பதிவுலகிலும், ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி போன்றவைகள் எல்லாம்.. இதெல்லாம் அவர்கள் பாஷையில் எதிர்வினை.. அதாவது இப்போது அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும், அல்லது என்றோ அவர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பழி தீர்ப்பதற்குப் பெயர் தான் எதிரிவினை.. அதாவது என்னை இத்தனை ஆண்டுகளாக மட்டமாக, கீழ் நிலையில் பலரும் வைத்திருந்ததால் இன்று நான் அவர்களுக்கு எதிராக தான் செய்யும் வன்முறைக்குப் பெயர் தான் எதிர்வினை..
சரி இந்த எதிர்வினையால் என்ன தான் பிரயோஜனம் என்று கேட்டால், ஒன்றும் கிடையாது.. இவர்களின் எதிர்வினைக்கு அந்தப்பக்கம் இருந்து இன்னொரு எதிர்வினை வரும்.. அந்த எதிர்வினைக்கான எதிர்வினைக்கு இவர்களிடமிருந்து மற்றொரு எதிர்வினை வரும்.. இப்படியே மாறி மாறி வெட்டிக்கொண்டும், தூண்டிவிட்டுக்கொண்டுமே இருக்க வேண்டியது தான்.. முடிவு? இதனால் இவர்கள் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படுமா என்றால் நிச்சயம் இல்லை.. இது போன்ற விசயங்கள், படிப்பு, சமூக மதிப்பு என்னும் ஏணியில் கொஞ்சம்
கொஞ்சமாக ஏறிக்கொண்டிருக்கும் தலித்துக்களை இன்னும் பின்னிழுக்கும் என்பது தான் உண்மை.. வன்முறையாலும், துவேசத்தாலும் எங்கும் எப்போதும் முன்னேற்றம் வராது என்பது உலக நியதி..
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. தாங்கள் உயர வேண்டுமானால் உயர் சாதி என்று கருதப்படும் பெண்களை காதலித்து, இழுத்துக்கொண்டு ஓடுவது தான் ஒரே வழி என்பது இவர்கள் மனதில் சிலரால் விதைக்கப்பட்டிருக்கும் எண்ணம். ஆனால் அப்படி ஓடிப்போகும் பலவும் பிரச்சனைகளை இன்னும் தான் பெரிதாக்கியிருக்கிறதே தவிர பிரச்சனையை குறைத்தோ, தலித்துகளின் நிலையை மாற்றியதாகவோ எங்கும் கேள்வி இல்லை.. உண்மையில் தலித் முன்னேற்றம் என்கிற பெயரில் அடங்க மறுத்து, அத்துமீறி, திருப்பி அடித்து, எதிர்வினை புரிந்து, இழுத்துக்கொண்டு ஓடி என இவ்வளவையும் செய்தாலும், தலித்துகளின் நிலை என்னவோ நம் நாட்டில் இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதே கூட அவ்வளவு கஷ்டம் என அண்ணன் சதீஷ் கூட அடிக்கடி புலம்புவார். தங்களின் வாழ்வில் மாற்றத்தை கொடுக்கும் என அவர்கள் நம்பி செய்யும் இவ்வளவு ‘எதிர்வினை’களாலும் ஏன் அவர்களை சமூக அளவில் முன்னேற்ற முடியவில்லை? இன்னும் ஏன் அவர்கள்சரி சமமாக அங்கீகரிக்கப்படவில்லை? ரொம்ப சிம்பிள், அவர்கள் செல்லும் பாதை... ஆம், அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதை அவர்களை இன்னமும் மக்கள் மத்தியில் மோசமாக சித்தரிக்கும் என்பது தான் உண்மை..
சரி இதற்கு என்ன தான் தீர்வு? ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் தன் முன்னேற்றத்திற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறது, எப்படி முன்னேறியிருக்கிறது என சில தமிழக வரலாற்று சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தலித்துகளின் நிலையை ஒத்திருந்த நாடார் சாதியை இதற்கு தகுந்த உதாரணமாகக் கொள்ளலாம்.
