NOTA (அ) 49'O' என்னும் பேத்தல்...

Saturday, March 29, 2014

தேர்தல் நெருங்குகிறது என்று போட்டு, இந்த கட்டுரைக்கு முன்னுரை முடிவுரை எல்லாம் செய்து அலங்கரித்து ஃபார்மலாக ஆரம்பிக்க ஆசை தான்.. ஆனால் year end pressureல் சிக்கித்தவிப்பதால் நேராக விசயத்துக்கு வந்துவிடுகிறேன்.. (’சிவகாசிக்காரன் பதிவு என்றாலே நீ................ளமா இருக்கும்’னு சொல்றவங்க எல்லாம் இதப்பாத்து சந்தோசப்பட்டுக்கோங்க)..

இந்திய தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத  அளவிற்கு இந்த தேர்தலில் இரண்டு முக்கிய விசயங்கள் பெரும் பங்காற்ற இருக்கின்றன.. ஒன்று, முதல் முறை ஓட்டுப்போடும் விடலைகள்.. இரண்டு, சமூக வலைத்தளங்கள்.. இந்த சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் அடிக்கடி, NOTA - None Of the Above (போட்டியிடும் எவனுக்கும் ஓட்டுப்போட எனக்கு விருப்பம் இல்லை) மற்றும் 49’O' பற்றி யாராவது எழுதுவதைப் பார்க்க முடிகிறது. எழுதுவது என்றால் சாதாரணமாக அல்ல, என்னமோ NOTAவும், 49'O'வும் இந்திய அரசியலையே புரட்டிப்போட்டு விடும், ஊழல் அரசியல்வாதிகளை எல்லாம் மண்டி போட்டு மன்னிப்பு கேட்க வைக்கும், காதை பிடித்துக்கொண்டு உக்கி போட வைக்கும், நம் காலில் விழுந்து கதற வைக்கும் என்கிற ரேஞ்சில் அடித்து துவைக்கிறார்கள்.. இந்த முதல் முறை ஓட்டுப்போட காத்திருக்கும் விடலைகளும் இதை எல்லாம் “வாவ், சூப்பர்யா” என்கிற ரேஞ்சில் வாய் பிளந்து கேட்டுக்கொண்டு புரட்சி செய்ய ரெடியாக இருக்கிறது.. சில பெரியவர்களும் கூட இதை பெரிய புரட்சி என்பது போல் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.. சரி அவர்கள் எல்லாம் நினைப்பது போல் இந்த நோட்டாவும், 49’O’வும் அனைத்தையும் கிழித்துத்தொங்க விட்டுவிடுமா என்பது தான் இந்த பதிவு..



சரி, இந்த நோட்டா அல்லது 49ஓ என்றால் என்ன?

தேர்தல் நடக்கிறது.. மொத்தம் 10 பேர் போட்டியிடுகிறார்கள்.. அந்த பத்து பேரும் உருப்படியில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. யாருக்கும் ஓட்டுப்போட உங்களுக்கு விருப்பம் இல்லை. ஓட்டுப்போடாமல் வீட்டில் இருந்தால், நம் ஓட்டை வேறு எவனாவது அவன் கட்சிக்கு குத்தி விடுவான் என்றும் பயப்படுகிறீர்கள்.. அதனால் கவுண்டர் ”ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்”னு சொல்கிற மாதிரி ஓட்டு போட்ட மாதிரியும் இருக்கணும், போடாத மாதிரியும் இருக்கணும்னு நெனச்சு நம்ம கவர்மெண்ட் வச்ச ஆப்சன் தான் இந்த 49ஓ... நீங்கள் நேராக பூலிங் பூத்துக்கு சென்று, “எனக்கு யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லை”னு கெத்தாக கூறிவிட்டு, அதற்கென்று இருக்கும் ஒரு பாரத்தில் உங்கள் பொன்னான கையெழுத்தை போட்டுவிட்டு வந்துவிடலாம்.. இதனால் உங்கள் ஓட்டை பிறர் திருடுவதும் தடுக்கப்படும்.. நீங்களும் ஒரு குடிமகனாக உங்கள் கடமையை செய்தது போல் ஆகிவிடும்.. 

தேர்தலின் முக்கிய அம்சமே நாம் யாருக்கு ஓட்டுப்போடுகிறோம் என்னும் ரகசியத்தை பிறருக்கு தெரியாமல் வைத்திருக்க வேண்டும் என்பது தான்.. ஆனால் இந்த 49ஓ என்னும் அம்சம், அந்த ரகசியத்தை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.. நான் 49ஓ க்கு ஓட்டுப்போட்டால், தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட காசு கொடுத்த என் ஏரியாவின் அனைத்து கட்சி பூத் ஏஜெண்ட்டுகளும் கூட்டணி வைத்துக்கொண்டு என்னை வெட்டிவிடுவது போல் முறைப்பார்கள்.. பின் அடுத்த தேர்தலுக்கு என் வீட்டில் ஒரு ஓட்டுக்கு கிடைக்கும் பணமும் குறையலாம்.. சொல்ல முடியாது ஆளே கூட குறையலாம்.. அதனால் அதில் இருந்து தப்பிக்க, 49ஓ வை தேர்தலின் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் இருக்கும் பக்கத்திலேயே NOTA (None Of The Above) என்று தனி பட்டன் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்பது சிலரின் வேண்டுகோள்.. இவ்வளவு தான் 49ஓ மற்றும் NOTA வின் வரலாறு..



சரி இப்போது அந்த 49ஓ பற்றி பலரும் அளந்து விடும் கதைகளைப் பார்க்கலாம்..

