மணிரத்னம் படங்களைப் பார்த்தாலே எனக்குச் சின்ன வயதில் கேள்விப்பட்ட ஒரு தெனாலி ராமன் கதை தான் ஞாபகம் வரும். அதாவது, ஒரு ஓவியக்கண்காட்சி நடைபெறும். அங்கு வரும் கிருஷ்ண தேவராயருக்கு அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. எந்த ஓவியமும் முழுமை பெறாமல் அங்கங்கு தீட்டாமல் விடப்பட்டிருக்கும்.. பார்வையாளர்கள் அதை தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு கிரகித்துக்கொள்ள வேண்டும், அல்லது தாங்களாக அந்த ஓவியங்களை உருவகித்துக் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அந்த ஓவியங்களை ஆஹா ஓஹோ என்றுப் புகழும் போது மன்னனுக்கு மட்டும் அந்த ஓவியங்கள் எதுவுமே புரியாது. ஓவியர்கள் மீது டென்சன் ஆகி ஏதோ தண்டனை எல்லாம் கொடுத்து, பின் as usual நம்ம தெனாலி ராமன் வந்து ஏதேதோ செய்து மன்னனைத் திருத்துவார்..
நம்ம மணிரத்னம் படம் பார்க்கும் போது ஏன் இந்தக்கதை ஞாபகம் வருமென்றால், அவரின் படம் கதையின் முக்கியமான விசயங்களை, சம்பவங்களை மட்டும் தொட்டுவிட்டுப் போய்விடும்.. பல விசயங்களை நாமாகத்தான் கற்பனை செய்துகொள்ள வேண்டும், ‘இது தான் நடந்திருக்கும்’ என்று. அவர் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு விசயமாக விவரித்துக்கொண்டோ, விளக்கிக்கொண்டோ இருக்க மாட்டார்.. பொதுவாகவே அவரின் படங்கள் பார்ட் பார்ட்டான காட்சிகளை தொகுத்துப் பார்ப்பது போலவே இருக்கும்.. ஒரு வேளை தனி காமெடி டிராக் இல்லாததால் கூட அப்படித்தோன்றலாம்.. நாயகன், தளபதி, பம்பாய் என அவரின் பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 2007ல் வெளி வந்த அவரின் ‘குரு’ படமும் இதே வகையறா தான்.. இந்தப்படத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் பல முறை எழுதியிருந்தாலும் ப்ளாக்கில் ஒரு பதிவாக எழுத ரொம்ப நாள் ஆசை.. இப்போது தான் நிறைவேறுகிறது..
ஒரு கிராமத்தில் சாதாரண ஸ்கூல் வாத்தியாருக்கு மகனாய்ப் பிறந்த ஒருத்தன், வியாபாரத்தின் மேல் அளவு கடந்த வெறி கொண்டு, தன் தகப்பனின் எதிர்ப்பையும் மீறி வியாபாரம் ஆரம்பித்து, சகப்போட்டியாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சட்டம் என அனைத்தையும் மீறி இந்தியாவின் business icon ஆக வளர்ந்து, தன் கனவை நனவாக்குவதே “குரு”.. கேட்பதற்கு மிகச்சாதாரணமான விக்ரமன் பாணி, மசாலாக் கதை போலத்தான் இருக்கும்.. ஆனால் அதை மணிரத்னம் கொடுத்திருந்த விதம் உண்மையிலேயே க்ளாசிக்.. இது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்ட படம் என்பதும் குறிப்பிடத்தக்கது..
இந்தப்படத்தில் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் அது பாத்திரப்படைப்பும், வசனமும், இசையும் தான்.. ஒவ்வொரு பாத்திரமும் மிக மிக நேர்த்தியாக அதற்கென்று ஒரு இலக்கணத்துடன் தான் இருக்கும். குருபாயில் இருந்து ஆரம்பித்து இரண்டு நிமிடம் மட்டுமே வரும் அவரின் செவிட்டு மாமனார் வரை அனைத்துப் பாத்திரங்களும் கச்சிதம்.
