கெட்ட வார்த்தைகளும், டிவி சேனல்களின் சென்சாரும்..

Wednesday, August 20, 2014

இந்தக் கெட்ட வார்த்தைகள் எந்தளவுக்குக் கெட்டவை? அவைகள் சமூகத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எந்த அளவுக்கு தீங்கைக் கொடுக்ககூடியவை என்று எனக்குத் தெரியவில்லை.. மனதில் இருக்கும் கஷ்டத்தை, வக்கிரத்தை, கோபத்தை, சந்தோசத்தை, இயலாமையை செயலில் காட்ட முடியாதவர்களுக்கான ஒரு வடிகாலே கெட்ட வார்த்தை என்பது என் அவதானிப்பு.. கெட்ட வார்த்தை என்பது அந்த அளவுக்குக் கெட்ட விசயம் அல்ல என்பதும் என் கருத்து.. கெட்ட வார்த்தை என்றாலே ”அய்யோ அபச்சாரம்” என்று அசிங்கமாக நினைப்பவர்கள் இனி மேற்கொண்டு இதைப் படிக்காமல் இருப்பது நல்லது.. ஏகத்திற்கும் சினிமாவில் வந்த கெட்ட வார்த்தைகள் மலிந்து காணப்படும் ஒரு கட்டுரை இது.. இனி மேட்டருக்கு வருகிறேன்..

நேற்று கே டிவியில் ’மகாநதி’ படம் போட்டார்கள்.. அந்தப் படத்தில் கல்கத்தாவில் ஒரு டாக்ஸிக்காரனும், கமலும், ராஜேஷூம் மூன்று வெவ்வேறுக் காட்சிகளில் ஒரு கெட்ட வார்த்தையைப் படத்தில் சொல்கிறார்கள்.. அது சென்சார் கட் இல்லாமல் அப்படியே வருகிறது... இத்தனைக்கும் அந்தக் காட்சிகளுக்கு அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான வார்த்தை அல்ல.. ஆனால் கமல் அவரது மகளை சோனாகாச்சியில் இருந்து மீட்டு வந்த பின், இரவில் தூக்கத்தில் அவள் முனகுவது போல் ஒரு காட்சி வரும்.. அப்போது அதே வார்த்தையை அந்தப் பெண் சொல்கிறாள்.. ஆனால் கே டிவியினால் அந்த வார்த்தை சென்சார் கட் செய்யப்படுகிறது.. உண்மையில் அந்த இடத்தில் அந்த வார்த்தை அவ்வளவு வலியையும், அழுத்தத்தையும் கொடுக்கக்கூடியது.. ஆனால் கட் செய்யப்பட்டு விட்டது.. ஏன் என்றுத் தெரியவில்லை.. ஒரு வேளை ஆண்கள் மட்டும் சகஜமாக அந்த வார்த்தையைச் சொல்லலாம், பெண் சொல்லக்கூடாது என்கிற கலாச்சார அக்கறையாக இருக்கலாம்.. அல்லது பெண்கள் கெட்ட வார்த்தை பேசுவது போன்றக் காட்சியைக் காட்டினால் தங்கள் டிவியின் மதிப்பு போய் விடுவதாகக் கூட நினைக்கலாம்.. அது அவர்களுக்கே வெளிச்சம்..





இப்போது சில நாட்களாகத் தான் நான் இந்தப் பழக்கத்தைக் கவனிக்கிறேன்.. அதாவது டிவிக்காரர்களே தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக்கொண்டு சென்சார் கட் செய்துகொள்வதை.. ஆனால் காமெடிக் காட்சிகளில் கூட அவர்கள் சென்சார் கட் என்னும் பெயரில் செய்யும் அட்டூழியங்கள் தான் தாங்க முடியாதவை..

தினமும் காலை 8.45க்கு ’சூரிய வணக்கம்’ என்னும் நிகழ்ச்சி முடிந்ததும் சன் டிவியில் 10மணி வரை நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள்.. அதில் வடிவேலு சொல்லும், “ங்கொய்யால” என்னும் வார்த்தை கூட mute செய்யப்படுகிறது.. இரண்டு நாட்களுக்கு முன் ‘ஜெய்ஹிந்த்’ படக்காமெடி போட்டார்கள்.. அதில் “ஷோலே” படப்பாடலைப் பாடிக்கொண்டு செந்தில் இன்னும் இருவருடன் பைக்கில் வருவார்... அவர்களை மடக்கிப் பிடிக்கும் கவுண்டர், “நீ அமிதாப்பச்சன், நீ தர்மேந்திரா, நீ என்ன அஸ்ரானியா இல்ல மசிராணியா?” என்பார்.. அதைக் கூட ம்யூட் செய்து விட்டார்கள்.. அந்த இடத்தில் மசுராணி என்பதை யாரும் கெட்ட வார்த்தையாக எடுக்கவும் மாட்டார்கள்.. அந்தக் காட்சியில் அந்த வார்த்தை எதுவும் கெட்ட அர்த்தத்தையையோ அல்லது சமூகத்தையே கெடுத்து விடும் விசயத்தையோ சொல்லவில்லை.. நக்கலாக, ரைமிங்காக சொல்லும் ஒரு வார்த்தை அது.. ஆனால் அது மியூட் ஆகிறது.. அதைக் கட் செய்து என்னத்தைச் சொல்ல வருகிறார்கள் இவர்கள்? 