ஆரம்ப காலத்தில் நாடார்கள் திருநெல்வேலிக்கு தெற்கே தான் மிகுந்து காணப்பட்டார்கள். ”அவர்கள் வாழும் நிலம் பாலைவனத்தைக்காட்டிலும் சிறிது மேம்பட்டும், வெப்பமானதும், வெறுமையானதும், விரும்பத்தகாததாகவும் காணப்பட்டது” என்கிறார் கால்டுவெல். அதாவது விவசாயத்திற்கு சிறிது கூட உபயோகப்படாத தேரி என்று அழைக்கப்படும் செம்மண் பூமியை சுற்றி அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
மேலும் கால்டுவெல் தனது 1857ம் ஆண்டு எழுதிய கட்டுரை தொகுப்பான, “Lectures on the Tinnevelly
Mission"ல் அன்றைய நாடார்களின் நிலை பற்றிச் சொல்கிறார். “நாடார்கள் ஆலயங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஆலயங்களில் வெளியில் நின்று தான் தெய்வங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அவர்கள் நீதிமன்றங்களில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. நீதிபதிகளிடம், நீதி மன்றத்தின் வெளியே நின்று தான் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். நாடார் பெண்கள் இடுப்புக்கு மேல் சேலை அணியலாகாது என்று வற்புறுத்தப்பட்டனர். பொதுக்கிணறுகளில் தண்ணீர் எடுக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. நாவிதரையோ, வண்ணார்களையோ பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலுள்ள நாடார்களின் பழக்க வழக்கங்கள், அவர்களைச் சூத்திரர்களை விடவும் தாழந்த சாதியினரின் நிலையுடன் இணைக்கிறது” என்கிறார்.. தமிழகத்தில் இன்றைய தலித்துக்களின் நிலையை விட அன்றைய நாடார்களின் நிலை மோசமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கால்டுவெல்லின் இந்த வார்த்தைகள் மூலம் தெரிய வருகிறது.
முழுக்க முழுக்க பனை மரத்தையும், கள்ளையும், பனை பொருட்களையும் நம்பியிருந்த நாடார்கள், எப்போதும் வறுமையில் தான் உழன்றார்கள். அவர்களது வறுமை, “நெல் பயிராகும் மாவட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் பள்ளர், பறையர்களுக்கிருந்த வறுமையின் தன்மையை ஒத்திருந்தது” என தனது இன்னொரு நூலான “திருநெல்வேலி சாணார்கள்”ல் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.
சாமுவேல் மட்டீர் என்னும் ஆங்கிலேயரும் தனது “The Land of Charity" என்னும் நூலில் நாடார்களின் அன்றைய நிலையை விளக்குகிறார். “நாடார் ஒருவர் நம்பூதிரி பிராமணரிடம் பேசும் போது 36 அடி தூரம் தள்ளி நின்று தான் பேச வேண்டும். நாயர்களிடம் 12 அடிகளுக்கு மேல் நெருங்கி வரக்கூடாது. நாடார்கள், தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் என்கிற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணங்கள் அணிதல், ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒரு அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது; பசுக்களில் பால் கறப்பத்தற்கு அனுமதிக்கப்படவில்லை; உயர் சாதி பெண்களைப்போல் நாடார்ப் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது; தலையில் தான் சுமக்க வேண்டும்; மேலாடைகள் போர்த்திக்கொள்ளக் கூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை”..
தங்கள் குடும்ப பெண்கள் சாலையில், பொது இடங்களில் திறந்த மார்புடன் வருவதை எத்தனை நாள் தான் ஒருவனால் சகித்துக்கொள்ள முடியும்? சட்டம் மூலம் தீர்வு கிடைக்குமெனெ நம்பி, மாராப்பு அணிவதற்காக கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் கூட கிறிஸ்தவத்திற்கு
மாறிய நாடார் பெண்கள் தாராளமாக தங்கள் மார்பை மறைத்துக்கொள்ளலாம் என்றும், இந்துவாக இருக்கும் பெண்கள், இந்து மதத்தில் இருக்கும் சாதிய முறைப்படி தான் இருக்க வேண்டும் என்றும் அதில் தாங்கள் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த சூழலில் தான் தோள் சீலை போராட்டம் வெடித்தது.. சட்டத்தை நம்பி பிரயோஜனம் இல்லை, என முடிவு செய்த நாடார் குலப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். இது ஆதிக்க சாதியினருக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் நாகர்கோயிலில், கடைத்தெருவில் மார்பை மறைத்து ஆடை உடுத்தியிருந்த நாடார் குலப்பெண்களை தாக்கி அவர்களின் மேலாடைகளை கிழித்து எறிந்தனர். இதைத்தொடர்ந்து 1858ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நன்னாளில் கலவரம் மூண்டது.. கடைசியில் அன்றைய அரசு, 1859 ஜனவரி 27ம் தேதி ”தோள் சீலை பயன்படுத்துவதை தடை செய்வது தற்காலத்திற்கு ஒவ்வாதது” என்று நாடார்களுக்கு ஆதராவக ஒரு அரசாணையை வெளியிட்டது ஓரளவு உதவியாக இருந்தது.
