய்வேன்" அந்த கறி ஒட்டியிருக்கும் ஈரல் துண்டை எடுத்துக்காட்டினாள்.

"சரி, சரி, அதெல்லாம் கழுவி போட்டுக்கோ. உன் பேத்தி நாலு நாள்ல ஊருக்கு வாராளாம்?"

"ஏலேய் என்னடா சொல்ற? ஒரு மாசம் ஆவும்னு சொன்னாலடா எம்மவ?" இவ்வளவு நேரம் கத்திக்கொண்டிருந்த கிழவி இப்போது அமைதியாகப் பேசினாள்.

"ஆமா, உம்மவ போன மாசம் சொன்னா, ஒரு மாசம் ஆவும்னு. நாந்தான லெட்டர படிச்சேன்?"

"ஆமாடா நீ தான படிச்ச? அப்ப அவ நாலு நாள்லயா வாரா?" மீண்டும் கேட்டாள்

"ஆமா. சரி, நீ தான் சமைக்கணும்னு சொன்னில? போ.." அணைந்து போன பீடியை மீண்டும் பற்ற வைத்தான்.

"உனக்கு இவள பத்தி தெரியுமாடா?" இன்னொருவன் பீடி குடிப்பவனிடம் கேட்டான்

"என்னடா சொல்லிட்ட? இவளப்பத்தி எல்லாம் எனக்கு தெரியும். பாக்க பிச்சக்காரி மாரி இருக்கான்னு நெனைக்காத, இவளுக்கு லட்சக்கணக்குல துட்டு வர வேண்டியிருக்கு. அப்டித்தான கெழவி?"

"ஆமா அடுத்த வாரம் ஒரு 18000ரூவா கெடைக்கும்னு அந்த வக்கீலு சொல்லிருக்கான். அதெல்லாம் கெடக்கட்டும் குஜராத்ல இருந்து வரணும்னாலே நாலு நாள் ஆவும்லடா?" கிழவி மனதிற்குள்ளேயே கணக்குப்போட்டு பார்த்தாள்.

"ஆமா, இன்னைக்கு சாந்தரம் கெளம்பிருவா. சரி அந்த வக்கிலு எவ்வளாவு ரூவா தாரேன்னு சொன்னாரு?"

"எவ்வளவு ரூவானா ஒனக்கு என்னடா? நான் எனக்காடா சேத்துவக்கிறேன்? அவளுக்கு தானடா? அவ நல்லா இருக்கணும்னு தானடா நான் இங்க இருந்து அவ கஷ்டத்த எல்லாம் படுறேன்?" எதையோ நினைத்து சொல்ல ஆரம்பித்தவள் டக்கென சுதாரித்து, "சேரிடா நான் போறேன். சோறு ஆக்கணும்"

"பாத்தியாடா கெழவிய? காசப்பத்தி கேட்டதும் கெளம்புறா. யேத்தா நில்லு. வீடு நெலத்த எல்லாம் உம்பேத்தி பேர்லயா எழுதப்போற?"

"அதெல்லாம் எங்க இருகுன்னே தெரிலடா. நீ பாத்தியா? போன வருசம் அந்த சீனிக்கண்ணு என்ன வீட்ட விட்டு பத்தி விட்டுட்டு என் வீட்ல அவேன் வந்து தங்கிகிட்டான்டா. இப்ப நான் அங்க தெரணைல படுத்துக்கெடக்கேன். எல்லாம் போச்சுடா" கிழவி எதையோ நினைத்துக்கொண்டிருப்பவள் போல பேசினாள்.

"சேரி, பேத்திக்கு அடுத்த வாரம் நல்ல கவனிப்பு தான?"

"அவள கவனிக்காம வேற யாரடா கவனிக்கபோறேன்? இந்த வக்கீலு துட்டு குடுத்த ஒடனே அவளுக்கு ஒரு செயினு வாங்கலாம்னு இருக்கேன்டா. ஏன்டா அவ குஜராத்துல நல்லா இருக்கால்ல?"

"நான் என்னத்த கெழவி கண்டேன்? ஆனா அவா இங்க வந்தா தான் நல்லா இருப்பா.. நீ தான் அவள ஒன் தோளுல தூக்கிக்கிட்டு அலஞ்சுகிட்டே இருப்பியே பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி?"

"ஆமாடா அவளுக்கு என்ன ரொம்ப புடிக்கும்டா. இல்ல வேண்டான்டா, அவ அங்கயே இருக்கட்டும். இங்க வந்து அவ என்னப் பாத்த ஒடனே நான் அவள அனுப்பி வச்சுறேன். அவ அங்க இருந்தா தான் நல்லா இருப்பா. இந்தப் பாவமெல்லாம் என்னோடயே போட்டும்டா"

"செரி செரி போயி சோத்த ஆக்கு" அடுத்த பீடியை பற்ற வைத்துக்கொண்டே கிழவியை கிளப்பினான்.

"எலேய் பசிக்குதுடா, சோறு ஆக்கப்போறேன்டா" இவ்வளவு நேரம் அமைதியாக கிழவி இப்போது மீண்டும் கத்த ஆரம்பித்தாள்.

"யார்னே இந்தக் கெழவி. லூசா?" பீடி குடிப்பவனிடம் அருகில் இருந்தவன் கேட்டான்.

"என்னது லூசா? இவளுக்காடா லூசு? இவ வெவரமானவடா?"

"பொறவு ஏன்ணே இப்டி பேசுறா?"