அதுவும் வியாபாரம் மட்டுமே உயிர், லாபம் மட்டுமே குறிக்கோள், வெற்றி மட்டுமே இலக்கு என்று ஓடும் ஒரு நாயகனை அவ்வளவு அற்புதமாக படைத்திருப்பார் மணிரத்னம்.. அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் அபிஷேக் பச்சன்.. ஆரம்பக் காட்சிகளில் பம்பாய் மார்க்கெட்டில் துணி டிரேடிங் வியாபாரத்திற்கு மெம்பராவதற்காக ஒருவரிடம் சிபாரிசிற்குப் போய் நிற்பார் அபிஷேக். அந்த ஆள் கோல்ஃப் கிரவுண்டில் இருப்பான்.. “நீ இந்த பந்தை அந்த குழிக்குள்ள போடு, லெட்டர் தரேன்” என்பான்.. “பந்து பொந்துக்குள்ள விழுகணும், அவ்வளவு தான?” என்று கேட்டு, கோல்ஃப் மட்டையை பயன்படுத்தாமல் தன் கையிலேயே அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு போய் நேராக அந்தக்குழியில் போட்டுவிட்டு, “பந்தைப் போட்டுட்டேன், லெட்டர் எப்ப தரீங்க?” என்பார்.. குருவிற்கு சட்டம், ரூல்ஸ் எதுவும் தெரியாது, தெரிந்தாலும் அவனுக்கு அதைப்பற்றிக்கவலை இல்லை.. அவனுக்குத்தேவை இலக்கை அடைவது மட்டுமே, என்பதற்கான ஒரு சிறிய விளக்கம் தான் இந்தக்காட்சி.. பந்து குழிக்குள் விழ வேண்டும், கையாலோ, மட்டையாலோ அல்லது வேறு எதாலோ, ஆனால் பந்து குழிக்குள் விழ வேண்டும் அவ்வளவு தான்.. இது தான் குரு..
அதே போல் தன்னை மட்டமாக நினைப்பவர்களை, குறைத்து மதிப்பிடுபவர்களை, தன்னைப்பற்றி தவறாகப் பேசுபவர்களை அவன் கண்டுகொள்ள மாட்டான்.. ‘உன்னப்பத்தி தப்பா பேசுறவன் பேசிக்கிட்டே தான் இருப்பான்.. அவன் வாயை அடைக்கணும்னா, நீ அவன கண்டுக்காம இன்னும் வேகமா உழைச்சி முன்னேறணும்’ என்பான்.. தன்னைப்பற்றி அவதூறு செய்தி வெளியிடும் பத்திரிகைக்கு தான் அதிக விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பான்.. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதையெல்லாம் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்பான்.. சட்டம், ரூல்ஸ் என எதையும் மதிக்கவில்லை என்றாலும் தன் ஷேர் ஹோல்டர்களை அவன் எப்போதும் கைவிடத் தயாராக இல்லை.. அவன் முன்னேறும் போது அவன் ஷேர் ஹோல்டர்களும் முன்னேற வேண்டும் என்பதில் குறியாய் இருந்தான்.. இப்படி எந்நேரமும் வியாபாரம், டெக்ஸ்டைல்ஸ், லாபம் என்று திரிபவனின் மனைவி எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு நிகராக இருக்க வேண்டுமே?
ஐஸ்வர்யா ராய் அப்படி ஒரு மனைவியாக இந்தப்படத்தில் வாழ்ந்திருப்பார்.. குருவுக்கு சரி சமமாகப் பேசுவதிலும் சரி கஷ்ட நேரங்களில் துணை இருப்பதிலும் சரி, அவரின் வியாபார ஆசைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் சரி, ஒரு perfect match ஆக இருப்பார்கள் இருவரும்.. வேறு ஒருவனைக் காதலித்து அவனை மணக்க முடியாத சூழலில், ஒரு கட்டாயத்தில் தான் அபிஷேக்கை அவர் மணப்பார்.. திருமணம் முடிந்தவுடனே வியாபாரத்தைப் பார்க்க (ஆமா, புதுப்பொண்டாட்டிய விட அவருக்கு வியாபாரம் தான் பெருசு) பம்பாய் கிளம்புவார் அபிஷேக்.. அப்போது ரயில் நிலையத்தில் அவருக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் கவிதை.. பொதுவாகவே ஐஸ்வரயா ராய் என்றால் அவர் ஒருவர் தான் அழகு என்று பலரும் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள்.. எனக்கு அவரைப் பிடித்த ஒரே படம் என்றால் அது இது தான்.. அவ்வளவு அழகாக இருப்பார்.. ஏனென்றால் அந்தப் பாத்திரம் அப்படி..
