ஓகே கண்மணி - மவுஸ் பிடிக்கக் கூட தெரியாதவனின் பார்வையில்...

Sunday, April 19, 2015

நான் இதற்கு முன் தியேட்டரில் பார்த்த மணிரத்னம் படம் என்றால் அது ‘தளபதி’ மட்டும் தான்.. அதுவும் ரஜினி படம் என்கிற கோட்டாவில், அப்பா என்னை 5வயதில் அள்ளிக்கொண்டு போய் பார்த்தப் படம்.. அதற்குப் பின் பள்ளி, கல்லூரிக் காலங்களில் அவருடைய உயிரே, அலைபாயுதே, கண்ணத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு எல்லாம் தியேட்டரில் பார்க்க ஆசை என்றாலும், தோஸ்து எவனும் அவர் படங்களைப் பார்க்க ரெடியாக இல்லை.. “காதுலயே விழுகாதுரா வசனம்.. வாயிக்குள்ளயே பேசுவாய்ங்க”, ”என்ன கதைன்னே புரியாதுரா” என்று எதையாவது சொல்லிச் சமாளித்து, என்னையும் போக விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும் கே டிவி, லோக்கல் கேபிள் டிவி உபயங்களில் அவரின் முக்கால்வாசிப் படங்களைப் பார்த்து, “ஏய் நாங்களும் மணிரத்னம் ரசிகன் தான் தெரியும்ல?” என்று பீத்த ஆரம்பித்திருந்தேன்.

அதுவும் MBA படிக்கும் போது தான் அவரும் ஒரு MBA என்று தெரிய வந்தது.. சொல்லவும் வேண்டுமா? “அதான்யா படத்த அவ்வளவு நேக்கா எடுக்குறாரு.. ’புரிஞ்வன் புரிஞ்சுக்கோ, புரியாதவன் தேட்டர் பக்கமே வந்துறாத’ன்னு தைரியாமா விடாப்பிடியா அவர்  இஷ்டத்துக்குப் படம் எடுக்குறார் பாரு. டெக்னீசியன்ட்ட எப்படி வேல வாங்குறாரு பாரு, அதான்யா MBA” என்று கண்ணாபிண்ணாவென்று பேசும் ரசிகன் நான்.. கிட்டத்தட்ட இருபத்திச்சொச்சம் ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அவரின் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போதும் மனதில் ஒரே சந்தோசம். மணிரத்னம் என்கிற பெயரைத் திரையில் காட்டும் போது வந்த ரெண்டு மூனு விசில் சத்தங்களோடு மானசீகமாகக் கை குலுக்கிக் கொண்டேன், “என் இனமடா நீ” என்று..




ரெண்டு மாடர்ன் ஆட்கள், ஆமாம் ஆணொன்று பெண் ஒன்று.. பார்க்கிறார்கள், பிடிக்கிறது, ஒன்றாக வாழ நினைக்கிறார்கள், நிற்க.. ஆனால் கல்யாணம், கில்யாணம் கமிட்மெண்ட் கிமிட்மெண்ட் எதுவும் கிடையாது.. இருவரும் கொஞ்ச நாள் வாழ்வார்கள், அதற்குப் பின் பிரிந்துவிட வேண்டும் என்கிற ம்யூச்சுவல் ஒப்புதலுடன்.. பிரியப்போகும் அந்தக் கடைசி நாட்களில் அவர்களுக்குள் இருக்கும் உண்மையானக் காதலைப் புரிந்து கொண்டு, அவர்கள் வேண்டாம் என நினைத்த அந்தக் கல்யாணத்தையே கட்டி அழுகிறார்கள். இது தான் கதை.. என்னது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? உங்க இளைய தளபதி விஜய்யின் ‘பிரியமானவளே’வைப் பட்டி டிங்கரிங் செய்த மாதிரி இருக்கா? ஹலோ பாஸ், இது மணிரத்னம் படம். வாய் இருங்குங்கிறதுக்காகவெல்லாம் கேள்வி கேக்கக்கூடாது. ஒன்லி குவாலிஃபைடு பீப்புள் தான் கேள்வி கேக்கணும், மைண்ட் இட்... கதை இவ்வளவு தான்.