“ஹலோ மசிருன்னாலும் கெட்ட வார்த்தை தான்.. காமெடிக்குக் கூட கெட்ட வார்த்தையை சகித்துக்கொள்ள முடியாது.. இந்த மாதிரி ஒரு வார்த்தையைக் கட் செய்த டிவியை நான் பாராட்டியேத் தீருவேன்” என்கிறீர்களா? இன்னும் சொல்கிறேன், கேளுங்கள்.. அதே படத்தில் அந்தக் காட்சியைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் லாக்-அப்பில் போடுவார் கவுண்டர்.. அப்போது ஒரு வசனம் பேசுவார்.. “தம்பி பேரு புலிக்குட்டி, அண்ணே பேரு பூனைக்குட்டி, தாயோழி மிருகப் பரம்பரையா இருக்கும் போல” என்று.. அந்த வார்த்தையை அப்படியே மியூட் செய்யாமல் தான் போடுகிறார்கள் சன் டிவியில்.. மயிரு என்னும் வார்த்தையை விட தாயோழி என்னும் வார்த்தை ரொம்ப நல்ல வார்த்தையா? மிக மிக மோசமான வார்த்தை அது.. மயிரு என்பதை மியூட் செய்வதில் காட்டிய அக்கறை அந்த இன்னொரு வார்த்தையை கட் செய்வதில் இல்லாமல் போனது ஏன்? அதே போல் தான் ’மகாநதி’யில்.. ஒரு கார் டிரைவர், ”தேவடியாப் பசங்க” என்கிறான்... கமலும் அதே வார்த்தையைச் சொல்கிறார்.. ராஜேஷ் “நாட்டுல தேவடியாத்தனத்துக்கு துணை போறவனுக்குத் தான் மரியாதை” என்கிறார்.. இதில் எல்லாம் கட் ஆகாத, மியூட் ஆகாத வசனம், கமலின் மகள், “விடுங்கடா தேவடியாப்பசங்களா, ஒரு நாளைக்கு எத்தனப்பேருடா?” என்று கேட்கும் போது மட்டும் அக்கறை பொத்துக்கொண்டு வருவது ஏன்? 

அட அவ்வளவு ஏன் போன மாதம் “மூன்று முகம்” படம் போட்டார்கள்.. அதில் ஃப்ளாஷ்பேக்கில் அலெக்ஸ் பாண்டியன் ரஜினி, அவர் மனைவியிடம் கொஞ்சுவது போல் வரும் பலக் காட்சிகளை வெட்டியே விட்டார்கள்.. ஆனால் அதை விட மோசமானக் காட்சிகள் இருக்கும் சாக்லேட், குஷி போன்றப் படங்களை அப்படியேப் போடுவார்கள்.. ’மூன்று முக’த்தில் செந்தாமரையிடம் போலீஸ் ஸ்டேசனில் வீராவேசமாகப் பேசி, அவரை லாக்-அப்பில் போட்டுவிட்டு ஸ்டைலாக சிகரெட்டை வாயில் தூக்கிப்போட்டு ‘bastards' என்பார் ரஜினி... அதையும் மியூட்டி விட்டார்கள்.. இங்கிலீஷ்ல கூட கெட்ட வார்த்தையை யாரும் தெரிஞ்சுக்கக் கூடாது என்று, ஆங்கிலத்தில் bastard என்று சொன்னால் மியூட் செய்யும் அக்கறை, தமிழில் தேவடியாப்பய என்று சொல்லும் போது மட்டும் இல்லாமல் போனது ஏனோ? அதைக்கூட ஒரு பெண் சொன்னால் மியூட் செய்து விடுகிறார்கள்.. அதே போல் ”நாடோடிகள்” படத்தில் சசிக்குமாரின் நண்பன் கிணற்றில் விழுந்து விடுவார்.. அது தெரிந்தவுடன், நண்பனின் பெயரைக் கத்திக்கொண்டே ஓடி வரும் சசிக்குமார் தன் இன்னொரு நண்பனிடம், “அவனுக்குத் தான் நீச்சல் தெரியாதுன்னு தெரியும்லடா, அப்புறம் என்ன ’புழுத்திக்குடா’ அவன இங்க கூட்டிட்டு வந்த?” என்பார்.. தென்தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும் அது ஒரு கெட்ட வார்த்தை என.. அதுவும் இப்போது வரை கட்டோ, மியூட்டோ செய்யப்படாமல் தான் ஒலி/ஒளிபரப்பப்பட்டு வருகிறது... கெட்ட வார்த்தை லிஸ்டிலேயே வராத மயிரு போன்ற சாதாரண வார்த்தைகளை எல்லாம் கட்டோ மியூட்டோ செய்துவிட்டு, படா படா வார்த்தைகளை எல்லாம் அசால்ட்டாக ஒலி/ஒளிபரப்புவது என்ன மாதிரியான சமூக அக்கறை என்று தெரியவில்லை.. ஒரு வேளை, இந்த மாதிரி சின்னச்சின்ன வார்த்தைகளை எல்லாம் கத்துக்கக்கூடாது, ஸ்ட்ரெயிட்டா பெரிய பெரிய வார்த்தைகளைத்தான் இந்தச் சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையாகக் கூட இருக்கலாம்...





இதெல்லாம் நம்ம சன் மற்றும் கே டிவியில்.. அடுத்தது உலக டிவிக்களின் திலகம் நம்ம விஜய் டிவி... நமக்கெல்லாம் நம்ம உடம்புல அல்லது நம்மளுக்கு ரொம்ப வேண்டியவங்க உடம்புல இருந்து ரத்தம் வந்தாத் தான் பொறுக்காது.. ஆனா இந்த விஜய் டிவிக்காரர்களுக்குப் படத்தில் யாருக்காவது ரத்தம் வந்தால் கூடப் பதறிவிடுவார்கள்.. அந்த இடத்தை ஷேட் (shade) செய்து விடுவார்கள்.. எதுக்காம்? இது போன்றக் காட்சிகளைப் பார்க்கும் பிஞ்சு உள்ளங்கள் பயந்து விடுவார்கள் அல்லது வன்முறையில் இறங்கிவிடுவார்கள் என்கிற அக்கறையாம்.. அடுத்தது கொஞ்சம் கிளாமரான க்ளீவேஜ் காட்சிகள் எல்லாம் வந்தால் அங்கும் ஷேட் செய்து விடுவார்கள்.. இது எதற்காம்? இதுவும் குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணம் தோன்றாமல் இருப்பதற்காம்.. அடப்பாவிகளா, அத அப்படியேக் காட்டுனாக்கூட அவன் பாட்டுக்க இருப்பான்.. ஷேட் பண்ணுனாத்தான் “அங்க என்ன இருந்திருக்கும்?”னு யோசிக்க ஆரம்பிப்பான் நம்மப் பய.. அப்புறம் அந்த மாதிரி இடங்களை வெறித்துப் பார்க்க ஆரம்பித்துவிடுவான், அதில் ஏதோ தங்கமலை ரகசியம் இருப்பது போல்.. CBFCயே சென்சார் கொடுத்த பின் உங்களுக்கு என்ன ஸ்பெசல் அக்கறை? ஷேட் செய்கிறேன் பேர்வழி என்று நீங்கள் செய்வது இன்னும் தான் கிளர்ச்சியை அதிகரிக்கும்.. ஒரு வேளை கிளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று தான் ஷேட் செய்கிறார்களோ?!!!

