ஒரு காதல் வந்தது..

Monday, November 19, 2012

”டேய் தம்பி என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?” பதுங்குக்குழிக்குள் இருக்கும் ராணுவ வீரனை எதிரி நாட்டுக்காரன் கண்டுபிடித்துவிட்டதை போல் போர்வைக்குள் பதுங்கி எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்த என்னை என் அம்மா கையும் களவுமாக பிடித்துவிட்டார். “நைட்டு ஒன்ரைக்கு ஃபோன்ல என்னடா நோண்டிக்கிட்டு இருக்க? ஒனக்கு எத்தன தடவ சொன்னாலும் அறிவே வராதா?” என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். நான் அர்த்த ஜாமத்தில் செல்ஃபோனால் அவரிடம் மாட்டிக்கொள்வது இது முதல் முறையும் அல்ல, என் அம்மா வருத்தப்படுவதால் இது கடைசி முறையாகவும் ஆகிவிடாது. இதற்கு முன்னும் சில முறைகள் பின்னிரவில் ஃபோனில் பேசிக்கொண்டிருந்த போதும், பல முறைகள் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருந்த போதும் என்னை பிடித்து கண்டித்திருக்கிறார். வருத்தமும் பட்டிருக்கிறார். அந்த வருத்தத்தில் ஒரு வித பயம் அவர் கண்களில் தெரியும்.



என் அம்மாவின் பயத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பாக இருக்கும். பெண்களை பெற்றவர்களே தைரியமாக இருக்கும் இந்த காலத்தில், ஒரு ஆண் மகனின் தாய் இப்படி பயப்படலாமா? நான் அப்படி என்ன செய்துவிட்டேன்? எனக்கு சில பெண் தோழிகள் உண்டு. எப்போதும் அவர்களிடம் பேசிக்கொண்டோ, மெசேஜ் அனுப்பிக்கொண்டோ இருப்பேன். நண்பர்கள் அதை கடலை போடுவது, பொங்கல் கிண்டுவது என சிறப்புப்பெயரிட்டு அழைப்பார்கள். ஆனாலும் எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை. அம்மா சொல்லியே கேட்காதவன் நண்பர்கள் சொல்லியா சும்மா இருக்கப்போறேன்? அது என்னவென்று தெரியவில்லை, இந்த ஆம்பள பயலுக கிட்ட சொல்றத விட ஒரு விசயத்த பொம்பள பிள்ளைக கிட்ட சொன்னாத்தான் என் மனசுக்கு கொஞ்சம் சந்தோஷமா ஆறுதலா இருக்கு. அதனாலேயே பெண்களிடம் தான் எப்போதும் பேச்சு, ஆம் உங்கள் பாஷையில் கடலை தான்.


ஆண்களிடம் பேசுவதை விட பெண்களிடம் அதிக உரிமையோடு பேசுவேன். ’டீ’ போட்டு தான் அழைப்பேன். அப்போதெல்லாம் என் அம்மாவிற்கு பத்திக்கொண்டு வரும். “ஃபோன்ல எந்த பக்கி பேசுதுனு தெரில.. அவுக வீட்ல எல்லாம் பிள்ளைய கண்டிக்க மாட்டாகளோ என்னவோ?” என்று சத்தமாக என்னிடம் பேசுபவளுக்கு கேட்க வேண்டும் என்றே கத்துவார். பின்னே சும்மாவா? படித்துமுடித்துவிட்டு வேலைக்கும் போய், கையில் கொஞ்சம் காசும் வந்துவிட்ட மகன், கல்யாணத்திற்கு முன் ’பொறுப்பாக’ இல்லாமல் பெண்களிடம் இப்படி பேச ஆரம்பித்தால் எந்த தாய்க்கும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும்? நானும் சும்மா இருக்காமல், அம்மாவிடம் சில நேரங்களில், என் தோழிகள் சிலர் தங்கள் வாழ்க்கையில் படும் அவஸ்தைகளை சொல்வேன். “இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுப்பா. இந்த மாரி தான் பாவம் போல பேசி மயக்கிருவாளுக!” என்பார் பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு. எனக்கு என்ன சொல்ல என்று தெரியாமல் “எம்மா ஒங்களுக்கு பிடிச்ச பாட்டு” என்று அவர் கவனத்தை டிவியின் பக்கம் திருப்பிவிடுவேன்.




ஆனால் என் அம்மா நினைப்பது போல் இப்போது நான் எவளையோ காதலிக்கவெல்லாம் இல்லை. முன்பு, நான் நிறைய பேரை காதலித்திருக்கிறேன், சில பெண்கள் என்னிடம் காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் எல்லாத்துக்கே அல்பாயுசு தான். முதல் பள்ளிக்காதல் தான் அதிகபட்சமாக 6 மாதம் நீடித்தது . காதல் எல்லாம் நமக்கு சரி வராது என்று உணர்ந்து கொள்ளவே எனக்கு அத்தனை காதல்கள் தேவைப்பட்டன. அதனால் பெண்கள் எல்லாருமே இப்போது தோழி என்னும் எல்லை வரை தான் அனுமதி. ஆனாலும் வீட்டில் இதையெல்லாம் எப்படி புரியவைக்க முடியும்? பெண்ணிடம் பேசுகிறேன் என்று தெரிந்தாலே ஒரே கூப்பாடு தான்.. அப்பா ஏனோ இதிலெல்லாம் தலையிடுவது இல்லை. ‘சரி என்னால் முடியாததை என் மகன் செய்யட்டுமே’ என்கிற உயர்ந்த எண்ணமோ? ஆனாலும் அம்மா, எனக்கு ஃபோன் வரும் போதெல்லாம் பொங்கி எழுந்துவிடுவார். இப்படி என் வாழ்க்கை சந்தேகத்தின் கோர பிடிக்குள் சிக்கிய சாமியார் மாதிரி போய்க்கொண்டிருக்கையில் தான் அந்த எஸ்.எம்.எஸ் எனக்கு வந்தது..



எங்கள் பக்கத்து வீட்டு ஸ்டெல்லாவிடம் இருந்துவந்திருந்தது அந்த குறுஞ்செய்தி. என் அம்மாவுக்கென தனியாக மொபைல் ஃபோன் வாங்கும் வரை, அவர் சம்பந்தப்பட்ட எண்கள் எல்லாம் என் ஃபோனில் தான் இருக்கும். அப்படி இன்று வரை என் ஃபோனிலேயெ இருக்கும் நம்பர்களில் ஒன்று தான் ஸ்டெல்லாவினுடையது. பக்கத்து வீடு என்பதால் அவளிடம் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. தோழி என்று சொல்ல முடியாது. ஆனால் நாங்கள் பேசிக்கொள்வதை இருவர் வீட்டிலும் இது வரை ஒன்றும் சொன்னதில்லை. என் அம்மா என்னை சந்தேகப்படாத ஒரு பெண்ணின் பழக்கம்.

”ஹாய் ப்ரகாஷ், எப்படி இருக்க? உன்ட்ட இன்னைக்கு பேச முடியுமா? - ஸ்டெல்லா” - அவள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இப்படி இருந்தது. என்ன புதுசா பேசுறதுக்கு எல்லாம் மொபைல்ல பெர்மிஷன் கேக்குறா, என யோசித்துக்கொண்டே “Ok but when?" என்று பதில் அனுப்பினேன். அவளிடம் இருந்தும் உடனே பதில் வந்தது, “This evening by 5 at velayutham rastha?"...

