சிவகாசி மிக்சர் வண்டி - ஹாலிவுட் சுட்ட கமல் படமும், தமிழ் சினிமாவில் தங்கைகளும்..

Thursday, March 26, 2015

என் சிறந்த ஃபேஸ்புக் பதிவுகளாக நான் நினைப்பதை பத்திரமாகப் பதிவு செய்ய நினைத்து ப்ளாக்கில் பதிவேற்றும் பகுதி தான் இந்த ‘சிவகாசி மிக்சர் வண்டி’. எங்கள் ஊர் மிக்சர் வண்டியில் எப்படி பக்கோடா, சேவு, மிக்சர், அல்வா, ஜிலேபி, பால்பன், சீவல், சிப்ஸ் என்று பால் சோற்றுக்கான அனைத்து வகையான காம்பினேசன்களும் கிடைக்கின்றதோ, அதே போல் இந்த ’சிவகாசி மிக்சர் வண்டி’யிலும் பல தரப்பட்ட தலைப்பில் கருத்துக்கள் வரும்.. சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், ஃபேஸ்புக்கில் பார்த்த நண்பர்களுக்கு இது மீள்பதிவாகத் தெரியலாம், மன்னித்துவிடுங்கள்.. மற்றவர்களுக்கு இது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.. சரி விசயத்திற்கு வருவோம்..

சமீபத்தில் நம் உலக நாயகன் கமலஹாசன் ஆந்திர மீடியா ஒன்றிற்கு ஒரு பேட்டி கொடுத்தார்.. பொதுவாகவே அறிவாளியான அவர், மீடியா என்றால் தன்னை இன்னும் கொஞ்சம் அறிவாளியாக காட்ட முனைவார்.. அந்த எண்ணத்தில் தான் அந்தக் கருத்தை உதிர்த்திருப்பார் என எண்ணுகிறேன்.. “சிப்பிக்குள் முத்து" படத்தைக் காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் "Forrest Gump". சொல்லப்போனால் நாம் தான் ஹாலிவுட்காரர்கள் மீது கேஸ் போடணும்..". அட அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.. ஹாலிவுட் படங்கள் தான் இங்கிருந்து காப்பியடிக்கின்ற என்றும் கொழுத்தி போட்டிருக்கிறார்..



Forrest Gump 1986ல் அதே பெயரில் வந்த ஆங்கில நாவலைத் தழுவி 1994ல் எடுக்கப்பட்ட படம். நம் ‘சிப்பிக்குள் முத்து’ ரிலீஸ் ஆனது 1986ல் தான். அதனால் Forrest Gump நிஜமாகவே ‘சிப்பிக்குள் முத்து’வின் காப்பியாக என்பதில் அடிப்படை சந்தேகம் வருகிறது. சரி நம் உலக நாயகரின் திருப்திக்காக அதைக் காப்பி என்றே வைத்துக்கொள்வோமே.. நம் ஆள் என்ன சும்மாவா?

கருந்தேள் அவர்கள் 2010லேயே கமலின் காப்பிக் கதைகளைப் பற்றி எழுதி, பல கண்மூடி கமல் ரசிகர்களின் கண்களைத் திறந்த இந்தப் பதிவைப் படியுங்கள், நம் உலக நாயகரின் லட்சணம் தெரியும்..



ஐயா உள்ளூரின் உலக நாயகரே, நீங்க ஆசைப்பட்ட மாதிரியே, ஹாலிவுட்காரன் மேல நல்லா கேஸ் போடுங்கய்யா.. ஆனா என்ன, உங்களால ஒரு கேஸ் தான் போட முடியும்.. பதிலுக்கு அவன் உங்க மேல ஒன்பது கேஸ் போடுவான். அம்புட்டு படத்தை நீங்கள் ஆட்டையைப் போட்டிருக்கிறீர்கள் அவர்களிடம் இருந்து.. அதையெல்லாம் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து விட்டு கேஸ் போடுங்கள். நீங்கள் பாட்டுக்க அவசரத்தில் வாயை விட்டுவிட்டு அப்புறம், "வெளிநாட்டுக்கு ஓடுறத தவிர எனக்கு வேற வழியே இல்ல"ன்னு அழுது சீன் போட்டுலாம் எஸ்கேப் ஆக முடியாது பாத்துக்கோங்க.. 

_________________________________________________________________________

சரி இப்ப அடுத்த மேட்டர்.. 

நம் தமிழ்சினிமாவில் பாகவதர் காலத்தில் இருந்தே, ஹீரோ என்றால் இவர் தான், ஹீரோயின் என்றால் இவர் தான், அப்பா வேஷம், அண்ணன் வேஷம், அம்மா வேஷம், வில்லன் வேஷம், காமெடியன் வேஷம் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ”இவர் தான்” என்று அளவெடுத்துத் தைத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட நடிகர் பட்டாளம் இருக்கும்.. அதில் மிக முக்கியமானது தங்கை பாத்திரம்.. 'பாசமலர்’ ராதாவையோ, ’முள்ளும் மலரும்’ வள்ளியையோ, ’திருப்பாச்சி’ கற்பகத்தையோ நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? ஆனாலும் சாவித்திரி, ஷோபா, மல்லிகா மூவரும் கதாநாயகிகள்.. அந்தப் படங்களில் மட்டும் அவர்கள் தங்கையாக நடித்தார்கள். ஆனால், தங்கைப் பாத்திரத்திற்கென்று பிரத்தியேக நடிகைகள் இருந்தது 80களில் தான்..

அந்தக் காலகட்டம் தங்கைப் பாத்திரங்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.. தங்கை பாத்திரத்திற்கென்றே பல நடிகைகள் இருந்தார்கள். ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ல் பாக்யராஜின் தங்கையாக வருபவர், ‘வைதேகி காத்திருந்தாள்”ல் ராதாரவியின் தங்கை, ‘அரேங்கேற்ற வேலை”யில் பிரபுவிடம் இருந்து வேலையைப் பறிக்க நினைக்கும் அந்தப் பெண் இந்த மூவரும் தான் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் அக்மார்க் தங்கைகள்.. மூன்று பேர் நடிக்கும் படங்களிலும் பாசமும், செண்டிமெண்டும் கொட்டு கொட்டென்று கொட்டும்.. 