நடிப்பில் துல்கர், நித்யா மேனனுக்கு அடுத்தபடி தான்.. நித்யா மேனனின் கண்கள் இருக்கிறதே, ஆத்தாடி என்னா பவர்ஃபுல். சில பெண்களின் கண்களைப் பார்த்தால், ’All the world's a stage'ல் ஷேக்ஸ்பியர் சொன்னது ஞாபகம் வரும் - wild eyes.. அப்படிப்பட்ட கண்கள் நித்யா மேனனுடையவை.. அந்தக் கண்களுக்கு நான் அடிமை.. அதுவும் ‘உருமி’ படத்தில் மலையாள பாணி முண்டு கட்டிக்கொண்டு, சைடு கொண்டையுடன் பிரபு தேவாவை ஒரு லுக் விடுவார் பாருங்கள், அவ்வளவு அழகாக இருக்கும். இந்தப் படத்திலும் அவர் நடிக்கும் முன்பே அவர் கண்கள் நடித்து முடித்துவிடுகின்றன. ஒரு சின்ன சிரிப்பிலேயே சந்தோசம், உற்சாகம், சோகம் என அனைத்தையும் கொண்டு வந்துவிடுகிறார்.. அழகு, திறமை இரண்டும் இருக்கிறது.. ஒரே பெரிய குறை அவரின் எடை. குட்டையான அவர் உயரத்திற்கு இது ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.. எடை, இடை இரண்டையும் குறைப்பது அவரின் சினிமா எதிர்காலத்திற்கு நல்லது..



பிரகாஷ்ராஜ் எப்பவும் போல டீ குடிப்பது மாதிரி மிகச்சாதாரணமாகத் தன் பங்களிப்பைச் செய்துவிட்டார்.. அலட்டல் இல்லாத நடிப்பு.. அவரின் மனைவியாக வரும் லீலா சாம்சன், ஒரு நல்லப் புதுவரவு. பிரகாஷ்ராஜிற்கும் அவருக்கும் உண்டான காதலை இருவரும் சொல்லும் இடம் அவ்வளவு அழகு. கோயிலில் மழையில் நனைந்து கொண்டே “வீட்டுக்கு எப்படி போறதுன்னு மறந்துட்டேன்” என்று அவர் சொல்லும் அந்த ஒரு வசனம் போதும் அல்சைமர் என்பதின் அர்த்தத்தை நம் மக்களுக்கு உணர்த்த.. துல்கர் சல்மான் வழக்கமான மணிரத்னம் பட ஹீரோக்களைப் போல் அழகாக இருக்கிறார். அரவிந்த் சாமி மாதிரி அப்படியே நடிக்கிறார். தனித்துவம் எதுவும் இல்லை.

படத்தில் சில இடங்களில், மிகச்சில இடங்களில் மட்டுமே மணிரத்னம் டச் இருக்கிறது.. ஆஸ்பத்திரி காட்சி, பிரகாஷ்ராஜ் தன் ஃபிளாஷ்பேக் சொல்லும் காட்சி, துல்கர் இரண்டு நாட்கள் என்ன ஆனார் என்பது, கடைசியில் லீலா “கணபதி எங்க?” என்று கேட்பது, இதில் மட்டுமே எனக்கு அவரின் டச் தெரிந்தது.. வசனம் யாரோ இரு ஃபேஸ்புக்/பிளாக் எழுத்தாளர்கள் பேசுவது போல் இருந்தன.. அவரின் காதல் படங்களில் வரும் பாத்திரங்கள் எல்லாமே ஏன் பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் போல் பேசுகிறார்கள் என்றுப் புரியவில்லை. நிஜத்தில் எவனாவது/எவளாவது நம்மிடம் அப்படிப்பேசினால் காதல் வராது, எரிச்சல் தான் வரும். மௌனராகம் கார்த்திக் மட்டுமே exception. ஒரு ஜாலிப் பேர்வழிக்கு அது தான் சரி.. ஆனால் எல்லாப் படத்திலும் - ரோஜாவில் ஆரம்பத்தில் வரும் அரவிந்த் சாமி, பம்பாயில் நாசரிடம் பேசும் அரவிந்த் சாமி, உயிரே படம் முழுக்க ஷாருக், அலைபாயுதேவில் மாதவன், ஷாலினி இருவரும், ஆயுத எழுத்தில் மூன்று ஜோடிகளும் - அனைவர் பேசுவதும் ஒரே மாதிரி, அவர்கள் வாழும் சமூகச் சூழலில் இருந்து விலகி, முழுக்க பக்குவப்பட்ட ஒரு மேடைப்பேச்சாளன் பேசுவது போலவே இருக்கிறது.. இந்தப் படத்திலும் அப்படித்தான். சில இடங்களில் வசனங்கள் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவர்கள் பேசுவது ரொம்பச் செயற்கையாக இருக்கிறது.