மாலை ஐந்து மணிக்கு எங்கள் ஊரில் ஆள் புழக்கம் இல்லாத அந்த சாலையில் என் பைக்கை நிறுத்திவிட்டு நான் காத்திருந்தேன். அவள் நான் வந்த அரை மணி நேரம் கழித்து வந்தாள். என் அருகில் மெதுவாக தன் சைக்கிளை நிறுத்தினாள். ஸ்டெல்லா - ஒரு கட்டுக்கோப்பான ப்ரொடெஸ்டெண்ட் குடும்பத்தை சேர்ந்தவள். நீளமான எண்ணெய் வடியும் கூந்தல், காதில் வளையம், பொட்டு வைக்காத நீண்ட புருவம் கொண்ட நெற்றி, கூரான மூக்கு. இப்போது தான் அவளை கவனிக்கிறேன், என்னை வசீகரிக்கும் இத்தனையும் இருந்தும் இவளை ஏன் இதுவரை கவனித்ததே இல்லையென்று. எப்போதும் போல் இன்றும் ஒரு ப்ளைன் சுடிதார் அணிந்து வந்திருந்தாள். இருவரும் கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம், என்ன பேசுவது என்று தெரியாமல். அவள் முகத்தில் பயமா பதட்டமா என்று கண்டுபிடிக்க முடியாத ஒரு வித உணர்ச்சி இருந்தது.

முகத்தை நார்மலாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து, என்னிடம் “நீ சீக்கிரமாவே வந்துட்டியா?” பேச்சை இப்படி ஆரம்பித்தாள்.

“இல்ல நீ தான் லேட்டா வந்திருக்க”

“சாரி சாரி, தண்ணி வந்துச்சி வீட்ல, பிடிச்சி வச்சிட்டு வர லேட் ஆகிருச்சி”

“சரி என்னமோ பேசணும்னு சொன்னியே என்ன?”

“ஒன்னும் இல்ல சும்மா உன்ட்ட பேசணும் போல இருந்துச்சி, அதான். சாந்தரம் வீட்ல பேசலாமா?”

எனக்கு கோவம் வந்துவிட்டது. “என்னது? அர மந்நேரம் இங்க நிக்கிற நான் என்ன லூசா?”

“ஏ ஏ இப்ப ஏன் கோவப்படுற?”

“சரி என்ன பேசணும் சொல்லு”

“இல்ல நீ கோவமா பேசுற. நான் பெறகு சொல்றேன். சரி எனக்கு லேட்டாகுது, நான் கெளம்பட்டுமா?”

போய்த்தொலை என்பது போல் விட்டுவிட்டேன்.. நான் அங்கே இங்கே சுற்றிவிட்டு வீட்டுக்கு  வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்ததும் ஒரு கை ரிமோட்டை எடுத்தது, இன்னொரு கை ஃபோனை எடுத்தது. அதில் ஸ்டெல்லாவிடம் இருந்து மீண்டும் ஒரு எஸ்.எம்.எஸ். “நான் ஒன்னு சொன்னா கோச்சுக்கிட கூடாது. எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு, ப்ரகாஷ்”. எனக்கு அந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் என்ன சொல்லவென்று தெரியவில்லை. நான் பதில் எதுவும் அனுப்பவில்லை. அவளிடம் இருந்து 10நிமிடங்களில் இன்னொரு எஸ்.எம்.எஸ். “ஹேய் என்ன ஆச்சு? சாரிப்பா..” நான் அதற்கும் பதில் அனுப்பவில்லை. அவளிடம் இருந்து சாரி கேட்டும் தன்னிலை விளக்கும் கொடுத்தும் அடுத்தடுத்து பல எஸ்.எம்.எஸ்.கள் வந்தன. நான் எதையும் சட்டை செய்யவில்லை. அவளிடம் இருந்து கடைசியாக இப்படி வந்தது இரு எஸ்.எம்.எஸ் - “ப்ளீஸ் அட்லீஸ்ட் நாம ப்ரெண்ட்ஸாவாச்சும் இருப்போம்” என்று. நான் அதையும் மதிக்கவில்லை.


அவளுக்கு பதில் அனுப்ப நான் விரும்பவில்லை என்பதை விட பயந்தேன் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஏன் பயந்தேன் என தெரியவில்லை. என்னை யாரென்று அறியாத பெற்றவர்களின் பெண்களுடன் காதலாகவும் நட்பாகவும் தைரியமாக பேசிய எனக்கு, என்னை நம்பிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணிடம் காதல் எண்ணத்துடன் பேச தைரியம் இல்லை. ஏன் அப்படி பயப்படுகிறேன் என்றும் புரியவில்லை. ஆனால் அன்றில் இருந்து நான் ஸ்டெல்லாவிடம் பேசுவதே இல்லை.

அவளும் தெருவில் என்னை கடக்கும் போது என்னை கண்டுகொள்வது கூட இல்லை. எனக்கு எல்லாமே மனதில் நெருடலாகவும், ஒரு வித குற்ற உணர்வுடனும் இருந்தன ’பாவம், நம் மேல் ஆசையாக இருந்த பெண்ணை இப்படி கஷ்டப்படுத்துகிறோமே’ என்று. சில நேரங்களில் ஸ்டெல்லாவிடம் “நானும் ஒன்ன லவ் பண்றேன்”னு சொல்லிரலாமானு யோசிப்பேன். மீண்டும் அந்த பயம் மனதை தொற்றிக்கொள்ளும். ஆனால் அவள் மீண்டும் ஒரு முறை என்னிடம் பேசினால் கண்டிப்பாக காதலை ஒத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.



ஒரு முன்னிரவு வேளையில் ஊரெல்லாம் சுற்றிவிட்டு நான் வீட்டுக்கு வந்த போது, ஸ்டெல்லாவின் வீட்டு வாசலில் புதிதாக ரெண்டு ட்யூப் லைட்டுகள் எரிந்தன. மனிதனுக்கு மனிதன் சொந்தக்காரனாக வந்திருப்பது போல், நாற்காலிக்கும் பக்கத்து வீட்டில் இருந்து சில நாற்காலி சொந்தங்கள் வந்திருந்தன. என்னவென்று மெதுவாக நோட்டம் விட்டுக்கொண்டே எங்கள் வீட்டிற்குள் சென்றேன். அம்மா என்னிடம் ஒரு மிட்டாயை கொடுத்து “நம்ம ஸ்டெல்லாக்கு மாப்ள பாத்திருக்காங்க. கல்யாணத்துக்கும் இன்னைக்கே தேதி குறிச்சுருவாங்கன்னு நெனைக்குறேன்” என்றார் சிரித்த முகத்துடன். நான் என் ஃபோனை எடுத்து பார்த்தேன், எனக்கு ஏதாவது எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறாளா என்று.. ஹிம் ஒன்றும் இல்லை. வழக்கமா நான் ஃபோனை எடுத்தாலே கத்தும் அம்மா இப்போது எதுவுமே சொல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மா இப்போது  சில நாட்களாக அப்படித்தான், நான் ஃபோனில் பேசினால் முன்பு போல் கோவப்படுவதில்லை.



