பில்லா 2 விமர்சனம் - தமிழின் Die hard, Mission Impossible

Saturday, July 14, 2012

கிட்டத்தட்ட மொத்த தமிழ்நாடுமே ட்ரைலர் பார்த்துவிட்டு எதிர் பார்த்துக்கொண்டிருந்த படம் எந்திரனுக்குப் பிறகு அநேகமாக பில்லா2 ஆகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு ட்ரைலர் மாஸாக இருந்தது. படம் சுமார் தான் என்று பலரும், சூப்பர், கேவலம் என்று சிலரும் காலையில் இருந்தே சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி கலந்துபட்ட விமர்சங்களின் தாக்கத்தோடும் ஒரு வித பயத்தோடும் தான் தியேட்டருக்கு சென்றேன். ‘தல’ நிரூபித்து விட்டார் - ரஜினிக்கு பிறகு anti-hero என்றால் அது தமிழ் சினிமாவில் தன்னைத்தவிர வேறு யாரும் இல்லையென்று.


ஒரு சாதாரண பையன், ரவுடியாக முறுக்கேறி, கேங்க்ஸ்டராக மாறி, டானாக உருவாவதே படம். இதில் நீங்கள் எதிர்பார்ப்பது போல் காமெடி, குத்துப்பாடல், மரத்தடி டூயட் எல்லாம் இருக்காது. Mission Impossible, Die Hard, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பியர்ஸ் ப்ராஸ்னனோ, ப்ரூஸ் வில்லிஸோ சந்தானத்தோடு காமெடி செய்வது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அது போல் இருக்கும் இது போன்ற கதையில் காமெடி, நடனம் எல்லாம் சேர்ப்பது. எல்லா பாத்திரங்களுமே கதைக்கு மிகவும் தேவையான சரியான பாத்திரங்கள். லாரி ஓட்ட வாய்ப்பு கொடுக்கும் பாயில் இருந்து, சைவ ஹோட்டல் அண்ணாச்சி, மொழி மாற்று கூட்டாளி என்று எல்லாமே கதைக்கு தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்கின்ற பாத்திரங்கள்.

”நாம வாழணும்னா யார வேணும்னாலும் எத்தன பேரனாலும் கொல்லலாம்”னு பில்லா முதல் பாகத்தில் சொல்லும் அஜித், இதில் அதை செயலாக செய்திருக்கிறார். ஒரு டானாக உருவாக அவர் கடந்து வரும் பாதைகள் தான் பில்லா 2. ஹீரோ என்றாலே பேட்டை வில்லனை அடித்து துவைத்து ஒரு தத்துவப் பாடலோடு என்ட்ரியானால் தானே ரசிகர்களுக்கு பிடிக்கும்? ஆனால், அடியாட்கள் முன் அடிவாங்கி மண்டியிட்டு “டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்....” என்கிற அந்த மாஸ் டயலாக்கை மிகவும் அசாதாரண சூழலில், வெறியோடு பேசி அஜித் என்ட்ரியாகும் அந்த காட்சி நிஜமாகவே மாஸ் தான். ப்ளாஸ்பேக்காக கதை செல்கிறது.

ஒவ்வொருவரும் செய்ய யோசித்து பின்வாங்கி விலகும் செயல்களில் தானாக முன்வந்து அஜித் இறங்குகிறார். கடத்தல் லாரியை உரியவரிடம் சேர்த்து, அவர் மூலம் வரும் பழக்கத்தில் கொஞ்சம் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் இன்னும் பெரிய இடம், அந்தப் பழக்கத்தில் ஆயுத பேர வர்த்தகத்தின் தலைவனின் பழக்கம் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவது மிகவும் கோர்வையாக, விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள், வசனமும், யுவனின் பின்னணி இசையும் தான். மிகவும் கூர்மையான, அஜித் என்னும் பிம்பத்திற்கும் பில்லா என்னும் பாத்திரத்திற்கும் கெத்து ஏற்றும் வசனங்கள். இன்டர்வலுக்கு முன் அவர் பேசும் வசனமும் அப்போது வரும் இசையும் மாஸ் & கிளாஸ். இன்டர்வலுக்கு பிறகு வரும் சண்டைக்காட்சியும் தரம். சண்டைக்காட்சிகளையும் சும்மா சொல்லக்கூடாது, ஹாலிவுட்டுக்கு இணையான காட்சியமைப்புகள். அந்த கோர்ட்டு சீன் எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் என்றாலும், அதையும் ரசிக்கும் படி காட்சி அமைப்புகளும் எடிட்டிங்கும், இசையும், நடிப்பும் அமைந்துள்ளன. கடைசி அரை மணி நேரம், ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, வசனங்கள், முடிவில் அந்த பில்லா பின்னணி இசையோடு அஜித் ப்ளைட்டில் ஏறுவது என்று ரசிகர்களுக்கு தீனி போடும் விசயங்கள் படம் முழுவதும் உண்டு.இரண்டு முக்கிய வில்லன்கள். இருவருமே நல்ல நடிப்பு. ஒருவருக்கு சரியாக வசன உச்சரிப்பு வராததால் தான் இன்னொருவரை புரியாத பாஷை பேச வைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வில்லனின் பேச்சு வில்லத்தனம் என்றால், இன்னொருவனின் செயல் வில்லத்தனம். ஹீரோயினும் இருவர். பார்வதி ஓமனக்குட்டன் மட்டும் ஓரளவு நடிக்க முயற்சிக்கிறார். நடிப்பில் ஜஸ்ட் பாஸ் ஆகியும் விட்டார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். அவரது மூக்கும் பல்லும் என்னை என்னமோ செய்கிறது. ப்ரூனா அப்துல்லா கல்யாணம் ஆகிவிட்டதாக கேள்வி, அதனால் அவரை நான் சரியாகக் கூட ‘கவனிக்க’வில்லை. 

ஒரு முக்கியமான ஆளைப்பற்றி இன்னும் இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கிறது. ஆம், நம்ம ’தல’ அஜித் பற்றி தான். ஆரம்ப காட்சியில் “மயிர புடிங்கிட்டு இருந்தேன்” என்று சொல்வதில் ஆரம்பிக்கும், அசால்ட்டான எதற்கும் வலைந்து கொடுக்காத, தைரியமான அந்தப் பார்வை படம் முடிந்த பின்னும் உங்கள் மனதுக்குள் இருக்கும். சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களின் கூட தல ஜொலிக்கிறார். இளவரசு கொடுக்கும் ரூபாய் கெட்டை கையில் விரித்து, ஒரு சின்ன பார்வையோடு தலை அசைப்பதில் கூட பெர்ஃபெக்‌ஷன் தெரிகிறது. பெரும்பாலும் வெறும் பார்வை தான். அதில் கோவம், துக்கம், வெறுப்பு, வெறி, ஆத்திரம், ஏமாற்றம் என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார். இதற்கு முன் இவ்வளவு எக்ஸ்பிரஷ்ன்கள் நான் ‘தல’யின் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை.

இயக்குனர் சக்ரி கதை நடக்கும் கால சூழலை அழகாக கொண்டுவந்திருக்கிறார். இப்போது வரும் பீரியட் ஃப்லிம்களில் எல்லாம் கதை நடக்கும் வருடத்தையோ காலத்தையோ காட்ட காலெண்டரை ஒரு முறையாவது காட்டிவிடுவார்கள், அல்லது அந்தக்கால சினிமா பாடல் டீக்கடையிலோ, ரேடியோவிலோ ஓடுவது போல் காட்டுவார்கள். ஆனால், 1990களின் ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கிறது என்பதை காட்சி அமைப்புகளும் செட்களுமே நமக்கு அழகாக உணர்த்துகின்றன.

”மத்தவங்களோட பயம், நமக்கு பலம்” - இந்த ஒன்லைனை வைத்துக்கொண்டு மிக அழகான, விறுவிறுப்பான, மாஸான ஒரு மசாலாப்படத்தை கொடுத்திருக்கிறார்கள். ‘தல’ ரசிகர்களுக்கு சரியான தீனி தான். ஒரு தல ரசிகனாக நான் மிகவும் ரசித்துப் பார்த்த படங்களுள் இதுவே முதல் இடம் என்று சொல்லுவேன். எனக்கு பெர்சனலாக மங்காத்தா, பில்லா முதல் பாகத்தை விட இது பிடித்திருந்தது..