நான் பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி மட்டுமே பார்ப்பதால் தான் அவர்கள் செய்யும் விசயம் மட்டும் என் கண்களுக்குப் பட்டது.. அவர்களை மட்டும் சொல்வதால் மற்றச்சேனல்கள் எல்லாம் யோக்கியம் என்று அர்த்தம் அல்ல.. சமீபத்தில் கலைஞர் டிவியில் கூட இப்படித் தான் செய்தார்கள் “பசங்க” படம் போடும் போது.. அதில் புஜ்ஜிமா அவன் அம்மாவிடம் தன் மழலைக்குரலில் சொல்வான், “அம்மா குஞ்சுமணி வெளிய வந்துருச்சிமா” என்று... அடுப்படியில் இருந்து அவன் அம்மா சொல்வார், “எடுத்து உள்ள போட்டுட்டு வெளையாடுப்பா” என்று... இதில் குஞ்சுமணி என்னும் வார்த்தையை மியூட்டி விட்டார்கள்.. இன்னொரு காட்சியில் அடிக்கடி கிழிந்து போகும் தன் டவுசரைப் பற்றி சக நண்பர்களிடம் பக்கடா சொல்கிறான், “எங்கம்மா கூட அடிக்கடி சொல்லுவாங்கடா, ’உனக்கு அருவாமனக் குண்டி அதான் எல்லா டவுசரும் கிழிஞ்சிருது’னு”.. இதில் குண்டி என்னும் வார்த்தையை மியூட்டி விட்டார்கள்.. நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்பை சொன்னால் கூட மியூட் செய்யப்பட்டு விடும் போல நம் டிவிக்களில்.. அந்த வார்த்தைகளை எப்படி சொன்னால் ஒத்துக்கொள்வார்கள்? Ass, dick என்று அழகான ஆங்கிலத்தில் சொல்லலாமா? மத்த சேனல்காரனாவது கெட்ட வார்த்தைனு அவனுக்குத் தெரியுறத கட் பண்ணுனான்.. நம்ம தமிழினத் தலைவரோட சேனல்ல உடல் உறுப்புக்களை அதற்கான வார்த்தைகளைச் சொல்லிக் குறிப்பிட்டால் கூட கட் செய்கிறார்கள்.. 





இதையெல்லாம் கேட்டால் சமூக அக்கறை என்பார்கள்.. இவர்களின் சமூக அக்கறை, சமூகம் கெட்ட வார்த்தையைத் தெரிந்துகொள்ளக் கூடாது, பேசிவிடக்கூடாது, வல்கரானக் காட்சிகளைப் பார்த்து விடக்கூடாது என்று நினைக்கும் அக்கறை என்னை புல்லரிக்கச்செய்கிறது... ஆனால் எந்த வார்த்தைகளை கட் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஏனோதானோவென்று கட் செய்து விடுகிறார்கள், அது தான் பிரச்சனை.. மூன்று முகத்தில் bastards என்று சொல்வதும், மகாநதியில் கமலின் மகள் தேவடியாப்பசங்களா என்று சொல்வதும், ஜெய்ஹிந்த்தில் மசுரானி என்று சொல்வதும், பசங்க படத்தில் குஞ்சுமணி, குண்டி என்று சொல்வதும் படத்திற்கு தேவையானவை, முக்கியமானவை.. அந்தக் காட்சிகளுக்கு அந்த வார்த்தைகள் வலு சேர்க்கின்றன, அழகாக்குகின்றன.. அதைப்பார்த்துச் சமூகம் கண்டிப்பாகக் கெட்டுவிடாது.. கதை மற்றும் காட்சியின் ஓட்டத்துடன் அவை கரைந்துவிடும்... ஆனால் அவை அனைத்தும் கட்டோ, மியூட்டோ செய்யப்படுகின்றன.. அதுவே மகநாதியில் பிற பாத்திரங்கள் தேவடியாப்பய என்று சொல்வதும், ஜெய்ஹிந்த்தில் தாயோழி என்பதும், நாடோடிகளில் புழுத்தி என்பதும் நிச்சயம் படத்திற்கு தேவையற்ற வசனங்கள்.. அந்த வசனங்களால் அந்தக் காட்சிகளில் எந்த விதமான அழுத்தமும் அதிகமாகக் கிடைக்கப்போவதில்லை.. காட்சிக்கு தேவையில்லாத வசனங்களான அவை மியூட் செய்யப்பட வேண்டியவை.. ஆனால் அந்த வசனங்கள் அனைத்தும் அப்படியே வருகின்றன... இந்த லட்சணத்தில் தான் டிவிக்காரர்களின் சென்சார் இருக்கிறது...

சரி, சமூகம் கெட்ட வார்த்தையைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்கிற அக்கறையில் இருக்கும் சன் டிவிக் குழுமமும், கலைஞர் டிவியும் மற்ற விசயங்களில் எப்படி இருக்கிறார்கள்? இவர்கள் போடும் மெகா சீரியல்களில் இல்லாத சமூக சீரழிவு விசயங்களா அந்தக் கெட்ட வார்த்தையில் இருக்கின்றன? உண்மையில் கெட்ட வார்த்தை என்பது பிறரை வைவதற்குப் பயன்படுவதை விட, சகஜமான கிண்டலுக்கான வார்த்தையாக மாறிப்போய்விட்டது இப்போதெல்லாம்.. இதைப் பற்றி ஜெயமோகன் கூட விலாவாரியாக ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார்.. ஒவ்வொரு குடும்பத்தையும், வாழ்க்கையையும் அழிப்பது போல் தினமும் காலையில் இருந்து இரவு வரை காட்டும் மெகா சீரியலுக்கு என்ன மாதிரியான சென்சாரை இவர்கள் வைத்திருக்கிறார்கள்? ஒவ்வொரு சீரியலும் சட்டத்தை எப்படி ஏமாற்றுவது, பிறர் குடியை எப்படிக் கெடுப்பது, கூட இருந்தே எப்படிக் குழி பறிப்பது, அடுத்தவன்/ள் மனைவி/கணவனை எப்படி ஆட்டையைப் போடுவது, உறவுகளை எப்படிக்கொச்சைப்படுத்துவது என்பதை எல்லாம் டாக்ட்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு டீல் செய்கின்றன.. அதை விடவா கெட்ட வார்த்தைகள் சமூகத்தை சீரழித்து விடப்போகின்றன? கொஞ்ச நாட்களுக்கு முன் நானே ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தேன், ”அடுத்தவளின் கணவன் மேல் ஆசைப்பட்டால் அது சன் டிவி சீரியல்.. அடுத்தவளின் காதலன் மேல் ஆசைப்பட்டால் அது விஜய் டிவி சீரியல்” என.. இந்த லட்சணத்தில் சீரியல் போடுகிறவர்கள் தான் கெட்ட வார்த்தைகளைத் தடுத்து நிறுத்தித் (அதுவும் அரைகுறையாக) தங்கள் சமூக அக்கறையைக் காட்ட நினைக்கிறார்கள்..

