இன்று ஒரு டீலர் கடையில் ‘முரசு’ டிவியில் ’பாலும் பழமும்’ படத்தில் இருந்து “நான் பேச நினைப்பதெல்லாம்” பாடல் ஓடிக்கொண்டிருந்தது. இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் அம்மா ஞாபகம் வந்துவிடும் எனக்கு. இந்த பாடல் என்றில்லை, பொதுவாக பழைய பாடல்களை கேட்டாலே அம்மாவின் ஞாபகம் வந்துவிடும். ரேடியோவை அருகில் வைத்துக்கொண்டு, தனக்கு மட்டுமே கேட்கும் அளவில் மிக மிக அமைதியாக ஒலிக்கும் பழைய பாடல்களை அதனோடு சேர்ந்து தானும் பாடிக்கொண்டே வீட்டு கதவின் நிலையில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி தீப்பெட்டி கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பார் எங்கள் அம்மா. நான் என் படிக்கும் நாட்களில் ‘அம்மா’ என்று நினைத்துப்பார்த்தால் இந்த poseல் தான் அவர் எப்போதும் ஞாபகம் வருவார். கெட்டு ஒட்டி கெட்டு ஒட்டியே என்னையும் என் தம்பியையும் படிக்க வைத்த ஜீவன்!! இப்போதும் பல பழைய பாடல்கள் மனதில் ரீங்காரமிடும் போது அவையெல்லாம் என் அம்மாவின் குரலில் தான் என் மனதில் ஒலிக்கும்.. அவ்வளவு அழகான குரல். அவரின் ஒரே துணை அந்த பாக்கெட் ரேடியோ தான்.
சிவகாசியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெண்களின் நிலை என்ன தெரியுமா? காலை எழுவது. அச்சாபிசுக்கோ ஃபயர் ஒர்க்ஸ்சுக்கோ வேலைக்கு போகும் கணவனுக்கு சமையல் செய்வது. மதியத்திற்கும் அதே சமையலை பயன்படுத்திக்கொள்வது. மீண்டும் இரவு கணவன் வரும் போது சோறு மட்டும் ஆக்கி பொறியல், குழம்பு எதுவும் வைக்காமல் வெறும் பாலை மட்டும் காய்ச்சி வைத்திருப்பார்கள். கணவன் பக்கோடாவும் மிச்சரும் வாங்கி வருவான். சோற்றில் பாலை ஊற்றி பக்கோடாவை கடித்துக்கொண்டு திருப்தியாக இரவு உணவை முடித்துக்கொள்வார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஏழைப்பெண்கள் கட்டை அடுக்குவது, கெட்டு ஒட்டுவது, என்று தங்கள் அடுத்த வேளை சோற்றுக்கான ஆயத்த வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். சின்ன சின்ன தெருக்களாக இருக்கும் சிவகாசியில் அப்படிப்பட்ட ஒரு தெருவில் பகல் நேரத்தில் சென்றால், தெருவின் இரு பக்கமும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு வெளியில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு கெட்டு ஒட்டிக்கொண்டிருப்பதை காணலாம். அருகில் கண்டிப்பாக மெதுவான குரலில் ஒரு ரேடியோ பாட்டுப்பாடிக்கொண்டிருக்கும் அந்த சிவகாசி வெயிலை மறக்கடிக்கும் வகையில் மிக மிக இனிமையாக..
ஃபுல் சவுண்ட் வைத்தாலும் காதில் விழாத அளவிற்கு பாட்டு பாட ஆரம்பித்திருக்கும் அந்த ரேடியோவின் கிட்னி செயல் இழந்து பேட்டரி தீர்ந்து போயிருக்கும். அப்பாவிடம் அன்று மாலை வேலையில் இருந்து வரும் போது பேட்டரி வாங்கி வரச்சொல்லுவார் அம்மா. கண்டிப்பாக என் அப்பா வாங்கி வர மாட்டார் என்று என் அம்மாவுக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் சொல்லுவார். அப்பா வாங்காமல் வருவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று காசு இல்லாமல் வாங்கியிருக்க மாட்டார், அல்லது தன் வேலைப்பளுவால் மறந்திருப்பார். ஆமாம், 7,8 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து பெயர் தெரியாத ஒரு கிராமத்தில் இருந்து தன் ஃபயர் ஒர்க்ஸ் வேலையை முடித்துவிட்டு இரவில் வீடு திரும்பும் ஆணுக்கு ரேடியோ பேட்டரி வாங்குவது தான் ஞாபகத்தில் இருக்குமா? இரவு சாப்பாட்டிற்கு பக்கோடா வாங்கவே கஷ்டப்படும் ஆளுக்கு, பேட்டரி வாங்க ஞாபகம் இருந்தாலும், வாங்கத்தான் முடியுமா? அப்பா பேட்டரி வாங்கி வரவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின் அவரோடு அம்மா போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, அப்படி இருக்கும். இவர் அழுவதும் அவர் கத்துவதும் நானும் என் தம்பியும் ‘பே’ என்று அதை வெறித்துப்பார்ப்பதும்.. தன் நகைகளை எல்லாம் தன் கணவன் விற்ற போது போது அப்படி சண்டை போட்டிருக்க மாட்டார் அவர். ஆனால் பகல் நேரங்களில் தனக்கு உற்ற தோழனாய், தன் வேலைகளுக்கு ஒரு இளைப்பாறுதலாய் இருக்கும் அந்த உயிரற்ற நண்பன் நாளை தன்னுடன் பேச மாட்டான் என்பதன் ஏமாற்றமும் ஆற்றாமையும் தான் அந்த சண்டையை இன்னும் இன்னும் பெரிதாக்கும்.