Living Togetherஐப் பற்றிச் சொல்ல வருவது மாதிரி அப்படியே போய் கடைசியில் கல்யாணம் தான் ஒரே வழி காதலுக்கு என்பது போல் முடிக்கிறார். அந்த லிவிங் டுகெதரையாவது உருப்படியாகக் காட்டினாரா என்றால் அதுவும் இல்லை.. மிக மிக மேம்போக்காகக் காட்டியிருக்கிறார்.. லிவிங் டுகெதரின் நன்மைகள், பிரச்சனைகள் என்று எதையுமே சொல்லவில்லை. அந்த வகையில் இது ஒரு வழக்கமானப் படமாகவே தெரிகிறது.. பிற படங்களில் காதலிப்பார்கள், கடைசியில் கல்யாணம் செய்து கொள்வார்கள்; இந்தப் படத்தில் லிவிங் டுகெதராக இருக்கிறார்கள் கடைசியில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.. அவ்வளவு தான் வித்தியாசம்.. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.. லிவிங் டுகெதரை விரும்பி ஏற்றுக்கொள்ளும் அவர்கள், அதை நன்றாக அனுபவித்தார்கள் என்பதற்கும் காட்சிகள் இல்லை, அது வேண்டாம் என்று கல்யாணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் தெளிவானக் காட்சிகள் இல்லை..

அதுவும் பிரகாஷ்ராஜ் குடும்பத்தைக் காட்டியவுடனேயே க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்றும் தெரிந்துவிடுகிறது நமக்கு. அடுத்தும் இரண்டு மணிநேரம் படத்தை இழுத்திருப்பது தான்  செம போர் ஆகிவிட்டது. முதல் பாதி ரொம்ப இழுவை. இரண்டாம் பாதியில் கடைசி அரைமணி நேரம் சூப்பர், மற்றபடி முதல் பாதி அளவுக்கு அது மோசம் இல்லை. மிகச்சின்னதாகப் படத்தை எடுத்திருக்கலாம்.. படத்தின் பெரிய ஆறுதல் பி.சி.ஸ்ரீராம் தான்.. அந்த வீட்டை, டபுள் டெக்கர் பஸ்சை, மும்பையின் சந்தடியை, ரயிலை, குக்கர் ஆவியை, துல்கர் சல்மானை என அனைத்தையும் அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார். இசை என்னமோ எனக்குப் பிடிக்கவில்லை. வர வர ரெஹ்மான் ஏன் இப்படி மொக்கையாகிவிட்டார் என வருத்தமாக இருக்கிறது. அந்தக் கர்னாடகப் பாடல் மட்டும் நன்றாக இருக்கிறது..



கடைசியில், ஒரு அழகான உறவு வேண்டுமானால் கல்யாணம் என்கிற பந்தம் தேவை என்று மணிரத்னம் அழகாக முடித்திருந்தாலும், நம் ஆட்கள் அது எல்லாத்தையும் விட, லிவிங் டுகெதராக துல்கரும் நித்யாவும் போட்ட ஆட்டத்தை மட்டும் தான் மனதில் வைத்திருப்பார்கள், துல்கர் மேல் பொறாமைப் படுவார்கள்.. அது தான் மனித இயல்பு.  நம் மக்கள் ‘தேவர் மகன்’ படத்தில்  கடைசியில் நாசரைக் கமல் வெட்டியவுடனேயே தியேட்டரில் இருந்து கிளம்பிவிடுவார்கள், “போங்கடா போய் புள்ளைங்கள படிக்க வைங்கடா” என்கிற வசனம் ஓடும் போது தியேட்டர் சைக்கிள் ஸ்டாண்டில் கூட்டம் வருவதற்கு முன் முதல் ஆளாக சைக்கிளை எடுத்துக் கிளம்பிவிட வேண்டும் என்று ஓடுவார்கள். ‘காதல்’ படத்தில் கடைசியில் பரத் வாங்கும் அடி, படும் அவஸ்தை எல்லாம் நம் மக்களுக்கு மண்டையில் ஏறாது. ’நியூ’ படத்தில் அழகான அம்மா செண்டிமெண்ட் உண்டு. ஆனால் எவன் அந்தப் படத்தில் அதையெல்லாம் கவனித்தான்? நம் மக்களுக்குப் படத்தில் என்ன வேண்டுமோ, எது பிடித்திருக்கிறதோ அதை மட்டும் தான் எடுத்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட இந்தப் படமும் அப்படித்தான்..

