MATERIALISM

Friday, June 5, 2009

'ச்சே ஆபீஸ்ல இருந்து வந்து கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விடமாற்றாங்க' என்று அலுவலகத்தின் அழுப்பை எண்ணிக்கொண்டே, கதறிய தொலைபேசியை எடுத்தேன். எதிர் முனையில் சுப்பிரமணி, எங்கள் அலுவலக வாட்ச்மேன்.
.
"அய்யா நம்ம மேனேஜர் சதீஷ் சாரு திடீர் னு மயக்கம் போட்டு விழுந்துட்டார்யா!" - பதற்றத்தோடும் படபடப்போடும் சொன்னான்.
.
"என்னடா சொல்ற?"
.
"ஆமாயா மூச்சுபேச்சே இல்ல. எனக்கு ரொம்ப பயமா இருக்குயா. கொஞ்சம் வேகமா வாங்க".
.
அவன் அழுது கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. "சரி நீ அங்கேயே இரு. நான் இப்போ வந்துறேன்"
.
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். எங்கள் ஆபீஸில் பலரும் வேலை செய்யும் பொது இந்த சுப்பிரமணி, சதீஷின் பி. எ. விற்கு கூட இந்த விஷயத்தை சொல்லாமல் என்னிடம் சொல்கிறான் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. சதீஷ் என்னுடன் படித்தவன், என் நண்பன். நானும் அவனும் இளநிலை இயற்பியல் ஒன்றாக தான் படித்தோம். நாகர்கோவில் காரன்; சுமாராகத்தான் படிப்பான். பயந்தாங்கோலி சதீஷ் என்றால் கல்லூரியில் எல்லாருக்கும் தெரியும். அவன் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர், ஆனால் இவன் அந்தப்பதவிக்கு சம்பந்தமே இல்லாதவன் போல் இருப்பான். பரிட்சையில் ஒரு கேள்வியை விட்டுவிட்டால் கூட 'ஐயோ பெயில் ஆயிடுவேனோ?!' என்று புலம்பி தள்ளிவிடுவான். நாங்கள் அசால்ட்டாக அரியர் வைத்துக்கொண்டு திரியும் பொது இவன் மட்டும் படிப்புக்கு தத்து கொடுத்த மாதிரி பேசுவது கொஞ்சம் எங்கள் மத்தியில் வெறியைக்கிலப்பும்.
.
மூன்றாண்டு படிப்பு முடிந்ததும் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்துசெல்லாமல் வெட்டியாக ஒவ்வொருவர் ஊருக்கும் வீட்டுக்கும் சென்றுகொண்டிருந்தோம். சதீஷ் மட்டும் "டே எங்க வீட்டுக்கு வராதீங்க டா. எங்க அப்பா சத்தம் போடுவாரு" என்று கெஞ்சினான். சரி பய பொழச்சு போகட்டும் என்று விட்டுவிட்டோம். அதற்கு பின் அவனை நாங்கள் பார்க்கவும் இல்லை; அவனைப்பற்றிய எந்த செய்தியும் இல்லை.
.
ஊர் சுற்றுவது போர் அடிக்க ஆரம்பித்ததும் வேலைக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசனையில் ஒரு வருடம் கழிந்தது. ஒரு வழியாக படிப்பிற்கு சம்பந்தமே இல்லாத மார்க்கெட்டிங் வேலைக்கு சேர்ந்தேன். வாரம் முழுதும் நாய் மாதிரி அலைந்து திரிந்து, வார கடைசியில் ரிவ்யுவ் மீட்டிங் என்ற பெயரில் டவுசர் கிழிந்து அலைந்த காலம் அது.
இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ரிவ்யுவ் மீட்டிங் முடிந்து ஒரு சனிக்கிழமை மதியம் வெயிலில் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பஸ் ஸ்டாப்பில் பெண்கள் இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டே வந்த என் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே நின்றன.
.