டிவிக்களில் வரும் இன்னொரு அபத்தம், ரியாலிட்டி ஷோக்கள்.. மானாட மயிலாட (இதை முதன் முதலில் ”மானாட மார்பாட” என்று உண்மையைச் சொன்னவர் டாக்டர்.ராமதாஸ், இப்போது ஃபேஸ்புக்கில் கிஷோர் அண்ணன் அடிக்கடி அப்படிச்சொல்கிறார்), ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், கனெக்‌ஷன் போன்ற ரியாலிட்டி கேம் ஷோக்களும் தங்கள் பங்குக்கு அனைத்தையும் செய்கின்றன... ஒருத்தியின் புருஷனுடன் இன்னொருவனின் பொண்டாட்டியை அசிங்கமான அங்க அசைவுகளுடன் ஆட வைத்து “கெமிஸ்ட்ரி சூப்பர்” என்று கொண்டாடும் நிகழ்ச்சிகளை நடத்தும் இவர்கள் தான் கெட்ட வார்த்தைகளை மியூட் செய்கிறார்கள் என்பதைத் தான் என்னால் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியவில்லை.. சூப்பர் சிங்கரில் அழும் குழந்தைகளை அரை மணிநேரம் காட்டுகிறார்கள்.. அதைப் பார்த்துக் கெட்டுப்போகாத குழந்தையின் மனதா ரத்தக் காட்சியைப் பார்த்து கெட்டுவிடப் போகிறது? ஆணும், பெண்ணும் எதிர் எதிராக நின்று கொண்டு இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டும் ஆட்டத்தை “கெமிஸ்ட்ரி சூப்பர்” என்று சிறுவர்களுக்கு ரசிக்கக் கற்றுக்கொடுக்கும் சேனல்கள் தான் க்ளீவேஜ் காட்சிகளை ஷேட் செய்கின்றன.. கனெக்‌ஷன் என்னும் நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளர் பேசுவதில் முக்கால்வாசி டபுள் மீனிங் தான்.. இதையெல்லாம் எந்தச் சேனலும் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை..

டிவிச் சேனல்கள் சென்சார் செய்வது என்று முடிவு செய்துவிட்டால், கெட்ட வார்த்தைகள் மட்டும் அல்லாது, கெட்ட விசயங்கள் அனைத்தையுமே சென்சார் செய்ய வேண்டும்.. ஆனால் அப்படிச் செய்தால் டிவிக்களில் ”வயலும் வாழ்வும்”, மற்றும் ஆன்மிக சொற்பொழிவு போன்றவை மட்டும் தான் ஓடிக்கொண்டிருக்கும்.. இதனால் தான் சமூக அக்கறை இருக்கும் தூர்தர்ஷனும், ஆகாசவானி ரேடியோவும், கோடை எஃப்.எம்.மும் முக்குகின்றன மற்ற சேட்டிலைட் மற்றும் எஃப்.எம்.களில் இருந்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல்... சரி அது வேற விசயம், நம்ம டாப்பிற்கு வருவோம்.. கெட்ட வார்த்தைகளை விட மனதிற்கு அதிக பாதிப்பையும், கெடுதல்களையும் கொடுப்பவை சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் தான்.. முதலில் சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் முறைப்படுத்திவிட்டு, சினிமாக்களை நோண்டுங்கள் சேனல்காரர்களே..

இல்லை அது முடியாது என்றால் எதையுமே சென்சார் செய்யாதீர்கள்.. எங்களுக்கு வேண்டியதை, எங்களுக்கு எது தேவையோ, நாங்கள் எதை ரசிப்போமோ அதை நாங்களே தேர்வு செய்துகொள்கிறோம், வேண்டாததைத் தவிர்த்து விடுகிறோம்... நீங்கள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அரைகுறையாக சென்சார் செய்வது பல நேரங்களில் எரிச்சலைத்தான் தருகிறது.. அதற்குப் பதில் பேசாமல் அப்படியே விட்டுவிடலாம்.. நாங்களாவது டிவியின் sound system தான் பழுதடைந்து விட்டதோ என்று பீதியாகமல் இருப்போம் உங்களது தேவையற்ற மியூட்களால்...

நாம் படித்த வரலாறு நம் வரலாறு தானா?

Thursday, August 7, 2014

சென்னையில் இருக்கும் ஃபேஸ்புக், ப்ளாக் நண்பர்கள் எல்லாம் அடிக்கடி எதாவது புத்தக வெளியீடு, குறும்பட வெளியீடு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்வதாகச் சொல்வார்கள்.. எனக்கும் கூட அங்கெல்லாம் செல்ல வேண்டும், ஓசியில் சமோசா, டீ, அசோகா அல்வா எல்லாம் சாப்பிட வேண்டும் என ஆசையாகத்தான் இருக்கும்.. ஆனால் அசோகா அல்வாவிற்காக லாஸ் ஆஃப் பேயில் சென்னை செல்வது எல்லாம் டுவெண்டி மச் என்பதால் நான் அங்கெல்லாம் போனதில்லை.. இருந்தாலும் ஏதாவது நூல் வெளியீட்டு விழாவினை பார்த்துவிட வேண்டும் என பல நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்..  