ஆனால் இன்னொரு பக்கம் லிவிங் டுகெதர் எல்லாம் நம் இளைஞர் மத்தியில் வரவேற்பு பெருமா என்றும் எனக்குச் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், ஒருவர் ஆசையை இன்னொருவர் மேல் திணிக்கக்கூடாது, கட்டாயப்படுத்தக்கூடாது, எந்நேரமும் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்க வேண்டும், அழுகக் கூடாது, எப்போதும் ஜாலி தான் என்பது மிஷின் மாதிரி வாழும், பாசமே அறியாத வெளிநாட்டானுக்கு ஏற்றதாக இருக்கலாம். நம் இளைஞர்களுக்குப் பாசம் காட்ட, கோபம் வந்தால் கத்த, சோகத்தில் தோளில் சாய்ந்து அழ, விடிய விடிய மொக்கை போட, எந்த கஷ்டத்திலும் விட்டுவிட்டுப்போகாத ஒரு துணை வாழ்க்கை முழுவதும் வேண்டும் என்றைக்கும்... செக்ஸ் என்பதையும் தாண்டி, வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நம் இளைஞர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் இது போன்றப் படங்களைப் பார்க்கும் நம்ம பசங்க காதல் என்கிற பெயரில் கசமுசா வேண்டுமானால் செய்வார்களே ஒழிய, லிவிங் டுகதர் அளவுக்கு அவர்களுக்குத் தைரியமும் கிடையாது, பொறுமையும் கிடையாது என்பது என் கருத்து.. உப்புச்சப்பில்லாத லிசிங் டுகெதருக்குப் பதில் கல்யாணமே பெட்டர் என்கிற விசயம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து தான் இருக்கிறது.. லிவிங் டுகெதர் இன்னும் 20 ஆண்டுகளுக்காவது இங்கு வராது என்பது என் கணிப்பு. அதனால் இதை வெறும் கதையாக, படமாக மட்டும் பார்க்கலாம். தேவையில்லாமல் நம் வாழ்க்கை முறையோடு தொடர்புப் படுத்துவது சரியல்ல.. 

ஆனால் படமாகப் பார்த்தாலும் ரொம்ப சுமார் தான். மொக்கையான முதல் பாதி, சற்றே சுமாரான இரண்டாம் பாதி, ஓரளவு நல்ல க்ளைமேக்ஸ். ஆனாலும் நான் எதிர்பார்த்தது, மணி லிவிங் டுகதெருக்கு ஞாயம் கறிபித்திருப்பார், அதிலும் இருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டலாம் என ஜெயகாந்தனின் “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” போல் ideal relationshipஐக் காட்டுவார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருந்தேன்.. ஆனால் அந்தக் க்ளைமேக்ஸ் எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. யாரோ ஒரு இயக்குனர் இந்த க்ளைமேக்ஸை வைத்திருந்தால் சூப்பர் என்று தாராளமாகச் சொல்லியிருப்பேன். மணிரத்னம் இப்படி ஒரு சாதாரணமானக் க்ளைமேக்சை வைத்திருப்பது நிச்சயம் ஏமாற்றம் தான். மணிரத்னம் என்கிற இயக்குனருக்கு இது ரொம்ப ரொம்பச் சுமாரான படம்.. மணிரத்னம் என்கிற தயாரிப்பாளருக்கு பழைய ஃப்ளாப்கள் அளவுக்கு இல்லாமல் ஓரளவு வசூலைக் கொடுக்கும் moderate hit படம். அவ்வளவு தான்.