அங்கே வெயிலுக்கு நிழலாக தன் பைலை தலைக்கு வைத்துக்கொண்டு ஒரு ஜீவன் பஸ் வருவதற்கு காத்துக்கொண்டிருந்தது. 'அட நம்ம சதீஷு' என்று மனம் ஒரு நொடி மகிழ்ச்சி அடைந்தது.
.
"டே சதீஷ் என்னடா இந்த பக்கம்?"
.
"டே அருண் எப்படி டா இருக்க?" - கண்களில் ஏதோ ஏக்கம் தெரிந்தது.
.
"நான் நல்லா தான்டா இருக்கேன். நீ என்னடா பைல தலைக்கு வச்சுட்டு நின்னுட்டு இருக்க? என்ன விஷயம், இன்னும் வேல கெடைக்கலையா?" சிரித்துக்கொண்டே கேட்டேன்.
.
"பி.எஸ்ஸி. பிசிக்ஸ் க்கு லாம் வேல எங்கயும் கிடைக்கமாடேங்குதுடா. வாழ்கையே வெறுப்ப இருக்குடா" என்று உலக நிலவரம் புரியாமல் அப்பரானியாக அழுதுகொண்டே பேசினான்.
.
"டே லூசுப்பயலே, பிசிக்ஸ்ல தான் வேலைக்கு போகணும் னு ஒக்காந்துக்கிட்டே இருந்தீனா இப்படியே கடைசி வரைக்கும் பைல தலைக்கு வச்சுக்கிட்டு வெயில்ல தான் நிப்ப. நான் சொல்றத கேட்டேனா வேல கெடைக்கும். என்ன சொல்ற?"
.
"எனக்கு எதாவது ஒரு வேல கெடைக்குதே, அதுவே போதும்டா" மனநிம்மதியோடு பதில் சொன்னான்.
.
என் அலுவலகத்திலேயே மார்க்கெட்டிங் வேலை காலியாக இருந்ததால் அவனுக்கு அந்த வேலையை வாங்கிக்கொடுத்தேன். வெறிபிடித்தவன் போல் வேலை செய்தான். ராகேட்டிற்கு பின் பக்கம் இருக்கும் நெருப்பைப்போல அந்த வெறி அவனை 'சர்' என்று மேலே ஏற்றியது.
.
மேலும் மேலும் ப்ரோமோசன் வாங்கிக்கொண்டே ரிஜினல் மேனேஜர் பதவி வரை உயர்ந்து சென்றான். என் கண்முன்னே விக்ரமன் இயக்காத 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் அவன் வாழ்க்கை மூலமாக தெரிந்தது. நான் ஆரம்பத்தில் இருந்த அதே வேலையில் இப்போதும் தொடர்கிறேன்.
.
'சார், நம்ம சதீஷ் சார நீங்க தான் சேத்து விட்டீங்க. இப்போ பாருங்க அவரு உங்களுக்கே மேனேஜர் ஆகிட்டாரு' என்று என்னிடமே வந்து சகதொழிலாளர்கள் சொல்வார்கள். ஆனால் சதீஷ் என் மீது மிகவும் அன்பாக இருந்தான். அதை அன்பு என்று சொல்வதைவிட நன்றிக்கடன் என்று தான் சொல்லவேண்டும். இப்போது வரை நான் அவனை ஒரு நண்பனாக நினைத்ததில்லை, என்னுடன் படித்த ஒருவன் அவன், அவ்வளவு தான். ஆனால் அவனோ என்னை நண்பன் என்ற ஸ்தானத்தை விட ஒரு படி மேலையே வைத்திருந்தான். அவன் திருமணத்திற்கு கூட நான் செல்லவில்லை. என் திருமணத்திற்கு வந்து அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தான். எனக்கு அவ்வப்போது 2000, 5000 என்று பணம் கொடுத்து உதவுவான். அவனைப்பொருத்த வரை பணம் ஒரு பொருட்டே இல்லை. எனக்கு பணம் தான் எல்லாம். சில சமயங்களில் நானே நினைப்பேன், 'நாம வேலைக்கு சேத்து விட்ட பய நம்மைவிட இவ்வளவு அதிகமா சம்பளம் வாங்குறானே' என்று.