பல நாள் கனவு ஒரு நாள் நிறைவேறும் தானே? ஜூலை மாத இறுதியில் எனது மதிப்பிற்குரிய திரு.ரத்னவேல் ஐயா அவர்கள் என்னை அழைத்தார்.. “ராம் குமார், ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் தேதி, சனிக்கிழம விருதுநகர்ல ஒரு புக் ரிலீஸ் function இருக்கு.. முடிஞ்சா வாங்க” என்று.. அவரிடம் எனக்குப் பிடித்த விசயம் இது தான்.. அவர் நினைத்தால் என்னை “கண்டிப்பா வா” என்று சொல்ல முடியும்.. அந்த அளவு அவருக்கு உரிமையும் உண்டு, நானும் அவர் பேச்சை மறுக்க மாட்டேன்.. ஆனாலும் அவர் அப்படிச் சொல்ல மாட்டார்.. ’நமக்குத் தெரிஞ்ச ஒரு நல்ல விசயத்தை நாலு பேருக்குச் சொல்வோம்.. பிடிச்சா, நேரம் இருந்தா வரட்டும், இல்லாட்டி வேண்டாம்’ இது தான் அவரின் policy.. எப்போதும் அடுத்தவரின் சூழ்நிலை, அவர்களின் constraints அறிந்து பேசக்கூடியவர்.. சனிக்கிழமை எனக்கு வேலை நாள் என்பதால் அப்படிச்சொன்னார், எங்கு நான் வேலைக்கு ஓப்பி அடித்து விடுவேனோ என்கிற அக்கறையில்.. ஆனால் அவருக்குத் தெரியாது, சேல்ஸ் வேலையின் பிறப்புரிமையே ஓப்பி அடிப்பது தான் என்பது.. ஃபேஸ்புக் நண்பர் திரு.அழகி அழகர் ராஜ் சாரும் என்னை அழைத்திருந்தார் நிகழ்ச்சிக்கு.. இவரும் நிறைய பெரிய ஆட்களின், நல்ல மனிதர்களின் பழக்கம் கொண்டவர்.. சனிக்கிழமை மாலை விருதுநகரில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டோம்..

சனிக்கிழமை மாலை அவர்கள் அனைவருக்கும் முன்பே நான் விருதுநகர் வந்துவிட்டேன்.. என்னையும் காரில் அள்ளிப்போட்டுக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.. எனக்கு அந்த நிகழ்ச்சி பற்றியோ, புத்தகம் பற்றியோ, எதுவும் தெரியாது.. ரத்னவேல் ஐயாவும், அழகர் ராஜ் சாரும் அழைத்தார்கள், போனேன் அவ்வளவே.. அங்கு இறங்கி மண்டபத்தின் உள்ளே நுழைந்த போது தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய நிகழ்ச்சி என.. அங்கு வரும் ஒவ்வொருவரையும் கை கூப்பி, கை கொடுத்து வரவேற்றுக்கொண்டிருந்தவர் முன்னாள் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள்.. இது அவரின் பங்களிப்பில் செயல்படும், “பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்” என்னும் ஆய்வு மையத்தில் இருந்து வெளியிடப்படும் நூல்.. ’ஆஹா ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ்னு சாதாரணமா நெனச்சா நம்ம ஆளுங்க Ex அமைச்சர் வரை பழக்கம் வைத்திருக்கிறார்களே’ என கொஞ்ச நேரம் ஆடித்தான் போனேன்.. நூலின் தலைப்பு, ”வரலாற்று நோக்கில் விருதுநகர் மாவட்டம்”..





பொதுவாகவே எனக்கு வரலாற்றில் கொஞ்சம் ஆர்வம் அதிகம்.. ஏனென்றால் அதில் இருக்கும் fantasy.. புத்தகத்தில் இருக்கும் விசயங்களை கற்பனை செய்து கொண்டு, அந்தக்கால மக்களின் வாழ்க்கையை மூளைக்குள் ஓட்டிப்பார்ப்பது ஒரு வித போதை & சுகம்.. வரலாற்றின் எச்சங்களாய் நின்று கொண்டிருக்கும் கட்டிடங்களையும், சிலைகளையும் பார்ப்பது உடம்புக்குள் ஒரு வித பயத்தையும், கிளர்ச்சியையும் ஒரு சேரக் கொடுக்கும்.. அதற்கும் மேல் இது என் சொந்த மண்ணின் வரலாற்றை பேசப்போகும் நூல்.. அதனால் இன்னமும் ஆர்வம்.. நூலை இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.. அதனால் அதில் உள்ளதைப்பற்றி இன்னொரு பதிவில் விபரமாகக் கூறுகிறேன்.. இப்போது அந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் பேசிய, அங்கு நடந்த சில முக்கிய விசயங்கள் மட்டும் இந்தப்பதிவில்..

பேசிய அனைவருமே வரலாற்றின் மேல் நமக்கு இருக்கும் அசட்டையை சுட்டிக்காட்டினார்கள்.. வரலாற்றை, அதன் சின்னங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும் என்கிற அக்கறை அவர்களின் பேச்சில் வெளிப்பட்டது.. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு குளக்கரையில் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது.. அதைப் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் திரு.க.திருமாறன் அவர்கள் அதை படம் எடுத்து சென்றிருக்கிறார்.. இன்னொரு முறை அதை நேரில் பார்த்தால், மேலும் பல விசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வந்த அவருக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி.. காரணம், அவர் மீண்டும் வந்த போது அங்கு குளம் இருந்ததற்கான சுவடு கூட இல்லையாம்.. கல்வெட்டு பற்றிக்கேட்டாலும் ஒருவருக்கும் அதைப்பற்றித் தெரியவில்லை.. மேலும் அவர் சமண மதக் கோயில்களும், சிலைகளும் எப்படி இந்து மதத்திற்குள் கொண்டு வரப்பட்டன என்பதையும் விளக்கினார்.. அறியாமையாலும், வேண்டுமென்றேவும் இந்து மதச்சிற்பங்கள் போல் அவை மாற்றப்பட்டு விட்டதால் தமிழகத்தில் சமண மதம் பற்றிய ஆராய்ச்சிகள் முழுதாக செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் வருந்தினார்.. இப்போதும் ஃபேஸ்புக்கில் பலரும் தமிழரின் மதம் சமணம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் எது உண்மை என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்..