தன் கணவன், தந்தை போல் மதிக்கும் பத்திரிகை ஜாம்பவானிடம் கூட பதிலுக்குப் பதில் பேசக்கூடிய புத்திசாலி அவள்.. கணவனுக்கு பக்கவாதம் வந்தாலும் துணை நின்று அவனை ஜெயிக்க வைப்பவள், “பிசினஸ்ல மட்டும் இல்லைங்க கஷ்டத்துலயும் கூட நான் அவரோட பார்ட்னர் தான்” என்று கோர்ட்டில் தைரியமாகப் பேசுபவள் அவள்.. ஐஸ்வர்யா ராய் வேறு எந்தப்படத்திலும் இந்த அளவிற்கு நடித்திருப்பாரா என்றுத் தெரியவில்லை... கடைசிக் காட்சியில் கோர்ட்டில் அபிஷேக் அனைத்தையும் பேசி முடிக்கும் போது, அவரை பெருமையும், சந்தோஷமும், அழுகையும் கலந்த மாதிரி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள், செம காட்சி அது.. அந்த ஒரு காட்சி போதும் அவரின் நடிப்பைக் கூற..
அபிஷேக், ஐஸ்வர்யாவிற்கு அடுத்த முக்கியமான பாத்திரங்கள் என்றால் பத்திரிகையாளராக வரும் மிதுன் சக்ரபர்த்தியும், மாதவனும் தான்.. ஆரம்பத்தில் அபிஷேக்கின் தந்தை போல் பாசம் காட்டும் மிதுனே ஒரு கட்டத்தில் அபிஷேக்கின் சட்ட மீறல்களைக் கண்டு அவருக்கு எதிராகத் திரும்புகிறார். தன் பத்திரிகையில் அபிஷேக்கின் முகத்திரையை கிழிக்க அவருக்கு உதவுபவர் தான் மாதவன்.. இது அப்படியே அம்பானியின் வாழ்க்கையில் நடந்த விசயம்.. அம்பானிக்கு ஆரம்ப காலத்தில் "Indian Express”ன் ராம்நாத் கோயென்கா (Ramnath Goenka) மிகுந்த ஆதரவாக, ஒரு குடும்ப நண்பர் போல இருந்திருக்கிறார்.. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் விரிசல் வந்ததால் அவர் எஸ்.குருமூர்த்தியின் (மாதவன் பாத்திரம்) துணை கொண்டு அம்பானியின் லஞ்சம், சட்ட மீறல்கள், என ஒவ்வொன்றாக கிழித்துத்தொங்க விட்டார்.. எஸ்.குருமூர்த்தி இன்றும் பல பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் பற்றியெல்லாம் விரிவாக, practicalஆக எழுதும் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் ஒரு தமிழரும் கூட..
இந்தப்படம் முழுக்க முழுக்க குருநாத் தேசிகன் @ குருபாய் என்னும் ஒரு வியாபார ஆசை கொண்ட மனிதனைச்சுற்றி நகர்வது மட்டும் தான்.. மேம்போக்காக பார்த்தால் ஒரு வறட்சியான, சுரத்தே இல்லாதக் கதை போல் தெரியும்.. ஆனால் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாத ஒரு மாஸான ஹீரோயிசப்படம் என்று இதை தாராளமாகச்சொல்லலாம்.. ஏனென்றால் குருபாய் என்கிற பாத்திரம் நம் மனதில் அப்படி ஒரு பிம்பத்தை விதைக்கும்.. ஹீரோயிசப்படம் என்றால் சண்டைக்காட்சி அவசியம்.. ஆனால் சண்டைக்காட்சிகளை விட விறுவிறுப்பான வசனமும், பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு அமைந்துவிட்டது..
