”ஆக மொத்தத்துல எவனையும் முன்னேற விட மாட்டோம்” - a film by சமூக ஆர்வலர்ஸ் & மீடியா...

Saturday, May 16, 2015

அது ஒரு ஒடுக்கமான, நீட்டமான தெரு.. அந்த ஊரில் பெரும்பாலானத் தெருக்கள் அப்படித்தான் இருக்கும்.. உங்கள் கற்பனையை எளிதாக்குவதானால், ’ரேனிகுண்டா’ படத்தில் ரேனிகுண்டா ஊர் என்று ஒடுக்கமான நீட்டமான தெருக்களைக் காட்டுவார்களே? ’பாண்டிய நாடு’ படத்தில் கூட ஒத்தக்கடை மச்சான்னு ஒரு பாடல் வருமே? அதில் ஒடுக்கமான தெருக்கள் வருமே? என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஹ்ம் நான் சொல்லும் தெருக்களும் அப்படித்தான் இருக்கும்..
அந்தத் தெருவில் இரண்டு புறமும் காலையில் இருந்து மாலை வரைப் பெண்கள் கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.. கெட்டு என்றால், வெறும் அட்டையை அல்லது மரச்சில்லும் தாளுமாகவும் இருப்பதை மடித்து, பசையால் ஒட்டி, தீப்பெட்டி ஆக்கும் கலை தான் கெட்டு ஒட்டுவது.. கதை பேசிக்கொண்டும், ரேடியோ கேட்டுக்கொண்டும் கெட்டு ஒட்டிக்கொண்டே இருப்பார்கள். சில பெண்கள் அணுகுண்டு டியூப், புஸ்வானக் குப்பி, சாட்டை சுற்றுவது என்று இருப்பார்கள்.. இன்னும் சிலர் கட்டை அடுக்குவார்கள். தீக்குச்சிக்கு மருந்து வைக்க ஏதுவாக ஆயிரக்கணக்கான குச்சிகளை வரிசையாக ஒரு கட்டையில் அடுக்கி வைப்பது தான் கட்டை அடுக்கவது எனப்படும்.. இது அனைத்தும் அன்றன்று முடிக்கப்பெற்று, மறுநாள் மீண்டும் தங்கள் பொருளாதாரத் தேவைக்கு ஏற்றவாறு கெட்டொ, அணுகுண்டோ, கட்டையோ வாங்கி வந்து மீண்டும் தெருவின் இருபக்கமும் அமர்ந்து வேலையைப் பார்ப்பார்கள்..

மாலை நேரம் நெருங்க நெருங்க, பள்ளியில் இருந்து பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொருவராக வீட்டுக்கு வர வர, அந்தப் பெண்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.. பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் பைக்கட்டை வீட்டிற்குள் தூக்கி வீசிவிட்டு, வாசலில் அம்மாவுடன் அமர்ந்து கெட்டு ஒட்ட ஆரம்பிப்பார்கள்.. இதில் ஆண், பெண் பேதம் எல்லாம் இல்லை. எல்லா பிள்ளைகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையான பத்து குரோஸ் கெட்டோ, ஐந்து கட்டையோ அடுக்கி விட்டுத்தான் வீட்டுப்பாடம், சோறு, தூக்கம் என எதையும் நினைத்துப் பார்க்க முடியும்.. ஒரு நாள் முரண்டு பிடித்தால் கூட, தேர்வோ, உடல்நலமோ காரணம் என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.. அடியும் பட்டினியும் நிச்சயம்.. அதனால் அந்தத் தெருப் பிள்ளைகளுக்குக் கெட்டு ஒட்டுவதும் பள்ளி செல்வது போல, பிடிக்காவிட்டாலும் செய்து தொலைக்க வேண்டிய கட்டாயமாகிப்போனது..இது அந்தத் தெரு என்று அல்ல, சிவகாசியில் இருக்கும் எல்லாத் தெருவிலும் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சகஜமாகக் காணக்கிடைத்த விசயம் தான்.. இப்போதும் கூட சில தெருக்கள் இப்படித்தான் இருக்கின்றன..