எனக்கு ஸ்டெல்லா எப்படி இதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாள் என்று ஒரே யோசனையாக இருந்தது.  அவள் ஒரு வேளை வீட்டின் வற்புறுத்தலால் வேறு வழியில்லாமல் இப்படி செய்திருப்பாளோ என்கிற எண்ணம் வந்தது. இரவு வரும் வரை காத்திருந்தேன். எல்லோரும் தூங்கிய பின் என் பதுங்குக்குழி போர்வையினுள் சென்று ஸ்டெல்லாவிற்கு ஃபோன் அடித்தேன். கால் வெயிட்டிங் வந்தது. இரண்டு நிமிடங்களில் அவளே கூப்பிட்டாள். ஃபோன் ஒலிக்கும் சத்தம் கேட்டு அம்மா கண் விழித்து என்னை பார்த்தாலும், அமைதியாக “வேமா பேசிட்டு வாப்பா” என்றார். நான் ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

“சொல்லு ப்ரகாஷ்”

“என்ன ஸ்டெல்லா, இப்டி பண்ணிட்ட?”

“எப்டி பண்ணிட்டேன்?”

“என்ன லவ் பண்றேன்னு சொல்லிட்டு, இப்ப இன்னொருத்தர கல்யாணம் பண்ணப்போறியாமே?”

“ஏ என்ன சொல்ற நீ?”

“நீ யாருக்கு பயப்படுற ஸ்டெல்லா? நான் இருக்கேன். கவல படாத. நான் உன்ன நல்லா பாத்துக்குறேன்”

“லூசு மாரி பேசாத. நான் சொல்றத கேளு”

“நீ அன்னைக்கு ப்ரபோஸ் பண்ணப்ப நான் ஒத்துக்கல, ஆனா இன்னைக்கு நான் ஒத்துக்குறேன் ஸ்டெல்லா. நாளைக்கு எங்கம்மாட்ட சொல்லி ஒங்க வீட்ல பேச சொல்றேன்”

“ஏ முண்டம், நான் எப்பவுமே ஒன்ன லவ் பண்ணல” - ஆணித்தரமாக அதட்டலுடன் சொன்னாள்.

“என்னது?” - இந்த வாட்டியும் பல்ப்பா என்பது போல் நான் கேட்டேன்.

“ஆமா. ஒங்கம்மா தான் உன் கிட்ட அப்டி பேச சொன்னாங்க”

“அவங்க எதுக்கு அப்டி சொன்னாங்க?”

“நீ நெறைய பொண்ணுங்க கிட்ட பழகுறது அவங்களுக்கு பயமாவும் மனசுக்கு கஷ்டமாவும் இருந்தது.”

“சரி அதுக்கு என்ன இப்ப?”

“அதான் என்ன சும்மா அப்டி சொல்ல சொன்னாங்க.”

“சும்மாவா?”

“ஆமா. ஒரு வேள நீ நான் சொன்னதுக்கு ‘சரி’னு சொல்லிருந்தா நீ எல்லா பொண்ணுங்க கிட்டயும் அப்படித்தான் பழகுறனு முடிவு கட்டிருப்பாங்க. ஆனா நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னதுல இருந்து, நீ என்கிட்ட பேசுறதே இல்ல, ஒதுங்கி போறனு சொன்னேன். ஒங்க அம்மாவுக்கு ஒரே சந்தோசம். நீ எந்த பொண்ணுங்க கிட்டயும் தப்பா பேச மாட்ட, ஃப்ரெண்ட்லியா தான் பழகுறனு”

“நான் சொன்னப்பலாம் நம்பாத எங்கம்மா உன்ட்ட கேட்டாங்களாக்கும்?”

“ஆமா.. ஒன்ன பத்தி நல்ல விதமா சொன்ன என்ட்டையே தைரியமா என் நிச்சயதார்த்தத்தன்னைக்கே லவ்வ சொல்றீல நீயி? இரு இரு ஓங்க அம்மாட்ட சொல்றேன்” என்று என் பதிலுக்கு காத்திராமல் கோவமாக ஃபோனை வைத்தாள்.

இருக்கும் குழப்பத்தில் நான் என்ன ஏதுவென்று சுதாரிப்பதற்குள், என் அம்மா வெளியில் வந்து “என்னப்பா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்க? பனி வேற விழுது, வா தூங்கலாம். சளி பிடிச்சிறப்போது. காலேல பேசு”

நான் வீட்டிற்குள் திரும்பவும் ஸ்டெல்லா வீட்டு வராந்தாவில் டியூப் லைட்டு எரியவும் சரியாக இருந்தது. எரிந்தது ஸ்டெல்லா வீட்டு ட்யூப் லைட் மட்டும் அல்ல.. சில நிமிடங்களில் என் அம்மா சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த காட்டுக்கத்தலை ஆரம்பித்துவிட்டார். இந்த சண்டாளி ஸ்டெல்லா தான் போட்டுக்கொடுத்து விட்டாள். அன்று நான் கடாசிய ஃபோன் தான்.. இன்னைக்கு வரை எடுக்கவே இல்லை..

துப்பாக்கி - குறி தப்பவில்லை..

Wednesday, November 14, 2012

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டன நான் விஜய்யை பெரிய திரையில் பார்த்து.. கடைசியாக பார்த்தது “சச்சின்” (சந்திரமுகி டிக்கெட் கிடைக்காத காரணத்தால்) என நினைக்கிறேன்.. விஜய் நடித்த ஐம்பத்தி சொச்சம் படங்களில் எனக்கு பிடித்தவை என்றால் மொத்தமே ஐந்து படங்கள் தான். அந்த அளவுக்கு நான் ஒரு விஜய் படங்களை ஸ்கேலில் கோடு போட்டு பிரித்தெடுத்து பார்ப்பவன். நேற்று தீபாவளிக்கு "துப்பாக்கி” படம் வந்து மதியம் இரண்டு மணிக்கே நண்பர்கள் ஆஹா ஓஹோவென படத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் ரசிகர்கள் முதற்கொண்டு அப்படி பேசியது தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி, படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்கலாமே என இன்று போனேன்.. படம் என்னை கவர்ந்ததா, எப்படி இருந்தது என்பதை எனக்கு தெரிந்த, புரிந்த, நான் அறிந்த வரையில் சொல்கிறேன். 



மிலிட்டரியில் இருந்து விடுமுறைக்கு வரும் விஜய், லீவில் பொழுது போகாமல், நாட்டை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிவிட்டு மீண்டும் மிலிட்டரி ட்ரைனிங்கிற்கு செல்வதே கதை. நடுவே குடும்பம், காதல் என்று ஜனரஞ்சக அம்சங்களும் உண்டு. விஜய்யை காமித்துவிட்டு ஒரு இண்ட்ரோ பாடல் வைத்தவுடன், “அய்யோ பயபுள்ளைக ’நல்லா இருக்கு’னு படத்த பத்தி வெளிய புரளிய கெளப்புறாய்ங்களோ?”னு மைல்டா டவுட் ஆனேன். ஆனால் அந்த இண்ட்ரோ காட்சி மட்டும் தான் விஜய்க்காக.. மற்ற அனைத்து காட்சிகளிலுமே கதைக்காக தான் விஜய்!!!!