அந்தப் பாத்திரத்தின் சிறப்பா, அவர்களின் நடிப்பா அல்லது அவர்களின் குடும்பப்பாங்கான உருவ அமைப்பா எதுவென்று தெரியாது, ஆனால் ஏதோ ஒன்று, பிற நடிகைகளைப் போல் அவர்களைக் கவர்ச்சிக்கண்ணோட்டத்துடன் பார்ப்பதைத் தடுக்கும்.. 80களில் வந்த பெரும்பான்மையான மீடியம் பட்ஜெட் தமிழ்ப்படங்களில் இவர்கள் மூவர் தான் தங்கை வேடத்தில் கலக்கியிருப்பார்கள். ஹீரோவுக்கு தங்கை இல்லாத படங்கள் வருவதும் அரிதிலும் அரிது. கிட்டத்தட்ட 90களின் ஆரம்பம் வரை பல படங்களில் அருமையான தங்கைப் பாத்திரங்கள் வந்தன.. மாநகரக் காவலில் கூட கேப்டனின் தங்கை பாத்திரம் அருமையாக இருக்கும்.. ஆனால் 2000த்திற்குப் பின் இதில் ஒரு தொய்வு விழுந்தது.



2000திற்குப் பின் வந்த ஹீரோக்கள் எல்லாம் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக, அல்லது அண்ணனோ அக்காவோ இருக்கும் கடைக்குட்டியாகவே பெரும்பாலும் காட்டப்பட்டார்கள். தங்கைப் பாத்திரம் என்றால் பள்ளி செல்லும் சிறுகுழந்தையைத் தான் தங்கை எனக் காட்டுவார்கள். எல்லாம், ‘நம் ஹீரோ ரொம்ப யூத்து’ என காட்டும் டெக்னிக் தான்.. வயது வந்த தங்கை இருந்தால், அண்ணனைப் பொறுப்பானவனாகக் காட்ட வேண்டுமே? நம் ஹீரோக்கள் தான் உருப்படாமல் டாஸ்மாக்கே கதி என்றல்லவா கிடக்கிறார்கள்? அதனால் தான் சமீபத்தில் வந்த அனேகன் வரை பள்ளிப் பெண்கள் தான் ஹீரோவின் தங்கையாக இருப்பார்கள்.. திருப்பாச்சி மட்டும் ஒரே ஆறுதல். 80களின் தங்கையை மீண்டும் 2005ல் கண் முன் கொண்டு வந்தப் படம் அது. மல்லிகா அப்படியே ஒரு தங்கையாக தொடர்ந்திருக்கலாம் அந்தப் படத்திற்குப் பிறகு.. ஆனால், ‘குண்டக்க மண்டக்க’ என்னும் மொக்கைப் படத்திற்குப் பிறகு, ஏனோ அவரும் நடிக்கவில்லை, நாமும் நல்ல தங்கையை இழந்துவிட்டோம்.. அதற்குப் பின் தமிழ் சினிமா உருப்படியாகத் தங்கை பாத்திரங்களையோ, தங்கை பாத்திர நடிகைகளையோ கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்..



நம் வாத்தியார் பாலகணேஷ் சார், இதைப் பற்றிப் பேசும் போது இன்னொரு கருத்தையும் சொன்னார். நல்ல நண்பர்கள் பாத்திரமும் இப்போதெல்லாம் இல்லையென்று. ஒரு காலத்தில் நிழல்கள் ரவி, சரத்பாபு என்று களைகட்டியிருந்தது நண்பர்கள் வேஷமும்.. அதுவும் சரத்பாபு ரஜினி, கமலுக்கு சமமான நண்பராகப் பட்டையைக் கிளப்பினார்.. 2000களின் ஆரம்பத்தில் கூட கரணும் ஸ்ரீமனும் நம் ஹீரோக்களுக்கு நல்ல நண்பர்களாய் இருந்தார்கள்.. ஆனால் இப்போது அந்த வேலையை சந்தானும், சூரியும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், ஹீரோவோடு சரிக்கு சமமாக டாஸ்மாக்கில் தண்ணி அடித்துக்கொண்டு.. அந்த பாத்திரமும் கேனைத்தனமாகத் தான் இருக்கும்.. சினிமாவில் இப்போதெல்லாம் நண்பன் என்றால் கேனையன் என்று அர்த்தமாகிவிட்டது அவர்கள் இருவரால்..

எப்பா தமிழ் சினிமா டைரக்டர்ஸ், நீங்க நண்பர்களை என்னமும் செய்யுங்க.. ஆனா சீக்கிரம் ஒரு நல்ல தங்கை பாத்திரத்தைப் படையுங்கப்பா.. என்னைப் போன்று கண் கலங்கி, மூக்கி ஒழுகிப் படம் பார்க்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்..

இவண்:
தசாவதானி அண்ணன் விஜய.டி.ராஜேந்தரின் அன்பு விழுதுகள்... 

உங்கள் வேலை தொடருமா? சீட் கிழியுமா?

Tuesday, March 24, 2015

பொருளாதார வல்லுனர்கள் 2015-16ம் ஆண்டை வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் ஆண்டாக கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும் போது வரும் ஏப்ரலில் இருந்து அதிக வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல புதிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே மாணவர்களை அலேக்காகத் தூக்கிச் செல்ல காத்திருக்கின்றன. இந்த ஆண்டு கூட அதிக அளவில் on campus வேலை வாய்ப்பை வழங்கியவை start ups என்று சொல்லப்படும் புதிய நிறுவனங்கள் தான். சென்னையில் இருக்கும் “Great Lakes Institute of Management"ல் இந்த ஆண்டு ஒருவரை 57லட்ச ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற மேலாண்மைக் கல்லூரியான "Faculty of Management Studies"ன் campus placementல் இந்த ஆண்டிற்கான சராசரி சம்பளம் 17லட்சம்!!! இதெல்லாம் எதிர்ப்படும் ஆண்டை வேலைவாய்ப்புகுப் பஞ்சம் இல்லாத ஆண்டாக நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன..

ஆனால் இன்னொரு புறம், நிறுவனங்கள் கொத்துக்கொத்தாக வேலையாட்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் TCS எடுத்த தேசத்தையே அலற வைத்த முடிவு எல்லோரும் அறிந்ததே.. IBM 5000 பேரை அனுப்பப் போகிறதாம்.. கடந்த ஆண்டில் மட்டும் பெங்களூருவில் 15000 ஐடி நிறுவன ஊழியர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்.. ஐடி நிறுவனங்கள் என்றில்லை, கோக் நிறுவனமும் உலகம் முழுக்க 8000பேரின் சீட்டைக் கிழிக்கவிருக்கிறது.. பல தனியார் வங்கிகளும் வேலையாட்களை வீசி எறிகின்றன.. வேலை கிடைப்பது எவ்வளவு எளிதானதோ, அதை விட வேலை போவது எளிதாகிவிட்டது.