சக மனிதர்களிடம் மரியாதை கிடையாது, அடிமை போன்ற வாழ்க்கை, பெண்களின் மாராப்பை மறைக்கவே கலவரம் செய்து தான் உரிமை பெற வேண்டிய சூழல். இப்படி ஒவ்வொன்றுக்கும் கலவரமும் போராட்டமும் செய்து தான் உரிமையை பெற வேண்டும் என்றால் கடைசி வரை கலவரமும், போராட்டமும் மட்டுமே செய்து கொண்டிருக்க வேண்டியது தான், முன்னேறவே முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர்.. சமூகத்தில் எப்படி முன்னேறலாம் என்கிற தகிப்பு ஒவ்வொரு நாடாருக்குள்ளும் இருந்தது. பனங்காட்டில் கூலி வேலை செய்து கொண்டு திருநெல்வேலிக்கு தெற்கில் இருந்த நாடார்கள் வியாபாரத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். விருதுநகர், அருப்புக்கோட்டை, கமுதி, பாலையம்பட்டி, சாத்தங்குடி, சிவகாசி போன்ற நகரங்களை சார்ந்து தங்கள் வியாபாரத்தை ஆரம்பித்தனர்.
பொருளாதார முன்னேற்றம் இல்லாமல் தங்களால் சமுதாயத்தில் ஒரு நிலையை அடைய முடியாது, பொருளாதார முன்னேற்றமே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பதை தெளிவாக அறிந்திருந்த நாடார்கள் தங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக எடுத்து வைத்த முதல் அடி தான் வியாபாரம்.. மாட்டு வண்டியில் ஊர் ஊராக சென்று கருப்பட்டி, கருவாடு, பருத்தி போன்ற பொருட்களைவிற்கத் தொடங்கினர். ஒவ்வொரு ஊரிலும் கீழ் ஜாதிக்காரன் இப்படி வந்து வியாபாரம் செய்வதா என பிரச்சனைகள் வந்தன. அவர்களின் வண்டிகள், பொருட்கள் களவு போயின.. அவர்களுக்கு திருப்பி அடிக்கவெல்லாம் நேரம் இல்லை. தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு என்பதை உணர்ந்த அவர்கள், தங்கள் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்காக சிறிய நிலம் ஒன்றை ஒவ்வொரு ஊரிலும் வாங்கி அதற்கு “பேட்டை” என்று பெயரிட்டனர். (சிவகாசியில் இப்போதும் கூட திருநெல்வேலி தெக்ஷண மாற நாடார் சங்கத்தின் கருவாட்டுப்பேட்டை இன்றும் உள்ளது). அந்த பேட்டையை நிர்வகிக்க அவர்களுக்குப் பணம் தேவைப்பட்டது.. அப்போது தான் இந்திய வரி வரலாற்றில் புரட்சி ஏற்படுத்திய sales taxற்கு அச்சாரமான ஒரு விசயம் நடந்தேறியது..