நான் முதலில் சொன்னது போல, ப்ரூஸ் வில்லிஸும், டாம் க்ரூஸும், ஜேம்ஸ் பாண்டும் ஹாலிவுட்டில் நடித்தால் மட்டும் பார்ப்போம், புகழ்ந்து பேசுவோம், தமிழில் எவனாவது நடித்தால், அதுவும் அஜித் மாதிரி ஒருவர் நடித்தால் பார்க்க மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் பில்லா 2 பிடிக்காது.. உண்மையில் இது ஹாலிவுட்டுக்கு இணையான ஆக்‌ஷன் படம்.. தல you are back to form.. பதினோரு வருடங்களாக ‘தல’ தொடர்ந்து இரண்டு வெற்றிகள் கொடுத்ததில்லை என்கிறார்கள். அந்தக்கவலை இப்போது தீர்ந்தது. இந்த பதினொன்றாவது வருடத்தில் தலயின் இரண்டாவது வெற்றி. பெருமையுடன் சொல்கிறேன் I Love You Thala..

2G ஸ்பெக்ட்ரம் - ஒரு சாதாரண குடிமகனாக என் பார்வையில்..

Monday, July 9, 2012

எப்போ எந்த பத்திரிகை, செய்தித்தாள், டி.வி திருப்பினாலும் ரெண்டு, மூனு வருசமா ஒரு செய்தி தவறாமல் எதாவது ஒரு பக்கத்தில் இடம் பெற்றுவிடும்.. அது தான் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்.. 1.76லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்புன்னு ஒருத்தர் கத்துறாரு.. நாட்டின் மேல் மட்ட தலைமையில் இருந்து அமைச்சரின் நண்பர்கள் வரை 30,000கோடி ஊழல் செய்யப்பட்டதுன்னு டிவியில குதிக்குறாங்க.. இது ஒரு சாதாரண, அடுத்த நாள் சோறுக்கு இன்னைக்கு நாய் மாதிரி வேல செய்யுற ஒரு குடிமகனுக்கு எந்த அளவுக்கு முக்கியம், அவன் வாழ்க்கையில எந்த அளவுக்கு பாதிப்பை கொண்டு வந்திருக்குன்னு சும்மா எனக்கு தெரிஞ்ச வடிவத்துல நான் சொல்றேன்.. மாற்றுக்கருத்துக்கள் தாராளமாக வரவேற்கப்ப்டுகின்றன..


”அலைக்கற்றைகளை குறைந்த விலைக்கு தங்களுக்குப் பிடித்தமான கம்பெனிகளுக்கு விற்றுவிட்டார்கள். அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்கவில்லை. அதனால் அரசுக்கு 1.76லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி குறைந்த விலைக்கு விற்றதற்கு அவர்கள் 30000கோடி ரூபாய் வரை பணம் லஞ்சமாக வாங்கியிருக்கலாம்” என்பது தான் குற்றச்சாட்டு..

சரி, அவர்கள் சொல்வது போலவே ஒரு வேளை ராசா, அன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று, நமது அரசாங்கத்திற்கு 1.76லட்சம் கோடி வருவாயைப் பெற்றுத்தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அந்தப்பணம் ஊழலின் காற்றே படாமல் மக்கள் சேவைகளுக்காக செலவிடப்பட்டிருக்குமா? அந்தப் பணத்தில் இன்னொரு காமென்வெல்த் விளையாட்டு, இன்னொரு ஆதர்ஷ் கட்டிடம் கட்ட ஆரம்பித்திருப்பார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் ரோடும் மேம்பாலங்களும் கட்டுவார்கள். கட்டிவிட்டு சும்மா இருப்பார்களா? மக்களுக்காக கட்டிய ரோடுக்கு மக்களிடமே காசு வாங்குவார்கள். அல்ரெடி ரோடு டாக்ஸ், இன்கம் டாக்ஸ்னு கட்டிட்டு, இந்த ரோட்டுல போறதுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்ஸ் வேற கட்டணும் நாம.. இல்லேன்னா ம.பி., உ.பி. போன்ற வட மாநில முன்னேற்றத்துக்கு ‘ஒதுக்குவார்கள்’.. அது என்னவென்றே தெரியவில்லை, நேரு காலத்தில் இருந்து இந்த உ.பி, ம.பி, பிகார் போன்ற மாநிலங்களுக்குத் தான் நிதி ஒதுக்குகிறார்கள். அந்த நிதி எல்லாம் எங்கே ஒதுங்குகிறது என்றே தெரியவில்லை.. அதுவும் இல்லையென்றால் ராணுவத்துக்கு அந்தப்பணம் போகும். அங்கே மட்டும் என்ன ஒழுங்காகவா பயன்படும்? சின்னப்புள்ள மாதிரி “மிஸ் மிஸ் அவன் வயச நோட்டுல தப்பா எழுதிருக்கான் மிஸ்”னு சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க.. பக்கத்து நாடெல்லாம் ராணுவத்த எப்பவுமே தயார் நிலையில வச்சிருந்தா, நம்ம பசங்க ஒவ்வொரு பட்ஜெட்டுலயும் இவ்வளவு பணம் ஒதுக்கியும், இன்னும் ’துப்பாக்கிக்கு குண்டு இல்ல, டைம் பாம்புக்கு எலெக்ட்ரிக் வாட்ச் கெடைக்கல’ன்னு அடுத்தவன் மேல பழி போட்டே காலத்த ஓட்டிக்கிட்டு இருப்பாய்ங்க.

ஆனால் நாட்டின் வருமானத்தை குறைத்த ராசாவின் செயல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகத்தான் எனக்குப்படுகிறது. தெரிந்த கம்பெனியோ, தெரியாத கம்பெனியோ, லஞ்சம் வாங்கிவிட்டு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார்களோ இல்லையோ, அது பிரச்சனை இல்லை. அவர்கள் அப்படி செய்ததால் நிறைய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் அடி எடுத்துவைத்தன.. ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன் போன்ற ஜாம்பவான்கள் 'கர்டெல்' (cartel) என்னும் முறைப்படி தங்களுக்குள் கூடிப்பேசி மக்களின் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டிருந்தது நிற்க ஆரம்பித்தது. பல கம்பெனிகள் உள்ளே நுழைந்ததால் போட்டியின் காரணமாக மக்களால் குறைந்த விலைக்கு தொலைத்தொடர்பு சேவையைப்பெற முடிந்தது. 4,5 வருடங்களுக்கு முன் ஒரு செகண்டுக்கு ஒரு பைசா, ஏர்டெல் to ஏர்டெல் 10பைசா, டோகோமோ to any mobile 10hrs ஃப்ரீ போன்ற ஸ்கீம்களை நாம் எதிர்பார்த்திருக்க முடியுமா?

செல்ஃபோன் என்னும் ஆடம்பரப்பொருள் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம் பொருளாதார மேதை, புது பொருளாதார கொள்கை கொடுத்து கார், பைக், ஏ.சி, கேஸ் போன்ற பல ஆடம்பரப்பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் லிஸ்டில் கொண்டுவரும்படி கொள்கை அமைத்தார். முட்டாள் மக்களும் அனைத்தையும் வாங்கினர். ஆனால் மெதுவாக பெட்ரோல், கேஸ் போன்றவையின் விலையைக்கூட்டி, முதலாளிகளுக்கு சேவகம் செய்து மக்களின் வயிற்றில் அடித்தனர். ஏன்? பெட்ரோல் கேஸ் நிறுவனங்கள் இங்கே மிகவும் குறைவு. இருக்கும் முதலாளிகள் புதிதாக யாரையும் உள்ளே வரவிடுவதில்லை. அதனால் இஷ்டத்துக்கு கொள்ளை லாபம் வைக்கலாம். போதா குறைக்கு அரசும் வரி போட்டு நம் கழுத்தை நெறிக்கும். இவர்கள் சொல்வது போல், அதிக விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியிருந்தால், இன்று தொலைத்தொடர்புத் துறையில் இத்தனை நிறுவனங்கள் வந்திருக்காது. நமக்கும் விலை மலிவாக செல்ஃபோன் சேவை கிடைத்திருக்காது. 