திடீரென்று “Dear Ram Kumar, Your service is no more needed to us. You are sacked." என்று ஈமெயில் வந்தால் என்ன ஆகும்? அய்யோ இந்த வரியை டைப்பும் போதே கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.. ”திடீரென்று நம் நிறுவனம் நம்மை வேலையை விட்டு அனுப்பிவிடுமா?” என்றால், திடீரென்று எல்லாம் அனுப்ப மாட்டார்கள். வேலையை விட்டு அனுப்ப சில பல காரணங்கள் இருக்கும். Non performer மட்டும் தான் வேலை இழப்பார் என்பது மிக மிகத் தவறான எண்ணம்.. அதையும் தாண்டி பல விசயங்கள் இருக்கின்றன.. நம்மை நம் நிறுவனம் “சீக்கிரம் பத்திவிடுவதற்கான” அறிகுறிகளை அலசுவது தான் இந்தப் பதிவு.. இதில் ஏதாவது உங்களிடம் தென்பட்டால் திருத்திக்கொள்ளுங்கள், அல்லது resumeஐ தூசி தட்டி நௌக்ரியில் ஏற்றிவிடுங்கள். இப்போது கட்டுரைக்குள்..

1. அப்டேட் ஆகாமல் இருப்பது:
ஒரு காலத்தில் நாம் விழுந்து விழுந்து பார்த்து, வெள்ளி விழாப் படங்களாக எடுத்த விக்ரமனின் படங்கள் இப்போது ஏன் தொடந்து ஊத்துகிறது?  ஆனால் விக்ரமனை விட சீனியரான மணிரதனத்தின் ஒவ்வொரு படத்திற்கும் ஏன் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது? சிம்பிள், முன்னவர் இன்னும் ”லாலா” பின்னணி இசையிலும், 90களின் ’புது வசந்தம்’ காலத்திலுமே நின்று கொண்டிருக்கிறார்.. பின்னவர் கதை, தொழில்நுட்பம் என அனைத்திலும் இன்றைய காலத்திற்கு ஏற்றவராக அப்டேட்டாக இருக்கிறார்.. கிட்டத்தட்ட வேலையிலும் இப்படித்தான்..

வேலையில் சேரும் போது நீங்கள் விக்ரமன் போல் ஹிட் ஹிட்டாக அடிக்கலாம்.. ஆனால் சேரும் பொழுது இருந்த மாதிரியே வருடங்கள் பல கழிந்தும் அப்படியே இருந்தால், நீங்கள் தான் முதல் டார்கெட்.. சாதாரண ஆண்டிராய்ட் ஃபோனிலேயே மாதத்திற்கு ஒரு முறை ஆட்டோமெட்டிக்காக சாஃப்ட்வேரை அப்டேட் செய்துகொள்கிறோமே, நாம் பார்க்கும் வேலையிலும் அப்படி இருப்பது தானே ஞாயம்? யார் ஒருவர் காலத்திற்கு, தேவைக்கு ஏற்றவாறு மாறாமல் இருக்கிறாரோ, அவர் அடுத்த கம்பெனிக்கு போவதற்கு ரெடியாகிவிடலாம்..



அப்டேட் ஆகுவது ஒன்று அவ்வளவு சிரமம் அல்ல இப்போது. கையிலேயே ஃபோன் இருக்கிறது. வேலை சம்பந்தமான விசயங்களை, செய்திகளைப் படிக்கலாம். தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் பல ஆன்லைன், பார்ட் டைம் கோர்ஸ்களை படிக்கலாம். அது போக, பிற துறைகளில் இருக்கும் வேலைகளிலும் (cross function) உதவியாய் இருக்கலாம்.. அதாவது நீங்கள் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டில் இருந்தாலும், அக்கவுண்ட்ஸ் & ப்ரொடக்சன் ஆட்களிடம் அவர்கள் வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய துறையில் உங்களுக்கு திறமை கிடைக்கும். என்னைப் போல் சேல்ஸ் வேலையில் இருப்பவர்கள் வேற்று மொழிகள் கற்றுக்கொள்வது நல்லது.. மிக முக்கியம் இதெல்லாம் நம் பாஸ் காதுகளுக்கு எட்டுவது மாதிரி செய்ய வேண்டும். நாம் என்ன நல்லது செய்தாலும் நமக்கு மேல் இருப்பவர்களிடம் அதை படம் போட்டு காட்டுவது தான் மிக முக்கியம்..

2. அலுவலக உறவு:
சரி, அன்றாடம் அப்டேட் செய்து, வேலை சம்பந்தமான அனைத்துத் திறமைகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் கெட்டிக்காரர் நீங்கள். ஆனால் அது மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. நீங்கள் உடன் வேலை செய்யும் நண்பர்களோடு எப்படி ஒத்துப்போகிறீர்கள் என்பதும் முக்கியம்.

காலையில் லேட்டாக டீ வருகிறது என்பதற்காக ஆஃபிஸ் பாயிடம் அறச்சீற்றம் கொள்வது, சாப்பாடு நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு யாரிடமும் பேசாமல் உங்கள் டிஃபன் பாக்ஸை மொக்குவது, மேனேஜரிடமும் வாடிக்கையாளர்களிடமும் எதற்கெடுத்தாலும் சண்டை போடுவது எல்லாம் உங்கள் பெயரை அநியாயத்திற்கு கெடுக்கும் விசயங்கள். சக வேலையாட்களுடன் சதா சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திறமையான ஆளை விட, அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒரு சராசரி ஆளையே நிர்வாகம் வேலையில் வைத்திருக்க விரும்பும். ஏனென்றால் சண்டை போடும் ஆள் திறமையானவனாகவே இருந்தாலும், அவன் சண்டையை பிறரின் உழைப்பை, உற்பத்தித் திறமையை குறைக்கக் கூடியது. 



அதற்காக வேலையே தெரியாமல் இருந்து கொண்டு, மௌன ராகம் கார்த்திக் மாதிரி எல்லோரிடமும் ஜாலியாகப் பேசினாலே போதும் என்று நினைப்பதும் மிகப் பெரிய முட்டாள்த்தனம். ஒரு வேலைக்கு aptitude & attitude இரண்டுமே சம அளவில் முக்கியம். கொஞ்சமாவது வேலை தெரிந்தால் தான், நல்ல நண்பரான உங்களை உங்கள் மேனேஜர் மேலே பேசிக் காப்பாற்ற முடியும். நீங்கள் நல்ல நண்பர் என்பதற்காக, உங்களுக்கு சப்போர்ட் செய்து, மேனேஜர் தன் வேலையையும் இழக்க விரும்பமாட்டார். அதனால் மேனேஜர், & உடன் வேலை செய்வோர்களிடம் நல்ல பழக்கம் இருந்தாலும் வேலையும் பார்க்க வேண்டும். என் பாஸ் அடிக்கடி சொல்வார், “மோசமாக வேலை செய்பவனை விட நாம் ஒரு படியாவது முன்னே நிற்க வேண்டும். அப்போது தான் நம் தலை உருளாது” என்று. எல்லோரும் இப்படி நினைக்கும் போது, யாரும் கடைசி இடத்திற்கு வர விரும்பாமல் உழைக்க எண்ணுவோம். அந்த எண்ணம் இருந்தாலே போதும்..