மணிரத்னத்திற்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் வொர்த்தா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சின்ன அட்வைஸ்.. இனிமேலாவது முழுக்க முழுக்க டெக்னீசியன்களை நம்பி படம் எடுக்காதீர்கள். கதை, திரைக்கதையைத் தவிர அனைத்தும் நன்றாக இருக்கிறது உங்கள் படங்களில் இப்போதெல்லாம்.. படத்தில் ஒரே மாதிரியான பாத்திரங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வசனம் கொஞ்சமாவது இயல்பாக இருக்கட்டும். உங்கள் சினிமா வாழ்க்கையில் ‘பம்பாய்’ படம் வரை இருந்த மணிரத்னத்தை மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறோம்.. விரைவில் அனைவருக்கும் பிடித்த மாதிரியான ஒரு படம் எடுங்கள்.. இது போல் ஏ செண்டர் படங்கள் எல்லாம் உங்களை சினிமா விமர்சகர்களிடம் நல்ல பெயர் வாங்க வைக்கும்,  ஆனால் ரசிகர்களிடம் இருந்து விலக்கித் தான் வைக்கும்..



படத்தில் ஒரு வசனம் வரும், “நல்ல படத்துக்கு மொக்கை க்ளைமேக்ஸ்” என்று.. “ஓகே கண்மணி - மொக்கை படத்துக்கு நல்ல க்ளைமேக்ஸ்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.. பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்..

சிவகாசி மிக்சர் வண்டி - பென்சில் டப்பா & ஜெயகாந்தன்..

Thursday, April 9, 2015

என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..

நண்பர்கள் எல்லாம் என்னை அடிக்கடி கிண்டலடிக்கும் விசயம் ஒன்று உண்டு. எந்தப் பொருள் என்றாலும் அதைப் பொத்திப்பொத்திப் பாதுகாப்பேன். ட்ரிம்மர், ஏர்டெல் டோங்கில், ஷூ, என் கண்ணாடி என அனைத்தும் வாங்கி எத்தனை நாளானாலும், எவ்வளவு பழசானாலும் அது வாங்கும் போது கொடுத்த டப்பாவிலோ, அட்டைப்பெட்டியிலோ தான் இன்று வரை இருக்கும் அன்றாடம் அதன் வேலை முடிந்ததும்.. வாங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும், என் லேப்டாப் கீபோர்டை, அதோடு சேர்த்துக் கொடுத்தத் துணியால் தான் இன்று வரை மூடுகிறேன். நண்பர்கள் கிண்டலடிப்பதற்கான காரணம் புரிந்ததா? 

ஒரு அட்டைப்பெட்டியைக் கூட தூக்கி வீசாதக் கஞ்சன் என்பார்கள் சிலர். சிலர் பயந்தாங்கொல்லி என்பார்கள்.. சிலர் selfish என்பார்கள். ஆனால் எனக்கு ஏன் இப்படியிருக்கிறேன் என்பதற்கான காரணம் தெரியவில்லை.. ஒரு வேளை சிறு வயதில் ஒவ்வொரு பொருளும் வாங்க, நாங்கள் பட்ட கஷ்டங்கள் இன்றும் என் அடிமனதில் இருப்பதால், ஒவ்வொரு பொருளையும் ஏதோ கொஹினூர் வைரம் போல் வைத்திருக்கிறேனோ என்னவோ.. ஆனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் போது ஒரு சம்பவம் தவறாமல் என் நினைவில் வரும் எப்போதும்.. அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்..

மேலே, கீழே என்று இரு பக்கமும் திறப்பது மாதிரி இரண்டடுக்கு பென்சில் டப்பாவை அப்பாவிடம் ஆறாங்கிளாசில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அது என் கைகளில் வரும் போது நான் பத்தாம் வகுப்பு மாணவன்.. சிண்ட்ரெல்லா கதை அழகான ஸ்டிக்கராக மேலும் கீழும் ஒட்டப்பட்டிருந்தது அந்த பால் நிற பென்சில் டப்பாவில்.. “இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொல்லி சரோஜினி ஸ்டோரில் வாங்கிக்கொடுத்தார் அப்பா.. அப்பாவுக்கு எந்த சாமான் வாங்க வேண்டுமென்றாலும் சரோஜினி ஸ்டோர் தான்.. “அங்கதாம்ப்பா நயமா வச்சிருப்பாய்ங்க சரக்கெல்லாம்” என்பார்.. 