சரி அப்படியே டெல்லி அரசியலுக்கு வாருங்கள்.. சமீபத்தில் மத்திய அரசாங்கம் குழந்தைத் தொழிலாளர் ஒழிக்கும் சட்டங்களில் சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது.. அதாவது, குழந்தைகள் தாங்கள் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு வந்தபின் தங்கள் பெற்றோர்கள் ஈடுபட்டிருக்கும் வேலைகளிலோ தொழில்களிலோ அவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்பது தான் அது.. ஆனால் அந்தத் தொழில் ஆபத்தானதாகவோ, ஆரோக்கியக் கேடானதாகவோ இருக்கக்கூடாது.. அது போகக் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஆட்களுக்கு தண்டனையை அதிகப்படுத்துவது, குடும்பத்தாருக்கும் தண்டனை என சில பல விசயங்களும் சேர்ந்திருக்கிறது.. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்தச் சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்களும் மீடியாக்களும் என்ன மாதிரி விளையாடுகிறார்கள் என்பதைத்தான்..

அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்று பாருங்கள்.. இந்தச் சட்டம் குலக்கல்வியை மறைமுகமாக ஊக்குவிக்கிறதாம், இதனால் குழந்தைத் தொழிலாளர்கள் இன்னும் தான் பெருகுவார்களாம், இது பார்ப்பனீய சூழ்ச்சியாம்.. கல்வி பெறும் உரிமைச்சட்டத்தை இது கேலிக்கூத்து ஆக்கிவிடுமாம்..

”சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா? இது குலக்கல்வி இல்லையா? அவன் முன்னேற வேண்டாமா? அவன் பிள்ளை ஒரு டாக்டராகவோ இன்ஜினியராகவோ வேண்டாமா?” என்றெல்லாம் நரம்புப் புடைக்கப் பேசுகிறார்கள்.. இதையெல்லாம் இவர்கள் பேசும் தொனி ஏதோ இவர்கள் மிகுந்த சமூக அக்கறை கொண்டவர்கள் போல் ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது.. கொஞ்சம் லேசாக ஆராய்ந்து பார்த்தால், as usual, இந்த ப்ளூ கிராஸ் ஆட்கள், மனித உரிமை ஆட்கள், பெண்ணுரிமைப் போராளிகள் மாதிரி இவர்களும் உருப்படியான விசயங்களுக்குப் போராடாமல், விளம்பரத்திற்காக வெற்றுக்கூச்சல் இடுபவர்கள் தான் என்று நன்றாகத் தெரியும்..

ஏங்க, தன் பிள்ளையை தன் சம்பளத்திலேயே படிக்க வைத்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கும் எந்த அப்பனும் அம்மாவும் அந்தப் பையனைக் கஷ்டப்படுத்தவோ வேலைக்கோ அனுப்ப மாட்டார்கள்.. இந்தச் சட்டம் எந்த விதத்திலும் கல்வியை மறுக்கவும் இல்லை. பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் பெற்றோருக்குப் பிள்ளைகள் உதவியாய் இருக்கலாம் என்று தான் சொல்கிறது.. இதனால் அந்தக் குடும்பத்திற்கு இன்னொரு ஆளின் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வசதியும் கிட்டும்.. அது அந்தப் பையனின் பள்ளிக்கூட செலவிற்குக் கூட உபயோகமாகும்.. “இல்லை அப்படியெல்லாம் இல்லை.. பிள்ளைகள் மூலம் வருமானத்தைப் பார்க்கும் பெற்றோர் அந்தப் பிள்ளைகளின் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களை மொத்தமாக வேலைக்கு அனுப்பி விடுவார்கள்” என்று குதிக்கும் ஆட்களுக்காகத்தான் நான் முதலில் எங்கள் ஊரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தேன்.. 