.
ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஒரு விளையாட்டுப்போட்டி நடந்தது. சினிமாவில் நாம் பார்த்துப்பழகிய விளையாட்டு தான்; பேப்பரில் எழுதி உள்ளதை போல் செய்ய வேண்டும், அல்லது அதில் உள்ள கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். சதீசுக்கு 'நீங்கள் இறக்கும் தருவாயில், சந்திக்க விரும்பும் நபர் யார்? அவரிடம் என்ன சொல்ல விரும்புவீர்கள்?'.
.
அவன் சொன்ன பதிலில் நான் ஆடிப்போய் விட்டேன். அவன் சொன்ன பதில் "அருண்". மேலும் "நான் சொல்ல வேண்டியத அவன் கிட்ட சாகும் போது சொல்லிடுவேன். இப்போ மாட்டேன்" என்று முடித்தான்.
.
பழைய நினைவுகளை நினைத்துக்கொண்டே ஆபீஸ் வந்தடைந்தேன். "இப்போ தான் சார் ஆம்புலன்ஸ் வந்து எடுத்துட்டு போனாங்க" - சுப்பிரமணி.
அவனிடம் மருத்துவமனையை விசாரித்துக்கொண்டு சென்றடைந்தேன். அவன் வீட்டிற்கு கூட இன்னும் தகவல் சொல்லவில்லை. நிலைமை கொஞ்சம் சீரியஸ் என்று அங்கு நடப்பவைகளை பார்த்தாலே புரிந்தது.
.
"டாக்டர் உயிர் பிழைத்துடுவான்ல?" செயற்கை பதற்றத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.
.
"கொஞ்சம் கஷ்டம் தாங்க. நீங்க யாரு, ப்ரெண்டா?"
.
"இல்லல்ல, கூட வேல செய்றவன்"
.
"வீட்டுக்கு இன்பாம் பண்ணிடுங்க சார், சந்தேகம் தான் பொலைக்குறது"
.
'இவன் இறந்து விட்டால் நமக்கு யார் மாச செலவுக்கு பணம் கொடுத்து உதவுவது?' அந்த சூழ்நிலைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பயம் வந்தது எனக்கு.
.
ஐ சி யு வில் இருந்து வெளியே வந்த டாக்டர் என்னிடம், "அவர் உங்க கிட்ட ஏதோ சொல்லணும் னு ஆசை படுறாரு" என்றார்.
.
உள்ளே சென்றேன். "டே அருண், நான் அன்னைக்கு சொன்னேன்ல, சாகும் போது உன்கிட்ட தான் பேசுவேன்னு" திக்கித்திணறி பேசினான். "நான் இப்போவரைக்கும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லலடா. நீயும் அதை எதிர் பாக்கல. பட் சொல்ல வேண்டியது என் கடமை டா. நடு ரோட்ல அனாதையா இருந்த நான் இன்னைக்கு இவ்வளவு உயர்ந்த நிலைல இருக்குறதுக்கு நீ தான்டா காரணம். ரொம்ப நன்றிடா. ஆமா நான் உன்கிட்ட சொல்ல நினைச்சது இதத்தான். சாகப்போற நேரத்துல இத விட என்னால உனக்கு ஒன்னும் பண்ண முடியா...." முழுதாக சொல்லாமல் இறந்து போனான்.
.
.
.
இத்தனை வருடங்களில் இப்போது தான் சதீஷ் வீட்டிற்கு வருகிறேன். நடு வீட்டில் நேற்று வரை சதீஷ் என்றும் மேனேஜர் என்றும் இன்று பாடி என்றும் அழைக்கப்படும் அது இருந்தது. ஓரளவு பெரிய வீடு தான். இரண்டு டிவி, இரண்டு பிரிட்ஜ், என்று சகலமும் இரண்டாக இருந்தது.