பல வருடம் ஆசைப்பட்டுக் கிடைத்ததால், மேஜையில் வைத்தால் அடி தேய்ந்து சிண்ட்ரெல்லா படம் உறிந்து விடுமோ என்கிற பயத்தால் அதை அழுக்காக விடாமல், டப்பாவில் மை சிந்த விடாமல், தெரியாமல் பேனாவில் இருந்து மை சிந்திவிட்டால் கூட அதை உடனே தண்ணீரால் கழுவி என்று ஏதோ ஹைதராபாத் நிஜாம் கால பொக்கிஷம் போல் பார்த்துக்கொண்டேன்.. அரையாண்டுத் தேர்வு நெருங்கும் போது தான் அவன் அதைப் பார்த்தான்.. அவன் என்பதே போதும். பெயர் எல்லாம் வேண்டாம். வசதி படைத்த ஒரு அவன்.. அவ்வளவு தான். மாலை பள்ளி விட்டதும்,

“டேய் புது டப்பாவாடா?”

“இல்லடா ஸ்கூல் ஆரம்பிக்கும் போதே வாங்கிட்டேன்”

“எங்க டப்பாலாம் பழசா இருக்கு? ஒனக்கு மட்டும் புதுசா?” என்று என்னிடம் பேசிக்கொண்டே என் சிண்ட்ரெல்லா டப்பாவை சடார் என்று எடுத்துக்கொண்டு ஓடினான். நான் அவன் பின்னாலேயே ஓடினேன். அவன் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை.. ஸ்கூல் கிரவுண்டில் என் டப்பாவை அதனுள் இருக்கும் பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர் என அனைத்துடனும் தூக்கி வீசினான்.. அது பறந்த திசையை நோக்கி அவனும் ஓடினான்.. சுற்றிக்கொண்டே கீழே விழுந்து நான்கைந்து முறை தரையில் உருண்டது. அப்போதும் திருப்தியடையாத அவன் அதை எத்திக்கொண்டே ஓடினான்.அவன் காலும் செம்மண் புழுதியும் தான் தெரிந்ததே தவிர என் டப்பா தெரியவேயில்லை.. ’ஹே ராம்’ படத்தில் கமல் கண் முன்னே ராணி முகர்ஜியைக் கெடுப்பார்களே, அப்படி இருந்தது எனக்கு..

“டேய் நில்லுறா நில்லுறா” என்று கத்திக்கொண்டே சென்ற நான் ஒரு அளவிற்கு மேல் ஓட முடியாமல் நின்று விட்டேன்.. நின்றே இடத்தில் இருந்தே கத்தினேன், “ப்ளீஸ்டா என் டப்பாவ குடுத்துரு.. ப்ளீஸ்”.. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.. கொஞ்ச நேரம் கழித்து என் முன் ஒரு குரூர சிரிப்புடன் வந்து நின்றான். “போ ஒன் டப்பா அந்தா கோல் போஸ்ட் கிட்ட கெடக்கு. எடுத்துக்கோ. இனிமேல் புது டப்பாலாம் கொண்டு வரக்கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

எனக்குப் பெரிய அழுகையோ அவன் மீது கோபமோ வரவில்லை. நான் வளர்ந்த சூழல் அப்படி. ’நம்மை விட வசதியில் உயர்ந்தவர்களிடம் கோபத்தைக் காட்டக்கூடாது. அவர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு, மோதாமல் ஒதுங்கி விடுவது தான் நமக்கு நல்லது’ என்று போதிக்கப்பட்டிருந்தது.. அவன் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு என் டப்பாவை நோக்கி ஓடினேன். அதன் வெள்ளை நிறம் முழுவதும் சிராய்ப்புகள், அந்த சிராய்ப்புகளில் எல்லாம் செம்மண் துகள், சிண்ட்ரெல்லா கதை முழுவதும் புள்ளி புள்ளியாக செம்மண் படிந்து அசிங்கமாக ஆகிவிட்டது.. ஆனால், நல்ல வேளை அப்போதும் பிய்ந்து போகாமல் தான் இருந்தது இருந்தது என் டப்பா. அப்பா ”இருவத்தெட்டு ரூவாப்பா, பாத்து பந்துஸ்தா வச்சிக்கோ” என்று சொன்னது ஞாபகம் வந்த போது தான் என்னையும் அறியாமல் கண்ணீர்த்துளிகள் வந்தன.. ப்ளஸ்டூ வரை அப்பா சொன்ன மாதிரி அதை “பந்துஸ்தாக”த்தான் வைத்திருந்தேன் என்பது வேறு கதை..