இந்த இடத்தில் நான் விஜய்யை பற்றி சொல்லியே ஆக வேண்டும். தன்னுடைய வழக்கமான நடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, தீர்க்கமான பார்வை, புத்திசாலித்தனமான பேச்சு & செயல், வேகமான செயல்பாடு என ஒரு ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோ போல், ஆனால் முன் வரிசை ரசிகனையும் விசில் அடிக்க வைத்து பின் வரிசை ஏ.சி.ரூம் ஆட்களையும் கை தட்ட வைத்துவிட்டார். லோக்கல் SPயை முடித்துவிட்டு, வீட்டில் இருக்கும் தீவிரவாதியிடம் அவர் ”கதை முடிஞ்சிருச்சி” என்று சைகையால் சொல்லும் இடம் க்ளாஸ். அதே போல் தங்கையை மீட்கும் இடம், “ஏற்கனவே நீ ரொம்ப செலவு பண்ணிட்ட, ஒன்ட்ட வேற ஒன்னும் கேக்க மாட்டேன்” என்று முதல் டேட்டிங்கில் காதலியிடம் அப்ராணியாக நடிக்கும் இடம், அந்த க்ளைமேக்ஸ் ஃபைட் என்று கிடைத்த பாலில் எல்லாம் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் விளாசிவிட்டார் விஜய். க்ளைமேக்ஸிற்கு முன் குத்து பாடல் இல்லாமல் ஒரு டூயட் மெலடி பாடல் வரும் போதே தெரிந்து விட்டது, விஜய் மாறிவிட்டார் என்பது.



ஏ.ஆர்.முருகதாஸ் சென்ற வார ஆனந்த விகடன் பேட்டியில் “என் படத்தின் திரைக்கதை மிகவும் இறுக்கமாக, தேவையற்ற காட்சிகள் இல்லாமல் இருக்கும்” என்றார். அவரின் ஏழாம் அறிவு பார்த்து நான் நொந்தது தான் ஞாபகம் வந்தது அந்த பேட்டி படிக்கும் போது.. ஆனால் அவர் பேட்டிக்கு ஞாயம் கற்பித்துவிட்டது இந்த படம். அவரும் தன் வழக்கமான, நாட்டை காப்பாற்றும் “டீம் வொர்க்” கான்செப்டால் ஹீரோ ஜெயிக்கும் கதையை தான் சொல்லியிருக்கிறார். கொஞ்சம் தப்பினாலும் வேலாயுதம் போல் ஆகிவிடும் கதையில், நேர்த்தியான திரைக்கதையையும், விறுவிறுப்பான நம்பும்படியான காட்சிகளையும், உண்மையான வசனங்களிலும் பளிச்சிடுகிறார். ஒரு டைரக்டராக அவர் ஜெயித்திருக்கும் இடம், ஹீரோவும் வில்லனும் அறிவார்த்தமாக பிளான் போட்டு அதை செயல்படுத்துவதை குழப்பாமல் காட்டியிருப்பதில் தான். ஆனால் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியில் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக்கில் விஜய் தப்பிப்பது போல் எடுத்திருந்தாலும் “மாஸ் ஹீரோ படமாகிவிட்டால் க்ளைமேக்ஸில் வேறு என்ன தான் செய்ய முடியும்?” என நாமும் பொறுத்துக்கொள்ளலாம். கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் போன்றவர்களை தொடர்ந்து இவரும் ஒரு சீனுக்கு வந்து போகிறார். 




ஒரு ஆக்‌ஷன் படத்தில் ஹீரோயின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறார் காஜல் அகர்வால். மிதமான கவர்ச்சி, அரை லூசுத்தனமான கேரக்டர், சப்பை காரணத்துக்காக ஹீரோவை லவ்வுவது என்று வந்து போகிறார். விஜய்யை காட்டும் போது வந்த விசில் சத்தத்தில் பாதி அளவு இவரை காமிக்கும் போதும் வந்தது. ஆனால் சச்சினில் ஜெனிலியாவை பார்த்து விஜய் ”இவா கிட்டலாம் என்ன இருக்குனு?” என்று சொன்னது தான் ஞாபகம் வந்தது. அந்த பெரிய பற்களும், பல் தேய்த்தாரா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியாத வாயும் என்னை இவரை ரசிக்க விடுவதில்லை. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை என்றாலும் இவரை பலர் ரசிப்பதால் இவர் வரும் காட்சிகள் கொஞ்சம் பழசாக வழமையானதாக இருந்தாலும், படத்தின் வேகத்தை அது பாதிப்பதில்லை.



காமெடிக்கு என்று பெரிதாக திரைக்கதையில் வாய்ப்பில்லை என்றாலும், சத்யனும் ஜெயராமும் ஓரளவு சிரிக்க வைக்கின்றனர். “பெட்ரமேக்ஸ் லைட்டே தான் வேணுமா?” என்று சத்யன் கேட்கும் இடம் சிரிப்பலை. ஜெயராமும் “ ஜெகதீஷ் நீ எங்கள சந்தேக படாத, என் சுண்டு விரல் கூட அவ மேல படல” என்று சிரிப்பூட்டுகிறார். ஜெயராம் ஏகனில் செய்த மாதிரி இந்த படத்திலும் கொஞ்சம் கழண்ட மாதிரி தான் நடித்திருக்கிறார். அவரின் பால் வடியும் முகத்திற்கு அதுவும் பொருந்திப்போகிறது.”பில்லா 2” வில்லன் தான் இதிலும் வில்லன். ஹீரோவும் வில்லனும் கடைசி காட்சியில் தான் பார்க்கிறார்கள். ஆனாலும் இருவரின் பாத்திரப்படைப்பும் அந்த கடைசி காட்சியில் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.



விஜய்யை தவிர படத்தில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்கள் இருவர். சந்தோஷ் சிவன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கேச்சா.. சந்தோஷ் சிவனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பன்னிரெண்டு பேரை போட்டுத்தள்ளும் காட்சியிலும், மாட்டிக்கொண்ட தங்கையை விடுவிக்கும் காட்சியிலும் இருவரும் சேர்ந்து உழைத்திருப்பது நம் கைதட்டல்களில் புரிகிறது. விஜய் அடித்தால் 10 பேர் கூட பறப்பார்கள். ஆனால் அதையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, ஜெகதீஷ் என்னும் மிலிட்டரிக்காரன் சண்டை போட்டால் எப்படி இருக்குமோ அப்படி எடுத்திருக்கிறார்கள். அங்கங்கே விஜய்யின் மேனரிஸங்களும் இருக்கும் சண்டை காட்சியில். 



தன் பாடல்களை மட்டுமே தான் காப்பியடித்த காலமெல்லாம் போய், இப்போது தன் பின்னணி இசையையும் தானே காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ். வேட்டையாடு விளையாடு, மின்னலே என்று தான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையை முறையே சேசிங்க் & காதல் காட்சிகளில் கோர்த்து விட்டுவிட்டார். பாடல்களிலும் கோட்டை விட்டுவிட்டார். பாடல்கள் சரியான் ஸ்பீட் ப்ரேக்கர்கள் என்றாலும், இது போன்ற திரைக்கதையில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பாடல்கள் வேண்டும்.. ஆனால் இவ்வளவு மொக்கையான பாடல்கள் தேவையில்லை.




இந்த படத்தில் நான் எதைப்பற்றி எழுத்த நினைத்தாலும் விஜய் தான் மனதை முழுதாக ஆக்கிரமித்துக்கொள்கிறார். தன் தங்கையையே தீவிரவாதிகளிடம் அனுப்பி, தைரியமாக மீட்கும் காட்சியிலும், சத்யனிடம் “என் குடும்பத்துல என் அளவுக்கு யாரும் விவரம் கிடையாது. நீ அடிக்கடி அவங்கள போயி பாத்துக்கோ” என்று வருந்தும் காட்சியிலும், இறுதியில் ”இப்போ கை விலங்க கழட்டிட்டு அட்றா” என்று திமிராக சொல்லும் காட்சியிலும் - மாஸ்..