3.உங்களுக்கான வேலை கம்மியாக்கப்படுவது:
எல்லோருக்கும் கம்மியாக வேலை செய்ய, சீக்கிரமே வேலையை முடித்து, வீட்டுக்குப் போய், இன் பண்ணி, மணிக்கட்டு வரை கட்டிப்போட்டிருக்கும் முழுக்கை சட்டையையும், பெல்ட் மாட்டி இடுப்பை இறுக்கும் பேண்ட்டையும் கடாசி விட்டு, வெறும் கைலியுடன் கால் ஆட்டிக்கொண்டு டிவி பார்க்க ஆசை தான்.. ஆனால் அப்படி ஜாலியாக இருப்பதை உங்கள் நிறுவனம் கண்டு கொள்ளாவிட்டால் ஏதோ பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். நீங்கள் பார்க்கும் வேலை, உங்களை அறியாமலே நிர்வாகத்தால் குறைக்கப்பட்டு வருகிறதா, நீங்கள் மிக கேசுவலாக இருப்பதாக உணர்கிறீர்களா? ரொம்ப டேஞ்சர். பாஸிடம் இருந்து அதிக வேலை கிடைத்தால், அவன் ஏமாளி என்பதை விட, நிர்வாகம் அவனை மிகவும் நம்புகிறது, இந்தக் கம்பெனிக்கு அவனது உழைப்பு தேவை, அவனை கம்பெனி மிகவும் நம்புகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.



வேலைக்கு சேர்ந்தவுடன் அனைத்தும் கிடைத்துவிட்டது என்று எண்ணி, டெஸ்க்கை தேய்த்துக்கொண்டு, ஜாலியாக காலாட்டிக்கொண்டு இருக்காமல், தேடித்தேடி வேலையைக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் மேனேஜர்களும் நிர்வாகமும் கம்பெனியின் சொத்தாகப் பார்ப்பார்கள். இப்போதெல்லாம் கம்பெனிகள் டார்கெட்டை முடிப்பவனை விட அதற்கு மேல் முடிப்பவன் தான் வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதனால் வேலை குறைகிறது என்று மகிழ்வதை விட, அதிக வேலையை பொறுப்பாக செய்வது உங்கள் வேலையை உங்களிடம் இருந்து பிரிக்க விடாமல் செய்யும்.

4. கம்மியான ஊதிய உயர்வு:
நம் கம்பெனி நமக்கு கொடுக்கும் மதிப்பை, நாம் அந்த ஆண்டு பெறும் ஊதிய உயர்வை வைத்து தெரிந்துகொள்ளலாம். அனைத்து வேலையாட்களுக்கும், தகுதி & அனுபவத்தை மட்டும் வைத்து, சீரான ஊதிய உயர்வு கொடுக்கும் காலமெல்லாம் என்றோ மலையேறிவிட்டது. “நீ வேலை செய்தால் உனக்கு hike.. இல்லாவிட்டால் ஒன்றுமில்லை. வேலையை விட்டுப்போ, பாரபட்சமே கிடையாது” - இது தான் அனைத்து நிறுவனங்களின் இன்றைய தாரக மந்திரம். ஆமாம், ஒரு பிச்சைக்காரனுக்கு ஓசியில் ஒரு ரூபாய் கொடுக்கவே நாம் பல முறை யோசிக்கும் போது, நம் கம்பெனி மட்டும் எப்படி வேலையே செய்யாத ஒருவனுக்கு ஓசியாக சம்பளமும் ஊதிய உயர்வும் கொடுக்கும்?



இந்த ஆண்டு தனியார் துறையில் சராசரியாக 11% ஊதிய உயர்வு கிடைக்கும் என்று மனித வள மேம்பாட்டு வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.. Performerகளுக்கு 20% வரைக்கும் கூட கிடைக்குமாம். நீங்கள் 20% கிடைக்கிறதா என்று கூட பார்க்க வேண்டாம், அந்த 11% கீழே போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் விலைவாசியெல்லாம் 8-9% அதிகரித்திருக்கும் நிலையில் உங்களது ஊதிய உயர்வு 9%க்கும் கீழ் இருப்பது நிச்சயம் உங்களுக்கு நஷ்டமே. சராசரிக்கும் கீழே கிடைத்திருக்கும் ஊதிய உயர்வு “நீ எங்கள் நிறுவனத்துக்கு தேவையில்லை என்கிற நிலையில் இருக்கிறாய், ஜாக்கிரதை” என நிர்வாகம் மறைமுகமாக எச்சரிப்பதற்குச் சமம். 

5. உங்கள் கருத்துக்கு மதிப்பில்லை:
"சார் நாம பேசாம இப்படி செஞ்சா என்ன?” என்று வேலை சம்பந்தமான discussionல் எதையாவது நீங்கள் ஆர்வமுடன் சொல்ல வரும் போது உங்கள் பாஸ் உங்கள் கருத்தைக் காது கொடுத்து கேட்கிறாரா? நீங்கள் சொல்லும் கருத்தை, நிர்வாகம் பரிசீலிக்கிறதா? இந்த இரண்டு கேள்விக்கும் இல்லை என்று பதில் சொன்னால், சீக்கிரம் உங்கள் ஈமெயிலில் “you are fired” என்கிற கடிதத்தை எதிர்பார்க்கலாம். உங்களிடம் யாரும் கருத்து கேட்கவில்லை, அல்லது உங்களது கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றால், உங்களது கருத்துக்களை நிறுவனம் பிரயோஜனமாகக் கருதவில்லை என்று அர்த்தம். 



சோர்ந்து விடாமல், ’ஏன் நம்மிடம் யாரும் காரணம் கேட்பதில்லை?’ என்று யோசியுங்கள். உங்கள் நண்பர்களிடமும், மேனேஜரிடமும் feedback கேளுங்கள். உங்கள் சிந்தனையை மேம்படுத்த எண்ண செய்யலாம் என்று பாருங்கள். 

6. கம்பெனிக்கு தேவைப்படாத துறையில் இருப்பது:
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன் சிவகாசி பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு மதியம் வீட்டில் வந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு போவதற்காகவே வேலைக்கு ஆட்களை நியமித்திருந்தார்கள் அந்தந்த ஃபேக்டரிகளில்.. அவர்களின் தினப்படி வேலையே மதியமாகி விட்டால், தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையாட்களின் வீடுகளுக்குச் சென்று சாப்பாடு வாங்கி வருவது தான். காலப்போக்கில் ஓட்டல்களும், போக்குவரத்துச் சாதனங்களும் அதிகரித்துவிட்டதால் “மதியம் சாப்பாடு வாங்கும் வேலை”க்குச் செல்பவர்களின் தேவை முற்றிலுமாக ஒழிந்து விட்டது. 