.
உறவினர்கள் சிலர், "முப்பத்தஞ்சு வயசு கூட இருக்காதேய்யா. சாகுற வயசா இது?" என்று வினவிக்கொண்டார்கள்.
.
"இப்போல்லாம் இந்த வயசுல தான் நோய் வருதுன்னு இல்ல, பொறந்த கொழந்தைக்கே வருது" என்று வேறோருபுரம் அவன் இறப்பின் ரகசியத்தை அலசிக்கொண்டிருந்தார்கள்.
.
நான் அப்படியே சுற்றி வரும் போது பார்த்தேன், போட்டோவில் இவன் ஒரு காரிலும் இவன் மனைவி ஒரு காரிலும் இருந்தார்கள். 'பரவாயில்லையே, ரெண்டு கார் இருக்கா?' என்று எண்ணிக்கொண்டேன்.
.
ஒரு வழியாக வீட்டை சுற்றி முடித்து மீண்டும் பிணம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தேன். அங்கு அவன் மனைவி உயிரே போகும் அளவிற்கு அழுது கொண்டிருந்தாள். முப்பது வயதாவது இருக்க வேண்டும். ஆனால் பார்ப்பதற்கு இப்போதும் செய்து வைத்த சிலை போன்று வெண்ணை நிறத்தில் பதினெட்டு வயது பெண் போல இருந்தாள்.
.
'டே இது துஷ்டி வீடு டா. கண்ணை வேறு புறம் திருப்பு' என்று மனம் எச்சரித்தது. முகத்தில் ஒரு செயற்கையான சோகத்தை தற்காலிகமாக குடியேற்றினேன்.
பிணத்தை தூக்கிச்சென்றதும் ஒப்பாரிப்படலம் முடிந்தது. ஆண்கள் எல்லாம் சென்றவுடன் ஒரு தீர்க்கமான முடிவுடன் நான் மெதுவாக சதீஷின் மனைவியிடம் சென்றேன்.
.
"உங்க வீட்டுக்காரர் என்கிட்டே மூணு லட்ச ரூபா வாங்கிருக்காரு. அத திருப்பி கொடுக்குறதுக்குள்ள இப்படி அல்ப்பாயிசுல போயிட்டாரே" என்றேன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு.
.
"ஐயோ இருக்குற வரைக்கும் என்ன ராணி மாதிரி வச்சிருந்தீங்களே, இப்போ போகும் போது கடனாளியா ஆக்கிடீங்களே?" என்று கத்தி அழுதாள். அழுதுகொண்டே, "தயவு செஞ்சு உங்க பணத்த அடுத்த வாரம் வந்து வாங்கிக்கோங்க" என்றாள்.
.
"சரிம்மா, நான் அப்போ வரேன்" என்று சொல்லி விடைபெற்றேன், என் நண்பன் சதீஷ் இல்லத்தில் இருந்து.

22 வயதில் நிறைவேறிய 5 வயது ஆசை...

Thursday, June 4, 2009

வாழ்க்கையில் நாம் எல்லோரும் ஏதாவது ஒரு தருணத்தில் உயிரற்ற பொருளை நினைத்து ஏங்கியிருப்போம். இரண்டு வயதில் பக்கத்து வீட்டு குழந்தையின் ரயில் பொம்மை, ஐந்து வயதில் பள்ளி நண்பனின் ரப்பர் வைத்த பென்சில், பத்து வயதில் சைக்கிள், பதினைந்து வயதில் அழகழகான ஆடைகள் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் நாம் நினைத்து ஏங்கும் பொருட்கள் பல உண்டு. அவற்றில் சில கிடைத்தாலும், பல நம் கனவுகளில் மட்டுமே இருக்கும். எனக்கும் இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆசை இருந்தது. காலப்போக்கில் அவை மறைந்தும் போயின. ஆனால் ஐந்து வயதில் இருந்து என்னை பொறாமைப்படவைத்த, ஏங்கவைத்த, அழ வைத்த, சில சமயங்களில் கூனிக்குறுக வைத்த பொருள் ஒன்று உண்டென்றால் அது தொலைகாட்சி பெட்டி தான்.