எங்கள் தெருவில் என் வயதை விட 5வயது மூத்தவர்களில் இருந்து அனைவருமே பட்டதாரிகள்.. அனைவரும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து அம்மா, அப்பாவிடம் அடி மிதி வாங்கிக் கட்டாயமாகக் கெட்டு ஒட்ட வைக்கப்பட்டவர்கள் தான்.. இன்று நாங்கள் படித்திருக்கிறோம், ஒரு நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நாங்கள் அன்று ஒட்டிய கெட்டுக்களும், எங்கள் பெற்றோர் எங்களை அந்த வேலைகளைச் செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தியதும் தான்.. ஒரு வேளை இந்த சமூக சீர்திருத்தவாதிகள் அன்று எங்கள் பெற்றோர்களை எல்லாம் கண்டித்து, எங்களைக் கெட்டு ஒட்ட வைக்காமல் தடுத்திருந்தால், நாங்கள் ஒம்பதாப்போ, பத்தாப்போ படித்துவிட்டு ஏதாவது ஃபயர் ஆபிசிலோ, அச்சாபிசிலோ இன்று மையுடனும், மருந்துடனும் உடலை வறுத்திக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருப்போம்.. அது தான் நிதர்சனம்.. ஏனென்றால் நாங்கள் ஒட்டிய ஒவ்வொரு கெட்டும் எங்கள் தட்டில் அரிசியாக, எங்கள் பள்ளிப் பையில் புத்தகமாக, எங்கள் சீருடையாக, எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியாக, எங்கள் சமூகத்தின் முன்னேற்றமாக மாறியது.. இந்த சீர்திருத்தவாதிகளுக்கு அதெல்லாம் தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது.. ஒவ்வொரு குடும்பத்தின் முதல் பட்டதாரியையும் கேட்டுப்பாருங்கள், அவனும் நிச்சயம் தன் தந்தைக்கோ தாய்க்கோ அவர்கள் வேலையில் உறுதுணையாக இருந்திருப்பான், அல்லது எங்காவது வேலை பார்த்துக்கொண்டே தான் படித்திருப்பான்..

ஆனால் இவர்கள் என்ன சொல்கிறார்கள்? அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமாம்.. ஏன்யா பிள்ளைய எப்பாடுபட்டாவது படிக்க வைக்கணும்னு நெனைக்கிற பெத்தவனுக்கு தண்டை கொடுத்துட்டா மட்டும் அந்தப் பிள்ளை படிச்சிருமாய்யா? பள்ளி இல்லாத நேரத்தில் வேலைக்குப் போற அந்தப்புள்ள, அடுத்ததாக அப்பன் இல்லாத அந்தக் குடும்பத்தைக் காப்பாத்த முழு நேரமும் வேலைக்குப் போணும்யா.. புரிஞ்சி பேசுங்க.. என் சித்தப்பா ஒரு காய்கறிக்கடை வைத்திருந்தார்.. நான் லீவு நாட்களில் அங்கு வேலை செய்து அந்தக் காசில் தான் என் 9 மற்றும் 10ம் வகுப்பின் செலவுகளைக் கவனித்துக்கொண்டேன்.. இல்லாவிட்டால் நான் எல்லாம் எட்டாங்கிளாசோட படிப்புக்கு டாட்டா சொல்லிருக்க வேண்டிய ஆளு..

இந்த சீர்திருத்தவாதிகள் சொல்லும் அடுத்த விசயம், இந்தச் சட்டம் குலக்கல்விக்கு வக்காலத்து வாங்குகிறது என்று.. அதாவது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் ஒரு சிறுவன் தன் அப்பாவிற்கு தச்சு வேலையில் உதவியாக இருந்தால் அவனும் தச்சனாக, தன் ஆசாரி என்னும் ஜாதிக்கு ஏற்றத்தொழிலைத் தான் செய்வான் என்கிறார்கள் இவர்கள்.. இப்படிப் பேசுபவர்கள் எல்லாம் முக்கால்வாசிப்பேர் பெரியாரின் பாசறை ஆட்களாகத்தான் இருக்கிறார்கள்.. இன்னும் இவர்கள் பெரியாரின் காலத்தைத் தாண்டி வளரவேயில்லை என்பது மட்டும் புரிகிறது.. இது 2015 என்று தெரியாமல் இன்னும் 1940களிலேயே இருக்கிறார்கள் பாவம்.. 