ஒவ்வொரு கல்வெட்டும் அது பதிக்கப்பட்டிருக்கும் இடத்தைப்பற்றி மட்டும் கூறுவதல்ல.. கல்வெட்டுக்கள் எல்லாம் பாலம் மாதிரி.. ஒரு ஊரில் இருக்கும் கல்வெட்டு அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு ஊரின் கோயில்களைப் பற்றியும், பிற விசயங்களைப் பற்றியும் தகவல்கள் கூறும் என்கிறார் வங்கியாளர் திரு.இரா.பாலச்சந்திரன்.. இவர் வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் வரலாற்றின் மேல் தனக்கு இருந்த தீராத ஆர்வத்தால் அதைப்பற்றியும் மிகுந்த ஆராய்ச்சி செய்பவர்.. சிவகாசிக்கு அருகில் இருக்கும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் கோயிலில் இருக்கும் கல்வெட்டு ஒன்றில் அங்கிருந்து பல கி.மீ. தள்ளி இருக்கும் T.மானகசேரி என்னும் கிராமத்தில் இருக்கும் இன்னொரு கோயிலைப்பற்றி செய்தி இருக்கிறது.. இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் பலரும் அந்த கல்வெட்டில் கூறப்பட்டிருக்கும் கோயில் திருத்தங்கல் தான் என்று ரொம்ப வருடங்களாக நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்..




விருதுநகர்-அருப்புக்கோட்டை மார்கத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்தில் ஒரு கல்வெட்டுக்கு மக்கள் பூஜை எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள்.. அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்த திரு. பாலச்சந்திரன் அவர்கள் அந்த கல்வெட்டை ஆராய்ந்திருக்கிறார்.. அதில் சோழ மன்னன் ஒருவன் இந்த ஊருக்கு கட்டிக்கொடுத்திருக்கும் சிவன் கோயிலைப் பற்றிய செய்தி இருந்திருக்கிறது.. ஆனால் கல்வெட்டை பூஜிக்கும் அந்த கிராம மக்களுக்கோ அப்படி ஒரு கோயில் இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை..  அருகில் தேடி அலைந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கிராம மக்கள் கொல்லைக்குப் போகும் இடம் வரை வந்துவிட்டார்.. அங்கு ஒரு சிறுவன் ஒரு திண்டில் குத்த வைத்து அமர்ந்து பேண்டு கொண்டிருந்தான்.. ‘அய்யே இங்க வந்துட்டோமா?!’ என்று அய்யறவாக திரும்ப நினைத்தவருக்கு பெரிய ஷாக்.. அந்தப்பையனைத் திரும்பி மீண்டும் பார்த்தார். அவன் குத்த வைத்து அமர்ந்திருந்த அந்தத் திண்டு ஒரு சிவலிங்கம்.. அவன் அந்த லிங்கத்தின் ஆவுடையார் மீது குத்த வைத்திருந்தான்.. அந்தக்கோயில் அப்போது அந்த ஊரில் திறந்த வெளி கழிப்பிடமாக செயல்பட்டுக்கொண்டிருந்தது.. அந்த மக்களுக்கு அவர் அந்த கல்வெட்டு பற்றியும், அவர்களின் கழிப்பிடம் தான் அந்தப்பழமையான கோயில் என்றும் விளக்கிய பின் இப்போது அந்த கிராம மக்களே அந்தக் கோயிலுக்கு வேலி போட்டு பராமரித்து வருகிறார்களாம்.. ஹ்ம் இப்படியும் சிலர்..

வேறு சிலரும் இருக்கிறார்கள்.. சிவகாசியில் இருந்து 15 கி.மீ.ல் இருக்கும், வெம்பக்கோட்டையில் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.. அதில் ரோமானியர்களோடு பாண்டியர் கொண்டிருந்த வணிகம் பற்றிய குறிப்புகள் இருந்ததாக இவருக்கு ஒரு சந்தேகம்.. அதைப்பற்றி ஆராயலாம் என்றால், அந்த கல்வெட்டு இப்போது இருக்கும் இடத்தின் சொந்தக்காரர் விடவில்லை.. அங்கிருந்த ஒரு பெண் சாமியாடவும் ஆரம்பித்துவிட்டாராம்.. ”இவர் மெதுவாக நீங்க இப்படியெல்லாம் பண்ணுனா போலீஸை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று பொய்யாக மிரட்டியதும், வெறித்தனமாக வந்த சாமி சைலண்ட்டாக அந்தப்பெண்ணை விட்டு ஓடிவிட்டதாம்... இப்படித்தான் பலரும் பெரிய பெரிய பொக்கிஷங்களை அதன் அருமை தெரியாமல், தங்களை அறியாமலேயே சிதைத்து வருகிறார்கள் என்று வேதனைப்பட்டார்.. வெம்பக்கோட்டையை சுற்றிய பல பகுதிகளில் ரோமானியர்களின் வேலைப்பாடுகள் நிறைந்த, ரோமானிய மக்களின் காசுகள், சிறு குவளைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றனவாம்.. இன்னமும் பல இருக்கலாம், ஆனால் மக்களின் அறியாமையாலும், அரசுக்கு இதை சொன்னால் தங்கள் இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்னும் பயத்தாலும் பலரும் சொல்வதில்லை..

திருச்சுழி அருகில் முற்காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட ஒரு சிறு தடுப்பணை இருந்திருக்கிறது.. அதைப்பற்றிய கல்வெட்டு எல்லாம் கிடைத்த பின் அங்கு சென்று பார்த்தால், அந்த அணை இருந்ததற்கான சுவடே இல்லை.. லோக்கல் செங்கல் சூளை ஆட்கள் அந்த அணையின் கரையில் இருக்கும் மண்ணை எல்லாம் செங்கல் செய்ய எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.. இப்போது அது வெறும் பொட்டல்.. அந்தக் கல்வெட்டை மட்டும் வைத்து என்ன பண்ண முடியும் இனி? என நொந்து போய் கேட்டார் நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான திரு.பொ.ராசேந்திரன் அவர்கள்.. பள்ளிகளிலும் கூட வடநாட்டவர்களின் வரலாறு தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.. பானிபட் போரைப்பற்றி ஒரு தமிழ்ச்சிறுவன் தெரிந்து கொள்வதை விட, தன் மண்ணில் சேரனும், சோழனும், பாண்டியனும் ஆண்டதைப் பற்றி தெரிந்து கொள்வது தானே முறை? அப்போது தானே அவனுக்கு அவன் மண் மீது ஒரு மரியாதை வரும்? வெள்ளூர் என்னும் ஊரில் பாண்டியனுக்கும் சோழனுக்கு நடந்த மிகப்பெரிய போர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.. ஆனால் அது தமிழ்நாட்டின் எந்த வரலாற்றுப்புத்தகத்தில் உள்ளது? என்றெல்லாம் பல கேள்விகளை அடுக்கினார் ஆசிரியர்.. ஹ்ம் நம் நாட்டில் சமூக ஆர்வலர்களிடம் கேள்விகள் பல கொட்டிக்கிடக்கின்றன.. ஆனால் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களோ அந்தக் கேள்விகளை சட்டை செய்வதாகவே தெரியவில்லை..