உங்கள் நிறுவனம் செலவைக் குறைக்க நினைத்தாலோ, அல்லது காலப்போக்கில் ஒரு துறை தேவையல்ல என்னும் நிலை வந்தாலோ, நீங்கள் அந்தத் துறையில் எவ்வளவு பெரிய வஸ்தாதாக இருந்தாலும், உங்களுக்கு வேலை போவது உறுதி தான். “இவன் நன்றாக, குறித்த நேரத்திற்கு, சூடு ஆறுவதற்குள் சோறு கொண்டு வந்தவன்” என்பதற்காகவெல்லாம் யாரையும் நிரந்தரமாக வேலையில் வைக்கவில்லை எங்கள் ஊரில் ஃபேக்டரிகளில். அது தான் எல்லா நிறுவனங்களுக்கும். ஏற்கனவே சொன்னது போல், உங்கள் வேலையைத் தாண்டிய cross functional அறிவு இருந்தால் மட்டுமே இதில் இருந்து தப்பிக்க முடியும். அல்லது மதியம் சோறு வாங்கிக்கொடுக்கும் பழக்கத்தை இப்போதும் பின்பற்றும் கம்பெனி ஏதாவது இருந்தால் அங்கே போய் ஒட்டிக்கொள்ளலாம்.

7. கம்பெனியின் பிரச்சனைகள்:
நீங்கள் நல்ல வேலையாளாக, அனைவரிடமும் நன்றாகப் பழகுபவராக, அனைத்திலும் சிறந்தவராக இருக்கலாம். ஆனால் உங்கள் கம்பெனி கடனில் மூழ்கிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? கம்பெனியில் நிதிநிலை மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருங்கள், ஷேர் மார்க்கெட்டில் நம் கம்பெனி எப்படி இருக்கிறது, எவ்வளவு தூரம் வெளியில் இருந்து முதலீடு செய்திருக்கிறது என்றெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். நிதிநிலைமை மட்டுமல்ல, கம்பெனியின் உயர் பதவியில் இருக்கும் ஆட்கள் அடிக்கடி வெளியேறுவதும், வேலையாட்கள் சீக்கிரம் வேலையில் இருந்து விலகிவிடுவதும் (attrition rate), மோசமான வேலையாட்கள் இருப்பதும் கூட நல்ல நிறுவனத்திற்கான அறிகுறி அல்ல..

நான் வேலை செய்த ஒரு கம்பெனியின் மேனேஜர் சரியான திருட்டுப் பேர்வழி.. பில் இல்லாமல், டீலர்களிடம் பேரம் பேசி, பாதி விலைக்குப் பொருளை விற்று மொத்த காசையும் அவர் எடுத்துக்கொள்வார். கம்பெனிக்கு “டேமேஜ்” என்று ரிப்போர்ட் கொடுத்துவிடுவார். அவர் மட்டுமல்ல, அந்தக் கம்பெனியின் பல மேனேஜர்களும் அப்படியே என்பதால், கம்பெனிக்குள் இது பெரிய விசயமாகப் படவில்லை. ஆனால் வெளியே சக போட்டியாளர்கள், டீலர்கள் என்று அனைவரும் அந்தக் கம்பெனி ஆட்களை திருடன் போல் தான் பார்ப்பார்கள். நான் வேலையில் சேர்ந்த இரண்டாவது நாளிலேயே ஒரு டீலர் கேட்டார், “சார் உங்களுக்கு எவ்வளவு பங்கு?” என்று. ஒரே மாதத்தில் அந்தக் கம்பெனியில் இருந்து பறந்துவிட்டேன். அது போன்ற நிறுவனத்தில் வேலை செய்வது உங்கள் எதிர்காலத்தையே கெடுத்துவிடும். சீக்கிரம் கிளம்புவது உங்களது profileக்கு நல்லது. 


பணம் கையாடல், பெண்களை டார்ச்சர் செய்வது போன்ற பொதுவான காரணங்களைத் தாண்டிய, இந்த ஏழு பாயிண்டுகள் தான் பெரும்பாலும் வேலை போவதற்கான அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருப்பதாக நினைத்தாலும் இன்றில் இருந்தே அதை விட்டு வலகுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த ஆரம்பியுங்கள். பார்க்கும் வேலையைக் காதலியுங்கள். வேலையைப் பற்றிய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தூக்கிக் கடாசுங்கள். அப்ரைசல் வேறு நெருங்கி விட்டது. இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டாவது நல்ல இன்க்ரீமெண்ட்டும் ப்ரொமோசனும் கிடைக்க வாழ்த்துக்கள்..



பின் குறிப்பு:
இது நான் சமீபத்தில் ”The Economic Times"ல் படித்த ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு..

ஜாதக தோசம்...

Friday, March 13, 2015

”Wish you a many more happy returns of the day" விழாவுக்கு முதல் ஆளாக வந்தார் எங்கள் ஆஃபிஸ் அக்கௌண்ட்ஸ் மேனேஜர்.. அழகாக தங்க நிறப் பேப்பர் சுற்றியிருக்கும் அந்தப் பெட்டியை என்னிடமும் மேகாவிடமும் சேர்ந்தாற்போல் கொடுத்தார். சேல்ஸ்க்கும் அக்கௌண்ட்ஸுக்கும் முட்டிக்கொள்ளும் என்கிற அலுவலக பால பாடத்தின் படி எனக்கு அவரைப் பிடிக்காவிட்டாலும், அவர் கொண்டு வந்த அந்தப் பெட்டி என் முகத்தில் புன்னகை வரச்செய்தது.. சிரித்துக்கொண்டே வாங்கினோம் அந்தப் பெட்டியை.. அவரைத் தொடர்ந்து அலுவலக நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

எனக்கு பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்படி நண்பர்கள், உறவினர்கள் முன் ஜோடியாக என் பொண்டாட்டியுடன் நிற்பது மிகவும் கூச்சமாகத் தெரிந்தது.. ஆம், இன்றோடு எனக்குக் கல்யாணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்.. சால்ட்&பெப்பரை மறைக்க ஹேர் டை மாதிரி தொப்பையை மறைக்கவும் ஏதாவது இருக்கிறதா என்று தேட ஆரம்பிக்கும் வயதில் இருக்கிறேன்.. ஆனாலும் மீண்டும் ஒரு முறை ஜோடியாக அனைவர் முன்னும் லேசான வெட்கத்துடன் நிற்பது கொஞ்சம் சந்தோசமாகத்தான் இருக்கிறது..



”சுகர் வந்துருமோ வெள்ளெழுத்து வந்துருமோன்னு பயப்படுற வயசுல இதெல்லாம் தேவையா நமக்கு?” பத்தாம் ஆண்டைக் கொண்டாடலாம் என்று மேகா சொன்ன போது இப்படித்தான் நான் கேட்டேன்..