சமீபத்தில் அந்த நண்பனிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி ”ஞாபகம் இருக்காடா?” என்றேன்.. “டேய் சத்தியமா தெரியாதுடா.. அப்படியா செஞ்சேன்? சாரிடா” என்றான் சம்பிரதாய வருத்தத்துடன்.. அவன் ”சாரி” சொன்ன சந்தோசத்தை விட, அப்படி ஒரு சம்பவம் நடந்ததே அவன் ஞாபகத்தில் இல்லாதது தான் எனக்கு மிகுந்த வருத்தமாய் இருந்தது.. ஹ்ம், அடி பட்டவனுக்குத் தானே அதன் வலி எல்லாம்??? ஏனோ இந்த சம்பவம் இன்றும் ஞாபகம் வந்தது, உடனே பதிவேற்றி விட்டேன்..

_______________________________________________________________________

ஃபிப்ரவரி27, 2008 - என் வாழ்வின் மறக்க முடியாத நாள்.. மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் திருவிழாவில் நான் முதன் முதலாக எழுதிய சிறுகதை முதல் பரிசை வென்றது.. அன்று தான் சுஜாதா இறந்து போனார்.. “இவன் கதைக்கெல்லாம் ப்ரைஸ் கொடுக்குற ஒலகத்துல நான் இருந்து பிரயோஜனமே இல்ல”ன்னு தலைவர் முடிவு பண்ணிருக்கலாம்.. என்னால் அந்த வெற்றியைக் கொண்டாடவெல்லாம் முடியவில்லை. சுஜாதாவின் தீவிர ரசிகனான எனக்கு முதல் பரிசை விட, ‘நாம் வாழ்நாளில் எப்படியாவது ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்’ என துடித்துக்கொண்டிருந்த ஆளை இனி பார்க்க முடியாதே என்கிற ஏக்கம் தான் அதிகமாக இருந்தது..



ஒரு தலைமுறையையே வாசிப்புக்கு அடிமைப்படுத்தியவர், வாசிப்பு என்பது ஏதோ மேல்தட்டு சங்கதி என்பதை மாற்றி, அனைவருக்கும் கல்வி திட்டத்தை இலக்கியத்தில் புகுத்தியவர், இன்னொரு முக்கியமான விசயம், எல்லோரையும் ‘நாமும் எழுதிப்பார்க்கலாமே’ என்று முயற்சி செய்யும் அளவுக்கு தைரியத்தைக் கொடுத்தப் புரட்சியாளர் அவர்.. அப்படிப்பட்டவரின் வெறியனான என்னை, தன் பக்கமும் கொஞ்சம் இழுத்தவர் தான் ஜெயகாந்தன்..

பள்ளிக் காலத்திலேயே சுஜாதா அறிமுகம் என்றால், ஜெயகாந்தன் எனக்குக் கல்லூரியில் என் ஆங்கிலப்பேராசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.. அவரது “குருபீடம்” சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்துப் படிக்க வைத்தார்.. ’நல்லாருக்கு சார்’ என்றேன் அடுத்த நாள்.. உடனே ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கொடுத்தார்.. அதில் இருந்து ஜெயகாந்தனும் என் ஃபேவரைட் ஆனார்.. அவரின் பல நாவல்களைப் பற்றி, அதன் பாத்திரப்படைப்பைப் பற்றி, அவர் கையாண்டிருக்கும் மனித உறவுகள் பற்றி, மனித மனத்தின் எண்ணங்களைப் பற்றி நானும் பேராசியரியரும் அடிக்கடி விவாதித்துக்கொண்டிருப்போம்.. ’நம்மை விட 20வயது சின்னப்பய தானே?’ என்று நினைக்காமல் என்னிடம் போட்டிபோட்டு விவாதம் செய்து, ஜெயகாந்தனின் பல கருத்துக்களை எனக்கு விளக்கிய அவர் மூலம் தான் ஜெயகாந்தன் இன்னும் அருகில் நெருங்கி வந்தார்..