1. ஒரு தொகுதியில் 49ஓ அல்லது நோட்டாவுக்கு விழும் ஓட்டு, அந்த தொகுதியில் அதிகம் ஓட்டுப்பெற்றவருக்கும் அவருக்கு அடுத்த அளவில் ஓட்டுப்பெற்றவருக்குமான வித்தியாசத்தை விட அதிகம் இருந்தால், அந்த தொகுதியில் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும்.. அதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பிரதிநிதி ஒரு லட்சம் ஓட்டு பெற்று (கற்பனைக்கு தாங்க, நெஞ்ச பிடிச்சுட்டு ஒக்காந்துறாதீங்க) முதல் இடத்தில் இருக்கிறார்.. இரண்டாம் இடத்தில் இருக்கும் தி.மு.க.க்காரர் 80,000 ஓட்டுக்கள் வாங்கியிருக்கிறார்.. முதல் இடத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் 20000 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருக்கிறார் எண்ணிக்கையின் முடிவில்.. அதே தொகுதியில் 49ஓ வை தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை 20001 அல்லது அதற்கு மேல் இருந்தால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும்..

2. அந்த தொகுதியில் அதிக ஓட்டு பெற்ற வேட்பாளரை விட 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்திருந்தால், அந்த வேட்பாளரை இனி தேர்தலிலேயே நிற்க முடியாமல் செய்துவிடலாம்..

3. 49ஓ தேர்தலில் நல்லவர்களை மட்டும் தான் கொண்டுவரும்..

4. 49ஓ மூலம் அரசியல்வாதிகள் எல்லாம் விக்ரமன் பட ஹீரோ மாதிரி ஒழுக்கமாகவும், ஷங்கர் பட ஹீரோ மாதிரி தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாறிவிடுவார்கள்..

5. 49ஓ தேசத்திலும், அரசியலிலும் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கிவிடும்..

இப்படி இனி யாராவது ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸ் அப்பிலோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, அட டீக்கடையில் பேசினாலோ கூட தயவு செய்து நம்பிவிடாதீர்கள்.. இது எல்லாம் தேசத்தை எப்படியாவது உயர்த்தி விட முடியாதா என்கிற நப்பாசையில் நம் 49ஓ ரசிகர்கள் கிளப்பிவிட்ட உச்சபட்ச கற்பனைகள்..

49ஓ வின் முக்கிய விசயமே தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவரின் ஓட்டு வேஸ்ட் ஆகிவிடாமலும், பிறர் அதை தவறாக பயன்படுத்திவிடாமலும் காப்பாற்றுவதற்காக, நம் அரசியலமைப்பு சட்டம் செய்து கொடுத்திருக்கும் ஒரு வசதி.. அதாவது வாத்தியாரையும் அவர் நடத்தும் பாடத்தையும் பிடிக்கவில்லை.. ஆனாலும் அட்டெண்டன்ஸ் வேண்டும் என்கிற சூழலில் கடமைக்கு வந்து கிளாசில் உட்கார்ந்துவிட்டுப்போவோமே அது போல் தான் இதுவும்.. 


சரி 49ஓ பத்தி தெளிவாகியிருக்கும்னு நெனைக்கிறேன்.. இப்ப 49ஓ பத்தி நம்ம மக்கள் அளந்துவிடும் கதைகள் உண்மையாகவே இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.. அதனால் பிரயோஜனம் ஏதாவது உண்டா என இப்போது பார்க்கலாம்..

முதலில் 49ஓ வுக்கு அதிக ஓட்டு விழுந்தால் மறு தேர்தல் வந்துவிடும் என்பதைப் பற்றி பார்க்கலாம். ஏற்கனவே ஒரு தேர்தலை நடத்தவே நாடும், அரசியல்வாதிகளும் எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.. இந்த நிலையில் மறுதேர்தல் வைத்தால் அதற்கும் செலவாகும். அதனால் பொருளாதாரம் என்ன ஆகும் என யோசித்துக்கொள்ளுங்கள்.. நாட்டின் வளர்ச்சிப்பணிக்கு செலவழிக்க வைத்திருக்கும் பணம் முழுவதும் தேர்தலுக்கு தான் செலவாகும்.. ஒரு தேர்தலுக்கு செலவழிக்கும் காசை திரும்ப எடுக்கவே இவ்வளவு கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள், மறுதேர்தலுக்கும் சேர்த்து செலவழித்தால் எப்படி சுரண்டுவார்கள் என யோசித்துக்கொள்ளுங்கள்..

என்னது? மறுதேர்தலிலும் 49ஓ வென்று, மாறி மாறி மறுதேர்தல் நடந்தால் கடைசியாக ஒரு நல்லவன் ஜெயிக்க மாட்டானா என்கிறீர்களா? எப்படிங்க ஜெயிப்பான்? நல்லவன் முதல் தேர்தல்ல சொந்த காசைப்போட்டு சுயேட்சையாக நிப்பான்.. ரெண்டாவது தேர்தல்ல கடன் வாங்கி நிப்பான்.. அதுவும் உங்க 49ஓ வால் செல்லாத தேர்தல் ஆகிவிட்டால், அவனால் எப்படி மூன்றாவது முறையும் நிற்க முடியும் தேர்தலில்? காசுக்கு எங்கே போவான்? So, don't worry, மீண்டும் அதே பழைய அரசியல்வாதிகள் தான் வருவார்கள்..

49ஓ வை பற்றி ஆதரித்து பேசும் யாராவது தங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சை உட்பட அனைத்து வேட்பாளர்களையும் தெரிந்து வைத்திருப்பார்களா? மேம்போக்காக 4,5 பெரிய கட்சி ஆட்களை பார்த்துவிட்டு “எனக்கு யாரையும் பிடிக்கல” என்று சொல்வது என்ன ஞாயம்? உண்மையில் நல்லவன் வர வேண்டும் என்றால் சுயேட்சை யாருக்காவது ஓட்டுப் போட வேண்டியது தானே? சொந்தக்காசை செலவழித்து தேர்தலில் நிற்கும் ஒரு சுயேட்சை கூடவா நல்லவனாக இருக்க மாட்டான்? கண்டிப்பாக நல்லவன் இருப்பான்.. ஆனால் நமக்கு, நம் இமேஜை கூட்டிக்கொள்ள வேண்டும்.. பெரிய புரட்சியாளன் போல காட்டிக்கொள்ள வேண்டும்.. அதற்கு இந்த ஒன்றுக்கும் உதவாத 49ஓ வை தூக்கிப் பிடித்துப்பேச வேண்டும்.. 

