சுஜாதா பிறந்த நாள் இன்று...

Friday, May 3, 2013

சும்மா சிவகாசி முள்ளுக்காட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருந்த எனக்குள்ள கூட ‘நாமளும் எழுதிப்பாக்கலாமா?’ என எழுதும் ஆர்வத்தை தூண்டியவர்.. ப்ளாக் எழுதும் பல எழுத்தாளர்களுக்கும் இவர் தான் இன்ஸ்பிரேஷன்.. ஆன்மிகமா? காதலா? பேயா? விஞ்ஞானமா? குடும்பமா? சமூகமா? கவிதையா? கட்டுரையா? எது வேண்டும் உங்களுக்கு? வானுக்கு கீழே இருக்கும் எல்லாவற்றையும் எழுதுவார்.. இல்லை இல்லை, வானுக்கு மேல் இருக்கும் அந்த அண்ட வெளியை பற்றியும் எழுதுவார்.. இவர் ஒரு பேப்பரில் மையை சிந்தினால் அதை கூட ரசித்துப் பார்க்க இங்கு கோடி பேர் உண்டு.. யாரை பற்றி சொல்கிறேன் என தெரிந்து விட்டதா? ஆம் தலைவர் சுஜாதாவை பற்றித்தான்..
நான்கு நாட்களுக்கு முன் நானும் நண்பர் ‘திடங்கொண்டு போராடு’ சீனுவும் பேசிக்கொண்டிருக்கும் போது, மே3 தலைவர் பிறந்த நாளுக்கு எதாவது எழுதலாமா என்று கேட்டார்.. ரெண்டு பேரும் கொஞ்சம் சீரியஸா யோசிச்சதுல ஒரு மனதா ஒரு நல்ல முடிவுக்கு வந்தோம். நாம இங்க சும்மா தத்தக்க பித்தக்கனு எழுதிட்டு இருக்கோம்.. தலைவர பத்தி எழுதணும்னா அது நம்மளோட பெஸ்ட்டா இருக்கணும்.. அதனால இப்போதைக்கு எதுவும் எழுத வேண்டாம்னு முடிவு செஞ்சோம்.. ஆனால் என்றாவது ஒரு நாள் அவரை பற்றி மனது கனக்கும் அளவுக்கு ப்ரிவும் மகிழ்ச்சியும் வரும் அளவிற்கு எழுத வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு உண்டு.. சரி, அடுத்த பிறந்த நாளுக்குள்ளாவது எழுதி விட வேண்டும் என முடிவு செய்து கொண்டோம்..  ”அப்பாடா நான் தப்பிச்சேன். ஒரு வருசத்துக்கு தொல்ல இல்ல” என தலைவர் சொர்கத்தில் நினைத்திருப்பார். ஆனால் விதி விடுமா?