ஒரு ஆசாரியோ, குயவரோ, வண்ணாரோ, மருத்துவரோ தன் தொழிலை வைத்து ஜாதியால் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டதால் தான் இடஒதுக்கீடு என்னும் சலுகையை அனுபவிக்கிறார்.. அவர் பையன் அந்தக் குலத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போனாலும் கூட அவனுக்கும், பின் அவன் பிள்ளைகளுக்கும் கூட அதே இடஒதுக்கீடு கிடைக்கும் என்று தான் இடஒதுக்கீட்டுச் சட்டம் சொல்கிறது.. ”நீ உன்னை அடையாளப்படுத்தும் ஜாதியத் தொழிலை விட்டுவிட்டாய் அதனால் உனக்கு இடஒதுக்கீடு இல்லை, ஓடிப்போ” என்றா சொல்கிறது? ஒரு குயவன் அந்தத் தொழிலைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் குயவன் தான் நம் அரசாங்கத்தின் சட்டப்படி.. இப்படி இருக்கும் போது, ஒரு பையன் தன் தகப்பனின் தொழிலில் உறுதுணையாக இருந்து, அந்தத் தொழிலில் நல்ல எதிர்காலமும் லாபமும் இருந்தால் அதே தொழிலைப் பின்பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு ஆசாரியையோ, குயவனையோ, வண்ணானையோ நீங்கள் ஏன் இன்னமும் மட்டமாகப் பார்க்கிறீர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளே? படித்து முடித்து ஏதோ ஒரு MNCயில் எவனுக்கோ அடிமையாகக் குப்பை கொட்டுவதை விட, சொந்தத் தொழிலில் நாலு பேருக்கு வேலை கொடுப்பதில் என்ன குறையைக் கண்டீர்கள்?

இப்படிக் கேட்டால் அடுத்து ஒரு குண்டைப் போடுவார்கள்.. “சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை சாக்கடை தான் அள்ள வேண்டுமா?” என்று.. என் பதில் என்னவென்றால், சாக்கடை அள்ளுபவனின் பிள்ளை, வருங்காலத்தில் சாக்கடை அள்ளாமல் இருப்பதற்கு இன்று தன் தந்தைக்கு அந்தத் தொழிலில் உறுதுணையாக இருந்து தன் படிப்பிற்காக சம்பாதிப்பதில் தப்பே இல்லை.. அந்தப் பையனும் உங்களைப் போல சாக்கடை அள்ளுவது தப்பு என்று புரட்சியாளன் போல் நினைத்துக்கொண்டு வீட்டில் இருந்தால், படிக்கக் காசும் கிடைக்காது, படிக்கவும் முடியாது, கடைசியில் அவனும் தன் அப்பா போல் சாக்கடை அள்ள வரலாம், அல்லது ஏதாவது கூலி வேலைக்குத் தான் செல்லலாம்.. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.. எங்கள் தெருவில் சாக்கடை அள்ளும் ஒரு பெண் இருக்கிறார்.. லீவு நாட்களில் அவர் பையனும் அவருடன் வருவான் ஒத்தாசையாக.. வீடுகளிலும் சுத்தம் செய்வான் அந்தப் பையன்.. தெரு மக்களும் அவன் வேலைக்கு ஏற்றவாறு காசு கொடுப்பார்கள்.. அந்தப் பெண் தன் பையனை இவ்வளவு கஷ்டத்திலும் படிக்க வைப்பதை உணர்ந்து அடிக்கடி உதவினார்கள்.. சும்மா ஒன்றும் இல்லை, அந்தப் பையனும் வேலை செய்ததால் தான்.. சிவகாசியிலேயே ஒரு aided கல்லூரியில் டிகிரி வாங்கினான்.. அடுத்தது TANCET எழுதினான்.. அவன் பட்டியல் வகுப்பு என்பதால் கோட்டாவில் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலேயே MCA சீட் கிடைத்தது.. இன்று ஒரு ஐடி கம்பெனியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.. இப்போது அவன் அம்மா சாக்கடை அள்ளுவதில்லை.. தெருவே அந்த அம்மாவையும் பையனையும் பெருமையாகத்தான் பேசுகிறார்கள்.. யாரும் “சாக்கடை அள்ளுறவா பிள்ள சாஃப்ட்வேர் கம்பெனில வேல பாக்குறான்.. அவளுக்கு வந்த வாழ்வப் பாத்தீங்களா?” என்று வயிறு எரியவில்லை..