இந்த 49ஓ வை தமிழகத்தில் பிரபலமாக்கிய எழுத்தாளர் ஞானியே (கறுப்பா இருக்கிறவனுக்கு வெள்ளைச்சாமினு பேர் வச்ச மாதிரி இவருக்கு யாரோ ஞானினு பேர் வச்சிட்டாங்க), இப்போது அதையெல்லாம் தூக்கிவீசிவிட்டு ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.. ஹா ஹா அவர் செய்வது அதை விட பெரிய காமெடி.. ”நண்பர்களிடம் சில லட்சங்கள் கடன் வாங்கி தேர்தலில் நிற்கிறேன்.. நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என் தேர்தல் செலவுக்கு” என்று ஃபேஸ்புக்கில் தன் வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து உதவி கேட்கிறார்.. லட்சங்களில் கடன் வாங்கி தேர்தலில் நிற்கும் ஆள் ஒரு வேளை ஜெயித்துவிட்டால், அந்த கடனை எப்படி அடைப்பார்? தன் அதிகாரத்தை பயன்படுத்தி முறையற்ற முறையில் சம்பாதித்து தானே? So, ஓட்டு அரசியலுக்கு வந்துட்டா எல்லாரும் 100% புத்தனாவோ இயேசுவாவோ இருக்க முடியாது.. 

சரி 49 ஓ ஆதரவாளர்களின் கூற்றுப்படி மறுமறுமறுமறு..... மறு தேர்தல் நடந்து எல்லா தொகுதியிலும் நல்லவர்களே எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் என வைத்துக்கொள்வோம்.. நம்மில் எத்தனை பேர் அவரிடம் சொந்த ஊர், சொந்த ஜாதி, உறவினர் என்கிற சப்பைப்பட்டுக்களுடன் உதவி என்று போய் நிற்கமாட்டோம்? தொகுதிக்கு ஒரு ஆளாவது அவரிடம் போய் தன் உறவினர் வீட்டுப் பிள்ளைக்கு மருத்துவ சீட் வாங்கிக்கொடுக்க சொல்வார் எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை என்று.. அவருக்குப்பின் சொந்த ஊர் காண்டிராக்டர் ஒருவர் சொல்வார் ’எவ்வளவு கமிஷன் வேண்டுமென்றாலும் தருகிறேன், எனக்கு அந்த காண்டிராக்ட்டை முடித்து தாருங்கள்’ என்று.. இன்னொருவர் பி.எட் முடித்த தன் மச்சினனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கிக்கொடுக்க சொல்வார், எவ்வளவு லட்சமானாலும் பரவாயில்லை என்று.. அடுத்து ஒரு சொந்த ஜாதிக்காரர் டிரான்ஸ்ஃபருக்காக உதவி கேட்க காத்திருப்பார்.. இத்தனை பேர் பணத்தையும், உறவையும், ஜாதியையும் காட்டி உதவி கேட்கும் போது நல்லவன் கூட கெட்டவனாகத்தான் மாறுவான்.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் தான் செய்வான்..

ஓட்டு அரசியல் என்பதே இருக்கும் கெட்டவர்களில் சுமாரான கெட்டவனை தேர்ந்தெடுப்பது தான்.. எந்த மனிதனும் 100% நல்லவன் கிடையாது. நம்மில் இருந்து வரும் அரசியல்வாதியும் நம்மைப்போல் தான் இருப்பான்.. அவனை மட்டும் கறந்த பால் போல் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன ஞாயம்? நான் எப்போதும் சொல்வது இது தான்.. ஒரு நல்ல அரசியல்வாதி, & அரசு அதிகாரி வேண்டும் என்றால், முதலில் மக்கள் எல்லோரும் ஒழுக்கமான, சிறந்த குடிமகனாக மாற வேண்டும்.. இன்று அரசு அதிகாரிகளை லஞ்சம் வாங்குகிறான் என்றும், அரசியல்வாதிகளை ஊழல் பேர்வழி என்றும் தூற்றுகிறோமே, அவர்களை அப்படி மாற்றியது யார்? லஞ்சத்தையும், ஊழலையும் ஆரம்பித்து வைத்தது சாதாரண குடிமகனாகிய நாம் தானே? நாம் ஒரு சிறந்த குடிமகனாக வாழ்வோம் முதலில்.. பின் அரசியல்வாதியும் அரசு அதிகாரியும் தன்னால் திருந்துவார்கள்.. ஏனென்றால் அரசியல்வாதியும் அரசு அதிகாரிகளும் மக்களில் ஒருவர் தானே? நம்மில் இருந்து வருபவர்கள் தானே? ஒழுக்கம் என்பது ஒரு habit ஆக மாறிவிட்டால் எல்லோரும் நல்லவர்கள் தான்.. பின் 49ஓ வும் தேவையில்லை, நோட்டாவும் தேவை இல்லை.. இனியும் 49 ஓ வை ஏதோ பெரிய பிரம்மாஸ்திரம் போல் நினைத்துக்கொண்டிருக்காமல், உங்கள் தொகுதியில் நிற்கும் சுமாரான கெட்டவருக்கோ, சூப்பரான சுயேட்சைக்கோ உங்கள் ஓட்டைப்போடுங்கள்.. தயவு செய்து நோட்டா, 49 ஓ என்று உங்கள் ஓட்டை வீணாக்காதீர்கள்.. அதனால் பிரயோஜனம் துளியும் இல்லை.. 

மதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு

Saturday, March 15, 2014

கடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ஆகிய எனக்கு ப்ளஸ் ஒன்னில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள், இனி ஜியாமெட்ரியும் கிராப்பும் கிடையாது என்று.. பாடங்கள் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தன.. பள்ளிக்கு போகவே வெறுப்பாக இருக்கும்..

அப்போது தான் ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற?”

“ஆமா அண்ணாச்சி”

“ஃபர்ஸ்ட் க்ரூப்பா?”

“ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்..

“ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா?” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்..

ஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்.. 

“நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு”

“என்னண்ணாச்சி அது?”

“நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்”

“நெஜமாவா?” 

“ஆமா..”

“ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்”

“சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா?”

“ஃபர்ஸ்ட் மார்க் என்ன? அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு? இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு?’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா?”..

நான் தயக்கத்துடன், “அப்புடியா?”

“ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா? அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா?”

“சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே? அவருக்கு இவ்வளவு தான் பவரோ?’னு.. 

மாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”..

“ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா?”

“அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது”

எனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள்? அவரை நம்பியா இனியும் நாம் போவது? சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற? வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்”

’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் தார் போன்ற என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு.. கதை இதோடு முற்றும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.

நம் தமிழ் நாட்டில், அதுவும் குறிப்பாக தென்பகுதிகளில் பக்கத்து வீடு, தூரத்து சொந்தம், ஸ்கூல் டீச்சர், வகுப்புத்தோழன் போன்ற யாராவது ஒருவரிடம் இருந்து இது போன்ற மறைமுக, நேரடி மதமாற்ற முயற்சியை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்திருப்போம்.. நாம் சோர்ந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், சரியான நேரம் வரும் போது, வார்த்தைகளில் கனிவைக்கூட்டி நம்மை மதம் மாற்ற முயற்சிப்பார்கள். ஒரு சின்ன statistics பாருங்கள்..

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம்? அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே? நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம் அண்டை வீட்டில் இருக்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுகிறார்கள்.. தீபாவளிக்கு நம் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. அண்டை வீட்டுக்காரன் என்ன உங்களுக்கு விஷமா கொடுத்துவிடப்போகிறான்? கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா? விருந்தோம்பல் என்கிற ஒரு அடிப்படை பண்பை கூட மதிக்காத, சக மனிதனுக்கான மரியாதையை கூட கொடுக்காத இவர்கள் தான் நாம் கஷ்டப்படும் போது ஓடோடி வந்து நம் மீது அக்கறை காட்டுவார்கள் மதம் மாற்ற.. அவன் கொடுக்கும் சாதாரண பலகாரத்தை நம்பி திங்க மாட்டீர்கள், ஆனால் அவன் உங்களை நம்பி உங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். நல்ல லாஜிக். ரோமன் கத்தோலிக்கர்களை தவிர மற்ற அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்..

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள். 

இவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே?’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.

தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி.. 

அடுத்த விசயம், ”எங்கள் மதத்திற்கு மாறிவிட்டால், ஊமைகள் பேசுவார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், முடவர்கள் நடப்பார்கள்” என்று அள்ளி விடுவார்கள். ஆனால் இன்னமும் கிறிஸ்தவர்களில் குருடர்களும், செவிடர்களும், முடவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள்?” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும்? இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே? ஒரு வேளை அவர்களும் ஏசுநாதரை உண்மையாக நம்புவதில்லையோ? 

”எங்க கம்பெனி காம்ப்ளான குடிச்சா பனை மரத்துல பாதியா ஒசரமா வளந்துரலாம்..”


”எங்க கம்பெனி ஹார்லிக்ஸ குடிச்சா கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போடுற அறிவாளியா ஆயிரலாம்...”



”எங்க கம்பெனி ஃபேர் & லவ்லி போட்டா செக்கச்செவேர்னு ஆயிரலாம்..”


இந்த விளம்பரங்களின் வரிசையில், உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்ற successful ஆன இன்னொரு விளம்பரம்..


“எங்க மதத்துக்கு மாறினா கஷ்டம் எல்லாம் மறஞ்சி, கோடி கோடியா பணம் கொட்டி, வாழ்க்கையே சுபிட்சமாயிரும்.. அற்புதங்கள் நிகழும்”...

இப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் கவலைகளும் எப்படி போகும்? உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.


ஏற்கனவே கேள்விப்பட்ட கதை ஒன்று. ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன்? என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.

மதம் மாற்றுவதில் இப்போது புது யுக்தி நடிகர், நடிகைகளை மதம் மாற்றி அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்வது. பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜனில் இருந்து, நக்மா, ஜூனியர் பாலய்யா, குமரிமுத்து, சாருஹாசன் என்று பலரையும் மதம் மாற்றி ஊர் ஊராக மதப்பிரச்சாரம் செய்ய வைக்கிறார்கள்.. நடிகர்கள், குளிர் பானங்கள், காப்பித்தூள், துணிக்கடைகளுக்கு எல்லாம் விளம்பரம் செய்த காலம் போய், இப்போது மதத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் செந்தில், டி.ஆர்., ராமராஜன் போன்றவர்களும் மதம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள். உண்மையா என்பது சில நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். கொஞ்ச நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வந்து ரஜினிக்காக் ஜெபித்திருக்கிறார். அந்த வெவரம் இல்லாத மனுசனும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். உடனே கிளப்பிவிட்டுவிட்டார்கள் ரஜினி மதம் மாறிவிட்டார், உண்மையான இறைவனை கண்டு பிடித்துவிட்டார் என.. கடவுளை விட அதை பின்பற்றும் நடிகனுக்கு தான் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. கடவுள் தான் அனைத்திலும் பெரியவர், உயர்ந்தவர்.. ஆனால் இவர்கள் கடவுளையும், மதத்தையும் ஒரு சந்தைப்பொருள் போல் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சூர்யாவே சன்ரைஸ் காப்பி தான் குடிக்கிறாராம், நீயும் குடி என்பது போல், சாருஹாசனே ஏசுவை தான் கும்பிடுகிறாராம் என்கிறார்கள். சாமியை விட அதை கும்பிடும் நடிகனுக்கு தான் இங்கு முன்னுரிமை. கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது..