இன்று அதிகாலை 8மணிக்கு ரத்னவேல் ஐயா என்னை அழைத்தார்கள். ”ராம்குமார் இன்னைக்கு சுஜாதா பிறந்த நாள், ஆனா ஃபேஸ்புக்ல யாருமே அத பத்தி கண்டுக்கல” என்று மிகவும் ஆதங்கமாக பேசினார்கள். என்னை விட ரத்னவேல் சார் மிகப்பெரிய சுஜாதா ரசிகர். சுஜாதாவே தன் கைப்பட அவருக்கு எழுதிய கடிதத்தை ஒரு பொக்கிஷம் போல் வைத்திருக்கிறார். எனக்கு அவர் ஆதங்கமாக சொன்னதும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தலைவருக்காக பெஸ்ட்டா ஒரு பதிவு எழுதும் போது எழுதலாம். இப்போது அவரிடம் LKG படிக்கும் ஒரு குழந்தையின் அளவுக்காகவ்து எதாவது எழுதிவிடலாம் என்கிற நப்பாசையில் தான் இந்த பதிவு. இதில் எழுத்து நடை, தொடர்ச்சி எல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியாது. ஆனால் இது எனக்கும் என் தலைவருக்கும் இருக்கும் உறவு பற்றியது. அதில் எழுத்தின் நேர்த்தி, அலங்காரம் இல்லையென்றாலும், நினைவுகளும் அன்பும் இருக்கும். என்னோடு பேசாத, நான் நேரில் பார்த்திடாத, பார்க்க முடியாத, யாரோ ஒரு பதிப்பகத்தாரால் தன் அச்சிடப்பட்ட எழுத்துக்களால் என் தோள்களில் கையை போட்டு, என்னோடு நட்பு பாராட்டிய, எனக்கு காதலை சொல்லிக்கொடுத்த, என்னோடு சண்டை போட்ட, என்னை கலங்க வைத்த, சிரிக்க வைத்த, எல்லாவற்றையும் விட சிவகாசி முள்ளுச்செடிகளுக்குள் திரிந்து கொண்டிருந்த எனக்குள்ளும் எழுதும் ஆர்வத்தை தூண்டிய அவரை பற்றிய என் அனுபவம் இது. சீனுகுரு நண்பா உங்களை விட்டுவிட்டு எழுதுவதற்கு மன்னிக்கவும், ப்ளீஸ்...
இப்போது யோசித்துப்பார்த்தாலும் கூட மங்கலாகத்தான் ஞாபகத்தில் இருக்கிறது, சுஜாதா எனக்கு எப்போது அறிமுகமானார் என்று.. நான் டவுசர் போட ஆரம்பித்த என் பள்ளிக்காலம் அது. அப்போது சிவகாசியில் எங்கள் ஆச்சி வீட்டில் தான் வளர்ந்தேன்.. சிறுவர்மலரை துறந்த, ஆனால் வாரமலர் மேல் ஆர்வம் வராத வயது அது.  தாத்தா, வாராவாரம் சாவியும், ஆனந்த விகடனும் வாங்கி வருவார். எனக்கு சாவி அந்த அளவுக்கு பிடிக்காது. ஆனந்த விகடனில் தான் நிறைய ஜோக்ஸ் சினிமா செய்திகள் எல்லாம் இருக்கும். ஆனால் ஜோக்ஸும் சினிமாவும் 10 நிமிடத்தில் படித்துமுடித்துவிடும் வேலை. முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு அப்போது.  எல்லா பையன்களும் ஏதாவது அச்சாஃபீஸ்க்கோ (printing press), கட்டிங்கிற்கோ வேலைக்கு போவோம்.. எனக்கு ரெண்டு நாளைக்கு மேலே எங்கும் வேலை செய்ய பிடிக்காது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுவேன்.. எங்கள் தெரு பையன்கள் எல்லாம் அடுத்த வருட படிப்பு செலவிற்கு தாங்கள் வேலை செய்த பணத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். என் வீட்டில் பயங்கர வசவு விழும், “ஒவ்வொரு வீட்லயும் பிள்ளைக எவ்வளவு அக்கறையா இருக்கு? இங்க நம்ம வீட்ல ஒரு  சோம்பேறி தான் வந்து வாச்சிருக்கு” என்று. 

டிவி, கேபிள், பரவலாக இல்லாத காலம் அது. வேறு என்ன தான் செய்வது? ஏற்கனவே ஜோக்ஸ் படித்த ஆனந்த விகடன் தான் ஒரே கதி. அதை எடுத்து சும்மா திருப்பிக்கொண்டிருக்கும் போது தான் உலகையே திருப்பிப்போட்ட அந்த சம்பவம் நடந்தது. ஏதோ ஒரு பக்கத்தில் ”கற்றதும் பெற்றதும்” என ஒரு தலைப்பு. என்னது இது கற்றதும் பெற்றதும்னு யோசிச்சுக்கிட்டே சும்மா வாசிக்க ஆரம்பித்தேன். அதில் அவர் சொல்லியிருக்கும் பல விசயங்கள் எனக்கு அப்போது புரிந்ததில்லை (இப்போது வரை சில விசயங்கள் எனக்கு புரிந்ததில்லை).. ஆனால் அந்த எழுத்துக்களில் இருக்கும் துள்ளல் என்னை மிகவும்  கவர்ந்தது. ஒரு விஞ்ஞான விசயத்தையோ, அரசியல் விசயத்தையோ கூட இவ்வளவு நையாண்டியாக சொல்ல முடியமா என ஆச்சரியப்பட வைத்தார்.