இந்த சமூக சீர்திருத்தவாதிகளும் மீடியாவும் அந்த அம்மாவிடம் சென்று ”உன் பிள்ளையை ஏன் சாக்கடை அள்ள அனுப்புகிறாய்? அது பார்ப்பனீயம், குலக்கல்வி” என்றெல்லாம் சொல்லியிருந்தால் தன் வெற்றிலை வாயாலேயே துப்பியிருப்பார் அவர்கள் மேல்.. ஏனென்றால் நிதர்சனம் என்பது சீர்திருத்தவாதிகளின் எண்ணங்களுக்கு எதிர்மறையாய் இருக்கிறது.. அன்று அந்த அம்மா அவனையும் ஒத்தாசைக்கு அழைத்து வந்திருக்கவில்லை என்றால், தன் மகனைப் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்க வைத்திருக்க முடியாது.. 

இப்போதும் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலையில் பேப்பர் போடுவதையும், மாலையில் வியாபார இடங்களுக்கு டீ விற்பதையும் காண்கிறோம்.. நாங்களும் சிறு வயதில் முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையின் போது ஏதாவது அச்சு ஆபிசுக்கோ, உறவினர் வீட்டு பலசரக்குக் கடைக்கோ சென்று அந்த இரண்டு மாதமும் சம்பாதித்து, அந்தக் காசில் தான் எங்கள் அடுத்த வருடப் படிப்பிற்கான நோட்டுப்புத்தகத்தை வாங்கினோன்.. எங்கள் வீட்டிலாவது பரவாயில்லை.. நான் அப்போதிருந்தே சோம்பேறி.. ஒழுங்காக வேலைக்குச் செல்ல மாட்டேன்.. என் அப்பாவும் கடன் வாங்கியாவது படிக்க வைத்துவிட்டார்.. ஆனால் பல வீடுகளில் முழு ஆண்டுத் தேர்வு நடக்கும் போதே பையனுக்கு எங்காவது இரண்டு மாதங்களுக்கு வேலை விசாரித்து வைத்திருப்பார்கள்.. அவன் அடுத்த ஆண்டு பள்ளிக்குப் போக வேண்டுமானால் அந்த இரண்டு மாதங்கள் வேலை செய்தே ஆக வேண்டும்.. வீட்டில் வாங்கும் கெட்டை விட இரு மடங்கு அதிகமாகக் கெட்டு வாங்குவார்கள்.. இது பெண்களுக்கு. அந்தப் பெண் ஒட்டும் கெட்டிற்கு வரும் காசு அவளுக்கே கொடுக்கப்பட்டு விடும்.. பையன் சம்பாதிக்கும் காசு பையனின் படிப்பிற்கு.. பெண் சம்பாதிக்கும் காசு அவளின் படிப்பிற்கு.. ஏதோ கொஞ்சம் வேண்டுமானால் அப்பாவும் அம்மாவும் கொடுப்பார்கள்.. இதனால் முழு ஆண்டுத்தேர்வு நடக்கும் போதே நாங்கள் இரண்டு மாதங்களுக்கான வேலையைத் தேட ஆரம்பித்திருப்போம்.. எவனாவது ஒருவனுக்கு வேலை கிடைத்துவிட்டால், அவன் அந்த அச்சு ஆபிசிலேயே தன் தோஸ்துகளுக்கும் வேலையை ரெடி செய்து விடுவான்..டியர் சமூக சீர்திருத்தவாதிகளே, மீடியாக்களே, நீங்கள் இதையெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் அந்த சிறுவர்களின் படிப்பு தான் பாதிக்கப்படுமே ஒழிய, நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஒன்றுமே நடக்காது.. “அரசாங்கம் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும்” என்பீர்கள்.. சோற்றுக்கே வழி இல்லாத குடும்பம் கல்வியை வைத்து நாக்கா வழிக்கப்போகிறது? கல்வியை இலவசமாகக் கொடுக்கலாம்.. ஆனால் சோற்றை? நோட்டுப் புத்தகத்தை? போக்குவரத்துச் செலவை? இதெல்லாம் உங்களுக்குப் புரியாது.. ஏனென்றால் நீங்கள் எல்லாம் இது போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள்.. கஷ்டப்பட்டிருந்தால் நிச்சயமாக உங்களுக்கு படிக்கும் போதே செய்யும் வேலையின் அருமையும் அதனால் கிடைக்கும் பயனும் தெரிந்திருக்கும்.. 