.
.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது ஞாயிறுகளில் ஒளிபரப்பாகும் "சந்திரகாந்தா" நாடகம் பார்ப்பதற்கு பக்கத்து வீடே கதி என்று இருப்பேன். மறுநாள் வகுப்பில் நண்பர்களோடு "டே நேத்து அந்த எகு பண்டிதர மாட்டிவிட்டுட்டான் டா" என்று கத பேசுவதில் அவ்வளவு சந்தோஷம் எனக்கு. ஒரு வாரம் பார்க்க முடியாவிட்டாலும் எதையோ இழந்தது போன்று மனம் வருத்தப்படும்.
.
.
மகாபாரதம் ஒளிபரப்பான சமயம் நான் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டேன். அதை மனதில் வைத்து அவள் என்னை ஒரு முறை மகாபாரதம் பார்க்க அவள் வீட்டிற்குள் நுழையும் பொழுது "என் கூட சண்ட போட்டில, இனிமேல் எங்க வீட்டுக்கு டிவி பாக்க வராத" என்று அதட்டினாள். அதட்டினால் என்று சொல்வதை விட வீட்டில் இருந்து தள்ளி விட்டாள் என்று சொல்லலாம். அன்று அழுதுகொண்டே அவள் வீட்டில் இருந்து சென்ற நான் என் அம்மாவும் அவள் அம்மாவும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்கள் வீட்டிற்கு அதற்கு பின் செல்லவே இல்லை. சக்திமான் போடும் போது கூட நான் அவர்கள் வீட்டிற்கு சென்றது இல்லை. இதுவரை சக்திமான் தொடரை ஒரு முறை கூட நான் பார்த்ததும் இல்லை.
.
.
என் அப்பாவிடம் மட்டும் கிடைக்காது என்று தெரிந்தே டிவி வாங்க வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். "ஆமா இப்போ அது ஒன்னு தான் கொறச்சல் நமக்கு" என்று எங்கிருந்தாவது அம்மாவின் குரல் தவறாமல் கேட்கும். அம்மாவிற்கு ரேடியோ கேட்டுக்கொண்டே தீப்பெட்டி ஓட்டினால் பொழுது போய்விடும். எனக்கு அப்படி இல்லையே? "டிவி வாங்குனா அம்மாவ பாக்க விடக்ககூடாது" என்று தம்பியும் நானும் சேர்ந்து சத்தியம் செய்து கொண்டோம்.
.
.
இப்படியே என் பத்தாம் வகுப்பு வரை காலம் ஓடியது. என் சித்தி குடும்பத்துடன் எங்கள் ஊரில் வந்து குடியேறினார்கள். இதில் அதிகம் சந்தோசப்பட்டவன் நான் தான், ஏனென்றால் சித்தி வீட்டில் டிவி உண்டு, கலர் டிவி அதுவும் கேபிள் டிவி. வாராவாரம் சித்தி வீடே கதி என்று இருக்க ஆரம்பித்தேன். "உன் சித்தப்பாவே வியாபாரம் நொடிச்சு போயி தான் இங்க வந்துருக்காரு, நீ வேற வாராவாரம் போயி அவங்கள தொல்ல பண்ண வேண்டாம்" என்று அம்மா அதற்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.
.
.