நாடார்கள் தங்கள் பேட்டையை நிர்வகிக்க “நாடார் மகமை பண்டு” என ஒன்றை ஆரம்பித்தனர். ஒவ்வொரு ஊரிலும் பேட்டையை பயன்படுத்தும் ஒவ்வொரு வியாபாரியும் தனது வருமானத்தின் ஒரு பகுதியை மகமை பண்டிற்கு கொடுத்து விட வேண்டும். அந்தப்பகுதியை கடந்து செல்லும் ஒவ்வொரு மாட்டு வண்டியும் குறிப்பிட்ட அளவு மகமை நிதி கொடுத்தாக வேண்டும் என்னும் விதியும் இருந்தது. இந்த மகமை நிதியைக் கொண்டு அந்த பேட்டையில் தங்களுக்கும், தங்கள் உடமைகளுக்கும் பாதுகாப்பை உருவாக்கிக்கொண்டனர்.. ஆனால் நாளாக நாளாக அந்த மகமை நிதி அவர்களே கற்பனை செய்யாத அளவிற்கு வளர்ந்தது.. ஒவ்வொரு ஊரிலும் உறவின்முறை மகமை பண்டு சந்திப்புக்களை மாதாமாதாம் நடத்தி அந்த நிதிகளை எப்படி முறையாக செலவிடுவது என யோசித்தனர்.. தான் கொடுக்கும் ஒவ்வொரு பைசாவும் எந்த அளவுக்கு தன் நிலையை உயர்த்தப்போகிறது என்பது நாடார்களுக்கு அன்றே தெரிந்திருக்குமா என தெரியவில்லை..
அந்த மகமைப் பண்டில் ஒவ்வொரு வியாபாரியும், ஒவ்வொரு குடும்பத்தலைவனும் கட்டும் பணமானது அந்த ஊரின், அந்த சமூகத்தின் நன்மைகளுக்காகப் பயன்பட்டன. வியாபாரத் திறமை மட்டும் போதாது, அதை நிர்வகிக்க படிப்புத்திறமையும் வேண்டும் என அறிந்து கொண்ட நாடார் சமுதாய மக்களின் கவனம் கல்வி பக்கம் திரும்பியது.. அந்த மகமை நிதியைக் கொண்டு பல ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். விருதுநகரில் 1885ம் ஆண்டில் திறக்கப்பட்ட KVS என்று அழைக்கப்படும் ஷத்ரிய வித்யா சாலா பள்ளி தான் அந்த மாதிரியான முதல் பள்ளி. பின் மருத்துவமனைகள், கோயில்கள் என தங்கள் சமூகத்திற்கு தேவையான அனைத்தையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஊரிலும் மகமை பண்டு நிதியின் மூலமாக இவை செயல்படுத்தப்பட்டன.. சமூகத்தில் நல்வுற்றோர்களுக்கு உணவும், ஆடையும், வலிமையுள்ளோர்களுக்கு வேலையும் தரப்பட்டன. போதுமான நிதியை பயன்படுத்தி வியாபார நஷ்டங்கள் சரி செய்யப்பட்டன. சமூகத்திற்காக கிணறுகளும், பொதுக்கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதிகமான நிதி கல்விக்கூடங்களுக்கு தான் ஒதுக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பள்ளிகளைத் திறந்தனர். அதாவது எந்த ஒரு சூழலிலும் பிறரை சார்ந்தோ, அரசு உதவிகளை எதிர்பார்த்தோ அவர்கள் எதற்கும் காத்திருக்கவில்லை. தங்களுக்கு வேண்டியதை தாங்களே செய்து கொண்டார்கள்.
நாடார்களின் இந்த மகமை பண்டு செயல்பாடுகளை கவனித்த அன்றைய முதல்வர் ராஜாஜி இதனை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை வரி என்னும் salestax ஐ அறிமுகப்படுத்தினார் என்பதே சொல்லும் இந்த மகமை பண்டு என்னும் நிதி மேலாண்மையின் மேன்மையை..
ஒரு காலத்தில் தங்களது சாதியை காட்டி என்னவெல்லாம் அவர்களுக்கு மறுக்கப்பட்டதோ அவை அனைத்தையும் பிறரை சார்ந்திருக்காமல் தாங்களே அடைந்து கொண்டனர். கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை இல்லையா? நானே ஒரு கிணறு வெட்டிக்கொள்கிறேன்.. கோயிலுக்குள் விட மாட்டாயா? எனக்கான கடவுளுக்கு நானே கோயில் கட்டிக்கொள்கிறேன், படிக்க விட மாட்டாயா? வா நான் ஆரம்பிக்கும் பள்ளியில் என்னோடு சேர்ந்து உன் பிள்ளைகளும் படிக்கட்டும் என்று ஒவ்வொன்றையும் ஒற்றுமையாக செயல்படுத்தினர். எந்தக் கோயில்களில் எல்லாம் ஒரு காலத்தில் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லையோ அந்த கோயில்களுக்கும் அள்ளி அள்ளி நிதி வழங்கினார்கள். மூடிய கோயில்க் கதவுகள் எல்லாம் தன்னால் திறந்தன. ஒரு காலத்தில் நாடார்களை உள்ளேயே விடாத கோயில்களில் கூட, இன்று நாடார்கள் இல்லாமல் எந்த பண்டிகைகளும் நடப்பதில்லை என்பது கண் கூடாகத்தெரியும் உண்மை.