நம் அரசியல்வாதிகளின் ஆசை, நாட்டு கஜானாவில் பணம் இருக்க வேண்டும். கஜானாவை மக்களிடம் கொள்ளையடித்தாவது நிரப்ப வேண்டும். சேவை நிறுவங்களின் மூலம் கூட லாபம் பார்க்க நினைக்கும் அரசு தான் நம்மளுடையது. லாப நோக்கம் இல்லாமல் மக்களின் நல்வாழ்வை முதல் குறிக்கோளாக கொண்டிருப்பதே நல்ல அரசாங்கமாகும். ஆனால் இங்கே கிட்டத்தட்ட அரசும் ஒரு முதலாளியைப்போல, வியாபாரியைப்போலத் தான் நடந்து கொள்கிறது 2G விஷயத்தில். மக்கள் குறைவான விலையில் நல்ல சேவையைப்பெறுகின்றனரே என்கிற சந்தோசம் இல்லாமல், அரசுக்கு வருமானம் போய் விட்டதே என்கிற கவலை தான் அவர்களுக்கு. அரசுக்கு வருமானம் வந்தால் மக்கள் தான் அதனால் பயன்படப்போகிறார்கள். இப்போது தான் மக்களே நேரடியாக பயன்பெற்றுவிட்டார்களே, இன்னும் ஏன் 2G, 2G என்று கூப்பாடு போட வேண்டும்?

அடுத்த குற்றச்சாட்டு, கிட்டத்தட்ட 30000கோடி ரூபாய் லஞ்சப்பணம் பெற்றுக்கொண்டு அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டன என்று. இந்தியா போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையில் லஞ்சத்துக்கு என்று சில ரூபாய்களை தினமும் ஒதுக்கி வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில், லஞ்சத்தைப் பெரிய குற்றம் போல் பேசுவது லூசுத்தனமாக உள்ளது. லைசென்ஸ் எடுக்க சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும், ஹெல்மெட் போட்டு சாலையில் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பு இல்லாமலும், கையில் 100ரூபாய் இருந்தால் எந்த சட்டத்தையும் விதியையும் மீறலாம் என்கிற எண்ணத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் உரம் போட்டு வளர்க்கும் மக்கள் தான் தினமும் சாலையில் சென்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. மக்களே லஞ்சத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் போது, அரசியல்வாதி ஊழல் செய்வதை எல்லாம் இங்கு யாரும் இப்போது பெரிதாய் எடுத்துக்கொள்வதில்லை. ஒரு சின்ன பொறாமை வேண்டுமானால் இருக்கலாம், “இவன் மொகறகட்டைக்கும் இத்தன கோடி காசா?” என்று. மத்தபடி மக்களுக்கு நாட்டின் மீது அக்கரையோ, ஊழல் நடந்துவிட்டதே என்கிற கொந்தளிப்போ கிடையாது. கறை படிந்த மக்கள் வாழும் தேசத்தில் லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் எதிராகப்பேசுவதே மகா முட்டாள் தனம்..

மிக எளிமையாக சொல்லவேண்டுமானால், ராசா அன்றைய அதிகமான மார்க்கெட் விலையிலேயே, விற்றிருந்தால், கண்டிப்பாக இந்நேரம், உங்களால் இரவு முழுக்க உங்கள் காதலியிடமும், ஊரை விட்டு பிரிந்து வந்து வீட்டு ஞாபகத்தில் அம்மாவிடமும், ஆடி மாச பிரிவில் வாடி ஃபோனே கதி என்று புது மனைவியிடமும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்க முடியாது.
அதே போல அந்த 1.76லட்சம் கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைத்திருந்தாலும் இந்த அரசு நம் நலனுக்கும் எதுவும் செய்திருக்காது. அதனால் மக்களே நம் கையில் idea இல்லேன்னா MTS, அதுவும் இல்லேன்னா uninor, இதுவும் பிடிக்கலேன்னா videocon என்று பல ஸ்கீம்களின் பல ஃபோன்கள் இருக்கின்றன.. கம்மியான விலையில் நாம் செல்ஃபோன் சேவைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த 1.76லட்சம் கோடி வருமான இழப்பு நம் முதலாளித்துவ அரசுக்குத்தான். மக்களாகிய நமக்கு இதனால் ஒரு குறையும் வந்துவிடவில்லை.

நான் ஈ - ராஜமௌலி சொல்லி அடித்த கில்லி..

Saturday, July 7, 2012

 ஒரு இயக்குனர், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் தன் பெயர் கொண்ட முத்திரையை குத்தி தைரியமாக வெளியிடும் கெத்து யாருக்காவது இருக்கிறதா? தெலுங்கில் ஒருவர் இருக்கிறார். எஸ்.எஸ்.ராஜமௌலி.. 2001ல் இருந்து இதுவரை 9 படங்கள் இயக்கியுள்ளர். ஒரு படம் கூட சோடை போனதில்லை. நமக்கு தெரிந்த மாதிரி சொல்ல வேண்டுமானால், சிபிராஜ் அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர்1, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, கார்த்தி கர்ஜித்த சிறுத்தை, ராமநாராயணன் வெளியிட்ட மாவீரன் போன்றவை இவர் தெலுங்கில் இயக்கிய படங்கள். ஜூனியர் என்.டி.ஆருக்கு இருக்கும் மாஸும் இமேஜும் இவர் படங்களால் தான் வந்தது. அனைத்து படங்களும் பால்கனியில் அமைதியாக படம் பார்ப்பவனில் இருந்து 10ரூ தரை டிக்கெட்டில் விசில் அடிப்பவன் வரை திருப்திபடுத்தும் விதமாக கொடுப்பது தான் இவர் ஸ்பெஷல். இன்று இவர் இயக்கத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வந்திருக்கும் நான் ஈ படம் பார்த்தேன். விக்ரமார்குடு (தெலுங்கு சிறுத்தை) பார்த்த போது என்னை கவர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக இருந்த ராஜமௌலி இன்று முதல் என் மனதில் தனி சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டார்.

தின்பண்டங்கள் மீது ஈ அமர்ந்திருந்தால் நீங்கள் அதை விரட்டக்கூட இனி யோசிப்பீர்கள். “அய்யோ பாவம்” விட்ரலாம் என்று உங்கள் பெண் தோழி சொல்லுவார். வெறும் ஈயாக மட்டும் நீங்கள் அதை இனி பார்க்க மாட்டீர்கள் “நான் ஈ” பார்த்துவிட்டால். சாதாரண முக்கோண காதல் கதை தான். பணக்கார வில்லன், அப்பாவி ஹீரோ, அழகான ஹீரோயின். அதில் மறுபிறவி, ஈ என்று தனது முத்திரையை இன்னும் அழுத்தமான மையினால் திரையில் பதித்திருக்கிறார் ராஜமௌலி.

 காதலனிடம் தன் காதலை காதலி வெளிப்படுத்தும் போது அவன் வில்லனால் கொல்லப்படுகிறான். செத்தவன் ’ஈ’யாக பிறந்து காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றி, வில்லனைக் கொன்று, நம்மையும் சந்தோசப்பட வைக்கிறான் கடைசி ஃப்ரேம் வரை. படத்தின் பல காட்சிகள் இப்படியெல்லாம் நடக்குமா என்று கூட உங்களை யோசிக்க விடாமல், “அய்யோ நானி எப்படியாவது தப்பிச்சிரு, எப்படியாவது வில்ல கொன்னுரு” என்று உங்களை அறியாமல் நீங்களே வேண்டுவீர்கள்.