அப்போது ஆரம்பித்தது சுஜாதா மேலான ஒரு ஆர்வம். ஒரு பெரிய அறிவு ஜீவி போன்ற பிம்பத்தோடு தான் அதன் பின் அவரது கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அதை படித்துவிட்டு எங்கள் தெரு நண்பர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். எல்லாவனும் என்னை ஆவென்று பார்த்துக்கொண்டு நான் சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பான். அந்த போதை தந்த ஆர்வத்தில் சுஜாதா வேறு எதுவும் எழுதியிருக்கிறாரா என பார்த்தால், “ஆமா நெறயா புக் எழுதிருக்காரு, எல்லாமே காசு கூட.. நீ இத மட்டும் படி” என்றார் என் அம்மா.  இடையிடையில் அவரது சிறுகதைகளும் ஆனந்த விகடனில் வரும். அதில் இருந்து தான் சிறுகதைகளும் படிக்க ஆரம்பித்தேன். சொல்லப்போனால் சுஜாதா என்கிற ஒருவர் இல்லாமல் போயிருந்தால் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாமல் போயிருக்கும். நீங்களும் இந்த ப்ளாக் படிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதி. ஹ்ம் விதி யாரை விட்டது?கிட்டத்தட்ட ஒரு ஆண்டு, ஆனந்த விகடனில் அவரது கற்றதும் பெற்றதும் படித்துக்கொண்டிருந்தேன். “எல்லாவற்றுக்கும் ஒரு இடைவெளி தேவை” என அவர் அந்த தொடருக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். எனக்கு அவர் அப்படி செய்ததில் பயங்கர கோபம். “இங்க ஒருத்தன் இவ்ளோ இன்ட்ரஸ்ட்டா படிச்சிட்டு இருக்கியான், இந்த ஆளு பாட்டுக்க இப்டி புசுக்குனு நிப்பாட்டிட்டாரே?” என்று. இப்போது அடுத்த முழு ஆண்டுத்தேர்வு விடுமுறை வேறு வந்துவிட்டது. என் தாத்தாவும் வேலையில் இருந்து நின்றுவிட்டார். வீட்டிலும் புத்தகம் வாங்குவதில்லை. நானோ இரவு உணவிற்கு கடிச்சிக்கிட பக்கோடா வாங்கி வரும் பேப்பரை கூட விட்டுவைக்காத அளவிற்கு வாசிப்பாளி(!!!) ஆகிவிட்டேன்.. என்ன செய்வது? அப்போது தான் அந்த தைரியமான முடிவெடுத்தேன். என் சித்தப்பா ஒரு காய்கறி கடை வைத்திருந்தார். அந்த ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நான் இரண்டு மாதமும் முழுதாக வேலைக்கு சென்றேன். எனக்கே இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது, நான் எப்படி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழுங்காக வேலை செய்தேன் என..  ”சே அவனுக்கா அக்கற வந்து வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானே?” என அம்மாவும், ”இந்த வருசம் படிப்பு செலவுக்கு வெளிய கொஞ்சமா கடன் வாங்குனா போதும்” என அப்பாவும் என்னென்னமோ நினைத்து கற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.. 

அவர்களின் கற்பனைகளை தெரிந்து கொள்ள நான் என்ன ஜோசியக்காரனா? சித்தப்பாவிடம் என் சம்பளம் 600ரூபாயையும் (தினமும் பத்து ரூபாய்)  மொத்தமாக வாங்கிக்கொண்டு எங்கள் ஊரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் சுஜாதாவின் மூளையில் ஒரு மிகச்சிறிய அளவை கிள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.. இப்ப வடிவேலு சினிமால வாங்குறதுலாம் என்ன அடி? அன்னைக்கு நான் வாங்குனேன் பாருங்க, அடி.. ஆத்தாடி நெனச்சா இப்பக்கூட பதருது.. ஆனாலும் கொஞ்ச நேரம் அழுதுகொண்டிருந்த என்னை சுஜாதா கையில் ஏந்திக்கொண்டார். என்னை அடித்தவர்களை பழி வாங்கும் நேரம் எனக்கு மறுநாளே வந்தது. அம்மா நான் வாங்கி வந்த புத்தகத்தில் ஒன்றை படிக்க எடுத்தார்.. “என்ன மட்டும் அடிச்சீங்கல்ல? இப்ப வந்து எதுக்கு என் புக்க எடுக்குறீங்க?” என யாருக்கும் கொடுக்கவில்லை. நானே ஆசை தீர படித்தேன்.. அனைத்து புக்கையும் படித்து முடித்து விட்டுத்தான் பிறர் படிக்க அனுமதித்தேன். அவ்வளவு பிரியம் & possessiveness சுஜாதா மீது.