"உசுராவது மிச்சம் இருக்கடுமேன்னு தான்" பீடியை கீழே போட்டுவிட்டு சொன்னான்.

"யப்பா இந்த கெழவி தான் இந்த சிவகிரி ஜமின். இவ புருசன் செத்துப்போனதும் இவ சொத்த எல்லாம் இந்த ஊர்க்காரன் அடிச்சு புடிங்கிட்டான். இந்தா கல்யாணம் நடந்துகிட்டு இருக்கே இந்த மண்டபம், இது தான் இவளொட அரண்மன. புருசன் செத்ததும் இவ லூசு மாதிரி ஆகிட்டா. சரி, லூச எதுக்கு கொன்னுகிட்டுனு விட்டுட்டாங்க. ஆனா இவ லூசு இல்ல."

"அப்டியா? அந்த பேத்தி?"

"இவ மகள பலபேரு சேந்து கெடுத்துட்டாங்கப்பா, சரி பேத்தியவாச்சும் காப்பாத்துவோமேனு இங்க இருந்த ஒரு வேதக்கோயில் பாதர் கிட்ட குடுத்து அனுப்பிட்டா. இப்போ தான் ரெண்டு வருசமா அந்த பொண்ணும் இந்த கெழவிய வந்து பாத்துட்டு போது"

"எதோ வக்கிலு சொத்து காசு பதினெட்டாயிரம்னு?"

"அதெல்லாம் இவளா சொல்றது. இவ பிச்ச எடுத்து தான் சாப்டுறா. பேத்தி வரும் போது மட்டும் அக்கம் பக்கம் கொஞ்சம் காசு குடுத்துட்டு போவா, பாட்டிய பாத்துக்க சொல்லி"

"பாவம்ணே"

"அதான்டா அந்த கெழவியும் நம்புறா. தான் குடும்பம் செஞ்ச பாவம் தான் இத்தனைக்கும் காரணம்னு இங்க இருந்து எல்லா கஷ்டத்தையும் இவளே படுறா. 'சாகுற வரைக்கும் நான் கஷ்டப்பட்டா என் பேத்திக்கு கொஞ்சம் இந்த பாவத்தோட கஷ்டம் கொறயுமே'னு சொல்லி எல்லா கஷ்டத்தையும் தானே படுறா. ஜமீன் பேர்ல இருக்குற 60000ஏக்கரும் இவ புருசன் பேர்ல தான் இன்னும் இருக்கு. ஆனா ஊர்க்காரன் சாப்பிடுறான்"

"இவளும் பேத்தியோட போயிற வேண்டியதுதானே?"

"அந்த பொண்ணும் கூப்பிட்டுகிட்டு தான் இருக்கு. எங்க தான் பேத்தியோட சேந்து இருந்தா அந்தப் பாவம் பேத்திக்கும் வந்திருமோன்னு இவ தனியாவே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா."

அந்தக்கிழவி இப்போது கல்யாணவீட்டு வாயிலில் நின்றாள். "எலேய் கொழம்பு இருக்குடா எனக்கு. நானே காசு குடுத்து வாங்கிட்டேன். கொஞ்சம் சோறு மட்டும் குடுடா. எலேய்" மண்டபத்தில் இருக்கும் காவலாளி "அதெல்லாம் ஒன்னும் இல்ல, போடீ வெளில" கம்பை எடுத்துக்கொண்டு விரட்டினான்.

"எலேய் அடிக்காதடா. நான் போயிரேன்டா, அடிக்காதடா"  அவளுக்கு அந்த அரண்மனையில் இருந்து இப்போது தான் விரட்டப்படுவது வருத்தமாகவே இல்லை. அது பழகிப்போய்விட்டது அவளுக்கு. கிழவி அந்த மண்டபத்தை அவளின் அரண்மனையை பார்த்துக்கொண்ட, அதில் இருக்கும் எண்ணற்ற சாபங்களை எண்ணிக்கொண்டே அருகில் இருக்கும் பலசரக்கு கடைக்கு சென்றாள்.

 "எலேய் காசு வாங்குனிலடா பன்னெண்டு ரூவா? அரிசி என்னடா ஆச்சி? எலேய்? நான் சம்பாரிச்ச காசுடா" கிழவி தன் வழகமான கத்தலை ஆரம்பித்தாள், அடிக்கடி அந்த மண்டபத்தை திரும்பிப் பார்த்துக்கொண்டே எப்போது தன் பரம்பரையின் சாபங்கள் முடிவுபெறும் என்று..

சித்தப்பா...

Saturday, March 5, 2011

வாரவிடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வேலையை வேகவேகமாக முடித்து வீட்டுக்கு கிளம்பினேன். வீட்டிற்குள் நுழைந்து செருப்பை கழட்டும் போது தான் கவனித்தேன். இரண்டு செருப்புகள் அதிகமாக இருந்தன. பெண்களின் செருப்பு. ஆனால் வீட்டிற்கு எப்போது பெண் சொந்தக்காரர்கள் வந்தாலும், எங்கள் தெருவே அலறும் படி சத்தம் கேட்கும் வீட்டிற்குள் இருந்து. ஆனால் இன்றோ ஒரு சத்தமும் கேட்காமல் வீடே அமைதியாக இருந்தது. மனதுக்குள் கிலியை உண்டாக்கும் அமைதி. வழக்கமாக ஓடும் மெகா சீரியலும் ஓடுவது போல் தெரியவில்லை. ‘இவ்வளவு அமைதியாக வீட்டை வைத்திருக்கும் அந்த சொந்தக்காரர் யாராக இருக்கும்’ என்று கணித்துக்கொண்டே கதவில் தொங்கவிடப்பட்ட்ருந்த துணியை விளக்கி உள்ளே நுழைந்தேன்.