தொல்லியல் துறை என்பதே, சோம்பேறிகள் ஒரு வேலையும் செய்யாமல் பொழுதை ஒப்பேற்றும் துறை. யாராவது ஒன்றிரெண்டு பேர் தான் உண்மையான ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும், பொறுப்புடனும் அங்கு வேலை செய்வார்கள். சரி பொறுப்பில் இருப்பவர்கள் தான் சரியில்லை, பொது மக்களிடமாவது அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரலாற்றை காப்பாற்றலாம் என்றால், “இதுனால எனக்கு என்ன யூஸ்?” என்று அனைத்தையும் பணமாகவே அணுகும் மிடில் கிளாஸ் புத்தி மக்களையும் தடுக்கிறது என்றார் பசுமை நடை மூலம் மதுரையைச் சுற்றி அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் திரு.அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள்.. தாண்டிக்குடி அருகில் முதுமக்கள் தாழிக்கும் முந்தைய முறையான அடக்கம் செய்தல் பற்றியும் பேசினார்.. ஒரு மன்னனையோ, அல்லது அந்த சமூகத்தில் பெரிய ஆளையோ இறந்த பின் புதைத்து அதை கற்களால் மூடிவிட்டு, சுற்றிலும் மிக உயரமான தட்டையான கற்களை நட்டு வைத்துவிடுவார்கள்.. மன்னனைப் புதைத்த இடத்தில் அவன் பயன்படுத்திய பொருட்கள், வாள் எல்லாம் இருக்கும்.. ஒரு சிறு குடுவையில் அவனுக்கு சாப்பிட தானியங்களும் போடப்பட்டிருக்குமாம்.. அந்த தானியங்கள் இன்று வரை கெடாமல் இருக்கின்றன.. அதாவது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உணவுப்பொருட்களை கெட விடாமல் வைத்திருக்கும் அந்த தொழில்நுட்பம் தமிழனிடம் இருந்திருக்கிறது.. தொல்லியல் துறையின் முக்கியமான பணி என்பது கடந்த காலத்தின் இது போன்ற ஆச்சரியமான விசயங்களை நிகழ்காலத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படுவது தான் என்கிறார் அவர்.. ஹ்ம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல இடங்களிலும் சரியான வேலையாள் கூட இல்லாத நாட்டில் அவரின் எதிர்பார்ப்பு எல்லாம் மிகப்பெரிய பேராசை தான்.. 



கடைசியாகப் பேச வந்தார் முன்னாள் அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.. அவரும் வரலாற்றின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் அலட்சியம் குறித்து பேசினார்.. மேலும் தமிழ்நாட்டின் வரலாறு என்றாலே சோழர்களைப் பற்றித்தான் அதிகம் படிக்கிறோம்.. பாண்டியர்களுக்கும் அதற்கு இணையான வரலாறு உண்டு என்றார்.. சோழர்களிடம் மட்டும் தான் “பள்ளிப்படை” என்கிற வழக்கம் இருந்ததாகக் கூறுகிறார்கள்.. அதாவது ஒரு மன்னனோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் நினைவாக ஒரு கோயில் கட்டப்படும். அது தான் பள்ளிப்படை என்றழைக்கப்படும். திருச்சுழிக்கு அருகில் பள்ளிமடம் என்றொரு இடம் இருக்கிறது.. பள்ளிப்படை என்பது தான் மரூவி பள்ளிமடம் ஆகிவிட்டது.. பாண்டியர்களிடமும் இந்தப்பழக்கம் உண்டு என்றார் அவர்.. ஒரு அரசியல்வாதியாகப் பேசாமல் வரலாற்றுக்காதலனாக, சொந்த பூமியின் மீது அக்கறை கொண்ட ஒரு மண்ணின் மைந்தனாக அவர் பேசிவது மிகவும் சிறப்பு..

பொதுவாகவே பலரும் அங்கு வருந்திக்கூறிய விசயம், தமிழக வரலாறுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று தான்.. உண்மை தானே? முகலாயப்பேரரசுகளைப் பற்றியும், டெல்லி சுல்தான் பற்றியும், ராஜபுத்திரர்களின் கௌரவம் பற்றியும் தெரிந்து ஒரு தமிழ் மாணவன் என்ன செய்யப்போகிறான்? அவன் சார்ந்த மண்ணின் வரலாறு தெரியாமல் அவன் எப்படி தன் மண்ணைப் பற்றி உயர்வாக நினைப்பான்? அப்படியே தமிழக வரலாறு என்றாலும் தஞ்சை பெரிய கோயில், மாமல்லபுரம், கல்லணை என்று மேம்போக்காகத்தான் பாடங்களில் வருகின்றன.. பாண்டியர்களின் வரலாற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.. சோழர்களுக்கு சற்றும் குறைந்ததல்ல பாண்டியர்களில் வரலாறு.. சொல்லப்போனால் கப்பல் படையை வைத்து போர் தான் புரிந்தான் சோழன்.. ஆனால் ரோமானியர்களோடு கடல் வாணிபம் செய்து, நல் உறவு வைத்திருந்தான் பாண்டியன்.. ஆனால் பாண்டியனின் துறைமுகமாகிய கொற்கை இப்போது எங்கிருக்கிறது என்றாவது யாருக்காவது தெரியுமா? இஸ்லாமியர்கள் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வரும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, நாம் கடல் வழியாக அரபு நாடுகளுடன் வாணிபம் செய்தவர்கள்.. இதெல்லாம் எந்த வரலாற்றுப்புத்தகத்தில் வரப்போகிறது? இன்னும் சில வருடங்கள் கழித்து நாம் இப்படி சொன்னால் யாராவது நம்பவாவது செய்வார்களா? 