விஜய் நீங்கள் இது போன்ற படங்களில், நடியுங்கள், ஏழு வருடம் கழித்தென்ன, உங்கள் ஒவ்வொரு படத்தையும் நான் ரசிப்பேன். விஜய்யிடம் இருந்து இது போன்ற படங்களை தான் எதிர்பார்க்கிறோம். அஜித்தின் அறிவிக்கப்படாத கொ.ப.செ.வான என்னையே பல காட்சிகளில் கை தட்ட வைத்துவிட்டார். மீண்டும் பன்ச் டயலாக், குத்து பாட்டு, மொக்கை கதை என போகாமல் இருந்தால் நான் தொடர்ந்து விஜய்யை ரசிப்பேன்.. :-) துப்பாக்கி - குறி தப்பவில்லை..

ஏழரை சனி..

Saturday, November 10, 2012

”அய்யா, சுப்ரமணிய எங்க சார் கூட்டிட்டு வர சொன்னாருயா” - மதிய சாப்பாட்டு இடைவேளைக்கு முந்தைய வகுப்பில், பதினொன்னு D செக்‌ஷன் பய ஒருத்தன் வந்து எங்க தமிழ் வாத்தியார் கிட்ட சொன்னான். பத்தாப்பில் சரியாக படிக்காத ஆடுகாளி மாணவர்கள் படிக்கும் மூன்றாம் குரூப் வகுப்பு தான் 11D. அங்கிருந்து ஃபர்ஸ்ட் குரூப் 11A வகுப்பில் ஒரு மாணவனை தேடி ஒருவன் வந்திருக்கிறான் என்றவுடன் வகுப்பே அமைதியாக அவனை நோக்கியது.

“இங்க ரெண்டு சுப்ரமணி இருக்கான்யா.. ஒனக்கு யாரு வேணும்?”  புன்னைகை மாறாத முகத்துடன் அவனை பார்த்து கேட்டார் ஐயா. எனக்கு லேசாக பயம் கொடுக்க ஆரம்பித்தது. அந்த ரெண்டு சுப்ரமணில நானும் ஒருத்தன். குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க தான செய்யும்?

“செந்திலு ஃப்ரண்டு சுப்ரமணிய்யா” - அது நானே தான். இடக்கரடக்கல் காரணமாக உண்மையை சொல்லாமல் செந்தில பெயரை சொல்லி என் மானத்தை காப்பாற்றினான் அவன். தமிழய்யா அடுத்த கேள்வி அவனை கேட்கும் முன் நானே எழுந்து விட்டேன்.

“நீ தானா அது?” பதினொன்னு A காரனுக்கு, D காரனோட என்ன சம்பந்தம் என்கிற ஒரு வித சந்தேகத்தனமான பார்வையுடன் என்னை அவனுடன் அனுப்பி வைத்தார்.


சிவகாசியிலேயே பெரிய பள்ளியான எங்கள் பள்ளியின் பெரிய கட்டிடம் அது. எங்கள் வகுப்பு அந்த கட்டிடத்தின் கீழே முதலாவதாக இருக்கும்.. 11D முதல் மாடியில் நடுவில் இருக்கும்.. நான் ஒரு வித பதட்டத்துடன் அவனோடு படி ஏறினேன். அவன் என்னை நக்கலாக பார்த்து கேட்டான், “நீ தான் வசந்திய லவ் பண்றியா?”

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.. சவ்வு மிட்டாய்க்கு (11 D ஆசிரியர்)  எல்லாமே தெரிஞ்சு போச்சா என்று நினைக்கும் போதே கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. கண்கள் அடைத்து இருட்டாக தெரிந்தது. “ஒங்க சாருக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சா?” அழுவது போன்ற குரலில் அவனிடம் கேட்டேன்.


“ஆமா.. நீ சாந்திக்கும் செந்திலுக்கும் லவ் லெட்டர் குடுத்தது, சாந்தி தங்கச்சி வசந்திய அந்த கேப்ல லவ் பண்ணதுனு எல்லாமே எங்க சாருக்கு தெரியும்” என்று சிரித்த முகத்துடன் ஏதோ பசித்தவன் பிரியாணியை பார்த்தது போல் முகத்தை சந்தோசமாக வைத்துக்கொண்டு சொன்னான். எனக்கு ஓங்கி அவனை அறைய வேண்டும் போல் இருந்தது.. ஆனால் பதிலுக்கு அவன் அடித்தால்? ஆள் பார்ப்பதற்கு எருமைக்கெடா போல் இருந்தான். எத்தனை வருசம் ஃபெயில் ஆகியிருப்பான் என்று தெரியவில்லை. இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்தால் அவன் மகனோடு ஒரே வகுப்பில் படித்தாலும் படிப்பான். இப்ப அவன் பயல பத்தி என்ன யோசனை? சவ்வு மிட்டாய் கிட்ட என்ன சொல்றது? எப்படி தப்பிப்பது என யோசித்துக்கொண்டே நடந்தேன்.

இங்கே ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.. நானும் வசந்தியும் பக்கத்து வீடு. எனக்கு அவளை பார்க்கும் போதும், பேசும் போதும் மிகவும் பிடித்திருந்தது. அவளுக்கு சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வாசிக்கத்தெரியாது. வரலாறு அவளுக்கு வராதலாறு. கணக்கு விடை கண்டுபிடித்துவிடுவாள், ஆனால் தப்பான விடையாக இருக்கும். தமிழில் லாரியை விட்டு ஏற்றுவாள். அப்படிப்பட்டவள் என்னிடம் தான் சந்தேகம் கேட்பாள். போதாதா? நான் பாடம் சொல்லிக்கொடுக்கும் சாக்கில் அவளிடம் அறிவாளி போல் சீன் போட்டு நூல் விட்டுக்கொண்டிருப்பேன். அவளுடைய அக்கா தான் சாந்தி. எங்கள் பள்ளியில் பாதி பேர் சாந்தியின் பின்னால் சுற்றிக்கொண்டிருந்தார்கள். எனக்கென்னமோ சாந்தியை விட வசந்தி தான் பிடித்திருந்தது. ஒரு வேளை காம்ப்படிசன் கம்மியாக இருந்ததால் வசந்தியை பின் தொடர்ந்தேனோ என்கிற கேள்விக்கு இப்போது வரை என்னிடம் பதிலில்லை.

சாந்தியை பின் தொடர்ந்த பலரில் ஒருவன் செந்தில். ஏழெட்டு முறை ஃபெயிலாகி, ஒன்றிரண்டு முறை ஆசிரியரை மிரட்டி பதினொன்றாம் வகுப்பிற்கு வந்துவிட்டவன் அவன். அவன் என்னுடன் பத்தாம் வகுப்பில் ஒன்றாக படித்தவன். பதினொன்றில் தன் இனமான D பிரிவிற்கு சென்று, ஜோதியோடு இரண்டற கலந்துவிட்டவன். ஒரு மழை பெய்து முடித்த மாலைப்பொழுதில் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டிருக்கும் போது என் பக்கத்தில் வந்தான் செந்தில். நன்றாக வளர்ந்தவன். நான் அவனின் நெஞ்சு உயரத்திற்கு தான் இருந்தேன். என்னிடம் ஒரு மடித்து வைத்த பேப்பரை எடுத்து நீட்டினான். அண்ணாந்து அவன் முகத்தை பார்க்க முயற்சி செய்தேன். அது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்தது. 