என் சித்தியும் தங்கையும் வந்திருந்தனர். அவர்கள் இருந்த கோலமும் வந்திருந்த நேரமுமே ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தின. சித்தியின் கண்கள் வீங்கிப்போயிருந்தன. மிகவும் அழுதிருப்பார் என்று நினைக்கிறேன். நான் வந்ததை கூட கவனிக்காமல் கண்களையும் சிமிட்ட மறந்து நேராக சுவரை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். பாப்பா தான் “அம்மா, அண்ணே” என்று சித்தியை உசுப்பி, தன் கண்களால் என்னை காட்டினாள். என்னைப்பார்த்ததும் சித்தி “அய்யோ தம்பி இப்படி ஆகிப்போச்சே?!” மீண்டும் அழ ஆரம்பித்தார். கட்டிலில் அமர்ந்திருந்த தாத்தா “சரி அழாத, ஒன்னும் ஆகிருக்காது” என்றார். ஆச்சியும் “அய்யோ என் மக வாழ்க்க என்ன ஆகுமோ ஆண்டவா” என்று அழ ஆரம்பித்தார். தாத்தா கோபமுடன் ஆச்சியை நோக்கி “இப்போ நீ வாய மூடப்போறியா இல்லையா?” என்றார்.

இந்த களேபரங்களை கேட்டு அம்மா சமையல்கட்டு உள்ளிருந்து வந்தார். என்னைப்பார்த்ததும் மீண்டும் சமையல் செய்ய சென்றுவிட்டார். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் என் சித்தப்பாவை சம்பந்தப்படுத்தி தான் ஏதோ நடந்திருக்கவேண்டும் என எண்ணினேன். ஏனென்றால் இவர் தான் இப்போது வரவில்லை. சித்திக்கும் சித்தப்பாவுக்கும் சண்டை எதாவது இருக்குமோ? யாரிடமும் கேட்க மனது வரவில்லை. மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்து அம்மாவைக் கேட்டேன்.

“என்னமா ஆச்சு? சித்திக்கும் சித்தப்பவுக்கும் எதும் பிரச்சனையா?”

அம்மா யாரும் வருகிறார்களா எனப்பார்த்துக்கொண்டே, “அதெல்லாம் இல்ல. சித்தப்பா யாவாரம் நொடிச்சிப் போயி கடன் தொல்ல தாங்க முடியாம ஓடிப்போய்ட்டாராம்” மெதுவாக சொன்னார்

“சரி, இப்போ எங்க தான் இருக்காராம்?”

“ஒன்னுமே தெரியாது. சித்திட்ட கூட சொல்லாம பொயிட்டாரு. என்ன ஏதுன்னு ஒரு தகவலும் தெரில. ம்ச், என் வாழ்க்க தான் இப்படி இருக்குனா என் தங்கச்சி வாழ்க்க அதுக்கு மேல இருக்கு” அம்மா தன் தங்கையின் வாழ்க்கையை நினைத்து நொந்துகொண்டார். ஆனால் எதற்காக தன் வாழ்கையை நினைத்தும் வருந்துகிறார் எனத் தெரியவில்லை. அப்பா நல்லா தான் கவனித்துக்கொள்கிறார் அம்மாவை. ஆனால் இந்தப் பெண்கள் தான் சதா புலம்பிக்கொண்டே இருக்கிறர்கள்.

சித்தி, அவருக்கு நான் தான் முதல் குழந்தை. பிறகு தான் என் தங்கை எல்லாம். சிறு வயதில் நான் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்தேன். என் அம்மாவை வாரத்துக்கு ஒரு முறை பார்ப்பேன். எனக்குத் தெரிந்தது எல்லாம் என் சித்தி முகமும் ஆச்சி முகமும் தான் அப்போது. என் மேல் அவ்வளாவு பாசமாக இருந்தார். எனக்கு 6வயது இருக்கும் போது சித்திக்கு கல்யாணம் ஆனது. அப்போது அவர் என் ஆச்சி தாத்தாவிடம் பிரியாவிடை பெற்றதை விட, என்னை தான் தூக்கி வைத்துக்கொண்டு அழுதுகொண்டே டாட்டா காட்டி என்னை அம்மாவிடம் கொடுத்து சித்தப்பாவோடு சென்றார்.

அப்போது எனக்கு இந்த சித்தப்பாவை பிடிக்கவே இல்லை. ஆனால் விபரம் தெரிய ஆரம்பித்தபோது தான், அவர் எப்படிப்பட்ட உழைப்பாளி குடும்பத்தை எப்படி எல்லாம் முன்னேற்றுகிறார் என்று தெரிந்தது. பார்த்துக்கொண்டிருந்த கூலி வேலையை விட்டுவிட்டு, சொந்தக்காரர்கள் பலரின் எச்சரிக்கையையும் மீறி சொந்தமாக தொழில் ஆரம்பித்தார் விருதுநகரில். ஓஹோவென ஓடியது வியாபாரம். சில இறக்கங்கள் வந்தாலும் பல நேரம் ஏற்றம் தான். வாடகைக்கு இருந்த வீட்டையே விலைக்கு வாங்கி மார்பில் கற்களால் வீட்டை இழைத்தார். எங்கள் சொந்த பந்தத்தில் முதன் முதலாக டி.வி, கார், ஃபிரிட்ஜ், ஃபோன், ஏ.சி எல்லாம் வாங்கியது சித்தி தான். சித்தப்பா மீது தனி மரியாதையே வந்தது.