ஆனால் நான் சொன்ன எதையுமே ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். “நாங்களா மதம் மாற்றுகிறோம்? இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும்? அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும்? நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே? இப்படி ஊர் ஊராக மேடை நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்த மனிதர் கூட தன் கடைசி காலத்தில் இறைவனை நம்பாமல் ஆஸ்பத்திரியில் டாக்டரைத்தான் நம்பினார். ஏன் அவர் தன்னையும் குணப்படுத்த ஒரு கூட்டம் போட்டு மேடையில் ஆண்டவரிடம் ஜெபித்திருக்கலாமே? 

மதம் மாறுவதால் ஒருவனின் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடலாமே? இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே? ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு? அதுக்கு என்ன காரணம்? மதம் மாறினால் செல்வம் கொழிக்கும் என்றால் இன்று உலகில் எந்த சர்ச்சுக்கும் வெளியில் பிச்சைக்காரர்கள் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் கோடீஸ்வரராக, நோயற்றவராக மாறியிருப்பார்கள். ஆனால் இல்லையே? கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்? பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன்? இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை? மத விற்பனை வேலையில் இருக்கும் யாராவது இதற்கு பதில் சொன்னால் தேவலை.

மதம், கடவுள் இதெல்லாம் கஷ்ட காலத்தில் நமக்கு ஒரு வழித்துணையாக இருக்கவும், தைரியத்திற்காகவும் நாமே படைத்துக்கொண்டே விசயங்கள், ஒரு நம்பிக்கை, அவ்வளவு தான்.. அந்த நம்பிக்கையால் வெற்றி பெறும் போதும் அகம்பாவம் தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெற்றி பெற்றதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறி நன்றி செலுத்துகிறோம்.. மற்றபடி உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து “உன்னை நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்”னு உங்கள் பெர்சனலுக்குள் நுழைவது தான் கடவுளின் வேலையா? இல்லை, இல்லவே இல்லை. கடவுள் - ஒரு வேளை இருந்தால் - இந்த அண்ட சராசரத்திற்கென்று என்று, அதன் செயல்பாடுகளுக்கென்று ஒரு நெட்வொர்க்கை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமைத்திருப்பார். இப்போது அவர் ஒரு பெரிய நெட்வொர்க் கம்பெனியின் முதலாளி. நீங்களும் நானும் அந்த நெட்வொர்க்கின் சிறு புள்ளியில் இருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். அவ்வளவு தான். அந்த நெட்வொர்க்கை நாம் சிதைக்காத வரை கடவுளுக்கு உங்களையோ என்னையோ பெர்சனலாக தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் இந்த நெட்வொர்க் மனிதனாகிய நம் எல்லையைத்தாண்டி, நம் சக்தியை மீறி இருப்பது. அதனால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள், உங்கள் வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்கள் அதையெல்லாம் சமாளித்து, சரிக்கட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளைக்கும் தீர்வு சொல்ல, உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.

So, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். எந்த சாமியும் நீங்கள் மதம் மாறி prayer பண்ணும் அழகைப்பார்த்து, அப்படியே உருகி, உங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி உங்களுக்கு பொன்னுச்சாமி ஓட்டல் ஃபுல் மீல்ஸையோ, அஞ்சப்பரின் அயிரை மீன் குழம்பையோ கொடுக்காது.. உங்களை மதம் மாற்ற நினைப்பவருக்கும் அது தான்.. “ஆஹா நம்ம மதத்துக்கு எத்தனை பேரை புதுசா கூட்டி வந்திருக்கிறான்? இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க?” என்றெல்லாம் புலங்காகிதம் அடைந்து கடவுள் அவன் வீட்டிலும் காலிங் பெல் எல்லாம் அடித்து சோறு கொடுக்க மாட்டார். அவன் பார்க்கும் மத விற்பனை வேலையை பார்த்தால் தான் அவனுக்கும் சோறு.. அந்த வேலைக்கு முறையான ஊதியம் இல்லையென்றால் அவனும் வேறு வேலைக்கு போய் விடுவான்..

மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...

இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகளின் உண்மை செயல்பாடுகளை அறிய இங்கே சொடுக்கவும்.. இதை எழுதியவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர்..



பள்ளி பொதுத் தேர்வுகள் - சில அடிப்படை நிஜங்கள்..

Monday, March 3, 2014

எங்கள் உறவினர் ஒருவரின் பையன் இருந்தான். என் வயது தான் அவனுக்கும்.. அவன் கெட்ட நேரமோ என்னமோ, அவன் ஒன்னாங்கிளாஸில் இருந்தே முதல் ரேன்க் எடுத்துப்பழகிவிட்டான்.. வீட்டிலும் எப்போதும் படி, ஒப்பி, எழுது என்று ஒரே டார்ச்சராக இருக்கும்.. அவனும் ஸ்விட்ச் போட்ட வாஷிங் மெஷின் போல் இங்கிட்டு அங்கிட்டும் புத்தகத்தை புரட்டி படித்து, ஒப்பித்து, எழுதிக்கொண்டிருப்பான்.. ஒரு முறை கூட ‘படிக்க மாட்டேன்’ என்று எங்களை போல் முரண்டு பிடித்ததில்லை. விடுமுறை நாட்களில் நாங்கள் எல்லாம் விளையாண்டுகொண்டிருப்போம் ஜாலியாக.. அவன் விளையாட வர மாட்டான்.. கேட்டால், “எங்க அம்மா இந்த ஏழாவது லெஸ்ஸன ஒப்பிச்சிட்டு போய் தான் வெளாடணும்னு சொல்லிருக்காங்க”னு சோகமாக சொல்வான். அவன் ஏழாவது லெஸ்ஸனை ஒப்பித்துவிட்டு வரும் போது இரவு ஆகியிருக்கும்.. நாங்கள் எல்லாம் எங்கள் வீட்டிற்கு திரும்பியிருப்போம்.. அவன் தனியாக ஏதாவதாவது விளையாடலாம் என நினைக்கும் போது அவன் அப்பா வந்துவிடுவார். காலையில் இருந்து அவன் அம்மா செய்த டார்ச்சர்களை இப்போது அப்பா செய்வார். அவனுடைய ஒவ்வொரு விடுமுறையிலும் இப்படித்தான்.. இப்படியே இருந்ததால் எங்களால் அவனை எங்கள் செட்டில் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. அவனும்  எங்களோடு எல்லாம் பேச மாட்டான். எங்களைப்போல் கிண்டலாக பேச வராது அவனுக்கு. எப்போதும் புத்தகம் தான்..