குருபாய் அடிக்கடி சொல்லும் வார்த்தை இது “இல்லைங்கிற வார்த்தை என் காதுல விழாதே?”.. ஒரு இடத்தில் அவரின் நண்பர் சொல்வார், “நீ வியாபாரத்துல ரொம்ப வேகமா ஓடுற”.. அதற்கு குருபாய், “போடா நான் இதை விட வேகமா பறக்கணும்னு ஆசைப்படுறேன்” என்பார்.. மிதுன்சக்கரபர்த்தி குருபாயிடம் ஆரம்பக்காட்சியில் சொல்வார், “ஒரே நேரத்துல பணிவையும் புத்திசாலித்தனத்தையும் யாரும் எதிர்பாக்காத மாதிரி உபயோக்கிற திறமை உனக்கு இருக்கு” என்று.. உண்மை தான்.. தனக்கு ஒவ்வொரு முறை பிரச்சனைகள் வரும் போதும், பணிவாகப் போக வேண்டிய இடத்தில் பணிவாகவும், அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் அதிரடி காட்டவும் செய்வார்.. கலெக்டர் வீட்டில் மொத்த துணி பண்டல்களையும் இறக்கி வைக்கும் காட்சி அதற்கு நல்ல உதாரணம் (நாயகனை ஞாபகப்படுத்தும் காட்சி அது).. “குருநாத் கூட மோதணும்னா நீயும் குருநாத்தா மாறணும்.. ஆனா குருநாத் என்னைக்கும் ஒருத்தன் தான்.. அது நான் மட்டும் தான்” போன்ற வசனங்கள் எல்லாம் அந்த பாத்திரத்தை பில்ட்-அப் செய்வதில் பெரும் பங்கு கொண்டவை..
இந்தப்படத்தில் மிக மிக முக்கியமான, படத்தின் ஆணிவேரான காட்சி என்றால் அது க்ளைமேக்ஸ் கோர்ட் காட்சி தான்.. குருபாய் செய்த ஊழல்களுக்கு கோர்ட் தண்டனை அறிவிக்க இருக்கும்.. அது வரை விசாரணையின் போதெல்லாம் வாயே திறக்காத குருபாய் தனக்குப் பேச வாய்ப்பு வேண்டும் என்பார்.. வெறும் 5நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும்.. அந்த 5 நிமிடத்தில் அவர் பேசும் பேச்சும், அபிஷேக்கின் நடிப்பும், அந்த வசனமும், இசையும் மிரட்டி எடுத்துவிடும்.. ’அப்படி என்னப்பா பெருசா தப்பு பண்ணிட்டான் இந்த ஆளு?’ என அவன் மீது குற்றம் சுமத்தியவர்களே சொல்லும் அளவிற்கு ஸ்ட்ராங்கான வசனம் அது.. கீழே இருக்கும் சுட்டியில் அந்தக்காட்சியைப் பாருங்கள்..
ஏ.ஆர்.ரெஹ்மான், வழக்கம் போல மணிரத்னம் படத்திற்கு சிறப்பாக இசை அமைத்திருப்பார்.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பின்னணி இசை மிகப்பெரிய ப்ளஸ் இந்தப்படத்திற்கு.. ஒரே ஒரு பாடலைத்தவிர மற்ற அனைத்தும் செம.. ஒரே கனா, ஆருயிரே மன்னிப்பாயா இரண்டும் என்னை மிக மிகக்கவர்ந்த பாடல்கள்.. இந்தப்படத்திற்காக IIFA மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ரெஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.. தமிழில் வசனங்களை அழகம்பெருமாள் எழுதியிருந்தார்.. மிக மிகக்கூர்மையான வசனங்கள்.. “5நிமிஷம் டைம் குடுத்தீங்கல்ல எனக்கு? இப்ப நாலரை நிமிஷத்துல எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டேன்.. 30 செகண்ட் ப்ராஃபிட்.. இது தாங்க பிசினஸ்” - மொத்தக் கதையையும் இந்த ஒரு வசனம் சொல்லி முடித்துவிடும்..
படத்தில் எனக்குத்தெரிந்த ஒரே நெருடலான விசயம், குஜராத்திய பாரம்பரிய உடை அணிந்து வரும் ஆட்களை, குஜராத் பக்கம் நடக்கும் கதையை (அம்பானியின் சொந்த ஊர் குஜராத் தான்) தமிழிலும் அப்படியேக் காட்டியிருக்கலாம்.. தேவையில்லாமல் இலஞ்சி என்றுக் கூறி, திருநெல்வேலிப் பேச்சு வழக்கில் அனைவரையும் பேச விட்டது தான் கொஞ்சம் இடித்தது.. இன்னொரு விசயம், ஓரளவாவது பிசினஸ் பற்றித்தெரியாத பாமர மக்களுக்கு இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும், அல்லது நாமாகவே புரிந்து கொள்வோம் என நினைத்து சொல்லாமல் விடப்பட்டிருக்கும் பல விசயங்கள் புரியாது.. மற்றபடி படத்தில் எதுவும் பெரிய தவறாகவோ குறையாகவோத் தெரியவில்லை எனக்கு..