எங்கள் குடும்பத்தில் எந்த முடிவு என்றாலும் சித்தப்பாவை கேட்டே எடுப்போம். அவரும் மிகவும் சரியான, எல்லோரும் ஒத்துக்கொள்ளும் வகையில் தீர்க்கமான ஒரு முடிவைத்தான் சொல்லுவார். என் மாமா தன் காதலை குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொன்ன போது, சித்தப்பா தான் அப்போது அல்லோரையும் சமாதானம் பண்ணி அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். மணநாளின் போது மாமா சித்தப்பா காலில் தான் முதலில் விழுந்து வணங்கினார், பிறகு தான் ஆச்சி தாத்தாவிடம் ஆசிர்வாதம்.

இப்படி சித்தப்பாவின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருந்தன. அப்போது தான் ஆச்சியின் குரல் வந்தது. “இந்த மனுசனுக்கெல்லாம் யாவாரம் தேவயா? பேசாம ஒரு வேலைக்கு போயிருந்தா இப்படி யாருக்கும் பயந்து ஓடிப்போயிருக்க வேண்டிய அவசியம் வந்துருக்காதே?”

“எல்லாம் என் தலயெழுத்தும்மா. இந்த மனுசன் சம்பாதிச்ச எந்த காசையும் சேத்து வச்சதே இல்ல.. எப்போ பாத்தாலும் அனாவசிய ஆடம்பர செலவு தான். ஏங்க நமக்கும் வயசுக்கு வந்த ஒரு பொட்டபிள்ள இருக்கு இருக்குனு படிச்சு படிச்சு சொல்லியும் இந்த மனுசன் இப்படி அறிவில்லாம நடந்து என்ன இப்டி அசிங்கப்படுத்திட்டு போயிடாரு”

“என்னடீ சங்கரி சொல்ற? வீடு இருக்குல?” தாத்தா பதட்டத்துடன் கேட்டார்.

“இல்லப்பா அதெல்லாத்தையும் அடமானம் வச்சுட்டுத்தான் போயிருக்கார். நகையயும் வித்துட்டார். இப்போ என்கிட்ட இருக்குறது இந்த தாலிக்கொடி மட்டும் தான்”

இவ்வளவு நேரம் பொருமையாக இருந்த தாத்தாவுக்கும் இப்போது கோபம் வந்துவிட்டது. “ இதெல்லாம் நீ ஏன் முன்னாடியே சொல்லல? பொண்டாட்டி நகையயும் இருக்குற வீட்டையும் வித்து அப்படி யாவாரம் பண்ணாட்டி தான் என்ன?”

“அவரு எல்லாமே சீக்கிரம் சரியாகிடும்னு சொன்னாருப்பா”

“ஆமா அவன் சொன்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு? எங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டா நாங்களாவது சொல்லிருப்போம்ல? இப்போ பாரு எம்புள்ளைய இப்டி நடுத்தெருல நிக்கவிட்டுட்டு பொய்ட்டானே” ஆச்சி சித்தப்பாவிற்கு மரியாதை கொடுப்பதை நிறுத்தினார். வழக்கம் போல புலம்ப ஆரம்பித்தார்.

“வீட்ட குடும்பத்த பாத்துக்க தெரியாதவன் எல்லாம் என்ன ஆம்பள? இவன நம்பி பொண்ண குடுத்தது எங்க தப்பு” – தாத்தா தன் பங்குக்கு சித்தப்பாவை வைய ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்பு வரை வீட்டில் சகல மரியாதையுடன் எல்லா முடிவுகளையும் எடுத்த ஒரு மனிதனின் மரியாதை பணம் இழந்ததால் எந்த அளவிற்கு பாதாளம் வரை சரிந்துவிடும் என்பதை கண்கூடாக பார்த்தேன். மனிதனை விட உறவை விட அவனின் செல்வத்திற்கும் செலவாக்குக்கு மட்டுமே மரியாதையும் மதிப்பும் உண்டு, அது கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களாக இருந்தாலும் சரி.

இவர்கள் யாரும் சித்திக்கு ஆதரவு சொல்வதாக எனக்குத் தெரியவில்லை. அவர் வருத்தத்தை யாரும் பங்கெடுப்பதாகவும் தெரியவில்லை. ஏதோ புலம்ப வேண்டுமே என்பதற்காக புலம்பினார்கள். அப்போது தான் ஃபோன் மணி அடித்தது. மாமா அழைக்கிறார். இவரிடமும் எல்லோரும் புல்ம்ப ஆரம்பித்தனர். எனக்கு அங்கு இருப்பதற்கே எரிச்சலாக வந்தது. என்னடா செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது தான் மோகனா கால் செய்தாள். மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. மெதுவாக ஃபோனை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்றேன்.

மோகனா என் காதலி. கல்லூரியில் என் ஜூனியர். ஃபோனை அட்டண்ட் செய்தேன் “சொல்றா”

“மொத இந்த சேரன் படத்துல வர மாதிரி டா போட்டு பேசுரத நிறுத்துங்க” – நிலைமை புரியாமல் செல்லமாக இவளும் கோபப்பட்டாள்.