“ஒலகம் ரொம்ப வேகமா போய்ட்டு இருக்கு குமரா. இப்பலாம் சினிமாவுக்கே மூனாவது நாள் வெற்றி விழான்னு கொண்டாடுறாங்க.. நாம பத்து வருசம் எந்த சண்டையும் இல்லாம வாழ்ந்திருக்கோம்.. நாம கொண்டாடக்கூடாதா?” என்றாள்..

”ஆமா படம் 100நாள் ஓடாதுன்னு தெரியும் அவைங்களுக்கு, அதான் மூனாவது நாளே கொண்டாடுறாய்ங்க.. நமக்கு என்ன? 100வது வருசமே கொண்டாடலாம்..”

“உனக்கு பிடிக்கலையா குமரா?”

“ஏ.. பவன் என்ன நெனைப்பா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. பவன் நேத்துல இருந்தே கேக்க ஆரம்பிச்சிட்டா, ‘எப்பம்மா அப்பா கூட இன்னொருக்க கல்யாணம் பண்ணப் போற?’ன்னு.. பிள்ளைகலாம் எதும் நெனைக்காது. நீ எதும் நெனைக்கிறீயா?”

”ச்சே ச்சே நான் என்னத்த நெனைக்கப்போறேன்?” பத்து வருச திருமண வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரே உருப்படியான பாடம், பெண்டாட்டி கேள்வி கேட்டால், அவள் விரும்பும் பதிலை - நமக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ - சொல்லிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் சோற்றுக்கு உத்திரவாதம் கிடையாது..

ஆனால் மேகாவையும் சும்மா சொல்லக்கூடாது. என் போன்ற ஒரு முசுடு மாப்பிள்ளை கிடைத்தாலும் இதுவரை அவள் என்னோடு சண்டை போட்டதே இல்லை. கோபம் வந்தாலும் சரி, சந்தோசமாக இருந்தாலும் சரி, என்னிடம் ஏதாவது நைஸாக கறக்க வேண்டும் என்றாலும் சரி, “குமரா” என்கிற ஒரு வார்த்தை போதும் அவளுக்கு. நான் சரண்டர் ஆகிவிடுவேன். அது என்னவோ பலரும் என் பெயரின் முதல் வார்த்தையை வைத்துக் கூப்பிட்டால் அவள் மட்டும் கடைசி வார்த்தையை வைத்துக்கூப்பிடுகிறாள். என்னங்க, அத்தான், மாமா போன்ற வார்த்தைகளை விட அந்த வார்த்தையில் எனக்கு அதிக உரிமை இருப்பதாகவே தெரிந்தது.

உறவினர், நண்பர் என கொஞ்ச பேரை அழைத்தோம்.. ஆனாலும் எனக்கு என்னமோ இந்த பத்தாவது வருச கொண்டாட்டம் கொஞ்சம் ஓவரோ என்று தோன்றியது.. சொந்தக்காரர்கள் பலரும் கூட “என்ன பத்தாவது வருசத்துக்கேவா?” என்று நக்கலாக இளித்துக்கொண்டே கேட்டார்கள் அழைத்த போது.. எனக்குக் கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இந்த மேகா அசால்ட்டாக, “இனிமேல் ஒவ்வொரு வருசமும் பொறந்த நாள், மாதிரி இதையும் கொண்டாடலாம்னு இருக்கோம்” என்று டக்கென சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.. ”என்னது வருசா வருசமா!!!” என நான் டிபி வந்து மெலிந்து போன என் பர்ஸை நினைத்துக்கொண்டேன்..

ஒரு வழியாக எல்லோரையும் அழைத்து, இதோ இன்று விழாவும் நடந்துகொண்டிருக்கிறது. பத்து வருடத்திற்கு முன் நானும் மேகாவும் மட்டும் நின்றோம். இதோ இன்று எங்களுக்கு நடுவில் இந்த ரெண்டாங்கிளாஸ் பவனும் இப்போது சேர்ந்து விட்டது. எங்கள் இருவரை விட பவனுக்குத் தான் ரொம்ப சந்தோசம்.. சொந்தக்காரர் வீட்டு விசேஷம் என்றால் இங்கும் அங்கும் அலைந்து, என்னைப் பாடாய்ப் படுத்தும் பவன், இங்கு அமைதியாக ஆரம்பத்தில் இருந்து எனக்கும் மேகாவுக்கும் நடுவில் இப்போது வரை நின்றுகொண்டிருக்கிறது.. வந்தவர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பரிசுப் பொருளை எங்கள் கைகளில் திணித்து விட்டு, செல்ஃபோன் கேமிராவிற்கு போஸ் கொடுத்துவிட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் உட்கார்ந்து கதை பேசிவிட்டு, வந்த வேலையைப் பார்க்கச் சென்றார்கள். ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா, ஒன்பதுக்குள் முடிந்து விட்டது.. உறவு, நட்பு எல்லாம் கிளம்பிவிட்டது..

என் குடும்பமும், மேகா குடும்பமும் மட்டும் தான் இப்போது வீட்டில்.. ஹாலில் எல்லோரும் ரிலாக்ஸாக உட்கார்ந்திருந்தோம்.. “பாருங்களேன் மைனி (மதினி) நேத்து தான் கல்யாணம் ஆன மாதிரி இருந்துச்சி, குடுகுடுன்னு பத்து வருசம் ஓடிருச்சே?”  - இது எங்க அம்மா.. 

“ஆமா மைனி.. அந்நியாரம்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் செஞ்சோம்? இப்ப பாருங்க, மூனு மணி நேரத்துல ஒரு கல்யாணத்தையே நடத்தி முடிச்சிட்டாக?! தாலி மட்டும் தான் கட்டல”

”என்ன இருந்தாலும் இதெல்லா வெட்டிச்செலவு தான? இந்த துட்டு இருந்தா இந்த பவனு பிள்ளைக்கி ஏதாவது நக நட்டு செஞ்சிபோட்டிருக்கலாம்ல?”

“யாரு மைனி நாம சொல்றதெல்லாம் கேக்குறா? எல்லாம் அவுக அவுகளா முடிவு எடுத்துக்கிறாக.. இப்ப தெரியாது, இந்த பவனு வளந்து நாளைக்கு அது இப்டி செய்யும் போது தான் தெரியும்.. அப்ப பாக்கலாம் இவுக என்ன சொல்றாகன்னு” என்று சொல்லிவிட்டு, அதைப் பெரிய ஜோக்காக நினைத்து தான் மட்டும் விழுந்து விழுந்து சிரித்தது என் அத்தை..

நான் மேகாவை முறைத்தேன்.. “ம்மா ஒனக்கு ஹார்லிக்ஸ் வேணுமா இல்ல காஃபி ஆத்தவா” என்று டக்கென பேச்சை மாற்றினாள் மேகா..