“என்ன இது?”

“லெட்டர்டா.. உங்க வீட்டுக்கு பக்கத்துல தான சாந்தி இருக்கா? அவா கிட்ட கொடுத்திரு” என்று சொல்லி அந்த லெட்டரை என் சட்டை பையில் போட்டான். என் பதிலுக்கு எதிர்பாராமல் ”ஒழுங்கு மரியாதையா குடுத்துட்டு நாளைக்கு என்னனு சொல்லு” என்று கிளம்பிவிட்டான். இவனுக்கெல்லாம் எப்படி சாந்திய லவ் பண்ணனும்னு தோனுது? படிப்பு வராது, ரவுடி மாதிரி இருக்கான். அவா அழகுக்கு இவனயெல்லாம் கண்டுக்கிடவே மாட்டா. எப்படியும் லெட்டரை கிழிக்கத்தானே போகிறாள், அதற்கு முன் நாம் படித்துவிடுவோம் என்று வாசித்தால் ஒரே எழுத்துப்பிழை. கருமம் என்று மடித்துவைத்து விட்டு அவளிடம் எப்படி கொடுப்பது என யோசித்தேன்.

அன்று என் வீட்டுக்கு சந்தேகம் கேட்க வந்த வசந்தியிடம் இதை மெதுவாக தயங்கி தயங்கி சொன்னேன். அவள் சொன்ன பதில் என்னை தூக்கி போட்டது. “எங்க அக்காவும் செந்தில் கிட்ட ரொம்ப நாளா பேச முடியலையேன்னு வருத்தமா தான் இருந்தா. நல்ல வேள உன் மூலமா செந்தில் லெட்டர் குடுத்து விட்டுட்டாரு. எங்க அக்கா ரொம்ப சந்தோசப்படுவா” என்றாள். பள்ளியையே பின்னால் அலைய வைக்கும் சாந்தி, போயும் போயும் செந்திலை லவ் பண்ணுறாளா? நினைத்துப்பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவளிடம் லெட்டரை கொடுத்தேன். அவள் தன் அக்காவிடமிருந்து இன்னொரு பதில் லெட்டரை கொண்டு வந்தாள். மறுநாள் அதை செந்திலிடம் கொடுத்தேன். அவன் என்னை தன் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக்கொண்டான்.

இப்படியே கொஞ்ச நாட்களாக அவன் லெட்டரை அவளிடம் கொடுப்பதும், அவள் தரும் பதில் லெட்டரை அவனிடம் கொடுப்பது என்றே அந்த காதலுக்கு தூதாக இருந்தேன். தூது என்ன தூது? கிட்டத்தட்ட மாமா வேலை. ஆமாம் அப்படித்தான் என் நண்பர்களும் என்னை கிண்டல் செய்தனர். செந்திலிடம் நான் வசந்தியை காதலிப்பதை சொன்னேன். அவன் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி, “என்ன மாதிரி உனக்கு கஷ்டமாலாம் இருக்காது, நீங்க ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து வீடு. சீக்கிரம் ஓக்கே ஆகிரும்” என்று உசுப்பேற்றினான். மறுநாள் அவன் நண்பர்கள் எல்லோரும் பள்ளிக்கே தெரிய வைத்துவிட்டார்கள் என் காதலை. எவனை பார்த்தாலும் “சாந்தி தங்கச்சிய லவ் பண்றியா? சாந்தி தங்கச்சிய லவ் பண்றியா?”னு கேக்க ஆரம்பிச்சுட்டய்ங்க.

இப்படி லேசான பயத்துடன் ஒரு வித த்ரில்லான மகிழ்ச்சியை கொடுக்கும் பள்ளியில் பரப்பப்பட்ட காதலும், இன்னொரு காதலுக்கு லெட்டர் கொடுப்பதும் தொடர்ந்தது. என் பிறந்த நாள் வந்தது. செந்திலுக்கு மிட்டாய் கொடுக்கலாம் என்று தேடினால் ஆளைக் காணோம். மாலையில் அவன் நண்பர்களிடம் விசாரித்த போது ஒருவன் சொன்னான், “நீ இன்னைக்கு குடுத்த லெட்டர் சவ்வு மிட்டாய் கிட்ட மாட்டிருச்சிடா. அடி பின்னிட்டாரு. மத்தியானத்துல இருந்து அவன் ஸ்கூலுக்கு வரல” என்றான். எனக்கு லேசாக பயம் வந்தது. ’நாமளும் மாட்டிக்கிடுவோமோ?’
‘சே சே இல்ல, அவரு லெட்டர தான பாத்தாரு? அத நாம தான் குடுத்தோம்னு அவருக்கு எப்படி தெரியும்?’
‘ஒரு வேள வசந்தி கிட்டயோ சாந்தி கிட்டயோ கேட்டுட்டா? இல்ல செந்தில் ஃப்ரண்டு எவனாவது போட்டுக்கொடுத்துட்டா?’ இவ்வாறு பலவாறான சந்தேகங்களுடன் என் பிறந்த நாள் கனமான பயத்துடன் முடிவடைந்தது. இன்று என் பிறந்த நாளுக்கு அடுத்த நாளில் இதோ சவ்வு மிட்டாயை பார்க்க இதோ இந்த எருமைக்கெடாவுடன் வெட்டப்படும் ஆடு போல் போய்க்கொண்டிருக்கிறேன்..



வகுப்புக்குள் அந்த எருமைக்கெடா தான் முதலில் நிழைந்தது. ஏதோ எதிரி நாட்டு மன்னனை இழுத்து வந்த பெருமையுடன் நான் வரும் திசையை கை காட்டி சொன்னான், “சார் அந்த சுப்ரமணி வந்துட்டியான்”

”வாங்க ஹீரோ சார்” - சவ்வு மிட்டாயின் அந்த விநோத குரல் என்னை வரவேற்றது. ஆம் அது விநோத குரல் தான். கரகரப்பான கீச்சுக்குரல்.. வகுப்பினுள் நுழைந்த என்னை பார்த்ததும் மாணவர்களுக்குள் சல்சலப்பு. நான் செந்திலை தேடினேன். அவன் ஆளையே காணோம். நான் சீக்கு வந்து கோழி போல் நடுங்கிக்கொண்டிருக்கிறேன். என் அருகில் மெதுவாக வந்து காப்பு ஏறிப்போன தன் விரல்களால் என் மெல்லிய காது மடலை கவ்வி தூக்கினார். “ஸ்ஸ்ஸ்ஸ் சார் சார் சார்” என நான் கத்திக்கொண்டே பாதங்களை எக்க ஆரம்பித்தேன். அவர் இன்னொரு கையால் தன் பையில் இருந்த லெட்டரை எடுத்து “இத நீ யாருக்கிட்ட வாங்கிட்டு வந்து யாருக்கிட்ட குடுத்த?”

“எத சார்?”