இன்றும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் இருக்கிறார்கள்; நெல்லைப் பகுதியில் பீடி சுற்றும் வேலையில் குழந்தைகள் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்கிறீர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதே விருதுநகர் மாவட்டம் தான் கிட்டத்தட்ட 25 வருடங்களாக 10 மற்றும் ப்ளஸ்2 தேர்வுகளில் மாநிலத்திலேயே அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றது.. தென்னகத்தில் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படும் நெல்லை மாவட்டம் டாப்3ல் எப்போதும் இருக்கும்..என் தாழ்மையான வேண்டுகோள், உங்கள் புரட்சி, புண்ணாக்கு, டிஆர்பி ரேட்டிங்கை எல்லாம் தாண்டி நிதர்சனம் என்ன? உண்மை என்ன? அதன் பின்னணி என்ன? அதன் விளைவுகள் என்ன? என்றெல்லாம் அலசுங்கள்.. இந்தியா போன்ற ஒரு முன்னேறும் நாட்டில், கிட்டத்தட்ட 35% மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் நாட்டில் பிள்ளைகளும் பள்ளி இல்லாத நேரங்களில் வேலை செய்தால் தான் படிக்க முடியும் என்கிற அடிப்படையைப் புரிந்துகொள்ளுங்கள்.. குலத்தொழில், பார்ப்பனீயம் என்றெல்லாம் புலம்புவதைக் கைவிடுங்கள்.. குலத்தொழில் என்னும் வழக்கமே குறைந்து கொண்டு வருகிறது.. இன்றைய தேதியில் சலூன்கடை வைத்திருப்பவர் எல்லாம் மருத்துவ ஜாதியும் அல்ல, இஸ்திரி கடை வைத்திருப்பவர் எல்லாம் வண்ணாரும் அல்ல.. அதனால் வெற்றுக்கூப்பாடுகளை விட்டொழியுங்கள்.. என்னைக் கேட்டால் அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ளது என்பேன்.. தன் அப்பா அம்மாவுக்கு அவர்கள் வேலையில் உறுதுணையாக இருக்கலாம் என்று தான் சொல்கிறதே தவிர, தன் குலத்தொழிலைத் தேடிக்கண்டுபிடித்து அதைத்தான் செய்ய வேண்டும் என சொல்லவில்லை இந்தச் சட்டம்.. சமூகச் சீர்திருத்தவாதிகளும், நாட்டின் நான்காம் தூண்களான மீடியாவும் தான் சமூகத்தை அதிகம் கெடுக்க நினைக்கிறார்கள் என்பதற்கான மற்றொரு சான்றாக இந்த சட்டத்திற்காக அவர்கள் கொடுக்கும் கூக்குரலை வைத்தே தெரிந்து கொள்ளலாம்..

நாம் எப்பவும் போல முன்னேற என்ன வழியோ அதை நோக்கிச் செல்வோம்.. இந்த சமூக ஆர்வலர்/சீர்திருத்தவாதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் ஆட்கள் வழக்கம் போல வெற்றுக்கூச்சல்களைப் போட்டுக்கொண்டே இருக்கட்டும்.. 

அம்மன் கோவில்பட்டி அழகிகள் - மழையும் உளுந்து வடையும்...

Wednesday, May 13, 2015

மழை பற்றி நினைத்தால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் ஞாபகம் வரும்? மண் வாசம், ஏதாவது பழைய நினைவுகள், ரோடு முழுக்க சகதி, நனைந்து கசகசவென்று இருப்பது, சேறாகிவிட்ட பைக், காய வைத்த துணி ஈரமாகுவது என்று எத்தனையோ இருக்கின்றன.. எனக்கு மழை என்றால் முதலில் ஞாபகம் வருவது உளுந்த வடை தான்..சிவகாசியில் மழை என்றாலே கொண்டாட்டம் தான்.. வருடத்தில் எப்பயாவது இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வரும் ஸ்பெசல் விருந்தாளி அல்லவா? அப்படி மழை பெய்யும் நாட்களில் அனைத்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் லீவு விட்டுவிடுவார்கள்.. நான் பள்ளியில் இருக்கும் போது மழை வந்தால் ஒரே குஷியாகிவிடும் எனக்கு. ஏனென்றால் மாலை நான் தனியாக வீட்டிற்குச் செல்லத்தேவையில்லை. ஃபயர் ஆஃபிஸ் லீவு என்பதால் அப்பா என்னை அழைக்க வருவார் என்பதால்..