“இருடீ நானும் மைனியும் பேசிக்கிட்டு இருக்கோம்ல? கொஞ்ச நேரம் கழிச்சி குடிச்சிக்கிறேன்” என்னை இன்னும் டென்சன் ஆக்காமல் விடாது என் அத்தை என நினைத்துக்கொண்டேன். “இப்பக் கூட பாருங்க, இத்தன வருசம் மேகாவும் மாப்ளையும் சேந்து வாழுறதே பெரிய விசயம். இதெல்லாம் நடக்கும்னு நாம என்ன எதிர்பாத்தோமா?”

என் அம்மா கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் என்னைப் பார்த்தார். நான் எழுந்து என் அறைக்குள் சென்றுவிட்டேன்.. மேகா அடுப்படிக்குள் சென்று விட்டாள். என் மாமியாரின் குரல் மட்டும் தொடர்ந்து கேட்டது. “கல்யாணத்துக்கு ஜாதகம் பாக்கும் போதே ஜோசியர் சொன்னாரே, இது இருதார ஜாதகம். இந்தப் பையனுக்கு மொத கல்யாணம் நெலைக்காதுன்னு? ஆனாலும் மாப்ளை மேகாவத்தான் கட்டிக்கிடுவேன்னாரு.. மேகாவும் அப்படித்தான் சொல்லுச்சி. ஏதோ லவ் மேரஜ் மாதிரி ரெண்டு பேரும் அடம் பிடிச்சில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாக? வாழ மரத்துக்குக் கூட தாலி கட்டி வெட்ட மாட்டேன்னு மாப்ள தான் அடம் பிடிச்சே சாதிச்சிட்டாரு கடைசி வரைக்கும்”

”இந்தக் கெழவிக்கு கண் முன்னாடியே பத்து வருசம் வாழ்ந்து காட்டுனாலும் திருப்தி வராது.. ஒவ்வொரு தடவையும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கு.. நீ கண்டுக்காத குமரா.. இந்தா ஹார்லிக்ஸ்”. என் மனதின் ஓட்டங்களை என்னை விட அதிகம் அறிந்திருப்பவள் மேகா தான் என நினைத்துக்கொண்டேன். 

“ஒங்கம்மா என்ன, நான் உன்ன கல்யாணம் பண்ணுன மூனே மாசத்துல அடிச்சி ஒங்க வீட்டுக்கு தொரத்தி விட்ருவேங்கிற நெனப்புலையே தான் கல்யாணம் பண்ணி வச்சாங்களா? இல்ல, அப்படி எதுவும் பண்ணணும்னு எதிர்பாக்குறாங்களா?”

“ஓய் என்ன வாய் நீளுது? எங்க அடிச்சி தொரத்து பாக்கலாம்.. மவனே நடக்குறதே வேற” புஜங்களைத் தட்டி பேட்டை ரவுடி மாதிரி சைகை செய்தாள். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.. “போடீ” என்றேன்.. என் கன்னத்தில் செல்லமாக ஒரு குத்து விட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு மீண்டும் அடுப்படிப் பக்கம் சென்றாள். 

”ஆனா மைனி இப்ப வரைக்கும் எனக்கு அடிக்கடி அத நெனச்சி திக்கு திக்குன்னு தான் இருக்கு.. ஒருத்தனுக்கு நாலு ஜோசியக்காரன்கிட்டல கேட்டோம்? எல்லாரும் “ரெண்டு தார ஜாதகம், ரெண்டு தார ஜாதகம்”னு அதையேத் தான சொன்னாய்ங்க? அதுவும் இல்லாம இப்ப பத்து வருசத்துலயே இப்படி கொண்டாட்டம் தேவையா? ஊர் கண்ணே இங்க தான் பட்டுருக்கும்.. இது போதாதா? எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு மைனி அந்த ஜோசியக்காரன் சொன்னத நெனச்சி” மாமியாரிடம் மாட்டிக்கொண்ட என் அம்மாவை நினைத்தால் பாவமாக இருந்தது..

“ம்மா... ம்மா...”

“இருங்க மைனி என் பையன் கூப்டுறியான்.. இந்தா வந்துட்டேன்ப்பா”. அம்மா எங்கள் அறைக்குள் வந்தார். “என்னப்பா?”

“நீங்க தூங்கலையா? அப்பா எங்க?”

“அப்பாவும் மாமாவும் அப்பதையே வெளிய போனாக.. இன்னும் ஆளக் காணோம்”

“சேரி நீங்க போய் தூங்குங்க. லேட் ஆவுது”

“என்ன மைனி, மாப்ள என்ன சொல்றாரு?” என் அத்தை உள்ளேயே வந்துவிட்டது.. அதன் அக்கப்போர் இன்று இரவு முழுவதும் தொடரும் என்பது தீர்மானமாகிவிட்டது.. “மாப்ள ஆனா நெஜம்மா மாப்ள, எங்க மேகாவெல்லாம் படக்கு படக்குன்னு ஏதாவது பேசிருவா.. என்ன மாதிரி அவளுக்கு சூதானமா பேசத்தெரியாது.. நீங்க எதுவும் டக்குன்னு கோவப்பட்டு எதுவும் செஞ்சிறாதீங்க, சரியா?”

நான் என் மாமியாரைப் பார்த்து சிரிப்பது போல் முகத்தை வைக்க முயற்சி செய்தேன்.. ஆனால் முறைப்பும், கோபமும் என் முகத்தை விட்டுப் போவேனா என்றது. “சரி பவன் தூங்குறா, கொஞ்சம் மெதுவா பேசுங்க” என்றேன்..

“எம்மா நீ இந்த ஜாதகம், ஜோசியம் எல்லாத்தையும் ஒங்கூட மட்டும் வச்சிக்கோ.. சும்மா எங்களையும் டென்சன் ஆக்காத” தேவையான நேரத்தில் எல்லாம் வந்து, எனக்காக குரல் கொடுக்கும் நீ வாழ்க என மேகாவை மனதிற்குள் கும்பிட்டேன்..

“இல்ல பாப்பா, ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காதுல்ல.. ஒனக்கு ஒன்னும் தெரியாது”

“ஆமா நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, நாளைக்கு நைட்டு ட்ரெயின்ல உங்க கூட மேகாவும் சேந்து வந்துருவா.. போதுமா?” லேசான அதட்டலுடன் சொன்னேன்.. 

“சரி மாப்ள எனக்கு ரொம்ப அலுப்பா இருக்கு, நான் தூங்கப்போறேன்” கம்மென்று சென்றுவிட்டது என் மாமியார். அம்மாவும் ஹாலில் சென்று உறங்குவதற்கு ஆயத்தமானார்..

நான் கோபமாக கத்தும் போது மேகா மட்டும் என்னைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள். இப்போது என் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். “ஓய் நான் கோவமா கத்துறேன், ஒனக்கு சிரிப்பு வருதா?”