இண்டெர்வெல் ஆக்ஸீடண்ட் காட்சி ஹீரோயிசத்தின் உச்சம் என்றால், அதற்கு அடுத்து “நான் தான் நானி, மறுபடியும் பொறந்திருக்கேன்” என்று ஈ ஹீரோயினிடம் சொல்லும் காட்சியில், எந்தக் கொம்பனுக்கும் புல்லரிக்கும். ஈ உடற்பயிற்சி செய்வது, மாஸ்க் மாட்டிக்கொள்வது, விஷமருந்து தாக்கி உயிர் பிழைப்பது என்று செண்டிமெண்ட்டும் ஃபேண்டசியும் சரி விகிதத்தில் கலந்து ஜெட் வேகத்தில் 101% கமர்ஷியல் விருந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

நானி (படம் பேரு இல்ல, ஹீரோ பேரு) முதல் கொஞ்ச நிமிடங்களே வந்தாலும், ‘மௌன ராகம்’ கார்த்திக் மாதிரி மனதில் ஒட்டிக்கொள்கிறார். சமந்தாவிற்கு டப்பிங் பேசிய பெண் மெனகெட்ட அளவுக்கு கூட சமந்தா நடிப்பில் மெனக்கெடவில்லை. அழகு மட்டும் போதாது அம்மணி. சுதீப் - கதையின் நாயகன் இவர் தான். கொடூரமான வில்லனாக, ஈக்கு பயந்து ஒவ்வொரு விசயத்திலும் சொதப்புவது ஆகட்டும், கடைசியில் சமந்தாவிடம் குண்டூசியை வைத்துக்கொண்டு மிரட்டுவது ஆகட்டும், ஆள் மிரட்டி எடுத்துவிட்டார். அடுத்து அந்த ஈ.. யாருப்பா ஒரு சின்ன இத்துனூண்டு ஈக்கு இவ்வளவு எக்ஸ்பிரஷன்கள் கொடுத்தது? கொஞ்சம் அசந்தாலும் கார்டூன் போலவோ, விட்லாச்சார்யா படம் போலவோ ஆகிவிடக்கூடிய கதையில், இந்த ஈ நம்மை ஒரு ஆக்‌ஷன் ஹீரோ போல் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறது.

இரண்டு காட்சிகள் மட்டுமே வந்தாலும் சந்தானம் கிச்சி கிச்சி மூட்டுகிறார். சாம்பிளுக்கு,
திருட வந்த இடத்தில் அவர் அசிஸ்டண்ட் ஃபோன் அடித்து, “இந்த தெருவுல 4ம் நம்பர் வீடு பூட்டியிருக்கு அங்க ஆளே இல்ல. அங்க திருடவா?”
“மூதேவி, அது என் வீடுடா”. படம் முடிந்து விட்டது என்று யாரும் கிளம்பிவிடாதீர்கள். அதற்கு பின் அலப்பறையான சந்தானம் காமெடியும், ஈயின் ”ஜிந்தா ஜிந்தா”, “எல்ல புகழும் ஒருவன் ஒருவனுக்கே” டான்ஸும் கண்டிப்பா பாருங்கள்.

மூன்று பாடல்கள். மூன்றுமே அருமை. பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கிறது. கே.கே. செந்தில்குமாரும் (கேமரா), கீரவானியும் (இசை) ராஜமௌலிக்கு மிகுந்த பக்க பலமாக இருந்திருக்கிறார்கள். ’என்னப்பா இது மறுஜென்மம், ஈ, அது இதுன்னு? லாஜிக்கே இருக்காது போலயே!’ என்றும்,’ஒரு ஈயால் மனிதனை பலி வாங்க முடியுமா?’ என்றும் கேள்வி எழுகிறவர்கள் தியேட்டருக்கு தைரியமாக வரலாம். முதல் அரை மணி நேரம் முடிந்ததும் நீங்களே உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வீர்கள் “கண்டிப்பா அந்த ஈ வில்லன கொல்லணும்” என்று. அதான் ராஜமௌலி.. வாங்க ரெண்டேகால் மணி நேரம் கவலை மறந்து என்ஜாய் பண்ணலாம். இனிமேல் வெட்டியா இருக்கும் போது எவனாவது நம்மள, “என்ன ஈ ஓட்டுறியா?”னு கேட்டா, சிரிச்சுக்கிட்டே சொல்லுங்க, “இல்ல, என் ஃப்ரண்ட் கூட விளையாடிக்கிட்டு இருக்கேன்”னு..

அஜித்தின் பாப்புலாரிட்டி நீர்க்குமிழியா?

Thursday, July 5, 2012

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவருக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்’ என்பது போன்ற நிரந்தர செல்வாக்கா? அல்லது வந்த வேகத்தில் வெடித்துச் சிதறிவிடும் நீர்க்குமிழி போன்றதா? ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் அஜித்தின் செல்வாக்கை அணுகியிருக்கிறேன். பார்க்கலாம்..

சுமார் எட்டு வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ’ஜனா’ என்கிற படம் ரிலீசான மே 1, 2004, விஜய்யின் ’கில்லி’ ரிலீசான ஏப்ரல்17, 2004ம் காலத்தில் இருந்து ஆரம்பிப்போம். ’வில்லன்’ என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியாகக் கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சநேயா’, ‘ஜனா’ என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். ’வில்லன்’ படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் ’வசீகரா’, ’பகவதி’ என்று மிகவும் சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை’ என்று ஒரு ஹிட் கொடுத்தார். சொல்லப்போனால் அவர் தந்தை, விஜய்க்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின என்று (ப்ரண்ட்ஸ் - 175 நாள், குஷி - 150 நாள், ப்ரியமானவளே - 125 நாள், பத்ரி - 100 நாள்).. அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, ஷாஜகான், தமிழன், புதிய கீதை என்று.. கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது தான் ‘திருமலை’ வெற்றி. ’திருமலை’ ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ’ஆஞ்சநேயா’.. அப்போது அவர் பேட்டிகளும் மிகவும் ‘ரா’வாக இருக்கும். ’நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், ‘எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்’ என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில்.. ‘ஆஞ்சநேயா’ அட்டர் ஃப்ளாப் ஆனது..

பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. ”ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்” என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் & பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று கலைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. காரணம் அஜித்தின் கரடுமுரடான வார்த்தைகளும், எதையும் வெளிப்படையாக பேசும் அவரின் பேட்டிகளும் தான்.. அதே வருடத்தில் விஜய்க்கு 'உதயா' என்றொரு ஃப்ளாப் வந்தாலும், 'கில்லி'யின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர’ படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்’ ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.. படம் வெற்றி தான் என்றாலும், அதற்கு முன் வந்த அஜித்-சரண் காம்பினேசன் (’காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’) அளவிற்கு இந்தப் படம் அமையவில்லை..

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் என்ன நடித்தாலும் படம் ஹிட் என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த மூன்று படங்களில் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) இரண்டு வெற்றி பெற்றன. சச்சின் சுமாராகத்தான் ஓடியது.. ஏனென்றால் அது மோதியது ’சந்திரமுகி’யோடு!!  அஜித் நடித்து இந்த வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ” அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். அடுத்த ரஜினி, வசூல் மன்னன் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு எப்பவுமே இருக்கும் “ஓப்பனிங் கிங்” என்கிற பட்டம் கூட லேசாக ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்கலில் ’பரமசிவன்’, ’ஆதி’ என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், ’ஆதி’யை விட ’பரமசிவன்’ நன்றாக ஓடியது. 2006ன் 'ஆதி'யே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு இதே வருடத்தில் வந்த 'திருப்பதி' ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓட்டப்பட்டது. வருமா வராதா என்று காக்கவைத்த ‘வரலாறு’ தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. தான் ஒரு அஜித் ரசிகன் என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் இப்போது தான் கொஞ்சமாக வெளியே தலை காட்டி தங்களை ‘தல’ ரசிகர்கள் என தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார். 2006 அஜித்திற்கு ஒரு நல்ல படமாக அமைந்தது..

ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் ஆழ்வாராக வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார்.. இப்போது தான் அஜித் - விஜய் என்று இருவருக்குள் மட்டும் இருந்த போட்டியில் புதிதாக ஒருவர் வந்தார்.. அவர் தான் சூர்யா..

சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து ’விஜய்க்கு நான் தான் சரியான போட்டி’ என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத்தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது. 2007ல் பொங்கலுக்கு வந்த ’வேல்’ என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் தன் நடிப்புத்திறமையை (!!!!) காட்ட ’அழகிய தமிழ் மகன்’ படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்” என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது. அவரின் இரட்டை வேட நடிப்பை, அதில் காட்டிய வித்தியாசத்தை அவர் ரசிகர்களாலேயே ஜீரணிக்க முடியவில்லை..