எங்கள் அம்மா, அப்பாவும் அவர்கள் வீட்டில் சொல்வார்கள், அவனை கொஞ்ச நேரமாவது விளையாட அனுப்பச்சொல்லி.. அவர்கள் வீட்டில் மறுத்துவிடுவார்கள்.. “உலகத்துல போட்டி ஜாஸ்தியாயிருச்சி.. எதிலயும் ஃபர்ஸ்ட்டா இருந்தா தான் மதிப்பு” என்பார் அவங்க அப்பா.. “என் பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குனா தான சொந்தக்காரங்க மத்தியில பெருமையா இருக்கும்?” - இது அவங்க அம்மா.. நம்பினால் நம்புங்கள், அவன் ஏழாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாக வரவில்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவனுடைய பெற்றோர்கள் அவனிடம் ஒரு மாதம் முழுவதும் பேசவில்லை.. ஒரு முக்கியமான திருமணத்திற்கு கூட வரவில்லை.. சொந்தக்காரர்கள் மத்தியில் அவமானமாக இருக்குமாம்.. ஒவ்வொரு பரிட்சை முடிந்ததும் நாங்களெல்லாம் ‘செத்தவனுக்கு எதுக்குடா ஜாதகம் பாத்துக்கிட்டு?’னு அந்த கொஸ்டின் பேப்பரை தூர வீசிவிடுவோம்.. இவன் வீட்டிற்கு போய் அவன் அம்மாவிடம் அவன் எழுதிய பதில்களை எல்லாம் சொல்ல வேண்டும். அவர் புக்கை வைத்து செக் பண்ணிக்கொண்டிருப்பார்.. எல்லாம் சரி என்கிற திருப்தி வந்தவுடன் தான் அவன் அடுத்த தேர்வுக்கே படிக்க முடியும்.

இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில் அவன் பத்தாம் வகுப்பில் ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்துவிட்டான்.. நாங்கள் எல்லாம் அவனை பெருமையாக பார்த்தோம்.. உறவினர்கள் எல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள்.. அவன் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? “ஆமா என்னத்த பெருசா கிழிச்சுட்டான்? போயும் போயும் ஸ்கூல் ஃபர்ஸ்டு தான? ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தவனுக்கும்ம் இவன் எழுதுன அதே கொஸ்டின் பேப்பர் தான? அவனால ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர முடியுது, இவனால முடியலையா? அட அது கூட வேண்டாம். ஒரு டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்? அது கூட இல்லன்னா எதுக்கு பிள்ளன்னு ஒன்னு இருக்கணும்? இவன துட்டு கட்டி படிக்க வச்சதுக்கு இந்த சந்தோசம் கூட எங்களுக்கு இல்லையா? ஹ்ம் அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணிருக்கணும். அந்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்த பிள்ளைகளோட பெத்தவுக எல்லாம் புண்ணியம் பண்ணுனவுகளா இருக்கும்” இப்படி புலம்பிக்கொண்டே இருந்தார்கள்.. அவன் எடுத்த மார்க் 489!!!

ஊர் உலகமே அவன் எடுத்த மார்க்கை கொண்டாடும் போது பெற்றவர்கள் அவனை தூற்றிக்கொண்டிருந்தார்கள்.. அவர்கள் ஆசை எல்லாம் பிள்ளையை வைத்து தாங்கள் பெருமை பீற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு வழி இல்லாமல் போய் விட்டதே என்கிற கடுப்பு. சொந்தக்காரர்கள், தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரிடமும் தம்பட்டம் அடித்தாகிவிட்டது தன் பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான் அப்படி இப்படி என.. இப்போது அது இல்லையென்றதும் அந்தப்பையன் எடுத்த நல்ல மதிப்பெண் கூட அவர்களின் கண்ணுக்கு தெரியவில்லை. அடுத்த இரண்டு வருடம் அவனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பாமல் ப்ளஸ் டூ வுக்காக 24மணிநேரமும் படிப்பை சுவாசித்து, படிப்பை தின்று, படிப்பை மென்று, படிப்பை செரித்து, படிப்பை கழித்து, படிப்பில் தூங்கி, படிப்பில் குளித்து, படிப்பில் படித்து என்று கிடந்தான். ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் நேரம் அவன் பெற்றோர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர் ஒவ்வொரு வீட்டிலும் ‘எம்பையன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவியான் பாரு’ என்று.. ரிசல்ட் வந்தது.. அவன் பள்ளி முதலிடம் கூட வாங்கவில்லை.

பின் என்ன? வழக்கம் போல் அவனை வீட்டில் கரித்துகொட்டி, அவனது தன்னம்பிக்கையை சிதைத்து, ‘நீ எதற்கும் லாயக்கு இல்லை’ என்கிற முத்திரையை சில வருடங்கள் அவன் மீது குத்தி, வசை மொழியை பல காலம் சொல்லி, சொந்த பந்தங்களை கொஞ்ச நாட்களுக்கு அண்டாமல் இருந்தார்கள்.. இப்போது அவன் ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வெளிநாட்டில் நன்றாக சம்பாதித்துக்கொண்டு சந்தோசமாகத்தான் இருக்கிறான் என்பது வேறு விசயம். ஆனால் அவன் இழந்த அந்த குழந்தைப்பருவ சந்தோசம், தெருக்கிரிக்கெட், கரண்ட் போன இரவின் ஒழிஞ்ச விளையாட்டு, விடலை வயதில் தவற விட்ட செக்ஸ் ஜோக்ஸ், சினிமா அரட்டை, முதல் காதல் இதெல்லாம் திரும்ப வருமா அவனுக்கு? அவனோடு சுமாராக படித்த நாங்களும் நன்றாகத்தான் இருக்கிறோம் இப்போது. அவன் பெற்றோர்கள் இப்போது எங்களை பொறாமையாக பார்க்கிறார்கள், அவர்கள் பையனை விட நாங்கள் ஜாலியாக, அறிவு கூர்மையானவர்களாக இருக்கிறோம் என்று.. இதான் வாழ்க்கை..

