இந்தியாவின் காலனியாதிக்கம்!!

Monday, May 8, 2023

1947, ஆகஸ்ட் 15ல் என்ன நடந்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், நமக்கு பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த நாள். In other words, பிரிட்டீஷ்காரன் தனக்குக் கீழ் இருந்த இந்தியப் பகுதிகளை காங்கிரஸிடம் ஒப்படைத்து விட்டு அதிகாரப்பூர்வமாகக் கிளம்பிய நாள். பாகிஸ்தான், பங்களாதேஷ் எனக் கடித்துக் குதறியும், காஷ்மீர், ஜுனாகட், ஹைதராபாத் என நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை என்ன செய்வது எனச் சொல்லாமலும் அப்படியே அவர்களும் கிளம்பிவிட்டார்கள், நேரு மாமாவும் கிடைத்தது போதும் எனத் திருப்திப்பட்டுக் கொண்டார். இரும்பு மனிதர் படேல் தான் காஷ்மீர் முதலான பல சமஸ்தானங்களை, ஆடியும் பாடியும் அடித்தும் கறந்து இந்தியாவுடன் இணைத்தார். இதெல்லாம் நம்ம பத்தாங்கிளாஸ் ஹிஸ்ட்ரியில் படித்த ஞாபகமும் உங்களுக்கு இருக்கலாம்.



சரி பிரிட்டீஷ்காரன் ஆண்ட பகுதியையும் அவனுக்குக் கப்பம் கட்டி சொகுசாக வாழ்ந்த ராஜாக்களின் சமஸ்தானங்களையும் இந்தியாவாக்கி விட்டோம். ஆனால் இந்தியா என்பது பிரிட்டீஷிடம் மட்டும் அடிமையாக இல்லையே?! போர்த்துக்கீசியரும் ப்ரென்ச்சுக்காரர்களும், அழகான தேகத்தில் துருத்திக்கொண்டு தெரியும் சிறு தழும்பு போல நம் சுதந்திர நாட்டில் அங்கங்கு காயத்தழும்பாக இருந்தார்களே?! ஏனோ நேருவுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் அதில் பெரிதாக அக்கறையோ, அந்த மக்களின் சுதந்திரம் பற்றிய கவலையோ இல்லை. போர்த்துக்கீசியர் ஆதிக்கப் பகுதி மக்கள் தங்களுக்கும் சுதந்திரம் வேண்டும் எனக் கேட்டாலும் அந்த தேசம் அதைக் காதிலேயே வாங்கவில்லை. இந்தியாவில் அமைந்த புது அரசாங்கமும், 'போர்த்துக்கீசியப் பகுதியை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம், கோவா, டையூ டாமன் & தாத்ரா நகர்ஹவேலி பகுதியில் போர்த்துக்கீசிய நாட்டிற்கு இருக்கும் ஆட்சி அதிகார உரிமையை நாங்கள் மதிக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தது!! கையில் இத்தனை பெரிய நிலப்பரப்பு இருக்கும் போது, அல்பமாக கோவா, டையூ, டாமன், தாத்ராநகர் ஹவேலி பற்றியெல்லாம் எவனாவது யோசிப்பானா?


ஆனால் RSS யோசித்தது. இந்தியா என்பது அதன் ஒவ்வொரு பிடி மண்ணும் அந்த ஒவ்வொரு பிடி மண்ணில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் தான் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.  ஆரம்பத்தில் நேருவிடம் சொல்லிப் பார்த்தது RSS. அவருக்கு பாகிஸ்தான் & காஷ்மீர் பிரச்சினையே போதுமானதாக இருந்ததால் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பார்த்த சங்கத்தினர் 1954ல் களத்தில் இறங்கினர். 


நானா கஜ்ரேகர் மற்றும் ராஜா வகாங்கர் என்னும் இரு உறுப்பினர்கள் கள நிலவரத்தை ஆராயச் சென்றனர். Azad Gomantak Dal மற்றும் National Movement Liberation Organization ஆகிய இரு சுதந்திரப் போராட்ட அமைப்புகள் RSSக்கு உதவ முன்வந்தன.


தாத்ரா ஒரு சிறிய ஊர். அங்கு நிர்வாகம் என்பது, ஒரு போலீஸ் ஸ்டேசன் & அதன் 3 காவலர்களை நம்பியே இருந்தது. அதைத் தகர்த்தால் தாத்ரா இந்தியர்கள் கையில். ஜூலை 21 இரவு 1955, காவல் நிலையம் தாக்கப்பட்டு தாத்ரா காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு, அது இந்தியாவோடு இணைக்கப்பட்டது. சரியாக ஒரு வாரம், ஜூலை 28ல், அதன் தலைநகர் சில்வாசாவிலும் இதே போன்ற தாக்குதல். போர்த்துக்கீசிய அதிகாரிகள் சரணடைந்தனர். இப்போது தாத்ரா நகர்ஹவேலி இந்தியா வசம். ஒரு தழும்பு மறைந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் பெரிய தழும்பு தெற்கே கோவாவில் இருந்தது.