ஆனால் அஜித் இதே வருடத்தின் முடிவில் ’பில்லா’ என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து தப்பித்துவிட்டார். ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப் படத்தை ரீ மேக் செய்ய ஒரு தைரியம் வேண்டும்.. அதை ஹிட்டாக்க அதை விட பெரிய உழைப்பும், டீமும் அமைய வேண்டும். அனைத்தையும் அஜித் சாதித்துக்காட்டினார்.. ஆனால் விஜய், ’அழகிய தமிழ் மகன்’ என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார். ஆனாலும் அவரின் கெட்ட நேரம் அதோடு முடியவில்லை..

2008, 2009, 2010 என வரிசையாக ’குருவி’, ’வில்லு’, ’வேட்டைக்காரன்’, ’சுறா’ என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்து, ஒரு காலத்தில் அஜித் ரசிகர்கள் தங்களை அஜித் ரசிகன் என்று சொல்லிக்கொள்ள எப்படி கூச்சப்பட்டார்களோ, கிண்டலுக்கு பயந்தார்களோ அதே நிலை இப்போது விஜய் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை ’சுறா’ மாதிரி கொடுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல ’பில்லா’ வெற்றியை தக்க வைக்க முடியாமல் ’ஏகன்’, ’அசல்’ என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் இப்போ ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார்??

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது இப்போது இருந்தது சூர்யா கையில். விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும், அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள். ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் அவருக்கு,  குடும்ப ரசிகர்கள் நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமாக அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் ’வாரணம் ஆயிரம்’, ’அயன்’, ’ஆதவன்’, ’சிங்கம்’ என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். 


ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்” என்கிற நீர்க்குமிழி உடைய ஆரமபித்தது. விஜய்க்கு அந்தக்குமிழி உடைய ஒரே மாதிரியான அவரின் படங்கள் காரணம் என்றால், சூர்யாவிற்கு அவரே காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் மேடை மேடியாக ஏறி சுயபுகழ்ச்சி பேசுவது என்று வழமையான ஒரு நடிகன் தான் தானும் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். ”சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது”,  என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். 'சிங்கம்' படத்துக்குப்பிறகு அவர் 2011 தீபாவளிக்கு நடித்த 'ஏழாம் அறிவு' எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சரி, இப்போது சூர்யாவிடமும் “என்ன நடிச்சாலும் ஹிட்” பட்டம் இல்லை. அஜித்தும் ஃப்ளாப் கொடுத்துவிட்டார். விஜய், 'காவலன்' என்று ஒரு சுமாரான வெற்றிப்படத்தில் நடித்திருந்தாலும், 'வேலாயுதம்' மறுபடியும் பழைய மாதிரி எஸ்.எம்.எஸ் ஜோக்குகளுக்கு அவரை ஹீரோவாக்கியது. யாராவது ஒரு ஆளுக்கு ‘என்ன நடித்தாலும் ஹிட்’ என்கிற பட்டம் போய்த்தானே ஆக வேண்டும்? அந்தப்பட்டம் அடுத்த லெவலில் இருக்கும் விக்ரமுக்கோ, சிம்புவுக்கோ தனுஷுக்கோ போகாமல் யாருமே எதிர்பாரா வண்ணம் சூர்யாவின் தம்பி கார்த்திக்கிற்கு சென்றது. கார்த்தியே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்..

கார்த்தி நடித்திருப்பது இது வரை ஆறே ஆறு படம் தான். ஆனாலும் தன்னுடைய மூன்றாவது படத்தில் இருந்தே அவர் என்ன நடித்தாலும் ஓடும் என்கிற பிம்பம் வர ஆரம்பித்துவிட்டது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்குத்தப்பாக எகிறியது. மக்களுக்கும் அவரின் அசால்ட்டான அலட்டல் இல்லாத நடிப்பு மிகவும் பிடித்துப்போய் விட்டது. 2011ல் அவர் நடித்த ’சிறுத்தை’ அனைவரையும் கவர்ந்து, அவரை முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் சேர்த்தது. 

ஆனால், நம்ம நடிகர்களுக்கு தான் ஒரு விசயத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள தெரியாதே? கிட்டத்தட்ட தன் அண்ணன் செய்த அதே தவறை தம்பி கார்த்தியும் செய்ய ஆரம்பித்தார். எல்லா மேடைகளிலும் தோன்றி “என்ன மாமா சௌக்கியமா?” என்று பொம்மை செல்ஃபோன் பதிந்து வைத்த வார்த்தைகளையே திரும்ப திரும்ப பேசுவது போல், அவரும் திரும்ப திரும்ப சொல்லி வந்தார். பேச்சிலும் கொஞ்சம் அலட்டல் தெரிய ஆரம்பித்தது. முன்னணியில் இருக்கும் நான்கு நடிகர்களுக்கும் (அஜித், விஜய், சூர்யா, கார்த்தி) 2011 ஓரளவு நல்ல வருடமாகவே இருந்தது. கார்த்தி வருட ஆரம்பத்தில் ’சிறுத்தை’ நடித்திருந்தார். ஆனால் வருடத்தின் பின் பகுதியில் வந்த மற்ற மூவரின் படங்கள் சிறுத்தையின் ஆக்ரோஷத்தை குறைத்தன. அதுவும் அஜித்தின் ’மங்காத்தா’, எந்திரனுக்கு அடுத்தபடியாக வசூலில் சாதனை புரிந்தது. 

விஜய், சூர்யா, கார்த்தி என்று அனைவரும் மறக்கடிக்கப்பட்டு எங்கு பார்த்தாலும் “தல”, “அஜித்” என்றே எல்லா பக்கமும் பேச்சுக்கள் வர ஆரம்பித்தன இப்போது. ’மங்காத்தா’ மட்டும் தான் அதற்கு காரணம் என்று சொல்ல முடியாது. அஜித்தின் இயல்பான, உண்மையான சுபாவம் பலருக்கும் பிடிக்க ஆரம்பித்திருந்தது. அஜித் என்கிற நடிகனை விட பலரும் அஜித் என்கிற மனிதனை ரசிக்க ஆரம்பித்திருந்தார்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக் தான். பலரும் அஜித்தைப் பற்றி அதிரிபுதிரியாக தங்களுக்குத்தெரிந்த உண்மைகளை, அவர் செய்த உதவிகளை, பெர்சனலாக அவருக்கு இருக்கும் நல்ல குணங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அதை ஒவ்வொருவரும் share செய்து share செய்து பரவலாக அனைவருக்கும் அவரின் குணம் புரிந்தது. இது போக கலைஞரின் பாராட்டு விழாவில் தைரியமாக “உங்க functionக்கு வரச்சொல்லி எங்கள மிரட்டுறாங்க ஐயா” என்று அவர் பேசியது, இத்தனை நாள் அவர் மீது காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்ந்த பத்திரிகைகளுக்கு கூட அவரை பாராட்ட ஒரு காரணமாய் அமைந்தன. பொது மக்களிடம் இது அவருக்கு இன்னும் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. 

ரசிகர் மன்றத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தது, பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது, என்று அவர் செய்யும் ஒவ்வொன்றும் பொது மக்களிடம் அவரை உண்மையாக கொண்டு சேர்த்தன. ஒரு காலத்தில் ”திமிராக இருக்கிறார்” என்று அவரை வெறுத்தவர்கள், இன்று அதே திமிருக்காக அவரை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அஜித் என்று பேசினால் அவரைப் பிடிக்காதவர்கள், அவரின் படங்களை கிண்டலடிப்பவர்கள் கூட அவரின் நல்ல பண்புகளைப் பற்றி பேசும் சூழல் தான் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இது வரை அவரின் கேரியரில் பார்த்தால், “என்ன நடித்தாலும் ஹிட்டு” என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை. ஆனால் எப்போதும் முன்னணி நடிகர் லிஸ்டில் இருந்து கொண்டே இருப்பார். அவரின் படங்கள் தொடர்ந்து ப்ளாப் ஆனாலும், அவரின் அடுத்த படத்துக்கு முந்தைய படத்தை விட அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அது அஜித் என்கிற நடிகனுக்காக இல்லை. அஜித் என்னும் நிஜ வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத ஒரு உண்மையான மனிதனுக்காக. ’பில்லா 2’ ட்ரைலர் வெளியிட்ட ஒரே நாளில் 3லட்சம் ஹிட்ஸ் வந்துள்ளது. எந்திரனுக்கு கூட இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் இருந்ததா என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை படம் ஓடாமல் போனாலும் யாரும் முன்பு மாதிரி அஜித்தை குறை சொல்லவோ கிண்டல் செய்யவோ மாட்டார்கள்.