“எதையா?” என் காதை இன்னும் அழுத்தினார். காது முழுவதும் ஒரு வித சூடு பரவியது. அந்த லெட்டரை விரித்து வாசிக்க ஆரம்பித்தார். டார்லிங், செல்லம் என்கிற செல்ல வார்த்தைகளும், செந்திலின் அம்மா அப்பாவை, அவள் அத்தை மாமா என்று குறிப்பிட்டிருந்ததும், அந்த வலியிலும் என் காதுகளில் விழுந்தன. நல்ல வேள செக்ஸியா எதுவும் எழுதல என்று நினைத்துக்கொண்டேன். இல்லேனா அந்த கோவமும் என் காதில் தானே பாயும்? ஒரு அளவுக்கு மேல் வலியை தாங்க முடியவில்லை. “ஸ்ஸ்ஸ் சார் சார் நான் தான் சார் குடுத்தேன். சாந்திக்கிட்ட வாங்கி செந்தில் கிட்ட குடுத்தேன் சார்”.

நான் சொன்ன மறுநொடி காதில் இருந்து அவர் விரல்கள் விடுபட்டன.. தப்பித்தோம் என நினைக், ‘சொத்’ - என் செவிட்டில் ஒரு அறை விழுந்தது. “ஏன்டா வீட்ல கஷ்டப்பட்டு படிக்க அனுப்புனா இங்க வந்து படிக்காம மாமா வேல பாக்குறிங்களோ?”

”சாரி சார்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார்”

“அப்ப நேத்து வரைக்கும் பண்ணதுக்கு? ஒன்னலாம் ஹெட் மாஸ்டர் கிட்ட சொல்லணும்டா. என்னமோ A செக்‌ஷன் பயலுக தான் ஒழுக்கமானவைங்க, D செக்‌ஷன்னாலே ஆடுகாளிங்குற மாதிரி பேசுறான்ல, அவன் கிட்ட ஒன்ன காட்டி சொல்லணும், ‘பாருய்யா A செக்‌ஷன்லயும் பொறுக்கிப்பயலுக இருக்காய்ங்க’னு”

“சார் சார் வேண்டாம் சார். ப்ளீஸ் சார்” முட்டிக்கொண்டு வந்த அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. மதிய சாப்பாட்டு மணி அடிக்கப்பட்டது.

“உங்க வீட்ல சாப்பாடு குடுக்க வருவாங்களாடா?”

“இல்ல சார்”

“சரி ஒங்க அப்பா அம்மாவா கூட்டிட்டு வா”

“சார் ப்ளீஸ் சார் வேண்டாம் சார். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சார்” அழுகையினால் வார்த்தையும் குரலும் சரியாக வரவில்லை. மற்ற வகுப்பு மாணவர்கள் வராந்தாவில் போய்க்கொண்டிருக்கும் போது இங்கு நடக்கும் களேபரங்களை பார்த்துக்கொண்டே சென்றார்கள். இந்த வகுப்பில் மட்டும் எல்லோரும் அமைதியாக இந்த கிளாடியேட்டர் சண்டையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“சரி இனிமேல் இப்டி பண்ண மாட்டேன்னு எழுதிக்குடு, ஒன்ன விட்டுறேன்” சினிமாவில் சொத்தை எழுதி கேட்கும் வில்லன் கும்பல் தலைவன் போல் பேசினார். ஆளை விட்டால் போதும் என்று எழுத ஆரம்பித்தேன். அழுததில் என் மூக்கு ஒழுக ஆரம்பித்து விட்டது. லெட்டரை எழுதி அவரிடம் கொடுத்தேன். சத்தமாக வாசித்தார். “மதிப்பிற்குரிய ஐயா, இனிமேல் இது போன்ற தவறுகள் செய்ய மாட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் - என்னடா இது லெட்டரு? இனிமேல் என்ன பண்ண மாட்டனு எழுது.. ஒன்ன எதுக்கு மன்னிக்கணும்னு எழுது” என்றார். ஒவ்வொரு முறையும் நான் எழுதுவதில் குற்றம் குறை சொல்லி, கடைசியில் ஆரம்பம் முதல் கடைசி வரை நடந்த அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டார். நல்ல வேளையாக என் - வசந்தி காதல் பற்றி அவரும் கேட்கவில்லை, ஆர்வக்கோளாறில் நானும் எதையும் உலறவில்லை. 

நான் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை மடித்து தன் பையில் வைத்துக்கொண்டு, “சரி போய் சாப்புடு. சாப்ட்டு வரும் போது உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வா”

“சார் அதான் லெட்டர் எழுதிட்டேன்ல சார்? ப்ளீஸ் சார், அவங்கலாம் வேண்டாம் சார்” இப்போது மூக்கோடு சேர்ந்து என் கண்களும் ஒழுக ஆரம்பித்துவிட்டன.

“வீட்ல இருந்து கூட்டிட்டு வா, இல்லேனா இந்த லெட்டர ஹெட்மாஸ்டர் கிட்ட குடுத்துருவேன். என்ன பண்ண நீயே சொல்லு?” நான் அழுதுகொண்டே நின்றேன். என் பதிலுக்கு எதிர்பாராமல், “போ போயி வீட்ல இருந்து கூட்டிட்டு வா” என்று சொல்லி அவர் சாப்பிட கிளம்பிவிட்டார்.

என் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டதில், பலரும் சொன்னவைகளின் சாராம்சம் இது தான் - ஹெட் மாஸ்டர் கிட்ட மேட்டர் போயி டி.சி கிழியுறத விட பேசாம வீட்ல இருந்து கூட்டிட்டு வந்து நாலு அடி வாங்கிக்கிடலாம். ஆனால் எனக்கு வீட்டில் சொல்ல மிகவும் அசிங்கமாய் இருந்தது. ஒரு பதினொன்றாம் வகுப்பு மாணவன் அவன் பெற்றோர்களிடம் போய் “என் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேரு லவ் பண்ணாங்க. நான் தான் அவங்களுக்கு லெட்டர் குடுத்து ஹெல்ப் பண்ணேன்”னு சொன்னா என்ன நினைப்பாங்க தங்கள் பிள்ளையை பற்றி? ’இப்ப யோசிச்சி என்ன பண்ணுறது? இவ்வளவு பண்றவன் மொதையே யோசிச்சிருக்கணும்’ என்று நானே என்னை நொந்துகொண்டு பள்ளிக்கு வெளியில் இருக்கும் ஃபோன் பூத்துக்கு சென்று பக்கத்து வீட்டு எண்ணை அழைத்தேன்.

என் அம்மாவை கூப்பிட சொன்னேன். என் அம்மா வந்து “ஹலோ என்னடா இந்த நேரத்துல?” என்று சொல்லி முடிக்கும் முன் கட கடவென எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டேன். “என்னடா இப்படி பண்ணிட்ட?” தன் மகனா இப்படி என நம்பமுடியாமல் கேட்டார். “ப்ளீஸ்மா யாருக்கிட்டயும் சொல்லிறாதீங்க. நீங்க மட்டும் ஸ்கூலுக்கு வாங்க. அப்பாவ கேட்டா ஊருக்கு போயிருக்காங்கன்னு சொல்லிருங்க”. அப்பாவுக்கு மட்டும் இது தெரிந்தால் என்னை வெளுத்துவிடுவார் என்று தெரியும். அடுத்த வாரத்தில் இருந்து கடன் வாங்கி, வாரத்தில் எட்டு நாட்கள் என்னை அடிப்பார். அடித்தால் தான் பிள்ளை உருப்படும் என்பது அவர் பாலிஸி. “ம்மா சொல்லுங்கம்மா”

அம்மா திரும்பவும், “என்னப்பா இப்படி பண்ணிட்ட?” என்று சொல்லி ஃபோனை வைத்தார். அவரும் அழுதிருக்க வேண்டும். 