ஏற்கனவே Inquisition மூலம் தன் அடையாளம், கலாசாரம் என அனைத்தையும் இழந்து இருந்தது கோவா. பிரதமர் நேருவிடம், RSS பல முறை, கோவா மேல் சிறு ராணுவ நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் அதை எளிதாக இந்தியாவுடன் இணைத்து விடலாம் என வற்புறுத்தியது. அவருக்கு அதில் நாட்டமில்லை. அதற்காக எத்தனை நாள் அந்நியர்களை நம் மண்ணின் ஒரு பகுதியை இன்னமும் ஆள விடுவது? ஜெகன்னாத் ராவ் ஜோஷி என்கிற RSS தலைவர் பார்த்தார், 1955ம் ஆண்டு நேராக கோவா சென்று சுதந்திரம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம் செய்ய ஆரம்பித்தார். அவரைப் போர்த்துக்கீசிய அரசாங்கம் கைது செய்தது. பொதுமக்களும் RSS தொண்டர்களும் சத்தியாகிரம் செய்ய இறங்கினார்கள். 1955, ஆகஸ்ட் 15 அன்று கிட்டத்தட்ட 3000 பேர் மக்கள் கோவாவிற்குள் விடுதலை கோஷ்த்துடன் நுழைந்தார்கள். வெறிகொண்ட போர்த்துக்கீசிய அரசாங்கம் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் 30 இந்தியர்கள் பலியாயினர். ஆனாலும் நேரு எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தார். ஏனென்றால் கொலை நடந்தது கோவா என்னும் அந்நிய நாட்டில் (!!!!) என்பதால்.


தாத்ரா நகர்ஹவேலி கைப்பற்றல், இப்போது இந்தச் சம்பவம் என போர்த்துக்கீசிய & இந்திய அரசாங்கங்களுக்குள் உரசல் எழ அனைத்து முகாந்திரமும் அமைந்தன. இந்தியர்கள் ஒரு வேளை ஏதாவது நடவடிக்கை எடுத்தால், எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது எனப் பயந்த போர்சுகல், ஐநா சபை உதவியை நாடியது, 'எங்கள் மேல் இந்திய அரசாங்கம் எந்த ராணுவ நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது' என. 1961 நவம்பரில் இந்தியப் பகுதியில் இருந்து கோவாவின் பகுதிக்குச் சென்ற பயணியர் படகை ராணுவப் படகு என நினைத்து சுட்டு வீழ்த்தி ஒரு மிகப்பெரிய தவறை, பதட்டமான சூழலில் செய்து தானாக மாட்டிக்கொண்டது போர்த்துக்கீசிய அரசு. இதற்கு மேலும் அமைதி காத்தால் பெயர் கெட்டுவிடும் என நினைத்த நேரு,  'ஆபரேஷன் விஜய்'யை செயல்படுத்தினார். கோவா வீழ்ந்தது.


இந்தச் சம்பவங்களைப் பற்றிப் படித்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்த ஒரு விஷயம், நான் முதலில் சொன்னேனே,  'போர்த்துக்கீசியப் பகுதியை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டோம், அவர்களின் ஆட்சி அதிகார உரிமையை நாங்கள் மதிக்கிறோம்' என அதிகாரப்பூர்வமாக இந்தியா தெரிவித்திருந்தது தான். இந்த ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டு, போர்த்துக்கீசிய அரசாங்கம் ஐநா சபை, உலக நீதிமன்றம் வரை சென்றது. கோவா & தாத்ராவை இந்தியா தன்னோடு இணைத்துக் கொண்டது, 'காலனி ஆதிக்க மனோநிலை' என போர்ச்சுகல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் குற்றம் சொன்னது தான் இதில் மிகப்பெரிய துயரம்.

1498ல் இந்தியாவுக்குள் வியாபாரம் என்னும் பெயரில் அதிகாரம் செலுத்த வந்த போர்த்துக்கீசியன், நம் மும்பையை ஆங்கிலேயனுக்குக் கல்யாணச் சீராகக் கொடுத்த அதே போர்த்துக்கீசியன் சொன்னான், இந்தியா கோவாவைத் தன்னோடு இணைத்தது காலனியாதிக்கம் என்று. இதைத் தான் கலீஜர் சொல்வார் 'ஊரான் வீட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையே' என.


கடைசியில் ஒரு வழியாக 1974ல் கோவா இந்தியப் பகுதி தான் என ஒத்துக்கொண்டது போர்ச்சுகல். இப்போது நாம் பார்க்கும் இந்திய வரைபடம் முழுமையுற்றது இப்படித்தான். நடுவில் நடந்த சீனப்போரை மறந்துவிடலாம், கம்மீக்கள் பாவம்.

No comments:

Post a Comment

அனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..

 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One