மனித மனங்களை இந்த அளவுக்கு உள்ளே சென்று ஒருவன் அலச முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருந்தன அவரது ஒவ்வொரு நாவலும்.. எல்லோருக்கும் சி.நே.சி.ம. பிடித்திருந்தால், எனக்கு மட்டும் என்னமோ அவரின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தான் மிகப்பிடித்திருந்தது.. பத்திரிகையாளன் மேல் அந்த நடிகை காட்டும் எதையும் எதிர்பாராத அந்த அன்பு உண்மையில் மிகப் புதியது.. அப்படி ஒரு பெண்ணைத் தான் ஒவ்வொரு ஆணும் தேடுவான். மிகவும் பக்குவமாக, அன்பை மட்டும் கொடுப்பவளாக, எதையும் எதிர்பார்க்கதவளாக, ஏன் அன்பைக் கூட பதிலுக்கு எதிர்பார்க்காதவளாக வரும் அவளது பாத்திரம் மிகத்தெளிவாக இருக்கும். “இது idealஆன அன்பு.. இப்படி ஒரு அன்பு சாத்தியமே இல்லை..” என்று முன்னுரையில் கூறிவிட்டுத் தான் கதையையே ஆரம்பித்திருப்பார்..  அதைப் படமாகக் கூட எடுத்தார்கள் நடிகை லட்சுமையை நாயகியாக்கி.. இன்று எடுத்தால் என் சாய்ஸ் அனுஷ்கா தான்..



சென்ற வாரம் தான் ஜெயகாந்தனின் ’சக்கரம் நிற்பதில்லை’ சிறுகதைத் தொகுப்பை முடித்திருந்தேன்.. படித்து முடித்ததும், ‘எழுத்துலகில் சுஜாதா ரஜினி என்றால், ஜெயகாந்தன் கமல்’ என லட்சத்தி சொச்சமாவது முறையாக நினைத்துக்கொண்டேன்.. இன்று தான் அவரின் முதல் நாவலான ’வாழ்க்கை அழைக்கிறது’ கதையைப் படிக்க எடுத்தேன்.. வெறும் முன்னுரையோடு நிறுத்துவிட்டு, மிச்சத்தை இரவில் படிக்கலாம் என நினைத்திருக்கும் போது தான் அந்தச் செய்தி வந்தது, ஜெயகாந்தன் இறந்துவிட்டார்.. 

”வாழ்நாளில் எப்படியாவது பார்த்துவிட வேண்டும்” என நான் வைத்திருந்த லிஸ்டில் இருந்த இன்னொருவரும் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார்.. நமக்குப் பிடித்தவர்களின் இறப்புச்செய்தி முதலில் நம்பமுடியாததாகவே இருக்கிறது.. பின் ’இது பொய்யாகிப்போகாதோ?’ என்கிற நப்பாசை தொற்றிக்கொள்கிறது.. ’இல்லை இது உண்மை’ என்கிற நிஜத்தை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. ஜெயகாந்தனின் அந்தச் செருக்கு, கர்வம், திமிர், திறமை, சமூக அக்கறை, கம்பீரம் எல்லாம் அவருக்கு முன்னும் பின்னும் எந்த எழுத்தாளனுக்கும் கிடையாது.. மிகவும் வருத்தமாக இருக்கிறது.. சகட்டுமேனிக்கு அனைத்து அரசியல்வாதிகளையும் - தான் மதிப்பு வைத்திருந்த கம்யூனிசத் தலைவர்களைக் கூட விட்டுவைக்காமல் - கிழித்துத் தொங்கவிட்ட தைரியசாலி..  அவர் கதைகளில் இருக்கும் மனவியலுக்கு சரி நிகராக இருக்கும் அவரது முன்னுரை.. அவரை மறைமுகமாகக் கிண்டலடித்த ஆனந்த விகடனை நேரடியாகக் கிண்டல் அடித்து, கிழித்துத் தொங்கவிட்டு, ஒரு சிறுகதை எழுதி, அதை அவர்களுக்கே அனுப்பி வைத்தார்.. அவர்களும் அதை அழகாக அச்சிலேற்றினார்கள். அந்த அளவுக்கு ஜெயகாந்தன் என்பவரின் எழுத்துக்கு மதிப்பும் பயமும் இருந்தது, இருக்கிறது, இருக்கும்..

சுஜாதா, ஜெயகாந்தன் மாதிரியான எழுத்தாளர்கள் இனி கிடைப்பார்களா என்பது தெரியாது.. உலகில் பிறப்பும் இறப்பும் எல்லோருக்கும் வருவது தான் என்றாலும், சிலர் இறந்தாலும் நம்மோடு இருப்பது போலவே இருக்கும்.. அந்த வகையில் அவர்கள் இருவரும் என்றுமே இந்தத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள்.. 
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One