மதியம் நான் சாப்பிடவில்லை. மதிய வேளை முதல் வகுப்பு பிசிக்ஸ். பிசிக்ஸ் டீச்சர் வந்து புரியாத எழுத்துக்களை போர்ட்டில் எழுதி ஏதோ கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். என் கண்கள் வாசலை நோக்கி என் அம்மாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. தூரத்தில் கிரவுண்டில் அம்மா யாரிடமோ விசாரித்துக்கொண்டிருந்தார். அவர் என் வகுப்பை நோக்கி கையை காட்டினார். அம்மாவுக்கு அருகில் அப்பாவும், தாத்தாவும்!!! எனக்கு அடிவயிற்றில் அடைக்க ஆரம்பித்துவிட்டது. தொண்டை வறண்டு போய்விட்டது. நான் வேகமாக பிசிக்ஸ் மிஸ் கிட்ட “மிஸ் எங்க அம்மா வந்திருக்காங்க. நான் பாத்துட்டு வந்துறேன்” என்று என் அம்மா வந்த திசையை நோக்கி கை காட்டி நடந்தேன்.



நான் வருவதை பார்த்ததும் என் அப்பா வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு விறுவிறுவென முன்னேறினார். என் அம்மா அவரை தடுக்க வேகமாக வந்தார். என் தாத்தா அந்த இருவரின் வேகத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் வேகமாக நடக்க முயன்றார். என் அப்பா என்னை அடிக்க கையை ஓங்குவதற்குள் என் அம்மா அவரை தடுத்துவிட்டார். அதற்குள் தாத்தாவும் “மாப்ள எதா இருந்தாலும் வீட்ல போயி பாத்துக்கிடலாம். மொத அந்த வாத்தியார் எங்க இருக்காருனு கேளுங்க” என்றார்.

அந்த மூவரையும் நான் சவ்வுமிட்டாயின் வகுப்புக்கு அழைத்துப்போனேன். என் அப்பா அம்மவை பார்த்ததும் அவர் ஒன்றுமே பேசாமல் நான் அவரிடம் கொடுத்த மன்னிப்பு கடிதத்தை அவர்களிடம் காமித்தார். அவர்கள் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே, ”ஒங்க மவன் செஞ்சிருக்குற வேலைய பாத்தீங்களா?” என்றார். அம்மா அழ ஆரம்பித்து விட்டார். “சார் நாங்க இவன இனிமேல் ஒழுங்கா பாத்துக்குறோம் சார். ஹெட் மாஸ்டர் கிட்டலாம் சொல்லிறாதீங்க சார்” என்று அம்மா அவரிடம் கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

“ஒங்க பயல ஹெட்மாஸ்டர் கிட்ட சொல்லி ஸ்கூல விட்டு நிறுத்துறது என் ஆசை இல்ல. பிள்ளைங்க என்ன பண்றாங்கன்னு பெத்தவங்களுக்கு தெரியணும்னு தான் உங்கள கூட்டிட்டு வர சொன்னேன். இனிமேலாவது பொறுப்பா பாத்துக்கோங்க” - பேசிக்கொண்டே என் அப்பாவின் கையில் இருந்த அந்த லெட்டரை வாங்கி கிழிக்க ஆரம்பித்திவிட்டார். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா வீட்ல சொல்லிருக்கவே வேண்டாமே என நொந்து கொண்டேன்.

என் தாத்தா சற்று கோவமான குரலில் அவரிடம் “அப்ப நாங்க கெளம்பலாம்ல?” என்றார். “ஹிம் போயிட்டு வாங்க சார், பையன பாத்துக்கோங்க” என்றார் மறுபடியும். அவருடைய வகுப்பில் இருந்து கீழே இறங்கினோம்.



“வீட்டுக்கு வா ஒனக்கு இருக்கு” என்று மிரட்டினார் அப்பா. “வேற என்னடா?” - இது தாத்தா..

“ஒன்னும் இல்ல தாத்தா”

“சரி நீ ஒம்பாட்டுக்க கிளாஸ்க்கு போ. சாந்திரம் பத்திரமா வீட்டுக்கு வா. நாங்க பொயிட்டு வரோம்” என்று என் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார். அம்மாவின் கண்களில் பையன் இப்படி பண்ணிவிட்டானே என்கிற வருத்தம் தான் இருந்தது. அதே வருத்தம் என் அப்பாவின் கண்களில் கோபமாக சிவந்திருந்தது.

வகுப்பிற்கு சென்றுவிட்டேன். மாலை பள்ளி முடிந்தது வீட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று ஒரே யோசனை. எங்காவது போகலாம் என்றால் எங்கு போக? என்ன செய்ய? யார் வீட்டில் டிவி பார்க்க? வசந்தியை எப்படி பார்க்க? சோற்றுக்கு என்ன செய்வது என்று பல கேள்விகள்.. வேறெங்கும் செல்வதற்கும் பயமாக இருந்தது. எங்கோ தொலைந்து போய் கஷ்டப்படுவதற்கு பதிலாக வீட்டில் கொஞ்சம் அடிவாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்து சைக்கிளை வீட்டிற்கு அழுத்தினேன்.

பள்ளியிலும் சாலையிலும் தெருவிலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை. பிரமையா அல்லது நிஜமாகவே என்னைத்தான் பார்க்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை. நேராக வீட்டிற்குள் நுழைந்தேன். என்னை யாரும் சட்டை செய்தது போலே தெரியவில்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள். ஏழு மணிக்கு மேல் அப்பாவும் வேலையில் இருந்து வந்தார். அவரும் என்னை எதுவும் கேட்கவில்லை. இரவு சாப்பிட்டு விட்டு உறங்கினோம். தூக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன்.

“அதாங்க அவனுக்கு நேரம் சரியில்லை. அதான் இப்படிலாம் பண்ணிட்டான்”

“எனக்கு வர கோவத்துக்கு அவன ரவ ரவையா உரிச்சிருப்பேன். மொளச்சு மூனு எல விடல, அதுக்குள்ள என்ன வேலையெல்லாம் பாக்குறான் பாத்தியா?”

“விடுங்க, அதான் ஜோசியக்காரரு சொல்றாருல, அவனுக்கு இப்ப ஏழரை சனி நடக்குது, அப்படித்தான் இருப்பான்னு. இன்னும் ஏழு வருசம் இப்படித்தான் இருக்கும். நாம தான் சூதானமா பாத்துக்கணும். நீங்க பாட்டுக்க அடிக்க, அவன் எதாவது பண்ணிக்கிட்டா?”

“என்னமோ பண்ணித்தொல. ஏதோ ஜோசியம் ஏழரனுலாம் சொல்றனால அவன் தப்பிச்சான். இல்லேனா அவன் பண்ண வேலைக்கு கொன்னே போட்டிருப்பேன்”

’என்னடா இது அவனவன் ஏழரை வந்தா உயிரே போன மாதிரி பயப்படுறாய்ங்க, நம்மள மட்டும் அப்பாக்கிட்ட இருந்து காப்பாத்திருச்சி?’ என எனக்கு அந்த ஏழரையை நினைத்து சந்தோசமாக இருந்தது. ஏழரைக்கும் சனி பகவானுக்கு நன்றி சொல்லி நிம்மதியாக உறங்கப்போனேன்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One