ஏனென்றால் அவரின் பக்குவம் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் கூட வந்துவிட்டது. அஜித், இனி படமே நடிக்காமல் போனாலும் அவர் மீது மக்களுக்கு இதே அபிப்பிராயம் தொடரும். அவர் நடிகன் என்கிற படியை தாண்டி பக்குவமான ஒரு மனிதன் என்கிற இடத்தில் அனைவரும் ஆதர்சமாக பார்க்கும் இடத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். கொஞ்சம் யோசித்தால் ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அது, அஜித் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை தன் குணத்தையோ செயல்பாடுகளையோ மாற்றிக்கொண்டதே இல்லை என்பது தான். ஆனால் மக்களை அவர் மாற்றிவிட்டார். தன்னுடைய வெளிப்படையான பேச்சிற்காக கிண்டலும் அசிங்கமும் செய்த மக்கள், ’திமிர் பிடித்தவன்’ என்று பேசிய மக்கள், இன்று அதே வெளிப்படையான பேச்சுக்காவே அவரை ரசிப்பது, நிஜமாகவே அஜித் என்ற மனிதனுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றி. ஒரு படம் வெற்றி அடைவதை விட, ஒரு மனிதன் என்கிற அளவில் அஜித் பெற்றிருக்கும் இந்த வெற்றி இதுவரை சம காலத்தில் எந்த நடிகருக்கும் கிடைக்காதது, இனிமேலும் வேறு யாருக்கும் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.. அதனால் மற்ற நடிகர்களுக்கு இருந்தது போல், இவருக்கு இப்போது வந்திருக்கும் பாப்புலாரிட்டி “நீர்க்குமிழி” இல்லை என உறுதியாகச் சொல்லலாம். இந்த புகழ்ச்சி அவரின் எதிர்நீச்சலுக்கு கிடைத்த வைர கிரீடம். அதை யாராலும் உடைக்கவும் முடியாது, அழுக்குப்படுத்தவும் முடியாது..

நீ எப்பவுமே டாப் தான் ‘தல’....

12வது காதலியும் சில நல்லவர்களும் - சிறுகதை

"நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன்லடா பொட்டச்சி சகவாசம் வேணாம் பொட்டச்சி சகவாசம் வேணாம்னு, கேட்டியா நீயி?” - என் நண்பன் ராம் எரிந்து விழுந்தான். ஒரு லவ் ஃபெயிலியரிலேயே மொத்த பெண் இனத்தையும் எதிரி போல் பார்ப்பவன். கான்ஃபிடன்ட் இல்லாத பாய்.

“நான் என்னடா பண்ண? திடீர்னு கோச்சுக்கிட்டு ஃபோன ரெண்டு நாளா அமத்தி வச்சுட்டாடா. நம்பர கூட மாத்திருப்பாளோனு பயமா இருக்குடா” - நெஜம்மாவே இந்த காதலும் டி.ஆர். பட கிளமைமாக்ஸ் மாதிரி ஆகிருமோன்னு பயந்துக்கிட்டே பேசுனேன்..

”ரெண்டு நாளாவா? இப்ப வந்து சொல்ற? ஒனக்கு என் ஞாபகம் இப்போவாவது வந்ததே..”

“ஃபேஸ்புக் ஐடியும் இல்லடா”

“இதுக்காடா அவன் ஃபேஸ்புக் கண்டுபுடிச்சான்?” - ஆமா வேற எதுக்கு கண்டுபுடிச்சான்? இதுக்குத்தான? இந்த லூசுப்பய ராம் இப்படித்தான் எதையாவது ஒளரிக்கிட்டு இருப்பான்.

“என்னடா யோசிக்குற? இந்த பொட்டச்சிங்க எல்லாருமே இப்படித்தான்டா. பேசாமா எதாவது சந்தானம் ஜோக் பாத்துட்டு தூங்கிரு காலைல சரியாகிடும்” - இவன் சீரியஸா பேசுறானா இல்ல அவன மாதிரியே என் லவ்வும் புட்டுக்கிச்சின்னு சந்தோசத்துல பேசுறானானே தெரில..

“டேய் நான் என் லவ்வருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம பதட்டத்துல இருக்கேன், என்ன காமெடி பாக்க சொல்ற?”

“சரி நீ அவ நம்பர தேடி ரோடு ரோடா அல.. எனக்கு வேல இருக்கு நான் ஃபோன வைக்குறேன். ஆனா மறுபடியும் சொல்றேன் பொட்டச்சி சகவாசம் வேணாம்” - என் பதிலுக்கு கொஞ்சம் கூட காத்திராமல் வைத்துவிட்டான்.

சே என்ன உலகம் இது? அவனோட பெஸ்ட் ப்ரண்ட் நான்.. லவ் ஃபெயிலியர்னு சொல்றேன், கொஞ்சம் கூட ஆறுதல் சொல்லாம எடுத்தெறிஞ்சி பேசுறானே? சரி நம்ம தலைவிதி அவ்ளோ தான்” நொந்து கொண்டே அடுத்து யாருக்கு கால் செய்து பொலம்பலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்..

எம்.பி.ஏ.ல ஆறு மாசம் மட்டும் படிச்சிட்டு ஓடிப்போனானே, அவனுக்கு கால் பண்ணலாமா?
அடங்கோ நைட்டு பன்னெண்டு மணிக்கு வெயிட்டிங் கால் வருது.. ஹிம் சரி, இன்னும் கொஞ்ச நாள்ல அவனே நமக்கு கால் பண்ணுற காலம் வரும்னு மன்ச தேத்திக்கிட்டேன். நமக்கு ஒரு பிரச்சனை வரும் போது தான் எல்லா நண்பனும், ஞாபகம் வராய்ங்க.. காதல் எல்லாருக்கும் லைஃப்ல எத்தன தடவ வரும்னு தெரியாது.. ஆனா எனக்கு இது வரைக்கும் 12 தடவ வந்திருக்கு.. இந்த டசன் காதல்களிலும் நான் புரிந்து கொண்ட மிகப்பெரிய விசயம், காதல் செலவு வைக்கும் என்பதை மட்டும் தான். புரிந்து கொள்ளாத ஒரே விசயம் பொம்பளைகளுக்கு எப்போ கோவம் வரும் என்பதைத் தான்.
என் காதலி, ஆமா இப்போ இருக்குற 12வது காதலி தான்.. அவ பேரு, சரி விடுங்க பேரு எதுக்கு? கழுத நாளைக்கு இத அவ ப்ரண்ட் ப்ரொஃபைல் மூலமா படிச்சான்னா அதுக்கும் ஒரு சண்ட போடுவா. கடவுள் எதுக்கு ஆம்பளைகளுக்கு பொம்பளைய ஜோடி ஆக்குனான்? பேசாம பொம்பளைய பொம்பளை கூடவே ஜோடியாக்கியிருக்கலாம்.. ஆம்பளைங்களாவது நிம்மதியா இருந்திருப்பாய்ங்க..

அய்யோ இப்படி கண்டத ஒளற வச்சுட்டாளே?! எவனுக்காவது ஃபோன் போட்டு அணத்தனுமே? கல்லூரியின் கடைசி நாளுக்குப்பிறகு என்ன ஆனான்னே தெரியாத ஜானுக்கு ஃபோன் அடித்தேன்.

“கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்”னு பாட்டு பாடுது ஃபோன்ல.. சிரிப்பே கண்ணீராகும்டா சீக்கிரத்துல என்று சொல்லி மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டேன்..

“ஹல்லோ”

“ஜானா?”

“ஆமா நீங்க யாரு?”

“டேய் நான் தான்டா.....” வழக்கமான கல்லூரிக்கால மொக்கைகளையும் வேலை பழுவையும் பேசி மேனேஜரை சைக்கோ லூசு என்று வைதுவிட்டு மேட்டருக்கு பயலை மெதுவாக இழுத்து வந்தேன்.

“அப்பொறம், எப்ப கல்யாணம்?”