“யே, வீட்ல ஆளா இருக்காங்க. அதான் டா னு சொன்னேன். சரி என்ன மேட்டர் சொல்லு”

“ஓஹ் அப்போ வீட்ல ஆள் இருந்தா சார் என்கிட்ட பேச மாடிங்க, அப்டித்தான?”

“அதான் இப்போ உன் கால அட்டண்ட் பண்ணுனேனா? இங்க ஒரு சீரியஸ் விசயம். சரி சொல்ல வந்தத சொல்லு மொதல” சற்று கோபக்குரலில் பேசினேன்.

“எதுக்கு இப்டி எரிஞ்சி விழுரிங்க? சரி சொல்றென். ப்ராஜக்ட் டேட் announce பண்ணிட்டாங்க. Services Marketingல தான் பண்ணப்போறேன். நீங்க தான் எனக்கு எந்த ப்ராஜக்ட்னாலும் சேத்துவிடுறேன்னு சொன்னிங்கல்ல? அதனால நாளைக்கு ஒழுங்கா மதுரைக்கு வந்து எனக்கு ஒரு ப்ராஜக்ட் ரெடி பண்ணானும், சரியா?”

“நிலைமை புரியாம பேசாத. இங்க வீட்ல ஒரு பிரச்சன. என்னால வர முடியுமான்னு தெரியல”

“இங்க பாருங்க, உங்கள நம்பித்தான் நானும் எந்த ப்ராஜக்ட்டும் ட்ரை பண்ணல. நீங்க என்ன பண்ணுவிங்களோ ஏது பண்ணுவிங்களோ எனக்கு தெரியாது. நாளைக்கு வரணும், இல்லேனா என்கிட்ட இனிமேல் பேசவே வேண்டாம்” – என் பதிலை எதிர் பார்க்காமல் எதிர் முனை நின்று போனது.

மீண்டும் மீண்டும் அவளை அழைத்தேன். என் அழைப்பை அவள் ஏற்கவே இல்லை. சரி, நடந்தது நடந்து போச்சி, இங்கு இருந்தால் நம்மையும் இவர்களோடு சேர்ந்து சித்தப்பாவுக்கு எதிரியாக்கி விடுவார்கள். எதாவது சொல்லி நாளை மதுரை கிளம்ப வேண்டும் என் எண்ணிக்கொண்டே ஹாலுக்கு வந்தேன். அவர்களும் இப்போது தான் மாமாவிடம் பேசி முடித்திருந்தார்கள்.

“மாமா என்னம்மா சொன்னாங்க?” அம்மாவிடம் மெதுவாக கேட்டேன்.

“இப்போ சித்திய யாரு பாத்துக்கிறதுன்னு அவனும் உங்க அத்தையும் கேக்குறங்க. அவா புருசன் சரியில்லைனா அது அவா வீட்டு பிரச்சனை. இவாரெல்லாம் ஒரு ஆம்பளையானு கேக்குறான். பெத்த பிள்ளையயும் பொண்டாட்டியையும் நடுத்தெருல விட்டுட்டு போயிட்டாராம். இருக்குற செலவுல இவளையும் வச்சுப் பாத்துக்க முடியாது. அதனால சித்தப்பா வீட்டு சைடுல யார்கிட்டயாவது சித்திய அனுப்ப சொல்றான்”

தன் பணத்துக்கு பங்கு வருகிறது, தனக்கு ஒரு பிரச்ச்னை வருகிறது என்றதும் சித்தப்பாவின் மீது பழி போட்டு எப்படி தப்பிக்கத் துடிக்கிறது என் மாமாவின் மனது? அவரை பலிகடாவாக்கி, அவரை முன்னிலைப்படுத்தி இவர் தப்பிக்கொள்ளாப் பார்க்கிறார். “அதுக்கு நீங்க எல்லாம் சம்மதம் சொல்லிட்டிங்களா?”

“அதெப்படிப்பா சொல்லுவோம்? அந்த மனுசன் செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா? இவள எதுக்கு அனுப்புவோம்?” – தாத்தா ஆரம்பித்தார் மீண்டும் சித்தப்பாவை வைய.. ஆச்சி பக்கத்து வீட்டுப் பெண்களிடம் தன் மகளின் சோகத்தை சொல்ல ஆரம்பித்தார். அந்தப் பெண்களும் “மனுசன் இப்படியா செஞ்சுட்டு போவான், படுபாவி” என்று போலியாக துக்கப்பட்டனர்.

அனைவரின் செயலும் எனக்கு வெறுப்பை ஊட்டியது. அவரை இடைமறித்து நான் பேச ஆரம்பித்தேன். “உங்க பையனுக்கும் உங்களுக்கும் சித்தப்பா செஞ்ச எவ்வளாவோ நல்ல விசயங்க எல்லாம் மறந்துபோச்சுல? அந்த ஆளு உங்க பொண்ண நேத்து வரைக்கும் எப்படியெல்லாம் பாத்துக்கிடாரு? சித்தி என்னைக்காவது கஷ்டம்னு வந்து நின்னுருக்காங்களா? இப்போ ஒரு நஷ்டம்னு வந்ததும் எல்லாரும் சேந்து அவரையே வைரிங்க? அவரு உங்களுக்கும் சேத்து தானே செல்வழிச்சாரு? அப்போ எல்லாரும் சேந்து தானே அனுபவிச்சோம்? இப்போ கஷ்டம்னு வந்ததும் அவரை அசிங்மா பேசுரிங்க, சித்திய அவங்க வீட்டுக்கு அனுப்பலாமான்னு யோசிக்குரிங்க. அந்த மனுசன் நல்லா வாழ்ந்தது தான் பெரிய தப்பு. அதான் இப்போ கஷ்டப்படும் போது எல்லாரும் அவர மதிக்க மாட்றிங்க” பட படவென்று பேசினேன் நான். “சரி என்னமும் பண்ணுங்க. எனக்கு நாளைக்கு மதுரைல மீட்டிங் இருக்கு. காலைல சீக்கிரம் கிளம்பணும். நான் தூங்கப்போறேன்”

இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. என் சித்தி என்னும் ஒரு பெண்ணை ஒரு பொறுப்பை என் சித்தப்பாவிடம் 18வருடங்களுக்கு முன்பு கொடுத்தார்கள். இத்தனை காலம் என் சித்தியை அவர் சந்தோசமாக வைத்திருந்தது யாருக்கும் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால் ஒருவன் தன் பொறுப்பில் இருந்து தடுமாறும் போது அவன் மீது தான் எத்தனை விமர்சனங்கள்? அவன் அத்தனை நாட்களாக சேர்த்து வைத்த மதிப்பும் மரியாதையும் உறவுகளும் மொத்தமாக அவனை விட்டு செல்கின்றன. சென்றாலும் பரவயில்லை, ஊர் மத்தியில் அவனை அசிங்கப்படுத்துகின்றன. எல்லோருக்கும் அவர்களின் வாழ்க்கையும் பிரச்சனையும் தான் முக்கியம். எவ்வளவு சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்?

மறுநாள் நான் மதுரைக்கு கிளம்பினேன். இன்னைக்குள்ள இவளுக்கு எப்படியாவது ஒரு ப்ராஜக்ட் ரெடி பண்ணிகொடுத்திரணும் என்று முடிவெடுத்துக்கொண்டு கிளம்பினேன். அவல் பெரியாரில் காத்திருந்தாள். மாறி மாறி அலுவலக அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. எங்கள் பேச்சுக்கு இடையே இப்படி வரும் தொந்தரவு அவளுக்கு எரிச்சலாக இருந்தது. ஆபிஸ் போனை வாங்கி ஸ்விட்ச் ஆஃப் செய்தாள். அவளோடு எனக்கு மதுரையில் தெரிந்த ஒவ்வொரு நிறுவனமாக சென்று, கடைசியில் ஒரு வழியாக ஒரு மருத்துவமனையில் அவளுக்கு ப்ராஜக்ட் வாங்கிக்கொடுத்து, “I love u so much” என்று அவளின் பாராட்டைப் பெற்று அவளுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு சிவகாசிக்கு பஸ் ஏறினேன்.

அப்போது தான் ஞாபகம் வந்தது, காலையில் இருந்து அணைத்து வைக்கப்படிருந்த என் ஆபிஸ் போன். வேகமாக எடுத்து ஏன் செய்தேன். வரிசையாக மிஸ்டுகால் மெசேஜ்களாக வந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு கால் வந்தது. என் பாஸ் தான் அழைத்தார்.

“என்ன சார், காலைல இருந்து போன் swith off ல இருக்கு? டீலர் எல்லாம் என்ன கூப்பிடுராங்க. என்ன இப்படி irresponsibleஆ இருக்கிங்க? போன ஆஃப் பண்ணி வைக்குற அளவுக்கு உங்களுக்கு தைரியம் வந்திருச்சி, இல்ல சார்?” மிகவும் கோபமாகப் பேசினார் பாஸ்

“சார் அப்படியெல்லா இல்ல சார்.” பயந்துபோய் வரண்டுபோன தொண்டையில் இருந்து கஷ்ட்டப்பட்டு குரலை அழைத்து வந்தேன்.

“பின்ன எப்படி சார்? எதாவது ப்ராப்ளம்னா என்கிட்ட சொல்லிருக்கலாமே?”

“சார் அது வந்து, எங்க சித்தப்பா தொழில் நஷ்டமாகி வீட்ட விட்டு ஓடிப்பொயிட்டாரு சார். சித்தி கொழந்தைங்க எல்லாரையும் விட்டுட்டு ஓட்டிபொயிட்டான் சார் அந்த ஆளு. அந்த ஆளத் தேடி தான் சார் மதுர வந்தேன். இப்படி நடுரோட்ல விட்டுட்டு போறவனா சார் ஆம்பள? அவன நெனச்சா அசிங்கமா இருக்கு சார். குடும்ப மானத்த வாங்கிட்டான் சார். இத நான் எப்படி சார் உங்க கிட்ட சொல்லி பெர்மிஷன் கேக்குறது?”

“அய்யோ, சாரி சார். நீங்க அந்த வொர்க்க பாருங்க. எனக்கு call divert போட்ருங்க. நான் பாத்துக்கறேன். உங்க ப்ராப்ளம் சால்வ் ஆனதும் சொல்லுங்க” பாஸ் தன் கோபம் மறந்து மிகவும் அக்கறையுடன் சீரியஸாக சொல்லிவிட்டு துக்கமாக ஃபோனை வைத்து விட்டார்.