ஆனாலும் என் அம்மா மறு நாள் தன் நண்பனுக்கு உயிர் கொடுத்து அவனோடு பேசிவிடுவார். எப்படி தெரியுமா? பகலில் ரேடியோவில் நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் அதன் பேட்டரியை வெயிலில் காய வைப்பார் அம்மா.. வெயிலில் காய்ந்த பேட்டரி, டயாலிசிஸ் செய்யப்பட்ட கிட்னி ஃபெயிலியர் பேசண்ட் போல் கொஞ்ச நேரம் கஷ்டப்பட்டு வாழ்ந்து திரும்பவும் மூச்சை நிறுத்திவிடும். மீண்டும் வெயிலில் காய வைத்து டயாலிசிஸ் ட்ரீட்மெண்ட், கொஞ்ச நேர உயிர் என மாறி மாறி ஓரிரு நாட்கள் அது குற்றுயிரும் கொலையுயிருமாக தன் பணியை செய்யும். அது முழுதாக சாகும் போது அப்பா புது பேட்டரியை கடன் வாங்கியாவது வீட்டிற்கு கொண்டு வந்திருப்பார். ஆனாலும் பேட்டரியை வெயிலில் காய வைப்பது என்ன விதமான அறிவியல் என்று இப்போது வரை எனக்கு புரிந்ததில்லை. அந்த டெக்னிக்கை என் அம்மாவிற்கு கற்றுக்கொடுத்தது ரேடியோவை உற்ற நண்பனாக நினைத்து வாழ்ந்த இன்னொரு சிவகாசிக்காரியாகத்தான் இருக்கும் என நிச்சயமாக நம்புகிறேன் நான்..
அம்மா காலை எழுந்தவுடன் தொடும் முதல் பொருள் ரேடியோ தான்.. நான் எவ்வளவு சீக்கிரம் கண் விழித்தாலும், எனக்கு முன் எழுந்திருத்து தங்கள் வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பார்கள் அம்மாவும் அவர் ரேடியோவும். நிகழ்ச்சிகள் காலை 5மணிக்கு மேல் தான் என்றாலும், 4.55க்கே அதன் “கொர்” சத்தத்தில் இருந்து கேட்க ஆரம்பித்துவிடுவார். ஆகாசவானியின் ‘ஆ’வை விட்டுவிட்டு வெறும் காசவானியில் இருந்து கேட்டால் கூட அன்றைய பொழுது முழுதாக முடிந்தது போல் இருக்காது அம்மாவுக்கு. அதனால் தான் கொர் சவுண்டில் கூட ஒரு 5நிமிடம் ஓடினாலும் பரவாயில்லை என்று அதனை கதறவிடுவார் காலையிலேயே. இரவு பல நேரங்களில் அதன் பாடல்களை கேட்டுக்கொண்டே அதற்கு ஒரு “குட் நைட்” கூட சொல்லாமல் நாங்கள் அனைவரும் தூங்கிப்போயிருந்தாலும் கூட, அது விழித்துக்கொண்டே இருக்கும் நாங்கள் குட் நைட் சொல்லும் வரை. அம்மாவோ நானோ அப்பாவோ ”என்ன சத்தம் அது?” என்று குழம்பி எழும் போது அது தன் “கொர்” சவுண்டோடு அழுது கொண்டிருக்கும் எங்கள் குட் நைட்டுக்கு ஏங்கி. அதன் காதை திருகி குட் நைட் சொன்னதும் அதன் சத்தம் நின்று சமத்தாக எங்களுடன் தூங்க ஆரம்பித்துவிடும்.