இந்தப்படத்தில் காட்டியிருப்பதைப் போல் ஒரு மனிதன் நிஜமாகவே இப்படியெல்லாம் அரசை ஏமாற்றி, அதன் ஓட்டைகளை பயன்படுத்தி இந்தியாவின் பெரிய பணக்காரன் ஆனான் என்றால் அந்த மனிதன் மீது நமக்கு எவ்வளவு கோபம் வரும்? அவனை தப்பிக்க விட்ட அதிகாரிகள் மீதும், வளர்த்து விட்ட அரசியல்வாதிகள் மீது எவ்வளவு வெறுப்பு வரும்? ஆனால் அதையே ஒரு படமாகப் பார்க்கும் போது, நம்மையும் அறியாமல் அந்த பாத்திரத்திற்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்துவிடுகிறோமே, அது எப்படி? ”அவன் திருந்த வேண்டிய அவசியமே இல்லை.. அவன் எப்பவும் போல வியாபாரம் செய்தான்” என்று தான் படம் முடிகிறது.. நாமும் சந்தோசமாக ரசிக்கிறோம்.. எதனால் இந்த முரண்?
இந்த இடத்தில் தான் எனக்கு இன்னொரு முக்கிய விசயம் ஞாபகம் வருகிறது.. ”சதுரங்க வேட்டை”யை லேசாக இந்தப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கலாம்.. அதிலும் நாயகன் சட்டத்திற்குப் புறம்பாக ஏமாற்றத்தான் செய்கிறான்.. ஆனால் அந்தப்படத்தில் அவன் திருந்துவது போல் முடித்திருப்பார்களே, ஏன்? சிம்பிள், சதுரங்க வேட்டையில் அவனால் பாதிக்கப்படுவது பாமர மக்கள்.. அப்படி மக்களை ஏமாற்றி அவன் சம்பாதிப்பது தற்காலிகமானது.. ஏனென்றால் அவன் எங்கு சிக்கினாலும் பொது மக்களே பெண்டை நிமித்திவிடுவார்கள்.. சம்பாத்தியம் அம்பேல் ஆகிவிடும்.. ஒரு லிமிட்டிற்கு மேல் ஏமாற்றவும் முடியாது.. சின்னச்சின்ன தப்பு செய்பவன் மேல் தானே அதிகாரிகளும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்கள்? அதனால் அவன் திருந்த வேண்டியக் கட்டாயம் அந்தக்கதையில்.. நாமும் அது தான் சரியான முடிவு என்றோம்..
ஆனால் “குரு”வில் அவன் ஏமாற்றுவது அரசாங்கத்தை.. அதுவும் எப்படி?மக்களை தன்னோடு ஷேர் ஹோல்டர்கள் என்னும் பெயரில் கூட்டு சேர்த்துக்கொண்டு.. நாட்டின் பொருளாதாரம் என்னும் பயமுறுத்தும் சங்கதியை தனக்கு பாதுகாப்பாய் உருவாக்கிக்கொண்டு ஒருவன் ஏமாற்றினால் அவனை எந்த அரசாங்கத்தாலும் ஒன்றும் பண்ண முடியாது, அவனும் எப்பவும் போல் சம்பாதித்துக்கொண்டே தான் இருப்பான், மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆதரவுடன்.... ஆக, செய்யும் தவறை பெரிதாக செய்தால் பாமரனில் இருந்து பட்டத்தில் இருப்பவன் வரை நமக்கு உதவுவான் என்பது தான் இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது நமக்கு கிடைக்கும் moral of the stories.. :D
ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..
ஆனால் ஒரு படமாக குருபாய் என்னும் பாத்திரம், “நாயகன்” வேலு நாயக்கரை விட பவர்ஃபுல்லான பாத்திரம் தான்.. ஒரு வேளை மணிரத்னம் இந்தப்படத்தை தமிழில் டப் செய்து வெளியிடாமல் இருந்திருந்தால், அபிஷேக்கின் பாத்திரத்திற்கு அஜித் தான் பொருத்தமாக இருப்பார் என்பது என் கருத்து.. இந்தப் படத்தை பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும் போது பாருங்கள், உண்மையில் நல்ல படம்..