என் சித்தப்பாவை இப்படி மற்றானிடம் பேசிவிட்டோமே என்கிற கவலையை விட, பாஸிடம் இருந்து எப்படியோ தப்பித்தோம் என்கிற திருப்தி எனக்கு அதிகமாக இருந்தது. பேருந்து சிவகாசி நோக்கி, அழுது கொண்டிருக்கும் என் சித்தியை பார்க்க என்னை அழைத்துப்போனது.

எனக்கு வயசாவுது!?!

Friday, March 4, 2011

இப்போது சில நாட்களாகவே எனக்கு வயதாவதாகவே ஒரு ஃபீலிங். வேலைக்கு போனதும் பொறுப்பு வருதோ இல்லையோ, நமக்கு வயதாகிறது என்கிற எண்ணம் கண்டிப்பாக வரும். உடல் ஆரோக்கியம் மீது தேவை இல்லாமல் அக்கறை வருகிறது! அடிக்கடி புறத்தோற்றத்தை மாற்றும் ஆசையும் தயக்கமும் மாறி மாறி வருகின்றன. யாராவது, சார் என்றோ அண்ணா என்றோ அழைத்தாலோ கோபம் பயங்கரமாக வருகிறது, அழைத்தவர் என்னை விட வயது குறைந்தவராக இருந்தாலும்.

என்னை விட வயதில் மூத்த டீலர்கள் எல்லாம் என்னை "சார்" என்று விளிக்கும் போது "நம்மையும் இவர்களின் வயதான கூட்டத்தில் சேர்க்கப்பார்க்கிறர்களோ?" என்று மைல்டாக ஒரு டவுட் வரும். அந்த டவுட், என் தாத்தா வயதுடைய ஒருவர் ரோட்டில் எனக்கு பின்புறம் சைக்கிளில் வந்து "சார் வழிவிடுங்க" என்று சொன்ன போது கன்பார்ம் ஆகியது. அலுவலகத்திலும் என் பாஸ் முதல்கொண்டு என்னை அழைப்பது "சார்" என்று தான். இப்படி எல்லோரும் நம்மை சார் என்று அழைப்பதற்கு என்ன காரணம்? நிஜமாகவே வயதாகிறதா? அல்லது நம் தோற்றம் வயதானது போல் இருக்கிறதா? என்று மிகவும் வருத்தத்துடன் ஒரு ஆரய்ச்சியை துவக்கினேன்.

எப்படியானாலும் சரி, நான் ஒரு இளைஞன் என்பதை நிரூபிக்க என்னவேண்டுமானாலும் செய்ய தயாரானேன். முதலில் இந்த பார்மல் ஆடைகளை நிறுத்த வேண்டும். இதெல்லாம் வயதானவர்கள் போடுவது. வேலை நேரம் போக மற்ற நேரங்களின் கேசுவல்ஸ் தான் இனிமேல். மீசை வைப்பதெல்லாம் அங்கிள் ஆனவனுக்கு எழுதி கொடுத்தது. நாம யூத்து, அதனால மீசையை மழி. மீசையை மழிக்கும் நேரத்தில் தேவை இல்லாமல் கல்லூரி காலங்களில் மீசை வளரச்செய்ய நான் செய்த வீரபராக்கிரமங்கள் ஞாபகம் வந்து தன் பங்குக்கு வெறி ஏற்றின. மீசையை மழித்தாகி விட்டது.

வேறு இன்னும் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று அறிய கண்ணாடியைப்பார்த்தேன். இதுவே மிகவும் அட்டகாசமாக அழகாக இருந்தது. ஒரு சந்தோசம் மனதுக்குள் வந்தது. அடர் நீலக்கலரில், என் தம்பி 7ஆம் வகுப்பு படிக்கும் போது அவனுக்கு வாங்கிய டி-சர்ட்டை தேடிப்பிடித்து அணிந்துகொண்டேன். (இப்போது அவன் கல்லூரி இறுதி ஆண்டு மாணவன்). சாரு நிவேதிதா உபயத்தில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஜாக்கி ஜட்டி தெரியுமாறு ஜீன்ஸ் உடுத்திக்கொண்டு கிளம்பினேன். இன்று இப்படி ஒரு யூத்தாக ஊர் சுற்றலாம் என்னும் நினைப்பில் ஆபிசில் லீவு சொல்லிவிட்டு பையை எடுத்து கிளம்பினேன். பையை அருகில் பார்த்ததும் மண்டையில் என் யூத் பிளானுக்கு இன்னுமொரு ஐடியா வந்தது. இந்தப்பையும் ஒரு காரணம் நம்மை வயோதிகனாக காட்ட. தூக்கி வீசினேன் அந்த சேல்ஸ் ரெப் பையை. 

பைக்கை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் ஒரு தோல் பொருட்கள் கடைக்கு சென்று, "இருக்குறதுலயே நல்லா லேட்டஸ்ட்டா, யூத்து யூஸ் பண்ற மாதிரி ஒரு பேக் குடுங்க" என்றேன்.

கடைக்காரன், "உங்களுக்கா சார்?" என்றான். அவன் கேட்கும் தொனியில் எதுவும் நக்கல் இருக்கிறதா என்று பார்த்தேன். சீரியஸாகத்தான் கேட்டான். என்னை அவன் யூத் என்றே நம்பிவிட்டான். மனசுக்குள் ஒரு சந்தோசம். எல்லாம் இந்த மீசைய எடுத்த மகிமை. 