“ஏ அதுக்கெல்லாம் இன்னும் ரெண்டு வருசம் ஆகுமப்பா” அவன் பேச்சிலேயே வெக்கம் தெரிந்தது. பய வசம்ம்ம்ம்ம்மா ஒரு வலையில சிக்கி இருக்கான் போல, “ஒனக்கு எப்போடா?” எனக்கே பதில் கொக்கி போட்டான்.
கிடைத்துவிட்டான் ஒருவன் புலம்ப என்கிற தைரியத்தில் ஆரம்பித்தேன். “எனக்கெல்லாம் நடக்கவே நடக்காதுடா” இவ்வளவு நேரம் நார்மலா இருந்த என் குரல் இப்போது எனக்கே தெரியாமல் சோகம் ஆகிவிட்டதை உணர்ந்தேன். முகம், விக்ரமன் பட ஹீரோ கிளைமேக்ஸில் இருப்பது போல் தொங்கிப்போய் இருந்தது.

“டேய் மாப்ள என்னடா ஆச்சி? ஏன் சோகமா பேசுற?” திடீர் உரிமையுடன் பேசினான்.

“இல்லடா சீரியஸா(!) ஒருத்திய (!!!!) லவ் பண்ணுனேன். திடீர்னு சண்ட போட்டுட்டு போயிட்டாடா. பைத்தியம் பிடிக்குற மாரி இருக்கு”

“அடச்சே இத்துக்கு தான் இவ்ளோ பில்ட்-அப்பா? நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” ரொம்ப அசால்ட்டா சொன்னான்.

“டேய் என் லவ்வு ஒனக்கு பில்டப் மாதிரி தெரியுதாடா?”

"அதில்லடா இதுக்கெல்லாம் இவ்ளோ வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்ல”

“டேய் லவ்வுடா.. ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் ஒருத்தி என்ட பேசிக்கிட்டு இருந்தா, ஆனா இப்போ அவ என்ன ஆனான்னே தெரில. ஒனக்கு என்னோட ஃபீலிங்க்ஸ் புரியல மாப்ள”

“நீ மேட்டர முடிச்சிட்டியா?”

“என்னதுரா” அதிர்ச்சியில் கேட்டேன்

“மேட்டர்.. மேட்டர்.. மேட்டர முடிச்சுட்டியான்னு கேட்டேன்” நான் காது கேக்காமல் திரும்ப கேக்குறேன்னு அவன் அழுத்தி சொல்றான். லூசுப்பய..

“டேய் இது லவ்வுடா”

“அதுவும் லவ்வு தான்.. டேய் மேட்டர் முடிச்சிரணும்டா.. அப்போ தான் இவளுக நம்ம கண்ட்ரோல்லயே இருப்பாளுக”

“ஓ, மேட்டர் முடிச்சிட்டா சண்டையே வராதாடா?” பன்னெண்டு முறை மிஸ் பண்ணிவிட்ட விரக்தியில் கேட்டேன்.

“சண்ட வரும்.. பேசாமலும் இருப்பாளுக.. கழட்டியும் விட்ருவாளுக”

“பெறகு எதுக்குடா மேட்டர முடிக்க சொல்ற”

“இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டடா. மேட்டர் முடிச்சுட்டா ஒனக்கு ‘சே இவ்ளோ தான் லவ்வா?’னு அதப்பத்தின உண்மை தெரிஞ்சிரும். அதுக்குப்பெறகு நீ லவ்வ ப்ரேக்டிக்கலா அப்ரோச் பண்ணுவ”

“டேய் அந்த பொண்ணோட வாழ்க்க?”

“எலேய் அவளுக்கும் சேத்து தான். மேட்டர் முடிச்சிட்டு பிரிஞ்சி போனவைங்க
தான் உருப்படியா இருக்காய்ங்க.. ஒன்ன மாதிரி முரளி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணுறவன் தான் கொல பண்றது, கல்யாணத்த நிறுத்துறது, தற்கொலை பண்ணுறதுன்னு திரியுறாய்ங்க. மேட்டர் முடிச்சுட்டா சந்தோசமா அவ கல்யாணத்துக்கே போயி அவ புது புருஷனுக்கு கை குலுக்கிட்டு வரலாம்”

“அந்தப்பொண்ணையே கல்யாணம் பண்ணக்கூடாதா மேட்டர் முடிச்சிட்டா?”

“அதான் மேட்டர் முடிச்சாச்சில்ல, பெறகு எதுக்கு அதே பொண்ணு?”

“டேய் காதலிச்சா அவளையே கல்யாணம் பண்ணணும்லடா?”

“எதுக்குடா கல்யாணம் பண்ணணும்? கல்யாணத்துக்கு பெறகு பண்ண வேண்டியதே காதலிக்கும் போதே பண்ணிட்டா எதுக்கு கல்யாணம் பண்ணணும்?”

எனக்கென்னமோ இவன் சொல்வது லேசாக சரி எனப்பட்டது. “நீ யாரையாவது லவ் பண்றியாடா?”

“ஆமா இப்போ ஒன்னு லைன்ல ஓடிக்கிட்டு இருக்கு” ஏதோ ஸ்டிடீ பூத்தில வரிசையில் நிற்பது போல் சொன்னான்.

“என்ன தான் நாம உருகி உருகி லவ் பண்ணுணாலும், வீட்ல மாப்ள பாக்க ஆரம்பிக்கும் போது நமக்கு டாட்டா காட்டிறாளுகளே?”

“டேய் திரும்ப மொத இருந்தா? ஒரே பிரச்சனைய வேற வேற மாதிரி கேட்டாலும் பதில் ஒன்னு தான்.. மேட்டர முடி, வருத்தம் இருக்காது” - தலைவலி ஜலதோசம் உடல்வலி அனைத்திற்கும் விக்ஸ் ஆக்‌ஷன் என்பது போல் எல்லாத்துக்கு மேட்டர் தான் ஒரே வழி என்று சொல்லிவிட்டான்.
மேட்டர் என்று நினைக்கும் போது சந்தோசம் வந்தாலும் லேசாக ஒரு பயமும் உள்ளே ஒளிந்துகொண்டிருந்தது. எனக்கு என் 12வது காதலி மேல் தான் கோவம் வந்தது. அவ மட்டும் சண்ட போடாம இருந்திருந்தா நான் இப்படி தப்பு தப்பா யோசிச்சிருப்பேனா?

இவளுக எதுக்கு சண்ட போடுறாளுகன்னே தெரிலையே? ஞாயமா பாத்தா வீட்ல அவளுக்கு வரன் பாக்க அவ சம்மதம் சொன்னதுக்கு நான் தான் அவ மேல கோவப்படணும்.. ஆனா அவ என் மேல கோச்சுக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம ரெண்டு நாளா இருக்கா, அதுவும் ஃபோன ஆஃப் பண்ணி வச்சுக்கிட்டு. சரி கடைசியா என் தம்பிக்கு கால் பண்ணி அவனோட ஐடியாவையும் கேக்கலாம்னு முடிவு செஞ்சேன்.

“அண்ணே யூரோ கப்பு இந்த தடவையும் ஸ்பெயின் தான் ஜெயிச்சாய்ங்க பாத்தியா?”

அந்த ஞாயித்துக்கெழம நைட்டு தான் அவ என் கூட சண்ட போட்டா.. “இல்லடா அது பாக்கலாம் நேரம் இல்ல”

“ஏன்ணே டல்லா பேசுற?”

“ஒனக்கே தெரியும்ல சகோதரர், நான் ஒருத்திய லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்ல?” கலகலப்பு படம் வந்தப்போ காமெடியா சகோதரர்னு கூப்பிட ஆரம்பிச்சி இப்போ அவன சீரியஸாவே அப்படித்தான் கூப்பிடுறேன்.

“யாருண்ணே? உன் ஸ்கூல்மேட்டா?”

“டேய்” என் மொத லவ்வர நானே மறந்துட்டேன். இவன் இன்னும் ஞாபகம் வச்சிருக்கான்.

“சாரி சாரி அந்த இந்திக்காரியா?”

“நீயும் நக்கல் பண்ற பாத்தியா அண்ணன?”

“ஆமா நீ தான் வருசத்துக்கு எட்டு பேர லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொல்ற.. அப்புறம் எனக்கு அது யாருன்னு தெரியும்?”