இது போக தாழ்த்தப்பட்டவர்கள் என்று இருந்த தங்களின் நிலையை சுதந்திரத்திற்கு முந்தைய அன்றைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது போராடி, பிற்படுத்தப்பட்டோர் என மாற்றிக்கொண்டனர்.
தாங்கள் தாழந்தவர் இல்லை, அத்தகைய சொல் பிரயோகம் தங்களுக்கு தேவையில்லை என்று தூக்கி வீசினர். மகமை பண்டு ஒரு புறம் என்றால், 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாடார் மகாஜன சங்கம் இன்னொரு புறம்.. இவர்களின் முக்கிய குறிக்கோளும் கல்வி தான். 1921ம் ஆண்டில் இருந்து 1964 வரையில் சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு, அன்றைய மதிப்பில் நான்கு லட்ச ரூபாய் வரை கல்விக்கான உதவியாக மட்டும் செய்துள்ளனர். இது கடனாகத்தான் கொடுக்கப்பட்டது.. வட்டியில்லாக்கடன். படித்து முடித்ததும் அந்த மாணவன் அதைத் திருப்பி செலுத்திவிட வேண்டும். வெளிநாடுகள் சென்று படிப்பதற்கும் கூட உதவிகள் செய்யப்பட்டன. பள்ளிகளில் இருந்து கல்லூரிகள் பக்கமும் தங்கள் கவனத்தை செலுத்தினார்கள். இன்று இருப்பது போல் பொறியியல் கல்லூரிகளை ஆரம்பிக்காமல் ஒவ்வொரு ஊரிலும் கலை, அறிவியல் கல்லூரிகளை ஆரம்பித்து சமுதாய மாணவர்களை பட்டதாரிகளாக்க முழுமுனைப்புடன் இருந்தன இந்த சங்கங்கள்..
பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும், ஆதிக்க சாதியினரான மறவர், வேளாளர் போன்றோர்களின் எதிர்ப்பு நாடார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இருந்து வந்தது. ஆனால் தங்களின் பள்ளி, கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடம் கொடுத்து, தங்கள் நிறுவனங்களில் பிற சாதியினருக்கும் வேலை கொடுத்து, ஒரு இணக்கமான சூழலை உருவாக்கிக்கொண்டார்கள். இன்று சிவகாசி, விருதுநகர் போன்ற நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி, எண்ணெய் நிறுவனங்கள், தீப்பெட்டி, அச்சு நிறுவனங்கள், பட்டாசுத்தொழிற்சாலைகளில் இதை வெகு சகஜமாக காணலாம். அதாவது ஜாதியால் தன்னை தாழ்ந்தவன் என்று மட்டமாக நினைத்த உயர் ஜாதி ஆட்களைக் கூட தங்கள் ஒற்றுமையால் தங்களை சார்ந்து வாழ வைத்தது தான் நாடார்களின் வெற்றி.