இந்த பத்திரிகை டிவிக்கள் எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் பத்து, ப்ளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் ஆட்களை எல்லாம் ஃபோட்டொ பிடித்து, பேட்டி எடுத்து போடுகிறார்களே, அவர்கள் எல்லாம் ஒரு 5,6 வருடம் கழித்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என ஏன் எந்த பத்திரிகையும், டிவியும் பேட்டி எடுப்பதில்லை? சிம்பிள்.. அந்த ஒரு நாள் மட்டும் தான் அவர்கள் ஹீரோக்கள்.. அடுத்த நாளில் இருந்தே அவர்கள் சாதாரண மனிதர்கள் தான்.. 5,6 வருடங்கள் கழிந்த பின் அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏதோ ஒரு ஸாஃப்ட்வேர் கம்பெனியில் கோட் எழுதிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு windowவில் ஃபேஸ்புக்கில் சாட் செய்துகொண்டு. வீக்கெண்டில் கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு EA போவார்கள். அல்லது ஏதாவது ஒரு க்ளினிக்கில் ஊசி குத்திக்கொண்டிருப்பார்கள்.. முடிந்தால் ஒரு டாக்டர் பெண்ணையே திருமணம் செய்திருப்பார்கள்.. லக் இருக்கும் சிலர் விசா வாங்கி இதே வேலையை ஃபாரினில் செய்து, டாலர், யூரோவில் வீட்டிற்கு பணம் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். EMIல் கார், வீடு வாங்கியிருப்பார்கள். அவ்வளவு தானே?.. இதைத்தானே ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்காத நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்?

ஆனால் பெற்றவர்களுக்கு ஏன் இந்த விசயங்கள் புரியவில்லை? புரிகிறது, அவர்களுக்கு இதெல்லாம் நன்றாக புரிகிறது. ஆனாலும் ஒரு பெருமைக்காக, வீம்புக்காக, தங்கள் பிள்ளைகளின் மேல் தங்கள் கௌரவத்தை கழுதைக்கு பொதி ஏற்றுவது போல் ஏற்றுகிறார்கள். Monthly Testல் ஒரு மார்க் குறைந்துவிட்டால் கூட குதி குதி என்று குதிப்பார்கள். வகுப்பே அவன் 99 எடுத்ததற்கு கை தட்டி பாராட்டியிருக்கும். அவனை பிடிக்காத சக மாணவன் கூட, “எப்டிறா இவேன் மட்டும் இப்டி மார்க் வாங்குறியான்?” என ஆச்சரியப்படுவான்.. ஆனால் அவனுக்கு முழுதாக அங்கீகாரம் கிடைக்க வேண்டிய வீட்டில், அவன் நூறு மார்க்கை தவற விட்டதற்கு வசவு விழும். அந்த குழந்தை இதனால் மனதளவில் எப்படி பாதிக்கப்படுவான் என்பதை அவர்கள் யோசிப்பதில்லை. பரிட்சையில் பாஸானதற்கே மிட்டாய் கொடுத்து கொண்டாடிக்கொண்டிருப்பார்கள் மாணவர்கள், ஆனால் இவனோ 99 தானே எடுத்திருக்கிறோம், எப்படி வீட்டுக்கு செல்வது என பயந்து கொண்டிருப்பான். 

அவனால் அதன் பின் வாழ்க்கையில் சிறு தோல்வியை கூட தாங்கிக்கொள்ள முடியாது.. மனதைரியம் சுத்தமாகப்போய் விடும். எதைப்பார்த்தாலும் பயமாக இருக்கும். ஒரு வித வெறுமையும் வெறுப்பும் மனதை நிறைத்துவிடும். நூறு மார்க் எடுத்தால் அதைக்கூட கொண்டாடாமல் “ஏன் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கவில்லை?” என ஒரு பெத்தவன் கேட்டால் அந்த குழந்தையை யார் தான் பாராட்டுவது? இன்று பாராட்டினால் நாளை அதே குழந்தை நல்ல மார்க் எடுக்காதா? ஒரு வேளை எடுக்காவிட்டாலும், அடுத்த முறை எப்படி எடுப்பது என ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும். பாராட்டாமல் ஏசிக்கொண்டே இருந்தால், அது ஒவ்வொரு முறை மார்க் குறையும் போதும் படிப்பின் மீது எரிச்சல் தான் வரும். ஒரு நிலையில் அந்த எரிச்சல் படிப்பையே மொத்தமாக தூக்கி வீசிவிட வைத்துவிடும்.. அப்படி ஒரு உதாரணம் தான் கீழே கொடுக்கப்பட்டிருப்பது...

(கீழிருக்கும் உதாரணத்தின் உண்மைத்தன்மை சரிவரத் தெரியாததால் அது நீக்கப்படுகிறது.. உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை பகிர்ந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்..)

.................................................................................................................. படிப்பை தூக்கி எறிந்துவிட்டு வேறு எதையோ நாடிச்செல்லும் அளவிற்கு ஒரு மாணவன் இருக்கிறான் என்றால் அவன் மக்கு பையானாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது போன்று படிப்பால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று, அன்பு, பாசம் எல்லாம் கிடைக்காதா என ஏங்கிப்போன பையனாக கூட இருக்கலாம்..