“இல்லடா இது இங்க நான் வேல செய்யுற எடத்துல”

“ஓ அப்படியா? சரி என்னாச்சி? சொல்லு சொல்லு” என் தம்பி கேக்கும் தொனியிலேயே தெரிந்தது நாளைக்கு அவன் நண்பர்கள் மத்தியில் நான் தான் காமெடி பீஸ் என்று.. இருந்தாலும் எனக்கு பொலம்ப ஆள் இல்லயே.. ஆரம்பித்தேன்.

“சகோதரர் இந்த பொண்ணுங்க எதுக்கு சண்ட போட்டுக்கிட்டே இருக்காங்க?”

“சண்ட போட்டாத்தானடா ஒன்ன மாதிரி பசங்க எல்லாம் அவள தாங்கிக்கிட்டே இருப்பிங்க?”

“அட ஆமா..  ஆனா தப்பு அவளுக மேல இருந்தாலும் நம்ம மேல தான் கோவப்படுறாளுக சகோதரர்.. கொடுமையா இருக்கு”

“சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துரா நீ மொத.. பொண்ணுங்க, சண்ட வர மாதிரி இருக்குற சமயத்துல அவங்களே மொத ஆரம்பிச்சுருவாங்க சண்டைய.. அப்போ தான் அவங்க மேல தப்பு இருந்தாலும் நாம் அவங்கள தாஜா பண்ண இறங்கி வருவோம்னு”

“இதெல்லாம் ஒங்களுக்கு எப்படி தெரியும் சகோதரர்?”

“சரி நான் ஃபோன வச்சிரட்டுமா?”

“டேய் டேய் டென்சன் ஆகாத.. சொல்லு”

“நீ அவளுகள செல்லம் கொஞ்சுற வரைக்கும் தாங்கிக்கிட்டு இருக்குற வரைக்கும் தான் உன்ட்ட பேசுவாளுக.. இல்லேன்னா வேற யாராவது நல்லா பேசுனா அவன் கூட”

“அப்போ உணமையான் காதல் எங்கேயுமே இல்லையா சகோதரர்?”

“டேய் ஒனக்கு எத்தன வயசாச்சி?”

“ஏன் சகோதரர்?”

“சொல்றா எத்தன வயசாச்சி?”

“29 ஆகுது”

“டேய் இந்த வயசுல நீ முரளி மாதிரி ஒன் சைடு லவ்வுக்கு அழுதுக்கிட்டு இருந்தின்னா என் வாழ்க்கை என்னடா ஆகும்”

“என் லவ்வுக்கு ஒங்க லைஃபுக்கும் என்ன சம்பந்தம் சகோதரர்?”

“டேய் நீ காலாகாலத்துல கல்யாணம் செஞ்சா தானடா என் லைன் க்ளியர் ஆகும்? எனக்கும் 26 வயசு ஆகுதுடா”

“ஓ அப்படி ஒன்னு இருக்கோ? சாரி சகோதரர்”

“ஆனா ஒன்னு சொல்றேன்டா.. நீ என்னைக்கு என்ன சகோதரர்னு கூப்பிடுறத நிறுத்துறியோ அன்னைக்கு தான்டா ஒனக்கு ஃபிகர் செட் ஆகும். அது வரைக்கும் நீ அடுத்தவன் ஜோடியா சுத்துறத பாத்தே வயிறு எரிஞ்சு சாவடா”
சம்பந்தமே இல்லாமல் என் தம்பியும் கோவத்தில ஃபோனை வைத்துவிட்டான். வேறு வழியில்லாமல் திரும்பவும் அவனையே கூப்பிட்டேன்.

“என்னடா வேணும்?”

”உண்மையான லவ்வுக்கு இது தான் மரியாதையா சகோதரர்?”

“எதுடா உண்மையான லவ்வு? ரெண்டு பேருக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் செல்லம் அம்மு டார்லிங்னு கொஞ்சிக்கிடு இருப்பிங்க.. யாராவது ஒருத்தருக்கு கல்யாணம் நிச்சயம் ஆன ஒடனே அவங்கள பத்தி எல்லார்கிட்டயும் கொஞ்ச நாளைக்கு அசிங்க அசிங்கமா பேசி, வெக்கமே இல்லாம அவங்க கல்யாணத்துக்கே போயி சோத்த தின்னுட்டு அதே கல்யாணத்துல இன்னொரு ஃபிகர செட் செய்யுறதுக்கு பேர் தான் உண்மையான லவ்வா? அந்த வார்த்தையெல்லாம் சொல்றதுக்கே ஒனக்கு அருகத இல்ல.. பேசாமா ஓடிப்போயிரு”

“என்ன சகோதரர் இப்படி பேசுற?”

“இது தான்டா நெஜம். இங்க யாருக்கும் யாரும் நிரந்தரமா தேவை இல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இல்லேன்னா ஒரு குறிப்பிட்ட காரியம் முடியுற வரைக்கும் தான் தேவ. பெத்த அம்மா அப்பான்னாலும் அப்படித்தான். அந்த காரியம் முடிஞ்சதும், இல்லேன்னா முடியாதுன்னு தெரிஞ்சதும் யார் மூலமா அது முடியுமோ அவங்க கிட்ட போயிட வேண்டியது தான். இது ஒரு materialistic world அண்ணே. பாசத்துக்கெல்லாம் மதிப்பே கிடையாது.” - அவன் அண்ணே என்று சொல்லி பேசும் போதே தெரிந்தது அக்கறையாக seriousஆக பேசுகிறான் என்று. “நீயும் பாசத்துக்கும் லவ்வுக்கும் நெஜமாவே மதிப்பு கொடுத்திருந்தா, மொத ரெண்டு லவ் ஃபெயிலியர் ஆனாலும், அட்லீஸ்ட் உன்னோட மூனாவது லவ்வர எப்படியாவது கஷ்டப்பட்டாவது கல்யாணம் பண்ணிருப்ப, ஒரு வேள முடியலேன்னா ‘காதலே வேணாம்’னு முடிவு பண்ணிட்டு எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு வீட்ல பொண்ணு பாக்குற வரைக்கும் அமைதியா இருந்திருப்ப. ஒனக்கு பொண்ணுங்க கிட்ட பேசுறது ஒரு சொகமா, பெருமையா இருந்தது. அதனால ஒருத்தி போனா இன்னொருத்தின்னு நீ இருந்த. சரி விடு இனிமேல் சொல்லி ஒரு பிரேயோஜனமும் இல்ல. பேசாம கம்முனு இருந்தின்னா இன்னும் ஒரு வருசத்துல ஒனக்கு வீட்ல பாத்து............”

அவன் சொல்வதை அதற்கு மேல் கேட்கும் சூழ்நிலையில் நான் இல்லை.. ஏன்னா என் 11வது காதலி கிட்டத்தட்ட ரெண்டு மாதம் கழித்து என்னை அழைக்கிறாள். அதனால் சகோதரரை இப்போதைக்கு தொடர்பு எல்லைக்கு வெளியில் கொண்டு போய் விட்டுவிட்டேன். “என் லைஃப்ல எத்தனையோ பேர் வந்து போயிட்டாங்க, ஆனா உன் அளவுக்கு யாரும் பொறுமையா என் மேல கேர் எடுத்து அன்பா கவனிச்சுக்கல ரேவதி”

”ரேவதியா? அது யாரு?”

”அது அது வந்து இங்க பக்கத்துல.. ப்ரண்ட் டிவில வர நடிகைய பாத்து பேரு என்னன்னு கேட்டான் அத சொன்னேன்டா கண்ணு” - அய்யோ என் 11வது காதலி பேர் மறந்து போச்சே.. நான் என்ன பண்ண? சரி அடுத்த சண்டை வர வரைக்கும் சமாளிப்போம்.. “அப்புறம் செல்லம், ஏன்டா இத்தன நாளா என் கூட பேசல? நான் எப்படி ஏங்கிப்போயிட்டேன் தெரியுமா?..........................”

என் தம்பிய யாராவது பாத்திங்கன்னா தயவு செஞ்சி என்னப்பத்தி மட்டும் கேக்காதிங்க.. அப்புறம் பச்ச பச்சையா வசவு வாங்கினா நான் பொறுப்பு இல்ல..
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Blog Archive

Sidebar One