"ஆமா எனக்குத்தான்". பளார் என்று முகத்தில் அறையும் ரோஸ் கலரில் ஒரு பையை கொடுத்தான். பின்புறம் மாடு கட்டும் கயிறு அந்த பையில் இருந்தது. அந்தக்கயிறை தான் தோளில் மாட்ட வேண்டும் போல. எனக்கு அந்தப்பையும் அதன் கலரும் பிடிக்கவே இல்லை. கடைக்காரனை பார்த்தேன். "வேற ஏதாவது மாடல்ல இருக்கா?"

"இப்போலாம் உங்கள மாதிரி யூத்துங்க எல்லாம் இந்த மாடல்ல அதும் இந்த கலர்ல தான் பேக் வச்சுருக்கங்க"

எனக்கு அந்தப்பையை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதை விட அந்தக் கடைக்காரனையும். ரூ.495 கட்டி மீதி 5ரூபாய்க்கு காத்திருந்தேன். ஏதோ ஞாபகம் வந்தவனாய் அந்த மீதி காசை வாங்காமலே உதட்டில் ஒரு மென் சிரிப்போடு வந்தேன். மனம் நிறைந்து இருந்ததால் அந்த 5ரூபாய் பெரிதாக தெரியவில்லை. யூத்து என்றால் டிப்ஸ் வைப்பது தானே பேஷன்.. அதான்..

உள்ளே ஒன்னுமே இல்லாத பையை தோளில் மாட்டிக்கொண்டு பைக்கில் ஏறினேன். நான் போட்டிருக்கும் நீல நிற டி-சர்ட்டுக்கு இந்தப்பை ரொம்ப கேவலமான காம்பினேஷனாக இருந்தது. ஆனாலும் யூத் என்றால் இப்படித்தான் கான்ட்ராஸ்ட்டாகப் போட வேண்டும் என்று நான் ஏற்கனவே பல புத்தகங்களில் படித்து அறிந்து வைத்திருந்தேன். பைக்கில் செல்லும் போது அடிக்கடி பின்புறம் தொட்டுப்பார்த்துக்கொண்டேன், என் ஜாக்கி தெரிகிறானா என்று. வெளியில் தெரியாமல் போடுவதற்கா இவ்வளவு செலவழித்து ஒரு உள்ளாடை? இன்று தான் நானும் என் ஜாக்கியும் பிறவிப்பயன் எய்தினோம்.

ஊரில் பெண் பிள்ளைகள் அதிகமாக திரியும் எல்லா இடங்களுக்கும் போனேன். கோயிலில் இருந்து, ஸ்கூல், காலேஜ், மார்க்கட் என்று சகல இடங்களையும் வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தேன். புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டீக்கடைக்கு சென்றேன். அங்கு இருந்த டீ மாஸ்டருக்கு 30வயதாகி 30வருடம் இருக்கும். "என்ன சாப்புடுறிங்க தம்பி, டீயா காப்பியா?"

ஆஹா, அவர் என்னை தம்பி என்று அழைத்துவிட்டார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு பெண்ணை நான் பின் தொடர்ந்து வரும் போது, இதே கடையில் தான் காஃபி குடிக்க வந்தேன். அப்போது இதே ஆள் என்னை "சார்" என்றார். இப்போது என்னை "தம்பி" என்கிறார். எல்லாம் மீசை எடுத்ததன் மகிமை. அது மட்டுமா? அந்த கடைக்காரன் நம்ம கலருக்கும் நம்ம ட்ரெஸ் கலருக்கும் ஏத்த மாதிரி சரியான பேக்க தான் குடுத்துருக்கான். அதான் அன்னைக்கு என்ன சார்னு சொன்ன பெருசு இன்னைக்கு தம்பினு சொல்லுது. 'நாம யூத்தா மாறுரதுக்கு ஒரு சரியான திட்டமிட்ட பாதையில தான் போறோம்'னு மனசுக்குள்ள ஒரு திருப்தி.

இன்னைக்கு இந்த திருப்தி போதும் என்கிற சந்தோசத்தில் வீடு திரும்பினேன். வழியில் இருக்கும் ஒரு இன்ஞ்சினியரிங் கல்லூரி வாசலில் இரண்டு மாணவர்கள் லிப்ட் கேட்டனர். எப்போதும் லிப்ட் கொடுத்தால் ஒருவரை மட்டும் ஏற்றும் நான் இன்று இருவரையும் ஏற்றினேன். எத்தன தடவ பாத்துருக்கேன் ரோட்ல? பசங்க எல்லாம் எப்பவுமே ட்ரிபிள்ஸ் தான பைக்ல? யூத்து... 

இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டே வந்தார்கள். முதலாமாண்டு மாணவர்கள் போல் தெரிந்தது. மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் "இவைங்க ஒரு வேள நம்மளையும் இவைங்க காலேஜ்லயே படிக்குற ஸ்டூடண்ட்டா நெனச்சுருப்பாய்ங்களோ? நெனச்சாலும் நெனச்சிருப்பாய்ங்க. ஏன்னா இன்னைக்கு நம்ம ட்ரெஸ்சிங்ல இருந்து எல்லாமே டோட்டலா ஒரு யூத்து மாதிரில இருக்கு?" என் மனம் எங்கோ மிதந்து கொண்டிருந்தது.

கனவில் மிதந்து கொண்டே நான் அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் பைக்கை நிறுத்தினேன். இருவரும் இறங்கினார்கள்.  கோரஸாக சொன்னார்கள், "ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்".

பயபுள்ள கண்டுபிடிச்சுட்டானோ?!
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One