இப்படியே என் சிறுவயது முதல் வாசிப்பின் ஆர்வத்தை தூண்டியவர் அவர்.. நான் படித்த சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் நூலகம் அந்தப்பகுதியிலேயே மிகப்பெரியது. அங்கே எல்லோரும் பாட புத்தகத்தை நோண்டிக்கொண்டிருப்பார்கள். நான் சுஜாதாவை தேடிக்கொண்டிருப்பேன். பல நல்ல நூல்களை படித்து, என் வாசிப்பை முறைப்படுத்தியது அந்த நூலகம் தான்.. செம்மீன், தலைமுறைகள், சில நேரங்களில் சில மனிதர்கள் என சுஜாதாவையும் தாண்டி பல நல்ல எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கு தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தன் மீதும் அப்போதிருந்து ஒரு பற்று வந்துவிட்டது. என் 3வருட வாழ்வில் நான் ஒரு பாட புத்தகம் கூட எடுக்கவில்லை என்று கடைசி செமஸ்டரில் என் லைப்ரரி கார்டை கூட ப்ளாக் செய்துவிட்டார்கள்.. விடுவேனா நான்? நண்பனின் கார்டில் சுஜாதாவை திருட்டுத்தனமாக வாசித்துக்கொண்டிருந்தேன். இந்த காலத்தில் தான் சுஜாதா வசனம், திரைக்கதை எழுதிய படங்கள், சுஜாதாவின் கதையோ பேட்டியோ வந்த புத்தகங்கள் என எல்லாவற்றையும் ஒரு வெறி பிடித்த காதலன் போல் செய்துகொண்டிருந்தேன். உண்மை தான், அது காதல் தான். என் வாழ்வில் நான் அதிக காலம் காதலித்த என்னிடம் எதுவும் எதிர்பார்க்காத ஆனால் எனக்கு பிடித்த அனைத்தையும் கொடுத்த காதலாக அது இருந்தது..

பின் எம்.பி.ஏ படித்த மதுரை தியாகராஜர் நிர்வாகவியல் கல்லூரியில் ஹாஸ்டலில் மட்டும் தான் தமிழ் இருக்கும்.. மற்றபடி எங்கும் ஆங்கிலம். நமக்கு தெரிந்த ஆங்கிலம் எல்லாம், “மை நேம் இஸ் ராம்குமார், ஐயம் ஃப்ரம் சிவகாசி” என்பது மட்டும் தான்.. அப்போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் சுஜாதா... அங்கு சுஜாதா பற்றிப்பேச ஒருவர் கிடைத்துவிட்டார்.. அவர் படித்த நாவல்களை பற்றி அவரும் நான் படித்தவைகளை பற்றி நானும் பேசும் போது தான் தெரிந்துகொண்டோம், நாம் 10, 15 நாவல் படித்ததை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறோம் அந்த மனுசன் 100நாவலுக்கு மேல எழுதி தள்ளியிருக்கிறார் என்று.. எனக்கு பள்ளிக்காலத்தில் இருந்தே ஒரு விபரீத ஆசை உண்டு.. நாமும் சுஜாதா மாதிரி கதை எல்லாம் எழுதலாமா என்று.. ஆனால் அதற்கான வாய்ப்பு வந்ததே இல்லை. நான் சிவகாசியில் கல்லூரியில் படித்த போது கூட யூத் ஃபெஸ்டிவலில் எவ்வளவோ கதை எழுத முயன்றேன்.. ஆனால் முடியவில்லை.. பின் எம்.பி.ஏ.வில் தான், யூத் ஃபெஸ்ட்டிவலில் தமிழில் கதை எழுத ஆள் இல்லை என்று என்னை சேர்த்தார்கள்.. 