அம்மா ரேடியோவில் பாடல் கேட்பதை பார்க்கும் போதே எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக சந்தோசமாக இருக்கும். ஒரு பாடல் முடிந்ததும் அறிவிப்பு வரும் - “ஒலித்த பாடலை பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா” என்று. அந்த அறிவிப்பை அவர்கள் தொனியிலேயே அவர்கள் கூடவே அழகாக சொல்லுவார்.. அடுத்த அறிவிப்பு, - “இனி ஒலிக்க இருக்கும் பாடலை பாடுபவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி” என்றதும், அந்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும் முன்பே மிகச்சரியாக அதே பாடலை பாட ஆரம்பித்துவிடுவார். எனக்கு மிகுந்த வியப்பாக இருக்கும், வீட்டிலேயே உட்கார்ந்து தினமும் சமையலுக்கும், கெட்டு ஒட்டுவதற்கும் வாக்கப்பட்டு வந்த அம்மாவால் எப்படி ஒவ்வொரு பாடலையும், அதைப் பாடிய சினிமா பாடகர்களையும் சரியாக நினைவில் வைத்துக்கொண்டிருக்க முடிகிறது என்று. என்றாவது ஒரு நாள் அம்மா மாற்றி சொல்லிவிடுவார். மனோவிற்கு பதிலாக எஸ்.பி.பி என்றோ, ஏ.எம்.ராஜாவிற்கு பதிலாக பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றோ.. நான் ரேடியோக்காரன் தான் மாற்றி தப்பாக சொல்லுகிறான், அம்மா சொல்வது தான் சரி என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்வேன். அம்மாவிற்கு தெரியாத பழைய பாடல்களே இல்லை என்னும் அளவிற்கு அனைத்து பாடல்களையும் ரேடியோவுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடுவார். ரேடியோ நிகழ்ச்சி இல்லாத நேரங்களில் கூட தனக்கு தானே பாடல்கள் பாடி சந்தோசப்பட்டுக் கொண்டிருப்பார். நாங்கள் யாராவது அவர் பாடுவதை கவனிப்பது தெரிந்துவிட்டால், வெட்கமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு பாடுவதை டக்கென்று நிறுத்திவிடுவார். ஆனால் சில நிமிடங்களில் அவரையே அறியாமல் மீண்டும் பாட ஆரம்பித்திருப்பார்.
ஆனால் பாடகர்களை நன்றாக தெரிந்த என் அம்மாவிற்கு அதில் நடித்தவர்கள் யார் என்று கூட தெரியாது! தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டதில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது அவருக்கு? ரேடியோவில் வெறும் குரலோடு திருப்திப்பட்டுக்கொண்டு தன் கற்பனைகளால் ஜெய்சங்கரின் பாட்டுக்கு சிவாஜியை வைத்து உயிர் கொடுக்கும் என் அம்மாவிற்கு நிஜமான அந்த பாடலின் நாயகர்களைப்பற்றி கவலை இல்லை. அதனால் தான் இன்று வரை அவரை டிவி பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு பிடித்த பாடல்களை இப்போது டிவியில் பார்க்கும் போது லேசான ஆச்சரியத்தோடு “இது ரவிச்சந்திரன் பாட்டா? நான் ஜெமினி பாட்டுனே நெனச்சிட்டு இருந்தேன்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். ஆனாலும் அவர் விரும்பி டிவி பார்ப்பதில்லை. டிவியில் பழைய பாடல்கள் ஒலிக்கும் நேரங்களில் மட்டும் டிவியை ஓட விட்டு, அவர் தன் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார். கண்ணும் கையும் வேலையில் இருக்கும், காது மட்டும் தான் டிவியில் இருக்கும். டிவியையும் ஒரு ரேடியோ போல் தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் அம்மா.
பெரும்பாலும் காலை 9மணிக்கு பல டிவி சேனல்களில் பழைய பாடல்கள் தான். அது முடிந்ததும் டிவியை அணைத்துவிட்டு, இப்போதும் தன் good old friend ரேடியோவை கையில் எடுத்து அருகில் வைத்துக்கொண்டு, கால்களை நீட்டி, வீட்டு கதவின் நிலை பலகையில் சாய்ந்து தன் trademark நிலையில் அமர்ந்து, கெட்டு ஒட்டிக்கொண்டே பி.சுசிலாவோடு சேர்ந்து, “உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும், என்னை பாட சொன்னால் என்ன பாடத்தோன்றும்” என்று அழகாக பாடிக்கொண்டிருக்கிறார் அம்மா. ஆம் காலங்கள் மாறினாலும், ஓரளவு வசதி வாய்ப்பு வந்தாலும் அவரால் ரேடியோவையும் கெட்டு ஒட்டுவதையும் விட முடிவதில்லை. ஹா ஹா என் அப்பாவும் வழக்கம் போல் பேட்டரி வாங்கி வருவதில் சொதப்பாமல் இருப்பதில்லை இப்போதும்..