“ஆமா ஒனக்கு அப்படியே கோவம் வந்துட்டாலும்.. எங்க நாளைக்கே என்ன எங்க அம்மா கூட போகச் சொல்லு பாப்போம்.. கொன்ற மாட்டேன் ஒன்னைய?”

“இத்தன வருசம் சண்ட போடாம, சந்தோசமா வாழந்தாலும் ஒங்கம்மா ஏன் அந்த ஜாதக மேட்டர எப்பப் பாத்தாலும் சொல்லிக்கிட்டே இருக்கு?”

“விடு, அது அப்படித்தான்.. சரி நீ ஏன் எங்கம்மா அதப் பத்தி எப்பப் பேசுனாலும் டென்சன் ஆகுற? உனக்கு அப்படி நடந்துருமோன்னு பயமா இருக்கா குமரா?” என் தலையைக் கோதிக்கொண்டே என் கண்களை நேராகப் பார்த்து, உதடு நிறைய புன்னைகையுடன் என்னிடம் கேட்டாள்.

“கண்டிப்பா நடக்காது” நான் என் கண்களைச் சிமிட்டாமல் அவளை மட்டும் பார்த்துக்கொண்டு சொன்னேன்.

“பெறகெதுக்கு டென்சன் ஆகுற?” என் தலையை இன்னும் இதமாகக் கோதிக்கொண்டே கேட்டாள்.

“இல்ல, இப்படியே ஒவ்வொரு தடவையும் ஒங்கம்மா சொல்லிக்கிட்டே இருந்தா, அது என்னமோ என்னை குத்திக்காட்டுற மாதிரியே இருக்கு”

“நான் தான் ஒன்ன இப்ப குத்தப்போறேன். அது ஒரு லூசுக்கெழவி கத்துதுன்னு பேசாம விடுவியா...”

“அடிப்பாவி ஒங்கம்மாவையே லூசுன்னு சொல்ற?”

“நீ எங்கம்மாவ அப்படிச் சொன்னா எனக்கு கஷ்டமாயிருக்கும்ல, அதான் ஒனக்கு முன்னாடி நானே சொல்லிட்டேன். அடுத்து நீ சொல்ல மாட்டில, அதான் அப்படி.. சரி இன்னும் கொஞ்சம் பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. இரு சீக்கிரம் முடிச்சிட்டு வந்துறேன். தூங்கிறாத, நெறையா பேசணும்”.

“ஹ்ம் சரி, வேமா வா” சிரித்துக்கொண்டே சொன்னேன் நானும்.. 

இது தான் மேகா.. என்னைச் சுற்றி ஒரு நல்ல விதமான சூழலை உருவாக்கிக்கொண்டே இருப்பாள், சாதுர்யமாக பிரச்சனைகளைக் கையாளுவாள், அவளுடைய வேலைகளையும் முடித்துவிடுவாள். எப்போதும் புன்னகை மட்டும் மாறாது அவள் உதட்டில். இன்னமும் ஹாலில் இருந்து என் மாமியார் புலம்பும் சத்தம் மட்டும் கேட்டது.. 

நான் மெதுவாக நடந்து சென்று கிச்சனுக்குள் பார்த்தேன். மேகா வர எப்படியும் இன்னும் கால்மணிநேரம் ஆகும் போல் தெரிந்தது. என் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து லேசான பதட்டம் தொற்றிக்கொண்டது.. மணி இரவு 9.30 இப்போது.. என் ஃபோனை எடுத்தேன்.. அறைக் கதவை சத்தம் கேட்காத அளவுக்கு மெதுவாகச் சாத்தினேன்.. ஃபோனில் நம்பரை அழுத்தினேன்.. என் காதில் வைத்து சுற்றும் முற்றும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தேன்.. மூன்றாவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது எதிர்முனையில்.

“ராம்... நல்லாருக்கியா? ஃபங்ஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா?” பெண் குரல்..

“ஹ்ம் சூப்பரா முடிஞ்சிருச்சி.. பேசலாமா இப்ப? டைம் ஆயிருச்சி?”

“கொஞ்சம் லேட் தான்.. மார்னிங் பேசுவோமா? இல்லன்னா நாளைக்கு நைட் வழக்கம் போல ஏழு மணிக்கு கூப்பிடு, சரியா?”

“ஹ்ம் சரி.. குட் நைட்”

“டேக் கேர்”

ஃபோனை வைத்து விட்டு, மெதுவாக ஓடும் காற்றாடியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.. ராணி... என்னவளாக இருந்திருக்க வேண்டியவள். ஜாதி, மதம், அந்தஸ்து, இனம், வயது, என காதலைப் பிரிக்க இருக்கும் இத்தனை காரணங்களில் ஒன்று போதாதா எங்களையும் பிரிக்க? பிரிந்து விட்டோம்.. ஆனால் பிரியும் போது, கண்களை முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை கீழே விட்டுவிடாமல், லேசானப் புன்னகையுடன் அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்றென்றும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. “டேய் என்னைக்கு இருந்தாலும் நான் தான் ஒன் பொண்டாட்டி. ஆனா என்னால தான் ஒங்கூட எப்பயுமே இருக்க முடியாதே? நீ ஒரு நல்ல பொண்ண ஒடனே கல்யாணம் செஞ்சிக்கோ.. நான் ஒங்கூட இருந்தா எப்படி பாத்துக்குவியோ அதே மாதிரி அவளையும் பாத்துக்கோ.. அவ ரூபத்துல நான் தான் ஒங்கூடவே இருக்கேன்னு நெனச்சிக்கோ.. அவ கூட சண்டையே போடாத. அவ தான் நான். சரியா?”

”என்ன ஃபேனையே மொறச்சு பாத்துக்கிட்டு இருக்க?” என்னை நிகழ்காலத்துக்குக் கூட்டி வந்தது மேகாவின் குரல். 

“ஒன்னுமில்ல நீ தான் நெறையா பேசணும்னு சொன்னீல, அதான் முழிச்சி இருக்க ட்ரை பண்ணுனேன்”

“நெறையா பேசலாம், ஆனா நாளைக்குப் பேசலாம்.. ரொம்ப டயர்ட்டா இருக்கு குமரா..”

”சரிம்மா தூங்கு” நான் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் தலையைக் கோதிவிட ஆரம்பித்தேன்.. என் தோள்களில் தலையைப் புதைத்துக்கொண்டு தூங்கினாள்..



அன்று ராணி சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்றும் மேகாவுடனான என் பந்தத்தை, மேகாவின் அன்பையும் விட அதிக பலமாக இணைத்திருக்கிறது என நம்புகிறேன். அந்த ஜாதக தோசம் ஒரு வகையில் உண்மை தான்.. எனக்கு இரு தாரம் தான்.. ஒன்று என் அருகில், இன்னொன்று என் நினைவில்..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One