அது 2008ம் ஆண்டு யூத் ஃபெஸ்டிவல். அந்த யூத் ஃபெஸ்டிவலில் என்னை சேர்க்க மறுத்த அய்ய நாடார் கல்லூரியும் வந்திருந்தது. ”என்ன சேக்க மாட்டேன்னு சொன்ன ஒங்கள தோக்கடிக்குறேன்டா சின்னப்பசங்களா” என மனதுக்குள் சூளுரைத்துக்கொண்டேன். இனிமேல் தலைவர் மாதிரி அடிக்கடி சிறுகதை எழுதணும்னு நினைத்துக்கொண்டேன். சிறுகதைப்போட்டி நடந்த நாள், என் வாழ்நாளில் மறக்க முடியாதது, ஃபிஃப்ரவரி 28.. காலை எழுந்து கிளம்பிக்கொண்டிருக்கும் போது தான் செய்தித்தாளில் அதை கவனித்தேன். “பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம்” என்று எளிதில் கவனிக்க முடியாத ஒரு நடுப்பக்கத்தில் வலது மூலையில் இருந்தது அந்த செய்தி. அதை படித்தவுடன் எனக்கு கைகளும் கால்களும் லேசாக நடுங்க ஆரம்பித்துவிட்டன.. கண்கள் கலங்கவில்லை என்று சொன்னால் பொய் ஆகிவிடும். கொஞ்சம் தண்ணீரை குடித்துவிட்டு, கதை எழுத சென்றேன். கதை எழுதும் ஆர்வமே சுத்தமாக இல்லை. அரைகுறையாக எழுதிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் முடிவை வெளியிட்டார்கள். சிறுகதையில் எங்கள் கல்லூரி தான் வென்றது.. நான் எழுதிய முதல் கதைக்கே பல்கலை அளவில் முதல் பரிசு. ஆனால் கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை. இனி கதை எழுதக்கூடாது என பரிசு அறிவித்தவுடன் முடிவு செய்துவிட்டேன்.. 

கொஞ்ச நாட்கள் எதுவும் எழுதவில்லை. தலைவரை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ப்ளாக் எனக்கு அறிமுகமானது. மீண்டும் எழுதும் ஆசை  வந்தது. தலைவரின் ஆத்மாவிடம் ஒரு apology கேட்டு விட்டு இதோ கடந்த 4 ஆண்டுகளாக எழுதி இப்போது ஒரு வழியாய் நூறு பதிவுகளையும் தாண்டி விட்டேன்.. நூறில் 20 கூட உருப்படியாய் தேராது என்றாலும், ஒரு சுஜாதா ரசிகனாக, அவரால் எழுத்தின் பால் ஈர்க்கப்பட்டவனாக எனக்கு என்றுமே பெருமை தான்.. என் கதையின் ஒவ்வொரு எழுத்தும் நான் சுஜாதாவை காப்பி அடித்து எழுதுவது தான். ஆனால் என்ன, அவரை காப்பியடித்து கூட அவர் அளவிற்கு எழுத முடியவில்லை.. அது தான் அவருக்கும் பிறருக்கும் இருக்கும் வித்தியாசம். எல்லோராலும் சுஜாதா போல் எழுத முடியாது, ஆனால் எழுதும் எல்லோரும் சுஜாதாவால் தான் எழுதுகிறார்கள் என்பதே அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் பல புண்ணியங்களை கொடுக்கும் மிகப்பெரிய விசயம். அவரது இன்றைய பிறந்த நாளில் எனக்கும் அவருக்கும் இருந்த ரகசிய உறவை கசிய விட்டுவிட்டேன்.. மனதுக்குள் லேசான சோகம் இருந்தாலும், ஒரு திருப்தியும் சேர்ந்தே இருக்கிறது.. தலைவா யூ ஆர் கிரேட்...


 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One