இவ்வளவு நேரம் பெற்றவர்களுக்கு சொல்லியாகிவிட்டது. இப்போது மாணவர்களுக்கு.. இவ்வளவு பேசுவதனால் நான் ஏதோ மதிபெண்ணிற்கு எதிரி, மதிப்பெண்ணே கூடாது என்று சொல்கிறவன் அல்ல.. ப்ளஸ் ஒன்னில் முதல் குரூப் படிக்க ஆசை என்றால் அதற்கென்று இருக்கும் கட்-ஆஃப் மதிப்பெண்ணை எடுக்க படித்துத்தான் ஆக வேண்டும். அந்த அக்கறை அம்மா, அப்பா என யாரும் சொல்லி வர வேண்டியதில்லை. அண்ணா பல்கலையில் சீட் வேண்டும் என்றால் அதற்கும் அப்படித்தான்.. IITக்கு ஆசை என்றாலும் அதே..  ஒரு வேளை உங்கள் ஆசை நிறைவேறவில்லை என்றால் மீண்டும் முயலுங்கள். அல்லது கிடைத்த மதிப்பெண்ணிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். ஆனால் ஒன்று, எதை செய்தாலும் முழு மனதுடன் செய்யுங்கள்.

எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் விளையாட்டாக சொல்வார், “பெண் கிடைக்க வேண்டுமானால், நான்கு இலக்க ப்ளஸ் டூ  மார்க்கும், ஐந்து இலக்க சம்பளமும் இருக்க வேண்டும்” என.. உண்மை தான், உங்களை சுற்றியிருக்கும் உலகம் உங்களை நம்பர்களால் தான் அளவெடுக்கும் என்பதை மட்டும் மறந்து விட வேண்டாம். படிக்கும் போது மார்க், ரேன்க், வேலைக்கு சென்ற பின் சம்பளம், கல்யாணம் ஆகும் போது பவுன் கணக்கு, குடும்பம், பிள்ளைகள் என ஆன பின் வீட்டில் இருக்கும் ஏசி, கார், பைக், வீடு என அனைத்தும் எத்தனை இருக்கின்றன என்கிற கணக்கு. இந்த கணக்குகள் எல்லாம் முதலில் உங்களை திருப்திப்படுத்த வேண்டும். இந்த போட்டி மிகுந்த உலகில், நம்பர்களை வைத்து உங்களை மதிப்பிடும் இந்த உலகில் நீங்கள் உங்களை எப்படி நிலைநிறுத்தப்போகிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். அட்லீஸ்ட் உங்கள் வருங்கால வாழ்க்கை உங்களுக்காவது திருப்திகரமாய் அமைய என்ன செய்ய வேண்டும் என இப்போதே முடிவு செய்து கொள்ளுங்கள். 

சரி இப்போது மீண்டும் பெற்றவர்களுக்கு. உங்கள் கனவை, கௌரவத்தை எல்லாம் சுமக்கும் அளவிற்கு பிள்ளைகளுக்கு சக்தி போதாது. நீங்கள் உறவினர்களிடம் அவனை டாக்டர் ஆக்கிக்காட்டுகிறேன் என்று சொன்னதற்காக, ஒரு பையனை அந்த குழந்தைப்பருவத்தின் எந்த வித அனுபவத்தை பெற விடாமல் தடுப்பதில் என்ன ஞாயம் இருக்கிறது? உறவினர்களிடம் பெருமை பீற்றுவதற்காகவும், ஒரு நாள் மீடியா வெளிச்சத்திற்காகவும் பிள்ளைகளை மனப்பாடம் செய்து கக்கும் ஒரு மிஷின் போல மாற்றாதீர்கள். காசு இருக்கும் எல்லோரும் இப்போது பி.ஈ. படிக்கலாம், மருத்துவம் படிக்கலாம்.. ஆனால் அந்த துறையில் எப்படி முன்னேறுவது என்பதற்கு அவனுக்கு பகுத்தறிவும், practical updationம், பாடப்புத்தகத்தை தாண்டிய பரந்த சிந்திக்கும் திறனும் வேண்டும். இதை புத்தகம் சொல்லிக்கொடுக்காது. படிப்பிற்கு மதிப்பு குறைந்து எல்லாமே பணம் என்று ஆகிப்போன உலகில் எப்படி பிழைப்பது என்கிற practicalityஐ அவனுக்கு கற்றுக்கொடுங்கள். அவனுக்கு எல்லைக்குட்பட்ட சுதந்திரம் கொடுங்கள். அது தான் நீங்கள் அவன் வாழ்க்கைக்கு செய்யும் மிகப்பெரிய நல்ல விசயம். 

தன்னைப்போல் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று நினைத்து தான் திருபாய் அம்பானி கூட முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் வளர்த்திருப்பார்.. ஆனால் அதே நினைப்பில் தான் இன்று அவர்கள் இருவரும் தங்கள் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் அவரவர் வாழ்வில் திருப்தி இல்லை. அதனால் தன் பிள்ளைகளை ஃபெர்ஃபெக்ட் ஆக்க துடிக்கின்றனர். ரேன்க் எடுத்தால் எல்லாம் கிடைத்துவிடும் என நம்புகின்றனர்.. ரேன்க் எடுக்காவிட்டாலும் வாழ்க்கை விரிந்து கிடக்கிறது.. இந்த உலகில் நாம் பார்த்து பிரமிக்கும், ஆச்சரியப்படும் எல்லோரும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுத்தவர்கள் அல்ல, தினமும் ஆசையாக கண்ணாடியில் பார்க்கும் நாம் உட்பட.. 8 லட்சம் பேரில் ஒருவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவான்.. ஆனால் வாழ்க்கை அந்த எட்டு லட்சம் பேருக்கும் ஆனது தான்.. நம் பிள்ளை அந்த எட்டு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் பிள்ளை நமக்கு ஸ்பெசல் தான். முதலாவதாக வரும் பிள்ளை தான் எனக்கு வேண்டும் என்றால் நீங்கள் பெற்றோரே அல்ல.. உங்கள் பிள்ளைக்கு இருக்கும் திறமைக்கு, அது வாழ்வில் முன்னேற சரியான அடிப்படையை அமைத்து கொடுத்தால் தான் நீங்கள் சிறந்த பெற்றோர். அப்படிப்பட்ட சிறந்த பெற்றோருக்கு கண்டிப்பாக சிறந்த பிள்ளைகள் அமையும்.. சிறந்த பிள்ளைகள் என நான் சொல்வது ரேன்க்கை மட்டும் வைத்து அல்ல, என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்..


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One