வகுப்பு முடிந்து நான் பள்ளி வாசலுக்கு வரும் போது, அப்பா தன் ஒரு பக்க வேஷ்டியின் நுனியை தூக்கிப் பிடித்துக்கொண்டபடி கம்பீரமாக என்னை நோக்கி நடந்து வந்துகொண்டிருப்பார்.. என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பும், அவரைப் பார்த்ததும் என் முகத்தில் ஒரு சிரிப்பும் சொல்லி வைத்தது போல் வந்திருக்கும். என் பைக்கட்டை வாங்கி சைக்கிளில் கோர்த்துக்கொண்டு என்னை அலேக்காகத் தூக்கி சைக்கிளில் உட்கார வைப்பார்..

அன்றைய ஸ்கூல் கதைகளை எல்லாம் கேட்டுக்கொண்டே என்னை ஒரு டீக்கடைக்கு அழைத்துச்செல்வார்.. “ஸ்ட்ராங்கா ஒரு டீ” என்று அவருக்கு ஆர்டர் செய்து விட்டு என்னிடம் மிச்சக்கதைகளைக் கேட்பார். பிள்ளைகளைப் பேசவிட்டு ரசிப்பது தானே பெற்றவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு? டீ குடித்து முடித்ததும் சூடாகப் போட்டிருக்கும் உளுந்து வடைகளைகள் நான்கை பார்சல் வாங்கிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்புவோம்.எனக்குக் கோபமாக வரும் ‘வீட்ல நானு, தம்பி, அம்மா, அப்பான்னு நாலு பேரு தான். மொத்தமே நாலு வடன்னா, ஆளுக்கு ஒன்னொன்னு தானா?’ என.. அப்பாவிடம் எதுவும் பேச மாட்டான் வீடு வந்து சேரும் வரை. வீட்டிற்கு வந்ததும் பார்சலைப் பிரித்தால், சூடான வடை வாழை இலையுடன் கலந்து ஒரு வித அழகான வாசத்தைக் கொடுக்கும். எனக்கும் தம்பிக்கும் ஒன்றொன்று கொடுப்பார்கள் அம்மா. நாங்கள் அதை சாப்பிட்டு முடிக்கும் போது இன்னொரு வடையும் எங்கள் இருவரது தட்டிலும் இருக்கும். ஒரு பேச்சுக்காக அப்பா, அம்மாவிடம் கேட்பேன், “ஒங்களுக்கு?” என்று.. “நாங்க சாப்டோம்ப்பா, நீ சாப்புடு” என்பார்கள் இருவரும் கோரசாக..

ஒவ்வொரு மழை நாளிலும் இதே கதை தான்.. பள்ளி முடித்து, கல்லூரி முடித்து, அதன் பின் 3ஆண்டுகள் சிவகாசியிலேயே இருந்த வரையிலும் மழை நாள் என்றால் அன்று மாலை அப்பா கண்டிப்பாக உளுந்து வடை வாங்கி வந்திருப்பார் என்று உறுதியாகத் தெரியும் எனக்கு. அது ஏன் மழை என்றால் உளுந்து வடை, அன்று மட்டும் அப்பா ஏன் அதை வாங்குகிறார் என்றெல்லாம் தெரியாது. ஆனால் மழை நாள் என்றால் உளுந்து வடை நிச்சயம்.. சூடான உளுந்து வடையை தேங்காய்ச் சட்னியில் முக்கிச் சாப்பிடுவது அவ்வளவு சுவை..இப்போது வீட்டை விட்டு இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகும், ஒவ்வொரு மழை நாளிலும் மனம் உளுந்து வடைக்கு ஏங்குகிறது.. மழை வாசம் வந்தாலே மனதுக்குள் உளுந்து வடை ஞாபகம் வந்துவிடுகிறது.. ஆனால் என்ன செய்ய, கையில் காசு இருந்தாலும் தனியே போய்ச் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை.. அனைத்து வடைகளையும் எங்களுக்குக் கொடுத்துவிட்டு “நாங்க சாப்டோம்ப்பா நீ சாப்புடு” என்று கோரசாக சொன்ன அவர்களின் அன்பும் அக்கறையும் எந்தக் கடையில் கிடைக்கும் எனக்கு??


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One