இது தான் நாடார்களின் சுருக்கமான முன்னேற்ற வரலாறு. இதில் எத்தனையை இன்றைய தலித் சங்கங்களோ, அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளோ செய்திருக்கிறார்கள்? நாடார்கள், எதிர்வினை என்னும் பெயரில் எவனெல்லாம் தங்கள் வீட்டுப்பெண்களின் மாராப்பை கிழித்தெறிந்தானோ, அவன் வீட்டுப்பெண்களின் மாராப்பையும் கிழித்து எறிந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. தங்களின் இழி நிலை ஒழிய வேண்டுமானால் உயர் ஜாதி பெண்களை இழுத்து ஓடுவது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நினைக்கவில்லை.. ஒற்றுமையும், முன்னேற்றமுமே குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைய இட ஒதுக்கீடு ஒரு மனிதனை மட்டும் தான் முன்னேற்றும். அவன் தனக்குப் பின் தன் பிள்ளைகளுக்கு தான் அதை பெற்றுத்தர முனைவானே ஒழிய, தன் சமூகத்தை சார்ந்த, இன்னும் கீழ் நிலையில் இருக்கும் பிறர் அதை அனுபவிக்க விடுவதில்லை பெரும்பாலும். ஆனால் இடஒதுக்கீட்டையும் தாண்டி ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் அதற்கு ஒற்றுமை அவசியம். பிறர் நம்மை மட்டமாக பேசுகிறார் என்பதற்காக அதை நினைத்து வருந்தாமல், சண்டை போடாமல், வைராக்கியமாக தன் முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தால், தன்னை பேசியவனையும் தாண்டி ஒரு காலத்தில் வளர்ந்து நிற்கலாம்.. அல்லது கடைசி வரை சண்டை போட்டுக்கொண்டு தானும் முன்னேறாமல், அவனையும் முன்னேற விடாமல் இழி நிலையிலேயே இருக்கலாம்.. இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பது சில தலித் சங்கங்களின் கைகளில் தான் உள்ளன..
இன்னொரு முக்கியமான விசயம், நாடார்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கென்று ஒரு அரசியல் தலைவரை உருவாக்கிக்கொண்டதில்லை, உருவாக விட்டதும் இல்லை.. என்று ஜாதியத்திற்குள் ஓட்டு அரசியல் வருகிறதோ, அன்றே அது அந்த ஜாதியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி, அந்த ஜாதியை வளர விடாமல் செய்து விடும்.. அப்போது தானே அந்த ஜாதிய தலைவர்களால் வெற்றிகரமாக அரசியல் செய்ய முடியும்? முன்னேறி விட்டால் அரசியல் செய்ய முடியாதே? இன்று தங்களை தலித்துகளின் அரசியல் தலைவர்களாக காட்டிக்கொள்ளும் பலரும் செய்வது இதைத்தான்.. அதனால் அரசியல் தலைவர்களையும், இட ஒதுக்கீட்டையும்,
நம்புவதை விட தலித்துகள் தங்களுக்குள் ஒற்றுமையாக சிறு சிறு குழுக்கள் அமைத்துக்கொண்டு நாடார்களின், “மகமை பண்டு” போன்ற விசயங்களை அதில் செயல்படுத்தி முன்னேறலாம்..
அடங்க மறு, அத்து மீறு, திருப்பி அடி, அடுத்தவன் வீட்டுப் பெண்ணை கையப்பிடித்து இழு, எதிர்வினை செய் என்பதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு அன்றாட பிழைப்பை ஓட்டத்தான் பயன்படுமே ஒழிய, அந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் அது பயனைக்கொடுக்காது..
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமானால் படிப்பும், பணமும் தான் பிரதானம். அரசு கொடுக்கும் இடஒதுகீட்டை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் அந்த படிப்பும் பணமும் அனைவருக்கும் கிடைக்க இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம்.. அதுவே தங்கள் சொந்தக்காலில் ஒற்றுமையாக நின்று முன்னேறும் போது, சீக்கிரத்தில் பொருளாதார நிலையில் வளர்ச்சியை அடைந்து விடலாம்.. பொருளாதார வளர்ச்சி மட்டும் தான் ஒரு ஜாதியை அதன் கீழ் நிலையில் இருந்து மேலே உயர்த்தும் முக்கிய காரணி.. அதனால் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன மாதிரியான முன்னெடுப்புக்களை எடுக்க வேண்டும் என தலித் மக்கள் சிந்திப்பதே அவர்கள் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான முதல் படியாக இருக்கும்..
இல்லை இன்னமும் நாங்கள் எங்கள் அரசியல் தலைவர்கள் வகுத்துக்கொடுத்த சீரிய பாதையில் தான் செல்வோம் என்றால், தலித்துகளுக்கு சமூகத்தில் இன்று இருக்கும் மதிப்பு மாற வெகு காலம் பிடிக்கும் என்பது மட்டும் உறுதி...