ஆனால் எனக்கு சிறியதாக ஒரு சந்தோசம் இந்த நிகழ்ச்சியில்.. பொதுவாக நாகரிகம் எல்லாம் ஆற்றங்கரை ஓரத்தில் தான் இருக்கும்.. தொழில் முன்னேற்றம் வந்த பின் தான் மக்கள் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பிழைக்க ஆரம்பித்தார்கள் என்னும் தகவல் உண்டு.. ஆனால் 2000 ஆண்டு பழமையான ரோமானிய நாணயங்களும், பல கல்வெட்டுக்களும் காய்ந்து போன பூமியான விருதுநகர் மண்ணில் இருந்து கிடைத்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான்..ஒரு வேளை அப்போது எங்கள் மண் செழிப்பாக இருந்திருந்ததா, அல்லது இப்போது இருப்பது போலவே அப்போதும், மழையை நம்பாமல் உழைப்பை நம்பிய மக்கள் மிகுந்து இருந்தார்களா என்று தெரியவில்லை.. ஆனாலும் என் மண் 2000 ஆண்டு பழைமையான வரலாறை சுமந்து திரிவதில் எனக்குப்பெருமையும் சந்தோசமும் தானே?.. 

ஒரு சில கொசுறுகள்:

1. நிகழ்ச்சிக்கு உண்மையான ஈடுபாட்டுடன் விரும்பி வந்தவர்கள் என்றால் சில ஃபேஸ்புக் நட்புக்களும், VVV கல்லூரியின் சில மாணவிகளும், ஒன்றிரெண்டு விரிவுரையாளர்களும் தான்.. வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் லோக்கல் திமுக ஆட்கள் தான்.. கல்லூரிகளில் நமக்கு சம்பந்தம் இல்லாத துறையில் செமினார் நடக்கும் போது கூட்டம் காட்டுவதற்காக கட்டாயமாக அழைத்துப்போய் உட்கார வைப்பார்களே, அது போல் தான் அந்த கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள்.. யார் பேசுவதையும் கேட்காமல் அவர்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள் ஜாலியாக..



2. அனைத்தையும் முன்னின்று நடத்தியதால் அடிக்கடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்.. அவர் தங்களை கடக்கும் போதெல்லாம் ஒரு சில கரை வேட்டிகள் படார் படார் என்று எழுந்து விரைப்பாய் நிற்பதும், வணக்கம் வைப்பதுமாக இருந்தார்கள்.. இதனால் அடிக்கடி சிறு சலசலப்புகள் வந்து கொண்டிருந்தன.. ஒரு லிமிட்டிற்கு மேல் கடுப்பான அவர், அவர்களைப் பார்த்து ஒரு முறை முறைத்தார் பாருங்கள், அதன் பின் சும்மா சும்மா வணக்கம் போட்ட பார்டிகள் எல்லாம் அடங்கிவிட்டார்கள்.. அரசியலுக்கு எதிர்பாராமல் ஒரு விபத்து போல் வந்திருந்தாலும், தன் பார்வையாலேயே கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு அவரிடம் ஆற்றல் இருப்பது பெரிய விசயம்..

3. திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அவர்கள் பேசும் போது ஆரம்பத்தில் அடிக்கடி கடவுள் கடவுள் என்று குறிப்பிட்டார்.. கொஞ்ச நேரத்தில் சுதாரித்துக்கொண்ட அவர், அதன் பின் இயற்கை என்று மாற்றிக்கொண்டார்.. பகுத்தறிவு....



4. ஒரு நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதற்கென்று காசு கொடுத்து photographer, videographer எல்லாம் வரவழைத்திருப்பார்கள்.. நமக்கு படம் வேண்டும் என்றால் அவர்களை அணுகி வாங்கிக்கொள்ளலாம்.. ஆனால் இந்த செல்ஃபோன் வந்தாலும் வந்தது, கல்யாண வீடு, குடும்ப நிகழ்வுகள், கோயில் பண்டிகை, சுற்றுலாத்தலங்கள் என்று எங்கு போனாலும் அந்த நொடியை சந்தோசமாக அனுபவிக்காமல் ஃபோட்டோ எடுப்பதிலேயே பலரும் பாதி நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.. சரி உங்கள் நேரம் நீங்கள் செலவிடுங்கள்.. ஆனால் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் இப்படி மேடையை மறைத்துக் கொண்டிருந்தால் nokia பிளாக் & வொயிட் ஃபோன் வைத்திருக்கும் என் போன்ற பாவப்பட்ட ஆட்கள் என்ன தான் செய்வது? இப்பலாம் கல்யாண வீடுகளில் கூட தாலி கட்டுவதை செல்ஃபோன் கேமராக்கள் மட்டும் தான் பார்க்கின்றன.. மற்ற அனைவருக்கும் அந்த கேமராவை பிடித்திருப்பவரின் முதுகு மட்டும் தான் தெரிகின்றன.. எப்பா திடீர் ஃபோட்டோகிராபர்களா, உங்களுக்குள்ள இருக்கிற பாலுமகேந்திரா, தங்கர் பச்சானை எல்லாம் உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், பொது நிகழ்ச்சிகளில் வேண்டாம்..



5. எங்களை ஒரு குடும்ப நண்பர் போல் வரவேற்றதாகட்டும், ரத்னவேல் ஐயாவின் பெயரை மேடையில் நன்றியுடன் குறிப்பிட்டதாகட்டும், தன் தொண்டர் படை உருவாக்கிய சிறு சலசலப்பை - அது தனக்கு ஆதரவு தெரிவிக்கத்தான் என்றாலும் - ஒரு பார்வையிலேயே அடக்கியதாகட்டும், எங்களை சாப்பிட அழைத்துச்சென்றதாகட்டும், திரு.KKSSR உடன் பேசிக்கொண்டிருந்தாலும், நாங்கள் கிளம்புவதை அறிந்து வேகமாக வந்து கைகொடுத்து எங்களை வழி அனுப்பி வைத்ததாகட்டும், திரு. தங்கம் தென்னரசுவிடம் ஒவ்வொரு அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன.. இவரின் இந்த நல்ல பண்புகள் என்றும் மாறாமல் இப்படியே இருக்கட்டும்..

அசோகா அல்வா சாப்பிட முடியவில்லையே என ஏங்கிய பல புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தால் கூட இவ்வளவு அற்புத விசயங்கள் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.. என்னை அழைத்துச்சென்ற ரத்னவேல் ஐயாவிற்கும், அழகர் ராஜ் சாருக்கும் எத்தனை முறை நன்றிகள் சொன்னாலும் தகும்.. புத்தகத்தை இனி தான் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.. படித்து விட்டு அதில் இருக்கும் செய்திகளையும் விரைவில் பகிர்கிறேன்.. :)
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One