ஒரு இரண்டு வருடம் டிவி பார்க்கும் ஆசையை அடக்கிக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் பார்த்தா சேரன் ஆட்டோகிராப் படம் எடுத்துத்தொலைவார்? தியேட்டரில் படம் பார்த்த நாள் முதல் அந்த படத்திற்கு நான் அடிமை ஆகிவிட்டேன் என்றே சொல்லலாம். அப்போது விஜய் டிவி இல் மெட்டுக்கள் புதுசு என்றொரு நிகழ்ச்சி மதியம் போடுவார்கள். அதில் ஆட்டோகிராப் பாடலும் தினமும் வரும் என்பதால் மார்ச், ஏப்ரல் மாத வெயில்களிலும் மூன்று கிலோமீட்டர் சைக்கிள் அழுத்தி நண்பனின் வீட்டிற்கு சென்று டிவி பார்ப்பேன். ஒரு கட்டத்தில் அவன் "டே நீ மதியம் சோறு சாப்புடற டயத்துல டிவி பாக்க வரது எங்க வீட்ல உள்ளவங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி இருக்கு டா" என்றான். அன்று விட்டவன் தான் நண்பர்கள் வீட்டிற்கு டிவி பார்க்க செல்வதை.
.
.
மூன்று வருடம் உள்ளூரில் கல்லூரியில் படிக்கும் போதும் சரி, அடுத்து இரண்டு வருடம் வெளியூரில் படிக்கும் போதும் சரி கல்லூரி வாழ்கையின் இன்பத்தில் டிவி இரண்டாம் பட்சம் ஆனது. ஆனாலும் பார்ப்பவர்கள் எல்லாம் "என் வீட்டில் டிவி இல்லையா?" என்று ஆச்சர்யமாகவும், நம்ப மறுப்பது போலவும் கேட்கும் போது டிவி இல்லாததை நான் ஒரு கொலைக்குற்றமாக கருதினேன்.
.
.
ஒரு வழியாக சென்ற வாரம் எங்கள் வீட்டில் டிவி வாங்கலாம் என்று முடிவெடுத்தோம். 7500 ருபாய் கொடுத்து LG Golden Eye TV வாங்கினோம். இந்த செய்தியை நண்பன் ஒருவனிடம் உடனடியாக கூறினேன். அவன் "டே அது பழைய மாடல் டா. அத வாங்குனதுக்கே நீ இவ்ளோ எபக்ட் உட்றியா?" என்று மூக்கறுத்தான். அவனுக்கு எங்கே தெரியும் இது எனது பல வருட ஆசை என்று?
.
.
நான் மூன்றாம் வகுப்பில் ஆசைப்பட்ட சைக்கிள் ஏழாம் வகுப்பில் கிடைத்தது. அதற்கு முன்பே ஐந்து வயதில் ஆசைப்பட்ட டிவி இப்போது 22 வயதில் கிடைத்துள்ளது. ஆசைப்பட்ட பொருள் தாமதமாக கிடைப்பதிலும் ஒரு சுகம் தான். என்ன, இப்பொழுது சந்திரகாந்தா கதையை பேச அந்த பழைய நண்பர்கள் இல்லை.. என்னை வீட்டை விட்டு அனுப்பிய அந்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் செயலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் தான் இருக்கிறது. அந்தப்பெண்ணும் எங்கள் வீட்டில் டிவி வாங்குவதற்கு ஒரு வகையில் உதவியிருக்கிறாள்.
.
.
அப்பா தினமும் இரவு எங்கள் அனுமதியுடன் கொஞ்ச நேரம் பழைய பாடல்கள் பார்ப்பார். என்ன டிவி வந்து என்ன பண்ண? அம்மாவிற்கு இப்போதும் ரேடியோ தான் உற்ற நண்பன். "போடா டிவி பாத்துகிட்டே தீப்பெட்டி ஒட்ட முடியல" என்று சாதாரணமாக சொல்கிறார். எப்படி இந்த அம்மாமார்களால் மட்டும் முடிகிறதோ?
 

ஃபேஸ்புக்கில் பின் தொடர...

Followers

ஒரு வெளம்பரம்...

Most Reading

Sidebar One